Monday 29 July 2013

இந்தியாவில் சாதியம்



சாதிய ஒடுக்குமுறை என்பது இந்தியாவில் நெடுங்காலமாக இருந்துவருகிற வழக்கமாகும். இந்த ஒடுக்குமுறை பிறப்பின் அடிப்படையில் கடைபிடிக்கப்படுவது என்பது இந்தியாவில் மட்டும் காணப்படும் முறையாகும்.  இந்திய சுரண்டலின் ஒரு தனித்தன்மையாய் சாதியம் வெளிப்படுகிறது.

சமூகத்தில் சாதிய அமைப்பை கெட்டிப்படுத்த, உறுதிப்படுத்த மற்றும் பிராமணர்கள் தமது நிலையினை மேல்நிலையில் நிலைநிறுத்த, சாதியத்தைப் பற்றிய விளக்கம் கொடுத்திருக்கின்றனர். சாதியத்தை பிராமணிய இலக்கியம் விளக்குவதில் வெற்றி பெறவில்லை என்பது தேவிபிரசாத் சட்டோபாத்யாயா போன்றோர்களின் கருத்தாகும்.

நமது கருதுகோளான தொல்லினப் பழங்குடி அமைப்பு அரைகுறையாகச் சிதைந்துள்ளது என்பதைச் சாதியமைப்பு விளக்குவதால் இதன் தன்மையை நாம் விளக்க வேண்டியுள்ளது.

இந்திய சாதிய அமைப்பின் விசேடத் தன்மைகளைப் பிராமணிய இலக்கியங்களின், குறிப்பாகத் தர்மசூத்திரங்களின் துணைகொண்டு விளக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  சமகால அறிஞர்களில் தத்தாவும் மற்றவர்களும் சாதிகளின் தோற்றம் பற்றிய பிராமணியக்  கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர். உதாரணமாக மனுநீதியில் உள்ளவற்றை ஏற்றுக் கொண்டனர். ஆனால் இத்தகைய  பிராமணியக் கொள்கைகளைச் சார்ந்திருப்பது இன்று பெரும்பாலும் கைவிடப்பட்டுள்ளது. ஏனென்றால் சாதிகள் பற்றிய உண்மை, பிராமணியக் கொள்கையுடன் பொருந்திவரவில்லை.
உலகாயதம் பக்கம் 253-254

பாரம்பரியமான நீதி நூல்களின் ஆசிரியர்களுக்குக்கூட, ஒரு குறிப்பிட்ட குழு சாதியா அல்லது பழங்குடி மக்களா என்று வேறுபடுத்திக் காண இயலவில்லை. இது பாரம்பரியமான வழக்காறுகளில் காணப்படும் செயற்கைத் தன்மை தெரியவருகிறது. இங்கு நாம் சில உதாரணங்களைத் தருவோம். மனு லிச்சாவிகளை தாழ்ந்த கலப்பு சாதி என்று குறிப்பிட்டார். ஆனால் பௌத்த நூல்களின் மூலம் அவர்கள் வஜ்ஜியர் கூட்டமைப்பிலுள்ள ஒரு பழங்குடி மக்கள் குழு என்று தெரியவருகிறது. மேலும் அம்பஸ்தா ஒரு தாழ்ந்த சாதி என்றும் பிராமணத் தந்தைக்கும், வைசியத் தாய்க்கும் பிறந்தவர்கள் என்று அதே மனு குறிப்பிட்டார். ஆனால் மகாபாரதத்தில் அம்பஸ்தா பழங்குடிகள் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
..
பண்டையக்கால எழுத்தாளர்கள்கூட, இக்காலத்திய மக்கள் தொகை கணக்காளர்களைப் போன்று ஒரு குறிப்பிட்ட பின்தங்கிய குழுவை சாதி என்று அழைப்பதா அல்லது பழங்குடி அமைப்பு என்று அழைப்பதா என்பது பற்றித் தெளிவில்லாமலேயே இருந்தனர். இதிலிருந்து நாம் பெறும் முடிவு என்னவென்றால் மிகப் பழங்காலம் தொட்டே சாதிய அமைப்புகள் பழங்குடி அமைப்பின் அடையாளங்களைக் கொண்டிருந்தன என்பதாகும். இதை சாதி, குடி ஆகிய சொற்கள் மாறிமாறிப் பயன்படுத்தப்படும் சூழ்நிலை நிரூபிக்கிறது. வெறும் சொற்கள் பற்றிய விஷயம் என்பதோடு மட்டுமல்லாமல் இந்த ஆதாரம் மிகவும் ஆழமானது. ஏனென்றால் சாதிகளின்அமைப்பைப் பற்றிச் சரியாக ஆராய்ந்தால் அவற்றில் தொல்லினப் பழங்குடி அமைப்பின் அடையாளகள் இருப்பது வெளிப்படுத்துகின்றனது
உலகாயதம் பக்கம் 256-257

