Monday, 6 January 2014

பாலன் தோழரின் கருத்தை முன்வைத்து எனது எதிர்வினை:-

//
*           மார்க்சிச லெனிச மாவோ சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளுதல்
*     மக்கள் மத்தியில் பணி செய்தல்
*     தேர்தல் பாதை புறக்கணித்தல்
*     ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தல்


மாக்சிச லெனிச மாவோ சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் அதே வேளை அதற்காக மக்கள் மத்தியில் பணி செய்யவும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கவும் தயாரில்லாத சிலர் இருக்கின்றனர். அவர்களை புரட்சியாளர்களாக கருத முடியாது.//
- பாலன் தோழரின் இந்த கூற்றில் மக்கள், ஆயுதப் போராட்டம் என்ற இரண்டைத் தவிர அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளத. அதனால் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர் எதிர்த்த அராஜகவாதமாகவும், மாவோ எதிர்த்த ராணுவக் கணோட்டமாகவும் காட்சியளிக்கிறது.

பலப்பிரயோகம், தேர்தல் பாதை என்ற போர்தந்திரத்தை (Tactic) செயல்தந்திரமாக (Strategy) புரிந்து கொள்ளுதல் மார்க்சிய வழிப்பட்ட அரசியலாகாது. இதிலிருந்து விடுபடுவதற்கு மக்கள் மத்தியில் பணி செய்தல் என்பதை மட்டும் முன்வைத்தல் என்பது போதாமையை வெளிப்படுத்துகிறது.

நாடாளுமன்ற வலதுதிரிபால் அராஜகவாதமும், நாடாளுமன்ற புறக்கணிப்பு என்ற அராஜக நிலைப்பாட்டால் வலதுதிரிபுகளும் ஒன்றுக்கு எதிராக ஒன்று என்ற தவறுகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும் போக்காக நமது நாட்டு மார்க்சிய அரசியல் காட்சியளிக்கிறது.

இதிலிருந்து மீள்வதற்கு, சட்டபூர்வ, மற்றும் சட்டபூர்வமற்ற போராட்டத்தை ஒன்றிணைக்கும் லெனின் வழிகாட்டுதலே நமக்கு தேவைப்படும் ஒன்றாக கருதுகிறேன். சட்டபூர்வமான செயற்பாடுகளையும் சட்டவிரோதமான செயற்பாடுகளையும் ஒன்றிணைத்துக கொள்வதின் அவசியத்தை லெனின் இவ்வாறு கூறுகிறார்:-

"1907லும் 1908லும் அடுத்து வந்த ஆண்டுகளிலும் டூமாவின் புறக்கணிப்பு மிகவும் கடுமையான, நிவர்த்தி செய்வது கடினமான தவறாகிவிட்டது. ஏனெனில் ஒரு புறத்தில், புரட்சி அலை வேகமாக உணர்ந்தெழுந்து, எழுச்சியாக மாறிவிடுமென்று எதிர்பார்க்க முடியாமல் இருந்தது. மறு புறத்தில், முதலாளித்துவ முடியாட்சி புதுப்பிக்கப்பட்ட போது உருவான வரலாற்று நிலைமை சட்டபூர்வமான செயற்பாடுகளையும் சட்டவிரோதமான செயற்பாடுகளையும் ஒன்றிணைத்துக கொள்வதை அவசியமாக்கிவிட்டது." (இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

அதிகாரம் சிறிதுமற்ற டூமாவில் பங்கேற்பு - புறக்கணிப்பு என்ற லெனின் கையாண்ட போர்தந்திரத்தை புரிந்துகொள்ளாமல் நாடாளுமன்றம் காலாவதியாகிவிட்டது என்ற போக்கை அராஜகவாதம் என்று லெனின் விமர்சிக்கிறார்.

"7. முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்ளலாமா?
மகா அலட்சியமாய், சிறிதும் பொறுப்புணர்வின்றி, ஜெர்மன் "இடதுசாரி" கம்யூனிஸ்டுகள் இக்கேள்விக்கு எதிர்மறையில் பதிலளிக்கிறார்கள். அவர்களடைய வாதங்கள் யாவை? மேலே எடுத்துரைக்கப்பட்ட மேற்கோளில் பார்த்தோமே:-
"... வரலாற்று வழியிலும் அரசியல் வழியிலும் காலாவதியாகிவிட்ட நாடாளுமன்றப் போராட்ட வடிவங்களுக்குச் சரிந்து செல்லும் எவ்வகையான பின்னடைவையும்... தீர்மானமாய் நிராகரித்தே ஆக வேண்டும்..."

