Sunday, 6 November 2016

மக்கள் ஆட்சி தோன்றியது

மக்கள் ஆட்சி தோன்றியது
(சோவியத்)
நவம்பர் 7, 1917
(அக்டோபர் 25, 1917)
(லெனின் வாழ்வும் படைப்பும் - பக்கம்- 235-244)


ருஷ்யாவில் சோஷலிசப் புரட்சி தோன்றுவதற்கான புறநிலை அகநிலைக் காரணங்களைத் போல்ஷிவிக்குகள் நீடித்து அரசாள முடியுமா? என்ற நூலில் லெனின் தொகுத்தளித்தார். இந்த முடிவுகளின்படி நெருக்கடி முற்றியது என்ற கட்டுரையை லெனின் செப்டம்பர் இறுதியில் எழுதினார்.

                செப்டம்பர் இறுதியிலேயே ருஷ்யப் புரட்சியினை லெனின் உறுதிப் படுத்திவிட்டார். புரட்சிக்கான அகநிலை தயாரிப்புகளை லெனின் தொகுக்கிறார். பரந்து விரிந்த மக்களின் அதிருப்தி, ஏகாதிபத்தியப் போர் நீட்டிப்பதால் அதன் விளைகளால் மக்களுக்கு ஏற்பட்ட துன்பதுயரங்கள் விவசாயிகளை எழுச்சியுறச் செய்திட்டது. இந்த எழுச்சியை இடைக்கால முதலாளித்துவ அரசு ராணுவத்தின் மூலம் ஒடுக்க முனைகிறது.

“… ஒரு நாடுதழுவிய நெருக்கடி முற்றிவிட்டது என்பதையே எல்லா அறிகுறிகளும் சுட்டிக் காட்டுகின்றன.”1

                இந்நிலையில் சிலர், சோவியத்துகளின் காங்கிரசுக்காக காத்திருக்க வேண்டும் என்று கோருகின்றனர். இதன் தவறை உணர்ந்து வெளிவர வேண்டும்.

“இல்லையேல், போல்ஷிவிக்குகள் நிரந்தர வெட்கக் கேட்டால் தலைகுனிவுக்கு உள்ளாகி, ஒரு கட்சி என்ற முறையில் தம்மைத்தாமே அழித்துக்கொள்வார்கள்.

இத்தகைய தருணத்தைத் தவறவிட்டு சோவியத்துகளின் காங்கிரசுக்காக “காத்து நிற்பது” அப்பட்டமான முட்டாள்தனம் அல்லது படுமோசமான நம்பிக்கைத் துரோகமாகும்.”2

                புரட்சியின் வெற்றி எந்த வகையில் உத்தரவாதம் அளிக்கிறது என்பதை சூழ்நிலைமைகளை ஒருங்கிணைந்து படம்பிடித்துகாட்டுகிறார் லெனின்:-
“புரட்சி எழுச்சியின் வெற்றி இப்போது போல்ஷிவிக்குகளுக்கு உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது, 1) நாம் (சோவியத் காங்கிரசுக்கு “காத்து நிற்காமல்” இருந்தால்) மூன்று முனைகளிலிருந்து- பெத்ரோகிராதில் இருந்தும், மாஸ்கோவில் இருந்தும், பால்டிக் கடற்படையில் இருந்தும் ஒரு திடீர் தாக்குதல் தொடுக்க முடியும், 2) நமக்கு ஆதரவை உத்தரவாதம் செய்யும் குழுக்கள் உள்ளன, நிலவுடைமையாளர்களை எதிர்த்து எழுச்சிப் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அடக்கும் அரசாங்கம் வீழ்க! 3) நாட்டில் நமக்குப் பெரும்பான்மை உள்ளது, 4) மென்ஷிவிக்குகள் மற்றும் சோஷலிஸ்டு புரட்சியாளர்கள் மத்தியில் முழுமையான கட்டுக்குலைவு ஏற்பட்டுவிட்டது, 5) நடைமுறை ஏற்பாட்டுப்படி நாம் மாஸ்கோவில் ஆட்சி அதிகாரத்தை மேற்கொள்ளும் நிலையில் இருக்கிறோம், 6) நம்வசம் பெத்ரோகிராதில் ஆயிரக்கணக்கான ஆயுதமேந்திய தொழிலாளர்களும் படைவீரர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ராணுவத் தலைமை அலுவலகத்தையும் மாரிக் கால மாளிகையையும் தொலைபேசி இணைப்பகத்தையும், பெரிய அச்சகங்களையும் உடனே கைப்பற்ற முடியும்.”3