நான்கு சாதிகள் பற்றிய கதையை முதலில் உருவாக்கிய கற்பனை நிறைந்தக அந்தப் பிராமணன் யார் என்று உண்மையில் நமக்குத் தெரியாது. ஆனால் கற்பனையான இன உளவியலின்படி இந்த அதிகார வர்க்கத்தினர் சாதிகளைப் பற்றி விளக்குவதும் கற்பனையாகிவிடும்
உலகாயதம் பக்கம் 271

       இந்த நான்கு வர்ண விளக்கம், இந்தியாவில் காணும் சாதியனைத்தையும் விளக்கிவிடவில்லை என்றாலும், காணப்படும் சாதிய அமைப்பிற்கு கடவுள், மத அங்கீகாரம் அளித்திடுகிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட கர்மம் இயற்கையானது என்பதாக தெரிவித்து, பிறர் கர்மத்தை சிறப்பாக செய்திட முடியும் என்றாலும் அதனை  விடுத்து, தனக்குரிய கர்மம் குறையுடையதாயினும் அதனை செய்வதே உயர்ந்தது என்கிறது பகவத் கீதை. சமூக ஒழுங்கிற்காக அமைக்கப்பட்டது சதுர்வர்ணம் என்று கூறும் ஆன்மிகம், இவ்வாறு குறைவுடையதாயினும் ஒதுக்கப்பட்ட கர்மத்தை செய்வதே சிறந்தது என்றுரைப்பதில் சமூகத்திற்கு கிடைப்பது சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதைவிட, பிறப்பால் கர்மங்களை கடைபிடிப்பதற்கே முக்கியத்துவம் கொடுப்பதை அறிந்திடமுடிகிறது.

சமூகத்தில் இருக்கும் சாதியத்தை பற்றி விளக்குவதில் இந்த சதுர்வர்ணக் கோட்பாடு வெற்றிபெறவில்லை என்றாலும், அதனை தக்கவைப்பதில் வெற்றி பெற்றுள்ளது. நாட்டில் காணும் அனைத்து சாதிப்பிரிவுகளின் தோற்றத்தை இந்த இலக்கியங்களால் முழுமையாக விளக்கிவிட முடியவில்லை, கடவுளின் சித்தம் தான் சாதிய இருப்பிற்கு காரணம் என்ற வகையில், இவ்வகையான இலக்கியங்கள் மத அங்கீகாரத்தை அளித்திடுகிறது. இதன் மூலம் சாதியத்தை மீற முடியாத அல்லது மீறக் கூடாத ஒன்றாக சுட்டுகிறது.

சமூக கட்டுகோப்பை காப்பதே  இந்த சாதியத்தின் நோக்கமாகும், அதாவது சமூகத்தில் காணும் ஏற்றத்தாழ்வை மையப்படுத்தி, சமூகத்தில் சுரண்டப்படுவற்கு எதிராக கிளர்ந்து எழும் போராட்டத்தை கட்டுப்படுத்த சாதியம் முயல்கிறது. சமூகத்தில் உடல் உழைப்பிலிருந்து விடுபட்ட சிலர் செழிப்பாக வாழ்வதற்கு, இந்த சாதிய ஒடுக்குமுறை நாட்டில் கையாளப்பட்டு வருகிறது. அனைத்து நாடுகளிலும் ஒடுக்குமுறையைக் காணமுடிகிறது என்பது உண்மையே, ஆனால் பிறப்பால் இந்த ஒடுக்குமுறை அமைந்திருப்பது இந்நாட்டிற்கே உரிய குறிப்பான வடிவமாகும்.

சமூக மாற்றத்தை விரும்புபவர்கள், பிறப்பால் பின்பற்றப்படும் இந்த சாதி முறையின் கொடுமையை பல காலமாக எதிர்த்து வருகின்றனர்.  சாதியை எதிர்ப்பது, மறுப்பது என்பதெல்லாம் சாதியை சமூகத்தில் இருந்து நீக்குவதற்கான கண்ணோட்டமாக, போராட்டமாக இருக்க வேண்டும். 

சாதியின் இருப்பைப் பற்றிய கண்ணோட்டங்கள் பல முரண்களைக் கொண்டதாக இருக்கிறது.
சாதியின் பிடிப்பு அல்லது தாக்கத்தை விட சாதியைப் பற்றிய பலருடைய நினைப்பு மேலோங்கி காணப்படுவதே இன்றைய சாதியைப் பற்றிய புரிதலில் உள்ள பெரும் சிக்கலாகத் தெரிகிறது. சாதியைப் பற்றிய எதிர்ப்பான கருத்தே, இன்று சாதியை வலுப்படுத்துவதாக இருக்கிறது. அதாவது சாதியை பற்றிய அளவுக்கு மிறிய அச்சவுணர்வு, அதன் மீது எதிர்நிலை தாக்கத்தை உண்டாக்கிவிடுகிறது.

