Wednesday 7 June 2017

விஞ்ஞானக் கம்யூனிசம் (கேள்வி-பதில் வடிவில் ஓர் எளிய அறிமுகம்)

1) கம்யூனிசம் என்றால் என்ன?
பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைமைகளைப் பற்றிய போதனையே கம்யூனிசம் என்று இதற்கு ஒரே வரியில் எங்கெல்ஸ் பதிலளித்துள்ளார். அந்தப் போதனையே விஞ்ஞானக் கம்யூனிசம் ஆகும்.

2) சமூகத்தில் காணப்படும் உழைப்பாளிகள் அனைவரையும் இந்தப் பாட்டாளி வர்க்கம் என்ற சொல் குறிக்கிறதா?
       இல்லை. இது தொழிற்சாலையில் உழைக்கிற உழைப்பாளிகளையே குறிக்கிறது. விவசாயிகள் முதற்கொண்டு மற்ற தொழிலாளர்களை உழைப்பாளிகள் என்றும் ஆலைத் தொழிலாளர்களைப் பாட்டாளிகள் என்று மார்க்சியம் பெயரிட்டு அழைக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய தொழிற்புரட்சியைத் தொடர்ந்து இந்தப் பாட்டாளி என்ற புதிய வர்க்கம் பிறந்தது.

3) கம்யூனிசம் என்பது பாட்டாளி வாக்கத்தின் விடுதலைக்கான போதனை என்றால் மற்ற தொழிலாளர்களின் விடுதலையில் அது அக்கறை செலுத்தவில்லையா?
       இதனை அப்படிப் புரிந்து கொள்ளக் கூடாது. மற்ற சமூக அறிஞர்களைப் போல் மக்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் விடுதலை என்று மார்க்சியம் கூறவில்லை. பாட்டாளிகளின் விடுதலை சமூக வளர்ச்சியில் முதலிடம் பிடிக்கிறது. இந்தப் பாட்டாளி வர்க்க விடுதலையைத் தொடர்ந்து மற்ற தொழிலாளர்களின் விடுதலையும் நடைபெறும். பாட்டாளி வர்க்கம் தன்னை முதலில் விடுவித்துக் கொண்டு மற்றவர்களையும் விடுவிக்கிறது. முதலாளித்துவத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் இந்தப் பாட்டாளி வர்க்கத்தின வாழ்வோடு தொடர்புடையதாக இருப்பதால் பாட்டாளிகளின் விடுதலை முதலில் இடம்பெறுகிறது. பாட்டாளி வர்க்கம் தன்னை விடுவித்துக் கொண்டு மற்ற தொழிலாளர்களையும் படிப்படியாக விடுவிக்கிறது. இதனையே விஞ்ஞானக் கம்யூனிசம் சுட்டிக்காட்டுகிறது.


4) கற்பனாவாதிகளைப் பற்றிய மார்க்சிய விமர்சனத்தைச் சற்று விரிவாகக் கூறுங்கள்?
முதலாளித்துவம் ஒரளவுக்கு வளர்ச்சியடைந்த நிலையில், மார்க்சும் எங்கெல்சும் தமது விஞ்ஞானக் கருத்துக்களை உருவாக்கினர். கற்பனாவாத சோஷலிசத்தில் உள்ள குறைபாடாக, மூலதனத்தின் ஆதிக்கம், சுரண்டலின் ஊற்று ஆகியவற்றை அறிந்து கொள்ளாமை என்று கருதினர். முதிர்ச்சியற்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிலைமைகளுக்கும் முதிர்ச்சியற்ற வர்க்க நிலைமைகளுக்கும் இணைவாய் முதிர்ச்சியற்ற கோட்பாடுகளை அவர்கள் முன்வைத்தனர். சமூகப் பிரச்சினைகளுக்குரிய தீர்வு, வளர்ச்சியுறாத பொருளாதார நிலைமைகளில் புதையுண்டு, இன்னும் மறைந்தே கிடந்தது. இந்தத் தீர்வினைக் கற்பனாவாதிகள் தமது மூளையிலிருந்து உருவாக்க முயன்றார்கள்.

