“காரல் மார்க்சையும் கம்யூனிசத்தையும் பற்றி ஆராய்வதில் நான் நிறைய நேரத்தைச் செலவிட்டுள்ளேன். அதேசமயம் புத்தரின் தம்மத்தைப் படிப்பதிலும் ஆழ்ந்து ஈடுபட்டுள்ளேன். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு ஒரு திட்டவட்டமான தீர்மானமான முடிவுக்கு வந்தேன்.”- அம்பேத்கர்
|
“மார்க்சிஸ்டுகள் தங்களுடைய விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் புத்தரைப் படித்தறிந்து அவர் எந்தக் கொள்கைகளைப் பற்றி நின்றார் என்பதைப் புரிந்து கொள்வார்களேயானால் அவர்களின் கருத்தோட்டத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும் என்று நான் உணர்கிறேன்.”
- அம்பேத்கர்
|
புத்தர், மார்க்ஸ் ஒப்பீடு
வேடிக்கையானதாகக் கருதப்படலாம் ஆனால் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை என்று பாபாசாகேப்
டாக்டர் அம்பேத்கர் தமது “புத்தரா, காரல் மார்க்சா?”
என்ற நூலின் தொடக்கத்தில் எழுதியிருக்கிறார். இருவருக்கும் இடைவெளி 2381 ஆண்டுகள் என்று
அவரே குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தத்துவம் தோன்றிய போது
இருந்த நிலையிலேயே நிற்காது அது காலந்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கும். இங்கே வளர்ச்சி
என்பது எதிர்நிலையான திரிபை கூறவில்லை, அடிப்படையில் ஊன்றி நின்றவகையில் ஏற்படுகிற
வளர்ச்சியையே குறிக்கப்படுகிறது. இது எந்தக் கோட்பாடுக்கும் பொருந்தும். அனைத்துத்
தத்துவப் போக்கிற்கும், அனைத்து மதச் சிந்தனைக்கும் பொருந்தக்கூடியதே. மாற்றம் அடைவதே
காலத்தில் நிலைத்திருக்கும், மாறாதது மறைந்து போகும்.
மார்க்சியத்தைக் குறிப்பிட்டு
சொல்ல வேண்டுமானால் லெனினியத்தைக் கூறலாம். மார்க்ஸ், எங்கெல்சை தொடர்ந்து வருகிற லெனின்
மார்க்சியத்தின் அடிப்படையைச் சிதையா வகையில் ஏகாதிபத்திய காலத்திய மார்க்சியமாக லெனினியத்தை
வளர்த்தெடுத்தார். வளர வேண்டியது வளர்த்தெடுக்க வேண்டியது எப்போதும் வளர்ச்சியூடே வளர்ந்த
வண்ணமாய் இருக்கும்.
இந்நிலையில் 2300 ஆண்டுகளுக்கு
முன்பு தோன்றிய புத்தத்தை மார்க்சியத்தோடு சமநிலையில் ஒப்பிட முடியாது. முந்தியதற்கும்
பிந்தியதற்கும் உள்ள கால இடைவெளியை மனதில் கொண்டே ஒப்பிட வேண்டும். அதைவிடப் பெரிய
சிக்கல் புத்தத்தில் இருக்கிறது, ஆதி புத்தரின் சிந்தனைக்கும் இன்று புத்தரின் பேரால்
கிடைக்கும் சிந்தனை தொகுப்பிற்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தால் இரண்டும் எதிர்நிலையிலேயே
இருக்கிறது. கிடைத்திருக்கின்ற தொகுப்பில் ஆதிபுத்தரின் கருத்து 5 விழுக்காடு கூடத்
தேறாது என்பதே உண்மை. அதுவும் சிதைக்கப்பட்ட வடிவில். புனிதத்தை உடைத்த புத்தரை, புனிதராக்கிய
புத்தமே நம்மிடம் இருக்கிறது. அது ஹினயானமாக இருந்தாலும் சரி மகாயானமாக இருந்தாலும்
சரி. ஆதி புத்தரின் கருத்தை சலித்து எடுப்பது மிகவும் கடினமானது.
அம்பேத்கர் காட்டுகிற புத்தர்
இன்னும் புதிய கதைகளை இணைத்த புத்தராகக் காட்சியளிக்கிறார். “புத்தரும் அவரது தம்மமும்”
என்ற நூலில் காணப்படுபவை திரிபிடகத்தில் எங்கிருந்த எடுக்கப்பட்டவை, தம்மால் எழுதப்பட்டது
எவை என்பதைச் சுட்டிக்காட்டவில்லை.
புனிதத்தை ஒதுக்கிய, பகுத்தறிவு
புத்தத்தோடு, கோட்பாடு முறையில் மார்க்சிய தத்துவத்தின் அடிப்படைகள் தொடர்புடையது.
இந்திய தத்துவங்களில் உலகாயதத்தோடு மட்டுமல்லாது, வைசேஷிக அணுக்கோட்பாடோடும், அதன்
தர்க்கத்தோடும், மிமாம்சையின் நாத்திகக் கருத்தோடும், சாங்கியத்தின் தொடக்க காலத் தத்துவத்தோடும்,
ஆதி புத்தரோடும், சமணத்தின் நாத்திகக் கருத்தோடும் தொடர்புடையதே. பழைய கோட்பாடுகளின்
தொடர்ச்சியாக மார்க்சிய தத்துவத்தைப் பார்க்கலாம். இன்றைய மார்க்சிய தத்துவம் புதிய
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளோடு இணைந்து காணப்படுகிறது.
“புத்தரா காரல் மார்க்சா?” என்ற கட்டுரையில் அம்பேத்கர்
குறிப்பிடுகிற புத்தத்தோடே இங்கே விவாதிக்கலாம். புத்தரையும் மார்க்சையும் கற்ற வகையில்
ஒப்பீடு செய்வதாக அம்பேத்கர் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். மேலும் கூறுகிறார்,
“ஒரு மார்க்சிஸ்ட் புத்தரிடம் கற்றுக் கொள்வதற்கு என்ன இருக்கிறது? புத்தர் ஒரு மார்க்சியவாதிகளுக்கு
என்ன கற்பிக்க முடியும்?” என்றுதான் கேட்கிறார். இந்த இரண்டு கேள்வியும் ஒன்று தானே,
இந்தக் கூறியதுகூறல் என்ன சொல்கிறது என்றால் மார்க்சியத்திடம் இருந்து புத்தம் கற்றுக்
கொள்வதற்கு ஒன்றும் இல்லை என்பதே. இது உண்மையா என்பதை ஆராய்வோம்.
இச்சிறுகட்டுரை எட்டு உட்தலைப்புகளில்
எழுதப்பட்டுள்ளது, 1. புத்தரின் கோட்பாடுகள், 2. மார்க்சின் மூலக்கோட்பாடுகள், 3. மார்க்சியக்
கோட்பாடுகளில் மிஞ்சியிருப்பது, 4. புத்தர் காரல்மார்க்ஸ் ஒப்பீடு, 5. வழி வகைகள்.
