Friday 8 November 2019

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் சமூக மாற்றமும்


(“மக்களால் முடியும் என்ற நம்பிக்கையோடு, ஒர் அரசியல் – மெய்யியல் இதழ் வெளிவந்துள்ளது. “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் - நிகழ்காலமும் என்ற தலைப்பில் அறிக்கையைப் பற்றி 13 பேரிடம் கட்டுரையைப் பெற்று நூலாக வெளியிட்டுள்ளனர். என்னுடைய கட்டுரையும் இதில் இடம் பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 05-01-2020 அன்று இக்கட்டுரைகளைப் பற்றியும், அறிக்கைப் பற்றியும் திறனாய்வுக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதழைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்:8939181491)


ஒரு கோட்பாடு நிகழ்காலத்தோடு இணைந்திருக்குமானால் அது உயிரோட்டத்துடன் இருக்கும். மார்க்சியக் கோட்பாடு இன்றும் உயிரோட்டத்துடன் இருக்கிறது என்றால் இன்றைய பிரச்சினைகளுக்கு அது வழிகாட்டுகிறது என்று பொருள். மார்க்சியத்தைச் சர்வரோக நிவாரணி என்று கூறலாமா? என்று கேட்டால், கூறமுடியாது என்றே மார்க்சியம் பதிலளிக்கிறது. அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வை “தயாராக” வைத்திருக்கிறதா? என்று கேட்டால் இல்லை, எந்தக் கோட்பாடும் அவ்வாறு இருக்க முடியாது என்றே மார்க்சியம் பதிலளிக்கிறது.

அப்படி என்றால், மார்க்சியம் மாற்றத்திற்கு உட்பட்டதா. ஆம் மார்க்சியம் மாற்றத்திற்கு உட்பட்டதே. லெனின் மார்க்சியத்தில் பலப்புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தார். அதனை மார்க்சியம் ஏற்றுக் கொண்டது. அந்தப் புதிய மாற்றம் ஏகாதிபத்திய காலக்கட்டத்திற்கு உரிய மார்க்சியமாக- லெனினியமாக உருவெடுத்தது. மார்க்சியத்தின் படைப்பாற்றலுக்கு (Creativity) லெனினே சிறந்த உதாராணம்.

      மார்க்சியப் படைப்பாற்றலில் சிறந்து விளங்கும் லெனின் மார்க்சியத்துக்கு எதிராக இரண்டைக் குறிப்பிடுகிறார். ஒன்று வறட்டுவாதம், மற்றொன்று திருத்தல்வாதம். மார்க்ஸ், எங்கெல்சோடு சேர்ந்து லெனினும் மார்க்சியத்தை வறட்டுவாதமாகக் கொள்வதை எதிர்த்தார். வறட்டுவாதிகள் முரண்பாடுகள் நிறைந்த முழுதளாவியதாக உள்ள வரலாற்று வளர்ச்சியைப் பற்றிய போதனையான இயக்கவியலை பலவீனப்படுத்துகிறார்கள். வரலாற்றில் ஏற்படும் ஒவ்வொரு புதிய திருப்பத்தை எதிர்கொள்ளும் மார்க்சியத்தின் தொடர்பை புறக்கணிக்கின்றனர்.

மாவேதுங் கூறுகிறார், மார்க்சிய-லெனினியம் எந்த வகையிலும் உண்மை பற்றிய முழு அறிவையும் அப்படியே திரட்டிக் கொடுத்துவிடவில்லை, அது நடைமுறை வாயிலாக உண்மையை அறிந்திடும் வழியை இடைவிடாமல் திறந்து விடுகிறது. மார்க்சிய அடிப்படைகள் எதிர்பாராத புதிய திருப்பங்களைச் சந்திப்பதற்கு நமக்கு வழிகாட்டுகிறது. திருத்தல்வாதிகள் புதிய நிலைமைகளைக் காரணம்காட்டி மார்க்சிய அடிப்படைகளைத் திரித்துரைக்கின்றனர்.

