Thursday, 18 January 2018

01. ஸ்டாலின் அவதூறு பற்றி….. - கே.என்.சிவராமன்

(சிவந்த மண்- மார்க்சிய கோட்பாடுகளுடன் ரஷ்ய – சீன புரட்சியின் வரலாறு- என்ற நூலில் இருந்து)

“வரலாற்றுச் சிறப்புமிக்க ரஷ்ய புரட்சியை நினைவு கூரும்போது அடிமைத்தனத்துக்கும் சுரண்டலுக்கும் எதிரான சோஷலிச குடியரசை கட்டி எழுப்ப நடந்த போராட்டத்தில் தோழர் லெனினோடு தோழர் ஸ்டாலினையும் நினைவு கூராமல் இருக்க முடியாது.

இது குறித்து விரிவாக "ஸ்டாலின் சகாப்தம்'' என்ற ஆவணப் படத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஸ்டாலினின் இளமைக்காலம், புரட்சிகர பாதைக்கு அவர் வந்து சேர்ந்தது, ரஷ்யப் புரட்சியில் அவரது பங்கு உழைக்கும் மக்களின் தலைவராக அவர் உருவானது, ஸ்டாலின் ஆட்சியில் சோஷலிசத்தின் சாதனைகள், மார்க்ஸிய லெனினியத்தை திரித்த புரட்டல்வாதிகள், ஸ்டாலின் மீதான அவதூறுகளை பரப்பிய துரோகிகள் இரண்டாம் உலகப் போரில் உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய பாசிசத்தை செம்படை வீழ்த்துதல், போருக்குபின் மறுநிர்மானம்.... என அனைத்தையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும் ஏன் ஸ்டாலின் பெயரை கேட்டாலே முதலாளிகள் அலறுகிறார்கள்? அவர் இறந்து இத்தனை வருடங்கள் கடந்த பிறகும் எதற்காக பொய்களும், அவதூறுகளும் பரப்பப்படுகின்றன? ஸ்டாலின் சர்வாதிகாரி கொலைகாரன், கொடுங்கோலன், அவரது ஆட்சியின் கீழ் லட்சக்கணக்கான ரஷிய மக்கள் உரிமைகள் ஏதுமின்றி மந்தைகளை போல கொல்லப்பட்டார்கள், சோஷலிச கொள்கையை மக்கள் மீது திணிக்கும் பொருட்டு உக்ரைனில் மாபெரும் படுகொலைகளும், பேரழிவும், பஞ்சமும் ஸ்டாலினால் உருவாக்கப்பட்டது.

இவை எல்லாம் இப்போதும் பரபரப்பாக பேசப்படும் விஷயங்கள். எனவே இது குறித்து விளக்கமாக பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

ஸ்டாலின் குறித்து உலகெங்கும் பரப்பப்படும் அவதூறுகளை பொதுவில் கீழ்க் கண்ட வகைகளில் தொகுக்கலாம்.

ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி, கொடுங்கோலன். அவரது ஆட்சியின் கீழ் மக்களுக்கு எந்த உரிமைகளும் இருக்கவில்லை. கட்சி ஊழியர்களே வாய் திறக்கமுடியவில்லை. இரும்புத்திரையின் சர்வாதிகாரம் ஆட்சி செய்தது. ஸ்டாலின் - ஹிட்லர் இரண்டு பேரும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்கள்.

இவை எல்லாம் உண்மையா? ஸ்டாலினை கண்டு அஞ்சுபவர்கள் யார்?

உழைக்கும் மக்கள் அஞ்சவில்லை. ஏனென்றால் அவர்களுக்கெல்லாம் அவர் அன்புக்குரிய தோழர் சுரண்டும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள்தான் அவரைக் கண்டு பீதியடைகிறார்கள்

அதற்காக தோழர் ஸ்டாலின் மீது விமர்சனங்களே இல்லை என்று பொருளில்லை. உழைக்கும் வர்க்கத்தின் சுதந்திரத்துக்காக போராடும் அனைவரிடமும் அவர் மீது விமர்சனங்கள் இருக்கின்றன.

ஆனால், முதலாளித்துவம் முன்வைக்கும் விமர்சனங்களுக்கும் அவதூறுகளுக்கும் -
கம்யூனிஸ்ட் தோழர்கள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கும் மலையளவு வித்தியாசம் இருக்கின்றன. ஸ்டாலின் குறித்து தொடர்ச்சியாக மேற்கத்திய நாடுகள் பரப்பிவரும் அவதூறுகளுக்கு அடிப்படை ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட எழுத்தாளர்களிடமிருந்து பிறந்தவை. ராபர்ட் கான்குவிஸ்ட் சோல்சனிட்சன் என்று தொடங்கி ராபர்ட் ஹெர்ஸ்ட் ஹிட்லர், அமெரிக்கா, பிரிட்டன் என இந்த தொடரின் மர்மங்கள் நீளம் தமிழகத்தை சேர்ந்த ஒரு சிலரும் இவர்கள் எழுதிய ஆங்கில நூல்கள் / கட்டுரைகளில் இருந்துதான் தங்களுக்கான தரவுகளை எடுத்து ஸ்டாலினுக்கு எதிராக பிரசாரம் செய்கிறார்கள்.