6. வழிவகைகள் மதிப்பீடு, 7. எவருடைய வழிவகைகள் அதிகம் பலன் தரக்கூடியவை, 8. அரசு உதிர்ந்து
போதல்.
முதல் உட்தலைப்பில், புத்தரின் கோட்பாடாக
அம்பேத்கர் இருபத்தைந்துக் குறிப்புகளைத் தருகிறார். அதில் விவாதத்திற்கு இங்கே எடுத்துக்
கொள்வதை மட்டும் தொகுப்போம்.
1) ஒரு சுதந்திரமான சமூகத்திற்கு
மதம் அவசியமாகிறது. 7) உண்மையான மதம் மனிதர் தம் உள்ளத்தேயன்றிச் சாத்திரங்களில் இல்லை.
8) மனிதனும், ஒழுக்கமுமே மதத்தின் மையமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மதம் கொடிய
மூடநம்பிக்கையாகவிடும். 9) ஒழுக்கம் வாழ்க்கையின் இலட்சியமாக இருந்துவிட்டாமல் மட்டும்
போதாது. கடவுள் என்பது இல்லையாதலின், ஒழுக்கமே வாழ்க்கையின் சட்டமாக வேண்டும். 10)
மதத்தின் பணி உலகை மாற்றியமைத்து அதை மகிழ்ச்சிக்குரியதாய் ஆக்குவதாக இருக்க வேண்டுமேயன்றி,
அதன் தொடக்கத்தையும் முடிவையும் விளக்கிக் கொண்டிருப்பதாக இருக்கக்கூடாது. 11) உலகின்
துன்பங்களுக்குக் காரணம் ஆர்வநலன்களின் மோதலே ஆதலால், அவற்றிற்குத் தீர்வு காண்பதற்கான
ஒரே வழி அஷ்டாங்க மார்க்கத்தைப் பின்பற்றுவதே ஆகும். 12) தனி மனிதனின் தனிவுடைமை என்பது
ஒரு வர்க்கத்தாருக்கு அதிகாரத்தையும் மற்றொரு வர்க்கத்தாருக்கு துன்பத்தையும் தருகிறது.
13) துன்பத்திற்கான காரணத்தைக் கண்டு நீக்குவதன் மூலம் உருவாகும் சூழல் சமூக நன்மைக்கு
அவசியமாகின்றது. 14) அனைத்து மாந்தர்களும் சமமானவர்கள். 17) மயித்ரி அல்லது அனைவரிடமும்
கூட்டுணர்வுடன் இருப்பது என்பதை எப்போதும் கைவிடலாகாது. பகைவரிடமும் காட்ட வேண்டிய
பண்பு இது. 20) எதுவுமே தவறற்றது அன்று. அனைத்தும் மாற்றத்திற்கு உரியமையே. அனைத்தும்
விசாரணைக்கும் பரிசோதனைக்கும் உரியவையே. 24.உண்மைக்காகவும் நீதிக்காகவும் நடைபெறும்
போர்களைத் தவிரப் பிற போர்கள் யாவும் தவறானவையே.
இந்தப் புத்தரின் கோட்பாடு
மிகப்பழமையானது என்ற போதிலும் எத்துணைப் புத்தம் புதியதாக இருக்கிறது என்று அம்பேத்கர்
வியப்படைகிறார்.
இரண்டாவது உட்தலைப்பில், மார்க்சின் கோட்பாட்டைத் தொகுத்தளிக்கிறார்.
அவ்வாறு செய்திடும்போது அம்பேத்கர் தொடக்கத்தில், நவீன சோஷலிசத்தின் தந்தை காரல் மார்க்ஸ்
தான் என்பதில் சந்தேகமில்லை. முதலாளிகளுக்கு எதிராக மார்க்ஸ் இருந்தது போலவே கற்பனாவாத
சோஷலிசவாதிகளுக்கு எதிராகவும் இருந்தார். இருவரையும் வெறுத்தார் என்கிறார். ஆனால் மார்க்ஸ்
யாரையும் வெறுக்கவில்லை, முதலாளித்துவத்தின் சுரண்டலை அம்பலப்படுத்தினார், அதனை எதிர்த்து
போராடினார், கற்பனாவாத சோஷலிசவாதிகளை விஞ்ஞானச் சோஷலிசத்தின் அடிப்படையில் விமர்சித்தார்
என்பதே உண்மை. மார்க்ஸ் யாரையும் வெறுக்கவும் ஒதுக்கவும் இல்லை.
“விஞ்ஞானச் சோஷலிசம் எனக்
காரல் மார்க்ஸ் கருதியது, தன்னுடைய சோஷலிசக் கோட்பாடு தவிர்க்க முடியாதது, தப்பிக்க
முடியாதது என்பதோடு, அதை நோக்கியே சமூகம் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதோடு அந்த
முன்னேற்றத்தை எதனாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதுமாகும்.” இதனை மார்க்சியக்
கோட்பாட்டில் முதன்மையானது என்று கூறிவிட்டே அம்பேத்கர் மற்றதைப் பட்டியல் இடுகிறார்.
புத்தரின் கோட்பாட்டைத்
தொகுத்தது போலவே மார்க்சின் அடிப்படைக் கோட்பாடாகப் பத்தைக் குறிப்பிடுகிறார். அதில்
விவாதத்திற்கு உள்ளதைத் தொகுப்போம்.
1) தத்துவத்தின் நோக்கம்
உலகத்தை மறுகட்டமைப்பு செய்வதே அல்லாமல் பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கிக் கொண்டிருப்பதன்று.
8) உழைக்கும் மக்களிடையே பெருகிக் கொண்டேவரும் இந்த வறுமை, அவர்களிடையே புரட்சிகர உணர்வைத்
தோற்றுவித்து, வர்க்க முரண்பாட்டை வர்க்க மோதலாக மாற்றுகிறது. 9) உடைமையாளர்களின் எண்ணிக்கையை
உழைக்கும் மக்களின் எண்ணிக்கை விஞ்சுவதால் உழைப்போர் அரசைக் கைப்பற்றித் தங்கள் ஆட்சியான
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவர். 10) இந்த உண்மைகள் தடுக்க முடியாதவையாதலால்
சோஷலிசம் தவிர்க்க முடியாததாகும்.
மூன்றாம் உட்தலைப்பில், மார்க்சியக் கோட்பாட்டில் மிஞ்சியிருப்பதைக்
கூறுகிறார். மார்க்சின் கோட்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெளிப்பட்டது,
அப்போதிலிருந்து அது விமர்சனத்துக்கு உள்ளாகியது, அதன் விளைவாக மார்க்ஸ் தோற்றுவித்த
சித்தாந்த கட்டமைப்பின் பல பகுதிகள் உடைந்து நொறுங்கிப் போய்விட்டன என்கிறார்.
