Friday, 21 April 2017

ருஷ்ய மார்க்சியக் குழுக்களை ஒன்றிணைத்தலும் சித்தாந்தப் போராட்டமும்

மேற்கு ஐரோப்பியல் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த போது மார்க்சியம் தோன்றியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவான மார்க்சியம் சுமார் ஐம்பது ஆண்டுகளாக தமக்கு எதிரான சித்தாந்தத்துடன் போராடி நிலைபெற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய ருஷ்யாவில் மார்க்சியத்தைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தது. மார்க்சியம் தங்களது நாட்டிற்கு ஏற்றதாகாது என்று நரோத்தினிக்குகள் போன்ற சிந்தாந்தவாதிகள் கருதினர். 1860ஆம் ஆண்டுவரை ருஷ்யாவில் மிகச் சில தொழிற்சாலைகளே தோன்றியிருந்தன. ருஷ்யாவின் இயந்திர வளர்ச்சிக்கு அங்கு நிலவிய பண்ணை அடிமை முறை பெரும் தடையாகவே இருந்தது.

கிரிமியா போருக்குப் பிறகு நிலைமை மாறியது, (1861) பண்ணை அடிமை முறையை முறியடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  இதனை எங்கெல்ஸ்:-
“ருஷ்யாவில் இன்றுள்ள முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டம் கிரீமியப் போரினால் ஏற்பட்ட வரலாற்று நிலைமைகளின், 1861இல் விவசாய உறவுகளின் மாற்றம் செய்யப்பட்ட முறையின் மற்றும் பொதுவாக ஐரோப்பாவின் அரசியல் தேக்கத்தின் தவிர்க்க முடியாத விளைவு என்றே எனக்குத் தோன்றுகிறது” (லண்டன், அக்டோபர் 17, 1893) என்று எழுதியுள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின், எழுபதுகளில் தொழிலாளர்களின் இயக்கங்கள் தோன்றின. 1876ல் ஒதேஸ்ஸாவில் தென் ருஷ்யாவின் தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் முதல் இயக்கம் தோன்றியது. 1878ல் பீட்டர்ஸ்பர்கில் ருஷ்ய தொழிலாளர்களின் வடக்கு சங்கம் தோற்றம் பெற்றது. இச்சங்கங்கள் போலீஸ் கெடுபிடியால் இரண்டாண்களுக்குள் கலைக்கப்பட்டன. மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்கள் ருஷ்யாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அறிமுகமாகியிருந்தது. மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலேயே ருஷ்ய மொழியில் மூலதன நூலின் முதல் தொகுதியின் மொழிபெயர்ப்பு (1872) வெளிவந்தது. மூலதன நூல் வெளிவந்ததில் இருந்து, ருஷ்ய சோஷலிஸ்டுகளின் மத்தியில் ருஷ்ய முதலாளித்துவத்தின் விதிகளை பற்றிய விவாதங்கள் கடுமையாக நடைபெற்றன, இதன் அடிப்படையில் தான் அன்றைய இயக்கங்களின் வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டன.

1880களில் ஜார் அரசின் கெடுபிடியின் காரணமாக ருஷ்யப் புரட்சியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல நேர்ந்தது. பொதுவாக இந்த புரட்சியாளார்கள் நரோத்திசத்தின் தாக்கம் பெற்றவர்களாகவே இருந்தனர். வெளிநாட்டிற்குச் சென்றவர்களில் சிலர் மார்க்சிய சித்தாந்தத்தின் பக்கம் செல்லத் தொடங்கினர். இதன் விளைவாக ருஷ்யாவில் தொழிலாளர்களுக்கு என்று தனியாக ஒரு கட்சியை அமைப்பதின் அவசியத்தை உணர்ந்தனர்.

நரோத்நயா-வால்யா (மக்கள் விருப்பம்) என்கிற நரோத்திய இரகசிய அமைப்பினர், 1881ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் நாளன்று, இரண்டாவது அலக்சாண்டர் என்ற ஜார் அரசன் மீது வெடிகுண்டை வீசிக் கொன்றனர். மக்களின் விருப்பம் என்ற பெயரில் இயங்கும் அமைப்பின், இந்த வீரச் செயல்கள் மூலம் மக்களின் விருப்பம் எதனையும் நிறைவேற்றப்படவில்லை. இது போன்ற தனிப்பட்ட நபர்களைக் கொலை செய்வதால், ஜார் எதேச்சதிகாரத்தையோ அல்லது நிலப்பிரப்புக்களையோ ஒழித்திட முடியாது என்பதை இந்த அமைப்பினர் அறிந்திடவில்லை.  இரண்டாம் அலெக்சாண்டர் கொல்லப்பட்டதற்குப்பின் மூன்றாம் அலெக்சாண்டர் ஆட்சிக்கு வந்ததினால், தொழிலாளர், விவசாயிகளுடைய வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கொடுமைகள் படுமோசமாக அதிகரிக்கவே செய்தன. இந்த மூன்றாம் அலெக்சாண்டரை கொலை செய்யும் முயற்சியில் தான் லெனினது அண்ணன் தூக்குத்தண்டனைப் பெற்றார்.

நரோத்திசத்திலிருந்து விடுபட்ட பிளாகானவ் 1883ஆம் ஆண்டு வெளிநாட்டில் “உழைப்பாளர் விடுதலை” குழு ஒன்றைத் தோற்றுவித்தார். மார்க்சியத்துக்கு எதிரான சிந்தனைப் போக்குடைய நரோத்திசத்தை எதிர்த்திடாமல் ருஷ்யாவில் மார்க்சியத்தை நிலைபெறச் செய்ய முடியாது என்று இந்தக் குழு முடிவெடுத்துச் செயல்பட்டது. நரோத்திசத்தின் சித்தாந்தத்தை பிளாகானவ் மார்க்சிய அடிப்படையில் விமர்சித்தார்.

ருஷ்யாவில் முதலாளித்துவம் வளர்ச்சியடையாது என்பதே நரோத்திசத்தின் கருத்தாக இருந்தது. ருஷ்யாவில் முதலாளித்துவம் வளர்ந்தது ஒரு தற்செயல் நிகழ்ச்சி என்றே அவர்கள் கருதினர். பிளாகானவ் மார்க்சிய வழியில் இதனை மறுத்துரைத்தார். அடுத்து, பாட்டாளிகளை போர்க்குணமிக்கவர்களாக நரோத்திசம் கருதவில்லை, விவசாயத் தொழிலாளர்களே பிரதான புரட்சி சக்தி எனவும், அவர்களே சோஷலிசத்தை கொண்டுவருவர் என்றும், பாட்டாளிகள் இல்லாத சோஷலிசத்தைப் பற்றி கனவு கண்டனர். சமூக மாற்றத்துக்கு வர்க்கப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளாத இவர்கள், தனிச்சிறப்புப் பெற்ற வீரர்களே சமூக மாற்றத்தை நிகழ்த்துவர், அவர்களுக்குப் பின்னால் மக்கள் கூட்டம் குருட்டுத்தனமாகப் செல்லும் என்ற முடிவில் இருந்தனர். இதனை பிளாகானவ் மார்க்சிய வழியில் விமர்சித்து எழுதினார்.

நரோத்தினிக்குகளை விமர்ச்சித்து எழுதும் போதே மார்க்சிய நூல்கள் பலவற்றை பிளாகானவ் படைத்தார். 1883ஆம் ஆண்டு சோஷலிசமும் அரசியல் போராட்டமும் என்ற நூலை எழுதினார். இதற்கு பிறகு நம்முடைய வேறுபாடுகள்(1885), வரலாற்றின் ஒருமைவாதக் கண்ணோட்டத்தின் வளர்ச்சி(1897), வரலாற்றில் தனிநபரின் பாத்திரம்(1898), மார்க்சியத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் (1907). ருஷ்யாவின் முதல் மார்க்சியவாதியான பிளாகானவின் இந்த படைப்புகள் ருஷ்யர்களிடையே மார்க்சியம் பரவுதற்கு பெரும்பங்காற்றின.

ருஷ்யாவில் முதலாளித்துவம் வளர வேண்டுமா? வளரக் கூடாதா? என்ற கேள்வியை நரோத்னிக்குகள் தொடுத்தனர். பிளாகானவ் தமது எழுத்துக்களில் இதற்கு பதிலடி கொடுத்தார். இந்த கேள்வியே மிகவும் அபத்தமான ஒன்றாகும். ஏற்கெனவே முதலாளித்துவம் ருஷ்யாவில் நுழைந்துவிட்டது என்பதை விவரித்து எழுதினார். நுழைந்துவிட்ட முதலாளித்துவத்தை கட்டிப்போடுவது இயலாத செயல். முதலாளித்துவத்தால் தோற்றம் பெற்ற ஆலைத் தொழிலாளர்களுக்காக போராடுவதும், அவர்களை நிறுவன முறையில் ஒன்றிணைப்பதும், தொழிலாளர்களுக்கு என்று ஒரு கட்சியை உண்டாக்குவதும் புரட்சிக்காரர்கள் செய்ய வேண்டிய பணி என்பதை வலியுறுத்தினார்.

மற்றொரு பெரும் தவற்றையும் பிளாகானவ் விமர்சித்தார். இன்றையப் புரட்சிப் போராட்டத்தில் தலைமை தாங்க வேண்டியது ஆலைத் தொழிலாளர்கள் என்பதை நரோத்தினிக்குகள் ஏற்கவில்லை. நாட்டில் விவசாயிகளே எண்ணிக்கையில் அதிகமானவராக இருப்பதினால் நரோத்தினிக்குகள் ஆலைத் தொழிலாளர்களை விடுத்து விவசாயிகள் தலைமை ஏற்கவேண்டும் என்று கூறினர். இதனை மறுத்து, விவசாயிகள் எண்ணிக்கையில் மிகுந்திருந்த போதிலும், மிகவும் பின்தங்கிய பொருளாதாரத்துடன் பிணைக்கப்பட்டுள்ளதால், அவர்களது எதிர்கால வாழ்வு கேள்விக்குரியதே, இன்று குறைவாகவும் பலவீனமாகவும் காணப்படும் ஆலைத் தொழிலாளர்களே நாளைய வளர்ச்சியுறும் பொருளாதாரத்தோடு பிணைந்துள்ளனர். அதனால் நாளைய உலகம் ஆலைத் தொழிலாளர்களுக்கானதே.

நரோத்னிக்குகளின் அடுத்த தவறாக பிளாகானவ் குறிப்பிடுவது, சமூக வளர்ச்சியிலும் மாற்றத்திலும் மக்களின் பங்கை புறக்கணிப்பதும், குறைத்து மதிப்பிடுவதாகும். நாரோத்னிக்குகள் பொதுமக்களை வெற்று ஜனக்கும்பலாகப் பார்த்தனர். தனித்திறம் பெற்ற மாமனிதர்களின் கருத்துக்களே சமுக வளர்ச்சிக்கு உதவிடுகிறது என்பதாகக் கருதிக் கொண்டனர். இதனை மறுத்து பிளாகானவ் சமூகச் சிந்தனையை பொருளாதார நிலைமைகளே தீர்மானிக்கின்றன, கருத்துக்கள் அந்த பொருளாதார நிலைமைகளின் நலன்களின் அடிப்படையில் தோன்றியவை என்று மார்க்சிய வழியில் எடுத்துரைத்தார்.

