Wednesday 2 March 2016

சுயநிர்ணய உரிமையும் பிரிவினைவாதமும்

ஒரு நாடு மற்றொரு வல்லரசால் அடக்கி தனதாட்சிக்கு கீழ் கொண்டுவரும் நிலையில், ஒரே நாட்டில் உள்ள சிறிய தேசிய இனங்களை பெரும்தேசிய இனம் தமக்குகீழ் அடிக்கி ஒடுக்குகின்ற சூழ்நிலையில் கம்யுனிஸ்ட் கட்சியின் நிலைபாடு பற்றி ஆராய்ந்ததின் விளைவே தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடாகும்.

ஒடுக்கு முறை எங்கு நடைபெற்றாலும் அதனை எதிர்ப்பது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். அந்தக் கடமையை குருட்டாம் போக்கில் செய்திடாமல் வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்கின்ற கோட்பாட்டை வகுத்தனர். இதன் அடிப்படையில் தான் அகிலத்தில் இதுபற்றிய விவாதங்கள் நடைபெற்றது.

லெனின் மகாருஷ்யர்களால் ஒடுக்கப்படும் அனைத்து தேசிய இனங்களுக்கு முழுமையான சுயநிர்ணய உரிமையை வழங்க வேண்டும் என்கிறார். இந்த ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் மாகாருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கு மிகவும் தேவையானதாகும். இதனைக் குறிப்பிடும் போது மார்க்ஸ் ஆங்கிலேயத் தொழிலாளர்களின் சோஷலிச இயக்கத்தின் நலன்களுக்காக அயர்லாந்தின் சுதந்திரத்தையும் தேசிய  விடுதலையையும் கோரியதை சுட்டுகிறார்.

இதனை லெனின் கூறுகிறார்:-
"மகாருஷ்யர்களின் தேசிய இனப் பெருமிதத்தின் நலன்களும் (அடிமைப்பொருளில் அல்ல) மகாருஷ்ய (இன்னும் இதர) பாட்டாளிகளின் சோஷலிச நலன்களுக்கும் முற்றிலும் பொருந்தியவைதான். எப்பொழுதும் நமக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர் மார்க்ஸ் தான், அவர் இங்கிலாந்தில் பல பத்தாண்டுகள் வாழ்ந்து, பாதி ஆங்கிலேயராக மாறி, ஆங்கிலேயத் தொழிலாளர்களின் சோஷலிச இயக்கத்தின் நலன்களுக்காக அயர்லாந்துக்குச் சுதந்திரமும் தேசிய விடுதலையும் கோரினார்."
மகாருஷ்யர்களின் தேசியஇனப் பெருமிதம் பற்றி -  பக்கம் - 178

மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதங்களைக் (1864 நவம்பர் 4, 1866 ஜீன்7, ஜீன் 20) குறிப்பிட்டு லெனின் கூறுகிறார்:-
"மார்க்சின் இந்த விமர்சனக் குறிப்புகளிலிருந்து இயல்பாக எழும் முடிவு தெளிவானது:-

தேசிய இனப் பிரச்சினையையை குருட்டு வழிபாடு ஆக்குவது தொழிலாளி வர்க்கத்துக்கு உகந்த செயல் அல்ல. ஏனெனில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி எல்லா தேசிய இனங்களையும் கட்டாயமாக சுதந்திரமான வாழ்வை நோக்கி எழுச்சியுறச் செய்வது கிடையாது. ஆனால் மக்கள் திரளின் தேசிய இன இயக்கங்களை அவை தொடங்கிய பிறகு ஒதுக்கித் தள்ளுவதும், அவற்றினுள் முற்போக்கானதாக இருக்கும் அம்சங்களை ஆதரிக்க மறுப்பதும் நடைமுறையில் தேசியவாதத் தப்பெண்ணங்களுக்கு இடமளிப்பதாகும், அதாவது "சொந்த" தேசிய இனத்தை  "மாதிரி தேசிய இனம்" (அதற்கு மட்டுமே ஓர் அரசை நிறுவிக் கொள்ளும் தனிமுழு உரிமை இருக்கிறது என்பதைச் சேர்த்துக் கூறுவோம்) என்று ஏற்றுக் கொள்வதாகும்"

