Tuesday 10 December 2019

புதிய பாதையினரின் வர்க்க சார்பற்றப் பார்வை


புதிய பாதையினர் தங்களது ஆவணமாகக் கருதிக் கொண்டிருக்கின்றதை மனப்பாடம் செய்து அப்படி முகநூலில் கக்கிக் கொண்டிருக்கின்றனர். அதன் மீதான விமர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லை. அனைத்தும் மாறும் என்ற மார்க்சிய  கருத்தைத் தவிர மார்க்சிய அடிப்படைகளை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மார்க்சிய உள்ளடக்கததைப் புரிந்து கொள்ளாமல், உள்ளடக்கத்தால் அவ்வப்போது எடுத்த முடிவுகளை மார்க்சியமாகக் கருதிக் கொண்டு பேசி வருகின்றனர்.

மார்க்சின் கண்டபிடிப்புகளில் இரண்டை முக்கியமாக எங்கெல்ஸ் கருதுவார், அவற்றில் ஒன்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டம்,  உபரி மதிப்பு மூலம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் இரகசியம் வெளிப்படுத்தப்படல் ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாக சோஷலிசம் ஒரு விஞ்ஞானமாயிற்று, இனி அடுத்தபடிச் செய்ய வேண்டியிருந்த பணி அதன் எல்லா விவரங்களையும் உறவுகளையும் வகுத்தமைத்திடுவதுதான்”
(கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்)

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் சுருக்கமாகக் கூறியதை பார்ப்போம்.

மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங் களிலிருந்து தனித்து நிற்பவையாகும். அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டடம் எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. 

மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை; அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது. வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதி லிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறி விடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.”

(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு- முன்னுரை)

 

இங்கே மார்க்ஸ் குறிப்பிடுகிற புரட்சிகரக் கண்ணோட்டத்தைப் புதிய பாதையினர் கைவிட்டனர். //பழைய சுதந்திர போட்டி முதலாளித்துவம், சில முக்கியமான பெருந்தொழில்களில் ஏகபோக முதலாளித்துவமாக மாறியது. அதன் மூலம், தற்காலிகமாக தங்களது தீவிர நெருக்கடிகளை தவிர்த்து, பிரஞ்சுப் புரட்சி போன்ற புரட்சிகள் எழாமல் தடுத்தது.// என்று புதிய பதையினர் மார்க்சிய வழிப்பட்ட புரட்சிக்கு இனிமேல் வழியில்லை என்ற முடிவுக்கு வருகின்றனர்.

சுதந்திர போட்டி முதலாளித்துவம் ஏகாதிபத்திய காலத்தில் முடிவுக்கு வந்தவுடன் மார்க்சியம் கூறுகிற பொருளாதார நெருக்கடி வராது என்பதே புதிய பாதையினரின் கருத்து. ஆனால் ஏகாதிபத்திய காலத்தில் இரண்டு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. ஒன்று 1910களில் மற்றொன்று 1930களில். இதை எல்லாம் புதிய பாதையினர் கணக்கில் கொள்ளவில்லை. லெனின் காலத்தில் கூறிய பழைய தவறான கூற்றையே புதிய பாதையனிர் இன்றும் கூறிவருக்கின்றனர். அதாவது சுதந்திரப் போட்டி முதலாளித்துவத்தோடு மார்க்சியம் கூறுகிற பொருளாதார நெருக்கடி முடிந்துவிட்டது. ஏகபோக முதலாளித்துவமான ஏகாதிபத்தியத்தில் நெருக்கடி வராது என்பதே புதிய பாதையினரின் கருத்து. இது புதிய கருத்தல்ல, லெனின் காலத்திலேயே கூறப்பட்ட பழைய கருத்து. அது லெனினால் மறுக்கப்பட்ட ஒன்று.

புதிய பாதையினர் சொல்வதை எதையும் படிக்க மாட்டார்கள், என்னோடு விவாதிக்க வேண்டும் என்றால் எனது கருத்துக்களை அவர்கள் தெரிந்திருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச புரிதல்கூட அவர்களிடம் இல்லை. எதைகூறினாலும் அதை வியாபாரமாகவே பார்க்கின்றனர். இது பற்றி எனது நூலில் எழுதியுள்ளேன் என்றால் உங்கள் நூலை விற்கப் பார்க்கிறீர்களா? என்ற கேள்வியே அவர்களிடம் இருந்து வருகிறது. எதையும் அறிந்து விமர்சிக்க அவர்கள் தயாராக இல்லை என்பதே உண்மை.

“லெனின் வாழ்வும் படைப்பும்” என்ற நூலில் இது பற்றி எழுதியிருக்கிறேன். அதில் இருக்கும் பகுதியை அப்படியே இங்கே பதிகிறேன்.

ஏகபோகத்திற்கு முன்பு, ஏராளமான தனியுடைமையாளர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பிரிந்து காணப்பட்ட சுதந்திர சரக்கு உற்பத்தியாளர்களுக்கு இடையே போட்டி நிலவியது. சமூகத்தில் ஒரு சரக்கின் தேவையினை கணக்கிட முடியாமல் இருந்தனர். பொதுவான சந்தையின் தேவையை முன்வைத்து தொடர்பற்ற பல்வேறு தனித்தனி உற்பத்தியாளர்கள் சரக்கினை உற்பத்தி செய்தனர். அதனால் உற்பத்தியில் அராஜகம் காணப்பட்டது.

இந்தத் தடையில்லா முதலாளித்துவம் தவிர்க்க முடியாதவகையில் உற்பத்தியின் ஒன்றுகுவிப்பை நோக்கியும், இந்த ஒன்றுகுவிப்பு ஒரு குறிப்பிட்டக் கட்டத்தில் ஏகபோகத்திற்கும் இட்டுச் செல்கிறது. இதனை மார்க்ஸ் தமது மூலதன நூலில் தெரிவித்துள்ளார்.

“..முதலாளித்துவ பொருளுற்பத்தியின் வளர்ச்சியைத் தொடர்ந்து, ஒவ்வொரு தனிப்பட்ட உற்பத்தி நிகழ்முறையின் அளவீதமும் அத்துடன், முன்னீடு செய்ய வேண்டிய மூலதனத்தின் குறைந்தபட்ச அளவும் பெருகிச் செல்வதால், தொழில்துறை முதலாளி புரியும் பணியை தனியாகவோ கூட்டாகவோ செயல்படக் கூடிய பெரும்பெரும் பண முதலாளிகளின் ஏகபோகமாக மேலும் மேலும் மாறிச்செல்கிற ஏனைய நிலைமைகளோடு இதுவும் சேர்ந்து கொள்கிறது”18

இதனைப் புரிந்து கொள்ள முடியாத, அல்லது படித்தறியாத பல பேர்கள், தடையற்ற போட்டிக் காலத்து முதலாளித்துவத்தைப் பற்றி பேசிய மார்க்சின் பொருளாதாரம் பொய்த்துவிட்டது என்று கூக்குரல் எழுப்புகின்றனர். இதனை லெனின் மறுத்துரைக்கிறார்.

“அரைநூற்றாண்டுக்கு முன்னர், மார்க்ஸ் மூலதனத்தை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது, தடையற்ற போட்டி “இயற்கை விதியாக” மிகப் பெரும்பாலான பொருளிலாளர்களுக்குத் தோன்றியது. தடையற்ற போட்டி உற்பத்தியின் ஒன்று குவிப்பைத் தோற்றுவிக்கிறது என்றும், இந்த ஒன்றுகுவிப்பு அதன் வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஏகபோகத்திற்கு இட்டுச்செல்கிறது என்றும், முதலாளித்துவத்தைப் பற்றிய தத்துவார்த்த, வரலாற்றுப் பகுத்தாய்வின் வாயிலாக நிரூபித்த மார்க்சின் நூலை, அதிகாரப்பூர்வமான விஞ்ஞானமானது கவனியாது மௌனம் சாதிக்கும் சதியின் மூலம் அழித்துவிட முயற்சி செய்தது. இன்று ஏகபோகம் நடைமுறை உண்மை ஆகிவிட்டது”19

தடையற்ற போட்டி தவிர்க்கப்பட்டு திட்டமிட்ட உற்பத்தி ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டதால், பாட்டாளி வர்க்க சோஷலிசப் புரட்சிக் கோட்பாடு தவறாகிப்போய்விட்டதாக பெர்ன்ஷ்டைன் போன்றோர்கள் கூறத் தொடங்கினர். தடையற்ற போட்டி முதலாளித்துவம் மறைந்து போனது, திட்டமிடல் உற்பத்தி முறையான ஏகாதிபத்தியம் தோன்றியது என்று லெனின் கூறியது உண்மை தான். ஆனால் இது முதலாளித்துவ முரண்பாடுகளை நீக்கிவிட்டதாக அவர் கூறவில்லை.  லெனின் தெளிவாக ஏகாதிபத்திய பொருளாதார உறவின் சிக்கலை நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

“முதலாளித்துவமானது அதன் ஏகபோகக் கட்டத்தில், உற்பத்தியானது மிக விரிவான அளவில் சமூகமயமாக்கப்படுவதற்கு இட்டுச் செல்கிறது, முதலாளிகளை, அவர்களது விருப்பத்துக்கும் உணர்வுக்கும் மாறாக, ஒரு வகைப் புதிய சமூக முறையினுள், அறவே தடையில்லாப் போட்டியிலிருந்து முற்றும் சமூகமயமாக்கப்படுதலுக்கு மாறிச்செல்வதற்கான இடைநிலையாகிய ஒன்றினுள் இழுத்துச் செல்கிறது எனலாம்.

உற்பத்தியானது சமூகமயமாகிறது, ஆனால் சுவீகரிப்பு தொடர்ந்து தனியார் வசமே உள்ளது. சமூக உற்பத்திச் சாதனங்கள் தொடர்ந்து ஒரு சிலரது தனிச் சொத்தாகவே இருக்கின்றன. சம்பிரதாய முறையில் அங்கீகரிக்கப்படும் தடையில்லாப் போட்டியின் பொதுவான கட்டமைப்பு நீடிக்கிறது, அதே போது ஏகபோகக்காரர்கள் ஒருசிலர் ஏனைய மக்கள் தொகையோரின் மீது செலுத்தும் ஒடுக்குமுறை ஆதிக்கம் நூறு மடங்கு மேலும் கடுமையானதாய், அழுத்துவதாய சகிக்க முடியாததாய் ஆகிறது.”20

இது முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத, தீர்க்க முடியாத சிக்கலாகும். எந்த காணரங்கள் சோஷலிசப் புரட்சிக்கு இட்டுச்செல்லும் என்று மார்க்ஸ் கூறினாரோ அதே காரணங்கள் ஏகாதிபத்தியத்தில் தீவிரமடைந்துள்ளது.

