1921ஆம் ஆண்டு மார்ச் மாதம், ருஷயக் கம்யூனிஸ்ட் கட்சியின் 10வது காங்கிரஸ் நடைபெற்றது. தொழிற்சங்கம் என்பது நிர்வாகத்திற்கும், பொருளாதார கண்காணிப்பிற்கும், கம்யூனிசத்திற்கும் பயிற்சி பள்ளியாக இருக்கும் என்ற லெனினது கருத்தை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. தொழிற்சங்கம் போன்றவற்றில் தேவையற்ற விவாதத்தின் மூலம் கட்சியை பிளவுபடுத்தும் முயற்சி தோல்வி கண்டது.
கட்சிக்குள் பிளவு ஏற்படுத்துவதானது தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையைக் குலைக்கும். இதன் காரணமாக சோவியத் ஆட்சி சிதைந்துவிடும், வீழ்ந்து போன முதலாளித்துவம் எழுச்சிபெற வழிவகுக்கும் என்று லெனின் எச்சரித்தார்.
கட்சியில் புதியதாக சேர்ந்தவர்களால் கட்சியின் கட்டுக்கோப்பு பாதிக்கும் நிலை ஏற்பட்டது. 1920ஆம் ஆண்டு இறுதியில் சுமார் 7 லட்சம் பேர் கட்சியில் இருந்தனர். இதில் தொழிலாளர்களின் எண்ணிக்கை பாதிக்கும் குறைவாகவும், விவசாயிகளின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்காகவும், மீதமுள்ளவர்களாவர் அலுவலர்கள், அறிவுத்துறையினர், மற்றும் மென்ஷிவிக்குகளிடம் இருந்தும், சோஷலிஸ்ட் புரடசியாளர்களிடம் இருந்தும் வந்தவர்களாவர். புதியதாக வந்தவர்களில் பலர் அரசியலில் உறுதியற்றவர்கள். இந்தப் போக்கினரை டிராட்ஸ்கி, புக்காரின் போன்ற குழுவாதிகள் பயன்படுத்தி கட்சியை குலைக்க முனைந்தனர். இந்த அபாயத்தை தவிர்க்க வேண்டுமானால் கட்சிக்குள் செயற்படும் பிரிவுகளையும், கட்சி விரோத குழுக்களை அமைத்துக் கொண்டு செயற்படுவதை தடை செய்ய வேண்டும் என்று 10வது காங்கிரஸ் முடிவெடுத்தது.
கட்சிக்குள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து விரோதக் குழுக்களையும் கலைத்திட காங்கிரஸ் உத்திரவிட்டது. மீண்டும் கட்சிக்குள் குழுவை அமைக்க முனைந்தால் அதனை தடுக்கும் வகையில் கண்காணிக்க வேண்டும். காங்கிரஸ் முடிவுக்கு எதிராக குழுவை அமைத்தால் அவர்களை தண்டிக்க வேண்டும், அவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.
கட்சியின் கட்டுக்கோப்பிற்கு பங்கம் விளைவிக்கும் இந்த குழுசேர்க்கும் போக்கை நீக்கினால் அன்றி பாட்டாளிவர்க்க சர்வாதிகரம் வெற்றி பெறமுடியாது. சோவியத் ஆட்சியின் விரோதிகள் தற்போது புதியதாக கடைபிடித்திருக்கும் செயல்தந்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும். படைபலத்தால் சோவியத்தை வீழ்த்த முடியாது என்ற நிலையினை உணர்ந்து கொண்ட இவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியில் நிலவும் கருத்து வேற்றுமைகளை பயன்படுத்த முயன்றனர். அதிருப்தியாளர்களை ஆதரித்து அவர்களைக் கொண்டு அதிகாரத்தை மாற்றுவதற்கு திட்டமிட்டனர். ஆனால் இது முறியடிக்கப்பட்டது.
இந்த காங்கிரசில் புதிய பொருளாதாரக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டன. கட்டாய தானியக் கொள்முதலுக்கு பதிலாக பொருளாக வரி வசூலிக்கும் முறை நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டது. கட்டாய கொள்முதல் செய்யப்பட்டதைவிட குறைவான பொருளை வரியாக கொடுக்க வேண்டிய நிலை உருவாயிற்று. வரி செலுத்தியது போக மீதமுள்ள தானியங்களை விற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
போர்க்கால கம்யூனிசம் என்பது முதலாளித்துவ சக்திகளின் கோட்டையை நேரடியாக தாக்கி கைப்பற்றுவது. இந்த தாக்குமுறை, தன்னுடைய தளத்தில் இருந்து அதாவது பின்னணியில் இருந்து துண்டித்துவிடுமோ என்ற அளவுக்கு முன்சென்றுவிட்டது. மேலும் இந்த பயணத்தை தொடராமல் சற்று பின்னோக்கி செல்ல வேண்டும். புதிய பலத்தைப் பெற்ற பிறகு முன்னோக்கி பயணிக்க வேண்டும்.
கோட்டையை நேரடியாக தாக்காமல் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு நிதானத்தோடு தாக்கும் முறையாகும்.
