Saturday, 2 July 2016

உலகப் புரட்சிக்கான புறநிலை என்பது கம்யூனிச சித்தாந்தத்தை வீழ்த்துமா? நிரூபிக்குமா?


    தோழர் பிரபாத் பட்நாயக்கின் கட்டுரையின் சுறுக்கம் (இடது பாதையில்தடைக்கற்கள்- தி இந்து – 19-06-2016) தமக்குள் முரண்பட்ட கருத்தையே பதிந்துள்ளது. லெனினால் எழுதப்பட்ட “ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்” என்ற நூலையைப்பற்றி பிரபாத் பட்நாயக் குறிப்பிடும்போது நூறு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டது, உண்மையில் மிக முக்கியமான நூல், மக்களால் இன்னும் அது வாசிக்கப்படவில்லை என்று எதோ வருத்தப்பட்டு எழுதியிருக்கிறார் என நினைத்தால் “புரட்சிகளின் சகாப்தம் வந்து சேர்ந்துவிட்டதாக அந்தப் புத்தகம் வாதிட்டது. புரட்சிகளின் சகாப்தத்துக்கான காரணம் எது என்பதையும் அது விளக்கியுள்ளது” என்று அதன் வாதத்தையும் அடுத்தப் பத்தியில் விளக்கப்பட்டுள்ளதையும் பேசுகிறார், இவர் இதனை ஏற்றுக் கொண்டாரா? அல்லது மறுக்கிறாரா? என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ஏன் என்றால் கம்யூனிசத்தின் பின்னடைவுக்கு (பட்நாயக்கைப் பொருத்தளவில் இது தகர்வு) “உலகப் புரட்சி வந்து கொண்டிருப்பதாக அளித்த வாக்குறுதியின் மீது கட்டமைக்கப்பட்டிருப்பது தான்” என்கிறார்.

"உலகப் புரட்சி சமீபத்தில் இருக்கிறது என்று சொல்லப்பட்டது. ஆனால் புரட்சி பின்வாங்கிவிட்டது" என்கிறார். ஆக இதற்கான லெனினது விளக்கத்தைப் பிரபாத் பட்நாயக் ஏற்கவில்லை என்பது உறுதியாகிறது. மறுப்பதோடு லெனினிய திருப்புமுனையான சம்பவங்கள் காலாவதியாகிவிட்டது, அதனால் கம்யூனிசம் நடைமுறைக்குப் பொருத்தமானதாகத் தொடர்ந்து இருப்பதற்காக லெனினிய திருப்புமுனைக்கு முந்தைய கட்டத்துக்கு இணையான நிலைக்கு அது வரவேண்டும் என்கிறார். அத்தோடு லெனினியத்துக்குப் பிறகான தொடர் இணைப்பான சம்பவங்களைக் கம்யூனிசத்தின் இயலாமையால் எதிர்கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த இயலாமையே லெனினியத்தைப் புறக்கணித்ததின் விளைவு என்பதே மெய்யான உண்மையாகும். இந்த இயலாமை லெனினியத்தை உள்வாங்காமை, இன்றைய நிலைமைக்கு அதனைக் கடைப்பிடிக்காமை என்பதில் தான் அடங்கியிருக்கிறது.

பிரபாத் பட்நாயக்கின் கட்டுரையின் அனைத்து உட்தலைப்புகளும் லெனினியத்தையும் கம்யூனிசத்தையும் கேள்வுக்குள்ளாக்குவதாகவே இருக்கிறது. முதலில் லெனினியத்தைப் பார்ப்போம். ஏகாதிபத்திய காலத்தில் ஏற்பட்ட போரின் போது இரண்டாம் அகிலத்தின் சந்தப்பவாதத்துடன் மோதலில் தோன்றிய லெனினியப் பகுதியைப் பற்றி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்துடனான மோதல்களில் தான் லெனினியம் வளர்ச்சியுற்றது. ஒருபுறத்தில் மார்க்ஸ் எங்கெல்சுக்கும் மறுபுறத்தில் லெனினுக்கும் இடையில், இரண்டாம் அகிலத்தினுடைய சந்தர்ப்பவாதத்தன் கடிவாளமற்ற ஆதிக்கம் மேலோங்கியிருந்த ஒரு முழுநிறைவான காலம் இருந்ததை நாம் கட்டாயம் மறந்துவிடக் கூடாது என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதனையே பிரபாத் பட்நாயக் மறக்க அல்லது மறைக்கப் பார்க்கிறார்.

"போரும் ருஷ்ய சமூக-ஜனநாயகமும்" என்ற நூலில் லெனின் அனைத்து நாடுகளின் அரசுகளும் முதலாளித்துவக் கட்சிகளும் பல பத்தாண்டுகளாக ஆயத்தம் செய்துவந்த ஐரோப்பியப் போர் மூண்டுவிட்டதையும், முன்னேற்றமடைந்த நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சியின் ஆகச் சமீப கட்டமான ஏகாதிபத்திய கட்டத்தில் சந்தைகளுக்கான போராட்டம் தீவிரமடைந்துவிட்டதையும் சுட்டிக்காட்டி ஏகாதிபத்திய போர் தவிர்க்க முடியாமையினை விவரித்துளளார். மேலும், ஏகாதிபத்திய நாடுகள் தமது நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்கு உழைக்கும் மக்கள் திரளின் கவனத்தைத் திசைத்திருப்புதல், தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குலைத்தல், தேசியவாதத்தை முன்வைத்துப் பாட்டாளி வார்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தைப் பலவீனப்படுத்துதல் என்பவையே இந்தப் போரின் ஒரே மெய்யான குறிக்கோள் என்று எழுதியிருக்கிறார்.
"ஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்" என்ற நூலில், இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்தை லெனின் சுட்டிக்காட்டுகிறார். உயர்வான ஊதியத்தினைப் பெற்ற, மேட்டுக்குடி உழைப்பாளர்கள் குட்டிமுதலாளித்துவ மனப்பான்மையைப் பெற்றுள்ளனர். அவர்களே இரண்டாவது அகிலத்தின் பிரதானத் தூண்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையில் நடைபெறும் உள்நாட்டுப் போரில், தவிர்க்க இயலாதபடி, பெரிய எண்ணிக்கையில் முதலாளித்துவ வர்க்கத்தின் தரப்பை ஏற்றனர்.

போல்ஷிவிக் கட்சி மட்டுமே ஏகாதிபத்திய போரை எதிர்த்து உறுதிகுலையாமல் நின்றது. மற்றொரு போக்காக நடுநிலைவாதிகள் தோன்றினர். ஜெர்மனியில் காவுத்ஸ்கியின் தலைமையிலும், பிரான்சில் லோங்கேயின் தலைமையிலும், ருஷ்யாவில் டிராட்ஸ்கியின் தலைமையிலும் தங்களது தடுமாற்றத்தை நடுநிலை போக்காகக் கடைப்பிடித்தனர்.

தாய்நாட்டைக் காப்போம்” என்ற சந்தர்ப்பவாத முழக்கத்திற்கு எதிராக லெனின் ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக, உள்நாட்டு முதலாளித்துவத்துக்கும் எதேச்சதிகார அரசுக்கும் எதிராகத் திருப்பும்படி கோரிக்கை விடுத்தார். இதுவே தொழிலாளர்களின், விவசாயிகளின், மக்களின் நலன்களை வெளிப்படுத்துவதாக இருந்தது.

இந்தக் கடமையை ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகள் நிறைவேற்றிட தவறிவிட்டனர். அகிலத்தில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் சோஷலிசத்திற்குப் பதில் தேசியவாதத்தைக் கைக்கொண்டனர். தமது சொந்த நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் தேசியவெறிக்கு அடிபணிந்து போரை நியாயப்படுத்த முனைந்தனர். அகிலத்தின் தலைவர்கள் சோஷலிசத்திற்கு எதிராக நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டனர் என்று லெனின் கடிந்துகொண்டார்.

உற்பத்திச் சக்திகள் சமூகமயமாகிவிட்ட நிலையில் இந்த புல்லுருவித்தனமான ஏகாதிபத்தியம் அழுகிவிழ வேண்டியநிலையில் இருக்கிறது என்று புரட்சிக்கான புறநிலை காணப்படுவதாக லெனின் இந்நூலில் கூறியிருக்கிறார். ஆனால் அகநிலையாக உலக கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பப் போக்கினாலும் அதன் புரட்சிகரப் போர்குணம் தேசியவெறியாக மாறிப் போனதாலும் இந்த செயற்கைத் தன்மையால் ஏகாதிபத்தியம் தூக்கியெறியப்படுவது தாமதம் ஆகலாம்.

சமூகப் புரட்சிக்கான புறநிலையாக அடித்தளம் வளர்ச்சி பெற்றிருந்தாலும், மேற்கட்டமைப்பின் சந்தர்ப்பவாதப் போக்கினால் புரட்சிகர வாய்ப்பு தவறிப் போகலாம் என்று லெனின் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தான் இரண்டாம் அகிலத்தின் இறுதி நிலை, அகிலத்தின் இந்தச் சந்தர்ப்பப் போக்கை சொல்லாமல் பிரபாத் பட்நாயக் அகிலம் கம்யூனிச நிறுவனத்துக்கான கருத்துரீதியான அடித்தளத்தை வங்கியதாகக் கூறுகிறார். மேலும் ‘லெனினிய திருப்புமுனை’ என்று ஒருவர் அழைக்கக்கூடிய இந்த நிலைமையிலிருந்து இரண்டாம் உலகப் போரின் முடிவில் உலகம் விலகிப்போய்விட்டது. பளீரென்று மின்னிய கம்யூனிஸத்தின் வெற்றிகளின் தருணம்தான் அதன் பின்னடைவுக்கான ஆரம்பமாகவும் இருந்தது என்பது முரண் என்று கூறி லெனினியத்தோடு முரண்படுறார். ஆனால் லெனின் மார்க்ஸ் கூறிய புரட்சிகரப் புறநிலை அடிப்படையில் இருந்துதான் ஏகாதிபத்தியத்தை வரையறுத்திருக்கிறார்.

வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்தி சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது- என்கிற மார்க்சின் புரட்சியின் புறநிலையை, லெனின் பின்பற்றி உலகப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார். ஆனால் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதப் போக்கால், புறநிலைக்கான அகநிலை போக்கில் பின்னடைவு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே ஒரு நாட்டின் புரட்சி என்கிற புதிய கோட்பாட்டைத் தோற்றுவிக்கிறார். இதுவும் லெனினியத்தின் ஓரங்கமாகும்.

ஏகாதிபத்திய காலக்கட்டத்தின் புறநிலைமைகளையும் அகநிலைமைகளையும் கணக்கில் கொண்டு லெனின் மார்க்சியப் புரட்சிகரப் போதனையை விரிவுபடுத்தினார். சோஷலிசப் புரட்சிக்குத் தேவையான பொருளாயத சக்தியான புறநிலைமைகள் பக்குவப்பட்டிருக்கின்றன. மூலதனத்தின் தொடர் ஒடுக்குமுறையால் பாட்டாளி வர்க்கமும் ஒன்று திரண்டு காணப்படுகிறது. காலனிய நாடுகளின் விடுதலைப் போராட்டமும் தீவிரம் கண்டுள்ளது. வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகளில் சோஷலிசப் புரட்சிக்கான சூழல் தோன்றியிருந்தது, இந்தச் சூழ்நிலையைப் புரட்சியாக மாற்ற வேண்டிய அகநிலை சக்திகள் செயலில் இறங்க வேண்டும். ஆனால் போல்ஷிவிக்குகளின் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர மேலைநாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் “தாய்நாட்டின் விடுதலை என்று சந்தர்ப்வாதமாகச் சுரண்டும் வர்க்கத்தோடு சேர்ந்துகொண்டன. இந்நிலையில் லெனின் புரட்சி பற்றிய மார்க்சியக் கோட்பாட்டைப் புறநிலைக்கு ஏற்ப மாற்றினார்.

வளர்ச்சி பெற்ற அனைத்து நாடுகளில் அல்லது பெரும்பான்மையான நாடுகளில் சோஷலிசப் புரட்சி ஏற்படும் என்று இதுவரை மார்க்சியவாதிகள் கருதிவந்தனர். லெனினும் இதே கருத்தை கொண்டிருந்தார். வளர்ச்சியடைந்த நாடுகளில் முதலாளித்துவத்தின் முதிர்ச்சி இந்த முடிவை எடுக்க வைத்தது என்பது உண்மையே. ஆனால் அன்றைய நிலையில் ஏகாதிபத்தியமாகச் சீரற்ற வளர்ச்சியின் விளைவாக ஏகாதிபத்தியத்தின் சங்கிலித் தொடரில் பலவீனமான கண்ணியில் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று லெனின் முடிவெடுத்தார். அதாவது ஒரு தனிநாட்டில் புரட்சி ஏற்படுத்தி அதன் வெற்றியின் தொடர்ச்சியாகப் பிறநாடுகளில் புரட்சி வெடிக்கும் என்று விளக்கினார். அகிலத்தின் சந்தர்ப்பவாதிகளிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதால் ஒரு நாட்டில் மட்டுமே புரட்சி நடைபெற்றது. இது எந்தவகையிலும் மார்க்சுகு மாறானது கிடையாது. லெனினிய திருப்புமுனைக்கு முந்தைய கட்டத்துக்கு இணையான நிலைக்கு அது வர வேண்டும் என்கிற பிரபாத் பட்நாயக் அவர்களின் கருத்து மார்க்சிய லெனினியத்திற்கு மாறானதேயாகும். இன்றைய தேவை முந்தைய கட்டத்துக்குச் செல்வதல்ல, லெனினியத்தை உள்வாங்கி, இன்றைய நிலைமைக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.

லெனினிய கட்டம் காலாவதியாகிவிட்டது, இன்று நடைபெறுகிற போர்களுக்கான அடிப்படைக் காரணமாக ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான போட்டி அமையாது ஏன், துணைக் காரணமாகக்கூட அமையாது என்கிறார் பிரபாத் பட்நாயக். இரண்டாம் உலகப் போரும், அதனைத் தொடர்ந்து வந்திருக்கின்ற (2007-2008) பொருளாதார நெருக்கடியும் லெனினியத்தின் தேவையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
இந்த நெருக்கடியின் விளைவாக ஒரு மூன்றாம் உலகப் போர் மூளவில்லை என்பது உண்மை தான், அதனைத் தாங்கும் வலிமை இன்றைய ஏகாதிபத்திய நாடுகளுக்கு இல்லை. ஆனால் பல இடங்களில் வெளிப்படுகிற போர்கள் ஏகாதிபத்தியத்தின் நலன்களை வெளிப்படுத்துகவே இருக்கிறது. ஆனால் பிரபாத் பட்நாயக் அவர்களுக்கு இப்போர்கள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் போராகப்படுகிறது போல் தெரிகிறது. லெனினியத்தைவிட்டு விலகும் போது மார்க்சியத்தைவிட்டு விலகும் நிலைதான் ஏற்படும். ஆகப் பிரபாத் பட்நாயக் இடதுபாதையில் தடைக்கற்களாகக் கருதுவது லெனினியமே ஆகும் அதனால் இக்கட்டுரையின் நோக்கம் தடையை நீக்காமல் நீடிக்க வகைசெய்கிறது. முதலாளித்துவ உற்பத்தியின் உள்முரண்பாட்டிற்குத் தீர்வு சமூகப் புரட்சியே என்கிற மார்க்ஸ் லெனின் ஆகியோரின் கோட்பாட்டையே இன்றைய பொருளாதார நெருக்கடிகள் நிரூபிக்கின்றன.


உலகப் புரட்சிக்கான புறநிலை என்பது கம்யூனிச சித்தாந்தத்தை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே இன்றைய அகநிலை மாற்றத்துக்கு லெனினியமே வழிகாட்டும். 

3 comments:

  1. ப்ரபாத் பட்னாயக் கட்டுரைக்கான எதிர்வினை சரியாக உள்ளது. லெனினுக்கு முந்தைய கட்டம் என்ன என்று அவர் சொல்வதை இன்னும் சரியாக விளக்கி இருக்கலாம். அதேபோல் லெனின் போன்றே அகிலத்தில் ரோசாவின் போரில் தங்களின் நாட்டிற்கு ஆதரவாக செயல்பட்ட தேசிய சந்தர்ப்பவாதிகளுக்கு எதிரான போராட்டத்தையும் சேர்த்தே சொல்லலாம். இந்த சந்தர்ப்பவாதிகளின் போக்கால்தான் அவரின் உயிரும் பறிக்கப் பட்டது. அகநிலையாக ஜெர்மனியில் தொழிலாளர்களின் போருக்கு எதிரான தன்னெழுச்சி மிக்க போராட்டங்களுக்கு ஆதராவாக நின்றார்.

    ReplyDelete
  2. தோழர் மிக சரியான நேரத்தில் எழுதிய உங்களின் பதில் பட் நாயக் போன்ற கம்யூனிச துரோகிகளுக்கு மட்டுமின்றி திரிப்புவாதிகளுக்கும் நல்ல பதில் தோழர்...

    ReplyDelete
  3. இது உடனடி விமர்சனம் தான் விரிவாக எழுத வேண்டும்

    ReplyDelete