நகைக்கத்தக்க ஆடம்பரத்துடன் இது கூறப்படுகிறது. கண்கூடாகவே தவறானது இது. நாடாளுமன்ற முறைக்குச் "சரியும் பின்னடைவு" என்கிறார்கள்! ஜெர்மனியில் ஏற்கனவே சோவியத் குடியரசு ஒன்று உதித்துவிட்டதா, என்ன? அப்படி ஒன்றும் தெரியவில்லையே! "சரியும் பின்னடைவு" என்பதாகப் பேசுகிறார்களே, எப்படி அது? பொருளற்றச் சொல்லடுக்கேயன்றி வேறு என்ன?

நாடாளுமன்ற முறை "வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்ட" ஒன்று தான். பிரசார அர்த்தத்தில் இது மெய்தான். ஆனால் நடைமுறையில் அதனை வெற்றிகொள்ளும் நிலையை வந்தடைய இன்னும் நெடுந் தொலைவுள்ளதென்பது யாவரும் அறிந்ததே. முதலாளித்துவத்தையும் "வரலாற்று வழியில் காலாவதியாகி விட்ட" ஒன்றாக மிகப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே, முழு நியாயத்துடன் அறிவித்திருக்கலாம். ஆயினும் அது, முதலாளித்துவத்தின் அடிப்படைமீது  மிக நீண்ட, மிகவும் விடாப்பிடியான ஒரு போராட்டத்துககான அவசியத்தை நீக்கிவிடவில்லையே." (இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

இதனை வெளிப்படுத்துவதாகவே இரண்டாம் அகிலத்தின் தீர்மானம் அமைந்துள்ளது.

"வர்க்கத்துக்கும் பெருந்திரளான மக்களுக்கும் கட்சியின் உறவைப் பற்றிய கருத்துக்கள், முதலாளித்துவ நாடாளுமன்றங்களிலும் பிற்போக்கான தொழிற்சங்களிலும் கம்யுனிஸ்டுக் கட்சிகள் பங்கெடுப்பது அவசியமல்ல என்ற கருத்து தவறானது என்று மூன்றாவது அகிலதத்தின் இரண்டாவது காங்கிரஸ் கருதுகிறது"- லெனின் (அடிப்படைக் கடமைகளைப் பற்றி கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரஸ்)

மார்க்சிய முதலாசிரியர்கள் நடாளுமன்றத்தில் பங்கு பெறவேண்டும் என்று கூறுகின்ற போது அந்த நாடாளுமன்றம் அதிகாரம் மிக்கதாகவோஅது நமக்கானதாகவோ கொள்ளவில்லை. என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

லெனின்-"ஆளும் வர்க்கத்தின் எந்த உறுப்பினர் நாடாளுமன்றத்தின் மூலம் மக்களை அடக்கி ஒடுக்க வேண்டுமெனச் சில ஆண்டுகளுக்கு ஒரு தரம் தீர்மானிப்பதே முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் மெய்யான சாரப் பொருள்- நாடாளுமன்ற- அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட முடியரசுகளில் மட்டுமின்றி, மிகவும் ஜனநாயகமான குடியரசுகளிலுங்கூட இதுவேதான் நிலைமை. (அரசும் புரட்சியும்)

நாடாளுமன்றத்தின் மூலம் மக்களை அடக்கி ஒடுக்க வேண்டுமெனச் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தீர்மானிக்கும் நடைமுறை என்பதை அறிந்து தான் நாடாளுமன்ற பங்கேற்பை பற்றி கூறியிருக்கின்றனர்.

ஒரு மாபெரும் புரட்சிகரமான நடவடிக்கை என்ற கருத்துடன், நாடாளுமன்றத்தை புறக்கணிப்பு செய்கிற அராஜகவாத போக்கை கண்டித்து எங்கெல்ஸ் எழுதுகிறார்:-