இந்திய மார்க்சியவாதிகளிடையே  சாதியை பற்றிய  ஒத்த கருத்து இன்னும் எட்டவில்லை. எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் வகையில், சாதியைப் பற்றிய மார்க்சியப் பார்வையை இன்னும் அமைத்துக் கொள்ளவில்லை என்பது உண்மை. புதுப்புது கருத்துக்கள் முளைத்துக் கொண்டே இருக்கிறதே தவிர ஒத்த கருத்தை நெருங்கவில்லை. முடிவில், இது சாதியை ஏற்றுக் கொண்டவர்களுக்கு உகந்த நிலைமை ஏற்படுத்தித் தருகிறது, அதாவது சாதி என்பது நிலையான ஒன்று என்ற இவர்களின் கருத்தை நிலைப்படுத்தும் வகையில் நிலைமை இருக்கிறது.

சாதியின் தோற்றத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படியான கருத்தை உருவாக்கினால், சாதியின் இருப்பு, மறைவு பற்றிய கண்ணோட்டத்தை அமைத்துக் கொள்வது எளிதாகிவிடும்.

சாதியைப் பற்றிய ஆய்வை பல்வேறு மார்க்சிய அறிஞர்கள் பல கோணங்களில் செய்திருக்கின்றனர். அதனை முதலில் தொகுத்துப் பார்ப்போம்.

இனக்குழு சமூகத்தின் சிதைவு முழுமையாக நடைபெறாமை என்னும் நிலைமையினால் தோன்றிய கூறுகளை, நிலவுடைமை உற்பத்தி முறை உறுதிப்படுத்தி சாதியம் தோன்றியதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர்.  இனக்குழுச் சமூகத்தன் வளர்ச்சி நிலையில் ஏற்றத்தாழ்வுகளை சமன்படுத்தவும் உபரி உற்பத்தியை உறிஞ்சும் வடிவமாகவும் சாதி தோன்றியிருக்கும் என்கின்றனர். இதனை மறுத்த சில அறிஞர்கள் இந்தப் போக்கு எந்திரத்தனமான பொருள்முதல்வாதமாக உள்ளது என்று விமர்சித்தனர்.

அதாவது சாதியத்தை நிலவுடைமை சமூகத்தன் தோற்றமாக கருதுவதால், நிலவுடைமையின் உற்பத்தி முறை மாற்றத்தோடு சாதியமும் மறைந்து போகும் என்பது இவர்களுக்கு எந்திரத்தனமாகப் படுகிறது.

மேற்கட்டுமானத்தின் தன்மை அடித்தளத்தை பாதிக்கும் என்பது மட்டுமல்ல, தீர்மானிக்கும் தன்மையையும் பெற்றிருக்கிறது என்பது இவர்களது முடிவு. அத்துடன், சாதியத்தின் எல்லாத் தன்மைகளையும், இந்த அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தால் விளக்கிட முடியாது.  பிறப்பால் அமைந்துள்ள சாதியத்தை வேலைப்பிரிவினை என்ற வடிவத்திற்குள் கொண்டுவந்து, சாதியத்தை மேற்கட்டமைப்பு என்ற அடிப்படையில் விளங்கிக் கொள்ள முடியாது என்பது இவர்களின் கருத்து.

ஐரோப்பிய நிலவுடைமை முறையில் தீர்மானகரமானத் தன்மையாக வர்க்கம் அமைந்துள்ளது, இந்திய நிலவுடைமைச் சமூகத்தில் மேற்கட்டுமானமாகச் சாதியம் அமைந்துள்ளது என்கின்றனர் சிலர். இத்துடன் நில்லாது  மேலும் இந்திய நிலவுடைமைச் சமூகத்தில் சாதியம் மேற்கட்டமைப்பாக அமையவில்லை அதற்கு மாறாக அடித்தளமாக அமைந்துள்ளது என்ற விளக்கம் கொடுப்பவர்களும் உண்டு.

ரத்தஉறவுகள் ஆளுமை செலுத்தும் சமூகம் வர்க்க மற்ற சமூகமாகும். இச் சமூகத்தில் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாட்டை பயன்படுத்தல் சரியன்று.  இனக்குழுச் சமூகத்தின் சிதைவின் கூறுகளின் அடிப்படையில் சாதியம் தோற்றம் பெற்றதால், அதாவது ரத்த உறவின் அடிப்படையில் சாதியம் அமைந்துள்ளதால், இதனை அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாட்டிற்குள் கொண்டுவர முடியாது என்பது சில அறிஞர்களின் கருத்து.

இதற்கு நேர் மாறாக, பிறப்பின் வழியில் அமைந்த வேலைப் பிரிவினை அடிப்படையில் உருவான உற்பத்தி உறவுகள், சாதிய உற்பத்தி உறவாக அமைந்துள்ளதால், சாதியத்தை அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற இரண்டிலும் இடம்பெறுவதாக சில அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இரண்டு தளங்களிலும் சாதியம் இடம்பெறுவதால், அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது, மேற்கட்டமைப்பு சார்புநிலை சுதந்திரத்தோடு செயற்பட்டு அடித்தளத்தை தாக்குகிறது என்ற வரலாற்றியல் பொருள்முதல்வாதம் பார்வை சாதியத்தை புரிந்து கொள்வதற்கு பயன்படுத்த முடியாது என்ற முடிவிற்கு சில  அறிஞர்கள் வருகின்றனர்.

