Tuesday 14 November 2017

லெனினது புதிய பொருளாதாரக் கொள்கையும் ருஷ்யாவில் சோஷலிச நிர்மாணத் திட்டமும்

1921ஆம் ஆண்டு மார்ச் மாதம், ருஷயக் கம்யூனிஸ்ட் கட்சியின் 10வது காங்கிரஸ் நடைபெற்றது. தொழிற்சங்கம் என்பது நிர்வாகத்திற்கும், பொருளாதார கண்காணிப்பிற்கும், கம்யூனிசத்திற்கும் பயிற்சி பள்ளியாக இருக்கும் என்ற லெனினது கருத்தை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. தொழிற்சங்கம் போன்றவற்றில் தேவையற்ற விவாதத்தின் மூலம் கட்சியை பிளவுபடுத்தும் முயற்சி தோல்வி கண்டது.

 கட்சிக்குள் பிளவு ஏற்படுத்துவதானது தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையைக் குலைக்கும். இதன் காரணமாக சோவியத் ஆட்சி சிதைந்துவிடும், வீழ்ந்து போன முதலாளித்துவம் எழுச்சிபெற வழிவகுக்கும் என்று லெனின் எச்சரித்தார்.

 கட்சியில் புதியதாக சேர்ந்தவர்களால் கட்சியின் கட்டுக்கோப்பு பாதிக்கும் நிலை ஏற்பட்டது. 1920ஆம் ஆண்டு இறுதியில் சுமார் 7 லட்சம் பேர் கட்சியில் இருந்தனர். இதில் தொழிலாளர்களின் எண்ணிக்கை பாதிக்கும் குறைவாகவும், விவசாயிகளின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்காகவும், மீதமுள்ளவர்களாவர் அலுவலர்கள், அறிவுத்துறையினர், மற்றும் மென்ஷிவிக்குகளிடம் இருந்தும், சோஷலிஸ்ட் புரடசியாளர்களிடம் இருந்தும் வந்தவர்களாவர். புதியதாக வந்தவர்களில் பலர் அரசியலில் உறுதியற்றவர்கள். இந்தப் போக்கினரை டிராட்ஸ்கி, புக்காரின் போன்ற குழுவாதிகள் பயன்படுத்தி கட்சியை குலைக்க முனைந்தனர். இந்த அபாயத்தை தவிர்க்க வேண்டுமானால் கட்சிக்குள் செயற்படும் பிரிவுகளையும், கட்சி விரோத குழுக்களை அமைத்துக் கொண்டு செயற்படுவதை தடை செய்ய வேண்டும் என்று 10வது காங்கிரஸ் முடிவெடுத்தது.

 கட்சிக்குள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து விரோதக் குழுக்களையும் கலைத்திட காங்கிரஸ் உத்திரவிட்டது. மீண்டும் கட்சிக்குள் குழுவை அமைக்க முனைந்தால் அதனை தடுக்கும் வகையில் கண்காணிக்க வேண்டும். காங்கிரஸ் முடிவுக்கு எதிராக குழுவை அமைத்தால் அவர்களை தண்டிக்க வேண்டும், அவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.

 கட்சியின் கட்டுக்கோப்பிற்கு பங்கம் விளைவிக்கும் இந்த குழுசேர்க்கும் போக்கை நீக்கினால் அன்றி பாட்டாளிவர்க்க சர்வாதிகரம் வெற்றி பெறமுடியாது. சோவியத் ஆட்சியின் விரோதிகள் தற்போது புதியதாக கடைபிடித்திருக்கும் செயல்தந்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும். படைபலத்தால் சோவியத்தை வீழ்த்த முடியாது என்ற நிலையினை உணர்ந்து கொண்ட இவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியில் நிலவும் கருத்து வேற்றுமைகளை பயன்படுத்த முயன்றனர். அதிருப்தியாளர்களை ஆதரித்து அவர்களைக் கொண்டு அதிகாரத்தை மாற்றுவதற்கு திட்டமிட்டனர். ஆனால் இது முறியடிக்கப்பட்டது.

 இந்த காங்கிரசில் புதிய பொருளாதாரக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டன. கட்டாய தானியக் கொள்முதலுக்கு பதிலாக பொருளாக வரி வசூலிக்கும் முறை நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டது. கட்டாய கொள்முதல் செய்யப்பட்டதைவிட குறைவான பொருளை வரியாக கொடுக்க வேண்டிய நிலை உருவாயிற்று. வரி செலுத்தியது போக மீதமுள்ள தானியங்களை விற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

 போர்க்கால கம்யூனிசம் என்பது முதலாளித்துவ சக்திகளின் கோட்டையை நேரடியாக தாக்கி கைப்பற்றுவது. இந்த தாக்குமுறை, தன்னுடைய தளத்தில் இருந்து அதாவது பின்னணியில் இருந்து துண்டித்துவிடுமோ என்ற அளவுக்கு முன்சென்றுவிட்டது. மேலும் இந்த பயணத்தை தொடராமல் சற்று பின்னோக்கி செல்ல வேண்டும். புதிய பலத்தைப் பெற்ற பிறகு முன்னோக்கி பயணிக்க வேண்டும்.

 கோட்டையை நேரடியாக தாக்காமல் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு நிதானத்தோடு தாக்கும் முறையாகும்.

 இந்த வழிமுறை புறமுதுகு காட்டி ஓட்டம் பிடிப்பதாக எதிர்ப்பாளர்கள் விமர்சித்தனர். இந்த எதிர்ப்பாளர்கள் போல்ஷிவிக் செயல்முறையை அறிந்து கொள்ள முடியாதவர்களாய் இருந்தனர். பின்வாங்குதல் ஏன் பின்பற்றப்பட வேண்டும் என்கிற புறநிலைமைகள் பற்றி போல்ஷிவிக்குகள் கூறுகின்ற காரணத்தை இந்த எதிர்ப்பாளர்களால் புரிந்து கொள்ளவில்லை. தனிநபர் மூலதனத்தின் மீது தாக்குவதற்கான தயாரிப்பு தான் இந்தப் பின்வாங்குதல் என்பதை அறிந்து கொள்ளவில்லை.

 பின்னணியில் போதிய தளம் அமைத்துக் கொள்ளாமல் முன்னேறுவது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து எடுக்கப்பட்ட முடிவு இது. தாக்கும் போது வெற்றி நிச்சயம் என்ற வகையில் தயார்படுத்துவதற்கே புதிய பொருளாதார கொள்கையின் மூலம் பின்வாங்கும் நடைமுறை ஏற்கப்பட்டது.

 பின்தங்கிய ருஷ்யாலிருந்து சோஷலிச பொருளாதாரத்தை அமைப்பதற்கு தேவைப்படும் உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பதற்கான அவகாசமே இந்த பின்வாங்கல். இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை தொழிலாளி வர்க்கத்திற்கும் விவசாய வர்க்களுக்கும் இடையே கூட்டுறவை ஏற்படுத்துவதற்கு ஏற்ப வகுக்கப்பட்டது. எதிர்ப்பாளர்கள் இதனை அறிந்திடவில்லை. புதிய பொருளாதாரக் கொள்கை சரியானது என்பதை முதல் ஆண்டிலேயே உறுதிபடுத்தியது. பொருளாதாரம் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. கம்யூனிஸ்ட் கட்சி சரியானப் பாதையில் செல்கிறது என்பதை தொழிலாளர்களும், விவசாயிகளும் உணர்ந்து கொண்டனர். இந்த புத்தெழுச்சியின் போது கட்சியின் பதினொன்றாவது காங்கிரஸ் 1922ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள் சுயவிமர்சனம் செய்யப்பட்டன.

 புதிய பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட பின்வாங்குதல் என்ற நடைமுறை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எந்த நோக்கத்திற்காக பின்வாங்குதல் நடைபெற்றதோ அது நிறைவேற்றப்பட்டது. ஒன்றுதிரட்டிப்பட்ட சக்திகளைக் கொண்டு அடுத்தகட்ட வளர்ச்சி நோக்கிய பயணித்திற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன.

 தேசியஇனங்களின் சுயேச்சையான விருப்பத்தின்படி ஒர் அரசாங்க ஒன்றியம் அமைக்கப்பட்டது. சோவியத் சோஷலிசக் குடியரசுகளின் ஒன்றியம் நிலைநிறுத்தப்பட்டது. இதில் பல்வேறு தேசியஇனங்கள் தங்களை இணைத்துக் கொண்டன.

 ஓய்வின்றி கடுமையான தொடர் உழைப்பால் லெனினது உடல்நலம் குன்றியது. இதனைப் பொருட்படுத்தாமல் லெனின் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருந்தார். 1921ஆம் ஆண்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி இடையிடையே தமது வேலைகளை செய்வதும் ஓய்வெடுப்பதுமாக இருந்தார். நோயைப் பொருட்படுத்தாமல் வேலை செய்ததால் அவரது ஆரோக்கியம் குன்றியது. 1922ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நோய் தீவிரமடைந்தது. 1923ஆம் ஆண்டின் முதல் இரு மாதங்களில் சற்று தேறினார். அப்போது தான் தமது இறுதி படைப்புகளை எழுதினார். காங்கிரசுக்கு கடிதம், நாட்குறிப்பிலிருந்து சில பக்கங்கள், கூட்டுறவு பற்றி, நமது புரட்சியைப் பற்றி, தொழிலாளர் விவசாயிகள் கண்காணிப்பை நாம் மறுசீரமைப்பது, சிறியதாயினும் சிறந்ததே நன்று.

 லெனின் எழுதிய கடிதத்தொகுப்பில், தேசிய இனப்பிரச்சினை பற்றியும், அரசு திட்ட கமிஷன் பற்றியும், ஸ்டாலின், டிராட்ஸ்கி ஆகியோரின் தனிப்பட்ட இயல்புகளைப் பற்றியும் எழுதியுள்ளார். நாட்குறிப்பிலிருந்து சில பக்கங்கள் என்ற கட்டுரையில் நகரத் தொழிலாளர்களுக்கும் கிராமத் தொழிலாளி மக்களுக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுவதைப் பற்றி எழுதியுள்ளார். கிராமத்துப் பாட்டாளி வர்க்கத்திடம் கம்யூனிசக் கருத்தை எடுத்துச் செல்ல வேண்டும், அவ்வாறு செய்யும் போது கம்யூனிசக் கருத்தை நேர் பொருளில் புரிந்து கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கையையும் கொடுத்துள்ளார்.

  

“கம்யூனிசத்துக்குத் தேவையான பொருளாயத அடித்தளம் நமது கிராமப்புறங்களில் இல்லாதவரை, இதைச் செய்வது கம்யூனிசத்துக்குத் தீங்கிழைப்பதாகவே இருக்கும், உண்மையில் பேராபத்து விளைவிப்பதாகவே இருக்கும் என்றே கூற வேண்டும்.”1

 விவசாயத்தில் சோஷலிச மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு கூட்டுறவு சங்கங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று கூட்டுறவு பற்றி என்ற  கட்டுரையில் லெனின் வலியுறுத்தினார்.

  

“அரசின் ஆட்சியதிகாரம் தொழிலாளி வர்க்கத்தின் கைக்கு வந்து விட்டதால், உற்பத்திச் சாதனங்கள் யாவும் இந்த அரசின் ஆட்சியதிகாரத்துக்குச் சொந்தமாகி விட்டதால், இனி மக்கள் எல்லோரையும் கூட்டுறவுக் கழகங்களில் ஒன்றுதிரளச் செய்வது தான் நமக்குள்ள ஒரே பணி என்றாகிவிட்டது.”2

      கூட்டுறவு என்பது முதலாளித்துவ முறைதானே என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு லெனின் பதிலளித்தார். முதலாளித்துவ அரசில், கூட்டுறவுகள் கூட்டு முதலாளித்துவ நிலையங்களேயாகும் இதில் சந்தேகம் இல்லை. ஆனால் தனியார் முதலாளித்துவத் தொழில் நிலையங்களை தேசவுடைமையாக்கப்பட்ட இன்றை நிலையில், தொழிலாளி வர்க்க அரசின் கண்காணிப்பின் கீழ் இந்த நிலையங்கள் சோஷலிச வகையிலான தொழில் நிலையங்களாகவே செயற்படும். கூட்டுறவு சங்கங்கள் அமைந்துள்ள இடமும் உற்பத்திச் சாதனங்களும் அரசு முதலாளித்துவ அமைப்பில் அரசுக்கு சொந்தமானவை. இது முதலாளித்துவ அரசில் காணப்படும் கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து வேறுபட்ட சோஷலிச நிலையங்களேயாகும்.

    இந்த நிலைமையில் இரண்டு பணிகளை செய்திட வேண்டும் என்று லெனின் வலியுறுத்துகிறார். ஒன்று இயந்திரத்தை திருத்தி செம்மையாக்க வேண்டும், மற்றொன்று விவசாயிகளை கூட்டுறவுகளில் ஒன்று திரட்டுவதற்கு முன்பாக அவர்களின் கலாச்சார நிலையை உயர்த்த வேண்டும்.

 

 “இரண்டு பிரதான பணிகள் நம்மை எதிர்நோக்குகின்றன. இந்தச் சகாப்தமே இவ்விரு பணிகளாலும் ஆனதுதான். முதலாவது, நமது அரசு இயந்திரத்தைத் திருத்தியமைத்தல். இந்த இயந்திரம் முற்றிலும் உபயோகமற்றதாகும், முந்திய சகாப்தத்திலிருந்து முழுமையான இவ்வியந்திரத்தை நாம் பெற்றுக் கொண்டோம். போராட்டத்தின் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த இயந்திரத்தைத் தீவிரமாய்த் திருத்தியமைக்கவில்லை, திருத்தியமைக்க முடியவும் இல்லை.

  

நமது இரண்டாவது பணி விவசாயிகளிடையே நடைபெற வேண்டிய கலாச்சாரப் பணி. விவசாயிகளைக் கூட்டுறவுகளில் ஒன்றுதிரளச் செய்வதே, விவசாயிகளிடையே நடைபெற வேண்டிய கலாசாரப் பணியின் பொருளாதார நோக்கம். விவசாயிகள் அனைவரும் கூட்டுறவுகளில் ஒன்றுதிரட்டப்பட்டு இருப்பார்களாயின், இப்பொழுது நாம் சோஷலிசத்தில் இருகால்களையும் ஊன்றிக் கெட்டியாய் நின்று கொண்டிருப்போம், ஆனால் விவசாயிகள் அனைவரையும் கூட்டுறவுகளில் ஒன்று திரட்டும் முன் விவசாயிகளுடைய கலாசார நிலையை உயர்த்தியாக வேண்டும். கலாசாரப் புரட்சி இல்லாமல் உண்மையில் இப்பணியை நிறைவேற்ற முடியாது.”3

        போதிய அளவுக்கு கலாசார வளர்ச்சி பெறுவதற்கு முன்பே ருஷ்ய நாட்டில் சோஷலிசத்தை நிறுவுவதை குருட்டு துணிச்சலான காரியம் என்று சொல்கிற எதிராளிகளின் கூற்றும் இந்த நிலைமையும் ஒன்றல்ல. இதுபற்றி நமது புரட்சி என்ற கட்டுரையில் இதற்கு விளக்கத்தை சற்று காட்டமாக கூறுகிறார். 

“ருஷ்யாவில் உற்பத்திச் சக்திகளது வளர்ச்சி சோஷலிசத்தைச் சாத்தியமாக்கும் படியான உயர்நிலையை அடைந்தாகவில்லை” இரண்டாவது அகிலத்தின் எல்லா வீரர்களும்- சுஹானவும் அடங்கலாய்த்தான்- இந்த முடிவினை எடுத்துரைத்து முழக்கமிடுகிறார்கள். மறுக்க முடியாத இந்த முடிவினை விதம்விதமான ஆயிரம் வழிகளில் ஓயாமல் டமாரமடிக்கின்றனர், நமது புரட்சிக்கு இதுதான் தீர்மானகரமான உரைகல் என்பதாய் நினைக்கின்றனர்.”4

        ஏகாதிபத்திய உலகப் போரின்போது ருஷ்யாவில் ஏற்பட்ட வளர்ச்சியின் மாற்றத்தைக் கணக்கில் கொள்ளாது திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டிருக்கின்றனர். சோஷலிச முன்தேவைகளான நிலப்பிரபுக்களையும் முதலாளிகளையும் வெளியேற்றுவதை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமான சோவியத்தை அமைத்துக்கொண்டு செய்யக் கூடாதா? என்று லெனின் கேள்வி எழுப்புகிறார்.

  

“சோஷலிசத்தைக் கட்டியமைப்பதற்கு நாகரிகம் அவசியம் என்கிறீர்கள். மிக்க நல்லது. ஆனால் நாகரிகத்துக்கு வேண்டிய முன்தேவைகளை, நிலப்பிரபுக்களையும் ருஷ்ய முதலாளிகளையும் வெளியேற்றுவது போன்ற இந்த முன்தேவைகளை, ஏன் நாம் முதலில் தோற்றுவித்துக் கொண்டு, அதன் பிறகு சோஷலிசத்தை நோக்கி முன்செல்லக் கூடாது? நிகழ்ச்சிகளின் வழக்கமான வரலாற்று வரிசைக் கிரமத்தில் இப்படிப்பட்ட உருத்திரிபுகள் அனுதிக்கப்படுவதில்லை என்றோ, சாத்தியம் அற்றவை என்றோ எங்கே, எந்த நூலில் படித்தீர்கள்?”5

        பின்தங்கிய நாட்டில் சோஷலிசத்தை நிலைநிறுத்துகிறோம் என்ற தெளிவோடு தான் லெனின் செயற்பட்டார். இருந்தாலும் வறட்டுச் சூத்திரவாதிகள் தொடர்ந்து இதனை இன்றுகூட எழுப்பிக் கொண்டே இருக்கின்றனர்.

  

“உடனே சோஷலிசத்தை அடைவதற்கு நம்மிடமும் போதிய நாகரிக வளர்ச்சி இருக்கவில்லை, ஆனால் அதற்கு வேண்டிய அரசியல் முன்தேவைகள் நம்மிடம் இருக்கின்றன.”6

        லெனினது இந்தக் கண்ணோட்டத்தை உள்வாங்கும் திறமற்றவர்களாக இருப்பவர்களை நாம் என்ன செய்ய முடியும்.

 ருஷ்யாவின் அக்டோபர் புரட்சி என்பது, மார்க்சின் மூலதன நூலுக்கு எதிரானதாகவும், வரலாற்றியல் பொருள்முதல்வாதத்திற்கு புறம்பானதாகவும், மார்க்சை மறுதலிப்பதாகவும் கிராம்ஷி போன்றோர்கள் கூறுகின்றனர்.

 

“போல்ஷிவிக் புரட்சி, மார்க்சின் “மூலதன”த்திற்கு எதிரான புரட்சி ஆகும். ருஷ்யாவில் பாட்டாளி வர்க்கத்தைக் காட்டிலும் பூர்ஷ்வாக்களின் மத்தியில்தான் “மூலதனம்” அதிகத் தாக்கம் ஏற்படுத்தியது. பாட்டாளிவர்க்கம் தனது விடுதலை, தனது வர்க்க நலன்கள், தனது புரட்சி ஆகியன பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே தவிர்க்கமுடியாத விதியின் பயனாக, ருஷ்யாவில் பூர்ஷ்வா வர்க்கம் உருவாக்கப்படும், அங்கு முதலாளிய சகாப்தம் தொடங்கும், மேற்கத்தியப் பாணி நாகரிகம் அங்கு தழைக்கும் என்பதை “மூலதனம்” விமர்சனரீதியாக விளக்கியது. ஆனால், எந்தவொரு சட்டகத்திற்குள் ருஷ்ய வரலாறு வளர வேண்டும் என்று வரலாற்றுப் பொருள்முதல்வாதம் வரையறுத்ததோ, அந்த சட்டகத்தை வரலாற்று நிகழ்வுகள் உடைத்தெறிந்தன. போல்ஷிவிக்குகள் காரல் மார்க்சை மறுதலித்துள்ளனர். அவர்கள் தங்கள் செயல்கள் மூலமும் வெற்றிகள் மூலமும், இதுகாறும் நம்பபட்டு வந்தது போல் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் விதிகள், அவ்வளவு இறுக்கமானவை அல்ல என்பதை உறுதி செய்துள்ளனர்”7

 மார்க்சின் உடலைப் புதைக்கின்ற போது, மார்க்சின் மாபெரும் இரண்டு கண்டுபிடிப்புகள் என்று எங்கெல்ஸ் கூறியதில் ஒன்றான வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை கிராம்ஷி குறைத்து மதிப்பிடுகிறார். லெனினியம் என்பது மார்க்சியத்தின் தொடர்ச்சியே.

        அக்டோபர் புரட்சியின் நான்காவது ஆண்டு விழாவை ஒட்டி எழுதிய கட்டுரையில் லெனின் கூறியதை படிக்கும் போது வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை மீறியதற்கான அடையாளங்களே இல்லை என்பதை அறிந்திட முடிகிறது. ருஷ்யாவில் நடைபெற்ற புரட்சியின் உடனடியான செயற்பாடு முதலாளித்துவ ஜனநாயகக் குறிக்கோளே. நாட்டின் அனைத்துக் கலாச்சாரத்துக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாய் உள்ளதை அகற்றுவதே என்று வரலாற்றியல் பொருள்முதல்வாதத் தெளிவோடு தான் லெனின் செயற்பட்டிருக்கிறார்.

  

“ருஷ்யாவில் நடைபெற்ற புரட்சியின் நேரடியான உடனடிக் குறிக்கோள் முதலாளித்துவ ஜனநாயகக் குறிக்கோள்தான், அதாவது மத்திய கால முறைமையின் மீதமிச்சங்களை அழித்து அவற்றை அறவே துடைத்தெரிவதும், இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை, இந்த அவக்கேட்டை ருஷ்யாவிடமிருந்து களைந்தெறிவதும், நமது நாட்டில் அனைத்துக் கலாச்சாரத்துக்கும் முன்னேற்றத்துக்கும் பிரம்மாண்டத் தடையாய் அமைந்த இதனை அகற்றுவதும்தான்.”8

        ருஷ்யாவினுடைய அக்டோபர் புரட்சியின் தன்மையை, அதாவது சோஷலிசப் புரட்சியின் போது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்குள்ள உறவை, மென்ஷிவிக்குகளும், சோஷலிஸ்ட் புரட்சியாளர்களும், இது போன்ற குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகளும் புரிந்து கொள்ளாமல் அபத்தமாக பேசுகின்றனர். ஆனால் லெனினது வழியில் புதிய ருஷ்யா சாதித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நான்கு ஆண்களில் ஏற்பட்ட மாற்றத்தில் காணமுடிகிறது.

  

“சோஷலிஸ்ட் (அதாவது பாட்டாளி வர்க்கம்) புரட்சியிடம் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்குள்ள உறவு குறித்து அராஜகவாதிகளும் குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகளும் (அதாவது மென்ஷிவிக்குகளும் சோஷலிஸ்ட் புரட்சியாளர்களும்- இவர்களே அந்தச் சர்வதேச சமூக வகையினரது ருஷ்யப் பிரதிநிதிகள்) நம்ப முடியாத அளவுக்கு அபத்தம் பேசி வந்துள்ளனர், இனியும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

  

இந்த விவகாரத்தில் மார்க்சிய ஆய்வு குறித்து நாங்கள் அளித்த விளக்கமும், முந்திய புரட்சிகளது அனுபவம் குறித்து நாம் செய்த மதிப்பீடும் பிழையற்றவை என்பதைக் கடந்த நான்கு ஆண்டுகள் முழு அளவுக்கு நிரூபித்துக காட்டியிருக்கின்றன. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை இதன் முன் வேறு யாருமே செய்திராதபடி நாம் நிறைவு பெறச் செய்துள்ளோம். சோஷலிசப் புரட்சியை நோக்கி நாம் உணர்வு பூர்வமாகவும் உறுதியாகவும் இம்மியும் பிறழாமலும் முன்னேறிச் செல்கிறோம்.”9

        ருஷ்யப் புரட்சியானது, தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அதிக அளவான ஜனநாயகத்தை கிடைக்கச் செய்வதோடு, முதலாளித்துவ ஜனநாயகத்திடமிருந்து முறிவையும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் பிறப்பையும் குறிக்கின்றது.

  

“ஒரு புரட்சி எப்படி மற்றொன்றாக வளர்ச்சியுறுகிறது என்பதற்கு மிகவும் கண்கூடான நிரூபணங்கள் அல்லது வெளிப்பாடுகளில் ஒன்றே சோவியத் அமைப்பு, தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சோவியத் அமைப்பானது அதிகபட்ச அளவிலான ஜனநாயகத்தைக் கிடைக்கச் செய்கிறது, அதே போது முதலாளித்துவ ஜனநாயகத்திடமிருந்தான முறிவையும், ஜனநாயகத்தின் ஒரு புதிய சகாப்த முக்கியத்துவம் வாய்ந்த வகையின், அதாவது பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின், அல்லது பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் உதயத்தையும் அது குறிக்கிறது.”10

  இவ்வகையில் சோஷலிச அரசியல் அடிப்படையில் சோஷலிச சமூகத்தை ருஷ்யாவில் நிலைநாட்டப்படுவதை லெனின் உணர்ந்தே செயற்பட்டார்.

  

“நமது சோவியத் குடியரசில் சமூக அமைப்பு இரண்டு வர்க்கங்களின் ஒத்துழைப்பை அடிப்படையாக்கியதாகும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள், இப்போது இதில் புதிய பொருளாதாரக் கொள்கைக் காலத்தில் ஏற்பட்ட சிறு முதலாளிகள், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தினர்கள் ஒரு சில நிபந்தனைகளின் கீழ் பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது தெரிந்ததே. இந்த வர்க்கங்களுக்கு இடையே கடுமையான வர்க்க வேறுபாடுகள் உதித்தெழுமானால் ஒரு பிளவு தவிர்க்க முடியாததாகும், ஆனால் நமது சமூக அமைப்பில் இத்தகைய பிளவுக்கான அடிப்படைகள் தவிர்க்க முடியாதபடி இல்லை. ஒரு பிளவை ஏற்படுத்தக்கூடிய அத்தகைய புறநிகழ்வுகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து அவற்றை முன்னுணர்ந்து தடுப்பது நமது மையக் கமிட்டி மற்றும் மையக் கண்காணிப்புக் கமிஷன், நமது கட்சி முழுவதன் முக்கிய கடமையாகும்.”11

     புறநிகழ்வுகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்தாலன்றி சோவியத் அரசைக் காப்பாற்ற முடியாது என்ற முன்னெச்சரிக்கையோடு லெனின் கூறியிருக்கிறார். புதிய பொருளாதாரக் கொள்கையின் வழியில் செல்கிற சோவியத் குடியரசில் பிளவை ஏற்படுத்தாத வகையில் செல்வதற்கு மையக் கமிட்டி, மையக் கண்காணிப்புக் கமிஷன், கட்சி ஆகியவற்றின் கடமையினை வலியுறுத்துகிறார்.

        விவசாயிகள் மீதான தலைமை தொடர்ந்து தொழிலாளி வர்க்கத்திடம் இருக்கும்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும்,  அரசின் பொருளாதாரத்தில் சாத்தியமான முழுஅளவுக்குச் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், பெருவீத இயந்திரத் தொழிலை வளர்த்திட வேண்டும், மின்மயமாக்குதலையும், நீரியல் முறையிலான புல்கரி உற்பத்தியை வளர்த்திட வேண்டும், வோல்ஹவ் நீர்மின்விசைத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்.