                இதே நேரத்தில் சர்வதேச நிலைமையும் புரட்சிகரமாக இருப்பதை போல்ஷிவிக் தோழர்களுக்கு எழுதிய கடிதத்தில் லெனின் எடுத்துக்காட்டுகிறார். செக் தொழிலாளர்களின் திடீர் எழுச்சி நம்பமுடியாத அளவுக்கு கொடிய அடக்குமுறையால் கையாளப்பட்டிருக்கிறது. இது அரசாங்கத்தின் பயத்தையே வெளிப்படுத்துகிறது. இத்தாலியிலும் துரீனிலும் மக்கள் திரளின் ஒரு திடீர் கிளர்ச்சி காணப்படுகிறது. உணவுப் பற்றாக்குறை தொடர்பாக ஓர் ஆர்ப்பாட்டம் அங்கே ஏற்பட்டது. அது பொது வேலைநிறுத்தமாக மாறியது. தெருக்களில் தடையரண்கள் எழுப்பினர். துரீன் சுற்றுவட்டாரம் எழுச்சியாளர் வசம் வந்தது. இதனை ஒடுக்குவதற்கு அரசு ராணுவத்தை ஏவியது. ராணுவ சட்டம் நடைமுறையாக்கப்பட்டது.

                இவற்றில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாக ஜெர்மன் கடற்படையில் ஏற்பட்ட கிளர்ச்சியை குறிப்பிட வேண்டும். ஜெர்மன் கடற்படையின் எதிர்ப்புக் கிளர்ச்சி, மாபெரும் நெருக்கடியின், உலகப் புரட்சியின் வளர்ச்சியின் அறிகுறியாகும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லை என்கிறார் லெனின்.

                அதே நேரத்தில், ருஷ்யப் புரட்சியை அடக்குவதற்கு சர்வதேச ஏகாதிபத்தியவாதிகளும் சூழ்ச்சி செய்கின்றனர். ஏகாதிபத்திய ராணுவ நடவடிக்கையின் மூலம் ருஷ்ய முதலாளிகளுக்கு பிரதிகூலமான வகையில் சமாதானம் செய்து கொள்ளலாம் என்ற போக்கும் இருக்கிறது. ருஷ்யாவில் உள்நாட்டு கெரன்ஸ்கி மீதிருந்த வெகுளித்தனமான மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்திய குட்டிமுதலாளித்துவச் சமரச கட்சிகள் அறவே கையாலாகாதவையாகி விட்டன. மாஸ்கோவில் நடைபெற்ற தேர்தலில் போல்ஷிவிக்குகள் 49 விழக்காடுகளுக்கு மேல் வாக்கு பெற்றனர். இடைக்கால அரசு மீது மக்களின் செல்வாக்கு சரிந்ததையே இது காட்டுகிறது. மேலும் கூறுகிறார்

“இந்த வாக்களிப்பின் மூலம் மக்கள், போல்ஷிவிக்களிடம் “தலைமை தாங்குகள், நாங்கள் உங்களைப் பின்பற்றுகிறோம்” என்று கூறியதைவிட அதிகத் தெளிவான கூற்று எதையும் கற்பனை செய்ய முடியுமா?”4

புரட்சிகர புறநிலைகளும் அதற்கு ஏற்ப அகநிலையான மக்களின் விருப்பங்களும் இவ்வாறு இருக்க உடனே ஆயுதப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் லெனின். போல்ஷிவிக்குகள் கட்டாயம் ஆட்சி அதிகாரம் மேற்கொள்ள வேண்டும் என்று போல்ஷிவிக் கட்சி மையக் கமிட்டிக்கும், பெத்ரோகிராத், மாஸ்கோ கமிட்டிக்கும் எழுதிய கடிதம் முதற்கொண்டு அன்றைய லெனினது எழுத்துக்கள் ஆயுதக் கிளர்ச்சிக்கு அழைப்புவிடுவதாகவே இருந்தன.

