Friday 9 September 2016

வன்முறை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி டாக்டர் அம்பேத்கர்

டாக்டர் அம்பேத்கர் எழுதிய “புத்தரா, காரல் மார்க்சா?” என்ற இச்சிறுகட்டுரை எட்டு உட்தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. ஆறாவது உட்தலைப்பில் கம்யூனிசத்தை நிறுவுவதற்கு கம்யூனிஸ்டுகளுக்கு வன்முறை, பாட்டாளிகளின் சர்வாதிகரம் இரண்டு வழிமுறைகள் தான் உள்ளன என்பதாக விவரிக்கிறார்.
கம்யூனிஸ்டுகள் பின்பற்றும் வழிவகையாகவே வன்முறையை அம்பேத்கர் குறிப்பிடுகிறார். கம்யூனிஸ்டுகள் வன்முறை பிரியர்கள் கிடையாது. அராஜவாதிகளின் வன்முறையைக் கம்யூனிஸ்டுகள் எதிர்த்தார்கள். கம்யூனிஸ்டுகள் வன்முறையைச் சமூகத்தில் திணிப்பதில்லை என்பதே உண்மையாகும்.

தனியார் சொத்துடைமையைச் சமாதான முறையில் ஒழிப்பது சாத்தியமா? என்ற கேள்வியை எழுப்பி எங்கெல்ஸ் பதிலளிக்கிறார்:-

"தனியார் சொத்துடைமையைச் சமாதான முறையில் ஒழிப்பது நடைபெறக்கூடும் எனில் அது விரும்பத்தக்கதே. இதைக் கம்யூனிஸ்டுகள் கட்டாயம் எதிர்க்க மாட்டார்கள். சதித்திட்டங்கள் எல்லாம் பயனற்றவை என்பது மட்டுமின்றிக் கேடு விளைவிப்பவை என்பதையும் கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிவார்கள். புரட்சிகள் திட்டமிட்டோ தன்னிச்சையாகவோ உருவாக்கப்படுவதில்லை என்பதையும், மாறாக அவை எங்கும் எப்போதும், தனிப்பட்ட கட்சிகள் மற்றும் மொத்த வர்க்கங்களின் விருப்பம் அல்லது கட்டளையைச் சாராத முற்றிலும் சுதந்திரமான புற நிகழ்வுகளின் இன்றியமையாத விளைவே என்பதையும் அவர்கள் மிக நன்றாகவே அறிவார்கள்.

ஆனால், அதே வேளையில், ஏறத்தாழ எல்லா நாகரிகமடைந்த நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி பலவந்தமாக அடக்கப்படுகிறது என்பதையும், இந்த வகையில் கம்யூனிசத்தின் எதிராளிகள் தங்களின் முழுப் பலத்தோடு ஒரு புரட்சி உருவாவதற்கே பாடுபடுகிறார்கள் என்பதையும் கம்யூனிஸ்டுகள் காண்கிறார்கள். ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் இறுதியில் ஒரு புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளிகளின் நலன்களைப் சொல்மூலம் பாதுகாத்து வருவதைப்போல் செயல்மூலமும் பாதுகாத்து நிற்போம்." (கம்யூனிசத்தின் கோட்பாடுகள்)

கம்யூனிஸ்டுகள் வன்முறையை ஆராதிப்பதில்லை, வன்முறையினால் விளைகின்ற கேடுகளைக் கம்யூனிஸ்டுகள் அறிந்திருக்கின்றனர். வன்முறை தன்னிச்சையாகப் புரட்சியின் போது கையாளப்படுவதில்லை. அந்த நிலையினைத் தீர்மானிப்பது புறநிலைமைகளே. அதேநேரத்தில் பாட்டாளி வர்க்கம் இறுதியில் வன்முறையை நோக்கித் தள்ளப்படுமாயின், சொல் மூலம் கொடுக்கப்படும் பாதுகாப்பு, செயல் மூலமும் கொடுக்கப்படும் என்று உறுதியாக எங்கெல்ஸ் கூறியுள்ளார். ருஷ்யப் புரட்சியைக் குறைவான ரத்தம் சிந்தப்படுவதற்கு ஏற்றவகையில் புரட்சியின் தருணத்தை லெனின் தேர்ந்தெடுத்தார். புரட்சியின் போது சிந்திய ரத்தத்தைவிடப் புரட்சியைக் காப்பதற்குதான் அதிகம் ரத்தம் சிந்தப்பட்டது.