இதில் பிரதானமானது - உக்ரைன் பஞ்சம், உக்ரைன் படுகொலைகள் உக்ரைனில் மட்டும் ஸ்டாலின் 30 லட்சம் பேரை கொன்று குவித்தாராம். இதை புத்தகங்களிலும் மேலை நாடுகளின் பாட நூல்களிலும் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்த வாதம் தமிழகத்திலும் ஸ்டாலின் தொடர்பாக வைக்கப்படுகிறது.

உண்மை என்ன? உலகையே அச்சுறுத்தி வந்த ஹிட்லர், உக்ரைனை தனது போர்வாளில் வென்றெடுக்க கனவு கண்டார் ஜெர்மனியர்கள் வாழ்வதற்கு புவிப்பரப்பில் மிகவும் முக்கியமான பகுதியாக உக்ரைன் இருந்தது.

உக்ரைனை கைப்பற்ற வேண்டும் என்றால் அதற்கெதிராக போர் தொடுக்கவேண்டும். அதற்கு முன் கூட்டியே சில தயாரிப்பு பணிகளை செய்ய வேண்டி இருந்தது. இந்த நோக்கத்துடன் நாஜி கோயபல்ஸ் தலைமையில் சோஷலிசத்துக்கு எதிரான பிரசார இயக்கம் ஜெர்மனியால் தொடங்கப்பட்டது.

'உக்ரைனில் சோஷலிச கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களை ஸ்டாலினுடைய செம்படை கொலை செய்தது. பேரழிவு பஞ்சத்தை உருவாக்கியது. பெருந்திரள் படுகொலைகளை போல்ஷ்விக்குகள் நடத்தினார்கள். இதன் காரணமாக மட்டுமே ஸ்டாலின் ஆட்சியில் உக்ரைனில் மட்டும் சுமார் 60 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்...."

இதன் வழியாக சோவியத்திடம் இருந்து உக்ரனை விடுவிக்க வேண்டும் என்கிற பொதுக் கருத்தை உலக மக்களிடம் உருவாக்க முயன்றார்கள். அதன் பிறகு உள்ளே நுழைந்து உக்ரைனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் மற்ற நாடுகள் கேள்வி கேட்காது என்பது ஹிட்லரின் திட்டம்.

எதிர்பார்த்த அளவுக்கு இந்த பிரசாரம் வெற்றி பெறவில்லை. இச்சூழலில் நாஜிக்களுக்கு உதவ அமெரிக்காவிலிருந்து தானாகவே ஒரு கோடீஸ்வரர் முன்வந்தார். அவர் தான் ரடால்ப் ஹெர்ஸ்ட்

அமெரிக்காவின் மிகப்பெரிய பத்திரிக்கை முதலாளியான இவர் 1930களிலேயே உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரராக விளங்கினார்.

1934ம் ஆண்டு ஜெர்மனிக்கு இவர் சென்றபோது தனது விருந்தாளியாகவும் நண்பராகவும் ஹிட்லர் வரவேற்றார். இந்த சந்திப்புக்கு பிறகு சோவியத் ரஷியாவில் நடக்கும் அட்டூழியங்கள், பெருந்திரள் படுகொலைகள் திட்டமிட்ட பட்டினி சாவுகள். போன்ற கட்டுரைகள் ஹெர்ஸ்டின் நாளேடுகளில் தினமும் வெளி வரத் தொடங்கின.

குறிப்பாக ஹிட்லரின் நண்பரான கோயரிங் - ஸ்டாலின் பற்றிய அவதூறு கட்டுரைகளை அடுத்தடுத்து ஹெர்ஸ்ட் வெளியிட்ட நாளிதழ்களில் எழுதினார். ஸ்டாலினை கொலைகாரராக சித்தரிக்ககையில் கத்தியுடன் இருக்கும் அவரது கேலிச் சித்திரங்களும் தவறாமல் இடம்பெற்றன. பரபரப்புக்காக தொடர்ச்சியாக உக்ரைன் விஷயம் எழுதப்பட்டது.

இந்த செய்திகளை எல்லாம் ஜெர்மனியின் உளவுப்படையான கெஸ்டபோ”தான் நேரடியாக வழங்கியது.

இந்த தொடர் பிரசாரத்தின் மூலம் உலக அரங்கில் ஒரு பொதுக்கருத்தை சோவியத்துக்கு எதிராக திருப்புவதில் நாஜிக்கள் ஹெர்ஸ்டின் உதவியால் வெற்றியும் பெற்றார்கள்.

"ஸ்டாலின் உக்ரைன் மக்களை கொன்ற சர்வாதிகாரி என்ற பிம்பம் இப்படித்தான் கட்டமைக்கப்பட்டது.

ஆனால், இவை எல்லா எவ்வளவு பெரிய பொய்கள் என்பதை கனடா நாட்டு பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட உலகுக்கு அம்பலப் படுத்தினார்.