லெனின். வறட்டுவாத்தை எதிர்க்கும் போது, பொதுப்படையான, அடிப்படையான குறிக்கோள்களை இங்கே குறிப்பிடவில்லை, வர்க்கங்களிடையே நிலவும் அடிப்படை உறவு மாறாமல் இருக்கும் வரை வரலாற்றின் திருப்பங்களை ஒட்டி பொதுவான, அடிப்படையான குறிகோள்கள் மாறுவதில்லை என்றே கூறினார். இதனைத் திருத்தல்வாதிகள் கணக்கில் கொள்வதே இல்லை.

திருத்தல்வாதம் தோன்றுவதற்கு அந்தந்த நாட்டில் உள்ள, பொருளாதாரத்தின் பிற்பட்ட நிலை காரணமாக உள்ள வர்க்க வேர்களேயாகும். முதலாளித்துவ வளர்ச்சி காரணமாகக் குட்டி முதலாளித்துவப் பகுதியினரை ஓட்டாண்டியாக்கப்பட்டுப் பாட்டாளி வர்க்க அணிக்குத் தள்ளப்படுகிறார்கள். அதனால் மார்க்சியம் அல்லாத சோஷலிசம் இயல்பாகவே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் நுழைகிறது. நுழைவதைத் தவிர்க்க முடியாது, ஆனால் கட்சி அதனை எதிர்கொள்ளும் வகையில் சித்தாந்தத்தில் தெளிவுடனும், வலுவுடனும் இருக்க வேண்டும். இருந்தால் தான் அவர்களை நெறிப்படுத்த முடியும்.

தத்துவத்துறையில் திருத்தல்வாதிகள் புரட்சிகரமான இயக்கவியலை மறுத்து அதற்கு மாறாக எளிய பரிணாமப் போக்கை நுழைக்கின்றனர். முதலாளித்துவ அறிஞர்கள் இதுவரை மார்க்சியத்தின் மீது வைத்த குற்றச்சாட்டை மீண்டும் வைத்து, பொருள்முதல்வாதம் நெடுங்காலத்திற்கு முன்பே தவறென நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று கூறி, மார்க்சிய அடிப்படைகளைத் திருத்துகின்றனர். பொருள்முதல்வாதத்திற்கு எதிரான கான்ட், ஹெகல் ஆகியோரின் கருததுமுதல்வாத தத்துவங்களைப் பொருள்முதல்வாதத்துடன் இணைக்க முயற்சிக்கின்றனர். நமது நாட்டில் விவேகானதர், ஆதிசங்கரர் ஆகியோர்களின் அகநிலைக் கருத்துமுதல்வாதத்தை மார்க்சியத்துடன் இணைக்கும் வேலையைச் செய்கின்றனர். தென்கலை வைணவத்தையும் அதே போல் இணைக்கின்றனர். சைவத்தை இணைக்கும் போக்கும் உண்டு.

அரசியல் பொருளாதாரத் துறையில் திருத்தல்வாதமானது, இன்றைய முதலாளித்துவ வளர்ச்சி காரணமாய்ப் பொருளாதார நெருக்கடிகள் அரிதாக ஏற்படுகிறது, மேலும் பலம் குறைந்து விட்டதாகவும், நெருக்கடியை அறவே நீக்கிடும் ஆற்றலைக் கார்ட்டல்களும் டிரஸ்டுகளும் மூலதனத்தக்கு அளித்திடும் என்று கூறுகின்றனர். 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் இந்தத் திருத்தல்வாதத்தை மறுதலிக்கிறது. இன்றைய ரோபோட் வளர்ச்சி உபரி மதிப்புக் கோட்பாட்டை மறுத்துவிடுவதாகக் கூறுகின்றனர். ஆனால் இந்தத் திருத்தல்வாதிகள் மாறும் மூலதனத்திற்கும் மாறா மூலதத்தனத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்திடாமல் இருக்கின்றனர். மாறா மூலதனத்தின் வளர்ச்சியே முதலாளித்துவ வீழ்ச்சிக்கும் சோஷலிசப் புரட்சிகும் அடிப்படை என்று மார்க்சியப் பொருளாதாரம் கூறுகிறது.

