Monday 20 March 2023

வர்க்கப் பார்வை என்பதே இல்லாத புதிய பாதையினரிடம் மார்க்சியம் பேசுவது வீண் வேலை.

முதுமை பித்தன் :-

//உண்மையான மனிதநேய மார்க்சீய லெனினியம் என்பது, உண்மையான சமூக அறிவியலாக, உயர் தர்க்க அறிவியலாக இருக்குமானால், அதனை யார் வேண்டுமானாலும் பயன் படுத்தி பயன் பெறலாம்.//

முதுமை பித்தன்:-                                         

//ஈஸ்வரன் அ.கா. மார்க்சிய திட்டமிட்ட உற்பத்தி முறை என்பது, சமூக பொருளாதார உற்பத்தி முறை சார்ந்த ஒரு சமூக பொருளாதார அறிவியல் கோட்பாடு. இந்த சமூக அறிவியல் கோட்பாட்டை, பொது அறிவியல் கோட்பாடுகளை போல் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.// 



வர்க்கப் பார்வை என்பதே இல்லாத புதிய பாதையினரிடம் மார்க்சியம் பேசுவது வீண் வேலை.

*********************************************************************************************

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தில் இருக்கிற பாட்டாளி வர்க்க சார்பான நலனும், மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தில் உள்ள பாட்டாளி வர்க்க நலனும் புதிய பாதையினருக்கு தெரியவில்லை. மார்க்சியம் பேசுகிற அறிவியல் கண்ணோட்டம் வர்க்க சார்பானது என்பதுகூட தெரியமால் பொது அறிவியலைப் போல மார்க்சிய அறிவியலை கருதி அதனை ஏகாதிபத்தியம் ஏற்றுக் கொண்டதாக கதைவிடுகின்றனர்.

புதிய பாதையினருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட மார்க்சியம் உண்மையில் மார்க்ஸ் கூறிய மார்க்சியமே அல்ல. அதனால் மார்க்ஸ் மார்க்சியத்தை ஆதி மார்க்சியம் என்று ஒதுக்கப் பார்க்கின்றனர்.

மார்க்சியம் பேசுகிற புறநிலை என்பதை அறியாமல் புதிய பாதையினரால் மார்க்சிய வழிபட்ட அகநிலையில் செயல்பட முடியாது.

புறநிலை விதி என்கிற மார்க்சின் கண்டுபிடிப்புகளில் உள்ள அறிவியல் அணுகுமுறையை அறியாத புதிய பாதையினர் மார்க்சியத்தைத் திரித்துக் கூறுவதில் ஆச்சரியம் இல்லை.

தத்துவத்திலும் அரசியல் பொருளாதாரத்திலும் வர்க்க தன்மை இருக்கிறது என்பதை அறியாத புதிய பாதையினர் மார்க்சிய வழியில் பேசுவதற்கு வாய்ப்பில்லை.

மார்க்ஸ் கூறிய மார்க்சியத்தை ஏற்பதாயினரும் மறுப்பதாயினும் முதலில் புதிய பாதையினர் அறிந்திருக்க வேண்டும். மார்க்சியத்தை வர்க்கப் பார்வையிலும் அறிவியல் பார்வையிலும் புதிய பாதையினர் அறிந்திருக்கவில்லை.

அதனால்தான் அவர்கள் தங்கள் கருத்தை முன்வைத்து சவால்விடுகின்றரே தவிர அதை மார்க்சிய வழியில் நிறுவ முடியவில்லை. நிறுவ முயச்சித்தால் புதிய பாதையினர் பேசுவது மார்க்சியமல்ல என்பதை அவர்களே அறிந்து கொள்ள வேண்டிவரும்.

மார்க்சிய அடிப்படைகளை அறியாத புதிய பாதையினரிடம் மார்க்சிய வழியில் பேசுவது வீண் வேலை. புதிய பாதையினர் மார்க்சியத்தை முதலில் அறிந்து கொள்ளட்டும்.

