Wednesday, 7 August 2013

சமூகத்தின் அடித்தளம் மேற்கட்டமைப்பு பற்றிய திருத்தல்போக்கு

வரலாற்றை இயக்கும் விசை எது? என்ற கேள்விக்கு மார்க்ஸ் கண்டுபிடித்ததும், அதனை  வரலாற்றியல் பொருள்முதல்வாதம்  என்று அழைத்ததும் அவரது அறிவொளியின் வெளிப்பாடாகும். இதனை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் தங்களை மார்க்சியர் என்று அழைத்துக் கொண்டு, மார்க்சிய அடிப்படையில் திருத்தலை செய்ய முற்படுகின்றனர். இதற்கு முதன்மையான காரணம் அவர்களால் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதும். அவர்களது சிந்தனையில் உள்ள கருத்துமுதல்வாதப் போக்கை விட்டுவிடமுடியவில்லை என்பதும் ஆகும்.

இந்த சிந்தாந்தப் புரட்டல் வேலையால், இளம் மார்க்சியவாதிகளை குழப்ப முயற்சிக்கின்றனர். சோவியத் தகர்வு போன்ற காரணத்தைப் பயன்படுத்தி, மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவர்களிடம், மார்க்சியத்தின் மீது சந்தேகத்தை எழுப்புகின்றனர்.

மார்க்சியத்தின் அடிப்படைகளை முழுமையாகப் புரிந்தவர்களிடம் இந்த திருத்தல் வேலையும், சோவியத் தகர்வும் போன்ற காரணமும் எதையும் சாதித்திட முடியாது. ஆனால் மார்க்சியத்தின் அடிப்படைகளை அறிந்திராத, மார்க்சியத்தின் பால் ஈர்ப்பை மட்டும் பெற்றவர்களுக்கு, இந்த சிந்தாந்த புரட்டல்கள் குழப்பத்தை விளைவிக்கும். இது மட்டுமல்லாது சமூகவியல், வரலாற்றியல், தத்துவவியல், பொருளியல், தமிழ் போன்ற பாடங்களைப் படிக்கும் கல்லூரி மாணர்களுக்கு இதுபோன்ற குழப்பும் செயல்களால், பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி, மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர், கூறிய கருத்துகளிலிருந்து தொகுப்போம். தொகுத்ததை மார்க்சிய ஆசான்களின் படைப்புகளைக் கொண்டு சரிபார்த்து, உறுதிப்படுத்திக் கொள்வோம். இந்தக் கருத்தோட்டத்தைப் பற்றி அதிகமான திருத்தல்வாதப் போக்கு இருப்பதால், இந்த முறையினைக் கையாள்வது சிறந்ததாயிருக்கும்.

I
மனிதர்கள் தமது வாழ்க்கைக்காக உற்பத்தி செய்திடும் போது, தவிர்க்க முடியாத வகையில் திட்டவட்டமான உறவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் மனிதர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து புறநிலையாக இருப்பவையாகும்இதுவரை வளர்ச்சியடைந்துள்ள  பொருளாதார உற்பத்திச் சக்திகளின் மட்டத்திற்கு ஏற்ப, உற்பத்தி உறவு ஏற்படுகிறது. இந்த உற்பத்தியின் கூட்டுமொத்தமே அன்றைய அரசியல் பொருளாதார அமைப்பாகும், அதுவே அச்சமூகத்தின் அடித்தளமாகும். இந்த அடித்தளத்தின் மீது சட்டம், அரசியல் போன்ற மேல்கட்டமைப்பு எழுப்பப்படுகிறது. இதற்கு பொருத்தமாக சமூக உணர்வின் வடிவங்கள் தோன்றுகின்றன.

மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லைஅவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.. இந்த மாற்றம் விரைவிலோ அல்லது சற்றுதாமதமாகவோ நடைபெறலாம். மனிதர்களின் சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வுநிலையை நிர்ணயிக்கிறதுஇவ்வகையில் தான் சமூக உணர்நிலையின் மாற்றத்தை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு சமூக அமைப்பும் அதன்  உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை எட்டுவதற்குமுன்பாக மறைந்திடுவதில்லை. அச்சமூகத்திலுள்ள பழைய உற்பத்தி உறவுகள் அகற்ற வேண்டுமானால், புதிய உற்பத்தி உறவுகள் தோன்றுவதற்கான, பொருளாயத நிலைமைகள் அச்சமூகத்தில் தோன்றியிருக்க வேண்டும்.
II
உற்பத்தியும், மறுவுற்பத்தியும், அடித்தளத்தை நிர்ணயிக்கிற சக்தியாகும். ஆனால், மேற்கட்டமைப்பு அடித்தளத்தை தாக்கம் செலுத்துவதையும், இடைச்செயல் புரிவதையும் மார்க்சியம் மறுத்திடவில்லை. இந்த இடைத்தொடர்பு மிகவும்  தொலைவானதாக இருக்கிறது, முடிவில்லாத தற்செயல் நிகழ்வுகளுக்கு மத்தியில்முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது. மேற்கட்டமைப்பு பலயினங்களில் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரிதளவாயிருக்கின்றன

III
இரண்டாம் நிலையானாலும் சித்தாந்தங்கள் அடித்தளத்தின் மீது எதிர்ச்செயல் புரிவதை மார்ச்சியம் மறுக்கவில்லை. இதனை மறுப்பவர்கள் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை  இயக்கவியல் கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை, காரணத்தை ஒரிடத்திலும், விளைவை வேறோர் இடத்திலும் காண்கிறார்கள். ஆனால் இந்த இடைச்செயல் சார்பானதாகும், மேற்கட்டமைப்பு அடித்தளத்திற்கு கட்டுப்பட்ட வகையில் தனது செயற்பாட்டில் சுதந்திரம் பெற்று அடித்தளத்தில் தாக்கம் செலுத்துகிறது. இந்த சார்பான தாக்கம், மேற்கட்டமைப்பின் முழுச்சுதந்திரம் பெற்றதாகவோ, அடித்தளத்தை  நிர்ணயிக்கிற சக்தி உடையதாகவோ கணக்கிடமுடியாது. பொருளாதார இயக்கம் மிகவும் வலிமையானதாகவும், ஆதிமூலமானதாகவும், தீர்மானகரமான சக்தியாகவும் இருக்கிறது.

