Friday 28 December 2018

கருத்துநிலை மறுவார்ப்பு (ideological remoulding) – ஜார்ஜ் தாம்ஸன்


சரக்கு உற்பத்தியுடனும் வர்க்கச் சுரண்டலுடனும் தொடர் புடைய கருத்துகள் நம் மனத்தில் ஆழமாக வேர்பிடித்துள்ளதால், இடைவிடாத அரசியல் போராட்டத்தின் மூலமே அவற்றை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். எனவேதான், சோசலிசப் புரட்சியின் போதும் அதன் பிறகும், அனைத்து வர்க்கங்களுக்கும் கருத்துநிலை மறுவார்ப்புத் தேவைப்படுகிறது. இது பழைய சுரண்டல் வர்க்கங்களுக்கு மட்டுமல்ல, அறிவாளிகள், பாட்டாளி வர்க்கம் உள்ளிட்ட புரட்சியை ஆதரிக்கும் வர்க்கங்களுக்கும் தேவைப்படுகிறது:

“வர்க்கப் போராட்டத்திலும் இயற்கைக்கு எதிரான போராட்டத்திலும் பாட்டாளி வர்க்கம் சமுதாயம் முழுவதையும் மறுவார்ப்புச் செய்கிறது, அதே சமயம் தன்னையும் மறுவார்ப்புச் செய்து கொள்கிறது”. (MFE 105.)

கட்சியால் வழி நடத்தப்படும் பாட்டாளிவர்க்கம் அறிவாளி களுக்குத் தலைமை தாங்கி, அவர்கள் தங்களைத் தாங்களே மறுவார்ப்புச் செய்து கொள்வதன் மூலமே அவர்களால் புதிய சமுதாயத்திற்குத் தமது பங்களிப்பை முழுமையாக வழங்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ளும்படி செய்ய வேண்டும்:

“நமது இலக்கிய, கலைத்துறைச் செயல்பாட்டாளர்கள் இந்தக் கடமையை நிறைவேற்றித் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்; அவர்கள், தொழிலாளர்கள், உழவர்கள், போர்வீர்கள் பக்கம் மெல்ல மெல்ல வந்து சேர வேண்டும். அவர்கள் நடுவே செல்வதன் மூலமும் நடைமுறைப் போராட்டங்களுக்குச் செல்வதன் மூலமும் மார்க்ஸியம், சமுதாயம் ஆகியனவற்றைக் கற்பதன் மூலமும்தான் அவர்கள் இவ்வாறு வந்து சேர முடியும். (MSW 3.78.) பெருந்திரளான அறிவாளிகள் சிறிது முன்னேற்றம் அடைந் திருக்கிறார்கள். ஆனால் இதை கொண்டு அவர்கள் திருப்தி அடைந்துவிடக்கூடாது. அவர்கள் தொடர்ந்து தம்மை மறுவார்ப்புச் செய்துகொள்ள வேண்டும். தமது பூர்ஷ்வாக் கண்ணோட்டத்தைப் படிப்படியாகக் கைவிட்டு பாட்டாளி வர்க்க, பொதுவுடைமைக் கண்ணோட்டத்தைப் பெற வேண்டும். அப்போதுதான் அவர்களால் புதிய சமுதாயத்தின் தேவைகளுக்குத் தம்மைப் பொருத்தமானவர்களாக்கிக் கொள்ளவும் தொழிலாளர்களுடனும் உழவர்களுடனும் ஒன்றுபடவும் முடியும். உலகக் கண்ணோட்டத்தில் ஏற்படும் இந்த மாற்றம் அடிப்படையானதொரு விஷயமாகும். இன்றுவரை நமது அறிவாளிகளில் பெரும்பாலோர் தமது உலகக் கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளதாகச் சொல்ல முடியாது. அவர்கள் இந்த விஷயத்தில் தொடர்ந்து முன்னேற்றமடைவார்கள் என்றும், வேலைகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்வதனூடாக அவர்கள் படிப் படியாக பொதுவுடைமைக் கண்ணோட்டத்தைப் பெற்று, மார்க்ஸியம் - லெனினியத்தை முன்பைக் காட்டிலும் நன்கு கிரகித்துக்கொண்டு, தொழிலாளர்களுடனும் உழவர் களுடனும் பிரிக்கமுடியாதபடி ஒன்றுபடுவர் என்றும் நாம் நம்பிக்கை கொள்ளலாம்.” (MFE 108.)