இந்த வழிமுறை புறமுதுகு காட்டி ஓட்டம் பிடிப்பதாக எதிர்ப்பாளர்கள் விமர்சித்தனர். இந்த எதிர்ப்பாளர்கள் போல்ஷிவிக் செயல்முறையை அறிந்து கொள்ள முடியாதவர்களாய் இருந்தனர். பின்வாங்குதல் ஏன் பின்பற்றப்பட வேண்டும் என்கிற புறநிலைமைகள் பற்றி போல்ஷிவிக்குகள் கூறுகின்ற காரணத்தை இந்த எதிர்ப்பாளர்களால் புரிந்து கொள்ளவில்லை. தனிநபர் மூலதனத்தின் மீது தாக்குவதற்கான தயாரிப்பு தான் இந்தப் பின்வாங்குதல் என்பதை அறிந்து கொள்ளவில்லை.
பின்னணியில் போதிய தளம் அமைத்துக் கொள்ளாமல் முன்னேறுவது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து எடுக்கப்பட்ட முடிவு இது. தாக்கும் போது வெற்றி நிச்சயம் என்ற வகையில் தயார்படுத்துவதற்கே புதிய பொருளாதார கொள்கையின் மூலம் பின்வாங்கும் நடைமுறை ஏற்கப்பட்டது.
பின்தங்கிய ருஷ்யாலிருந்து சோஷலிச பொருளாதாரத்தை அமைப்பதற்கு தேவைப்படும் உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பதற்கான அவகாசமே இந்த பின்வாங்கல். இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை தொழிலாளி வர்க்கத்திற்கும் விவசாய வர்க்களுக்கும் இடையே கூட்டுறவை ஏற்படுத்துவதற்கு ஏற்ப வகுக்கப்பட்டது. எதிர்ப்பாளர்கள் இதனை அறிந்திடவில்லை. புதிய பொருளாதாரக் கொள்கை சரியானது என்பதை முதல் ஆண்டிலேயே உறுதிபடுத்தியது. பொருளாதாரம் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. கம்யூனிஸ்ட் கட்சி சரியானப் பாதையில் செல்கிறது என்பதை தொழிலாளர்களும், விவசாயிகளும் உணர்ந்து கொண்டனர். இந்த புத்தெழுச்சியின் போது கட்சியின் பதினொன்றாவது காங்கிரஸ் 1922ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள் சுயவிமர்சனம் செய்யப்பட்டன.
புதிய பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட பின்வாங்குதல் என்ற நடைமுறை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எந்த நோக்கத்திற்காக பின்வாங்குதல் நடைபெற்றதோ அது நிறைவேற்றப்பட்டது. ஒன்றுதிரட்டிப்பட்ட சக்திகளைக் கொண்டு அடுத்தகட்ட வளர்ச்சி நோக்கிய பயணித்திற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன.
தேசியஇனங்களின் சுயேச்சையான விருப்பத்தின்படி ஒர் அரசாங்க ஒன்றியம் அமைக்கப்பட்டது. சோவியத் சோஷலிசக் குடியரசுகளின் ஒன்றியம் நிலைநிறுத்தப்பட்டது. இதில் பல்வேறு தேசியஇனங்கள் தங்களை இணைத்துக் கொண்டன.
ஓய்வின்றி கடுமையான தொடர் உழைப்பால் லெனினது உடல்நலம் குன்றியது. இதனைப் பொருட்படுத்தாமல் லெனின் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருந்தார். 1921ஆம் ஆண்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி இடையிடையே தமது வேலைகளை செய்வதும் ஓய்வெடுப்பதுமாக இருந்தார். நோயைப் பொருட்படுத்தாமல் வேலை செய்ததால் அவரது ஆரோக்கியம் குன்றியது. 1922ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நோய் தீவிரமடைந்தது. 1923ஆம் ஆண்டின் முதல் இரு மாதங்களில் சற்று தேறினார். அப்போது தான் தமது இறுதி படைப்புகளை எழுதினார். காங்கிரசுக்கு கடிதம், நாட்குறிப்பிலிருந்து சில பக்கங்கள், கூட்டுறவு பற்றி, நமது புரட்சியைப் பற்றி, தொழிலாளர் விவசாயிகள் கண்காணிப்பை நாம் மறுசீரமைப்பது, சிறியதாயினும் சிறந்ததே நன்று.
லெனின் எழுதிய கடிதத்தொகுப்பில், தேசிய இனப்பிரச்சினை பற்றியும், அரசு திட்ட கமிஷன் பற்றியும், ஸ்டாலின், டிராட்ஸ்கி ஆகியோரின் தனிப்பட்ட இயல்புகளைப் பற்றியும் எழுதியுள்ளார். நாட்குறிப்பிலிருந்து சில பக்கங்கள் என்ற கட்டுரையில் நகரத் தொழிலாளர்களுக்கும் கிராமத் தொழிலாளி மக்களுக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுவதைப் பற்றி எழுதியுள்ளார். கிராமத்துப் பாட்டாளி வர்க்கத்திடம் கம்யூனிசக் கருத்தை எடுத்துச் செல்ல வேண்டும், அவ்வாறு செய்யும் போது கம்யூனிசக் கருத்தை நேர் பொருளில் புரிந்து கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கையையும் கொடுத்துள்ளார்.
