ஏகாதிபத்தியக்
காலத்தில் உடல் உழைப்பு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. உற்பத்திச்
சக்தியின் வளர்ச்சியின் காரணமாய் உடலுழைப்பு அல்லாத தொழில்நுட்பம் பயின்ற மூளை உழைப்பாளர்கள்
பெருகிவருகின்றனர். இதன்மூலம் மார்க்சியம் கூறிவருகிற தொழிலாளர்களின் புரட்சி இன்றைக்கு
சாத்தியம் இல்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.
மார்க்சிய
அடிப்படைகளை எளிமைப்படுத்தி புரிந்து கொண்டதால் ஏற்பட்ட தவறான கருத்தே இது. மார்க்ஸ்
உடலுழைப்புத் தொழிலாளர்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. அன்றைய புதிய நவீனஇயந்திரத்தை
தொழிற்சாலையில் புகுத்தும்போது அந்த இயந்திரத்தை இயக்குகிற நேரடி உடலுழைப்புக் குறைந்த
தொழில்நுட்ப தொழிலாளர்கள் தோன்றியதையும் அவர்கள் உடலுழைப்புத் தொழிலாளர்களிடம் இருந்து
வேறுபட்டிருப்பதையும் கூறியிருக்கின்றார்.
மார்க்ஸ்
தாம் எழுதிய மூலதன முதல் தொகுதியில் ஒப்பீட்டு உபரி-மதிப்பின்
உற்பத்தி என்ற பகுதியில், இயந்திர சாதனமும் நவீனத் தொழில்துறையும்
என்ற அத்தியாயத்தில் எழுதியிருக்கிறார். தொழிற்புரட்சியைத் தொடர்ந்து தானியங்கி தொழிற்சாலை
(automatic factory) தோன்றிடும் போது தொழில்நுட்பத்தைக்
கையாள்கிற புதுவகையான உயரிய தொழிலாளர் பிரிவு (superior
class of workmen) உருவாவதை மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.
“மேம்பட்ட
தொழிலாளர் பிரிவு இது, இவர்களில் சிலர் விஞ்ஞானக் கல்வி கற்றவர்கள், மற்றவர்கள் ஒரு
தொழிலுக்கு என்றே வளர்க்கப்பட்டவர்கள், இந்தப் பிரிவு ஆலைத் தொழிலாளர் வர்க்கத்துடன்
சேர்த்துக் கணக்கிடப்பட்டாலும், அதிலிருந்து வேறுபட்டதாகும். இந்த உழைப்புப் பிரிவினை
முற்றிலும் தொழில்நுட்ப வழிப்பட்டது.
…
தொழிலாளியைக்
குழந்தைப் பருவம் முதற்கொண்டே நுணுக்க இயந்திரம் ஒன்றின் பகுதியாக மாற்றியமைத்திடும்
விதத்தில் இயந்திர சாதனம் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. இவ்விதம், அவரது மறுவுற்பத்தியின்
செலவுகள் கணிசமாகக் குறைக்கப்படுவது மட்டுமல்ல, வேறு வழியின்றி தொழிற்சாலை முழுவதையும்,
அதாவது முதலாளிகளையும் அவர் சார்ந்து வாழ வேண்டிய நிலை அதே நேரத்தில் முழுமையாக்கப்
படுகிறது.
வேறெங்கும்
போலவே இங்கும் சமூக உற்பத்தி நிகழ்முறையினது மேம்பாட்டின் விளைவாய் அதிகரித்த உற்பத்தித்
திறனுக்கும், அம்மேம்பாட்டை முதலாளி பயன்படுத்திச் சுரண்டுவதன் விளைவாய் அதிகரித்த
உற்பத்தித் திறனுக்கும் இடையில் நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
கைத்தொழில்களிலும்,
பட்டறைத் தொழிலிலும் தொழிலாளி கருவியைப் பயன்படுத்துகிறார், தொழிற்சாலையில் இயந்திரம்
அவரைப் பயன்படுத்துகிறது. அங்கே உழைப்புக் கருவியின் இயக்கங்கள் அவரிடம் இருந்து தொடங்குகிறது,
இங்கே இயந்திரத்தின் இயக்கங்களை அவர் பின்தொடர வேண்டும்.
பட்டறைத்
தொழிலில் தொழிலாளர்கள் உயிருள்ள இயங்கமைப்பின் அங்கங்களாவர். தொழிற்சாலையில் உயிரற்ற
இயங்கமைப்பு தொழிலாளியைச் சாராமல் சுயேச்சையாய் இருப்பதையும், அதற்குத் தொழிலாளி உயிருள்ள
ஒட்டுவால் ஆகிவிடுவதையும் காண்கிறோம்.” (மூலதனம் தொகுதி ஒன்று - பக்கம் 568-569,
570-571)
இயந்திரத்தின்
ஒட்டுவாலாய் போன தொழில்நுட்ப தொழிலாளர்களின் வேதனைகளையும் இங்கே மார்க்ஸ் தொகுத்துள்ளார்.
ஆக, தமது உற்பத்திச் சக்தியை விற்கக்கூடிய நிலையில், முதலாளியின் மூலதனத்தை சார்ந்து
வாழக்கூடிய சுரண்டப்படும் இந்த தொழிற்நுட்ப தொழிலாளியும் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே.
இதன் தொடர்ச்சியாக தற்கால நவீன உற்பத்தி முறைக்கு வரும் போது இன்றைய பாட்டாளி தனிச்
தேர்ச்சிபெற்ற, அதற்கு சான்றிதழ் பெற்ற, மூளை உழைப்பைச் செலுத்தும் தொழிலாளியாக இருக்கிறார்.
தற்காலத்திய
தொழிற்சாலைகள் அதிநவீனமாக மாறிவிட்டது, இங்கே முழுவதும் தானியங்கி இயந்திரங்களையும்,
கணிப்பொறி இயந்திர மனிதனைக் (computer robot) கொண்டும்
இயக்கப்படுகிறது. இதனை இயக்குகின்ற தொழில்நுட்ப தொழிலாளர்கள் தங்களது உடலைவிட மூளையை
அதிகம் பயன்படுத்துகின்றனர். அதே போல் மூளை உழைப்பை செலுத்துகின்ற தகவல் தொழில்நுட்ப
துறையில் பணிசெய்பவர்களில் பலபிரிவுகள் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே ஆவர்.
உடலுழைப்பைவிட மூளை உழைப்பைச் செலுத்துபவர்களுக்கு இன்றைய நிலையில் அதிகம் ஊதியம் கிடைக்கிறது
என்பது உண்மையே. இவர்களிடம் இருந்துதான் மேட்டுக்குடி பாட்டாளிகள் தோன்றுகின்றனர்.
மேட்டுக்குடி
பாட்டாளிகளின் மேட்டுக்குடி சிந்தனைகள் எல்லாம் முதலாளித்துவத்தின் செழுமைக் காலத்தில்
மட்டும் தான் காணப்படும், தொடர்ந்து வரக்கூடிய பொருளாதார நெருக்கடியால் இவர்களும் நெருக்குதலுக்கு
ஆளாகிறார்கள். இவர்கள் தங்களது பழைய வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாது என அறிந்திடும்போது
இவர்களின் மேட்டுக்குடி சிந்தனை தவிடுபொடியாகிவிடும்.
“…தொழிலாளி வர்க்கத்தில் அதிக ஊதியம் பெறுவோரைக்
கூட – இவ்வர்க்கத்தின் மேட்டுக்குடியினைரையும் கூட- தொழில்துறைக் கொந்தளிப்புகள் எப்படிப்
பாதிக்கின்றன” (மூலதனம் தொகுதி ஒன்று - பக்கம் 897-898) என்று மேட்டுக்குடி தொழிலாளர்களும்
பொருளாதார நெருக்கடியின் போது அவர்கள் எப்படியெல்லாம் பாதித்தனர் என்பதினைப் பற்றிய
செய்தியேடுகளில் வந்துள்ள அறிக்கையை மார்க்ஸ் நமக்கு எடுத்துக் காட்டுகிறார். முதலாளித்துவ
செழுமையின் போது கிடைக்கின்ற அதிக ஊதியம், பொருளாதார நெருக்கடியின் போது உறுதியற்று
போகிறது. செய்திடும் வேலையும் உறுதியற்றது என்பதை உணர்ந்திட்ட மேட்டுக்குடி பாட்டாளிகள்
மார்க்சியத்தின் பக்கம் இருப்பர். வரலாறு அறியாத நேர்காட்சி கண்ணோட்டம் கொண்டவர்கள்
நெருக்கடியின் போதே மார்க்சியத்தை நாடுவர்.
இந்த
மேட்டுக்குடியினரை தனிப் பிரிவான அடுக்காக கொள்ளமுடியாது, தொழிலாளி வர்க்கத்தினுடைய
இயக்க வளர்ச்சியில் மாறிச்செல்வதைக் குறிப்பதாகும் என்கிறார்
லெனின்.
“நடுநிலைவாதிக”ளிடையில்,
சட்ட முறைமையின் நச்சு நோயால் அரிக்கப்பட்டுப் போனவர்களும், நாடாளுமன்றச் சூழலால் கெடுக்கப்பட்டவர்களுமான
வழக்கமான பக்தர்களும், சொகுசான பதவிகளுக்கும் வசதியான வேலைகளுக்கும் பழக்கமாகி விட்ட
அதிகார வர்க்கத்தாரும் உள்ளனர். வரலாற்று முறையிலும், பொருளாதார முறையிலும் பார்த்தால்
அவர்கள் தனிப் பிரிவான ஓர் அடுக்கு அல்ல, ஆனால் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பழைய கட்டத்தில்
இருந்து ஒரு மாறிச் செல்லுதலை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்” (நமது புரட்சியில்
பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் தேர்வு நூல்கள் 5 -பக்கம் 77)
பாட்டாளிகளும்,
பாட்டாளிகளை வழிநடத்தும் கம்யூனிஸ்டுகளும் சமூகப் போராளியாக செயற்பட வேண்டுமானால்,
நிலவும் சமூகத்தின் பிரச்சினைகளை வரலாற்று முறையில் ஆய்ந்து, அதற்கான முடிவை எடுக்க
வேண்டும். இதற்கு மார்க்சியத்தில் காணப்படும் அரசியல் பொருளாதாரம், வரலாற்றியல் பொருள்முதல்வாதம்
ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அப்போதுதான் தமது அரசியல் செயற்பாட்டை
விஞ்ஞான அடிப்படையில் அமைத்துக் கொள்ள முடியும்.
No comments:
Post a Comment