அறிவாளிகளின் உலகக் கண்ணோட்டத்தை மாற்றும் இயக்கம் பாட்டாளிவர்க்கத்தின் தலைமையின் கீழ் நடத்தப்படு கிறது. ஆனால், இந்த இயக்கத்திற்கு அறிவாளிகள் தாமாகவே முன் வந்து இசைவு தரவும் அதில் முழு நம்பிக்கை பெறவும் செய்கையில்தான் இது வெற்றியடையும்:

“சுதந்திரம் என்பதைக் கட்சித் தலைமையுடனும் ஜனநாயகம் என்பதை மையப்படுத்தப்பட்ட வழிகாட்டுதலுடனும் இணைத்தே கடைப்பிடிக்க வேண்டும் என்னும் கருத்தை நாம் பரிந்துரைக்கையில், அதன் பொருள் கருத்துநிலைப் பிரச்சனைகளையோ, மக்களிடம் சரியானது எது, தவறானது எது என்பதைப் பாகுபடுத்தும் பிரச்சனைகளையோ தீர்ப்பதற் குப் பலவந்த முறைகளைக் கையாள வேண்டும் என்ப தாகாது. கருத்துநிலைப் பிரச்சினைகளையோ, சரியானதா தவறானதா என்னும் பிரச்சினைகளையோ தீர்ப்பதற்கு நிர்வாக ஆணைகளையோ பலவந்த நடவடிக்கை களையோ பயன்படுத்தச் செய்யப்படும் எல்லா முயற்சிகளும் பயனற் றவை மட்டுமின்றி ஊறு விளைவிக்கக் கூடியவையுமாகும். நிர்வாக ஆணைகள் மூலமாக நம்மால் மதத்தை ஒழிக்கவோ, மதத்தில் நம்பிக்கை வைக்காதிருக்கும்படி மக்களைக் கட்டாயப்படுத்துவவோ முடியாது. கருத்து முதல்வாதத்தைக் கைவிடும்படி மக்களை நம்மால் எப்படிக் கட்டாயப்படுத்த முடியாதோ அவ்வாறே மார்க்ஸியத்தில் நம்பிக்கை வைக்கும் படி அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. கருத்துநிலைத் தன்மைவாய்ந்த பிரச்சினைகளையோ மக்களிடையே நிலவும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளையோ தீர்ப்பதற்கான ஒரே வழி ஜனநாயக முறையாகும்; விவாதித்தல், விமர்சித்தல் நமது கருத்துகளுக்கு அவர்களை. இணங்கச் செய்தல், கல்வி புகட்டுதல் என்னும் முறையே யன்றி கட்டாயப்படுத்துதல், ஒடுக்குதல் என்னும் முறையல்ல.” (MFE 86.)

பாட்டாளிவர்க்கத்திற்கும் அறிவாளிகளுக்குமிடையே உள்ள பகைத்தன்மையற்ற முரண்பாட்டை மேற்சொன்ன வகையில் கையாண்டால் அது வெற்றிகரமாகத் தீர்க்கப்படும் என்பதைக்கடந்த கால் நூற்றாண்டாக சீனப் பொதுவுடைமைக் கட்சி பெற்றுள்ள அனுபவம் காட்டுகிறது.
(மனித சாரம் - IX அறிவாளிகளும் பாட்டாளிவர்க்கமும்
தமிழில்-எஸ்.வி.ராஜதுரை)