“கம்யூனிசத்துக்குத் தேவையான பொருளாயத அடித்தளம் நமது கிராமப்புறங்களில் இல்லாதவரை, இதைச் செய்வது கம்யூனிசத்துக்குத் தீங்கிழைப்பதாகவே இருக்கும், உண்மையில் பேராபத்து விளைவிப்பதாகவே இருக்கும் என்றே கூற வேண்டும்.”1
விவசாயத்தில் சோஷலிச மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு கூட்டுறவு சங்கங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று கூட்டுறவு பற்றி என்ற கட்டுரையில் லெனின் வலியுறுத்தினார்.
“அரசின் ஆட்சியதிகாரம் தொழிலாளி வர்க்கத்தின் கைக்கு வந்து விட்டதால், உற்பத்திச் சாதனங்கள் யாவும் இந்த அரசின் ஆட்சியதிகாரத்துக்குச் சொந்தமாகி விட்டதால், இனி மக்கள் எல்லோரையும் கூட்டுறவுக் கழகங்களில் ஒன்றுதிரளச் செய்வது தான் நமக்குள்ள ஒரே பணி என்றாகிவிட்டது.”2
கூட்டுறவு என்பது முதலாளித்துவ முறைதானே என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு லெனின் பதிலளித்தார். முதலாளித்துவ அரசில், கூட்டுறவுகள் கூட்டு முதலாளித்துவ நிலையங்களேயாகும் இதில் சந்தேகம் இல்லை. ஆனால் தனியார் முதலாளித்துவத் தொழில் நிலையங்களை தேசவுடைமையாக்கப்பட்ட இன்றை நிலையில், தொழிலாளி வர்க்க அரசின் கண்காணிப்பின் கீழ் இந்த நிலையங்கள் சோஷலிச வகையிலான தொழில் நிலையங்களாகவே செயற்படும். கூட்டுறவு சங்கங்கள் அமைந்துள்ள இடமும் உற்பத்திச் சாதனங்களும் அரசு முதலாளித்துவ அமைப்பில் அரசுக்கு சொந்தமானவை. இது முதலாளித்துவ அரசில் காணப்படும் கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து வேறுபட்ட சோஷலிச நிலையங்களேயாகும்.
இந்த நிலைமையில் இரண்டு பணிகளை செய்திட வேண்டும்
என்று லெனின் வலியுறுத்துகிறார். ஒன்று இயந்திரத்தை திருத்தி செம்மையாக்க வேண்டும்,
மற்றொன்று விவசாயிகளை கூட்டுறவுகளில் ஒன்று திரட்டுவதற்கு முன்பாக அவர்களின் கலாச்சார
நிலையை உயர்த்த வேண்டும்.
“இரண்டு பிரதான பணிகள் நம்மை எதிர்நோக்குகின்றன. இந்தச் சகாப்தமே இவ்விரு பணிகளாலும் ஆனதுதான். முதலாவது, நமது அரசு இயந்திரத்தைத் திருத்தியமைத்தல். இந்த இயந்திரம் முற்றிலும் உபயோகமற்றதாகும், முந்திய சகாப்தத்திலிருந்து முழுமையான இவ்வியந்திரத்தை நாம் பெற்றுக் கொண்டோம். போராட்டத்தின் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த இயந்திரத்தைத் தீவிரமாய்த் திருத்தியமைக்கவில்லை, திருத்தியமைக்க முடியவும் இல்லை.
நமது இரண்டாவது பணி விவசாயிகளிடையே நடைபெற வேண்டிய கலாச்சாரப் பணி. விவசாயிகளைக் கூட்டுறவுகளில் ஒன்றுதிரளச் செய்வதே, விவசாயிகளிடையே நடைபெற வேண்டிய கலாசாரப் பணியின் பொருளாதார நோக்கம். விவசாயிகள் அனைவரும் கூட்டுறவுகளில் ஒன்றுதிரட்டப்பட்டு இருப்பார்களாயின், இப்பொழுது நாம் சோஷலிசத்தில் இருகால்களையும் ஊன்றிக் கெட்டியாய் நின்று கொண்டிருப்போம், ஆனால் விவசாயிகள் அனைவரையும் கூட்டுறவுகளில் ஒன்று திரட்டும் முன் விவசாயிகளுடைய கலாசார நிலையை உயர்த்தியாக வேண்டும். கலாசாரப் புரட்சி இல்லாமல் உண்மையில் இப்பணியை நிறைவேற்ற முடியாது.”3
போதிய அளவுக்கு கலாசார வளர்ச்சி பெறுவதற்கு முன்பே ருஷ்ய நாட்டில் சோஷலிசத்தை நிறுவுவதை குருட்டு துணிச்சலான காரியம் என்று சொல்கிற எதிராளிகளின் கூற்றும் இந்த நிலைமையும் ஒன்றல்ல. இதுபற்றி நமது புரட்சி என்ற கட்டுரையில் இதற்கு விளக்கத்தை சற்று காட்டமாக கூறுகிறார்.
