Thursday 18 January 2018

02. ஸ்டாலின் அவதூறு பற்றி….. - கே.என்.சிவராமன்

(சிவந்த மண்- மார்க்சிய கோட்பாடுகளுடன் ரஷ்ய – சீன புரட்சியின் வரலாறு- என்ற நூலில் இருந்து)

01. ஸ்டாலின் அவதூறு பற்றி….. - கே.என்.சிவராமன்
“ஆக தோழர் ஸ்டாலின் பற்றி பேசுபவர்கள் இதுபோன்ற ஏகாதிபத்திய கூலிக்காசுக்கு எழுதிய எழுத்தாளர்களிடம் இருந்துதான் விவரங்களை எடுத்துக்கொண்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்.

அதே சமயம் பொய்களை அம்பலப்படுத்தி உண்மையை எழுதிய எழுத்தாளர்களும் இருந்தார்கள். இவர்கள் யாரும் கம்யூனிஸ்டுகளோ, ஸ்டாலின் ஆதரவாளர்களோ இல்லை. முதலாளிய ஜனநாயகவாதிகள்தான். ஆனால், நேர்மையான பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் டக்ளஸ் டோட்டில், லூயிஸ் பிக் ஷர், டி.என்.பிரீத் அன்னா லூயி ஸ்ட்ராங், மைக்கேல் சேயர்ஸ், ஆல்பர்ட் ஐ கான், ஹெச்.ஜி.வெல்ஸ், ஹென்றி பார்பஸ். என நீளும் பட்டியல் இதற்கு உதாரணம்.

அடுத்த 'குற்றச்சாட்டுக்கு' வருவோம். ஸ்டாலின்-இட்லர் ஒப்பந்தம் சரியானதா? இதையே இப்படி கேட்கலாம். இட்லர் கொடுங்கோலர் என்பது ஸ்டாலினுக்கு தெரியாதா? பிறகு ஏன் ஒப்பந்தம் போட்டார்?

இதற்கான பதில் வரலாற்றுப் பக்கங்களை புரட்டுவதுதான். இனவெறியைத் தூண்டி குளிர்காய நினைத்த இட்லரின் நடவடிக்கைகளை எதிர்க்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் ஓர் ஒப்பந்தம் போட ஸ்டாலின் அழைத்தார்.

இதற்கு மேலே குறிப்பிட்ட மூன்று ஏகாதிபத்திய நாடுகளும் சம்மதிக்கவில்லை. குறிப்பாக பிரிட்டன், தந்திரமாக காய்களை நகர்த்த ஆரம்பித்தது. அதன் ஒருபகுதியாக சோவியத் ரஷ்யாவை தாக்கும்படி இங்கிலாந்தை தூண்டியது. இதன் வழியாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க திட்டமிட்டது.

எப்படி தெரியுமா? சோவியத் ரஷ்யாவை வீழ்த்துவது அவ்வளவு சுலபமல்ல. தன் முழு பலத்தையும் இட்லர் இறக்கியாக வேண்டும். இந்த போரில் இட்லர் நிச்சயம் தனது பலத்தை முழுமையாக இழந்துவிடுவார். அத்துடன் சோவியத்தின் கம்யூனிச அபாயமும் அழியும். பிறகு பிரிட்டன் மட்டும்தான் ஐரோப்பாவின் மாபெரும் சக்தியாக இருக்கும்!

இந்த எண்ணத்துடன் தான் ஸ்டாலினின் ஒப்பந்த கோரிக்கையை ஏற்க மறுத்தது.

இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உலக நாடுகளை அச்சுறுத்தும் பாசிசத்தின் போக்கை கண்டும் உலக நாடுகளை காக்கும் பொருட்டும் உழைக்கும் மக்களின் ரத்தத்தையும் வியர்வையையும் கொண்டு கட்டியெழுப்பிய சோஷலிச சமூகத்தை காக்கும் பொருட்டும்தான் ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்காவிடமும் பிரிட்டனிடமும் ஸ்டாலின் ஒப்பந்தம் கோரினார்.

இது சாத்தியமற்று போனதால் இட்லரிடம் நேரடியாக ஓர் இடைக்கால ஒப்பந்தம் போட்டுக் கொள்ள ஸ்டாலின் தயாரானார்.

கவனிக்க, இந்த இடைக்கால அவகாசம் என்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சம் இடைக்கால ஒப்பந்தம் என்பது பல்வேறு சாதக பாதகங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு வகுக்கப்பட்ட ஒரு செயல் தந்திரம்.