5) மார்க்சின் விஞ்ஞானச் சோஷலிசம் எப்படிப்பட்டது?
மார்க்சிய விஞ்ஞானச் சோஷலிசம் என்பது வரலாற்று வழியில் வளர்ச்சியுற்ற முதலாளிக்கும், பாட்டாளிக்கும் இடையே நடைபெறும் வர்க்கப் போராட்டத்தில் இருந்து தோன்றிய அவசியமான விளைவே தவிர எந்த மேதாவிகளின் மூளையில் உதித்த கருத்தல்ல. கற்பனாவாதிகளைப் போல் சமூக விடுதலைக்கான கருத்தை மூளையில் இருந்தோ, வெற்றுத் தத்துவத்தில் இருந்தோ மார்க்சியம் உருவாக்கவில்லை. பொருளாதார வளர்ச்சியின் தொடர்ச்சியில் ஏற்படும் முற்றிய முரணே தவிர்க்க முடியாத வகையில் சோஷலிச சமூகம் ஏற்படுகிறது என்று மார்க்ஸ் கண்டறிந்தார்.

6) முதலாளித்துவச் சமூகம் எவ்வாறு மறையும்?
முன்பே சொன்னது போல் சமூக வளர்ச்சியின் விதிகள், மக்களின் வழியே செயற்படுகிறது. புரட்சி ஏற்படுவதற்கான சமூக வளர்ச்சி புறக்காரணமாகும், அதனை நடைமுறைப்படுத்தும் கட்சியும், மக்களும் அகக்காரணமாகும். புறமும் அகமும் இணையும் போது சமூக மாற்றம் நடைபெறுகிறது. புரட்சி ஏற்படுத்துவதற்குப் புறச்சூழ்நிலை காரணம் மட்டுமே, அதுவே புரட்சியை முடித்துவிடுவதில்லை, புரட்சி என்னும் காரியத்தை நடத்தி முடிப்பதற்குத் தலைமை அவசியம், அந்தத் தலைமை கம்யூனிஸ்ட் கட்சி என்னும் முன்னணிப் படையாகும்.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் முரண்பாடு, வளர்ச்சிக் கட்டத்தில் முற்றி நெருக்கடிக்கு உள்ளாகிறது, இந்த நெருக்கடி புரட்சிக்கான புறநிலைமைகளாகும், இதனை உணர்ந்து தொழிலாளர்களின் முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சி நெருக்கடிக்கு உள்ளான அனைத்து உழைக்கும் மக்களையும் இணைத்து, முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவதன் மூலம் முதலாளித்துவச் சமூகம் மறையும், இது அகநிலைகளாகும்.

சமூக மாற்றம் இவ்வகையான புறநிலை விதிகளால் ஏற்படுவதன் காரணமாகவே “தவிர்க்க முடியாதவகையில்” என்ற வார்த்தையை மார்க்சியம் பயன்படுத்துகிறது..

7) கம்யூனிஸ்ட் கட்சி எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்?
ஆம். இது சரியான கேள்வி. கம்யூனிஸ்ட் கட்சியை, கம்யூனிஸ்டுகளும் தொழிலாளர்களும் இவர்களின் தலைவர்களும் நடத்து கின்றனர். இந்தக் கம்யூனிஸ்டுகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உள்ள உறவைப் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்?

இதனைப் பற்றிக் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” தெளிவாகவே சொல்லியிருக்கிறது. கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கு மாறாக ஒரு தனிக் கட்சியாகக் செயற்படவில்லை. ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிரக் கம்யூனிஸ்டுகளுக்கு வேறு தனிப்பட்ட நலன்கள் கிடையாது.

8) அப்படி என்றால் தொழிலாளர்களே கட்சியை நடத்திக் கொள்ளலாமே கம்யூனிஸ்டுகள் எதற்கு?
இதற்கும் “அறிக்கை” பதில் அளிக்கிறது. கம்யூனிஸ்டுகளை ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை பின்வருவன மட்டும்தாம்: (1) வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் பாட்டாளிகளின் தேசிய போராட்டங்களில், கம்யூனிஸ்டுகள் எந்தவொரு தேசிய இனத்தையும் சாராமல், பாட்டாளி வர்க்கம் முழுமைக்கும் உரிய பொதுவான நலன்களைச் சுட்டிக்காட்டி, முன்னணிக்குக் கொண்டு வருகின்றனர். (2) முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தொழிலாளி வர்க்கப் போராட்டம் கடந்து செல்ல வேண்டிய பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும், எங்கும் எப்போதும் கம்யூனிஸ்டுகள் ஒட்டுமொத்த இயக்கத்தின் நலன்களையே முன்வைக்கின்றனர். எனவே, கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் நடைமுறை ரீதியில், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளில், மிகவும் முன்னேறிய, மிகவும் உறுதி வாய்ந்த பிரிவாக, மற்றவர்கள் அனைவரையும் முன்னோக்கி உந்தித் தள்ளுகின்ற பிரிவாக உள்ளனர். மறுபுறம் தத்துவ ரீதியில், கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்கத்தின் பெருந்திரளினருக்கு இல்லாத ஓர் அனுகூலத்தை, அதாவது, பாட்டாளி வர்க்க இயக்கத்தின் திசைவழியையும், நிலைமைகளையும், இறுதியில் ஏற்படும் பொதுவான விளைவுகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தைப் பெற்றுள்ளனர்.