அம்பேத்கர் இங்கே மார்க்சியத்தை
விமர்சித்ததையும் அதன் வழியில் உடைந்து போனதையும் குறிப்பிட்டது போல் புத்த கோட்பாட்டைப்
பற்றி விமர்சித்தவர்களைப் பற்றியும் அதன் வீழ்ச்சியைப் பற்றியும் இங்கே எதனையும் கூறவில்லை
என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மார்க்ஸ் தமது சோஷலிசம்
தவிர்க்க முடியாமல் நிகழ்ந்தே தீரும் என்று கூறியதை, மக்கள் முயற்சியில்லாமல் நிகழும்
என்று அம்பேத்கர் விளக்கப்படுத்திக் கொண்டுள்ளார். அதனால் தான் 1917ஆம் ஆண்டு ருஷ்யாவில்
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், மனித முயற்சி இல்லாமல், தவிர்க்க முடியாத ஒன்றாக நடைபெறவில்லை.
அங்குத் திட்டமிடப்பட்ட புரட்சி நடந்தது, வன்முறையும், ரத்தமும் சிந்தப்பட்டது என்று
ருஷ்யப் புரட்சியைப் பற்றி அம்பேத்கர் கூறியுள்ளார். அத்தோடும், உலகின் மீதிப்பகுதி,
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் சேர்த்துச்
சொல்லியுள்ளார்.
மக்களின் நடவடிக்கையினால்
ருஷ்யப் புரட்சி நடைபெற்றதால், சோஷலிசம் தவிர்க்க முடியாதது என்ற மார்க்சியக் கருத்து
பொதுவான முறையில் பொய்த்துப் போனது. அதுமட்டுமல்லாது பட்டியலில் கூறப்பட்ட பலவும் தர்க்கவாதத்தின்
மூலமும் அனுபவத்தின் மூலமும் தகர்க்கப்பட்டுவிட்டதாக அம்பேத்கர் கூறியுள்ளார்.
இவைகள் மார்க்சியத்தின்
மீதான தொடர்ந்து வரும் விமர்சனங்களே ஆகும். அந்த விமர்சனங்களையே அம்பேத்கர் ஏற்றுக்
கொண்டுள்ளார். இதற்கு பல்லோரால் கொடுக்கப்பட்ட பதிலை கணக்கில் எடுத்துக் கொண்டதாகத்
தெரியவில்லை. மேலும் கூறுகிறார், “உழைப்பாளர்கள் படிப்படியாக வறுமையில் ஆழந்து வந்திருக்கிறார்கள்
என்று இப்போது யாரும் ஏற்பதில்லை. இதுவே மற்ற கருத்துக்களுக்கும் பொருந்தும்”. ஆக மார்க்சியத்தின்
மீதான விமர்சனங்களை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளார்.
மார்க்சியத்தில் மீதியிருப்பது
அணைந்துபோன நெருப்பின் மிச்சமாக அம்பேத்கர் நான்கை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.
1) தத்துவ அறிஞர்களின்
பணி உலகை மறுகட்டமைக்கப்பதே ஆகும். உலகின் தோற்றத்தை விளக்குவதில் காலத்தை வீணாக்குவதல்ல.
2) ஒரு வர்க்கத்துக்கும்
இன்னொரு வர்க்கத்துக்கும் இடையே நலன்களில் முரண்பாடு உள்ளது.
3) உடைமைகள்
தனிநபர்களுக்குச் சொந்தமாயிருந்தால் ஒரு வர்க்கத்துக்கு அதிகாரமும், மற்றொரு வாக்கத்துக்கு
அது சுரண்டப்படுவதன் மூலம் துன்பமும் ஏற்படுகின்றன.
4) சமூகத்தின்
நன்மைக்காகத் தனியார் உடைமையை ஒழிப்பதன் மூலம் துன்பத்தை நீக்குவது அவசியம்.
நான்காம் உட்தலைப்பில், மார்க்சியக் கோட்பாட்டில் மிஞ்சியிருக்கும்
நம்பிக்கைகளை எடுத்துக் கொண்டு புத்தரையும் மார்க்சையும் ஒப்பிடுகிறார். முதலாவது, உலகின் தோற்றத்தை விளக்குவதல்ல,
உலகை மறுகட்டமைப்பதே தத்துவவாதிகளின் பணி என்பதாகும். இந்தப் பொருளில் மார்க்ஸ் கூறவில்லை.
"தத்துவவாதிகள்
உலகத்தைப் பல்வேறு வழிகளில் விளக்கப்படுத்தி (interpreted) மட்டுமே உள்ளனர், ஆனாலும், விஷயம் என்னவோ அதை மாற்றி
(change) அமைப்பதாகும்." -
மார்க்ஸ் கூறியது இதுவே.
உலகில் முரண்பாடுகள் ஏன்
காணப்படுகிறது என்பது பற்றி விளக்கத்தையே மார்க்சுக்கு முன்பான தத்துவப் போக்குகள்
அளித்தது. உலகத்தை அறிந்து மாற்றுவதே தத்துவத்தின் பணி என்கிறது இந்த ஆய்வுரை. கருத்துமுதல்வாதமும்,
மதமும் பிரபஞ்சப் படைப்பைப் பற்றிக் கூறியிருக்கிற படைப்புக் கோட்பாட்டை மார்க்சிய
இயக்கவியல் பொருள்முதல்வாதம் மறுக்கிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாதம் உலகம், சமூகம்,
சிந்தனை ஆகியவற்றின் தோற்றத்தையும், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியோடு அவைகள் மாறுவதையும்
சுட்டிக்காட்டியுள்ளது.
இரண்டாவது, வர்க்கத்துக்கு இடையேயான முரண்பாடு. புத்தர் பிறந்த
போது வர்க்கம் தோற்றம் பெற்றுள்ளது, அவ்வளவே. இது அந்தக் காலத்தில் தெளிவாக வெளிப்பட்டிருக்க
வாய்ப்பில்லை. இருந்தாலும் அம்பேத்கர் அச் சமூகத்தில் வர்க்க வெளிப்பாட்டைத் தேடி,
புத்தருக்கும் ஒரு மன்னருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலில் கண்டு பிடித்துள்ளார்.
“..மன்னர்களுக்கு
இடையிலும், பிரபுக்களுக்கு இடையிலும், பிராமணர்களுக்கு இடையிலும், இல்வாழ்வோருக்கு
இடையேயும், தாய்க்கும் மகனுக்கும் இடையயேயும், மகனுக்கும் தந்தைக்கும் இடையேயும், சகோதரனுக்கும்
சகோதரிக்கும் இடையேயும், துணையும் (companion) துணைக்கு இடையேயும் எப்போதும்
போராட்டம் (strife) இருக்கிறது.”
இது எந்தத் தனிப்பட்ட வர்க்கத்திற்கும்
மற்றொரு வர்க்கத்திற்குமான போராட்டம் கிடையாது. மன்னர்களுக்கு இடையேயும், பிரபுக்களுக்கு
இடையேயும் என்று தான் கூறப்படுகிறது. இன்றைய நிலையில் கூறினால், முதலாளிகளுக்கு இடையிலும்,
தொழிலாளிகளுக்கு இடையிலும் என்று தான் தொடர்புபடுத்த முடியும். அதாவது முதலாளிக்கு
இடையே நடக்கின்ற பிரச்சினை, அதே போலத் தொழிலாளிக்கு இடையே நடக்கின்ற பிரச்சினை, இதனை
வர்க்க முரண்பாடாகக் கருதமுடியாது, இது ஓரே வர்க்கத்துக்குள் ஏற்படுகிற முரண்பாடு ஆகும்.
