Monday 31 August 2020

தத்துவமும் மதமும்

(நிசான் கார் தொழிற்சாலையில் (Renault nissan automotive india Pvt ltd) பணிபுரியும் தோழர்கள் மத்தியில்சூம்” (zoom) இணைய வழியில்தத்துவமும் மதமும்என்ற தலைப்பில் பேசினேன். கலந்து கொண்டவர்கள் பல கேள்விகளைக் கேட்டனர். தொழிலாளர்களிடம் உரையாடியது மகிழ்வைத் தந்தது. அவர்களது ஆர்வம் நம்பிக்கையை ஊட்டுகிறது.)



1) தத்துவத்திற்கும் மதத்திற்கும் உள்ள ஒற்றுமையும் வேறுபாடும்

தத்துவம் - மதம் பற்றிய சிறு அறிமுகத்தைத் தான் இன்று கொடுக்கப் போகிறேன். இந்த அறிமுகத்தின் போது தத்துவம் மதம் பற்றிய புதிய கலைச் சொற்களையும் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். புரியாத கலைச் சொற்கள் வந்தால் கவலைப்பட வேண்டாம். இன்று காதில் விழுகின்ற கலைச் சொற்காள் நாளை பிறர் பேசும் போதோ, நீங்களாகவே படிக்கும் போதோ படிப்படியாக புரிந்து கொள்ளலாம்.

தத்துவத்திற்கும் மதத்திற்கும் ஒற்றுமையும் இருக்கிறது வேற்றுமையும் இருக்கிறது. தத்துவத்தில் உள்ள ஒரு பிரிவுக்கும், மதத்திற்கும் நெருக்கம் இருக்கிறது. அதனால் தான் முதலில் தத்துவத்தைத் தெரிந்து கொண்டு, அடுத்து மதத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

தத்துவமும் மதமும் மேலை நாடுகளில் தனித்தனியாகப் பிரிந்து காணப்படுகிறது. நம் நாட்டில் தத்துவமும் மதமும் இணைந்து காணப்படுகிறது.

மேலைநாடுகளில் தத்துவாதிகள் என்றால் அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்றவர்களும், மதம் என்றால் அதனை நிலைநிறுத்திய ஏசுநாதர், நபிகள் நினைவுக்கு வருவார்கள்.

இந்தியாவில் அத்வைத தத்துவத்தை நிலைநிறுத்திய சங்கரரே சனாதன மதத்துக்கும் தலைவராகவும் இருக்கிறார். அதே போல வைணவ மதத்தின் தலைவராக ராமானுஜரும், அந்த மதத்தின் தத்துவமான விசிட்டாத்வைதத்திற்குத் தலைவரும் அவரே ஆவார். தமிழகத்தில் உள்ள சைவ மதமும் இதே போலத்தான். இந்த மதத்தைச் சைவம் என்றும் இதன் தத்துவத்தைச் சைவ சித்தாந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் இந்தச் சைவ மதத்திற்கு ஒத்த தவலைவரை முன்னிருத்துவதில்லை. ஆனால் சைவ தத்துவமான சைவ சித்தாந்தத்திற்கு மெய்கண்ட தேவர் முன்னிருத்தப்படுகிறார்.

மதமும் தத்துவமும் இணைந்து காணப்படுவது இந்தியாவில் மட்டும்தான். மேலை நாடுகளில் அவ்வாறு இல்லை. இந்த வேறுபாட்டை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

தத்துவமும் மதமும் ஒன்றிணைந்து காணப்பட்டாலும் இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. அதில் முக்கியமானது உலகைப் படைத்தவரை ஒரு உருவமாகப் பார்ப்பது மதம், உலகைப் படைத்தவரை உருவமற்ற சக்தியாகப் பார்ப்பது தத்துவம்.

இங்கே சக்தி என்பது நம் நாட்டில் பிரம்மம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதற்கு absolute என்று அழைக்கப்படுகிறது.

மதத்தில் உருவக் கடவுளிடம் "இது வேண்டும்" "அது வேண்டும்" என்று பிரார்த்தனை இடம் பெறும். தத்துவத்தில், சில பயிற்சியின் மூலம் தத்துவம் கூறுகிற நிலையை அடைவது பற்றி இருக்கும்.

2) ஆன்மீகத் தத்துவம் – கருத்துமுதல்வாதம்

இதுவரை நாம் பேசிக் கொண்டிருப்பது ஆன்மீக தத்துவம், இதனைக் கருத்துமுதல்வாதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆன்மீகத்தை மறுக்கிற தத்துவமும் இருக்கிறது அதன் பெயர் பொருள்முதல்வாதம்.

தத்துவத்தில் பல போக்குகள் இருக்கிறது. எவ்வளவு போக்குகள் இருந்தாலும் அதனை இரண்டு பிரிவுக்குள் அடக்கிவிடலாம். ஒன்று ஆன்மீகவாதம் அதாவது கருத்துமுதல்வாதம், மற்றொன்று ஆன்மீகத்தை மறுக்கின்ற பொருள்முதல்வாதம். இந்தப் பொருள்முதல்வாதத்தை நாத்திகவாதம் என்றும் கூறலாம். ஆனால் பொருள்முதல்வாத தத்துவத்தில் நாத்திகம் மட்டுமே கூறப்படவில்லை. பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளது.

தத்துவத்தில் உள்ள இந்த இருபெரும் பிரிவுகளைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

3) கருத்துமுதல்வாதம் – பொருள்முதல்வாதம்

உலகம் படைக்கப்பட்டதா? இல்லை அது இயற்கையிலேயே என்றும் உள்ளதா? என்ற கேள்விக்கு இரண்டுவிதமான பதில் கிடைக்கிறது. அந்தப் பதிலைக் கொண்டே ஒன்றை கருத்துமுதல்வாதம் என்றும் மற்றொன்றை பொருள்முதல்வாதம் என்றும் கூறுகிறோம்.

உலகம் படைக்கப்படவில்லை, அது என்றும் உள்ளது. மாற்றத்திற்கு உட்பட்டு மாறிக் கொண்டே இருக்கிறது என்று கூறுவது பொருள்முதல்வாதம்.

உலகம் எதாவது ஒரு வகையில் படைக்கப்பட்டது என்று கூறுகிற அனைத்தும் கருத்துமுதல்வாதம். அதாவது எதோ ஒரு சக்தியினால் இந்த உலகம் படைக்கப்பட்டது என்று கூறுவது கருத்துமுதல்வாதம். இதில் பல பிரிவுகள் இருக்கிறது. அதில் முக்கியமான இரு பிரிவுகளை மட்டும். இப்போ இங்கே பார்க்கலாம்.

4) புறநிலை கருத்துமுதல்வாதம் - அகநிலை கருத்துமுதல்வாதம்

கருத்துமுதல்வாதம் பல பிரிவுகளைக் கொண்டுள்ளது. பல பிரிவுக்குள், ஒரு முக்கியமான இரண்டு பிரிவு இருக்கிறது. ஒன்று புறநிலை கருத்துமுதல்வாதம் மற்றொன்று அகநிலை கருத்துமுதல்வாதம்.

உலகப் படைப்புக்குக் காரணமான அந்தச் சக்தி புறத்தில், இந்த உலகிற்கு அப்பால் இருப்பதாகக் கருதுவது புறநிலை கருத்துமுதல்வாதம். படைக்கிற சக்தி பௌதீக உலகிற்கு அப்பால இருப்பதாகக் கூறுவதால், இதற்குப் புறநிலைக் கருத்து முதல்வாதம் என்று பெயர். அதனால் தான் கருத்துமுதல்வாதத்தை ஆங்கிலத்தில் Metaphysics என்று அழைக்கப்படுகிறது. Meta என்றால் "அடுத்து" அல்லது "அப்பால்" என்று பொருள். அதாவது பௌதீக உலகத்திற்கு அப்பால்.

படைப்பு சக்தியை இந்த உலகிற்குப் புறத்தில் உள்ளதாகக் கருதுவதால் இந்தத் தத்துவத்திற்குப் புறநிலைக் கருத்துமுதல்வாதம் என்று பெயர். அந்தச் சக்தியை புறத்தில் காணாது அகத்தில், அதாவது மனதில் இருப்பதாகக் கொள்வது அகநிலைக் கருத்துமுதல்வாதம்.

நாம் நினைப்பதே புறத்தில் தோன்றுகிறது. புறத்தில் எதுவும் இருப்பதில்லை, நமது மனமே புறத்தைப் படைக்கிறது. இது தான் அகநிலை கருத்துமுதல்வாதம்.

புறநிலைக் கருத்துமுதல்வாதத்திற்கு ராமானுஜரின் விசிட்டாத்வைதத்தையும் அகநிலைக் கருத்துமுதல்வாதத்திற்கு ஆதி சங்கரருடைய அத்வைதத்தையும் குறிப்பிடலாம். பொதுவாக உலகம் முழுவதும் காணப்படுவது புறநிலை கருத்துமுதல்வாதமே. இந்தியாவிலும் நடைமுறையில் கடைப்பிடிப்பது புறலைநிலைக் கருத்துமுதல்வாதமே.

5) தத்துவத்தின் இரு பிரிவுக்குக் காரணம்

தத்துவத்தை ஏன் இப்படி இரண்டு பிரிவாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்? என்ற கேள்வி எழுப்புவது இயல்பானது.

கருத்துமுதல்வாதம் இந்த உலகப் பிரச்சினைகளை விளக்குவதோடு நின்றுவிடுகிறது. பணக்காரணமாக இருப்பதற்கும், ஏழையாக இருப்பதற்கும் அவரவர் போன ஜென்மத்தில் செய்த செயல்களே காரணம் என்று விளக்கம் மட்டுமே கொடுக்கிறது கருத்துமுதல்வாதம்.

ஆனால் பொருள்முதல்வாதம் இந்த உலகப் பிரச்சினைகளுக்குக் காரணத்தைக் கூறுவதோடு அதனை மாற்றுவதற்கான வழியினையும் கண்டுபிடித்துக் கூறியிருக்கிறது.

சமூக மாற்றத்தைக் கோருவது பொருள்முதல்வாதம், சமூகத்தை இருக்கும் நிலையிலேயைக் காக்க விரும்புவது கருத்துமுதல்வாதம்.

6) தத்துவத்தின் சார்பு

பொருள்முதல்வாதத்தை ஏன் தொழிலாளர்களின் தத்துவம் என்று கூறுகிறோம். சமூக மாற்றம் என்பது உழைப்பாளர்களின் நலனை பிரதிபலிப்பதனால் பொருள்முதல்வாதத்தைத் தொழிலாளர்களின் தத்துவம் என்று கூறப்படுகிறது.

இந்த யதார்த்த சமூகத்தைத் தக்க வைப்பதற்குப் போராடுவதனால், இந்தக் கருத்துமுதல்வாதத்தை ஆளும் வர்க்கத்திற்கு உரியதாகக் கூறப்படுகிறது.

இந்த வகுப்பு தத்துவ அறிமுகம் என்பதனாலே, இந்த வேறுபாட்டை இத்துடன் நிறுத்திக் கொள்வோம். வேறொரு வகுப்பில் விரிவாக இதனைக் காணலாம். தத்தவம் பற்றிய அறிமுகத்திற்குத் தேவைப்படுவதை மட்டும் இன்று பார்ப்போம்.