இந்த மூன்று பகுதியின் தொகுபிற்குரிய மார்க்சிய ஆசான்களின் கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
I
மார்க்ஸ் கூறுகிறார்:-
 மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும்  சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளில் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.

இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.

                   .. .. ..
பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டுமானம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ, மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம், அரசியல், மதம், கலைத் துறை அல்லது தத்துவஞானத் துறைகளில் - சுருக்கமாகச் சொல்வதென்றால்  சித்தாந்தத் துறைகளில் - இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து  கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.
 .. ..
இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாக, உற்பத்தியின் சமூக சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள போராட்டத்தின் மூலமாகவே விளக்க முடியும்.

எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை, புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை
அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு  முன்னுரை

எங்கெல்ஸ் கூறுகிறார்:-
 சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான் மெய்யான அடித்தளமாய் எப்பொழுதும் அமைகிறது. இதிலிருந்து தொடங்கினால்தான் வரலாற்றின் அந்தந்தக் காலக் கூறுக்கும் உரிய நீதிநெறி அரசியல் நிறுவனங்களும் மற்றும் சமயக் கருத்துக்களுமாகிய மேற்கட்டமைப்பு அனைத்திற்கும் நாம் முடிவான விளக்கம் காணமுடிகிறது.... இதுகாறும் செய்யப்பட்டது போல மனிதனது உணர்வைக் கொண்டு அவனுடைய வாழ்நிலைக்கு விளக்கம் கூறுவதற்குப்பதில், மனிதனது வாழ்நிலையைக் கொண்டு அவனுடைய உணர்வுக்கு விளக்கம் கூறுவதற்கு ஒரு வழி கண்டறியப்பட்டது.                                      டூரிங்குக்கு மறுப்பு

II
எங்கெல்ஸ் கூறுகிறார்:-
 ...வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கருதுகோளின்படி மெய்யான வாழ்க்கையின் உற்பத்தியும் மறுவுற்பத்தியுமே வரலாற்றை முடிவாக நிர்ணயிக்கின்ற சக்திகளாகும். மார்க்சோ, நானோ இதற்கு மேல் ஒருபோதும் சொல்லவில்லை. ஆகவே பொருளாதாரக் கூறு ஒன்றுதான் நிர்ணயிக்கின்ற ஒரே கூறு என்று யாராவது இதைத் திரித்துக் கூறினால், அவர் இந்தக் கருதுகோளைப் பொருளில்லாத, சூக்குமமான, அர்த்தமில்லாத சொற்றொடராக மாற்றிவிடுகிறார். பொருளாதார நிலைமைதான் அடிப்படை, ஆனால் மேற்கட்டபைப்பின் பல்வேறு கூறுகள் - வர்க்கப் போராட்டத்தின் அரசியல் வடிவங்களும் அதன் விளைகளும், வெற்றிகரமான சண்டைக்குப் பிறகு வெற்றி பெற்ற வர்க்கம் நிறுவிய அரசியலமைப்பு, இதரவை, சட்டவியல் வடிவங்கள், பங்கெடுப்பவர்களின் அறிவில் இந்த மெய்யான போராட்டங்கள் எல்லாவற்றின் மறிவினைகளும் கூட, அரசியல், சட்டவியல், தத்துவஞானத் தத்துவங்கள், சமயக் கருத்துக்களும் வறட்டுக் கோட்பாடுகளைக் கொண்ட அமைப்புகளாக அவற்றின் கூடுதலான வளர்ச்சியும் - வரலாற்றுப் போராட்டங்களின் நிகழ்வுப்போக்கின் மீது தாக்கம் செலுத்துகின்றன, பல இனங்களில் அவற்றின் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரிதளவாயிருக்கின்றன.

இக்கூறுகள் அனைத்தும் இடைச்செயல் புரிகின்றன, அந்த முடிவில்லாத தற்செயல் நிகழ்வுகளுக்கு (அதாவது, பொருள்கள் மற்றும் சம்பவங்களின் உள்இடைத்தொடர்பு மிகவும் தொலைவானதாக அல்லது நிரூபிக்க முடியாததாக இருப்பதால் அதை இல்லை என்று, அற்பமானதென்று நாம் கருத முடியாது) மத்தியில் முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது.
பிலோஹுக்கு எழுதிய கடிதம் செப்டெம்பர் 21 (22) 1890


III
எங்கெல்ஸ் கூறுகிறார்:-
 ... பொருளாயத வாழ்க்கை முறை முதன்மையாக இருந்தாலும் சித்தாந்த துறைகள் தம்மளவில் - இரண்டாம் நிலையான விளைவுடன் என்றாலும் கூட - எதிர்ச்செயல் புரிவதை இது தடுக்கவில்லை என்பதை இந்த நபர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால், அவர் எதைப் பற்றி எழுதுகிறாரோ, அந்தப் பொருளைப் புரிந்து கொண்டிருப்பது சாத்தியமல்ல.
கோ.ஷ்மிட்டுக்கு எழுதிய கடிதம் ஆகஸ்ட் 5, 1890

