Friday, 25 April 2014

“இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மக்கள் யுத்தப்பாதைக்கு நாடாளுமன்ற தேர்தல் பாதை உகந்ததல்ல” என்ற சமரனின் கருத்துக்கு எதிரிவினை:-

26-3-14 - தி இந்து, மதுரை இதழில் வெளிவந்த செய்தியை (https://www.facebook.com/photo.php?fbid=702303939831685&set=a.547147015347379.1073741827.100001562569130&type=1) முகநூலில் தோழர் Marx Pandian பதிந்திருந்தார். அதில் காணப்படும் செய்தி:-

மார்க்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை, கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா (யுனைடெட்), சிவப்பு நட்சத்திர மக்கள் இயக்கம். இக்கட்சிகள் இணைந்து இடது ஜனநாயக மாற்று முன்னணி உருவாகியிருக்கிறது இந்தக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் பங்கு பெறுகிறது.

இவ்வாறு இணைந்திருப்பதை பிறருக்குச் சொல்ல வேண்டும் என்று இதனை (https://www.facebook.com/eswaran.ak/posts/481753808623117?comment_id=2332926&offset=0&total_comments=33) பகிர்ந்தேன்.

இதற்கு தோழர் Manokaran Majaeka பின்னூட்டமாக இப்படி இட்டிருந்தார்:-
//தொண்டு நிறுவனங்களை ஆதரித்து அமரிக்காவக்கு சேவை செய்ய பாராளுமன்றத்தில் பங்கேற்கும் மாபெரும் புரட்சியைதான் அ கா ஈ க்கு ரொம்ப பிடிக்கும் போல! வாழ்க உமது புரட்சி தொண்டு! கத்தரிக்காய் சீக்கிரம் கடைத்தரவுக்கு வந்திடுச்சி...!!!//

உதயகுமார் புஷ்பராயன் வகையராக்களைப் பற்றியா நான் பேசிக் கொண்டிருக்கிறேன்????? என்று கேள்வியை நான் கேட்டதற்கு,

தோழர் Manokaran Majaeka //முக்கிய கேள்விக்கு பதில் சொல்லுங்க ஓடாதீங்க அ கா ஈ அவர்களே// //அமெரிக்க ஆதரவு என் ஜி ஓ களோடு கூட்டு சேர்ந்து செயல் படுவது ஆதரிக்க தகந்ததா ?//

இதற்கு பதிலாக //நாடாளுமன்றத்தை நோக்கி ஒர் அணி சேர்கிறதை பகிரும் இடத்தில், அந்தக் கூட்டணியில் இருப்பவர்களை அடிமுதல்முடிவரை விமர்சிக்கத் தேவையில்லை// என்று எழுதினேன்.

"இடது ஜனநாயக மாற்று முன்னணி" என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் பங்கு பெறுவதை தவறாக நான் கருதாததாலும் தோழர் Manokaran Majaeka இன்றைக்கும் நாடாளுமன்றத்தில் பங்கு பெறுவதையும் மறுப்பதாலும் கீழ் காணும்படி பின்னூட்டமிட்டருந்தேன்:-

//இன்பிரச்சினையில் பிரிதலுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பதை ரஷ்ய பிரச்சினையின் தனித்த தீர்வாகக் காண்பது தவறோ அதே போல் "பன்றிப்பட்டியின்" உள்ளேகூட இருந்து வேலை செய்யத் திறமை பெற்றிருக்க வேண்டும் என்று லெனின் கூறுகின்ற போல்ஷிவிசத்தை ரஷ்யாவுக்கு மட்டும் உரித்தானது என்பதும் அதே அளவுக்குத் தவறானதாகும். போல்ஷிவிசம் என்பது வெறும் கவர்ச்சி சொல்லா?, வழிகாட்டும் கோட்பாடா?.//    April 2 at 7:03pm · Like

என்று கேள்வி எழுப்பினேன்.


//இன்னமும் முக்கிய கேள்விக்கு வரவேயில்லையே ஈஸ்வரன், திருச்சபைகளும் தொண்டு நிறுவனங்களை ஆதரிப்போர் அவர்களோடு கட்டணி அமைப்போர் புரடசிக்கும் பாட்டாளிகளுக்கும் நண்ர்களா அவர்களை நீங்கள் ஏன் ஆதரிக்கிறீர்கள்? ஈஸ்வரன் நீங்கள் திருத்தல் வாதிகளையும் புதிய இடது அரசியல் பேசி அடையாள அரசியல் நடத்தும் தொண்டு நிறவனங்களையும் ஆதரிப்பது உங்கள் விருப்பம் அது உங்களின் எல்லையில்லா சுதநதிரம் அதை நாங்கள் கேள்வி எழுப்பவில்ல!

அதற்கு லெனினை பயன்படுத்துகறீர்களே அந்த கெடுமதியைத்தான் சூழ்ச்சியைத்தான் வஞ்சகத்தைதான் கேள்வி எழுப்புகிறோம்!// April 4 at 6:24am


"இடது ஜனநாயக மாற்று முன்னணி"யில் இருப்பவர்கள் உதயகுமார் புஷ்பராயன் வகையராக்களை ஆதரிப்வர் என்பதாலா? தி இந்து, மதுரை இதழின் தகவலை பகிர்ந்தேன் இல்லையே. அது மட்டுமல்லாது இதனைப் பதிவதற்கு லெனினை எங்கே நான் பயன்படுத்தினேன்? நாடாளுமன்ற புறக்கணிப்பைப் பற்றி பேசும் இடத்தில் தான் நான் லெனினை பயன்படுத்தினேன். லெனினைப் பயன்படுத்திய இடத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல் எதன் அடிப்படையில் //அதற்கு லெனினை பயன்படுத்துகறீர்களே அந்த கெடுமதியைத்தான் சூழ்ச்சியைத்தான் வஞ்சகத்தைதான் கேள்வி எழுப்புகிறோம்!// என்று எழுதுகிறார் தோழர்.

மேலும் தொடர்ந்து கேட்கிறார் தோழர் Manokaran Majaeka  :-
//அந்தஅணி உலகமய தனியார்மய புதிய காலனிய அரசியல் பொருளாதார ெகாள்கைகள எதிர்க்கும் அணியுமல்ல மாறாக புதியகாலனிய கொள்கைகளை ஆதரிக்கும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் கட்சிகள் அந்த அணியில் உள்ளன எனவே அந்த அணியும் ஏகாதிபத்திய ஆதரவு அணியே//

ஆக இவருக்கு இருக்கும் ஏகாதிபத்தி எதிர்ப்பு என்ற பெயரால் இருக்கின்ற ஒவ்வாமை (allergy) எனக்கும் இருக்கும் என்று எவ்வாறு எதிர்பார்க்கிறார் என்பது தெரியவில்லை?.

அடுத்ததாக //அதற்குதான் நான் சொன்னேன் சொல்லில் போல்ஷ்விசம் செயலில் திருத்தல்வாத மற்றும் ஏகாதிபத்திய எடுபிடிகளின் எதிர் புரட்சிகர கூட்டணிக்கு ஆதரவுதான் உங்கள் நிலைபாடு என்று!// - //கலைப்புவாதம் திருத்தல்வாதத்தை ஆதரிக்கிற படிப்பாளிகளில் ஒருவர் அ கா ஈ அவ்வளவுதான்// இதற்கு இந்த பின்னூட்டத்திற்கு முன்பும் இது போலவே பதிவிட்டுள்ளார் //சொல்லில் மாரக்சியம் நீண்டநாள் தாங்காது என்பதற்கு ஆதாரம் நிறைய உண்டு அதில் ஒருவகைதான் அ கா ஈஸ்வரன் என்பதுபுரிகிறது//April 3 at 3:02pm

எந்த விளக்கமுமற்ற இப்படி முத்திரை குத்துவது தான் இவர்களின் தோழர்களின் வேலையாக இருந்தது இப்போது இவரும் அதனையே செய்திருக்கிறார். இதனைக் குறிப்பிட்டும் பின்னூட்டம் இட்டிருந்தேன்.
//
"ஒரு சில சந்தர்ப்ப நிலைமைகளின் கீழ் ஒருவன் சதிச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பானாகில் அவன் ஒரு கோழை என்றே கருதப்படுவான். அதே போல வேறுவிதமான சந்தர்ப்ப நிலைமைகளின் கீழ் அவ்வாறு செயல்பட்டான் என்றால் ஒரு முட்டாள் என்று கருதப்படுவான்." என்று எங்கெல்ஸ் கூறுகிறவழியில் கோழையையும், முட்டாளையும் இனம் காட்டினால், உங்களது தோழர் Vennila Rajeshkhannaக்கு நான் திருத்தல்வாதியாக தெரிகிறது. Bagathsingh Barathiனுக்கு நான் மார்க்சியவாதி இல்லை என்று அருள்வாக்குக் கொடுக்கிறார். இப்போது நீங்கள் //....