மூன்றாவதாக ஒப்பிடுவது, தனியுடைமைக்குத் தொடர்புடையதல்ல. இது
புத்தருடைய கருத்தல்ல அவருடன் உரையாடிய மன்னரது கூற்று.
தனியுடைமையினால் ஏற்படுகிற
சுரண்டலோடு, புத்தர் கூறுகிற துக்கத்தை இணைத்துப் பேசுகிறார். புத்தர் குறிப்பிடுகிற
துக்கத்திற்கும் மார்க்ஸ் கூறிப்பிடுகிற சுரண்டலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
விரும்பிய ஒன்று மறையும் போது ஏற்படுகின்ற துக்கத்திற்கும் தனியுடைமையினால் நடைபெறுகிற
சுரண்டலுக்கும் எந்த வகையிலும் தொடர்பு படுத்த முடியாது.
சமூகத்தின் நன்மைக்காகத்
தனியார் உடைமையை ஒழிப்பது என்று நான்காவதாகக்
குறிப்பிடுகிறார். சமூகத்தின் நன்மை என்று எந்தத் தனிநபரின் அல்லது வர்க்கத்தின் அல்லது
தனிக் குறுங்குழுவின் விருப்பத்தின் அடிப்படையில் தனியார் உடைமை ஒழிப்பைப் பற்றி மார்க்சியம்
பேசவில்லை. முதலாளித்துவ உள்முரண்பாட்டால் தனியுடைமை தவிர்க்க முடியாமல் உழைக்கும்
மக்களால் தூக்கி எறியப்படுகிறது என்றே மார்க்ஸ் கூறுகிறார்.
“….பழைய சமூகத்தை
அடி முதல் நுனிவரை போதுமான அளவு சிதைத்ததும், உழைப்பாளிகள் பாட்டாளிகளாகவும் அவர்களது
உழைப்புச் சாதனங்கள் மூலதனமாகவும் மாறியதும், முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை சொந்தக்
காலில் நிற்கத் தொடங்கியதும், உழைப்பை மேலும் சமூகமயமாக்குதல் நிலத்தையும் ஏனைய உற்பத்திச் சாதனங்களையும் சமூக அளவில்
பயன்படக்கூடிய, எனவே பொதுவிலான உற்பத்திச்
சாதனங்களாக மேலும் மாற்றுதல், அதே போல் தனிச் சொத்துடைமையாளர்களின் உடைமையை மேலும்
பறித்தல் ஆகியவை புது வடிவெடுக்கின்றன. இப்போது உடைமைப் பறிப்புக்கு ஆளாக வேண்டியது
சொந்தத்துக்குப் பாடுபடும் உழைப்பாளியல்ல, பல உழைப்பாளிகளைச் சுரண்டும் முதலாளியே.
இந்த உடைமைப் பறிப்பை முதலாளித்துவப் பொருளுற்பத்தியினது
உள்ளார்ந்த விதிகளின் செயற்பாடே, மூலதனத்தின் மையப்பாடே நிறைவேற்றுகிறது.
எப்போதுமே ஒரு
முதலாளி பல முதலாளிகளை விழுங்கி விடுகிறார். இந்த மையப்பாட்டுன் கூடவே, அதாவது சில
முதலாளிகள் பல முதலாளிகளை இவ்வாறு உடைமைப் பறிப்புக்கு ஆளாக்குவதுடன் கூடவே, உழைப்பு
நிகழ்முறையின் கூட்டு-வேலை வடிவமும், விஞ்ஞானத்தின் உணர்வுபூர்வமான தொழில் நுட்பப்
பிரயோகமும், நிலத்தின் முறைவழிச் சாகுபடியும், உழைப்புக் கருவிகளைப் பொதுவில் மட்டுமே
பயன்படுத்த கூடியவையாக மாற்றுவதும், எல்லா
உற்பத்திச் சாதனங்களையும் ஒன்றிணைந்த, சமூகமயமான உழைப்பின் உற்பத்திச் சாதனங்களாக உபயோகிப்பதன்
மூலம் அவற்றைச் சிக்கனப்படுத்துவதும், உலகச் சந்தை என்னும் வலையில் எல்லா மக்கள்
சமூகங்களையும் சிக்க வைப்பதும். இத்துடன் முதலாளித்துவ ஆளுகையின் சர்வதேசத் தன்மையும்
மேன்மேலும் அதிக அளவில் வளர்கின்றன. இந்த மாற்ற நிகழ்முறையின் அனுகூலங்களை எல்லாம்
அபகரித்து ஏகபோகமாக்கிக் கொள்ளும் முதலாளித்துவத் திமிங்கலங்களின் தொகை தொடர்ந்து குறைந்து
செல்வதோடு கூடவே, துன்ப துயரமும் ஒடுக்குமுறையும் அடிமைத்தனமும் சீரழிவும் சுரண்டலும்
பெருகிச் செல்கின்றன. ஆனால், தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பும் வளர்ந்து செல்கிறது,
இவ்வர்க்கம் தொகையில் தொடர்ந்து பெருகுகிறது.
முதலாளித்துவப்
பொருளுற்பத்தி நிகழ்முறையின் இயங்கமைப்பே இவ்வர்க்கத்தைக் கட்டுப்பாடு மிக்கதாக்கி,
ஒன்றுபடுத்தி, அமைப்பு வழியில் திரளச் செய்கிறது. மூலதனத்தின் ஏகபோகம், அதனோடு சேர்ந்தும்
அதன் ஆளுமையிலும் பிறந்து வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகி விடுகிறது.
முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும்
உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு
ஒவ்வாததாகி விடும் நிலை வருகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத்
தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது.
…..
முதலாவது மாற்றம்
உடைமைப் பறிப்பாளர் ஒரு சிலர் மக்கட் பெருந்திரளின் உடைமை பறிப்பதாகும். இரண்டாவது
மாற்றம் மக்கட் பெருந்திரள் உடைமையாளர் ஒரு சிலரின் உடைமையப் பறிப்பதாகும்.” (மூலதனம்
- பக்கம் 1025-1027)
நான்காவதான தனியுடைமை ஒழிப்பிற்கு, பிக்குகளுக்கான சங்க விதிகளில்
உள்ளதைக் குறிப்பிடுகிறார். இது பிக்குகளுக்கான சங்க விதியே தவிர் சமூகத்தின் தனிடைமையின்
ஒழிப்பல்ல. அதுமட்டுமல்லாது சமூகத்தில் தனியுடைமை நிலவும் போது சங்கத்தில் மட்டும்
தனிவுடைமைப் பேணுவது சாத்தியமல்ல என்பதை இன்றைய புத்த சங்கங்களின் ஆடம்பரத்தைக் கண்டாலே
போதுமானது. ஆனால் அம்பேத்கர் இந்த விதி ருஷ்யாவின் கம்யூனிச் ஆட்சியில் உள்ளவற்றைவிட
மிகவும் கடுமையானது என்கிறார். அம்பேத்கரைப் பொருத்தளவில் புத்தரும் மார்க்சும் கம்யூனிசத்தையே
குறிக்கோளாகக் கொணடுள்ளனர்.