இவ்வளவு குழுப்பங்களின் முடிவில் மார்க்சியப் பார்வைக்கு சாதியம் எட்டாது என்பதான முடிவே மேலோங்கியிருக்கிறது. மார்க்சிய வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தால்  சமூக வளர்க்சியை அறிந்து கொள்ள முடிகிறது என்பதை ஏற்றுக் கொள்ளாதவர்களை நாம் வலுவந்தப்படுத்த முடியாது.

வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்பது ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாக கருதுகிறது. இதனை முதலில் ஏற்றுக் கொண்டவர்களே மார்க்சியவாதிகளாவர். முதலாளித்துவ சமூகத்திற்கு முன்புள்ள இந்திய சமூகம், ஐரோப்பாவைப் போல் வர்க்கச் சமூகமாக காணப்படவில்லை, சாதிய சமூகமாக இருந்தது என்ற புரிதலில் மட்டும், வீழ்துகிடந்தால் கண்டிப்பாக மார்க்சிய அணுகுமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தியாவில் காணும் சாதியம் என்பது இந்திய வர்க்கத்தின் தனித்த வடிவமாகும். அதாவது சாதியத்தை வர்க்கமாக பார்க்கும் போது மார்க்சியம் நமக்குப் பயன்படும்.

மார்க்சின் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற வழிகாட்டுதலை, தவறாக விளக்கியும், அதனைப் பரப்பியும் வருகின்றனர். அதாவது அடித்தளம் மேற்கட்டுமானத்தில் வினையாற்றுவதைப் போலவே, மேற்கட்டமைப்பும் அடித்தளத்தின் மீது வினைபுரிகிறது அதனால், அடித்தளம் மேற்கட்டமைப்பு என்பதை பரஸ்பர வினையாற்றுகிறது என்பதாக விளக்குகின்றனர். இந்த தவறான புரிதல் சாதியம் பற்றிய புரிதலில் இவர்களை தடுமாற வைக்கிறது. மார்க்சிய அடிப்படைகளைவிட்டு இவர்களை விலகச் செய்கிறது.

அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது, மேற்கட்டமைப்பு சார்புநிலை சுதந்திரத்தோடு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது என்பதே மார்க்ஸ் வகுத்தளித்த வழிமுறை. அடித்தளமும் மேற்கட்டமைப்பும் சம அளவில் வினையாற்றுகிறது, என்றால் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்று மார்க்ஸ் பிரித்திருக்கத் தேவையில்லை, இடது, வலது என்று பிரித்திருக்கலாம், இடது வலதை நிர்ணயிக்கிறது, சிலநேரங்களில் வலது இடதை நிர்ணயிக்கிறது என்று கூறுவதற்கு ஏதுவாக இருக்கும்.

அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயித்தால், அது சமூக வாழ்நிலையே சமூக உணர்வை நிர்ணயிக்கிறது என்று அறிய முடிகிறது. மேற்கட்டமைப்பு அடித்தளத்தை நிர்ணயிக்கிறது என்றால், சமூக உணர்வுநிலையே சமூக வாழ்நிலையை நிர்ணயிக்கிறது என்று பொருள்கொள்ள வேண்டும்.

இவ்விரண்டும் வர்க்கச் சமூகத்தில் காணப்படும் சிந்தனைப் போக்கு. இரண்டும் சரிசமமாக வினைபுரியும் என்பது வர்க்கம் மறைந்த சமூகத்திற்கு உரிய கோட்பாடாகும். அதாவது சோசலிச சமூகத்தைக் கடந்து கம்யூனிச சமூகத்தில் நுழையும் போது அடித்தளமும் மேற்கட்டமைப்பும் இணைந்து செயல்படும், அப்போது மதம், அரசு போன்ற வர்க்க ஒடுக்குமுறை கருவிகள் மறைந்து உலரத் தொடங்கும்.

கம்யூனிச சமூகத்திற்குரிய பரஸ்பர வினைபுரிதல் என்பதை, வர்க்கச் சமூகத்தில் கடைபிடித்தால், சமூக வாழ்நிலையே, சமூக உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது என்ற கோட்பாட்டிற்கு மாறாக, மார்க்ஸ் காலத்திற்கு முன்பு காணப்பட்ட வரலாற்றியல் சிந்தனையான, சமூக உணர்வுநிலையே சமூக வாழ்நிலையை தீர்மானிக்கிறது என்ற கண்ணோட்டத்திற்கு சென்றுவிடுவோம். அவ்வாறு செல்லும் போது, சமூகத்தை உருவாக்குவது, அரசு, ஆட்சியாளர், தளபதி, தலைசிறந்த மாமேதை, இத்துடன் போர் நடவடிக்கை, தத்துவப் போராட்டம் போன்றவற்றால் சமூகம் நிலைநாட்டப்படுகிறது என்ற பழைய முடிவிற்கே செல்லவேண்டிவரும். இது அப்பட்டமான கருத்துமுதல்வாதமாகும், சமூக வாழ்நிலையே சமூகஉணர்வை தீர்மானிக்கிறது என்பதே பொருள்முதல்வாதச் சிந்தனையாகும்.

அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றிய மார்க்சிய முதலாசிரியர்களின் கருத்தைப் பார்ப்போம்.
மார்க்ஸ் கூறுகிறார்:-
இதன் மூலம் நான் உருவாக்கிய பொதுவான முடிவை - இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக மாறியது - பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம். மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும்  சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளில் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.

இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.
....
பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டுமானம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ, மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம், அரசியல், மதம், கலைத் துறை அல்லது தத்துவஞானத் துறைகளில் - சுருக்கமாகச் சொல்வதென்றால்  சித்தாந்தத் துறைகளில் - இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து  கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.
அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு  முன்னுரை

எங்கெல்ஸ்  கூறினார்:-
வரலாற்றின் உந்து விசையைப் பற்றிய மாபெரும் விதியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ். வரலாற்று ரீதியான அனைத்துப் போராட்டங்களும், அவை அரசியல், மத, தத்துவஞான அல்லது வேறு ஏதாவதொரு சித்தாந்தத் துறைக்குள்ளாக முன்னேறிய போதிலும், உண்மையில் அவை அநேகமாக சமூக வர்க்கங்களின் போராட்டங்களின் தெளிவான வெளியீடுகள் மட்டுமே, இந்த வர்க்கங்கள் இருப்பதும் அதன் காரணமாக இவற்றுக்கிடையே ஏற்படுகின்ற மோதல்களும் கூட அவற்றின் பொருளாதார நிலைமையின் வளர்ச்சியின் தரத்தினால், அவற்றின் உற்பத்தி முறையினாலும் அதனால் நிர்ணயிக்கப்படுகின்ற பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன என்பது அந்த விதியாகும். இயற்கை விஞ்ஞானத்தில் சக்தியின் உருமாற்றம் பற்றிய விதிக்கு உள்ள அதே முக்கியத்துவம் வரலாற்றில் இந்த விதிக்கு உண்டு.
லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் - எங்கெல்சின் முன்னுரை

பொருளாதார வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்தல், அதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட மக்களினம் அல்லது குறிப்பிட்ட சகாப்தத்தின் போது அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவு என்னும் அடிப்படையின் மீது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சட்டவியல் கருத்தாக்கம், கலை மற்றும் மதக் கருத்துக்கள் கூட வளாச்சியடைகின்றன, ஆகவே அதன் ஔயிலிக் அவற்றை விளக்க வேண்டுமே அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது.
மார்க்சின் உடலைப் புதைக்கின்ற பொழுது எங்கெல்ஸ் நிகழ்த்திய உரை

அரசியல், சட்டவியல், தத்துவஞான, சமய, இலக்கிய, கலை, இதர வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது, ஆனால் இவை அனைத்தும், ஒன்றின் மீது ஒன்றும், பொருளாதார அடிப்படையின் மீதும் எதிர்ச்செயல் புரிகின்றன. மற்றவை ஒவ்வொன்றும் செயலற்ற விளைவை        மட்டுமே கொண்டிருக்கின்றன, பொருளாதார நிலைமை காரணமாக, தனியாக சுறுசுறுப்புடன் செயல் புரிகிறது என்பதல்ல. பொருளாதார அவசியத்தின் அடிப்படையில் - அது இறுதியில் எப்பொழுதும் தன்னை வலியுறுத்துகிறது - இடைச்செயல் நடைபெறுகிறது.
-எங்கெல்ஸ் வொ.போர்கியுசுக்கு எழுதிய கடிதம், லண்டன், ஜனவரி 25, 1894

மேலே காணும் சிறிய பகுதியைக் கொண்டே, மார்க்சிய முதலாசியர்களின் வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை அறிந்து கொள்ள முடியும். இக்கண்ணோட்டத்தை முதலில் ஏற்றுக் கொண்டவர்களால் தான் அனைத்து துறைகளிலும் இதனைப் பின்பற்றி மார்க்சிய வழியில் ஆராய்ந்து முடிவெடுக்க முடியும். இதில் சந்தேகம் கொண்டவர்களால், வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை முழுமையாக கடைபிடிக்க முடியாமல் போய்விடும்.

மார்க்சிய முதலாசிரியர்களின் கருத்தைத் தொகுத்துப் பார்ப்போம்.