  

“நமது பொறியமைவை முழு அளவுக்குக் களையெடுத்துச் சுத்தம் செய்வதன் மூலமும், அதற்கு இன்றியமையாத் தேவையாய் இல்லாதவை யாவற்றையும் கூடுமான அளவுக்குக் கழித்துக் கட்டுவதன் மூலமும் தான் நாம் சமாளிக்க முடியுமென உறுதியாய் இருக்கலாம் என்பதே இந்த நியாயவிளக்கம். அத்தோடு, சிறு விவசாயிகளது நாட்டுக்குரிய நிலையில் அல்ல, சகலமும் குறுகிய வரம்புகளுக்குள் இருக்கும்படியான நிலையில் அல்ல, மாறாக பெருவித இயந்திரத் தொழிலை நோக்கி இடையறாது முன்னேறும்படியான நிலையில் நாம் சமாளிக்க முடியும்.

  

நமது தொழிலாளர் மற்றும் விவசாயிகளது மேற்பார்வை அமைப்பானது இத்தகைய மகோன்னத பணிகளைக் கொண்டதாக இருக்க வேண்டுமென நான் கனவு காண்கிறேன். எனவேதான் இதற்காக மிக உயர்ந்த அதிகாரம் வகிக்கும் கட்சி உறுப்பைச் “சாதாரண” மக்கள் கமிசாரகத்துடன் இணைத்திடுவதற்கு நான் திட்டமிடுகிறேன்.”12

 இந்தக் கட்டுரையில் கனவு காண்பதோடு லெனின் முடிக்கிறார். இங்கே கனவு என்றவுடன் அடிப்படையில்லாக் கனவு என்று நினைத்திடக் கூடாது இருக்கும் அடைப்படைகளைக் கொண்டு கட்டிமுடிக்க வேண்டிய கடமைகளையே கனவுகளாகக் காட்சிப்படுத்துகிறார்.

 கட்சியின் பன்னிரண்டாவது காங்கிரஸ் 1923ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. இந்தக் காங்கரசில் லெனின் கலந்துகொள்ள முடியவில்லை. லெனின் அண்மைக்காலங்களில் எழுதியவைகளில் இருந்த கருத்தக்களை இந்தக் காங்கிரஸ் பரிந்துரைத்தது. கட்சியின் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தவர்களின் முடிவுகளுக்கு மாறாக இறுதியில் வெற்றி பெற்றது.

 தொடரும் காலங்களில் தொழிலாளர், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டது. இருந்தாலும் இயந்திரத் தொழில்கள் இன்னும் விரிவாக வளர்ச்சியடைய வேண்டியிருந்தது. வேலையில்லாதோர் சோவியத்தில் இன்னும் காணப்பட்டனர். அனைவருக்கும் வேலை கொடுக்கும்படியான வளர்ச்சி தேவைப்பட்டது.

 சிரமத்தோடு சோவியத் அரசு பயணித்துக் கொண்டிருக்கும்போது லெனின் நோய்க்கு ஆளானார். இந்த சந்தர்ப்பத்தில் டிராட்ஸ்கி போன்ற எதிர்ப்பாளர்கள் போல்ஷிவிக் கட்சியின் மீது தாக்குதல் தொடுத்தனர். எதிர்ப்பாளர்களை டிராட்ஸ்கி ஒன்றுதிரட்டி கட்சிக்குள் எதிர்ப்புக்குழு அமைக்க முயற்சித்தார்.  தற்போதைய சோவியத் நாடு மிகவும் அபாயகரமான பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது, இதிலிருந்து மீள வழியில்லை, வீழ்வது உறுதி என்பதானக் கருத்துக்களை பரப்பிக் கொண்டிருந்தார். இந்த சதியினை நிறுத்தாமல் தொடர்ந்தார். அக்டோபர் புரட்சியின் படிப்பினைகள் என்ற தலைப்பில் 1924ஆம் ஆண்டு டிராட்ஸ்கி கட்டுரை ஒன்று எழுதினார். இதில் லெனினியத்தை மறுத்து டிராட்ஸ்கியத்தை பதிலிட்டார். இந்தப் போக்கை எதிர்த்து லெனினியத்தை பாதுகாக்க ஸ்டாலின் 1924ஆம் ஆண்டு லெனினியத்தின் அடிப்படைகள் என்ற நூலை எழுதினார். இன்றுவரை இந்நூல் லெனினியத்தை காப்பாற்றுவதில் தம் கடமையினை செய்து வருகிறது.

        1924ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் நாள் மாலை 6:50க்கு லெனினது உயிர் பிரிந்தது. மாஸ்கோவில் வைக்கப்பட்ட லெனினது உடலை லட்சக்கணக்கான மக்கள் கடுங்குளிரைப் பொருட்படுத்தாமல் பார்வையிட்டனர்.

        1922ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் நாள்      மாஸ்கோ சோவியத்தின் முழுநிறைவுக் கூட்டத்தில் நிகழ்த்திய உரையே லெனினது இறுதியான உரையாகும்.

 

“சோஷலிசமானது இப்போது தொலை நெடுங் காலத்துக்குரிய விவகாரமாய் இருக்கவில்லை, அல்லது கருத்தியலான ஒரு சித்தரமாகவோ, புனிதத் தேவ உருவமாகவோ இருக்கவில்லை.

சோஷலிசத்தை நாம் அன்றாட வாழ்க்கையாகப் பரிமளிக்கச் செய்கிறோம், இங்கே விவகாரங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்று நாம் கவனித்துக் கொண்டாக வேண்டும். இதுதான் நமது இந்நாளையப் பணி, நமது சகாப்தத்துக்குரிய பணி. இந்தப் பணி கடினமானதுதான் என்றாலும், நமது முந்திய பணியுடன் ஒப்பிடுகையில் புதுமையானதே என்றாலும், இதை நிறைவேற்றுகையில் எதிர்ப்பட வேண்டியுள்ள இடர்கள் எண்ணற்றவை எனினும், நாம் எல்லோருமாய் ஒன்றுசேர்ந்து, என்னதான் விலை கொடுக்க நேர்வதாயினும் – ஒரே நாளில் அல்ல, ஒரு சில ஆண்டுகளில்- இப்பணியை நிறைவேற்றுவோம், புதிய பொருளாதாரக் கொள்கைக்குரிய ருஷ்யா இவ்வழியில் சோஷலிச ருஷ்யாவாக மாற்றமடையும் என்ற திடநம்பிக்கையைத் தெரிவித்து எனது உரையை முடிப்பதற்கு அனுமதியுங்கள்.”13

      லெனின் விட்டுச் சொன்ற பணியினை ஸ்டாலின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியும், சோவியத் அரசும் செய்து முடித்தது. முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிச சமூகத்திற்கு மாறிச் செல்வதற்கு தேவைப்பட்ட இடைக்காலத்தை முடித்துக் கொண்டு 1935ஆம் ஆண்டில் சோஷலிச சமூகத்திற்குள் சோவியத் நுழைந்தது. 1940ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் தொழிற்துறை உற்பத்தியின் அளவு ஐரோப்பியாவில் முதல் இடத்தையும், உலக உற்பத்தியின் அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்றது.

 1940 களில் எற்பட்ட இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானிய பாசிச ராணுவம் சோவியத் ஒன்றியத்தின் நகரங்களையும் தொழிற்கூடங்களையும் அழித்தது. இதனோடு 55 ஆயிரம் டாங்கிகள், 62 ஆயிரம் விமானங்கள், 80 லட்சத்துக்கு மேற்பட்ட போர்வீரர்கள் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயினர். நாட்டைக் காப்பதற்கான இந்த தேசபக்த போரின் போது, போர்வீரர்கள் மற்றும் மக்களின் பேராற்றலை உலகுக்கு எடுத்துக்காட்டியது. அது மட்டுமல்லாது போரின் விளைவாக ஏற்பட்ட அழிவில் இருந்து மீள்வதற்கு பல பத்தாண்டுகள் தேவைப்படும் என்று உலகம் கணித்துக்கொண்டிருக்க, சோவியத் ஒன்றிய உழைக்கும் மக்கள், போருக்கு முன்பான உற்பத்தியின் அளவை, முதல் மூன்று ஆண்டிலேயே எட்டினர். மக்களின் இந்த பேராற்றலுக்கு ஸ்டாலின் தலைமை தாங்கினார். மக்கள், கட்சி, தலைவர் ஆகியோர்களிடையே காணப்பட்ட ஐக்கியமே இந்த வெற்றிக்கு வழிவகுத்தது.

 பின்தங்கிய ருஷ்யாவை சோஷலிச நிர்மாணத்திற்கு தேவையான வகையில் வளர்ச்சியடைய போல்ஷிவிக்குகளால் முடிந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது. ஆனால் ஸ்டாலினின் தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பதாக கூறிக்கொண்ட, பின்வந்த ருஷ்ய அதிபர்கள் சோவியத் வளர்ச்சியடைந்த சோஷலிச சமூகமாக மேம்பட்டுவிட்டது, இதற்கு அடுத்தக் கட்டமான கம்யூனிச சமூகத்தில் நாம் கால்பதிக்க வேண்டும்.  இந்த சமூகத்தில் முதலாளித்துவத்தின் முயற்சிகள் பலனளிக்காது என்று கூறி, சோவியத்தில் கொண்டுவந்த மாற்றங்கள் மீண்டும் முதலாளித்துவத்தையே கொண்டு வந்திருக்கிறது. ஸ்டாலினிடம் காணப்படும் தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பதாக கூறியது உண்மையில் மார்க்சிய எதிர்ப்பேயாகும். இன்றுவரை ஸ்டாலின் எதிர்ப்பென்பது மார்க்சிய எதிர்ப்பாகவே காணப்படுகிறது.

   இப்போது ஆய்வு செய்து பார்க்க வேண்டியது, எப்போது எப்படி போல்ஷிவிக்கல்லாதவர்கள் சோவியத் கம்யூனிஸ்ட் கடசியிலும் தலைமையிலும் இடம்பெற்றார்கள் என்பதேயாகும். அதாவது சோவியத் தகர்வின் போது போல்ஷிவிக்குகள் ஆட்சியில் இல்லை என்பதே உண்மையாகும். இதனை ஆய்வு செய்ய வேண்டியது சர்வதேச இடதுசாரியினரின் கடமையாகும். ருஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை இந்த ஆய்வுடனேயே கொண்டாட வேண்டும். சோவியத் தகர்வு என்பது கம்யூனிச சித்தாந்தத்தின் தகர்வாகாது, சித்தாந்தத்தின் சிதைவினால் உண்டான தகர்வேயாகும். இந்த சித்தாந்த சிதைவை விமர்சித்து மார்க்சியத்தை நிலைநிறுத்துவது பெரும் கடமையாகும்

 இன்றைய ருஷ்யாவில் பெரும்பாலான இளைஞர்களின் கவனம் சோஷலிசத்தின் பக்கம் திரும்புவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இது ருஷ்யப் புரட்சியின் நூறாவது ஆண்டின் நற்செய்தியாகும். நாளைய உலகம் உழைப்பாளர்களுக்கேயாகும்.

 பயன்படுத்திய நூல்கள்

 1.நாட்குறிப்பிலிருந்து சில பக்கங்கள் -தேர்வு நூல்கள் தொகுதி 12 – பக்கம்- 289

2.கூட்டுறவு பற்றி -தேர்வு நூல்கள் தொகுதி 12 – பக்கம்- 292-293

3.மேற்கண்ட நூல்– பக்கம்- 302-303

4.நமது புரட்சி -தேர்வு நூல்கள் தொகுதி 12 – பக்கம்- 308

5. மேற்கண்ட நூல்– பக்கம்- 302-303

6.சிறியதாயினும் சிறந்ததே நன்று -தேர்வு நூல்கள் தொகுதி 12 – பக்கம்- 345

7.கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்- எஸ்.வி.ராஜதுரை- வ.கீதா

8.அக்டோபர் புரட்சியின் நான்காவது ஆண்டு விழாவை -தேர்வு நூல்கள் தொகுதி 12 – பக்கம்- 49

9. மேற்கண்ட நூல் - பக்கம்- 50

10. மேற்கண்ட நூல்– பக்கம்- 55

11.தொழிலாளர் விவசாயிகள் கண்காணிப்பை நாம் மறுசீரமைப்பது -தேர்வு நூல்கள் தொகுதி 12 – பக்கம்- 319

12.சிறியதாயினும் சிறந்ததே நன்று -தேர்வு நூல்கள் தொகுதி 12 – பக்கம்- 346-347

13.மாஸ்கோ சோவியத்தின் முழுநிறைக் கூட்டத்தில் நிகழ்த்திய உரை -தேர்வு நூல்கள் தொகுதி 12 – பக்கம்- 254-255

Sunday 18 June 2017

ருஷ்யாவில் பிப்ரவரி புரட்சியும் அக்டோபர் புரட்சியும்

         போல்ஷிவிக்குகள் தாங்கள் ஏற்றுக் கொண்ட முடிவின்படி செயற்படத் தொடங்கினர். ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக மாற்றினர்.

எதிரிப் படையினரின் மீது தாக்குதலுக்கு அதிகாரிகள் ஆணையிட்டபோது, ராணுவத்தில் சிலர் மறுத்தனர். குறிப்பாக வடக்குப் போர்முனையான பால்டிக் மாகாணங்களில் காணப்பட்ட ராணுவத்தினரிடம் போல்ஷிவிக்குகளின் செல்வாக்கு அதிகம் காணப்பட்டது. 1916ஆம் ஆண்டின் போராட்டம் முந்திய ஆண்டைவிட அதிகரித்தது.

       ருஷ்யாவில், தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களும், ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்து நடைபெற்றன. போரின் விளைவாக 1916ஆம் ஆண்டு பஞ்சம் ஏற்பட்டது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து, மக்கள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஜார் அரசின் மீதான எதிர்ப்பு முழு எழுச்சியாக வீறுகொண்டெழுந்தது

       1917ஆம் ஆண்டு, ரத்த ஞாயிரின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவு நாளன்று பெத்ரோகிராத் தொழிலாளர்கள் சனவரி 9ஆம் நாள், ஜார் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். முதல் இரண்டு மாத வேலை நிறுத்தங்களில் ஆறு லட்சத்துக்கும் மேலானாவர்கள் பங்கெடுத்தனர். மார்ச் 7ஆம் நாளன்று பெத்ரோகிராத்தில் தொழிற்சாலைகளில் பெரும்பான்மை வேலை நிறுத்தம் நடந்தது. மார்ச் 9ஆம் நாள் போராட்டம் வெகுவாக அதிகரித்தது. இந்நிலை தொடர்ந்த காரணத்தால் மார்ச் 11ஆம் நாளன்று பெரும் எழுச்சியாக உருப்பெற்றது. மார்ச் 11ஆம் நாள் நான்காவது ரிசர்வ் பட்டாலியன்களின் துப்பாக்கி, தொழிலாளர்களின் மீது பாய மறுத்து, தொழிலாளர்களை எதிர்க்கின்ற குதிரைப் போலீசாரை நோக்கித் திரும்பியது. மார்ச் 12ஆம் நாளன்று பெத்ரோகிராத்தில் ராணுவத்தினர் தொழிலாளர்களின் எழுச்சியில் சேர்ந்து கொண்டனர். சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அறுபதாயிரத்தைத் தொட்டது.

                புரட்சித் தீ பற்றி எரிந்தது, தொழிலாளர்களும், தங்களோடு இணைந்த வீரர்களும் ஜார் அரசனுடைய அமைச்சர்களையும், தளபதிகளையும் கைது செய்தனர். சிறையில் பிடித்துவைத்திருந்த போராளிகளை விடுதலை செய்தனர். விடுதலை பெற்றவர்கள் புரட்சியில் கலந்து கொண்டனர்.

                தொழிலாளர்கள், படைவீரர்கள் ஆகியோரின் தாக்குதலைத் தாங்க முடியாத எதேச்சதிகார அரசு தகர்ந்து வீழ்ந்தது. முன்னூறு ஆண்டுகளாக ஆண்டு வந்த வம்சம் முடிவுக்கு வந்தது. புரட்சியாளர்கள் பெத்ரோகிராத்தில் தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்களின் பிரதிநிதிகளின் சோவியத்தை அமைத்தனர். வேறுசில இடங்களிலும் தொழிலாளர்கள், படைவீரர்கள் மக்களின் சோவியத்துக்களை அமைத்தனர்.

       போல்ஷிவிக்குகள் பொதுமக்களுடன் இணைந்து வீதிகளில் போராடிக் கொண்டிருந்த போது, சோவியத்துகளில் இடங்களைக் கைப்பற்றி, அங்கே பெரும்பான்மையினராக ஆவதற்கு மென்ஷிவிக்குகளும், சோஷலிஸ்ட் புரட்சியாளர்களும் போட்டிப்போட்டுக் கொண்டிருந்தனர். போல்ஷிவிக்குகளின் தலைவர்களில் பெரும்பான்மையினர் சிறைகளிலும், நாடுகடந்தும் வாழ்ந்தனர். இந்த நிலைமையை இவர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனர். பெரும்பான்மை சோவியத்துகளில் இவர்களே இடம்பிடித்துக் கொண்டனர். சில இடங்களில் போல்ஷிவிக்குகள் இடம்பெற்றனர்.

                மென்ஷிவிக்குகளும், சோஷலிசப் புரட்சியாளர்களும் மிதவாத முதலாளிகளுடன் திரைமறைவில் ஒப்பந்தம் செய்துகொண்டனர். இந்த ஒப்பந்தம் போல்ஷிவிக்குகளுக்கு தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தம் முதலாளித்துவ இடைக்கால அரசு ஒன்றை அமைப்பது பற்றியதாகும்.

                இதன்படி மார்ச் 12ஆம் நாளன்று இளவரசர் லிவோவ் தலைமையில் ஒர் இடைக்கால அரசு தோன்றியது. லிவோவ் ஜாரின் நம்பிக்கைக்கு உரியவர், பிப்ரவரி புரட்சிக்கு முன்பு ஜார் இவரை தம்முடைய முதன்மை அமைச்சராக அமர்த்த திட்டமிட்டிருந்தார். அப்படிப்பட்டவரைக் கொண்டு இந்த இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. ஜனநாயகத்தின் பிரதிநிதியாக சோஷலிசப் புரட்சியாளரான கெரன்ஸ்கி இந்த இடைக்கால அரசில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். மக்கள் போராட்டத்தில் கிடைத்த அதிகாரத்தை சோஷலிசப் புரட்சிக்கார்களும், மென்ஷிவிக்குகளும் முதலாளிகளின் காலடியில் சேர்த்தனர்.

                தொழிலாளர்கள், ராணுவ வீரர்களைக் கொண்ட பிற சோவியத்துக்களும், போல்ஷிவிக்குகளும் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். மென்ஷிவிக்குகள், சோஷலிசப் புரட்சியாளர்கள் ஆகியோரின் முயற்சியால் பெரும்பாலான வாக்குகள் அடிப்படையில் புதிய அரசு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

                இவ்வாறு இரட்டை ஆட்சி ருஷ்யாவில் ஏற்பட்டது.

இந்தக் கட்டத்தில் பாட்டாளி வர்க்கம் போதிய  ஒழுங்கமைப்பும், அரசியல் உணர்வும் பெறாதிருந்தது. இதற்கு பெரும் காரணம் வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர்கள் இன்னும் போர் முனையில் இருந்தனர்.  போல்ஷிவிக்குகளின் முக்கியப் பொறுப்பாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இன்னும் சிலர் வெளிநாடுகளில் அரசியல் அகதிகளாக இருந்தனர். இவர்கள் இடத்திற்குப் புதியதாக வந்தவர்கள் குட்டி முதலாளித்துவ சிந்தனைப் போக்கில் இருந்தவர்கள். அதனால் போல்ஷிவிக்குகளின் கட்சி பலவீனத்தில் இருந்தது. மென்ஷிவிக்குகளும், சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் மட்டும்தான் மக்களின் அருகில் இருந்தனர்.

பிப்ரவரிப் புரட்சியின் தொடக்கத்தில் போல்ஷிவிக் கட்சியினர் தமது தலைமறைவு வாழ்க்கையில் இருந்து வெளிப்படையான செயற்பாட்டுக்கு வந்தனர். மீண்டும் 1917ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் நாளில் இருந்து பிராவ்தா வெளியிடப்பட்டது. சுவிட்சர்லாந்தில் இருந்த லெனினுக்கு புரட்சி தொடங்கியது பற்றி செய்திகள் கிடைத்துக் கொண்டிருந்தன. அங்கிருந்தபடியே புரட்சியின் போக்கை கவனித்துக் கொண்டிருந்தார். பிப்ரவரி புரட்சியை அறிந்ததுமே, புரட்சி தொடர்பாக கட்சி சந்தித்துவரும் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் வகையில் தொலைவிலிருந்து கடிதங்கள் என்ற பெயரில் ஐந்து கடிதங்களை எழுதி அனுப்பினார். ஐந்தாவது கடிதம் முழுமையடையாத நிலையில் காணப்படுகிறது. முதல் கடிதம் மார்ச் பிராவ்தா இதழில் சுருக்கமாக வெளிவந்தது. மற்றவை அக்டோபர் புரட்சிக்குப் பின்பே பதிப்பிக்கப்பட்டது. ஐந்தாவது கடிதத்தில் காணப்படும் கருத்துக்களை செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள், நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் என்ற தொடர் கட்டுரைகளில் விரிவாக்கினார்.

ஏகாதிபத்திய உலகப் போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்ற போல்ஷிவிக்கின் முடிவின்படி, முதல் புரட்சி ருஷ்யாவில் ஏற்பட்டதைக் குறிப்பிட்டுத் தொலைவிலிருந்து கடிதங்கள் என்ற சிறுகட்டுரை தொடங்குகிறது. எட்டே நாட்களில் ஒரு முடியாட்சி தகர்ந்து விழுந்த அற்புதத்தைச் சுட்டுகிறார்.

“இயற்கையிலேயோ வரலாற்றிலேயோ அற்புதங்கள் கிடையா. ஆனால் வரலாற்றின் ஒவ்வொரு திடீர் திருப்பமும் அத்தகைய செழுமையான உள்ளடக்கத்தினை வழங்குகின்றது. போராட்ட வடிவங்கள் மற்றும் போராடும் தரப்புக்களின் சக்திகளது அணி சேர்க்கையில் இத்தகைய எதிர் பாராத பிரத்தியேக இணைப்புக்களை வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு புரட்சிக்கும் பொருந்தும். எனவே சாமான்யர் மனதில் அற்புதமாகத் தோற்றமளிப்பவை நிறைய இருக்கும்”1

                ஜார் ஆட்சி இவ்வாறு வீழ்ந்து போனதற்கு பல காரணிகள் இணைந்திருந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை 1905-07ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வர்க்கப் போராட்டம் ஆகும். அகிலத்தில் சந்தர்ப்பவாத கம்யூனிஸ்டுகளால் ஏற்றுக் கொள்ளப்படாத திட்டம், இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

“ஏகாதிபத்தியப் போர் புறவயப்பட்ட தவிர்க்கவொண்ணாமையுடன், முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை முன் என்றும் கண்டிராத அளவுக்கு மிகப் பெரிதாகவே முடுக்கும், தீவிரமாக்கும் என்பது திண்ணம், பகைமை வர்க்கங்களுக்கு இடையே ஒர் உள்நாட்டுப் போராக இது மாறுவது நிச்சயம்.

இந்த மாற்றமானது 1917ஆம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் புரட்சியால் ஏற்கெனவே துவக்கப்பட்டு விட்டது.” 2

                இன்று போரிடுகிற முதலாளித்துவப் பிரிவுகளையும், முதலாளித்துவ அமைப்பின் எஜமானர்களையும், முதலாளித்துவ அமைப்பின் அடிமை உடமையாளர்களையும் இந்தப் போர் இரும்புச் சங்கிலிகளால் ஒன்றுடன் ஒன்று பிணைத்திடுகிறது என்று லெனின் கூறுகிறார்.

“போர் வெடித்தவுடன் முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் துறந்தோடியுள்ள சோஷலிஸ்டுகள்- ஜெர்மனியில் டேவிட்கள், ஷெய்டெமன்கள், ருஷ்யாவில் பிளாகானவ்கள், பத்ரேசவ்கள் குவஸ்தியோவ்கள் வகையறாக்கள் அனைவரும்- புரட்சியாளர்களின் “பிரமைகளுக்கு” எதிராக, ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப போராக மாற்றும் “கேலிக்கூத்தான கனவுக்கு” எதிராக உரத்தும் நீண்ட காலமாயும் ஆரவாரம் செய்து வந்தனர். முதலாளித்துவம் வெளிப்படுத்துவதாகக் கூறப்படும் வலிமை, விடுபடாவுறுதி, தகவமைப்பு ஆகியவற்றுக்கு சர்வ சுரங்களிலும் புகழ்மாலை பாடினார்கள். இவர்கள்தான் பல்வேறு நாடுகளிலுமுள்ள தொழிலாளர் வர்க்கங்களைத் “தகவமைக்கவும்”, வதக்கி அடக்கவும், ஏமாற்றம் செய்யவும், பிளவுறுத்தவும் முதலாளிகளுக்கு உதவியர்கள்!” 3

                பாட்டாளி வர்க்க சிந்தனையில் இருந்து துறந்தோடியவர்களைப் பற்றி கடுமையான கோபத்தில் இவ்வாறு லெனின் எழுதியுள்ளார். மேலும் இரட்டை ஆட்சியின் தோற்றத்தையும் அதன் வர்க்க இயல்பையும் எடுத்துக் காட்டுகிறார். இன்றைய அரசியல் சூழ்நிலைகளின் எதார்த்தத்தை துல்லியமாக வரையறுத்தால்தான் மார்க்சிய வழிப்பட்ட செயற்தந்திரத்தை அமைத்துக் கொள்ள முடியும் என்பதை வலியுறுத்துகிறார்.

“ருஷ்யா முழுவதிலுமுள்ள தொழிலாளர்களைப் போலவே பெத்ரோகிராத் தொழிலாளர்களும் ஜாரிச முடியாட்சியை எதிர்த்துத் தன்னல மறுப்புடன் போராடினார்கள். சுதந்திரத்திற்காகவும், விவசாயிகளுக்கு நிலம் கோரியும், ஏகாதிபத்தியப் படுகொலையை எதிர்த்து சமாதானத்திற்காகவும் போராடினார்கள். அந்தப் படுகொலையைத் தொடர்ந்து நடத்தவும் அதைத் தீவிரப்படுத்தவும் வேண்டி ஆங்கில-பிரெஞ்சு ஏகாதிபத்திய முதலாளிகள் அரசபரிவாரச் சதிகளைத் தொடுத்தார்கள், காவற்படை அதிகாரிகளுடன் கூடிச் சதிபுரிந்தார்கள். குச்கோவ்களையும் மில்யுக்கோவ்களையும் தூண்டிவிட்டு ஊக்குவித்தார்கள், முழுமையான புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தார்கள். இவர்கள்தான் பாட்டாளி வர்க்கம் ஜாரிசத்தை எதிர்த்து முதல் தாக்குதலைத் தொடுத்ததும் உடனடியாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள்.
இந்த அரசாங்கம், தற்போதைய போரைப் பொருத்தவரை கோடி டாலர் “நிறுவனமான” “இங்கிலாந்து மற்றும் ஃபிரான்சின் கையாளாகவே இருந்து வந்துள்ளது. இதனுடன் அக்கம் பக்கமாக முக்கியமான, அதிகாரபூர்வமல்லாத இன்னும் வளர்ச்சி பெற்றிராத, ஒப்பளவில் பலவீனமான தொழிலாளர் அரசாங்கம் தோன்றியுள்ளது. அது பாட்டாளி வர்க்கத்தின், நகர்ப்புற மற்றும் நாட்டுப்புற மக்கள் தொகையின் எழைகள் பகுதி முழுமையின் நலன்களை வெளிப்படுத்துகிறது. இதுவே பெத்ரோகிராதில் உள்ள தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத் ஆகும்.