ஐந்தாம் உட்தலைப்பில், கம்யூனிசத்தை அடைவதற்கான இருவரின் வழிவகைகளைக்
கூறுகிறார்.
புத்தரின் வழிவகைகளில் முதலாவதாக,
பஞ்ச சீலங்கள். 1) எந்த உயிரையும் அழிப்பதையும்,
அழிவுக்குக் காரணமாய் இருப்பதையும் தவிர்த்தல், 2) களவு செய்யாமல் தவிர்த்தல் அதாவது,
ஏமாற்றின் மூலமோ வன்முறையின் மூலமோ பிறர் பொருளைத் தனதாக்கிக் கொள்வதையும் தன்னிடம்
வைத்துக் கொள்வதையும் தவிர்த்தல், 3) பொய் உரையாமல் தவிர்த்தல், 4) காமம் தவிர்த்தல்,
5) மது தவிர்த்தல்.
இரண்டாவது வழிகள், எண்வகைப் பாதை (அஷ்டாங்க மார்க்கம்). 1) நல்ல கருத்துக்கள். அதாவது மூட நம்பிக்கைகளிடம்
இருந்து விடுதலை. 2) நல்ல நோக்கங்கள், அறிவும் ஆர்வமுள்ள மனிதனுக்குத் தகுந்தவையான,
உயர்ந்த நோக்கங்கள், 3) நல்ல பேச்சு, அதாவது அன்பும் தெளிவும் உண்மையுடையது, 4) நல்ல
நடத்தை, அதாவது, அமைதியான, நேர்மையான, தூய்மையான நடத்தை, 5) நல்ல வாழ்க்கை வழி, அதாவது
எந்த உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தாதது, 6) நல்ல முயற்சி, அதாவது மற்ற மேலே உள்ள ஏழையும்
விடாமுயற்சியுடன் பின்பற்றுதல், 7) நல்ல மனஉணர்வு, அதாவது, விழிப்பாகவும், செயல் துடிப்புடனும்
இருத்தல், 8) நல்ல சிந்தனை, அதாவது வாழ்க்கையின் ஆழ்ந்த மர்மங்கள் பற்றித் தீவிரமாகச்
சிந்தித்தல்.
இந்த மேன்மையான எண்வகைப்
பாதையின் நோக்கம், உலகில் நன்னெறியின் அரசை நிறுவி அதன் மூலம் உலகிலிருந்து துக்கத்தையும்
மகிழ்வின்மையையும் ஒழிப்பதாகும் என்கிறார் அம்பேத்கர்.
மூன்றாவதாக நிப்பான கோட்பாடு, அதாவது எண்வகைப் பாதையைப்
பின்பற்றும் போது ஏற்படும் இடையூறுகள். இந்த இடையூறுகளில் பத்து முக்கியமானது. 1) மாயை,
2) சந்தேகமும் தீர்மானம் இன்மையும், 3) சடங்குகளின் சக்தியை நம்பியிருத்தல், 4) உடல்
சார்ந்த ஆசைகள், 5) மற்ற மனிதர்களின்பால் தவறான எண்ணம் கொள்ளுதல், 6) பருவுடலுடன் வாழும்
மறுமை வாழ்வு வாழும் ஆசை, 7) பொருட்தன்மையற்ற உலகில் மறுமை வாழ்வு வாழும் ஆசை, 8) கர்வம்,
9) தானே நல்லவன் என்ற எண்ணம், 10) அறியாமையாகும்.
நான்காவது, பரமிதங்களின் கோட்பாடு. அதாவது தினசரி வாழ்க்கையில்
கடைப்பிடித்து நடக்க வேண்டிய பத்து நல்ல ஒழுக்கங்களாகும். 1) அறிவு, 2) சீலம் அதாவது
அறநெறி உணர்வு, 3) உலக இன்பங்களைத் துறத்தல், 4) தானம், 5) வீர்யம் அதாவது நற்முயற்சி,
6) காந்தி அதாவது பொறையுடைமை. வெறுப்பவரை வெறுக்காமல் இருப்பது இதன் சாராம்சம். வெறுப்பினால்
வெறுப்பு தணிவதல்லை. பொறையுடைமைதான் வெறுப்பைத் தணிக்கும், 7) உண்மை, 8) அதிட்டானம்,
அதாவது குறிக்கோளை அடைந்தே தீருவது என்பதில் உறுதி, 9) மேத்தம், அதாவது பகைவர், நண்பர்,
விலங்கு, மனிதன் ஆகிய எல்லா உயிர்களிடத்தும் செலுத்த வேண்டிய அன்பு உணர்ச்சி, 10) பற்றின்மை.
இந்த நான்கும் புத்தர் ஞானம்
பெற்றதன் விளைவாக உலகின் துக்கத்தையும் துயரத்தைவும் (sorrow and misery) ஒழிப்பதற்கு உபதேசித்த நற்செய்தியாகும்,
இதனைக் கொண்டே நன்நெறி அரசை நிறுவப்படும்.
இங்கே புத்தரின் கருத்தாகக்
கூறப்பட்டவை அனைத்தும் அறக் கருத்தாகவும், நன்நெறிக் கோட்பாடாகவும் இருக்கிறது. அதுவும்
அன்றைய உலகில் காணப்படும் துயருக்குத் தேவையாகக் கருதிய நன்நெறிகள். வர்க்கமாக முதிர்ந்து
முரண்பட்டுக் காணப்படும் இன்றைய சமூகத்திற்கு, இந்த அறக் கருத்துக்களும் நன்நெறிகளும்
எந்தளவுக்கு நன்நெறியாக! இருக்கும்.
அடுத்துக் கம்யூனிஸ்டுகள்
பின்பற்றும் வழிவகைகளை அம்பேத்கர் சுருக்கமாக முன்வைக்கிறார். 1) வன்முறை, 2) பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்.
முதலாவது இப்போதுள்ள முறையை உடைப்பதற்கு வன்முறைக்குக் குறைந்த எதுவும் போதுமானது ஆகாது
என்பதாக அம்பேத்கர் கூறுகிறார். அடுத்துப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், புதிய முறைமை
தொடர்ந்து செயற்படுவதற்கு இதற்குக் குறைந்த எதுவும் போதுமானதாகாது.
முதலாவது கம்யூனிசத்தை வன்முறையானதாகக்
கருதுகிறது. இரண்டாவது சரியானது. ஆனால் வேறுபொருளில் கூறப்பட்டுள்ளது.
இவைகளே அம்பேத்கர் கூறும்
புத்தருக்கும் மார்க்சும் இடையே காணப்படும் ஒற்றுமைகளும் வேற்றுமைகளுமாகும். குறிக்கோள்
இருவருக்கும் பொதுவானதாகும். அம்பேத்கரைப் பொருத்தளவில் புத்தரும் மார்க்சும் கம்யூனிசத்தையே
குறிக்கோளாகக் கொணடுள்ளனர். வழிவகைகள் மட்டுமே வேறுபடுகிறது.
ஆறாவது உட்தலைப்பில், இருவரின் வழிவகைகளை மதிப்பீடு செய்கிறார்.