மனிதர்கள் தமது வாழ்க்கைக்காக உற்பத்தி செய்திடும் போது, தவிர்க்க முடியாத வகையில் திட்டவட்டமான உறவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் மனிதர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து புறநிலையாக இருப்பவையாகும்.  இதுவரை வளர்ச்சியடைந்துள்ள  பொருளாதார உற்பத்திச் சக்திகளின் மட்டத்திற்கு ஏற்ப, உற்பத்தி உறவு ஏற்படுகிறது. இந்த உற்பத்தியின் கூட்டுமொத்தமே அன்றைய அரசியல் பொருளாதார அமைப்பாகும், அதுவே அச்சமூகத்தின் அடித்தளமாகும். இந்த அடித்தளத்தின் மீது சட்டம், அரசியல் போன்ற மேல்கட்டமைப்பு எழுப்பப்படுகிறது. இதற்கு பொருத்தமாக சமூக உணர்வின் வடிவங்கள் தோன்றுகின்றன.

மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை,  அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.. இந்த மாற்றம் விரைவிலோ அல்லது சற்றுதாமதமாகவோ நடைபெறலாம். மனிதர்களின் சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.  இவ்வகையில் தான் சமூக உணர்வுநிலையின் மாற்றத்தை புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு மார்க்ஸ் தமது கண்டுபிடிப்பான வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை முன்வைக்கிறார்.

வரலாற்றின் உந்து விசையைப் பற்றிய மாபெரும் விதியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ் என்று எங்கெல்ஸ் தெரிவிக்கிறார். மேலும் கூறுகிறார், வரலாற்றில் நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் அவை ஏதாவதொரு சித்தாந்தத் துறைக்குள்ளாக முன்னேறிய போதிலும், உண்மையில் சமூக வர்க்கங்களின் போராட்டங்களின் தெளிவான வெளியீடுகள் மட்டுமே. வர்க்க மோதல்கள் பொருளாதார நிலைமையின் வளர்ச்சியின் தரத்தினால், அவற்றின் உற்பத்தி முறையினாலும் அதனால் நிர்ணயிக்கப்படுகின்ற பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன, என்று வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் விதியை குறிப்பிடுகிறார். இயற்கை விஞ்ஞானத்தில் சக்தியின் உருமாற்றம் பற்றிய விதிக்கு உள்ள அதே முக்கியத்துவம் வரலாற்றில் இந்த விதிக்கு உண்டு என்கிறார் எங்கெல்ஸ்.

பொருளாதார வளர்ச்சியின் அளவு என்னும் அடிப்படையின் மீது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சட்டவியல் கருத்தாக்கம், கலை மற்றும் மதக் கருத்துக்கள் வளாச்சியடைகின்றன, ஆகவே அதன் ஔயிலிக் அவற்றை விளக்க வேண்டுமே அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது என்கிறார் எங்கெல்ஸ்.

எங்கெல்ஸ் அரசியல், சட்டவியல், தத்துவஞான, சமய, இலக்கிய, கலை போன்றவை பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது, ஆனால் இவை அனைத்தும், ஒன்றின் மீது ஒன்றும், பொருளாதார அடிப்படையின் மீதும் எதிர்ச்செயல் புரிகின்றன. பொருளாதார நிலைமை காரணமாக, தனியாக சுறுசுறுப்புடன் செயல் புரிகிறது என்பதல்ல. பொருளாதார அவசியத்தின் அடிப்படையில்        இடைச்செயல் நடைபெறுகிறது, என்று மேற்கட்டமைப்பு சார்புநிலையான சுதந்திரத்தோடு அடித்தளத்தின் மீது எதிர்செயல் புரிகிறது என்கிறார்.

சமூகம் வர்க்கமாக பிளவுபட்டுள்ளதை ஏற்றுக் கொண்டால், மார்க்சியத்தின் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் சமூகப் போக்குகளை புரிந்து, அறிந்து, அதன்வழியில் மாற்றத்தை கொண்டுவர முடியும்.  ஒப்புக் கொள்ளாதவர்கள் அவர்களின் சித்தாந்தத்தின் படி செல்லட்டும், ஒப்புக் கொண்டவர்கள் சாதியம் பற்றி ஆய்வில் மார்க்சியத்தை பின்பற்றுவோம்.

மார்க்ஸ் சாதியத்தை உற்பத்தி முறையோடு இணைத்தே ஆராய்கிறார்.