இத்தகைய படைப்பாளிகளின் சோவியத் விவசாயிகளுடனும், விவசாயத் தொழிலாளிகளுடனும் தொடர்பை நாடுகிறது. விவசாயிகளை விட மேலதிகமாக விவசாயத் தொழிலாளிகளிடம் குறிப்பாயும் முதன்மையாயும் தொடர்புகளை நாடுகிறது.

மெய்யான அரசியல் நிலைமை இத்தகையதே. இதை நாம் ஆகக்கூடுமான அளவு புறவயமான துல்லியத்துடன் முதலில் வரையறுக்க முயல வேண்டும். அதன் வழி, மார்க்சிய செயற்தந்திரங்கள் சாத்தியமான ஒரே உறுதியான அடித்தளம்- மெய்நடப்புகளின் அடித்தளம்- மீது நிறுவப்படலாம்.

ஜாரின் முடியாட்சி நொறுக்கப்பட்டது, ஆனால் இறுதியாக அழிக்கப்படவில்லை.” 4

                                தொழிலாளர்களின் பிரதிநிதிகளடங்கிய சோவியத்தின் கரு, மக்கள் தொகையின் பத்தில் ஒன்பது பேரின் நலனான சமாதானம், உணவு, சுதந்திரத்திற்காகப் பாடுபடுகிறது. ஆனால் இடைக்கால அரசால் இதனைச் செய்திட முடியாது. காரணம் அது ஒரு முதலாளித்துவ அரசு. உணவு இருக்கிறது,  அதைத்தர முடியும், ஆனால் மூலதனம் மற்றும் நிலவுடைமையின் புனிதத் தன்மையினை மதிக்காத முறைகளின் மூலம் மட்டுமே இது முடியும் என்பதால் வாய்ப்பில்லை. சுதந்திரத்தை வழங்க முடியாது. காரணம் அது ஒரு நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ அரசாகும். இதனை தெளிவுபடுத்திய லெனின், பாட்டாளி வர்க்கம் தமக்குரிய நேசசக்திகளை இணைத்து வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்கிறார். முதல் நேசசக்தி சிறு விவசாயிகள், இரண்டாவது போரிடும் நாடுகள் அனைத்தின் பாட்டாளி வர்க்கமுமாகும்.

“இந்த இரு நேசசக்திகளுடன் சேர்ந்து பாட்டாளி வர்க்கம் தான், இன்றைய மாறுதல் கட்ட நிலைமையின் பிரத்தியேகத் தன்மைகளைப் பயன்படுத்தி குச்கோல், மில்யுக்கோவ் அரை-முடியாட்சிக்குப்பதில் ஒரு ஜனநாயகக் குடியரசை அடைவதற்கு, நிலப்பிரபுக்களை எதிர்த்து விவசாயிகள் முழுவெற்றி பெறுவதற்கு முதலில் முன்செல்ல முடியும். சோஷலிசம் மட்டுமே போரால் சோர்வுற்ற மக்களுக்கு சமாதானம், உணவு மற்றும் சுதந்திரத்தை வழங்க முடியும்.” 5

புரட்சியின் விளைவாக ஜாரின் யதேச்சாதிகாரம் நீங்கியது. பேசுவதற்கும், அச்சகங்களை நடத்துவதற்கும், கூட்டங்கள் கூடுவதற்கும், சங்கங்கள்  அமைப்பதற்கும் அரசியல் சுதந்திரம் கிடைத்தது. இதனைப் பயன்படுத்தி போல்ஷிவிக்குகள் மக்களை மேலும் விழிப்படையச் செய்தனர்.

                இடைக்கால அரசு போரை தொடர்ந்து நடத்த முனைந்தது. அரசியல் சட்ட நிர்ணய சபையைக் கூட்டி அதில் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வுகாணலாம் என்று கூறியது. நடைமுறையில் இந்த இடைக்கால அரசு மக்களின் புரட்சிகர கோரிக்கைகளை புறக்கணித்தது. இந்த ஏமாற்று அரசுக்கு மென்ஷிவிக்குகளும், சோஷலிசப் புரட்சியாளர்களும் துணைபோயினர்.

                ரத்தம் சிந்திப் போராடி நடத்தப்பட்ட புரட்சியால் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்தப் பயனும் விளையவில்லை. நிலம் வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான எந்த முயற்சியும் நடக்கவில்லை. போரும் நின்றபாடில்லை, மக்களுக்கும் உணவு கிடைத்திடவில்லை. இடைக்கால அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்கத் தொடங்கினர்.  புரட்சியின் விளைவாகத் தோன்றிய இரட்டை ஆட்சி நீடிக்காது என்பது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது. 

       நாடு கடந்து வாழ்ந்து வந்த லெனின், 1917ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் பெத்ரோகிராத்திற்கு சென்றார். புரட்சிகர ருஷ்யா லெனினை உற்சாகத்துடன் வரவேற்றது.

       பின்லாந்து ரயில் நிலையத்தில் வந்திறங்கிய லெனினை வரவேற்க தொழிலாளர்களும் விவசாயிகளும் மக்களும் குழுமியிருந்தனர். தரைப்படை, கடற்படை வீரர்களின் புரட்சிகரப் பிரிவுகள், லெனினுக்கு ராணுவ மரியாதையை அளித்தன. கூடியிருந்த மக்களிடம் லெனின் உரை நிகழ்த்தினார்.

       பெத்ரோகிராத் வந்தடைந்த உடனே அடுத்த நடவடிக்கைகளில் இறங்கினார். ஏப்ரல் மாதம் 4ஆம் நாள் போல்ஷிவிக்குகளின் கூட்டத்தில், புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளைப் பற்றி ஆய்வுரை நிகழ்த்தினார். பெத்ரோகிராத் வருவதற்காக ரயிலில் பயணிக்கும்போது லெனின் இதனை எழுதினார். இந்த ஆய்வுரையை இரண்டு இடங்களில் நிகழ்த்தினார். போல்ஷிவிக்குகள் கூடியிருந்த கூட்டத்திலும், தவ்ரீதா மாளிகையில் போல்ஷிவிக்குகள் மற்றும் மென்ஷிவிக்குகள் சேர்ந்திருத்த கூட்டத்திலும் இவ்வுரையை நிகழ்த்தினார். இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் (1917ஆம் ஆண்டு எப்ரல் 4-5) என்ற தலைப்பில் இந்த ஆய்வுரை பிராவ்தாவில் ஏப்ரல் 7ஆம் நாள் வெளியிடப்பட்டது. இவையே பின்னால் ஏப்ரல் ஆய்வுரைகள் என்று புகழ்பெற்றது. இந்த ஆய்வுரையில் கூறிய கருத்தை விரிவாக்கி எழுதிய செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள் ( ஏப்ரல் 8-13), நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் (ஏப்ரல் 10) ஆகியவற்றை இணைத்து ஏப்ரல் ஆய்வுரைகளாக கூறுவது வழக்கம்.

                இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் என்ற கட்டுரையில் பத்து ஆய்வுரைகளை வைக்கிறார் லெனின்.

1) தற்போது ஏற்பட்ட புரட்சியில் தோன்றிய இடைக்கால அரசு, முதலாளித்துவத் தன்மை கொண்டதாக இருப்பதனால் கொள்ளைக்கார ஏகாதிபத்தியப் போராகவே தொடர்கிறது. இதன் காரணமாக “புரட்சிகரப் பாதுகாப்புவாதத்திற்கு” என்ற முழக்கத்தின் மூலம் இந்த இடைக்கால அரசை ஆதரிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறார். இந்தப் புரட்சிகரப் பாதுகாப்புவாதத்தில் நம்பிக்கை வைத்துள்ள மக்களின் நேர்மையைச் சந்தேகிக்க முடியாது என்றும் கூறுகிறார். அவர்களிடம், முதலாளித்துவ வர்க்கத்தின் வார்த்தைகளால் ஏமாற்றப்படுவதை, விடாப்பிடியாகவும், பொறுமையுடனும் விளக்கிக் கூற வேண்டுவது அவசியமானதாகும். மூலதனத்தை வீழ்த்தாமல் இந்தப் போரை நிறுத்தி சமாதானத்தை நிலைநாட்ட முடியாது.

“மூலதனத்தை வீழ்த்தாமல் இந்தப் போரை உண்மையிலேயே ஒரு ஜனநாயகப்பூர்வமான சமாதானத்தோடு, வன்முறையால் திணிக்கப்படாத ஒரு சமாதானத்தோடு முடித்துக் கொள்வது சாத்தியமல்ல என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.” 6

2, தற்போதைய புரட்சியின் முதல் கட்டத்தின் பிரத்தியேக நிலைமைகளை கூறுகிறார். பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வின் ஒழுங்கமைப்பு போதாமையினால், அதிகாரம் முதலாளித்துவ வர்க்கத்திடம் சென்று விட்டது. புரட்சியின் இரண்டாவது கட்டமாக ஆட்சி அதிகாரம் பாட்டாளி மற்றும் விவசாயிகளிடம் வந்தடைய வேண்டும்.

3) இடைக்கால அரசின் பிரமைகளை அம்பலப்படுத்த வேண்டும். இந்த அரசினுடைய வாக்குறுதிகளின் பித்தலாட்டங்களை தெளிவுபடுத்த வேண்டும்.

4)தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகளில் போல்ஷிவிக்குகள் சிறுபான்மையாகவே இருக்கின்றனர். மக்கள் சோஷலிஸ்டுகள் என்ற குட்டி முதலாளித்துவ கட்சியினர், பல்வேறு நரோத்னிக்கு குழுக்களையும் இணைத்து நிறுவிய சோஷலிஸ்ட்-புரட்சியாளர் கட்சியினர் போன்றோர்களே பெரும்பான்மை இடங்களில் அமர்ந்துள்ளனர். இவர்கள் இடைக்கால அரசை மறைமுகமாக ஆதரித்தனர். முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்குக்கு இவர்கள் பணிந்து கிடக்கின்றனர் என்பதை பாட்டாளி வர்க்கத்திடம் அம்பலப்படுத்த வேண்டும்.

5) தொழிலாளர்களின் பிரதிநிதிகளடங்கிய சோவியத் தோன்றிய பிறகு நாடாளுமன்றக் குடியரசுக்குத் திரும்புதல் என்பது பின்நோக்கிச் செல்வதாகும். தேர்வு செய்யப்படவும் எந்த நேரமும் திரும்பி அழைக்கப்படக் கூடியவர்களுமான  பிரதிநிதிகளடங்கிய, அடிமுதல் முடிவரை தொழிலாளர், விவசாயத் தொழிலாளர் ஆகியோர்களைக் கொண்ட சோவியத்துகளின் குடியரசு வேண்டும். இவர்களின் ஊதியம் ஒரு தொழிலாளியின் சாராசரி ஊதியத்தைவிடக் கூடுதலாக இருக்கக் கூடாது.

6) நாட்டில் உள்ள நிலம் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்படும். வட்டார சோவியத்துகள் நிலத்தை விநியோகிக்கும். பெரிய எஸ்டேட்டுகள் ஒவ்வொன்றிலும் மாதிரிப் பண்ணைகள் அமைக்கப்படும்.

7) நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளையும் உடனடியாக தனியொரு தேசிய வங்கியில் இணைத்தல்.

8)“சோஷலிசத்தைப் “புகுத்துவது” எமது உடனடிக் கடமை அல்ல, ஆனால் சமூக உற்பத்தியையும் பொருட்களின் விநியோகத்தையும் மட்டும் உடனடியாக தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகளின் கண்காணிப்புக்குள் கொண்டு வருவோம்”.

9) கட்சிக் காங்கிரசை கூட்டுவது, வேலைத்திட்டத்தை மாற்றுவது, பாரிஸ் கம்யூனை முன்மாதிரியாகக் கொண்ட அரசமைத்தல், மற்றும் கட்சியின் பெயரை மாற்றுவது.

10)  சமூக-தேசிய வெறியர்களையும், நடுநிலைவாதிகளையும் எதிர்க்கின்ற ஒரு புதிய அகிலம் உருவாக்குதல்.

இந்த பத்து ஆய்வுரைகளும் ஏப்ரல் மாதத்தில் 7ஆம் நாளில் பிராவ்தாவில் வெளிவந்ததன.

                ருஷ்யாவில் இரட்டை ஆட்சி ஏற்பட்டதின் சூழ்நிலைமையைப் பற்றி இரட்டை ஆட்சி என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை லெனின் எழுதினார். இது ஏப்ரல் மாதம் 9ஆம் நாளில் பிராவ்தாவில் வெளியிடப்பட்டது. இதில் தற்கால சூழ்நிலையைப் பற்றிய விளக்கம் கொடுத்து அடுத்தக்கட்ட போராட்டத்துக்கு லெனின் அழைப்புவிடுத்தார்.
               
                இந்த இரட்டை ஆட்சி என்கிற யதார்த்தத்தை முதலில் ஏற்றுப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.
:
“நமது புரட்சியின் மிகவும் குறிப்பிடத்தக்கதான இயல்பு என்னவென்றால் இது இரட்டை ஆட்சியைக் கொண்டுவந்திருக்கிறது என்பதே. இந்த உண்மையை முதலாவதாயும் முதன்மையாயும் கிரகித்துக் கொள்ள வேண்டும், இது புரிந்து கொள்ளப்படா விட்டால் நாம் முன்னேற முடியாது. பழைய “சூத்திரங்களை” உதாரணமாக போல்ஷிவிசத்தின் சூத்திரங்களை எவ்வாறு நிறைவு செய்வது, திருத்தம் செய்வது என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும். மொத்தத்தில் அவை சரியாகவே இருந்தன என்ற போதிலும் அவற்றின் ஸ்தூலமான செயலுருவம் வேறாக மாற்றம் அடைந்திருக்கிறது. ஓர் இரட்டை ஆட்சி குறித்து இதற்கு முன்னால் எவருமே நினைக்கவில்லை, அல்லது நினைத்திருக்கவும் முடியாது.” 7

                இதற்கு அடுத்து இரட்டை ஆட்சியின் தன்மையை விவரிக்கிறார். முதலாளித்துவ வர்க்கத்தின் அரசுக்குப் பக்கத்தில் தொழிலாளர் மற்றும் படைவீரர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட சோவியத் இருக்கிறது. இந்த சோவியத் பலவீனமாகவும், முளைப்பருவத்திலும் இருந்தாலும் உண்மையில் வளர்ந்து வருகிற ஓர் அரசாகும். இந்த அரசு கீழிருந்து மக்களின் நேரடியான முன்முயற்சியின் அடிப்படையில் அமைந்த புரட்சிகரமான சர்வாதிகாரமாகும். ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும் நடாளுமன்றத்தைப் போன்றதல்ல. இது பாரிஸ் கம்யூன் வழியில் வந்தது என்றும், அதன் தன்மைகளைத் தொகுத்தும் தருகிறார்.

“இந்த ஆட்சி 1871 பாரிஸ் கம்யூனுடையது போன்ற அதே மாதிரியானது. இந்த மாதிரியின் அடிப்படை குணாம்சங்களாவன,

1) ஆட்சியின் மூலாதாரம் முன்னதாக விவாதிக்கப்பட்டு நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டதான ஒரு சட்டம் அல்ல, மாறாக கீழிருந்து அந்தந்த இடங்களில் மக்கள் மேற்கொண்டதன் நேரடி முன்முயற்சி, நடப்புத் தொடரைப் பயன்படுத்திக் கூறினால் நேரடிப் “பற்றுகை”,

2) மக்களிடமிருந்து விலகி நின்று மக்களுக்கு எதிராக இயக்கப்படும் அமைப்புகளான போலீசையும், ராணுவத்தையும் அகற்றி அதற்குப் பதில் மக்கள் அனைவரையும் நேரடி ஆயுதமேந்தச் செய்தல், இத்தகைய ஆட்சியின் கீழ் உள்ள அரசில் ஒழுங்கமைதியை ஆயுதமேந்திய தொழிலாளர்களும் விவசாயிகளும் தாமாகவே ஆயுதமேந்திய மக்களும் கட்டிக் காப்பார்கள்,

3) பணித்துறையாளர், அதிகார வர்க்கத்தார் இதே போன்று மக்கள் தாமாகவே நடத்தும் நேரடி ஆட்சியால் மாற்றீடு செய்யப்படுவர் அல்லது குறைந்தபட்சம் தனிப்பட்ட கண்காணிப்பின் கீழ் வைக்கப்படுவர், அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பணித்துறையாளர்கள் ஆவது மட்டும் அல்ல, ஆனால் மக்களின் முதல் கோரிக்கையின் பேரில் திருப்பி அழைக்கப்படுவதற்கும் உட்பட்டோராவர், அவர்கள் சாமான்ய இயக்கிகள் நிலைக்குத் தாழ்த்தப்படுவர், உயர்ந்த முதலாளித்துவ விகிதத்தில் ஊதியம் பெறும் “தொழில்களை” வைத்திருக்கும் தனிச்சலுகை பெற்ற குழு என்பதிலிருந்து தாழ்த்தப்பட்டு, அவர்கள் “சேவைத் துறையின்” விசேஷ “பிரிவின்” ஊழியர்களாவர், அவர்களது ஊதியம் ஒரு திறம்படைத்த தொழிலாளியின் சாமான்ய சம்பளத்தைவிட அதிகமாக இருக்காது.”8

                சோவியத்தின் தனிமாதிரியான அரசை இவ்வாறு லெனின் விளக்கியிருக்கிறார். இடைக்கால அரசு உடனடியாக வீழ்த்தப்பட வேண்டுமா? என்ற கேள்வியை அவரே எழுப்பி அதற்கு பதிலளிக்கிறார்.

“இடைக்கால அரசாங்கம் உடனடியாக வீழ்த்தப்பட வேண்டுமா? என்ற கேள்வியை “அப்படியே” முன்வைக்கும் போது, நமது தோழர்களும் கூட ஏன் இத்தனை பல தவறுகளைச் செய்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிய வரும்.

இதற்கு எனது விடை:
1) அது வீழ்த்தப்பட வேண்டும், காரணம் அது ஒரு சிலராட்சி, முதலாளித்துவ அரசாங்கம், மக்கள் அரசாங்கமல்ல, மேலும் அதனால் சமாதானம், உணவு அல்லது முழு சுதந்திரத்தை வழங்க முடியவில்லை.

2) அதை இந்தக் கணத்தில் வீழ்த்த முடியாது. ஏனெனில் அது, தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகளுடன், முதன்மையாயும் பிரதான சோவியத்தான பெத்ரோகிராத் சோவியத்துடன் நேரடியாயும் நேரடியின்றியும், ஒரு சகஜமான மற்றும் மெய்யான உடன்பாட்டின் மூலம் அதிகாரத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

3) பொதுவாக அதை சாதாரண வழியில் “வீழ்த்த” முடியாது, காரணம் அது இரண்டாவது அரசு – தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்- முதலாளித்துவ வர்க்கத்திற்கு அளிக்கும் “ஆதரவின்” மீது நிற்கிறது.” 9

                இறுதியாக லெனின் கூறுகிறார், குட்டி முதலாளித்துவ பிரமைகளுக்கு எதிராக, தேசியவெறிக்கு எதிராக, சொற்ஜாலம் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தை சார்ந்து இருப்பதற்கு எதிரான போராட்டத்தை நடத்துவோம். பாட்டாளி வர்க்க இயல்புடைய கம்யூனிஸ்ட் கட்சியைக் கொண்டு முறியடிப்போம். பாட்டாளி வர்க்கப் பணிகளுக்காக அணிகளை ஒன்றுதிரட்டி போராடுவோம். குட்டி முதலாளித்துவ மயக்கங்களில் இருப்பவர்களின் மனங்களில் தெளிவு ஏற்படுத்தப் போராடுவோம், முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கில் இருப்பவர்களிடம், நமது வர்க்க நலனுக்கு உகந்த அரசாக செயற்படாத இடைக்கால அரசை அப்பலப்படுத்துவோம். இவ்வரசு சமாதானம், உணவு அல்லது முழு சுதந்திரம் வழங்காததை மக்களுக்கு சுட்டிக்காட்டி விழிப்படையச் செய்வோம்.

ஏப்ரல் மாதத்தில் எழுதிய கட்டுரைகளில் செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள் அதிக விவரங்களைக் கொண்டுள்ளது. நிதானமாகவும், முழுமையாகவும் இதனைப் படிக்க வேண்டும்.

நமது போதனை செயலுக்கு வழிகாட்டியே அன்றி வறட்டுச் சூத்திரம் அல்ல என்று மார்க்சும் எங்கெல்சும் கூறியதை வலியுறுத்தி லெனின் கூறுகிறார்

“இந்தச் சூத்திரங்கள் அதிகபட்சமாகச் சொன்னால் பொதுவான கடமைகளை வரையறுக்க மட்டுமே முடியும், இந்தப் பொதுவான கடமைகள் சரித்திர இயக்கப் போக்கின் குறிப்பிட்ட ஒவ்வொரு காலப்பகுதிக்கும் உரிய ஸ்தூலமான பொருளாதார அரசியல் நிலைமைகளால் அவசியம் மாற்றப்படவே செய்யும்” 10

மார்க்சியப் பகுப்பாய்வைப் பற்றி முதலிலேயே லெனின் சொல்லிவிடுகிறார்.

“வர்க்கங்களுக்கு இடையிலான பரஸ்பர உறவுகளையும் ஒவ்வொரு வரலாற்று நிலைமைக்கும் தனிச்சிறப்பாயுள்ள ஸ்தூலமான இயல்புகளையும் பற்றிக் கறாராகத் துல்லியமான எதார்த்த வழியில் சரிபார்க்கத்தக்க பகுப்பாய்வு செய்யுமாறு மார்க்சியம் கோருகிறது.11

இதன் அடிப்படையில், ருஷ்யாவின் ஸ்தூலாமான இந்த இரட்டை ஆட்சி நிலைபெற்றிருப்பதை மனதில் கொண்டே நமது செயற்பாட்டை வகுத்துக் கொள்ள  வேண்டும். பிப்ரவரிப் புரட்சிக்கு முன்பு பிரபுத்துவ நிலச்சுவான்கள் கையில் அரசு இருந்தது. புரட்சியின் போது வேறு வர்க்கமாகிய முதலாளித்துவ வர்க்கத்தின் கைக்கு மாறியுள்ளது. இந்த அளவுக்கு, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி ருஷ்யாவில் முடிந்து முற்றுப் பெற்றுள்ளது என்பதை கூறுகிறார். இந்தக் கூற்றை நிறுவுவதே ஏப்ரல் கட்டுரைகளின் பணியாகும்.

“1917ஆம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் புரட்சிக்கு முன்பு ருஷ்யாவின் அரசு அதிகாரம் பழைய வர்க்கத்தின் கையில், அதாவது நிக்கொலாய் ரொமானவ் தலைமை தாங்கிய பிரபுத்துவ நிலச்சுவான்தார்கள் கையில் இருந்தது.

இப்புரட்சிக்குப் பிறகு அதிகாரம் வேறு ஒரு வர்க்கத்தின், ஒரு புதிய வர்க்கத்தின், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் கையில் இருக்கிறது.

இரண்டு வகையிலும், சரியான விஞ்ஞான அர்த்தத்திலும், நடைமுறை அரசியல் அர்த்தத்திலும், அரசு அதிகாரம் ஒரு வர்க்கத்தின் கையிலிருந்து மற்றொன்றுக்கு வந்து சேருவது தான் புரட்சியின் முதற் பெரும் அடிப்படை அறிகுறி.

இந்த அளவுக்கு, முதலாளித்துவ அல்லது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி ருஷ்யாவில் முடிந்து முற்றுப் பெற்றுவிட்டது.”12

லெனினது இந்த முடிவை ஏற்காமல், சில போல்ஷிவிக்குகள் ஆட்சேபித்தனர். இவர்கள் பழைய போக்கையே பிடித்துக் கொண்டிருக்கிறபடியால் இவர்களை பழைய போல்ஷிவிக்குகள் என்கிறார் லெனின். பாட்டாளி, விவசாயி ஆகிய வர்க்கங்களின் ஜனநாயக சர்வாதிகாரத்தின் மூலமாகத்தான் முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றிட முடியும் என்றுதானே இதுவரை சொல்லி வந்துள்ளோம். அது இன்னும் தொடங்கக்கூட இல்லை. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முற்றுப் பெற்றுவிட்டதா? என்பதே இவர்களின் ஆட்சேபம்.

இதற்கு பதிலாக லெனின்:-
“போல்ஷிவிக்கு முழக்கங்களும் கருத்துகளும் பொதுப்படையாய் வரலாறு முற்றிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் ஸ்தூலமான விவகாரங்கள் வேறு விதமாக உருவாகியுள்ளன, அவை யாரும் எதிர்ப்பாத்திருக்கக் கூடிய அளவுக்கு மேலாகத் தனிமாதிரியாகவும், சிறப்பாகவும் பலவாறாகவும் உருவாகியுள்ளன.

இந்த உண்மையைப் புறக்கணிப்பது அல்லது பார்க்கத் தவறுவது என்பதற்கு பொருள், புதிய உயிர்ப்புள்ள எதார்த்தத்தின் பிரத்தியேக இயல்புகளைப் பயில்வதற்குப் பதிலாகப் பொருள் விளங்காமல் மனப்பாடம் செய்து கொண்ட சூத்திரத்தை திருப்பிச் சொல்லி, நம் கட்சியின் வரலாற்றில் ஏற்கெனவே ஒரு தடமைக்கு மேலாகவே எவ்வளவோ வருந்தத்தக்க பாத்திரம் வகித்த அந்தப் “பழைய போல்ஷிவிக்குகளைப்” பின்பற்றிச் செல்வதேயாகும்.” 13

                மாறிய சூழ்நிலைக்கு ஏற்ப செயற்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். நேற்றைய (பழைய) முடிவுகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது. மாறிய சூழ்நிலைக்கு ஏற்ப செயற்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்திடவில்லை என்றால் உயிர்ப்புள்ள மார்க்சியத்தை உயிரற்ற எழுத்துகளுக்கு பலியிடுவதாகிவிடும்.

