Saturday, 6 December 2014

பாட்டாளி வாக்க சர்வதேசியவாதமும் முதலாளித்துவ தேசியவாதமும்

(தேசியம் பற்றி மார்க்சியம் பிரிதலை மட்டுமே முன்னிருத்துவதாக தவறாக புரிந்துள்ள நிலைமையினை முன்வைத்து  இந்த பகுதியை தனியாகப் பதிவிடப்படுகிறது)

அயர்லாந்து தேசிய இனப்பிரச்சினையினால் ஏற்படுகின்ற, இங்கிலாந்து பாட்டாளிகளுக்கும் அயர்லாந்து பாட்டாளிகளுக்கும் இடையேயான  பிணக்கை, இங்கிலாந்து முதலாளி வர்க்கத்தின் தேசியவாதம் தமக்கு சாதகமாக்குகிறது. அதனால் ஆங்கிலேய பாட்டாளிகளிடையே காணப்படும் இந்தப் போக்கை தடுக்க வேண்டும்.

உலக சந்தையை தமது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் இங்கிலாந்தில் புரட்சி நடைபெறுவதற்கு ஏற்ற வளர்ச்சியடைந்த தேசமாக காணப்படுகிறது. இந்த சமூகப் புரட்சியை விரைவுபடுத்துவதற்கு சர்வதேச பாட்டாளிகளின் சங்கம் அயர்லாந்தை சுதந்திர நாடாக்கும் முயற்சிக்கு உதவுது முக்கியமானது என்று கருதுகிறது.

அயர்லாந்து விடுதலை என்பது நீதியை நிலை நாட்டுவதற்கோ அல்லது மனிதாபிமான உணர்ச்சியின் அடிப்படையிலோ கோராப்படுவதில்லை, இங்கிலாந்தின் சமூக விடுதலைக்கு முதல் நிபந்தனையான கடமையாகும் என்கிறார் மார்க்ஸ்.

சுயநிர்ண உரிமையை கோருவது எந்த வகையிலும் சர்வதேசிய வாதத்துக்கு எதிரானது அல்ல என்பதை மார்க்ஸ், லெனின் ஆகியோர்களின் கருத்தால் அறிந்து கொள்ளலாம்.

மார்க்ஸ்:-
"..அயர்லாந்து பற்றி ஆங்கிலேய தொழிலாளி வர்க்கத்தின் கண்ணோட்டம் என்னவென்று பொதுச்சபை விவாதித்து அது பற்றி தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதேபித்திருக்கிறேன், ஒடுக்கப்பட்டிருக்கும் அயர்லாந்துக்குச் சாதகமாகவும், அவர்களை ஒடுக்கி வருகிறவர்களை எதித்தும் உரத்த குரலில் பேசுவதோடு, நான் பகிரங்கமாகக் கூறியிருக்கும் இரண்டு விஷயங்களுக்கும் வேறு நோக்கங்கள் இருக்கின்றன.

மேன்மேலும் ஒரு விஷயம் என்னுள்ளத்தில் ஆழமாக வேரூன்றிவிட்டது, ஆங்கிலேய தொழிலாளி வர்க்கம் இதை ஏற்றுக் கொள்ளும்படி செய்வதுதான் முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. அதாவது ஆங்கிலேய வர்ககம் அயர்லாந்து தொடர்பாக தன்னுடைய கொள்கையை ஆளும் வர்க்கங்களின் கொள்கையிலிருந்து தனியே பிரித்துக் கொள்வது வரையிலும், அயர்லாந்து மக்களின் லட்சியத்தைத் தங்கள் பொதுலட்சியமாக ஏற்றுக் கொள்வதோடு, 1801ம் ஆண்டில் ஏற்படுத்திய இணைப்பைக் கலைத்து அதற்குப் பதிலாக சுதந்திரமான கூட்டாட்சி உறவை அமைப்பதற்கு தாமே முன்முயற்சி எடுத்துக் கொள்வதுவரையிலும் இங்கு, இங்கிலாந்தில் ஆங்கிலேய தொழிலாளி வர்க்கம் முக்கியத்துவம் பெற்ற எதையும் செய்யவே முடியாது.