நான் குறிப்பிட்டு வந்த நாடாளுமன்ற பங்கேற்பு பற்றியோ போல்ஷிவிசம் பற்றியோ எதனை குறிப்பிடாது.  சமரன் வலைபூ இணைப்பை எனக்கு அனுப்பியுள்ளார்.

இந்த இணைப்பிலிருக்கும் கருத்தினைக் கொண்ட எனக்கு பதிலளிக்காமல், அப்படியே அனுப்பியதால்  அதனை முழுமையாக படித்து எனது எதிர்வினையை இங்கே முன்வைக்கிறேன்.

'இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மக்கள் யுத்தப்பாதைக்கு நாடாளுமன்ற தேர்தல் பாதை உகந்ததல்ல." இக்கட்டுரை, சமரனில் வெளியிட்ட நாள் ஜனவரி, 1989 பதிவிடப்பட்டுள்ளது. இணையத்தில் 27-02-2014 பதிவிட்டதாக காட்டுகிறது.

இதில் வரலாற்று வழியில்-வரலாற்று பூர்வமாக- புறக்கணிப்பு- என்ற சொற்கள் முப்பதுக்கு மேற்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சொற்களை பிரட்டி, உருட்டி, முருக்கி எழுதப்பட்டிருந்தது.

இறுதியில் இந்த முடிவிற்கே வந்துள்ளனர்:-
"நமது நாட்டில் நாடாளுமன்றமுறை மற்றும் தேர்தல்களைப் புறக்கணிப்பது சரியானதும் தகுந்ததும் ஆகும். நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்குகொள்ளும் செயல்தந்திரம் பொருந்தாது."

இந்த முடிவுக்கு லெனினது ""இடதுசாரி" கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு" என்ற நூலை மிகுந்தளவுக்குப் பயன்படுத்தியுள்ளனார். அதனால் லெனின் கூறியது என்ன என்பதை அந்நூலின் வழியே முதலில் தெரிந்து கொண்டு, சமரனின் முடிவை ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்று முடிவெடுத்து அதனை தொகுக்கத் தொடங்கினேன்.

குறிப்பிட்ட நாடுகளில் நடைபெறுகிற புரட்சிகரப் போராட்ட அனுபவத்திலிருந்து பிற நாடுகள் படிப்பினைகளைப் பெறமுடியுமா? பாட்டாளி வர்க்கம் தமது கண்ணோட்டத்தை சர்வதேசிய அடிப்படையில் தான் வகுத்துக் கொள்கிறது. ஒரு நாட்டிலிருந்து கொண்டு பாட்டாளி வார்க்கம் தானது சர்வதேசியத்தை பேசுகிறது என்பது தெரிந்த ஒன்றே.

இதனை லெனின் பாரிஸ் கம்யூன் அனுபவத்தைக் கொண்டு கூறுகிறார்:-
"1871 பிரெஞ்சுப் புரட்சியோடு ஒப்பிடும் போது குறிக்கோளிலும் கடமையிலும் ருஷ்யப் புரட்சி வேறுபட்டிருந்த போதிலும், பாரிஸ் கம்யூன் பயன்படுத்திய அதே போராட்ட முறைத்தான், அதாவது உள்நாட்டு போர் முறையைத்தான், ருஷ்யப் பாட்டாளி வாக்கமும் பயன்படுத்த வேண்டியிருந்தது.

கம்யூனின் படிப்பினையைக் கணக்கில் எடுத்ததால் பாட்டாளி வர்க்கம் சமாதான பூர்வமான போராட்ட முறைகளை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை உணர்ந்திருந்தது. சமாதான பூர்வமான போராட்ட முறைகள் அதனுடைய சாதாரண, அன்றாட நலன்களுக்கு பயன்படுகின்றது, புரட்சிக்குத் தயார் செய்யும் காலத்திலும் அவை அவசியமாகும். ஆனால் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் வர்க்கப் போராட்டமானது ஆயுதம் தாங்கிய மோதலாகவும் உள்நாட்டுப் போராகவும் உருபெறுகிறது என்பதை அது ஒருபொழுதும் மறந்துவிடக்கூடாது.

பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அதனுடைய எதிரிகளைப் பகிரங்மான ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் அழிக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் உண்டு. அதைக் கம்யூனின் போது பிரெஞ்சு பாட்டாளி வர்க்கம் செய்து காட்டியது, அதை ருஷ்யப் பாட்டாளி வாக்கம் டிசம்பர் புரட்சியின் போது புத்திசாலித்தனமாக உறுதிப்படுத்தியது." (பாரிஸ் கம்யுன் படிப்பினைகள்-23-03-1908)

கம்யூனும் ருஷ்யாவும் குறிக்கோளிலும், கடமைகளிலும் மட்டுமல்லாது வளர்ச்சியிலும் வேறுபட்டே காணப்படுகிறது. ருஷ்யாவின் அக்டோபர் புரட்சிக்குப் பின் லெனின் "இடதுசாரி" கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு" என்ற நூலில் தொடக்கத்தில் எழுதுகிறார், பிற்பட்ட ருஷ்யாவுக்கும் மேலைய ஐரோப்பாவின் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் இடைப்பட்ட மிகுதியான வேறுபாடு காரணமாய், இந்நாடுகளின் பாட்டாளி வர்க்கப் புரட்சி சிறிதும் ஒத்ததாக இராதென நினைப்பதை மறுத்துரைக்கிறார். ஆக பிற்பட்ட ருஷ்யாவின் புரட்சிகர அனுபவம் வளர்ச்சியடைந்த ஐரோப்பாவுக்கு உதவிடும்படியாக இருக்கிறது. வளர்ச்சியின் வேறுபாடு படிப்பினைகளைப் பெறுவதில் தடையாக இருப்பதில்லை. இங்கே ஒன்றை நன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது பிறநாட்டின் அனுபவத்தை ஆக்கப்பூர்மான முறையில் பயன்படுத்த வேண்டும். அதாவது பிறநாட்டு அனுபவத்தின் படிப்பினைகளை எடுத்துக் கொள்வதற்கும் அதன் வடிவத்தை மட்டும் பின்பற்றுவதற்கும் வேறுபாடு இருக்கிறது. அதனால் தான் லெனின் கூறுகிறார்:-

"..கம்யூனிசத்தின் பொதுவான, அடிப்படையான கோட்பாடுகளை வர்க்கங்களுக்கு இடையிலான கட்சிகளுக்கு இடையிலான பிரத்தியேக உறவுகளுக்கு, கம்யூனிசத்தை நோக்கி அமைந்த எதார்த்த வளர்ச்சியின் பிரத்தியேகக் கூறுகளுக்குப் பொருத்தமாய் அனுசரிக்கத் தெரிந்து கொள்வதே நம்முன்னுள்ள பணி. இந்தப் பிரதியேக உறவுகளும் கூறுகளும் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறாய் இருக்கின்றன, இவற்றைக் கண்டறிந்து கொள்ளவும், பரிசீலிக்கவும், வருவது அறிந்து முன்கூட்டியே கூறவும் நாம் ஆற்றலுடையோராக இருத்தல் வேண்டும்." ("இடதுசாரி" கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு- லெனின் நூல் திரட்டு 4- பக்கம்128-129)

கம்யூனிஸ்டுகள் நாட்டின் இன்றைய நிலைமைகளை பரிசீலனை செய்வது சரியாக இருக்கும் பட்சத்தில் நாளை நடைபெறப் போவதையும் அறிந்து முன்கூட்டியே கூறிடும் ஆற்றல் பெற்றிருப்பர். இதற்கு கம்யூனிஸ்டுகள் அரசியல் பொருளாதாரத்திலும், பொருள்முதல்வாதத் தத்துவத்திலும் திறம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.


