Tuesday, 30 April 2013

விஞ்ஞான கம்யூனிசம்


"தற்போது சர்வதேச சமூக-ஜனநாயக (கம்யூனிச) சித்தாந்த ஊசலாட்டத்தால் பீடிக்கப்பட்ட ஒரு நிலையில் இருக்கிறது, இதுகாறும் மார்க்ஸ், எங்கெல்சின் போதனைகள் புரட்சிக் கோட்பாட்டுக்குரிய உறுதி வாய்ந்த அடித்தளமாய்க் கருதப்பட்டுவந்தன, ஆனால் இப்பொழுது இந்தப் போதனைகள் குறைபாடானவை என்றும் பழமைப்பட்டுவிட்டவை என்றும் பறைசாற்றும் குரல்கள் நாற்புறமிருந்தும் எழுப்பப்படுகின்றன"
லெனின்-நமது வேலைத்திட்டம்

மார்கஸ் மறைந்து பதினெட்டு ஆண்டுகள் கழிந்த நேரத்திலும், எங்கெல்ஸ் மறைந்து ஆறு ஆண்டுகள் கழிந்த நேரத்திலும் லெனினால் (கி.பி.1901) கூறப்பட்ட கூற்று இது.

இந்தக் கூற்று இக்காலத்திலும் அதே தொனியில் மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. லெனினால் கூறப்பட்டு 120 ஆண்டுகள் கடந்து பின்பும் மார்க்சியம் பழமைப்பட்டுவிட்டது என்று கூற்று பழமைப்படாமல் புதுப்புதுப் பாணியில் கூறப்படுவதற்குக் காரணம், இந்த மார்க்சிய கோட்பாடு இன்னும் பழைமைப்பட்டு போகாமல் இருப்பதேயாகும்.

மார்க்சியம் ஏற்கெனவே பொய்யென நிரூபிக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டு விட்டதெனக் கூறிவோர் மார்க்சியம் தோன்றிய காலத்திலிருந்தே கூக்குரலிட்டு வருகின்றனர்.

பாட்டாளி வர்க்கத்திடம் கூட மார்க்சியம் தனது நிலையை எடுத்தயெடுப்பில் உறுதியாய் நாட்டிவிடவில்லை, மார்க்சியம் தோன்றிய 1840ம் ஆண்டுகளிலிருந்து 1890ஆம் ஆண்டுகள் வரை, தனக்கு விரோதமான கோட்பாடுகளுக்கு எதிரான பேராட்டத்தில் ஈடுபட்டுவருகிறதுதொழிலாளி இயக்கத்தில் காணப்பட்ட புரூதோன், பக்கூன், டூரிங் போன்றோர்களின் சித்தாந்தத்தை எதிர்த்து மார்க்சியம் வெற்றி கண்டது.

1890களுக்குப் பிறகான ஐம்பது ஆண்டுகள் வேறுவிதமான போராட்டத்தை மார்க்சியம் நடத்த வேண்டிவந்தது. அது என்னவென்றால்மார்க்சியத்துக்கு விரோதமாய் மார்க்சியத்தினுள்ளிருந்து செயல்பட்ட போக்கிற்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. அதாவது மார்க்சியத்துக்கு திருத்தங்கள் செய்து, திருத்தல்வாதமாய் செயல்பட்ட போக்கை மார்க்சியம் எதிர்கொள்ள வேண்டிவந்தது.

மார்க்சியத்துக்கு முற்பட்ட சோஷலிசம் நொறுக்கப்பட்டுவிட்டது. பழையபடி தனது சொந்த அடிப்படையில் இருந்து போராடுவதற்குப் பதிலாய், இப்பொழுது மார்க்சியத்தின் பொது அடிப்படையில் நின்று, திருத்தல்வாதமாய் போராட்டத்தை நடத்துகிறது.

இதுவரை லெனின் தமது காலத்தில் சந்தித்த போக்கைப் பற்றி லெனின் கூறியவையாகும்.

சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகளின் தகர்விற்கு பிறகு இந்தவகைப் போக்கினருக்கு மார்க்சியம் தோற்றுவிட்டது என்று எழுதுவது எளிதாகிபோனது. மார்க்சின் கொடுங்கனவு என்றும் மார்க்ஸ் ஒரு கற்பனாவாதி என்றும் எழுதி வருகின்றனர். அத்தோடு மார்க்சுக்கென்று வரலாற்றில் ஒர் இடம் இருக்கிறது என்று ஏற்றுக் கொண்டதைப் போல் கூறிவிட்டு, மார்க்சியம் பாதி கிணறு தாண்டிவிட்டது என்றும் மீதி கிணறை தாண்ட வேண்டும் என்றால் மாக்சியத்தில் உள்ள குறையை போக்க வேண்டும் என்று மார்க்சியத்தின் அடிப்படைகளை அதாவது வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மற்றும் முதலாளித்துவத்தின் சுரண்டலை அப்பலப்படுத்தி, முதலாளித்துவம் ஒரு கட்டத்தில் தூக்கி எரியப்படும் என்பதை விளக்கும் உபரிமதிப்பு தத்துவத்தையும் சிதைக்க முயற்சிக்கின்றனர்.