அன்றைய இளைஞர்களின் இடையே காணப்பட்ட நரோத்தினிக் சித்தாந்தத்தின் மீதான தாக்கம் பிளாகானவின் விமர்சனத்தால் குறைந்தது. பிளாகானவின் தலைமையில் செயற்பட்ட “தொழிலாளர் விடுதலை”க் குழு 1884 மற்றும் 1885ஆம் ஆண்டுகளில் ருஷ்யாவில் ஒரு தொழிலாளர்களுக்கான கட்சியினைத் தொடங்குவதற்கு இரண்டு வேலைத்திட்டங்களை தயாரித்தது. முதல் திட்டத்தில் நரோத்னிக் கருத்துகளில் இருந்து விடுபடவில்லை என்பதை வெளிப்படுத்தும்படியான சில முடிவுகள் அதில் காணப்பட்டன. தனிநபர் பயங்கரவாதத்தின் மூலம் சாதித்துக் கொள்ளும்படியான கருத்துக்களின் தாக்கத்தில் முதல் திட்டம் அமைந்திருந்தது. புரட்சியின் போது விவசாயிகளின் பங்கையும் குறைத்து மதிப்பிட்டது. மிதவாத முதலாளிகளை சமூக மாற்றத்துக்கு உதவும் சக்தியாகக் கருதிய பிளாகானவ், விவசாயிகளின் ஒத்துழைப்பின் அவசியத்தை மறுதலித்தார்.

இந்த தொழிலாளர் விடுதலைக் குழுவும் அந்த நேரத்தில் தோன்றிய மற்ற மார்க்சியக் குழுக்களும் தொழிலாளர்களிடையே இணைப்பு இல்லாமலேயே இருந்தன. இருந்தாலும் இந்த குழுக்களிடையே பிற்காலத்தில் சமூக ஜனநாயக கட்சி (கம்யூனிஸ்ட் கட்சி) தோன்றுவதற்கான கரு காணப்பட்டதாக லெனின் கருதினார். 

‘மக்களின் நண்பர்கள்’ எப்படிப்பட்டவர்கள்? சமூக-ஜனநாயகவாதிகளுக்கு எதிராக அவர்கள் எவ்வாறு போரிடுகிறார்கள்

1890களில் மிதவாத நரோத்தனிக்குகளினுடைய அதிகாரப் பூர்வமான பத்திரிகையான ருஷ்யாவின் செல்வம் என்பதில் மார்க்சியத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டனர். இதற்கு பதிலளிப்பதற்காக லெனின் ‘மக்களின் நண்பர்கள்’ எப்படிப்பட்டவர்கள்? சமூக-ஜனநாயகவாதிகளுக்கு எதிராக அவர்கள் எவ்வாறு போரிடுகிறார்கள் என்ற நூலை எழுதினார். இதில் தங்களை மக்களின் நண்பர்கள் என்று அழைத்துக்கொள்கிற நரோத்னிக்குகள், சமூக ஜனநாயகவாதிகளான மார்க்சியவாதிகளை எவ்வாறு எதிர்த்துப் போரிடுகின்றனர் என்பதை முன்வைத்து, லெனின் சித்தாந்தப் போராட்டத்தை நிகழ்த்தினார். மக்களின் உண்மையான நண்பர்கள் நரோத்னிக்குகள் அல்ல மார்க்சியவாதிகளே என்பதை இந்நூலில் நிறுவினார்.

நரோத்னிக்குகளை முன்வைத்து விமர்சித்து எழுதியதில் இது முக்கியமான நூலாகும். இந்நூல் பகுதிபகுதியாக ரகசியமாகப் படியெடுத்து சுற்றுக்கு விடப்பட்டது. இதனை யார் எழுதினார் என்பதை வெளிப்படுத்தாமல், மஞ்சள் நூல் என்றே அழைக்கப்பட்டது. பீட்டர்ஸ்பர்க் போன்ற பெரு நகரங்களில் இந்தப் படிகள் விநியோகிக்கப்பட்டு அன்றைய புரட்சியாளர்களால் வாசிக்கப்பட்டது. பீட்டர்ஸ்பர்க் நகரின் மார்க்சிய வட்டத்தில் லெனினே இதனை வாசித்துக்காட்டினார். இந்நூலைப் பற்றி நதேழ்தா குரூப்ஸ்க்கா நினைவு கூறுகிறார்.

“1894ஆம் ஆண்டு இலையுதிர் கலத்தின் போது மக்களின் நண்பர் என்ற தமது நூலை லெனின் எங்கள் வட்டத்தில் படித்துக்காட்டினார். அதை வாங்கி படித்துப் பார்ப்பதற்கு அனைவரும் துடியாய் துடித்தனர். எங்கள் போராட்டத்தின் நோக்கங்கள் யாவை என்பதை அதில் மிகவும் தெளிவாக விளக்கினார். மக்களின் நண்பர் என்ற அந்த நூல் பல படிகள் எடுக்கப்பட்டு சின்ன மஞ்சள் நூல் என்ற பெயரில் உலாவியது. ஒவ்வொருவரும் அதை வாங்கிப் படித்தார்கள். அதன் ஆசிரியர் யார் என்பது நூலில் காணப்படவில்லை. அந்த நூலின் படிகள் நாலா திசையிலும் பரவின. அந்தக் காலத்திய இளம் மார்க்சியர்களை அது மிகவும் ஈர்த்தது என்றால் அது மிகையாகாது”1

இந்நூலின் இரண்டாம் பகுதி கிடைக்கவில்லை. இப்போது நமக்கு கிடைத்திருப்பது முதல் மற்றும் மூன்றாம் பகுதியும் சில பிற்சேர்க்கைகளையும் உள்ளடக்கிய பதிப்பே.

இந்நூலில் நரோத்னிக்குகளின் தத்துவம், பொருளாதாரம், அரசியல் போன்ற கருத்துகளுக்கு மார்க்சிய வழிப்பட்ட விமர்சனத்தை லெனின் வைத்தார். நரோத்னிக்குகள் சீர்திருத்தங்களையே தமது செயல்திட்டமாக மாற்றிக்கொண்டனர். ஜார் அரசின் மீதான எதிர்ப்பும், புரட்சிகரப் போராட்டமும் மழுங்கிப்போயின.

1890ஆம் ஆண்டுகளில் ஜார் அரசுடன் சமரசம் செய்ய வேண்டும் என்பதையே பரப்புரை செய்தனர். இதனை எதிர்த்து லெனின் “இந்த அரசுடன் சமரசமாகவும், பணிவாகவும் பேசி வாதித்தால் போதும், இந்த அரசு எல்லாவற்றையும் சரி செய்துவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்” என்று எழுதினார். தற்போது நரோத்திசம் புரட்சித்தன்மையை இழந்து மிதவாத தன்மை அடைந்துள்ளதை ஆதாரத்தோடு நிரூபித்தார். இந்த மிதவாத நரோத்னிக்குகள் போலியான மக்களின் நண்பர்கள், மார்க்சியவாதிகளே உண்மையான மக்களின் நண்பர்கள் என்பதை சுட்டிக்காட்டினார்.

மிதவாத நரோத்னிக்குகள், வேண்டும் என்றே மார்க்சிய கருத்துக்களை திரித்துரைத்தனர், பொய்களையும் பரப்பினர். ருஷ்ய மார்க்சியவாதிகள் கிராமத்தை முழுவதுமாக அழிக்க முயற்சிப்பதாகவும், தொழிற்சாலைகளின் நெருப்பறைக்குள் ஒவ்வொரு விவசாயிகளையும் தள்ளி வேகவைக்க விரும்புவதாகவும் திரித்து பொய்யுரைத்தனர். இந்தத் திரிபுகளின் பொய்களை லெனின் தமது நூலில் அம்பலப்படுத்தினார்.

ருஷ்யாவில் முதலாளித்துவம் வளரவேண்டும் என்பது மார்க்சியர்களின் விருப்பம் சார்ந்ததல்ல, எதார்த்தத்தில் முதலாளித்துவம் வளரத்தொடங்கிவிட்டது. இதன் கூடவே ஆலைத் தொழிலாளர்களான பாட்டாளிகளையும் தோற்றுவித்துள்ளது. இந்த பாட்டாளி வர்க்கமே முதலாளித்துவத்தை தூக்கியெறியப் போகும் சக்தியாகும் என்று லெனின் கூறினார்.

பொதுமக்களினுடைய போராட்டத்தின் மீது நம்பிக்கையற்றவர்களே இந்த “மக்களின் நண்பர்கள்”. அவர்களின் தனிநபர் அழித்தொழிப்பு சுரண்டலுக்கு முடிவை ஏற்படுத்தாது. இந்த அழித்தொழிப்பு என்பது பயங்கரவாதச் செயல் என்று லெனின் கண்டித்தார். இதனோடே பிரிந்து கிடக்கின்ற மார்க்சியக் குழுக்கள் ஒன்றிணைத்து, தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்த கட்சியாக உருவெடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். மேலும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையையும் அதன் கூட்டாளியான விவசாயிகளின் பங்கையும் வலியுறுத்தி பாட்டாளி வர்க்கத்துடன் விவசாயி-தொழிலாளர்களின் ஒற்றுமையை ஏற்படுத்துவதின் அவசியத்தையும் முன்வைத்தார். இந்த ஒற்றுமையில் தான் எதேச்சதிகார ஜார் அரசை தூக்கியெறியக்கூடிய வலிமை அடங்கியிருக்கிறது.

லெனினது மார்க்சியக் கண்ணோட்டம் வெகுசிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளதை இந்நூல் வெளிப்படுத்தியது. குறிப்பாக அகநிலைவாதிகளைப் பற்றிய விவரிப்பைக் கூறலாம். அகநிலைவாதிகள், வரலாற்றுப் புலப்பாடுகளின் ஒழுங்கமைக்கப்பட்ட நியதியை ஏற்றுக் கொண்டாலும், வரலாற்றின் பரிணாம வளர்ச்சியை பார்க்க இயலாதவராக இருக்கின்றனர்.