உலக யுத்த சூழலில் சோவியத் ரஷியாவை தற்காத்துக் கொள்ளவும் செம்படையை பாசிசத்துக்கு எதிராக தயார் படுத்தவும் ஓர் இடைக்காலம் தேவை என்பதாலேயே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

அன்றைய சூழலில் இட்லர் போர்வெறி கொண்டு அலைபவராக, மாபெரும் பலத்துடன் இருந்தார். அப்போதைக்கு அவருடன் மோதி வெல்வது சாத்தியமற்றதாக இருந்தது. காரணம் சோவியத் படைகள் அவ்வளவு பலத்துடன் இல்லை. எனவே தன்னை தயார் படுத்திக்கொள்ள ஒரு சிறு இடைவெளி ரஷியாவுக்கு தேவைப்பட்டது. அதனால்தான் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தால் இட்லர் படையெடுப்பார். ரஷியா அழியும் என்ற ஏகாதிபத்தியங்களின் கனவு தகர்ந்தது. ஒப்பந்தப்படி ரஷியா 1939லிருந்து 1941 வரை போரில் ஈடுபடவில்லை.

செம்படை தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்த நிலையில் - யுத்தத்துக்கு ரஷியா தயாராக இல்லாத நிலையில் - திடீரென்று இட்லர் படையெடுத்தார். ரஷியாவை தாக்கத் தொடங்கினார். இரண்டாவது உலகப்போர் உக்கிரமாக நடந்தது. அப்போது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் அனைத்தும் இட்லருக்கு பயந்து ஒடி ஒளிந்தது. ஸ்டாலின் தலைமையிலான செம்படைதான் பாஸிசத்தை வீழ்த்தி உலகை காத்தது.

இந்த வரலாற்று உண்மைகளையும், புறச் சூழல்களையும் வேண்டுமென்றே கவனிக்க மறுத்து ஸ்டாலின் மீதும் சோவியத் ரஷ்யா மீதும் அவதுறை பரப்புகின்றனர். இட்லருடன் ஒப்பந்தம் போட்டார் என நா கூசாமல் பேசுகின்றனர் எழுதுகின்றனர். கடுமையான விமர்சனத்துக்கு ஆட்பட்ட ஸ்டாலின் வாழ்ந்த காலம் - "சோஷலிச ரஷ்யாவின் குழந்தைப் பருவ காலம். ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்ற சில ஆண்டுகளிலேயே மாமேதை லெனின் மரணமடைந்து விட்டார். அவர் மறைவுக்கு பின் லெனினுடைய பொறுப்புகள் அனைத்தும் ஸ்டாலினிடம் வந்தன.

ரஷியாவை சதி செய்து கவிழ்த்து மீண்டும் முதலாளித்துவத்தை கொண்டு வருவதற்கு ஏகாதிபத்தியங்கள் காத்துக்கிடந்தன. ரஷியாவை கொத்திக்குதற தலைக்கு மேல் சுற்றி வட்டமிட்ட ஏகாதிபத்திய வல்லூறுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டிய கடமை ஒருபுறமும்

கட்சிக்குள் இருந்துகொண்டே சீர்குலைவு வேலைகளை செய்து கொண்டிருந்த ஏகாதிபத்திய விசுவாசிகளை கையாள்வது மறுபுறமுமாக - ஸ்டாலின் இரண்டையும் சமாளித்தார். இந்த உண்மைகளும் நிதர்சனமும்தான் இவரது ஆட்சிக்காலம். எனவே இதையெல்லாம் சேர்த்துத்தான், கருத்தில் கொண்டுதான், ஸ்டாலின் குறித்து மதிப்பிட வேண்டும்.

அதற்காக ஸ்டாலின் செய்தவை அனைத்தும் சரியே என வாதிடவில்லை. இவர் மீதும் விமர்சனங்கள் இருக்கின்றன. உண்மையான மார்க்சியவாதிகள் ஸ்டாலின் மீது நேர்மையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள்.

சுயபரிசீலனை கோரும் இந்த விமர்சனங்கள் வேறு. முதலாளித்துவ ஊடகங்கள் பரப்பும் அவதூறுகள் வேறு இந்த அடிப்படை வேறுபாடுகளை நாம் எப்போதும் மறக்கக்கூடாது.

இதன் ஒரு பகுதியாக ஸ்டாலின் தலைமையிலான சோவியத் தின் சாதனைகளைப் பார்க்கலாம்.

இரண்டாம் உலக யுத்தத்தில் பாசிஸ் கருத்தியல்களை பரப்பிய இட்லரை வீழ்த்தினார் ஸ்டாலின். இந்தப்போரின் காரணமாக மிகப்பெரும் சேதத்தை சோவியத் ரஷ்யா சந்தித்தது. இரண்டு கோடிக்கும் அதிகமான ரஷிய மக்கள் போரில் கொல்லப் பட்டார்கள் இரண்டரை கோடி மக்கள் வீடுகளை இழந்தனர். 1710 நகரங்கள் மற்றும் நகர்ப்புற குடியிருப் புகள், 70 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்கள், சுமார் 32 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் 98 ஆயிரம் கூட்டுப்பண்ணைகள், ஐயாயிரம் அரசு பண்ணைகள். ஆகியவற்றை இட்லர் தலைமையிலான நாஜிக்கள் அழித்தொழித்தார்கள்.

