Saturday, 3 January 2015

மார்க்சியத்தைப் புதிப்பிப்பவர்கள் முதலில் மார்க்சியத்தை அறிந்து கொள்ளட்டும்

மார்க்சியத்தைப் புதுப்பிப்போம் என்பதே மார்க்சியத்தை புரிந்து கொள்ளாமையை வெளிப்படுத்துகிறது.லெனின் கூறுகிறார்:- “எங்களுடைய போதனை, செயலுக்கு ஒரு வழிகாட்டியே தவிர வறட்டுச் சூத்திரம் அல்ல என்கிறார் எங்கெல்ஸ்- தம்மையும் புகழ் மிக்க தமது நண்பரையும் குறிக்கும்படி எங்களுடைய என்கிறார்.
..
பொதுப்படையான, அடிப்படையான குறிக்கோள்களை இங்கே நான் குறிப்பிடவில்லை. வர்க்கங்களிடையே நிலவும் அடிப்படை உறவு மாறாமலிருக்கும் வரையில் சரித்திரத்தின் திருபங்களினால் இந்தக் குறிக்கோள் மாறுவதில்லை.
..
இந்தக் காலகட்டத்தில் ஸ்தூலமான சமுதாய-அரசியல் நிலைமையும், அது போல நேரடியான, உடனடியான செயலின் குறிக்கோள்களும் மிகத் தீவிரமாக மாறி வந்திருக்கின்றன. இதன் விளைவாக மார்க்சியத்திலும் அதன் பல்வேறு அம்சங்க்ள் முன்னணிக்கு வந்து தீர வேண்டும். ஏனெனில் மார்க்சியம் உயிர்ப் பண்பு கொண்ட போதனையாகும்.” (மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சிலசிறப்பியல்புகள்)

பி இளங்கோ சுப்பிரமணியன் என்பவர் தமது முகநூலில் “மார்க்சியத்தில் சாதியைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை!” (https://www.facebook.com/ilango.pichandy/posts/1585433875019508) என்ற சிறு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில் மார்க்சியம் பற்றி எந்த வகையான புரிதலும் இன்றி மார்க்சியத்தில் அது இல்லை இது இல்லை என்று குறைபட்டுக் கொள்கிறார். முதலில் அவர் மார்க்சியத்தைப் புரிந்து கொண்டிருந்தால் இத்தகைய கேள்வி எழுந்திருக்காது.  

செயலுக்கு வழிகாட்டி என்று மார்க்சியத்தை லெனின் கூறியதை மேலும் புரிந்து கொள்வதற்கு மார்க்சியம்-லெனினியம் உண்மையை அறியும் வழியை நடைமுறை வாயிலாக இடைவிடாமல் திறந்து காட்டுகிறது என்று மாசேதுங் கூறுகிறார்:-

"புறநிலை எதார்த்த உலகில் மாற்றத்தின் இயக்கங்கள் ஒருபொழுதும் முற்றுப்பெறாது. அதைப் போன்றதுதான், நடைமுறையின் மூலம் மனிதன் உண்மையை அறியும் நிகழ்ச்சிப்போக்கும், மார்க்சியம்-லெனினியம் எந்த வகையிலும் உண்மை பற்றிய முழு அறிவையும் அப்படியே திரட்டிக் கொடுத்துவிடவில்லை. மாறாக, அது நடைமுறை வாயிலாக உண்மையை அறியும் வழியை இடைவிடாமல் திறந்து விடுகிறது. அகமும் புறமும், கொள்கையும் நடைமுறையும், அறிவதும் செய்வதும் பருண்மையான வரலாற்று வழியிலான ஒற்றுமையில் இருக்கிறது என்பதே நமது முடிவு."
(
நடைமுறை பற்றி)

மாசேதுங் கூறுவது போல், மார்க்சியம் நடைமுறை வாயிலாக உண்மையை அறியும் வழியை இடைவிடாமல் திறந்து விடுகிறது என்பதை பி இளங்கோ சுப்பிரமணியன் புரிந்து கொள்ளவில்லை.

இளங்கோ “எந்த ஒரு தத்துவமும் பிரதேச எல்லைகளை மீறி, பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள  அனைத்துச் சிக்கல்களுக்கும் தயார் நிலையிலான தீர்வுகளை
(READYMADE SOLUTIONS)
வழங்கும் என்ற எதிர்பார்ப்பே அறிவியலற்றது (UNSCIENTIFIC).” என்று பொதுப்படக் கூறிவிட்டு, மார்க்சியம் குறைபாடானதாக காட்ட முயற்சிக்கிறார்.