எங்கெல்ஸ் கூறுகிறார்:-
 இந்தக் கனவான்கள் எல்லோரிடமும் இயக்கவியல் கிடையாது. அவர்கள் எப்பொழுதும் ஓரிடத்தில் காரணத்தையும் இன்னோர் இடத்தில் விளைவையும் பார்க்கிறார்கள். அது ஒன்றுமில்லாத சூக்குமம், அத்தகைய இயக்க மறுப்பியலான எதிர்முனைக் கோடிகள் மெய்யுலகத்தில் நெருக்கடிகளில் மட்டுமே நிலவுகின்றன, அப்பொழுது மொத்த, பரந்தகன்ற நிகழ்வுப் போக்கும் இடைச்செயலின் வடிவத்தில் நடைபெறுகிறது (இடைச்செயலில் ஈடுபடும் சக்திகள் மிகவும் சமமில்லாதவை என்றாலும், இவற்றில் பொருளாதார இயக்கம் இதுவரை மிக வலிமையான, மிகவும் ஆதிமூலமான, மிகவும் தீர்மானகரமான சக்தியாக இருக்கிறது) இங்கே எல்லாமே சார்பு நிலையானது. எதுவுமே தனிமுதலானது அல்ல - இதை அவர்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை.
எங்கெல்ஸ் ஷ்மிட்டுக்கு எழுதிய கடிதம்

அரசியல், சட்டவியல், தத்துவஞான, சமய, இலக்கிய, கலை, இதர வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது, ஆனால் இவை அனைத்தும், ஒன்றின் மீது ஒன்றும், பொருளாதார அடிப்படையின் மீதும் எதிர்ச்செயல் புரிகின்றன. மற்றவை ஒவ்வொன்றும் செயலற்ற விளைவை       மட்டுமே கொண்டிருக்கின்றன, பொருளாதார நிலைமை காரணமாக, தனியாக சுறுசுறுப்புடன் செயல் புரிகிறது என்பதல்ல. பொருளாதார அவசியத்தின் அடிப்படையில்  அது இறுதியில் எப்பொழுதும் தன்னை வலியுறுத்துகிறது       இடைச்செயல் நடைபெறுகிறது.              -எங்கெல்ஸ் வொ.போர்கியுசுக்கு எழுதிய கடிதம், லண்டன், ஜனவரி 25, 1894

தொகுத்துக் கொண்டதை, மார்க்சிய ஆசான்களான மார்க்ஸ், எங்கெல்ஸ், ஆகியோர்களின் கூற்றைக் கொண்டே சரிபார்த்தோம். இப்போது மார்க்சியத்தை புரட்டுபவர்கள் எவ்வாறு திருத்தல் பணியினை செய்கின்றனர் என்பதை காண்போம்.

ஏன் இவ்வாறு தொகுக்க வேண்டிவந்தது என்றால், மார்க்சியம் கூறும் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்றகிற கருத்தாக்கத்தை சிதைக்கும் போக்கு தமிழகத்தில் மிகவும் கடுமையாக நடத்தப்பட்டு வருகிறதுஅடித்தளம் மேற்கட்டுமானம் என்ற எதிர்வுகளுக்கு மார்க்சிய முதலாசிரியர்கள் கூட இவ்வளவு இறுக்கத்தை வழங்கினார்களா என்பது சந்தேகமே. இயங்கியல் எதிர்வுகளை நெகிழ்வாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடு ஒன்றிலிருந்து மற்றதை வருவிக்கும் முறையியலை அவர்கள் ஏற்கவில்லை. ஹெகலிய இயங்கியலில் கூட இத்தனை இறுக்கம் கிடையாது  என்று மார்க்சின் கருத்தை புரட்டி, சிதைக்கும் போக்கு அதிகமாகவே நடத்தப்படுகிறது. இவர்களது கருத்து மேலே தொகுத்த மார்க்சிய கருத்தாக்கத்தை சந்தேகிக்கும் போக்காகும்.

அதுமட்டுமல்லாது, மார்க்சியம் எதை எதிர்த்து தோன்றியதோ, அந்த பழைய நிலைக்கு மார்க்சியத்தை எடுத்துச்செல்லும் வேலையை செய்கிறது இந்தப் போக்கு.

மார்க்சின் உடலைப் புதைக்கின்ற பொழுது எங்கெல்ஸ் நிகழ்த்திய உரையில் கூறினார்:-
  .. ஒரு குறிப்பிட்ட மக்களினம் அல்லது குறிப்பிட்ட சகாப்தத்தின் போது அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவு என்னும் அடிப்படையின் மீது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சட்டவியல் கருத்தாக்கம், கலை மற்றும் மதக் கருத்துக்கள் கூட வளாச்சியடைகின்றன, ஆகவே அதன் ஒளியில் அவற்றை விளக்க வேண்டமே அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது
  இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாதுஎன்று எங்கெல்ஸ் குறிப்பிட்டதற்கு மாறாக பழையபடி மீண்டும் மறுதலையாக, அதாவது மனிதர்களின் உணர்வுநிலையைக் கொண்டு சமூகவாழ்நிலையை விளக்க முற்படுகின்றனர்.
இந்த போக்கு அனைத்துலகிலும் காணப்படுகிறது.
மேலை நாடுகளில் மார்க்சியத்தை சிலர் விஞ்ஞான மார்க்சியம், விமர்சன மார்க்சியம் என இரண்டாகப் பிரித்து பார்க்கின்றனர்.

விஞ்ஞான மார்க்சியம் என்பது  சமூக எதார்த்ததை, சமூக உற்பத்தி முறைகளில் உள்ள புறவய முரண்பாடுகளில் காண்கிறது. கட்சி, நடைமுறை, புரட்சியின் அகவயக் காரணிகள், கருத்தியல் போன்ற தத்துவார்த்த நடவடிக்கைகளுக்கு முதன்மை கொடுப்பது விமர்சன மார்க்சியம் என்கின்றனர்.