புரட்சிகரச் சூழ்நிலை இல்லாத போது பலத்தைப் பிரயோகிப்பது முட்டாள் தனமானது என்றும் புரட்சிகரச் சூழல் இருக்கும் போது பலத்தைப் பயன்படுத்த தயங்குவது கோழை தனமானது என்றும் எங்கெல்ஸ் கூறுகிறார்.

"ஒரு சில சந்தர்ப்ப நிலைமைகளின் கீழ் ஒருவன் சதிச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பானாகில் அவன் ஒரு கோழை என்றே கருதப்படுவான். அதே போல வேறுவிதமான சந்தர்ப்ப நிலைமைகளின் கீழ் அவ்வாறு செயல்பட்டான் என்றால் ஒரு முட்டாள் என்று கருதப்படுவான்."

அராஜகவாதிகளின் சதி திட்டத்திற்கும், மார்க்சிய வழிப்பட்ட புரட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் லெனின்:-
“புரட்சி எழுச்சி வெற்றிக்கு வழிவகுக்க வேண்டுமானால் அது சதியாலோசனை மீதோ மற்றும் ஒரு கட்சியினையோ நம்பிச் சார்ந்திருக்கக் கூடாது. மாறாக முன்னேற்றமான வர்க்கத்தின்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இதுவே முதல் நிபந்தனை.

புரட்சி எழுச்சி மக்களின் புரட்சிகரமான கிளர்ச்சியைச் சார்ந்திருக்க வேண்டும். இது இரண்டாவது நிபந்தனை.

புரட்சி எழுச்சி வளர்ந்து வரும் புரட்சியின் வரலாற்றின் திரும்பு முனையைச் சார்ந்திருக்க வேண்டும். அப்பொழுது மக்களின் முன்னேற்றமான அணிகளின் செயல்பாடு அதன் உச்சத்தில் இருக்கும், எதிரியின் அணிகளிலும் புரட்சியின் பலவீனமான அரை-மனது மற்றும் உறுதியற்ற நண்பர்களின் அணிகளிலும் ஊசலாட்டங்கள் ஆக வலுவாக இருக்க வேண்டும். இது மூன்றாவது நிபந்தனை.” (மார்க்சியமும் கிளர்ச்சியும்)

புரட்சியை மக்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் தோற்றுவிப்பதில்லை. அதற்கான புறச்சூழ்நிலையின் விளைவாகத்தான் நடத்துகின்றனர். இந்த அக-புற நிலைமைகளை மார்க்சியம் தெளிவாகவே முன்வைத்துள்ளது.

லெனின்:- “புரட்சிகரச் சூழ்நிலை இல்லையேல் புரட்சி சாத்தியமன்று, அதேபோது புரட்சிகரச் சூழ்நிலை ஒவ்வொன்றும் புரட்சியை எழச் செய்ய வேண்டுமென்பதும் இல்லை- மார்க்சியவாதிக்கு இது மறுக்க முடியாத ஒன்று. பொதுவாகப் பேசுமிடத்து, புரட்சிகரச் சூழ்நிலை என்பதற்கான அறிகுறிகள் யாவை? எந்தத் தவறும் இழைக்கவில்லை என்கிற நிச்சயத்துடன் நாம் பின்வரும் மூன்று பிரதான அறிகுறிகளைக் குறிப்பிடலாம்.