அயர்லாந்துக்கு அனுதாபம் காட்டும் முறையில் இதைச் செய்யக்கூடாது, ஆங்கிலேய பாட்டாளி மக்களின் நல உரிமையைப் பேணிபாதுக்காக்கும் கோரிக்கையாகக் கருதி இதைச் செய்ய வேண்டும். இதைச் செய்யவில்லையென்றால் ஆங்கிலேய மக்கள் ஆளும் வர்க்கங்களின் தலையாய கயிறுகளால் கட்டிப் பிணைக்கப்பட்டே கிடப்பார்கள், இதைச் செய்யவில்லையென்றால், அயர்லாந்துக்கு விரோதமாக பொது அணியில் அவர்களோடு ஆங்கிலேய தொழிலாளி வர்க்கம் ஒன்று சேரவேண்டியிருக்கும். இங்கிலாந்தில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் கணிசமான பகுதியினர் அயர்லாந்து தொழிலாளர்களாக இருப்பதால், அயர்லாந்தோடு போடும் சண்டை. இங்கிலாந்தில் அது நடத்தும் ஒவ்வொரு இயக்கத்தையும் உடைத்தெறியும்.

ஆங்கிலேய தொழிலாள வர்க்கம் இங்கு விடுதலை பெறுவதற்கு மிக முக்கியமான நிபந்தனையாக இருப்பது ஆங்கிலேய நிலப்பிரபுத்து ஒரு சிலராட்சியை வீழ்த்துவதாகும், அதைச் செய்யமுடியாது. ஏனென்றால் அயர்லாந்தில் அதன் புறக்காவல் நிலையங்கள் பலமாக இருக்கும்பொழுது அதை இங்குத் தாக்கி வெற்றிவெறுவது சாத்தியமல்ல. ஆனால். அங்கு சகல அதிகாரங்களையும் அயர்லாந்து மக்களே தங்கள் கையில் எடுத்துக் கொண்டால் சட்டம் இயற்றுகிறவர்களையும், அட்சியாளர்களையும் தானே அது நியமித்தால், சுயாட்சியை அது பெற்றால், நிலப்பிரபுத்துவ சிலராட்சியை வீழ்த்துவது இங்க இருப்பதைக் காட்டிலும் அங்கு எளிதான செயலாக இருக்கும். (பெரும் அளவிற்கு ஆங்கிலேய நிலப்பிரபுக்களைப் போன்ற அதே நபர்கள் தான் அங்கும் இருக்கிறார்கள்) மேலும், அயர்லாந்தில இதுவெறும் பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமல்ல, அதே நேரத்தில் ஒரு தேசியப் பிரச்சினையாகவும் இருக்கிறது,.."
எல்.கூகெல்மானுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதம் (லண்டன், நவம்பர் 29, 1869)
பக்கம் - 145-146

பாட்டாளி வர்க்கச் சர்வதேசியவாதத்தோடு சுயநிர்ணய உரிமை என்பது முரண்படுவதில்லை என்பதை லெனின் எவ்வாறு விளக்குகிறார் என்பதை பார்ப்போம்.

      பாட்டாளி வர்க்கச் சர்வதேசியவாதம் வெற்று வார்த்தையாகப் போகாமல் இருக்க வேண்டுமானால், பலவந்தமாக ஒரு தேசிய இனத்தை பிடித்து வைத்திருப்பதற்கு எதிராக போராட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், ஒடுக்கும் தேசிய இனத்தின் தொழிலார்களுக்கும் ஒடுக்கத்துக்கு ஆளான தொழிலாளர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையும் ஒருமைப்பாட்டும் சாத்தியமற்றுப் போகும். மார்க்ஸ் கூறியப்படியே லெனினும் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுதந்திரத்தின்

லெனின்:-
“ஓர் அரசின் எல்லைகளுக்குள் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பலவந்தமாகப் பிடித்து நீடித்து வைத்துக்கொண்டிருக்கப்படுவதற்கு எதிராகப் பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும், அதாவது சுயநிர்ணய உரிமைக்காகப் போராட வேண்டும். "தங்களது" தேசிய இனத்தினால் ஒடுக்கப்படும் காலனிகளுக்கும் தேசிய இனங்களுக்கும் அரசியல் ரீதியில் பிரிந்து போகும் சுதந்திரம் தரப்பட வேண்டும் என்று பாட்டாளிகள் கோர வேண்டும். இல்லாவிட்டால் பாட்டாளி வாக்கச் சர்வதேசியவாதம் என்பது வெற்று வார்த்தை, ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கும் தேசிய இனத்தின் தொழிலார்களுக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையோ அல்லது வர்க்க ஒருமைப்பாடோ அப்பொழுது சாத்தியமில்லை,.."
சோஷலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும்
பக்கம்-187