                மார்க்சியத்தை இரண்டாக்குவதின் மூலம், மார்க்சியத்தை நீர்த்து போக வைக்க முயற்சிக்கின்றனர். மார்க்ஸ், எங்கெல்ஸ் கூற்றுகளை திரித்தும், மாற்றியும் விளக்கம் அளிப்பதின் வழியில் இதனை செய்கின்றனர்.

இதற்கு எங்கெல்ஸ் எழுதிய இரு கடிதங்களை பயன்படுத்துகின்றனர். ஆதில்  பொருளாதார மண்டலத்தில் நடைபெறும் மோதல்கள் இயல்பாகவே அரசியல் புரட்சிகளில் பிரதிபலிக்கிறது என்ற இயந்திரத்தனமான துர்வியாக்கியானத்தை அம்பலப்படுத்தி எங்கெல்ஸ்க எழுதியிருப்பதாக தெரிவிக்கின்றனர். இக் கூற்றில் பொருளாதார உற்பத்தி முறை என்னும் அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது என்பதை தெரிவிக்காமல், மார்க்சின் கண்டுபிடிப்பான வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மறைக்கப்படுகிறது. இதன் மூலம்  அடித்தளத்துக்கும் மேற்கட்டுமானத்துக்குமான உறவுகள் பொருளாதாரத்துக்கு நேர் பொருத்தமாக அரசியல், கலை, இலக்கியம் என்றெல்லாம் வருவது கிடையாது. ஒவ்வொரு துறைக்கும் சுயேச்சையான தனி வரலாறு உண்டு. இவற்றிடையே செயற்கையாக முடிச்சுப் போடும் முயற்சிகள் உண்டு. அதேபோல இவை ஒன்றின் மீதொன்று செலுத்துகிற தாக்கத்தைக் காணாதிருப்பதும் தவறுக என்ற மார்க்சியத்திற்கு முரணான முடிவிற்கு வருகின்றனர்.

இந்த வழியில் செல்லும் போது  மார்க்சியத்தில் மிக அடிப்படையான ஒரு கூறு அடித்தளத்துக்கும் மேற்கோப்புக்கும் இடையிலான உறவு. அடித்தளமும் மேற்கோப்பும் ஒன்றை ஒன்று பாதிப்பது. ஒன்றோடொன்று முரண்படுவது.க ஏன்று கூறி, பிறகு  அடித்தளம் மேற்கட்டுமானத்தை தீர்மானிக்கிறது. மேற்கட்டுமானமும் அடித்தளத்தை தீர்மானிக்கிறதுக என்ற முடிவிற்கு வருகின்றனர். இறுதியாக மார்க்சின் கண்டுபிடிப்பான, ஏடறிந்த வரலாற்று அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறு என்பதும், அதன் விளக்கமான, அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கமும், ஆக வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தையே கொச்சைப்படுத்திவிடுகின்றனர்.

 சமூக வாழ்நிலை தான், சமூக உணர்வுநிலையை உருவாக்குகிறது என்பதை எற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதால், மார்க்சிய முடிவுகளை நோக்கி இவர்களால் வரமுடியாமல் போகிறது.

எங்கெல்ஸ் கூறுகிறார் :-
"வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கருத்தோட்டமானது (மனித வாழ்வுக்கு ஆதாரமான சாதனங்களின்) உற்பத்தியும், அதற்கு அடுத்தபடி இந்த உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனையும் தான், சமுதாயக் கட்டமைப்பு அனைத்துக்குமான அடித்தளமாகும் என்ற வரையறுப்பிலிருந்து தொடங்குகிறது. வரலாற்றில் தோன்றியுள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் எவ்விதம் செல்வம் வினியோகிக்கப்படுகிறது, சமுதாயம் எப்படி வர்க்கங்கள் அல்லது படிநிலைகளாய் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பது, என்ன உற்பத்தி செய்யப்படுகிறது, எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்திப் பொருள்கள் எவ்விதம் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றன என்பவற்றைச் சார்ந்தே உள்ளது. இந்தக் கண்ணோட்டத்தின் படி எல்லாச் சமுதாய மாறுதல்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான இறுதிக் காரணங்களைப் பொருளுற்பத்தி மற்றும் வினியோக முறைகளின் மாற்றங்களில் கண்டறிய வேண்டுமே அல்லாது, மனிதனது மூளையில் அல்லநிலையான சாசுவத உண்மை மற்றும் சாசுவத நீதி குறித்து மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வில் அல்ல. இவற்றை அந்தந்த சகாப்தத்தின் பொருளியலில் கண்டறிய வேண்டுமே அல்லாது தத்துவவியலில் அல்ல."                                    -டூரிங்குக்கு மறுப்பு



லெனின் கூறுகிறார்:-
"இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் (மார்க்ஸ்) விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதம்  விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய  கருத்துக்களில் குழப்பமும் தான்தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த  முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் வந்துவிட்டது."
மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் - லெனின்

மேலே எங்கெல்சின் கூற்றான சமுதாய மாறுதல்களை தத்துவயியலில் அல்ல பொருளியலில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதையும், லெனின் கூறிய வரலற்றையும், அரசியலையும் பற்றி பழைய குழப்பமும், தான்தோன்றித் தனமும் நீங்கிவிட்டதும், உள்ளிணக்கம் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவத்தையும், இந்த புரட்டல் பகட்டு அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.

புரட்டல்வாதிகள் தவறாகப் பயன்படுத்தும், எங்கெல்சின்  இரு கடிதங்களை இப்போது பார்வையிடுவோம்.