அரசியலில் திருத்தல்வாதமானது, வர்க்கப் போராட்டத்தை மறுதலிப்பதில் அடங்கிருக்கிறது. அரசியல் சுதந்திரம், ஜனநாயகம், அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை ஆகியவற்றால் வர்க்கப் போராட்டத்தின் அடித்தளம் அகற்றிவிட்டதாகக் கூறுகிறது. பொருளாதார  நெருக்கடியும், அதனைத் தொடர்ந்து வேலை இழப்புகளும் ஏற்படுகிற இந்த உலகில் எப்படி வர்க்கப் போராட்டத்தை மறுக்க முடியும்.

தொழிலாளர்களுடைய சங்கமான கம்யூனிஸ்டுக் கழகத்தின் வேலைத்திட்டமாக “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” 1848ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை வெளிவந்து நூற்று எழுபது ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்றும் அதன் அடிப்படைக் கோட்பாடுகளை ஒவ்வொரு பொருளாதார நெருக்கடிகளும் உறுதிபடுத்திவருகிறது. இந்த அறிக்கையைப் படிக்கும் போது அதற்கான, மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதிய முன்னுரைகளைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அதில் கூறப்பட்டவைகளின் வழிகாட்டுதல், இன்றைக்குப் புதியதாகப் படிப்பவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது.

“கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருந்த போதிலும், இந்த அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்டுள்ள பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும்போல் இன்றும் சரியானவையே ஆகும். ஆங்காங்கே சில விவரங்களைச் செம்மைப்படுத்தலாம். இந்தக் கோட்பாடுகளின் நடைமுறை பயன்பாடு என்பது, இந்த அறிக்கையே குறிப்பிடுவதுபோல, எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்திலும், அந்தந்தக் காலகட்டத்தில் நிலவக்கூடிய வரலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும்” (மார்க்ஸ், எங்கெல்ஸ் - 1872 ஜெர்மன் பதிபின் முன்னுரை)

      இந்தப் பொதுக் கோட்பாடு அன்று போல் இன்றும் சரியானவையே. புதியதாக வருகின்ற தரவுகளுக்கு ஏற்ப மார்க்சியம் செழுமைப்படுகிறது. அறிக்கையின் தொடக்கத்தில், “இதுநாள் வரையிலான சமூகங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறே ஆகும்.” என்று மார்க்சும் எங்கெல்சும் சேர்ந்து தெரிவிக்கின்றனர். இதற்கு, திருத்தமாக எங்கெல்ஸ் 1888ஆம் ஆண்டு எழுதிய அடிக்குறிப்பில் எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் என்று சேர்க்கிறார். 1847க்கு முன்பாக வர்ககங்கள் அற்ற சமூகம் இருந்ததை அறியப்படவில்லை. அறிந்தவுடன் அதனை எங்கெல்ஸ் அடிக்குறிப்பில் சேர்க்கிறார். இது மார்க்சிய அடிப்படைக் கோட்பாட்டைச் செழுமைப்படுத்துகிறதே தவிர, அதனைச் சிதைக்கவோ, திரிக்கவோ இல்லை.

      புதிய தரவுகளின் மூலம் மார்க்சியம் துல்லிய தன்மை பெறுகிறது, அவ்வளவு தான். ஆனால் திருத்தல்வாதிகள் உடனே மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்று கூச்சலிடுகின்றனர். இந்தக் கூச்சல் வர்க்க சமூகம் அழியும் வரை இருக்கும், படிப்படியாகத்தான் குறையும்.