“ஒரு மார்க்சியவாதி உண்மையான வாழ்க்கையை, எதார்த்தத்தின் உண்மையான நிலவரங்களைக் கண்டுணர்ந்து கொள்ள வேண்டும், நேற்றைய கோட்பாட்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது (not cling to a theory of yesterday). அது எல்லாக் கோட்பாடுகளையும் போல் அதிகபட்சமாக போனால் பிரதானமானதையும் பொதுவானதையும் மட்டுமே குறிக்கக் கூடியது, வாழ்க்கையை அதன் எல்லாச் சிக்கலோடும் முழுமையாய்க் காட்டும் நிலையை நெருங்குவதோடு நின்றுகொள்வது- என்கிற மறுக்க முடியாத உண்மையைப் புரிந்து கொள்வதன் அவசியத்தை இங்கு வலியுறுத்துவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
..
பூர்ஷ்வாப் புரட்சியின் “நிறைவேற்றம்” என்கிற பிரச்சினையைப் பழைய வழியிலே அணுகுவதானது உயிர்ப்புள்ள மார்க்சியத்தை உயிரற்ற எழுத்துக்குப் பலியிடுவதாகும்.” 14

                ஒரு ஸ்தூலமான இடத்திற்கு கூறியதை மற்றொரு பொருந்தாத எதார்த்தத்திற்கு பொருத்தக் கூடாது. மார்க்சியத்தைப் பொறுத்தளவில் கோட்பாடு (theory) என்பது ஒரு ஸ்தூலமான நிலைமைக்கு எடுக்கப்பட்ட முடிவாகும். கோட்பாடு (theory) என்பது அந்தந்த காலத்திற்கு உரிய நடைமுறையை (practice) வகுத்தளிக்கிறது. சமூக வளர்ச்சியோடு ஏற்படும் மாற்றத்தோடு கோட்பாட்டையும் (theory) மாற்ற வேண்டும். புதிய நிலைமைக்கு பொருந்தாத பழையக் கோட்பாட்டை பிடித்துத் தொங்கக்கூடாது.

                எதார்த்தத்தை புரிந்து கொண்டு நடவடிக்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். மிகமிக சுயமான புதிதான, முன்னெப்போதும் கண்டிராதபடி ஒரே நேரத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியான இடைக்கால அரசும், பட்டாளி - விவசாயிகளின் சோவியத்தும் அக்கம் பக்கமாக இருக்கின்றன. இத்தகைய இரட்டை ஆட்சி முறையை ருஷ்யா மட்டுமல்ல எந்த நாடும் கண்டதில்லை.

தொழிலாளர்களின் சோவியத்தின் மீது இடைக்கால அரசு தாக்குதல் தொடுக்கவில்லை, தொடுக்கவும் முடியாது. காரணம் அந்த அரசாங்கத்திடம் போலீஸ், ராணுவம் இல்லை. மக்களுக்கு மேல்நிலையில் நிற்கும் பலம் பொருந்திய அதிகார வர்க்கம் இல்லை. இந்த நிலையை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

                ருஷ்யப் புரட்சியை உடனடியாக, சோஷலிசப் புரட்சியாக மாற்ற வேண்டும் என்று தான் திட்டமிடவில்லை என்றும், தமது ஏப்ரல் ஆய்வுரை ஏட்டில் “சோஷலிசத்தைப் புகுத்துவது” எமது உடனடிக் கடமை அல்ல, ஆனால் சமூக உற்பத்தியையும் பொருட்களின் விநியோகத்தையும் மட்டும் உடனடியாக தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகளின் கண்காணிப்புக்குள் கொண்டு வருவோம்” என்று கூறியதை லெனின் நினைவுபடுத்துகிறார். அங்கு கூறப்பட்ட உற்பத்தி விநியோகத்தை இந்தக் கட்டுரையில் சற்று விரிவாக்கி எழுதியுள்ளார்.

“அதிக அளவில் தானியம் உற்பத்தி செய்தல், அதைத் திறம்பட விநியோகித்தல், படைவீரர்களுக்குத் திறம்படக் கிடைக்கச் செய்தல் முதலான கடினமான நடைமுறைப் பிரச்சினைகளுக்கு அதிகாரிகளைக் காட்டிலும், போலீசைக் காட்டிலும் தொழிலாளர்கள், படைவீரர்கள், விவசாயிகள் சிறந்த முறையில் தீர்வு காண்பார்கள்- இந்த ஒன்றின் மீது மட்டுமே, முழுக்க முழுக்க இதன்மீதுதான் நான் “திட்டமிடுகிறேன்”” 15

                இதனைப் பாராளுமன்ற குடியரசைக் காட்டிலும் சோவித்துகள் விரைவாகவும் பயனுள்ள முறையிலும் செய்திட முடியும். இந்த முடிவு விருப்பம் சார்ந்த முடிவு கிடையாது. இந்த நடவடிக்கைகளை எடுக்கும்படி சூழ்நிலைமைகளே கட்டாயப்படுத்துகின்றன. “பஞ்சம், பொருளாதாரச் சீர்குலைவு, நெருங்கிவரும் தகர்வு, போரின் பயங்கர விளைவுகள், போரால் மனிதகுலத்துக்கு ஏற்படும் பயங்கர கொடுமைகள்,” இவைகளே இன்றைய புரட்சியை, சோஷலிசப் புரட்சியை நோக்கி இட்டுச் செல்வதாக லெனின் இக் கட்டுரையிரையில் வலியுறுத்துகிறார்.


நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் (படைப்பு)

நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் என்ற இக்கட்டுரை ஏப்ரலில் நடக்க இருக்கும் ருஷ்ய சமூக-ஜனநாயக தொழிலாளர் கட்சியின் (போல்ஷிவிக்) ஏழாவது அகில ருஷ்ய மாநாட்டிற்கு எழுதிய நகல் அறிக்கையாகும்.

நிலப்பிரபுக்களின் எதேச்சதிகார ஜார் அரசு நீக்கப்பட்டு, முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவப் போக்குடைய நிலவுடைமையாளர்களின் கைக்கு அரசு மாறிய வகையில், ருஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முழுமை அடைந்து விட்டது என்று இந்த அறிக்கையின் முதல் பக்கத்திலேயே லெனின் கூறிவிடுகிறார்.

“ருஷ்யாவில் அரசு அதிகாரம் புதிய வர்க்கத்தின், அதாவது முதலாளித்துவ வர்க்கம் மற்றும் முதலாளித்துவப் போக்குள்ள நிலவுடைமையாளர் கைகளுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இந்த அளவுக்கு ருஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முழுமையடைந்துவிட்டது” 16

                ஆனால் இந்த புதிய முதலாளித்துவ ஆட்சி, முடியாட்சிவாதிகளுடன் ஒரு கூட்டை நிறுவியுள்ளது. புரட்சிகரத் தொடர்களின் திரையின் பின்னே இந்த அரசாங்கம் பழைய ஆட்சியின் சார்பாளர்களை முக்கியப் பதவிகளில் நியமித்துள்ளது. புதிய அரசின் சீர்திருத்தங்கள் மிகவும் குறைவானதாகவே இருக்கிறது. அரசியல் நிர்ணய சபை அமைப்பதற்கான நாளைக்கூட முடிவு செய்யாமல் அறிவிப்போடு நிற்கிறது. அதனால் இந்த அரசு பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவைப் பெறத் தகுதியானதல்ல என்பதை நடைபெற்றுள்ள புரட்சியின் வர்க்கத் தன்மை என்ற உட்தலைப்பில் லெனின்  விவரிக்கிறார்.

                புதிய அரசின் அயல்துறைக் கொள்கையும் இதனடிப்படையில் தான் அமைந்துள்ளது. அதனால்தான் ஏகாதிபத்தியப் போரை தொடர்ந்து நடத்துவதாகவே உள்ளது. இந்த அரசின் மீது மக்கள் சிறிதும் நம்பிக்கை வைப்பதற்கு அருகதையற்றதாகிறது.

                அடுத்து, இரட்டை ஆட்சியின் பிரத்தியேக இயல்பும் அதன் வர்க்க முக்கியத்துவமும் பற்றி பேசுகிறார். இன்றைய புரட்சி ருஷ்யாவில் இரட்டை ஆட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று முதலாளித்துவ இடைக்கால அரசு மற்றொன்று தொழிலாளர் மற்றும் படைவீரர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அதற்கு இணையான சோவியத் வடிவிலான ஒரு அரசு. இந்த அரசிற்கு அதிகார அமைப்புகள் எதுவும் இல்லை, ஆனால் நேரடியான மக்களின் பெரும்பான்மையைப் பெற்றுள்ள, ஆயுதம் ஏந்திய தொழிலாளர் படைகளையும் கொண்டுள்ளது.

                இப்படி இரட்டை வர்க்கத்தின் ஆட்சி பிணைப்புற்று நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியாது என்பது சந்தேகத்துக்கு இடமேயில்லை.  இவற்றில் ஒன்று மறைந்தாக வேண்டும். முதலாளித்துவ இடைக்கால அரசு மக்களின் சோவியத்தை பலவீனப்படுத்த தன்னாலான அனைத்தையும் செய்துவருகிறது. இந்த மாறிவரும் கட்டத்தைப் பற்றி கூறுகிறார் லெனின்:-
“சாதாரண முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சிக்கு அப்பால் சென்று ஆனால் பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயி மக்களின் சுத்தமான சர்வாதிகாரத்தை இன்னும் எட்டியிராத பொழுதில் புரட்சியின் வளர்ச்சியில் ஒரு மாறிவரும் கட்டமாய் இருக்கிறது இந்த இரட்டை ஆட்சி”17

                இந்த அடிப்படையில்தான், இந்தப் பிரத்யேகத் தன்மைக்கு ஏற்றப்படியான செயற்தந்திரத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த செயற்தந்திரம் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும்.

“நமது பணி விமர்சனப் பணியாக இருத்தல் வேண்டும். குட்டிமுதலாளித்துவ சோஷலிஸ்டு-புரட்சியாளரின் மற்றும் சமூக-ஜனநாயகக் கட்சிகளின் தவறுகளை விளக்குவதாக இருத்தல் வேண்டும். உணர்வு பூர்வமான பாட்டாளி வர்க்க, கம்யூனிஸ்டுக் கட்சி சக்திகளைத் தயாரித்து சீராக இணைப்பதாக இருத்தல் வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் “பொதுவான” குட்டிமுதலாளித்துவ போதை மயக்கத்தைப் போக்கிக் குணப்படுத்துவதாக இருத்தல் வேண்டும்.

இது பிரச்சாரப் பணி “மட்டுமே” என்று தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இது மிகப்பெரும் நடைமுறைப் புரட்சிகரப் பணியாகும். ஏனெனில் நிலைத்து நின்றுவிட்ட புரட்சி முன்னேற வழியில்லை.” 18

                புரட்சி தொடராமல் போனதற்கான முட்டுக்கட்டை வெளிக்காரணங்களால் ஏற்பட்டதல்ல, முதலாளித்துவ வர்க்கத்தின் வன்முறையும் காரணமல்ல, இவர்களின் மீதான மக்களின் நியாமற்ற நம்பிக்கையே காரணமாகும் என்கிறார் லெனின். அவர்களின் வர்க்கச் சார்பை புரிந்து இந்த போக்கில் இருந்து விடுபட வேண்டும். குட்டிமுதலாளித்துவத் தலைவர்கள் இடைக்கால அரசை நம்பும்படி போதிக்கின்றனர். முதலாளிகளை நம்பக் கூடாது என்று பாட்டாளிகளுக்கு சமூக பொருளாதாரக் காரணங்களைக் கொண்டு விளக்க வேண்டும்.

“.. நாளுக்கு நாள் நம்பிக்கையுள்ள நியாயமின்மையும், நியாயமில்லாத நம்பிக்கையும் விஷேசமாயும் பாட்டாளிகள் மற்றும் ஏழ்மை மிக்க விவசாயிகளிடையே வீழ்ச்சி அடையும். முதலாளிகளை நம்பக் கூடாது என்று அவர்களுக்கு அனுபவம் (அவர்களது சமூக, பொருளாதார நிலை) போதிக்கிறது.”19

                ஏகாதிபத்திய போரிலிருந்து ருஷ்யாவை காப்பதற்காக, முதலாளித்துவ இடைக்கால அரசை காப்பது என்கிற “பாதுகாப்புவாதம்” பற்றி லெனின் எழுதுகிறார்.

                பாதுகாப்பு வாதத்தில் நம்பிக்கையுள்ள அணியினர், சாதாரண மனிதனைப் போன்று எளிய முறையில் இதனை நோக்குகின்றனர். பிரதேசக் கைப்பற்றல்களை விரும்பாதவன், ஆனால் ஜெர்மனி நம்மை தாக்கும் போது, நாட்டைக் காப்பது என்பது ஏகாதிபத்தியத்தின் நலன்களின் அடிப்படையிலானது கிடையாது என்கின்றனர். இந்த குட்டிமுதலாளித்துவ கண்ணோட்டம், புரட்சியின் மேற்பட்ட முன்னேற்றத்துக்கும் இறுதி வெற்றிக்கும் படுமோசமாக விரோதமானதாகும்.

“புரட்சிகரப் பாதுகாப்புவாதம் என்பது ஒரு புறத்தில் முதலாளித்துவ வர்க்கத்தால் மக்கள்திரள் ஏமாற்றப்படுவதன் விளைவாகும், விவசாயி மக்கள் மற்றும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினரிடம் நிலவும் நியாயமில்லாத நம்பிக்கையின் விளைவாகும். மறுபுறத்தில் இது சிறு உடைமையாளரின் நலன்கள் மற்றும் கருத்து நிலையின் ஒரு வெளியீடாகும்.” 20

                காலகாலமாக இருந்து வருகிற தப்பெண்ணங்களின் தொடர்ச்சியே பெரும்பாலும் இத்தகைய நம்பிக்கைக்கு காரணமாகிறது. அதனால் இந்த நம்பிக்கைகளின் தவறை மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்குரிய திறமைகள் போல்ஷிவிக்குகளுக்குத் தேவைப்படுகிறது. தவறுகள் நேராமல் இதனை உடனடியாகச் செய்வது எளிதானதல்ல என்பதையும் லெனின் சுட்டுகிறார்.

முதலாளித்துவ வளர்ச்சியில் ஏகாதிபத்தியக் கட்டத்தின் உள்முரண்பாட்டால் போர் தோன்றியது. இது ஏகாதிபத்தியவாதிகளின் சித்தத்தில் தோன்றியது கிடையாது. மூலதனத்தின் அதிகாரத்தை வீழ்த்தாமல், அரசு அதிகாரத்தை பாட்டாளி வர்க்கம் கையில் எடுத்துக் கொள்ளாமல், போரில் இருந்து விடுபட முடியாது.

“கொடுங்கொள்ளைக்கார முதலாளிகளினுடைய நலன்களுக்காக மட்டுமே போர் நடத்தப்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை, அதனால் செல்வம் குவிப்போர் அவர்கள் மாத்திரமே என்ற போதிலும் போர் அவர்களின் தீய சித்தத்தின் விளைவு அல்ல. இந்தப் போர் உலக முதலாளித்துவத்தின் அரை நூற்றாண்டுக் கால வளர்ச்சி மற்றும் அதன் லட்சக்கணக்கான இழைகளினுடைய தொடர்புகளின் விளைவாகும். மூலதனத்தின் ஆட்சி அதிகாரத்தை வீழ்த்தாமல், அரசு அதிகாரத்தை இன்னொரு வர்க்கமான பாட்டாளி வர்க்கத்துக்கு மாற்றி அளிக்காமல் ஏகாதிபத்தியப் போரிலிருந்து வெளியேறி ஒரு ஜனநாயகமான பலவந்தமில்லாத சமாதானத்தை அடைவது சாத்தியமல்ல.” 21

                ருஷ்ய புரட்சியின் இக் கட்டத்தில் காணப்படும் இந்த நிலைமைகளை அறிந்து கொள்ளாமல், ருஷ்யாவின் சோஷலிசப் புரட்சியைப் பற்றி லெனின் குறிப்பிடுகின்றவைகளை புரிந்து கொள்ளமுடியாது. அனைத்து நிலத்தையும் தேசவுடைமையாக்க வேண்டும் என்பது போன்ற மக்களின் சோஷலிசக் கோரிக்கையை, இரட்டை ஆட்சியில் ஒன்றான முதலாளித்துவ வர்க்கம் மற்றும் நிலப்பிரபுத்துவ இடைக்கால அரசால் நிறைவேற்ற முடியாது.

இரட்டை ஆட்சியில் ஒருபக்கம் சோவியத்தை வைத்துக் கொண்டு, மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதில் மார்க்சிய வளர்ச்சி பற்றிய வறட்டுக் கண்ணோட்டத்தின் படி முதலாளித்துவ ஜனநாயகப்புரட்சிக்குப் பிறகு சோஷலிசப் புரட்சி என்று பேசிக் கொண்டிருப்பது, ருஷ்ய எதார்த்த சூழலுக்கு எதிரான போக்காகும்.  பழைய தப்பெண்ணங்களில் வீழ்ந்துகிடக்கும் பிளாகானவ், காவுத்ஸ்கி போன்ற போலி மார்க்சியவாதிகளிடம் இருந்து விடுபட வேண்டும் என்று லெனின் வலியுறுத்துகிறார். இது பற்றி அடுத்த உட்தலைபான நமது புரட்சியிலிருந்து ஒரு புது மாதிரியான அரசு தோற்றமளிக்கிறது என்பதில் விவரிக்கிறார்.

“பொருளாதார வீழ்ச்சியும் போரினால் ஏற்பட்டதான நெருக்கடியும் எந்தளவு அதிக ஆழமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆக முழுநிறைவான அரசியல் வடிவத்தின் தேவையும் அதிக அவசரமானதாகி விட்டது. இது போர் மூலம் மனிதகுலத்தின் மீது சுமத்தப்பட்ட பயங்கரமான காயங்களை ஆற்றுவதற்கு நிச்சயம் துணை செய்யும். ருஷ்ய மக்களின் ஒழுங்கமைப்பு அனுபவம் எந்த அளவுக்குக் குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு உறுதியுடன் முதலாளித்துவ அரசியல்வாதிகளின் “நல்ல நிலையிலுள்ள” அதிகார வர்க்கத்தார் மூலம் மட்டும் அன்றி, மக்கள் தமக்குத் தாமே ஒழுங்கமைப்பை வளர்த்துக் கொள்ளுவதை செயலூக்கத்துடன் துவக்க வேண்டும்.

போலி மார்க்சியத்தின், பிளாகானவ் காவுத்ஸ்கி வகையறாக்களால் புரட்டப்பட்டதான மார்க்சியத்தின் பழைய தப்பெண்ணங்களை எவ்வளவு விரைவாக நாம் விட்டொழிக்கிறோமோ, அந்த அளவுக்கு அதிகச் செயலூக்கத்துடன் மக்கள் எல்லா இடங்களிலும் உடனடியாகவும் தொழிலாளர் விவசாயிகள் பிரதிநிதிகள் சோவியத்துகளை ஒழுங்கமைப்பதற்கு நாம் உதவி புரிய ஏற்பாடு செய்கிறோமோ- அந்த சோவியத்துகள் வாழ்க்கை முழுவதையும் தமதுகண்காணிப்புக்குள் மேற்கொள்ளலாம்- லுவோவ் வகையறாக்கள் அரசியல் நிர்ணய சபையைக் கூட்டுவதற்கு எந்தளவு அதிகத் தாமதம் செய்கிறார்களோ, அந்த அளவுக்கு மக்கள் தொழிலாளர் விவசாயிகள் பிரதிநிகளின் சோவியத்துகளின் குடியரசுக்குச் சாதகமாக முடிவு எடுப்பது எளிதாகும்.
..
நாம் நம்மையே ஒழுங்கமைத்துக் கொண்டு, நமது பிரசாரத்தைத் திறம்படச் செய்வோமானால், பாட்டாளிகள்  மட்டுமின்றி விவசாயி மக்களில் பத்தில் ஒன்பது பங்கினர் போலீஸ் மீண்டும் நிலைநாட்டப்படுவதை எதிர்ப்பார்கள். நீக்கம் செய்ய முடியாத தனியுரிமையுள்ள அதிகாரவர்க்கத்தையும், மக்களிடமிருந்து விலகி நிற்கும் ராணுவத்தையும் எதிர்ப்பார்கள். புதிய மாதிரியான அரசை ஆதரித்து நிற்பது இவற்றை குறித்தே.” 22


                இதற்கு அடுத்து, நிலம் மற்றும் தேசிய வேலைத்திட்டத்தைப் பற்றி பேசுகிறார். பாட்டாளி வர்க்கக் கட்சி உடனடியாக விவசாயிகளின் நலன்களுக்கு உகந்த ஒரு வேலைத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். எல்லா நிலமும் தேசவுடைமையாக்கப்பட வேண்டும், அதாவது நாட்டில் உள்ள நிலம் அனைத்தும் மைய அரசு அதிகாரத்தின் உடைமையாக்கப்பட வேண்டும்.

                தேசியத் திட்டத்தில், தேசிய இனப்பிரச்சினையைப் பற்றி பேசுகிறார். ஜாராட்சியால் ஒடுக்கப்பட்ட, அரசின் எல்லைக்குள் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள அனைத்து தேசங்களுக்கும் மக்களினங்களுக்கும் பிரிந்து போவதற்கான முழுசுதந்திரத்தை அறிவித்து அதனை உடனடியாக நிறைவேற்றுவதையும் ஆதரிக்க வேண்டும். இதற்கான காரணத்தை லெனின் கூறுகிறார்:-
“பிரிந்து போகும் உரிமையின் நடைமுறை நிறைவேற்றத்துடன் இணைக்கப் படாத, பிரதேசக் கைப்பற்றல்களைக் கைவிடுவது பற்றிய எல்லா அறிவுப்புகளும் பிரகடனங்களும் அறிக்கைகளும் மக்கள் மீது முதலாளித்துவத் தன்மையான ஏய்ப்புக்களே அல்லது குட்டிமுதலாளித்துவத் தன்மையானதே.

பாட்டாளி வர்க்கக் கட்சி எவ்வளவு பெரிதாக முடியுமோ அவ்வளவு பெரிதான ஓர் அரசை உருவாக்கவே முயல்கிறது. காரணம் இது உழைக்கும் மக்களுக்குச் சாதகமானது. இது தேசங்களை ஒன்றுக்கொன்று மேலும் நெருக்கமாக இணையச் செய்கிறது, அவை வருங்காலத்தில் முற்றிலும் இணையும்படி செய்கிறது, ஆனால் இந்த நோக்கத்தை வன்முறை மூலம் அடைவதற்கு அது விரும்பவில்லை மாறாக, அனைத்து தேசங்களின் தொழிலாளர் மற்றும் உழைக்கும் மக்களின் சுதந்திரமான சகோதர ஒன்றியம் மூலம் மட்டுமே அடைய விரும்புகிறது.
..
முழுமையான பிரிந்து போகும் சுதந்திரம், ஆக விரிவான ஸ்தல (மற்றும் தேசிய) சுயாட்சி, தேசியச் சிறுபான்மையினர் உரிமைகளுக்கு விரிவான உத்தரவாதம்- இதுவே புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் வேலைத்திட்டம்.” 23

                பாட்டாளி வர்க்கத்தினுடைய கட்சியின் வேலைத்திட்டத்தில் சுயநிர்ணய உரிமையை சுருக்கமாகவும் தெளிவாகவும் லெனின் முன்வைத்துள்ளார். பிரிதலை மறுக்கவும் இல்லை அதே நேரத்தில் இந்தப் பிரிதல் பின்னாளைய இணைவுக்காகவே என்பதையும் தெளிவுப்படுத்தப்படுகிறது. அதனால் இங்கே குட்டி முதலாளித்துவ கோட்பாடான “தேசிய-கலாசார தன்னாட்சி”யை ஏற்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எந்த விலை கொடுக்க நேர்ந்தாலும் சிறிய இனங்கள் அப்படியே என்றென்றும் இருந்தாக வேண்டும் என்பது சர்வதேசியவாதமல்ல.

                லெனின் ருஷ்யாவில் சோஷலிசத்தை உடனடியாகப் புகுத்துகிறார் என்கிற குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் கூறுகிறார்.

“சோஷலிஸ்டுப் புரட்சியின் அவசியத்தை மக்கள் தொகையின் மிகப் பெரிய பெரும்பான்மை தெளிவாக உணராத காலம் வரையில், ஒரு சிறு விவசாயிகளின் நாட்டில் சோஷலிசத்தைப் “புகுத்தும்” நோக்கத்தைப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி எந்தவொரு சந்தர்ப்ப சூழ்நிலையின் கீழும் முன்வைக்கக் கூடாது.

ஆனால், “மார்க்சியத்திற்கு நெருங்கியதான” கவர்ச்சித் தொடர்களின் பின்னே ஒளிந்து நிற்கும் முதலாளித்துவக் குயுக்திவாதிகள் மட்டுமே, இந்த மெய்விவரத்தில் இருந்து, உடனடியாக புரட்சிகர நடவடிக்கைகளை ஒத்திப்போடுவதற்கான ஒரு கொள்கையை நியாயப்படுத்த முடியும். இந்த நடவடிக்கைகளுக்கான உரிய காலம் ஏற்கெனவே கனிந்துவிட்டது. இவை பல முதலாளித்துவ நாடுகளால் போரின் தறுவாயில் ஏற்கெனவே அடிக்கடி கையாளப்பட்டன. வர இருக்கும் முழுமையான பொருளாதாரக் குலைவு மற்றும் பஞ்சத்தை எதிர்த்துப் போராட இவை முற்றிலும் இன்றியமையாதவை.

நிலம், அனைத்து வங்கிகள் மற்றும் முதலாளித்துவ சிண்டிகேட்டுகளை சேதவுடைமையாக்குதல் அல்லது குறைந்த பட்சம் தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துக்களின் கட்டுப்பாட்டை உடனடியாக அவற்றின் மீது நிலைநாட்டுதல் போன்ற நடவடிக்கைகள் (எந்த வழியிலும் சோஷலிசத்தைப் “புகுத்துவது” என்று அமையாத நடவடிக்கைகள்) முழுமையாக ஆதரிக்கப்பட வேண்டும். எப்பொழுது சாத்தியமோ அப்பொழுது இவை புரட்சிகரமான வழியில் செய்து முடிக்கப்பட வேண்டும்” 24

                அடுத்து இரண்டாம் அகிலத்தின் நிலையினை விமர்சிக்கிறார். முதலாளிகளுக்கு இடையேயான ஒர் போர் எற்படும்போது அதனை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்பது அகிலத்தின் முடிவு. ஏகாதிபத்திய உலகப் போர் தொடங்கிய போது மேலே எடுக்கப்பட்ட கருத்தோடு சோஷலிஸ்டுகள் முரண்பட்டனர். அப்போது மூன்றுவிதமான போக்குகள் தோன்றியது. முதல் போக்கு, ஏகாதிபத்தியப் போரை எதிர்க்காமல் தாயகத்தைப் பாதுகாப்போம் என்று பாட்டாளி வர்க்கத்துக்கு துரோகம் விளைவித்து முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் போய்ச் சேர்ந்த தேசிய வெறியர்கள். சொல்லில் சோஷலிசம் செயலில் தேசியவெறி.

                இரண்டாவது, “நடுநிலைவாதிகள்” இவர்கள் சமூக தேசிய வெறியர்களுக்கும் உண்மையான கம்யூனிச சர்வதேசியவாதிகளுக்கும் இடையே ஊசலாடினர். சொல்லில் சர்வதேசியம் செயலில் கோழைத்தனமான சந்தர்ப்பவாதம்.