எங்கெல்ஸ் பிலோஹுக்கு எழுதிய (செப்டெம்பர் 21 (22) 1890) கடிதம்:-
 இளைஞர்கள் சில சமயங்களில் பொருளாதாரத் தரப்பின் மீது உரியதைக் காட்டிலும் அதிகமான அழுத்தம் கொடுப்பதற்கு மார்க்சும் நானும் பகுதியளவுக்குப் பொறுப்பாகும். முக்கியமான கொள்கையை மறுத்த எதிரிகளுக்கு எதிராக நாங்கள் அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியிருந்தது, இந்த இடைச்செயலில் பங்கெடுக்கின்ற மற்ற கூறுகளுக்கு உரிய அழுத்தம் கொடுப்பதற்கு அவசியமான காலம், இடம் அல்லது சந்தர்ப்பம் எங்களுக்கு எப்பொழுதும் இருக்கவில்லை. ஆனால் வரலாற்றின் ஒரு காலகட்டத்தை ஆராய்ச்சி செய்வது, அதாவது செய்முறையில் அதைக் கையாளுவது என்பது வேறு விஷயம், அங்கே தவறு செய்வதை அனுமதிக்க முடியாது.

எங்கெல்ஸ் மேரிங்குக் எழுதிய (ஜுலை 14, 1893)கடிதம்:-
"...மற்றபடி ஒரே ஒரு விஷயம் மட்டுமே இடம் பெறவில்லை, ஆனால் மார்க்சும் நானும் எங்களுடைய எழுத்துக்களில் அதைப் போதுமான அளவுக் வலியுறுத்தத் தவறினோம், அதைப் பொறுத்தமட்டில் நாங்கள் சம அளவுக்குத் தவறு செய்தவர்களே. அதாவது, நாங்கள் பிரதான அழுத்தத்தை முதலாவதாக அரசியல், சட்டவியல் மற்றும் இதர சித்தாந்தக் கருத்துக்களையும் இக்கருத்துக்கள் என்னும் ஊடகத்தின் மூலமாகத் தோன்றுகின்ற நடவடிக்கைகளையும் அவற்றின் அடிப்படையான பொருளாதார மெய்விவரங்களிலிருந்து பெறுவதற்குக் கொடுத்தோம், அப்படிச் செய்யக் கடமைப்பட்டிருந்தோம். ஆனால் நாங்கள் அப்படிச் செய்கின்ற பொழுது, உள்ளடக்கத்துக்காக வடிவத்தைப் பற்றிய பிரச்சினையை, அதாவது இக்கருத்துக்கள் ஏற்படுகின்ற வழிகளை, இதரவற்றைப் புறக்கணித்தோம். அது நமது எதிரிகள் எங்களைத் தவறாகப் புரிந்துக் கொள்வதற்கும் திரித்துக் கூறுவதற்கும் விரும்பத்தக்க சந்தர்ப்பத்தை அளித்தது.

...விஷயத்தின் இந்த அம்சத்தை என்னால் இங்கே ஓரளவு தான் சுட்டிக்காட்ட முடிகிறது. இந்த அம்சத்தை நாம் அதற்குரியதைக் காட்டிலும் அதிகமாகப் புறக்கணித்திருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். அது பழைய கதையே, உள்ளடக்கதுக்காக முதலில் வடிவம் எப்பொழுதுமே புறக்கணிக்கப்படுகிறது. ஏற்கெனவே நான் கூறியபடி நானும் இதைச் செய்திருக்கிறேன், அது தவறு என்று பிற்பாடுதான் எனக்குப் பட்டிருக்கிறது. ஆகவே நான் உங்களை இதற்காக எவ்விதத்திலும் குறைசொல்லாதது மட்டுமன்றி - தவறு செய்த தரப்பினரின் மூத்தவர் என்ற முறையில் அப்படிச் செய்வதற்கு எனக்கு உரிமையில்லை - அதற்கு மாறாக. எனினும் மற்றவை எப்படியிருந்தாலும் எதிர்காலத்தை முன்னிட்டு இந்த அம்சத்தை உங்களுடைய கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

வரலாற்றில் பாத்திரம் வகிக்கின்ற பல்வேறு சித்தாந்தத் துறைகள் சுயேச்சையாக வரலாற்று ரீதியில் வளர்ச்சி  அடைவதை நாம் மறுப்பதால், அவை வரலாற்றின் மீது எவ்விதமான தாக்கத்தைச் செலுத்துவதையும் நாம் மறுக்கிறோம் என்னும் சித்தாந்திகளின் முட்டாள் தனமான கருத்தும் இதனுடன் சேர்ந்திருக்கிறது. காரணமும் விளைவும் தவிர்க்க இயலா எதிர்முனைகள் என்னும் பொதுப்படையான, இயக்கவியல் அல்லாத கருதுகோள், இடைச்செயல் முற்றிலும் கருதப்படாமல் இருப்பது இதற்கு அடிப்படை ஆகும். வரலாற்று நிகழ்ச்சி மற்ற காரணிகளால், முடிவில் பார்க்குமிடத்து பொருளாதாரக் காரணிகளால் ஏற்படுவதால், அது உடனேயே தீவிரமான காரணியாகிறது, அதன் சூழ்நிலை மற்றும் அதைத் தோற்றுவித்த காரணங்களின் மீது கூட அதனால் எதிர்ச்செயல் புரிய முடியும் என்பதை இந்தக் கனவான்கள் பெரும்பாலும் அநேகமாக திட்டமிட்ட முறையிலும் மறந்து விடுகிறார்கள்."

 உள்ளடக்கத்தை விளக்கிய அளவிற்கு வடிவத்தை விளக்கவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறார் எங்கல்ஸ், அத்தோடு இதை அன்றே பழைய கதை என்றும், எதிர்காலத்தை முன்னிட்டும் கவனத்திற்கும் கொண்டுவந்து விவரித்தும் உள்ளார்.