முந்தைய சமுதாயங்கள் தொழில்களைப் பரம்பரையாக்கி, சாதிகளாக அவற்றை உறைந்து இறுகச் செய்தோ, குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளின் காரணமாய் சாதி அமைப்புக்கு ஒவ்வாத முறையில் வேறுபாடுறும் தன்மை தனிஆளிடம் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை கைவினைச் சங்கங்களாக சமைந்து கெட்டிப்படச் செய்தோ வந்த போக்கிற்கு ஒத்ததே ஆகும். தாவரங்களும் மிருகங்களும் இனங்களாகவும் ராசிகளாகவும் வகைபிரிவதை முறைப்படுத்துகிற அதே இயற்கை விதியின் செயலிலிருந்தே, சாதிகளும் கைவினைச் சங்கங்களும் பிறக்கின்றன, ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைந்ததும் சாதி மூலமான பரம்பரைத் தன்மையும் கைவினைச் சங்கம் மூலமான பிரத்தியேகத் தன்மையும் சமுதாயச் சட்டத்தின் மூலம் நிலைநாட்டப்படுகின்றன என்பதே
மூலதனம் I பக்கம் 461

       மார்க்ஸ் மாற்றமின்றி காணப்படும் வேலைப் பிரிவினை பாரம்பரியமாகத் தொழில் புரிவதை சாதியத்தோடு இணைத்துக் காண்கிறார்.

சாதியத்தை உற்பத்தி முறையோடு இணைத்து புரிந்து கொள்ளும் போது, சாதியம் நிலவுடைமைச் சமூகத்தில் உறுதிப்படுத்தப்பட்ட வடிவமாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறும்போது சாதியம் என்பது, நிலவுடைமை உற்பத்தி முறையில் மாற்றம் ஏற்படும் போது அதன் வடிவமான சாதியமும் மறைந்து போகும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இதன் மூலம் பொருளாதாரப் போராட்டத்தை மட்டுமே செய்திட வேண்டும், சாதியத்தை அதன் அழிவுவரை அல்லது அதன் மறைவுவரை பொருத்திக்க வேண்டும் என்று பொருள்கொள்ளப்பட்டால் அது பெரும் தவறாகும்.  சாதிப் போராட்டத்தை பொருளாதாரப் போராட்டத்துடன் உள்ளடங்கியதாக புரிந்து கொண்டு சாதியத்தை எதிர்த்து போராட வேண்டும் என்பது தான் மார்க்சிய வழிகாட்டுதலாகும்.

நிலவுடைமை மேலோங்கிய இடத்திலும் அதன் கூறுகள் இன்னும் உயிரோட்டத்துடன் காணும் இடங்களில் சாதியப் போராட்டம் பொருளாதாரப் போராட்டத்துடன் இணைந்தே நடத்தப்பட வேண்டும். வளர்ச்சியடைந்த நகர்புறங்களில் முதலாளித்துவத் தன்மைகள் தோன்றிய இடங்களில் சாதியப் போராட்டம் ஒரு கருத்தியல் போராட்டமாக, அதாவது பொருளாயத உள்ளடத்திலிருந்து விடுபட்டும் சிந்தனையில் சாதியம் செயற்படும் போது இங்கு சித்தாந்தப் போராட்டமாக நடத்தப்பட வேண்டும்.

நாட்டில் முதலாளித்துவம் அனைத்துத் துறைகளில் வளர்ச்சியடையும் போது சாதியம் உள்ளடக்கத்திற்கான வடிவமாக காணப்படாமல், மீதமிச்சமாக உதிர வேண்டிய நிலையாக மாறிவிடும். இறுதியில் கருத்தியல் போராட்டமாக நடத்தப்பட்டு சாதியம் உலர்ந்து உதிரும்.

மதம் எவ்வாறு வர்க்கத்தோடு தோன்றியதோ அதே போல் சாதியமும் வர்க்கத்தோடு தோன்றியது, அதனால் சமூகத்தில் வர்க்கம் மறையும் போதுதான் மதம் மறையும் என்பது போலவே சாதியமும் வர்க்கத்தின் மறைவோடுதான் மறைந்து போகும் என்ற கருத்து சரியானதன்று. இதனை விளங்கிக் கொள்வோம்.

சாதியத்தை உற்பத்தி உறவோடு புரிந்து கொள்ளும் போது, முதலாளித்துவ வளர்ச்சியில் சாதியத்தின் வடிவம் தேவையற்றதாகும். ஆனால் கருத்தியலாக  சாதியத்தை மேலும் நீடிக்கிறது என்று சொல்லாம், அதற்கெதிரான போராட்டம் கருத்தியலான மீதமிச்சத்துடனான போராட்டமாகவே இருக்கும்.

ஒரு முதலாளி தன்வர்க்க நலனை காப்பதற்கு சாதியத்தை பயன்படுத்தினால், சாதியம் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு தேவையான ஒன்று என்று ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு குறிப்பிட்ட சாதியைக் கொண்ட முதலாளி, வர்க்கப் போராட்டத்தை மட்டுப்படுத்துவதற்கு தொழிலாளர்களிடையே  உள்ள தம் சாதியர்களை தனியே பிரித்து, தொழிலாளர்களின் ஒற்றுமையை குலைப்பதற்கு சாதியத்தை பயன்படுத்தலாம்.