"இப்புனைவுகோள் (Hypothesis) விஞ்ஞான சமூகவியலுக்கான வாய்ப்பை முதன்முதலாக ஏற்படுத்தியதன் காரணம் என்னவென்றால், சமூக உறவுகளை உற்பத்தி உறவுகளுடன் இணைத்ததும், இவ்வுற்பத்தி உறவுகளை உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி மட்டத்துடன் இணைத்ததும் தான் சமூக அமைப்புகளின் வளர்ச்சியை இயற்கை வரலாற்று நிகழ்ச்சிப் போக்காக எண்ணிப் பார்க்க உறுதியான அடிப்படையை அளித்தது."
"சமுதாயத்தின் மனிதர்களிடையே நிலவும் உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் மட்டுமே இப்பகுப்பாய்வு நிகழ்த்தப்படுகிறது, விஷயத்தை விளக்க இந்த உற்பத்தி உறவுகளுக்கு வெளியில் உள்ள ஒர் அம்சத்தையும் ஒரு தடவை கூட மார்க்ஸ் நாடவில்லை. சமூக பொருளாதாரத்தின் சரக்கு ஒழுங்கமைப்பு எப்படி வளருகிறது, பகைமை வர்க்கங்களாகிய பூர்ஷ்வாக்களையும் பாட்டாளிகளையும் தோற்றுவித்து (உற்பத்தி உறவுகளின் வரம்புகளுக்குள்) இது எப்படி முதலாளித்துவ அமைப்பாக மாறுகிறது, இது எப்படி சமூக உழைப்பின் உற்பத்தித் திறனை வளர்த்து அதன் மூலம் இம்முதலாளித்துவ ஒழுங்கமைப்பின் அடிப்படைகளுடன் சமசரப்படுத்த இயலாமல் முரண்படக் கூடிய ஒர் அம்சத்தை எப்படிக் கொண்டு வருகிறது ஆகியவற்றை எல்லாம் காணும் வாய்ப்பை அளிக்கிறார் மார்க்ஸ்"2

-இதனைத் தொடர்ந்து லெனின் கூறுகிறார், மூலதன நூலின் எலும்புக்கூடு இது தான், இந்த எலும்புக்கூடுடன் மார்க்ஸ் திருப்தியடைந்து விடவில்லை, அதாவது பொருளாதாரக் கோட்பாடுடன் அவர் நின்றுவிடவில்லை.

“குறிப்பிட்ட சமூக அமைப்பின் கட்டமைப்பையும் வளர்ச்சியையும் முழுக்க முழுக்க உற்பத்தி உறவுகளால் விளக்கிய அவர் அதே பொழுது எல்லா இடங்களிலும் எப்போதும் இவ்வுற்பத்தி உறவுகளுக்கேற்ற மேற்கட்டுமானங்களை ஆராய்ந்தார், இந்த எலும்புக்கூட்டிற்குச் சதையையும் ரத்தைதையும் அளித்தார். எனவே தான் மூலதனம் இந்த அளவிற்கு மகத்தான வெற்றியைப் பெற்றது,.
இப்போது மூலதனம் தோன்றிய பின்னர்- வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்து புனைவுகோள் அல்ல, இது விஞ்ஞான ரீதியில் மெய்ப்பிக்கப்பட்ட கருத்து நிலையாகும்.”

சட்டத்துக்குட்பட்ட மார்க்சியம் (Legal Marxism)

1890களில் ருஷ்யாவில் புரட்சிகர மார்க்சியத்துக்கு எதிராக சட்டத்துக்குட்பட்ட மார்க்சியம் தோன்றியது. ஜார் அரசு அனுமதிக்கின்ற சட்டத்துக்கு உட்பட்டு மார்க்சியத்தை பரப்பியவர்கள் சட்டத்துக்குட்பட்ட மார்ச்சியர் என அழைத்தனர். சட்டத்துக்கு உட்பட்டு என்ற போர்வையில் அவர்கள் மார்க்சியத்தை முதலாளிகளின் நலன்களுக்கு ஏதுவாக்க முயன்றனர். முதலாளித்துவ அமைப்பை எதிர்ப்பதை மறுப்பதோடு வர்க்கப் போராட்டம், சோஷலிசப் புரட்சி, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் போன்ற மார்க்சிய உள்ளடக்கத்தையும் மறுதலித்தனர்.

பெரிய சமூக இயக்கங்கள் செயற்படும் போது, “சக பயணிகளாக” அவ்வியக்கத்தோடு இந்த நிலையற்றவர்கள் இணைவது வரலாற்றில் இன்றுவரை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ருஷ்யாவில் மார்க்சியம் பெரிய அளவிற்கு பரவிக்கொண்டிருக்கும் போது முதலாளித்துவ அறிவாளிகள் மார்க்சியவாதிகள் என்ற பெயரோடு உள்நுழைந்து கொண்டனர்.

ஸ்ட்ரூவி என்ற சட்டவழி மார்க்சியவாதியானவர் முதலாளிகளை வானளாவப் புகழ்ந்தார், முதலாளித்துவ அமைப்பை எதிர்ப்பதற்கு பதில், தொழிலாளர்களுக்கு நாகரீக பண்பாடு பயிற்சி போதவில்லை, இப்பயிற்சியைப் பெறுவதற்காக முதலாளித்துவத்திடம் செல்லவேண்டும் என்று கூறினார்.

நரோத்னிக்குகளை, அவர்களது வழியில் எதிர்த்தனர். இந்த நரோத்னிய எதிர்ப்பை முன்வைத்து அவர்களோடு தற்காலிக உடன்பாட்டை லெனின் ஏற்படுத்திக் கொள்ளலாம் என்றார். அவர்களுடன் இணைந்து நரோத்னிக்குகளுக்கான எதிர்ப்புக் கட்டுரைகளை வெளிடலாம் என்றார். ஆனால் அவர்களின் மிதவாத முதலாளித்துவப் போக்கை அம்பலப்படுத்துவதையும் தொடர்ந்து செய்தார்.

நரோத்னிய எதிர்ப்பை சட்டவழியிலான அச்சடிக்கப்பட்ட நூலாக கொண்டுவதற்கு லெனினால் எழுதப்பட்டதே நரோதிசத்தின் பொருளாதார உள்ளடக்கமும் திரு.ஸ்ட்ரூவின் நூலில் அதுபற்றிய விமர்சனமும் (The Economic Content of Narodism and the Criticism of it in Mr. Struve’s Book) என்ற நூல். இதுவே லெனின் எழுதி அச்சேற்றப்பட்ட முதல் நூல். கே.துலின் என்ற புனைப்பெயரில் இந்த நூல் வெளிவந்தது. இருந்தும் ஜார் அரசாங்கம் விரைவில் இந்நூலுக்கு தடைவிதித்தது. அரசால் கைப்பற்றப்பட்ட நூலின் படிகள் எரிக்கப்பட்டன. இரண்டாயிரம் படிகளில் நூறுபடிகளையே காப்பாற்ற முடிந்தது. காப்பாற்றியதை ரகசியமாக மார்க்சியவாதிகள் தங்களுக்குள் சுற்றுக்கு விட்டனர்.

வெளிநாடுகளில் தங்கி மார்க்சியத்தை ருஷ்யாவில் பரப்பிக் கொண்டிருந்த பிளாகானவ், அக்செல்ரோத் போன்றோரை நேரில் சந்தித்து பேசுவதற்கு லெனின் சுவிட்சர்லாந்துக்கு 1895ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயணமானார். இங்குதான்  பிளாகானவை லெனின் முதன்முறையாக சந்தித்தார். ரபோத்னிக் (தொழிலாளி) என்ற பெயரில் ஒரு பத்திரிகை நடத்துவது என்று சந்திப்பில் முடிவெடுத்தனர். 

பின்பு, சுவிட்சர்லாந்திலிருந்து பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாடுகளுக்கு சென்றார். அந்நாடுகளில் தொழிலாளர்களின் கூட்டங்களில் கலந்து கெண்டார். எங்கெல்சை இங்கிலந்தில் சந்திக்க முயற்சித்தார், ஆனால் எங்கெல்சின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தபடியால் இயலாமல் போயிற்று. 1895ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி எங்கெல்ஸ் மறைந்தார். இதனை ஒட்டி லெனின் பிரடெரிக் எங்கெல்ஸ் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.

“தொழிலாளி வர்க்கமும் அதன் கோரிக்கைகளும் இன்றையப் பொருளாதார அமைப்பு முறையிலிருந்து விளைந்த அவசியமான விளைவே என்றும், இந்தப் பொருளாதார அமைப்பு முறையும் முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்து தவிர்க்க முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, அதனை ஒழுங்கமைத்து அணி திரட்டுகின்றன என்றும் முதன் முதலாக எடுத்துக்காட்டியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே. இன்று மனிதகுலத்தை ஒடுக்கி வதைத்து வரும் தீமைகளிலிருந்து அதை விடுவிக்கவல்லது ஒழுங்கமைத்துக் கொண்டு அணிதிரண்டு நிற்கும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமே தவிர உயர்ந்த சிந்தனை படைத்த தனிநபர்கள் சிலரின் நல்லெண்ணமிக்க முயற்சிகள் அல்ல என்று அவ்விருவரும் எடுத்துக்காட்டினார்கள்.

சோஷலிசம் என்பது ஏதோ கனவு காண்பவர்களுடைய கற்பனைப் பொருள் அல்ல, நவீன சமூகத்தின் உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் கடைசிக் குறிக்கோளும், தவிர்க்க முடியாத விளைவும் ஆகும் என்று தங்கள் விஞ்ஞான நூல்களிலே மார்க்சும் எங்கெல்சும் முதன் முதலாக விளக்கினர்.”3

மேலும் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தையும் அதன் வழியில் சோஷலிசத்தை நடைமுறைப்படுத்தும் சக்தியான பாட்டாளிகள் பற்றியும் கூறுகிறார்:-

“வாழ்வின் உண்மைகளை ஆராய்ந்து, இயற்கையின் வளர்ச்சியை விளக்குவது மனத்தின் வளர்ச்சியல்ல என்றும், அதற்கு மாறாக மனத்தைப் பற்றிய விளக்கமே இயற்கையில் இருந்துதான், பருப்பொருளில் இருந்துதான் பெறப்பட வேண்டும் என்றும் அவர்கள் கண்டார்கள்… ஹெகலையும், ஹெகலைப் பின்பற்றும் மற்றவர்களையும் போல் அல்லாமல், மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதிகள். உலகத்தையும் மனிதகுலத்தையும் அவர்கள் பொருள்முதல்வாத நிலையில் இருந்து பார்த்து இயற்கையின் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அடிப்படையாகப் பொருளாதக் காரணங்கள் எப்படி அமைந்துள்ளனவோ, அதேபோல் மனிதச் சமூகத்தின் வளர்ச்சியும் பொருளாயத வகைப்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினால் வரையறுக்கப்படுகிறது என்று அறிந்து கொண்டனர்.

மனிதத் தேவைகளை நிறைவு செய்வதற்குரிய பொருட்களை உற்பத்தி செய்வதில் மனிதர்கள் பரஸ்பரமாக ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைப் பொறுத்திருக்கின்றன. சமூக வாழ்வின் எல்லாத் தோற்றங்களுக்கும், மனித ஆவலாதிகளுக்கும், கருத்துக்களுக்கும், சட்டங்களுக்கும் உரிய விளக்கம் இந்த உறவுகளிலேதான் பொதிந்திருக்கிறது.