      மார்க்சின் விமர்சனக் குறிப்புகளிலிருந்து லெனின், தேசிய இன போராட்டம் இயக்கமாக தொடங்கிய பிறகு அதனை ஒதுக்கித் தள்ளுவதும் அதனுள் காணப்படும் முற்போக்கான அம்சங்களை ஆதரிக்காமல் இருப்பதும் தேசியவாதத் தப்பெண்ணங்கள் தோன்றுவதற்கு இடம் வகுத்துவிடும் என்று எச்சரிக்கிறார். இதனை குறிப்படும் போது லெனின் கூறுகிறார், தொழிலாளிகளின் வர்க்கப் போராட்டத்தோடு ஒப்பிடும் போது தேசிய இனப் பிரச்சினை என்பது இரண்டாம் இடமே மார்க்ஸ் கொடுக்கிறார், ஆனால் அவரது கோட்பாடு தேசிய இன இயக்கங்களைப் புறக்கணித்ததே கிடையாதென்பதையும் சேர்த்து வலியுறுத்துகிறார்.

மேலும் லெனின் கூறுவதைக் கேளுங்கள்:-
"பாட்டாளிகளின் ஒற்றுமையின் நலன்களும் அவர்களது வர்க்க ஒருமைப்பாட்டின் நலன்களும் தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று கோருகிறது."
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 152

                இதன் அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்கான கம்யூனிஸ்டுகளின் வேலைத்திட்டத்தை லெனின் தொகுத்துத் தருகிறார். அதில் எந்த தேசிய இனத்துக்கும். எந்த மொழிக்கும் தனி உரிமை என்பது கிடையாது, தேசிய இனங்களின் அரசுகள் பிரிவடைவது ஜனநாய வழியில் நடத்தப்பட வேண்டும். தேசிய இனச் சிறுபான்மையினரது உரிமைகளுக்கு ஊறு ஏற்படாமல் காப்பது என்பதையும் வலியுறுத்துகிறார்.

சுயநிர்ணய உரிமையும் பிரிவினைவாதமும்


தேசிய இனச் சிக்கலின் தோற்றம் கட்டாயப் பிரதேச இணைப்பில் தான் அடங்கிருக்கிறது. ஒரு தேசிய இனம் பிறிதொரு தேசிய இனத்தை பலாத்தாரத்தால் ஐக்கியப்படுத்துவதையே கட்டாயப் பிரதேச இணைப்பு என்று கூறப்படுகிறது.

கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்ட பிரதேசங்களின் எழுச்சியை ஆதரிக்க மறுக்கப்பதானது, அது புறநிலை ரீதியில் கட்டாயப் பிரதேச இணைப்பை ஆதரிப்பதாகிவிடும். சோஷலிசத்துக்கு துரோகம் செய்யாமல் இருக்க வேண்டுமானால் சுயநிர்ணய உரிமைக்கு போராடும் எழுச்சிக்கு அதரவு அளிக்க வேண்டும் என்கிறார் லெனின். (பக்கம் 223)

      இந்த ஆதரவு என்பது பிரிந்து சென்று தனியான அரசை அமைத்துக் கொள்கின்ற சுயநிர்ணய உரிமையைத் தவிர வேறு எந்த அர்த்தத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இதனை மேலும் லெனின் விளக்குகிறார், மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள ஆதிக்கம் செய்யும் தேசிய இனம், அரசு ரீதியாக பிரிந்து செல்ல விரும்புகின்ற தேசிய இனத்தின் மீது செலுத்தப்படுகிற பலப்பிரோகத்தை நிபந்தனயைற்ற வகையில் எதிர்க்க வேண்டும். பிரிந்து செல்ல வேண்டும் என்று விரும்புகின்ற, பிரிச்சினைக்கு உரிய பிரதேசத்தின் மக்கள் எல்லோரும் நேரடியாக, சமமான மதிப்பைக் கொண்ட வாக்குகளின் மூலம் ரகசிய வாக்கெடுப்பு முறையில் தங்களது கருத்தை பதிவதை அடிப்படையாகக் கொண்டு தீர்க்க வேண்டும். தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக்கு அனுமதிக்கின்ற, தேசிய இனங்களின் சுயநிரிணய உரிமையை மறுப்பதை ஆதரிக்கின்ற, மிதவாத முதலாளித்துவக் கண்ணோட்டத்தில் உள்ள கட்சிகளை உறுதியாக எதிர்த்துப் போராட வேண்டும் என்று லெனின் கூறுகிறார். (தேசிய இனப் பிரச்சினை பற்றிய ஆய்வுரைகள் பக்கம் 87-88-89)