லெனின்:-
"எவ்வாறு ஒடுக்கப்படும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற இடைநிலைக் காலத்திற்குப் பிறகுதான் வர்க்கங்களை மனித சமுதாயம் ஒழிக்க முடியுமோ அதே போல, ஒடுக்கப்படும் எல்லாத் தேசிய இனங்களுக்கும் முழுவிடுதலை என்ற - அதாவது, பிரிந்து போகும் சுதந்திரம் என்ற - இடைநிலைக் காலத்துக்குப் பிறகுதான் தேசிய இனங்கள் தவிர்க்க முடியாத வகையில் இரண்டறக் கலத்தல் என்ற நிலையை அடைய முடியும்.”
சோஷலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும்
பக்கம்-186

      வர்க்கப் போராட்டத்துக்காகவும். சர்வதேசிய ஒற்றுமையினை வளர்த்தெடுப்பதற்காகவும் கம்யூனிஸ்டுகள் அகிலத்தின் தீர்மானமான சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டிருப்பதை லெனின் உறுதிப்படுத்துகிறார். மேலும் ஒடுக்கும் தேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சர்வதேசியவாத உணர்வில் பயிற்றுவிப்பதற்கு ஒடுக்கும் நாடுகளுக்குப் பிரிந்து போகும் சுதந்திரம் அளிக்க வேண்டியதையும் வலியுறுத்துகிறார்.

லெனின்:-
"தேசிய இன ஒடுக்குமுறை இருக்கும் ஒரு நிலைமையில் தேசிய இன விடுதலைப் பணிகளைப் புறக்கணிப்பது சோஷலிஸ்டுக் கருத்துப்படி நிச்சயம் தவறாகும்.

இந்தக் கருத்துநிலையிலுள்ள மிகவும் இன்றியமையாத, அடிப்படையான அறுதியுரைகளை அகிலத்தின் தீர்மானம் திரும்பவும் வழங்குகிறது, ஒரு புறம் எல்லாத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் முழுமையாக, அறவே நேரடியாக ஐயத்திற்கிடமின்றி ஏற்றுக் கொள்வது, மறுபுறம் தொழிலாளர்களிடம் அவர்களது வாக்கப் போராட்டத்துக்காக சர்வதேசிய ஒற்றுமையை வளர்க்கும்படி  இதே போல தெட்டத்தெளிவாக வேண்டுகோள்  விடுவது."
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 134-135

லெனின்:-
"ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சர்வதேசியவாத உணர்வில் பயிற்றுவிக்கும் பொழுது ஒடுக்கப்படும் நாடுகளுக்குப் பிரிந்துபோகும் சுதந்திரமளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இது இல்லாமல் சர்வதேசியவாதம் என்பது இருக்க முடியாது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதிகள் (கம்யூனிஸ்டுகள்) அத்தகைய பிரசாரத்தைச் செய்யத் தவறினால் அவ்வாறு தவறியவர் ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும் கயவர் என்றும் கருதுவது நமக்கு உரிமையும் கடமையுமாகும். சோஷலிசத்தை அடையுமுன்னர் பிரிந்து போகும் வாய்ப்பு ஆயிரத்தில் ஒன்றுதான் என்றாலும்கூட இது ஒரு தனிமுழுமையான கோரிக்கை."
சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தின் தொகுப்பு - பக்கம் - 245-246

      சர்வதேச வர்க்க ஒருமைப்பாட்டை குலைக்கின்ற தேசிய இன முதலாளி வர்க்கத்தின் தனியுரிமையினை எதிர்க்காமல் போனால் பாட்டாளி வாக்கத்தின் இடையே அவநம்பிக்கையை அது ஏற்படுத்திவிடும். பிரிந்து போகும் உரிமையை மறுப்பதானது முதலாளி வர்க்கம் மகிழும்படி தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி விடும் என்று லெனின் நேரடியாக எச்சரிக்கிறார்.