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது தனிச்சொத்தின் அடிப்படையில் அமைந்த சமூக உறவுகளைப் படைக்கிறது, ஆனால் உற்பத்திச் சக்திகளின் அதே வளர்ச்சி பெரும்பான்மையானவர்களின் சொத்தைப் பறித்து அற்பசொற்பமான சிறுபான்மையோரிடம் அதைச் சேர்த்துக் குவித்து வைக்கிறதை நாம் இன்று காண்கிறோம். நவீன காலத்திய சமூக அமைப்புமுறைக்கு அடிப்படையாக உள்ள சொத்து என்பதை அது அழிக்கிறது, சோஷலிஸ்டுகள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட அதே குறிக்கோளை நோக்கி அதுவும் தானாகச் செல்ல முயற்சிக்கிறது.

சோஷலிஸ்டுகள் செய்ய வேண்டியிருப்பது எல்லாம்- சமூகச் சக்திகளில் எது நவீன சமூதாயத்தில், தான் வகிக்கும் நிலையின் காரணமாக, சோஷலிசத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் அக்கறை கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு அந்தச் சக்திக்கு அதன் நலன்களைப் பற்றிய உணர்வையும், அதன் வரலாற்று வழிப்பட்ட கடமையைப் பற்றிய உணர்வையும் ஊட்டுவதேயாகும். இந்தச் சக்திதான் பாட்டாளி வர்க்கம்.”4

பீட்டர்ஸ்பர்க்கில் தமது பணியை லெனின் மீண்டும் தொடர்ந்தார். இவரிடம் காணப்பட்ட மார்க்சியம் பற்றிய கண்ணோட்டத்தையும், அதனைக் கொண்டு ருஷ்ய நிலைமைகளுக்குப் பயன்படுத்தும் திறமையையும் கண்ட இந்நகர மார்க்சியவாதிகள் இவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ளும்படி செய்தது. பீட்டர்ஸ்பர்க்கில் ஏற்கெனவே சுமார் இருபது மார்க்சியக் குழுக்கள் இருந்ததன. 1895ஆம் ஆண்டில் இவற்றை லெனின் தொழிலாளர் விடுதலைக்கான போராட்டக் கழகம் என்ற பெயரில் ஒன்றாக இணைத்தார். இந்த இணைப்பு மார்க்சியக் கோட்பாட்டையும் தொழிலாளர்களையும் இணைக்கின்ற, கட்சி ஒன்றை நிறுவுவதற்கான முயற்சியாக அமைந்தது.

ஜார் அரசின் போலீஸ் லெனினை தொடர்ந்து கண்காணித்தது. போலீஸ் உளவாளிகள் அவர் செல்லும் இடங்கள் எல்லாம் மறைமுகமாக தொடர்ந்தனர். உளவாளிகளின் கண்களில் மண்ணைத் தூவி தப்பித்துக் கொள்வார். ஒரு முறை தொழிலாளர் வட்டாரக் குழு கூட்டத்திற்கு செல்லவதற்காக டிராம் வண்டியில் பயணம் செய்யதார். இதனை அறிந்த ஒர் உளவாளி கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு, செய்தித் தாளை படிப்பது போல் மறைத்துக் கொண்டு, லெனினை நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். இதனை அறிந்த லெனின் உளவாளியிடம் தப்பிப்பதற்கான ஒரு நிறுத்தத்தை தேர்ந்து கொண்டு காத்திருந்தார். அந்த நிறுத்தமும் வந்தது வண்டியும் நின்றது, யாரும் இறங்காததால் நடத்துனர் புறப்பட மணியை அடித்தார். டிராம் புறப்பட்டது உடனே துள்ளி எழுந்து கீழே இறங்கி அந்த இடத்தைவிட்டு மறைவாக சென்றார். உளவாளி வண்டியை நிறுத்தக் கோரி முறையிடுவதற்கு முன்பே இவைகள் நடந்தேறிவிட்டது. உளவாளி ஏமாற்றம் அடைந்தார்.

                தொழிற்சாலையில், தொழிலாளர்களுக்கு அபராதம் விதிப்பது சர்வசாதாரணமாக இருந்தது. எதற்கெடுத்தாலும் அபராதம்.  அதற்கான சட்டமும் போடப்பட்டிருந்தது. இதுப்பற்றி ஒரு துண்டறிக்கையை லெனின் எழுதினார். அதில் சட்ட ஒடுக்குமுறையைப் பற்றி தொழிலாளர்களுக்கு விவரித்தார். இதுபோன்ற எண்ணற்ற துண்டறிக்கைகள் அப்போது லெனினால் எழுதப்பட்டு விநியோகிக்கப்பட்டன. இந்த துண்டறிக்கைகள், நரோத்னிக்குகளின் ஒரு பிரிவான மக்கள் விருப்பம் என்ற அமைப்புக்கு சொந்தமான சட்டஅனுமதிபெறாத ரகசிய அச்சகத்தால் அச்சிடப்பட்டது. சித்தாந்த முறையாக லெனின் இவர்களை விமர்சனம் செய்துள்ளார். ஆனால் அவர்களது அமைப்பைச்சார்ந்த ரகசிய அச்சகத்திலேயே அச்சடித்துக் கொடுத்தனர். சித்தாந்தத்தில் வேறுபட்டாலும் மக்கள் நலனில் ஒன்றுபட்டனர்.

பயன்படுத்திய நூல்கள்

1. லெனின் வாழ்க்கை குறிப்புகள்-பக்கம் – 15
2. ‘மக்களின் நண்பர்கள்எப்படிப்பட்டவர்கள்? சமூக-ஜனநாயகவாதிகளுக்கு  எதிராக அவர்கள் எவ்வாறு போரிடுகிறார்கள்

3. & 4. பிரடெரிக் எங்கெல்ஸ்

Thursday, 9 March 2017

மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்கள் பற்றி லெனின்

மார்க்சின் போதனை, நாகரிக உலகெங்கிலும் (அதிகாரத் தரப்பினதும், மிதவாதிகளதும் ஆகிய இரு வகையான) முதலாளித்துவ விஞ்ஞானம் அனைத்திடமிருந்தும் அளவற்ற பகைமையையும் வெறுப்பையும் கிளப்பிவிடுகிறது. மார்க்சியம் ஒரு வகையான 'நச்சுத்தன்மை கொண்ட குறுங்குழுவாதம்' என்று அது கருதுகின்றது. அதனிடமிருந்து வேறு எந்த விதமான போக்கையும் எதிர்பார்க்க முடியாதுதான். ஏனெனில், வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் அமைந் துள்ள ஒரு சமுதாயத்தில் 'ஒருசார்பற்ற சமுதாய விஞ் ஞானம் எதுவும் இருக்க முடியாது. அதிகாரத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானம் அனைத்தும், மிதவாதிகளது விஞ்ஞானம் அனைத்தும் ஏதாவதொரு விதத்தில் கூலி அடிமை முறை யை ஆதரிக்கிறது. மார்க்சியமோ கூலி அடிமை முறையை ஈவிரக்கமின்றி எதிர்த்துப் போர்ப் பிரகடனம் செய்துள்ளது. மூலதனத்துக்குக் கிடைக்கும் இலாபத்தைக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தலாமா என்ற பிரச்சினையில் முதலாளிகள் ஒருசார்பற்றவர்களாய் இருப்பார்களென எதிர்பார்ப்பது எப்படி அசட்டுத் தனமாகுமோ, ஏமாளித்தனமாகுமோ, அப்படித்தான் கூலி அடிமை முறைச் சமுதாயத்தில் விஞ்ஞானம் ஒருசார்பற்றதாய் இருக்குமென எதிர்பார்ப்பதும் அசட்டுத்தனமாகும், ஏமாளித்தனமாகும்.

இது மட்டுமல்ல. தத்துவஞானத்தின் வரலாறும் சரி, சமுதாய விஞ்ஞானத்தின் வரலாறும் சரி, மார்க்சியத்தில் 'குறுங்குழுவாதம்' போன்றதெதுவும் கிடையாது என்பதைத்தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன. அதாவது, அது ஒரு இறுகிப்போன வறட்டுப் போதனையல்ல; உலக நாகரிக வளர்ச்சியின் ராஜபாட்டையின் வழியே வராமல் அதனின்று விலகி வேருரொரு வழியே முளைத்த போதனை அல்ல. மாறாக, மனித குலத்தின் முன்னணிச் சிந்தனையாளர்கள் ஏற்கெனவே எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மார்க்ஸ் விடைகள் தந்தார் என்பதில்தான் குறிப்பாக அவருடைய மேதாவிலாசம் அடங்கியுள்ளது. தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், சோஷலிசம் ஆகியவற்றின் தலைசிறந்த பிரதிநிதிகளுடைய போதனைகளின் நேரடியான, உடனடியான தொடர்ச்சியாகத் தான் மார்க்சின் போதனை எழுந்தது.

மார்க்சின் போதனை மெய்யானது, அதனுல்தான் அது எல்லாம்வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஒர் ஒன்றிணைந்த உலகப்பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலும் அமைந்த மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது. ஜெர்மானியத் தத்துவஞானம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோஷலிசம் என்ற வடிவத்தில் 19ம் நூற்றண்டில் மனித குலம் உருவாக்கித் தந்த தலைசிறந்த படைப்புகளின் உரிமை பெற்ற வாரிசுதான் மார்க்சியம்.

இவை மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களாகும், மூன்று உள்ளடக்கக் கூறுகளாகும். இவற்றைச் சுருக்கமாகக் கவனிப்போம்.

(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

விஞ்ஞான சோஷலிசம் பற்றி லெனின்

நிலப்பிரபுத்துவ அமைப்பு முறை வீழ்த்தப்பட்டு "சுதந்திரமான" முதலாளித்துவச் சமுதாயம் ப்பூவுலகில் தோன்றிய பொழுது, இந்தச் சுதந்திரம் உழைப்பாளிகளை ஒடுக்கவும் சுரண்டவும் அமைந்த புதியதோர் அமைப்பு முறையையே குறித்தது என்பது உடனே தெளிவாக விளங்கலாயிற்று. இந்த ஒடுக்குமுறையின் பிரதிபலிப்பாகவும், இதற்கான கண்டனமாகவும் பல்வேறு சோஷலிசப் போதனைகள் உடனே தலைதூக்கத் தொடங்கின. ஆனால் ஆரம்பக் காலத்திய சோஷலிசம் கற்பனா சோஷலிசமாகத்தான் இருந்தன. அது முதலாளித்துவச் சமுதாயத்தை விமர்சித்தது, கண்டித்தது, சபித்தது, அந்தச் சமுதாயத்தை ஒழிக்க வேண்டும் என்று கனவு கண்டது, அதை விட மேலான ஓர் அமைப்பு முறையைப் பற்றி ஆகாயக் கோட்டை கட்டி வந்தது, சுரண்டுவது ஒழுக்கக்கேடான செயல் என்று பணக்காரர்களுக்கு உணர்த்த முயற்சித்தது.