"பக்கூனின்வாத "அரசியலிலிருந்து ஒதுங்கி நிற்பது" இங்குதான் இட்டுச் செல்கிறது. அமைதியான காலங்களில், எவ்வளவு சிறப்பான முறையில் பாடுபட்டாலும் நாடாளுமன்றத்துக்கு ஒரு சில பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பிவைக்க முடியும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பெறுவதற்குச் சிறிது கூட சந்தர்ப்பமில்லை என்பது தொழிலாளர்களக்கு முனபே தெரிந்திருக்கும் பொழுது, தேர்தல் நடக்கும் பொழுது வீட்டில் உட்கார்ந்திருப்பது மற்றும் தாங்கள் வாழ்கின்ற அரசை, தங்களை ஒடுக்குகின்ற அரசைத் தாக்காமல் எங்குமே இல்லாத-அதன் காரணமாகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத-அரசைத் தாக்குவது ஒரு மாபெரும் புரட்சிகரமான நடவடிக்கை என்று சில சமயங்களில் தொழிலாளர்களை நம்ப வைக்க முடியும். புரட்சிகரமான முறையில் நடந்து கொள்வதற்கு-குறிப்பாக, எளிதில் மனமுடைந்து போகக் கூடியவர்களுக்கு- இதுமிக அற்புதமான வழியாகும்.
..
.. சம்பவங்கள் பாட்டாளி வர்க்கத்தை முன்னணிக்குக் கொண்டு வந்த உடனே ஒதுங்கியிருப்பதென்பது வெளிப்படையான முட்டாள்தனமாகி விடுகிறது, தொழிலாளி வர்க்கத்தின் சுறுசுறுப்பான தலையீடு தவிர்க்க முடியாத அவசியமாகி விடுகிறது. (பக்கூனின்வாதிகளின் வேலை)

அராஜகவாதிகள் நாடாளுமன்றம் போன்ற சட்டபூர்வ போராட்டத்தை அற்பப் பணியாகக் கருதுவதும், "மகத்தான நாட்கள்" வரும் என்று கைகட்டி காத்திருப்பதும், மாபெரும் நிகழ்ச்சிகளைப் படைக்கும் சக்திகளை திரட்டும் திறனற்று இருப்பதும் அராஜகவாதிகளின் போர்தந்திரத்தின் நடைமுறை விளைவு என்கிறார் லெனின்.

லெனின்:-
""பாய்ச்சல்களையும்" தொழிலாளி வர்க்க இயக்கம் கோட்பாட்டு வழியில் பழைய சமுதாயம் அனைத்துக்கும் பகைமையாய் இருப்பதையும் பற்றிய எல்லா வாதங்களையும் திருத்தல்வாதிகள் வெறும் வாய்வீச்சாய் கருதுகிறார்கள். சீர்திருத்தங்களை அவர்கள் சோஷலிசத்தின் பகுதியளவு நிறைவேற்றமாய்க் கருதுகிறார்கள். அராஜகவாத-சிண்டிக்கலிஸ்டுகள் "அற்பப் பணியை", குறிப்பாய் நாடாளுமன்ற மேடையைப் பயன்படுத்திக் கொள்வதை நிராகரிக்கின்றனர். பின்கூறிய போர்த்தந்திரம் நடைமுறையில் பார்க்கையில் "மகத்தான நாட்கள்" வருமெனக் கைகட்டிக் காத்திருப்பதும் மாபெரும் நிகழ்ச்சிகளைப் படைக்கும் சக்திகளைத் திரட்டும் திறனற்றிருப்பதுமே ஆகும்.

இரு வகையினரும் எது மிகவும் முக்கியமானதோ, அவசரமானதோ அது நடைபெறுவதற்கு- அதாவது, வர்க்கப் போராட்ட உணர்வு படைத்து தமது நோக்கங்களைத் தெளிவாய் உணர்ந்து மெய்யான மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தில் போதமும் பயிற்சியும் பெற்றவையும் எல்லா நிலைமைகளிலும் செவ்வனே இயங்கவல்லவையுமான, சக்தி மிக்க, பெரிய, நன்கு செயல்படும் நிறுவனங்களில் தொழிலாளர்கள் ஒன்றுசேர்க்கப்பவதற்குத் - தடையாகி விடுகின்றனர்" (ஜரோப்பியத் தொழிலாளர் இயக்கத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள்

மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தில் போதமும் பயிற்சியும் பெறுவதற்கும், தொழிலாளர்கள் ஒன்றுசேர்வதற்கும், அரசியலைப் புறக்கணிப்பு என்கிற போக்கு தடையாக போனதாக லெனின் கூறியதின் அடிப்படையில், நாடாளுமன்ற புறக்கணிப்பு என்ற முடிவைப் பற்றி இன்றுவரையில் மறுபரிசிலனை செய்யாமல் ஆயுதப் போராட்டம் என்ற ஒன்றையே போராட்ட முறையாக முன்வைப்பது விமர்சனத்துக்கு ஆட்பட்டதே.