                ஒடுக்குதலுக்கு ஆளான தேசிய இன மக்கள் தங்களுக்கான அரசை பொதுவாக்கின் மூலமாக தீர்க்க வேண்டும். ஒரு மத்திய பாராளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்து பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதல்ல இதன் பொருள். பிரிந்து போகும் சிறுபான்மையினருடைய பாராளுமன்றத்தில் அல்லது சபையில் அல்லது அவர்களுக்கு இடையில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் தீர்வு காண வேண்டும் என்பதே அதன் பொருளாகும். 1905ல் ஸ்வீடனிலிருந்து நார்வே பிரிந்த போது நார்வே மட்டும் தான் வாக்களித்து முடிவெடுத்தது. (பக்கம் 13)

சுயநிர்ண உரிமையை அங்கீகரிப்பது மிகவும் கடைக்கோடி முதலாளித்துவ தேசியவாதத்துக்கே உதவும் என்கிற கூற்று சிறுபிள்ளைத்தனமான மடமை என்கிறார் லெனின். ஏனெனில், இந்த உரிமையை அங்கீகரிப்பதானது, பிரிவினையை எதிர்த்துப் பிரசாரம், கிளர்ச்சி செய்வதையோ அல்லது முதலாளித்துவ தேசியவாத்தை அம்பலப்படுத்துவதையோ எவ்வகையிலும் விலக்குவதில்லை. இதற்கு மாறாக பிரிந்து போகும் உரிமையை மறுப்பது தான் மிகக் கடைக்கோடி தேசியவாதத்திற்கு உதவுவதாகிவிடும் என்பதே மறுக்க முடியாத உண்மை என்கிறார் லெனின்.

ரோஸா லுக்சம்பர்க் செய்த நகைக்கும்படியான தவற்றின் சாரம் இதில் தான் இருக்கிறது. தன்னாட்சிக் கோரிக்கையை விதிவிலக்காகப் போலந்துக்கு மட்டும் எழுப்பக் கூடியதாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் அதிவினோத தவறினை புரிகின்றார். இதனை லெனின் கூறுகிறார்:-
".. சிறப்புக்குரிய நமது ரோஸா லுக்சம்பர்க் எழுதுவதைப் படிக்கையில் நகைக்காமல் இருப்பதற்கில்லை, கருத்தார்த்த பாவனையோடு, "தூய மார்க்சியத்" தொடர்களைக் கையாண்டு, தன்னாட்சிக் கோரிக்கையானது போலந்துக்கு மட்டும்தான் பொருத்தமானது, அதுவும் விதிவிலக்காக மட்டும்தான் என்று அவர் நிரூபிக்க முயலுகிறார் !"
தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள் - பக்கம் 64-65

மேலும் ரோசா லுக்சம்பர்க்கைப் போன்றோருக்கு தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பது பற்றி லெனின் கூறுகிறார்:-
"மார்க்சிய வேலைத்திட்டத்தின் "தெளிவின்மையை" ஏளனஞ்செய்து இப்பிரச்சினையையே அவர்கள் அசட்டை செய்து விட்டார்கள், தேசிய இனங்களின் சுயநர்ணய உரிமை பற்றி, 1903ம் ஆண்டு ருஷ்ய வேலைத்திட்டத்தில் மட்டுமின்றி, 1896ல் நடைபெற்ற லண்டன் சர்வதேசக் காங்கிரசின் தீர்மானத்திலேயே கூறப்பட்டுள்ளது என்பதை பேதமை காரணமாக அவர்கள் அறியவில்லை போலும். சம்பந்தப்பட்ட இந்தப் பிரிவின் சூக்குமமான, இயக்க மறுப்பியல் எனும் பாவத்துக்குச் சரணடைந்துவிட்டாரே என்பதுதான் இதைவிட அதிக ஆச்சரியமானது.

