Monday 5 August 2019

சமூகத்தில் இயக்கவியலின் செயற்பாடு


1.  எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி.
(The Law of the Unity and Struggle of Opposites)

2.  அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் மாறுவது பற்றிய விதி.
(The Law of the Transformation of Quantitative into Qualitative Changes)

3.     நிலைமறுப்பின் நிலைமறுப்பைப் பற்றிய விதி
(The Law of the Negation of the Negation)

சமூக மாற்றத்தில் இயக்கவியல் விதிகள் செயற்படுவதை, முதலாளித்துவ சமூக அமைப்பு முறையிலிருந்து சோஷலிச சமூக அமைப்பு முறைக்கு மாற்றம் பெறுவதின் வழியில் விளக்குவோம்.

சமூக உற்பத்தியின் வளர்ச்சியால் சமூகம் முன்னேறுகிறது. சமூக உற்பத்தியின் வளர்ச்சி என்பது உற்பத்திச் சக்திகளின் வளாச்சியில் இருந்து தொடங்குகிறது. உழைப்புச் சக்தியின் வளர்ச்சி முதன்மையாக உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியால் நிர்ணயிக்கப்படுகிறது.

நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின்போது உருவாகிய பட்டறைத் தொழில் போதாமையாகிப் போகும்போது, நீராவி இயந்திரங்களின் வருகை முதலாளித்துவ உற்பத்தி முறையைத் தோற்றுவித்தது.  கையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் நிலப்பிரபுவைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது, நீராவியால் ஓடுகிற இயந்திரம் தொழில்துறை முதலாளியைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது என்று மார்க்ஸ் கூறுவார்.

உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடே சமூக வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கிறது. இந்த முரணின் செயற்பாட்டை இயக்கவியல் முறையில் விளக்குவோம்.

முதலாளித்துவ உற்பத்தி முறையில், உற்பத்தி சமூகமுறையாகவும், உற்பத்தி உறவுகள் என்பது தனியுடைமையின் அடிப்படையிலான வினியோகமாகவும் இருக்கிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையின் தொடக்கத்தில், நிலப்பிரபுத்துவ உற்பத்தி சக்திகளுடன் ஒப்பிடும் போது முதலாளித்துவ உற்பத்திச் சக்திகள் மேலோங்கி காணப்படுகிறது. அதற்கு ஒப்பவே சமூக உற்பத்தியின் வேலைப் பிரிவு தொடக்க நிலையினதாகவே இருக்கிறது.

ஐக்கியமும் போராட்டமும்

இந்த முதலாளித்துவ உற்பத்தி முறையின் தொடக்கத்தில், தனியுடைமை முதலாளிகளும் உற்பத்தி கருவிகளை இழந்து உழைப்புச்க்தியைத் தவிர சொந்தமாக கொள்வதற்கு ஏதுமற்ற சுதந்திரமான தொழிலாளிகளும் இணைந்து காணப்படுகின்றனர். இவ்விருவரும் இன்றி முதலாளித்துவ உற்பத்திமுறை நிகழாது. இதில்தான் இவ்விருவர்களின் ஐக்கியம் காணப்படுகிறது. இந்த ஐக்கியம் சுரண்டல் அடிப்படையிலானது என்பதானால் எதிர்நிலைகளின் ஐக்கியம் என்று கூறப்படுகிறது. இந்த ஐக்கியம் ஒப்பீட்டு நிலையினதாகும். இதன் போராட்டம் அறுதியானதாகும்.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் தனித்தனி முதலாளிகளுக்கு இடையிலான போட்டியினாலும், தொழிலாளிகளின் போராட்டத்தை குறைக்கும் நோக்கத்தோடும் முதலாளிகள் தமது உற்பத்தி முறையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதிலும் புதிய இயந்திரங்களை புகுத்துவதிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதனையே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, முதலாளித்துவ வர்க்கத்தால் ஓயாது ஒழியாது உற்பத்திக் கருவிகளிலும், இதன் மூலம் உற்பத்தி உறவுகளிலும், இவற்றுடன் கூடவே சமூக உறவுகள் அனைத்திலுமே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாமல் வாழ முடியாது என்கிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையின் தொடக்கத்தில் காணப்பட்டதுபோல் இல்லாமல், இயந்திரங்களின் வளர்ச்சி பிற்காலத்தில் பிரம்மாண்டமாக இருக்கிறது. இந்த உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி, முதலாளியினுடைய தனிச்சொத்துடமை முறையோடு மோதுகிறது. இதனை எங்கெல்ஸ், சமூகமயமாகி விட்ட பொருள் உற்பத்திக்கும், முதலாளித்துவ சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது என்று கூறுவார்.

உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகி விடுகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்து எறியப்படுகிறது. முதலாளித்துவ தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது, என்று மூலதன நூல் கூறுகிறது.

இந்த சமூக மாற்றம் என்பது எந்த ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பமாக இல்லாமல், சமூக வளர்ச்சியின் விளைவாகத் தோன்றுகிறது என்பதை இயக்கவியல் முறையில் விளக்கப்படுத்துவோம். இப்படிச் சொல்வதால் சமூகம் எதோ நேர்ப்பாதை வழியாக செல்வதாகவும் அதனைப் பிடித்துவிட்டால் போதும் என்ற வகையில் எளிதாகப் புரிந்துக்கொள்ளக் கூடாது. சமூகமயமாதல் என்பதில் காணப்படும் சிக்கலான பல்வேறு போக்குகளிலும் தெளிவைப் பெற்றாக வேண்டும்.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் முரண், தனிச்சொத்து அடிப்படையில் திரட்டப்பட்ட உற்பத்திச் சாதனங்களின் மையப்பாட்டிற்கும், உழைப்பின் சமூகமயமாதலுக்கும் இடையே காணப்படுகிறது. இந்த முரணில்தான் ஐக்கியமும் போராட்டமும் அடங்கியிருக்கிறது. இவ்விரண்டும் இல்லாமல் இந்த உற்பத்தி முறை நிகழாது. இந்த இருப்பு என்பது போராட்டத்தின் ஊடேயே நிகழ்கிறது. போராடுகின்ற இவ்விரண்டின் இருப்பே இதன் ஐக்கியத்தைச் சுட்டுகிறது. இந்த ஐக்கியம் முரண் அடிப்படையில் காணப்படுவதால் இவற்றுக்கு இடையேயான ஐக்கியம் போராட்டமாகவே காணப்படுகிறது. ஐக்கியமும் போராட்டமும் என்ற இயக்கவியல் விதியின் இரண்டாம் விதியை இவ்வாறு விளங்கிக் கொள்ளலாம்.

அளவு மாறுபாடு பண்பு மாறுபாடு அடைதல்

அடுத்து அளவு மாறுபாடுவதும் அதன் மூலம் பண்பு மாறுவதும் பற்றிய விதிக்கு வருவோம்.

சரக்கு உற்பத்தி என்பதே சமூக உற்பத்திதான். முதலாளித்துவ உற்பத்தி முறையின் தொடக்கத்தில் தனிச்சொத்தின் அடிப்படையிலான உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடு எளிமையானதாக இருக்கிறது. உழைப்பின் சமூகத் தன்மையும் தொடக்க நிலையிலானதாக இருக்கிறது. இதனால் இதனை முழுமையாக அறிந்திட முடியவில்லை. இவற்றின் வளர்ச்சியினால் அளவுகள் மாறுபடுகின்றன. இந்த மாறுபாடுகள் இவற்றின் முரணை மிகுதியாக்கி விடுகிறது. இந்த மிகுதி அதன் பழைய வடிவத்தோடு மோதுகிறது. இந்த மோதல் அதனை தூக்கி எறிவதிலும் புதிய வடிவத்தை அமைப்பதிலும் முடிகிறது.

மார்க்ஸ் இதனை தமது “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” என்ற நூலின் முன்னுரையில் கூறியுள்ளார். வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கு இருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.

மார்க்ஸ் குறிப்பிடுவது போல் இந்த அளவு மாறுபாடு பண்பு மாறுபாடாக மாறும் போது புரட்சியின் சகாப்தம் தொடங்குகிறது.

நிலைமறுப்பின் நிலைறுப்பு

அடுத்து நிலைமறுப்பின் நிலைறுப்பு என்ற மூன்றாம் விதிக்கு வருவோம்.