“இன்றுள்ள கடமை பெத்ரோகிராதில், மாஸ்கோவில் (அதன் பிராந்தியம் உட்பட) ஓர் ஆயுதமேந்திய புரட்சிக் கிளர்ச்சியைக் கொண்டு வருவது, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது, அரசாங்கத்தை வீழ்த்துவது என்பதாக இருக்க வேண்டும்.”5
               
“…சோவியத்துகளுக்கு இப்போது ஆட்சி அதிகாரத்தை மாற்றி வழங்குவது என்பது ஆயுதமேந்திய எழுச்சி என்றே பொருள்படும்…
..
..ஆயுதமேந்திய எழுச்சி அரசியல் போராட்டத்தின் ஒரு விசேஷ வடிவமாகும், விசேஷ விதிகளுக்குக் கட்டுப்பட்டதாகும், இதைக் குறித்துக் கவனமாகச் சிந்தித்தல் வேண்டும், “போரைப் போலவே அந்த அளவுக்கு முழுமையாகப் புரட்சி எழுச்சியும் ஒரு கலையாகும்” என்று எழுதிய போது காரல் மார்க்ஸ் (எங்கெல்ஸ்) இந்த உண்மையையே தனிச்சிறப்புடைய துலக்கத்துடன் வெளியிட்டார்.”6

“ஒரு ஆயுதமேந்திய புரட்சி எழுச்சி தவிர்க்க முடியாதது என்பதையும், அதற்குரிய நேரம் முற்றும் கனிந்துவிட்டது என்பதையும் கவனித்த மையக் கமிட்டி எல்லா கட்சி அமைப்புகளும் அதற்கேற்ற வகையில் வழி நடத்தப்பட வேண்டும் என்று இந்த நோக்கு நிலையில் இருந்து எல்லா நடைமுறைப் பிரச்சினைகளையும் விவாதித்து முடிவு செய்யும்படி அவற்றுக்கு நெறிமுறை செய்துள்ளது”7

                இந்த ஆயுதமேந்திய போராட்டத்துக்கு புரட்சிகர எழுச்சியை ஒரு கலையாக கையாள வேண்டும் என்று லெனின் வலியுறுத்துகிறார். இதற்கு “புரட்சி எழுச்சி என்பது ஒரு கலை” என்று நியூயார்க் பத்திரிகையில் மார்க்ஸ் எழுதியதாக லெனின் குறிப்பிடுகிறார். உண்மையில் இது எங்கெல்ஸ் எழுதியது, இந்தப் பத்திரிகையில் மார்க்சின் பெயரே செய்தியாளராக பதியப்பட்டுள்ளதால், எங்கெல்ஸ் எழுதிய இந்த கட்டுரை மார்க்ஸ் பெயரில் வெளிடப்பட்டது. பிற்காலத்தில் இவர்களின் கடிதங்களைப் படிக்கும் போது அறியப்பட்டது. இக்கட்டுரையை பத்திரிகைக்கு அனுப்பும் முன் மார்க்ஸ் முழுமையாக படித்தே அனுப்பியுள்ளார். அதனால் இதனை மார்க்ஸ், எங்கெல்ஸ் கருத்தான மார்க்சியம் என்பதில் என்ன சந்தேகம்?
      
       இந்தக் கால கட்டத்தில் எழுதிய எழுச்சிப் படைப்புகளில் எல்லாம் லெனின் புரட்சியை கலையாக கையாளுவதைப் பற்றி எழுதியுள்ளார்.

“… புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருத மறுப்பது மார்க்சியத்திற்குத் துரோகம் செய்வதாகும், புரட்சிக்குத் துரோகம் செய்வதாகும்.” 8

“… புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருத வேண்டும் என்ற மார்க்சின் கருத்தை நாம் சொல்லளவோடு மட்டும் ஏற்கவில்லை என்பதை நாம் காட்ட வேண்டும்” 9

“புரட்சி எழுச்சியை மார்க்சிய வழியில், அதாவது ஒரு கலையாகக் கருத வேண்டுமாயின் நாம் அதே நேரம் ஒரு விநாடியைக் கூட வீணாக்காமல் புரட்சிப் படைப்பிரிவுகளின் தலைமையகத்தை அமைக்க வேண்டும்….”10

“இன்றைய தருணத்தில் புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருதாவிட்டால் மார்க்சியத்தின்பால் மெய்ப்பற்றுடன் இருப்பதோ, புரட்சியின்பால் மெய்ப்பற்றுடன் இருப்பதோ சாத்தியமல்ல……”11