ராபர்ட் கான்குவெஸ்ட கீார்ஜ் ஆர்வெல், இஸ்லர் பெட்ரண்ட் ரஸ்ஸல், சோல்சனிட்சன் எல்லாம் யார்?

இவர்கள் அனைவரும் பெரிய மனிதர்கள். மாபெரும் அறிவாளிகள். பேராசிரியர்கள். இது இவர்களின் ஒரு பக்கம் தான். இன்னொரு பக்கம் என்ன தெரியுமா? இவர்கள் அத்தனை பேரும் கூலிக்காக எழுதியவர்கள்!

ராபர்ட் கான்குவெஸ்ட், கலிபோரினிய பல்கலைக்கழகத்தின பேராசியரியர். இவர் ஸ்டாலின் பற்றியும் சோவியத் பற்றியும் பல புத்தங்களை எழுதியுள்ளார். இரண்டாம் உலகப்போர் பற்றியும், ஸ்டாலின் எல்லா பொய் கதைகளையும் உருவாக்கியதில் இவர்தான் முதன்மையான முக்கியமான நபர்.

உக்ரைன் படுகொலைகள், பட்டினிச்சாவுகளை 60 லட்சம் என்றார் ஹெரஸ்ட். இவரோ தனது கணக்குக்கு அதை 150 லட்சமாக உயர்த்திக் கொண்டார்.

சோவியத் மீது படையெடுத்து சாராகும்படி அமெரிக்க மக்களை அறைகூவி அழைக்கும் தனது தேர்தல் பிரசாரத்துக்கு உரை எழுதித் தரும்படி 1988ல் ரீகன் இவரிடம்தான் கேட்டுக் கொண்டார் அதன் பிறகுதான் கான்குவெஸ்டின் முழுகைக் கூலித்தனமும் வெளிச்சத்துக்கு வந்தது. அத்துடன் ராபர்ட் கான்குவெஸ்ட், இங்கிலாந்தின் ரகசிய உளவுப்படையின் ஒர் அங்கமான ‘பிரசாரத்துறை’யின் ஏஜென்ட் என்பதை பிரெஞ்சு பத்திரிகையான ‘கார்டியன்’ அம்பலப்படுத்தியது.

ஜார்ஜ் ஆர்வெல், கீஸ்லர், பெட்ரண்ட் ரஸ்ஸல் ஆகியோரும் சோவியத்துக்கு எதிராகவும் தோழர் ஸ்டாலினுக்கு எதிராகவும் பொய்களை மட்டுமே எழுதி வந்தவர்கள்தான். இவர்கள் அனைவரும் கம்யூனிச எதிர்ப்பு பிரசாரம் செய்வதற்காக பிரிட்டிஷ் உளவுத்துறையிடமிருந்து பணம் பெற்றிருக்கிறார்கள். இந்த உண்மை 1996ல் பிரிட்டிஷ் ஆவணக்காப்பகத்தை திறந்து காட்டியபோது வெளிச்சத்துக்கு வந்தது.

சோல்சனிட்சன் யார்? எழுத்தாளர்தான். சோவியத்தையும், ஸ்டாலினையும் மிக முர்க்கத்தனமாக எதிர்த்தவர்தான். இவரது முகமூடி கிழிந்தது வியட்நாம் போர் சமயத்தில்தான்.

வியட்நாமில் நுழைந்து, அங்கே வாங்கிய அடியால் வாலை சுருட்டிக்கொண்டு மீண்டும் தன் நாட்டுக்கே அமெரிக்க ராணுவ வீரர்கள் திரும்பியபோது – உலகமே இந்தக் காட்சியை மகிழ்ச்சியோடு பார்த்தது. அப்போது இந்த சோல்சனிட்சன் என்ன சொன்னார் தெரியுமா? அமெரிக்கா மீண்டும் வியட்நாமை தாக்க வேண்டும்!

இத்துடன் நிறுத்தினாரா..? இல்லை. அமெரிக்காவை விட ஐந்து மடங்கு அதிகமான பீரங்கி மற்றும் போர் விமானங்களை சோவியத் யூனியன் வைத்திருக்கிறது. அதே போல அணு ஆயுதங்களையும் பதுக்கியிருக்கிறது. அதாவது அமெரிக்காவில் இருப்பதை விட மூன்று அல்லது ஐந்து மடங்கு அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சோவியத் யூனியன் வைத்துள்ளது. எனவே அதற்கு எதிராக அமெரிக்கா தனது ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும்.

இப்படியெல்லாம் எழுதியவர் சாட்சாத் இந்த சோல்சனிட்சன் தான். இது போன்ற கைக்கூலித் தனங்களுக்காகத்தான் சோல்சனிட்சனுக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

இதுதான் ஸ்டாலின் குறித்த "உண்மைகளை புட்டுப்புட்டு வைத்த மேற்கத்திய எழுத்தாளர்கள், அறிவுஜீவிகளின் லட்சணம். இது தெரியாமல் இவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதை அப்படியே மொழியாக்கம் செய்து தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் கம்யூனிசத்துக்கு எதிரானவர்கள் வெளியிடுகிறார்கள். அவதூறை பரப்புகிறார்கள்.”

No comments:

Post a Comment