முதலாளித்துவ உற்பத்தி முறையின் முதிர்வில், சமூக உற்பத்தியாக மாறிப்போன, புதிய சூழ்நிலைமைக்கும், பழைய தனிசொத்து அடிப்படையிலான வினியோக முறைக்கும் இடையிலான முரண் முற்றி, உற்பத்தியின் வளர்ச்சிக்கு, முதலாளித்துவ உற்பத்தி முறை தடையாகப் போனதனால் பழைய உற்பத்திமுறை மறுக்கப்படுகிறது. முதலாளி வர்க்கத்தின் கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்தி சாதனங்களை பாட்டாளி வர்க்கம் புரட்சியின் வழியில் (பாய்ச்சல்) கையகப்படுத்தி பொதுச் சொத்தாய் மாற்றி பிரச்சினைக்கு தீர்வளிக்கிறது. இந்தச் செயற்பாட்டின் மூலம் பாட்டாளி வர்க்கம் உற்பத்திச் சாதனங்களை அவை இதுகாறும் தாங்கி இருந்த மூலதன இயல்பிலிருந்து விடுவித்து, அவற்றின் சமூக இயல்பு செயல்படுவதற்கு முழுச் சுதந்திரம் அளிக்கின்றது. இவ்வாறு முதலாளித்துவ உற்பத்தி முறை என்கிற அமைப்பு நிலைமறுக்கப்பட்டு சோஷலிச உற்பத்தி முறை என்கிற அமைப்பு நிலைபெறுகிறது.

இயக்கவியலின் முதன்மையைப் புரிந்து கொள்வதற்கு இயக்கவியலை மறுக்கின்ற போக்கால் நிகழக்கூடியது என்ன என்பதை பார்த்தால் தெளிவாகும். மார்க்சியத்தின் இயக்கவியலை மறுக்கின்ற சீர்திருத்தவாதிகள் பரிணாமவாதத்தை முன்வைக்கின்றனர். முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிசத்துக்கு மாறுவது சீர்திருத்தங்களின் வழியில், முதலாளித்துவ அமைப்பு முறையின் அடித்தளங்களை பாதிக்காத வகையில் செய்திட முடியும்  என்று கருதுகின்றனர். இயக்கவியலின் பாய்சல் என்கிற இடைமுறிவைப் புறக்கணித்து சீர்திருத்தங்களின் வழியில் சமாதானமாக, சமூகப் புரட்சி ஏற்படாமல் சோஷலிசத்துக்கு மாறிவிட முடியும் என்று நம்புகின்றனர்.

அடுத்து இடதுசாரி தீவிரவாதிகள், இவர்கள் சமூகப் பாய்ச்சலுக்கு, அளவுமாற்றத்தின் தேவையை மறுதலிக்கின்றனர். உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் அளவு மாறுபாட்டை கணக்கில் கொள்ளாமல் பண்பு மாற்றத்தை மட்டுமே முன்வைத்து, பாய்ச்சல் முறையான புரட்சி கட்டத்தை மட்டுமே செயற்படுத்த துடிக்கின்றனர். அதாவது இடதுசாரி தீவிரவாதிகள் பாய்ச்சல் ஏற்படுவதற்கு தேவைப்படுகிற அளவு மாற்றத்தை விடுத்து, பாய்ச்சலாக பாய்வதற்கு முயற்சிக்கின்றனர். மேலே மார்க்ஸ் கூறிய சமூகப் புரட்சியின் சகாப்தத்தில் காணப்படும் மேற்கட்டமைப்பின் தீவிரசெயல்பாட்டை தீர்மானிக்கும் செயற்பாடாக புரிந்து கொண்டு மேற்கட்டமைப்புக்கு முதன்மையிடம் கொடுத்து அடித்தளதை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிடுகின்றனர்.

அளவு மாற்றத்தின் முறிவையே இயக்கவியல் பாய்ச்சல் என்கிறது. இது பழைய நிலையை மறுத்து புதியமுறைக்கு நிலைமாறுவதைக் குறிக்கிறது. அளவு மாற்றம் பண்பு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்ற விதியை மட்டும் ஏற்கின்ற ஒற்றைப் போக்கு, இயற்கையில் பாய்ச்சலையும், சமூக மாற்றத்தில் புரட்சியையும் மறுக்கின்ற இயக்கமறுப்பியலாகும்.