 இங்கே இளங்கோவின் கருத்துக்களை முழுமையாக மறுப்பதைவிட, அவர் முதலில் மார்க்சியத்தில் அறிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது என்பதை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு தற்போது நிறுத்திக் கொள்வோம்.

“மலையாகக் குவிந்து கிடக்கும் இந்த நூல்களில், ஏதேனும் ஒன்றில் சாதியைப் பற்றி (ON CASTE ) ஏதேனும் ஒரு சிறு குறிப்பாவது உள்ளதா என்றால் இல்லை என்பது
கண்கூடு.”  என்கிறார் இளங்கோ. மார்க்சியத்தில் காணும் சாதியம் பற்றிய எந்தக் கருத்தையும் இவர் இன்னும் படித்தறியவில்லை என்று தெரிகிறது.

மார்க்சும் எங்கெல்சும் தாம் இணைந்து எழுதிய ஜெர்மன் சித்தாந்தம் என்ற நூலில் காணப்படுவதைப் பார்ப்போம்:-
“இந்தியர்கள் மற்றும் எகிப்தியர் விஷயத்தில் முதிராத வடிவில் தோற்றம் அளிக்கும் உழைப்புப் பிரிவினை அவர்களது அரசு மற்றும் சமயத்தில் சாதி முறையை வெளிக் கொணரும் போது, இந்த சாதி முறையே இந்த முதிராத சமுதாய வடிவத்தை உருவாக்கியுள்ள சக்தி என்பதாக வரலாற்றாளர் கருதுகிறார்கள்”

மேலும், மார்க்ஸ் பா.வ.ஆன்னென்கவுக்கு எழுதிய படிதத்தில் (28/12/1846) “திரு.புரூதோனுக்கு உழைப்புப் பிரிவினை ஒரு மிகச் சாதாரணமான விஷயம். எனினும் சாதி அமைப்பு முறையுங்கூட ஒரு குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினை அல்லவா?”
உழைப்புப் பிரிவினையோடு சாதியத்தைப் பற்றி மார்க்ஸ் பேசுகிற கருத்தைப் புரிந்து கொண்டால் சாதியத்துக்கான தீர்வை நோக்கி பயணிக்கலாம். சாதியத்தை புரிந்து கொள்வதற்கு மார்க்சும் உதவுவார் மார்க்சியமும் உதவும்.

 தொடக்கால எழுத்துகளில் மட்டுமல்லாது மார்க்ஸ் தாம் வாழ்ந்த காலத்திலேயே எழுதி வெளியிட்ட மூலதன நூலின் முதல் பகுதியிலும் சாதியத்தைப் பற்றி கூறியிருக்கிறார்.

முந்தைய சமுதாயங்கள் தொழில்களைப் பரம்பரையாக்கி, சாதிகளாக அவற்றை உறைந்து இறுகச் செய்தோ, குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளின் காரணமாய் சாதி அமைப்புக்கு ஒவ்வாத முறையில் வேறுபாடுறும் தன்மை தனிஆளிடம் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை கைவினைச் சங்கங்களாக சமைந்து கெட்டிப்படச் செய்தோ வந்த போக்கிற்கு ஒத்ததே ஆகும். தாவரங்களும் மிருகங்களும் இனங்களாகவும் ராசிகளாகவும் வகைபிரிவதை முறைப்படுத்துகிற அதே இயற்கை விதியின் செயலிலிருந்தே, சாதிகளும் கைவினைச் சங்கங்களும் பிறக்கின்றன, ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைந்ததும் சாதி மூலமான பரம்பரைத் தன்மையும் கைவினைச் சங்கம் மூலமான பிரத்தியேகத் தன்மையும் சமுதாயச் சட்டத்தின் மூலம் நிலைநாட்டப்படுகின்றன என்பதே” (மூலதனம்  I பக்கம் 461)

அதே போல் "குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்ற நூலில் “எங்கல்ஸ், இந்தியா பக்கம் கீழ்த்திசை நாடுகளின் பக்கம் தம் பார்வையைத் திருப்பி இருக்கிறாரா என்றால், இல்லை என்பது தெளிவு.” என்று இளங்கோ எழுதுகிறார்

 இந்தியர்களைப் பற்றியும், தென்னிந்தியர்களைப் பற்றியும், தமிழர்களைப் பற்றியும் எங்கெல்ஸ் எழுதியதை இளங்கோ படித்தறியவில்லை.