7) இயக்கவியல் பொருள்முதல்வாதம்- வரலாற்றியல் பொருள்முதல்வாதம்

மார்க்சிய தத்துவமான பொருள்முதல்வாதம் இரண்டு உட்பிரிவு கொண்டுள்ளது. ஒன்று இயக்கவியல் பொருள்முதல்வாதம், மற்றொன்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

இந்த உலகமும் இயற்கையும் எப்படி எல்லாம் நிலைபெற்று இருக்கிறது, எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை ஆராய்வது இயக்கவியல் பொருள்முதல்வாதம்.

சமூகம் எவ்வாறு தோன்றியது, எவ்வாறு நிலைபெறுகிறது, எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பதை ஆராய்வது வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

இயக்கவியல் பொருள்முதல்வாதம் - வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்பதை இரண்டு தனித்தனியான வகுப்புகளில் பார்க்கப்பட வேண்டியவை. இங்கே சுருக்கமாகவே பார்க்கிறோம்.

8) மதம்

அடுத்து மதம். இதுக்கு முன்னால் கருத்துமுதல்வாதம் பற்றிப் பேசினோம், அந்தத் தத்துவத்திற்கு நெருக்கமானது மதம். கருத்துமுதல்வாதம் இந்தப் பிரபஞ்சம் ஒரு சக்தியினால் தோற்றுவிக்கப்பட்ட என்று கூறுகிறது. மதம் அந்தச் சக்தியை ஒரு கடவுளாக உருவகம் செய்கிறது. அந்தச் சக்திக்கு மனித உருவம் கொடுக்கிறது.

சைவ மதம் அந்த இறைவனைச் சிவபெருமான் என்கிறது, வைணவம் நாராயணன் என்கிறது. கிறித்துவத்தில் கர்த்தர் அல்லது ஏசு என்று கூறப்படுகிறது. இஸ்லாத்தில் அல்லா என்று கூறப்படுகிறது. ஆனால் இஸ்லாத்தில் இறைவனுக்கு உருவம் கொடுப்பதில்லை. அந்த அல்லாவின் சக்தியைப் பற்றி தான் பேசப்படுகிறது

இந்த உலகம் அந்த இறை சக்தியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று மதம் கூறுகிறது. அந்தக் கட்டுப்பாட்டை மீறி இந்த உலகத்தில் ஒன்றையும் செய்திட முடியாது. அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது. இது தான் மதத்தின் அடிப்படைக் கருத்தாகும்.

9) மார்க்சியப் பார்வையில் மதம்

ஆனால் மதத்தைப் பற்றி நமது பார்வை வேறுபட்டது., அதாவது தொழிலாளர்களது பார்வை வேறுபட்டது.

மதம் ஒரு காலத்தில் தோன்றியது என்பதே மார்க்சியப் பார்வை. அப்படி என்றால் மதம் தோன்றாக் காலம் என்று ஒன்று உண்டா? ஆம் இருந்தது. அந்தச் சமூகம் பழங்குடி சமூகம் என்று அழைக்கப்படுகிறது. அனைத்து நாகரீக சமூகமும் இந்தப் பழங்குடி சமூகத்தைக் கடந்து தான் வந்துள்ளது. நேரடியாக எந்தச் சமூகமும் நாகரீகம் பெற்றுவிடவில்லை.

அந்தப் பழங்குடி சமூகத்தில் கடவுளோ, மதமோ கிடையாது. இந்த இரண்டும் இல்லாத அந்தச் சமூகம் எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம்.

அந்தப் பழங்குடி சமூகத்தில் மக்கள் தங்களுக்குள் வேறுபாடு இன்றி வாழ்ந்தார்கள். அவர்களிடம் பணக்காரன் - ஏழை என்ற வேறுபாடு கிடையாது. அப்படி இருந்தும் அந்த வாழ்க்கை மிகவும் கடினமானதாகத் தான் இருந்தது. வேட்டையில் எந்த உணவும் கிடைக்காமல் சில நாட்கள் பட்டினி கிடக்க வேண்டிய சூழ்நிலை அவ்வப்போது ஏற்பட்டது. அந்நிலைமைகளில் பூமியில் உள்ள கிழங்குகளைத் தோண்டி எடுத்து உண்பார்கள். அதுவும் கிடையாத சூழ்நிலையையும் அன்றைக்கு அவர்கள் சந்தித்தார்கள்.

அந்தப் பழங்குடி சமூகத்தில் பணக்காரர் - ஏழை என்ற வேறுபாடு தான் கிடையாது. ஆனா அவர்கள் கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்று சொல்லிவிட முடியாது.

வேட்டை ஆடுவதற்கு அன்றைக்கு அவர்களிடம் இருந்த கருவிகள் மிகவும் சாதாரணமானது. அதை வைத்துக்கொண்டு அன்றாட உணவுத் தேவையை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. உணவுகளைத் தேடுவது மட்டுமே அன்றைக்கு வேலையாக இருந்ததும், முழு நாள் தேடியும் உணவு அவர்களுக்குச் சொற்பமாகத் தான் கிடைத்தது.

பழங்குடி மக்கள் சேர்ந்து தான் வாழ்ந்தார்கள், ஆனால் அது ஒரு சிறிய கூட்டமாகத்தான் இருந்தது. விலங்கிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளச் சேர்ந்தே வாழ வேண்டிய, சூழ்நிலை தான் அப்போது இருந்தது. மேலும் அந்தச் சிறு குழு தங்களைக் காப்பாற்றிக் கொள்ளச் சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயமும் இருந்தது.

ஒவ்வொருவரும் அந்தக் கூட்டத்தில் இருக்கிற அனைவருக்காகவும் உழைப்பார்கள். கிடைக்கிற அனைத்தையும் சமமாகப் பங்கிட்டார்கள். அன்றைய நிலையில் அவர்கள் ஒரு கூட்டு வாழ்க்கை முறையில் தான் வாழ்ந்தார்கள். இந்தக் கூட்டு வாழ்க்கைக் காரணமாக அன்றைய பழங்குடி சமூகத்தை ஆதி பொதுவுடைமை சமூகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு தனிநபரும் அந்தக் கூட்டத்துக்கு அவசியமாக இருந்ததால், ஒவ்வொரு தனிநபரையும் காப்பாற்ற வேண்டி வந்தது. எந்த ஒரு நபரையும் இழக்காமல் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையே அன்னைக்கு இருந்தது. அன்றை சிந்தனைகளும் கருத்துக்களும் இந்தச் சூழ்நிலைக்குத் தக்கபடி இருந்தது. அவர்களின் கூட்டு வாழ்க்கைச் சிந்தனையை, அவர்வர்களின் இந்தச் சூழ்நிலையே ஏற்படுத்திக் கொடுத்தது.

மிகமிகச் சிறிய கூட்டமாகத் தொடக்கத்தில் இருந்தால், பிற இன மக்களோடு சண்டை ஏற்படும் போது, தோல்வி அடைந்த பிற பழங்குடி மக்களை, தம் இனத்தோடு சேர்த்துக் கொள்ளாமல், அவர்களைக் கொலை செய்துவிடுவார்கள். இருக்கிற உணவு பற்றாக் குறையினால் போர் கைதிகளைப் பராமறிக்க முடியவில்லை. அதனால பிடிபட்டவர்களை அன்றைக்குக் கொலை செய்துவிடுவார்கள். இது தொடக்கல கால நிலைமை.

இனக் குழு பெருகிய போது, தோல்வி அடைந்த இன மக்களை, முன்பு போலக் கொலை செய்யாமல், அவர்களை அடிமையாக வைத்துக் கொண்டார்கள்.

இந்தப் பழங்குடிகளிடம் மதம் தோன்றவில்லை என்று கூறினோம். ஆனா அந்த மக்களிடம் ஒண்ணு இருந்தது. அதை ஆங்கிலத்தில் Magic என்று கூறுவார்கள். இதைத் தமிழில் மாயவித்தை என்று சொல்லாம். தங்களுக்கு உணவாக எதுவும் கிடையாக்காத போது, அந்த நிலைமைகளைச் சமாளிப்பதற்கு உருவானதே இந்த மாயவித்தை.

இயற்கையைச் செயற்பட வைக்க உதவக்கூடிய ஒரு பொய்த்தோற்ற உத்தியே மாயவித்தை. பொய்த் தோற்றம் என்று கூறுவதால் இது ஒரு மதப் போக்காகப் பார்க்கக்கூடாது. இது ஒரு மன கிளர்ச்சிக்காக அந்த மக்கள் செய்தனர். இதை எப்படிச் செய்தனர் என்பதைப் பார்ப்போம்.

மழை பெய்யாத காலங்களில், அதனால் ஏற்பட்ட அசாதரணச் சூழ்நிலையில், அவர்கள் கூட்டாக மழை வேண்டி நடனம் ஆடுவார்கள். மழை பெய்தது போலவும், அதன் விளைவாகக் கிழங்குகள் நிறையக் கிடைத்த போலவும் நடிப்பார்கள். இந்த நடிப்பு ஒரு வகையில் மனக் கிளர்ச்சி ஏற்பட்டு, அந்த அசாதாரணச் சூழ்நிலையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார்கள்.

இது தொடக்கலாம்.

அதற்கு அடுத்த, சமூக வளர்ச்சி கட்டத்தில் "மழையே வா" என்று கட்டளை இட்டார்கள். இது அவங்களோட இயலாமையை வெளிப்படுத்தினாலும், எந்த இயற்கைக்கு மீறிய சக்தியிடமும் வழிபடவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனால் தான் இதை மதம் என்று சொல்வதில்லை.

இந்தப் பழங்குடி சமூகத்தில் மதம் தோன்றவில்லை என்பதைத் தெரிந்து கொண்டோம். அப்படி என்றால் எந்தச் சமூகத்தில் மதம் தோன்றியது.

இந்தப் பழங்குடி சமூகத்தின் ஆதித வளார்ச்சிக் கட்டத்தில் மதம் தோன்றியது.

அந்த நேரத்தில் உற்பத்திக் கருவிகள் சற்று மேம்பாட்டு இருந்தது, அதனுடன் உழைப்புப் பிரிவினை ஏற்பட்டுவிட்டது. இந்த உழைப்புப் பிரிவினை தான் அன்றைய வளர்ச்சிக்கு முக்கியமானது.

குறிப்பிட்ட சிலர் வேட்டையாடுவதும், மற்ற சிலர் ஆடு, மாடுகளை மேய்ப்பதுமான வேலைப் பிரிவினை முதலில் தோன்றியது. இந்த வேலைப்பிரிவினையினால் உணவு உற்பத்தியில் சற்று உபரி ஏற்பட்டது. இந்த உபரி அன்றைய சமூகத்தின் தேவையை முழுமையாக நிறைவேற்றிவிட வில்லை என்றாலும், பழைய நிலைமையை ஒப்பிடும்போது சற்று உபரியாகக் காணப்பட்டது.

இந்த உபரியை பயன்படுத்திக் கொள்வதில் புதிய மாற்றம் ஏற்பட்டது. முன்பு கூட்டாக உழைத்தனர், கிடைப்பதை சமமாகப் பங்கிட்டனர். இப்போது வேலைப்பிரிவினைக்கு ஏற்ப பங்கீடு மாறியது. சமமான பங்கீடு என்ற முறை கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது.