Balan Tholar :-//புரட்சி என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை தூக்கியெறியும் பலாத்கார நிகழ்வு. எனவே ஆயுதம் வைத்து மக்களை அடக்கியாளும் முதலாளித்தவ வர்க்கத்தை ஆயுதம் இன்றி தேர்தல் பாதை மூலம் தூக்கியெறிய முடியும் என்பது கற்பனையானது மட்டுமன்றி மாக்சிச லெனிச மாவொசிச சிந்தனைக்கு முரணானது. அதுமட்டுமல்ல புரட்சிக்கு பின்னர் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு அமைய வேண்டும் என்று மாக்ஸ் கூறியிருப்தையும் ஏன் என்று சிந்தியுங்கள்.//

புரட்சி என்பது ஒரு வர்க்கத்தை இன்னொரு வர்க்கம் தூக்கியெறிதல், என்ற ஒரே வரி நமக்கு எந்த புரிதலையும் தந்துவிடப்பபோவதில்லை. பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவுதல் என்பது நமது இறுதி குறிக்கோள். அதனை அடைவதற்கான வர்க்கப் போராட்டத்தையும், அதற்கான அரசியலையும் வெறும் ஆயுதப் போராட்டமாக சுருக்கிக் கொள்ளுதல் அராஜகபோக்கான புரட்சிகரமான வாய்ச்சொல் வீச்சேயாகும்.

புரட்சிகரமான வாய்ச்சொல் வீச்சு என்பது நிகழ்ச்சிகளின் ஒரு குறிப்பிட்ட திருப்பத்தில் இருக்கிற குறிப்பிட்ட விவகார நிலைகளை பார்க்காமல் புரட்சிகரமான கோஷங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதையே குறிக்கிறது என்று லெனின் கூறுகிறார்:-

"புரட்சிகரமான போரைப் பற்றிய புரட்சிகரமான வாய்ச்சொல் நமது புரட்சியை நாசம் செய்யக் கூடும் என்று நான் ஒரு கட்சிக் கூட்டத்தில் சொன்ன போது என்னுடைய வாதத்தின் கூர்மைக்காக என்னைக் கடிந்து கொண்டார்கள். ஆனாபோதிலும், ஒரு பிரச்சினையைக் கூர்மையாக எழுப்பித் தீர வேண்டிய, விவகாரங்களைப் பச்சையாகச் சொல்லித் தீர வேண்டிய தருணங்கள் உண்டு, இல்லையேல் கட்சிக்கும் புரட்சிக்கும் நிவர்த்தி செய்ய முடியாத தீங்கு உண்டாக்கும் அபாயம் ஏற்படும்.

புரட்சிக் கட்சிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாட்டாளி வர்க்கச் சக்திகளும் குட்டி முதலாளி வர்க்கச் சக்திகளும் இணைந்த ஒரு சேர்க்கையாக, அல்லது கூட்டணியாக, அல்லது பரஸ்பரக் கலவையாக அமைகிற காலங்களிலும் புரட்சி நிகழ்ச்சிகளின் போக்கு பெரிய, வேகமான திருப்பங்களைக் காட்டும் போதும் புரட்சிக் கட்சிகள் பெரும்பாலாக அனுபவிக்கிற ஒரு வியாதியே புரட்சிகரமான வாய்ச்சொல் வீச்சு ஆகும். புரட்சிகரமான வாய்ச்சொல் வீச்சு என்பது நிகழ்ச்சிகளின் ஒரு குறிப்பிட்ட திருப்பத்தில் இருக்கிற குறிப்பிட்ட விவகார நிலைகளையும் பார்க்காமல் புரட்சிகரமான கோஷங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதையே குறிக்கிறது. அந்தக் கோஷங்கள் நேர்த்தியானவை, வசீகரமானவை, போதையூட்டுபவை, ஆனால் அவற்றிற்கு ஆதாரம் எதுவும் கிடையாது. புரட்சிகரமான வாய்ச்சொல்லின் இயல்பு இப்படிப்பட்டது" (புரட்சிகரமான வாய்ச்சொல்)

தேர்தல் பாதையே தீர்வு என்பதும், தேர்தல் பாதை முற்ற புறக்கணிப்பு என்பதும் செயல் தந்திரமான (Strategy) முடிவேயாகும். இவையிரண்டும் இறுதி குறிக்கோளை (Strategy) அடைவதற்கான வழிக்கு தடையாகவே இருக்கும். போர்தந்திரமான ஒன்றை செயல் தந்திரமாக முன்வைத்தல், எதிர்விளைவையே ஏற்படுத்தும். சட்டபூர்வ மற்றும் சட்டபூர்வமற்ற போராட்டத்தை இணைக்கத் தெரியாத கட்சியோ இயக்கமோ சமூக புரட்சியை நடத்திட சக்தியற்றதாகவே இருக்கும்.