                புரட்சி ஏற்படும் தருணம் நெருங்கி வருவதால், லெனின் செப்டம்பர் மாதம் நடுவில் பெத்ரோகிராதுக்கு அண்மையில் இருக்க விரும்பி வீபர்க் என்கிற இடத்திற்கு சென்றார். ஆயுதமேந்திய எழுச்சிக்கான நேரம் வந்துவிட்டபடியால், அதற்கான ஏற்பாடுகளையும் வழிகாட்டுதலையும் லெனின் அருகில் இருந்து அளித்துக் கொண்டிருந்தார். அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன.

       அக்டோபர் 10ஆம் நாளன்று கட்சியின் மையக் கமிட்டியின் ரகசியக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்கு லெனின் வருகிறார் என்பதை அறிந்த கமிட்டி உறுப்பினர்கள் அவரை நேரில் காண ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். நரைமயிர் டோப்பாவில் ஒரு புதியவர் அங்கே வந்து பேசத் தொடங்கினார், அந்த மாறுவேடம் பூண்டவர் லெனின் என்பதை பேச்சில் இருந்து கண்டுகொண்டனர்.

லெனின் தனது கருத்தை முன்வைத்தார், இத்தருணம் புரட்சிக்கானதே, அது ஆயுதமேந்திய போராட்டமே. இதனை மையக் கமிட்டி ஏற்றது. காமினெவும், ஸினோவ்யெவும் மட்டுமே இந்தத் தீர்மானத்தை எதிர்த்தவர்கள். டிராட்ஸ்கி ஆயுதப் போராட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கவில்லை, ஆனால் சோவியத்துக்களின் இரண்டாவது காங்கிரசுக்குப் பிறகு பார்க்கலாம் என்று கருத்துரைத்தார். இதுகூட எழுச்சியை தடுக்கும் முயற்சியேயாகும். தாமதிப்பது பெரும் தவறுக்கு இடமளிக்கும் என்று லெனின் மறுதலித்தார்.

எழுச்சியின் தலைமைக்கு லெனின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1917ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாளன்று புரட்சிகர-ராணுவக் கமிட்டி போல்ஷிவிக் மையக் கமிட்டியின் வழிகாட்டுதலில் அமைக்கப்பட்டது. இது பெத்ரோகிராத் சோவியத்தின் அமைப்பாக செயற்பட்டது. கட்சியின் மையக் கமிட்டி, பீட்டர்ஸ்பர்க் கமிட்டி, பெத்ரோகிராத் சோவியத், ஆலைக் கமிட்டிகள், தொழிற்சங்கங்கள், ராணுவ அமைப்புகளின் பிரதிநிதிகள் இதன் உறுப்பினர்களாவார்கள்.

செங்காவலர் படைகளை உருவாக்குவது, தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குவது இந்த புரட்சிகர-ராணுவக் கமிட்டியின் வேலையாகும். போல்ஷிவிக் கட்சியின் மையக் கமிட்டி வழிகாட்டுதலின்படி ஆயுதமேந்திய புரட்சி எழுச்சிக்கு தயார்ப்படுத்துவதே இதன் முக்கியமான பணி. நெருங்கிவரும் புரட்சியின் வெற்றிக்கு தேவைப்படும் அனைத்து ஒழுங்கமைக்கும் வேலைகளையும் கவனித்துக் கொள்வது இதன் பெரும்பணியாகும்.

                அக்டோபர் 16ஆம் நாள், தொழிலாளர்களின் பிரிதிநிதிகளடங்கிய மையக் கமிட்டிக் கூட்டத்தில் மீண்டும் லெனின் சொற்பொழிவாற்றினார். பின்பு அனைவரையும் அழைத்து தாக்குதலைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டார். எழுச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சரிபார்த்தார்.

இந்த நேரத்தில் கட்சியால் தோற்கடிக்கப்பட்ட காமினெவ், ஸினோவ்யெவ் ஆகிய இருவரும் பெரும் துரோகம் புரிந்தனர். ஆயுதமேந்திய தாக்குதல் குறித்த மையக் கமிட்டியுடனான தங்களின் கருத்து வேறுபாட்டை பற்றி மென்ஷிவிக்குகளிள் பத்திரிகையில் அறிக்கை வெளியிட்டனர். இதன் மூலம் கட்சியின் ரகசிய தாக்குதலைப் பற்றி வெளிப்படுத்தியதினால் பகைவர்கள் ரகசியத்தை அறிந்து கொண்டனர். இடைக்கால அரசு இதனைப் பயன்படுத்திக் கொண்டது.

