மார்க்சியம் என்பது என்ன என்பதை அறிந்து கொள்ளாமலேயே,
அதனைப் பற்றி பலர் விமர்சிக்கின்றனர். அப்படிப்பட்ட விமர்சனம் மார்க்சியம் காலாவதியாகிவிட்டது
என்ற முடிவுவரை போகின்றது.
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு எடுக்கப்பட்ட முடிவுகளை
மார்க்சியமாகக் புரிந்துவைத்துள்ளவர்களிடம் தான் சிக்கல்கள் ஏற்படுகிறது. குறிப்பிட்ட
சூழ்நிலைமைகள் மாறும் போது அந்த முடிவுகளும் மாறுதலுக்கு உள்ளாகிறது. இந்த மாற்றத்தை
காண்பவர்கள் மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்ற முடிவுக்கு வருகின்றனர். இது மிகமிக
மேலோட்டப் பார்வையாகும்.
குறிப்பிட்ட சூழ்நிலையை எதனைக் கொண்டு மார்க்சியர்கள்
முடிவெடுத்தார்களோ அதுவே மார்க்சியம். வடிவத்தையே முடிவாகக் கொள்கின்றனர். அந்த வடிவத்திற்கான
உள்ளடக்கத்தை முற்றப் புறக்கணிக்கின்றனர். புதிய சூழ்நிலை ஏற்படும் போது பழைய சூழ்நிலைக்கு
எடுக்கப்பட்ட முடிவுகள் பொருந்தாமல் போகிறது. புதிய சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்க
வேண்டியுள்ளது. இந்த முடிவுகள் எடுப்பதற்கு உதவிடும் கண்ணோட்டமே மார்க்சியம்.
சமூகம் பற்றிய கண்ணோட்டம் இரண்டுதான் இருக்கிறது.
சமூகத்தை தலைசிறந்த தலைவர்கள் வழிகாட்டுகின்றனர், அவர்கள் அரசராகவோ, ராணுவ அதிபதியாகவோ,
பிரதமராகவோ, ஜனநாதிபதியாகவோ, தத்துவவாதியாகவோ இருக்கலாம். இப்போக்கினர் சிந்தனையே வாழ்நிலையைத்
தீர்மானிக்கிறது என்கிற கருத்துமுதல்வாதப் பிரிவை சேர்ந்தவர்.
மற்றொருன்று, வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கிறது.
இது பொருள்முதல்வாதப் பிரிவாகும்.
சமூகஉற்பத்தி
முறை தான், எல்லா வகையான சமூக உணர்வுநிலைகளையும் தீர்மானிக்கின்றன. உற்பத்தி முறை என்பது
உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டையும் உள்ளடங்கியவையாகும். இந்த பொருளாதார
அமைப்பையே அடித்தளம் என்றழைக்கப்படுகிறது.
தத்துவயியல், மதம், அரசியல், சட்டம், அறநெறி, பண்பாடு,
கலை போன்றவை குறிப்பிட்ட பொருளாதார அமைப்பிற்கு ஏற்ப தோன்றும் மேற்கட்டமைப்பாகும்.
அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையே ஒன்றுடனொன்றான
தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பை தோற்றுவிக்கும்
காரணமாகவும் இருக்கிறது. ஆகவே சமூகத்தின் அடித்தளத்திற்கு ஒத்த மேல்கட்டமைப்பு உருவாகிறது.
உருவாகும் என்பதை அடித்தளத்திற்கு ஏற்ப மேற்கட்டமைப்பு தானாகவே ஏற்பட்டுவிடும் என்றும்
விளக்கப்படுத்திக் கொள்ளக்கூடாது. அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது, நீர்ணயிக்கிறது
என்று தான் மார்க்சியம் கூறுகிறது. அதே நேரத்தில்
மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்து. இந்தத் தாக்கம் தீர்மானிக்கும்
வகையில் இருக்காது, அடித்தளத்தால் தீர்மானிக்கப்பட்டதை விரைவாகவோ அல்லது தாமதமாகவோ
செய்திடும் வகையில் மேற்கட்டமைப்பின் தாக்கம் இருக்கும். அதாவது அடித்தளமான புறநிலை
விதியை அறிந்தவர்கள் மாற்றத்தை விரைவுபடுத்துகின்றனர். புறநிலை விதியை புரிந்து கொள்ளவாதவர்களும்
தவறாகப் புரிந்து கொண்டவர்களும் வளர்ச்சியை தாமதப்படுத்துகின்றனர்.