      ஒரு கம்யூனிஸ்டுகளின் அடிப்படை ஆவணமாக அறிக்கை நீடித்துவருவதால் இதில் எந்தத் திருத்தத்தையும் மார்க்சும் எங்கெல்சும் செய்யவில்லை. “அறிக்கையானது ஒரு வரலாற்று ஆவணமாகிவிட்டது. இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை.” என்று கூறியதற்கு இணங்கவே எங்கெல்ஸ் திருத்தத்தை அடிக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

      மார்க்சும் எங்கெல்சும் இருக்கின்ற காலத்திலேயே அறிக்கையில் செய்ய வேண்டிய மாற்றத்தைப் பற்றி 1872ல் எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளனர். நவீனத் தொழில்துறை வளர்ச்சி, தொழிலாளர் கட்சி அமைப்பின் மேம்பாடு, பாரிஸ் கம்யூன் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் சில விவரங்கள் காலங்கடந்ததாகிவிட்டது என்று எழுதியுள்ளனர். விவரங்கள் தான் காலங்கடந்ததாகிவிட்டது மார்க்சிய அடிப்படைகள் மாறிவிட்டதாகக் கூறவில்லை. இன்றைய நிலையிலும் நாம் இவ்வாறு தான் அணுக வேண்டும். திருத்தல்வாதிகளைப் போல் இதனைக் காரணமாக்கி அடிப்படையைத் திரிக்கக்கூடாது

அறிக்கையின் மூன்றாவது பிரிவான “சோஷலிச இலக்கியம் பற்றிய விமர்சனம்” இன்றைய நிலைமைக்குப் பற்றாக்குறையானது என்று அதே முன்னுரையில் இருவரும் கூறுகின்றனர். அதில் காணப்படும், பிரபுத்துவச் சோஷலிசம், குட்டிமுதலாளித்துவச் சோஷலிசம், முதலாளித்துவச் சோஷலிசம் ஆகியவைகளின் அடிப்படைகள் இன்றும் சரியானதே, அதனைக் கொண்டு மேலும் வளப்படுத்தலாம்.

அதே போல் நான்காம் பிரிவு, “பற்பல எதிர் கட்சிகள் தொடர்பாகக் கம்யூனிஸ்டுகளின் உறவுநிலையைப் பற்றிய குறிப்புகள்” கோட்பாடு அளவில் இன்றும் பிழையற்றவையே, நடைமுறையில் காலங்கடந்தவையாகிவிட்டது என்று இருவரும் அம்முன்னுரையில் தெரிவித்துள்ளனர். அதற்கு முக்கியக் காரணம் அதில் குறிப்பிட்ட கட்சிகளில் பல புவிப்பரப்பில் மறைந்துவிட்டது.

முதல் இரண்டு பிரிவுகளும் இன்றைக்கும் அறிந்து கொள்ள வேண்டியவை நிறைந்து காணப்படுகிறது. முதலாவது பிரிவு முதலாளிகளும் பாட்டாளிகளும், இரண்டாவது பிரிவு பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும். முதலாளிகளும் பாட்டாளிகளும் இருக்கும் வரை கம்யூனிஸ்டுகளுக்கு இதுவே அடிப்படை.

      இன்றைய நிலையில், இரண்டாவது பிரிவை, சரியாகப் புரிந்து கொண்டால் நம் நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சிகளும், கம்யூனிஸ்டுகளும் சிறப்பாகச் செயற்பட முடியும். இரண்டாம் பிரிவின் தொடக்கமே தெளிவோடு தொடங்குகிறது.

“ஒட்டுமொத்தப் பாட்டாளிகளுடன் கம்யூனிஸ்டுகள் கொண்டுள்ள உறவு எத்தகையது?

கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கு எதிரான ஒரு தனிக் கட்சியாக அமையவில்லை. கம்யூனிஸ்டுகளுக்கு ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர வேறு தனிப்பட்ட நலன்கள் கிடையாது.”

தொழிலாளர்களின் நலன்களைத் தவிர்த்த வேறெந்த நலன்களையும் கம்யூனிஸ்டுகள் பிரதிபலிக்கவில்லை. தொழிலாளர்களின் உண்மையான சூழ்நிலைமைகளைப் புரிந்து அதில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காகப் போராடுபவர்களே கம்யூனிஸ்டுகள். கேள்வி பதில் வடிவில் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்ற நூலில் எங்கெல்ஸ் இதனை இன்னும் நேரடியாகவே கூறியுள்ளார். “கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய போதனை” என்று சுருக்கமாகச் சூத்திரத்தைப் போல் கூறியுள்ளார்.