“ருஷ்யாவில் உற்பத்திச் சக்திகளது வளர்ச்சி சோஷலிசத்தைச் சாத்தியமாக்கும் படியான உயர்நிலையை அடைந்தாகவில்லை” இரண்டாவது அகிலத்தின் எல்லா வீரர்களும்- சுஹானவும் அடங்கலாய்த்தான்- இந்த முடிவினை எடுத்துரைத்து முழக்கமிடுகிறார்கள். மறுக்க முடியாத இந்த முடிவினை விதம்விதமான ஆயிரம் வழிகளில் ஓயாமல் டமாரமடிக்கின்றனர், நமது புரட்சிக்கு இதுதான் தீர்மானகரமான உரைகல் என்பதாய் நினைக்கின்றனர்.”4
ஏகாதிபத்திய உலகப் போரின்போது ருஷ்யாவில் ஏற்பட்ட வளர்ச்சியின் மாற்றத்தைக் கணக்கில் கொள்ளாது திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டிருக்கின்றனர். சோஷலிச முன்தேவைகளான நிலப்பிரபுக்களையும் முதலாளிகளையும் வெளியேற்றுவதை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமான சோவியத்தை அமைத்துக்கொண்டு செய்யக் கூடாதா? என்று லெனின் கேள்வி எழுப்புகிறார்.
“சோஷலிசத்தைக் கட்டியமைப்பதற்கு நாகரிகம் அவசியம் என்கிறீர்கள். மிக்க நல்லது. ஆனால் நாகரிகத்துக்கு வேண்டிய முன்தேவைகளை, நிலப்பிரபுக்களையும் ருஷ்ய முதலாளிகளையும் வெளியேற்றுவது போன்ற இந்த முன்தேவைகளை, ஏன் நாம் முதலில் தோற்றுவித்துக் கொண்டு, அதன் பிறகு சோஷலிசத்தை நோக்கி முன்செல்லக் கூடாது? நிகழ்ச்சிகளின் வழக்கமான வரலாற்று வரிசைக் கிரமத்தில் இப்படிப்பட்ட உருத்திரிபுகள் அனுதிக்கப்படுவதில்லை என்றோ, சாத்தியம் அற்றவை என்றோ எங்கே, எந்த நூலில் படித்தீர்கள்?”5
பின்தங்கிய நாட்டில் சோஷலிசத்தை நிலைநிறுத்துகிறோம் என்ற தெளிவோடு தான் லெனின் செயற்பட்டார். இருந்தாலும் வறட்டுச் சூத்திரவாதிகள் தொடர்ந்து இதனை இன்றுகூட எழுப்பிக் கொண்டே இருக்கின்றனர்.
“உடனே சோஷலிசத்தை அடைவதற்கு நம்மிடமும் போதிய நாகரிக வளர்ச்சி இருக்கவில்லை, ஆனால் அதற்கு வேண்டிய அரசியல் முன்தேவைகள் நம்மிடம் இருக்கின்றன.”6
லெனினது இந்தக் கண்ணோட்டத்தை உள்வாங்கும் திறமற்றவர்களாக இருப்பவர்களை நாம் என்ன செய்ய முடியும்.
ருஷ்யாவின் அக்டோபர் புரட்சி என்பது, மார்க்சின் மூலதன நூலுக்கு எதிரானதாகவும், வரலாற்றியல் பொருள்முதல்வாதத்திற்கு புறம்பானதாகவும், மார்க்சை மறுதலிப்பதாகவும் கிராம்ஷி போன்றோர்கள் கூறுகின்றனர்.
“போல்ஷிவிக் புரட்சி, மார்க்சின் “மூலதன”த்திற்கு எதிரான புரட்சி ஆகும். ருஷ்யாவில் பாட்டாளி வர்க்கத்தைக் காட்டிலும் பூர்ஷ்வாக்களின் மத்தியில்தான் “மூலதனம்” அதிகத் தாக்கம் ஏற்படுத்தியது. பாட்டாளிவர்க்கம் தனது விடுதலை, தனது வர்க்க நலன்கள், தனது புரட்சி ஆகியன பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே தவிர்க்கமுடியாத விதியின் பயனாக, ருஷ்யாவில் பூர்ஷ்வா வர்க்கம் உருவாக்கப்படும், அங்கு முதலாளிய சகாப்தம் தொடங்கும், மேற்கத்தியப் பாணி நாகரிகம் அங்கு தழைக்கும் என்பதை “மூலதனம்” விமர்சனரீதியாக விளக்கியது. ஆனால், எந்தவொரு சட்டகத்திற்குள் ருஷ்ய வரலாறு வளர வேண்டும் என்று வரலாற்றுப் பொருள்முதல்வாதம் வரையறுத்ததோ, அந்த சட்டகத்தை வரலாற்று நிகழ்வுகள் உடைத்தெறிந்தன. போல்ஷிவிக்குகள் காரல் மார்க்சை மறுதலித்துள்ளனர். அவர்கள் தங்கள் செயல்கள் மூலமும் வெற்றிகள் மூலமும், இதுகாறும் நம்பபட்டு வந்தது போல் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் விதிகள், அவ்வளவு இறுக்கமானவை அல்ல என்பதை உறுதி செய்துள்ளனர்”7
மார்க்சின் உடலைப் புதைக்கின்ற போது, மார்க்சின் மாபெரும் இரண்டு கண்டுபிடிப்புகள் என்று எங்கெல்ஸ் கூறியதில் ஒன்றான வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை கிராம்ஷி குறைத்து மதிப்பிடுகிறார். லெனினியம் என்பது மார்க்சியத்தின் தொடர்ச்சியே.