லெனின் எழுதிய “மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்” என்ற நூல் பொதுவாக அனைவராலும் படிக்கப்பட்ட நூல். மார்க்சிய மூலவர்களின் நூலைப் படிக்க வேண்டுமானால் இதிலிருந்துதான் தொடங்க வேண்டும். அப்படிப்பட்ட நூலில் சமூக விஞ்ஞானத்தின் சார்புத் தன்மையைப் பற்றி கூறியதுகூட தெரியாமல் புதிய பாதையினர் இருக்கின்றனர். புதிய பாதையினரின் அசட்டுத்தனத்தையும் ஏமாளித்தனத்தையும் நாம் ஏற்கெனவே அம்பலப்படுத்தியுள்ளோம் மீண்டும் அம்பலப்படுத்துவோம்.

வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு சமுதாயத்தில் "ஒருசார்பற்ற" சமுதாய விஞ்ஞானம் எதுவும் இருக்க முடியாது.

….

கூலி அடிமை முறைச் சமுதாயத்தில் விஞ்ஞானம் ஒருசார்ப்பற்றதாய் இருக்குமென எதிர்பார்ப்பதும் அசட்டுத்தனமாகும், ஏமாளித்தனமாகும்.”

 

 

 

Friday 17 March 2023

6) விஞ்ஞானக் கம்யூனிஸத் தத்துவம்

அரசியல் பொருளாதாரமானது மார்க்ஸியத்தின் மூன்றாவது உறுப்பான கம்யூனிஸம் பற்றிய போதனையுடன்- நெருக்கமாக இணைந்ததாகும். முதலாளித்துவமானது அதன் வரலாற்றின் இயந்திர உற்பத்திக் கால கட்டத்தில் சமூகப் பொருள் உற்பத்தியை வளர்க்கிறது; அது உற்பத்திப் பொருள்களைத் தனி உடைமை முறையில் அபகரித்துக் கொள்வதற்கு இனி ஒருபோதும் இசைவாக இல்லை என்று அரசியல் பொருளாதாரம் காட்டியது. முதலாளித்துவமானது தனது ஜீவிய காலத்தைக் கடந்து வாழ்ந்து விட்டது; அது - அடிமை, நிலப்பிரபுத்துவ முறைகள் அவற்றின் காலத்தில் செய்ததைப்போல சமூக வளர்ச்சிக்குப் படிப்படியாகத் தடையாகி விடுகிறது. உற்பத்தியின் சமூகத் தன்மைக்கு ஒத்த முறையில் கம்யூனிஸ அமைப்பினால் முதலாளித்துவம் மாற்றியமைக்கப்பட வேண்டியதாகிறது.

முதலாளித்துவ சமூகத்தைப் பற்றிய அவர்களுடைய பரிசீலனையின் அடிப்படையில், மார்க்ஸூம் எங்கல்ஸூம் புதிய சமுதாயத்தை நிர்மாணிப்பது பிரதானமாகத் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்காகவே என்றும், அது ஏதாவது ஒரு வழியில், ஸ்தூலமான வரலாற்று நிலைமைகளையொட்டி, பூர்ஷூவாக்களின் ஆட்சியைத் தூக்கியெறிந்து தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் கூறினர்.

தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தின் உதவியுடன், தொழிலாளி வர்க்கமானது உற்பத்திச் சாதனங்களில் உள்ள தனி உடைமையை மாற்றி சமூக உடைமையை ஏற்படுத்தும்; உழைப்பாளி மக்களின் பரந்த வெகுஜனப் பகுதிகளின் ஆதரவுடன் படிப்படியாகக் கம்யூனிஸ சமுதாயத்தை அமைக்கும். கம்யூனிஸ சமுதாயத்தைக் கட்டுவதுடன்தான் மனிதகுலத்தின் உண்மையான வரலாறு துவங்கும். ஏனென்றால் அப்போதுதான், மனிதன் தனது பொருளாயத, ஆன்மிகத் தேவைகளைப் பூரணமாகத் திருப்தி செய்து கொள்ளமுடியும். கம்யூனிஸ சமுதாயத்தில், எல்லா மக்களும் ஒத்திசைவாக வளர்க்கப்படுவார்கள். மூளை உழைப்பிற்கும், உடலுழைப்பிற்கும் இடையிலும், நகரத்திற்கும் நாட்டுப்புறத்திற்கும் இடையிலும் உள்ள வேறுபாடுகள் அகற்றப்படும்.