நீயூயார்க் மாநிலத்திலுள்ள செனீகா இராகோஸ்கள் மத்தியில் காணப்படும் ரத்த உறவு முறையைக் குறிப்பிடும் சொற்களில் இரு நூற்றுக்கு மேற்பட்ட உறவுகள் விஷயத்தில் இன்றும் தென்னிந்தியாவிலுள்ள தமிழர்கள் மத்தியில் குறிப்பிடும் உறவுகளின் பெயரோடு ஒத்திருப்பதை ஒப்பிட்டு எங்கெல்ஸ் எழுதியுள்ளார்.

"ஓர் இராகோஸ் தனது சொந்தக் குழந்தைகளை மட்டும் மகன், மகள் என்று அழைப்பதில்லை. அவர் தனது சகோதரனின் குழந்தைகளையும் தன்னுடைய மகள், மகன் என்றே அழைக்கிறார். அவர்களும் அவரை அப்பா என்றே அழைக்கிறார்கள். மறுபக்கத்தில் அவர் தனது சகோதரியின் குழந்தைகளை மருமகள், மருமகன் என்று அழைக்கிறார், அவர்கள் அவரை மாமா என்று அழைக்கிறார்கள்.

இதற்கு எதிரிடையாக, ஓர் இராகோஸ் பெண் சகோதரியின் குழந்தைகளைத் தனது சொந்தக் குழந்தைகளுடன் சேர்த்துத் தன் மகன், மகள் என்றே அழைக்கிறார். அவர்களும் அவளை அம்மா என்றே அழைக்கிறார்கள். மறுபக்கத்தில் அவள் தன்னுடைய சகோதரர்களின் குழந்தைகளை மருமகன், மருமகள் என்று அழைக்கிறார்ள். அவர்கள் அவளை அத்தை என்று அழைக்கிறார்கள். இதைப் போலவே சகோதரர்களின் குழந்தைகள் ஒருவரையொருவர் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று அழைத்துக் கொள்கிறார்கள், சகோதரிகளின் குழந்தைகளும் அவளுடைய சகோதரனுடைய குழந்தைகளும் ஒருவரையொருவர் தமது பெற்றோரின் உடன் பிறந்தாரின் சேய் என்று அழைக்கிறார்கள்.

இவை அர்த்தமில்லாத வெறும் சொற்களல்ல, ஆனால் இரத்த உறவு முறையின் நெருங்கிய தன்மை, விலகிய தன்மை, சமத்துவம், சமத்துவமின்மை பற்றி நடைமுறையில் இருக்கின்ற கருத்துக்களைக் குறிக்கின்ற சொற்களாகும். இக்கருத்துககள் முழுமையான உருவாக்கப்பட்ட இரத்த உறவு முறைக்கு அடிப்படையாகப் பயன்படுகின்றன.

ஒரு தனி நபரது நூற்றுக்கணக்கிலே வேறுபட்ட உறவுகளை இது குறிப்பிட்டுச் சொல்ல முடியும். மேலும், இம் முறை எல்லா அமெரிக்க செவ்விந்தியர்களிடையிலும் முழு அளவில் செயலில் இருப்பது மட்டுமன்றி இந்தியாவின் ஆதிக்குடியினர் மத்தியிலும், தக்காணப் பகுதியிலுள்ள திராவிட இனக்குழுக்கள், இந்துஸ்தானத்திலுள்ள கௌரா இனக்குழுக்கள் ஆகியோர் மத்தியிலும் அநேகமாக மாற்றமின்றி நிலவி வருகிறது.

தென்னிந்தியாவில் உள்ள தமிழர்கள் மத்தியிலும் நியூயார்க் மாநிலத்திலுள்ள செனீகா இராகோஸ்கள் மத்தியிலும் இரத்த உறவு முறையைக் குறிக்கும் சொற்கள் இருநூற்றுக்கு மேற்பட்ட உறவுகள் விஷயத்தில் இன்றும் கூட ஒன்றையே குறிக்கின்றன"   (மார்க்ஸ் எங்கெல்ஸ்- தேர்வு நூல்கள் தொகுதி 11-பக்கம் 46-47)


இது போன்ற மார்க்சிய முதலாசிரியர்களின் படைப்புகளை  எல்லாம், பி இளங்கோ சுப்பிரமணியன் படித்து முடித்தால் மார்க்சியம் புரிந்திடும். புரியாத மார்க்சியத்தை எதிர்ப்பதை விடுத்து மார்க்சியத்தை புரிந்து எதிக்கட்டும் அதனை எதிர்கொள்ள மார்க்சியம் என்றும் தயராகத் தான் இருக்கிறது.

No comments:

Post a Comment