மூன்றாவது, உண்மையான சர்வதேசியவாதிகள். நமது முதன்மையான எதிரி உள்நாட்டில் என்ற அடிப்படையில், ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்பதை ஏற்றவர்கள்.

அடுத்து, மூன்றாவது அகிலத்தை நிறுவ வேண்டியதின் அவசியத்தை கூறுகிறார். இரண்டாம் அகிலத்தினுடைய தகர்வின் காரணமானவர்களையும் அவர்களின் கருத்துக்களையும் கொண்டிராத புதிய மூன்றாம் அகிலத்தை அமைக்க வேண்டும். செயலிலும் சர்வதேசிய வாதிகளாக செயற்படுகிற ருஷ்ய போல்ஷிவிக்குகளுக்கே இத்தகைய பெரும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

“நாம்தான் இக்கணமே எவ்விதத் தயக்கமும் இன்றி ஒரு புதிய புரட்சிகரமான பாட்டாளி வர்க்க அகிலத்தை நிறுவ வேண்டும். அதைவிடவும் இந்தப் புதிய அகிலம் ஏற்கெனவே நிலைநாட்டப்பட்டு விட்டது, இயங்கி வருகிறது என்பதைப் பகிரங்கமாக அங்கீகரிப்பதற்கு நாம் அஞ்சக்கூடாது.”25

                கட்சியின் பெயரை கம்யூனிஸ்ட் கட்சி என்று மாற்றிக் கொள்வது பற்றி இக்கட்டுரையின் இறுதியில் லெனின் பேசுகிறார். சமூக ஜனநாயகம் என்பது விஞ்ஞான வழியில் பிழையாகாது. ஜனநாயகம் என்பது அரசின் ஒரு வடிவம். மார்க்சியவாதிகள் ஒவ்வொரு வகையான அரசையும் எதிர்ப்பவர்களே. ஆனால் இன்றைய நிலையில் அதாவது சோவியத்துக்கு எதிராக செயற்படும் முதலாளித்துவ வர்க்கத்தையும் அதன் சார்பாளர்களையும் இவர்கள் முற்ற முழுக்க எதிர்த்தாக வேண்டும். அதனால் ருஷ்யாவிற்கு ஆயுதமேந்திய படைகள் தேவை, ஆனால் இந்த வழக்கமான அரசு அச்சொல்லின் சரியான பொருளில் அரசு அல்ல. ஏன் என்றால் இந்த அரசில் ஆயுதமேந்திய படைகள் மக்கள் திரளினரிடையே தாமே தோன்றியதாகும். மக்களுக்கு மேல் அமர்த்தப்பட்ட எந்த அதிகார சக்தியும் இதில் கிடையாது. இது முதலாளித்துவ மாதிரியான ஜனநாயகமாக அல்லாது புதியதாய் பிறந்து வரும் புதிய ஜனநாயகமாகும். இதன் தொடர்ச்சியாய், வளர்ச்சியாய் எல்லா விதமான அரசும் உலர்ந்து உதிர்வதன் முன்னடையாளமான அரசாகும்.

1917ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் நாள் முதல் 29ஆம் நாள் வரை, ருஷ்ய சமூக-ஜனநாயக தொழிலாளர் கட்சியின் (போல்ஷிவிக்) ஏழாவது அகில ருஷ்ய காங்கிரஸ் நடைபெற்றது. ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் முதன்முறையாக வெளிப்படையாக நடைபெற்ற சட்டவழியிலான காங்கிரசாகும். இதில் எண்பதாயிரம் உறுப்பினர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் வாக்குரிமை பெற்றவர்கள் 133 பேர்களாவர். வாக்குரிமையில்லாத ஆனால் கருத்து கூறும் உரிமை பெற்றவர்கள் 18 பேர்களாவர்.

இம் மாநாட்டில் லெனின், தொலைவில் இருந்து எழுதிய கடிதங்கள் முதற்கொண்டு ஏப்ரல் ஆய்வுரை மற்றும் அதைத் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளில் காணப்பட்ட கட்சியின் செயல் திட்டத்தை விரிவாக விளக்கினார். சோஷலிசப் புரட்சிக்கு ருஷ்யா இன்னும் பக்குவம் பெறவில்லை என்ற கருத்துரைப்போர்களின் நிலைப்பாட்டை அம்பலப்படுத்தினார். புரட்சியின் தொடர்ச்சியில் அவர்களது நம்பிக்கையின்மையை விமர்சித்து, ருஷ்யாவின் எதார்த்தம் சோஷலிசப் புரட்சியாக மாறிவருகிறதையும் அதன் வெற்றி நிச்சயம் என்றும் தமது வாதங்களால் நிலைநிறுத்தினார். கட்சி லெனினைப் பின்பற்றியது. சோஷலிசப் புரட்சிக்கான லெனினது திட்டத்தை ஏற்றது, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான செயலில் இறங்கியது.

இத்திட்டத்தை மக்களுக்கு விளக்கி அவர்களை அரசியல் வழியில் ஒழுங்கமைப்பதற்கான வேலையைக் கட்சி தொடங்கியது. “அனைத்து அதிகாரமும் சோவியத்துக்கே” என்ற முடிவை செயற்படுத்துவதே கட்சி வேலைகளில் முதன்மை இடத்தைப் பிடித்தது.

அநேக நகரங்களில் தொழிலாளர்கள் தங்களது சோவியத்திற்கு புதிய தேர்தல்களை நடத்தினர். தேர்தல் முடிவுகள் மென்ஷிவிக்குகளை சோவியத்தில் இருந்து துரத்தியது. பல இடங்களில் போல்ஷிவிக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1917ஆம் ஆண்டு மே 30ஆம் நாள் முதல் ஜுன் 3ஆம் நாள் வரை தொழிற்சாலை கமிட்டிகளின் மாநாடு நடைபெற்றது. இதில் பெரும்பான்மையினர் போல்ஷிவிக்குகளை ஆதரித்தனர்.

ஜுன் மாதம் ருஷ்யாவில் போராட்டம் உச்சத்தில் இருந்தது. மாதத்தின் தொடக்கத்திலேயே பெத்ரோகிராத்தில் பதட்டம் அதிகரித்தது. இடைக்கால அரசு முதலாளிகளின் நலன்களின் அடிப்படையில் ஏகாதிபத்தியப் போரை தொடர்ந்தது. இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் விருப்பத்தின்படி போர்முனையில் தாக்குதலைத் தொடங்குங்கள் என்று கட்டளையிடப்பட்டது. இவ்வாறு செய்திடும்போது நாட்டினுள் நடைபெறும் புரட்சி நடவடிக்கைகளை தடுக்க முடியும் என்று ருஷ்ய முதலாளித்துவம் நினைத்தது.

இந்தத் தாக்குதலில் வெற்றி கிடைத்தால் அதனை முன்வைத்து அரசியல் அதிகாரம் அனைத்தையும் கையில் எடுத்துக்கொள்ளலாம், சோவியத்தை ஒழித்து விடலாம் என்ற முடிவோடு போரில் ஈடுபடுவதற்கு விருப்பம் கொண்டனர். தாக்குதல் தோல்வியைத் தழுவினாலும் அதற்கும் போல்ஷிவிக்குகளே ராணுவத்தை சிதைத்து சீரழித்துவிட்டனர் என்று கூறி பழியை அவர்கள் மீது திணித்துவிடலாம் என்ற முடிவோடு செயற்பட்டனர்.

இந்தச் சூழ்நிலையில் ஜுன் 8ஆம் நாள் போல்ஷிவிக் கட்சி மையக் கமிட்டியினர், தொழிலாளர்கள் மற்றும் படைவீர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளுடன் இணைந்து கூட்டம் ஒன்றை நடத்தினர். ஆத்திரமூட்டல்களையும் தேவையற்ற உயிர்ச்சேதத்தையிம் தவிர்ப்பதற்கு ஒரு சமாதான ஆர்ப்பாட்டத்தை ஜுன் 10ஆம் நாள் நடத்துவது என்று முடிவெடுத்தனர். இதனைக் கேள்விப்பட்ட மென்ஷிவிக்குகள், சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் ஆகியோர் கலக்கம் அடைந்தனர். ஆனால் இந்த முடிவு மக்களிடம் வரவேற்பைப் பெற்றது.

மென்ஷிவிக்குகள் மற்றும் சோஷலிஸ்ட் புரட்சியாளர்களால் வழிநடத்தப்பட்ட சோவியத்துகளின் அகில ருஷ்யக் காங்கிரஸ் ஜுன் 9ஆம் நாள் மாலை முதல் மூன்று நாட்களுக்குத்  தெருக்களில் எந்தவித ஆர்ப்பட்டங்களையும் நடத்தக் கூடாது என்று தடைவிதித்தது. லெனினது ஆலோசனைப்படி சோவியத் காங்கிரசுக்கு கட்டுப்பட்டு 10 நாட்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.

சோவியத்களின் காங்கிரசில் மென்ஷிவிக்குகள் மற்றும் சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள், ருஷ்யப் படைகள் போரைத் தொடங்கும் நாளான ஜுன் 18டில் ஓர் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். அன்றைய ஊர்வலத்தில், சோவியத்துகளின் காங்கிரசிடம் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை நேரடியாக கொடுக்க வேண்டும் என்ற பரப்புரையினை செய்து வந்தனர். இடைக்கால அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதை காட்டுவதற்கே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை அறிந்த பெத்ரோகிராத் சோவியத் கவலை கொண்டது. இருந்தாலும் தொழிலாளர்களின் புரட்சிகர மனநிலையை அவர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த நினைக்கும் இந்தச் சதியை முறியடிக்க, தாங்களும் கலந்து கொள்வது என்று போல்ஷிவிக்குகள் முடிவெடுத்தனர்.

ஜுன் 18 ஆம் நாளன்று 5,00,000 தொழிலாளர்களும் படைவீரர்களும் ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்து கொண்டனர். போல்ஷிவிக்குகளின் புரட்சிகர முழக்கங்களை கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சிறு பகுதியினர் மட்டுமே இடைக்கால அரசுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் வகையில் முழக்கங்களை ஏந்தி வந்திருந்தனர்.

போர் தொடங்கியது என்ற செய்தியும், அதில் படுதோல்வி ஏற்பட்டது என்ற செய்தியும் ருஷ்ய நகரங்களுக்குக் கிடைத்தது. தொழிலாளர்களும், போர்வீரர்களும் கிளர்ந்து எழுந்தனர். தொழிலாளர்களும் போர்வீரர்களும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தினர். அப்போது அனைத்து அதிகாரமும் சோவியத்துக்கே என்று முழுக்கமிட்டனர். இதனை இடைக்கால அரசு ஆயுத பலத்தால் தாக்கியது. நகர தெருக்களில் தொழிலாளர்களின் குருதி சிந்தியது.

போல்ஷிவிக் கட்சியும், உறுப்பினர்களும் அடக்குமுறைக்கு ஆளாயினர். பலரைப்பிடித்து சிறையில் தள்ளினர். லெனினைக் கைது செய்வதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. போல்ஷிவிக்குகளின் வெளியீடுகள் அச்சிடப்படும் அச்சகங்கள் தாக்கப்பட்டதன. பிராவ்தா அலுவலகம் தாக்கப்பட்டது. அரை மணிநேரத்திற்கு முன்புவரை லெனின் அங்குதான் இருந்தார்.

18ஆம் நாள் போராட்டத்தைப் பற்றி லெனின் ஜுன் பதினெட்டாம் நாள் என்ற சிறு கட்டுரையில் அன்றைய ஆர்ப்பாட்டம், புரட்சிக்கான திசைவழியை காட்டுவதாக சரியாக முன்கணித்துக் கூறியுள்ளார்.

“ஏதாவது ஒரு வழியில் ஜுன் 18ஆம் நாள் ருஷ்யப் புரட்சியின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக நிச்சயம் ஏற்கப்படும்.

வர்க்கங்களின் பரஸ்பர நிலை, ஒன்றை ஒன்று எதிர்த்த போராட்டத்தில் அவற்றின் தொடர்போடு, குறிப்பாயும் கட்சிகளின் வலிமையுடன் ஒப்புநோக்கும் போது அவற்றின் வலிமை ஆகிய யாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் மிகத் தெளிவாகவும், மிகவும் முனைப்பாகவும், ஆழ்ந்து பதியத்தக்கதாயும் வெளிப்பட்டன. எனவே, இனிமேற்பட்டதான வளர்ச்சியின் போக்கும் வேகமும் எதுவாக இருப்பினும் சரி, அரசியல் விழிப்புணர்வு மற்றும் தெளிவு சம்பந்தமான சாதனை பிரம்மாண்டமானது.

இந்த ஆர்ப்பாட்டம் ஒரு சில மணி நேரங்களில் போல்ஷிவிக் கூட்டுச்சதியாளர் பற்றிய வெற்றுப் பேச்சை ஒரு பிடிப் புழுதியைப் போலக் காற்றில் சிதறி வீசிவிட்டது. மேலும், ருஷ்யாவின் உழைக்கும் மக்களின் முன்னணிப் படையும், தலைநகரத்தின் தொழில்துறைப் பாட்டாளிகளும், மிகப் பெரும் பெரும்பான்மையான துருப்புகளும் எமது கட்சி எப்போதும் பரிந்துரைத்து வந்துள்ள முழக்கங்களை ஆதரிக்கின்றனர் என்பதை மிகவும் உயர்ந்தளவு தெளிவுடன் இந்த ஆர்ப்பாட்டம் புலப்படுத்தியது.

தொழிலாளர், படையாளிகள் அணிப் பிரிவின் போட்டியிட்ட பீடு நடை, ஏறத்தாழ ஐந்து லட்சம் ஆர்ப்பாட்ட வீரர்கள் சேர்ந்து திட்டமிட்ட எதிர்ப்பு, கோஷங்களைச் சுற்றி ஒற்றுமை. இவற்றில் மிகப் பெரும் அளவு மேலோங்கி நின்றவை: ”எல்லா ஆட்சி அதிகாரமும் சோவியத்துகளுக்கே” “பத்து முதலாளித்துவ அமைச்சர்கள் ஒழிக” “ஜெர்மானியருடன் தனி சமாதானம் இல்லை, ஆங்கில-பிரெஞ்சு முதலாளிகளுடன் ரகசிய உடன்படிக்கைகளும் இல்லை” இத்தியாதி. இந்த ஆர்ப்பாட்டத்தைக் கண்ணுற்ற எவருக்கும் ருஷ்யாவின் தொழிலாளர், படையாளிகளின் ஒழுங்கமைக்கப்பட்ட முன்னணிப்படையின் இடையே இந்த முழக்கங்கள் வெற்றிவாகை சூடும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

ஜுன் 18ஆம் நாள் ஆர்ப்பாட்டம் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் வலிமையையும் கொள்கையையும் புலப்படுத்திய ஓர் ஆர்ப்பாட்டமாகும். இது புரட்சிக்கான திசைவழியைக் காட்டி வருகிறது, நெருக்கடியிலிருந்து மீளும் வழியை விளக்கிக் காட்டுகிறது.”26

                ஜுலை 3-4ஆம் நாட்களில் பெத்ரோகிராதில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடியின் வெளிப்பாடாகும். இந்த ஆர்ப்பாட்டம் ஒரு புரட்சியாக மாறுமானால் நிச்சயம் படுதோல்வியடையும். ஜுலை 3ஆம் நாள் நடைபெற்ற மையக் கமிட்டிக் கூட்டத்தில், நாட்டில் புரட்சிகர நெருக்கடி இன்னும் எழவில்லை, ஆயுதமேந்திய தாக்குதல் தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.

                இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஆர்ப்பாட்டம் தொடங்கிவிட்டது. மக்களின் இந்தப் போராட்டத்தை, ஒரு சமாதானமான ஒழுங்கான தன்மையில் கட்டுப்பாடோடு நடத்தி முடிக்க உதவிடும் வகையில் போல்ஷிவிக்குகள் கலந்து கொண்டனர். மென்ஷிவிக்குகள், சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் ஆட்சியதிகாரத்தை எடுத்துக்கொள்ள மறுத்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து அதிகாரமும் சோவியத்துக்கே என்ற போல்ஷிவிக் முழுக்கங்களையே கையிலேந்தி போராடினர். இடைக்கால அரசு இந்த சமாதான ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து துப்பாக்கியால் சுடத் தொடங்கியது. தொழிலாளர்கள் நிராயுதபாணியாக்கப்பட்டார்கள், கைதுகள், போலீஸ் வேட்டைகள், வன்முறைகள் நடந்தேறியது.

                ஜுலை 5ஆம் நாள் லெனினது தலைமையில் மையக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த ஆர்ப்பாட்டத்தை முறையாக முடித்துக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது. பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளை இடைக்கால அரசு தடுத்து நிறுத்தியது, தமது ஆயுத பலத்தால் அனைத்தையும் நசுக்கியது. ஜுலை நிகழ்ச்சிக்குப் பிறகு ஆட்சியின் அதிகாரம் அனைத்தும் முதலாளித்துவ இடைக்கால அரசின் கைக்குச் சென்றுவிட்டது. இரட்டை ஆட்சி முடிவுக்கு வந்தது.

இந்த சூழல் முதலாளிகளுக்கு சாதகமாய் ஆனது. புரட்சி வளர்ச்சியடைந்த காலம் முடிவுக்கு வந்து விட்டது. இடைக்கால அரசில் பிற்போக்கு தலைதூக்கத் தொடங்கிவிட்டது. போல்ஷிவிக்குகள் தங்களது செயற்தந்திரத்தை மாற்றி தலைமறைவாகச் செயல்படத் தொடங்கினர். லெனின் மிகவும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றார். ஆயுத பலத்தைக் கொண்டு முதலாளித்துவ அதிகாரத்தை விழச் செய்து, சோவியத்தின் அதிகாரத்தை நிலைநிறுத்தும் நோக்கிலான போராட்டம் தொடங்கி விட்டது.

                தொடர் ஆர்ப்பாட்டங்களைக் கண்ட இடைக்கால அரசு லெனினையும் சில போல்ஷிவிக்கு தலைவர்களையும் கைது செய்யத் திட்டமிட்டது. லெனின் ஜெர்மனியின் ஒற்றன் என்று ஒரு அவதூறு கிளப்பப்பட்டது. இதனை ஒட்டி லெனினை கைது செய்வதற்கும், பல்வேறு போல்ஷிவிக்குகளை கொல்வதற்கும் ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த நிலையில் லெனின் தலைமறைவாவது அவசியம் என்று போல்ஷிவிக்குகள் கருதினர். லெனின் தலைமறைவானார். இடைக்கால அரசு இதனோடு நிற்காமல் அவரை நீதிமன்றத்திற்கு நேரில் வரும்படி உத்தரவிட்டது.

       முதலில் லெனின் நீதிமன்றத்திற்குச் செல்வதாக முடிவெடுத்தார். இந்த அரசு முழுமையான அதிகாரம் பெற்ற அரசில்லை, விசாரணை நியாயமாக நடப்பதற்கு வாய்ப்பில்லை. இந்த விவாதத்திற்கு பிறகு தலைமறைவாக நீடிப்பதே சரியானது என்பதை லெனின் ஏற்றுக் கொண்டார்.
               
                போல்ஷிவிக் தலைவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவது பற்றிய பிரச்சினை என்ற கட்டுரையின் தொடக்கத்திலேயே இதன் சட்டப் பிரமைகளை சுட்டிக் காட்டியுள்ளார்.

“தனிப்பட்ட உரையாடல்களை வைத்து நிர்ணயிக்கும் போது, இந்த பிரச்சினை மீது இரண்டு அபிப்பிராயங்கள் இருப்பது தெரியவரும்.

“சோவியத்து ‘சூழ்நிலைக்கு” விட்டுக்கொடுக்கும் தோழர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதை பெரும்பாலும் விரும்புகிறார்கள்.

தொழிலாளர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருப்போர் ஆஜராகாமல் இருப்பதை விரும்புகிறார்கள் என்பது வெளிப்படை.

கோட்பாட்டளவில் இந்தப் பிரச்சினை அரசியல் சட்ட பிரமைகள் என்று வழக்கமாக அழைக்கப்படுவதைப் பற்றிய ஒரு மதிப்பீடாகச் சுருக்கமுறுகிறது”27

இந்த அரசியல் சட்ட பிரமைகளைப் பற்றி வேறொரிடத்தில் எழுதுகிறார்

“எம்மைக் கைதுசெய்யும்படி உத்தரவிட்டு இடைக்கால அரசாங்கம் பிறப்பித்துள்ள ஆணைக்குக் கீழ்ப்படிவது தொடர்பாக எனது கருத்தை பின்வரும் காரணங்களால் மாற்றிக் கொண்டுவிட்டோம்.

எதிர்ப்புரட்சிக் கட்சி வேண்டுமென்றே திட்டமிட்டு லெனின் மீதும் மற்றவர்கள் மீதும் “வேவுசதி” “வழக்கைத்” தொடுத்துள்ளது என்பது நோவெயே விரேமியா இதழில் ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ள முன்னாள் நீதித்துறை அமைச்சர் பெரிவேர்சிவின் கடிதத்தில் இருந்து துல்லியமாய் தெளிவாகிறது.

உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு படைவீரர்களை நமது கட்சிக்கு விரோதமாகத் தாம் தூண்டி விட்டதாக பெரிவேர்சிங் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
..
நம்மால் முடிந்த வரை பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத்துக்குத் தொடர்ந்து உதவுவோம். அரசியல் நிர்ணய சபை கூடுமானால், அது கூட்டப்படுவது முதலாளித்துவ வர்க்கத்தின் கைவேலையாக இல்லாதிருக்குமானால் அது மட்டுமே எம்மைக் கைது செய்யுமாறு இடைக்கால அரசாங்கம் பிறப்பித்த ஆணையைப் பற்றி நியாயத் தீர்ப்புக் கூறுவதற்கான முழு அதிகாரம் பெற்ற அமைப்பாகும்.”28

                இந்த வகையில்தான் லெனின் தலைமறைவாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஜுலை மாதம் 7ஆம் நாள் லெனினைக் கைது செய்வதற்காக அவருடைய சகோதரி எலிஸாரோவா வீட்டைச் சோதனையிட்டனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் சோதனையிட்டு எலிஸாரோவாவின் கணவரை லெனின் என்று தவறாக நினைத்து அழைத்துச் சென்று விசாரித்து விடுவித்தனர்.

                ஜுலை மாதத்து அரசியல் நிலைமைகளை லெனின் பல்வேறு கட்டுரைகளில் விவரித்தார். அதில் குறிப்பிடத்தக்கவை, மூன்று நெருக்கடிகள், போல்ஷிவிக் தலைவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவது பற்றிய பிரச்சினை, அரசியல் நிலைமை, முழக்கங்கள் பற்றி.
               

                மூன்று நெருக்கடிகள் என்ற கட்டுரையில் லெனின், ஏப்ரல் 20,21, ஜுன் 10,18, ஜுலை 3,4 ஆகிய அரசியல் நெருக்கடிகளைப் பற்றி விவரித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டம், இடைக்கால அரசினுடைய முதலாளித்துவப் போக்கின் மீது மக்கள் கொண்ட அதிகப்படியான அதிருப்தியை நிரூபிக்கிறது.

“இந்த மூன்றுக்கும் பொதுவாக இருந்த தன்மை கரைகடந்து பெருக்கெடுத்தோடிய மக்கள் திரளின் அதிருப்தி, முதலாளி வர்க்கத்தோடு அதன் அரசாங்கத்தோடுமான மக்கள் திரளின் வன்மமே. விவகாரத்தின் இந்த சாரத்தை எவர் மறுக்கிறாரோ, புறக்கணிக்கிறாரோ அல்லது குறைத்து மதிப்பிடுகிறாரோ அவர் வர்க்கப் போராட்டம் பற்றிய சோஷலிசத்தின் அரிச்சுவடியைத் துறப்பவராகிறார்.” 29

                மூன்று நெருக்கடியில் முதல் ஏப்ரல் நெருக்கடி கொந்தளிப்பானது, தன்னியல்பானது, முற்றும் ஒழுங்கமைக்கப்படாதது. இரண்டாவது, போல்ஷிவிக்குகள் முதலில் ஆர்ப்பாட்டம் நடத்தும்படி கோரியது, சோவியத்துகளின் காங்கிரசின் இறுதி எச்சரிக்கையாலும் நேரடியாக தடைசெய்ததாலும் நிறுத்தப்பட்டது. இருந்தும் ஜுன் 18ஆம் நாள் ஒரு பொது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் போல்ஷிவிக்குகளின் முழக்கங்கள் மேலோங்கி காணப்பட்டது. மூன்றாவது நெருக்கடி ஜுலை 2ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தை தவிர்ப்பதற்கு முயன்றபோதிலும் ஜுன் 3ஆம் நாள் தன்னியல்பாக வெடித்து, 4ஆம் நாள் உச்சத்தை எட்டியது, 5-6ஆம் நாட்களில் ஒரு எதிர்ப்புரட்சியின் வெறித்தனமான திடீர் எழுச்சிக்கு இட்டுச் சென்றது.

                இந்த ஆர்ப்பாட்டத்தைப் பற்றி லெனின் கணித்ததின் அடிப்படையில்தான் அடுத்தக்கட்ட போராட்டமும் அதற்கான முழக்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

“இந்த மூன்று நெருக்கடிகள் அனைத்திலும் இயக்கம் ஓர் ஆர்ப்பாட்டத்தின் வடிவை எடுத்தது. அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம்- இதுவே இந்த நிகழ்ச்சிகளின் மிகவும் துல்லியமான பொருத்தமான வர்ணனையாக இருக்கும். ஆனால் இந்த நடப்பின் மெய்விவரப்படி இது ஒரு சாதாரணமான ஆர்ப்பாட்டம் அல்ல. இது ஓர் ஆர்ப்பாட்டத்தைவிடக் கணிசமான அளவுக்கு அதிகமானதாக இருந்தது. இது புரட்சியை விடக் குறைவானதாகவே இருந்தது. இது புரட்சியும் எதிர்ப்புரட்சியும் ஒருங்கே மூண்டதான திடீர் எழுச்சியாகும்.

இதில் சில சமயங்களில் நடுத்தர சக்திகள் கடுமையாகவும் பெரும்பாலும் திடீரென்றும் “அகற்றப்படுகின்றன”. அதேபோதில் பாட்டாளி வர்க்கம் மற்றும் முதலாளி வர்க்க சக்திகள் கொந்தளிப்பான முறையில் தோற்றமளித்தன.” 30

                இந்த நெருக்கடியின்போது நாட்டின் எதார்த்த சூழல் என்னவாக இருந்தது என்பதைப் பரிசீலித்து அடுத்த கட்ட போராட்டத்துக்கு லெனின் அழைப்பு விடுக்கிறார். ருஷ்ய நாட்டில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் இன்றைய வாழ்நிலையிலும், கருத்துகளிலும் குட்டிமுதலாளித்துவ தன்மையுடையவர்களாக இருக்கின்றனர். ஆனால் பெரிய மூலதனம் மற்றும் வங்கிகள், சிண்டிகேட்டுகள் மூலம் நாடு ஆளப்படுகிறது. நகர்ப்புறப் பாட்டாளி வர்க்கம் சொந்த முறையில் முதிர்ச்சி பெற்று இயங்கி வருகிறது, ஆனால் பெரும்பான்மை அரைப்பாட்டாளிகளை தம்பக்கம் ஈர்த்துக் கொள்ள இன்னும் இயலவில்லை. இந்த அடிப்படையிலான மெய்விவரங்களின் வெளிப்பாடாகவே இந்த மூன்று நெருக்கடிகளும் அதன் வடிவங்களும் தவிர்க்க முடியாத வகையில் தொடர்கின்றன.