லெனின்:-
"எந்த ஒரு தேசிய இனத்தின் பாட்டாளி வாக்கமாவது அதன் "சொந்த" தேசிய இன முதலாளி வர்க்கத்தின் தனியுரிமைகளுக்குச் சிறிதேனும் ஆதரவு கொடுக்குமானால் இன்னொரு தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்தின் மத்தியில் அது அவநம்பிக்கையைத் தவிர்க்க முடியாத வகையில் தோற்றுவிக்கும், இது தொழிலாளிர்களின் சர்வதேச வர்க்க ஒருமைப்பாட்டைப் பலவீனப்படுத்தும். முதலாளி வர்க்கம் மகிழும் முறையில் தொழிலாளர்களைப் பிளவுபடுத்தும், சுயநிர்ணய உரிமையையோ பிரிந்துபோகும் உரிமையையோ மறுப்பதானது ஆதிக்க தேசிய இனத்தின் தனியுரிமைகளை ஆதரிப்பது என்றே தவிர்க்க முடியாதபடி பொருள்படும்"
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 122

இன ஒடுக்குதல் அற்ற சூழ்நிலையில் ஒரு தேசம் பெரிய அளவாய் இருப்பதையே உணர்வு படைத்த பாட்டாளி வர்க்கம் விரும்பும். அதுமட்டுமல்லாது பெரியதாய் உள்ள பிரதேசயத்தையும் அதில் மிக நெருக்கமான பொருளாதார செயற்பாடுகள் இணைந்திருப்பதையும் பாட்டாளி வர்க்கத்துக்கு சாதகமாகும். ஏனெனில் முதலாளித்துவ வர்க்கத்ததின் மீதான தமது எதிர்ப்பை விரிவான வகையில் செலுத்த முடியும்.

தேசிய இனங்களின் மனப்பூர்மான ஒற்றுமையை மார்க்சியம் வலியுறுத்துகிறது. மனப்பூர்வமான ஒற்றுமைக்காகத் தான் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் தேசிய குறுகிற மனப்பான்மையும், தனித்திருத்தலையும் ஒதுங்கி வாழ்வதையும் எதிர்த்துப் போராடுகிறது.

கம்யூனிஸ்டுகளின் சுயநிர்ணய உரிமையை மட்டுமே அறிந்து கொண்டு, தேசம் பிரிந்து போவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளதாக தவறாக பலர் புரிந்து வைத்துள்ளனர். ஒடுக்கத்துக்கு ஆளான தேசம் பிரிந்து போவதற்கான உரிமைக்கு போராடும்  கம்யூனிஸ்டுகள் தேசங்களின் ஒன்றுகலத்தலுக்காகவும் போராடுகின்றனர் இதனை லெனின் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். ஒடுக்கத்துக்கு ஆளான தேசங்களுக்காக்க போராடாதவர் மார்க்சியவாதி அல்ல, அதேநேரத்தில் மற்றொரு தேசிய இனத்தைச் சேர்ந்த மார்க்சியவாதி ஒன்றுகலத்தலுக்கு ஆதரவாக இருப்பதை குறிப்பிட்டு நிந்திப்பவர் தேசியவாத அற்பரே அந்தப் போலி மார்க்சியவாதி என்கிறார் லெனின்.

லெனின்:-
“தேசிய இனங்களின், மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரிக்காத, அதற்காகப் போராடாத எவரும், எல்லாவிதமான தேசிய இன ஒடுக்குமுறையும் சமத்துவத்துக்கு இடமில்லாதது. ஆனால் பிறிதொரு தேசிய இனத்தைச் சேர்ந்த மார்க்சிவாதி “ஒன்றுகலத்தலை” ஆதரித்து நிற்பதாகச் சொல்லி அவரை நிந்தனை செய்யும் போலி மார்க்சியவாதி தேசியவாத அற்பரே ஆவார் என்பதும அதே போல் சந்தேகத்துக்கு இடமில்லத்து தான்”
தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள் - பக்கம் - 34

தனித்தனி தேசிய இனங்களாக பிரிந்திருப்பதே அந்தந்த தேசங்களுக்கு சிறந்தாய் இருக்கும் என்ற நிலையை, சுயநிர்ணய உரிமை கோரவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இணக்க மற்ற நிலையில் பிரிந்து செல்வதையும் இணக்கமும் நெருக்கமும் உள்ள நிலையில் சேர்ந்திருத்தலையும் வலியுறுத்துகின்றனர் கம்யூனிஸ்டுகள்.

தேசிய இனங்களின் பிரச்சினை என்பது, முதலாளித்துவ தேசத்தின் தொடக்கத்திலிருந்து, சோஷலிச சமூகத்தைக் கடந்து கம்யூனிச சமூகம் வரை தொடரும். இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு அரசின் தோற்றம் முதல் அதன் மறைவு வரையான அதாவது அரசு உலர்ந்து உதிரும் நிலைவரையான வரலாற்றியல் பொருள்முதல் பார்வையில் புரிந்திருப்பது அவசியமானதொன்றாகும்.