                எங்கெல்ஸ் சித்தாந்த துறையின் தனித்த சுயேச்சையைத் தான் மறுக்கிறார். சித்தாந்தம் வரலாற்றின் மீது எவ்வித தாக்கத்தையும் செலுத்தவில்லை என்று மறுப்பதான, முட்டாள் தனமான சித்தாந்திகளின் கூற்றைத் தான் எதிர்க்கிறார். அத்துடன் காரணமும் விளைவும் தவிர்க்க இயலாத எதிர்முனைகள் என்னும் பொதுப்படையான, இயக்கவியல் அல்லாத கருதுகோள், இடைச் செயல் முற்றிலும் கருதப்படாமல் இருப்பது இதற்கு அடிப்படை ஆகும் என்று முட்டாள் தனமான சித்தாந்திகளின்  கூற்றாக எழுதியிருக்கிறார்.

அடித்தளத்தின் மீது மேற்கட்டமைப்பு எதிர்ச்செயல் புரிவதை மார்ச்சியம் மறுக்கவில்லை. இதனை மறுப்பவர்கள் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை  இயக்கவியல் கண்ணோட்டத்தில் அணுகவில்லை என்கிறார் எங்கெல்ஸ். மேற்கட்டமைப்பு அடித்தளத்திற்கு கட்டுப்பட்ட வகையில் தனது செயற்பாட்டில் சுதந்திரம் பெற்று அடித்தளத்தில் தாக்கம் செலுத்துவதை மார்க்சியம் மறுத்திடவில்லை.


இயக்கவியலை தளரவிட்டவரைப் பற்றி எங்கெல்ஸ் ஷ்மிட்டுக்கு எழுதிய (அக்டோபர் 27, 1890) கடிதம் எழுதுகிறார்:-
 ...பொருளாதார இயக்கத்தின் அரசியல், இதர பிரதிபலிப்புகள் அந்த இயக்கத்தின் மீது செலுத்துகின்ற ஒவ்வொரு எதிர்த்தாக்கத்தையும் நாங்கள் மறுப்பதாக பார்ட் கருதினால், அவர் வெறும் கற்பனையுடன் போராடுகிறார். அவர் மார்க்ஸ் எழுதிய பதினெட்டாம் புரூமேரைப் பார்த்தால் போதும், அரசியல் போராட்டமும் சம்பவங்களும் - பொருளாதார நிலைமைகளை அவை பொதுப் படையில் சார்ந்திருக்கின்ற நிலைக்குள் என்பது மெய்யே - வகித்த குறிப்பிட்ட பாத்திரத்தை இந்நூல் அநேகமாக முற்றாக ஆராய்கின்றது, அல்லது மூலதனத்தை, உதாரணமாக நாள் வேலை நேரத்தைப் பற்றிய பகுதியைப் படிக்கட்டும், அரசியல் நடவடிக்கையான சட்டம் அத்ததைய பெரும் அழுத்தத்தைக் கொண்டிருக்கிறது, அல்லது முதலாளி வர்க்கத்தின் வரலாற்றைப் பற்றி பகுதியை (அத்தியாயம் xxiv) படிக்கட்டும். அரசியல் அதிகாரம் பொருளாதார ரீதியில் சக்தியில்லாதது என்றால், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் சர்வாதிகாரத்துக்காக நாங்கள் போராடுவது ஏன்? பலாத்காரம் (அதாவது, அரசின் ஆட்சியதிகாரம்) ஒரு பொருளாதாரச் சக்திதானே!
...
இந்தக் கனவான்கள் எல்லோரிடமும் இயக்கவியல் கிடையாது. அவர்கள் எப்பொழுதும் ஓரிடத்தில் காரணத்தையும் இன்னோர் இடத்தில் விளைவையும் பார்க்கிறார்கள். அது ஒன்றுமில்லாத சூக்குமம், அத்தகைய இயக்க மறுப்பியலான எதிர்முனைக் கோடிகள் மெய்யுலகத்தில் நெருக்கடிகளில் மட்டுமே நிலவுகின்றன, அப்பொழுது மொத்த, பரந்தகன்ற நிகழ்வுப் போக்கும் இடைச்செயலின் வடிவத்தில் நடைபெறுகிறது (இடைச்செயலில் ஈடுபடும் சக்திகள் மிகவும் சமமில்லாதவை என்றாலும், இவற்றில் பொருளாதார இயக்கம் இதுவரை மிக வலிமையான, மிகவும் ஆதிமூலமான, மிகவும் தீர்மானகரமான சக்தியாக இருக்கிறது) இங்கே எல்லாமே சார்பு நிலையானது. எதுவுமே தனிமுதலானது அல்ல - இதை அவர்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை.

பொருளாதார இயக்கத்தின் அரசியல், இதர பிரதிபலிப்புகள் அந்த இயக்கத்தின் மீது செலுத்துகின்ற ஒவ்வொரு எதிர்த்தாக்கத்தையும் நாங்கள் மறுப்பதாக கருதினால், அவர் வெறும் கற்பனையுடன் போராடுகிறார் என்று தெளிவாக இக்கடிதத்தில் எங்கெல்ஸ் கூறுயிருக்கிறார்.

மார்க்சியத்தை புரட்டுபவர்கள் கிராம்க்சியின்  பண்பாட்டு மார்க்சியத்தை , மார்க்சியத்தின் அடிப்படைகளில் திணிக்க விரும்புகின்றனர்.

 கிராம்க்சியின் கண்ணோட்டதைப் பார்ப்போம்.