கூட்டாகச் செய்த மாயவித்தை இப்போது ஒருசிலரால் மட்டுமே செய்யப்பட்டது. அதில் தனிச்சிறப்பும் தேர்ச்சியும் வளர்ந்தது. பழங்குடிகளுக்கு இடையே இணைப்பு ஏற்பட்டது, இந்த இணைப்பு போர்களாலும், வேறு சில காரணங்களாலும் ஏற்பட்டது. அவ்வாறு ஏற்படும் போது அவர்கள் செய்து வந்த தொழிலையே அவர்கள் தொடர்ந்து செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டது. இந்த உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் தான் சாதி தோன்றியது. சாதி தோன்றியதற்குப் பல காரணங்களில் இதுவும் ஒன்று.

வேலைப் பிரிவினையின் வளர்ச்சியினால், உடல் உழைப்பை செலுத்துபவர்களுக்கும் அதனை நிர்வகிப்பவர்களுக்கும் இடையே வேறுபாடு தோன்றத் தொடங்கியது. இந்த உடல் உழைப்பு இல்லாதவர்கள் உபரியை கையக்கப்படுத்தினர். இந்தக் கையப்படுத்துவதற்கு நியாயம் கற்பிக்கவே மதம் தோன்றியது. உடலால் உழைப்பவர்களை இழிவாகப் பார்க்கும் போக்குத் தொடங்கியது. மூளை உழைப்பு உயர்ந்ததாகக் கருதப்பட்டது.

உழைப்பை செலுத்துவர்களுக்கும் உழைப்பை வாங்குபவர்களுக்கும் இடையே உள்ள கோபதாபங்களை மூடிமறைக்கவே மதம் தோன்றியது. மதமும் அரசும் ஒரே காரணத்தின் அடிப்படையில் தான் தோன்றியது

10) வர்க்கம் தோன்றிய போது மதம் தேவைப்பட்டது

மதத்தில் சுரண்டும் வர்க்கத்தின் நலன்கள் பிரதிபிக்கிறது. மதமும், அரசும் அனைவருக்கும் பொதுவானது என்று கூறப்பட்டது. ஆனால் அதன் வர்க்கத் தன்மையை மார்க்சியமே வெளிப்படுத்தியது.

சமூகத்தில் சிலர் பணக்காரர்களாகவும், பலர் ஏழைகளாகவும் இருப்பதற்குக் காரணத்தைக் கூறுவதில் மதத்தின் வர்க்க சார்பு அடங்கி இருக்கிறது. பணக்காரர்கள் இன்று பணக்காரர்களாக இருப்பதற்குக் காரணம், போன ஜென்மத்தல் அவர்கள் செய்த புன்னியக் காரியமே, என்று மதம் கூறுகிறது. உழைப்பாளிகள் நாள் முழுதும் உழைத்தும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்காததற்கு, போன ஜென்மத்தில் இவர்கள் செய்த பாவ காரியம் என்று மதம் கூறுகிறது.

அத்தோடு நிற்கவில்லை. அடுத்த ஜென்மத்தில் நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமானால் இந்த ஜென்மத்தில், பலனை எதிர் பார்க்காமல் உழைக்க வேண்டும். இருப்பதைக் கொண்டு தியாக உணர்வோடு, இந்த ஜென்மத்தில் வாழ்ந்தால், அடுத்த ஜென்மத்தில் நலமாக வாழலாம். இது ஒரு சாதாரணக் கருத்தாகத் தெரியலாம், ஆனால் இதில் தான் மதத்தின் வர்க்கத் தன்மை அடங்கி இருக்கிறது.

11) மதத் தோற்றத்திற்கு இரண்டு காரணங்கள்

மதத்தின் தோற்றத்துக்கு மார்க்சியம் இரண்டு காரணத்தைக் கூறுகிறது. ஒன்று கல்லாமை மற்றொன்று இல்லாமை.

கல்லாமை என்பது இயற்கைப் பற்றிய அச்ச உணர்வால் ஏற்பட்டது.

இல்லாமை என்பது சமூகத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுக்குக் காரணத்தை அறியாமலும், பொருளாதாரப் போக்கைப் புரிந்து கொள்ளாமையினால் உருவான அச்ச உணர்வினால் தோன்றியது.

இயற்கைப் பற்றிய அறியாமையினால் உருவான அச்சமும், சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்குக் காரணம் பற்றிய அறியாமையினால் ஏற்படுகிற அச்ச உணர்வும் மதம் தோன்றுவதற்குக் காரணமாகிறது.

மதத்தை வெறும் மூட நம்பிக்கையாக, மார்க்சியம் பார்க்கவில்லை. மதம் தோன்றுவதற்கான புறநிலைக் காரணம் இருக்கிறது. அந்தப் புறநிலை இருக்கும் வரை மதமும் அதே போல அரசும் இருக்கும். புறநிலை மறையும் போது மதமும் அரசும் மறைந்து போகும். மதம் தோன்றுவதற்கான முக்கியமான புறநிலைமைகளே அரசு தோன்றுவதற்குக் காரணமாகிறது.

12) கல்லாமை மறைந்துவிட்டது

மதம் தோன்றுவதற்கான இரண்டு காரணங்களில் ஒன்று, இன்றைய நிலையில் மறைந்து விட்டது என்று சொல்லலாம், இயற்கைப் பற்றிய புரிதல் இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக வளர்ந்து இருக்கிறது. படிப்பறிவு குறைந்த, அல்லது விஞ்ஞானப் படிப்பு அறிவு இல்லாதவர்களிடமே இந்தக் காரணங்கள் இன்றும் நீடிக்கிறது. அதனால் இயற்கைப் பற்றிய அறியாமை இன்றைய நிலையில் நீங்கிவிட்டதாகக் கூறலாம்.

ஆனால் பொருளாதார ஏற்றத் தாழ்வினால் ஏற்படுகிற அச்சவுணர்வு இன்னும் நீடிக்கிறது. சமூகத்தில் படிப்பறிவு பெற்றவர்களிடையிலும் இன்று மத உணர்வு இருப்பதற்குக் காரணம் இதுவே ஆகும். விஞ்ஞானிகளிடமும் கூட மத உணர்வு இருக்கிறது.

2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருதார நெருக்கடிகள் தோன்றியதற்குக் காரணத்தை அறிந்து கொள்ள முடியவில்லை. நூறு ஆண்டுகளுக்கு மேல் வளர்ச்சி அடைந்த வங்கிகள் சில நாட்களுக்குள் சரிந்து வீழ்ந்தன. இதற்கான காரணத்தை அறியாமல் இருந்தவர்களுக்கு, இதனால் ஏற்படுகிற அச்ச உணர்வு, அவர்களை இயற்கை மீறிய சக்தியிடம் தஞ்சம்புக வைக்கிறது.

13) மதத்தின் மறைவு

மதத்தின் மறைவு என்பது வர்க்க சமூகத்தின் மறைவோடு இணைந்துள்ளது. அப்போது அரசும் உலர்ந்துவிடும், மதமும் தேவையற்றுப் போய்விடும். அந்த வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் ஏற்றத்தாழ்வுக்கு இடமே இருக்காது. வர்க்கங்கள் முழுமையாக ஒழிந்து போய்யிருக்கும். பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மறைந்து போய்யிருக்கும்.

பொருளாதாரக் காரணங்களால் மக்களிடையே வேறுபாடு இல்லாத அந்தக் காலத்தில் மதம் தேவைப்படப் போவதில்லை. வர்க்க வேறுபாடு இல்லாத அந்தச் சமூகத்தில். வர்க்க ஒடுக்கு முறைக்குக் காரணமான மதம், அரசு ஆகியவை தேவை இல்லாமல் மறைந்து போகிறது. இந்த நிலைமைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதலாளித்துவச் சமூகத்தைக் கடந்து, கம்யூனிச சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆகிய இரண்டையும் படித்தறிய வேண்டும்.

இங்கே சுருக்கமாக அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மேல் விளங்கங்களுக்கு மார்க்சிய தத்துவத்தைப் படித்தறிய வேண்டும். கண்டிப்பாக அரசியல் பொருளாதாரத்தையும் இத்துடன் இணைந்து கற்க வேண்டும்.

இன்று அறிமுகமாகப் பெற்றது, மார்க்சிய தத்துவம், மார்க்சிய பொருளாதாரம் பற்றிய புரிதல் கிடைக்கும் போது, இந்த அறிமுகத்தைக் கடந்து தெளிவைப் பெறலாம்.


Friday 14 August 2020

துக்ளக் குருமூர்த்தியின் கருத்துக்கு எதர்வினை

 

-த.ந.தனராமன் - புதுச்சேரி

 

"பொருளாதார, தத்துவ குறிப்பேடு 1844" புத்தகத்தில் பெண்கள் பொது வேசியாக்கப்படவேண்டும், பொது உடைமையாக்கப்படவேண்டும் என்று மார்க்ஸ் கூறியுள்ளதாக 5.9.2020 துக்ளக் இதழில் அதன் ஆசிரியர் திரு. குருமூர்த்தி, மார்க்ஸை விவாதப் பொருளாக்கியுள்ளார்.

இது கம்யூனிசத்துக்கு எதிரான பரப்புரை. கம்யூனிஸ்டுகள் மீது பொழியும் அவதூறு. இன்றைக்கு 2020-ம் ஆண்டில் 1844-ம் ஆண்டு எழுதியதாக குறிப்பிடப்படுவதற்கு பதில் சொல்ல வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த திரு. குருமூர்த்திக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். பொதுவுடைமை பற்றி குறிப்பாக திருமண முறை, குடும்பம், பொதுவுடைமை மற்றும் பெண்கள் பொதுவுடைமை (பொது வேசி) பற்றி புரிய வைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த அக்கப்போர் புகார் கூறுபவர்கள் அவர் காலத்தில் இருந்தனர். அவர்களைப் UPALITETU "uninformed reviewer who tries to hide his complete ignoratice and intellectual poverty" அதாவது, விவரம் அறியாததையும், அறிவு வறுமையையும் மறைக்கவே இவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் என்று குருமூர்த்தி போன்று அவர் காலத்தில் புருனோபாவர் என்பவர் கூறியதற்கு பதிலாக இவ்வாறு மார்க்கம் கூறியுள்ளார். (பார்க்க = "1844-பொருளாதார, தத்துவ குறிப்பேடு” நூல் பக் 18 1974 பதிப்பு)

மார்க்சைப் பற்றியும் விஞ்ஞான கம்யூனிசத்தைப் பற்றியும் "இந்துத்வா”வின் சித்தாந்த குருக்களில் ஒருவரான குருமூர்த்திக்கு எந்தளவுக்கு அறிவு வறுமை உள்ளது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்துத்துவா என்பது மத அரசியல். கம்யூனிசம் என்பது விஞ்ஞானம். மத கண்ணாடி கொண்டு விஞ்ஞானத்தை பார்க்கக் கூடாது. விஞ்ஞானம் முன்னோக்கி பார்க்கக்கூடியது. மதம் பின்னோக்கி பார்க்கக்கூடியது.   

பெண்களை பற்றிய மார்க்சிய பொருளாதார அம்சம்:

ஒவ்வொரு உற்பத்தி முறையும் ஒரு சமூக வடிவத்தை உருவாக்குகிறது. சமூக உற்பத்தி முறை அடிப்படை. திருமண முறை சமூக மேல் கட்டுமானம். ஒவ்வொரு திருமண முறையும் ஒவ்வொரு சமூக வடிவத்துக்கு உகந்ததாக அதற்கான சட்டத்திட்டங்களுடன் அமைத்து கொள்ளப்படுகின்றன.