1) ஆளும் வர்க்கங்கள் தமது ஆட்சியை எந்த மாற்றமும் இன்றித் தொடர்ந்து நடத்திச் செல்வது சாத்தியமற்றதாகுதல், “மேல் வர்க்கங்களிடையே” ஏதேனும் ஒரு வடிவத்தில் நெருக்கடி ஏற்பட்டு, ஆளும் வர்க்கத்தினுடைய கொள்கை நெருக்கடிக்கு உள்ளாகி, இதன் விளைவாய் வெடிப்பு உண்டாகி ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய அதிருப்தியும் ஆத்திரமும் இவ்வெடிப்பின் வழியே பீறிட்டெழுதல். புரட்சி நடைபெறுவதற்கு, பழைய வழியில் வாழ “அடிமட்டத்து வர்க்கங்கள் விரும்பாதது” மட்டும் சாதாரணமாகப் போதாது, பழைய வழியில் வாழ “மேல் வர்க்கங்களுக்கு முடியாமல் போவதும்” அவசியமாகும்.

2) ஒடுக்கப்படும் வர்க்கங்களுடைய துன்பதுயரமும் வறுமையும் வழக்கமாக இருப்பதைக் காட்டிலும் மேலும் கடுமையாகிவிடுதல்.

3) மேற்கண்ட காரணங்களின் விளைவாய் மக்கட் பெருந்திரளினரது செயற்பாடு கணிசமாய் அதிகரித்துவிடுதல், மக்கட் பெருந்திரளினர் “சமாதான காலத்தில்” தாம் சூறையாடப்படுவதற்கு முறையிடாமலே இடமளிப்பவர்களாயினும், கொந்தளிப்பான காலங்களில், வரலாறு படைக்க வல்ல சுயேச்சைச் செயலில் இறங்கும்படி நெருக்கடி நிலைமை யாவற்றாலும் மற்றும் “மேல் வர்க்கங்களாலுங்கூட” இழுத்து விடப்படுகிறார்கள்.

தனிப்பட்ட குழுக்கள், கட்சிகளின் சித்தத்தை மட்டுமின்றி, தனிப்பட்ட வர்க்கங்களின் சித்தத்தையும் சார்ந்திராத இந்த எதார்த்தப் புறநிலை மாறுதல்கள் இல்லாமல், பொதுவாகப் புரட்சி சாத்தியமன்று. இந்த எதார்த்தப் புறநிலை மாறுதல்கள் யாவும் சேர்ந்த ஒட்டுமொத்தமே புரட்சிகரச் சூழ்நிலை எனப்படுவது.” (இரண்டாவது அகிலத்தின் தகர்வு)

முதலாளித்துவச் சமூகத்திலிருந்து கம்யூனிச சமூகத்தை எட்டுவதற்கு இடையே ஒர் இடைக்கட்டம் தேவை என்பதை மார்க்ஸ் உணர்ந்தார். அதனைக் கோத்தா வேலைத்திட்டம் பற்றிய விமர்சனம் எழுதிய போது முதன்முறையாக வெளிப்படுத்தினார். அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகத்தான் இருக்க முடியும் என்பதையும் அறிவிக்கிறார்.

"முதலாளித்துவச் சமூகத்துக்கும் கம்யூனிச சமூகத்துக்கும் இடையில் ஒன்று மற்றொன்றாகப் புரட்சிகர மாற்றம் அடையும் கட்டம் உள்ளது. இதற்கு இணயாக அரசியல் இடைக்காலக் கட்டம் ஒன்றும் இருக்கிறது, இந்த இடைக்காலத்தில் அரசு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரச் சர்வாதிகாரம் என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது"

கம்யூனிச சமூகத்தை அடைவதற்கான இந்த இடைக்காலக் கட்டமான முதல்கட்டத்தைச் சோஷலிச சமூகம் என்றும் அடுத்தக் கட்டத்தைக் கம்யூனிச சமூகம் என்றும் அழைக்கப்படுகிறது.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதில் உள்ள சர்வாதிகாரத்தை எப்படி நேர்பொருளில் எடுத்துக் கொண்டு, அதனை அறநெறியில் விமர்சிப்பது தவறானதோ. அதே போல முதலாளித்துவச் சமூகத்தில் கூறப்படும் ஜனநாயகம் என்பதை அதன் நேர் பொருளில், அனைவருக்குமான ஜனநாயகமாய் புரிந்து கொள்வது தவறானதாகும். முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பற்றி லெனின் கூறுவதைப் பார்ப்போம்.