பிரிந்து போகும் உரிமையை ஆதரிப்பது, ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் முதலாளித்துவ தேசியவாதத்தை ஆதரிப்பதாகக் கூறுகின்றவர்களைப் பார்த்து லெனின் கூறுவதாவது.
"ஒடுக்கப்பட்டுள்ள தேசிய இனங்களின் முதலாளித்துவ தேசியவாதத்திற்கு உதவி விடுவோமோ என்ற அச்சத்தில் சில ஆட்கள் ஒடுக்கும் ஒடுக்கும் தேசிய இனத்தின் முதலாளித்துவ தேசியவாதத்திற்கு, அதற்கும் மேலாகக் கறுப்பு நூற்றுவர் வகை தேசியவாதத்திற்கு உதிவி விடுகிறார்கள்."  - பக்கம் 15

                தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவது ஜனநாயக சக்தி என்ற முறையில் பாட்டாளி வர்க்கத்துக்கு உள்ள கட்டாய கடமையாகும். இக் கடமை பாட்டாளிகளது வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு நிச்சமாக உகந்ததாகும். எப்படி என்றால் தேசிய இனப் பிரசச்சினைத் தொடர்பான பூசல்கள் வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிக்கின்றன. அதாவது, சிறிய தேசிய இன மக்கள் மீதான இனரீதியான ஒடுக்குதல் நடைபெறும் போது கம்யூனிஸ்டுகள் அவர்களை ஆதரிக்காவிட்டால் ஒடுக்கு முறைக்கு எதிரானவர்கள் கம்யூனிஸ்டுகள், அனைத்து ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதின் மீதான நம்பிக்கை போய்விடும். இந்த நம்பிக்கை இழந்த நிலையில் அவர்களை வர்க்க ரீதியாக கம்யூனிஸ்டுகள் ஒன்றிணைப்பது இயலாத செயலாக மாறிவிடும்.

      இதனைத் தொடர்ந்து ஒர் எச்சரிக்கை வைக்கிறார் லெனின், அது என்வென்றால் ஒடுக்கத்துக்கு ஆளான தேசிய இனத்துக்கு கொடுக்கப்படும் ஆதரவின் வரம்பை தாண்டுவது முதலாளித்துவத்தின் தேசியவாதப் பக்கம் சாய்ந்து, பாட்டாளி வர்க்த்துக்கு துரோகம் புரிவதில் போய் முடிந்துவிடும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

லெனினது எச்சரிக்கையின்படியே கவனமாக செயற்பட வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். தேசிய இனப் பிரச்ச்சினையில் முற்போக்கான ஜனநாயகப் போராட்டத்தோடு நின்றுவிட வேண்டும், அதற்கு மேல் அதில் வீழ்ந்து கிடந்தால் முதலாளித்துவ தேசியவாதத்தை ஏற்றுக்கொண்டதாகிவிடும்.

      முதலாளித்துவ தேசிய வெறி பலநேரங்களில் தேசத்தை துண்டாடும் நோக்கிலேயே செயல்படுகிறது. இதனையும் பாட்டாளி வர்க்க கண்ணோட்டமான பிரிந்து செல்வதுடன் கூடிய சுயநிர்ணய உரிமையையும் ஒன்றென தவறாக புரிந்து கொள்கின்றனர். பிரிவினைவாதம் வேறு சுயநிர்ணய உரிமை என்பது வேறு. பிரிவினை வாதம் தேசத்தை துண்டாட வேண்டும் தனித்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தோன்றுவது.

பாட்டாளின் சுயநிர்ணய உரிமை என்பது பல்வேறு தேசங்களில் உள்ள தொழிலாளர்கள் நெருக்கமாக ஒன்றிணைத்து முழுமையான ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான வழியாக உருவாக்கப்பட்டது.