எடுத்த எடுப்பிலேயே ஒரு தார மண குடும்ப முறை ஏற்பட்டுவிடவில்லை, இரத்த உறவுக் குடும்பம், புனலுவா குடும்பம், இணை குடும்பம் என்கிற முறைக்குப் பிறகு தான் ஏற்படுகிறது. ஒரு தார குடும்ப முறை சொத்துடையினால் நிலைநிறுத்தப்படுகிறது.

மாடு மேய்த்தல், பயிரிடுதல் என்று வேலைப்பிரிவினை சொத்து உறவை உருவாக்குகிறது. சொத்து உறவுதான் ஒருதார குடும்பம், அரசு ஆகியவற்றின் மூலாதாரம். சொத்து என்ற உறவு ஏற்பட்ட உடன் ஆண், பெண்களை அடிமைப்படுத்துவது ஆரம்பமாகியது. ஏனெனில் தன் உழைப்பால் விளைந்த சொத்தை தன் வாரிசுக்கு சேரவேண்டும் என்ற ஆணாதிக்கத்தால் குடும்பத்திற்குள் பெண்கள் அடிமையானார்கள். சொத்து உறவு பலதார மணமுறையிலிருந்து (இரத்த உறவுக் குடும்பம், புனலுவா குடும்பம், இணை குடும்பம்) ஒருதார மணமுறைக்கு மாறியதில் பெரும்பங்கு வகித்தது.

நிலவுடைமை சமுதாயத்தில் ஒருதார மணமுறையும், தேவதாசி எனும் பெண் பொதுவுடைமையும் அக்கம் பக்கமாகவே இருந்து வந்தது. 20-ம் நூற்றாண்டில்தான் தேவதாசி முறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டது என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும். 

நிலவுடைமை சமுதாயத்திலிருந்து தொழில் உற்பத்தி முறை, முதலாளித்துவ சமுதாயம் தோன்றும் பொழுது, உலகம் முழுவதும் தொழில், முதலாளித்துவமயமாகிறது. கூடவே, நவீன ஆலைத்தொழிலாளி வர்க்கமும் உருவாகிறது. தனிச்சொத்து வடிவம் நிலத்திலிருந்து ஆலை வடிவத்தில், தொழில் மூலதனமாக மாறுகிறது. பெண்களை உற்பத்தி கருவிகளாக, மனித பண்டங்களாக மூலதனம் பார்க்கிறது. ஆகவே விபசாரத்தை தொழிலாக அங்கீகரித்து வைசன்சு கொடுத்து லாபம் பார்க்கிறது.

தனியார் உடைமை என்பது உலக வர்த்தகத்தினால் யுனிவர்சல் தனியார் உடைமையாக மாறிவிட்டது. உற்பத்தி சமூகமயமாகிவிட்டது. உற்பத்தியின் லாபம் தனியார் மயமாகவே உள்ளது. தனியார் சுவிகரிப்பை உலகமுழுவதும் சமூகமயமாக்கிவிட்ட தொழிலாளர்கள், தொழில் மூலதனத்தை சமூகமயமாக்க பொதுவுடைமையாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். முதலாளி வர்க்கத்திற்கு, அதனை ஆதரிக்கும் சிந்தனையாளர்களுக்கு உற்பத்தி சாதனங்களை பொதுவுடைமை ஆக்கக்கூடாது, எல்லாம் தனியார்மயமாக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு பொதுவுடைமை கோரிக்கையை எதிர்க்கவும். தனியார் மயத்தை ஆதரிக்கவும் ஒரு சித்தாந்தம் தேவைப்படுகிறது. அதுவே இந்தியாவில் இந்துத்துவ சித்தாந்தம்.

பொதுமக்கள் அபிப்ராயத்தை திசை திருப்ப இக்கால கட்டத்தில் பெண்களை பொதுவுடைமையாக்க, பொது வேசியாக்கப்பட வேண்டும் என்று "பொருளாதார, தத்துவ குறிப்பேடு 1844"  நூலில் மார்க்ஸ் எழுதியுள்ளார் என்று குருமூர்த்தி 5.8.20 துக்ளக் இதழில் எழுதுகிறார். திரு. குருமூர்த்தி குறிப்பிடும் நூலின் பகுதி "தனியார் சொத்தும் கம்யூனிசமும் என்ற தலைப்பில் பக்கம் 87-90 வரை உள்ள பக்கத்தில் (1974 மாஸ்கோ பதிப்பு) மார்க்க கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


"Finally, Communism is the positive expression of annulled private property at first as Universal Private property. By embracing this relation as a whole, communism is:


1. In its first form only a generalization and consummation (of this relation). ............ Finally, this movement of opposing universal private property to private property finds expression in the beastly form of opposing to marriage (certainly a form of exclusive private property) the Community of Women, in which a woman becomes a piece of Communal and Common Property. It may be said that this idea of the Community of Women gives away the secret of this as yet completely crude and thoughtless communism.

திருமணம் என்பது தனியார் சொத்து வடிவத்தில் ஒன்று. தனியார் சொத்து universal தனியார் சொத்தாக மாறும் பொழுது பெண்களும் universal தனியார் சொத்தாக மாறுதலடைவதாக கொச்சை கம்யூனிசம், சிந்தனையற்ற கம்யூனிசம் (Crude & Thoughtless Communism) கருதுகிறது என்பதே இதன் சுருக்கமான பொருள். சீதனம், வரதட்சணை, திருமண கௌரவம், சொத்தில் பெண்களுக்கு உரிமை மறுப்பு, பாகப்பிரிவினையில் பாதகம் ஆகிய இவை எல்லாம் திருமண உறவுக்குள் அடங்கியுள்ள சொத்து உறவுகளாகும்.

கொச்சை கம்யூனிசத்திலிருந்து தான் கற்பனா சோசலிசம், விஞ்ஞான கம்யூனிசம் என்ற கட்டங்களாக கம்யூனிச கருத்து வளர்ச்சி அடைகிறது என்ற கருத்தில் Universal private property passes private prostitution to a state of uriversal prostitution with the community என்று கூறுகிறார். குடும்பம், திருமணம் ஆகியவை எல்லாம் புனிதமானவை, தனியார் சொத்து புனிதமானது என்பதெல்லாம் முதலாளி வர்க்க சிந்தனை.

"முதலாளித்துவ குடும்பத்தின் உடன் நிகழ்வு மறைந்து போகும் போது கூடவே முதலாளித்துவக் குடும்பமும் இயல்பாகவே மறைந்து விடும். மூலதனம் மறையும் போது இரண்டும் (முதலாளித்துவ உடன் நிகழ்வு திருமண முறை, முதலாளித்துவ குடும்பம்) மறைந்துவிடும் என்று உலகத்திற்கு 1848-ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பத்தி 102-ல் ஏற்கனவே அறிவித்துள்ளது. “அறிக்கையில்" பத்தி 105 விருந்து 112 வரை மார்க்ஸ், திருவாளர் குருமூர்த்திக்கு பதில் கூறியுள்ளார். பார்க்க : பக்கம் 50, 51 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, தேவ. பேரின்பன் மொழி பெயர்ப்பு, 2008 பதிப்பு. அப்பக்கங்களை அவர் மீண்டும் ஒருமுறை படித்து அறிவது அவசியம். அவருக்கு பதில் சொல்ல எல்லா கம்யூனிஸ்ட்களும், ஜனநாயகவாதிகளும் மீண்டும் "அறிக்கையை” அறிந்து கொள்வது அவசியம். திருமண முறையை பொருளாதார அம்சமாக பார்க்கும் மார்க்சின் பார்வை இதுதான்.

பெண்களை பற்றிய மார்க்ஸிய தத்துவார்த்த அம்சம் :

இந்தியாவில் மதவடிவத்தில் தேவதாசி முறை இருந்து வந்தது போல் 19-ஆம் நூற்றாண்டு முதல் பாதிவரை பிரெஞ்சு ரகசிய சங்க உறுப்பினர்கள் மத்தியில் மத வடிவத்தில் பொது மகளிர் பற்றிய கருத்துகள் நிலவி வந்தன. 19 ஆம் நூற்றாண்டின் பின்பாதியில் பெண்களை பொதுவாக அனுபவிப்பதே கம்யூனிசம் என்று எந்த கம்யூனிஸ்டும் கருதவில்லை. அவ்வாறான கருத்துக்களை சிந்தனையற்ற, கொச்சை கம்யூனிசம் (Thoughtless, Crude Communism) என்று “1844 குறிப்பேட்டில்” மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

ஏங்கெல்ஸ் “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்" எனும் கேள்வி-பதில் வடிவ நூலில் 21-வது கேள்வி-பதிலில் கம்யூனிச சமுதாயத்தில் குடும்பத்தின் மீது கம்யூனிசத்தின் செல்வாக்கு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு கீழ்க்கண்டவாறு பதில் அளிக்கிறார்:-


"இருபாலினருக்கான உறவு இரு நபர்களின் தனிப்பட்ட சொந்த விடயமாக கம்யூனிச சமுதாயத்தில் இருக்கும். கம்யூனிச சமுதாயம் அவர்களுடைய தனிப்பட்ட உறவில் தலையிடாது. நடப்பிலுள்ள திருமணம் இரண்டு அடிப்படைகளின் மேல் கட்டப்பட்டுள்ளது. ஒன்று தனிச்சொத்துரிமை, இன்னொன்று குழந்தை வளர்ப்பு. இந்த இரண்டும் சமுதாயமயமாகிவிட்டால், அரசு பொறுப்பாக ஆகிவிட்டால் இன்றைய முதலாளித்துவ திருமணத்தின் அடிப்படை தகர்ந்துவிடுகிறது. இதனால் மனைவி கணவனையும், குழந்தைகள் பெற்றோர்களையும் நம்பி இருப்பது இல்லாமல் போகிறது. கம்யூனிசத்தில் பெண்கள் பொதுவாக்கப்படுவார்கள் என்று ஒழுக்கம் பேசும் குறுமதியாளர்களுக்கான விடை இதிலே அடங்கியுள்ளது தெளிவாகும். பொது பெண்டிர் முறை (தேவதாசி, விபசாரம்) முதலாளி வர்க்க சமுதாயத்தில் நடைமுறையில் உள்ள உண்மையாகும். தனியார் சொத்தின் வேரிலிருந்து முளைப்பதுதான் பொது பெண்டிர்முறை. தனியார் சொத்து பொதுச்சொத்தாக மாற்றப்படும் பொழுது பொது பெண்டிர் தனி பெண்டிராக விடுதலை பெறுகின்றனர். முதலாளித்துவ திருமணம், குழந்தை வளர்ப்பு என்பவை முதலாளித்துவ வடிவத்திலிருந்து பொது சமூகமயமாக்கப்பட்டு பொது பெண்டிர் முறை ஒழிக்கப்படுகிறது.”