கம்யூனிஸ்டுகளுடைய உடனடி நோக்கம், மற்றெல்லாப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் உடனடி நோக்கம் எதுவோ அதுவேதான். பாட்டாளிகளை ஒரு வர்க்கமாகக் கட்டியமைத்தல், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல் ஆகியவையே ஆகும்.

9) அரசியல் அதிகாரத்தை எவ்வாறு வென்றெடுப்பது?
கம்யூனிஸ்ட் கட்சியின் இறுதிகுறிக்கோள் (strategy) சோஷலிச சமூகத்தை அமைப்பதேயாகும். அதனை நோக்கி பயணிப்பதற்குச் செயற்தந்திரத்தை (tactic) அமைத்துக் கொள்கிறது. அதாவது இன்றைய சூழ்நிலையில் அதற்கான செயற்பாட்டை அமைத்துக் கொள்கிறது.

10) வர்க்கப் போராட்டத்தை முன்வைத்து மற்ற போராட்டத்தைக் கம்யூனிசம் இரண்டாம் நிலைக்கு அல்லது பின்னுக்குத் தள்ளுகிறது என்பது உண்மையா?
       மற்ற போராட்டங்களைக் கம்யூனிசம் பின்னுக்குத் தள்ளுகிறது என்ற வார்த்தையே தவறானது. பிற போராட்டங்களை வர்க்கப் போராட்டத்திற்கு உள்ளடங்கி நடத்துகிறது என்பது தான் சரியானது. தேசிய இனப்பிரச்சினை முன்னுக்கு வரும் போது தேசியஇன விடுதலைக்குக் கம்யூனிசம் முதன்மை இடத்தையே தருகிறது.

11) அப்படி என்றால் வர்க்கப் போராட்டத்துக்கு அப்பாற்பட்டு தேசிய இனப்பிரச்சினைக்கு முதன்மை இடம் கம்யூனிசம் தருகிறதா?
       அப்படியில்லை. தேசிய இனப்பிரச்சினை எழுந்துள்ள இடத்தில், பிரச்சினைக்குரிய இரண்டு இனங்களில் உள்ள உழைப்பாளர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்துவது சாத்தியம் அற்றது. ஒற்றுமைக்குத் தடையாக உள்ள தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதே இங்கே முதலும் முதன்மையானதுமான அரசியல் பிரச்சினையாகிறது. இச்சூழ்நிலையில் ஒடுக்கத்துக்கு ஆளான தேசிய இனம், தமது தேசியத்தின் சுயநிர்ண உரிமை நிலைநிறுத்தும் வகையில் பிரிந்து செல்வதைக் கம்யூனிசம் ஏற்கிறது. இந்தப் பிரிவினை என்பது வர்க்க போராட்டத்திற்கு அப்பாற்பட்டதாகக் கம்யூனிசம் கருதவில்லை. பாட்டாளிகளின் ஒற்றுமையின் நலன்களும் அவர்களது வர்க்க ஒருமைப்பாட்டின் நலன்களும் உள்ளடங்கிய வகையில்தான் தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையைக் கம்யூனிசம் அங்கீகரிக்கிறது. சோஷலிச அரசு வந்தால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று தட்டையாகக் கம்யூனிசம் பேசவில்லை. முதலாளித்துவ ஜனநாயகத்திற்குள் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளைச் சோஷலிச அரசு ஏற்படும்வரை காத்திருக்கும்படி கம்யூனிசம் கூறவில்லை. ஆனால் சுயநிர்ணய உரிமையைப் பிரிவினைவாதமாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதைக் கம்யூனிசம் எச்சரிக்கிறது.