லெனின் கூறுகிறார்:-
"ருஷ்யாவின் பகுதியாக உருவெடுத்துள்ள எல்லா தேசங்களும் தடங்கலின்றிப் பிரிந்து போகவும் சுதந்திரமான அரசுகளை உருவாக்கிக் கொள்ளவுமான உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். அவற்றுக்கு இந்த உரிமையைத் தர மறுப்பதோ அல்லது அது நடைமுறையில் செயலுருப் பெறுதை உத்தரவாதம் செய்யும் நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவதோ நாடு பிடித்தல் அல்லது பிரதேசக் கைப்பற்றல் கொள்கையினை ஆதரிப்பதற்குச் சமமாகும். தேசங்களின் பிரிந்து போகும் உரிமையினைப் பாட்டாளி வர்க்கம் அங்கீகரிப்பது மூலம் மட்டுமே, பல்வேறு தேசங்களிலும் உள்ள தொழிலாளிகளிடையே முழுமையான ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த முடியும், தேசங்களை உண்மையிலேயே ஜனநாயகமான வழிகளில் மேலும் நெருக்கமாக ஒன்றிணைக்க முடியும்."
தேசிய இனப் பிரச்சினை தீர்மானம்- பக்கம் 276-277

      இங்கு லெனின் கூறுவதை உணர்ந்தால் தேசங்களின் பிரிந்து போதல் என்ற உரிமை பாட்டாளிகளின் முழுமையான ஒருமைப்பாட்டை உறுதிபடுத்துவதற்கு துணைபுரியும். அத்தோடு தேசங்கள் ஜனநாயகமான வழிமுறையில் மேலும் நெருங்கி ஒன்றிணைந்து கலக்க முடியும்.

பிரிவினைவாதம் என்று மார்க்சியம் எதைக் குறிப்பிடுகிறது என்பதைப் பார்ப்போம்.


                யாருடனும் ஒன்றாத தனித்திருத்தலை முன்வைத்து, தேசிய குறுகிய மனப்பான்மையால் உருவான இனவெறியாலும், தேசியவெறியாலும் கோருகின்ற பிரிவை பிரிவினைவாதம் என்கிறது மார்க்சியம். அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் பிரிவினையை கோருகின்றனர், அதாவது இன வேறுபாட்டால் உருவான மனவேறுபாட்டை முன்னிருத்து கின்றனர். தனக்கென்று ஒரு நாட்டை, அதாவது யாருடனும் நெருங்காத வகையில் தனித்திருக்க விரும்புதல். மற்றும் தனது மொழிக்கென ஒரு நாட்டை எங்கேயேனும் கட்டியமைக்க வேண்டும் என்ற போக்கில் தனிநாடு கோருதலை மார்க்சியம் பிரிவினைவாதம் என்கிறது.

அது மட்டுமல்லாது முதலாளிகள் பாட்டாளி வர்க்க ஒற்றுமையை குலைப்பதற்கு தேசிய வெறியை ஊட்டுகின்றனர். அதனால் தான் மார்க்சியவாதிகள் சர்வதேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஒரு தேசிய இனம் மற்றொரு தேசிய இனத்தோடு சேர்ந்து இருப்பதற்கும் அல்லது  பிரிந்து போவதற்கும் தாம் விரும்பும் வேறொரு தேசிய இனத்தோடு இணைந்து கொள்வதற்குமான முயற்சியை வலியுறுத்துகின்றனர்.

தேசியத்தை ஒடுக்குகின்ற நிலைமையின் விளைவாகத் தான் தேசத்தை பிரிக்க வேண்டியதாகிறது என்பதே மார்க்சியம். சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து போவதற்கான உரிமையை வலியுறுத்துகிறது அவ்வளவே. இதனை தெளிவுபடுத்துவதற்கு லெனின் விவாகரத்து சட்டத்தை உதாரணத்துக்கு எடுத்து விளக்குகிறார்.