இதேபோல் மார்க்கம் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

"மனிதனுக்கு மனிதன் கொண்டுள்ள, நேரடியான, இயற்கையான, தேவையான உறவுதான் ஆண் பெண்ணோடு கொண்டுள்ள உறவு இது இயற்கையான மனித ஜீவராசி உறவு (Species-being fatural relationship). இந்த உறவு இயற்கையானது, இயற்கை மனிதன் மூலம் வெளிப்படுகிறது. மனிதன் இயற்கையை வெளிப்படுத்துகிறான். மனித சாராம்சம் இயற்கை மூலமாகவும், இயற்கையின் சாராம்சம் மனிதன் மூலமாகவும் காணமுடிகிறது. இதற்கு மாறாக ஆண், பெண்ணை போகப் பொருளாக, போரில் கைப்பற்றப்பட்ட, கொள்ளை அடிக்கப்பட்ட பொருள்களில் ஒன்றாக, தனக்கு அடிமையாக, வேலைக்காரியாக கருதுவது, ஆண் தன்னைத்தானே கீழ்மைப்படுத்திக் கொள்வதாகும். ஆண் பெண்ணை எப்படி நடத்துகிறானோ அந்தளவிற்கு அவன் தரம் வெளிப்படுகிறது. தன்னை ஒரு ஜீவராசியாக கருதினால் பெண்ணையும் தன்னைப்போல் ஒரு ஜீவராசியாக கருத வேண்டும். அப்பொழுது தான் அது இயற்கையான உறவாகவும், நடத்தையாகவும் இருக்கமுடியும். இயற்கையான நடத்தையாக அவன் நடத்தை இருக்கும் பொழுதுதான் அவன் மனித ஜீவியாக இருக்கமுடியும். இதை ஆண் உணரும் பொழுது மனித சாராம்சத்தை, மனித மதிப்பை, இயற்கை சாராம்சத்தை, இயற்கை மதிப்பை, தன்னைத்தானே உணர்ந்தவன் ஆகிறான். மனித ஜீவி என்ற நிலையிலிருந்து இயற்கை மனிதனாகிறான். இயற்கை மனிதன் முழு மனிதனாகிறான். ஆணுக்கு பெண் தேவை என்று உணரும் போது ஒருவரின்றி ஒருவர் வாழ முடியாது என்றும் ஒருவருக்கு ஒருவர் தேவை என்பதும் சமூக தேவையாகிறது. இந்த சமூக தேவையை உணரும்போதுதான் தான் தனிநபர் அல்ல, தனியாக வாழமுடியாது, தான் ஒரு சமூக ஜீவி என்று உணர்கின்றான். அவ்வாறு உணர ஆரம்பிக்கும் போதுதான் தனிச்சொத்து (Private Property) சமூக ஜீவிக்களுக்கான (Universal Public Property) ஆக மாற்றப்படவேண்டும் என்ற சிந்தனை உருவாகுகிறது. இவ்வாறான சிந்தனையின் தொடக்கத்தில் பெண்களை உடைமையாக கருதிய 14-ஆம் நூற்றாண்டின் முற்பாதி வரை பொது பெண்டிர் என்ற கருத்து ஆரம்ப கால சிந்தனையற்ற, கொச்சை கம்யூனிசமாக அரும்பியது என்று "பொருளாதார தத்துவ குறிப்பேடுகள் 1844" (பக்கம் 89, 1974 பதிப்பு) நூலில் மார்க்ஸ் கூறுகிறார்.

இக்கருத்தை வளர்ச்சி அடைந்த விஞ்ஞான கம்யூனிச கருத்தை உருவாக்கிய மார்க்ஸ் தன் கம்யூனிச கருத்தாக கூறினார் என்று கூறுவதை அறிவு மோசடி (Intellectual Fraud) என்று கூறலாம்.

சொத்தையும், செல்வத்தையும் பெறுவதற்காக ஒரு ஆண் முதலாளியின் ஆலையில் கூலி உழைப்பைச் செய்வதும் விபச்சாரம் தான். சொத்து, செவ்வம், குழந்தைகள் ஆகிய இல்லாதிருப்பதன் காரணமாக, மனைவி கணவனுடன் கொள்ளும் உறவும் அவள் தன்னைத்தானே கணவனுடன் விபசாரத்தில் ஈடுபடுத்திக் கொள்வதுதான். ஆனால் ஒட்டுமொத்த சமுதாயத்தால் குழந்தைகள் பராமரிக்கப்படும் நிலையும் சமுதாய உறுப்பினர்களிடையே சமத்துவமும் ஏற்படுகையில், பெண்களைப் பொதுவாக அனுபவித்தல், ரகசியமாக அனுபவித்தல் (விபசாரம், சோரம், பொதுப்பெண்டிர், தேவதாசி முறை) சமுதாயத்தால் ஒழித்துக் கட்டப்படும்.

"மார்க்சின் குறிப்பேடுகள்" , "ஏங்கெல்சின் கோட்பாடுகள்", "புனிதகுடும்பம்", "ஜெர்மன் தத்துவம்", "தத்துவத்தின் வறுமை", "அறிக்கை", "டூரிங்குக்கு மறுப்பு”, "குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்" ஆகிய படைப்புகளில் குடும்பம், திருமணம் பற்றி மார்க்சிய ஆசான்கள் கூறிய கருத்துகளைச் சுருக்கமாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (2014 பதிப்பு, பக்கம் 273) தமிழாக்கத்தில் ஆசிரியர் எஸ்.வி. இராஜதுரை பின்வருமாறு அருமையாக வகைப்படுத்தியுள்ளார்.


1. தமது காலத்திய முதலாளித்துவ திருமணத்தில் இருந்த மாய்மாலத்தையும் மனிதத்தன்மையற்ற நிலையையும் எடுத்துக்காட்டுவது:

 

2. இந்த முதலாளித்துவ குடும்ப வடிவம் என்பது மானுட குல வரலாற்றில் என்றென்றும் நிலவி வந்த, மாற்றமே இல்லாத குடும்ப வடிவம் என்பதை மறுத்து, பல்வேறு வகைக் குடும்ப வகைகள் உற்பத்திமுறைக்கேற்ற திருமண முறை குடும்ப அமைப்பு முறை - (உதாரணம், இன்றைய நிதி மூலதன அமைப்பு முறைக்கேற்ற Compationship எனும் சேர்ந்து வாழும் திருமணமல்லாத குடும்ப அமைப்பு முறை) இருந்து வந்தது, இருந்து வரும் என்பதை தக்க ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுவது:


3. கம்யூனிச சமுதாயத்தில் ஆண்-பெண் உறவு சொத்தை அடிப்படையாக கொள்ளாமல் வேறு எத்தகையாக இருக்கும் என்பது பற்றிய சில கருத்துக்களைக் கூறுவதும் குடும்பம் என்பது சேர்ந்து வாழ்தல் என்பது போல் ஏதேனும் அச்சமுதாயத்தில் இருக்குமானால், அது முதலாளிகளால் விமர்சிக்கப்படும் முதலாளித்துவ உறவின் (தனிச்சொத்துடைமை உறவின்) சாயலைக் கடுகளவு கூடக் கொண்டிராது, மனிதநேய உறவுகள் அடிப்படையில் ஆண் பெண் உறவுகள் அமைந்திருக்கும் என்பதைச் சொல்வது என வகைப்படுத்தலாம்.

திருமணத்திற்கு முன்னால் பெண் தந்தைக்கு அடிமை, திருமணத்திற்கு பின்னால் பெண் கணவனுக்கு அடிமை, கணவனுக்கு பின்னால் ஆண் பிள்ளைக்கு பொன் அடிமை எனும் சனாதன திருமண, குடும்ப உறவுமுறையை இந்துத்துவா தூக்கி பிடிக்கிறது. சனாதன இந்துத்வா குடும்ப அமைப்பிலிருந்து பொது, தனி வேசி அமைப்பு ஒழிக்கப்பட முடியாது. ஒழியாது. சனாதன திருமண குடும்ப முறைக்கு எதிரானதாக கம்யூனிச திருமண, குடும்ப முறை அமையும். இதுவே எதிர்காலம். பொதுவுடைமை வந்தால் பொதுப்பெண்டிர் முறை தனிச்சொத்து உரிமையோடு ஒழிக்கப்படும் புதிய புரட்சிகரமான, சமத்துவமான ஆண்-பெண் உறவுமுறை சொத்து அடிப்படையில் இல்லாமல் உண்மையான அன்பு அடிப்படையில் திருமண முறையும் குடும்பமும் அமையும் என்பது சூரியனைப்போல் நிச்சயம்.

சுருக்கமாக, இன்றைய திருமண முறை, குடும்ப முறை, வேசி முறை, சோரம் முறை, தனிச்சொத்து சம்பந்தப்பட்டது. சொத்து வடிவம் மாறும் பொழுது இந்த முறைகள் குடும்ப திருமண முறையும், குழந்தை வளர்ப்பு முறையும் உடன் நிகழ்வாக மாறிவரும். Universal private property - uriversal public property-ஆக மாறும் பொழுது தனிசோரமும் பொதுவிபசாரமும் சொத்து அடித்தளத்தை இழந்துவிடும். பொது விபசாரத்தின் மூலத்தையும் முடிவையும் "1844 குறிப்பேட்டில்" மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார் என்பதுதான் உண்மை.

Friday 10 January 2020

மார்க்சின் மாபெரும் இரு கண்டுபிடிப்புகளைப் போற்றுவோம் அதனைப் பின்பற்றுவோம்


(ந.முத்துமோகன் எழுதிய தொடர் முழுமையும் “மார்க்சியம் பயிலுவோம்” என்ற பெயரில் தனி நூலாக வெளிவந்துள்ளது, இந்நூலுக்கான எனது எதிர்வினையைத் தனியாக எழுத உள்ளேன். இந்த எதிர்வினை எட்டு தொடரை மட்டும் முன்வைத்து எழுதப்ட்டது. விரைவில் முழுநூலுக்கான விமர்சனம் வெளிவரும்)

தோழர் ந.முத்துமோகன் “மார்க்சியம் பயிலுவோம்” எனும் தலைப்பில், மார்க்சியத்தை அறிமுகப்படுத்தும் வகையில் “ஜனசக்தி” இதழில் தொடர்ந்து எழுதிவருகிறார். இதுவரை எட்டுப் பகுதிகள் வந்துள்ளன. மார்க்சைப் பற்றியும் மார்க்ஸ் கூறியது பற்றியும் தோழர் உயர்த்திச்சுட்டுகிறார் (highlights), பொதுவாக உயர்த்சிச்சுட்டுவது என்பது குறிப்பிட்டுச்சுட்டுவதோடு பிறவற்றையும் இணைத்துப் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கும் என்பதற்காகவே அவ்வாறு செய்யப்படுகிறது. ஆனால் தோழர் உயர்த்திச்சுட்டுவது பிறவற்றில் இருந்து தனித்துத் துண்டிப்பதற்காகச் செய்யப்படுவதாகத் தெரிகிறது.

முதல் கட்டுரையின் தொடக்கத்தில் மார்க்ஸ் இந்தியாவிற்கு வந்ததில்லை என்பதைப் பதிந்துள்ளார். இந்தியாவிற்கு நேரில் வந்துப்பார்க்காத மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி நிறைய அல்லது சிறப்பாக எழுதியிருக்கிறார் என்பதைச் சுட்டுக்காட்டுவதற்காக இவ்வாறு கூறுகிறார் என்று நினைத்து தொடர்ந்து படித்தால், ஏமாற்றத்திற்கு உள்ளாகிறோம். மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மீதே மார்க்சின் கவனம் இருந்ததாக எழுதியிருக்கிறார். ஆனால் இதற்கு முரணாக இக்கட்டுரையின் இறுதியில் “நியூயார்க் டிரிப்யூன்” பத்திரிகையில் இந்திய விடுதலை இயக்கம் போன்ற உடனடிப் பிரச்சினைகளைக் கடந்து இந்திய சமூக அமைப்பு பற்றிய ஆய்வுகளில் மார்க்ஸ் ஈடுபட்டார் என்றும் எழுதுகிறார். இந்த முரண் ஏன் ஏற்படுகிறது என்றால், மார்க்ஸ் இந்தியாவைப் பற்றிப் பலநூறு பக்கங்களில் எழுதியவை நூலாக நமக்குக் கிடைக்கிறது. இதனை மறைக்க முடியாததால் இதனையும் சேர்ந்து எழுதுகிறர். இதுபோன்ற முரணை அவர் எழுத்துகளில் தொடர்ந்து பார்க்க முடிகிறது.