சொந்த நாட்டில் போட்டி போட்டுக் கொண்டிருந்த முதலாளித்துவம் ஏகபோகமாக வளர்ச்சி பெற்ற காலத்தில், அது சர்வதேச அளவில் தமது போட்டியை தொடர்கிறது. இந்தப் போராட்டம் பொருளாதாரப் போராட்டத்துடன் நிறுத்திக் கொள்வதில்லை.
      
“பொருளாதார வழியில் இந்த நிகழ்ச்சிப்போக்கின் மிக முக்கிய அம்சம், தடையில்லா முதலாளித்துவப் போட்டி அகற்றப்பட்டு அதனிடத்தில் முதலாளித்துவ ஏகபோகம் எழுந்ததுதான். தடையில்லாப் போட்டிதான், முதலாளித்துவத்துக்கும் பொதுவாகப் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்திக்கும் உரிய அடிப்படை இயல்பு, ஏகபோகம் தடையில்லாப் போட்டிக்கு நேர் எதிரானதாகும். ஆனால் தடையில்லாப் போட்டி நம் கண்முன்னால் ஏகபோகமாக மாறக் கண்டோம், பெருவீதத் தொழில் துறையைத் தோற்றுவித்துச் சிறு தொழிலை நெரித்து வெளியேற்றவும், பெருவீதத் தொழில் துறையின் இடத்தில் மேலும் பெரியதான பெருவீதத் தொழில் துறை அமரவும் கண்டோம்.

இவ்விதம் உற்பத்தியின், மூலதனத்தின் ஒன்று குவிப்பு அந்த அளவுக்கு அதிகமாக்கப்பட்டு அதிலிருந்து ஏகபோகம் வளர்ந்தெழுந்துள்ளது, தொடர்ந்து வளர்ந்தெழுந்து வருகிறது, கார்ட்டல்களும் சிண்டிக்கேட்டுகளும் டிரஸ்டுகளும் இவற்றுடன் ஒன்றுகலந்துவிடும் பத்துப் பதினைந்து வங்கிகளின், நூறு கோடிக் கணக்கிலான தொகைகளைத் தம் பிடியில் கொண்டு காரியமாற்றும் வங்கிகளின் மூலதனமுமாகிய ஏகபோகமாகும் இது. தடையில்லாப் போட்டியிலிருந்து வளர்ந்தெழுந்த இந்த ஏகபோகங்கள் அதேபோது போட்டியை அகற்றிவிடவில்லை, போட்டிக்கு மேலும் அதனுடன் கூடவும் நிலவுகின்றன, இவ்வழியில் மிகுந்த கடுமையும் உக்கிரமும் வாய்ந்த மிகப் பல முரண்பாடுகளையும் பூசல்களையும் மோதல்களையும் தோற்றுவிக்கின்றன.”21

பெர்ன்ஷ்டைன் போன்ற திருத்தல்வாதிகள் முதலாளித்துவம் ஏகபோகமாக வளர்ச்சியடைந்துள்ளதால், பழைய முதலாளித்துவத்தின் சில முரண்பாடுகள் நீக்கப்பட்டுவிட்டன, மீதமிருப்பவையும் தீவிரமானதாக இல்லை, அதனால் சமூக மாற்றம் என்பது தேவையற்றது முதலாளித்துவத்துக்குள்ளேயே சீர்திருத்தம் போதுமானது என்று கூறினர்.

லெனின் இதனை முற்றாக மறுக்கிறார். ஏகபோகத்தில் முரண்முற்றவே செய்கிறது.

“இது முதலாளித்துவ ஏகபோகமாகும், அதாவது முதலாளித்துவத்தில் இருந்து தோன்றி, முதலாளித்துவத்துக்கும் பரிவர்த்தனைச் சரக்கு உற்பத்திக்கும் போட்டிக்குமான பொதுவான சூழலில், இந்தப் பொதுச் சூழலுக்கு நிரந்தரமான, தீர்வுகாண முடியாத முரண்பாடான ஒன்றாய் நிலவும் ஏகபோகமாகும். ஆனபோதிலும், எல்லாவிதமான ஏகபோகத்தையும் போலவே இதுவும் தவிர்க்க முடியாதபடித் தேக்கத்துக்கும் அழுகலுக்குமான போக்கை உண்டாக்குகிறது.
மெய்தான், முதலாளித்துவத்தில் ஏகபோகத்தால் முழுமையாகவும் மிகநெடுங் காலத்துக்கும் போட்டியினை உலகச் சந்தையிலிருந்து நீக்கிவிட முடியாதுதான்”22

ஏகபோகங்களாகச் செயற்படும் இந்த ஏகாதிபத்தியங்கள் தங்களுக்குள் பிரதேச பங்கீட்டுக்கு போரினை தோற்றுவிக்கின்றன. இதில் தான் இன்றைய போரின் பொருளாதார அடித்தளம் அமைந்துள்ளது.

“ஒரு புறத்தில் உற்பத்திச் சத்திகள் வளர்ச்சிக்கும் மூலதனத்திரட்டலுக்கும், மறு புறத்தில் நிதி மூலதனத்திற்காகக் காலனிகள், “செல்வாக்கு மண்டலங்களின்” பங்கீட்டுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வைச் சரிசெய்வதற்கு போரைத் தவிர முதலாளித்துவத்தில் வேறு வழி ஏதும் உண்டா? என்பதே கேள்வி.”23

ஏகாதிபத்தியக் காலத்தில் உடல் உழைப்பு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியின் காரணமாய் உடலுழைப்பு அல்லாத தொழில்நுட்பம் பயின்ற மூளை உழைப்பாளர்கள் பெருகிவருகின்றனர். இதன்மூலம் மார்க்சியம் கூறிவருகிற தொழிலாளர்களின் புரட்சி இன்றைக்கு சாத்தியம் இல்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.

மார்க்சிய அடிப்படைகளை எளிமைப்படுத்தி புரிந்து கொண்டதால் ஏற்பட்ட தவறான கருத்தே இது. மார்க்ஸ் உடலுழைப்புத் தொழிலாளர்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. அன்றைய புதிய நவீனஇயந்திரத்தை தொழிற்சாலையில் புகுத்தும்போது அந்த இயந்திரத்தை இயக்குகிற நேரடி உடலுழைப்புக் குறைந்த தொழில்நுட்ப தொழிலாளர்கள் தோன்றியதையும் அவர்கள் உடலுழைப்புத் தொழிலாளர்களிடம் இருந்து வேறுபட்டிருப்பதையும் கூறியிருக்கின்றார்.

மார்க்ஸ் தாம் எழுதிய மூலதன முதல் தொகுதியில் ஒப்பீட்டு உபரி-மதிப்பின் உற்பத்தி என்ற பகுதியில், இயந்திர சாதனமும் நவீனத் தொழில்துறையும் என்ற அத்தியாயத்தில் எழுதியிருக்கிறார். தொழிற்புரட்சியைத் தொடர்ந்து தானியங்கி தொழிற்சாலை (automatic factory) தோன்றிடும் போது தொழில்நுட்பத்தைக் கையாள்கிற புதியவகை உயரிய தொழிலாளர் பிரிவு (superior class of workmen) உருவாவதை மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.
“மேம்பட்ட தொழிலாளர் பிரிவு இது, இவர்களில் சிலர் விஞ்ஞானக் கல்வி கற்றவர்கள், மற்றவர்கள் ஒரு தொழிலுக்கு என்றே வளர்க்கப்பட்டவர்கள், இந்தப் பிரிவு ஆலைத் தொழிலாளர் வர்க்கத்துடன் சேர்த்துக் கணக்கிடப்பட்டாலும், அதிலிருந்து வேறுபட்டதாகும். இந்த உழைப்புப் பிரிவினை முற்றிலும் தொழில்நுட்ப வழிப்பட்டது.
தொழிலாளியைக் குழந்தைப் பருவம் முதற்கொண்டே நுணுக்க இயந்திரம் ஒன்றின் பகுதியாக மாற்றியமைத்திடும் விதத்தில் இயந்திர சாதனம் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. இவ்விதம், அவரது மறுவுற்பத்தியின் செலவுகள் கணிசமாகக் குறைக்கப்படுவது மட்டுமல்ல, வேறு வழியின்றி தொழிற்சாலை முழுவதையும், அதாவது முதலாளிகளையும் அவர் சார்ந்து வாழ வேண்டிய நிலை அதே நேரத்தில் முழுமையாக்கப் படுகிறது.

வேறெங்கும் போலவே இங்கும் சமூக உற்பத்தி நிகழ்முறையினது மேம்பாட்டின் விளைவாய் அதிகரித்த உற்பத்தித் திறனுக்கும், அம்மேம்பாட்டை முதலாளி பயன்படுத்திச் சுரண்டுவதன் விளைவாய் அதிகரித்த உற்பத்தித் திறனுக்கும் இடையில் நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

கைத்தொழில்களிலும், பட்டறைத் தொழிலிலும் தொழிலாளி கருவியைப் பயன்படுத்துகிறார், தொழிற்சாலையில் இயந்திரம் அவரைப் பயன்படுத்துகிறது. அங்கே உழைப்புக் கருவியின் இயக்கங்கள் அவரிடம் இருந்து தொடங்குகிறது, இங்கே இயந்திரத்தின் இயக்கங்களை அவர் பின்தொடர வேண்டும்.

பட்டறைத் தொழிலில் தொழிலாளர்கள் உயிருள்ள இயங்கமைப்பின் அங்கங்களாவர். தொழிற்சாலையில் உயிரற்ற இயங்கமைப்பு தொழிலாளியைச் சாராமல் சுயேச்சையாய் இருப்பதையும், அதற்குத் தொழிலாளி உயிருள்ள ஒட்டுவால் ஆகிவிடுவதையும் காண்கிறோம்.”24

இயந்திரத்தின் ஒட்டுவாலாய் போன தொழில்நுட்ப தொழிலாளர்களின் வேதனைகளையும் இங்கே மார்க்ஸ் தொகுத்துள்ளார். ஆக, தமது உற்பத்திச் சக்தியை விற்கக்கூடிய நிலையில், முதலாளியின் மூலதனத்தை சார்ந்து வாழக்கூடிய சுரண்டப்படும் இந்த தொழிற்நுட்ப தொழிலாளியும் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. இதன் தொடர்ச்சியாக தற்கால நவீன உற்பத்தி முறைக்கு வரும் போது இன்றைய பாட்டாளி தனிச் தேர்ச்சிபெற்ற, அதற்கு சான்றிதழ் பெற்ற, மூளை உழைப்பைச் செலுத்தும் தொழிலாளியாக இருக்கிறார்.