                தனியார் நிலவுடைமையை ஒழித்தல், உழைக்கும் மக்களுக்கு நிலத்தை மாற்றிக் கொடுத்தல், நிலப்பிரபுக்களின் நிலங்களை இழப்பீடின்றி பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு வழங்குதல் போன்றவற்றைப் பற்றிய வாக்குறுதிகளைத் தவிர வேறு எதுவும் கிடைக்காததைக் கண்ட பின்பு, முதலாளிகளின் இடைக்கால அரசை நம்பிப்பயனில்லை, முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து மிகத்தீர்மானகரமான புரட்சிகர நடிவடிக்கைகள் எடுக்காமல் மாபெரும் இந்தச் சீர்திருத்தங்களை நிறைவேற்ற முடியாது என்பதை லெனின் தெளிவுபடுத்துகிறார். தீவிரமான புரட்சி எழுந்து வெற்றி பெற வேண்டுமானால், ஏழை விவசாயிகள் பாட்டாளி வர்க்கத்துடன் சேர வேண்டும். அப்போதுதான் வங்கிகளையும் சிண்டிகேட்டுகளையும் நாட்டுடைமையாக்கி இந்த சீர்திருங்களை நடைமுறைப்படுத்த முடியும்.

இதனைத் தொடர்ந்து இதற்கான முழக்கத்தைப் பற்றி லெனின் விவரிக்கிறார். முழக்கம் ஒரு வரலாற்றுச் சூழலுக்கானது, அந்தச் சூழல் மாறிய போது பயன்பாட்டில் உள்ள முழுக்கம் பழைமைப்பட்டுப் போகிறது. புதிய சூழலுக்கு புதிய முழக்கம் உருவாக்கப்படுகிறது.

“வரலாறு திடுமென்ற ஒரு திருப்பத்தை எடுக்கும் பொழுது, முற்போக்கான கட்சிகளும் கூடச் சில காலத்துக்குப் புதிய நிலைமைக்குத் தம்மைத் தாமே தகவமைத்துக் கொள்ள இயலாமற் போவதும், முன்னால் சரியாக இருந்த ஆனால் இப்போது அதன் பொருள் முழுதையும் இழந்து விட்ட முழக்கங்களை திரும்பத் திரும்பக் கூறுவதும் மிக அடிக்கடி நிகழ்ந்து வந்துள்ளது. இந்த முழக்கங்களின் பொருள், வரலாற்றில் திடுமென்ற திருப்பம் எப்படி “திடீர்” என்று ஏற்பட்டதோ அது போன்று “திடீரென்று” இழக்கப்பட்டது.” 31

                இதனை லெனின் எதற்குக் கூறுகிறார் என்றால், “அனைத்து அதிகாரமும் சோவியத்துக்கே” என்று இதுவரை முழங்கிய முழக்கத்திற்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. பிப்ரவரி 27 நாள் முதல் ஜுலை 4 நாள் வரை இந்த முழக்கம் சரியானது. இந்தக் கட்டம் மீட்டெடுக்க முடியாத அளவுக்கு கடந்த காலத்துக்கு உரியதாகிவிட்டது. ஜுலை 4ஆம் நாளுக்குப்பிறகு நிலைமை மாறிவிட்டது. ஒவ்வொரு குறிப்பிட்ட முழக்கமும், ஒரு திட்டவட்டமான அரசியல் நிலைமையின் தனித்த இயல்புகளின் கூட்டு மொத்தத்தில் இருந்து வருவிக்கப்பட வேண்டியவையாகும்.

                இரட்டை ஆட்சி நிலவிய போது சோவியத்தில் ஆயுதங்கள் மக்கள் கைகளில் இருந்தன, மக்களை கட்டுப்படுத்த எந்தவித மேலான சக்தியும் அப்போது இல்லை. இதுவே புரட்சியின் முன்னேற்றத்துக்கு உரிய ஒரு சமாதான வழியை திறந்து வைத்தது. இந்த நிலையில் அதிகாரம் அனைத்தும் சோவியத்துக்கு மாற்றித் தரப்பட வேண்டும் என்ற முழக்கம் சாத்தியப்பாடான முழக்கமாக இருந்தது.

சோவியத்தில் பெரும்பான்மை குட்டி முதலாளித்துவவாதிகளின் கைகளில் இருந்ததும், அவர்களுக்கு முதலாளித்துவ இடைக்கால அரசின் மீது நம்பிக்கை இன்னும் இருந்ததும், இந்த சாத்தியப்பாட்டை இழந்ததற்கு காரணமாகும்.  இடைக்கால அரசுடனான ஏகாதிபத்தியத்தின் ரகசியக் கூட்டு அம்பலப்பட்டுப் போனதும் இனி இவ்வரசு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லை. புரட்சியை ஒடுக்குவதே இவ்வரசின் இறுதியான உறுதியான போக்கு என்பதை ஆர்ப்பாட்டத்தின் போது அறிந்த பிறகு பழைய நிலைமை மாறிவிட்டதை அறிந்திட முடிகிறது.

                ஆட்சி அதிகாரத்தை இனிமேல் சமாதான வழியில் பெற முடியாது என்பது வெட்டவெளிச்சமான பிறகு, பிரதானமாக பெரிய மூலதனமும், வங்கிகள் மற்றும் சிண்டிகேட்டுகள் நாட்டை ஆளுகின்ற போது புரட்சிகரமான பாட்டாளி வர்க்கமே சுயேச்சையாக ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியது காலகட்டாயமாகியது.

       புரட்சிகர பாட்டாளிகளின் தலைமையில் ஆயுத பலத்தால், அரசை தாக்கி முதலாளித்துவ போக்கனைத்தையும் தூக்கியெறிய வேண்டும். அப்போது சோவியத் தோற்றம் பெறும், அந்த சோவியத் இன்றுள்ள சோவித்தைப் போன்றதல்ல, முதலாளித்துவ அரசின் ஒட்டுவாலாக அல்லாமல், முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்க்கின்ற புரட்சிப் போராட்டத்தின் உறுப்பாகும்.

                இந்த சோவியத்துக்கான முழக்கமே இன்றைக்கு தேவைப்படும் முழுக்கமாகும். “அனைத்து அதிகாரமும் சோவியத்துக்கே” என்று சமாதான வழியில் கோரிய முழக்கம், மாறிய சூழ்நிலையில் புதிய உள்ளடக்கத்தோடு ஆயுதம் தாங்கிய எழுச்சியின் மூலம் அனைத்து அதிகாரமும் சோவியத்துக்கு மாற்றிட வேண்டும் என்பதாக மாறியது.

போல்ஷிவிக் கட்சி வெளிப்படையாகவும் மறைவாகவும் செயற்பட்டது. லெனின் தொலைவில் இருந்தாலும், கட்சியின் மையக் கமிட்டியுடன் தொடர்பில் இருந்தார். புதியதாக மாறிய சூழ்நிலைக்கு ஏற்றப்படியான புதிய செயற்தந்திரத்தை காங்கிரசில் உறுதிப்படுத்த வேண்டும். போல்ஷிவிக் கட்சியின் ஆறாவது காங்கிரஸ் பெத்ரோகிராத்தில் ஜுலை 26ஆம் நாள் முதல் ஆகஸ்ட் 3ஆம் நாள் வரை நடைபெற்றது. இந்த காங்கிரஸ் நடக்க இருப்பது பற்றிய செய்தி மட்டுமே நாள் குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டது. இந்தக் காங்கிரஸ் அரைகுறை சட்டவழிப்பட்டதாக நடைபெற்றது.

இக்காங்கிரசில் கட்சி அமைப்பு விதியில் ஜனநாயக மத்தியத்துவம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

                கட்சியின் வழிகாட்டும் குழுக்கள் அனைத்தும், அதாவது மேலிருந்து கீழ்வரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கட்சி உறுப்பினர் தாம் செய்திட்ட கட்சிப் பணியினைப் பற்றி, தத்தம் கட்சி அமைப்பிற்கு தெரியப்படுத்த வேண்டும். பெரும்பான்மை முடிவிற்கு கட்டுப்பட வேண்டும். விவாதித்து எடுக்கப்பட்ட முடிவை மீறாத வகையில் கட்டுப்பாடோடு இருப்பதற்கு இது அவசியமானதாகும். கட்சியில் சேர விரும்பும் புதிய உறுப்பினர், கட்சியின் இருவரது பரிந்துரையை பெற்றிருக்க வேண்டும். வட்டார அமைப்பின் சேர்ப்பு குழு அனுமதியோடு கட்சியில் சேர்க்கப்படுவார்.

                ஆறாவது காங்கிரசின் முடிவில் தொழிலாளர்கள், படைவீரர்கள், ஏழை விவசாயிகள் ஆகியோர் ஆயுதப் போராட்டத்துக்கு தயாராகும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. ஆயுதம் தாங்கிய போராட்ட திசைவழியை தற்போது ஏற்றுக் கொண்டது. காங்கிரஸ் வெளியிட்ட கட்சி அறிக்கையின் இறுதியில் காணப்படுவது:-
“ஆயுதம் தாங்கி தோளோடு தோள் நிற்கும் தோழர்களே! தயாராகுங்கள்! புதிய போருக்கு ஆயத்தமாகுங்கள்! ஆத்திர மூட்டலுக்கு இரையாகாமல், பதற்றமின்றி, நிதானமாக உங்களுடைய சக்திகளைத் திரட்டுங்கள்! உங்களுடைய போராடும் படைகளை அமையுங்கள்! பாட்டாளிகளே! போர்வீரர்களே! கட்சிக் கொடியின் கீழ் திரளுங்கள்! கிராமப் புறங்களிலே ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் மக்களே! கட்சிக் கொடியின் கீழ் திரளுங்கள்!”

                லெனின் நீதிமன்றத்திக்குச் சென்று ஆஜராக வேண்டாம் என்று முடிவெடுத்த பின்பு, அவரை மிக்க கவனமாகப் பாதுகாக்க வேண்டியிருந்தது. ஆகஸ்ட் 21ஆம் நாள் ரகசியமாக பின்லாந்துக்கு அனுப்ப திட்டமிட்டனர். பின்லாந்து ருஷ்ய ஆட்சிக்குள் உள்ள நாடாக இருந்தாலும், அந்நாட்டிற்கு செல்வதற்கு அனுமதிச்சீட்டு பெற வேண்டும். இவனோவ் என்ற பெயரில் மாறுவேடம் பூண்டு பின்லாந்துக்குப் புறப்பட்டார். அடையாளச் சீட்டுடன் பயணித்தாலும் பாதுகாப்பு கருதி, அன்றைய கடைசி ரயிலில், எஞ்சினிலேறி கரிதள்ளும் வேலையாளின் வேடத்தில் பயணித்தார். தலைமறைவாக அங்கிருக்கும் போதுதான் லெனின் அரசும் புரட்சியும் என்ற அரும்பெரும் படைப்பை எழுதினார்.

அரசும் புரட்சியும் – படைப்பு

லெனின் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிக்கும் வேளையில், வரவிருக்கும் புரட்சியை முன்வைத்து, அரசைப் பற்றிய மார்க்சியக் கோட்பாடும் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளும் என்ற அடிப்படையில் தாம் எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு அரசும் புரட்சியும் என்ற நூலை எழுதினார். 1916ஆம் ஆண்டு முதல் இதற்கான தயாரிப்பில் இருந்தார். மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதிய அரசு பற்றிய படைப்புகள் அனைத்தையும் படித்து குறிப்பெடுத்தார். இந்தக் குறிப்பு எழுதிய நூலின் அட்டை நீலநிறத்தில் காணப்பட்டதால் இது நீலக்குறிப்பேடு என்று பெயர் பெற்றது. இக்குறிப்பேட்டில் அரசு குறித்து மார்க்சியம் என்று தலைப்பிட்டு எழுதப்பட்டது.

இந்நூலின் ஆறு இயலை மட்டுமே எழுதி முடித்தார். ஏழாவது இயல் 1905, 1917ஆம் ஆண்டுகளின் ருஷ்யப் புரட்சியின் அனுபவம் என்ற தலைப்போடு நின்று விடுகிறது. இதனை எழுதுவதற்குள் புரட்சி நெருங்கிவிட்டது. இந்தக் குறிக்கீடு வரவேற்கத் தக்கதே. புரட்சியின் அனுபவத்தை எழுதுவதைக் காட்டிலும் நேரில் வாழ்ந்து காண்பது இனிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது என்று பின்னுரையில் எழுதினார். இந்த அத்தியாத்தை எழுதவில்லை என்பதால் இந்நூல் எந்தக் குறையும் பெறவில்லை. அரசின் தோற்றத்தையும் அதன் நிலையிருப்பையும் இறுதியில் உலர்ந்து உதிர்வது பற்றியும் முழுமையான சித்திரத்தை இந்நூல் நமக்கு அளித்திடுகிறது.

முதல் பதிப்பின் முன்னுரையில், இந்நூல் எழுத வேண்டியதின் சூழலைப் பற்றிக் குறிப்படுகிறார். அரசு பற்றிய பிரச்சினை கோட்பாட்டிலும் நடைமுறை அரசியலிலும் இன்றும் மிகுந்த முக்கியத்துவமானதாகிறது. ஏகபோக முதலாளித்துவமானது அரசு-ஏகபோக முதலாளித்துவமாய் மாற்றும் நிகழ்ச்சிப்போக்கை ஏகாதிபத்தியப் போர் அளவுகடந்த தீவிரத்தை பெறச் செய்கிறது. மேலும் கூறுகிறார், உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சி முற்றி வரும் நிலையில், அரசு பற்றிய பிரச்சினை நடைமுறை முக்கியத்துவம் உடையதாகிறது.

முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கில் இருந்து, உழைப்பாளி மக்களை விடுவிக்கப் போராட வேண்டுமாயின், அரசு குறித்த சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களை எதிர்த்துப் போராட வேண்டும். இந்தப் போராட்டத்துக்கு துணைபுரியும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. லெனின் எழுதிய முதன்மையான நூல்களில் இதுவும் ஒன்று. அரசு பற்றிய மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுத்துக்களை இந்நூலில் பெரும் அளவுக்குப் பயன்படுத்தியுள்ளார். அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

“மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டுவது என்றுமில்லாத அளவுக்கு மலிந்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு நிலையில், மெய்யாகவே மார்க்ஸ் அரசு என்னும் பொருள் குறித்து என்ன போதித்தார் என்பதைத் திரும்பவும் நிலைநாட்டுவதே நமது தலையாய கடமை. இதற்கு, நேரடியாக மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களில் இருந்து நீண்ட பல மேற்கோள்கள் தருவது இன்றியமையாதது. நீண்ட மேற்கோள்கள் வாசகத்தைக் கடினமாக்கிவிடும், சுவையாகவும் எளிதாதவும் பலரும் படிக்கத்தக்க வாசகமாக்குவதற்குத் தடையாகிவிடும் என்பது மெய்தான்.

மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களில் அரசு என்னும் பொருள் குறித்து காணப்படும் எல்லாப் பகுதிகளையும், அல்லது அத்தியாவசியமான எல்லாப் பகுதிகளையேனும் கூடுமான வரை முழு அளவில் எப்படியும் மேற்கோளாய்க் கொடுத்தாக வேண்டும். அப்போதுதான் விஞ்ஞான சோஷலிசத்தின் மூலவர்களுடைய கருத்துக்களின் முழுப் பரிமாணத்தையும், அவற்றின் வளர்ச்சியையும் பற்றி வாசகர் சுயேச்சையான ஓர் அபிப்பிரயத்திற்கு வந்தடைய முடியும், இக்கருத்துக்கள் தற்போது மேலோங்கிவிட்ட “காவுத்ஸ்கிவாதத்தால்” திரித்துப் புரட்டப்பட்டிருப்பதை ஆவண ஆதாரத்தால் நீரூபித்து, கண்கூடாய் புலப்படுத்த முடியும்.” 32

இந்நூல் முழுமையாக எழுதப்படாவிட்டாலும் இருப்பதை கண்டிப்பாக முழுமையாகப் படித்தறிய வேண்டிய நூலாகும். அரசு என்ற தலைப்பில் அவர் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இதனையும் சேர்த்துப் படிக்க வேண்டும். அதில் முதன்முறையாக அரசு பற்றி அறிபவர் சந்திக்கும் சிரமத்தையும் அதனைப் போக்குவதற்கான வழியையும் சுட்டிக்காட்டுயிருக்கிறார்.

சமூகத்தில் வேலைப்பிரிவினையால் வர்க்கம் தோன்றியதும், அதற்கு இடையே இணக்கம் காணமுடியாத பகைமை தோன்றியதின் விளைவே அரசு என்கின்றனர் மார்க்சும், எங்கெல்சும். ஆனால் திருத்தல்வாதிகள் வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதற்கான உறுப்பே அரசு என்று மார்க்சுக்கு திருத்தம் கூறுகின்றனர்.

மார்க்சின் கருத்தை லெனின் தொகுத்துத் தருகிறார்.

“மார்க்சின் கருத்துப்படி வர்க்க ஆதிக்கத்துக்கான ஓர் உறுப்பே, ஒரு வர்க்கம் பிறிதொன்றை ஒடுக்குவதற்கான ஓர் உறுப்பே அரசு. வர்க்கங்களுக்கு இடையிலான மோதலை மட்டுப்படுத்துவதன் வாயிலாய் இந்த ஒடுக்குமுறையைச் சட்ட முறையாக்கி, நிரந்தரமாக்கிடும் “ஒழுங்கை” நிறுவுவதே அரசு. ஆனால் குட்டி முதலாளித்துவ அரசியல்வாதிகள் அபிப்பிராயத்தில், ஒழுங்கு என்றால் ஒரு வர்க்கம் பிறிதொன்றை ஒடுக்குவதல்ல, வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதே ஒழுங்கு, மோதலை மட்டுப்படுத்துவது என்றால் ஒடுக்குவோரைக் கவிழ்ப்பதற்கான குறிப்பிட்ட போராட்ட சாதனங்களையும் முறைகளையும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களிடம் இருந்து பறிப்பதல்ல, வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதே மோதலை மட்டுப்படுத்துவது.” 33
               
                இதுபோன்று மார்க்சியத்துக்கு பல்வேறு திருத்தங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதனை எதிர்த்துப் போராடுவதும், மார்க்சிய அடிப்படைகளை நிலைநிறுத்துவதும் ஒரு அவசியமான போராட்டமாகத் தொடர்கிறது.

நாடாளுமன்றத்தை மறுதலிக்கின்ற இடது போக்கான அராஜகவாதிகளிடம் இருந்தும், நாடாளுமன்றத்தை மட்டுமீறி பழக்கப்படுத்திக் கொண்ட வலது போக்கிடம் இருந்தும் மார்க்சிய அணுகுமுறை வேறுபடுகிறது. மார்க்சை நினைவுறுத்தி லெனின் எழுதுகிறர்.

“… மார்க்சுக்குப் புரட்சிகர இயக்கவியலானது, பிளாகானவும் காவுத்ஸ்கியும் ஏனோயோரும் ஆக்கிக் கொண்டுவிட்ட வெற்று ஜம்பமாகவோ விளையாட்டுக் கிலுகிலுப்பையாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. முதலாளித்துவ நாடாளுமன்றம் “பன்றித் தொழுவமே” ஆயினுங்கூட அதனைப் பயன்படுத்திக் கொள்ள, முக்கியமாய் நிலைமை புரட்சிகரமானதாய் இல்லை என்பது தெளிவாய்த் தெரியும் நேரத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ள திராணியற்றதாய் இருந்தது என்பதற்காக அராஜகவாதிகளிடம் இருந்து தயவு தாட்சண்யமின்றி முறித்துக் கொள்ள மார்க்சுக்குத் தெரிந்து இருந்தது. அதேபோது நாடாளுமன்ற முறையை மெய்யாகவே புரட்சிகரமான பாட்டாளி வர்க்க நிலையில் இருந்து விமர்சிக்கவும் அவருக்குத் தெரிந்து இருந்தது.” 34

                அரசு உலர்ந்து உதிர்வது பற்றி, மார்க்ஸ், எங்கெல்ஸ் கருத்துக்களை ஒட்டி லெனின் கூறுகிறார். அரசு உலர்ந்து உதிர்கிறது என்னும் தொடர் நன்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. படிப்படியாய் நடந்தேறும் தன்மையையும் தன்னியல்பாய் தானே நடந்தேறும் தன்மையும் குறிப்பிடுவதாக இச்சொல் இருக்கிறது. சோஷலிச சமூகம் கடந்து கம்யூனிச சமூகம் வந்தடையும்போது அரசு உலர்ந்து உதிரும்.

“முடிவில், கம்யூனிசம் ஒன்று மட்டும்தான் அரசை அறவே தேவையற்றதாக்கும். ஏனெனில் கம்யூனிசத்தில் அடக்கப்பட வேண்டியவர்கள் யாரும் இல்லை- ஒரு வர்க்கம் என்ற பொருளில், மக்களில் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு எதிராய் முறையான பேராட்டம் நடத்துவது என்ற அர்த்தத்தில் “யாரும் இல்லை”.

நாங்கள் கற்பனாவாதிகளல்ல, தனி நபர்கள் அடாச்செயல்கள் புரியக்கூடும், இது சாத்தியமே, தவிர்க்க முடியாததே என்பதையோ, இத்தகைய அடாச்செயல்களைத் தடுத்து நிறுத்துவது அவசியமே என்பதையோ நாங்கள் ஒரு போதும் மறக்கவில்லை. ஆனால் முதலாவதாக, அடக்குவதற்கான ஒரு தனிவகைப் பொறியமைவு, ஒரு தனிவகை இயந்திரம் இதற்குத் தேவையில்லை, ஆயுதமேந்திய மக்கள் தாமே இதனைச் செய்துவிடுவார்கள்- நாகரிகமடைந்த மக்கள் திரள் எதுவும் நவீன சமூகத்தில் உடனே தலையிட்டு அடிதடிச் சண்டையை நிறுத்துவது போல, அல்லது பெண் ஒருத்தி தாக்கப்படுவதைத் தடுப்பது போல, அவர்கள் இதனைச் சுலபமாகவும் உடனடியாகவும் செய்து விடுவார்கள். இரண்டாவதாக, சமூக ஒட்டுறவுக்குரிய விதிகளை மீறுவதால் வரும் விளைவான இந்த அடாச்செயல்களின் அடிப்படை சமூகக் காரணம் மக்கள் உட்படுத்தப்பட்டுள்ள சுரண்டலும் அவர்களை வதைக்கும் இல்லாமையும் வறுமையுமேதான் என்று நமக்குத் தெரியும்.

இந்தப் பிரதான காரணம் நீக்கப்பட்டதும் அடாச்செயல்கள் தவிர்க்க முடியாதவாறு “உலர்ந்து உதிரத்” தொடங்கிவிடும். எவ்வளவு விரைவாய், எந்த வரிசையில் நடந்தேறும் என்பது தெரியாது, ஆனால் அவை உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பது நமக்குத் தெரியும். அவை உலர்ந்து உதிரும்போது அரசும் உலர்ந்து உதிரும்” 35


                சோஷலிசப் புரட்சி நெருங்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு அரசு பற்றிய மார்க்ஸ், எங்கெல்ஸ் கருத்துக்களை தொகுத்தும் வளர்த்தும் இந்நூலைப் படைத்தார் லெனின்.

                புரட்சிகர சூழலையும், தற்போதைய புறநிலை அவ்வாறு இருப்பதையும் லெனின் சுட்டிக்காட்டி அதற்கு ஏற்ப அகநிலை மாற்றமாக பாட்டாளி வர்க்கத்தின் ஆயுத எழுச்சிக்கு உத்வேகம் ஊட்டுகிறார்.

                லெனின் 1915ஆம் ஆண்டு புரட்சிகர சூழ்நிலையைப் பற்றி எழுதியுள்ளார். புரட்சிகர சூழல் அனைத்தும் புரட்சியை தோற்றுவித்துவிடுவதில்லை என்றும் புரட்சி நடைபெறுவதற்கான புற அக நிலைமைகளை விவரிக்கிறார். புரட்சி சாத்தியமாக புறநிலை அவசியமானது, எல்லா புறநிலையும் புரட்சியை சாத்தியப்படுத்தாது, அதற்கான அகநிலையும் புரட்சிகரமாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும். அதே போல் தனிப்பட்ட குழுக்கள், கட்சிகள், வர்க்கங்களின் விருப்பம் மட்டும் புரட்சியை உண்டாக்கி விட முடியாது, அகநிலையை புரட்சிகரமாக மாற்றும் பொருளாயத சக்தியான புறநிலைமைகள் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்.

“புரட்சிகரச் சூழ்நிலை இல்லையேல் புரட்சி சாத்தியமன்று, அதேபோது புரட்சிகரச் சூழ்நிலை ஒவ்வொன்றும் புரட்சியை எழச் செய்ய வேண்டுமென்பதும் இல்லை- மார்க்சியவாதிக்கு இது மறுக்க முடியாத ஒன்று. பொதுவாகப் பேசுமிடத்து, புரட்சிகரச் சூழ்நிலை என்பதற்கான அறிகுறிகள் யாவை? எந்தத் தவறும் இழைக்கவில்லை என்கிற நிச்சயத்துடன் நாம் பின்வரும் மூன்று பிரதான அறிகுறிகளைக் குறிப்பிடலாம்.

1) ஆளும் வர்க்கங்கள் தமது ஆட்சியை எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து நடத்திச் செல்வது சாத்தியமற்றதாகுதல், “மேல் வர்க்கங்களிடையே” ஏதேனும் ஒரு வடிவத்தில் நெருக்கடி ஏற்பட்டு, ஆளும் வர்க்கத்தினுடைய கொள்கை நெருக்கடிக்கு உள்ளாகி, இதன் விளைவாய் வெடிப்பு உண்டாகி ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய அதிருப்தியும் ஆத்திரமும் இவ்வெடிப்பின் வழியே பீறிட்டெழுதல். புரட்சி நடைபெறுவதற்கு, பழைய வழியில் வாழ “அடிமட்டத்து வர்க்கங்கள் விரும்பாதது” மட்டும் சாதாரணமாகப் போதாது, பழைய வழியில் வாழ “மேல் வர்க்கங்களுக்கு முடியாமல் போவதும்” அவசியமாகும்.

2) ஒடுக்கப்படும் வர்க்கங்களுடைய துன்பதுயரமும் வறுமையும் வழக்கமாக இருப்பதைக் காட்டிலும் மேலும் கடுமையாகிவிடுதல்.

3) மேற்கண்ட காரணங்களின் விளைவாய் மக்கட் பெருந்திரளினரது செயற்பாடு கணிசமாய் அதிகரித்துவிடுதல், மக்கட் பெருந்திரளினர் “சமாதான காலத்தில்” தாம் சூறையாடப்படுவதற்கு முறையிடாமலே இடமளிப்பவர்களாயினும், கொந்தளிப்பான காலங்களில், வரலாறு படைக்க வல்ல சுயேச்சைச் செயலில் இறங்கும்படி நெருக்கடி நிலைமை யாவற்றாலும் மற்றும் “மேல் வர்க்கங்களாலுங்கூட” இழுத்து விடப்படுகிறார்கள்.