"இடதுசாரி" கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு" என்ற இந்நூலில் மேலும் காணப்படும் சாரத்தைத் தொகுத்தால் கிடைப்பவை:-

-ருஷ்யாவில் நடை பெற்ற அக்டோபர் புரட்சி குறிப்பிட்ட சில அடிப்படை இயல்புகள் ஒரு மணலத்துக்கோ, தனியொரு தேசத்துக்கோ, ருஷ்யாவுக்கு மட்டும் உரித்தான முக்கியத்துவத்துடன் கூட, சர்வதேச முக்கியத்துவமும் பெற்றிருக்கிறது. அந்த அனுபவமானது லெனினியமாகவும் போல்ஷிவிசமாகவும் உள்ளது. ("இடதுசாரி" கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு- லெனின் நூல் திரட்டு 4- பக்கம் 9-10)


-போல்ஷிவிசம் கடந்துவந்த பதினைந்து ஆண்டுக் காலங்களை விவரிக்கிறார். சட்டபூர்வமானதும் சட்டவிரோதமானதும், தலைமறைவானதும பகிரங்கமானதும், சிறு குழுக்களின் அளவிலானதும் பரந்த வெகுஜன வீச்சு கொண்டதும், நாடாளுமன்ற வடிவிலானதும் பயங்கரவாத வடிவிலானதும் போன்றவற்றை கையாண்டுள்ளது. மாறிமாறிக் கையாளப்பட்ட நாடாளுமன்றப் போராட்ட முறைகளும் நாடாளுமன்றத்துக்குப் புறம்பான போராட்ட முறைகளும், நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பு செய்யும் போர்த்தந்திரமும் நாடாளுமன்றத்தில் பங்கு கொள்ளும் போர்த்தந்திரமும், சட்டபூர்வமான போராட்ட முறைகளும் சட்டத்துக்குப்புறம்பான போராட்ட முறைகளும், மற்றும் இவற்றுக்கிடையிலான உறவுகளும் தொடர்புகளும் அளவு கடந்த உள்ளடக்கப் பொருள் வளம் வாய்ந்த அடித்தளத்தின் மீது போல்ஷிவிசம் எழுந்துள்ளது. ("இடதுசாரி" கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு- லெனின் நூல் திரட்டு 4- பக்கம் 19-20)

-"சட்டபூர்வமான வாய்ப்புகளைத்" தவறாமல் பயன்படுத்திக் கொண்டது என்பது, போல்ஷிவிக்குகள் தமது வெற்றிக்கு மட்டும் அல்ல, தமது சித்தாந்த எதிரியை வீழ்த்துவதற்கும் பயன்பட்டது. சட்டபூர்வமான வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையிலும், தொழிலாளர்களை வழிநடத்துவதற்கு உள்நுழைந்து வேலை செய்வதே போர்ஷிவிக் போராட்ட முறையாகும். ("இடதுசாரி" கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு- லெனின் நூல் திரட்டு 4- பக்கம் 22)

-அடுத்து வலது போக்கால் ஏற்படும் விளைவைப் பற்றி லெனின் பேசுகிறார். சட்டபூர்வமான நிலைக்கு  தம்மை மட்டு மீறிப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்ட காரணத்தால், புரட்சி ஏற்படும் போது இவர்களது இந்த வழக்கமான செயல்முறைக்குப் பதிலாய், உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழ்நிலையில், சட்டபூர்வமான நிலையிலிருந்து சட்டவிரோதமான நிலைக்கு விரைவாய் மாறிச் சென்று, இரண்டையும் ஒன்றிணைத்துக் கொண்டு முறைகளைக் கையாளவேண்டி வரும்போது, இவர்கள் நிலை தடுமாறி, .சட்டபூர்வ நிலையிலிருந்து சட்டவிரோத நிலைக்கான மாற்றத்தை என்றும் காணாதவர்களாய் இருந்துவிட்டதால், குழப்பத்துக்கு இரையாகி, சித்தப் பிரமை அடைகின்றனர். ("இடதுசாரி" கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு- லெனின் நூல் திரட்டு 4- பக்கம் 44-45)

-புரட்சியாளர்கள் பிற்போக்குத் தொழிற் சங்கங்களில் வேலை செய்யலாமா? என்ற கேள்விக்கு, ஜெர்மன் "இடதுசாரிகள்" இதற்கு எதிர்மறையாக பதிலளிக்கின்றனர். இதனை விமர்சிக்கும் போது லெனின் மேற்கு ஐரோப்பாவுக்குப் பயன்படும்படியான  போல்ஷிவிக் அனுபவத்தை, இந்நூலின் பொது திட்டத்துக்கு ஏற்ப எடுத்துரைப்பதாக கூறுகிறார். பிற்போக்குத் தொழிற் சங்கங்களில் பணி என்பது பிற்பட்ட பகுதியோரின் நம்பிக்கை பெறுவதற்காக, வெகுஜனங்கள் காணப்படும் இடங்களில் எல்லாம் வேலை செய்தாக வேண்டும். ("இடதுசாரி" கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு- லெனின் நூல் திரட்டு 4- பக்கம் 64-65-67)

-சட்டபூர்வமான வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையிலும், தொழிலாளர்களை வழிநடத்துவதற்கு உள்நுழைந்து வேலை செய்வதே போர்ஷிவிக் போராட்ட முறையாகும். முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்ளலாமா? என்று கேள்விக்கு மகா அலட்சியமாய், சிறிதும் பொறுப்புணர்வின்றி, ஜெர்மன் "இடதுசாரி" கம்யூனிஸ்டுகள் இக்கேள்விக்கு எதிர்மறையில் பதிலளிப்பதை விமர்சிக்கப்படுகிறது. நாடாளுமன்ற முறை "வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்ட" ஒன்று தான். பிரசார அர்த்தத்தில் இது மெய்தான். ஆனால் நடைமுறையில் அதனை வெற்றிகொள்ளும் நிலையை வந்தடைய இன்னும் நெடுந் தொலைவுள்ளது. ஜெர்மனியிலுள்ள கம்யூனிஸ்டுகளுக்கு நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியானது தான், ஆனால், நமக்குக் காலாவதியாகிவிட்டதால் அது வர்க்கத்துக்கும் வெகுஜனங்களுக்கும் காலாவதியாகிவிட்டதாகும் எனக்கருதக் கூடாது. ("இடதுசாரி" கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு- லெனின் நூல் திரட்டு 4- பக்கம் 68- பக்கம் 70))

-வளர்ச்சியில்லாத, அறியாமையில் ஆழ்ந்த கிராம வெகுஜனங்களைப் போதம் பெறச் செய்து அறிவொளி தரும் பொருட்டும், நாடாளுமன்றத் தேர்தல்களிலும் நாடாளுமன்ற அரங்கில் நடைபெறும் போராட்டத்திலும் பங்கெடுத்துக் கொள்வது கட்சியின் கடமையாகும். சோவியத் குடியரசின் வெற்றி கிட்டியதற்கு சில வாரங்களுக்கு முன்பும், வெற்றிக்கு பின்பும் நாடாளுமன்றம் ஒன்றில் பங்கெடுப்பது, பிற்பட்ட நிலையிலுள்ள வெகுஜனப் பகுதியோருக்கு நிரூபிப்பதற்கும், இந்நாடாளுமன்றங்கள் வெற்றிகரமாய்க் கலைக்கப்படுவதற்கும் உதவியது. இந்த அனுபவத்தை உதாதசீனப் படுத்துவது, சர்வதேசியத்தைச் சொல்லளவில் ஏற்றுக் கொண்டு செயலில் கைவிடுவதாக அமையும். ("இடதுசாரி" கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு- லெனின் நூல் திரட்டு 4- பக்கம் 74-75-77)