தற்காலத்திய தொழிற்சாலைகள் அதிநவீனமாக மாறிவிட்டது, இங்கே முழுவதும் தானியங்கி இயந்திரங்களையும், கணிப்பொறி இயந்திர மனிதனைக் (computer robot) கொண்டும் இயக்கப்படுகிறது. இதனை இயக்குகின்ற தொழில்நுட்ப தொழிலாளர்கள் தங்களது உடலைவிட மூளையை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதே போல் மூளை உழைப்பை செலுத்துகின்ற தகவல் தொழில்நுட்ப துறையில் பணிசெய்பவர்களில் பலபிரிவுகள் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே ஆவர். உடலுழைப்பைவிட மூளை உழைப்பைச் செலுத்துபவர்களுக்கு இன்றைய நிலையில் அதிகம் ஊதியம் கிடைக்கிறது என்பது உண்மையே. இவர்களிடம் இருந்துதான் மேட்டுக்குடி பாட்டாளிகள் தோன்றுகின்றனர்.

மேட்டுக்குடி பாட்டாளிகளின் மேட்டுக்குடி சிந்தனைகள் எல்லாம் முதலாளித்துவத்தின் செழுமைக் காலத்தில் மட்டும் தான் காணப்படும், தொடர்ந்து வரக்கூடிய பொருளாதார நெருக்கடியால் இவர்களும் நெருக்குதலுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் தங்களது பழைய வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாது என அறிந்திடும்போது இவர்களின் மேட்டுக்குடி சிந்தனை தவிடுபொடியாகிவிடும்.

 “…தொழிலாளி வர்க்கத்தில் அதிக ஊதியம் பெறுவோரைக் கூட – இவ்வர்க்கத்தின் மேட்டுக்குடியினைரையும் கூட- தொழில்துறைக் கொந்தளிப்புகள் எப்படிப் பாதிக்கின்றன”25 என்று மேட்டுக்குடி தொழிலாளர்களும் பொருளாதார நெருக்கடியின் போது அவர்கள் எப்படியெல்லாம் பாதித்தனர் என்பதினைப் பற்றிய செய்தியேடுகளில் வந்துள்ள அறிக்கையை மார்க்ஸ் நமக்கு எடுத்துக் காட்டுகிறார். முதலாளித்துவ செழுமையின் போது கிடைக்கின்ற அதிக ஊதியம், பொருளாதார நெருக்கடியின் போது உறுதியற்று போகிறது. செய்திடும் வேலையும் உறுதியற்றது என்பதை உணர்ந்திட்ட மேட்டுக்குடி பாட்டாளிகள் மார்க்சியத்தின் பக்கம் இருப்பர். வரலாறு அறியாத நேர்காட்சி கண்ணோட்டம் கொண்டவர்கள் நெருக்கடியின் போதே மார்க்சியத்தை நாடுவர்.

இந்த மேட்டுக்குடியினரை தனிப் பிரிவான அடுக்காக கொள்ளமுடியாது, தொழிலாளி வர்க்கத்தினுடைய இயக்க வளர்ச்சியில் மாறிச்செல்வதையேக் குறிப்பதாகும் என்கிறார் லெனின்.

“நடுநிலைவாதிகளிடையில், சட்ட முறைமையின் நச்சு நோயால் அரிக்கப்பட்டுப் போனவர்களும், நாடாளுமன்றச் சூழலால் கெடுக்கப்பட்டவர்களுமான வழக்கமான பக்தர்களும், சொகுசான பதவிகளுக்கும் வசதியான வேலைகளுக்கும் பழக்கமாகி விட்ட அதிகார வர்க்கத்தாரும் உள்ளனர். வரலாற்று முறையிலும், பொருளாதார முறையிலும் பார்த்தால் அவர்கள் தனிப் பிரிவான ஓர் அடுக்கு அல்ல, ஆனால் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பழைய கட்டத்தில் இருந்து ஒரு மாறிச் செல்லுதலை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்” 26

பாட்டாளிகளும், பாட்டாளிகளை வழிநடத்தும் கம்யூனிஸ்டுகளும் சமூகப் போராளியாக செயற்பட வேண்டுமானால், நிலவும் சமூகத்தின் பிரச்சினைகளை வரலாற்று முறையில் ஆய்ந்து, அதற்கான முடிவை எடுக்க வேண்டும். இதற்கு மார்க்சியத்தில் காணப்படும் அரசியல் பொருளாதாரம், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அப்போதுதான் தமது அரசியல் செயற்பாட்டை விஞ்ஞான அடிப்படையில் அமைத்துக் கொள்ள முடியும்.

 லெனின் இந்த ஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் என்ற நூலில், அன்றைய போரின் அரசியலையும், முதலாளித்துவம் ஏகபோகமாக வளர்ச்சிபெற்று ஏகாதிபத்தியமாக நிலைபெற்றுள்ளதையும், இந்த புதிய நிலைமைகளுக்கு ஏற்ப கம்யூனிஸ்ட் கட்சி தங்களது செயற்தந்திரத்தை அமைத்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்தி எழுதியுள்ளார்.

உற்பத்தியில் தடையில்லாப் போட்டியே முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு அடிப்படையாய் இருந்தது, இன்று ஏகபோகம் தடையில்லாப் போட்டிக்கு நேர் எதிராக மாறிவிட்டது. இந்த ஏகபோகப் போக்கு ஏகாதிபத்தியமாக இன்று நிலைபெற்றுள்ளது.
:
“பொதுவாக முதலாளித்துவத்தின் அடிப்படைத் தன்மைக் குறிப்புகளின் வளர்ச்சியாகவும், நேரடியான தொடர்ச்சியாகவும் ஏகாதிபத்தியம் எழுந்தது. ஆனால் முதலாளித்துவம் அதன் வளர்ச்சியில் திட்டவட்டமான, மிக உயர்ந்த ஒரு கட்டத்தில்தான் முதலாளித்துவ ஏகாதிபத்தியமாக மாறியது, இக்கட்டத்தில்தான் முதலாளித்துவத்தின் சில அடிப்படைத் தன்மைக் குறிப்புகள் அவற்றின் நேர் எதிரானவையாக மாற ஆரம்பித்தன, முதலாளித்துவத்தில் இருந்து மேலானதொரு சமூக-பொருளாதார அமைப்புக்கு மாறிச்செல்வதற்கான காலத்தினுடைய இயல்புகள் உருப்பெற்று எழுந்து எல்லாத் துறைகளிலும் தம்மை வெளிக்காட்டிக் கொண்டன.
ஏகாதிபத்தியத்தைப் பற்றி இயன்ற அளவுக்கு சுருக்கமான இலக்கணம் அளிக்க வேண்டுமாயின், முதலாளித்துவத்தின் ஏகபோகக் கட்டமே ஏகாதிபத்தியம் என்று கூற வேண்டும்.”27

       முதலாளித்துவம் ஏகாதிபத்தியக் கட்டத்தை எட்டியதற்கான இலக்கணமாக ஐந்தை கூறுகிறார் லெனின்:-
“… ஏகாதிபத்தியத்தின் பின்வரும் ஐந்து அடிப்படை இயல்புகளும் உள்ளடங்குமாறு அதற்கு இலக்கணம் கூறியாக வேண்டும்: 1) பொருளாதாரம் வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றும் ஏகபோகங்களைத் தோற்றுவிக்கும்படியான உயர்ந்த கட்டத்துக்கு உற்பத்தியின், மூலதனத்தின் ஒன்றுகுவிப்பு வளர்ந்துவிடுதல், 2) வங்கி மூலதனம் தொழில்துறை மூலதனத்துடன் ஒன்றுகலத்தலும், இந்த “நிதி மூலதனத்தின்” அடிப்படையில் நிதியாதிக்கக் கும்பல் உருவாதல், 3) சரக்கு ஏற்றுமதியிலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டியதாகிய மூலதன ஏற்றுமதி தனி முக்கியத்துவம் பெறுதல், 4) சர்வதேச ஏகபோக முதலாளித்துவக் கூட்டுகள் உருவாகி, உலகையே இவை தமக்கிடையே பங்கிட்டுக்கொள்ளுதல், 5) மிகப் பெரிய முதலாளித்துவ அரசுகளிடையே அனைத்து உலகப் பரப்பும் பங்கிடப்படுதல் நிறைவுறுகிறது.

முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் எந்தக் கட்டத்தில் ஏகபோகங்கள், நிதிமூலதனம் ஆகியவற்றின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுகிறதோ, மூலதன ஏற்றுமதி முனைப்பான முக்கியத்துவம் பெற்றுவிட்டதோ, சர்வதேச டிரஸ்டுகளுக்கு இடையில் உலகம் பங்கிடப்படுவது தொடங்கியுள்ளதோ, உலகின் நிலப்பரப்பு அனைத்தும் மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளுக்கு இடையே பங்கிடப்படுவது நிறைவு பெற்றுவிட்டதோ, அக்கட்டத்திலான முதலாளித்துவமே ஏகாதிபத்தியம்.” 28

ஏகாதிபத்தியத்தின் அடுத்த நடவடிக்கையாக, பிற ஏகாதிபத்தியம் கைப்பற்றிய பிரதேசங்களை கைப்பற்றுவதாகும் அதாவது மறுபங்கீடு செய்வதாகும். இது வெறும் பிரதேசங்களை பிடிப்பதாக மட்டும் இல்லாது பிற ஏகாதிபத்தியத்தின் மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கும் ஆகும். மேலும், அதிக எண்ணிக்கையில் சிறிய அல்லது பலவீனமான தேசங்களைச் சுரண்டுகிற ஏகாதிபத்தியத்தை புல்லுருவித்தனமானதாகவும், அழுகிவரும் நிலையினதாவும் நிர்ணயிக்க வேண்டிவருவதாக, லெனின் கூறுகிறார்.