யாருடைய வழிவகைகள் மேலானவை என்றும் நீண்ட காலத்திற்கு நிலைத்துப் பயன்தரக் கூடியவை
என்பதைத் தெளிவுபடுத்துவது அவசியமானது என்கிறார்.
முதலில் வன்முறையை எடுத்துக் கொள்கிறார். கம்யூனிஸ்டுகளின்
கருத்தாக அவர் கூறுகிறார், வன்முறையை முற்றிலும் அகற்றிவிட முடியாது, கம்யூனிசம் அல்லாத
நாடுகளிலும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகின்றன. இது வன்முறையாகாதா? கம்யூனிசமல்லாத
நாடுகள் மீது போர் தொடுக்கின்றன, அதில் பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள்,
இது வன்முறை அல்லவா? உடைமைகள் தனி ஒருவனுக்குச் சொந்தமாய் இருக்கும் காரணத்தால் மற்றமனிதர்கள்
துன்பத்துக்கு உள்ளாகிறார்கள் என்றால் அந்த உடைமைகளின் சொந்தக்காரனை ஏன் கொல்லக்கூடாது?
தனி உடைமை ஏன் புனிதமானதாகக் கருதப்பட வேண்டும் என்பதற்குக் காரணமே இல்லை என்று கம்யூனிஸ்டுகள்
கருதுவதாக அம்பேத்கர் புரிந்து வைத்திருக்கிறார்.
புத்தர் வன்முறையை எதிர்த்தார்,
ஆனால் அவர் நீதியை ஆதரித்தார், நீதிக்கு அவசியமாய் இருந்தால் வன்முறையைப் பயன்படுத்துவதை
அவர் அனுமதித்தார் என்கிறார் அம்பேத்கர். அதுமட்டுமல்லாது புத்தரின் அகிம்சை, ஜைன மதத்தை
நிறுவிய மகாவீரரின் அகிம்சையைப் போல அவ்வளவு முழுமையானது கிடையாது. அதே போல் கம்யூனிஸ்டுகள்
அகிம்சையை முற்றமுழுமையான கோட்பாடாகக் கருதுகின்றனர். ஆனால் புத்தர் இதற்கு முரணான
கோட்பாட்டைக் கொண்டுள்ளார்.
அதாவது, அவசியமாக இருந்தால்
புத்தர் வன்முறையைப் பயன்படுத்த அனுமதித்தார். ஜைன மதத் தலைவரான மகாவீரர் எந்தவித வன்முறைக்கும்
இடம் கொடுக்காத அகிம்சைக் கோட்பாட்டைக் கொண்டுள்ளார். கம்யூனிஸ்டுகளும் அகிம்சையை முற்றமுழுமையானதாகக்
கருதிக் கொண்டுள்ளனர். புத்தரின் கருத்து இதற்கு முரணானது என்கிறார் அம்பேத்கர். அதாவது
புத்தரின் அகிம்சை நீக்குபோக்குடையது, நீதிக்குத் தேவைப்படுகிற வன்முறையைப் புத்தர்
ஆதரித்தார். அவர் பலத்தை சக்தியாகப் பயன்படுத்துவதை மட்டுமே அனுமதித்தார்.
அடுத்து, சர்வாதிகாரம், புத்தர் அதைச் சற்றும் விரும்பவில்லை.
அவர் ஜனநாயகவாதியாகப் பிறந்தார் ஜனநாயகவாதியாகவே இறந்தார் என்கிறார் அம்பேத்கர். மேலும்
புத்த சங்கம் மிகவும் ஜனநாயக முறையிலான அமைப்பாக இருந்தது, புத்தர் ஒருபோதும் சர்வாதிகாரியாக
இருக்கவில்லை.
புத்தருடைய வழியும் மார்க்சின்
வழியிலும் எது மேலானது நீண்ட காலம் நிலைத்து பயன்தருவனவாக உள்ளது? என்ற கேள்வியை அம்பேத்கர்
எழுப்புகிறார்.
கம்யூனிஸ்டுகள் தனிநபர்
உடைமையை அழித்து விட்டார்கள். இது மதிப்புமிக்கக் குறிக்கோள் என்று வைத்துக் கொண்டாலும்,
அதை அடையவும் செயல்முறையினால் எதனையும் அழித்துவிடவில்லை என்று கம்யூனிஸ்டுகள் கூற
முடியுமா? என்று கேள்வி எழுப்புகிறார்.
புரட்சியின் போது மனிதர்கள்
எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர்? மனித உயிருக்கு மதிப்புக் கிடையாதா? உடைமைகளின் சொந்தகாரர்களின்
உயிரை எடுக்காமல் உடைமைகள் மட்டும் கம்யூனிஸ்டுகள் எடுத்துக்கொண்டிருக்க முடியாதா?
என்று கேள்வி எழுப்புகிறார்.
சர்வாதிகரம் என்றால் சுதந்திரம்
இல்லாமை அல்லது நாடாளுமன்ற அரசு இல்லாமை என்பதாக அம்பேத்கர் கூறுகிறார். நாடாளுமன்ற
அரசில் சுதந்திரத்தின் மீது அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளைக் குறை கூறுவதற்கு ஒவ்வொரு
குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது. நாடாளுமன்ற அரசில் ஒரு கடமையும் ஒர் உரிமையும் இருக்கிறது.
சட்டத்துக்குக் கீழ்ப்படிவது கடமை, அதைக் குறை கூறுவது உரிமை. சர்வாதிகாரத்தில் கீழ்ப்படியும்
கடமை மட்டும் தான் உண்டு, குறை கூறும் உரிமை கிடையாது என்கிறார் அம்பேத்கர்.
நாடாளுமன்றத்தில் குறைகூற
உரிமை என்று சரியாகத்தான் கூறியிருக்கிறார். ஆனால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற
உடன் தனிநபர் சர்வாதிகாரமாகப் புரிந்து கொண்டுள்ளார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்
என்பது சோவியத் அதாவது மக்கள் அரசு. அவர்களுக்குள் விவாதிக்கவும் குறைகூறவும் கண்டிப்பாக
உரிமை உண்டு, அதனைப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் அந்தக் குறையை நீக்கிடமுடியும்,
ஆனால் முதலாளித்துவ மீள்வுருவாக்கத்திற்குத் தான் உரிமை கிடையாது.
ஏழாவது உட்தலைப்பில், யாருடைய வழிவகை அதிகம் பலன் தரக்கூடியது
என்பதை விவரிக்கிறார். பலத்தின் மூலம் நடத்தப்படும் அரசு, அறநெறி இயல்பின் மூலம் நடத்தப்படும்
அரசு ஆகிய இரண்டில் ஒன்றைத் தெரிந்தெடுக்க வேண்டியுள்ளது. சில புத்த உரையாடல்களைக்
கூறி, அறநெறி சக்தி தோல்வி அடையும் போது அதன் இடத்தில் விலங்கு சக்தி எடுத்துக் கொள்ளும்.
ஒவ்வொரு மனிதனும் அறநெறி அரசாட்சியின் காவலராக இருக்கும் வகையில் அறநெறிப் பயிற்சி
கொடுக்க வேண்டும் என்று புத்தர் விரும்பியதாகக் கூறுகிறார்.