இந்தத் தொடர் மார்க்சியம் பயில்வதற்காக எழுதப்பட்டது, அதனால் இதில் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் ஆகியோர் எழுதிய மார்க்சிய அடிப்படைகளை மட்டும் அறிமுகப்படுத்துவதே சரியானதாக இருக்கும். அது மட்டும் போதுமானது அல்ல என்று கருதினால் இறுதியில் மார்க்சியம் பற்றிய விமர்சனத்தையும் அதன் பல திரிபான போக்குகளையும் அறிமுகப்படுத்தலாம். ஆனால் தோழர் இரண்டாவது தொடரில் எங்கெல்சைப் பற்றி எழுதும் போது, “சமூகவாழ்வை பொருளாதாரமே “நிர்யணிக்கிறது” என்ற கருத்தாக்கத்தை மார்க்சியத்தினுள் பிரபலப்படுத்தியவர் எங்கெல்ஸ் என்று ஒரு கருத்து உண்டு” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுச் செல்கிறார். இது தொடக்க வாசகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

மார்க்சியத்தைத் தவறாகப் புரிதல் என்ற சிக்கல் மார்க்ஸ், எங்கெல்ஸ் வாழ்ந்த காலத்திலேயே உண்டு. ஆனால் எங்கெல்சைப் பற்றிய இதுபோன்ற கருத்துக்கள் அப்போது எழுப்பப்படவில்லை. மார்க்சை, இளம் மார்க்ஸ், முதிய மார்க்ஸ் என்று பிரித்து, இளம் மார்க்சுக்கு முதன்மை இடம் எப்போது கொடுக்கப்பட்டதோ அப்போதிருந்து இந்த விமர்சனம் தொடர்கிறது. இது ஆதாரமற்ற விமர்சனமாகும்.

மார்க்சியக் கருவூலத்தில் மார்க்சின் பங்களிப்பு என்ன, எங்கெல்ஸ் பங்களிப்பு என்ன என்பதை அவர்களின் எழுத்துக்களைக் கொண்டே அறிந்திட முடிகிறது. ஜெர்மன் கருத்தியல்” என்ற நூலை மார்க்சும் எங்கெல்சும் சேர்ந்தே எழுதியிருந்தாலும் அதில் காணப்படும் வரலாற்றியல் பொருள்முதல்வாதகக் கண்ணோட்டத்தை மார்க்சே முழுமைப்படுத்தியுள்ளார் என்பதைப் பல இடங்களில் எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” நூலுக்கான  முன்னுரையிலும், “ஃபாயர்பாக்” பற்றித் தாம் எழுதிய நூலிலும் எங்கெல்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

"இந்தக் கோட்பாட்டை (Theory) வகுப்பதற்கு நான் ஆற்றியுள்ள பங்கு பற்றி அண்மையில் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள். எனவே இவ்விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஒருசில வார்த்தைகள் சொல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை.

மார்க்சுடன் நாற்பது ஆண்டுகளாகக் கூட்டாகப் பணி புரிந்த காலத்திலும் சரி, அதற்கு முன்பும் சரி, இக்கோட்பாட்டின் அடித்தளங்களை அமைப்பதில், அதைவிடக் குறிப்பாக இக்கோட்பாட்டை விவரித்து விளக்குவதில் எனக்கு ஓர் அளவுக்குத் தனிப் பங்கிருந்ததை நான் மறுக்க முடியாது. ஆனால், அதன் தலையாய அடிப்படைக் கொள்கைகளில் மிகப் பெரும் பகுதியும் (குறிப்பாக, பொருளாதாரத் துறையையும் வரலாற்றுத் துறையையும் சேர்ந்தவை அவை), எல்லாவற்றிற்கும் மேலாக அவற்றைப் பற்றிய இறுதியான, கூரிய வரையறுப்பும் மார்க்சையே சேரும்.

நான் ஆற்றிய பணியை - ஒரு வேளை இரண்டு மூன்று தனித்துறைகளில் நான் புரிந்த பணி நீங்கலாக- நான் இல்லாமலே மார்க்ஸ் எளிதாகச் செய்திருப்பார். மார்க்ஸ் சாதித்ததை நான் சாதித்திருக்க மாட்டேன். எங்கள் எல்லோரையும் விட மார்க்ஸ் உயரே நின்றார், வெகு தொலைவிற்குப் பார்த்தார், மேலும் விரிவான, விரைவான பார்வை பெற்றிருந்தார்.

மார்க்ஸ் ஒரு மாமேதை (genius), நாங்கள் எல்லோரும் அதிகபட்சமாகச் சொன்னால் திறமைசாலிகளே (talented), அவர் இல்லாமல் இந்தக் கோட்பாடு இன்றிருப்பது போல் இவ்வளவு தூரம் வந்திருக்காது. எனவே, இந்தக் கோட்பாடு அவருடைய பெயரைத் தாங்கி நிற்பது சரியே"
(லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)

தோழர் குறிப்பிடுகிற பொருளாதாரத் துறையோடு வரலாற்றுத் துறையையும் குறிப்பிட்டே எங்கெல்ஸ் தமது காலத்திலேயே விளக்கப்படுத்திவிட்டார். அப்படி இருந்தும் இந்த மேற்கோளை முன்வைத்து தோழர் எழுதியிருக்கிறார், “மார்க்சியத்தை முழுமைப் படுத்தியவர், நிறைவு செய்தவர் ஏங்கெல்ஸ்.” இப்படி ஆதாரமில்லாமல் உண்மைக்கு மாறாகவே தொடர்ந்து எழுதுகிறார்.

தகவல் பிழையைத் திருத்திக் கொள்ளலாம், இந்தத் தொடரை நூலாக்கும் போது அதனைச் சரி செய்துவிடலாம். மார்க்சின் மூலதனம் நூலின் இரண்டு மற்றும் மூன்றாம் தொகுதிகளை எங்கெல்ஸ் வெளியிட்டுள்ளார், இதனைக் குறிப்பிட்டு சொல்லிய தோழர் தொடார்ந்து “உபரி மதிப்பு பற்றிய கோட்பாடுகள்” என்ற நூலை எங்கெல்ஸ் பதிப்பித்தார் என்று கூறியிருக்கிறார்.

இந்நூலை எங்கெல்ஸ் பதிப்பிக்கத் திட்டமிட்டிருந்தார் ஆனால் பதிப்பிக்க முடியாமல் போய்விட்டது. முதல்முறையாகக் காவுத்ஸ்கி 1905-1910 ஆகிய ஆண்டுகளில் இந்நூல் வெளியிடப்பட்டது. மார்க்சிய-லெனினிய கமிட்டியினால் 1954-1961 ஆண்டுகளில் புதிய பதிப்பாக வெளியிடப்பட்டது. எழுதப்பட்ட ஜெர்மன் மொழியில் 1956-1962ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டது.

இந்தத் தகவல் பிழையை நூலாக்கும் போது திருத்திவிடலாம். ஆனால் மார்க்சியத்தின் அடிப்படையைப் பற்றியும் மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றியும் குறிப்பிடுவதை விமர்சிக்காமல் இருக்க முடியாது.

 “கம்யூனிஸ் கட்சி அறிக்கை” வெளிவருவதற்கு முன்புவரை மார்க்சின் எழுத்துக்களில் ஹெகலிய செல்வாக்கைக் காணமுடிகிறது என்று தோழர் குறிப்பிடுகிறார்.  குறிப்பாக ஹெகலின் அந்நியமாதல் கருத்தை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் இந்நூலின் இறுதியில் அந்நியமாதலுக்கு எதிரான போராட்டத்தைப் பின்னாட்களில் பலவகைகளில் மார்க்ஸ் விரிவுபடுத்தினார் என்று எழுதியுள்ளார். இது உண்மைக்கு மாறானதாகும். “குடிமை சமூகம்” போன்றவற்றின் உள்ளடக்கத்தை மார்க்ஸ், பிற்காலத்தில் அரசியல் பொருளாதாரத்தில் தேட வேண்டும் (1859) என்று கூறியுள்ளார். அதே போலத்தான் அந்நியமாதலையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மார்க்ஸ் வந்தடைந்த இடத்தில் தான் நாம் மார்க்சியத்தின் முழுநிறைவை காணவேண்டும். மார்க்ஸ் வந்தடைந்ததை மறுதலித்து, வந்த வழியோடே (அந்நியமாதல்) தோழரைப் போன்றேர்கள் நின்றுவிடுகின்றனர். அதனால் தான் அந்நியமாதலால் ஏற்படும் முரண்பாட்டை மானுடச் செயல்பாட்டால் தீர்க்கப்பட முடியும் என்பது மார்க்சியம் என்று எழுதியுள்ளார்.

மார்க்சியன் பொருளாதார நிர்ணயத்தை மறுத்து அதாவது சமூக வரலாற்றைப் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் காண்பதை மறுத்து பொருளாயத மாற்றத்தின் விளைவாக ஏற்படும் தீர்வாக முன்வைக்காமல், மானிட செயற்பாட்டிலேயே முடங்கிவிடுகிறார். மனிதனின் செயற்பாட்டைப் புறநிலைமைகளே அதாவது பொருளாயதக் காணரங்களே நிர்ணயிக்கிறது என்ற மார்க்சின் கண்ணோட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் பலர், இந்த நிர்ணய பொருளாயத விளக்கத்தை எங்கெல்ஸ் தான் வலியுறுத்திக் கூறிக்கொண்டிருந்தார், மார்க்சிடம் அவ்வளவு வறட்டுத்தனம் இல்லை என்ற தவறான கருத்தை முன்வைக்கின்றனர்.

அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது என்பதை மார்க்ஸ், தான் உருவாக்கியதாகத்தான் சொல்லியிருக்கிறார்.

மார்க்ஸ்:-
இதன் மூலம் நான் உருவாக்கிய பொதுவான முடிவை - இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக மாறியது - பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம்.

மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும்  சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளில் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.

இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்த கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.”
 (அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு, முன்னுரை)

மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது என்ற வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தையே அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கத்தில் மார்க்ஸ் விவரித்துள்ளார். அடித்தளம் என்பது வாழ்நிலை, மேற்கட்டமைப்பு என்பது உணர்வுநிலை.

நான்காம் தொடரில் தோழர் அரசு குறித்த மார்க்சியக் கோட்பாட்டை விவரிக்கிறார். இங்கே மார்க்சியக் கோட்பாடாக மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் கருத்தை அறிமுகப்படுத்துவதைவிட, கிராம்சி, அல்த்தூசர் போன்றோர்களின் அரசு குறித்த கோட்பாட்டை, மார்க்சியத்தைச் செழுமைப்படுத்திய கோட்பாடாக முன்வைக்கிறார்.

அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாட்டைப் பயன்படுத்தி. அரசு எந்திரத்தையும் விளக்கமளிக்க முடியும் என்று கூறுகிறார் தோழர். மார்க்சியம் அவ்வாறுதான் பார்க்கிறது என்பதை உரக்க கூறமறுக்கிறார். இதற்குக் காரணம் தோழர் ந.முத்துமோகன், சமூகத்தைப் பொருள்முதல்வாதப் பார்வையில் பார்ப்பதை மறுதலிப்பராவார்.

