Tuesday 20 November 2018

சாதியமும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும்


மார்க்ஸ்:- “முந்தைய சமுதாயங்கள் தொழில்களைப் பரம்பரையாக்கி, சாதிகளாக அவற்றை உறைந்து இறுகச் செய்தோ, குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளின் காரணமாய் சாதி அமைப்புக்கு ஒவ்வாத முறையில் வேறுபாடுறும் தன்மை தனிஆளிடம் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை கைவினைச் சங்கங்களாக சமைந்து கெட்டிப்படச் செய்தோ வந்த போக்கிற்கு ஒத்ததே ஆகும். தாவரங்களும் மிருகங்களும் இனங்களாகவும் ராசிகளாகவும் வகைபிரிவதை முறைப்படுத்துகிற அதே இயற்கை விதியின் செயலிலிருந்தே, சாதிகளும் கைவினைச் சங்கங்களும் பிறக்கின்றன, ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைந்ததும் சாதி மூலமான பரம்பரைத் தன்மையும் கைவினைச் சங்கம் மூலமான பிரத்தியேகத் தன்மையும் சமுதாயச் சட்டத்தின் மூலம் நிலைநாட்டப்படுகின்றன என்பதே
மூலதனம் I பக்கம் 461


வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொண்டவர்களால் தான் சாதியத்தை மார்க்சிய வழியில் அணுகமுடியும். ஒன்றின் தோற்றத்தையும் அதன் இருப்பையும், மறைவையும் பற்றிப் பேசும் போது அதற்கான பொருளாயத நிலைமையைக் கொண்டே பொருள்முதல்வாதி முடிவெடுப்பர். அரசு தோன்றுவதற்கான பொருளாயத நிலைமை இருக்கிறது அந்தப் பொருளாயத நிலைமை இருக்கும் வரை அரசு இருக்கும் அந்தப் பொருளாயத நிலைமை மறைந்திடும் போது அரசு உலர்ந்துவிடும். மதமும் அப்படியே. ஆனால் இது தானாகவே அதாவது பொருளாயத நிலைமை மாறினால் தானாக நிகழ்ந்துவிடக்கூடியது அல்ல. அதற்கான போராட்டம் முடிவு வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். இறுதியில் போராட்டம் உச்சத்தைத் தொடும்.

சாதியத்தையும் இவ்வாறு தான் அணுக வேண்டும். சாதியத்தை யாரும் கருத்தியல் கொண்டு படைத்திடவில்லை. அதனால் அதனைக் கருத்தியலைக் கொண்டே அதனை அழித்திடவும் முடியாது. சாதியத்தின பொருளாதார நிலைமைகளை முடிவுக்குக் கொண்டிவருவதுடன் தான் அது முழுமையாக இறுதி முடிவுக்கு வரும். அதுவரை கருத்தியலான போராட்டம் தேவைப்படாது என்று பொருளில்லை. அதன் எல்லையை உணர்ந்து போராட வேண்டும்.

தலித்திய எழுச்சி என்பதே அந்தப் பொருளாயத நிலைமைகளின் நெகிழ்வினால் உருவானது தான். தலித்துக்கள் பல நூறு ஆண்டுகளாக ஒடுக்கப்படும போது இது போன்ற எழுச்சி ஏற்படவில்லை. தலித்துகள் பழைய உற்பத்தி முறையில் இருந்து விடுபட்டதின் காரணமாகவே அவர்களால் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து, பல கல்விகளைப் பெற முடிகிறது. இது ஒரு நெடியப் போராட்டம். சாதியப் பிடியல் இருந்து விடுபடும்போது இன்றைய வர்க்கபிடிக்குள் அகப்படுகின்றனர். சாதியத்தில் இருந்து விடுபட்டாலும் வர்க்க ஒடுக்கு முறையில் இருந்து விடுபட நெடியப் போராட்டம் நடத்த வேண்டுடியுள்ளது.

சாதியமும் பழைய உற்பத்தி முறையின் வர்க்க வடிவங்களே.

மூலதனத்தின் வளர்ச்சியே முதலாளித்துவ வர்க்கத்தையும் பாட்டாளி வர்க்கத்தையும் தோற்றுவிக்கிறது. அதே போல் சாதியம் என்கிற பழைய வர்க்கத்தையும் அன்றைய பொருளாதார நிலைமைகளே தோற்றுவித்தது. எப்படி இன்று முதலாளித்துவ அடிவருடி பேரறிஞர்கள் முதலாளிததுவத்துககாக வக்காலத்து வாங்குகிறார்களோ, அதே போல் அன்றைய பார்ப்பனர்களும் அவர்களை ஒத்த பிற அதிக்க வர்க்கத்தினரும் சாதியத்தை நிலைநிறுத்துவதற்கு எழுதினர். வர்ணாஸ்ரம் என்பது நிகழும் சாதியத்தை விளக்க முயற்சிக்கிறதே தவிர அதனை முழுமையாக விளக்கிடவில்லை. அதனை விளக்குவதில் தோல்வி கண்டவர்கள் படைப்பாளிகளாக இருக்க முடியுமா?. பார்ப்பனர்கள் தான் தமது கருத்தின் அடிப்படையில் சாதியத்தைப் படைத்தார்கள் என்றால், ஆன்மீகத்தில் மூழ்கியவர்கள் பார்ப்பனர்களைச் சிறப்பித்து மயங்குவது போல் சிறப்பிக்காமல் மயங்குகின்றனர்.