“முதலாளித்துவச் சமூகத்தில், மிகவும் சாதகமான நிலைமைகளில் அது வளர்வதாய்க் கொள்வோமாயின், ஜனநாயகக் குடியரசில் ஓரளவு முழுமையான ஜனநாயகம் இருக்கக் காண்கிறோம். ஆனால் இந்த ஜனநாயகம் எப்பொழுதும் முதலாளித்துவச் சுரண்டலால் எழுப்பப்படும் குறுகலான வரம்புகளால் இறுக்கப்பட்டுள்ளது. ஆகவே இது நடைமுறையில் எப்பொழுதும் சிறுபான்மையோருக்கான ஜனநாயகமாகத்தான், சொத்துடைத்த வர்க்கங்களுக்கு மட்டுமேயான, செல்வந்தர்களுக்கு மட்டுமேயான ஜனநாயகமாகத்தான் இருக்கிறது.

முதலாளித்துவச் சமூகத்தில் சுதந்திரமானது பண்டைக் கிரேக்க குடியரசுகளில் இருந்ததே, எறத்தாழ அதேபோல அடிமையுடைமையாளர்களுக்கான சுதந்திரமாகத்தான் எப்பொழுதுமே இருந்து வருகிறது. முதலாளித்துவச் சுரண்டலின் நிலைமைகள் காரணமாய்த் தற்காலக் கூலி அடிமைகள் பட்டினியாலும் வறுமையினாலும் நசுக்கப்பட்டு “ஜனநாயகம் குறித்துத் தொல்லைப்பட முடியாதபடி”, “அரசியல் குறித்துத் தொல்லைபட அடியாதபடி” அவல நிலையில் இருத்தப்பட்டிருக்கிறார்கள்.” (அரசும் புரட்சியும் – பக்கம்-116)

மேலும் லெனின் கூறுகிறார்:-      
“மிகச் சொற்பமான சிறுபான்மையோருக்கு ஜனநாயகம், செல்வந்தர்களுக்கு ஜனநாயம் (இதுதான் முதலாளித்துவச் சமூத்தில் நிலவும் ஜனநாயகம். முதலாளித்துவ ஜனநாயகத்தின் கட்டமைவை மேலும் நெருங்கிச் சென்று பார்த்தோமாயின், வாக்குரிமையின் “அற்ப”- அற்பமானவை என்று சொல்லப்படுகிற) விவரங்களிலும், பிரதிநிதித்துவ உறுப்புகளின் செயல்முறையிலும், கூட்ட உரிமைக்கு நடைமுறையில் இருந்துவரும் தடங்கல்களிலும், நாளேடுகளின் முற்றிலும் முதலாளித்துவ முறையிலான ஏற்பாட்டிலும், இன்ன பிறவற்றிலும் எங்கும் ஜனநாயகத்துக்குக் கட்டுக்குமேல் கட்டுப்போடப்பட்டிருப்பதைத் தான் காண்கிறோம். ஏழைகளுக்கு இடப்பட்டுள்ள இந்தக் கட்டுகளும் விலக்குகளும் ஒதுக்கல்களும் தங்கல்களும் அற்பசொற்பமாகவே தோன்றும்,

முக்கியமாய் இல்லாமையை நேரில் அறிந்திராதோருக்கும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடன் அவற்றின் வெகுமக்கள் வாழ்வில் என்றுமே நெருங்கிய தொடர்பு கொண்டிராதோருக்கும் இப்படித்தான் அற்பசொற்பமாகவே தோன்றும். ஆனால் ஒட்டுமொத்தத்தில் இந்தக் கட்டுகள் ஏழைகள் அரசியலில் இருந்து, ஜனநாயகத்தில் நேரடியாய் பங்கு கொள்வதில் இருந்து ஒதுக்கி வெளியே தள்ளிவிடுகின்றன.