சரக்காகிவிடும் கலை – ஜார்ஜ் தாம்ஸன்


'முதலாளிய உற்பத்தி, அறிவு உழைப்பின் சில பிரிவு களுக்கு, எடுத்துக்காட்டாக, கவிதைக்கும் கலைக்கும் பகையானது (TSV 1.285). அறிவியல் உற்பத்திச் சக்தியாவது போல, கலை சரக்காகிறது. இந்தச் சரக்கு ஒரு நுகர்வுப்பொருளாக இருந்தபோதி லும் மற்ற சரக்குகளிலிருந்து இது ஒரு விஷயத்தில் வேறுபடுகிறது. அதாவது, இதனுடைய மதிப்பு, மோஸ்தரில் ஏற்படும் மாற்றங்கள், கலைப்படைப்புகளைச் சேகரிக்கும் செல்வந்தர்கள், இதையே தொழிலாகக் கொண்டவர்களின் நிதி, ஊகவாணிபம் போன்ற எதேச்சையான காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.

நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில், கலைஞன் இதர வினைஞர் களைப் போல சமூக வாழ்வில் ஒரு அடக்கமான ஆனால் பாது காப்பான இடத்தைப் பெற்றிருந்தான். அவன் தனது பிரபுவுக்குக் கட்டுண்டு கிடந்தபோதிலும் அவனுக்கும் பிரபுக்கும் இருந்த உறவு தனிப்பட்ட மனிதர்கள் சம்பந்தப்பட்ட ஒன்றேயன்றி வர்த்தக உறவு அல்ல. சரக்கு உற்பத்தியின் வளர்ச்சியுடன், இந்த மகிழ்ச்சியான எளிய உறவுகளுக்குப் பதிலாக பண உறவுகள் தோன்றின.

சென்ற அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்டதுபோல இந்த மாற்றத்தை வியென்னாவைச் சேர்ந்த மாபெரும் இசை அமைப் பாளர்களின் வாழ்க்கையில் காணலாம். பீதோவெனின் காலத்தில், இசைச் செயல்பாடுகளின் மையம் மேட்டுக்குடியினரின் வரவேற்பு அறையிலிருந்து இசை-அரங்குக்கும் புரவலரிடமிருந்து இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறவருக்கும் சென்றது. பீதோவென் இந்த மாற்றங்களை வரவேற்றபோதிலும், தானும் சந்தைக்காக உற்பத்தி செய்கிறவர்தான் என்னும் வேதனைமிக்க உணர்வையும் கொண்டிருந்தார்:

“இந்த உலகில் கலைக்கான ஒரு பெரும் களஞ்சியம் இருக்க வேண்டும். கலைஞன் அங்கு சென்று தனது படைப்புகளைச் சேர்க்க வேண்டும். பிறகு தனக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இப்போதோ, கலைஞன் பாதி வர்த்தகனாகவும் இருக்க வேண்டியுள்ளது - இதை எவ்வாறு பொறுத்துக்கொள்வது?” (l.etters, ed. Ander Son, 1.47.)

முதலாளியச் சமுதாயத்தில் கலைஞனின் சுதந்திரம் என்பது சந்தையின் சுதந்திரம்தான் (LCW 10.48).