கிராம்க்சியின் கருத்துக்கள் குழப்பம் நிறைந்தாக காட்சியளிக்கிறது, இந்தக் குழப்பம் அவரது முடிவுகளை பாதிக்கிறது.
  ..பொருளாதார சக்திகள் உள்ளடக்கமாவும் கருத்துநிலைகள் வடிவமாகவும் அமைகின்றன. ஆனால் உள்ளடக்கம் என்றும் வடிவம் என்றும் வேறுபடுத்திப் பார்ப்பது விஷயத்தைப் புரிந்து கொள்வதற்காகச் செய்யப்படும் பாகுபாடே அன்றி வேறல்ல.
(கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்   எஸ்.வி.ராஜதுரை வ.கீதா பக். 466)

மார்க்சியம் கூறும் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்பதை, வெறும் புரிந்து கொள்வதற்கு வகுத்துக்கொண்ட பாகுபாடாக மட்டுமே பார்க்கிறார். பொருளாதார சக்திகள் மேற்கட்டமைப்பை  தீர்மானிக்கிறது என்ற மார்க்சின் கண்டுபிடிப்பை ஏற்றுக்கொள்ளும் நிலையில் கிராம்ஸ்கி இல்லை.
   .. வரலாற்று ரீதியாக, பொருளாயதச் சக்திகளை அவற்றுக்குள்ள வடிவங்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. அதுபோல பொருளாயதச் சக்திகளிலிருந்து கருத்துநிலை வடிவங்களைப் பிரித்துப் பார்த்தால் அவை தனிமனிதர்களின் வெறும் கற்பனையாகவே காட்சியளிக்கும்.
(கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்   எஸ்.வி.ராஜதுரை வ.கீதா பக். 466)

      இதில், பொருளாதார சக்திகளை அதற்குரிய வடிவங்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது, என்றும் பொருளாதார சக்திகளிலிருந்து கருத்துநிலை வடிவங்களை பிரித்துப் பார்த்தால் அது தனிமனிதர்களின் வெறும் கற்பனையாகவே இருக்கும் என்று கூறும் கிராம்ஸ்கியின் கூற்றில் பொருளாதார சக்திகள் வடிவத்தை (மேற்கட்டமைப்பை) தீர்மானிக்கிறது என்ற மார்க்ஸ் கண்டுபிடிப்பை பற்றி புரிதல் இல்லை. அதனை ஏற்றுக் கொள்ளவும் இல்லை என்பது தான் உண்மை. அடித்தளம் மேற்கட்டமை என்ற இரண்டையும் சமநிலையில வைத்துப் பார்க்கிறார். இந்த மார்க்சியத்திற்கு மாறான கருத்தாக்கத்தில் நிலைகொண்டிருப்பதால், அவரது முடிவுகள் மார்க்சியத்திற்கு எதிராக வெளிப்படுகிறது.

கிராம்சி கூறுகிறார்:
 ..அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பே பாட்டாளி வர்க்கம் தனது மேலாண்மையை வளர்த்துக் கொள்வதும் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு உருவாக்கும் எதிர்கால சோசலிச அரசின் கூறுகளை இப்போதே உருவாக்கத் தொடங்குவதும் அவசியம். இங்குதான் அறிவாளிகளின் பங்கு முக்கியமாகிறது
(கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்   எஸ்.வி.ராஜதுரை வ.கீதா பக். 470)

கிராம்சி மேலே கூறிய  பொருளாயதச் சக்திகளிலிருந்து கருத்துநிலை வடிவங்களைப் பிரித்துப் பார்த்தால் அவை தனிமனிதர்களின் வெறும் கற்பனையாகவே காட்சியளிக்கும்  என்பதற்கு மாறாக, இங்கே அவரே  எதிர்கால சோஷலிச அரசிற்கு தேவைப்படும் வடிவத்தை, இப்போதே உருவாக்க தொடங்கவும், அதற்கான அறிவாளிகளின் பங்கையும் முதன்மை படுத்தவும் செய்கிறார். மேலே கூறிய கிராம்க்சியின் கூற்றின்படி, அரவரது பாட்டாளி வர்க்கத்தின் மேலாண்மை என்பது அறிவாளிகளின் கற்பனையாகவே முடியும் என்பது சந்தேகம் இல்லை.

லெனின் கூறுகிறார்:-
 .. நாம் கற்கனாவாதிகள் அல்ல.
.. புரட்சிக்குப் பிறகு சில காலத்துக்கு பழைய அறநெறியின் சாயல்கள் புதியதன் இளங் குருத்துக்களை விஞ்சி ஆதிக்கம் புரியவே செய்யும் என்பதையும் அறிவோம். குறிப்பிட்ட சிறிது காலத்துக்கு பழையது அதைக் காட்டிலும் பலம் கொண்டதாகவே இருக்கும். இயற்கையிலும் சமூக வாழ்விலும் எப்பொழுதும் இப்படித்தான்                                மாபெரும் தொடக்கம்

இங்கு அறநெறிக்கு கூறியது, பொதுவாக எல்லா கருத்துநிலைகளுக்கும் பொருந்தும்.
கிராம்சியின் மார்க்சியத்திற்கு முரணான சிந்தனை, அவரது கீழ் காணும் முடிவில் அடங்கியிருக்கிறது.
கிராம்சி கூறுகிறார்:
 பொருளாதாரக் கட்டமைப்புக்கும் அரசியல் அமைப்புக்கும் இடையில் எளிமையான, நேரடியான உறவுகள் இல்லை. மக்களின் வரலாறு என்பது பொருளாதார விவரங்களை மட்டும் கொண்டு உருவாக்கப்படவில்லை. அரசியல் அமைப்புக்கான காரணகாரியங்களைக் கண்டிறிவது சிக்கலானது கடினமானதுமாகும். இக்காரண காரியங்களைப் பிரித்துப் பார்ப்பதற்குப் பல்வேறு வகையான சிந்தனைகளையும் நடைமுறைகளையும் ஆழமாகவும் பல்வேறு கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து அறிவது இன்றியமையாதது.. வரலாறு என்பது கணிதம் அல்ல 
(கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்   எஸ்.வி.ராஜதுரை வ.கீதா பக். 13)

கிராம்சியின் சிந்தனைகள், மார்க்ஸ் கண்டுபிடிப்பான, வரலாற்றியல் பொருள்முதல்வாதத்திற்கு எதிரானது என்பது, வெளிப்படையாகவே தெரிந்து விடுகிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் சாரமே, வரலாற்றின் வளர்ச்சியை கணித்துக் கண்டறிவதுதானே.