அக்டோபர் புரட்சியின் நான்காவது ஆண்டு விழாவை ஒட்டி எழுதிய கட்டுரையில் லெனின் கூறியதை படிக்கும் போது வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை மீறியதற்கான அடையாளங்களே இல்லை என்பதை அறிந்திட முடிகிறது. ருஷ்யாவில் நடைபெற்ற புரட்சியின் உடனடியான செயற்பாடு முதலாளித்துவ ஜனநாயகக் குறிக்கோளே. நாட்டின் அனைத்துக் கலாச்சாரத்துக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாய் உள்ளதை அகற்றுவதே என்று வரலாற்றியல் பொருள்முதல்வாதத் தெளிவோடு தான் லெனின் செயற்பட்டிருக்கிறார்.
“ருஷ்யாவில் நடைபெற்ற புரட்சியின் நேரடியான உடனடிக் குறிக்கோள் முதலாளித்துவ ஜனநாயகக் குறிக்கோள்தான், அதாவது மத்திய கால முறைமையின் மீதமிச்சங்களை அழித்து அவற்றை அறவே துடைத்தெரிவதும், இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை, இந்த அவக்கேட்டை ருஷ்யாவிடமிருந்து களைந்தெறிவதும், நமது நாட்டில் அனைத்துக் கலாச்சாரத்துக்கும் முன்னேற்றத்துக்கும் பிரம்மாண்டத் தடையாய் அமைந்த இதனை அகற்றுவதும்தான்.”8
ருஷ்யாவினுடைய அக்டோபர் புரட்சியின் தன்மையை, அதாவது சோஷலிசப் புரட்சியின் போது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்குள்ள உறவை, மென்ஷிவிக்குகளும், சோஷலிஸ்ட் புரட்சியாளர்களும், இது போன்ற குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகளும் புரிந்து கொள்ளாமல் அபத்தமாக பேசுகின்றனர். ஆனால் லெனினது வழியில் புதிய ருஷ்யா சாதித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நான்கு ஆண்களில் ஏற்பட்ட மாற்றத்தில் காணமுடிகிறது.
“சோஷலிஸ்ட் (அதாவது பாட்டாளி வர்க்கம்) புரட்சியிடம் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்குள்ள உறவு குறித்து அராஜகவாதிகளும் குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகளும் (அதாவது மென்ஷிவிக்குகளும் சோஷலிஸ்ட் புரட்சியாளர்களும்- இவர்களே அந்தச் சர்வதேச சமூக வகையினரது ருஷ்யப் பிரதிநிதிகள்) நம்ப முடியாத அளவுக்கு அபத்தம் பேசி வந்துள்ளனர், இனியும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் மார்க்சிய ஆய்வு குறித்து நாங்கள் அளித்த விளக்கமும், முந்திய புரட்சிகளது அனுபவம் குறித்து நாம் செய்த மதிப்பீடும் பிழையற்றவை என்பதைக் கடந்த நான்கு ஆண்டுகள் முழு அளவுக்கு நிரூபித்துக காட்டியிருக்கின்றன. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை இதன் முன் வேறு யாருமே செய்திராதபடி நாம் நிறைவு பெறச் செய்துள்ளோம். சோஷலிசப் புரட்சியை நோக்கி நாம் உணர்வு பூர்வமாகவும் உறுதியாகவும் இம்மியும் பிறழாமலும் முன்னேறிச் செல்கிறோம்.”9
ருஷ்யப் புரட்சியானது, தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அதிக அளவான ஜனநாயகத்தை கிடைக்கச் செய்வதோடு, முதலாளித்துவ ஜனநாயகத்திடமிருந்து முறிவையும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் பிறப்பையும் குறிக்கின்றது.
“ஒரு புரட்சி எப்படி மற்றொன்றாக வளர்ச்சியுறுகிறது என்பதற்கு மிகவும் கண்கூடான நிரூபணங்கள் அல்லது வெளிப்பாடுகளில் ஒன்றே சோவியத் அமைப்பு, தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சோவியத் அமைப்பானது அதிகபட்ச அளவிலான ஜனநாயகத்தைக் கிடைக்கச் செய்கிறது, அதே போது முதலாளித்துவ ஜனநாயகத்திடமிருந்தான முறிவையும், ஜனநாயகத்தின் ஒரு புதிய சகாப்த முக்கியத்துவம் வாய்ந்த வகையின், அதாவது பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின், அல்லது பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் உதயத்தையும் அது குறிக்கிறது.”10
இவ்வகையில் சோஷலிச அரசியல் அடிப்படையில் சோஷலிச சமூகத்தை ருஷ்யாவில் நிலைநாட்டப்படுவதை லெனின் உணர்ந்தே செயற்பட்டார்.