மார்க்சுக்கு முன்புவரை, சிந்தனையே தீர்மானிக்கிறது
என்ற கண்ணோட்டமே இருந்தது. சமூகப் பற்றிய கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தின் குறைபாடாக
மார்க்சியம் இரண்டைக் குறிப்பிடுகிறது. மனிதர்களின் சித்தாந்தத்தின் நோக்கங்களை மட்டுமே
ஆராய்கிறது. இந்த நோக்கங்கள் தோன்றுவதற்கான சமூகப் பொருளாதார நிலைமைகளைக் நோக்கவில்லை
என்பது முதல் குறை. மக்களின் நடவடிக்கைகளை அது கணக்கில் கொள்ளாதது இரண்டாவது குறையாகும்.
இந்தக் குறைகளை களைந்து சமூகத்தை பொருள்முதல்வாதப்
பார்வையில் அணுகுவதே மார்க்சியக் கண்ணோட்டமாகும். சமூகம் பற்றிய இந்த மார்க்சியக் கண்ணோட்டம்
பழைமைப்பட்டுப் போய்விட்டது, இன்று பொருத்தமானதாக இல்லை என்று கூற முடியுமா? இல்லை
என்பதே உண்மை. இந்த உண்மையை மறுப்பவர்கள், இந்தப் புதிய கண்ணோட்டத்திற்கு மாறாக, பழைய
கருத்துமுதல்வாத கண்ணோட்டமான சிந்தனையே வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்ற முடிவுக்கு
வருகின்றனர். எந்தக் கண்ணோட்டத்தை தவறு என்று கூறி புதியக் கண்ணோட்டத்தை மார்க்சியம்
வகுத்தோ அதனை நீக்கிவிட்டு, அந்தத் தவறான பழையக் கண்ணோட்டத்தை ஏற்பது புதுமையானது கிடையாது.
பழைமை நோக்கிச் செல்வதேயாகும்.
லெனின்:- “மார்க்சியம்
உயிரற்ற வறட்டுச் சூத்திரம் அல்ல, இறுதி முடிவாக்கப்பட்டுவிட்ட, முன்கூட்டியே தயார்
செய்து வைக்கப்பட்டுவிட்ட, மாற்றத்துககு இடமில்லாது இறுகிவிட்ட போததனை அல்ல அது. செயலுக்கான
உயிருள்ள வழிகாட்டி அது, சமூக வாழ்க்கை நிலைமைகளில் ஆச்சரியப்படத்தக்க அளவில் திடுதிப்பென
நிகழ்ந்த மாறுதல்களை இக்காரணத்தால் நிச்சயமாக மார்க்சியம் பிரதிபலித்துக் காட்டவே செய்யும்.
ஆழ்ந்த சிதைவிலும், ஒற்றுமையின்மையிலும்,
பல வகைப்பட்ட ஊசலாட்டங்களிலும், சுருங்கச் சொன்னால் மார்க்சியத்துக்கு உள்ளேயே ஒரு
மிகத் தீவிரமான நெருக்கடியிலும் இந்தமாறுதல் பிரதிபலித்துக் காட்டப்பட்டது. இந்தச்
சிதைவை எதிர்த்து மூர்த்தண்ணியமாகப் போராட வேண்டியது தேவை, மறுபடியும் நிகழ்ச்சி நிரலுக்கு
வந்தது.”
(மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள்)
தம்மை மார்க்சியர் என்று அழைத்துக் கொண்டே மார்க்சியம்
காலாவதியாகிவிட்டது என்கின்றனர் சிலர். மார்க்சியத்தை முடிந்த முடிபாக, புரிந்து கொண்டவர்கள்
தான் இவ்வாறு பேச முடியும். மார்க்சிய அடிப்படையில் இருந்து விலகி நவீன கருத்துமுதல்வாதச்
சகதிக்குள் மூழ்கி முத்தெடுக்க இவர்கள் முனைகின்றனர்.
“மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று
உள்ளடக்கக் கூறுகளும்” என்ற சிறுகட்டுரையில் லெனின் மார்க்சியத்தின் அடிப்படைகளைத்
தொகுத்தளித்துள்ளார். மார்க்சியத்தின் மூன்று உட்பிரிவான தத்துவம், அரசியல் பொருளாதாரம்,
விஞ்ஞான சோஷசிலம். இதில் எது காலாவதியாகிவிட்டது?