5) மார்க்சிய அரசியல் பொருளாதாரம் - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

தர்க்கவியல், சரித்திரவியல் பொருள்முதல்வாதம் (Dialectics historical materialism இயக்கவியல், வரலாற்றியல் பொருள்முதல்வாதம்) மார்க்சியத்தின் முதல் பாகமாக அமைந்துள்ளது. அதனுடைய இரண்டாவது இணைந்த பகுதி அரசியல் பொருளாதாரமாகும்; அதாவது, சமூக உற்பத்தியின் வளர்ச்சி, பண்டங்களின் விநியோகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிற, அதாவது சமுதாய வாழ்க்கையின் அடிப்படையை நிர்ணயிக்கிற விதிகள் குறித்த விஞ்ஞானமாகும்.

சமூக வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிற, சரித்திரவியல் பொருள்முதல்வாதத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட அடிப்படை விதிகளை ஆதாரமாகக் கொண்டு, அரசியல் பொருளாதாரமானது எவ்வாறு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி நிலையும் அவற்றின் குணாம்சமும் சமுதாயத்தின் உற்பத்தி பொருளாதாரமானது எவ்வாறு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி உறவுகளை நிர்ணயிக்கின்றன என்பதைக் குறிப்பாக உற்பத்தி சாதனங்கள், கருவிகளின் உடைமை வடிவங்களையும் உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கில், பங்கெடுத்துக் கொள்ளுகிற பல்வேறு மக்கள் கூட்டத்தினர் அதனோடு கொண்டுள்ள உறவுகள், அவை உற்பத்தி செய்கிற பொருள்களை சுவீகரித்துக்கொள்ளும் முறை, அப்படி அவை சுவீகரித்துக் கொள்ளும் பண்டங்களின் பங்கு ஆகியவற்றை நிர்ணயிக்கின்றன.

புராதன சமுதாயத்தில், புராதன உற்பத்தியானது புராதன சமூகக் குடியமைப்பு உடைமையுடன் இணைந்திருந்தது. உழைப்பின் உற்பத்திப் பொருள் சமூகத்திலுள்ள எல்லா அங்கத்தினர்களுக்கிடையிலும் சமமாகப் பங்கிடப்பட்டது. உழைப்பிற்கான உலோகக் கருவிகளின் தோற்றமானது மூளை உழைப்பாளிகளைப் பராமரிப்பதற்குத் தேவையான பண்டங்களின் ஒரு பகுதியை ஒதுக்கி வைக்க வேண்டியதன் அவசியத்தை உண்டாக்கியதால், உற்பத்தி சாதனங்கள், கருவிகளில், தனி உடைமை தோன்றுவதற்கு இடமளித்தது.

தனிவுடைமையானது, சமூகத்தை “உடையவர்கள்" "இல்லாதவர்கள்” எனப் பிரித்தது. 'உடையவர்கள்' 'இல்லாதவர்களின்' உழைப்பின் பயன்களை அபகரிப்பதில் முடிந்தது. மனிதனை மனிதன் சுரண்டுவது அமுலுக்கு வந்தது. உற்பத்தியின் வளர்ச்சியுடன், தனியுடைமையின் வடிவங்களில் மாற்றங்கள் தோன்றின. முதலில் அடிமை உடைமை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நிலப்பிரபுத்துவ உடைமையும் அதன்பின் முதலாளித்துவ உடைமையும் ஏற்பட்டன. அதற்கேற்றாற்போல் சுரண்டல் வடிவங்களும் மாற்றமடைந்தன. மார்க்ஸ் முதலாளித்துவ சமுதாயத்தைப் பரிசீலிப்பதில் பிரத்தியேக கவனம் செலுத்தி, அதன் சுரண்டும் தன்மையை எடுத்துக்காட்டினார். முதலாளித்துவ அமைப்பைப் புகழ்ந்த பூர்ஷூவா பொருளாதாரவாதிகள் இதற்குமுன் இதைச்செய்யத் தவறினர்.