சாதியத்தை காப்பதால் அல்லது துணைபோவதால் தொழிலாளியின் நலன்கள் தான் பாதிக்குள்ளாகிறது என்பதை சாதியத்திற்கு ஆட்பட்ட தொழிலாளிக்கு உணர்த்த வேண்டும். முதலாளியின் நலன்கள் வேறு, தொழிலாளர்களின் நலன்கள் வேறு. இவைகளுக்கு அப்பாற்பட்டது சாதிய நலன்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.  சாதிய நலன்களைவிட வர்க்க நலன்கள் வாழ்வியல் நலன்களின் அடிப்படையில் தோன்றுவதால் நிச்சயமாக வெல்லும்.


சாதிய நலன்களைவிட வர்க்க நலன் முனைப்போடே செயல்படும். சாதிய நலன்களைவிட வர்க்க நலனே வாழ்க்கைக்கு பயன்படும். வர்க்க நலன் வாழ்வியல் நலன் என்பதை அறியும் போது சாதிய நலன் வலுவிழக்கும்.

சாதியத்திற்கு ஆட்பட்ட தொழிலாளர்களின் போக்கை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி போராட வேண்டும். தொழிலாளர்களின் வர்க்க உணர்வை நிலைநிறுத்த பாடுபட வேண்டும். இதனைப் பற்றி முனைவர் கோ.கேசவன் கூறுகிறார்:-
வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் இன்றைய காலகட்டத்தில் சமூக உற்பத்தி உறவு அளவில் மிகவும் முற்போக்கான சக்திகளாக விளங்கும் ஆலைத் தொழிலாளியாக இருப்பினும் அவரது நேச சக்தியான விவசாயி வர்க்கமாக இருப்பினும், அவர்களிடத்தில் ஆதிக்க சாதிய மனோபாவம் குடிகொண்டி இருப்பின், அது பிற்போக்கான உணர்வே. அது பஞ்சமரில் உருவான அடிப்படை வர்க்கத்தையும் இணைத்துச் செல்வதற்கான மாபெரும் தடை. அவர்கள் எந்த அளவுக்கு சாதிய மனோபாவத்தைக் கலைத்துக் கொள்கின்றனரோ அந்த அளவுக்கே வர்க்க உணர்வு பெற இயலும். சொந்த வர்க்கத்தோடு இணைந்து சொந்த சாதியின் ஆதிக்க வர்க்கத்தை எதிர்த்துப் போராட இயலும்.”
 சாதியம் (பக்கம் 119)

       இந்திய சமூகத்தை சாதிய சமூகமாக புரிந்து கொள்வதா? வர்க்க சமூகமாக புரிந்து கொள்வதா? என்ற கேள்விக்கு, வர்க்கச் சமூகம் என்பதே பதிலாகும்.  இந்திய தனித்தன்மையான உற்பத்தி உறவின் அடிப்படையிலான வர்க்கம் சாதியமாக வடிவெடுத்துள்ளது.  நிலவுடைமைச் சமூகத்தை அதன் வர்க்கத்தின் வடிவ அடிப்படையில் சாதிய சமூகம் என்றழைத்தால் அது பெரிய குற்றமாகாது, ஆனால் குறிப்பிட்ட சாதிக்குள் முதலாளிகளாக, தொழிலாளிகளாக பிரிந்து வர்க்கமாக மாறியபின்பும், முற்ற முழுக்க இந்திய சமூகத்தை சாதிய சமூகம் என்றழைக்க முடியாது. ஏன் என்றால் சாதிக்குள் வர்க்கம் ஏற்பட்டுள்ள நிலையில், முதலாளித்துவ அமைப்புகளில் வர்க்கப் போராட்டத்தை நேரடியாக முழுமையாக நடத்தப்பட வேண்டியதாகும். தொழிலாளர்களிடம் காணப்படும் மீதமிச்ச சாதியக் கூறுகளை வர்க்கப் போராட்டத்துடன் இணைத்து அழித்துவிட முடியும்.

நகர்புறங்களில் தாழ்த்தப்பட்ட சாதியில் மிகச்சிலர் இன்று முன்னேறி முதலாளியாகவோ, முதலாளித்துவ அறிவுத்துறை பணியினை செய்பவராகவோ, மாறுவதற்கு எவ்வளவோ வாய்ப்புள்ளது. இதனை புரிந்து கொண்டு நகர்புறத்து சமூகப் போராட்டம் என்பது, மீதமிச்சமாகத் தென்படும் சாதியக் கூறுகளை போக்குவதன் கூடிய வர்க்கப் போராட்டமாகத் தான் நடத்தப்பட வேண்டும்.

இந்தியாவில் இன்னும் நிலவுடைமை சமூகத்தை முழுமையாக கடந்துவிடவில்லை, இன்றைய அரசியல் போராட்டம் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியாகத் தான் நடத்தப்பட வேண்டியுள்ளது.  இன்னிலையில் நிலவுடைமைப்பகுதியில் சாதியத்துடன் கூடிய பொருளாதாரப் போராட்டமாகவும், முதலாளித்துவப் பகுதியில் சாதியக் கூறுகளை எதிர்ப்புடன் கூடிய, வர்க்கப் போராட்டமாகவும் நடத்தப்பட வேண்டும்.