எந்தச் சிறந்த தனி நபராலும் சமூகம் படைக்கப்படுவதில்லை. மக்கள் தான் வரலாற்றைப் படைக்கின்றனர். அவர்கள் தாம் நினைத்தபடி எல்லாம் சமூகத்தைப் படைத்திடவில்லை. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியோடு இணைந்து சமூகத்தை மாற்றுகின்றனர்.

எங்கெல்ஸ்:- “சில நபர்கள் தம் வசதிக்காக் கற்பனை செய்ய முயல்வதைப் போல, பொருளாதார  நலைமை தானாகவே செயல்பட்டு விளைவை ஏற்படுத்துவதில்லை.

மனிதர்கள் தம்முடைய வரலாற்றைத் தாங்களே உருவாக்குகிறார்கள் ஆனால் குறிப்பிட்ட சூழலில் (அந்தச் சூழல் அவர்களைத் தகவமைக்கிறது) ஏற்கெனவே இருந்து கொண்டிருக்கின்ற மெய்யான உறவுகளின் அடிப்படையில், இந்த மெய்யான   உறவுகளில் பொருளாதார உறவுகள் (இவற்றின் மீது மற்ற உறவுகள்  அரசியல் மற்றும் சித்தாந்த உறவுகள்  எவ்வளவு அதிகமாகத் தாக்கம் செலுத்தினாலும்) முடிவில் இன்னும் தீர்மானகரமான உறவுகளாக இருக்கின்றன, அவை சமூக வளர்ச்சி முழுவதும் இழையோடியிருக்கின்றன, அவை மட்டுமே இவ்வளர்ச்சியைப் புரிந்து கொள்ள இட்டுச் செல்லும்"
(எங்கெல்ஸ் வொ.போர்கியுசுக்கு எழுதிய கடிதம், லண்டன், ஜனவரி 25, 1894)

பொருளாதார நிலைமைகள் தாமே செய்துவிடும் என்று கூறிடவில்லை, அகிலத்தைத் தோற்றுவித்ததும், கட்சி அமைத்தும் பொருளாதார  நிலைமைகளோடு சேர்ந்து போராடுவதற்கே.

இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும் என்றே அறிக்கை பறைசாற்றுகிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தன் நோக்கம், போராட்டத்தைக் கைவிடுவதல்ல, போராட்டத்தைப் புரிந்து போராடுவதற்கே.

எங்கெல்ஸ்:-
“வரலாற்றின் உந்து விசையைப் பற்றிய மாபெரும் விதியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ். வரலாற்று ரீதியான அனைத்துப் போராட்டங்களும், அவை அரசியல், மத, தத்துவஞான அல்லது வேறு ஏதாவதொரு சித்தாந்தத் துறைக்குள்ளாக முன்னேறிய போதிலும், உண்மையில் அவை அநேகமாகச் சமூக வர்க்கங்களின் போராட்டங்களின் தெளிவான வெளியீடுகள் மட்டுமே, இந்த வர்க்கங்கள் இருப்பதும் அதன் காரணமாக இவற்றுக்கிடையே ஏற்படுகின்ற மோதல்களும் கூட அவற்றின் பொருளாதார நிலைமையின் வளர்ச்சியின் தரத்தினால், அவற்றின் உற்பத்தி முறையினாலும் அதனால் நிர்ணயிக்கப்படுகின்ற பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன என்பது அந்த விதியாகும். இயற்கை விஞ்ஞானத்தில் சக்தியின் உருமாற்றம் பற்றிய விதிக்கு உள்ள அதே முக்கியத்துவம் வரலாற்றில் இந்த விதிக்கு உண்டு.”
(லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் - எங்கெல்சின் முன்னுரை)

பார்ப்பனர்கள் தான் சாதியத்தை உருவாக்கினார்கள் என்று கருதுபவர்களால், வரலாற்றின் உந்து விசையைப் பற்றிய மாபெரும் விதியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ்" என்று எங்கெல்ஸ் கூறுவதை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களுக்கு இது ஒரு விதிவாதமாகப் படுகிறது.

வரலாற்றியல் பொருள்முதல்வாதமே கம்யூனிஸ்டுகளுக்கு வழிகாட்டி, அதன்படியே அனைத்து முரண்பாட்டையும் அணுகுவர்.