4) தர்க்கவியல், சரித்திரவியல், பொருள்முதல்வாதம் - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

(Dialectics historical materialism – இயக்கவியல், வரலாற்றியல் பொருள்முதல்வாதம்)

தர்க்கவியல் (இயக்கவியல்) பொருள்முதல்வாதம் என்னும் தத்துவவியல் விஞ்ஞானமே மார்க்ஸியத்தின் தத்துவார்த்த அடிப்படையாகும். இயற்கையையும் உணர்வையும் கட்டுப்படுத்துகிற மிகவும் பொதுவான விதிகளை அது தெளிவாக்குகிறது. இந்த விஞ்ஞானமானது இயற்கையாராலும் படைக்கப்படவில்லை என்றும், அது எப்போதும் இருந்து வந்துள்ளது, என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும், உணர்வானது இயற்கையினது வளர்ச்சியின் விளைவு தான் என்றும், மிக உயர்வான ஒழுங்கமைந்த பொருளின் விளைவே அது என்றும் வலியுறுத்துகிறது. இவ்வாறு, தர்க்கவியல் (இயக்கவியல்) பொருள்முதல்வாதமானது முன்பின் முரணற்ற உலகாயதமாகும். அதே சமயத்தில் அது, பொருள், உணர்வு ஆகியவற்றின் வளர்ச்சியைத் தர்க்கவியல் முறையில், அதாவது அவை தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டும், மாற்றமடைந்து கொண்டும் இருக்கின்றன என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் - அணுகுகிறது. தர்க்கவியல் (இயக்கவியல்) பொருள் முதல்வாதமானது தர்க்கவியலைப் (இயக்கவியலை) பொருள்முதல்வாதத்துடன் இணைத்து, பொருளை ஒட்டு மொத்தமாகக் கட்டுப்படுத்துகிற எதார்த்த விதிகளைக் கண்டுபிடித்தது.

பொருளின் வளர்ச்சி சம்பந்தப்பட்ட பொது விதிகளை மனித சமுதாயத்தின் வளர்ச்சி சம்பந்தப்பட்ட குறிப்பான விதிகளுடன் மார்க்ஸியம் சரித்திரவியல் பொருள்முதல்வாதம் வரையறுத்தது. சமுதாயமானது இயற்கையின் ஒரு பகுதியாதலால் அது, தர்க்கவியல் (இயக்கவியல்) பொருள்முதல்வாதத்தினால் வரையறுக்கப்பட்ட மிகவும் பொதுவான இயற்கை விதிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதிலிருந்து, சமுதாயமானது அதனுடைய விதிகளின்படி தொடர்ந்து வளர்ந்து கொண்டும் மாறிக்கொண்டும் இருக்கிறது என்பது பெறப்படுகிறது.

இது நீங்கலாக, இயற்கையின் இதர அனைத்து அம்சங்களிலிருந்தும் சமுதாயம் மாறுபடுகிறது; அதுதான் நிலைத்திருப்பதற்குப் பொருளாயத செல்வத்தை உற்பத்தி செய்தாகவேண்டும். உற்பத்தியின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிற விதிகள்தான் சமூக வளர்ச்சியின் அடிப்படையாகும். இந்த முடிவு பொதுவாக இயற்கையைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திற்கு ஒத்ததாக இருக்கிறது. ஏனென்றால், சமூக வளர்ச்சியானது பொருள் உற்பத்தியினால்தான் நிர்ணயிக்கப்படுகிறதே தவிர உணர்வினால் அல்ல என்றும் அது அறிவிக்கிறது. இதற்கு மாறாக உணர்வானது அதன் எல்லா உருவங்களிலும் உற்பத்தி வளர்ச்சி நிலைக்கு ஏற்றாற் போல் வளர்கிறது. சட்டம், மதம், அறநெறி, அழகியல், தத்துவவியல் சம்பந்தப்பட்ட கருத்துக்களும், பிற கருத்துக்களும், அவற்றிற்கு ஒத்த நிறுவனங்களும்- அரசு, மதம் முதலியவை வளர்ச்சிக்கு அவற்றின் உற்பத்தி வளர்ச்சி நிலையைச் சார்ந்துள்ளன. உற்பத்தி வளர்ச்சி நிலையானது சமூகத்தில் உருவாகும் உறவுகள், சமூகத்தின் கட்டமைப்பு, ஒழுங்கமைப்பு ஆகியவற்றையும் நிர்ணயிக்கிறது.

3) பூர்ஷூவா அரசியல் பொருளாதாரம் - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

முதலாளித்துவ உற்பத்தி முறையின் வளர்ச்சியுடன் கூடவே விஞ்ஞானத்தின் புதிய பிரிவு ஒன்றும்- அரசியல் பொருளாதாரமும் - வளர்ச்சி அடைந்தது. பூர்ஷூவாக்களின் கைகளில் அது, நிலப்பிரபுத்துவத்திற்கெதிரான போராட்டத்தில் ஒரு தத்துவார்த்த ஆயுதமாக அமைந்தது.