ஆனால் கற்பனா சோஷலிசத்தினால் விடுதலைக்கான மெய்யான வழியைக் காட்ட முடியவில்லை. முதலாளித்துவத்தில் நிலவும் கூலி அடிமை முறையின் சாராம்சத்தை அதனால் விளக்க முடியவில்லை. முதலாளித்துவ முறையின் வளர்ச்சி பற்றிய விதிகளை அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு புதிய சமுதாயத்தின் படைப்பாளியாக அமைய வல்ல சமுதாயச் சக்தியை அதனால் சுட்டிக் காட்டவும் முடியவில்லை.

இதற்கிடையில், நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியையும் பண்ணை அடிமை முறையின் வீழ்ச்சியையும் தொடர்ந்து ஐரோப்பா முழுவதிலும், குறிப்பாக பிரான்சில், ஏற்பட்ட புயல்வேகப் புரட்சிகள், வர்க்கங்களின் போராட்டம் தான் எல்லா வளர்ச்சிக்கும் ஆதாரமாயும், உந்து விசையாகவும் உள்ளது என்பதை மேலும் மேலும் தெளிவாக வெளிப்படுத்தின.

நிலப்புரபுத்துவ வர்க்கத்துக்கு எதிராய் அரசியல் சுதந்திர லட்சியத்துக்குக் கிடைத்த எந்த ஒரு வெற்றியும் அவ்வர்க்கத்தின் மூர்க்கமான எதிர்ப்பில்லாமல் கிடைத்து விடவில்லை. முதலாளித்துவச் சமுதாயத்தின் பல்வேறு வர்க்கங்களிடையே ஜீவமரணப் போராட்டம் இல்லாமல் எந்த முதலாளித்துவ நாடும் ஓரளவு சுதந்திரமான, ஜனநாயக அடிப்படையில் வளர்ச்சியுற்று விடவில்லை.

வேறு எவருக்கும் முன்பாக மார்க்சுக்குத்தான் உலக வரலாறு போதிக்கும் படிப்பினையை இதிலிருந்து கண்டறியவும், அந்தப் படிப்பினையை முரணின்றிச் செயல்படுத்தவும் முடிந்தது, இதில்தான் அவருடைய மேதாவிலாசம் இருக்கிறது. வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய போதனைதான் அந்த முடிபாகும்.

நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவெதாரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டேயிருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. ஆது என்ன? பழைமையைத் துடைத்தெறியவும், புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்துத் தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறவையுமான சக்திகளை நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்திற்குள்ளேயே நாம் கண்டு பிடித்து, அந்தச் சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி.

மார்க்சின் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அது வரை உழன்று கொண்டிருந்த ஆன்மிக அடிமைத்தனத்திலிருந்து வெளியேறும் வழியைப் பாட்டாளி வர்க்கத்திற்குக் காட்டியிருக்கிறது. மார்க்சின் பொருளாதாரக் கோட்பாடு ஒன்றுதான் பொதுவான முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வர்க்கத்தின் உண்மை நிலையை விளக்கியுள்ளது.


அமெரிக்காவிலிருந்து ஐப்பான் வரை, ஸ்வீடனிலிருந்து தென்னாப்பிரிக்கா வரை, உலகெங்கும் பாட்டாளி வர்க்கத்தின் சுயேச்சையான நிறுவனங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. தனது வர்க்கப் போராட்டத்தை நடத்திச் செல்வதன் வாயிலாகப் பாட்டாளி வர்க்கம் அறிவொளியும் கல்வியும் பெற்று வருகிறது, முதலாளித்துவச் சமுதாயத்திற்குரிய சார்புக் கருத்துக்களின் நின்று தன்னை விடுவித்துக் கொண்டுவருகிறது, தன் அணிகளை நெருக்கமாகத் திரட்டிச் சேர்த்து வருகிறது, தனது வெற்றிகளின் வீச்சை அளந்தறியக் கற்றுக் கொண்டு வருகிறது, தன் சக்திகளை எஃகு போல் திடப்படுத்தி வருகிறது, தடை செய்ய முடியாதபடி வளர்ந்து வருகிறது.


(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

Sunday, 12 February 2017

புதுவகையான உயரிய தொழிலாளர் பிரிவு (superior class of workmen) உருவாவதை பற்றி மார்க்ஸ்

ஏகாதிபத்தியக் காலத்தில் உடல் உழைப்பு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியின் காரணமாய் உடலுழைப்பு அல்லாத தொழில்நுட்பம் பயின்ற மூளை உழைப்பாளர்கள் பெருகிவருகின்றனர். இதன்மூலம் மார்க்சியம் கூறிவருகிற தொழிலாளர்களின் புரட்சி இன்றைக்கு சாத்தியம் இல்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.

மார்க்சிய அடிப்படைகளை எளிமைப்படுத்தி புரிந்து கொண்டதால் ஏற்பட்ட தவறான கருத்தே இது. மார்க்ஸ் உடலுழைப்புத் தொழிலாளர்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. அன்றைய புதிய நவீனஇயந்திரத்தை தொழிற்சாலையில் புகுத்தும்போது அந்த இயந்திரத்தை இயக்குகிற நேரடி உடலுழைப்புக் குறைந்த தொழில்நுட்ப தொழிலாளர்கள் தோன்றியதையும் அவர்கள் உடலுழைப்புத் தொழிலாளர்களிடம் இருந்து வேறுபட்டிருப்பதையும் கூறியிருக்கின்றார்.

மார்க்ஸ் தாம் எழுதிய மூலதன முதல் தொகுதியில் ஒப்பீட்டு உபரி-மதிப்பின் உற்பத்தி என்ற பகுதியில், இயந்திர சாதனமும் நவீனத் தொழில்துறையும் என்ற அத்தியாயத்தில் எழுதியிருக்கிறார். தொழிற்புரட்சியைத் தொடர்ந்து தானியங்கி தொழிற்சாலை (automatic factory) தோன்றிடும் போது தொழில்நுட்பத்தைக் கையாள்கிற புதுவகையான உயரிய தொழிலாளர் பிரிவு (superior class of workmen) உருவாவதை மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.
“மேம்பட்ட தொழிலாளர் பிரிவு இது, இவர்களில் சிலர் விஞ்ஞானக் கல்வி கற்றவர்கள், மற்றவர்கள் ஒரு தொழிலுக்கு என்றே வளர்க்கப்பட்டவர்கள், இந்தப் பிரிவு ஆலைத் தொழிலாளர் வர்க்கத்துடன் சேர்த்துக் கணக்கிடப்பட்டாலும், அதிலிருந்து வேறுபட்டதாகும். இந்த உழைப்புப் பிரிவினை முற்றிலும் தொழில்நுட்ப வழிப்பட்டது.
தொழிலாளியைக் குழந்தைப் பருவம் முதற்கொண்டே நுணுக்க இயந்திரம் ஒன்றின் பகுதியாக மாற்றியமைத்திடும் விதத்தில் இயந்திர சாதனம் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. இவ்விதம், அவரது மறுவுற்பத்தியின் செலவுகள் கணிசமாகக் குறைக்கப்படுவது மட்டுமல்ல, வேறு வழியின்றி தொழிற்சாலை முழுவதையும், அதாவது முதலாளிகளையும் அவர் சார்ந்து வாழ வேண்டிய நிலை அதே நேரத்தில் முழுமையாக்கப் படுகிறது.

வேறெங்கும் போலவே இங்கும் சமூக உற்பத்தி நிகழ்முறையினது மேம்பாட்டின் விளைவாய் அதிகரித்த உற்பத்தித் திறனுக்கும், அம்மேம்பாட்டை முதலாளி பயன்படுத்திச் சுரண்டுவதன் விளைவாய் அதிகரித்த உற்பத்தித் திறனுக்கும் இடையில் நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

கைத்தொழில்களிலும், பட்டறைத் தொழிலிலும் தொழிலாளி கருவியைப் பயன்படுத்துகிறார், தொழிற்சாலையில் இயந்திரம் அவரைப் பயன்படுத்துகிறது. அங்கே உழைப்புக் கருவியின் இயக்கங்கள் அவரிடம் இருந்து தொடங்குகிறது, இங்கே இயந்திரத்தின் இயக்கங்களை அவர் பின்தொடர வேண்டும்.

பட்டறைத் தொழிலில் தொழிலாளர்கள் உயிருள்ள இயங்கமைப்பின் அங்கங்களாவர். தொழிற்சாலையில் உயிரற்ற இயங்கமைப்பு தொழிலாளியைச் சாராமல் சுயேச்சையாய் இருப்பதையும், அதற்குத் தொழிலாளி உயிருள்ள ஒட்டுவால் ஆகிவிடுவதையும் காண்கிறோம்.” (மூலதனம் தொகுதி ஒன்று - பக்கம் 568-569, 570-571)

இயந்திரத்தின் ஒட்டுவாலாய் போன தொழில்நுட்ப தொழிலாளர்களின் வேதனைகளையும் இங்கே மார்க்ஸ் தொகுத்துள்ளார். ஆக, தமது உற்பத்திச் சக்தியை விற்கக்கூடிய நிலையில், முதலாளியின் மூலதனத்தை சார்ந்து வாழக்கூடிய சுரண்டப்படும் இந்த தொழிற்நுட்ப தொழிலாளியும் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. இதன் தொடர்ச்சியாக தற்கால நவீன உற்பத்தி முறைக்கு வரும் போது இன்றைய பாட்டாளி தனிச் தேர்ச்சிபெற்ற, அதற்கு சான்றிதழ் பெற்ற, மூளை உழைப்பைச் செலுத்தும் தொழிலாளியாக இருக்கிறார்.

தற்காலத்திய தொழிற்சாலைகள் அதிநவீனமாக மாறிவிட்டது, இங்கே முழுவதும் தானியங்கி இயந்திரங்களையும், கணிப்பொறி இயந்திர மனிதனைக் (computer robot) கொண்டும் இயக்கப்படுகிறது. இதனை இயக்குகின்ற தொழில்நுட்ப தொழிலாளர்கள் தங்களது உடலைவிட மூளையை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதே போல் மூளை உழைப்பை செலுத்துகின்ற தகவல் தொழில்நுட்ப துறையில் பணிசெய்பவர்களில் பலபிரிவுகள் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே ஆவர். உடலுழைப்பைவிட மூளை உழைப்பைச் செலுத்துபவர்களுக்கு இன்றைய நிலையில் அதிகம் ஊதியம் கிடைக்கிறது என்பது உண்மையே. இவர்களிடம் இருந்துதான் மேட்டுக்குடி பாட்டாளிகள் தோன்றுகின்றனர்.

மேட்டுக்குடி பாட்டாளிகளின் மேட்டுக்குடி சிந்தனைகள் எல்லாம் முதலாளித்துவத்தின் செழுமைக் காலத்தில் மட்டும் தான் காணப்படும், தொடர்ந்து வரக்கூடிய பொருளாதார நெருக்கடியால் இவர்களும் நெருக்குதலுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் தங்களது பழைய வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாது என அறிந்திடும்போது இவர்களின் மேட்டுக்குடி சிந்தனை தவிடுபொடியாகிவிடும்.