“ஏகபோகங்கள், ஆதிக்கக் கும்பல், சுதந்திரத்திற்காக அல்லாமல் ஆதிக்கத்துக்கான முயற்சிகள், ஒருசில மிகுந்த செல்வந்த அல்லது மிகுந்த வலிமையான தேசங்கள் மேன்மேலும் அதிக எண்ணிக்கையிலான சிறிய அல்லது பலவீனமான தேசங்களைச் சுரண்டுதல்- இவை எல்லாம், ஏகாதிபத்தியத்தின் தனிப்பட்ட தன்மைக் குறிப்பான இயல்புகளை- புல்லுருவித்தனமான அல்லது அழுகிவரும் முதலாளித்துவமாக ஏகாதிபத்தியத்துக்கு இலக்கணம் கூறும்படி நம்மை நிர்பந்திக்கும் அந்த இயல்புகளை- தோற்றுவித்திருக்கின்றன.” 29

உற்பத்திச் சக்திகள் சமூகமயமாகிவிட்ட நிலையில் இந்த புல்லுருவித்தனமான ஏகாதிபத்தியம் அழுகிவிழ வேண்டியநிலையில் இருக்கிறது என்று புரட்சிக்கான புறநிலை காணப்படுவதாக லெனின் இந்நூலில் கூறியிருக்கிறார். ஆனால் அகநிலையாக உலக கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பப் போக்கினாலும் அதன் புரட்சிகரப் போர்குணம் தேசியவெறியாக மாறிப் போனதாலும் இந்த செயற்கைத் தன்மையால் ஏகாதிபத்தியம் தூக்கியெறியப்படுவது தாமதம் ஆகலாம். சமூகப் புரட்சிக்கான புறநிலையாக அடித்தளம் வளர்ச்சி பெற்றிருந்தாலும், மேற்கட்டமைப்பின் சந்தப்பவாதப் போக்கினால் புரட்சிகர வாய்ப்பு தவறிப் போகலாம். இருந்தாலும் இறுதியில் ஏகாதிபத்தியம் தூக்கியெறியப்படுவது உறுதி என்கிறார் லெனின்.

“…உற்பத்தியின் சமூகமயமாதலையே காண்கிறோம் என்பதும், உள்ளடக்கத்துக்கு இனி ஒவ்வாத மேலோடாய் தனியார் பொருளாதார உறவுகளுக்கு, தனியார் சொத்துறவுகளும் அமைந்திருக்கின்றன, இந்த மேலோடு அகற்றப்படுவது செயற்கையான முறையில் தாமதப்படுத்தப்படுமாயின் தவிர்க்க முடியாத முறையில் இந்த மேலோடு அழுகியே செல்லும், அழுகிய நிலையில் ஓரளவு நீண்ட காலத்துக்கு இந்த மேலோடு இருந்து வரலாம் (படுமோசமான நிலைமையே ஏற்பட்டு, சந்தர்ப்பவாதச் சீழ்க்கட்டி நீக்கப்பட நீண்ட காலமாகிவிடுமாயின்) என்ற போதிலும் தவிர்க்க முடியாதபடி இம்மேலோடு எப்படியும் அகற்றப்பட்டு விடும் என்பதும் தெளிவாகவே விளங்குகிறது.” 30

ஏகாதிபத்தியக் காலக்கட்டத்தின் புறநிலைமைகளையும் அகநிலைமைகளையும் கணக்கில் கொண்டு லெனின் மார்க்சியப் புரட்சிகர போதனையை விரிவுபடுத்தினார். சோஷலிசப் புரட்சிக்குத் தேவையான பொருளாயத சக்தியான புறநிலைமைகள் பக்குவப்பட்டிருக்கின்றன. மூலதனத்தின் தொடர் ஒடுக்குமுறையால் பாட்டாளி வர்க்கமும் ஒன்று திரண்டு காணப்படுகிறது. காலனிய நாடுகளின் விடுதலைப் போராட்டமும் தீவிரம் கண்டுள்ளது. வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகளில் சோஷலிசப் புரட்சிக்கான சூழல் தோன்றியிருந்தது, இந்தச் சூழ்நிலையை புரட்சியாக மாற்ற வேண்டிய அகநிலைச் சக்திகள் செயலில் இறங்க வேண்டும். ஆனால் போல்ஷிவிக்குகளின் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர மேலைநாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் தாய்நாட்டின் விடுதலை என்று சந்தர்ப்வாதமாக சுரண்டும் வர்க்கத்தோடு சேர்ந்துகொண்டன. இந்நிலையில் லெனின் புரட்சி பற்றிய மார்க்சியக் கோட்பாட்டை புறநிலைக்கு ஏற்ப மாற்றினார்.

வளர்ச்சி பெற்ற அனைத்து நாடுகளில் அல்லது பெரும்பான்மையான நாடுகளில் சோஷலிசப் புரட்சி ஏற்படும் என்று இதுவரை மார்க்சியவாதிகள் கருதிவந்தனர். லெனினும் இதே கருத்தையே கொண்டிருந்தார். வளர்ச்சியடைந்த நாடுகளில் முதலாளித்துவத்தின் முதிர்ச்சி இந்த முடிவை எடுக்க வைத்தது என்பது உண்மையே. ஆனால் இன்றைய நிலையில் ஏகாதிபத்தியமாக சீரற்ற வளர்ச்சியின் விளைவாக ஏகாதிபத்தியத்தின் சங்கிலித் தொடரில் பலவீனமான கண்ணியில் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று லெனின் முடிவெடுத்தார். அதாவது ஒரு தனிநாட்டில் புரட்சி ஏற்படுத்தி அதன் வெற்றியின் தொடர்ச்சியாக பிறநாடுகளில் புரட்சி வெடிக்கும் என்று விளக்கினார்.
(லெனின் வாழ்வும் படைப்பும்- அ.கா.ஈஸ்வரன்)

ஏகாதிபத்திய காலகட்டத்திற்கான புரட்சியைப் பற்றிய லெனினது செயற்தந்திரத்தைப் (tactics) புரிந்து கொள்ள முடியாமல், பெர்ன்ஷ்டைன் போன்ற திருத்தல்வாதிகளின் கருத்தையே பின்பற்றுகின்றனர். “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற மார்க்சின் கோட்பாட்டைக் கைவிட்டதனால் அவர்களால் மார்க்சிய வழியில் அல்லாமல் திருத்தல்வாதிகளின் வழியில் செல்கின்றனர். இதற்கு “புதிய பாதை” என்று பெயர் வைத்துள்ளனர். உண்மையில் இது பழைய திருத்தல்வாதிகளின் பழைய பாதையே.

புதிய பாதையினரின் கருத்து அனைத்திற்குப் பதிலளிப்பதைவிடக் குறிப்பிட்ட ஒன்று பதிலளித்தாலே போதும். அது அனைத்திற்கு அடிப்படையாக அமையும் என்பதானால் ஒன்றை மட்டும் இங்கு விமர்சிக்கிறேன்.

புதிய பாதையினர்:- “இத்தகைய புதிய சமூகப் பொருளாதார அரசியல் சூழலில், மக்களே, மக்களின் மூலதனத்தின் மூலம், முதலாளிகளின்றி, மக்களுக்கான உற்பத்தி சாதனங்களை, மக்களின் கார்பரேட்கள் மூலம் உருவாக்கி வளர்ப்பது எனும், முதலாளித்துவ கார்பரேட்டுகளுக்கு எதிரான பொருளாதாரப் போராட்டம் தான், இன்றைய உண்மையான வர்க்கப் போராட்டம் என்று எங்கல்சே வந்துக் கூறினாலும் இவர்கள் உடனே ஏற்க மாட்டார்கள்.”

உடனடி பதிலாக ஏற்கெனவே கொடுத்துள்ளேன், அதனை முதலில் பார்ப்போம்.

//எங்கெல்ஸ் இயக்கவியல் பொருள்முதல்வாதி, அவர் இப்போது வந்து கூறினாலும் தமது கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டார். இறுதிகாலங்களில் எழுதிய கடிதங்களைப் படித்தால் அவர் எவ்வளவு உறுதியான இயக்கவியல் பொருள்முதல்வாதி என்பது தெரியும்.

வர்க்கப்போராட்டத்தைப் புறக்கணித்துவிட்டு முதலாளித்துவக் கார்பரேட்டுகளுக்கு எதிராக மக்கள் கார்பரேட்டை அமைக்க வேண்டும் என்று புதிய பாதையினர் கூறுகின்றனர். அரசு, காவல், ராணுவ, நீதித்துறை போன்ற பலம்பொருந்திய மேற்கட்டமைப்புகள் முதலாளித்துவக் கார்பரேட்டுகளின் தேவைக்கு உருவானவை, முதலாளித்துவ கார்ரேட்டுகளின் பக்கத்தில் மக்கள் கார்ரேட்டை அமைப்பதை அது சும்மா பார்த்துக் கொண்டிருக்குமா? இந்தப் பொருளாதாரப் போராட்டம் சாதிப்பதற்கு வாய்ப்பில்லை, மார்க்சிய வழியிலான வர்க்கப் போராட்டமே சரியானது. ஏன் என்றால் இது முதலாளித்துவ உற்பத்தியின் உள்முரண்பாட்டின் வெளிப்பாடு ஆகும்.

புறநிலைத் தன்மைகளை ஒதுக்கிவிட்டு அகநிலைத் தன்மையோடு பேசுகிற, மக்களின் கார்பரேட்கள் என்கிற இந்தப் புதிய பாதையினரின் பார்வை கற்பனைவயமானது அகநிலையானது, மார்க்சியத்திற்குப் புறம்பானது. இன்றைய ஏற்றத்தாழ்வான வர்க்க நிலையில் மார்க்சின் மார்க்சியமே வழிகாட்டி ஆகும். அதுவே விஞ்ஞானத் தன்மையானது.  விஞ்ஞான வழியே வெற்றி கிட்டும் பாதையாகும்.//

முதலாளித்துவக் கார்பரேட்டுகளுக்குத் தேவைப்படுகிற மேற்கட்டமைப்பான, சட்டங்கள், காவல்துறை, நீதி மன்றங்கள், அரசு போன்றவை இருக்கின்றன. இதற்குப் போட்டியாக “மக்கள் கார்பரேட்கள்” நடத்த புதிய பாதையினர் அழைப்பு விடுக்கின்றனர். முதலாளித்துவக் கார்பரேட்டுகள் தங்களுக்குள் உள்ள போட்டியை கையாள்வது போல் தங்களுக்கு எதிரான மக்கள் கார்ப்ரேட்டுகளை அணுக மாட்டார்கள், முதலாளித்துவக் கார்பரேட்டுகளுக்கு ஆதரவாக இருக்கின்ற மேற்கட்டமைப்புகளான அரசு, சட்டம், காவல்துறை போன்றவற்றால் மக்கள் கார்ப்ரேட்டை ஒடுக்குவர்கள். வர்க்கப் பார்வை உள்ள அனைவருக்கும் இது தெரிந்த ஒன்று. ஆனால் இந்தப் புதிய பாதையினர் இதனை அறிந்து கொள்ள முடியாமல் பொருளாதாரப் போராட்டத்தை முன்வைக்கின்றனர். அணுவாயுத காலத்தை முன்வைத்து வர்க்கப் போராட்டத்தை மறுதலிக்கின்றனர்.