முதலாளித்துவ ஜனநாயகத்தின் இந்தச் சாரத்தை மார்க்ஸ் மிக நன்றாய் உணர்ந்திருந்தார். கம்யூனுடைய அனுபவத்தை ஆராய்கையில் ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்கும் வர்க்கத்தின் எந்தப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் நமது பிரதிநிதிகளாய் அமர்ந்து தம்மை அடங்கி ஒடுக்க வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தீர்மானிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.” (அரசும் புரட்சியும் – பக்கம்-117-118)

லெனின் பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தில் ஜனநாயகம் பெருவாரியான மக்களுக்கு விரிவாக்கப்படுவதைக் குறிப்பிடுகிறார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது மக்களின் மீதான சர்வாதிகாரம் கிடையாது. மக்கள் அரசின் மீது எதிர்ப்பை செலுத்துகிற எதிராளிகளின் மீதான சர்வாதிகாரம்:-
“பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமானது, அதாவது ஒடுக்குமுறையாளர்களை அடகுவதற்காக ஒடுக்கப்பட்டவர்களுடைய முன்னணிப்படை ஆளும் வர்க்கமாய் அமையும் ஒருங்கமைப்பானது ஜனநாயகத்தை விரிவாக்குவதோடு மட்டும் நின்றுவிடக் கூடியதல்ல. ஜனநாயகத்தைப் பிரம்மாண்டமான அளவில் விரிவாக்குவதுடன், பணமூட்டைகளுக்கான ஜனநாயகமாய் இராது. முதன்முதலாய் ஏழைக்களுக்கான ஜனநாயகமாய், மக்களுக்கான ஜனநாயகமாய் ஆக்குவதுடன் கூடவே ஒடுக்குமுறையாளர்களும் சுரண்டலாளர்களும் முதலாளிகளுமானோரின் சுதந்திரத்துக்குப் பட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் வரிசையாகப் பல கட்டுகளை விதித்திடுகிறது.

மனிதகுலத்தைக் கூலி அடிமை முறையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு இவைகளை நாம் அடக்கியாக வேண்டும். இவர்களுடைய எதிர்ப்பை வன்முறை கொண்டு நசுக்கியாக வேண்டும். அடக்கியாளுதல் இருக்கும்வரை, பலாத்காரம் இருக்கும்வரை சுதந்திரத்துக்கோ ஜனநாயகத்துக்கோ இடமில்லை என்பது தெளிவு.

பெபெலுக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸ் இதனை மிகச்சிறப்பான முறையில் எடுத்துரைத்தார். “பாட்டாளி வர்க்கத்துக்கு அரசு தேவைப்படுவது தனது எதிராளிகளை அடக்கி இருத்துவதற்காகவே அன்றிச் சுதந்திரத்தின் நலன்களுக்காக அல்ல, சுதந்திரம் குறித்துப் பேசுவது சாத்தியமாகியதும் அரசு அரசாய் இருப்பதற்கு முடிவு ஏற்படுகிறது” என்று இக்கடிதத்தில் எங்கெல்ஸ் கூறியது வாசகர்களுக்கு நினைவிருக்கும். .
       .......
கம்யூனிச சமூகத்தில்தான் – முதலாளிகளுடைய எதிர்ப்பு அடியோடு நசுக்கப்பட்டு, முதலாளிகள் மறைந்து போய், வர்க்கங்கள் இல்லாமற் போய்விடும் (அதாவது, சமூகத்தின் உறுப்பினர்களைடையே சமூக உற்பத்திச் சாதனங்களுடன் அவர்களுக்குள்ள உறவு சம்பந்தமாய் எந்தப் பாகுபாடும் இல்லாமற் போய்விடும்) அப்பொழுது மட்டும் தான் “அரசு… இல்லாமற் முடிவு ஏற்படுகிறது”, “சுதந்திரம் குறித்துப் பேசுவது சாத்தியமாகிறது.”