                இந்த துரோகத்தை லெனின் கோபம் கொப்பளிக்க சாடினார்.

“நமது கட்சியின் மையக் கமிட்டி எடுத்த, புரட்சி எழுச்சி பற்றிய முடிவையும், புரட்சி எழுச்சிக்கான தயாரிப்புகளையும் அதற்கெனக் குறித்த நாளையும் எதிரிக்குத் தெரியாமல் மறைத்து வைக்க வேண்டும் என்ற முடிவையும் காமினெவும், ஸினோவ்யேவும் ரோத்ஸியான்கோவுக்கும் கெரன்ஸ்கிக்கும் காட்டிக் கொடுத்தார்கள்.
..
முன்நாட்களில் நெருக்கமாக இருந்த தோழர்களைப் பற்றி இந்த முறையில் எழுதுவது எனக்கு எளிதாக இல்லை. ஆனால் இந்த விஷயத்தில் எவ்விதமான தயக்கமும் குற்றமானது என்று நான் கருதுகிறேன். இல்லாவிடில், பிரபலமான கருங்காலிகளைத் தண்டிக்காத ஒரு புரட்சியாளர்களின் கட்சி அழிந்தொழியும்.

ரோத்ஸியான்கோவுக்கும் கெரன்ஸ்கிக்கும் காட்டிக் கொடுத்தது மூலம் கருங்காலிகள் புரட்சி எழுச்சியை இப்போது தாமதப்படுத்திவிட்ட போதிலும் அப்பிரச்சினை நிகழ்ச்சி நிரலில் இருந்து அகற்றப்படவில்லை, கட்சியால் அகற்றப்படவில்லை. ஆனால் நம்மிடையே “பிரபல” வேலை நிறுத்தக் குலைப்பாளர்களுக்கு நாம் இடமளிப்போம் ஆயின் நாம் எவ்வாறு ஆயுதமேந்திய புரட்சி எழுச்சிக்கு நம்மை நாமே தயார் செய்து கொள்ள முடியும்? அதிகப் பிரபலம் ஆனோர் என்ற அளவுக்கு அவர்கள் அதிக அபாயகரமானவர்கள் “மன்னிப்பளிக்கத்” சிறிதும் தகுதி இல்லாதவர்கள்.
..
வேலை நிறுத்தக் குலைவாளர்கள் எந்தளவு அதிகப் “பிரபலமானவர்களாக” இருக்கிறார்களோ அந்தளவுக்கு அவர்களை உடனடியாக விலக்குவது மூலம் தண்டிப்பது அதிக அவசர அவசியமானது.” 12

                சோவியத்துக்களின் இரண்டாவது காங்சிரசை அக்டோபர் 25ஆம் நாள் கூட்டுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. காங்கிரசுக்காக காத்திராமல் எதிர்ப்பு சக்திகளை முந்திக் கொண்டு புரட்சியைத் தொடங்க வேண்டும் என்று லெனின் வலியுறுத்தினார்.

அக்டோபர் 24ஆம் நாள் மாலை நேரத்தில் லெனின் மையக் கமிட்டி உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதினார்.

“நான் 24ஆம் நாள் மாலையில் இந்த வரிகளை எழுதுகிறேன். நிலைமை மிகமிக நெருக்கடியானதாக உள்ளது. புரட்சி எழுச்சியை தாமதப்படுத்துவது அழிவார்ந்தது என்பது உண்மையில் இப்போது முற்றிலும் தெளிவாகியுள்ளது.

இப்போது அனைத்தும் ஒரு நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணரும்படி தோழர்களை எனது சக்தி அனைத்தையும் கொண்டு நான் வலியுறுத்துகிறேன். மாநாடுகளாலோ காங்கிரசுகளாலோ தீர்வுகாண முடியாத பிரச்சினைகள் நம்மை எதிர்கொள்கின்றன. இவற்றுக்கு மக்கள் மூலம், மக்கள் திரளின் மூலம், ஆயுதமேந்திய மக்களின் போராட்டம் மூலம் மட்டுமே தனிமுழுமையாகத் தீர்வு காணமுடியும்.