முதலாளித்துவக் கார்பரேட்டுகளுக்கும் மக்கள் கார்பரேட்டுகளுக்கும் இடையே நடைபெறும் போட்டியில் மக்கள் கார்பரேட்டுகள் வெற்றி பெறுகிற ஒரு சூழ்நிலை வந்தால் அப்போது அணுவாயுதத்தை அவர்கள் கையாள மாட்டார்களா? என்ற கேள்வி புதிய பாதையினருக்கு எழவேயில்லை. இதற்குக் காரணம் புதிய பாதையினரின் வர்க்க சார்பற்றப் பார்வையே காரணமாகும்.

புதிய பாதையினரின் பொருளாதார நெருக்கடியை மறுதலிக்கின்ற போக்கு, லெனின் காலத்திய மிகவும் பழைய பார்வையே (பாதையே) ஆகும். “மார்க்சியமும் திருத்தல்வாதமும்” என்ற நூலில் இது பற்றி லெனின் எழுதியுள்ளார்.

அரசியல் பொருளாதாரத்துக்கு வருவோமாயின் இத்துறையில் திருத்தல்வாதிகளுடைய "திருத்தங்கள்" மேலும் அதிக விரிவாகவும் நுட்ப விவரங்கள் வழிப்பட்டனவாயும் இருந்ததை முதற்கண் குறிப்பிடுதல் வேண்டும். "பொருளாதார வளர்ச்சி பற்றிய புதிய விவரங்களைக்" கொண்டு பொதுமக்களை வயப்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டன. பெருவீத உற்பத்தி குவிவதும் சிறுவீத உற்பத்தியை அது அகற்றிடுவதும் தொழில் துறையிலும் மிகவும் மெதுவாகவே நடைபெறுகின்றன என்றும் கூறப்பட்டது. நெருக்கடிகள் இப்பொழுது அரிதாகியதோடு பலம் குறைந்துவிட்டதாகவும், இவற்றை அறவே நீக்கிவிடும் ஆற்றலைக் கார்ட்டல்களும் டிரஸ்டுகளும் மூலதனத்துக்கு அளித்திடுமென எதிர்பார்க்கலாம் என்பதாகவும் கூறப்பட்டது. முதலாளித்துவம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் "தகர்வு பற்றிய தத்துவம்", வர்க்கப் பகைமைகள் மேலும் மேலும் கடுமை குறைந்து தணிந்துவிடும் போக்கின் காரணத்தால் ஆதரமற்றதாகுமெனக் கூறப்பட்டது.
நெருக்கடிகள் கடந்த காலத்துக்குரியனவாகி விடவில்லை, செழிப்பைப் பின்தொடர்ந்து நெருக்கடி வருகிறது என்பதை யதார்த்த நிலைமைகள் மிக விரைவாகவே திருத்தல்வாதிகளுக்குத் தெளிவுபடுத்தின, குறிப்பிட்ட நெருக்கடிகளின் வடிவங்களும் வரிசைமுறையும் சித்திரமும் மாறினவேயன்றி நெருக்கடிகள் முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாய்த்தான் நிலைத்திருந்தன. கார்ட்டல்களும் டிரஸ்டுகளும் உற்பத்தியை ஒன்றுபடுத்திய அதேநேரத்தில் எல்லோருக்கும் கண்கூடாய்த் தெரியும்படியான முறையில் உற்பத்தியின் அராஜகத்தையும் பாட்டாளி வர்க்கத்தினுடைய வாழ்க்கைக் காப்புறுதியின்மையையும் மூலதனத்தின் ஒடுக்குமுறையையும் தீவிரப்படுத்தி இதன் மூலம் வர்க்கப் பகைமைகளை முன்பின் கண்டிராத அளவுக்குக் கடுமையாக்கின. முதலாளித்துவமானது அழிவை நோக்கி-தனிப்பட்ட அரசியல், பொருளாதார நெருக்கடிகளைக் குறிக்கும் பொருளிலும் முதலாளித்துவ அமைப்பு அனைத்தின் முழு அழிவைக் குறிக்கும் பொருளிலும் - விரைந்தோடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பாய் இதே புதிய பகாசுர டிரஸ்டுகளின் மூலம் மிகமிகத் துல்லியமாகவும் மிக மிகப் பெரிய அளவிலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

அண்மையில் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியும் ஐரோப்பா பூராவிலும் பயங்கரமாய் அதிகரித்திருக்கும் வேலையில்லாத் திண்டாட்டமும்-எக்கணமும் மூண்டுவிடும் நிலையிலுள்ள தொழில் துறை நெருக்கடியைப் பற்றிக் கூறவே வேண்டாம், பல அறிகுறிகள் இதனைச் சுட்டிக்காட்டு கின்றன -திருத்தல்வாதிகளுடைய அண்மைக் காலத்திய "தத்துவங்கள்'' திருத்தல்வாதிகளிடையேகூட பலரும் அடங்கலாய் எல்லோராலும் மறக்கப்பட்டுவிடும் நிலையை உண்டாக்கியுள்ளன. ஆனால் அறிவுஜீவிகளின் இந்த நிலையின்மை தொழிலாளி வர்க்கத்துக்கு அளித்துள்ள படிப்பினைகள் ஒருபோதும் மறக்கப்படலாகாது.

லெனினைப் போல் மாறுங்கட்டங்களை மார்க்சிய வழியில் அணுகமுடியாத புதிய பாதையினர். பெர்ன்ஷ்டைன் போன்ற திருத்தல்வாதிகளின் பாதையான பழைய பாதையையே பின்பற்றுகின்றனர். புதிய பாதையினரின் இந்த முடிவு வர்க்க சார்பற்ற பார்வையின் விளைவே ஆகும். புதிய பாதையினர் அணுகுண்டு பூச்சாண்டியைக் காட்டி வர்க்கப் பார்வையை மறைக்கின்றனர். மார்க்சியப் புரிதலற்றப் போக்கால், //ஏகாதிபத்தியங்கள் சமரசம் செய்து கொண்டு, சோசலிசத்தின் திட்டமிட்ட உற்பத்தி முறையை உள்வாங்கி, ஏகாதிபத்திய யுத்தங்களை தவிர்த்து புதிய பேராதிக்கங்களாக மாற முடியும் என்பது மார்க்சீய மூலவர்கள் யாரும் எதிர்பாராதது*6.// என்று கதைவிடுகின்றனர்.

சோசலிச திட்டமிட்ட உற்பத்தி முறைக்குத் தேவையான உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியைக் கணக்கில் கொள்ளாது சோசலிசத்தின் திட்டமிட்ட உற்பத்தி முறையை ஏகாதிபத்தியங்கள் உள்வாங்கிக் கொண்டதாகக் கருத்துரைக்கின்றனர்.

வர்க்க மற்ற பார்வையினால் பொருள்முதல்வாதக் கண்ணோட்டதைக் கைவிட்டு கருத்திலாகக் கருத்துமுதல்வாதப் பார்வையினால் முடிவுகளை எடுத்துள்ளனர். சோஷலிசத்திற்கான உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிய அடைதுள்ளது என்றால், சமூக உற்பத்திக்கும் தனிச்சொத்துடையிலான வினியோகத்திற்கும் உள்ள முரண்பாடு முற்றும் என்ற பொருளாதாரப் புரிதலற்று, புதிய பாதையினர் கருத்தியலாகவே கருத்துரைக்கின்றனர். மார்க்சியப் பொருளாதாரப் புரிதலற்றும், வர்க்க சார்பற்றும் பேசிகின்ற புதிய பாதையினரின் போக்கு தொழிலாளர் வர்க்கத்திற்கு எந்த வகையிலும் துணைபுரியாது. வர்க்கப் போராட்டத்தைப் புறக்கணித்த புதிய பாதையினரின் பொருளாதாரப் போராட்டம் நடைமுறை சாத்தியமற்றது.

எங்கெல்லாம் மார்க்சிய அடிப்படைகளுக்கு முதன்மை இடம் கொடுக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் புதிய பாதையினர், சாத்தியமற்ற தங்களது கருத்தை திணிக்கப் பார்க்கின்றனர். அவர்களின் அடிப்படை நோக்கம் மார்க்சிய அடிப்படைகளைச் சிதைப்பதே ஆகும்.

புதிய பாதையினர் போன்ற பல திருத்தல்வாதிகளின் போக்கை மறுதலித்து நடைமுறையில் மார்க்சியம் வெற்றியை சாதிக்கும். உழைக்கும் மக்களின் விடுதலை மார்க்ஸ், லெனின் ஆகியோர் கூறிய வழியிலே சென்றால் தான் கிட்டும். புதிய பாதையனிரைப் போல் மார்க்சையும் லெனினையும் கைவிடுவதால் கிடைக்காது.