தத்துவத்தைப் பற்றி லெனின் கூறுகிறார்:-
“இயற்கை என்பது - அதாவது
வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது- மனிதனுக்கு அப்பால் சுயமாக
இருந்து வருகிறது. இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது. அதே போலதான் மனிதனின்
சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவஞானம், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக
மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருததுக்களும் போதைனகளும்) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு
முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித்தளத்தின்
மீது நிறுவப்பட்ட மேல் கட்டுமானமேயாகும். உதாரணமாக, நவீன ஐரோப்பிய அரசுகளின் பல்வேறு
அரசியல் வடிவங்கள் எல்லாம் பாட்டாளி வர்க்கத்தின் மேல் முதலாளி வர்க்கம் செலுத்தி வரும்
ஆதிக்கக்த்தைப் பலப் படுத்த எப்படிப் பயன்படுகின்றன என்பைத நாம் பார்க்கிறோம்.
மார்க்சின் தத்துவஞானம்
முழுநிறைவு பெற்ற தத்துவஞானப் பொருள்முதல்வாதமாகும். இந்தப் பொருள்முதல்வாதம் மனித
குலத்திற்கு, குறிப்பாகத் தொழிலாளி வர்க்கத்துக்கு, மகத்தான அறிவுச் சாதனங்கைள வழங்கியிருக்கிறது.”
அரசியல் பொருள்முதல்வாதம் பற்றி லெனின் கூறுகிறார்:-
“பொருளாதார அமைப்பு முறை
என்ற அடித்தளத்தின் மீதுதான் அரசியல் மேல் கட்டுமானம் கட்டப்படுகிறது என்று ஏற்றுக்
கொண்டவுடன், மார்க்ஸ் தமது பெரும்பாலான கவனத்தை இந்தப் பொருளாதார அமைப்பு முறையின்
மீது செலுத்தினார். மார்க்ஸின் பிரதான நூலாகிய மூலதனம் நவீன காலத்திய - அதாவது, முதலாளித்துவ
- சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையை ஆராயும் நூலாகும்.
…
முதலாளித்துவப் பொருளாதாராவாதிகள்,
பொருட்கள் இடையிலான (ஒரு பண்டம் மற்றொன்றுடன் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும்) உறவு
என்பதாக விவரித்ததில் மனிதர்கள் இடையிலான உறவு நிலவுவதை மார்க்ஸ் புலப்படுத்தினார்.
பண்டப் பரிமாற்றம் தனித்தனியான உற்பத்தியாளர்களிடையே சந்தை மூலமாக ஏற்படும் பிணைப்பைக்
காட்டுகிறது.
….
முதலாளித்துவப் பொருளாதாராவாதிகள்,
பொருட்கள் இடையிலான (ஒரு பண்டம் மற்றொன்றுடன் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும்) உறவு
என்பதாக விவரித்ததில் மனிதர்கள் இடையிலான உறவு நிலவுவதை மார்க்ஸ் புலப்படுத்தினார்.
பண்டப் பரிமாற்றம் தனித்தனியான உற்பத்தியாளர்களிடையே சந்தை மூலமாக ஏற்படும் பிணைப்பைக்
காட்டுகிறது.
….
உபரி மதிப்பைப் பற்றிய
போதனைதான் மார்க்சின் பொருளாதாரத் கொள்கைக்கு மூலைக்கல் ஆகும்.
தொழிலாளியின் உழைப்பால்
உண்டாக்கப்பட்ட மூலதனம் சிறு உற்பத்தியாளர்களை அழித்து வேலையில்லாதோர் பட்டாளத்தைப்
படைப்பதின் மூலமாகத் தொழிலாளியை நசுக்குகிறது. தொழில் துறையில், பெருவீத உற்பத்தி பெறுகிற
வெற்றி பளிச்சென்று தெரிகிறது.
…
மூலதனம் சிற்றளவான உற்பத்தியை
ஒழிப்பதன் மூலம், உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதற்கும் பெரிய முதலாளிகளின்
கூட்டுகளுக்கு ஏகபோக நிலையைப் படைப்பதற்கும் வகை செய்கிறது. உற்பத்தியே மேலும் மேலும்
சமுதாயத் தன்மை பெறுகிறது, ஒரு முறையான பொருளாதார ஒழுங்கமைப்பிலே லட்சக் கணக்கான, கோடிக்
கணக்கான தொழிலாளர் பிணைக்கப்பட்டு விடுகின்றனர். ஆனால் அந்தக் கூட்டு உழைப்பின் உற்பத்திப்
பொருளை விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில முதலாளிகள் உடைமையாக்கிக் கொள்கிறார்கள். உற்பத்தியில்
அராஜகம் வளர்கிறது, அதேபோல் நெருக்கடிகளும் வளர்கின்றன, சந்தைகளைப் பிடித்துக் கொள்வதற்கான
ஆவேச வேட்டையும் அதிகமாகிறது, திரளான மக்களின் வாழ்க்கைக் காப்புறுதியின்மையும் அதிகரிக்கிறது.