கர்னிலவ் ஆதரவாளர்களின் முதலாளித்துவத் தாக்குதலும். வெர்ஹோவ்ஸ்கி நீக்கப்பட்டதும் நாம் தாமதிக்கக் கூடாது என்பதைப் புலப்படுத்துகின்றன. என்ன நேர்ந்தாலும் சரி, நாம் இந்த மாலையே இந்த இரவிலேயே அரசாங்கத்தைக் கைது செய்ய வேண்டும், முதலில் ராணுவ மாணவர்களை நிராயுதபாணிகளாக்க வேண்டும். (அவர்கள் எதிர்த்தால் முறியடிக்க வேண்டும்) இத்தியாதி.

நாம் தாமதிக்கக் கூடாது!! நாம் அனைத்தையும் இழக்க நேரலாம்!!
அனைத்து வட்டாரங்களும், அனைத்து ரெஜிமெண்டுகளும், அனைத்து சக்திகளும் உடனே ஒன்று திரட்டப்பட வேண்டும். அவை உடனே தமது பிரதிநிதிகளை புரட்சிகர ராணுவக் கமிட்டிக்கும் போல்ஷிவிக்குகளின் மையக் கமிட்டிக்கும் அனுப்ப வேண்டும். எந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் 25ஆம் நாள் வரையில் கெரன்ஸ்கி வகையறாவின் கைகளில் ஆட்சி அதிகாரத்தை விட்டுவைக்கக் கூடாது, எந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் கூடாது என்ற விடாப்பிடியான கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் இந்த மாலையே இந்த இரவிலேயே தவறாது முடிவு செய்யப்பட வேண்டும்.
..
அக்டோபர் 25ஆம் நாளன்று ஊசலாட்டமான ஓட்டுக்காக காத்திருப்பது பேராபத்தானது, படுமோசமான சடங்கு. இத்தகைய பிரச்சினைகளை மக்கள் வாக்கினால் அல்ல, மாறாக பலப்பிரயோகத்தால் முடிவு செய்ய மக்களுக்கு உரிமை உண்டு, இதைச் செய்ய அவர்கள் கடமைப்பட்டவர்கள்.
அரசு ஆட்டம் கண்டுவிட்டது. என்ன நேரினும் சரி அதற்கு மரண அடி கொடுக்க வேண்டும்!

செயலில் தாமதம் அழிவார்ந்ததாகும்.” 13

இக்கடிதம் மையக் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது.

                நேவா ஆற்றின் குறுக்கே இருந்த பாலத்தை தூக்கிவிட்டு, புரட்சி சக்திகளை பிரித்து விடலாம் என்று இடைக்கால அரசு திட்டமிட்டது. இதனை அறிந்த லெனின் ஸ்மோல்னிய் சென்றார். அக்டோபர் 24ஆம் நாள் இரவு எழுச்சிக்கு தலைமை ஏற்றார். எழுச்சி பற்றி செய்திகள் அனைத்துப் பகுதிக்கும் அனுப்பப்பட்டிருந்தன.

       ஆயுதப் போராட்டம் தொடங்கிவிட்டது, செம்படை திட்டமிட்டபடி ரயில் நிலையம், அஞ்சல் நிலையம், வானொலி நிலையம், அரசாங்கக் கட்டிடம், மின் நிலையம், வங்கி ஆகியவற்றைக் கைப்பற்றிக் கொண்டது. நகரை நெருங்கும் இடங்களை பால்டிக் கடற்படை வீரர்களும், புரட்சியாளர்களும் காத்தனர்.

ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட இடைக்கால அரசு குளிர்கால அரண்மனைக்குள் ஒளிந்து கொண்டது. தம்மை விடுவிக்க போர்முனையில் இருந்து தமது படை உதவிக்கு வரும் என்ற நம்பிக்கையில் உள்ளேயே அடைந்து கிடந்தது. அரண்மனையை கைப்பற்றும்படி லெனின் ஆணையிட்டார்.

                “அரோரா” போர்க்கப்பல், தனது பீரங்கியை குளிர்கால அரண்மனையைப் பார்த்துச் சுட்டது. செம்படைப் போராளிகள் அரண்மனையைத் தாக்கி கைப்பற்றினர். முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர்.