-லெனின் நாடாளுமன்றத்தில் பங்கேற்க வேண்டிய நிலமைகளை வலியுறுத்துகிறார் அவ்வளவே. இதனை எல்லா நிலைகளிலும் முதலாளித்துவ நாடாளுமன்றங்களை நிராகரிக்கலாகாது என்று பொதுவானதாக புரிந்து கொள்வது தவறு என்றும் எச்சரிக்கிறார். ("இடதுசாரி" கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு- லெனின் நூல் திரட்டு 4- பக்கம் 81)

-புரட்சி நடைபெறுவதற்கு தேவைப்படுகிற, புறநிலை அகநிலை வளர்ச்சியை லெனின் வலியுறுத்துகிறார். முற்றிலும் புறநிலை நோக்குடன்கூடிய மதிப்பீட்டையே போர்த்தந்திரம் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். சட்டபூர்வமான வேலைகளையும் சட்டவிரோதமான வேலைகளையும் ஒன்றிணைப்பது, தலைவர்களை தொழிலாளி வர்க்கத்துக்கும் உழைப்பாளி மக்கள் அனைவருக்கும் லாயக்கானவர்களாக இருக்கும்படிப் போதமளித்துப் பயிற்றுவிப்பதற்கு புரட்சிகரச் செயற்பாடாய் அமைகிறது. ("இடதுசாரி" கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு- லெனின் நூல் திரட்டு 4- பக்கம் 83)

-பிற்போக்கான முதலாளித்துவ நாடாளுமன்றத்திலும் பிற்போக்கான தொழிற் சங்கங்களிலும், பங்கெடுத்துப்பதை மறுக்கின்ற தவறு "இடதுசாரி" இளம்பருவக் கோளாறில்  அடங்கியிருக்கிறது. நாடாளுமன்றத்தைக் கலைத்திடுவதற்காக சோவியத்துக்கள் மேற்கொள்ளப்போகும் பணியில் சோவியத்துகளின் வெற்றிக்காக நாடாளுமன்றத்தின் உள்ளிருந்து வேலை செய்ய வேண்டும். ஒரேவொரு கோஷ்டி அல்லது கட்சியின் விருப்பங்களையும் அபிப்பிராயங்களையும் வர்க்க உணர்வின், போர்க்குணத்தின் நிலைமையும் மட்டும் கொண்டு கொள்கையை நிர்ணயித்துவிடக் கூடாது. ("இடதுசாரி" கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு- லெனின் நூல் திரட்டு 4- பக்கம் 100)

மேலே லெனினால் கூறப்பட்ட நாடாளுமன்றம் வரலாற்றுவழியில் காலாவதியாகிவிட்டது, ஆனால் அரசியல் வழியில் காலாவதியாகவில்லை என்ற அடிப்படையில்  நாடாளுமன்றத்தை அணுகுவதை பற்றி கூறியதை, நமது நாட்டுக்கு பொருத்துவதுப் பற்றி சமரன் கீழ்கண்டவாறு பரிசீலிக்க வேண்டும் என்கிறது;-
"இவ்விரண்டு வரையறைகளும் முதலாளித்துவ நாடுகளில் பாட்டாளிவர்க்கக் கட்சிகளால் பிரயோகிக்கப் படுவதைப் போன்றே காலனிய, அரைக்காலனிய, சார்பு நாடுகள் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி உறவுகள் மேலோங்கி நிலவும் நாடுகளில் எவ்வித மாறுதலும் இன்றி, அப்படியே பிரயோகிக்கக் கூடியனவா என்பது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்."

லெனின் "கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசி"ல் முன் வைக்கப்பட்ட கருத்தின் அடிப்படையில் இந்த பரிசீலனை சமரன் நிகழ்த்துகிறது. லெனின் கூறுகிறார்:-
"..அதோடு முன்னேறிய நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தின் உதவியுடன் பின்தங்கிய நாடுகள் சோவியத் அமைப்பு முறைக்கும், ஒருசில வளர்ச்சி கட்டங்களின் ஊடே கம்யூனிசத்திற்கும், முதலாளித்துவ வளர்ச்சி கட்டத்தின் ஊடே கடந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லாமலே மாறிச் செல்ல முடியும் எனும் கருத்துரையை அதற்கு உரியதான தத்துவார்த்த அடிப்படையுடன் கம்யூனிஸ்டு அகிலம் முன்வைக்க வேண்டும்.

இதற்கு அவசியமான மார்க்கங்களை முன்கூட்டியே சுட்டிக்காட்ட முடியாது. இவை நடைமுறை அனுபவம் மூலம் தூண்டுவிக்கப்படும்"  (தேர்வு நூல்கள்-தொகுதி 11 பக்கம் -78)

இதனை சமரன் புதிய வாய்ப்புகளாக கருதுகிறது. ஆனால் இந்த முறை, சோஷலிச நாட்டின் உதவியுடன் பொருளாதார அபிவிருத்தியிலான முதலாளித்துவ வளர்ச்சி கட்டத்தை தவிர்த்து, கம்யூனிச சமூகத்துக்கு செல்லுதல் பற்றி பேசப்படுகிறது. இதனை "புதிய ஜனநாயக" போராட்டமாக கொள்ள முடியாது. "புதிய ஜனநாயகம்" என்பது, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியேயாகும். சமரன் இதனை எப்படி பரிசீலிக்கிறது என்று பார்ப்போம்.


"புதிய வாய்ப்பு:

இத்தகைய (காலனிய, சார்புநாடுகள் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்திய  உற்பத்தி முறை மேலோங்கி நிலவும்) நாடுகளின்  தேசிய புரட்சிகள் அவற்றின் சாராம்சத்தில்   முதலாளித்துவ  ஜனநாயகத்  தன்மையைக் கொண்டனவாக இருப்பினும், சோசலிச அரசு ஒன்றின் உதயமும், பொதுவான உலகப் புரட்சி இயக்கத்தில் அது ஆற்றிய தலைமைப் பங்கும், முதலாளித்துவ நாடுகளின் பாட்டாளிவர்க்க இயக்கம் ஒடுக்கப்பட்ட நாடுகளின் தேசிய புரட்சிகர இயக்கங்களுக்கு நல்கிய உதவியும், தேச விடுதலைக்காகப் போரிடும் எல்லா தேசத்தாரும் முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்துக்குள் அடிவைக்காமலேயே சோசலிசத்தை சென்றடைவதற்கான வாய்ப்பினை கிடைக்கச் செய்தனர்."

மற்றும்
"...எனவே காலனிய, அரைக்காலனிய சார்புநாடுகள் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி உறவுகள் மேலோங்கி நிலவும் நாடுகளைப் பொறுத்தமட்டில், முதலாளித்துவம் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது என்பதன் பொருள், முதலாளித்துவம் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டாலும் இந்நாடுகளின் தேசிய புரட்சியும், விடுதலையும் அவற்றின் சாராம்சத்தில் இன்னும் முதலாளித்துவ ஜனநாயகத் தன்மையைக்  கொண்டவையாகவே இருக்கின்றன, அதே சமயம், முதலாளித்துவம் வரலாற்று வழியில் காலாவதியாகி விட்டதின் காரணமாக, இந்நாடுகள் முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தின் ஊடே கடந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லாமலே, ஒருசில வளர்ச்சிக்   கட்டங்களின்   ஊடே  கம்யூனிஸத்துக்கு  மாறிச் செல்ல முடியும்."

சமரனில் இக்கட்டுரை வெளியிட்ட நாள் ஜனவரி, 1989 பதிவிடப்பட்டுள்ளது. இணையத்தில் 27-02-2014 பதிவிட்டதாக காட்டுகிறது.