சுயநிர்ணய உரிமையை மார்க்சியம் ஆதரிக்கிறது என்றவுடன், மார்க்சியவாதிகள் தேசிய இனக் கலாச்சாரத்துக்காக போராடுபவர்கள் என்று நினைத்திவிடக் கூடாது. கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்க சர்தேசக் கலாச்சாரத்தையே பின்பற்றுபவர்கள். இதில் எந்த தயக்கமும் கிடையாது. ஒரு இனம் தாம் சுயமாக செயற்படும் போது தான் சர்வதேசிய பாதையை நோக்கி தடையில்லாமல் செல்ல முடியும்.

தேசிய இனக் கலாசாராம் என்பது நிலப்பிரபுக்கள், மதக் குருமார்கள், மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தினுடையது என்கிறது மார்க்சியம். இந்த தேசியக் கலாச்சாரத்தில் உள்ள ஜனநாகயக மற்றும் சோஷலிசக் கூறுகளை மட்டும் தான் பாட்டாளிவர்க்கம் எடுத்துக் கொள்கிறது. ஒவ்வொரு தேசிய இனத்துக்கு உரிய முதலாளித்துவ கலாசாரத்தையும் முதலாளித்துவ தேசிவாதத்தையும் எதிர்ப்பதற்காகவே அவற்றை எடுத்துக் கொள்கிறது.

லெனின்:-
"தேசிய இனக் கலாசாரம் என்ற கோஷத்தின் உட்பொருள், குறிப்பிட்ட நாடடிலும் உலகின் எல்லா நாடுகளிலும் எல்லா வர்க்கங்களுக்கும் இடையிலான புறநிலை எதார்த்த உறவுகளால் நிர்ணணிக்கப்படுகிறது. முதலாளி வர்க்கத்தின் தேசிய இனக் கலாசாரம் கண்கூடான உண்மை ஆகும்.
..
ஆக்கிரமிப்பு வாய்ந்த பூர்ஷ்வா தேசியவாதமானது, தொழிலாளர்களை முதலாளி வர்க்கத்தாருக்கு அடிபணிந்து நடக்க வைப்பதற்காக அவர்களை மதிமயங்கச் செய்கிறது, அசட்டு  ஏமாளிகளாக்குகிறது, ஒன்றுசேராதவாறு பிளவுறுத்துகிறது- இது தான் இக்காலத்தின் அடிப்படையான உண்மை.
..
தேசிய இனக் கலாசாரம் என்ற கோஷத்தை ஆதரிப்போர் இருக்க வேண்டிய இடம் தேசியவாதக் குட்டி முதலாளித்துவப் பகுதியோர் மத்தியிலே அன்றி, மார்க்சியவாதிகள் மத்தியில் அல்ல.

ஸ்தூலமான ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம், மாருஷ்ய மார்க்சியவாதியான ஒருவர் தேசிய இன மாருஷ்ய கலாசாரம் என்ற கோஷத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா? முடியாது. ஏற்றுக் கொள்கிறவர் எவரும் தேசியவாதிகளது அணிகளில் இருக்க வேண்டுமே அன்றி, மார்க்சியவாதிகளது அணிகளில் அல்ல."
தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள் - பக்கம் - 28-29

      தேசிய இனத் தனியியல்புகளை இழந்து வேறொரு தேசிய இனமாக மாற்றமுறுவது அதாவது சர்வதேசிய இனமாக மாறுவது என்பது வரலாற்றில் நிகழக்கூடிய ஒன்றாகும்.  எதிர்காலத்தில் நடைபெறப் போகின்ற இந்த ஒன்றுகலத்தல் என்பதை கணக்கில் கொண்டே மார்க்கியம் தமது சர்வதேசிய கண்ணோட்டத்தை அமைத்துக் கொண்டுள்ளது. எப்படி ஆதி பழங்குடியோடு நாகரீக சமூகத்தின் வரலாறு நின்றுவிடவில்லையோ, அதேபோன்று இன்றைய தேசிய இனக் கலாச்சாரத்தோடு நின்றுவிடப்போவதில்லை. உலக சமூகத்தின் சர்வதேச கலாச்சாரம் தோன்றும்.
    

தேசங்கள் இருக்கும் வரை தேசிய இனங்கள் ஒன்றுகலத்தல் நிகழ்வு நிறைவடையும் வரை தேசிய இனங்களின் பிரச்சினைகளை உலகம் சந்தித்து வரவேண்டிவரும்.

No comments:

Post a Comment