இதே போன்று மற்ற சட்டபூர்வ போராட்டங்களை பயன்படுத்துவது பற்றியும் அதனைப் பயன்படுத்துவதால் இன்றைக்கு இருக்கின்ற நிலைமையை அங்கீகரிப்பதாகாது என்பதையும் எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்.

"அரசியல் சுதந்திரங்கள் - கூட்டம் நடத்தும் சுதந்திரம், சங்கம் அமைக்கும் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம்- இவை நம்முடைய ஆயுதங்கள். அவர்கள் இவற்றைப் பறிக்க முயற்சி செய்யும் பொழுது நாம் கைகளைக் கட்டிக் கொண்டு தலையிடாமல் இருப்பதா? எந்த அரசியல் நடவடிக்கையுமே இன்றைக்கிருக்கும் நிலைமையை அங்கீகரிப்பதை உள்ளடக்கியிருக்கிறது என்று நம்மிடம் கூறுகிறார்கள். ஆனால் இந்த நிலைமை அதை எதிர்ப்பதற்குரிய சாதனங்களையும் நம்மிடம் கொடுக்கும் பொழுது அத்தகைய சாதனங்களைப் பயன்படுத்தினால் இன்றைக்கிருக்கும் நிலைமையை அங்கீகரிப்தென்று அர்த்தம் கூற முடியாது." (தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் நடவடிக்கையைப் பற்றி)

சீனாவின் பிரத்யேக உள்ளடக்கத்துக்கு ஏற்ற போராட்ட வடிவமானதை நமது நாட்டில் அப்படியே பொருத்தி அதற்கு ஏற்ப உள்ளடக்கத்துக்கு விளக்கம் கொடுப்பது பல காலமாக நடந்துவருகிறது. அதன் படியே ஆயுதப் போராட்டம் என்ற ஒன்றை மட்டுமே வலியுறுத்தி சீனாவில் வெற்றி பெற்ற வடித்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுகப்படுகறிது.

லெனின்:-
"பயங்கரவாதம் என்பது போராட்ட நடவடிக்கைகளில் முறையானதொன்றாக ஒரு பொழுதும் இருக்க முடியாது. அதிகமாகச் சொல்லப் போனால், தீர்மானமான தாக்குதலின் வழிதுறைகளில் ஒன்றாக அது பயன்படலாம். ஆனால் தீர்மானமான தாக்குத்லைத் தொடுக்கும்படி மக்களை இப்போது அழைக்க முடியுமா?...." (எங்கிருந்து தொடங்குவது?)

ஆயுதப் போராட்டம் ஒன்றையே போராட்ட நடவடிக்கையாக முன்வைக்கும் போக்கை எதிர்க்கும் லெனின் வழியில் சட்டபூர்வ சட்டபூர்வமற்ற போராட்டத்தை ஒருங்கிணைக்கும் திறம்பெறுவதற்கான முயற்சியில் இறங்குவதே இன்றைய கடமையாகும்.

அதே நேரத்தில் நாடாளுமன்றம் போன்ற சட்டபூர்வமான நிலைமைக்கு மட்டுமீறி பழக்கப்படுத்தியர்வகளை எதிர்த்து லெனின் கூறியிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

".. ஒரு புறத்தில், கட்சியானது திடுதிப்பென்று சட்டபூர்வமான நிலையிலிருந்து சட்டவிரோதமான நிலைக்கு மாற்றப்பட்டு அதனால் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் வர்க்கங்களுக்கும் உள்ள வழக்கமான, முறையான, எளிய உறவுகள் குலைக்கப்பட்டுவிட்ட சூழ்நிலைக்குத் தாம் வந்துவிட்டதைக் கண்டதும், இவர்கள் குழம்பிவிட்டதாகத் தெரிகிறது. ஏனைய ஐரோப்பிய நாடுகளைப்போலவே ஜெர்மனியிலும் சட்டபூர்வமான நிலைக்கு மக்கள் தம்மை மட்டு மீறிப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டனர். முறைப்படி நடைபெறும் கட்சிக் காங்கிரஸ்களில் "தலைவர்கள்" தங்கு தடையின்றி ஒழுங்கான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், நாடாளுமன்றத் தேர்தல்கள், பொதுக கூட்டங்கள், பத்திரிகைகள், தொழிற்கங்கங்கள் மூலமாகவும், பிற நிறுவனங்கள் மூலமாகவும் வெளிப்படும் உணர்ச்சிகள் வாயிலாகக் கட்சிகளின் வர்க்க இயைபைச் சோதித்துப் பார்க்கும் வசதியான முறைக்கும், இன்ன பிறவற்றுக்கும் மட்டுமீறி மக்கள் தம்மைப் பழக்கப்படத்திக் கொண்டு விட்டனர்.