வரலாற்று அரங்கில் பூர்ஷூவா வர்க்கமானது ஒரு முற்போக்கான வர்க்கமாகத் தோன்றியபோது, முதலாளித்துவ உற்பத்தி வளர்ச்சியை நிர்ணயித்த விதிகளைப் பற்றிய விஞ்ஞான அறிவிலும், மூலதனத்தின் அதிகாரம் செல்வாக்குப் பெறுவதைத் தடுக்கும் நிலப்பிரபுத்துவ உறவுகளை அகற்றுவதிலும் அது அக்கறை கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் தான் பூர்ஷூவா அரசியல் பொருளாதாரம் உருவாயிற்று. அதற்குப் பண்டைய அரசியல் பொருளாதாரம் என்ற பெயரும் வழங்கப் பட்டது. ஆங்கில விஞ்ஞானிகளான வில்லியம் பெட்டி (1623-1687) ஆடம் ஸ்மித் (1723- 1790) டேவிட் ரிக்கார்டோ (1772-1823) ஆகியவர்கள் அதை வகுத்தவர்களாவர்.

பண்டைய பூர்ஷூவா அரசியல் பொருளாதாரமானது ஒரு குறிப்பிட்ட பண்டத்தின் உற்பத்தியில், செலவிடப்பட்ட உழைப்பின் அளவிற்கும், அந்தப் பண்டத்தின் மதிப்பிற்கும் இடையிலான சம்பந்தம் பற்றிய மிகவும் முக்கியமான விதியைக் கண்டுபிடித்து, மனித உறவுகளின் மிக முக்கிய துறையான உற்பத்தி உறவுகளை, விஞ்ஞான பூர்வமாக ஆராய்வதற்கு சமூக விஞ்ஞானங்களும் மேலும் வளர்ச்சியடைந்தன. அஸ்திவாரமிட்டது. வரலாறு, சட்டம், அழகியல் முதலிய பிற சமூக விஞ்ஞானங்களும் மேலும் வளர்ச்சியடைந்தன.

ஆனால் சமூக விஞ்ஞானங்கள் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தினால் நிரம்பியிருந்தன. சமூகத்தில் மக்களின் நடவடிக்கைகள் பௌதிக அம்சங்களால், அதாவது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்துடன் மக்களின் இணைப்பு, அதன் விளைவாக, அவர்களுடைய எண்ணத்திற்கு- விருப்பத்திற்கு அப்பாற்பட்டதாக அமைந்திருக்கும் உற்பத்தி முறையுடன், அமைப்புடன் அவர்களுக்குள்ள தொடர்பு- உறவு ஆகியவற்றால் பிரதானமாக நிர்ணயிக்கப்படுகிறது என அது கருதவில்லை. விஞ்ஞானிகள் எப்படியோ பூர்ஷூவாக்களின் நிலைப்பாடுகளைக் கடைப்பிடித்தார்கள். வர்க்கங்களில்லாத. தனிச் சொத்துடைமை இல்லாத சமூகத்தைப் பற்றி அவர்களால் நினைக்கக் கூட முடியவில்லை.

விஞ்ஞான பூர்வமான உலகக் கண்ணோட்டத்தைப் படைக்க, மனித சமுதாயத்தினால் அதனுடைய வரலாறு முழுவதிலும் சேகரித்துள்ள அறிவில் தேர்ச்சிபெற வேண்டியதும் முதலாளித்துவ சமூகத்தின் ஒழுங்கு முறைகளையும், முரண்பாடுகளையும் வெளிப்படுத்துவதும், ஒரு புதிய சமுதாயத்தை சிருஷ்டிக்க வேண்டிய தொழிலாளி வர்க்கத்தின் சரித்திர பூர்வமான கடமையைச் சரியாகப் புரிந்துகொள்வதும் அவசியமாயிருந்தது. அப்படிப்பட்ட உலகக் கண்ணோட்டத்தை, தொழிலாளி வர்க்கத்தின் சித்தாந்தத்தைப் படைத்தவர்கள் மார்க்ஸூம் எங்கல்சும் ஆவர்.