தனிப்பட்ட குழுக்கள், கட்சிகளின் சித்தத்தை மட்டுமின்றி, தனிப்பட்ட வர்க்கங்களின் சித்தத்தையும் சார்ந்திராத இந்த எதார்த்தப் புறநிலை மாறுதல்கள் இல்லாமல், பொதுவாகப் புரட்சி சாத்தியமன்று. இந்த எதார்த்தப் புறநிலை மாறுதல்கள் யாவும் சேர்ந்த ஒட்டுமொத்தமே புரட்சிகரச் சூழ்நிலை எனப்படுவது.” 36

                புரட்சி வெற்றி பெற வேண்டுமாயின் அது சதியாலோசனையாகவோ, ஒரு கட்சியைச் சார்ந்ததாகவோ இருக்கக்கூடாது என்கிறார் லெனின். முன்னேறிய வர்க்கத்தின் மீதான நம்பிக்கையையும், மக்களின் எழுச்சியைம் சார்ந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் எதிரியின் அணிகளிலும் உறுதியற்ற ஊசலாட்டங்கள் தோன்றியிருக்க வேண்டும். இவ்விதமான சூழ்நிலையில்தான் ருஷ்யாவில் காணப்பட்டது, ஆயுத எழுச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளே பிளான்கிவாதத்திடம் இருந்து மார்க்சியம் வேறுபடுகிறது என்கிறார்.

                பிளான்கிவாதம் என்பது, பிரெஞ்சு கற்பனாவாதக் கம்யூனிஸ்ட்டான பிளான்கி என்பவரின் கருத்தாகும். கூலி அடிமை நிலையில் இருந்து விடுபட வேண்டுமானால், பாட்டாளி வர்க்கப் போராட்டத்தால் ஏற்படாது, சிறுபான்மையினரான அறிவுத்துறையினரினுடைய சிறுகுழுவின் சதியினால்தான் ஏற்படும் என்பதே அவரின் கருத்தாகும். இது அப்பட்டமான இடதுபோக்காகும்.

“புரட்சி எழுச்சி வெற்றிக்கு வழிவகுக்க வேண்டுமானால் அது சதியாலோசனை மீதோ மற்றும் ஒரு கட்சியினையோ நம்பிச் சார்ந்திருக்கக் கூடாது. மாறாக முன்னேற்றமான வர்க்கத்தின்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இதுவே முதல் நிபந்தனை.

புரட்சி எழுச்சி மக்களின் புரட்சிகரமான கிளர்ச்சியைச் சார்ந்திருக்க வேண்டும். இது இரண்டாவது நிபந்தனை.

புரட்சி எழுச்சி வளர்ந்து வரும் புரட்சியின் வரலாற்றின் திரும்பு முனையைச் சார்ந்திருக்க வேண்டும். அப்பொழுது மக்களின் முன்னேற்றமான அணிகளின் செயல்பாடு அதன் உச்சத்தில் இருக்கும், எதிரியின் அணிகளிலும் புரட்சியின் பலவீனமான அரை-மனது மற்றும் உறுதியற்ற நண்பர்களின் அணிகளிலும் ஊசலாட்டங்கள் ஆக வலுவாக இருக்க வேண்டும். இது மூன்றாவது நிபந்தனை.”37

                ஜுலை மாதத்திற்குப் பிறகு போல்ஷிவிக் கட்சியின் சட்ட வழியிலான நடவடிக்கை தடைப்பட்டது. அனைத்து அதிகாரங்களையும் முதலாளித்துவம் கைப்பற்றிக் கொண்டது. அது பலவீனமாகிப்போன சோவியத்தை முழுமையாக ஒழித்துக்கட்டுவதில் இறங்கியது.  இருந்தாலும் கெரன்ஸ்கியின் இடைக்கால அரசு கட்டுக்கோப்பாக செயற்படுவதாக சொல்லிவிட முடியாது. ராணுவத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியவில்லை. கட்டுப்படுத்துவதற்கு கர்னிலோவ் என்ற முரட்டு நபரை தளபதியாக்கியது.

       புரட்சியை ஒடுக்குவதற்காக, தொழிலாளர்களை பட்டினி போடுவதற்கு முதலாளிகள் திட்டமிட்டனர். தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் வேலையற்றவர்களானார்கள், குடும்பங்கள் பட்டினியால் வாடியது. இடைக்கால அரசின் செயற்பாட்டில் நம்பிக்கை இழந்த முதலாளித்துவ வர்க்கம் கர்னிலோவைக் கொண்டு ஒரு ராணுவ சர்வாதிகாரத்தை ஏற்படுத்துவதற்கு முயன்றது. இதன் மூலம் பிப்ரவரி புரட்சியின் மூலம் கிடைத்த நன்மைகளை எல்லாம் ஒழித்துவிட்டு மீண்டும் முடியரசை நிலைநாட்டுவதற்கும், ராணுவ சர்வாதிகாரத்தை கொண்டுவருவதற்கும் முயன்றார்கள். இந்த சர்வாதிகாரத்தின் நோக்கம், பெத்ரோகிராத்தைப் பிடித்துக் கொள்வது, போல்ஷிவிக் கட்சியை நசுக்குவது, சோவியத்துக்கள் அனைத்தையும் கலைப்பது, மறுபடியும் முடியரசை நிறுவுவது என்பதாகும்.

தலைமறைவாய் இருந்த லெனின் இதனை கண்ணுங்கருத்துமாக கவனித்துக் கொண்டிருந்தார். ராணுவப் புரட்சிக்கு எதிராக போராடுவது அவசியம் என்று கருதினார்.

ராணுவப் புரட்சிக்கு எதிராக போல்ஷிவிக்குகள் மக்களைத் திரட்டினர். நகரத் தொழிலாளர்கள் செங்காவலர் படைப்பிரிவுகளை விரைவில் நிறுவினர், புரட்சி கமிட்டிகள் பல இடங்களில் அமைக்கப்பட்டது. ராணுவத் தாக்குதலை முறியடிப்பதற்காக செங்காவலர்களுடன் பெத்ரோகிராத் சாலைகளுக்குச் சென்றனர். குதிரைப்படைகள் குவிக்கப்பட்டிருந்தது. போல்ஷிவிக்குகள் இந்த ராணுவப் புரட்சியின் சூழ்ச்சிகளை குதிரைப் படையினருக்கு விளக்கினர். தாக்குவதற்கு கொடுக்கப்பட்ட அதிகாரியின் ஆணைகளை படைவீரர்கள் ஏற்க மறுத்தனர். முதலாளித்துவ வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட உள்நாட்டுப் போர் படுதோல்வி கண்டது.

                சோவியத்துக்களுக்கு மறுதேர்தல் நடைபெற்றது, இத்தேர்தலில் போல்ஷிவிக்குகள் பெரும்பான்மை வாக்குகள் பெற்றனர். பெத்ரோகிராத், மாஸ்கோ சோவியத்துகள் போல்ஷிவிக்குகள் பெரும்பான்மை கொண்டதாக மாறியது.

                புரட்சி எழுச்சியை தொடராமல் தடுக்க நினைத்த கெரன்ஸ்கி புதிய கூட்டணியை ஏற்படுத்த காடெட்டுகளை அரசில் சேர்த்துக் கொண்டார். ராணுவ சதியை முறியடித்த நிலையில் சோவியத்துகள் புத்துயிர்பெறத் தொடங்கின. “அனைத்து அதிகாரமும் சோவியத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என்ற முழக்கத்தை மீண்டும் போல்ஷிவிக்கள் கொணர்ந்தனர். இப்போது இந்த முழக்கம் எழுச்சி முழக்கமாக, இடைக்கால அரசை ஆயுதப் போராட்டத்தால் வீழ்த்தி அனைத்து அதிகாரமும் சோவியத்திடம் சேர்க்கும் முழக்கமாக புத்துயிர் பெற்றது. இம்முழக்கத்தை பெத்ரோகிராத் சோவியத் ஆகஸ்ட் 31ஆம் நாள் ஏற்றுக் கொண்டது. மாஸ்கோ சோவியத் செப்டெம்பர் 5ஆம் நாள் ஏற்றுக் கொண்டது. இதே போல் மற்ற சோவியத்துக்களும் ஏற்கத் தொடங்கின.

                போல்ஷிவிக்குகளின் செல்வாக்கு பெருகத் தொடங்கியது. சோஷலிசப் புரட்சியாளர்கள் மற்றும் மென்ஷிவிக்குகளின் மீதான நம்பிக்கை குறைந்து அவர்களின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. சோவியத்துகளில் இருந்து இவர்களின் பிரதிநிதிகள் வெளியேறத் தொடங்கினர், அந்த இடத்திற்கு போல்ஷிவிக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சோவியத்துகள் போல்ஷிவிக்குகளின் கட்டுப்பாட்டிற்குள் வரத்தொடங்கின.

       போல்ஷிவிக்கின் ஆறாவது காங்கிரசில் முன்னறிந்து கூறியபடி தொழிலாளி வர்க்கம் புரட்சிப் போராட்டத்தின் தலைமையை ஏற்றது. செப்டம்பர் மாதத்தில் லெனின் தலைமறைவில் இருந்து கொண்டு பெத்ரோகிராத், மாஸ்கோ சோவியத்துக்கும், போல்ஷிவிக் கட்சியின் மையக் கமிட்டிக்கும் கடிதங்களை அனுப்பினார். இக்கடிதங்கள் ஆயுதப் போராட்டத்துக்கு தயார்படுத்துவதாக இருந்தது. அக்கடிதங்களில் குறிப்பிடத்தக்கவை, போல்ஷிவிக்குகள் கட்டாயம் ஆட்சி அதிகாரம் மேற்கொள்ள வேண்டும். (சோவியத், கட்சி கமிட்டிக்கு எழுதியது) மார்க்சியமும் கிளர்ச்சியும், (கட்சியின் மையக் கமிட்டிக்கு எழுதியது) இதே நேரத்தில் நெருக்கடி முற்றியது, போல்ஷிவிக்குகள் நீடித்து அரசாள ஆடியுமா? போன்ற கட்டுரைகளையும் லெனின் எழுதினார்.

                ஆட்சி அதிகாரம் மேற்கொள்ள வேண்டும் என்ற கடிதத்தில் லெனின், தற்போது பெரும்பான்மையான மக்கள் போல்ஷிவிக்குகள் பக்கம் வந்திருப்பதையும், மே 6 முதல் செப்டம்பர் 12 வரையிலான நிகழ்ச்சிகள் இதனையே நிரூபிப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார். இதுவரை அமைக்காத அரசியல் நிர்ணய சபைக்காக காத்திருக்க வேண்டியதில்லை. போல்ஷிவிக்குகள் ஆட்சி அதிகாரத்தை பிடித்தால் மட்டுமே அரசியல் நிர்ணய சபை கூட்டப்படுவதை உறுதி செய்யமுடியும். சோஷலிஸ்ட் புரட்சியாளர் மற்றும் மென்ஷிவிக்குகளின் தள்ளாட்டங்களைக் கண்டு மக்கள் சோர்ந்துவிட்டனர்.  போல்ஷிவிக்குகளுக்கு சம்பிரதாயமான பெரும்பான்மை கிடைப்பதற்குக் காத்துக் கொண்டிருப்பது வெகுளித்தனமே என்பதை வலியுறுத்தி போல்ஷிவிக்குகளின் தற்போதைய கடமை ஓர் ஆயுதமேந்திய புரட்சியைக் கொண்டு வருவது என்றார்.

                போல்ஷிவிக்கு மையக் கமிட்டிக்கு எழுதிய மார்க்சியமும் கிளர்ச்சியும் கடிதத்தில், புரட்சிக்கான புறநிலையும் அகநிலையும் கனிந்த தருணமாக ருஷ்யா தற்போது இருப்பதை குறிப்பிடுகிறார். குறிப்பிடும் போது புரட்சி எழுச்சி வெற்றியடைவதற்கு லெனின் மூன்று நிபந்தனைகளைக் கூறுகிறார்.

“இந்த நிபந்தனைகள் நிலவும் போது, புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருத மறுப்பது மார்க்சியத்திற்குத் துரோகம் செய்வதாகும், புரட்சிக்குத் துரோகம் செய்வதாகும்.

நிகழ்ச்சிகளின் முழுமையான போக்கும், புரட்சி எழுச்சி நாள் நிகழ்ச்சி நிரலில் புறநிலை நோக்கில் வைத்திருக்கும் ஒரு தருணம் குறிப்பாயும் இன்றைய தருணமே.” 38

                ஜுலை மாதத்திற்கும் இந்த செப்டம்பர் மாத்திற்கும் உள்ள வேறுபாட்டை அதாவது அன்றைக்கு ஆயுதப் போராட்டத்தை தொடங்கியிருந்தால், தொழிலாளர்களையும் போர்வீரர்களையும் கலகக்காரர்கள் என்று இரக்கமின்றி தாக்கி புரட்சியைத் தோல்வியடையச் செய்திருப்பர். புரட்சி எழுச்சியின் வெற்றிக்கான எதார்த்த சூழ்நிலைமைகள் அன்று இல்லை என்றார் லெனின். அதனை, சற்று விளக்கமாகவே விவரிக்கிறார். ஜுலை மாதத்தில் புரட்சியின் முன்னணிப் படையான வர்க்கத்தின் ஆதரவு முழுமையாக இல்லை. பெத்ரோகிராத், மாஸ்கோவின் தொழிலாளர் படைவீரர்களிடையே பெரும்பான்மையினர் அப்போது இல்லை. இப்போது இரண்டு சோவியத்துகளிலும் பெரும்பான்மை இருக்கிறது. இது ஜுலை ஆர்ப்பாட்டம் மற்றும் ராணுவ கலகத்தின் அனுபவத்தால் உருவானது.

                ஜுலை மாதத்தில் நாடு தழுவியதான புரட்சிகர கிளர்ச்சி ஏற்படவில்லை. ராணுவ கலவரத்திற்குப் பிறகு நிலைமை மாறியிருக்கிறது. பல இடங்களில் சோவியத்துக்களின் அதிகாரம் தற்போது பெறப்பட்டுள்ளது. ஜுலை மாதத்தில் எதிரிகளின் அணியில் ஊசலாட்டங்கள் இல்லாது இருந்தது. தற்போது இடைக்கால அரசிலும், அதன் ஆதரவாளர்கள் மத்தியிலும் ஊசலாட்டங்கள் தோன்றிவிட்டன.

                ஜுலை மாதத்தில் புரட்சி ஏற்பட்டிருந்தால் அதனை தக்கவைத்திருக்க முடியாது, பெத்ரோகிராத், மாஸ்கோ சோவியத்துகள் நம்மிடம் இருந்தும் பெரும்பான்மையினராக இல்லாத நிலைமையினால் பெற்ற அதிகாரத்தை நீடித்து வைத்திருக்க முடியாது. தற்போது ஒரு வர்க்கத்தின் பெரும்பான்மையினது ஆதரவு திரட்டப்பட்டுள்ளது, இடைக்கால அரசின் மீதான மக்களின் நம்பிக்கை போய்விட்டது. நம்பிக்கை இழந்த மக்களை நம்பிக்கையோடு திரட்டிச் செல்லும் ஆற்றல் பெற்ற வர்க்கம் இப்போது இருக்கிறது. போல்ஷிவிக்குகளின் வெற்றி மட்டுமே சமாதானம், விவசாயிகளுக்கு நிலம், பட்டினிக்கு உணவு ஆகியவற்றைப் பெற்றுத் தரமுடியும் என்பதை இன்று மக்கள் நம்பிக்கையுடன் நம்பக்கத்தில் இருக்கின்றனர்.

       தற்போதைய புரட்சி யாரால், யாருக்கு எதிராக நடைபெறுகிறது என்பதை லெனின் கூறுகிறார்:-
“இப்போது பக்குவம் அடைந்துவரும் புரட்சி, பாட்டாளி வர்க்கத்தின், பெரும்பான்மையான விவசாயி மக்களின் குறிப்பாக ஏழை விவசாயிகளின் புரட்சியாகும். இது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான, அதன் கூட்டாளியான ஆங்கில-பிரெஞ்சு நிதி மூலனத்துக்கு எதிரான, போனப்பார்த்வாதி-கெரென்சியால் தலைமை தாங்கப்படும் அதன் அரசு பொறியமைவுக்கு எதிரான புரட்சியாகும்.” 39

                புரட்சி நெருங்கும் தருவாயில், போல்ஷிவிக்குகள் ஒருக்காலும் அரசு அதிகாரம் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அதற்கான துணிவு அவர்களிடம் இல்லை. அப்படி கைப்பற்றினாலும் தொடர்ந்து அதனை அவர்களால் தக்கவைத்துக் கொள்ள முடியாது என்று போல்ஷிவிக்குகளின் எதிராளிகள் அனைவரும் கருதினர். இதற்கு பதிலளிக்கும் முகமாக லெனின் போல்ஷிவிக்குகள் நீடித்து அரசாள முடிமா? என்ற சற்றுப் பெரிய கட்டுரையை எழுதினார்.

       போல்ஷிவிக்குகள் நீடித்து அரசாள முடியுமா என்ற விவாதத்தில் ஆறு வாதங்கள் வைக்கப்பட்டன.

1)பாட்டாளி வர்க்கம் “நாட்டின் இதர வார்க்கங்களிடம் இருந்து தனிமைப்பட்டிருக்கிறது.”

2)அது “ஜனநாயகத்தின் உண்மையான உயிர்ப்புள்ள சக்திகளிடம் இருந்தும் தனிமைப்பட்டிருக்கிறது.”

3)அது “நிர்வாக முறையிலே அரசாங்க இயந்திரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது”

4)அந்த அரசாங்க இயந்திரத்தை “இயக்கவும்” அதனால் முடியாது.

5)“நிலைமை மிகவும் சிக்கலானது”

6)“பாட்டளி வாக்க சர்வாதிகரத்தை மட்டுமின்றி, அத்துடன் புரட்சி முழுவதையும் அப்படியே வெள்ளத்தில் அடித்துச் செல்லும்படியான எதிர்ப்புச் சக்திகளின் நெருக்குதல் பூராவையும்” அதனால் “எதிர்த்து நிற்கவும் முடியாது” 40
               
                இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் தமது நூலில் லெனின் பதிலடி கொடுத்திருக்கிறார். இந்தக் கேள்விகளின் சாரத்தை அறிந்து தான் தொழிலாளர்களும், விவாசாயிகளும் இப்புரட்சியில் ஈடுபடுகின்றனர் என்பதை இந்தக் கேள்வியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஒருவித பிரமைகளை ஏற்படுத்தவே முயல்கின்றனர்.

“நிலைமை மிகவும் சிக்கலானது” என்ற ஐந்தாம் கேள்விக்கான பதிலின் தொடக்கத்தில் லெனின் கூறுகிறார்:-
“ஆஹா, எப்படிப்பட்ட அறிஞர்கள் இவர்கள்! ஒரு வேளை “நிலைமை மிகவும் சிக்கலானது” இல்லாமற்போனால் அவர்கள் புரட்சியுடன் சமரசம் செய்து கொள்ளத் தயாராயிருப்பார்கள் போலும்.

அப்படிப்பட்ட புரட்சிகள் ஒருபொழுதும் நடப்பதில்லை. அவ்விதமான புரட்சிக்கு ஏங்கிப் பெருமூச்சு விடுவது முதலாளித்துவப் படிப்பாளர்களின் பிற்போக்கு அழுகை தவிர வேறொன்றுமில்லை. மிகவும் சிக்கலானதல்ல என்று தோன்றும் நிலைமையில் புரட்சி துவங்கினாலும், அப்புரட்சியின் வளர்ச்சி எப்பொழுதும் அசாதாரணச் சிக்கலான நிலைமையை உண்டாக்கும்.
மிகவும் சிக்கலான நிலைமையில்லாது போனால் புரட்சியே இருக்காது. ஓநாய்களுக்கு பயந்தவர்கள் காட்டிற்குள் செல்லக் கூடாது.

ஐந்தாவது வாதத்தில் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் பொருளாதார அல்லது அரசியல் பொருளோ, வேறு ஏதாவது பொருளோ அதில் ஏதுமில்லை. புரட்சியால் பீதியடைந்து துன்பப்படும் மக்களின் பெருமூச்செறிவுதான் அதில் அடங்கியுள்ளது.” 41

                இந்நூலின் இறுதிப்பகுதியில், தற்போதைய ருஷ்யப் புரட்சி எப்படி சோஷலிசப் புரட்சியாக பரிணமித்துள்ளது என்பதை மிகவும் சுருக்கமாக கூறுகிறார்.

“நியாயம் மட்டிலும், சுரண்டலுக்கு எதிராகவுள்ள பொது மக்களின் கோபம் மட்டிலும் அவர்களைச் சரியான சோஷலிசப் பாதைக்கு ஒருபொழுதும் கொண்டுவந்திருக்க முடியாது. ஆனால் இப்பொழுது முதலாளித்துவ அமைப்பு முறையின் காரணமாக பெரிய வங்கிகள், சிண்டிக்கேட்டுகள், ரயில்வேக்கள், முதலியவற்றைக் கொண்ட பொருளாயத சாதனம் வளர்ந்திருக்கிறது, வளர்ச்சியில் முன்னேறியுள்ள நாடுகளின் பெருத்த அனுபவம் இப்போது மிக அற்புதமான இயந்திரச் சாதனங்களை (அவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியாதபடி முதலாளித்துவம் இடைஞ்சல் செய்து வருகிறது) சேகரித்து வைத்துள்ளது. வர்க்க உணர்வுள்ள தொழிலாளிகள், எல்லா உழைப்பாளிகளின், சுரண்டப்பட்டோரின் ஆதரவுடன், இந்தப் பொருளாயத சாதனத்தைத் திட்டப்படி கைப்பற்றிக்கொண்டு அதை இயக்கிச் செல்வதற்காக இரண்டரை லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட கட்சியை இப்போது ஒன்று திரட்டியுள்ளனர்.

ஆக, இப்பொழுது இந்த நிலைமைகள் எல்லாம் இருக்கிற காரணத்தால், போல்ஷிவிக்குகள் தங்களிடையே பீதிக்கு இடங்கொடுக்காவிட்டால், அவர்கள் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதில் வெற்றி பெறுவார்களேயானால், உலக சோஷலிசப் புரட்சி வெற்றி பெறும்வரை அவர்கள் அந்த அதிகாரத்தைத் தங்களது கையில் நீடித்து வைத்திருப்பதை உலகில் எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது.” 42
               
                ருஷ்யாவில் சோஷலிசப் புரட்சி தோன்றுவதற்கான புறநிலை அகநிலைக் காரணங்களைத் தொகுத்தளித்துள்ளார். இந்த முடிவுகளின்படி நெருக்கடி முற்றியது என்ற கட்டுரையை லெனின் செப்டம்பர் இறுதியில் எழுதினார்.

                செப்டம்பர் இறுதியிலேயே ருஷ்யப் புரட்சியினை லெனின் உறுதிப் படுத்திவிட்டார். புரட்சிக்கான அகநிலை தயாரிப்புகளை லெனின் தொகுக்கிறார். பரந்து விரிந்த மக்களின் அதிருப்தி, ஏகாதிபத்தியப் போர் நீட்டிப்பதால் அதன் விளைகளால் மக்களுக்கு ஏற்பட்ட துன்பதுயரங்கள் விவசாயிகளை எழுச்சியுறச் செய்திட்டது. இந்த எழுச்சியை இடைக்கால முதலாளித்துவ அரசு ராணுவத்தின் மூலம் ஒடுக்க முனைகிறது.

“… ஒரு நாடுதழுவிய நெருக்கடி முற்றிவிட்டது என்பதையே எல்லா அறிகுறிகளும் சுட்டிக் காட்டுகின்றன.” 43

                இந்நிலையில் சிலர், சோவியத்துகளின் காங்கிரசுக்காக காத்திருக்க வேண்டும் என்று கோருகின்றனர். இதன் தவறை உணர்ந்து வெளிவர வேண்டும்.

“இல்லையேல், போல்ஷிவிக்குகள் நிரந்தர வெட்கக் கேட்டால் தலைகுனிவுக்கு உள்ளாகி, ஒரு கட்சி என்ற முறையில் தம்மைத்தாமே அழித்துக்கொள்வார்கள்.

இத்தகைய தருணத்தைத் தவறவிட்டு சோவியத்துகளின் காங்கிரசுக்காக “காத்து நிற்பது” அப்பட்டமான முட்டாள்தனம் அல்லது படுமோசமான நம்பிக்கைத் துரோகமாகும்.” 44

                புரட்சியின் வெற்றி எந்த வகையில் உத்தரவாதம் அளிக்கிறது என்பதை சூழ்நிலைமைகளை ஒருங்கிணைந்து படம்பிடித்துகாட்டுகிறார் லெனின்:-
“புரட்சி எழுச்சியின் வெற்றி இப்போது போல்ஷிவிக்குகளுக்கு உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது, 1) நாம் (சோவியத் காங்கிரசுக்கு “காத்து நிற்காமல்” இருந்தால்) மூன்று முனைகளிலிருந்து- பெத்ரோகிராதில் இருந்தும், மாஸ்கோவில் இருந்தும், பால்டிக் கடற்படையில் இருந்தும் ஒரு திடீர் தாக்குதல் தொடுக்க முடியும், 2) நமக்கு ஆதரவை உத்தரவாதம் செய்யும் குழுக்கள் உள்ளன, நிலவுடைமையாளர்களை எதிர்த்து எழுச்சிப் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அடக்கும் அரசாங்கம் வீழ்க! 3) நாட்டில் நமக்குப் பெரும்பான்மை உள்ளது, 4) மென்ஷிவிக்குகள் மற்றும் சோஷலிஸ்டு புரட்சியாளர்கள் மத்தியில் முழுமையான கட்டுக்குலைவு ஏற்பட்டுவிட்டது, 5) நடைமுறை ஏற்பாட்டுப்படி நாம் மாஸ்கோவில் ஆட்சி அதிகாரத்தை மேற்கொள்ளும் நிலையில் இருக்கிறோம், 6) நம்வசம் பெத்ரோகிராதில் ஆயிரக்கணக்கான ஆயுதமேந்திய தொழிலாளர்களும் படைவீரர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ராணுவத் தலைமை அலுவலகத்தையும் மாரிக் கால மாளிகையையும் தொலைபேசி இணைப்பகத்தையும், பெரிய அச்சகங்களையும் உடனே கைப்பற்ற முடியும்.” 45

                இதே நேரத்தில் சர்வதேச நிலைமையும் புரட்சிகரமாக இருப்பதை போல்ஷிவிக் தோழர்களுக்கு எழுதிய கடிதத்தில் லெனின் எடுத்துக்காட்டுகிறார். செக் தொழிலாளர்களின் திடீர் எழுச்சி நம்பமுடியாத அளவுக்கு கொடிய அடக்குமுறையால் கையாளப்பட்டிருக்கிறது. இது அரசாங்கத்தின் பயத்தையே வெளிப்படுத்துகிறது. இத்தாலியிலும் துரீனிலும் மக்கள் திரளின் ஒரு திடீர் கிளர்ச்சி காணப்படுகிறது. உணவுப் பற்றாக்குறை தொடர்பாக ஓர் ஆர்ப்பாட்டம் அங்கே ஏற்பட்டது. அது பொது வேலைநிறுத்தமாக மாறியது. தெருக்களில் தடையரண்கள் எழுப்பினர். துரீன் சுற்றுவட்டாரம் எழுச்சியாளர் வசம் வந்தது. இதனை ஒடுக்குவதற்கு அரசு ராணுவத்தை ஏவியது. ராணுவ சட்டம் நடைமுறையாக்கப்பட்டது.