அண்மையில் வெளிவந்த அவரது நூலான “இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும் என்ற நூலில் வெளிப்படையாகவே இதனை ஒப்புக் கொண்டுள்ளார். மறைக்காமல் நேரடியாக ஒப்புக்கொண்டமைக்கு அவரைப் பாராட்டத்தான் வேண்டும். “மார்க்சியத்தைப் பொறுத்தமட்டில், மார்க்ஸ் எப்போது ஆசிய உற்பத்தி முறை என்று ஒன்றைப் பற்றிப் பேசினாரோ, அப்போதிருந்தே வெறும் பொருளாதார வர்க்க அரசியல் மூன்றாம் உலக நாடுகளுக்குப் போதாது என்பது வெளிப்படையான ஓர் உண்மை” (பக்கம் 264). இதன் மூலம் இந்திய நிலைமைகளுக்கு மார்க்சின் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கத்தால் விளக்கப்படுகிற வரலாற்றியல் பொருள்முதல்வாதம் போதாது என்ற அவரது கருத்தை தெளிவுபடுத்திவிட்டார்.

மேலும் கூறுகிறார், “பொருளுற்பத்தி வாழ்க்கையை மார்க்சியர்கள் சமூக அடிப்படை என்றும், கலை, கலாசாரம், தத்துவம், கல்வி, குடும்ப உறவுகள் போன்றவற்றை மேற்கட்டுமானம் என்றும் வகைப்படுத்துவர். இந்த வகைப்படுத்தல் இப்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது” (பக்கம் 109). ஆக இவர் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைக் கேள்விகுள்ளாக்கப்பட்டவர்களின் பிரிவில் இருந்து பேசுகிறார். மேலும் இந்த அணுகுமுறை பொருத்தமற்றது என்று முடிவெடுத்துள்ளார்.

“அடிப்படையைக் காரணமாகவும் மேற்கட்டுமானத்தைப் பிரதிபலிப்பாகவும், ஒன்றை நிஜமாகவும் மற்றொன்றை நிழலாகவும் அணுகும் முறையியல் பொருத்தமற்றது என்ற முடிவு இப்போது பெறப்படுகிறது.” (பக்கம் 109). அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கருத்தாக்கத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எவ்வாறு அணுகுவார்களோ அவ்வாறே இவரும் அணுகுகிறார் என்பது தெளிவாகிறது.

“..இந்தியத் தத்துவப் பிரச்சனைகள் அனைத்தையும் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற இரண்டில் ஒன்றாக உள்ளடக்கி விடமுடியும் என்று என்னால் கருதமுடியவில்லை. இன்னும் பலப்பலப் பிரச்சனைகள்… பலபடித்தானவை. ஒன்று, பொருள் – கருத்து என்ற எல்லைகள் மிகவும் குறுகியவையாக இருக்க வேண்டும் அல்லது இந்தியத் தத்துவங்களின் பரப்பு மிகவும் பெரியதாக இருக்க வேண்டும்.” (பக்கம் VI.)

தாம் பொருள்முதல்வாதப் பார்வையில் இருந்து விலகி அணுகுவதை வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறார். இருந்தாலும், இந்த வெளிப்படைத் தன்மை எல்லா இடங்களிலும் காணப்படுகிறது என்று சொல்லிவிடமுடியாது. அதனால் தான் அவரது எழுத்துக்கள் உடனுக்குடன் முரண்படுகிறது.

அடித்தளம் நிஜம், மேற்கட்டமைப்பு நிழல் என்று எங்கேயும் மார்க்ஸ் கூறவில்லை.
அத்துடன் மேற்கட்டமைப்பைப் பொய்யுணர்வு என்றெல்லாம் மார்க்சியம் கூறவில்லை. “ஜெர்மன் கருத்தியல்” என்ற மார்க்ஸ் எங்கெல்சால் இணைந்து எழுதப்பட்ட நூலில், “மதம் என்பது துவக்கமுதலே மெய்யான அவசியத்தில் இருந்து எழும் அறிவெல்லை கடந்த்தான உணர்வாகும்”, மேலும் மார்க்ஸ் மூலதனம்” நூலின் முதல் தொகுதியில், “மத உலகம் எதார்த்த உலகத்தின் பிரதிபலிப்பே” (பக்கம் 116). "ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள்" என்ற குறிப்பில் மார்க்ஸ் “மத உணர்ச்சி (“religious sentiment”) என்பதே ஒரு சமூக உற்பத்திப் பொருள்...." என்றே கூறியுள்ளார்.

பிரதிபலிப்பு என்பதைப் பொய்யுரை என்று தோழர் சிறுமைப்படுத்துகிறார். “கருத்தியல் என்பதற்கே மார்க்சிய அகராதியில் பொய்யுணர்வு என்ற ஒரு பொருள் உண்டு.” (ஜனசக்தி மே 28, 2017). பொருள்முதல்வாதத்தை மறுதலித்து அரசை அணுகுவதால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதில் சர்வாதிகாரம் என்ற சொல் பலரை அச்சப்படுத்துகிறது என்று எழுதியுள்ளார். உண்மையைக் கண்டு அச்சப்படுபவர்களே மார்க்சியத்தைக் கண்டு அச்சப்படுபவர்களாக இருக்கமுடியும்.

ஐந்தாம் தொடர், இயங்கியல். இயங்கியலுக்குத் தொடர்பான இந்திய மற்றும் தமிழகத்தில் காணப்படும் இயங்கியல் முறைகளை இதில் அறிமுகப்படுத்துகிறார். ஆனால் இதில் பெரும்பாலானவை மாற்றம் பற்றியதாகவும் இயங்குவது பற்றியதாகவும் இருக்கிறது. அந்த மாற்றத்தை தமிழில் நிலையாமை என்று மொழியாக்கப்பட்டதாகத் தோழர் கூறுகிறார். அனைத்தும் அழிந்துபடுகின்றன என்ற பொருளில் அநித்யம் என்று இந்திய தத்துவங்களில் பிரபலமாகிவிட்டதாகத் தோழர் கூறுகிறார். இது போன்று வெறுமை, சூன்யம், நிர்வாணம், பாழ் போன்றவற்றையும் அறிமுகப்படுத்துகிறார். இவைகள் பொதுவாக நிலையற்ற அழியும்பொருளாகக் காட்டப்படுகிறது. அப்படி என்றால் பொருட்களின் அநித்திய தன்மையை விடுத்து, நித்தியமான பொருளற்ற ஆதம்மாவை நோக்கியே நம்மைக் கொண்டுபோகும்.

மாற்றத்தை மட்டும் முன்னிறருத்தும் இயக்கம் என்பது பரிணாமவாதமாகும். இயங்கியலில் மாற்றம் என்பது குறிப்பிட்ட அளவுமாற்றத்தை எட்டியவுடன் பழைய நிலை மாற்றம் பெற்று புதிய நிலைமை அடைவதாகும். அதாவது பழைய நிலை மறுக்கப்பட்டுப் புதிய நிலை அடைவதாகும். இயங்கியல் இவ்வாறு பழையன கழிந்து புதியன தோன்றுவதைக் குறிப்பதாகும்.

இந்த இயங்கியல் அறிமுகத்தில் இயங்கியலின் மூன்று பொதுவிதிகளைப் பற்றியோ, அதன் வகையினங்களைப் பற்றியோ எதுவும் கூறப்படவில்லை. பின்வரும் தொடரில் இடம் பெறுமா என்பது தெரியவில்லை.

ஆறாம் தொடர் அரசியல் பொருளாதாரம் பற்றிப் பேசுகிறது.

அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது, அதாவது பொருளாதார அமைப்பு என்ற அடித்தளமே கருத்தியல்களான மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது என்கிற மார்க்சின் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு மார்க்சின் அரசியல் பொருளாதாரத்தை ஏற்றுக்கொள்வதிலும் சிக்கல் ஏற்படும்.

இந்த அரசியல் பொருளாதாரம் என்பதில் அரசியலையும் பொருளாதாரத்தையும் தனித்தனியே பிரித்துப் பொருளாதாரத்தோடு அரசியல் என்ற மேற்கட்டமைப்போடு இணைத்தே மார்க்ஸ் பேசியிருப்பதாகச் சொல்விளையாட்டு விளையாடுகிறார் தோழர். இந்தச் சொல்விளையாட்டுக்கு முன்பு “அரசியல் பொருளாதாரத்தின்” வரலாற்றைக் காண்போம்.

அரசியல் பொருளாதாரத்தை எதோ மார்க்ஸ் தோற்றுவித்ததைப் போன்று தோழர் கூறுகிறார். மார்க்சுக்கு முன்பே அச்சொல் பயன்பாட்டில் இருக்கிறது. பதினேழாம் நூற்றாண்டில் இருந்தே அரசியல் பொருளாதாரம் என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. இன்று பொதுவாகப் பொருளாதாரம் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியின் விதிகளைப் பற்றிய விஞ்ஞானமாகச் சுருக்கிப்பார்க்கப்படுகிறது. அதாவது பொருளாதாரம் நடுநிலைமையாகப் பார்க்க வேண்டும் என்பதே இந்தப் பார்வையின் நோக்கமாகும்.

ரிக்காடோ தமது பொருளாதார ஆராய்ச்சியில் முதலாளித்துவச் சமூகத்தில் மக்களுக்கு இடையே காணப்படும் வர்க்க உறவுகளின் விஞ்ஞானமாக் கண்டார். குறிப்பாக உற்பத்தியை பகிர்வது பற்றிய சமூகப் பிரச்சினைப் பற்றியதாக இருந்தது. இத்தகைய ரிக்கோர்டோவின் கோட்பாடுகளின் அடிப்படையில் மார்க்சின் பொருளாதாரம் அரசியல் பொருளாதாரமாகக் காட்சியளிக்கிறது. மார்க்சின் அரசியல் பொருளாதாரம், நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்திய முதலாளித்துவத்தின் வீழ்ச்சியையும் இயக்கவியல் ரீதியில் நிறுவுகிறது. முதலாளித்துவத்தின் தொடர் வளர்ச்சியில், உற்பத்தி, சமூக உற்பத்தியாகவும், வினியோக முறை தனியுடைமை அடிப்படையிலானதுமாகக் காணப்படுகிறது, இந்த முரண் சமூக மாற்றத்தால் தீர்க்கப்படுகிறது என்று மார்க்சின் பொருளாதாரம் சுட்டிக்காட்டப்படுவதால் இந்தப் பொருளாதாரத்திற்கு அரசியல் பொருளாதாரம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த வரலாற்றை மறைத்து தோழர் சொல் விளையாட்டை யாருக்காகச் செய்து காட்டுகிறார் என்றால், “பொருளாதாரத்தைச் சமூக அமைப்பின் அடிப்படை என்றும் அரசியலை மேற்கட்டுமானம் என்றும் கருதுபவர்கள்,” என்று தோழர் எழுதியிருக்கிறார். கருதுபவர்??? என்றால் மார்க்ஸ் இதற்கு மாறாகவா கருதியிருக்கிறார்.