பாட்டாளி வாக்க சர்வாதிகாரம் அதாவது பாட்டாளி வர்க்க சோவியத் தோன்றிய பிறகு முதலாளித்துவ நாடாளுமன்றம் வரலாற்றில் காலாவதியாகிவிட்டது என்பது உண்மையே. சோவியத்தும், சோஷலிச முகாமும் தகர்ந்த நிலையிலும் காலாவதியாகிவிட்டது என்பது உண்மை தான். ஏனென்றால் வரலாற்றில் அதன் அனுபவம் நமக்கு கிட்டியிருக்கிறது. ஆனால் பாட்டாளி வர்க்க அரசின் சர்வதேச உதவி கிடைக்க முடியாத இந்த காலகட்டத்திலும் "புதிய வாய்ப்பு"களைப் பற்றி பேச முடியுமா?

பாட்டாளி வர்க்க சோவியத்தை வரலாறு கண்டிருக்கிறது, அதனால் முதலாளித்துவ நாடாளுமன்றம் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது. ஆனால் அதன் உதவி இன்று எங்கிருந்து கிட்டும்?.

புதிய நிலைமைகளுக்கும் புதிய வாய்ப்புகளுக்கும் நம்மை உட்படுத்த வேண்டியிருக்கிறது. அதாவது சோவியத் தகர்வுக்குப் பிறகும் இதனையே கூறிக் கொண்டிருக்க முடியாது.

சமரன் மேலும் கூறுகிறது:-
"அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஏற்ற தாழ்வாக (சமச்சீரற்ற முறையில்) வளர்ச்சி பெற்றுள்ள நாட்டில், புரட்சியின் புறவயமான அம்சம் ஏற்ற தாழ்வான முறையில் வளர்சியுறுவதால் புரட்சியின் அகச் சக்திகளின் வளர்ச்சியும் ஏற்ற தாழ்வாக இருக்கின்றது. ஆகையால் புரட்சி அலை தணிவதும், புரட்சி அலை எழுச்சியுறுவதும் ஏற்ற தாழ்வானதாகவே இருக்கின்றன. ஒரே நேரத்தில், நாடு தழுவிய அளவில் பரந்துப்பட்ட மக்கள் நாடாளுமன்றத்தைக் கலைப்பதின் அவசியத்தையும், சோவியத் அமைப்புகளை நிறுவுவதின் அவசியத்தையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கு, அவர்களைச் சித்தாந்த வழியிலும் அரசியல் வழியிலும் நடைமுறை வழியிலும் தயார்  செய்தல் நாடுதழுவிய அளவில் நடைபெறுவது சாத்தியமானதல்ல எனவேதான் அதன் அடிப்படையில் நாடாளுமன்ற அமைப்புகளில் பங்கு கொள்ளும் செயல் தந்திரத்தை நிர்ணயம் செய்ய முடியாது. செயல்படுத்தவும் முடியாது."

நாடாளுமன்றத்தைக் கலைப்பதின் அவசியத்தையும் சோவியத் அமைப்புகளை நிறுவுவதின் அவசியத்தை பற்றி தான் பேசப்பட்டுள்ளது. இன்றைய சுரண்டல் அமைப்பு முறையில், இந்த நாடாளுமன்றத்தினால் தான் சட்டமாக்கப்படுவதை அப்பலப்படுத்துவது பற்றி பேசவில்லை. நாடாளுமன்றம் என்பது ஆளும் வர்க்கத்தின் எந்த உறுப்பினர் இதன் மூலம் மக்களை அடக்கி ஒடுக்க வேண்டுமெனச் சில ஆண்டுகளுக்கு ஒரு தரம் தீர்மானிப்பதே, முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் மெய்யான சாரப் பொருள். இதனை அம்பலப்படுத்த மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர், நாடாளுமன்றத்தின் உள்ளிருந்து போராட வேண்டும் என்றும், முக்கியமாய்  நிலைமை புரட்சிகரமானதாய் இல்லை என்பது தெளிவாய்த் தெரியும் நேரத்தில் சட்டபூர்வ வழியில் போராட வேண்டும் என்று வலியுறுத்தியதை சமரன் உள்வாங்கிக் கொள்ளவில்லை.

"அரசும் புரட்சியும்" என்ற தமது நூலில் லெனின் கூறுகிறார்:-
"..மார்க்சுக்குப் புரட்சிகர இயக்கவியலானது, பிளஹானவும காவுத்ஸ்கியும் ஏனையோரும் ஆக்கிக் கொண்டுவிட்ட வெற்று ஜம்பமாகவோ விளையாட்டுக் கிலுகிலுப்பையாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. முதலாளித்துவ நாடாளுமன்ற முறை "பன்றித் தொழுவமே" ஆயினுங்கூட அதனைப் பயன்படுத்திக் கொள்ள, முக்கியமாய்  நிலைமை புரட்சிகரமானதாய் இல்லை என்பது தெளிவாய்த் தெரியும் நேரத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் திராணியற்றதாய் இருந்ததென்பதற்காக அராஜகவாதத்திடமிருந்து தயவு தாட்சண்யமின்றி முறித்துக் கொள்ள மார்க்சுக்குத் தெரிந்திருந்தது. அதேபோது நாடாளுமன்ற முறையை மெய்யாகவே புரட்சிகரமான பாட்டாளி வர்க்க நிலையிலிருந்து  விமர்சிக்கவும் அவருக்குத் தெரிந்திருந்தது.

ஆளும் வர்க்கத்தின் எந்த உறுப்பினர் நாடாளுமன்றத்தின் மூலம் மக்களை அடக்கி ஒடுக்க வேண்டுமெனச் சில ஆண்டுகளுக்கு ஒரு தரம் தீர்மானிப்பதே முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் மெய்யான சாரப் பொருள்- நாடாளுமன்ற- அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட முடியரசுகளில் மட்டுமின்றி, மிகவும் ஜனநாயகமான குடியரசுகளிலுங்கூட இதுவேதான் நிலைமை."

சமரனால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாத நிலைக்குக் காரணம், போராட்ட வடிவத்தை முன்கூட்டி வகுத்துக் கொண்டு, அதற்கு ஏற்ப சமூகத்தையும், மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் கருத்துக்களை அணுகுகிறது. அந்த போர்தந்திர (Tactics) வடிவம்:- "ஒரு நாடு தழுவிய அளவில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மாறாக, பிரதேசவாரியாக விடுவிப்பதிலும் தளங்களை நிர்மாணிப்பதிலும் அதன் மூலம் நாடு தழுவிய எழுச்சியைத் துரிதப்படுத்துவதும், புரட்சி யுத்ததின் குணாதிசயமாக இருக்கின்றது." 

பிரதேசவாரியாக விடுவிப்பு என்ற முடிவில் இருப்பதால்:-
"அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஏற்றத்தாழ்வாக வளர்ச்சி பெற்றுள்ள நமது நாட்டில், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற அமைப்புமுறை மற்றும் தேர்தல்களில் பங்கு கொள்ளுதல் அதே நேரத்தில் சில பகுதிகளில் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டத்தையும் ஒன்றிணைத்தல் என்பது சாத்தியமல்ல. ஆகவே நமது நாட்டில் நாடாளுமன்றமுறை மற்றும் தேர்தல்களைப் புறக்கணிப்பது சரியானதும் தகுந்ததும் ஆகும். நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்குகொள்ளும் செயல்தந்திரம் பொருந்தாது." என்ற முடிவிற்கு வருகிறது.

வடிவத்துக்கு ஏற்ற சமரனின் போராட்டம் என்பது ஆயுத சக்தியால், யுத்தத்தால் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என்பதேயாகும்.

ஆயுத சக்தியால் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல், யுத்தத்தால் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் என்பது புரட்சியின் கேந்திரக் கடமையும், அதன் அதி உயர்ந்த வடிவமும் ஆகும், புரட்சி பற்றிய இந்த மார்க்சிய - லெனினியக் கோட்பாடு சர்வவியாபகமாகப் பொருந்தியது, சீனாவுக்கு மாத்திரமல்ல, இதர நாடுகளுக்கும் பூரணமாகப் பொருந்தியது.”  (மாவோ- போர்தந்திரம் குறித்த பிரச்சினைகள்)

இங்கே மாவோ புரட்சியின் கேந்திரமான கடமை என்று கூறப்பட்டதை தமது முழுக்கடமையாக, என்னேரத்துக்குமான கடமையாக மாற்றிக் கொண்டுள்ளதால், புரட்சிகர நினைவோடும், புரட்சிகர மனோநிலையோடும், புரட்சிகர சொல்லோடும் எப்போதும் நிறைந்து நிற்கின்றது.