                இவற்றில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாக ஜெர்மன் கடற்படையில் ஏற்பட்ட கிளர்ச்சியை குறிப்பிட வேண்டும். ஜெர்மன் கடற்படையின் எதிர்ப்புக் கிளர்ச்சி, மாபெரும் நெருக்கடியின், உலகப் புரட்சியின் வளர்ச்சியின் அறிகுறியாகும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லை என்கிறார் லெனின்.

                அதே நேரத்தில், ருஷ்யப் புரட்சியை அடக்குவதற்கு சர்வதேச ஏகாதிபத்தியவாதிகளும் சூழ்ச்சி செய்கின்றனர். ஏகாதிபத்திய ராணுவ நடவடிக்கையின் மூலம் ருஷ்ய முதலாளிகளுக்கு பிரதிகூலமான வகையில் சமாதானம் செய்து கொள்ளலாம் என்ற போக்கும் இருக்கிறது. ருஷ்யாவில் உள்நாட்டு கெரன்ஸ்கி மீதிருந்த வெகுளித்தனமான மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்திய குட்டிமுதலாளித்துவச் சமரச கட்சிகள் அறவே கையாலாகாதவையாகி விட்டன. மாஸ்கோவில் நடைபெற்ற தேர்தலில் போல்ஷிவிக்குகள் 49 விழக்காடுகளுக்கு மேல் வாக்கு பெற்றனர். இடைக்கால அரசு மீது மக்களின் செல்வாக்கு சரிந்ததையே இது காட்டுகிறது. மேலும் கூறுகிறார்

“இந்த வாக்களிப்பின் மூலம் மக்கள், போல்ஷிவிக்களிடம் “தலைமை தாங்குகள், நாங்கள் உங்களைப் பின்பற்றுகிறோம்” என்று கூறியதைவிட அதிகத் தெளிவான கூற்று எதையும் கற்பனை செய்ய முடியுமா?” 46

புரட்சிகர புறநிலைகளும் அதற்கு ஏற்ப அகநிலையான மக்களின் விருப்பங்களும் இவ்வாறு இருக்க உடனே ஆயுதப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் லெனின். போல்ஷிவிக்குகள் கட்டாயம் ஆட்சி அதிகாரம் மேற்கொள்ள வேண்டும் என்று போல்ஷிவிக் கட்சி மையக் கமிட்டிக்கும், பெத்ரோகிராத், மாஸ்கோ கமிட்டிக்கும் எழுதிய கடிதம் முதற்கொண்டு அன்றைய லெனினது எழுத்துக்கள் ஆயுதக் கிளர்ச்சிக்கு அழைப்புவிடுவதாகவே இருந்தன.

“இன்றுள்ள கடமை பெத்ரோகிராதில், மாஸ்கோவில் (அதன் பிராந்தியம் உட்பட) ஓர் ஆயுதமேந்திய புரட்சிக் கிளர்ச்சியைக் கொண்டு வருவது, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது, அரசாங்கத்தை வீழ்த்துவது என்பதாக இருக்க வேண்டும்.” 47
               
“…சோவியத்துகளுக்கு இப்போது ஆட்சி அதிகாரத்தை மாற்றி வழங்குவது என்பது ஆயுதமேந்திய எழுச்சி என்றே பொருள்படும்…
..
..ஆயுதமேந்திய எழுச்சி அரசியல் போராட்டத்தின் ஒரு விசேஷ வடிவமாகும், விசேஷ விதிகளுக்குக் கட்டுப்பட்டதாகும், இதைக் குறித்துக் கவனமாகச் சிந்தித்தல் வேண்டும், “போரைப் போலவே அந்த அளவுக்கு முழுமையாகப் புரட்சி எழுச்சியும் ஒரு கலையாகும்” என்று எழுதிய போது காரல் மார்க்ஸ் (எங்கெல்ஸ்) இந்த உண்மையையே தனிச்சிறப்புடைய துலக்கத்துடன் வெளியிட்டார்.” 48

“ஒரு ஆயுதமேந்திய புரட்சி எழுச்சி தவிர்க்க முடியாதது என்பதையும், அதற்குரிய நேரம் முற்றும் கனிந்துவிட்டது என்பதையும் கவனித்த மையக் கமிட்டி எல்லா கட்சி அமைப்புகளும் அதற்கேற்ற வகையில் வழி நடத்தப்பட வேண்டும் என்று இந்த நோக்கு நிலையில் இருந்து எல்லா நடைமுறைப் பிரச்சினைகளையும் விவாதித்து முடிவு செய்யும்படி அவற்றுக்கு நெறிமுறை செய்துள்ளது” 49

                இந்த ஆயுதமேந்திய போராட்டத்துக்கு புரட்சிகர எழுச்சியை ஒரு கலையாக கையாள வேண்டும் என்று லெனின் வலியுறுத்துகிறார். இதற்கு “புரட்சி எழுச்சி என்பது ஒரு கலை” என்று நியூயார்க் பத்திரிகையில் மார்க்ஸ் எழுதியதாக லெனின் குறிப்பிடுகிறார். உண்மையில் இது எங்கெல்ஸ் எழுதியது, இந்தப் பத்திரிகையில் மார்க்சின் பெயரே செய்தியாளராக பதியப்பட்டுள்ளதால், எங்கெல்ஸ் எழுதிய இந்த கட்டுரை மார்க்ஸ் பெயரில் வெளிடப்பட்டது. பிற்காலத்தில் இவர்களின் கடிதங்களைப் படிக்கும் போது அறியப்பட்டது. இக்கட்டுரையை பத்திரிகைக்கு அனுப்பும் முன் மார்க்ஸ் முழுமையாக படித்தே அனுப்பியுள்ளார். அதனால் இதனை மார்க்ஸ், எங்கெல்ஸ் கருத்தான மார்க்சியம் என்பதில் என்ன சந்தேகம்?
      
       இந்தக் கால கட்டத்தில் எழுதிய எழுச்சிப் படைப்புகளில் எல்லாம் லெனின் புரட்சியை கலையாக கையாளுவதைப் பற்றி எழுதியுள்ளார்.

“… புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருத மறுப்பது மார்க்சியத்திற்குத் துரோகம் செய்வதாகும், புரட்சிக்குத் துரோகம் செய்வதாகும்.” 50

“… புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருத வேண்டும் என்ற மார்க்சின் கருத்தை நாம் சொல்லளவோடு மட்டும் ஏற்கவில்லை என்பதை நாம் காட்ட வேண்டும்” 51

“புரட்சி எழுச்சியை மார்க்சிய வழியில், அதாவது ஒரு கலையாகக் கருத வேண்டுமாயின் நாம் அதே நேரம் ஒரு விநாடியைக் கூட வீணாக்காமல் புரட்சிப் படைப்பிரிவுகளின் தலைமையகத்தை அமைக்க வேண்டும்….”52

“இன்றைய தருணத்தில் புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருதாவிட்டால் மார்க்சியத்தின்பால் மெய்ப்பற்றுடன் இருப்பதோ, புரட்சியின்பால் மெய்ப்பற்றுடன் இருப்பதோ சாத்தியமல்ல……”53

                புரட்சி ஏற்படும் தருணம் நெருங்கி வருவதால், லெனின் செப்டம்பர் மாதம் நடுவில் பெத்ரோகிராதுக்கு அண்மையில் இருக்க விரும்பி வீபர்க் என்கிற இடத்திற்கு சென்றார். ஆயுதமேந்திய எழுச்சிக்கான நேரம் வந்துவிட்டபடியால், அதற்கான ஏற்பாடுகளையும் வழிகாட்டுதலையும் லெனின் அருகில் இருந்து அளித்துக் கொண்டிருந்தார். அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன.

       அக்டோபர் 10ஆம் நாளன்று கட்சியின் மையக் கமிட்டியின் ரகசியக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்கு லெனின் வருகிறார் என்பதை அறிந்த கமிட்டி உறுப்பினர்கள் அவரை நேரில் காண ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். நரைமயிர் டோப்பாவில் ஒரு புதியவர் அங்கே வந்து பேசத் தொடங்கினார், அந்த மாறுவேடம் பூண்டவர் லெனின் என்பதை பேச்சில் இருந்து கண்டுகொண்டனர்.

லெனின் தனது கருத்தை முன்வைத்தார், இத்தருணம் புரட்சிக்கானதே, அது ஆயுதமேந்திய போராட்டமே. இதனை மையக் கமிட்டி ஏற்றது. காமினெவும், ஸினோவ்யெவும் மட்டுமே இந்தத் தீர்மானத்தை எதிர்த்தவர்கள். டிராட்ஸ்கி ஆயுதப் போராட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கவில்லை, ஆனால் சோவியத்துக்களின் இரண்டாவது காங்கிரசுக்குப் பிறகு பார்க்கலாம் என்று கருத்துரைத்தார். இதுகூட எழுச்சியை தடுக்கும் முயற்சியேயாகும். தாமதிப்பது பெரும் தவறுக்கு இடமளிக்கும் என்று லெனின் மறுதலித்தார்.

எழுச்சியின் தலைமைக்கு லெனின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1917ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாளன்று புரட்சிகர-ராணுவக் கமிட்டி போல்ஷிவிக் மையக் கமிட்டியின் வழிகாட்டுதலில் அமைக்கப்பட்டது. இது பெத்ரோகிராத் சோவியத்தின் அமைப்பாக செயற்பட்டது. கட்சியின் மையக் கமிட்டி, பீட்டர்ஸ்பர்க் கமிட்டி, பெத்ரோகிராத் சோவியத், ஆலைக் கமிட்டிகள், தொழிற்சங்கங்கள், ராணுவ அமைப்புகளின் பிரதிநிதிகள் இதன் உறுப்பினர்களாவார்கள்.

செங்காவலர் படைகளை உருவாக்குவது, தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குவது இந்த புரட்சிகர-ராணுவக் கமிட்டியின் வேலையாகும். போல்ஷிவிக் கட்சியின் மையக் கமிட்டி வழிகாட்டுதலின்படி ஆயுதமேந்திய புரட்சி எழுச்சிக்கு தயார்ப்படுத்துவதே இதன் முக்கியமான பணி. நெருங்கிவரும் புரட்சியின் வெற்றிக்கு தேவைப்படும் அனைத்து ஒழுங்கமைக்கும் வேலைகளையும் கவனித்துக் கொள்வது இதன் பெரும்பணியாகும்.

                அக்டோபர் 16ஆம் நாள், தொழிலாளர்களின் பிரிதிநிதிகளடங்கிய மையக் கமிட்டிக் கூட்டத்தில் மீண்டும் லெனின் சொற்பொழிவாற்றினார். பின்பு அனைவரையும் அழைத்து தாக்குதலைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டார். எழுச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சரிபார்த்தார்.

இந்த நேரத்தில் கட்சியால் தோற்கடிக்கப்பட்ட காமினெவ், ஸினோவ்யெவ் ஆகிய இருவரும் பெரும் துரோகம் புரிந்தனர். ஆயுதமேந்திய தாக்குதல் குறித்த மையக் கமிட்டியுடனான தங்களின் கருத்து வேறுபாட்டை பற்றி மென்ஷிவிக்குகளிள் பத்திரிகையில் அறிக்கை வெளியிட்டனர். இதன் மூலம் கட்சியின் ரகசிய தாக்குதலைப் பற்றி வெளிப்படுத்தியதினால் பகைவர்கள் ரகசியத்தை அறிந்து கொண்டனர். இடைக்கால அரசு இதனைப் பயன்படுத்திக் கொண்டது.

                இந்த துரோகத்தை லெனின் கோபம் கொப்பளிக்க சாடினார்.

“நமது கட்சியின் மையக் கமிட்டி எடுத்த, புரட்சி எழுச்சி பற்றிய முடிவையும், புரட்சி எழுச்சிக்கான தயாரிப்புகளையும் அதற்கெனக் குறித்த நாளையும் எதிரிக்குத் தெரியாமல் மறைத்து வைக்க வேண்டும் என்ற முடிவையும் காமினெவும், ஸினோவ்யேவும் ரோத்ஸியான்கோவுக்கும் கெரன்ஸ்கிக்கும் காட்டிக் கொடுத்தார்கள்.
..
முன்நாட்களில் நெருக்கமாக இருந்த தோழர்களைப் பற்றி இந்த முறையில் எழுதுவது எனக்கு எளிதாக இல்லை. ஆனால் இந்த விஷயத்தில் எவ்விதமான தயக்கமும் குற்றமானது என்று நான் கருதுகிறேன். இல்லாவிடில், பிரபலமான கருங்காலிகளைத் தண்டிக்காத ஒரு புரட்சியாளர்களின் கட்சி அழிந்தொழியும்.

ரோத்ஸியான்கோவுக்கும் கெரன்ஸ்கிக்கும் காட்டிக் கொடுத்தது மூலம் கருங்காலிகள் புரட்சி எழுச்சியை இப்போது தாமதப்படுத்திவிட்ட போதிலும் அப்பிரச்சினை நிகழ்ச்சி நிரலில் இருந்து அகற்றப்படவில்லை, கட்சியால் அகற்றப்படவில்லை. ஆனால் நம்மிடையே “பிரபல” வேலை நிறுத்தக் குலைப்பாளர்களுக்கு நாம் இடமளிப்போம் ஆயின் நாம் எவ்வாறு ஆயுதமேந்திய புரட்சி எழுச்சிக்கு நம்மை நாமே தயார் செய்து கொள்ள முடியும்? அதிகப் பிரபலம் ஆனோர் என்ற அளவுக்கு அவர்கள் அதிக அபாயகரமானவர்கள் “மன்னிப்பளிக்கத்” சிறிதும் தகுதி இல்லாதவர்கள்.
..
வேலை நிறுத்தக் குலைவாளர்கள் எந்தளவு அதிகப் “பிரபலமானவர்களாக” இருக்கிறார்களோ அந்தளவுக்கு அவர்களை உடனடியாக விலக்குவது மூலம் தண்டிப்பது அதிக அவசர அவசியமானது.” 54

                சோவியத்துக்களின் இரண்டாவது காங்சிரசை அக்டோபர் 25ஆம் நாள் கூட்டுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. காங்கிரசுக்காக காத்திராமல் எதிர்ப்பு சக்திகளை முந்திக் கொண்டு புரட்சியைத் தொடங்க வேண்டும் என்று லெனின் வலியுறுத்தினார்.

அக்டோபர் 24ஆம் நாள் மாலை நேரத்தில் லெனின் மையக் கமிட்டி உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதினார்.

“நான் 24ஆம் நாள் மாலையில் இந்த வரிகளை எழுதுகிறேன். நிலைமை மிகமிக நெருக்கடியானதாக உள்ளது. புரட்சி எழுச்சியை தாமதப்படுத்துவது அழிவார்ந்தது என்பது உண்மையில் இப்போது முற்றிலும் தெளிவாகியுள்ளது.

இப்போது அனைத்தும் ஒரு நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணரும்படி தோழர்களை எனது சக்தி அனைத்தையும் கொண்டு நான் வலியுறுத்துகிறேன். மாநாடுகளாலோ காங்கிரசுகளாலோ தீர்வுகாண முடியாத பிரச்சினைகள் நம்மை எதிர்கொள்கின்றன. இவற்றுக்கு மக்கள் மூலம், மக்கள் திரளின் மூலம், ஆயுதமேந்திய மக்களின் போராட்டம் மூலம் மட்டுமே தனிமுழுமையாகத் தீர்வு காணமுடியும்.

கர்னிலவ் ஆதரவாளர்களின் முதலாளித்துவத் தாக்குதலும். வெர்ஹோவ்ஸ்கி நீக்கப்பட்டதும் நாம் தாமதிக்கக் கூடாது என்பதைப் புலப்படுத்துகின்றன. என்ன நேர்ந்தாலும் சரி, நாம் இந்த மாலையே இந்த இரவிலேயே அரசாங்கத்தைக் கைது செய்ய வேண்டும், முதலில் ராணுவ மாணவர்களை நிராயுதபாணிகளாக்க வேண்டும். (அவர்கள் எதிர்த்தால் முறியடிக்க வேண்டும்) இத்தியாதி.

நாம் தாமதிக்கக் கூடாது!! நாம் அனைத்தையும் இழக்க நேரலாம்!!
அனைத்து வட்டாரங்களும், அனைத்து ரெஜிமெண்டுகளும், அனைத்து சக்திகளும் உடனே ஒன்று திரட்டப்பட வேண்டும். அவை உடனே தமது பிரதிநிதிகளை புரட்சிகர ராணுவக் கமிட்டிக்கும் போல்ஷிவிக்குகளின் மையக் கமிட்டிக்கும் அனுப்ப வேண்டும். எந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் 25ஆம் நாள் வரையில் கெரன்ஸ்கி வகையறாவின் கைகளில் ஆட்சி அதிகாரத்தை விட்டுவைக்கக் கூடாது, எந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் கூடாது என்ற விடாப்பிடியான கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் இந்த மாலையே இந்த இரவிலேயே தவறாது முடிவு செய்யப்பட வேண்டும்.
..
அக்டோபர் 25ஆம் நாளன்று ஊசலாட்டமான ஓட்டுக்காக காத்திருப்பது பேராபத்தானது, படுமோசமான சடங்கு. இத்தகைய பிரச்சினைகளை மக்கள் வாக்கினால் அல்ல, மாறாக பலப்பிரயோகத்தால் முடிவு செய்ய மக்களுக்கு உரிமை உண்டு, இதைச் செய்ய அவர்கள் கடமைப்பட்டவர்கள்.
அரசு ஆட்டம் கண்டுவிட்டது. என்ன நேரினும் சரி அதற்கு மரண அடி கொடுக்க வேண்டும்!

செயலில் தாமதம் அழிவார்ந்ததாகும்.” 55

இக்கடிதம் மையக் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது.

                நேவா ஆற்றின் குறுக்கே இருந்த பாலத்தை தூக்கிவிட்டு, புரட்சி சக்திகளை பிரித்து விடலாம் என்று இடைக்கால அரசு திட்டமிட்டது. இதனை அறிந்த லெனின் ஸ்மோல்னிய் சென்றார். அக்டோபர் 24ஆம் நாள் இரவு எழுச்சிக்கு தலைமை ஏற்றார். எழுச்சி பற்றி செய்திகள் அனைத்துப் பகுதிக்கும் அனுப்பப்பட்டிருந்தன.

       ஆயுதப் போராட்டம் தொடங்கிவிட்டது, செம்படை திட்டமிட்டபடி ரயில் நிலையம், அஞ்சல் நிலையம், வானொலி நிலையம், அரசாங்கக் கட்டிடம், மின் நிலையம், வங்கி ஆகியவற்றைக் கைப்பற்றிக் கொண்டது. நகரை நெருங்கும் இடங்களை பால்டிக் கடற்படை வீரர்களும், புரட்சியாளர்களும் காத்தனர்.

ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட இடைக்கால அரசு குளிர்கால அரண்மனைக்குள் ஒளிந்து கொண்டது. தம்மை விடுவிக்க போர்முனையில் இருந்து தமது படை உதவிக்கு வரும் என்ற நம்பிக்கையில் உள்ளேயே அடைந்து கிடந்தது. அரண்மனையை கைப்பற்றும்படி லெனின் ஆணையிட்டார்.

                “அரோரா” போர்க்கப்பல், தனது பீரங்கியை குளிர்கால அரண்மனையைப் பார்த்துச் சுட்டது. செம்படைப் போராளிகள் அரண்மனையைத் தாக்கி கைப்பற்றினர். முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர்.

அக்டோபர் 25ஆம் நாட்காலையில் ஆயுதப் போராட்டம் வெற்றியடைந்துவிட்டது. இடைக்கால அரசு அதிகாரம் இழந்தது. புதிய ஆட்சியதிகாரம் பெத்ரோகிராத் சோவியத்தினுடைய ராணுவ புரட்சிக் கமிட்டிக்கு மாற்றப்படுவதாக லெனின் எழுதினார். இந்த அறிக்கை காலை பத்து மணியளிவில் வெளியிடப்பட்டது.


ருஷ்யாவின் குடிமக்களுக்கு!

இடைக்கால அரசு பதவியில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது. அரசு அதிகாரம் தொழிலாளர், படைவீரர்கள் பிரதிநிதிகளின் பெத்ரோகிராத் சோவியத்தின் அமைப்பான புரட்சிகர-ராணுவக் கமிட்டியின் கைகளுக்கு மாற்றப்பட்டது. இது பெத்ரோகிராத் பாட்டாளிகளுக்கும் காவற்படைகளுக்கும் தலைமை தாங்குகிறது.

மக்கள் எந்த குறிக்கோளுக்காக போராடினார்களோ அந்தக் குறிக்கோள்- ஜனநாயக சமாதானத்தை உடனடியாக வழங்குவது, நிலப்பிரபுத்துவ நிலவுடைமை உரிமையை ஒழிப்பது, உற்பத்தி மீது தொழிலாளர் கண்காணிப்பு, சோவியத் ஆட்சி அதிகாரத்தை நிறுவுவது- என்பது உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது.

தொழிலாளிகள், படைவீரர்கள், விவசாயிகளின் புரட்சி நீடூழி வாழ்க!

தொழிலாளர்கள், படைவீரர்கள் பிரதிநிதிகளின்
பெத்ரோகிராத் சோவியத்தின் புரட்சிகர- ராணுவ கமிட்டி

காலை 10 மணி, அக்டோபர் 25, 1917.

                 அக்டோபர் 26ஆம் நாள் அதிகாலை 2.20 மணியளவில் சோவியத்துகளின் இரண்டாவது காங்கிரஸ் தொடங்கியது. அக்கூட்டத்தில் ஆட்சி அதிகாரம் அனைத்தும் சோவியத்துக்களின் கைகளுக்கு மாற்றப்பட்டதாக தீர்மானம் போடப்பட்டது. சோவியத் மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டவழியிலான ஆட்சியாக மாறியது.

லெனின் அங்கே உரைநிகழ்த்தினார். சோஷலிசப் புரட்சியின் வெற்றியைப் பற்றியும், சோவியத் ஆட்சியின் கடமைகளைப் பற்றியும் பேசினார்.

 ************************************************************************

பயன்படுத்திய நூல்கள்

1.தொலைவிலிருந்து கடிதங்கள் - தேர்வு நூல்கள் 5 - பக்கம்- 11-12
2. மேற்கண்ட நூல் - பக்கம்- 15
3. மேற்கண்ட நூல் - பக்கம்- 16
4. மேற்கண்ட நூல் - பக்கம்- 21-22-23
5. மேற்கண்ட நூல் - பக்கம்- 29
6.இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் – தேர்வு நூல்கள் 5 பக்கம் 31
7.இரட்டை ஆட்சி - தேர்வு நூல்கள் 5 - பக்கம்- 39
8. மேற்கண்ட நூல் -பக்கம்- 40-41
9. மேற்கண்ட நூல் - 5 பக்கம்- 42
10.11.12.13.14&15.செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள்
16.நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் - தேர்வு நூல்கள் 5 - பக்கம்- 45
17. மேற்கண்ட நூல் - பக்கம்- 51-52
18. மேற்கண்ட நூல் - பக்கம்- 54-55
19. மேற்கண்ட நூல் - பக்கம்- 56
20. மேற்கண்ட நூல் - பக்கம்- 57
21. மேற்கண்ட நூல் - பக்கம்- 61
22. மேற்கண்ட நூல் - பக்கம்- 64-65-66
23. மேற்கண்ட நூல் - பக்கம்- 70-71
24. மேற்கண்ட நூல் - பக்கம்- 72-73
25. மேற்கண்ட நூல் -பக்கம்- 85
26.ஜுன் பதினெட்டாம் நாள் - தேர்வு நூல்கள் 5 பக்கம்- 222-223
27.போல்ஷிவிக் தலைவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவது பற்றிய பிரச்சினை - தேர்வு நூல்கள் 5 பக்கம்- 226
28.“புரெலிட்டார்ஸ்கொயே தியேஸொ” ஆசிரியர்களுக்குக் கடிதம் - தேர்வு நூல்கள் 5 பக்கம்- 254-256
29.மூன்று நெருக்கடிகள் - தேர்வு நூல்கள் 5 பக்கம்- 240
30.மூன்று நெருக்கடிகள் - தேர்வு நூல்கள் 5 பக்கம்- 243
31.முழக்கம் - தேர்வு நூல்கள் 5 பக்கம்- 257
32.அரசும் புரட்சியும் - தேர்வு நூல்கள் 6 - பக்கம்- 13
33. மேற்கண்ட நூல் - பக்கம்- 15-16
34. மேற்கண்ட நூல் - பக்கம்- 72-73
35. மேற்கண்ட நூல் - பக்கம்- 140-141
36.இரண்டாவது அகிலத்தின் தகர்வு- பக்கம் 14-15
37.மார்க்சியமும் கிளர்ச்சியும் - தேர்வு நூல்கள் 6 பக்கம்- 194
38. மேற்கண்ட நூல் - பக்கம்- 195
39.பொதுவிவகார எழுத்தாளரின் நாள் குறிப்பில் இருந்து - தேர்வு நூல்கள் 6 பக்கம்- 204
40.போல்ஷிவிக்குகள் நீடித்து அரசாள முடியுமா? - தேர்வு நூல்கள் 6 - பக்கம்- 242
41. மேற்கண்ட நூல் - பக்கம்- 281-282
42. மேற்கண்ட நூல் - பக்கம்- 300-301
43.நெருக்கடி முற்றியது - தேர்வு நூல்கள் 6 - பக்கம்- 219
44. மேற்கண்ட நூல் - பக்கம்- 224
45. மேற்கண்ட நூல் - பக்கம்- 225-226
46.வடக்கு பிராந்திய சோவியத்துக்களின் காங்கிரசில் கலந்து கொள்ளும் போல்ஷிவிக் தோழர்களுக்கு எழுதிய கடிதம் - தேர்வு நூல்கள் 6 பக்கம்- 322
47.போல்ஷிவிக்குகள் கட்டாயம் ஆட்சி அதிகாரம் மேற்கொள்ள வேண்டும் - தேர்வு நூல்கள் 6 பக்கம்- 190-191
48.ஒரு பார்வையாளரின் அறிவுரைகள் - தேர்வு நூல்கள் 6 பக்கம்- 316
49.ரு...த. கட்சி (போ) மையக் கமிட்டியின் கூட்டம் - தேர்வு நூல்கள் 6 பக்கம்- 331-332
50.மார்க்சியமும் கிளர்ச்சியும் - தேர்வு நூல்கள் 6 - பக்கம்- 194
51. மேற்கண்ட நூல் - பக்கம்- 199
52. மேற்கண்ட நூல் - பக்கம்- 201
53. மேற்கண்ட நூல் - பக்கம்- 202
54.ரு...த. கட்சி (போ)யின் மையக் கமிட்டிக்கு எழுதிய கடிதம் - தேர்வு நூல்கள் 6 பக்கம்- 348-349
55.மையக் கமிட்டி உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் - தேர்வு நூல்கள் 6 பக்கம்- 54-356