Friday 8 November 2019

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் சமூக மாற்றமும்


(“மக்களால் முடியும் என்ற நம்பிக்கையோடு, ஒர் அரசியல் – மெய்யியல் இதழ் வெளிவந்துள்ளது. “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் - நிகழ்காலமும் என்ற தலைப்பில் அறிக்கையைப் பற்றி 13 பேரிடம் கட்டுரையைப் பெற்று நூலாக வெளியிட்டுள்ளனர். என்னுடைய கட்டுரையும் இதில் இடம் பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 05-01-2020 அன்று இக்கட்டுரைகளைப் பற்றியும், அறிக்கைப் பற்றியும் திறனாய்வுக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதழைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்:8939181491)


ஒரு கோட்பாடு நிகழ்காலத்தோடு இணைந்திருக்குமானால் அது உயிரோட்டத்துடன் இருக்கும். மார்க்சியக் கோட்பாடு இன்றும் உயிரோட்டத்துடன் இருக்கிறது என்றால் இன்றைய பிரச்சினைகளுக்கு அது வழிகாட்டுகிறது என்று பொருள். மார்க்சியத்தைச் சர்வரோக நிவாரணி என்று கூறலாமா? என்று கேட்டால், கூறமுடியாது என்றே மார்க்சியம் பதிலளிக்கிறது. அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வை “தயாராக” வைத்திருக்கிறதா? என்று கேட்டால் இல்லை, எந்தக் கோட்பாடும் அவ்வாறு இருக்க முடியாது என்றே மார்க்சியம் பதிலளிக்கிறது.

அப்படி என்றால், மார்க்சியம் மாற்றத்திற்கு உட்பட்டதா. ஆம் மார்க்சியம் மாற்றத்திற்கு உட்பட்டதே. லெனின் மார்க்சியத்தில் பலப்புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தார். அதனை மார்க்சியம் ஏற்றுக் கொண்டது. அந்தப் புதிய மாற்றம் ஏகாதிபத்திய காலக்கட்டத்திற்கு உரிய மார்க்சியமாக- லெனினியமாக உருவெடுத்தது. மார்க்சியத்தின் படைப்பாற்றலுக்கு (Creativity) லெனினே சிறந்த உதாராணம்.

      மார்க்சியப் படைப்பாற்றலில் சிறந்து விளங்கும் லெனின் மார்க்சியத்துக்கு எதிராக இரண்டைக் குறிப்பிடுகிறார். ஒன்று வறட்டுவாதம், மற்றொன்று திருத்தல்வாதம். மார்க்ஸ், எங்கெல்சோடு சேர்ந்து லெனினும் மார்க்சியத்தை வறட்டுவாதமாகக் கொள்வதை எதிர்த்தார். வறட்டுவாதிகள் முரண்பாடுகள் நிறைந்த முழுதளாவியதாக உள்ள வரலாற்று வளர்ச்சியைப் பற்றிய போதனையான இயக்கவியலை பலவீனப்படுத்துகிறார்கள். வரலாற்றில் ஏற்படும் ஒவ்வொரு புதிய திருப்பத்தை எதிர்கொள்ளும் மார்க்சியத்தின் தொடர்பை புறக்கணிக்கின்றனர்.

மாவேதுங் கூறுகிறார், மார்க்சிய-லெனினியம் எந்த வகையிலும் உண்மை பற்றிய முழு அறிவையும் அப்படியே திரட்டிக் கொடுத்துவிடவில்லை, அது நடைமுறை வாயிலாக உண்மையை அறிந்திடும் வழியை இடைவிடாமல் திறந்து விடுகிறது. மார்க்சிய அடிப்படைகள் எதிர்பாராத புதிய திருப்பங்களைச் சந்திப்பதற்கு நமக்கு வழிகாட்டுகிறது. திருத்தல்வாதிகள் புதிய நிலைமைகளைக் காரணம்காட்டி மார்க்சிய அடிப்படைகளைத் திரித்துரைக்கின்றனர்.

லெனின். வறட்டுவாத்தை எதிர்க்கும் போது, பொதுப்படையான, அடிப்படையான குறிக்கோள்களை இங்கே குறிப்பிடவில்லை, வர்க்கங்களிடையே நிலவும் அடிப்படை உறவு மாறாமல் இருக்கும் வரை வரலாற்றின் திருப்பங்களை ஒட்டி பொதுவான, அடிப்படையான குறிகோள்கள் மாறுவதில்லை என்றே கூறினார். இதனைத் திருத்தல்வாதிகள் கணக்கில் கொள்வதே இல்லை.

திருத்தல்வாதம் தோன்றுவதற்கு அந்தந்த நாட்டில் உள்ள, பொருளாதாரத்தின் பிற்பட்ட நிலை காரணமாக உள்ள வர்க்க வேர்களேயாகும். முதலாளித்துவ வளர்ச்சி காரணமாகக் குட்டி முதலாளித்துவப் பகுதியினரை ஓட்டாண்டியாக்கப்பட்டுப் பாட்டாளி வர்க்க அணிக்குத் தள்ளப்படுகிறார்கள். அதனால் மார்க்சியம் அல்லாத சோஷலிசம் இயல்பாகவே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் நுழைகிறது. நுழைவதைத் தவிர்க்க முடியாது, ஆனால் கட்சி அதனை எதிர்கொள்ளும் வகையில் சித்தாந்தத்தில் தெளிவுடனும், வலுவுடனும் இருக்க வேண்டும். இருந்தால் தான் அவர்களை நெறிப்படுத்த முடியும்.

தத்துவத்துறையில் திருத்தல்வாதிகள் புரட்சிகரமான இயக்கவியலை மறுத்து அதற்கு மாறாக எளிய பரிணாமப் போக்கை நுழைக்கின்றனர். முதலாளித்துவ அறிஞர்கள் இதுவரை மார்க்சியத்தின் மீது வைத்த குற்றச்சாட்டை மீண்டும் வைத்து, பொருள்முதல்வாதம் நெடுங்காலத்திற்கு முன்பே தவறென நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று கூறி, மார்க்சிய அடிப்படைகளைத் திருத்துகின்றனர். பொருள்முதல்வாதத்திற்கு எதிரான கான்ட், ஹெகல் ஆகியோரின் கருததுமுதல்வாத தத்துவங்களைப் பொருள்முதல்வாதத்துடன் இணைக்க முயற்சிக்கின்றனர். நமது நாட்டில் விவேகானதர், ஆதிசங்கரர் ஆகியோர்களின் அகநிலைக் கருத்துமுதல்வாதத்தை மார்க்சியத்துடன் இணைக்கும் வேலையைச் செய்கின்றனர். தென்கலை வைணவத்தையும் அதே போல் இணைக்கின்றனர். சைவத்தை இணைக்கும் போக்கும் உண்டு.

அரசியல் பொருளாதாரத் துறையில் திருத்தல்வாதமானது, இன்றைய முதலாளித்துவ வளர்ச்சி காரணமாய்ப் பொருளாதார நெருக்கடிகள் அரிதாக ஏற்படுகிறது, மேலும் பலம் குறைந்து விட்டதாகவும், நெருக்கடியை அறவே நீக்கிடும் ஆற்றலைக் கார்ட்டல்களும் டிரஸ்டுகளும் மூலதனத்தக்கு அளித்திடும் என்று கூறுகின்றனர். 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் இந்தத் திருத்தல்வாதத்தை மறுதலிக்கிறது. இன்றைய ரோபோட் வளர்ச்சி உபரி மதிப்புக் கோட்பாட்டை மறுத்துவிடுவதாகக் கூறுகின்றனர். ஆனால் இந்தத் திருத்தல்வாதிகள் மாறும் மூலதனத்திற்கும் மாறா மூலதத்தனத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்திடாமல் இருக்கின்றனர். மாறா மூலதனத்தின் வளர்ச்சியே முதலாளித்துவ வீழ்ச்சிக்கும் சோஷலிசப் புரட்சிகும் அடிப்படை என்று மார்க்சியப் பொருளாதாரம் கூறுகிறது.

அரசியலில் திருத்தல்வாதமானது, வர்க்கப் போராட்டத்தை மறுதலிப்பதில் அடங்கிருக்கிறது. அரசியல் சுதந்திரம், ஜனநாயகம், அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை ஆகியவற்றால் வர்க்கப் போராட்டத்தின் அடித்தளம் அகற்றிவிட்டதாகக் கூறுகிறது. பொருளாதார  நெருக்கடியும், அதனைத் தொடர்ந்து வேலை இழப்புகளும் ஏற்படுகிற இந்த உலகில் எப்படி வர்க்கப் போராட்டத்தை மறுக்க முடியும்.

தொழிலாளர்களுடைய சங்கமான கம்யூனிஸ்டுக் கழகத்தின் வேலைத்திட்டமாக “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” 1848ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை வெளிவந்து நூற்று எழுபது ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்றும் அதன் அடிப்படைக் கோட்பாடுகளை ஒவ்வொரு பொருளாதார நெருக்கடிகளும் உறுதிபடுத்திவருகிறது. இந்த அறிக்கையைப் படிக்கும் போது அதற்கான, மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதிய முன்னுரைகளைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அதில் கூறப்பட்டவைகளின் வழிகாட்டுதல், இன்றைக்குப் புதியதாகப் படிப்பவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது.

“கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருந்த போதிலும், இந்த அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்டுள்ள பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும்போல் இன்றும் சரியானவையே ஆகும். ஆங்காங்கே சில விவரங்களைச் செம்மைப்படுத்தலாம். இந்தக் கோட்பாடுகளின் நடைமுறை பயன்பாடு என்பது, இந்த அறிக்கையே குறிப்பிடுவதுபோல, எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்திலும், அந்தந்தக் காலகட்டத்தில் நிலவக்கூடிய வரலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும்” (மார்க்ஸ், எங்கெல்ஸ் - 1872 ஜெர்மன் பதிபின் முன்னுரை)

      இந்தப் பொதுக் கோட்பாடு அன்று போல் இன்றும் சரியானவையே. புதியதாக வருகின்ற தரவுகளுக்கு ஏற்ப மார்க்சியம் செழுமைப்படுகிறது. அறிக்கையின் தொடக்கத்தில், “இதுநாள் வரையிலான சமூகங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறே ஆகும்.” என்று மார்க்சும் எங்கெல்சும் சேர்ந்து தெரிவிக்கின்றனர். இதற்கு, திருத்தமாக எங்கெல்ஸ் 1888ஆம் ஆண்டு எழுதிய அடிக்குறிப்பில் எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் என்று சேர்க்கிறார். 1847க்கு முன்பாக வர்ககங்கள் அற்ற சமூகம் இருந்ததை அறியப்படவில்லை. அறிந்தவுடன் அதனை எங்கெல்ஸ் அடிக்குறிப்பில் சேர்க்கிறார். இது மார்க்சிய அடிப்படைக் கோட்பாட்டைச் செழுமைப்படுத்துகிறதே தவிர, அதனைச் சிதைக்கவோ, திரிக்கவோ இல்லை.