12) கம்யூனிசம் இன்றைக்குப் பழைமைப்பட்டு விட்டது, எல்லாக் காலத்திற்கும் சர்வரோக நிவாரணியாகக் கம்யூனிசம் செயற்பட முடியாது என்று விமர்சனம் வைக்கப்படுகிறதே?
       கம்யூனிசம் வறட்டுச் சூத்திரவாதம் அல்ல. எதிர்வரும் எல்லாப் புதுப்புது பிரச்சினைகளுக்கும் தீர்வை தயாராகக் கையில் வைத்துக் கொண்டிருக்கவில்லை, மாறிக் கொண்டே இருக்கும் உலகின் நிலைமைகளைப் பார்த்து அலசி ஆராய்ந்து தீர்வை நோக்கி செயற்படுவதற்குக் கம்யூனிசம் ஒரு வழிகாட்டி ஆகும். முதலாளித்துவச் சுரண்டலுக்கு முடிவு ஏற்படும்வரை கண்டிப்பாகக் கம்யூனிசம் தேவைப்படும். கம்யூனிசம் சரி என்பதை இன்றைய பொருளாதார நெருக்கடி உறுதிப்படுத்துகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு கம்யூனிசமே தீர்வாகும்.

13) இந்த விஞ்ஞானக் கம்யூனிசத்தை எவ்வாறு கற்பது?
எந்த ஒரு கோட்பாட்டையும் (theory) அதன் செய்முறையோடே கற்கவேண்டும். ஏன் என்றால் முந்தைய செயற்பாட்டின் அடிப்படையில் தான் அக் கோட்பாடு வகுக்கப்பட்டுள்ளது. அதே போல் விஞ்ஞானக் கம்யூனிசத்தை நாம் காணும் சமூக நடைமுறையோடு இணைத்துக் கற்க வேண்டும். வெறும் ட்டறிவாகக் கற்கக்கூடாது. கம்யூனிசத்தைப் பற்றிய ஏட்டு அறிவை ஏற்றுக் கொள்வதுடன் நின்று விடுவது பெரும் தவறாகும் என்கிறார் லெனின். மேலும் கூறுகிறார், வேலையில் ஈடுபடாமல், போராட்டம் இல்லாமல் கம்யூனிச நூல்களில் இருந்து பெறப்பட்ட ஏட்டறிவு சிறிதும் பயனற்றதாகும். அதேபோல் கம்யூனிச போதனைக்குக் கம்யூனிச நூல்கள் மட்டும் போதுமானது என்று நினைப்பதும் தவறானதாகும். மனிதகுலம் படைத்தளித்து இருக்கும் அறிவுக் கருவூலங்கள்  யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற்று, உங்கள்  சிந்தனையை நீங்கள் வளமாக்கிக் கொள்ளும் போது மட்டுமே உங்களால் கம்யூனிஸ்ட்டாக முடியும் என்று லெனின் வலியுறுத்தியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

       கோட்பாடற்ற நடைமுறையும், நடைமுறையற்ற கோட்பாடும் விஞ்ஞானத் தன்மையற்றது.

14) கோட்பாடு - நடைமுறை இதில் எது முக்கியமானது?
       இரண்டும் இணைந்தது என்ற வகையில் இருண்டும் முக்கியமானதே. உலகத் தொழிலாளி வர்க்க இயக்கங்களினுடைய அனுபவங்களின் பொதுமைபடுத்தலே கோட்பாடாகும். ஸ்டாலின் தெளிவாகக் கூறியுள்ளார், புரட்சிகர நடைமுறையுடன் இணைக்கப்பட்டவில்லை என்றால் கோட்பாடு இலக்கற்றதாகி விடும், அதேபோல் புரட்சிகரக் கோட்பாட்டினால் ஒளியூட்டப்பட்டவில்லை என்றால் நடைமுறையானது இருளில் தடுமாறிவிடும், இது உறுதி.

15) விஞ்ஞானக் கம்யூனிசத்தை அறிவதற்குப் படிக்க வேண்டிய நூல்கள் யாவை?

       எங்கெல்ஸ் எழுதிய நூல், கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞானச் சோஷலிசமும். லெனின் எழுதிய நூல் கிராமப்புற ஏழைகளுக்கு. ஸ்டாலின் எழுதிய நூல் லெனினியத்தின் அடிப்படைக்கோட்பாடுகள். மற்றும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு.

No comments:

Post a Comment