Monday, 4 July 2016

சமூகத்தை மாற்றி அமைப்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு

லெனின்:-
"நாம் முற்றிலும் மார்க்சியக் கோட்பாட்டின் முறையிலான நிலைபாட்டை எமது அடிநிலையாய்க் கொண்டு நிற்கிறோம் ...புரட்சிகர சோஷலிடுக் கட்சியின் முன்னுள்ள மெய்யான பணி...... சமூகத்தைத் திருத்தியமைப்பதற்குத் திட்டங்கள் வரைவதல்ல, தொழிலாளர்களுடைய நிலைமையை மேம்படச் செய்வது குறித்து முதலாளிகளுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் அறிவுரை அளிப்பதல்ல, சதிகள் புரிந்திடுவதல்ல இப்பணி, பாட்டாளி வாக்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைப்பு செய்வதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் வெல்வதையும் சோஷலிசச் சமூகம் ஒழுங்கமைக்கப்படுவதையும் இறுதிக் குறிக்கோளாய்க் கொண்ட இந்த வாக்கப்போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதுமே இப்பணி என்று அது தெளிவுபடுத்திற்று."
(நமது வேலைத்திட்டம்).

    இயற்கையைப் போன்றே சமூகத்திலும் புறநிலை விதிகளின் அடிப்படையில் வளர்ச்சி நடைபெறுகிறது என்பதை  மார்க்சியம்  நமக்கு விளக்குகிறது, ஆனால் முதலாளித்துவ அறிஞர்கள் சமூகம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டத்தை  விதிவாதத்துக்கு ஆட்பட்டதாக விமர்சிக்கின்றனர்.  சமூக வரலாற்று நிகழ்வுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகின்றன என்று  மார்க்சியம் கருதுவதாக விமர்சிக்கினறனர். இதன் அடிப்படையில் முதலாளித்துவ அறிஞர்கள் முதலாளித்துவ சமூகத்தைத் தொடர்ந்து சோஷலிச சமூகம் வரும் என்பதை மறுக்கின்றனர். மேலும் அவர்கள், சூரியன் உதிப்பதற்கு எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் இயற்கைக்கு தேவைப் படாதது போல், சமூகம் புறநிலை  விதிப்படி செயற்படும்  என்றால் சோஷலிச சமூகத்துக்காக கம்யூனிஸ்ட் கட்சி ஏன் போராட வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

       வரலாற்று விதிகள் மக்களது நடவடிக்கையின் வழியே செயற்படுகின்றன என்பதே, இயற்கைக்கும் சமூக விதிக்கும் உள்ள வேறுபாடு என்பதை அறிந்திருக்கிறது மார்க்சியம். மக்களே செயல்முனைப்போடு வரலாற்றைப் படைக்கின்றனர். மக்கள் உணர்வு பூர்வமாகவே தமது குறிக்கோளை அமைத்து, அதன்படியே செயற்படுத்துகின்றனர். இந்த உணர்வுபூர்வமான செயற்பாட்டை தன்னிச்சையாக அவர்கள் அமைத்துக் கொள்வதில்லை, மாறாக புறநிலை விதிகளின் தாக்கத்தின் விளைவாக உருவாக்கிக் கொள்கின்றனர். இவைகள் வர்க்கங்களின் நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது.

இன்றைய முதலாளித்துவ சமூகம் உழைப்பாளிகளை சுரண்டி வளர்கிறது என்பது கண்கூடான ஒன்றாகும். உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் தனி முதலாளியின் அபகரிப்பு முறைக்கும் இடையேயுள்ள முரண்பாட்டின் உச்சமே இன்றைக்கு பாட்டாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையே வர்க்கப் போராட்டமாக காட்சியளிக்கிறது.

உழைப்பாளிகளைச் சுரண்டி தனது செல்வங்களைப் பெருக்கிக் கொள்ளும் முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உழைப்பாளிகளுக்கென்று தனித்த இயக்கம் தேவைப்படுகிறது. இந்த இயக்கத்தை நடத்திச் செல்லும் கம்யூனிஸ்டுகள் தமக்கென எந்த குறுங்குழுவாத கண்ணோட்டத்தையும் வைத்திருக்கவில்லை. கம்யூனிஸ்டுகள் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர்த்து வேறு நோக்கம் எதனையும் கொண்டவர்கள் அல்ல. முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் சந்திக்க வேண்டிய வளர்ச்சிக் கட்டங்களை அறிந்து அதற்கான போராட்ட உத்திகளை வகுத்து அதனை நடைமுறைப்படுத்துகின்றனர்.

கம்யூனிஸ்டுகள் தாம் நடத்தும் போராட்ட வழிமுறைகளை, மார்க்ஸ் வகுத்துக் கொடுத்த வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையில் உடனடி போராட்டத்தையும் இறுதி குறிக்கோளையும் அமைத்துக் கொள்கின்றனர். புரட்சிகரமான கோட்பாடு இல்லையேல் புரட்சிகரமான இயக்கம் இல்லை என்று லெனின் கூறியதற்கு இணங்க, தங்களுக்கான புரட்சிகரமான கோட்பாட்டை பொருள்முதல்வாத கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைத்துக்கொள்கின்றனர்.

முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளிகளின் முன்னணிப்படையாக கம்யூனிஸ்ட் இயக்கம் செயல்படுகிறது. முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிவதற்கும், அதனிடத்தில் தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சியை அமைப்பதற்கும், தொழிலாளிகளை ஒன்றிணைக்கும் சக்தியாக கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் உறுதியோடு செயற்பட மார்க்சிய சித்தாந்தம் உதவிடுகிறது.

உற்பத்தியின் வளர்ச்சி என்பது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலிருந்தே தொடங்குகிறது. இந்த உற்பத்திச் சக்தியின் புரட்சிகர மாற்றம் உழைப்புக் கருவிகளின் வளர்ச்சியில் அடங்கியிருக்கிறது. உற்பத்திச் சக்திகள் எத்தகையதோ, அத்தகையதாக உற்பத்தி உறவுகள் அமைகிறது. உற்பத்திச் சக்திகள் உற்பத்தி உறவுகளைக் காட்டிலும் முன்னதாகவே வளர்ச்சியை எட்டுகின்றன. இதன் விளைவாக புதிய உற்பத்திச் சக்திகள் பழைமையாகிவிட்ட உற்பத்தி உறவுகளிடம் முரணை அதிகப்படுத்துகின்றன.

பழைய உற்பத்தி முறைக்குள்ளே புதிய உற்பத்தி முறை முதிர்வது மனிதர்களின் உணர்வை சாராமல் நிகழ்கிறது. இந்நிகழ்வு உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியால் ஏற்படுகிறது. இந்தப் புறநிலையே வர்க்கப் போராட்டத்துக்கான பொருளாயாத சக்தியாக இருக்கிறது. அதாவது இப்புறநிலை வர்க்கப்போராட்டத்தில் பிரதிபலிக்கிறது. இறுதியில் வார்க்கப் போராட்டம் உச்சத்தை எட்டுகிறது. இந்த உற்பத்தி முரண் சமூகப் புரட்சியின் மூலமே தீர்க்கப்படுகிறது.

இங்கு வரலாற்றின் பொது விதியை மட்டுமே எடுத்துரைத்திருக்கிறது. இதனை அப்படியே வரலாற்றின் மீது திணிக்க முடியாது. ஒவ்வொரு நாட்டின் பொருள் உற்பத்தியின் நிலையினையும், அதனால் ஏற்படுகிற வர்க்க உறவுகளின் முரணையும், உள்ளடக்கிய பல்வேறு வளர்ச்சிப் போக்கின் தனித்த தன்மைகளையும் அறிந்து செயற்பாட்டைத் தீர்மானிக்க வேண்டும்.

        அந்தந்த நாட்டினுடைய வளர்ச்சியின் புறநிலை விதிகளை அறிந்து, அதனை ஆதாரமாகக் கொண்டு வரலாற்றின்  திசைவழியை தெரிந்து, அதனடிப்படையில் தனது செயல்தந்திரத்தை அமைத்து கம்யூனிஸ்ட் இயக்கம் செயற்பட வரலாற்றியல் பொருள்முதல்வாதம் வழிகாட்டுகிறது.

புறநிலை  விதி என்கிற, சமூக வளர்ச்சியின் போக்கை உணர்ந்து அதன் வழியில் செல்வதையே அவசியத்தை அறிந்து செயற்படுவதாகக் கூறுகிறது மார்க்சியம். புறநிலை அவசியத்தைப் பற்றிய அறிவு மக்களுக்கு வரலாற்றில் செயற்பாட்டுச் சுதந்திரத்தைக் கொடுக்கிறது. இதனை அறிந்து கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைமை தனது செயற்பாட்டை வகுத்துக் கொள்கிறது.

       முற்போக்கு வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்றழைக்கின்ற கட்சி, சில நேரங்களில் சமூகம் வழங்கிய வாய்ப்புகளை தவறவிட்ட நிகழ்வுகள் உண்டு. வரலாற்று அவசியத்தின் அடிப்படையில் சென்று, கம்யூனிஸ்ட் இயக்கம் வெற்றி பெறுவதற்கு கட்சியானது, பாட்டாளி வர்க்க உணர்வில் உறுதியும், அமைப்பின் கட்டுப்பாடும் பெற்றதாக இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

       கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு சமூக வளர்ச்சியைப் பற்றிய கண்ணோட்டத்தை வரலாற்றியல் பொருள்முதல்வாதம் அளித்திடுகிறது. தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்தவத்திடம் காண்கிறது என்பார் மார்க்ஸ்.

பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில்தான் பாட்டாளி வர்க்க உணர்வையும், கட்டுப்பாட்டையும் பெற்றுக்கொள்ள முடியும். மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து  விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாகியிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள் என்று லெனின் கூறுவார். இந்த மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதலில் சென்றால்தான், முதலாளித்துவச் சுரண்டலின் காரணத்தைப் புரிந்து கொண்டு,  அதன் உள்முரண்பாட்டின் தீர்வாய், முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்துவிட்டு சோஷலிச சமூகத்தை அமைக்க முடியும்.


அதற்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதமே கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழிகாட்டும்.

No comments:

Post a Comment