…
பரிமாற்றப் பண்டப் பொருளாதாரத்தின்
ஆரம்ப வித்துக்களிலிருந்து, சாதாரணப் பரிமாற்றத்திலிருந்து தொடங்கி, மிக உயர்ந்து வடிவங்கள்
வரையில், பெருவீத உற்பத்தி வரையில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியை மார்க்ஸ் ஆராய்ந்து
காட்டினார்.
பழையவையும் புதியவையும்
அடங்கலான எல்லா முதலாளித்துவ நாடுகளின் அனுபவமும் இந்த மார்க்சியப் போதனை பிழையற்றதாகும்
என்பைத ஆண்டுதோறும் மேலும் மேலும் கூடுதலான தொழிலாளர்களுக்குத் தெளிவாக நிருபித்துக்
காட்டி வருகிறது.
உலெகங்கும் முதலாளித்துவம்
வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் இந்த வெற்றி முதலாளித்துவத்தின் மீது தொழிலாளர் காணப்
போகும் வெற்றியின் முன்னறிவிப்பே ஆகும்.”
விஞ்ஞான சோஷலிசத்தைப் பற்றி லெனின் கூறுகிறார்:-
“…மார்க்சுக்குத்தான் உலக
வரலாறு போதிக்கும் படிப்பினையை இதிலிருந்து கண்டறியவும், அந்தப் படிப்பினையை முரணின்றிச்
செயல்படுத்தவும் முடிந்தது, இதில்தான் அவருடைய மேதாவிலாசம் இருக்கிறது. வர்க்கப் போராட்டத்தைப்
பற்றிய போதனைதான் அந்த முடிபாகும்.
நீதி, மதம், அரசியல், சமுதாயம்
சம்பந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும்
பின்னே ஏதாவெதாரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்து
கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக்
கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான்
அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின்
சக்திகளைக் கொண்டு அது நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், மேம்பாடுகள்
ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்கைள
என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டேயிருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத்
தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. ஆது என்ன? பழைமையைத் துடைத்தெறியவும்
புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக
அப்படிப் படைத்துத் தீர வேண்டிய கட்டாயத்திலிருக்கிறவையுமான சக்திகளை நம்மைச் சூழ்ந்துள்ள
இதே சமுதாயத்திற்குள்ளேயே நாம் கண்டு பிடித்து, அந்தச் சக்திகளுக்கு அறிவொளியூட்டிப்
போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி.
மார்க்சின் தத்துவஞானப்
பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அது வரை உழன்று கொண்டிருந்த
ஆன்மிக அடிமைத்தனத்திலிருந்து வெளியேறும் வழியைப் பாட்டாளி வர்க்கத்திற்குக் காட்டியிருக்கிறது.
மார்க்சின் பொருளாதாரத் தத்துவம் ஒன்றுதான் பொதுவான முதலாளித்துவ அமைப்பு முறையில்
பாட்டாளி வர்க்கத்தின் உண்மை நிலையை விளக்கியுள்ளது.”
“..செயலுக்கான உயிருள்ள வழிகாட்டி அது, சமூக வாழ்க்கை
நிலைமைகளில் ஆச்சரியப்படத்தக்க அளவில் திடுதிப்பென நிகழ்ந்த மாறுதல்களை இக்காரணத்தால்
நிச்சயமாக மார்க்சியம் பிரதிபலித்துக் காட்டவே செய்யும்.” (லெனின்) என்பது தான் மார்க்சியர்களின்
வழிமுறை. எனவே மாறுதல்களை மார்க்சியம் கணக்கில் எடுத்துக்கொள்ளும். இந்த கணக்கில் எடுத்துக்
கொள்வதில் உள்ள காலதாமதத்தை மார்க்சியம் காலாவதியாகவிட்டதாக என்று புலம்புபவர்களை விட்டுவிட்டு
நமது பணியினைத் தொடர்வோம்.
No comments:
Post a Comment