கம்யூனிஸ்டுகள் என்றால், கட்சி காங்கிரசில் எடுக்கப்பட்ட முடிவுகளைச் செயற்படுத்துவதும், மாதந்தோறும் உறுப்பினர் கட்டணத்தை வசூலிப்பதும் என்ற சுருங்கிய பார்வையே இன்று மேலோங்கி இருக்கிறது. ஆனால் அறிக்கை, கம்யூனிஸ்டுகளுக்குத் தேவைப்படுகிற செயற்திறமைகளைச் சுட்டிக்காட்டுகிறது.

பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை வென்றுகொள்ளும் அளவுக்குக் கம்யூனிஸ்டுகள் திறம் பெற வேண்டுமானால், அவர்களுக்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதம், அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றில் பொதுவான பார்வை இருந்தாக வேண்டும். அனைவரும் பொருளாதார மேதைகளாக முடியாது. ஆனால் பொதுவான பயிற்சி கொடுக்கும் போதே பல மேதைகள் தோன்றுவார்கள். கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர்களுக்கு அரசியல் மீது மட்டும் ஆர்வம் இருந்தால் போதாது, அந்த அரசியல், விஞ்ஞானத் தன்மை பெற்றதாக- மார்க்சிய அரசியலாக- இருக்க வேண்டுமானால் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மற்றும் அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றைக் கற்க வேண்டும். கற்றதை தற்போதைய நிலைமையோடு இணைத்துச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

“கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் நடைமுறை ரீதியில், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளில், மிகவும் முன்னேறிய, மிகவும் உறுதி வாய்ந்த பிரிவாக, மற்றவர்கள் அனைவரையும் முன்னோக்கி உந்தித் தள்ளுகின்ற பிரிவாக உள்ளனர். மறுபுறம் தத்துவ ரீதியில், கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்கத்தின் பெருந்திரளினருக்கு இல்லாத ஓர் அனுகூலத்தை, அதாவது, பாட்டாளி வர்க்க இயக்கத்தின் திசைவழியையும், நிலைமைகளையும், இறுதியில் ஏற்படும் பொதுவான விளைவுகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தைப் பெற்றுள்ளனர்.”

கூலியுழைப்பைப் பற்றி அறிக்கைக் கூறுவதைப் புரிந்து கொள்வதற்கு அரசியல் பொருளாதாரத்தில் பொதுப் புரிதல் அவசியம். பொருளாதாரம் தெரியாமல் அதன் முடிவுகளை மட்டும் தெரிந்து வைத்திருப்பது நடைமுறைக்குப் பயன்படாது. நடைமுறை செயற்பாட்டிற்குப் பொருளாதாரப் புரிதல் அவசியமாகும்.

“கூலியுழைப்பின் சராசரி விலைதான் குறைந்தபட்சக் கூலியாகும். அதாவது, தொழிலாளியைத் தொழிலாளியாகக் குறைந்தபட்ச வாழ்க்கை நிலைமையில் தொடர்ந்து வாழவைக்க அத்தியாவசியமாகத் தேவைப்படும் பிழைப்புச் சாதனங்களின் அந்த அளவே குறைந்தபட்சக் கூலியாகும். ஆக, கூலித் தொழிலாளி தன் உழைப்பின் மூலம் ஈட்டுவது, தொடர்ந்து உயிர்வாழவும், குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை மறுஉற்பத்தி செய்வதற்கும் மட்டுமே போதுமானது.”