“டூரிங்குக்கு மறுப்பு" என்ற நூலில் எங்கெல்ஸ் கூறுகிறார்:- "சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான் மெய்யான அடித்தளமாய் எப்பொழுதும் அமைகிறது. இதிலிருந்து தொடங்கினால்தான் வரலாற்றின் அந்தந்தக் காலக் கூறுக்கும் உரிய நீதிநெறி அரசியல் நிறுவனங்களும் மற்றும் சமயக் கருத்துக்களுமாகிய மேற்கட்டமைப்பு அனைத்திற்கும் நாம் முடிவான விளக்கம் காணமுடிகிறது....” 
மார்க்சிய வழியில் விளக்கம் காண்பதற்குப் பொருளாதார அமைப்பை அடித்தளம் என்றும் அரசியலை மேற்கட்டமைப்பு என்றும் அனைத்து மார்க்சியர்களும் கருதுகின்றனர். அனால், தோழர் “சில பகுதியினர்” கருதுவது போல் எழுதியிருக்கிறார்.

“பொருளாதாரவாதம்” என்பது தொழிலாளர்கள் தமது பொருளாதாரப் போராட்டத்தில் மட்டுமே ஈடுபட வேண்டும், அதற்கான அரசியலில் ஈடுபட வேண்டாம் என்பதாகும். இதற்கும் பொருளாதாரத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. “பொருளாதாரவாதம்” என்பது அரசியலற்ற பொருளாதாரத்திற்கான போராட்டமாகும் இதனைத்தான் லெனின் எதிர்க்கிறார்.

பொருளாதாரத்தை அடித்தளம் என்று கூறுவதை லெனின் மறுக்கக்கூடியவரல்ல, “..மனிதனின் சமூக அறிவு எனப்படுவது (அதாவது தத்துவம், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும் போதனைகளும்) சமூகத்தின் பொருளாதார அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித்தளத்தின் மீது நிறுவப்பட்ட மேற்கட்டுமானமாகும்” (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்). மார்க்சைத் தொடர்ந்து வருகிற மார்க்சியவாதிகளான எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ போன்றோர்கள் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டு அதன்படி செயற்பட்டனர்.

ஆனால் தோழர் பொருளாதார அமைப்பை அதாவது புறநிலைமை தான் தீர்மானிக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளாததால், பொருளாதார நிலைமைகளை, அதுவும் அதன் எளிய அலகுகளை மார்க்ஸ் உசுப்பிவிட்டு அவற்றைச் செயல்பட வைக்கிறார் என்றொல்லாம் எழுதுகிறார். “அரசியல் பொருளாதாரத்தின் மிக எளிய அலகுகளை அடையாளப்படுத்தும் மார்க்ஸ், அவற்றினுள் அமிழ்ந்து கிடக்கும் முரண்களை உசுப்பி விட்டு அவற்றைச் செயல்படச் செய்வதன் மூலம் அரசியல் பொருளாதாரத்தை இயங்க வைக்கிறார்.” என்று புறநிலையின் மீது மார்க்சின் தலையீடாக விளக்கப்படுத்துகிறார்.

புறநிலைமை மனிதர்களைச் சாராது இருக்கிறது, அதாவது மனிதனது சிந்தனையைச் சாராதிருக்கிறது என்றே மார்க்ஸ் கூறியிருக்கிறார். அதன் மீதே மனிதன் தனது செயற்பாட்டை அமைத்துக்கொள்கிறான். முதலாளியையே மூலதனத்தின் ஆளுருவம் என்றே மார்க்ஸ் கூறுகிறார், “முதலாளி மூலதனத்தின் ஆளுருவம் என்ற விதத்தில் அல்லாமல் வேறு எவ்விதத்திலும் வரலாற்று வழியில் மதிப்பில்லாதவர், வரலாற்று வழியில் நிலவுவதற்கு உரிமையில்லாதவர்….” (மூலதனம் தொகுதி 2 பக்கம்- 794-795).

பொருளாதார அமைப்பைவிட மேற்கட்டமைப்பு “பிரம்மாண்டம்” என்பதே தோழரின் கருத்து. அதனால் பொருளாதாரத்தை எளிய, சிறிய அலகாகக் கூறிவிட்டு மேற்கட்டமைப்பான அரசியல், கலாச்சாரம் ஆகியவற்றைப் பிரும்மாண்டமானதாகக் காட்டுகிறார். “சின்னஞ்சிறு பொருளாதார அலகுகளில் கண்டறியப்பட்ட முரண்கள் சமூகம், அரசியல், கலாச்சாரம், அறம், இயற்கைச் சூழல் ஆகியனவற்றைப் பற்றிப் பிடித்துப் பிரும்மாண்டமான முரண்களாக வளருகின்றன.” பொருளாதார அமைப்பான அடித்தளம் என்பதைச் சிறிய அலகாகக் காட்டவே முயற்சிக்கிறார்.

ஏழாம் தொடரில், அறிவு பற்றிய கொள்கையை விவரிக்கிறார். இதில் தோழர் அறிவுக்கும், அறிவாளிக்கும் தனித்த பாத்திரத்தைக் கொடுக்கிறார், அறிவு வளர்ச்சிக்கான புறநிலைமைகளைத் தோழர் ஏற்காததால் அறிவாளியை முக்கியப் பாத்திரமாக்குகிறார். இந்தப் போக்கு எட்டாம் தொடரில் மார்க்ஸ்: இயங்கும் பொருள் என்பதில் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். அகம் புறமாக மாறுகிறது, புறம் அகமாக மாறுகிறது என்று மார்க்சியத்தைத் தலைகீழாக விளக்குகிறார். புறநிலைமைகளே மனிதனின் செயற்பாட்டைத் தீர்மானிக்கிறது என்பதை ஏற்காமல், “மனிதர்களும் புற உலகும் சந்தித்துப் பொருத்திக் கொள்ளும் செயல்பாட்டில், மனிதர்களின் தேவைகளும் திறன்களும் புற உலகினுள் செலுத்தப்படுகின்றன. இதுவே அகம் புறமாதல். அதுபோலப் புற உலகின் வாய்ப்புகளும் பண்புகளும் மனிதர்களால் அறியப்பட்டு, உணரப்பட்டு அவை அவர்களின் திட்டமிடுதல்களோடு சேர்க்கப்படுகின்றன.” என்கிறார்.

மனிதர்களின் தேவை என்பது புறநிலையால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதற்கு மாறாக, தேவையை மனிதனின் அகநிலைப் போக்காகவே தோழர் கருதுகிறார். அடித்தளம் மேற்கட்டமைப்பு ஆகியவற்றின் இடைச்செயலில் அடித்தளம் தீர்மானகரமாகவும், நிர்ணயகரமாகவும் இருக்கிறது, மேற்கட்டமைபின் செயற்பாடு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது.

அடித்தளம் மேற்கட்டமைப்புக்கு இடையேயான செயற்பாடு பரஸ்பர வினைபுரிதல் என்ற புரிதல் பொருள்முதல்வாதத்தையும் கருத்துமுதல்வாததையும் மறுத்த கருத்துமுதல்வாதமே ஆகும். எப்படி என்றால் அடித்தளம் தீர்மானிக்கிறது என்றால் அது பொருள்முதல்வாதம், மேற்கட்டமைப்புத் தீர்மானிக்கிறது என்றால் கருத்துமுதல்வாதம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்டது என்ற ஒன்று கிடையாது, அப்படிச் செய்கிற முயற்சி கருத்துமுதல்வாதத்திற்கே இட்டுச் செல்லும். பரஸ்பர வினைபுரிதல் என்பது கருத்துமுதல்வாதமேயாகும்.

“மனிதர்கள் தங்களுடைய வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் தங்கள் விருப்பத்திற்கேற்ப அதை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை, தாங்களே தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்றபடி இல்லாமல் கடந்த காலத்திலிருந்து கைமாற்றிக் கொடுக்கப்பட்ட, தயாராயுள்ள சூழ்நிலைமைகளுக்கு, தாங்கள் நேரடியாகச் சந்திக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்பவே வரலாற்றை உருவாக்குகிறார்கள்.”  
(லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்)

என்று தான் மார்க்ஸ் கூறியுள்ளார். புறநிலையின் எல்லையில் இருந்தே மனிதர்கள் செயற்படுகின்றனர் என்பதற்கு மாறாக, மனிதனின் திறத்தாலும் தேவையாலும் தீர்மானிக்கப்படுவதாகத் தோழர் கருதுகிறர். மனிதனின் தேவை புறநிலையினால் நிர்ணயிக்கப்படுகிறது. அவசியத்தை அறிந்தவனே சுதந்திர மனிதனாகிறான் என்றால் புறநிலைமைகளே அவசியமானது அதனை அறிந்தவன் சுதந்திர மனிதன்.

மனிதனின் குறிக்கோள்கள் பொருளாதார நிலைமைகளான புறநிலையில் இருந்து வருவதை ஸ்டாலின் விளக்கியிருக்கிறார்.

“பொருளாதார நிலைமைகள் முதலில் மாற்றமடைந்து, அதற்கு ஏற்றதான மாற்றம் மனித மூளைகளின் பின்னர் நடந்தேறுகிறது. அப்படியனால், குறிப்பிட்ட இலட்சியம் மக்களிடையே தோன்றுவதற்கான அடிப்படையை அவர்களுடைய மனங்களிலோ, அவர்களுடைய கற்பனைகளிலோ தேடக்கூடாது, ஆனால் இதற்கு மாறாக, மனிதர்களின் பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சிகளில்தான் காண வேண்டும். எந்த இலட்சியம் பொருளாதாரச் சூழ்நிலைகள் பற்றிய ஆய்வை அடிப்டையாகக் கொண்டிருக்கிறதோ, அந்த இலட்சியம் தான் சிறப்பானதும் ஏற்கக்கூடியதுமாகும். எந்த இலட்சியங்கள் பொருளாதாரச் சூழ்நிலைகளை அலட்சியம் செய்து, அவற்றை அடிப்படையாகக் கொள்ளாதவையோ, அவை பயனற்றவையும் ஏற்கத்தகாதவையும் ஆகும்.”
(அராஜகவாதமா? சோஷலிசமா?)

மார்க்சியவாதியின் குறிக்கோள்கள் ஏற்கத்தக்கவையாக இருப்பதற்கு அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் விஞ்ஞானத் தன்மையே காரணமாகும். புறநிலைமைகளை அலட்சியப்படுத்துகிற போக்கை மார்க்சியர்கள் பயனற்றவையாகவும் ஏற்கத்தகாதவையாகவும் கருதுகின்றனர்.

மார்க்சின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன அவற்றில் முதன்மையானது இருண்டு என்று எங்கெல்ஸ் கூறுகிறார்.

“வரலாறு பற்றிய பொருள்முதல்வாத கருத்தோட்டம், உபரிமதிப்பு மூலம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் ரகசியம் புலப்படுத்தப்படல் ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாகச் சோஷலிசம் ஒரு விஞ்ஞானமாயிற்று.”
(கற்பனாவத சோஷலிசமூம் விஞ்ஞானச் சோஷலிசமும்)

தோழர் ந.முத்துமோகன் இந்த இருகண்டுபிடிப்புகளில் உபரிமதிப்பை அப்படியே ஏற்றுக் கொள்கிறார், வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறார். கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் மறுக்கிறார், மறுப்பதால் அதனைத் தமக்கு ஏற்றால் போல் திரித்து விவரிக்கிறார்.

மார்க்ஸ் வழிவந்த கம்யூனிஸ்டுகள், மார்க்சின் மாபெரும் இரு கண்டுபிடிப்புகளைப் போற்றுவோம் அதனைப் பின்பற்றுவோம்