 “…தொழிலாளி வர்க்கத்தில் அதிக ஊதியம் பெறுவோரைக் கூட – இவ்வர்க்கத்தின் மேட்டுக்குடியினைரையும் கூட- தொழில்துறைக் கொந்தளிப்புகள் எப்படிப் பாதிக்கின்றன” (மூலதனம் தொகுதி ஒன்று - பக்கம் 897-898) என்று மேட்டுக்குடி தொழிலாளர்களும் பொருளாதார நெருக்கடியின் போது அவர்கள் எப்படியெல்லாம் பாதித்தனர் என்பதினைப் பற்றிய செய்தியேடுகளில் வந்துள்ள அறிக்கையை மார்க்ஸ் நமக்கு எடுத்துக் காட்டுகிறார். முதலாளித்துவ செழுமையின் போது கிடைக்கின்ற அதிக ஊதியம், பொருளாதார நெருக்கடியின் போது உறுதியற்று போகிறது. செய்திடும் வேலையும் உறுதியற்றது என்பதை உணர்ந்திட்ட மேட்டுக்குடி பாட்டாளிகள் மார்க்சியத்தின் பக்கம் இருப்பர். வரலாறு அறியாத நேர்காட்சி கண்ணோட்டம் கொண்டவர்கள் நெருக்கடியின் போதே மார்க்சியத்தை நாடுவர்.

இந்த மேட்டுக்குடியினரை தனிப் பிரிவான அடுக்காக கொள்ளமுடியாது, தொழிலாளி வர்க்கத்தினுடைய இயக்க வளர்ச்சியில் மாறிச்செல்வதைக் குறிப்பதாகும் என்கிறார் லெனின்.

“நடுநிலைவாதிக”ளிடையில், சட்ட முறைமையின் நச்சு நோயால் அரிக்கப்பட்டுப் போனவர்களும், நாடாளுமன்றச் சூழலால் கெடுக்கப்பட்டவர்களுமான வழக்கமான பக்தர்களும், சொகுசான பதவிகளுக்கும் வசதியான வேலைகளுக்கும் பழக்கமாகி விட்ட அதிகார வர்க்கத்தாரும் உள்ளனர். வரலாற்று முறையிலும், பொருளாதார முறையிலும் பார்த்தால் அவர்கள் தனிப் பிரிவான ஓர் அடுக்கு அல்ல, ஆனால் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பழைய கட்டத்தில் இருந்து ஒரு மாறிச் செல்லுதலை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்” (நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் தேர்வு நூல்கள் 5 -பக்கம் 77)


பாட்டாளிகளும், பாட்டாளிகளை வழிநடத்தும் கம்யூனிஸ்டுகளும் சமூகப் போராளியாக செயற்பட வேண்டுமானால், நிலவும் சமூகத்தின் பிரச்சினைகளை வரலாற்று முறையில் ஆய்ந்து, அதற்கான முடிவை எடுக்க வேண்டும். இதற்கு மார்க்சியத்தில் காணப்படும் அரசியல் பொருளாதாரம், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அப்போதுதான் தமது அரசியல் செயற்பாட்டை விஞ்ஞான அடிப்படையில் அமைத்துக் கொள்ள முடியும்.

Sunday, 6 November 2016

மக்கள் ஆட்சி தோன்றியது

மக்கள் ஆட்சி தோன்றியது
(சோவியத்)
நவம்பர் 7, 1917
(அக்டோபர் 25, 1917)
(லெனின் வாழ்வும் படைப்பும் - பக்கம்- 235-244)


ருஷ்யாவில் சோஷலிசப் புரட்சி தோன்றுவதற்கான புறநிலை அகநிலைக் காரணங்களைத் போல்ஷிவிக்குகள் நீடித்து அரசாள முடியுமா? என்ற நூலில் லெனின் தொகுத்தளித்தார். இந்த முடிவுகளின்படி நெருக்கடி முற்றியது என்ற கட்டுரையை லெனின் செப்டம்பர் இறுதியில் எழுதினார்.

                செப்டம்பர் இறுதியிலேயே ருஷ்யப் புரட்சியினை லெனின் உறுதிப் படுத்திவிட்டார். புரட்சிக்கான அகநிலை தயாரிப்புகளை லெனின் தொகுக்கிறார். பரந்து விரிந்த மக்களின் அதிருப்தி, ஏகாதிபத்தியப் போர் நீட்டிப்பதால் அதன் விளைகளால் மக்களுக்கு ஏற்பட்ட துன்பதுயரங்கள் விவசாயிகளை எழுச்சியுறச் செய்திட்டது. இந்த எழுச்சியை இடைக்கால முதலாளித்துவ அரசு ராணுவத்தின் மூலம் ஒடுக்க முனைகிறது.

“… ஒரு நாடுதழுவிய நெருக்கடி முற்றிவிட்டது என்பதையே எல்லா அறிகுறிகளும் சுட்டிக் காட்டுகின்றன.”1

                இந்நிலையில் சிலர், சோவியத்துகளின் காங்கிரசுக்காக காத்திருக்க வேண்டும் என்று கோருகின்றனர். இதன் தவறை உணர்ந்து வெளிவர வேண்டும்.

“இல்லையேல், போல்ஷிவிக்குகள் நிரந்தர வெட்கக் கேட்டால் தலைகுனிவுக்கு உள்ளாகி, ஒரு கட்சி என்ற முறையில் தம்மைத்தாமே அழித்துக்கொள்வார்கள்.

இத்தகைய தருணத்தைத் தவறவிட்டு சோவியத்துகளின் காங்கிரசுக்காக “காத்து நிற்பது” அப்பட்டமான முட்டாள்தனம் அல்லது படுமோசமான நம்பிக்கைத் துரோகமாகும்.”2

                புரட்சியின் வெற்றி எந்த வகையில் உத்தரவாதம் அளிக்கிறது என்பதை சூழ்நிலைமைகளை ஒருங்கிணைந்து படம்பிடித்துகாட்டுகிறார் லெனின்:-
“புரட்சி எழுச்சியின் வெற்றி இப்போது போல்ஷிவிக்குகளுக்கு உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது, 1) நாம் (சோவியத் காங்கிரசுக்கு “காத்து நிற்காமல்” இருந்தால்) மூன்று முனைகளிலிருந்து- பெத்ரோகிராதில் இருந்தும், மாஸ்கோவில் இருந்தும், பால்டிக் கடற்படையில் இருந்தும் ஒரு திடீர் தாக்குதல் தொடுக்க முடியும், 2) நமக்கு ஆதரவை உத்தரவாதம் செய்யும் குழுக்கள் உள்ளன, நிலவுடைமையாளர்களை எதிர்த்து எழுச்சிப் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அடக்கும் அரசாங்கம் வீழ்க! 3) நாட்டில் நமக்குப் பெரும்பான்மை உள்ளது, 4) மென்ஷிவிக்குகள் மற்றும் சோஷலிஸ்டு புரட்சியாளர்கள் மத்தியில் முழுமையான கட்டுக்குலைவு ஏற்பட்டுவிட்டது, 5) நடைமுறை ஏற்பாட்டுப்படி நாம் மாஸ்கோவில் ஆட்சி அதிகாரத்தை மேற்கொள்ளும் நிலையில் இருக்கிறோம், 6) நம்வசம் பெத்ரோகிராதில் ஆயிரக்கணக்கான ஆயுதமேந்திய தொழிலாளர்களும் படைவீரர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ராணுவத் தலைமை அலுவலகத்தையும் மாரிக் கால மாளிகையையும் தொலைபேசி இணைப்பகத்தையும், பெரிய அச்சகங்களையும் உடனே கைப்பற்ற முடியும்.”3

                இதே நேரத்தில் சர்வதேச நிலைமையும் புரட்சிகரமாக இருப்பதை போல்ஷிவிக் தோழர்களுக்கு எழுதிய கடிதத்தில் லெனின் எடுத்துக்காட்டுகிறார். செக் தொழிலாளர்களின் திடீர் எழுச்சி நம்பமுடியாத அளவுக்கு கொடிய அடக்குமுறையால் கையாளப்பட்டிருக்கிறது. இது அரசாங்கத்தின் பயத்தையே வெளிப்படுத்துகிறது. இத்தாலியிலும் துரீனிலும் மக்கள் திரளின் ஒரு திடீர் கிளர்ச்சி காணப்படுகிறது. உணவுப் பற்றாக்குறை தொடர்பாக ஓர் ஆர்ப்பாட்டம் அங்கே ஏற்பட்டது. அது பொது வேலைநிறுத்தமாக மாறியது. தெருக்களில் தடையரண்கள் எழுப்பினர். துரீன் சுற்றுவட்டாரம் எழுச்சியாளர் வசம் வந்தது. இதனை ஒடுக்குவதற்கு அரசு ராணுவத்தை ஏவியது. ராணுவ சட்டம் நடைமுறையாக்கப்பட்டது.

                இவற்றில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாக ஜெர்மன் கடற்படையில் ஏற்பட்ட கிளர்ச்சியை குறிப்பிட வேண்டும். ஜெர்மன் கடற்படையின் எதிர்ப்புக் கிளர்ச்சி, மாபெரும் நெருக்கடியின், உலகப் புரட்சியின் வளர்ச்சியின் அறிகுறியாகும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லை என்கிறார் லெனின்.

                அதே நேரத்தில், ருஷ்யப் புரட்சியை அடக்குவதற்கு சர்வதேச ஏகாதிபத்தியவாதிகளும் சூழ்ச்சி செய்கின்றனர். ஏகாதிபத்திய ராணுவ நடவடிக்கையின் மூலம் ருஷ்ய முதலாளிகளுக்கு பிரதிகூலமான வகையில் சமாதானம் செய்து கொள்ளலாம் என்ற போக்கும் இருக்கிறது. ருஷ்யாவில் உள்நாட்டு கெரன்ஸ்கி மீதிருந்த வெகுளித்தனமான மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்திய குட்டிமுதலாளித்துவச் சமரச கட்சிகள் அறவே கையாலாகாதவையாகி விட்டன. மாஸ்கோவில் நடைபெற்ற தேர்தலில் போல்ஷிவிக்குகள் 49 விழக்காடுகளுக்கு மேல் வாக்கு பெற்றனர். இடைக்கால அரசு மீது மக்களின் செல்வாக்கு சரிந்ததையே இது காட்டுகிறது. மேலும் கூறுகிறார்

“இந்த வாக்களிப்பின் மூலம் மக்கள், போல்ஷிவிக்களிடம் “தலைமை தாங்குகள், நாங்கள் உங்களைப் பின்பற்றுகிறோம்” என்று கூறியதைவிட அதிகத் தெளிவான கூற்று எதையும் கற்பனை செய்ய முடியுமா?”4

புரட்சிகர புறநிலைகளும் அதற்கு ஏற்ப அகநிலையான மக்களின் விருப்பங்களும் இவ்வாறு இருக்க உடனே ஆயுதப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் லெனின். போல்ஷிவிக்குகள் கட்டாயம் ஆட்சி அதிகாரம் மேற்கொள்ள வேண்டும் என்று போல்ஷிவிக் கட்சி மையக் கமிட்டிக்கும், பெத்ரோகிராத், மாஸ்கோ கமிட்டிக்கும் எழுதிய கடிதம் முதற்கொண்டு அன்றைய லெனினது எழுத்துக்கள் ஆயுதக் கிளர்ச்சிக்கு அழைப்புவிடுவதாகவே இருந்தன.