ஏகபோக முதலாளிய யுகத்தில் இந்த சுதந்திரமும்கூட வெட்டிக் குறுக்கப்படுகிறது. ஏகபோக முதலாளிகளைப் பொருத்த வரை சிறு எண்ணிக்கையிலான மேட்டுக்குடியினருக்கான பொழுது போக்கு என்பதைத் தவிர கலைகளுக்கு எந்தப் பயனும் இல்லை. பிற ஏகபோக முதலாளிகளோ இலாபம் ஈட்டுவதற்கும் மக்கள் மனங்களில் ஒழுக்கக்கேடுகளை விதைக்கவும் ஆன்மீகரீதியான கறைகளை ஏற்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். இந்தத் தீமையின் விளைவை எல்லாவிடங்களிலும் பார்க்கலாம். ஆனால் எல்லா வற்றையும்விட, ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம் இன்னும் நிலவுகின்ற நாடுகளில்தான் பாரம்பரிய வெகுமக்கள் கலைவடிவங்கள் திட்ட மிட்டு அழிக்கப்பட்டுவருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் கலைஞன் ஒரு முடிவை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஒன்று, அவன் ஒரு சரக்கு - உற்பத்தியாளன் என்னும் தகுதியை ஏற்றுக் கொண்டு வர்த்தகரீதியான வெற்றியைத் தேடிச் செல்லவேண்டும்; அப்படிச் செய்வானேயாகில் ஒரு கலைஞனுக்குள்ள நேர்மையை அவன் இழந்துவிடுவான். அல்லது, வர்த்தக மதிப்பீடுகளை நிராகரித்து கலைப்படைப்பு சுய - வெளிப்பாட்டுக்கான ஒரு சுயாதீனமான் செயற்பாடு என்னும் கோட்பாட்டில் - கலை கலைக்காகவே என்னும் கோட்பாட்டில் - தஞ்சம் புக வேண்டும். ஆனால் இந்தக் கோட்பாடு வர்த்தக மதிப்பீடுகளிலிருந்து தப்பிப்பதற்கான வழிமுறையை வழங்குவதில்லை. மாறாக, இந்தக் கோட்பாடே சரக்கு உற்பத்தியில் உள்ளார்ந்த சுயநலம் சார்ந்த தனிமனிதவாதத்தின் வெளிப்பாடுதான். தனது சமூகப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதன் மூலம் அவன் தனக்கு உள் உந்துதல் தரும் மூலாதாரங்களிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்கிறான். பிறருக்கு உள் உந்துதல் தரக்கூடிய ஆற்றலை அவன் மீண்டும் பெறவேண்டுமானால், அவன் மக்களிடமிருந்து உள்உந்துதல் பெற வேண்டும். மக்களோடு ஐக்கியப்படுவதன் மூலமே, தனது கலை, அது தரும் மகிழ்ச்சிக்காக மதிக்கப்படுமேயன்றி சந்தையில் பெறும் விலைக்காக அல்ல என்பதை அவனால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
(மனித சாரம் - IX அறிவாளிகளும் பாட்டாளிவர்க்கமும்
தமிழில்-எஸ்.வி.ராஜதுரை)


முதலாளியத்திற்கான சேவையில் அறிவியல்– ஜார்ஜ் தாம்ஸன்


முதலாளியச் சமுதாயத்தில் அறிவியல், உழைப்பிலிருந்து மாறுபட்ட ஒரு உற்பத்திச் சக்தியாக மாறி மூலதனத்திற்கான சேவையில் ஈடுபடுத்தப்படுகிறது (C 1.361) ஏகபோக மூலதனக் காலகட்டத்தில், முன்பு இருந்ததைக் காட்டிலும் அதிகமாக அறிவியல் உயர்ந்த அளவில் ஒழுங்கமைக்கப்படுகிறது. ஆனால் இப்படி அது ஒழுங்கமைக்கப்படுவதன் முதன்மை நோக்கம் தனியாருக்கு இலாபத்தை ஈட்டித் தருவதுதான். அறிவியலின் தனித்தனியான குறிப்பிட்ட துறைகளிலோ அல்லது அவற்றின் பிரிவுகளிலோ மட்டுமே அறிவியல் அறிஞர்கள் பயிற்றுவிக்கப் படுவதால், அவர்களால் இயற்கை அறிவியல் முழுவதையும் கோட்பாட்டுரீதியாக உட்கிரகிப்பது கடினமாகி வருவதுடன், சமுதாயம் பற்றிய ஆய்வில் அவர்கள் பயிற்சி ஏதும் பெறுவ தில்லை. இதற்கு மறுதலையாக, சமூக, வரலாற்று அறிவியல்கள் இயற்கை அறிவியலிலிருந்து மட்டுமின்றி, ஒன்றிலிருந்து மற்றொன்றும் துண்டிக்கப்படுகின்றன. வரலாறு என்பது, அது ஏதோ அறிவியலின் ஒரு பிரிவு அல்ல என்பது போலக் கற்பிக்கப் படுகிறது. இயற்கை அறிவியலில் மாணவன் மார்க்ஸியம் குறித்து எதனையும் தெரிந்துகொள்வதில்லை. ஆயினும், குறைந்தபட்சம் இயற்கையிலுள்ள இயங்கியல் வளர்ச்சியைப் புரிந்துகொள்கிறான் - இயங்கியல் என்னும் பெயர் அவனுக்குத் தெரியாமல் இருந்த போதிலும். வர்க்கப் போராட்டத்தை புரிந்துகொள்ளக்கூட அறியாத பூர்ஷ்வா வரலாற்றறிஞனைப் பொருத்தவரை இயங்கியல் என்பதற்கு அர்த்தமே இல்லை.