புரட்சிகரப் போர்த்தந்திரத்தைப் புரட்சிகர மனப்பான்மையின் அடிப்படையில் மட்டும் உருவாக்கிவிட முடியாது என்கிற லெனின் காட்டுகின்ற போல்ஷிவிச அனுபவத்தை சமரன் ஏறக்கமறுக்கிறது. இந்த இடத்தில் லெனின் மேலும் கூறுகிறார்:-
"நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்தைத் தூற்றுவதால் மட்டுமோ, நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்வதை நிராகரிப்பதால் மட்டுமோ ஒருவர் தமது "புரட்சிகர" மனோபாவத்தை வெளிப்படுத்திக் கொண்டு விடுவது மிகமிகச் சுலபம். ஆனால் இந்தச் சுலபத்தின் காரணமாய், இது கடினமான, மிகமிகக் கடினமான ஒரு பிரச்சினைக்குரிய தீர்வாகிவிடுவதில்லை."

வெகுஜனங்கள் எங்கெல்லாம் காணப்படுகிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் அரசியல் வேலை செய்தாக வேண்டும். கம்யூனிஸ்டுகள் முன்னுள்ள பணி பிற்பட்ட பகுதியோரின் நம்பிக்கையைப் பெறுவதும், அவர்களுக்கிடையே வேலை செய்வதுமேயன்றி, செயற்கைத் தன்மை வாய்ந்த சிறுபிள்ளைத்தனமான "இடதுசாரிக்" கோஷங்களைக் கொண்ட அவர்களிடமிருந்து தம்மைப் பிரிந்து விலக்கிவேலி கட்டிக் கொள்வதல்ல என்கிற லெனினது கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு, யுத்தம், ஆயுதம், புரட்சி என்ற வார்த்தைகளை மிகுந்தளவுக்குப் பயன்படுத்துவதால் தங்களை புரட்சியாளர்களாக காட்டிக்கொள்கின்றனர்.

செம்மையான நாடாளுமன்றத்தையோ, முழுமையான, தூய்மையான நாடாளுமன்றத்தையோ எங்கும் காண முடியாது. முதலாளித்துவ வர்க்கத்தை அதன் சொற்களைக் கொண்டே மடக்க வேண்டும், அது அமைதுள்ள ஏற்பாட்டையும், நடத்தி வரும் தேர்தல்களையும் மக்களுக்கு அது விடுத்துள்ள வேண்டுகோள்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். போல்ஷிவிசத்தை விளக்குவதற்கு, முதலாளித்துவ ஆதிக்கத்தில் உள்ள தேர்தல் காலங்களில் அல்லாத பிற காலங்களில் சாதியதியம் இருப்பதில்லை என்று லெனின் கூறுகிறார். பெரிய வேலை நிறுத்தங்கள் இதற்கு விதிவிலக்கு மற்றபடி சமுதாய வாழ்வின் எல்லாக் கிளைகளுடனும் மேலும் மேலும் நெருங்கிய இணைப்புக் கொண்ட நடைமுறைப் பணிகளை நிறைவேற்றி, முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து ஒவ்வொரு கிளையாக, ஒவ்வொரு துறையாக கைப்பற்ற நாம் பாடுபட்டாக வேண்டும்- என்று லெனின் கூறியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின்:-
"ருஷ்யாவிலுங்கூட தேர்தல்களில் சந்தர்ப்பவாதமும், முற்றிலும் முதலாளித்துவ தில்லுமுல்லுகளும் கள்ளத்தனமும் சூதுவாதும் எப்பொழுதும் மலிந்தே இருந்தன. மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கம்யூனிஸ்டுகள் வழக்கத்துககு மாறான, சந்தர்ப்பவாதமல்லாத, பதவிவேட்டையாக அமையாத ஒரு புதிய ரக நாடாளுமன்ற முறையைத் தோற்றுவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

கம்யூனிஸ்டுக் கட்சிகள் தமக்குரிய கோஷங்களை வெளியிட வேண்டும், மெய்யான பாட்டாளி வர்க்கத்தினர் நிறுவன ஒழுங்கமைப்பு பெறாத, ஒடுக்கி வதைக்கப்படும் ஏழைகளுடைய உதவியுடன் துணடுப் பிரசுரங்கள் வினியோகிக்க வேண்டும், தொழிலாளர்களுடைய வீடுகளுக்கும் கிராமப் பாட்டாளிகளின், இருள் மண்டிய கிராமங்களிலுள்ள விவசாயிகளின் குடில்களுக்கும் சென்று அவர்களுடைய ஆதரவைத் திரட்ட வேண்டும் (ருஷ்யாவைக் காட்டிலும் அதிருஷ்டவசமாய் ஐரோப்பாவில் பல மடங்கு குறைவான இருள் மண்டிய கிராமங்களே உள்ளன, பிரிட்டனில் இவற்றின் எண்ணிக்கை இன்னும் குறைவு) அவர்கள் சாராயக் கடைகளுக்குச் சென்றும், பாமர மக்களின் சங்கங்களுக்குள்ளும் கழகங்களுக்குள்ளும் தற்செயலான கூட்டங்களினுள்ளும் ஊடுருவியும் இம்மக்களுடன் பேச வேண்டும்- மெத்தப் படித்தவர்களது (அல்லது நாடானுமன்றத்துக்குரிய) மொழியிலல்ல, அவர்களது நாடானுமன்ற "இடங்களைப் பிடிக்க" முயற்சி செய்யலாகாது, அதற்குப் பதில் மக்களைச் சிந்திக்க வைப்பதற்கே எங்கும் முயற்சி செய்ய வேண்டும், வெகுஜனங்களைப் போராட்டத்தில் இறங்கும் படிக் கவர்ந்திழுக்க வேண்டும், முதலாளித்துவ வர்க்கத்தை அதன் சொற்களைக் கொண்டே மடக்க வேண்டும், அது அமைதுள்ள ஏற்பாட்டையும் நடத்தி வரும் தேர்தல்களையும் மக்களுக்கு அது விடுத்துள்ள வேண்டுகோள்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், போல்ஷிவிசம் என்றால் என்னவென்பதை மக்களக்கு விளக்க முயல வேண்டும்- இவ்வாறு விளக்குவது முதலாளித்துவ ஆதிக்கத்தில்) தேர்தல் காலங்கள் அல்லாத பிற காலங்களில் சாத்தியமாய் இருந்ததில்லை (பெரிய வேலைநிறுத்தங்கள் நடைபெற்ற காலங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு, ருஷ்யாவில் இக்காலங்களில் மக்களிடையே விரிந்த அளவில் கிளர்ச்சி நடத்துவதற்காக, தேர்தல் காலத்தில் இயங்கியதை ஒத்த அமைப்பு ஒன்று இன்னுங்கூட தீவிரமாய் இயங்கிற்று).

மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இதைச் செய்வது மிகக் கடினம், மிகமிகக் கடினம். என்றாலும் இதனைச் செய்ய முடியும், செய்தே ஆகவும் வேண்டும், அருமுயற்சி இல்லாமல் கம்யூனிசத்தின் குறிக்கோள்களைச் சாதிக்க முடியாது. மேலும் மேலும் நானாவிதமான, சமுதாய வாழ்வின் எல்லாக் கிளைகளுடனும் மேலும் மேலும் நெருங்கிய இணைப்புக் கொண்ட நடைமுறைப் பணிகளை நிறைவேற்றி, முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து ஒவ்வொரு கிளையாக, ஒவ்வொரு துறையாக கைப்பற்ற நாம் பாடுபட்டாக வேண்டும்." ("இடதுசாரி" கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு- லெனின் நூல் திரட்டு 4- பக்கம் 143-145)

ஒரு குறிப்பிட்ட தொழிற்துறையில் ஒரு நாளில் வேலை செய்கின்ற நேரத்தைக் குறைப்பதற்காக தனிப்பட்ட முதலாளிகள் மீது வேலை நிறுத்தங்கள், போன்றவற்றின் மூலம் நிர்ப்பந்தம் செய்கிற முயற்சி முற்றிலும் பொருளாதாரப் போராட்டமே. இதன் மறுபக்கத்தில், எட்டு மணி நேர வேலை நாள், போன்றவற்றை சட்டத்தைக் கொண்டு வருமாறு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துக்கின்ற போராட்டம் அரசியல் போராட்டமாகும் என்கிறார் மார்க்ஸ். @ (பி.போல்ட்டேக்கு கா.மார்க்ஸ் எழுதிய கடிதத்திலிருந்து- 23-11-1871) இப்படி சட்டத்தைக் கொண்டுவருகிற நாடாளுமன்றத்தை அராஜவாதிகள் முற்றப் புறக்கின்றனர்.