“இன்றுள்ள கடமை பெத்ரோகிராதில், மாஸ்கோவில் (அதன் பிராந்தியம் உட்பட) ஓர் ஆயுதமேந்திய புரட்சிக் கிளர்ச்சியைக் கொண்டு வருவது, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது, அரசாங்கத்தை வீழ்த்துவது என்பதாக இருக்க வேண்டும்.”5
               
“…சோவியத்துகளுக்கு இப்போது ஆட்சி அதிகாரத்தை மாற்றி வழங்குவது என்பது ஆயுதமேந்திய எழுச்சி என்றே பொருள்படும்…
..
..ஆயுதமேந்திய எழுச்சி அரசியல் போராட்டத்தின் ஒரு விசேஷ வடிவமாகும், விசேஷ விதிகளுக்குக் கட்டுப்பட்டதாகும், இதைக் குறித்துக் கவனமாகச் சிந்தித்தல் வேண்டும், “போரைப் போலவே அந்த அளவுக்கு முழுமையாகப் புரட்சி எழுச்சியும் ஒரு கலையாகும்” என்று எழுதிய போது காரல் மார்க்ஸ் (எங்கெல்ஸ்) இந்த உண்மையையே தனிச்சிறப்புடைய துலக்கத்துடன் வெளியிட்டார்.”6

“ஒரு ஆயுதமேந்திய புரட்சி எழுச்சி தவிர்க்க முடியாதது என்பதையும், அதற்குரிய நேரம் முற்றும் கனிந்துவிட்டது என்பதையும் கவனித்த மையக் கமிட்டி எல்லா கட்சி அமைப்புகளும் அதற்கேற்ற வகையில் வழி நடத்தப்பட வேண்டும் என்று இந்த நோக்கு நிலையில் இருந்து எல்லா நடைமுறைப் பிரச்சினைகளையும் விவாதித்து முடிவு செய்யும்படி அவற்றுக்கு நெறிமுறை செய்துள்ளது”7

                இந்த ஆயுதமேந்திய போராட்டத்துக்கு புரட்சிகர எழுச்சியை ஒரு கலையாக கையாள வேண்டும் என்று லெனின் வலியுறுத்துகிறார். இதற்கு “புரட்சி எழுச்சி என்பது ஒரு கலை” என்று நியூயார்க் பத்திரிகையில் மார்க்ஸ் எழுதியதாக லெனின் குறிப்பிடுகிறார். உண்மையில் இது எங்கெல்ஸ் எழுதியது, இந்தப் பத்திரிகையில் மார்க்சின் பெயரே செய்தியாளராக பதியப்பட்டுள்ளதால், எங்கெல்ஸ் எழுதிய இந்த கட்டுரை மார்க்ஸ் பெயரில் வெளிடப்பட்டது. பிற்காலத்தில் இவர்களின் கடிதங்களைப் படிக்கும் போது அறியப்பட்டது. இக்கட்டுரையை பத்திரிகைக்கு அனுப்பும் முன் மார்க்ஸ் முழுமையாக படித்தே அனுப்பியுள்ளார். அதனால் இதனை மார்க்ஸ், எங்கெல்ஸ் கருத்தான மார்க்சியம் என்பதில் என்ன சந்தேகம்?
      
       இந்தக் கால கட்டத்தில் எழுதிய எழுச்சிப் படைப்புகளில் எல்லாம் லெனின் புரட்சியை கலையாக கையாளுவதைப் பற்றி எழுதியுள்ளார்.

“… புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருத மறுப்பது மார்க்சியத்திற்குத் துரோகம் செய்வதாகும், புரட்சிக்குத் துரோகம் செய்வதாகும்.” 8

“… புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருத வேண்டும் என்ற மார்க்சின் கருத்தை நாம் சொல்லளவோடு மட்டும் ஏற்கவில்லை என்பதை நாம் காட்ட வேண்டும்” 9

“புரட்சி எழுச்சியை மார்க்சிய வழியில், அதாவது ஒரு கலையாகக் கருத வேண்டுமாயின் நாம் அதே நேரம் ஒரு விநாடியைக் கூட வீணாக்காமல் புரட்சிப் படைப்பிரிவுகளின் தலைமையகத்தை அமைக்க வேண்டும்….”10

“இன்றைய தருணத்தில் புரட்சி எழுச்சியை ஒரு கலையாகக் கருதாவிட்டால் மார்க்சியத்தின்பால் மெய்ப்பற்றுடன் இருப்பதோ, புரட்சியின்பால் மெய்ப்பற்றுடன் இருப்பதோ சாத்தியமல்ல……”11

                புரட்சி ஏற்படும் தருணம் நெருங்கி வருவதால், லெனின் செப்டம்பர் மாதம் நடுவில் பெத்ரோகிராதுக்கு அண்மையில் இருக்க விரும்பி வீபர்க் என்கிற இடத்திற்கு சென்றார். ஆயுதமேந்திய எழுச்சிக்கான நேரம் வந்துவிட்டபடியால், அதற்கான ஏற்பாடுகளையும் வழிகாட்டுதலையும் லெனின் அருகில் இருந்து அளித்துக் கொண்டிருந்தார். அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன.

       அக்டோபர் 10ஆம் நாளன்று கட்சியின் மையக் கமிட்டியின் ரகசியக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்கு லெனின் வருகிறார் என்பதை அறிந்த கமிட்டி உறுப்பினர்கள் அவரை நேரில் காண ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். நரைமயிர் டோப்பாவில் ஒரு புதியவர் அங்கே வந்து பேசத் தொடங்கினார், அந்த மாறுவேடம் பூண்டவர் லெனின் என்பதை பேச்சில் இருந்து கண்டுகொண்டனர்.

லெனின் தனது கருத்தை முன்வைத்தார், இத்தருணம் புரட்சிக்கானதே, அது ஆயுதமேந்திய போராட்டமே. இதனை மையக் கமிட்டி ஏற்றது. காமினெவும், ஸினோவ்யெவும் மட்டுமே இந்தத் தீர்மானத்தை எதிர்த்தவர்கள். டிராட்ஸ்கி ஆயுதப் போராட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கவில்லை, ஆனால் சோவியத்துக்களின் இரண்டாவது காங்கிரசுக்குப் பிறகு பார்க்கலாம் என்று கருத்துரைத்தார். இதுகூட எழுச்சியை தடுக்கும் முயற்சியேயாகும். தாமதிப்பது பெரும் தவறுக்கு இடமளிக்கும் என்று லெனின் மறுதலித்தார்.

எழுச்சியின் தலைமைக்கு லெனின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1917ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாளன்று புரட்சிகர-ராணுவக் கமிட்டி போல்ஷிவிக் மையக் கமிட்டியின் வழிகாட்டுதலில் அமைக்கப்பட்டது. இது பெத்ரோகிராத் சோவியத்தின் அமைப்பாக செயற்பட்டது. கட்சியின் மையக் கமிட்டி, பீட்டர்ஸ்பர்க் கமிட்டி, பெத்ரோகிராத் சோவியத், ஆலைக் கமிட்டிகள், தொழிற்சங்கங்கள், ராணுவ அமைப்புகளின் பிரதிநிதிகள் இதன் உறுப்பினர்களாவார்கள்.

செங்காவலர் படைகளை உருவாக்குவது, தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குவது இந்த புரட்சிகர-ராணுவக் கமிட்டியின் வேலையாகும். போல்ஷிவிக் கட்சியின் மையக் கமிட்டி வழிகாட்டுதலின்படி ஆயுதமேந்திய புரட்சி எழுச்சிக்கு தயார்ப்படுத்துவதே இதன் முக்கியமான பணி. நெருங்கிவரும் புரட்சியின் வெற்றிக்கு தேவைப்படும் அனைத்து ஒழுங்கமைக்கும் வேலைகளையும் கவனித்துக் கொள்வது இதன் பெரும்பணியாகும்.

                அக்டோபர் 16ஆம் நாள், தொழிலாளர்களின் பிரிதிநிதிகளடங்கிய மையக் கமிட்டிக் கூட்டத்தில் மீண்டும் லெனின் சொற்பொழிவாற்றினார். பின்பு அனைவரையும் அழைத்து தாக்குதலைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டார். எழுச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சரிபார்த்தார்.

இந்த நேரத்தில் கட்சியால் தோற்கடிக்கப்பட்ட காமினெவ், ஸினோவ்யெவ் ஆகிய இருவரும் பெரும் துரோகம் புரிந்தனர். ஆயுதமேந்திய தாக்குதல் குறித்த மையக் கமிட்டியுடனான தங்களின் கருத்து வேறுபாட்டை பற்றி மென்ஷிவிக்குகளிள் பத்திரிகையில் அறிக்கை வெளியிட்டனர். இதன் மூலம் கட்சியின் ரகசிய தாக்குதலைப் பற்றி வெளிப்படுத்தியதினால் பகைவர்கள் ரகசியத்தை அறிந்து கொண்டனர். இடைக்கால அரசு இதனைப் பயன்படுத்திக் கொண்டது.

                இந்த துரோகத்தை லெனின் கோபம் கொப்பளிக்க சாடினார்.

“நமது கட்சியின் மையக் கமிட்டி எடுத்த, புரட்சி எழுச்சி பற்றிய முடிவையும், புரட்சி எழுச்சிக்கான தயாரிப்புகளையும் அதற்கெனக் குறித்த நாளையும் எதிரிக்குத் தெரியாமல் மறைத்து வைக்க வேண்டும் என்ற முடிவையும் காமினெவும், ஸினோவ்யேவும் ரோத்ஸியான்கோவுக்கும் கெரன்ஸ்கிக்கும் காட்டிக் கொடுத்தார்கள்.
..
முன்நாட்களில் நெருக்கமாக இருந்த தோழர்களைப் பற்றி இந்த முறையில் எழுதுவது எனக்கு எளிதாக இல்லை. ஆனால் இந்த விஷயத்தில் எவ்விதமான தயக்கமும் குற்றமானது என்று நான் கருதுகிறேன். இல்லாவிடில், பிரபலமான கருங்காலிகளைத் தண்டிக்காத ஒரு புரட்சியாளர்களின் கட்சி அழிந்தொழியும்.