சோஷலிச கட்டமைப்பின் இரண்டாவது புத்துயிர்ப்புக்காகசரியான தொலைநோக்குத் திட்டங்களை முன்வைத்து - போருக்கு முன் இருந்த தொழில் வளத்தை விட அதிகமான தொழில் வளத்தில் சோஷலிச ரஷியாவை ஸ்டாலின் முன்னெடுத்துச் சென்றார். சோவியத் யூனியன் இனி மீள்வது மிகவும் கடினம், தொழிற்துறையின் மீது நாஜிக்கள் நடத்திய தாக்குதல்களில் இருந்து மீள்வதற்கு மட்டுமே சில பத்தாண்டுகள் தேவைப்படலாம் என்று சில முதலாளித்துவ எழுத்தாளர்கள் மதிப்பிட்டு எழுதினார்கள்
ஆனால், வெறும் மூன்றே ஆண்டுகளில் - 1948 தொழிற்துறை உற்பத்தி 1940ன் உற்பத்தியை விட மிஞ்சியது. 1940ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 1949ம் ஆண்டில் தொழில்சாலை மற்றும் அலுவலக தொழிலாளர்களுக்கான வருவாய் 24 சதவிகிதம் அதிகரித்தது.

இப்படி சோவியத்தின் சாதனைகள் என்று நிறைய சொல்லலாம். எனினும் கல்வி தொடர்பான சோவியத் யூனியனின் இரண்டு உதாரணங்களை மட்டும் இங்கு பார்ப்போம்.

ஜார் ஆட்சி காலத்தில் ரஷியாவில் கல்வி கற்றவர்களின் சதவிகிதம் காலனியாட்சி கால இந்தியாவை விட குறைவு. புரட்சிக்கு பின்னர் இருபதே ஆண்டுகளில், குறிப்பாக ஸ்டாலின் ஆட்சி காலத்தில், ரஷியாவில் கல்வி கற்றிருந்தோரின் சதவிகிதம், இதியாவை காலனியாக்கி வைத்திருந்த உலகிலேயே கல்வியில் முதல் இடத்தில் இருந்த பிரிட்டனை விட பத்து மடங்கு அதிகமாக உயர்ந்திருந்தது.

அதே போன்று காங்கிரஸ் தலைவர் காமராஜர் ரஷியாவுக்கு பாயிருந்த போது - ஒரு நாள் இரவு ஒன்பது மணியை போல வெளியே போய் சும்மா ஒரு நடை நடந்து விட்டு வரலாமா என்று தனக்கு துணையாக வந்திருந்த கைடிடம் கேட்டிருக்கிறார்.
வாருங்கள் போகலாம் என்று அவரை அழைத்துக் கொண்டு விதியில் இறங்கி நடந்திருக்கிறார் அந்த கைடு அப்போது அவர்கள் ஒரு கட்டிடத்தை கடந்து சென்றார்கள் உள்ளிருந்து 'கசமுசா“ என சத்தம் வந்தது. உடனே காமராஜர் அங்கேயே நின்று அது என்ன சத்தம்? என்று கேட்டார்.

மக்கள் படிக்கிறார்கள். இது இரவுப் பள்ளி என்றார் கைடு. உள்ளே சென்று பார்க்க முடியுமா? அதற்கென்ன வாருங்கள். என கைடு கட்டிடத்துக்குள் அழைத்துச் சென்றார். உள்ளே பார்த்தால் - அனைவரும் வயதானவர்கள் அதிர்ந்து விட்டார் காமராஜர் இவர்கள் எல்லாம் இப்போதுதான் படிக்கிறார்களா?

இல்லை. இவர்களுக்கு தாய்மொழியான ரஷ்யன் தெரியும். இப்போது பிரெஞ்சு கற்கிறார்கள்... கைடின் பதிலைக் கேட்டு காமராஜர் வியந்தார். சோவியத்தின் வளர்ச்சிக்கு இதுபோல ஆயிரம் சம்பவங்களை உதாரணங்களாக சொல்லலாம்.

சோவியத் ரஷியாவின் உழைக்கும் மக்கள் முன்னால் - போருக்கு பிந்திய தொழிற்துறையின் அதிவேக முன்னேற்றத்தை சாதித்த தொழிலாளர்கள் + விவசாயிகளின் முன்னால் - ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி என்று புலம்பி தீர்ப்பவர்களின் கூச்சல்கள் காணாமல் போகும்.

தோழர் ஸ்டாலினுடைய புகழை அவதூறு அலைகள் வீசியெறிய முடியாது என்பதற்கு - சோவியத் மக்களோடு நின்று அவர் கட்டியெழுப்பிய சோஷலிச கோட்டையை உடனே தகர்க்க முடியாமல் 40 வருட போராட்டத்துக்கு பிறகே ஏகாதிபத்தியம் 1991ல் தகர்த்தது என்பதே போதுமான சான்றுதான்.”


No comments:

Post a Comment