இதனை விமர்சித்து எங்கெல்ஸ் கூறுகிறார்:-
"பக்கூனின்வாத "அரசியலிலிருந்து ஒதுங்கி நிற்பது" இங்குதான் இட்டுச் செல்கிறது. அமைதியான காலங்களில், எவ்வளவு சிறப்பான முறையில் பாடுபட்டாலும் நாடாளுமன்றத்துக்கு ஒரு சில பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பிவைக்க முடியும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பெறுவதற்குச் சிறிது கூட சந்தர்ப்பமில்லை என்பது தொழிலாளர்களக்கு முனபே தெரிந்திருக்கும் பொழுது, தேர்தல் நடக்கும் பொழுது வீட்டில் உட்கார்ந்திருப்பது மற்றும் தாங்கள் வாழ்கின்ற அரசை, தங்களை ஒடுக்குகின்ற அரசைத் தாக்காமல் எங்குமே இல்லாத-அதன் காரணமாகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத-அரசைத் தாக்குவது ஒரு மாபெரும் புரட்சிகரமான நடவடிக்கை என்று சில சமயங்களில் தொழிலாளர்களை நம்ப வைக்க முடியும். புரட்சிகரமான முறையில் நடந்து கொள்வதற்கு-குறிப்பாக, எளிதில் மனமுடைந்து போகக் கூடியவர்களுக்கு- இதுமிக அற்புதமான வழியாகும்." @ (பக்கூனின்வாதிகளின் வேலை 1871-1875)

இதற்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது. தங்களை ஒடுக்குகின்ற அரசை எதிர்காமல், தேர்தலில் பங்கெடுக்காமல், எங்குமே இல்லாத அரசைத் தாக்குவது ஒரு மாபெரும் புரட்சிகரமான நடவடிக்கை என்பது, மனமுடைந்து போகக் கூடியவருக்கு தான் அற்புதமான வழியாகும். மேலும் சம்பவங்கள் பாட்டாளி வர்க்கத்தை முன்னணிக்குக் கொண்டு வந்த உடனே ஒதுங்கியிருப்பதென்பது வெளிப்படையான முட்டாள் தனமாகி விடுகிறது, தொழிலாளி வர்க்கத்தின் சுறுசுறுப்பான அரசியல் தலையீடு தவிர்க்க முடியாத அவசியமாகி விடுகிறது என்கிறார் எங்கெல்ஸ். இல்லாத அரசுடன் போராடுகிற அராஜவாதிகளின் போக்கைப் பற்றி இங்கே எங்கெல்ஸ் கூறுகிறார்.

லெனின், நாடாளுமன்றம் போன்ற சட்டபூர்வ போராட்டத்தை அற்பப் பணியாக அராஜகவாதிகள் கருதி நிராகரிக்கின்றனர். "மகத்தான நாட்கள்" வரும் என்று கைகட்டி காத்திருப்பதும், மாபெரும் நிகழ்ச்சிகளைப் படைக்கும் சக்திகளை திரட்டும் திறனற்று இருப்பதும் அராஜகவாதிகளின் போர்தந்திரத்தின் நடைமுறை விளைவு என்கிறார்.

""பாய்ச்சல்களையும்" தொழிலாளி வர்க்க இயக்கம் கோட்பாட்டு வழியில் பழைய சமுதாயம் அனைத்துக்கும் பகைமையாய் இருப்பதையும் பற்றிய எல்லா வாதங்களையும் திருத்தல்வாதிகள் வெறும் வாய்வீச்சாய் கருதுகிறார்கள். சீர்திருத்தங்களை அவர்கள் சோஷலிசத்தின் பகுதியளவு நிறைவேற்றமாய்க் கருதுகிறார்கள். அராஜகவாத-சிண்டிக்கலிஸ்டுகள் "அற்பப் பணியை", குறிப்பாய் நாடாளுமன்ற மேடையைப் பயன்படுத்திக் கொள்வதை நிராகரிக்கின்றனர். பின்கூறிய போர்த்தந்திரம் நடைமுறையில் பார்க்கையில் "மகத்தான நாட்கள்" வருமெனக் கைகட்டிக் காத்திருப்பதும் மாபெரும் நிகழ்ச்சிகளைப் படைக்கும் சக்திகளைத் திரட்டும் திறனற்றிருப்பதுமே ஆகும்.

இரு வகையினரும் எது மிகவும் முக்கியமானதோ, அவசரமானதோ அது நடைபெறுவதற்கு- அதாவது, வர்க்கப் போராட்ட உணர்வு படைத்து தமது நோக்கங்களைத் தெளிவாய் உணர்ந்து மெய்யான மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தில் போதமும் பயிற்சியும் பெற்றவையும் எல்லா நிலைமைகளிலும் செவ்வனே இயங்கவல்லவையுமான, சக்தி மிக்க, பெரிய, நன்கு செயல்படும் நிறுவனங்களில் தொழிலாளர்கள் ஒன்றுசேர்க்கப்பவதற்குத் - தடையாகி விடுகின்றனர்" @ (ஜரோப்பியத் தொழிலாளர் இயக்கத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள்)

இவ்வாறு, பக்கூனுக்கு கடுமையான விமர்சனத்தை மார்க்சும் எங்கெல்சும் முதலாம் அகிலத்தில் முன்வைத்தனர்.

பிரதேச ரீதியில் விடுவித்து நாட்டின் புரட்சி எழுச்சியைத் துரிதப்படுத்துவதும், இறுதியாக நாடு முழுவதையும் விடுதலை செய்யும் புரட்சிகர யுத்தத்தை நடத்துவது என்று சமரனின் முடிவின் படி எந்தெந்த பகுதிகளை இதுவரை விடுவித்துள்ளனர். எவ்வளவு பகுதியை தங்களது பிடியில் தக்க வைத்துள்ளனர் என்ற கேள்வியை கேட்கும்படியான புரட்சி நடவடிக்கை ஏதுவும் நடத்தவில்லை.

அடைய வேண்டியது (Strategy) குறிக்கோள், உடனடி நடைமுறையில் செயற்படுத்த வேண்டியது போர்த்தந்திரம் (Tactics). நடைமுறைப்படுத்தாத போர்தந்திரத்தை என்ன பெயரிட்டு அழைப்பது என்று தெரியவில்லை.

ஒரே நேரத்தில் நாடாளுமன்ற அமைப்புமுறை மற்றும் தேர்தல்களில் பங்கு கொள்ளுதல், அதே நேரத்தில் சில பகுதிகளில் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டத்தையும் ஒன்றிணைத்தல் என்பது சாத்தியமல்ல என்பதாக சமரன் காரணம் காட்டுகிறது. புதிய ஜனநாயகப் போராட்டத்துக்கு பொருத்தமற்ற லெனினது கருத்தை முன்வைத்து தனது போர்தந்திரத்தை (Tactics) அமைத்துள்ளது. முதலாளித்துவ வளர்ச்சி கட்டத்தின் ஊடே கடந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், கம்யூனிசத்துக்கு செல்வதற்கு, சோவியத் அமைப்பு முறையின் உதவிடும் என்பதை, நடைமுறை அனுபவம் மூலம் தூண்டுவிக்கப்பட வேண்டும் என்கிற கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் லெனின் கூறியதை மட்டும் ஏற்றுக் கொண்டு, லெனினது போல்ஷிவிசமானதை பிற்பட்ட ருஷ்யாவுக்கும் மேலைய ஐரோப்பாவின் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கானதாக சமரன் கருதுகிறகிறது.