பிரிந்து செல்லும சுதந்திரத்தை வலியுறுத்துவோர், பிரிவினையைத் தூண்டுவதாக குற்றம் சாட்டுவது, விவாகரத்தை ஆதரிப்போர் குடும்ப உறவுகளை அழிப்பவராக குற்றஞ்சாட்டுவது போன்றது. குடும்ப உறவில் விரிசல் இருக்குமாயின், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பில்லா அளவுக்கு பிணக்கு இருக்குமாயின் அவர்கள் சமதான பூர்வமாக -சட்ட பூர்வமாக- பிரிந்து போக அனுமதிப்பது என்பது இருவரும் அந்யோன்யமாக இருக்கும் சூழ்நிலையில் அவர்களிடம் விவாகரத்து என்ற உரிமை எவ்வாறு அவர்களின் பிரிவை தூண்டும். அதே போல் தான் பிரிந்து போகும் உரிமை என்பது பிரிவினையைத் தூண்டுவதில்லை.

முதலாளித்துவ அரசில் சுயநிர்ண உரிமையை நிராகரிப்பது, ஆதிக்க தேசிய இனத்தின் தனியுரிமைகளை ஆதரிப்பதற்கு சமம் என்பதை லெனின் எச்சரிக்கையை யோடு நமக்கு விளக்குகிறார்.

லெனின்:-
“சுயநிர்ணய சுதந்திரத்தை, அதாவது பிரிந்து போகும் சுதந்திரத்தை ஆதரிப்போர் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது விவாகரத்துச் சுதந்திரைத்தை ஆதரிப்போர் குடும்ப பந்தங்கள் அழிக்கப்படுவதை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது போலவே முடடாள்தானமானது, வஞ்சனையானது. பூர்ஷ்வா சமூகத்தில் பூர்ஷ்வா திருமண முறை சார்ந்து நிற்கும் தனியுரிமை மற்றும் ஊழல் நடத்தைகளைத் தாங்கி ஆதரிப்போர் எவ்வாறு விவாகரத்துச் சுதந்திரத்தை எதிர்க்கிறார்களோ அதே போல முதலாளித்துவ அரசில் சுயநிர்ணய உரிமையை நிராகரிப்பதானது, அதாவது தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையினை நிராகரிப்பதானது, ஆதிக்க தேசிய இனத்தின் தனியுரிமைகளையும் ஜனநாயக முறைகளையும் தாங்கி ஆதரிப்பதே தவிர வேறெதுவுமல்ல.”
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 118-119

      விவாகரத்து உரிமை இருப்பதினால் விவாகரத்து நடைபெறுவதில்லை, கணவன் மனைவி ஆகியோர்களுக்கிடைய உள்ள நீக்க முடியாத பிணக்கே விவாகரத்துக்குக் காரணம் என்ற உதாரணத்தைப் போலவே, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பெற்றிருப்பதனால் தேசங்களிடையே பிரிவு நிகழ்வதில்லை, தேசிய இனங்களை ஒடுக்குகின்ற கொள்கையே தேசிய இன அரசைத் தோற்றுவிக்கிறது. தேசியவாத பிரிவினையை மார்க்சியம் பாட்டாளி வர்க்கத்தின் ஒருமைப்பாட்டை குலைக்கும் பிரிவினைவாதமாகவே கருதுகிறது. அதனால் சுயநிர்ணய உரிமையை பிரிவினையைத் தூண்டும் கருத்தாக பார்க்க முடியாது. மேலும் லெனின் கூறுகிறார், ஒரு குறிப்பிட்ட தேசிய இன அரசின்  பிரிவு தேவையான ஒன்றா? இல்லையா? என்று ஸ்தூலமான நிலைமைகளை ஆராந்து முடிவெடுப்பதை கம்யூனிஸ்டுகள் நிராகரிப்பதில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

லெனின்:-
"சமூக-ஜனநாயகவாதிகள் எல்லா தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு அங்கீகாரமளிப்பதனால் ஒவ்வொரு தனியான உதாரணத்திலும் அந்தத் தேசிய இனத்தின் அரசின் பிரிவு அவசியமானதுதான என்பதை சுயேச்சையாக மதிப்பிடுவதை சமூக-ஜனநாயகவாதிகள் நிராகரிக்கிறார்கள் என்பது பொருளல்ல என்பது நிச்சயானது ஆகும்"

தேசிய இனப் பிரச்சினைப் பற்றி ஆய்வுரைகள் (1913 ஜீன் 26) - பக்கம் 89