“நமது சோவியத் குடியரசில் சமூக அமைப்பு இரண்டு வர்க்கங்களின் ஒத்துழைப்பை அடிப்படையாக்கியதாகும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள், இப்போது இதில் புதிய பொருளாதாரக் கொள்கைக் காலத்தில் ஏற்பட்ட சிறு முதலாளிகள், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தினர்கள் ஒரு சில நிபந்தனைகளின் கீழ் பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது தெரிந்ததே. இந்த வர்க்கங்களுக்கு இடையே கடுமையான வர்க்க வேறுபாடுகள் உதித்தெழுமானால் ஒரு பிளவு தவிர்க்க முடியாததாகும், ஆனால் நமது சமூக அமைப்பில் இத்தகைய பிளவுக்கான அடிப்படைகள் தவிர்க்க முடியாதபடி இல்லை. ஒரு பிளவை ஏற்படுத்தக்கூடிய அத்தகைய புறநிகழ்வுகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து அவற்றை முன்னுணர்ந்து தடுப்பது நமது மையக் கமிட்டி மற்றும் மையக் கண்காணிப்புக் கமிஷன், நமது கட்சி முழுவதன் முக்கிய கடமையாகும்.”11
புறநிகழ்வுகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்தாலன்றி சோவியத் அரசைக் காப்பாற்ற முடியாது என்ற முன்னெச்சரிக்கையோடு லெனின் கூறியிருக்கிறார். புதிய பொருளாதாரக் கொள்கையின் வழியில் செல்கிற சோவியத் குடியரசில் பிளவை ஏற்படுத்தாத வகையில் செல்வதற்கு மையக் கமிட்டி, மையக் கண்காணிப்புக் கமிஷன், கட்சி ஆகியவற்றின் கடமையினை வலியுறுத்துகிறார்.
விவசாயிகள் மீதான தலைமை தொடர்ந்து தொழிலாளி வர்க்கத்திடம் இருக்கும்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும், அரசின் பொருளாதாரத்தில் சாத்தியமான முழுஅளவுக்குச் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், பெருவீத இயந்திரத் தொழிலை வளர்த்திட வேண்டும், மின்மயமாக்குதலையும், நீரியல் முறையிலான புல்கரி உற்பத்தியை வளர்த்திட வேண்டும், வோல்ஹவ் நீர்மின்விசைத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்.
“நமது பொறியமைவை முழு அளவுக்குக் களையெடுத்துச் சுத்தம் செய்வதன் மூலமும், அதற்கு இன்றியமையாத் தேவையாய் இல்லாதவை யாவற்றையும் கூடுமான அளவுக்குக் கழித்துக் கட்டுவதன் மூலமும் தான் நாம் சமாளிக்க முடியுமென உறுதியாய் இருக்கலாம் என்பதே இந்த நியாயவிளக்கம். அத்தோடு, சிறு விவசாயிகளது நாட்டுக்குரிய நிலையில் அல்ல, சகலமும் குறுகிய வரம்புகளுக்குள் இருக்கும்படியான நிலையில் அல்ல, மாறாக பெருவித இயந்திரத் தொழிலை நோக்கி இடையறாது முன்னேறும்படியான நிலையில் நாம் சமாளிக்க முடியும்.
நமது தொழிலாளர் மற்றும் விவசாயிகளது மேற்பார்வை அமைப்பானது இத்தகைய மகோன்னத பணிகளைக் கொண்டதாக இருக்க வேண்டுமென நான் கனவு காண்கிறேன். எனவேதான் இதற்காக மிக உயர்ந்த அதிகாரம் வகிக்கும் கட்சி உறுப்பைச் “சாதாரண” மக்கள் கமிசாரகத்துடன் இணைத்திடுவதற்கு நான் திட்டமிடுகிறேன்.”12
இந்தக் கட்டுரையில் கனவு காண்பதோடு லெனின் முடிக்கிறார். இங்கே கனவு என்றவுடன் அடிப்படையில்லாக் கனவு என்று நினைத்திடக் கூடாது இருக்கும் அடைப்படைகளைக் கொண்டு கட்டிமுடிக்க வேண்டிய கடமைகளையே கனவுகளாகக் காட்சிப்படுத்துகிறார்.
கட்சியின் பன்னிரண்டாவது காங்கிரஸ் 1923ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. இந்தக் காங்கரசில் லெனின் கலந்துகொள்ள முடியவில்லை. லெனின் அண்மைக்காலங்களில் எழுதியவைகளில் இருந்த கருத்தக்களை இந்தக் காங்கிரஸ் பரிந்துரைத்தது. கட்சியின் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தவர்களின் முடிவுகளுக்கு மாறாக இறுதியில் வெற்றி பெற்றது.
தொடரும் காலங்களில் தொழிலாளர், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டது. இருந்தாலும் இயந்திரத் தொழில்கள் இன்னும் விரிவாக வளர்ச்சியடைய வேண்டியிருந்தது. வேலையில்லாதோர் சோவியத்தில் இன்னும் காணப்பட்டனர். அனைவருக்கும் வேலை கொடுக்கும்படியான வளர்ச்சி தேவைப்பட்டது.