சமரன்:-
'சுருங்கக் கூறின், முதலாளித்துவ நாடாளுமன்ற முறை பற்றி ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சி தனது செயல் தந்திரங்களை வகுத்துக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறையை அவர் வகுத்தளித்தார்.

எனினும், இவை அனைத்தையும் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் நிலவிய புறவயமான அம்சத்தைப் பற்றிய ஆய்விலிருந்தும், அந்நாடுகளின் தொழிலாளி வர்க்க இயக்கத்திலிருந்து பெற்ற நடைமுறை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டும் அவர் வகுத்தளித்தார்."

ருஷ்ய புரட்சியின் அனுபவமான போல்ஷிவிசம் என்பது ருஷ்யாவுக்கும் வளாச்சியடைந்த ஐரோப்பாவுக்கு மட்டுமானது என்று கூறுவது, இந்தியாவின் வலதுபிரிவு மார்க்சியம் என்பது ஐரோப்பிய சித்தாந்தம், நமது நாட்டுக்கானது அல்ல என்று கூறிவருவதை உறுதிப்படுத்துவதாகிவிடும்.

போல்ஷிவிச அனுபவத்தை மறுதலிக்கிற ஐரோப்பியா நாட்டவர்களை லெனின் விமர்சிக்கிறார். அரசியல் வழியில் காலாவதியாக்குவதற்கும் நாடாளுமன்றதைக் கலைக்க வேண்டியதை புரிய வைப்பதற்கும், அதில் செயற்பட வேண்டியிருக்கிறது. பிற்பட்ட நிலையிலுள்ள வெகுஜனப் பகுதியோருக்கு நிரூபிப்பதற்கு நடைமுறையில் உதவிய போல்ஷிவிச அனுபவத்தை உதாசினப்படுத்திவிட்டு, அதே நேரத்தில் கம்யூனிஸ்டு அகிலத்துடன் இணைப்புரிமை கொண்டாடுவதானது மிகக் கொடுந் தவறிழைப்பதாகவும், சர்வதேசியத்தைச் சொல்லளவில் ஏற்றுக் கொண்டு செயலில் கைவிடுவதாக்கும் என்று லெனின் கடுமையாக சாடுகிறார். ("இடதுசாரி" கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு- லெனின் நூல் திரட்டு 4- பக்கம் 77)

நாம் சர்வதேசியவாதியாக இருப்போமாயின் போல்ஷிவி அனுபவத்தை நமது நாட்டில் பிரயோகிக்க வேண்டும்.

பிற்பட்ட ருஷ்யாவில் காணப்பட்ட டூமா போன்ற அமைப்புகளில், சட்டத்துக்கு உட்பட்டு, சட்டரீதியான முறையில் தமது அரசியலை கம்யூனிஸ்டுக் கட்சி நடத்தியது. வளர்ச்சியடைந்த ஐரோப்பாவில் காணப்படும் நாடாளுமன்றத்தில், சட்டத்துக்கு உட்பட்டு, சட்டரீதியான முறையில் தமது அரசியலை கம்யூனிஸ்டுக் கட்சி நடத்தித வேண்டும். அதே போல் தான், அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஏற்றத்தாழ்வாக வளர்ச்சி கொண்டுள்ள நாடு என்று பொருள் கொள்வோமாயினும், நமது நாட்டில் காணப்படும் நாடாளுமன்றத்தில், சட்டத்துக்கு உட்பட்டு, சட்டரீதியான முறையில் தமது அரசியலை கம்யூனிஸ்டுக் கட்சி நடத்திட வேண்டும். ருஷ்ய போல்ஷிவிச அனுபவத்தின் படி நமக்கும், பிற்பட்ட நிலையிலுள்ள வெகுஜனப் பகுதியோருக்கு நமது அரசியலை நிரூபிப்பதற்கு பயன்படும்.

லெனின்:-
"... "இடதுசாரி" கம்யூனிஸ்டுகள் போல்ஷிவிக்குளாகிய எங்களைப் புகழ்ந்து  நிறையவே பேசுகிறார்கள். எங்களைப் புகழ்வதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, போல்ஷிவிக்குகளுடைய போர்த்தந்திரத்தை மேலும் நன்கு தெரிந்து கொள்ள முயலுங்கள் என்பதாக அவர்களுக்குச் சொல்ல வேண்டுமென்று சில நேரங்களில் தோன்றுகிறது.("இடதுசாரி" கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு- லெனின் நூல் திரட்டு 4- பக்கம் 75)

அனைத்து நாடுகளின் அனுபவங்களையும் பரிசீலித்து அதனை தமது நடைமுறைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே கம்யூனிஸ்டுகளின் சர்வதேசிய பார்வையாகும். பாரிஸ் கம்யூன், ருஷ்ய புரட்சி, செஞ்சீனம் ஆகிய அனைத்தும் நமது சர்வதேசிய பார்வைக்கு வளம் சேர்க்கும். இதில் ஒன்றின் வடிவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு  அதற்கு பொருத்தமாக நமதுநாட்டின் உள்ளடக்கத்துக்கு விளக்கம் கொடுத்ததினால் இதுநாள் வரை எந்த பலனையும் ஏற்படவில்லை என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

"பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை" என்ற மார்க்சின் நூலுக்கு எங்கெல்ஸ் 1895ஆம் ஆண்டில் எழுதிய முன்னுரையில் எழுதியுள்ளார்:-
"தேசங்களுக்கு இடையிலான போரில் நிலைமைகள் மாற்றமடைந்துளளன என்றால், வர்க்கப் போராட்டத்தின் விஷயத்திலும் இவை சற்றும் குறைவின்றிக் காணப்படுகின்றன.

திடீர்த் தாக்குதல்கள், விவரமறியாத மக்கள் திரளினருக்குத் தலைமை தாங்கி சிறிய உணர்வு பூர்வமான சிறுபான்மையினர் நடத்தி முடிக்கும் புரட்சிகளின் காலம் மலையேறிவிட்டது.

சமுதாய அமைப்பின் பூரண மாற்றம் என்பது எங்கு ஒரு பிரசச்சினையாக இருக்கிறதோ அங்கு மக்கள் திரளினர் தாமுங்கூட அதில் ஈடுபட்டிருக்க வேண்டும், அவர்கள் தாமே போராடி நிலைநாட்ட வேண்டியது என்ன, உடலும் உள்ளமும் ஒருசேர எதற்காக அவர்கள் பாடுபடுகிறார்கள் என்பவற்றை எற்கெனவே புரிந்து கொண்டிருக்க வேண்டும். கடந்த ஐம்பதாண்டு கால வரலாறு நமக்கு அதைப் போதித்துள்ளது.

என்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் திரளினர் புரிந்து கொள்ள இயல வேண்டுமானால், நீடித்த உறுதியான பணிபுரிதல் அவசியம், இந்தப் பணியைத்தான் இப்போது நாம் வெற்றியுடன் தொடர்ந்து புரிந்து வருகிறோம், இது விரோதியைக் கலங்கடிக்கிறது"

புரட்சியில் மக்கள் உணர்வுபூர்வமாக புரிந்து கொண்டு பங்கெடுக்க வேண்டியதின் அவசியத்தையும், அவ்வாறு சமூக மாற்றம் ஏற்படுத்துவதற்கு மக்கள் திரளினரை பயிற்றுவிப்பதற்கு நீடித்த உறுதியான பணிபுரிதலின் அவசியத்தையும் நமக்கு எங்கெல்ஸ் வலியுறுத்தியுள்ளார்.


மக்களிடம் அரசியல் பணிபுரிய புறப்படுவோம். வெற்று புரட்சி முழுக்கத்தை புறந்தள்ளுவோம். சமூக மாற்றத்துக்கான புரட்சியை நிகழ்த்திக் காட்டுவோம்.

No comments:

Post a Comment