எட்டாவது உட்தலைப்பில்,
அரசு உதிர்ந்து போதல் ஆகும். கம்யூனிசத்தின்
இந்தக் கோட்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு அரசியல் தெளிவு மட்டும் போதாது, அரசியல் பொருளாதாரம்,
வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்ணோட்டம் ஆகியவை அவசியமாகும். இல்லை என்றால் இதனை மார்க்சிய
வழியில் புரிந்து கொள்வது சிரமத்தை ஏற்படுத்தும்.
முதலில், அம்பேத்கர் இது
பற்றிக் கூறுவதைப் பார்ப்போம். கம்யூனிச கோட்பாட்டின்படி அரசு என்பது ஒரு நிரந்திரமான
சர்வாதிகாரமாகும். இதனைக் கம்யூனிஸ்டுகளே பலவீனமான அரசியல் கோட்பாடாக உணர்வதால், அரசு
உலர்ந்து உதிரும் என்று கூறி அதன் கீழாகப் புகலிடம் தேடுகிறார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகள்
இரண்டு கேள்விக்குப் பதிலளிக்க வேண்டி இருக்கிறது. முதலாவது அரசு எப்போது உதிர்ந்து
போகும்? அரசு உதிர்ந்து போகும் போது அதன் இடத்துக்கு எது வரும்? முதல் கேள்விக்குக்
கம்யூனிஸ்டுகளால் நிச்சயமாகப் பதில் எதுவும் அளிக்கமுடியாது. இரண்டாவது கேள்விக்குக்
கம்யூனிஸ்டுகள் இதற்குத் திருப்திகரமான பதில் கூறப்படவில்லை. இதைவிட வேறொரு முக்கியமான
கேள்வி இருக்கிறது, அரசு உதிர்ந்து பின் அராஜகம் வருமா? வரும் என்றால் கம்யூனிஸ்ட்
அரசை உருவாக்குவது பயனற்ற செயலாகும் என்றே அம்பேத்கர் கருதுகிறார். வன்முறையினால் தான்
அந்த அரசை தாங்கிப் பிடிக்க முடியும், அதற்கு ஆதாரமாக இருக்கும் வன்முறையை விலக்கிக்
கொண்டால் அராஜகம் தோன்றும். அப்படி என்றால் கம்யூனிஸ்ட் அரசினால் என்ன நன்மை? -என்பதாகவே
அம்பேத்கரின் புரிதல் இருக்கிறது.
அரசு பற்றிய மார்க்சிய கண்ணோட்டத்தை
அறிந்து கொள்ளாமல் இதற்கான பதிலைப் புரிந்து கொள்வது கடினமாகும். சுருக்கமாக அரசு பற்றி
மார்க்சிய பார்வையைத் தொகுப்போம்.
மனிதனை மனிதன் சுரண்டுதல்
அற்ற ஒரு நிலையினை மனித இனம் சந்தித்ததுண்டு. அது ஆதிப்பழங்குடி சமூகமாகும் (ஆதி கம்யூனிச
சமூகம்). அந்தச் சமூகத்தில் உற்பத்தி சக்திகள் சிறிதளவிற்கே வளர்ச்சியடைந்து இருந்ததால்
ஒருவராலும் தனியாகத் தனக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. எளிய கருவிகளைப்
பயன்படுத்தினர். ஒவ்வொருவரும் இனக்குழுவில் உள்ள அனைவருக்காகவும் உழைத்தனர். இவ்வகையான
இனக்குழு சமூகத்தில் உழைப்பு கூட்டாகச் செயல்பட்டது, உணவு சேகரிப்பதில் அனைவரும் சமமாக
ஈடுபட்டனர். சேகரித்த உணவுகள் இனகுழு முழுமைக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
எளிய கூட்டுறவு செயல்பாடாக அன்றைய சமூக உறவுகள் இருந்தன.
அன்றைய சமூகப் பொருளாதாரத்தில்
ஏற்றதாழ்வு நிலை உருவாகவில்லை. மக்கள் வர்க்கமாகப் பிளவுபடாமலும், சொத்து என்று எதையும்
தனிநபர்களிடம் சேராமலும், அதாவது வர்க்க மற்ற, தனிச்சொத்துடைமையற்ற சமூகமாக, ஒன்றுபட்ட
தொன்மை கம்யூனிச சமூக அமைப்பாகக் காணப்பட்டது. இந்தக் கட்டத்தில் வன்முறையால் மக்களைக்
கீழ்ப்படுத்தும் முறையான தனி இயந்திரம் இருக்கவில்லை. அதாவது அரசு என்பது தோன்றவில்லை.
அப்போது அரசு தேவைப்படவும் இல்லை.
உற்பத்திச் சாதனங்கள் சிலரிடம்
சேகரமாதலும், சமூகத்திற்குத் தேவையானதைவிட சற்று கூடுதலாக உற்பத்தி செய்திட முடிந்தமையும்,
சமூகத்தின் வேலைப் பிரிவினை ஆகிய புறநிலைக் காரணங்கள் வர்க்கங்களின் தோற்றத்திற்குக்
காரணமாகிறது. இதனால் உருவான சமூகத்தில் உடைமையுள்ளவருக்கும், உடைமையற்றவருக்கும் இடையேயுள்ள
சமரசப்படுத்தமுடியாத முரண்காரணமாக அரசு தோற்றம் பெற்றது. மக்களின் எழுச்சியை அடக்குவதற்கு,
ஆயுதம் தாங்கிய காவற்படைகளும், ராணுவமும், சட்ட நீதிகளும், சிறை தண்டனைகளும், சுரண்டலுக்கு
ஆளான மக்களின் மீது ஏவப்படும் வன்முறை கருவியாக அரசு உருவாகியது.
இந்த அரசு உருவாக்கத்தைப்
பற்றி எங்கெல்ஸ் தமது “குடும்பம், தனிச் சொத்து,
அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலில் எழுதியுள்ளார்.
“சமூகத்தின்
குறிப்பிட்ட ஒரு வளர்ச்சிக் கட்டத்தின் விளைவே அரசு. இந்தச் சமூகம் தன்னுடனான தீராத
முரண்பாட்டில் சிக்கிக் கொண்டுவிட்டது, இணக்கம் காண முடியாத பகை சக்திகளாய்ப் பிளவுண்டுவிட்டது.
இந்தப் பகைமை நிலையை அகற்றத் திறனற்றதாகிவிட்டது என்பதை ஒப்புக் கொள்வதன் விளைவே அரசு.
ஆனால் இந்தப் பகை சக்திகள், முரண்பட்டு மோதிக் கொள்ளும் பொருளாதார நலன்களைக் கொண்ட
இந்த வர்க்கங்கள், தம்மையும் சமூகத்தையும் பயனற்ற போராட்டத்தில் அழித்துக் கொண்டு விடாமல்
தடுக்கும் பொருட்டு, மோதலைத் தணித்து “ஒழுங்கின்” வரம்புகளுக்குள் இருத்தக்கூடிய ஒரு
சக்தியை, சமூகத்திற்கு மேலானதாய்த் தோன்றும் ஒரு சக்தியை நிறுவுவது அவசியமாயிற்று.”