இவர்களது இந்த வழக்கமான செயல்முறைக்குப் பதிலாய், புரட்சிப் புயலின் வளர்ச்சி காரணமாகவும், உள்நாட்டுப போரின் வளர்ச்சி காரணமாகவும் சட்டபூர்வமான நிலையிலிருந்து சட்டவிரோதமான நிலைக்கு விரைவாய் மாறிச் சென்று, இரண்டையும் ஒன்றிணைத்துக கொண்டு, "தலைவர்களது குழுக்களைத்" தேர்வு செய்ய வேண்டிய அல்லது அமைக்க வேண்டிய அல்லது பாதுகாத்துக் கொள்ள வேண்டிய "வசதியற்ற", "ஜனநாயமல்லாத" முறைகளைக் கையாளவேண்டி வந்ததும் - இவர்கள் நிலை தடுமாறி, கலப்பற்ற அபத்தக் கற்பனையில் இறங்கத் தலைப்பட்டு விட்டனர். ஹாலந்துக கம்யூனிஸ்டுக் கட்சியின் சில உறுப்பினர்கள் மிகுந்த சலுகைக்கும் மிகவும் நிலையான சட்டபூர்வ அந்தஸ்துக்கும் உரிய மரபுகளையும் நிலைமைகளையும் கொண்ட ஒரு சிறு நாட்டில் பிறக்க வேண்டிய துரதிரஷ்டத்துக்கு உள்ளாகி, சட்டபூர்வ நிலையிலிருந்து சட்டவிரோத நிலைக்கான மாற்றத்தை என்றும் காணாதவர்களாய் இருந்துவிட்டதால், குழப்பத்துக்கு இரையாகி, சித்தப் பிரமை அடைந்து இந்த அபத்தக் கண்டுபிடிப்புகளைத் தோற்றுவிக்க உதவியதாகத் தெரிகிறது." (இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமனற்ம் பன்றித் தொழுவமே ஆயினுங்கூட அதனைப் பயன்படுத்திக் கொள்ள வும், பன்றிப்பட்டியின் உள்ளேகூட இருநது வேலை செய்யத் திறம் பெற்றிருக்க வேண்டியதின் அவசியத்தை லெனின் கூறுகிறார்.

".. மார்க்சுக்குப் புரட்சிகர இயக்கவியலானது, பிளஹானவும காவுத்ஸ்கியும் ஏனையோரும் ஆக்கிக் கொண்டுவிட்ட வெற்று ஜம்பமாகவோ விளையாட்டுக் கிலுகிலுப்பையாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. முதலாளித்துவ நாடாளுமன்ற முறை "பன்றித் தொழுவமே" ஆயினுங்கூட அதனைப் பயன்படுத்திக் கொள்ள, முக்கியமாய்  நிலைமை புரட்சிகரமானதாய் இல்லை என்பது தெளிவாய்த் தெரியும் நேரத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் திராணியற்றதாய் இருந்ததென்பதற்காக அராஜகவாதத்திடமிருந்து தயவு தாட்சண்யமின்றி முறித்துக் கொள்ள மார்க்சுக்குத் தெரிந்திருந்தது. அதேபோது நாடாளுமன்ற முறையை மெய்யாகவே புரட்சிகரமான பாட்டாளி வர்க்க நிலையிலிருந்து  விமர்சிக்கவும் அவருக்குத் தெரிந்திருந்தது.

ஆளும் வர்க்கத்தின் எந்த உறுப்பினர் நாடாளுமன்றத்தின் மூலம் மக்களை அடக்கி ஒடுக்க வேண்டுமெனச் சில ஆண்டுகளுக்கு ஒரு தரம் தீர்மானிப்பதே முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் மெய்யான சாரப் பொருள்- நாடாளுமன்ற- அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட முடியரசுகளில் மட்டுமின்றி, மிகவும் ஜனநாயகமான குடியரசுகளிலுங்கூட இதுவேதான் நிலைமை." (அரசும் புரட்சியும்)