அப்பொழுதுதான் மெய்யாகவே முழுநிறைவான ஜனநாயகம், விதிவிலக்கு எதுவுமில்லாத ஜனநாயகம் சாத்தியமாகிக் கைவரப் பெறுகிறது. அப்பொழுதுதான் ஜனநாயகம் உலர்ந்து உதிரத் தொடங்கும். “முதலாளித்துவ அடிமை வாழ்வில் இருந்தும் முதலாளித்துவச் சுரண்டலின் சகிக்கமுடியாத கொடுமைகளில் இருந்தும் மிருகத்தனத்தில் இருந்தும் அபத்தங்களில் இருந்தும் இழுக்குகளில் இருந்தும் விடுபட்டு மக்கள் பலநூறு ஆண்டுகளாய் அரியப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அரிச்சுவடி நீதிவிளக்கங்களில் எல்லாம் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வந்துள்ள சமூக ஒட்டுறவின் சர்வசாதாரண விதிகளைப் பற்றியொழுகச் சிறிதுசிறிதாய் பழகிக் கொள்வார்கள். பலாத்காரம் இல்லாமலே, பலவந்தம் இல்லாமலே. கீழ்ப்படிதல் இல்லாமலே, பலவந்தத்துக்கான அரசு எனப்படும் தனிவகை இயந்திரம் இல்லாமலே அவர்கள் இவ்விதிகளைப் பற்றியொழுகப் பழகிக் கொள்வார்கள்.” (அரசும் புரட்சியும் – பக்கம்-118-119)

கம்யூனிச சமூகத்தில் இருப்பவர்கள் இன்றைய முதலாளித்துவச் சமூக மக்களின் மனோநிலையில் இருப்பத்தில் இருந்து விடுபட்டவர்களாவர். அதனால் அரசு உலர்ந்து உதிர்ந்த பின்பு அங்கே அராஜகம் எழுவதில்லை, அதற்கான சூழல் அந்தச் சமூகத்தில் காணப்படுவதும் இல்லை.

அம்பேத்கர் அறநெறி சக்தி தோல்வியடையும் போது அதன் இடத்தில் விலங்கு சக்தி எடுத்துக்கொள்ளும் என்கிறார். மேலும் வர்க்க முரண்பாட்டை நீக்குவதற்கு எண்வழிப்பாதையே (அஷ்டாங்க மார்க்கம்) அதாவது நற்கருத்து, நற்நோக்கம், நற்பேச்சு, நற்நடத்தை, நற்வாழ்கைவழி, நற்முயற்சி, நற்மனவுணர்வு போன்றவையே போதுமானதாகக் கருதுகிறார். நல்லவைகளும் தீயவைகளும் மனிதனிடத்தில் எவ்வாறு தோற்றம் கொள்கின்றன என்ற புரிதல் இல்லாது நற்சிந்தனையே முரண்பாட்டை ஒழிப்பதற்குப் போதுமானதாக் கருதுகிறார்.


மனிதர்கள் தமது செயற்பாட்டைக் குறிக்கோளாக அமைத்துக் கொண்டுதான் செயற்படுகின்றனர். இந்தக் குறிக்கோள் எவ்வாறு அமைத்துக் கொள்கின்றனர் என்பது பற்றிக் கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் வேறுபட்ட வழியில் முடிவெடுக்கின்றது. நல்ல நோக்கங்களில் இருந்து எடுக்கப்படுகிறதாகக் கருத்துமுதல்வாதம் கருதுகிறது. பொருள்முதல்வாதமோ மனிதர்கள் தமது குறிக்கோளை சமூக வாழ்நிலையில் இருந்து தோற்றம் பெறுவதாகக் கூறுகிறது. அவரவர் சார்ந்து இருக்கிற வர்க்க நலன்களில் இருந்து இவை தோன்றுவதாகப் பொருள்முதல்வாதம் கூறுகிறது. அதாவது சிந்தனையின் தோற்றத்தை பொருள்முதல்வாதம் ஆராய்கிறது. இந்தப் பொருள்முதல்வாதப் பார்வை அம்பேத்கரின் பார்வையோடு அடிப்படையிலேயே வேறுபடுகிறது.

முழுமையாகப் படிக்க-

காரல் மார்க்சா? அம்பேத்கரின் புத்தரா?


1 comment:

  1. பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசியல் அமைப்பை சுருக்கமாக விளக்குங்கள். அரசு உதிர்வதைப் பற்றி அம்பெத்கர் எழுப்பியக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.
    பத்ம.சிவ.அசோகன்

    ReplyDelete