      வரலாற்றியல் பொருள்முதல்வாதமே கம்யூனிஸ்டுகளுக்கு வழிகாட்டியாகும். ஏன், அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்வதற்குக்கூட வரலாற்றியல் பொருள்முதல்வாதம் அவசியமாகும். மார்க்சியத்தை விஞ்ஞானம் என்று கூறுவதனால் அதனைப் படித்த அனைவரும் ஏற்றுக் கொள்வர் என்று கூறிடமுடியாது. இயற்கை விஞ்ஞானத்தைப் போல் அல்லாது, சமூக விஞ்ஞானம் என்பது வர்க்க சார்பானதாகும். வர்க்க நலனின் அடிப்படையில் தான் அரசியல் பொருளாதாரத்தை ஏற்றுக் கொள்ள முடியும். முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தை முதலாளித்துவ வர்க்க சார்பாளர்களால் தான் ஏற்றுக் கொள்ள முடியும், அதே போலப் பாட்டாளி வர்க்க, அரசியல் பொருளாதாரம் பாட்டாளி வர்க்க சார்புடையவர்களால் தான் ஏற்றுக் கொள்ள முடியும்.

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை அறிக்கை தெளிவாக முன்வைக்கிறது.

“மனிதனது கருத்துகளும் நினைப்புகளும் கண்ணோட்டங்களும் – சுருங்கச் சொன்னால் மனிதனது உணர்வானது – அவனது பொருளாயத வாழ்நிலைமைகளிலும் சமூக உறவுகளிலும் சமூக வாழ்விலும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுடன் சேர்ந்து மாறிச் செல்வதைப் புரிந்து கொள்ள அழ்ந்த அறிவு வேண்டுமா, என்ன?

பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, அறிவுத் துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது- கருத்துகளின் வரலாறு நிரூபிப்பது இதன்றி வேறு என்னவாம்?”

      வாழ்நிலை என்பது உற்பத்தியின் போது ஏற்படுகிற உறவுநிலையாகும். இந்த உற்பத்தி உறவுநிலையில் இருந்தே,  அதாவது வாழ்நிலையில் இருந்தே சிந்தனை ஏற்படுகிறது என்பதே சமூகம் பற்றிய பொருள்முதல்வாதப் பார்வையாகும். சிந்தனையில் இருந்து வாழ்நிலை தோன்றுகிறது என்பது கருத்துமுதல்வாதமாகும். கருத்துமுதல்வாதம் சுரண்டல் கண்ணோட்டத்தையும் பொருள்முதல்வாதம் சுரண்டலுக்கு எதிரான கண்ணோட்டத்தையும் கொடுக்கிறது. வர்க்கமாகப் பிரிந்துள்ள சமூகத்தில் ஒரு சார்பற்ற சமூக விஞ்ஞானம் இருக்க முடியாது.

      அறிக்கையின் முதல் பிரிவின் தலைப்பு முதலாளிகளும் பாட்டாளிகளும். மார்க்ஸ் 1845க்கு முன்பு தமது தத்தவத்தை முழுநிறைவடையச் செய்துள்ளார். அரசியல் பொருளாதாரம் 1859 வரைக்கும் முழுமையாக்கப்படவில்லை. மார்க்ஸ் அடிப்படை அமைத்துவிட்டார் அதனை விளக்குகின்ற துல்லிய தன்மையைத் தரவுகளுடன் நிறுவ முனைகிறார். அப்படியிருந்தும் அறிக்கையில் முதலாளித்துவத்தின் உற்பத்தி வளர்ச்சியின் விளைவாக ஏற்படுகிற மிகை உற்பத்தியை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த மிகைவுற்பத்தியே முதலாளித்துவ உற்பத்தி முறையை நிலைகுலையச் செய்கிறது. இந்தப் பகுதியை மார்க்சும் எங்கெல்சும் ஒரு நாடக பாணி கலைவுணர்வோடு விவரித்துள்ளனர்.

      முதலாளித்துவம் தான் உருவாக்கிய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியால் திணறிப் போகிறது. மிகையாய்ச் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்கள் விற்காமல் சந்தையில் தேங்கிக்கிடக்கிறது. தானே உருவாக்கிய உற்பத்தி சக்தியின் பிரம்மாண்டத்தை அடக்க முடியாமல் தவிப்பதை அறிக்கை அழகுபடக் கூறுகிறது.