இதில் சிறப்பு என்னவென்றால், மார்க்சிய அடிப்படைகளில் முதன்மையானது எது என்பதை மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவர்களைவிட திரித்துப்புரட்டுபவர்கள் தான் நன்றாக அறிந்து வைத்துள்ளனர். நமது நாட்டில் மார்க்சியர் என்றும் கம்யூனிஸ்டுகள் என்றும் கூறிக்கொள்பவர்களைவிட மார்க்சியத்தை புரட்டும் நம்நாட்டவர்கள் மார்க்சியத்தை நன்றாக அறிந்து வைத்துள்ளனர். அதாவது மார்க்சியத்தின் அடிப்படையில் உள்ள படைப்பாற்றலை அறிந்து வைத்துள்ளனார். அதனால்  தான் புரட்டல்வாதிகள் மாக்சியத்தின் அடிப்படைகளை இனம் கண்டு அதனை குழப்புவதிலும் சிதைப்பதிலும் தமது வேலையை செய்கின்றனர்.


இதோடு மற்றொன்றையும் கூறியாக வேண்டும். மார்க்சியத்தில் காணப்படும் குறையை நிறைவடையச் செய்யப்போவதாய் கூறி இவர்கள் கொண்டுவரும் கருத்துக்கள் எல்லாம் மார்க்சுக்கு முந்திய, மார்க்சால் மறுதலிக்கப்பட்ட பிற்போக்குத் தத்துவங்களையே மீட்டெக்கின்றனர். இந்தப் போக்கைபற்றி லெனின் அன்று கூறியது இன்றும் பொருந்துகிறது.

லெனின்:-
"இப்போழுது நாம் கேட்கிறோம்:- இந்தத் தத்துவத்தைப் "புதுப்பிப்தாய்ப்" பலக்கக் கூறிக் கொள்கிறார்களே, இக்காலத்தில் பெருங் கூச்சல் எழுப்பி வருவோரும் ஜெர்மன் சோஷலிஸ்டு பெர்ன்ஷ்டைனை மையமாயக் கொண்டு திரண்டிருப்போருமாகிய இவர்கள் புதிதாய் எதையேனும் இத்தத்துவத்தில் புகுத்தியிருக்கிறார்களா? எதுவுமே இல்லை. வளர்த்திடுமாறு மார்க்சும் எங்கெல்சும் நம்மைப் பணித்துச் சென்ற இந்த விஞ்ஞானத்தை ஓரடியுங்கூட இவர்கள் முன்னெறச் செய்துவிடவில்லை, புதிய போராட்ட முறைகள் எவற்றையும் இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குக் கற்றுக் கொடுத்துவிடவில்லை. மாறாக, இவர்கள் பிற்பட்ட தத்துவங்களிலிருந்து சிறு கவளங்களைக் கடன்வாங்கி, பாட்டாளி வர்க்கத்துக்குப் போராட்டத் தத்துவத்தையல்ல, விட்டுக் கொடுத்துச் செல்லும் தத்துவத்தை... பிரசாரம் செய்துப் பின்வாங்கியே சென்றிருக்கிறார்கள்."
நமது வேலைத்திட்டம்

மார்க்சிய விரோதிகள் இத்தோடு நின்றுவிடவில்லை. மார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரவாதமல்ல என்று மார்க்ஸ்எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்கள் கூறியிருக்கின்றனர், ஆனால் இன்றைய மார்க்சியவாதிகள் மாக்சியத்தை மாறநிலைவாதமாக புரிந்து கொண்டு, லெனின் குறிப்பிடுகின்றன "நமது சகாப்தத்தில் நம்முள்ள திட்டவட்டமான நடைமுறைக் கடமைகளுடன் வரலாற்றில் இந்தக் கடமைகளுடன் மார்க்சியத்துககு இருக்கும் தொடர்பை நாம் அறுத்தெறிகிறோம்" (மார்க்சித்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சில இயல்புகள்) என்ற இயக்கவியல் கண்ணோட்டம் இவர்களுக்குகிடையாது என்று கூறித்திரிகின்றனர். ஆனால் இதனைத் தொடர்ந்து லெனின் கூறியதை மறைக்கின்றனர்.

"பொதுப்படையான, அடிப்படையான குறிக்கோள்களை இங்கே நான் குறிப்பிடவில்லை. வர்க்கங்களிடையே நிலவும் அடிப்படை உறவு மாறாமலிருக்கும் வரையில் சரித்திரத்தின் திருப்பங்களினால் இந்தக் குறிக்கோள்கள் மாறுவதில்லை"
-என்று  விளக்குகிறார் லெனின். ஆக மார்க்சியம் பழமைப்பட்டு போய்விட்டது என்று கூக்குரல் எழுப்புபவர்கள். மறுதலிக்க முனைவது  லெனின் கூறுகிற மார்க்சியத்தின் படைப்பாற்றலுள்ள மார்க்சிய அடிப்படையையே என்பதை அறிந்திட வேண்டும்.

அந்த மார்க்சியத்தின் படைப்பாற்றலைப் பின்பற்றி கம்யூனிஸ்டுகள் தமது சமூக பார்வையினை செலுத்துகின்றனர்

அவ்வகையான மார்க்சிய அணுகுமுறையில் சமூக கருத்துக்கள் இந்த வலைபூவில் பதியப்படும்.

3 comments: