Friday, 21 April 2017

ருஷ்ய மார்க்சியக் குழுக்களை ஒன்றிணைத்தலும் சித்தாந்தப் போராட்டமும்

மேற்கு ஐரோப்பியல் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த போது மார்க்சியம் தோன்றியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவான மார்க்சியம் சுமார் ஐம்பது ஆண்டுகளாக தமக்கு எதிரான சித்தாந்தத்துடன் போராடி நிலைபெற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய ருஷ்யாவில் மார்க்சியத்தைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தது. மார்க்சியம் தங்களது நாட்டிற்கு ஏற்றதாகாது என்று நரோத்தினிக்குகள் போன்ற சிந்தாந்தவாதிகள் கருதினர். 1860ஆம் ஆண்டுவரை ருஷ்யாவில் மிகச் சில தொழிற்சாலைகளே தோன்றியிருந்தன. ருஷ்யாவின் இயந்திர வளர்ச்சிக்கு அங்கு நிலவிய பண்ணை அடிமை முறை பெரும் தடையாகவே இருந்தது.

கிரிமியா போருக்குப் பிறகு நிலைமை மாறியது, (1861) பண்ணை அடிமை முறையை முறியடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  இதனை எங்கெல்ஸ்:-
“ருஷ்யாவில் இன்றுள்ள முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டம் கிரீமியப் போரினால் ஏற்பட்ட வரலாற்று நிலைமைகளின், 1861இல் விவசாய உறவுகளின் மாற்றம் செய்யப்பட்ட முறையின் மற்றும் பொதுவாக ஐரோப்பாவின் அரசியல் தேக்கத்தின் தவிர்க்க முடியாத விளைவு என்றே எனக்குத் தோன்றுகிறது” (லண்டன், அக்டோபர் 17, 1893) என்று எழுதியுள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின், எழுபதுகளில் தொழிலாளர்களின் இயக்கங்கள் தோன்றின. 1876ல் ஒதேஸ்ஸாவில் தென் ருஷ்யாவின் தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் முதல் இயக்கம் தோன்றியது. 1878ல் பீட்டர்ஸ்பர்கில் ருஷ்ய தொழிலாளர்களின் வடக்கு சங்கம் தோற்றம் பெற்றது. இச்சங்கங்கள் போலீஸ் கெடுபிடியால் இரண்டாண்களுக்குள் கலைக்கப்பட்டன. மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்கள் ருஷ்யாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அறிமுகமாகியிருந்தது. மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலேயே ருஷ்ய மொழியில் மூலதன நூலின் முதல் தொகுதியின் மொழிபெயர்ப்பு (1872) வெளிவந்தது. மூலதன நூல் வெளிவந்ததில் இருந்து, ருஷ்ய சோஷலிஸ்டுகளின் மத்தியில் ருஷ்ய முதலாளித்துவத்தின் விதிகளை பற்றிய விவாதங்கள் கடுமையாக நடைபெற்றன, இதன் அடிப்படையில் தான் அன்றைய இயக்கங்களின் வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டன.

1880களில் ஜார் அரசின் கெடுபிடியின் காரணமாக ருஷ்யப் புரட்சியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல நேர்ந்தது. பொதுவாக இந்த புரட்சியாளார்கள் நரோத்திசத்தின் தாக்கம் பெற்றவர்களாகவே இருந்தனர். வெளிநாட்டிற்குச் சென்றவர்களில் சிலர் மார்க்சிய சித்தாந்தத்தின் பக்கம் செல்லத் தொடங்கினர். இதன் விளைவாக ருஷ்யாவில் தொழிலாளர்களுக்கு என்று தனியாக ஒரு கட்சியை அமைப்பதின் அவசியத்தை உணர்ந்தனர்.

நரோத்நயா-வால்யா (மக்கள் விருப்பம்) என்கிற நரோத்திய இரகசிய அமைப்பினர், 1881ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் நாளன்று, இரண்டாவது அலக்சாண்டர் என்ற ஜார் அரசன் மீது வெடிகுண்டை வீசிக் கொன்றனர். மக்களின் விருப்பம் என்ற பெயரில் இயங்கும் அமைப்பின், இந்த வீரச் செயல்கள் மூலம் மக்களின் விருப்பம் எதனையும் நிறைவேற்றப்படவில்லை. இது போன்ற தனிப்பட்ட நபர்களைக் கொலை செய்வதால், ஜார் எதேச்சதிகாரத்தையோ அல்லது நிலப்பிரப்புக்களையோ ஒழித்திட முடியாது என்பதை இந்த அமைப்பினர் அறிந்திடவில்லை.  இரண்டாம் அலெக்சாண்டர் கொல்லப்பட்டதற்குப்பின் மூன்றாம் அலெக்சாண்டர் ஆட்சிக்கு வந்ததினால், தொழிலாளர், விவசாயிகளுடைய வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கொடுமைகள் படுமோசமாக அதிகரிக்கவே செய்தன. இந்த மூன்றாம் அலெக்சாண்டரை கொலை செய்யும் முயற்சியில் தான் லெனினது அண்ணன் தூக்குத்தண்டனைப் பெற்றார்.

நரோத்திசத்திலிருந்து விடுபட்ட பிளாகானவ் 1883ஆம் ஆண்டு வெளிநாட்டில் “உழைப்பாளர் விடுதலை” குழு ஒன்றைத் தோற்றுவித்தார். மார்க்சியத்துக்கு எதிரான சிந்தனைப் போக்குடைய நரோத்திசத்தை எதிர்த்திடாமல் ருஷ்யாவில் மார்க்சியத்தை நிலைபெறச் செய்ய முடியாது என்று இந்தக் குழு முடிவெடுத்துச் செயல்பட்டது. நரோத்திசத்தின் சித்தாந்தத்தை பிளாகானவ் மார்க்சிய அடிப்படையில் விமர்சித்தார்.

ருஷ்யாவில் முதலாளித்துவம் வளர்ச்சியடையாது என்பதே நரோத்திசத்தின் கருத்தாக இருந்தது. ருஷ்யாவில் முதலாளித்துவம் வளர்ந்தது ஒரு தற்செயல் நிகழ்ச்சி என்றே அவர்கள் கருதினர். பிளாகானவ் மார்க்சிய வழியில் இதனை மறுத்துரைத்தார். அடுத்து, பாட்டாளிகளை போர்க்குணமிக்கவர்களாக நரோத்திசம் கருதவில்லை, விவசாயத் தொழிலாளர்களே பிரதான புரட்சி சக்தி எனவும், அவர்களே சோஷலிசத்தை கொண்டுவருவர் என்றும், பாட்டாளிகள் இல்லாத சோஷலிசத்தைப் பற்றி கனவு கண்டனர். சமூக மாற்றத்துக்கு வர்க்கப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளாத இவர்கள், தனிச்சிறப்புப் பெற்ற வீரர்களே சமூக மாற்றத்தை நிகழ்த்துவர், அவர்களுக்குப் பின்னால் மக்கள் கூட்டம் குருட்டுத்தனமாகப் செல்லும் என்ற முடிவில் இருந்தனர். இதனை பிளாகானவ் மார்க்சிய வழியில் விமர்சித்து எழுதினார்.

நரோத்தினிக்குகளை விமர்ச்சித்து எழுதும் போதே மார்க்சிய நூல்கள் பலவற்றை பிளாகானவ் படைத்தார். 1883ஆம் ஆண்டு சோஷலிசமும் அரசியல் போராட்டமும் என்ற நூலை எழுதினார். இதற்கு பிறகு நம்முடைய வேறுபாடுகள்(1885), வரலாற்றின் ஒருமைவாதக் கண்ணோட்டத்தின் வளர்ச்சி(1897), வரலாற்றில் தனிநபரின் பாத்திரம்(1898), மார்க்சியத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் (1907). ருஷ்யாவின் முதல் மார்க்சியவாதியான பிளாகானவின் இந்த படைப்புகள் ருஷ்யர்களிடையே மார்க்சியம் பரவுதற்கு பெரும்பங்காற்றின.

ருஷ்யாவில் முதலாளித்துவம் வளர வேண்டுமா? வளரக் கூடாதா? என்ற கேள்வியை நரோத்னிக்குகள் தொடுத்தனர். பிளாகானவ் தமது எழுத்துக்களில் இதற்கு பதிலடி கொடுத்தார். இந்த கேள்வியே மிகவும் அபத்தமான ஒன்றாகும். ஏற்கெனவே முதலாளித்துவம் ருஷ்யாவில் நுழைந்துவிட்டது என்பதை விவரித்து எழுதினார். நுழைந்துவிட்ட முதலாளித்துவத்தை கட்டிப்போடுவது இயலாத செயல். முதலாளித்துவத்தால் தோற்றம் பெற்ற ஆலைத் தொழிலாளர்களுக்காக போராடுவதும், அவர்களை நிறுவன முறையில் ஒன்றிணைப்பதும், தொழிலாளர்களுக்கு என்று ஒரு கட்சியை உண்டாக்குவதும் புரட்சிக்காரர்கள் செய்ய வேண்டிய பணி என்பதை வலியுறுத்தினார்.

மற்றொரு பெரும் தவற்றையும் பிளாகானவ் விமர்சித்தார். இன்றையப் புரட்சிப் போராட்டத்தில் தலைமை தாங்க வேண்டியது ஆலைத் தொழிலாளர்கள் என்பதை நரோத்தினிக்குகள் ஏற்கவில்லை. நாட்டில் விவசாயிகளே எண்ணிக்கையில் அதிகமானவராக இருப்பதினால் நரோத்தினிக்குகள் ஆலைத் தொழிலாளர்களை விடுத்து விவசாயிகள் தலைமை ஏற்கவேண்டும் என்று கூறினர். இதனை மறுத்து, விவசாயிகள் எண்ணிக்கையில் மிகுந்திருந்த போதிலும், மிகவும் பின்தங்கிய பொருளாதாரத்துடன் பிணைக்கப்பட்டுள்ளதால், அவர்களது எதிர்கால வாழ்வு கேள்விக்குரியதே, இன்று குறைவாகவும் பலவீனமாகவும் காணப்படும் ஆலைத் தொழிலாளர்களே நாளைய வளர்ச்சியுறும் பொருளாதாரத்தோடு பிணைந்துள்ளனர். அதனால் நாளைய உலகம் ஆலைத் தொழிலாளர்களுக்கானதே.

நரோத்னிக்குகளின் அடுத்த தவறாக பிளாகானவ் குறிப்பிடுவது, சமூக வளர்ச்சியிலும் மாற்றத்திலும் மக்களின் பங்கை புறக்கணிப்பதும், குறைத்து மதிப்பிடுவதாகும். நாரோத்னிக்குகள் பொதுமக்களை வெற்று ஜனக்கும்பலாகப் பார்த்தனர். தனித்திறம் பெற்ற மாமனிதர்களின் கருத்துக்களே சமுக வளர்ச்சிக்கு உதவிடுகிறது என்பதாகக் கருதிக் கொண்டனர். இதனை மறுத்து பிளாகானவ் சமூகச் சிந்தனையை பொருளாதார நிலைமைகளே தீர்மானிக்கின்றன, கருத்துக்கள் அந்த பொருளாதார நிலைமைகளின் நலன்களின் அடிப்படையில் தோன்றியவை என்று மார்க்சிய வழியில் எடுத்துரைத்தார்.

அன்றைய இளைஞர்களின் இடையே காணப்பட்ட நரோத்தினிக் சித்தாந்தத்தின் மீதான தாக்கம் பிளாகானவின் விமர்சனத்தால் குறைந்தது. பிளாகானவின் தலைமையில் செயற்பட்ட “தொழிலாளர் விடுதலை”க் குழு 1884 மற்றும் 1885ஆம் ஆண்டுகளில் ருஷ்யாவில் ஒரு தொழிலாளர்களுக்கான கட்சியினைத் தொடங்குவதற்கு இரண்டு வேலைத்திட்டங்களை தயாரித்தது. முதல் திட்டத்தில் நரோத்னிக் கருத்துகளில் இருந்து விடுபடவில்லை என்பதை வெளிப்படுத்தும்படியான சில முடிவுகள் அதில் காணப்பட்டன. தனிநபர் பயங்கரவாதத்தின் மூலம் சாதித்துக் கொள்ளும்படியான கருத்துக்களின் தாக்கத்தில் முதல் திட்டம் அமைந்திருந்தது. புரட்சியின் போது விவசாயிகளின் பங்கையும் குறைத்து மதிப்பிட்டது. மிதவாத முதலாளிகளை சமூக மாற்றத்துக்கு உதவும் சக்தியாகக் கருதிய பிளாகானவ், விவசாயிகளின் ஒத்துழைப்பின் அவசியத்தை மறுதலித்தார்.

இந்த தொழிலாளர் விடுதலைக் குழுவும் அந்த நேரத்தில் தோன்றிய மற்ற மார்க்சியக் குழுக்களும் தொழிலாளர்களிடையே இணைப்பு இல்லாமலேயே இருந்தன. இருந்தாலும் இந்த குழுக்களிடையே பிற்காலத்தில் சமூக ஜனநாயக கட்சி (கம்யூனிஸ்ட் கட்சி) தோன்றுவதற்கான கரு காணப்பட்டதாக லெனின் கருதினார். 

‘மக்களின் நண்பர்கள்’ எப்படிப்பட்டவர்கள்? சமூக-ஜனநாயகவாதிகளுக்கு எதிராக அவர்கள் எவ்வாறு போரிடுகிறார்கள்

1890களில் மிதவாத நரோத்தனிக்குகளினுடைய அதிகாரப் பூர்வமான பத்திரிகையான ருஷ்யாவின் செல்வம் என்பதில் மார்க்சியத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டனர். இதற்கு பதிலளிப்பதற்காக லெனின் ‘மக்களின் நண்பர்கள்’ எப்படிப்பட்டவர்கள்? சமூக-ஜனநாயகவாதிகளுக்கு எதிராக அவர்கள் எவ்வாறு போரிடுகிறார்கள் என்ற நூலை எழுதினார். இதில் தங்களை மக்களின் நண்பர்கள் என்று அழைத்துக்கொள்கிற நரோத்னிக்குகள், சமூக ஜனநாயகவாதிகளான மார்க்சியவாதிகளை எவ்வாறு எதிர்த்துப் போரிடுகின்றனர் என்பதை முன்வைத்து, லெனின் சித்தாந்தப் போராட்டத்தை நிகழ்த்தினார். மக்களின் உண்மையான நண்பர்கள் நரோத்னிக்குகள் அல்ல மார்க்சியவாதிகளே என்பதை இந்நூலில் நிறுவினார்.

நரோத்னிக்குகளை முன்வைத்து விமர்சித்து எழுதியதில் இது முக்கியமான நூலாகும். இந்நூல் பகுதிபகுதியாக ரகசியமாகப் படியெடுத்து சுற்றுக்கு விடப்பட்டது. இதனை யார் எழுதினார் என்பதை வெளிப்படுத்தாமல், மஞ்சள் நூல் என்றே அழைக்கப்பட்டது. பீட்டர்ஸ்பர்க் போன்ற பெரு நகரங்களில் இந்தப் படிகள் விநியோகிக்கப்பட்டு அன்றைய புரட்சியாளர்களால் வாசிக்கப்பட்டது. பீட்டர்ஸ்பர்க் நகரின் மார்க்சிய வட்டத்தில் லெனினே இதனை வாசித்துக்காட்டினார். இந்நூலைப் பற்றி நதேழ்தா குரூப்ஸ்க்கா நினைவு கூறுகிறார்.

“1894ஆம் ஆண்டு இலையுதிர் கலத்தின் போது மக்களின் நண்பர் என்ற தமது நூலை லெனின் எங்கள் வட்டத்தில் படித்துக்காட்டினார். அதை வாங்கி படித்துப் பார்ப்பதற்கு அனைவரும் துடியாய் துடித்தனர். எங்கள் போராட்டத்தின் நோக்கங்கள் யாவை என்பதை அதில் மிகவும் தெளிவாக விளக்கினார். மக்களின் நண்பர் என்ற அந்த நூல் பல படிகள் எடுக்கப்பட்டு சின்ன மஞ்சள் நூல் என்ற பெயரில் உலாவியது. ஒவ்வொருவரும் அதை வாங்கிப் படித்தார்கள். அதன் ஆசிரியர் யார் என்பது நூலில் காணப்படவில்லை. அந்த நூலின் படிகள் நாலா திசையிலும் பரவின. அந்தக் காலத்திய இளம் மார்க்சியர்களை அது மிகவும் ஈர்த்தது என்றால் அது மிகையாகாது”1

இந்நூலின் இரண்டாம் பகுதி கிடைக்கவில்லை. இப்போது நமக்கு கிடைத்திருப்பது முதல் மற்றும் மூன்றாம் பகுதியும் சில பிற்சேர்க்கைகளையும் உள்ளடக்கிய பதிப்பே.

இந்நூலில் நரோத்னிக்குகளின் தத்துவம், பொருளாதாரம், அரசியல் போன்ற கருத்துகளுக்கு மார்க்சிய வழிப்பட்ட விமர்சனத்தை லெனின் வைத்தார். நரோத்னிக்குகள் சீர்திருத்தங்களையே தமது செயல்திட்டமாக மாற்றிக்கொண்டனர். ஜார் அரசின் மீதான எதிர்ப்பும், புரட்சிகரப் போராட்டமும் மழுங்கிப்போயின.

1890ஆம் ஆண்டுகளில் ஜார் அரசுடன் சமரசம் செய்ய வேண்டும் என்பதையே பரப்புரை செய்தனர். இதனை எதிர்த்து லெனின் “இந்த அரசுடன் சமரசமாகவும், பணிவாகவும் பேசி வாதித்தால் போதும், இந்த அரசு எல்லாவற்றையும் சரி செய்துவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்” என்று எழுதினார். தற்போது நரோத்திசம் புரட்சித்தன்மையை இழந்து மிதவாத தன்மை அடைந்துள்ளதை ஆதாரத்தோடு நிரூபித்தார். இந்த மிதவாத நரோத்னிக்குகள் போலியான மக்களின் நண்பர்கள், மார்க்சியவாதிகளே உண்மையான மக்களின் நண்பர்கள் என்பதை சுட்டிக்காட்டினார்.

மிதவாத நரோத்னிக்குகள், வேண்டும் என்றே மார்க்சிய கருத்துக்களை திரித்துரைத்தனர், பொய்களையும் பரப்பினர். ருஷ்ய மார்க்சியவாதிகள் கிராமத்தை முழுவதுமாக அழிக்க முயற்சிப்பதாகவும், தொழிற்சாலைகளின் நெருப்பறைக்குள் ஒவ்வொரு விவசாயிகளையும் தள்ளி வேகவைக்க விரும்புவதாகவும் திரித்து பொய்யுரைத்தனர். இந்தத் திரிபுகளின் பொய்களை லெனின் தமது நூலில் அம்பலப்படுத்தினார்.

ருஷ்யாவில் முதலாளித்துவம் வளரவேண்டும் என்பது மார்க்சியர்களின் விருப்பம் சார்ந்ததல்ல, எதார்த்தத்தில் முதலாளித்துவம் வளரத்தொடங்கிவிட்டது. இதன் கூடவே ஆலைத் தொழிலாளர்களான பாட்டாளிகளையும் தோற்றுவித்துள்ளது. இந்த பாட்டாளி வர்க்கமே முதலாளித்துவத்தை தூக்கியெறியப் போகும் சக்தியாகும் என்று லெனின் கூறினார்.

பொதுமக்களினுடைய போராட்டத்தின் மீது நம்பிக்கையற்றவர்களே இந்த “மக்களின் நண்பர்கள்”. அவர்களின் தனிநபர் அழித்தொழிப்பு சுரண்டலுக்கு முடிவை ஏற்படுத்தாது. இந்த அழித்தொழிப்பு என்பது பயங்கரவாதச் செயல் என்று லெனின் கண்டித்தார். இதனோடே பிரிந்து கிடக்கின்ற மார்க்சியக் குழுக்கள் ஒன்றிணைத்து, தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்த கட்சியாக உருவெடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். மேலும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையையும் அதன் கூட்டாளியான விவசாயிகளின் பங்கையும் வலியுறுத்தி பாட்டாளி வர்க்கத்துடன் விவசாயி-தொழிலாளர்களின் ஒற்றுமையை ஏற்படுத்துவதின் அவசியத்தையும் முன்வைத்தார். இந்த ஒற்றுமையில் தான் எதேச்சதிகார ஜார் அரசை தூக்கியெறியக்கூடிய வலிமை அடங்கியிருக்கிறது.

லெனினது மார்க்சியக் கண்ணோட்டம் வெகுசிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளதை இந்நூல் வெளிப்படுத்தியது. குறிப்பாக அகநிலைவாதிகளைப் பற்றிய விவரிப்பைக் கூறலாம். அகநிலைவாதிகள், வரலாற்றுப் புலப்பாடுகளின் ஒழுங்கமைக்கப்பட்ட நியதியை ஏற்றுக் கொண்டாலும், வரலாற்றின் பரிணாம வளர்ச்சியை பார்க்க இயலாதவராக இருக்கின்றனர்.

"இப்புனைவுகோள் (Hypothesis) விஞ்ஞான சமூகவியலுக்கான வாய்ப்பை முதன்முதலாக ஏற்படுத்தியதன் காரணம் என்னவென்றால், சமூக உறவுகளை உற்பத்தி உறவுகளுடன் இணைத்ததும், இவ்வுற்பத்தி உறவுகளை உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி மட்டத்துடன் இணைத்ததும் தான் சமூக அமைப்புகளின் வளர்ச்சியை இயற்கை வரலாற்று நிகழ்ச்சிப் போக்காக எண்ணிப் பார்க்க உறுதியான அடிப்படையை அளித்தது."
"சமுதாயத்தின் மனிதர்களிடையே நிலவும் உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் மட்டுமே இப்பகுப்பாய்வு நிகழ்த்தப்படுகிறது, விஷயத்தை விளக்க இந்த உற்பத்தி உறவுகளுக்கு வெளியில் உள்ள ஒர் அம்சத்தையும் ஒரு தடவை கூட மார்க்ஸ் நாடவில்லை. சமூக பொருளாதாரத்தின் சரக்கு ஒழுங்கமைப்பு எப்படி வளருகிறது, பகைமை வர்க்கங்களாகிய பூர்ஷ்வாக்களையும் பாட்டாளிகளையும் தோற்றுவித்து (உற்பத்தி உறவுகளின் வரம்புகளுக்குள்) இது எப்படி முதலாளித்துவ அமைப்பாக மாறுகிறது, இது எப்படி சமூக உழைப்பின் உற்பத்தித் திறனை வளர்த்து அதன் மூலம் இம்முதலாளித்துவ ஒழுங்கமைப்பின் அடிப்படைகளுடன் சமசரப்படுத்த இயலாமல் முரண்படக் கூடிய ஒர் அம்சத்தை எப்படிக் கொண்டு வருகிறது ஆகியவற்றை எல்லாம் காணும் வாய்ப்பை அளிக்கிறார் மார்க்ஸ்"2

-இதனைத் தொடர்ந்து லெனின் கூறுகிறார், மூலதன நூலின் எலும்புக்கூடு இது தான், இந்த எலும்புக்கூடுடன் மார்க்ஸ் திருப்தியடைந்து விடவில்லை, அதாவது பொருளாதாரக் கோட்பாடுடன் அவர் நின்றுவிடவில்லை.

“குறிப்பிட்ட சமூக அமைப்பின் கட்டமைப்பையும் வளர்ச்சியையும் முழுக்க முழுக்க உற்பத்தி உறவுகளால் விளக்கிய அவர் அதே பொழுது எல்லா இடங்களிலும் எப்போதும் இவ்வுற்பத்தி உறவுகளுக்கேற்ற மேற்கட்டுமானங்களை ஆராய்ந்தார், இந்த எலும்புக்கூட்டிற்குச் சதையையும் ரத்தைதையும் அளித்தார். எனவே தான் மூலதனம் இந்த அளவிற்கு மகத்தான வெற்றியைப் பெற்றது,.
இப்போது மூலதனம் தோன்றிய பின்னர்- வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்து புனைவுகோள் அல்ல, இது விஞ்ஞான ரீதியில் மெய்ப்பிக்கப்பட்ட கருத்து நிலையாகும்.”

சட்டத்துக்குட்பட்ட மார்க்சியம் (Legal Marxism)

1890களில் ருஷ்யாவில் புரட்சிகர மார்க்சியத்துக்கு எதிராக சட்டத்துக்குட்பட்ட மார்க்சியம் தோன்றியது. ஜார் அரசு அனுமதிக்கின்ற சட்டத்துக்கு உட்பட்டு மார்க்சியத்தை பரப்பியவர்கள் சட்டத்துக்குட்பட்ட மார்ச்சியர் என அழைத்தனர். சட்டத்துக்கு உட்பட்டு என்ற போர்வையில் அவர்கள் மார்க்சியத்தை முதலாளிகளின் நலன்களுக்கு ஏதுவாக்க முயன்றனர். முதலாளித்துவ அமைப்பை எதிர்ப்பதை மறுப்பதோடு வர்க்கப் போராட்டம், சோஷலிசப் புரட்சி, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் போன்ற மார்க்சிய உள்ளடக்கத்தையும் மறுதலித்தனர்.

பெரிய சமூக இயக்கங்கள் செயற்படும் போது, “சக பயணிகளாக” அவ்வியக்கத்தோடு இந்த நிலையற்றவர்கள் இணைவது வரலாற்றில் இன்றுவரை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ருஷ்யாவில் மார்க்சியம் பெரிய அளவிற்கு பரவிக்கொண்டிருக்கும் போது முதலாளித்துவ அறிவாளிகள் மார்க்சியவாதிகள் என்ற பெயரோடு உள்நுழைந்து கொண்டனர்.

ஸ்ட்ரூவி என்ற சட்டவழி மார்க்சியவாதியானவர் முதலாளிகளை வானளாவப் புகழ்ந்தார், முதலாளித்துவ அமைப்பை எதிர்ப்பதற்கு பதில், தொழிலாளர்களுக்கு நாகரீக பண்பாடு பயிற்சி போதவில்லை, இப்பயிற்சியைப் பெறுவதற்காக முதலாளித்துவத்திடம் செல்லவேண்டும் என்று கூறினார்.

நரோத்னிக்குகளை, அவர்களது வழியில் எதிர்த்தனர். இந்த நரோத்னிய எதிர்ப்பை முன்வைத்து அவர்களோடு தற்காலிக உடன்பாட்டை லெனின் ஏற்படுத்திக் கொள்ளலாம் என்றார். அவர்களுடன் இணைந்து நரோத்னிக்குகளுக்கான எதிர்ப்புக் கட்டுரைகளை வெளிடலாம் என்றார். ஆனால் அவர்களின் மிதவாத முதலாளித்துவப் போக்கை அம்பலப்படுத்துவதையும் தொடர்ந்து செய்தார்.

நரோத்னிய எதிர்ப்பை சட்டவழியிலான அச்சடிக்கப்பட்ட நூலாக கொண்டுவதற்கு லெனினால் எழுதப்பட்டதே நரோதிசத்தின் பொருளாதார உள்ளடக்கமும் திரு.ஸ்ட்ரூவின் நூலில் அதுபற்றிய விமர்சனமும் (The Economic Content of Narodism and the Criticism of it in Mr. Struve’s Book) என்ற நூல். இதுவே லெனின் எழுதி அச்சேற்றப்பட்ட முதல் நூல். கே.துலின் என்ற புனைப்பெயரில் இந்த நூல் வெளிவந்தது. இருந்தும் ஜார் அரசாங்கம் விரைவில் இந்நூலுக்கு தடைவிதித்தது. அரசால் கைப்பற்றப்பட்ட நூலின் படிகள் எரிக்கப்பட்டன. இரண்டாயிரம் படிகளில் நூறுபடிகளையே காப்பாற்ற முடிந்தது. காப்பாற்றியதை ரகசியமாக மார்க்சியவாதிகள் தங்களுக்குள் சுற்றுக்கு விட்டனர்.

வெளிநாடுகளில் தங்கி மார்க்சியத்தை ருஷ்யாவில் பரப்பிக் கொண்டிருந்த பிளாகானவ், அக்செல்ரோத் போன்றோரை நேரில் சந்தித்து பேசுவதற்கு லெனின் சுவிட்சர்லாந்துக்கு 1895ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயணமானார். இங்குதான்  பிளாகானவை லெனின் முதன்முறையாக சந்தித்தார். ரபோத்னிக் (தொழிலாளி) என்ற பெயரில் ஒரு பத்திரிகை நடத்துவது என்று சந்திப்பில் முடிவெடுத்தனர். 

பின்பு, சுவிட்சர்லாந்திலிருந்து பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாடுகளுக்கு சென்றார். அந்நாடுகளில் தொழிலாளர்களின் கூட்டங்களில் கலந்து கெண்டார். எங்கெல்சை இங்கிலந்தில் சந்திக்க முயற்சித்தார், ஆனால் எங்கெல்சின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தபடியால் இயலாமல் போயிற்று. 1895ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி எங்கெல்ஸ் மறைந்தார். இதனை ஒட்டி லெனின் பிரடெரிக் எங்கெல்ஸ் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.

“தொழிலாளி வர்க்கமும் அதன் கோரிக்கைகளும் இன்றையப் பொருளாதார அமைப்பு முறையிலிருந்து விளைந்த அவசியமான விளைவே என்றும், இந்தப் பொருளாதார அமைப்பு முறையும் முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்து தவிர்க்க முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, அதனை ஒழுங்கமைத்து அணி திரட்டுகின்றன என்றும் முதன் முதலாக எடுத்துக்காட்டியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே. இன்று மனிதகுலத்தை ஒடுக்கி வதைத்து வரும் தீமைகளிலிருந்து அதை விடுவிக்கவல்லது ஒழுங்கமைத்துக் கொண்டு அணிதிரண்டு நிற்கும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமே தவிர உயர்ந்த சிந்தனை படைத்த தனிநபர்கள் சிலரின் நல்லெண்ணமிக்க முயற்சிகள் அல்ல என்று அவ்விருவரும் எடுத்துக்காட்டினார்கள்.

சோஷலிசம் என்பது ஏதோ கனவு காண்பவர்களுடைய கற்பனைப் பொருள் அல்ல, நவீன சமூகத்தின் உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் கடைசிக் குறிக்கோளும், தவிர்க்க முடியாத விளைவும் ஆகும் என்று தங்கள் விஞ்ஞான நூல்களிலே மார்க்சும் எங்கெல்சும் முதன் முதலாக விளக்கினர்.”3

மேலும் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தையும் அதன் வழியில் சோஷலிசத்தை நடைமுறைப்படுத்தும் சக்தியான பாட்டாளிகள் பற்றியும் கூறுகிறார்:-

“வாழ்வின் உண்மைகளை ஆராய்ந்து, இயற்கையின் வளர்ச்சியை விளக்குவது மனத்தின் வளர்ச்சியல்ல என்றும், அதற்கு மாறாக மனத்தைப் பற்றிய விளக்கமே இயற்கையில் இருந்துதான், பருப்பொருளில் இருந்துதான் பெறப்பட வேண்டும் என்றும் அவர்கள் கண்டார்கள்… ஹெகலையும், ஹெகலைப் பின்பற்றும் மற்றவர்களையும் போல் அல்லாமல், மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதிகள். உலகத்தையும் மனிதகுலத்தையும் அவர்கள் பொருள்முதல்வாத நிலையில் இருந்து பார்த்து இயற்கையின் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அடிப்படையாகப் பொருளாதக் காரணங்கள் எப்படி அமைந்துள்ளனவோ, அதேபோல் மனிதச் சமூகத்தின் வளர்ச்சியும் பொருளாயத வகைப்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினால் வரையறுக்கப்படுகிறது என்று அறிந்து கொண்டனர்.

மனிதத் தேவைகளை நிறைவு செய்வதற்குரிய பொருட்களை உற்பத்தி செய்வதில் மனிதர்கள் பரஸ்பரமாக ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைப் பொறுத்திருக்கின்றன. சமூக வாழ்வின் எல்லாத் தோற்றங்களுக்கும், மனித ஆவலாதிகளுக்கும், கருத்துக்களுக்கும், சட்டங்களுக்கும் உரிய விளக்கம் இந்த உறவுகளிலேதான் பொதிந்திருக்கிறது.

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது தனிச்சொத்தின் அடிப்படையில் அமைந்த சமூக உறவுகளைப் படைக்கிறது, ஆனால் உற்பத்திச் சக்திகளின் அதே வளர்ச்சி பெரும்பான்மையானவர்களின் சொத்தைப் பறித்து அற்பசொற்பமான சிறுபான்மையோரிடம் அதைச் சேர்த்துக் குவித்து வைக்கிறதை நாம் இன்று காண்கிறோம். நவீன காலத்திய சமூக அமைப்புமுறைக்கு அடிப்படையாக உள்ள சொத்து என்பதை அது அழிக்கிறது, சோஷலிஸ்டுகள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட அதே குறிக்கோளை நோக்கி அதுவும் தானாகச் செல்ல முயற்சிக்கிறது.

சோஷலிஸ்டுகள் செய்ய வேண்டியிருப்பது எல்லாம்- சமூகச் சக்திகளில் எது நவீன சமூதாயத்தில், தான் வகிக்கும் நிலையின் காரணமாக, சோஷலிசத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் அக்கறை கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு அந்தச் சக்திக்கு அதன் நலன்களைப் பற்றிய உணர்வையும், அதன் வரலாற்று வழிப்பட்ட கடமையைப் பற்றிய உணர்வையும் ஊட்டுவதேயாகும். இந்தச் சக்திதான் பாட்டாளி வர்க்கம்.”4

பீட்டர்ஸ்பர்க்கில் தமது பணியை லெனின் மீண்டும் தொடர்ந்தார். இவரிடம் காணப்பட்ட மார்க்சியம் பற்றிய கண்ணோட்டத்தையும், அதனைக் கொண்டு ருஷ்ய நிலைமைகளுக்குப் பயன்படுத்தும் திறமையையும் கண்ட இந்நகர மார்க்சியவாதிகள் இவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ளும்படி செய்தது. பீட்டர்ஸ்பர்க்கில் ஏற்கெனவே சுமார் இருபது மார்க்சியக் குழுக்கள் இருந்ததன. 1895ஆம் ஆண்டில் இவற்றை லெனின் தொழிலாளர் விடுதலைக்கான போராட்டக் கழகம் என்ற பெயரில் ஒன்றாக இணைத்தார். இந்த இணைப்பு மார்க்சியக் கோட்பாட்டையும் தொழிலாளர்களையும் இணைக்கின்ற, கட்சி ஒன்றை நிறுவுவதற்கான முயற்சியாக அமைந்தது.

ஜார் அரசின் போலீஸ் லெனினை தொடர்ந்து கண்காணித்தது. போலீஸ் உளவாளிகள் அவர் செல்லும் இடங்கள் எல்லாம் மறைமுகமாக தொடர்ந்தனர். உளவாளிகளின் கண்களில் மண்ணைத் தூவி தப்பித்துக் கொள்வார். ஒரு முறை தொழிலாளர் வட்டாரக் குழு கூட்டத்திற்கு செல்லவதற்காக டிராம் வண்டியில் பயணம் செய்யதார். இதனை அறிந்த ஒர் உளவாளி கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு, செய்தித் தாளை படிப்பது போல் மறைத்துக் கொண்டு, லெனினை நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். இதனை அறிந்த லெனின் உளவாளியிடம் தப்பிப்பதற்கான ஒரு நிறுத்தத்தை தேர்ந்து கொண்டு காத்திருந்தார். அந்த நிறுத்தமும் வந்தது வண்டியும் நின்றது, யாரும் இறங்காததால் நடத்துனர் புறப்பட மணியை அடித்தார். டிராம் புறப்பட்டது உடனே துள்ளி எழுந்து கீழே இறங்கி அந்த இடத்தைவிட்டு மறைவாக சென்றார். உளவாளி வண்டியை நிறுத்தக் கோரி முறையிடுவதற்கு முன்பே இவைகள் நடந்தேறிவிட்டது. உளவாளி ஏமாற்றம் அடைந்தார்.

                தொழிற்சாலையில், தொழிலாளர்களுக்கு அபராதம் விதிப்பது சர்வசாதாரணமாக இருந்தது. எதற்கெடுத்தாலும் அபராதம்.  அதற்கான சட்டமும் போடப்பட்டிருந்தது. இதுப்பற்றி ஒரு துண்டறிக்கையை லெனின் எழுதினார். அதில் சட்ட ஒடுக்குமுறையைப் பற்றி தொழிலாளர்களுக்கு விவரித்தார். இதுபோன்ற எண்ணற்ற துண்டறிக்கைகள் அப்போது லெனினால் எழுதப்பட்டு விநியோகிக்கப்பட்டன. இந்த துண்டறிக்கைகள், நரோத்னிக்குகளின் ஒரு பிரிவான மக்கள் விருப்பம் என்ற அமைப்புக்கு சொந்தமான சட்டஅனுமதிபெறாத ரகசிய அச்சகத்தால் அச்சிடப்பட்டது. சித்தாந்த முறையாக லெனின் இவர்களை விமர்சனம் செய்துள்ளார். ஆனால் அவர்களது அமைப்பைச்சார்ந்த ரகசிய அச்சகத்திலேயே அச்சடித்துக் கொடுத்தனர். சித்தாந்தத்தில் வேறுபட்டாலும் மக்கள் நலனில் ஒன்றுபட்டனர்.

பயன்படுத்திய நூல்கள்

1. லெனின் வாழ்க்கை குறிப்புகள்-பக்கம் – 15
2. ‘மக்களின் நண்பர்கள்எப்படிப்பட்டவர்கள்? சமூக-ஜனநாயகவாதிகளுக்கு  எதிராக அவர்கள் எவ்வாறு போரிடுகிறார்கள்

3. & 4. பிரடெரிக் எங்கெல்ஸ்

No comments:

Post a Comment