ரோத்ஸியான்கோவுக்கும் கெரன்ஸ்கிக்கும் காட்டிக் கொடுத்தது மூலம் கருங்காலிகள் புரட்சி எழுச்சியை இப்போது தாமதப்படுத்திவிட்ட போதிலும் அப்பிரச்சினை நிகழ்ச்சி நிரலில் இருந்து அகற்றப்படவில்லை, கட்சியால் அகற்றப்படவில்லை. ஆனால் நம்மிடையே “பிரபல” வேலை நிறுத்தக் குலைப்பாளர்களுக்கு நாம் இடமளிப்போம் ஆயின் நாம் எவ்வாறு ஆயுதமேந்திய புரட்சி எழுச்சிக்கு நம்மை நாமே தயார் செய்து கொள்ள முடியும்? அதிகப் பிரபலம் ஆனோர் என்ற அளவுக்கு அவர்கள் அதிக அபாயகரமானவர்கள் “மன்னிப்பளிக்கத்” சிறிதும் தகுதி இல்லாதவர்கள்.
..
வேலை நிறுத்தக் குலைவாளர்கள் எந்தளவு அதிகப் “பிரபலமானவர்களாக” இருக்கிறார்களோ அந்தளவுக்கு அவர்களை உடனடியாக விலக்குவது மூலம் தண்டிப்பது அதிக அவசர அவசியமானது.” 12

                சோவியத்துக்களின் இரண்டாவது காங்சிரசை அக்டோபர் 25ஆம் நாள் கூட்டுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. காங்கிரசுக்காக காத்திராமல் எதிர்ப்பு சக்திகளை முந்திக் கொண்டு புரட்சியைத் தொடங்க வேண்டும் என்று லெனின் வலியுறுத்தினார்.

அக்டோபர் 24ஆம் நாள் மாலை நேரத்தில் லெனின் மையக் கமிட்டி உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதினார்.

“நான் 24ஆம் நாள் மாலையில் இந்த வரிகளை எழுதுகிறேன். நிலைமை மிகமிக நெருக்கடியானதாக உள்ளது. புரட்சி எழுச்சியை தாமதப்படுத்துவது அழிவார்ந்தது என்பது உண்மையில் இப்போது முற்றிலும் தெளிவாகியுள்ளது.

இப்போது அனைத்தும் ஒரு நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணரும்படி தோழர்களை எனது சக்தி அனைத்தையும் கொண்டு நான் வலியுறுத்துகிறேன். மாநாடுகளாலோ காங்கிரசுகளாலோ தீர்வுகாண முடியாத பிரச்சினைகள் நம்மை எதிர்கொள்கின்றன. இவற்றுக்கு மக்கள் மூலம், மக்கள் திரளின் மூலம், ஆயுதமேந்திய மக்களின் போராட்டம் மூலம் மட்டுமே தனிமுழுமையாகத் தீர்வு காணமுடியும்.

கர்னிலவ் ஆதரவாளர்களின் முதலாளித்துவத் தாக்குதலும். வெர்ஹோவ்ஸ்கி நீக்கப்பட்டதும் நாம் தாமதிக்கக் கூடாது என்பதைப் புலப்படுத்துகின்றன. என்ன நேர்ந்தாலும் சரி, நாம் இந்த மாலையே இந்த இரவிலேயே அரசாங்கத்தைக் கைது செய்ய வேண்டும், முதலில் ராணுவ மாணவர்களை நிராயுதபாணிகளாக்க வேண்டும். (அவர்கள் எதிர்த்தால் முறியடிக்க வேண்டும்) இத்தியாதி.

நாம் தாமதிக்கக் கூடாது!! நாம் அனைத்தையும் இழக்க நேரலாம்!!
அனைத்து வட்டாரங்களும், அனைத்து ரெஜிமெண்டுகளும், அனைத்து சக்திகளும் உடனே ஒன்று திரட்டப்பட வேண்டும். அவை உடனே தமது பிரதிநிதிகளை புரட்சிகர ராணுவக் கமிட்டிக்கும் போல்ஷிவிக்குகளின் மையக் கமிட்டிக்கும் அனுப்ப வேண்டும். எந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் 25ஆம் நாள் வரையில் கெரன்ஸ்கி வகையறாவின் கைகளில் ஆட்சி அதிகாரத்தை விட்டுவைக்கக் கூடாது, எந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் கூடாது என்ற விடாப்பிடியான கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் இந்த மாலையே இந்த இரவிலேயே தவறாது முடிவு செய்யப்பட வேண்டும்.
..
அக்டோபர் 25ஆம் நாளன்று ஊசலாட்டமான ஓட்டுக்காக காத்திருப்பது பேராபத்தானது, படுமோசமான சடங்கு. இத்தகைய பிரச்சினைகளை மக்கள் வாக்கினால் அல்ல, மாறாக பலப்பிரயோகத்தால் முடிவு செய்ய மக்களுக்கு உரிமை உண்டு, இதைச் செய்ய அவர்கள் கடமைப்பட்டவர்கள்.
அரசு ஆட்டம் கண்டுவிட்டது. என்ன நேரினும் சரி அதற்கு மரண அடி கொடுக்க வேண்டும்!

செயலில் தாமதம் அழிவார்ந்ததாகும்.” 13

இக்கடிதம் மையக் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது.

                நேவா ஆற்றின் குறுக்கே இருந்த பாலத்தை தூக்கிவிட்டு, புரட்சி சக்திகளை பிரித்து விடலாம் என்று இடைக்கால அரசு திட்டமிட்டது. இதனை அறிந்த லெனின் ஸ்மோல்னிய் சென்றார். அக்டோபர் 24ஆம் நாள் இரவு எழுச்சிக்கு தலைமை ஏற்றார். எழுச்சி பற்றி செய்திகள் அனைத்துப் பகுதிக்கும் அனுப்பப்பட்டிருந்தன.

       ஆயுதப் போராட்டம் தொடங்கிவிட்டது, செம்படை திட்டமிட்டபடி ரயில் நிலையம், அஞ்சல் நிலையம், வானொலி நிலையம், அரசாங்கக் கட்டிடம், மின் நிலையம், வங்கி ஆகியவற்றைக் கைப்பற்றிக் கொண்டது. நகரை நெருங்கும் இடங்களை பால்டிக் கடற்படை வீரர்களும், புரட்சியாளர்களும் காத்தனர்.

ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட இடைக்கால அரசு குளிர்கால அரண்மனைக்குள் ஒளிந்து கொண்டது. தம்மை விடுவிக்க போர்முனையில் இருந்து தமது படை உதவிக்கு வரும் என்ற நம்பிக்கையில் உள்ளேயே அடைந்து கிடந்தது. அரண்மனையை கைப்பற்றும்படி லெனின் ஆணையிட்டார்.

                “அரோரா” போர்க்கப்பல், தனது பீரங்கியை குளிர்கால அரண்மனையைப் பார்த்துச் சுட்டது. செம்படைப் போராளிகள் அரண்மனையைத் தாக்கி கைப்பற்றினர். முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர்.

அக்டோபர் 25ஆம் நாட்காலையில் ஆயுதப் போராட்டம் வெற்றியடைந்துவிட்டது. இடைக்கால அரசு அதிகாரம் இழந்தது. புதிய ஆட்சியதிகாரம் பெத்ரோகிராத் சோவியத்தினுடைய ராணுவ புரட்சிக் கமிட்டிக்கு மாற்றப்படுவதாக லெனின் எழுதினார். இந்த அறிக்கை காலை பத்து மணியளிவில் வெளியிடப்பட்டது.


ருஷ்யாவின் குடிமக்களுக்கு!

இடைக்கால அரசு பதவியில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது. அரசு அதிகாரம் தொழிலாளர், படைவீரர்கள் பிரதிநிதிகளின் பெத்ரோகிராத் சோவியத்தின் அமைப்பான புரட்சிகர-ராணுவக் கமிட்டியின் கைகளுக்கு மாற்றப்பட்டது. இது பெத்ரோகிராத் பாட்டாளிகளுக்கும் காவற்படைகளுக்கும் தலைமை தாங்குகிறது.

மக்கள் எந்த குறிக்கோளுக்காக போராடினார்களோ அந்தக் குறிக்கோள்- ஜனநாயக சமாதானத்தை உடனடியாக வழங்குவது, நிலப்பிரபுத்துவ நிலவுடைமை உரிமையை ஒழிப்பது, உற்பத்தி மீது தொழிலாளர் கண்காணிப்பு, சோவியத் ஆட்சி அதிகாரத்தை நிறுவுவது- என்பது உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது.

தொழிலாளிகள், படைவீரர்கள், விவசாயிகளின் புரட்சி நீடூழி வாழ்க!

தொழிலாளர்கள், படைவீரர்கள் பிரதிநிதிகளின்
பெத்ரோகிராத் சோவியத்தின் புரட்சிகர- ராணுவ கமிட்டி

காலை 10 மணி, அக்டோபர் 25, 1917.

                 அக்டோபர் 26ஆம் நாள் அதிகாலை 2.20 மணியளவில் சோவியத்துகளின் இரண்டாவது காங்கிரஸ் தொடங்கியது. அக்கூட்டத்தில் ஆட்சி அதிகாரம் அனைத்தும் சோவியத்துக்களின் கைகளுக்கு மாற்றப்பட்டதாக தீர்மானம் போடப்பட்டது. சோவியத் மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டவழியிலான ஆட்சியாக மாறியது.
*********************************************************************************
பயன்படுத்திய நூல்கள்
1.நெருக்கடி முற்றியது - தேர்வு நூல்கள் 6 - பக்கம்- 219
2. மேற்கண்ட நூல் - பக்கம்- 224
3. மேற்கண்ட நூல் - பக்கம்- 225-226
4.வடக்கு பிராந்திய சோவியத்துக்களின் காங்கிரசில் கலந்து கொள்ளும் போல்ஷிவிக் தோழர்களுக்கு எழுதிய கடிதம் - தேர்வு நூல்கள் 6 பக்கம்- 322
5.போல்ஷிவிக்குகள் கட்டாயம் ஆட்சி அதிகாரம் மேற்கொள்ள வேண்டும் - தேர்வு நூல்கள் 6 பக்கம்- 190-191
6.ஒரு பார்வையாளரின் அறிவுரைகள் - தேர்வு நூல்கள் 6 பக்கம்- 316
7.ரு...த. கட்சி (போ) மையக் கமிட்டியின் கூட்டம் - தேர்வு நூல்கள் 6 பக்கம்- 331-332
8.மார்க்சியமும் கிளர்ச்சியும் - தேர்வு நூல்கள் 6 - பக்கம்- 194
9. மேற்கண்ட நூல் - பக்கம்- 199
10. மேற்கண்ட நூல் - பக்கம்- 201
11. மேற்கண்ட நூல் - பக்கம்- 202
12.ரு...த. கட்சி (போ)யின் மையக் கமிட்டிக்கு எழுதிய கடிதம் - தேர்வு நூல்கள் 6 பக்கம்- 348-349

13.மையக் கமிட்டி உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் - தேர்வு நூல்கள் 6 பக்கம்- 54-356