"எடுத்துக்காட்டாக, மூன்றாவது நான்காவது டூமாவில் பங்கெடுக்க ஒத்துக்கொண்டது ஒரு சமரசமேயாகும், தற்காலிகமாகப் புரட்சிகரமான கோரிக்கைகளைக் கைவிடுவதேயாகும். ஆனால் இந்தச் சமரசம் முற்றிலும் நம் மீது நிர்ப்பந்தமாகச் சுமத்தப்பட்டதேயாகும், ஏனெனில், சக்திகளின் பரஸ்பர நிலையானது நாம் வெகுஜனப் புரட்சிப் போராட்டத்தை நடத்துவதைத் தற்காலிகமாக அசாத்தியமாக்கிவிட்டிருந்தது, மேலும் இந்தப் போராட்டத்துக்கு ஒரு நீண்ட காலப்பகுதியில் தயாரிப்பு செய்யும் பொருட்டு நாம் இப்படிப்பட்ட ஒரு "பன்றிப்பட்டியின்" உள்ளேகூட இருந்து வேலை செய்யத் திறமை பெற்றிருக்க வேண்டியிருந்தது. ஒரு கட்சி என்கிற முறையில் போல்ஷிவிக்குகள் இப்பிரச்சினையை இவ்விதம் அணுகியதானது முற்றிலும் சரியே என்பதை சரித்திரம் நிரூபித்துள்ளது " (சமரசங்கள் குறித்து)

குறுங்குழு அல்லது சிறு அமைப்பாக இருக்கும்வரை அராஜகப் போக்கை முறியடிப்பது சிரமமான ஒன்றாகும். தொழிலாளர்களுடனும் விவசாயிகளுடனும் இணைந்து அவர்களது உடனடித் தேவைகளையும் இறுதி குறிக்கோள்களையும் அடைவதற்கான போராட்டத்தை அறிந்தவகையிலான கட்சியைக் கட்டுவதே முதன்மைப் பணியாகும்.

லெனின் :-
"ஜெர்மன் "இடதுசாரிகள்", நாடாளுமன்ற முறை "அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டது" என்று 1919 ஜனவரியிலேயே கருதியது நமக்குத் தெரிந்ததே. "இடதுசாரிகளின்" இந்தக் கருத்து தவறானது என்பதும் நாம் அறிந்ததே. நாடாளுமன்ற முறை "அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டது" என்னும் நிர்ணயிப்பை ஒரே அடியில் ஒழித்திட இந்த ஒர் உண்மையே போதும். அக்காலத்தில் சர்ச்சைக்கு இடமில்லாததாய் இருந்த அவர்களது தவறு, இனி தவறல்ல என்றானது எப்படி என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு இந்த "இடதுசாரிகளுடையது" ஆகும். இதை நிரூபிக்க அவர்கள் துளிக்கூட சான்று அளிக்கவில்லை. இதை நிரூபிக்க அவர்கள் துளிக்கூட சான்று அளிக்கவில்லை, அளிக்கவும் முடியாது. ஓர் அரசியல் கட்சி தன்னுடைய தவறுகள் குறித்து அனுசரிக்கும் போக்கு, அக்கட்சி எந்த அளவுக்குப் பொறுப்புணர்ச்சி கொண்டுள்ளது என்பதையும், அதன் வர்க்கத்துக்கும் உழைப்பாளி வெகுஜனங்களுக்கும் அதற்குள்ள கடமைகளை நடைமுறையில் எந்த அளவுக்கு அது நிறைவேற்றுகிறது என்பதையும் மதிப்பிட்டு முடிவு செய்வதற்கான மிகமுககியமான, நம்பகமான வழிகளில் ஒன்றாகும்.