      புதிய தரவுகளின் மூலம் மார்க்சியம் துல்லிய தன்மை பெறுகிறது, அவ்வளவு தான். ஆனால் திருத்தல்வாதிகள் உடனே மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்று கூச்சலிடுகின்றனர். இந்தக் கூச்சல் வர்க்க சமூகம் அழியும் வரை இருக்கும், படிப்படியாகத்தான் குறையும்.

      ஒரு கம்யூனிஸ்டுகளின் அடிப்படை ஆவணமாக அறிக்கை நீடித்துவருவதால் இதில் எந்தத் திருத்தத்தையும் மார்க்சும் எங்கெல்சும் செய்யவில்லை. “அறிக்கையானது ஒரு வரலாற்று ஆவணமாகிவிட்டது. இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை.” என்று கூறியதற்கு இணங்கவே எங்கெல்ஸ் திருத்தத்தை அடிக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

      மார்க்சும் எங்கெல்சும் இருக்கின்ற காலத்திலேயே அறிக்கையில் செய்ய வேண்டிய மாற்றத்தைப் பற்றி 1872ல் எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளனர். நவீனத் தொழில்துறை வளர்ச்சி, தொழிலாளர் கட்சி அமைப்பின் மேம்பாடு, பாரிஸ் கம்யூன் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் சில விவரங்கள் காலங்கடந்ததாகிவிட்டது என்று எழுதியுள்ளனர். விவரங்கள் தான் காலங்கடந்ததாகிவிட்டது மார்க்சிய அடிப்படைகள் மாறிவிட்டதாகக் கூறவில்லை. இன்றைய நிலையிலும் நாம் இவ்வாறு தான் அணுக வேண்டும். திருத்தல்வாதிகளைப் போல் இதனைக் காரணமாக்கி அடிப்படையைத் திரிக்கக்கூடாது

அறிக்கையின் மூன்றாவது பிரிவான “சோஷலிச இலக்கியம் பற்றிய விமர்சனம்” இன்றைய நிலைமைக்குப் பற்றாக்குறையானது என்று அதே முன்னுரையில் இருவரும் கூறுகின்றனர். அதில் காணப்படும், பிரபுத்துவச் சோஷலிசம், குட்டிமுதலாளித்துவச் சோஷலிசம், முதலாளித்துவச் சோஷலிசம் ஆகியவைகளின் அடிப்படைகள் இன்றும் சரியானதே, அதனைக் கொண்டு மேலும் வளப்படுத்தலாம்.

அதே போல் நான்காம் பிரிவு, “பற்பல எதிர் கட்சிகள் தொடர்பாகக் கம்யூனிஸ்டுகளின் உறவுநிலையைப் பற்றிய குறிப்புகள்” கோட்பாடு அளவில் இன்றும் பிழையற்றவையே, நடைமுறையில் காலங்கடந்தவையாகிவிட்டது என்று இருவரும் அம்முன்னுரையில் தெரிவித்துள்ளனர். அதற்கு முக்கியக் காரணம் அதில் குறிப்பிட்ட கட்சிகளில் பல புவிப்பரப்பில் மறைந்துவிட்டது.

முதல் இரண்டு பிரிவுகளும் இன்றைக்கும் அறிந்து கொள்ள வேண்டியவை நிறைந்து காணப்படுகிறது. முதலாவது பிரிவு முதலாளிகளும் பாட்டாளிகளும், இரண்டாவது பிரிவு பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும். முதலாளிகளும் பாட்டாளிகளும் இருக்கும் வரை கம்யூனிஸ்டுகளுக்கு இதுவே அடிப்படை.

      இன்றைய நிலையில், இரண்டாவது பிரிவை, சரியாகப் புரிந்து கொண்டால் நம் நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சிகளும், கம்யூனிஸ்டுகளும் சிறப்பாகச் செயற்பட முடியும். இரண்டாம் பிரிவின் தொடக்கமே தெளிவோடு தொடங்குகிறது.

“ஒட்டுமொத்தப் பாட்டாளிகளுடன் கம்யூனிஸ்டுகள் கொண்டுள்ள உறவு எத்தகையது?

கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கு எதிரான ஒரு தனிக் கட்சியாக அமையவில்லை. கம்யூனிஸ்டுகளுக்கு ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர வேறு தனிப்பட்ட நலன்கள் கிடையாது.”

தொழிலாளர்களின் நலன்களைத் தவிர்த்த வேறெந்த நலன்களையும் கம்யூனிஸ்டுகள் பிரதிபலிக்கவில்லை. தொழிலாளர்களின் உண்மையான சூழ்நிலைமைகளைப் புரிந்து அதில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காகப் போராடுபவர்களே கம்யூனிஸ்டுகள். கேள்வி பதில் வடிவில் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்ற நூலில் எங்கெல்ஸ் இதனை இன்னும் நேரடியாகவே கூறியுள்ளார். “கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய போதனை” என்று சுருக்கமாகச் சூத்திரத்தைப் போல் கூறியுள்ளார்.

கம்யூனிஸ்டுகள் என்றால், கட்சி காங்கிரசில் எடுக்கப்பட்ட முடிவுகளைச் செயற்படுத்துவதும், மாதந்தோறும் உறுப்பினர் கட்டணத்தை வசூலிப்பதும் என்ற சுருங்கிய பார்வையே இன்று மேலோங்கி இருக்கிறது. ஆனால் அறிக்கை, கம்யூனிஸ்டுகளுக்குத் தேவைப்படுகிற செயற்திறமைகளைச் சுட்டிக்காட்டுகிறது.

பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை வென்றுகொள்ளும் அளவுக்குக் கம்யூனிஸ்டுகள் திறம் பெற வேண்டுமானால், அவர்களுக்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதம், அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றில் பொதுவான பார்வை இருந்தாக வேண்டும். அனைவரும் பொருளாதார மேதைகளாக முடியாது. ஆனால் பொதுவான பயிற்சி கொடுக்கும் போதே பல மேதைகள் தோன்றுவார்கள். கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர்களுக்கு அரசியல் மீது மட்டும் ஆர்வம் இருந்தால் போதாது, அந்த அரசியல், விஞ்ஞானத் தன்மை பெற்றதாக- மார்க்சிய அரசியலாக- இருக்க வேண்டுமானால் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மற்றும் அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றைக் கற்க வேண்டும். கற்றதை தற்போதைய நிலைமையோடு இணைத்துச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

“கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் நடைமுறை ரீதியில், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளில், மிகவும் முன்னேறிய, மிகவும் உறுதி வாய்ந்த பிரிவாக, மற்றவர்கள் அனைவரையும் முன்னோக்கி உந்தித் தள்ளுகின்ற பிரிவாக உள்ளனர். மறுபுறம் தத்துவ ரீதியில், கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்கத்தின் பெருந்திரளினருக்கு இல்லாத ஓர் அனுகூலத்தை, அதாவது, பாட்டாளி வர்க்க இயக்கத்தின் திசைவழியையும், நிலைமைகளையும், இறுதியில் ஏற்படும் பொதுவான விளைவுகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தைப் பெற்றுள்ளனர்.”

கூலியுழைப்பைப் பற்றி அறிக்கைக் கூறுவதைப் புரிந்து கொள்வதற்கு அரசியல் பொருளாதாரத்தில் பொதுப் புரிதல் அவசியம். பொருளாதாரம் தெரியாமல் அதன் முடிவுகளை மட்டும் தெரிந்து வைத்திருப்பது நடைமுறைக்குப் பயன்படாது. நடைமுறை செயற்பாட்டிற்குப் பொருளாதாரப் புரிதல் அவசியமாகும்.

“கூலியுழைப்பின் சராசரி விலைதான் குறைந்தபட்சக் கூலியாகும். அதாவது, தொழிலாளியைத் தொழிலாளியாகக் குறைந்தபட்ச வாழ்க்கை நிலைமையில் தொடர்ந்து வாழவைக்க அத்தியாவசியமாகத் தேவைப்படும் பிழைப்புச் சாதனங்களின் அந்த அளவே குறைந்தபட்சக் கூலியாகும். ஆக, கூலித் தொழிலாளி தன் உழைப்பின் மூலம் ஈட்டுவது, தொடர்ந்து உயிர்வாழவும், குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை மறுஉற்பத்தி செய்வதற்கும் மட்டுமே போதுமானது.”

      வரலாற்றியல் பொருள்முதல்வாதமே கம்யூனிஸ்டுகளுக்கு வழிகாட்டியாகும். ஏன், அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்வதற்குக்கூட வரலாற்றியல் பொருள்முதல்வாதம் அவசியமாகும். மார்க்சியத்தை விஞ்ஞானம் என்று கூறுவதனால் அதனைப் படித்த அனைவரும் ஏற்றுக் கொள்வர் என்று கூறிடமுடியாது. இயற்கை விஞ்ஞானத்தைப் போல் அல்லாது, சமூக விஞ்ஞானம் என்பது வர்க்க சார்பானதாகும். வர்க்க நலனின் அடிப்படையில் தான் அரசியல் பொருளாதாரத்தை ஏற்றுக் கொள்ள முடியும். முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தை முதலாளித்துவ வர்க்க சார்பாளர்களால் தான் ஏற்றுக் கொள்ள முடியும், அதே போலப் பாட்டாளி வர்க்க, அரசியல் பொருளாதாரம் பாட்டாளி வர்க்க சார்புடையவர்களால் தான் ஏற்றுக் கொள்ள முடியும்.

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை அறிக்கை தெளிவாக முன்வைக்கிறது.

“மனிதனது கருத்துகளும் நினைப்புகளும் கண்ணோட்டங்களும் – சுருங்கச் சொன்னால் மனிதனது உணர்வானது – அவனது பொருளாயத வாழ்நிலைமைகளிலும் சமூக உறவுகளிலும் சமூக வாழ்விலும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுடன் சேர்ந்து மாறிச் செல்வதைப் புரிந்து கொள்ள அழ்ந்த அறிவு வேண்டுமா, என்ன?

பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, அறிவுத் துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது- கருத்துகளின் வரலாறு நிரூபிப்பது இதன்றி வேறு என்னவாம்?”