அக்டோபர் 25ஆம் நாட்காலையில் ஆயுதப் போராட்டம் வெற்றியடைந்துவிட்டது. இடைக்கால அரசு அதிகாரம் இழந்தது. புதிய ஆட்சியதிகாரம் பெத்ரோகிராத் சோவியத்தினுடைய ராணுவ புரட்சிக் கமிட்டிக்கு மாற்றப்படுவதாக லெனின் எழுதினார். இந்த அறிக்கை காலை பத்து மணியளிவில் வெளியிடப்பட்டது.


ருஷ்யாவின் குடிமக்களுக்கு!

இடைக்கால அரசு பதவியில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது. அரசு அதிகாரம் தொழிலாளர், படைவீரர்கள் பிரதிநிதிகளின் பெத்ரோகிராத் சோவியத்தின் அமைப்பான புரட்சிகர-ராணுவக் கமிட்டியின் கைகளுக்கு மாற்றப்பட்டது. இது பெத்ரோகிராத் பாட்டாளிகளுக்கும் காவற்படைகளுக்கும் தலைமை தாங்குகிறது.

மக்கள் எந்த குறிக்கோளுக்காக போராடினார்களோ அந்தக் குறிக்கோள்- ஜனநாயக சமாதானத்தை உடனடியாக வழங்குவது, நிலப்பிரபுத்துவ நிலவுடைமை உரிமையை ஒழிப்பது, உற்பத்தி மீது தொழிலாளர் கண்காணிப்பு, சோவியத் ஆட்சி அதிகாரத்தை நிறுவுவது- என்பது உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது.

தொழிலாளிகள், படைவீரர்கள், விவசாயிகளின் புரட்சி நீடூழி வாழ்க!

தொழிலாளர்கள், படைவீரர்கள் பிரதிநிதிகளின்
பெத்ரோகிராத் சோவியத்தின் புரட்சிகர- ராணுவ கமிட்டி

காலை 10 மணி, அக்டோபர் 25, 1917.

                 அக்டோபர் 26ஆம் நாள் அதிகாலை 2.20 மணியளவில் சோவியத்துகளின் இரண்டாவது காங்கிரஸ் தொடங்கியது. அக்கூட்டத்தில் ஆட்சி அதிகாரம் அனைத்தும் சோவியத்துக்களின் கைகளுக்கு மாற்றப்பட்டதாக தீர்மானம் போடப்பட்டது. சோவியத் மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டவழியிலான ஆட்சியாக மாறியது.
*********************************************************************************
பயன்படுத்திய நூல்கள்
1.நெருக்கடி முற்றியது - தேர்வு நூல்கள் 6 - பக்கம்- 219
2. மேற்கண்ட நூல் - பக்கம்- 224
3. மேற்கண்ட நூல் - பக்கம்- 225-226
4.வடக்கு பிராந்திய சோவியத்துக்களின் காங்கிரசில் கலந்து கொள்ளும் போல்ஷிவிக் தோழர்களுக்கு எழுதிய கடிதம் - தேர்வு நூல்கள் 6 பக்கம்- 322
5.போல்ஷிவிக்குகள் கட்டாயம் ஆட்சி அதிகாரம் மேற்கொள்ள வேண்டும் - தேர்வு நூல்கள் 6 பக்கம்- 190-191
6.ஒரு பார்வையாளரின் அறிவுரைகள் - தேர்வு நூல்கள் 6 பக்கம்- 316
7.ரு...த. கட்சி (போ) மையக் கமிட்டியின் கூட்டம் - தேர்வு நூல்கள் 6 பக்கம்- 331-332
8.மார்க்சியமும் கிளர்ச்சியும் - தேர்வு நூல்கள் 6 - பக்கம்- 194
9. மேற்கண்ட நூல் - பக்கம்- 199
10. மேற்கண்ட நூல் - பக்கம்- 201
11. மேற்கண்ட நூல் - பக்கம்- 202
12.ரு...த. கட்சி (போ)யின் மையக் கமிட்டிக்கு எழுதிய கடிதம் - தேர்வு நூல்கள் 6 பக்கம்- 348-349

13.மையக் கமிட்டி உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் - தேர்வு நூல்கள் 6 பக்கம்- 54-356

No comments:

Post a Comment