தவறை ஒளிவுமறைவின்றி ஒப்புக் கொள்ளுதல், அத்தவறுக்குரிய காரணங்களை நிச்சயித்துக் கொள்ளுதல், அதனை நோக்கி இட்டுச் சென்ற நிலைமைகளைப் பகுத்தாய்தல் அதைச் சரிவெசய்தற்குரிய வழிகளை ஆராய்தறிந்து வகுத்துக் கொள்ளுதல் - இவையே பொறுப்புணர்ச்சி கொண்ட ஒரு கட்சிக்குரிய அடையாளம், இவ்வாறுதான் அது தனது கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும், இவ்வாறுதான் அது தனது வர்க்கத்துக்கும் பிறகு வெகுஜனங்களுக்கும் போதமளித்துப பயிற்றுவிக்க வேண்டும். ஜெர்மனியிலும் (ஹாலந்திலும்) உள்ள "இடதுசாரிகள்" இந்தக் கடமையை நிறைவேற்றவும், கண்கூடான தமது தவறை ஆராய்வதில் முக்கிய கருத்தும் கவனமும் செலுத்தவும் தவறியதன் மூலம், தாம் ஒரு சிறு குழுவே அன்றி ஒரு வர்க்கத்தின் கட்சி அல்ல என்பதையும், அறிவுத்துறையினரையும் அறிவுத்துறைவாதத்தின் மோசமான இயல்புகளைக் காப்பியடிக்கும் ஒருசில தொழிலாளர்களையும் கொண்ட சிறு குழுவேயன்றி வெகுஜனங்கள் கட்சி அல்ல என்பதையும் நிரூபித்துக் கொண்டு விட்டனர்.
..
ஜெர்மனியிலுள்ள "இடதுசாரிகள்" தமது விருப்பத்தை, தமது அரசியல்-சித்தாந்தப் போக்கை எதார்த்த உண்மையாகத் தவறாய் நினைத்துக் கொண்டு விட்டனர் என்பது விளங்குகிறது. புரட்சியாளர்கள் செய்யக் கூடிய மிகவும் அபாயகரமான தவறாகும் இது." (இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

தமது அரசியல் சித்தாந்தப் போக்கை, எதார்த்த உண்மையாகக் கருதும் அராஜகவாதத்திலிருந்து விடுபட்டு, புரட்சியாளர்களின் அபாயகரமான தவறிலிருந்து மார்க்சிய முதலாசிரியர்களின் துணையோடு விடுபடவேண்டும்.

ஆயுதப் போராட்டம் என்ற நிலையிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுதல் என்பது, கண்டிப்பாக மாசேதுங்க எதிர்கின்ற ராணுவக் கண்ணோட்டமேயாகும்.

ராணுவக் கண்ணோட்டத்துக்கு எதிராக மாசேதுங்:-

செம்படையிலுள்ள தோழர்கள் பலர் மத்தியில் கலப்பற்ற ராணுவக் கண்ணோட்டம் மிகப்பெரும் அளவிற்கு வளர்ந்திருக்கின்றது. அது பின்வருமாறு வெளிப்படுகின்றது:

1) இந்தத் தோழர்கள் ராணுவ விவகாரங்களையும் அரசியலையும் ஒன்றுக்கு ஒன்று பகைமையானதாகக் கருதுகின்றனர். அரசியல் கடமைகளை நிறைவேற்றும் ஒரு சாதனமே ராணுவ விவகாரம் என்பதை அங்கீகரிக்க மறுக்கின்றனர். "ராணுவ ரீதியில் நீ நன்றாக இருந்தால், இயற்கையாகவே அரசியல் ரீதியிலும் நீ நன்றாக இருபபாய், ராணுவ ரீதியில் நன்றாக இல்லாவிட்டால், அரசியல் ரீதியிலும் நன்றாக இருக்க முடியாது" என்று கூடச் சிலர் சொல்கின்றனர். இது ஒருபடி மேலும் சென்று அரசியலுக்கு ராணுவ விவகாரங்கள் தலைமை தாங்க வேண்டும் என்று கருதுவதாகும்."
(கட்சியில் நிலவும் தவறான கருத்துகளைத் திருந்துவது பற்றி- டிசம்பர் 1929)

"யுத்தத்தில் ஆயுதங்கள் ஒரு முக்கியமான அம்சம், ஆனால் தீர்க்கமான அம்சம் அல்ல. தீர்க்கமான அம்சம் மக்கள் அன்றி பொருட்கள் அல்ல. பலப்போட்டி என்பது ராணுவ ஆற்றல் பொருளாதார ஆற்றல் இவற்றின் போட்டி மாத்திரமல்ல, மனித ஆற்றல் மனவுறுதி இவற்றின் போட்டியுமாகும். ராணுவ, பொருளாதார ஆற்றலும் மக்களால் தான் ஏற்றி செலுத்தப் படுகின்றது"
(நீண்டகால யுத்தம் பற்றி)

"கட்சி துப்பாக்கி மீது ஆணை செலுத்துகிறது. கட்சி மீது துப்பாக்கி ஆணை செலுத்துவதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது. இதுவே நமது கோட்பாடு"
(யுத்தமும் யுத்ததந்திரமும் பற்றிய பிரச்சினைகள்)


துப்பாக்கி முனையிலிருந்து கட்சியைக் கட்டாமல், மார்க்சிய வழிப்பட்ட போராட்டத்தை ஏற்று செயற்படுகிற கட்சியைக் கட்டுவோம்.

No comments:

Post a Comment