“நவீன முதலாளித்துவச் சமூகமானது தனக்கே உரியத்தான உற்பத்தி, பரிவர்த்தனை, மற்றும் சொத்துரிமை உறவுகளைக் கொண்டு பிரம்மாண்டமான உற்பத்தி மற்றும் பரிவர்த்தனைச் சாதனங்களை மந்திர வித்தை போல உருவாக்கியது. தனது மாயவித்தையால் பாதாள உலகிலிருந்து தருவித்துத் தானே உருவாக்கிய சக்திகளைக் கட்டுப்படுத்த இயலாத ஒரு மந்திரவாதியின் நிலைமையில் இப்போது நவீன முதலாளித்துவம் இருக்கிறது.
சமூகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உற்பத்தி சக்திகள் முதலாளித்துவச் சொத்துக்கள் மேலும் வளர்க்கும் தன்மையுடையதாய் இல்லை. மாறாக அவை அந்த உறவுகளுக்குப் பொருந்தாதபடி அளவுக்கு மீறி மிகவும் வலிமை பெற்றவையாக ஆகிவிட்டன. இந்த உறவுகளே அவற்றின் வளர்ச்சிக்குத் தடையாகிவிட்டன. எனவே பொருள் உற்பத்தி சக்திகள் அந்தத் தடைகளை விரைவாகக் கடந்து முன்னேறுகின்றன. அவ்வாறு கடக்கும்போது அவை ஒட்டு மொத்த முதலாளித்துவச் சமூகத்துக்குள்ளேயே சீர்குலைவை ஏற்படுத்துகின்றன. முதலாளித்துவச் சொத்துடைமை நீடித்து நிலவுவதற்கே அபாயத்தைத் தோற்றுவிக்கின்றன. முதலாளித்துவச் சமூகம் தான் உருவாக்கிய செல்வத்தையே உள்ளடக்கிக் கொள்ள முடியாத அளவுக்கு முதலாளித்துவச் சமூக உறவுகள் சுருங்கிப் போகின்றன.”

      இதனையே எங்கெல்ஸ் “டூரிங்கு மறுப்பு” என்ற நூலில் கூறுகிறார், “சமூகமயமாகிவிட்ட பொருளுற்பத்திக்கும், முதலாளித்துவச் சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையாய்த் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது

ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியும் இதனை மெய்பிக்கின்றன. புறநிலைமைக்கு ஏற்ப அகநிலைமைகள் தயாராகி, முதலாளித்துவ உற்பத்தி முறைக்குத் தீர்வாய் பாட்டாளி வர்க்கம் புரட்சியை நிகழ்த்தி, முதலாளித்துவ நெருக்கடிக்கு முடிவுகட்டி, சோஷலிச சமூகத்தைப் படைக்கும். இந்தப் பொருளாதார நிலைமைகளை முன்வைத்து வரலாற்றியல் பொருள்முதல்வாதம் கோட்பாடாக நமக்குத் தருகிறது. புறநிலைமை மார்க்சியத்தை இன்றும் மெய்பித்துவருகிறது. பொருளாதாரப் பொதுநெருக்கடியை மார்க்ஸ் சந்திக்கவில்லை. வணிக நெருக்கடிகளையே சந்தித்தார். பொருளாதாரப் பொது நெருக்கடி 1914ல் தான் முதன்முறையாகத் தோன்றியது. இருந்தும் அதனை மார்க்ஸ் முதலாளித்துவ உள்முரண்பாட்டின் அடிப்படையில் முன்பே கணித்தார்.

பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் மிகை உற்பத்தியாகும். இதற்கு அடிப்படை முதலாளித்துவச் சமூகம் போட்டியின் காரணமாகப் புதியப்புதிய கருவிகளைப் படைப்பதே ஆகும். இதனை அறிக்கை மிகமிக எளிமையாக விவரித்துள்ளது.