சிரமத்தோடு சோவியத் அரசு பயணித்துக் கொண்டிருக்கும்போது லெனின் நோய்க்கு ஆளானார். இந்த சந்தர்ப்பத்தில் டிராட்ஸ்கி போன்ற எதிர்ப்பாளர்கள் போல்ஷிவிக் கட்சியின் மீது தாக்குதல் தொடுத்தனர். எதிர்ப்பாளர்களை டிராட்ஸ்கி ஒன்றுதிரட்டி கட்சிக்குள் எதிர்ப்புக்குழு அமைக்க முயற்சித்தார். தற்போதைய சோவியத் நாடு மிகவும் அபாயகரமான பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது, இதிலிருந்து மீள வழியில்லை, வீழ்வது உறுதி என்பதானக் கருத்துக்களை பரப்பிக் கொண்டிருந்தார். இந்த சதியினை நிறுத்தாமல் தொடர்ந்தார். அக்டோபர் புரட்சியின் படிப்பினைகள் என்ற தலைப்பில் 1924ஆம் ஆண்டு டிராட்ஸ்கி கட்டுரை ஒன்று எழுதினார். இதில் லெனினியத்தை மறுத்து டிராட்ஸ்கியத்தை பதிலிட்டார். இந்தப் போக்கை எதிர்த்து லெனினியத்தை பாதுகாக்க ஸ்டாலின் 1924ஆம் ஆண்டு லெனினியத்தின் அடிப்படைகள் என்ற நூலை எழுதினார். இன்றுவரை இந்நூல் லெனினியத்தை காப்பாற்றுவதில் தம் கடமையினை செய்து வருகிறது.
1924ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் நாள் மாலை 6:50க்கு லெனினது உயிர் பிரிந்தது. மாஸ்கோவில் வைக்கப்பட்ட லெனினது உடலை லட்சக்கணக்கான மக்கள் கடுங்குளிரைப் பொருட்படுத்தாமல் பார்வையிட்டனர்.
1922ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் நாள் மாஸ்கோ சோவியத்தின் முழுநிறைவுக் கூட்டத்தில் நிகழ்த்திய உரையே லெனினது இறுதியான உரையாகும்.
“சோஷலிசமானது இப்போது தொலை நெடுங் காலத்துக்குரிய விவகாரமாய் இருக்கவில்லை, அல்லது கருத்தியலான ஒரு சித்தரமாகவோ, புனிதத் தேவ உருவமாகவோ இருக்கவில்லை.
…
சோஷலிசத்தை நாம் அன்றாட வாழ்க்கையாகப் பரிமளிக்கச் செய்கிறோம், இங்கே விவகாரங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்று நாம் கவனித்துக் கொண்டாக வேண்டும். இதுதான் நமது இந்நாளையப் பணி, நமது சகாப்தத்துக்குரிய பணி. இந்தப் பணி கடினமானதுதான் என்றாலும், நமது முந்திய பணியுடன் ஒப்பிடுகையில் புதுமையானதே என்றாலும், இதை நிறைவேற்றுகையில் எதிர்ப்பட வேண்டியுள்ள இடர்கள் எண்ணற்றவை எனினும், நாம் எல்லோருமாய் ஒன்றுசேர்ந்து, என்னதான் விலை கொடுக்க நேர்வதாயினும் – ஒரே நாளில் அல்ல, ஒரு சில ஆண்டுகளில்- இப்பணியை நிறைவேற்றுவோம், புதிய பொருளாதாரக் கொள்கைக்குரிய ருஷ்யா இவ்வழியில் சோஷலிச ருஷ்யாவாக மாற்றமடையும் என்ற திடநம்பிக்கையைத் தெரிவித்து எனது உரையை முடிப்பதற்கு அனுமதியுங்கள்.”13
லெனின் விட்டுச் சொன்ற பணியினை ஸ்டாலின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியும், சோவியத் அரசும் செய்து முடித்தது. முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிச சமூகத்திற்கு மாறிச் செல்வதற்கு தேவைப்பட்ட இடைக்காலத்தை முடித்துக் கொண்டு 1935ஆம் ஆண்டில் சோஷலிச சமூகத்திற்குள் சோவியத் நுழைந்தது. 1940ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் தொழிற்துறை உற்பத்தியின் அளவு ஐரோப்பியாவில் முதல் இடத்தையும், உலக உற்பத்தியின் அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்றது.