 மார்க்சிய சிந்தனையை நமது சொந்தச் சூழல்களுக்கேற்ப வளர்த்தெடுக்க வேண்டும் என்பது பேராசியர் நா.வா. அவர்களே மாணவர்களுக்கு இட்ட பணியாகும்க என்ற கருத்தும் தமிழகத்தில் காணப்படுகிறது. பேராசியர் நா.வானமாமலை அவர்கள் நமது சொந்தச் சூழல்களுக்கேற்ப மார்க்சிய சிந்தனையை வளர்த்தெடுக்க சொன்னதாக சொல்வதில் உள்ள தொனி, மண்ணிற்கேற்ற மார்க்சியம் என்பது போல் ஒலிக்கிறது. ஆனால் பேராசியர் நா.வா. அவர்களின் கருத்தை 'மார்க்சிய தத்துவம்' என்ற தமது நூலில் தெளிவாக  எழுதியிருக்கிறார்.

"இந்த நூல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் இவர்களுடைய தத்துவக் கொள்கைளை விளக்கும் முயற்சியில் ஒரு சிறிய காணிக்கை. இந்நூலில் பொருள்முதல்வாதம், ஆன்மீகவாதம், இயக்கவியல் முதலிய கருத்துக்களை விளக்க இந்திய தத்துவங்களிலிருந்து உதாரணங்களைத் தந்துள்ளேன். பல நாட்டு அறிஞர்கள் மார்க்சின் தத்துவம்பற்றி எழுதியுள்ளார்கள். ஒரு ஜெர்மன்அறிஞர் எழுதிய புத்தகத்தை நான்படித்தேன். அவர், அவரது நாட்டுத் தொழிலாளிகளுக்குப் புரியும்படி ஜெர்மன் உதாரணங்களைக் கொடுத்து கருத்துக்களை விளக்கியுள்ளார். பூபூலிட்ஸர் என்ற பிரெஞ்சு பேரறிஞர், பிரெஞ்சு தத்துவம், வரலாற்றுத் துறைகளில் இருந்து எடுததுக்காட்டுகள் தந்து மார்க்சிய கருத்தமைப்புகளையும், கருத்துக்களையும் விளக்கியுள்ளார். மாரிஸ்கான்போர்த் என்னும் ஆங்கில மார்க்சிய அறிஞர், ஆங்கில உதாரணங்கள்  தந்து மார்க்சிய தத்துவத்தை விளக்கியுள்ளார். இந்தியாவில் இத்தகைய முயற்சி மிகக் குறைவு, அவ்வாறு முயற்சி செய்கிறவர்கள் மார்க்சியத்தை, வேதாந்தத்திற்குச் சமமாகவே ஆக்கிவிடுகிறார்கள்."

இதில் பேராசிரியர் எச்சரிக்கையோடு தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய தத்துவயியலிருந்து உதாரணங்களைக் கொடுத்து மார்க்சிய தத்துவயியலை தந்துள்ளேன் என்றுதான் கூறுகிறார். இது மட்டுமில்லாது, இதுபோன்ற முயற்சியில் ஈடுபடுபவர்கள் மார்க்சியத்தை வேதாந்தத்திற்குச் சமமாகவே ஆக்கிவிடுகிறார்கள் என்று வருத்தத்தோடு எழுதியுள்ளார். மார்க்சியத்தை வேதாந்தத்திற்கு சமமாக ஆக்கியர்களில் கோவை ஞானி, தோழர் காலன்துறை முதன்மையானவர்கள்.
மார்க்சிய திருத்தல்வாதிகளைப் பற்றி லெனின் கூறிய கருத்தோடு, இப்போதைக்கு முடித்துக்கொள்வோம்:-

"மார்க்சிய போதனை - தற்காலச் சமுதாயத்தின் மிகவும் முன்னேறிய வர்க்கத்துக்கு அறிவொளி ஊட்டி அதை ஒழுங்கமைக்க நேரடியாய் உதவுவதும், இந்த வர்க்கத்தின் முன்னுள்ள கடமைகளைச் சுட்டிக்காட்டுவதும், தற்போதுள்ள அமைப்பு (பொருளாதார வளர்ச்சி காரணமாய்) தவிர்க்க முடியாதபடி வீழ்த்தப்பட்டு அதனிடத்தில் ஒரு புதிய அமைப்புத் தோன்றுமென்பதை நிரூபிப்பதுமான மார்க்சியப் போதனை - அதன் வாழ்வு முழுவதும் ஒவ்வொரு அடியும் போராடியே முன்னேற வேண்டியிருந்துள்ளது என்பதில் வியப்பு ஏதுமில்லை.

..மார்க்சியத்துக்கு முற்பட்ட சோஷலிசம் நொறுக்கப்பட்டுவிட்டது. முன்பு போல தனது சொந்த அடிப்படையிலிருந்து போராடுவதற்குப் பதிலாய், இப்பொழுது அது மார்க்சியத்தின் பொது அடிப்படையிலே நின்று, திருத்தல்வாதமாய்ப் போராட்டத்தை நடத்தி வருகிறது."
மார்க்சியமும் திருத்தல்வாதமும் - லெனின்

No comments:

Post a Comment