பூர்ஷ்வாக் கல்வி முறையில் இயற்கை பற்றிய ஆய்வுக்கும் மனிதனைப் பற்றிய ஆய்வுக்கும் இடையிலான முரண்பாடு, ஒரு உற்பத்திச் சக்தி என்னும் வகையில் அறிவியலை வளர்க்க வேண்டிய தேவைக்கும் மூலதனத்துக்கும் உழைப்புக்குமுள்ள உண்மையான உறவை மூடிமறைக்க வேண்டிய தேவைக்கும் இடையிலான முரண்பாடு பூர்ஷ்வா உணர்வில் ஏற்படுத்தும் மோதலைப் பிரதிபலிக்கிறது.

சில பூர்ஷ்வா அறிவியல் அறிஞர்கள் தங்களது நிலையை நியாயப்படுத்துவதற்காக, தங்களது அக்கறை அறிவை அறிவுக் காகவே மேம்படுத்துவதானேயன்றி தமது பணியின் சமூகப் பின்விளைவுகளல்ல என்று கூறுகின்றனர். ஆனால், சமுதாயப் பிரச்சினைகள் கடுமையாகும்போது சுய மரியாதையை இழக்காமல் இந்த நிலைப்பாட்டை அவர்களால் தொடர்ந்து மேற்கொள்ள முடியாது. இது ஒருபுறமிருக்க, அவர்களில் வேறு சிலருக்குத் தொழிற்சாலைகளின் மூலம் தொழிலாளர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் வர்க்கப் போராட்டத் திற்குள் இழுக்கப்படுகிறார்கள். இவ்வாறுதான் அவர்கள், சோசலிசப் புரட்சியின் மூலமே, மக்களுக்கான சேவை கருதி பயன் - மதிப்பு களை உற்பத்தி செய்ய ஈடுபடுத்தப்படும் ஒரு சக்தியாக அறிவியல் உழைப்புடன் மீண்டும் ஐக்கியப்படுத்தப்படும் என்பதை அறிந்து கொள்கின்றனர்.
(மனித சாரம் - IX அறிவாளிகளும் பாட்டாளிவர்க்கமும்
தமிழில்-எஸ்.வி.ராஜதுரை)


புரட்சிகர அறிவாளிகள் – ஜார்ஜ் தாம்ஸன்


பொதுவாகவே, சமுதாயத்தின் அறிவாற்றல் துறை ஆளும் வர்க்கத்தின் கருத்து நிலையின் (ideology) ஆதிக்கத்துக்குட் பட்டிருக்கிறது:

“ஆளும் வர்க்கத்தின் கருத்துகளே ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆளும் கருத்துகளாகவும் இருக்கின்றன. அதாவது, சமுதாயத்தில் பொருள்வகையில் எந்த வர்க்கம் ஆளும் சக்தியாக உள்ளதோ, அதே வர்க்கம்தான் அதே சமயம் அறிவாற்றல் துறையில் ஆளும் சக்தியாகவும் விளங்குகிறது. பொருள்வகை உற்பத்திச் சாதனங்களைத் தன் கைவசம் வைத் திருக்கும் வர்க்கமே, அக்காரணத்தாலேயே, பொதுவாகச் சொல்லப்போனால் சிந்தனைப் படைப்புச் சாதனங்களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. இதனால் சிந்தனைப் படைப்புச் சாதனங்கள் இல்லாதவர்களின் கருத்துகள் ஆளும் வர்க்கத்திற்குக் கட்டுப்பட்டவையா கின்றன. ஆளும் கருத்துகள் என்பன உண்மையில் ஆதிக்கம் செலுத்தும் பொருள்வகை உறவுகளின் கருத்து வெளிப்பாடே யன்றி வேறல்ல” (GI 60.)

ஆயினும், புரட்சிக் காலகட்டங்களில், பழைய சமுதாயத் தின் கட்டுமானம் சிதையத் தொடங்குகையில், ஆளும் வர்க்கத்தி லுள்ள ஒரு பிரிவு அதிலிருந்து பிரிந்து வெளியேறிப் புரட்சி வர்க்கத்துடன் சேர்ந்துகொள்கிறது:

“வர்க்கப் போராட்டம் தனது இறுதியான, தீர்மானகரமான நேரத்தை நெருங்கி வருகையில், ஆளும் வர்க்கத்திற் குள்ளேயே நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிதைவு இயக்கம் - உண்மையில் சொல்லப்போனால் பழைய சமுதாயம் முழு வதிலும் நடைபெற்றுவரும் சிதைவு இயக்கம் - ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சிறிய பிரிவு தன்னை அதிலிருந்து துண்டித்துக் கொண்டு வெளியேறி புரட்சிகர வர்க்கத்துடன், எதிர்காலத்தைத் தனது கைகளில் வைத்துள்ள வர்க்கத்திடம் சேர்ந்துகொள்ளும் அளவுக்குக் கட்டுமீறியதாகவும் கண்ணை உறுத்துவதாகவும் அமைகிறது. எனவே, இதற்கு முந்திய காலகட்டத்தில் பிரபுக்குலத்தினரில் ஒரு பகுதியினர் பூர்ஷ்வா வர்க்கத்துடன் சேர்ந்து கொண்டதைப் போல், இப்போது பூர்ஷ்வா வர்க்கத்தின் ஒரு பகுதியினர் - குறிப்பாக பூர்ஷ்வா வர்க்க கருத்துநிலைவாதிகளில் ஒரு பகுதியினர் - பாட்டாளி வர்க்கத்திடம் போகின்றனர். இப்பகுதியினர் வரலாற்று இயக்கம் முழுவதையும் கோட்பாட்டு ரீதியாகப் புரிந்து கொள்ளும் அளவிற்குத் தங்களை உயர்த்திக் கொண்டவர் களாவர்.” (ME 1.1 17, cf. LCW 5.375.)

இத்தகைய அறிவாளிகள் முதலாளி வர்க்கத்திடம் தாம் கொண்டிருந்த பற்றுறுதியை இப்போது பாட்டாளிவர்க்கத்தின் மீது வைக்கத் தொடங்குகின்றனர். ஏனெனில், முதலாளியச் சமுதாயத் தின் வரலாற்றுச் சாதனைகள் ஒருபுறமிருப்பினும், அச்சமுதாயம் அறிவுக்கு மாறானது, ஒழுக்கக்கேடானது என்பதை அவர்கள் தம் அனுபவத்திலிருந்தே அறிந்துகொள்வதுதான்.
(மனித சாரம் - IX அறிவாளிகளும் பாட்டாளிவர்க்கமும்
தமிழில்-எஸ்.வி.ராஜதுரை)