1940 களில் எற்பட்ட இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானிய பாசிச ராணுவம் சோவியத் ஒன்றியத்தின் நகரங்களையும் தொழிற்கூடங்களையும் அழித்தது. இதனோடு 55 ஆயிரம் டாங்கிகள், 62 ஆயிரம் விமானங்கள், 80 லட்சத்துக்கு மேற்பட்ட போர்வீரர்கள் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயினர். நாட்டைக் காப்பதற்கான இந்த தேசபக்த போரின் போது, போர்வீரர்கள் மற்றும் மக்களின் பேராற்றலை உலகுக்கு எடுத்துக்காட்டியது. அது மட்டுமல்லாது போரின் விளைவாக ஏற்பட்ட அழிவில் இருந்து மீள்வதற்கு பல பத்தாண்டுகள் தேவைப்படும் என்று உலகம் கணித்துக்கொண்டிருக்க, சோவியத் ஒன்றிய உழைக்கும் மக்கள், போருக்கு முன்பான உற்பத்தியின் அளவை, முதல் மூன்று ஆண்டிலேயே எட்டினர். மக்களின் இந்த பேராற்றலுக்கு ஸ்டாலின் தலைமை தாங்கினார். மக்கள், கட்சி, தலைவர் ஆகியோர்களிடையே காணப்பட்ட ஐக்கியமே இந்த வெற்றிக்கு வழிவகுத்தது.
பின்தங்கிய ருஷ்யாவை சோஷலிச நிர்மாணத்திற்கு தேவையான வகையில் வளர்ச்சியடைய போல்ஷிவிக்குகளால் முடிந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது. ஆனால் ஸ்டாலினின் தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பதாக கூறிக்கொண்ட, பின்வந்த ருஷ்ய அதிபர்கள் சோவியத் வளர்ச்சியடைந்த சோஷலிச சமூகமாக மேம்பட்டுவிட்டது, இதற்கு அடுத்தக் கட்டமான கம்யூனிச சமூகத்தில் நாம் கால்பதிக்க வேண்டும். இந்த சமூகத்தில் முதலாளித்துவத்தின் முயற்சிகள் பலனளிக்காது என்று கூறி, சோவியத்தில் கொண்டுவந்த மாற்றங்கள் மீண்டும் முதலாளித்துவத்தையே கொண்டு வந்திருக்கிறது. ஸ்டாலினிடம் காணப்படும் தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பதாக கூறியது உண்மையில் மார்க்சிய எதிர்ப்பேயாகும். இன்றுவரை ஸ்டாலின் எதிர்ப்பென்பது மார்க்சிய எதிர்ப்பாகவே காணப்படுகிறது.
இப்போது ஆய்வு செய்து பார்க்க வேண்டியது, எப்போது எப்படி போல்ஷிவிக்கல்லாதவர்கள் சோவியத் கம்யூனிஸ்ட் கடசியிலும் தலைமையிலும் இடம்பெற்றார்கள் என்பதேயாகும். அதாவது சோவியத் தகர்வின் போது போல்ஷிவிக்குகள் ஆட்சியில் இல்லை என்பதே உண்மையாகும். இதனை ஆய்வு செய்ய வேண்டியது சர்வதேச இடதுசாரியினரின் கடமையாகும். ருஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை இந்த ஆய்வுடனேயே கொண்டாட வேண்டும். சோவியத் தகர்வு என்பது கம்யூனிச சித்தாந்தத்தின் தகர்வாகாது, சித்தாந்தத்தின் சிதைவினால் உண்டான தகர்வேயாகும். இந்த சித்தாந்த சிதைவை விமர்சித்து மார்க்சியத்தை நிலைநிறுத்துவது பெரும் கடமையாகும்
இன்றைய ருஷ்யாவில் பெரும்பாலான இளைஞர்களின் கவனம் சோஷலிசத்தின் பக்கம் திரும்புவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இது ருஷ்யப் புரட்சியின் நூறாவது ஆண்டின் நற்செய்தியாகும். நாளைய உலகம் உழைப்பாளர்களுக்கேயாகும்.
பயன்படுத்திய நூல்கள்
1.நாட்குறிப்பிலிருந்து சில பக்கங்கள் -தேர்வு நூல்கள் தொகுதி 12 – பக்கம்- 289
2.கூட்டுறவு பற்றி -தேர்வு நூல்கள் தொகுதி 12 – பக்கம்- 292-293
3.மேற்கண்ட நூல்– பக்கம்- 302-303
4.நமது புரட்சி -தேர்வு நூல்கள் தொகுதி 12 – பக்கம்- 308
5. மேற்கண்ட நூல்– பக்கம்- 302-303
6.சிறியதாயினும் சிறந்ததே நன்று -தேர்வு நூல்கள் தொகுதி 12 – பக்கம்- 345
7.கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்- எஸ்.வி.ராஜதுரை- வ.கீதா
8.அக்டோபர் புரட்சியின் நான்காவது ஆண்டு விழாவை -தேர்வு நூல்கள் தொகுதி 12 – பக்கம்- 49
9. மேற்கண்ட நூல் - பக்கம்- 50
10. மேற்கண்ட நூல்– பக்கம்- 55
11.தொழிலாளர் விவசாயிகள் கண்காணிப்பை நாம் மறுசீரமைப்பது -தேர்வு நூல்கள் தொகுதி 12 – பக்கம்- 319
12.சிறியதாயினும் சிறந்ததே நன்று -தேர்வு நூல்கள் தொகுதி 12 – பக்கம்- 346-347
13.மாஸ்கோ சோவியத்தின் முழுநிறைக் கூட்டத்தில் நிகழ்த்திய உரை -தேர்வு நூல்கள் தொகுதி 12 – பக்கம்- 254-255
No comments:
Post a Comment