“முதலாளித்துவ வர்க்கத்தால் ஓயாது ஒழியாது உற்பத்திக் கருவிகளிலும், இதன் மூலம் உற்பத்தி உறவுகளிலும், இவற்றுடன் கூடவே சமூக உறவுகள் அனைத்திலுமே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாமல் வாழ முடியாது.” (பிரிவு - 1)

இதன் காரணமாகவே முதலாளித்துவ உற்பத்தி முறையில் பொருளாதார நெருக்கடியை தவிர்க்க முடியாமல் மீண்டும் மீண்டும் தோன்றிய வண்ணம் உள்ளது, ஒவ்வொரு நெருக்கடியில் இருந்தும் தப்பிக்கும் போது அடுத்தப் புதிய அதைவிட அதிகமான நெருக்கடியை சந்திக்க வேண்டிவருகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையால் பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க முடியாது. அதற்குத் தீர்வாக மார்க்சியம் வைக்கும் சமூக மாற்றத்தை தடுக்க முடியாது.

பொருளாதார நெருக்கடியால் அவ்வப்போது தடுமாறும் முதலாளித்துவத்திற்குத் தீர்வு பாட்டாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தை வெற்றிக் கொள்வதேயாகும். இந்த வெற்றி அடையும்வரை அறிக்கையின் அவசியம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும் தமது நோக்கத்தைத் தெரிந்து அதனை நிறைவேற்ற வேண்டும்

“கம்யூனிஸ்டுகளுடைய உடனடி நோக்கம் ஏனைய எல்லாப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளது உடனடி நோக்கம் என்னவோ அதுவேதான். பாட்டாளிகளை ஒரு வர்க்கமாய் உருப்பெறச் செய்வதும், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துவதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் அட்சியதிகாரம் வென்று கொள்வதும்தான்” (பிரிவு - 2)

புறநிலைமையே அகநிலைமையைத் தீர்மானிக்கும். ஒவ்வொரு புரட்சிகர நிலைமையும் புரட்சியை ஏற்படுத்தாது, அதற்கான அகநிலைமையின் தயாரிப்பே புரட்சியை நடத்திமுடிக்கும். பொருளாதார நெருக்கடிக்கு ஏற்ப அகநிலை தயாரிப்பை, கம்யூனிஸ்ட் கட்சி செய்ய வேண்டும். முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் சிக்கலுக்குத் தீர்வு சோஷலிச புரட்சியே. அதற்கான வழிமுறைகளைக் கட்சி தேர்ந்தெடுக்க வேண்டும்.

“கம்யூனிஸ்டுகள் தமது கருத்துகளையும் நோக்கங்களையும் மறைத்து வைப்பதை வெறுத்து ஒதுக்குகிறார்கள். இன்றுள்ள சமூகத்தின் நிலைமைகள் அனைத்தையும் வலுவந்தமாய்த் தூக்கியெறிய வேண்டும். அப்போதுதான் தமது குறிக்கோள் நிறைவேறும் என்று கம்யூனிஸ்டுகள் ஒளிவுமறைவின்றிப் பறைசாற்றுகிறார்கள். கம்யூனிசப் புரட்சியின் வருகையை நினைத்து ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளுக்கு அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஒன்றுமில்லை. அவர்கள் வெல்வதற்கு ஓர் உலகம் இருக்கிறது.” (பிரிவு- 4)

இந்த அறிக்கையின் நோக்கமாக மார்க்சும் எங்கெல்சும் 1882ஆம் ருஷ்யப் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில், “நவீன கால முதலாளித்துவச் சொத்துடைமையின் தகர்வு தவிர்க்க முடியாதபடி நெருங்கி வருவதைப் பிரகடனம் செய்வதே கம்யூனிஸ்டு அறிக்கையின் குறிக்கோள்” என்று தெரிவித்துள்ளனர். இந்தக் கடமையை நிறைவேற்றும் வரை நமக்கு அறிக்கையே சிறந்த வழிகாட்டியாக இருக்கும். அன்றாடச் சீர்திருத்த போராட்டத்துடன் இறுதிநோக்கத்தை அடையும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி வர்க்கப் பார்வையில் செயல்பட வேண்டும்.

அனைத்து நாட்டு தொழிலாளர்களும் ஒன்று சேர்வோம். புதிய உலகைப் படைப்போம். நாளை நமதே. நாளைய உலகம் உழைப்பாளர்களுக்கே.