      வாழ்நிலை என்பது உற்பத்தியின் போது ஏற்படுகிற உறவுநிலையாகும். இந்த உற்பத்தி உறவுநிலையில் இருந்தே,  அதாவது வாழ்நிலையில் இருந்தே சிந்தனை ஏற்படுகிறது என்பதே சமூகம் பற்றிய பொருள்முதல்வாதப் பார்வையாகும். சிந்தனையில் இருந்து வாழ்நிலை தோன்றுகிறது என்பது கருத்துமுதல்வாதமாகும். கருத்துமுதல்வாதம் சுரண்டல் கண்ணோட்டத்தையும் பொருள்முதல்வாதம் சுரண்டலுக்கு எதிரான கண்ணோட்டத்தையும் கொடுக்கிறது. வர்க்கமாகப் பிரிந்துள்ள சமூகத்தில் ஒரு சார்பற்ற சமூக விஞ்ஞானம் இருக்க முடியாது.

      அறிக்கையின் முதல் பிரிவின் தலைப்பு முதலாளிகளும் பாட்டாளிகளும். மார்க்ஸ் 1845க்கு முன்பு தமது தத்தவத்தை முழுநிறைவடையச் செய்துள்ளார். அரசியல் பொருளாதாரம் 1859 வரைக்கும் முழுமையாக்கப்படவில்லை. மார்க்ஸ் அடிப்படை அமைத்துவிட்டார் அதனை விளக்குகின்ற துல்லிய தன்மையைத் தரவுகளுடன் நிறுவ முனைகிறார். அப்படியிருந்தும் அறிக்கையில் முதலாளித்துவத்தின் உற்பத்தி வளர்ச்சியின் விளைவாக ஏற்படுகிற மிகை உற்பத்தியை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த மிகைவுற்பத்தியே முதலாளித்துவ உற்பத்தி முறையை நிலைகுலையச் செய்கிறது. இந்தப் பகுதியை மார்க்சும் எங்கெல்சும் ஒரு நாடக பாணி கலைவுணர்வோடு விவரித்துள்ளனர்.

      முதலாளித்துவம் தான் உருவாக்கிய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியால் திணறிப் போகிறது. மிகையாய்ச் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்கள் விற்காமல் சந்தையில் தேங்கிக்கிடக்கிறது. தானே உருவாக்கிய உற்பத்தி சக்தியின் பிரம்மாண்டத்தை அடக்க முடியாமல் தவிப்பதை அறிக்கை அழகுபடக் கூறுகிறது.

“நவீன முதலாளித்துவச் சமூகமானது தனக்கே உரியத்தான உற்பத்தி, பரிவர்த்தனை, மற்றும் சொத்துரிமை உறவுகளைக் கொண்டு பிரம்மாண்டமான உற்பத்தி மற்றும் பரிவர்த்தனைச் சாதனங்களை மந்திர வித்தை போல உருவாக்கியது. தனது மாயவித்தையால் பாதாள உலகிலிருந்து தருவித்துத் தானே உருவாக்கிய சக்திகளைக் கட்டுப்படுத்த இயலாத ஒரு மந்திரவாதியின் நிலைமையில் இப்போது நவீன முதலாளித்துவம் இருக்கிறது.
சமூகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உற்பத்தி சக்திகள் முதலாளித்துவச் சொத்துக்கள் மேலும் வளர்க்கும் தன்மையுடையதாய் இல்லை. மாறாக அவை அந்த உறவுகளுக்குப் பொருந்தாதபடி அளவுக்கு மீறி மிகவும் வலிமை பெற்றவையாக ஆகிவிட்டன. இந்த உறவுகளே அவற்றின் வளர்ச்சிக்குத் தடையாகிவிட்டன. எனவே பொருள் உற்பத்தி சக்திகள் அந்தத் தடைகளை விரைவாகக் கடந்து முன்னேறுகின்றன. அவ்வாறு கடக்கும்போது அவை ஒட்டு மொத்த முதலாளித்துவச் சமூகத்துக்குள்ளேயே சீர்குலைவை ஏற்படுத்துகின்றன. முதலாளித்துவச் சொத்துடைமை நீடித்து நிலவுவதற்கே அபாயத்தைத் தோற்றுவிக்கின்றன. முதலாளித்துவச் சமூகம் தான் உருவாக்கிய செல்வத்தையே உள்ளடக்கிக் கொள்ள முடியாத அளவுக்கு முதலாளித்துவச் சமூக உறவுகள் சுருங்கிப் போகின்றன.”

      இதனையே எங்கெல்ஸ் “டூரிங்கு மறுப்பு” என்ற நூலில் கூறுகிறார், “சமூகமயமாகிவிட்ட பொருளுற்பத்திக்கும், முதலாளித்துவச் சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையாய்த் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது

ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியும் இதனை மெய்பிக்கின்றன. புறநிலைமைக்கு ஏற்ப அகநிலைமைகள் தயாராகி, முதலாளித்துவ உற்பத்தி முறைக்குத் தீர்வாய் பாட்டாளி வர்க்கம் புரட்சியை நிகழ்த்தி, முதலாளித்துவ நெருக்கடிக்கு முடிவுகட்டி, சோஷலிச சமூகத்தைப் படைக்கும். இந்தப் பொருளாதார நிலைமைகளை முன்வைத்து வரலாற்றியல் பொருள்முதல்வாதம் கோட்பாடாக நமக்குத் தருகிறது. புறநிலைமை மார்க்சியத்தை இன்றும் மெய்பித்துவருகிறது. பொருளாதாரப் பொதுநெருக்கடியை மார்க்ஸ் சந்திக்கவில்லை. வணிக நெருக்கடிகளையே சந்தித்தார். பொருளாதாரப் பொது நெருக்கடி 1914ல் தான் முதன்முறையாகத் தோன்றியது. இருந்தும் அதனை மார்க்ஸ் முதலாளித்துவ உள்முரண்பாட்டின் அடிப்படையில் முன்பே கணித்தார்.

பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் மிகை உற்பத்தியாகும். இதற்கு அடிப்படை முதலாளித்துவச் சமூகம் போட்டியின் காரணமாகப் புதியப்புதிய கருவிகளைப் படைப்பதே ஆகும். இதனை அறிக்கை மிகமிக எளிமையாக விவரித்துள்ளது.

“முதலாளித்துவ வர்க்கத்தால் ஓயாது ஒழியாது உற்பத்திக் கருவிகளிலும், இதன் மூலம் உற்பத்தி உறவுகளிலும், இவற்றுடன் கூடவே சமூக உறவுகள் அனைத்திலுமே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாமல் வாழ முடியாது.” (பிரிவு - 1)

இதன் காரணமாகவே முதலாளித்துவ உற்பத்தி முறையில் பொருளாதார நெருக்கடியை தவிர்க்க முடியாமல் மீண்டும் மீண்டும் தோன்றிய வண்ணம் உள்ளது, ஒவ்வொரு நெருக்கடியில் இருந்தும் தப்பிக்கும் போது அடுத்தப் புதிய அதைவிட அதிகமான நெருக்கடியை சந்திக்க வேண்டிவருகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையால் பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க முடியாது. அதற்குத் தீர்வாக மார்க்சியம் வைக்கும் சமூக மாற்றத்தை தடுக்க முடியாது.

பொருளாதார நெருக்கடியால் அவ்வப்போது தடுமாறும் முதலாளித்துவத்திற்குத் தீர்வு பாட்டாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தை வெற்றிக் கொள்வதேயாகும். இந்த வெற்றி அடையும்வரை அறிக்கையின் அவசியம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும் தமது நோக்கத்தைத் தெரிந்து அதனை நிறைவேற்ற வேண்டும்

“கம்யூனிஸ்டுகளுடைய உடனடி நோக்கம் ஏனைய எல்லாப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளது உடனடி நோக்கம் என்னவோ அதுவேதான். பாட்டாளிகளை ஒரு வர்க்கமாய் உருப்பெறச் செய்வதும், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துவதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் அட்சியதிகாரம் வென்று கொள்வதும்தான்” (பிரிவு - 2)

புறநிலைமையே அகநிலைமையைத் தீர்மானிக்கும். ஒவ்வொரு புரட்சிகர நிலைமையும் புரட்சியை ஏற்படுத்தாது, அதற்கான அகநிலைமையின் தயாரிப்பே புரட்சியை நடத்திமுடிக்கும். பொருளாதார நெருக்கடிக்கு ஏற்ப அகநிலை தயாரிப்பை, கம்யூனிஸ்ட் கட்சி செய்ய வேண்டும். முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் சிக்கலுக்குத் தீர்வு சோஷலிச புரட்சியே. அதற்கான வழிமுறைகளைக் கட்சி தேர்ந்தெடுக்க வேண்டும்.

“கம்யூனிஸ்டுகள் தமது கருத்துகளையும் நோக்கங்களையும் மறைத்து வைப்பதை வெறுத்து ஒதுக்குகிறார்கள். இன்றுள்ள சமூகத்தின் நிலைமைகள் அனைத்தையும் வலுவந்தமாய்த் தூக்கியெறிய வேண்டும். அப்போதுதான் தமது குறிக்கோள் நிறைவேறும் என்று கம்யூனிஸ்டுகள் ஒளிவுமறைவின்றிப் பறைசாற்றுகிறார்கள். கம்யூனிசப் புரட்சியின் வருகையை நினைத்து ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளுக்கு அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஒன்றுமில்லை. அவர்கள் வெல்வதற்கு ஓர் உலகம் இருக்கிறது.” (பிரிவு- 4)

இந்த அறிக்கையின் நோக்கமாக மார்க்சும் எங்கெல்சும் 1882ஆம் ருஷ்யப் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில், “நவீன கால முதலாளித்துவச் சொத்துடைமையின் தகர்வு தவிர்க்க முடியாதபடி நெருங்கி வருவதைப் பிரகடனம் செய்வதே கம்யூனிஸ்டு அறிக்கையின் குறிக்கோள்” என்று தெரிவித்துள்ளனர். இந்தக் கடமையை நிறைவேற்றும் வரை நமக்கு அறிக்கையே சிறந்த வழிகாட்டியாக இருக்கும். அன்றாடச் சீர்திருத்த போராட்டத்துடன் இறுதிநோக்கத்தை அடையும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி வர்க்கப் பார்வையில் செயல்பட வேண்டும்.

அனைத்து நாட்டு தொழிலாளர்களும் ஒன்று சேர்வோம். புதிய உலகைப் படைப்போம். நாளை நமதே. நாளைய உலகம் உழைப்பாளர்களுக்கே.