இதனோடு லெனின் தமது “அரசும் புரட்சியும்” என்ற நூலில் சேர்த்துக் கூறுகிறார்:-
“வர்க்கப் பகைமைகள்
இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவும் வெளியீடுமே அரசு. எங்கே. எப்பொழுது, எந்த அளவுக்கு
வர்க்கப் பகைமைகள் புறநிலைக் காரணங்களால் இணக்கம் காண முடியாதவை ஆகின்றனவோ, அங்கே,
அப்பொழுது, அந்த அளவுக்கு அரசு உதித்தெழுகிறது. எதிர்முறையில் கூறுமிடத்து, அரசு ஒன்று
இருப்பதானது வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவையாய் இருத்தலை நிரூபிக்கிறது.”
-மேலும் லெனின் கூறுகிறார்,
நாகரிக சமூகத்தில், ஒவ்வொரு புரட்சியும், அரசு இயந்திரத்தை அழிப்பதன் மூலம், வர்க்கப்
போராட்டத்தை ஒளிவுமறைவின்றி நமக்குப் புலப்படுத்திக் காட்டுகிறது, ஆளும் வர்க்கம் தனக்குச்
சேவை புரியக் கூடிய ஆயுதமேந்திய ஆட்களைக் கொண்ட தனிவகைப் படைகளைப் புதுப்பிக்க எப்படி
முயலுகிறது என்பதையும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் ஒடுக்குவோருக்குப் பதிலாய் ஒடுக்கப்பட்டோருக்குச்
சேவை புரியக் கூடிய, இப்படிப்பட்ட ஒரு புதிய ஒழுங்கமைப்பைத் தோற்றுவித்துக் கொள்ள,
எப்படி முயலுகிறது என்பதையும் நமக்குத் தெளிவாய்க் காட்டுகிறது.
பாட்டாளி வர்க்கத்தின் கம்யூனிச
ஆட்சியில் அரசு எப்படி உலர்ந்து உதிர்ந்து போகிறது என்பதைப் பற்றி எங்கெல்ஸ் “டூரிங்குக்கு மறுப்பு” என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.
“பாட்டாளி வர்க்கம்
அரசியல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு உற்பத்தி சாதனங்களை முதலாவதாக அரசு சொத்தாக
மாற்றுகிறது. ஆனால் இதைச் செய்வதன் மூலம் அது பாட்டாளி வர்க்கம் என்ற தனது நிலைக்கே
முடிவு கட்டிக் கொள்கிறது, எல்லா வர்க்க வேறுபாடுகளுக்கும் வர்க்கப் பகைமைகளுக்கும்
முடிவுகட்டுகிறது, அரசு அரசாய் இருப்பதற்கும் முடிவு கட்டுகிறது. இதுவரை சமூகம் வர்க்கப்
பகைமைகளின் அடிப்படையில் அமைந்திருந்ததால் அதற்கு அரசு தேவைப்பட்டது, அதாவது அந்தந்தக்
காலத்தில் சுரண்டும் வர்க்கமாய் இருக்கும் குறிப்பிட்ட வர்க்கத்துக்கான ஒழுங்கமைப்பு
ஒன்று தேவைப்பட்டது, அதன் பொருளுற்பத்தியின் புறநிலைமைகளைப் பராமரிக்கவும், இன்னும்
முக்கியமாய்ச் சுரண்டப்படும் வர்க்கங்களை அந்தந்தப் பொருளுற்பத்தி அமைப்புக்கு பொருத்தான
ஒடுக்கு முறை நிலையில் பலவந்தமாக வைத்திருப்பதற்கும் ஓர் ஒழுங்கமைப்புத் தேவைப்பட்டது.
இந்த அரசு சமூகம்
முழுவதன் அதிகார பூர்வமான பிரதிநிதியாக, கண்கூடான அதன் உருவத் திரட்சியாக விளங்கிற்று.
ஆனால் எந்த வர்க்கம் தன்னுடைய காலத்தில் சமூகம் முழுவதற்கும் தானே பிரதிநிதியாக இருந்ததோ
அந்த வர்க்கத்தின் அரசாய் இருந்த அளவுக்குத்தான், அதாவது புராதன காலத்தில் அடிமையுடைமைக்
குடிகளின் அரசாகவும், மத்திய காலத்தில் பிரபுக்களின் அரசாகவும், நாம் வாழும் இக்காலத்தில்
முதலாளித்துவ வர்க்கத்தின் அரசாகவும் இருந்த அளவுக்குத் தான், அரசால் இவ்வாறு விளங்க
முடிந்தது. இறுதியில் அரசானது சமூகம் முழுமைக்கும் மெய்யான பிரதிநிதியாகும் போது, அது
தன்னைத் தானே அவசியமற்றதாக்கிக் கொள்கிறது.
..
அரசானது மெய்யாகவே
சமூகம் முழுதுக்கும் பிரதிநிதியாய் முன்வந்து புரிந்திடும் முதலாவது செயல்- அதாவது
உற்பத்திச் சாதனங்களைச் சமூகத்தின் பேரால் உடைமையாக்கி கொள்ளும் இச்செயல் – அரசு என்ற
முறையில் .சுயேச்சையாய் அது புரிந்திடும் இறுதிச் செயலாகவும் அமைந்து விடுகிறது. சமூக
உறவுகளில் அரசின் தலையீடு ஒரு துறைக்குப்பின் இன்னொன்றாகத் தேவையற்றதாகிப் பிறகு தானாகவே
தணிந்து அணைந்து விடுகிறது. ஆட்களின் ஆளுமை காரியங்களின் நிர்வாகமாய், பொருளுற்பத்தி
வேலைகளது செயலாட்சியாய் மாறிவிடுகிறது. அரசு
“ஒழிக்கப்படவில்லை”, அது உலர்ந்து உதிர்ந்து விடுகிறது.”
அம்பேத்கர் நினைப்பது போல்
அரசு உலர்ந்து உதிர்ந்த இடத்தில் அராஜகம் ஏற்படப் போவதில்லை, ஆட்களின் ஆளுமை காரியங்களின்
நிர்வாகமாய், பொருளுற்பத்தி வேலைகளது செயலாட்சியாய் மாறிப்போகும். அதாவது வன்முறைக்கருவிகாளான
போலீஸ், ராணுவம், நீதித்துறை போன்றவை நீக்கப்பட்ட நிலையில், நிர்வாக வேலைகளை மட்டும்
பார்க்கக்கூடிய அமைப்பாகும். எங்கெல்ஸ் மேலும் இது பற்றிக் கூறுவதாவது, தவிர்க்க முடியாததாய்
அரசு மறைந்தவுடன், அரசு இயந்திரம் அனைத்தையுமே
அதற்கு அப்பொழுது உரித்தாகிவிடும் இடத்தில், அதாவது தொல்பொருள் காட்சிக் கூடத்தில், கைராட்டைக்கும் வெண்கலக் கோடாரிக்கும்
பக்கத்தில் கொண்டுபோய் வைக்கப்படும்.
தேவைக்கேற்ற வகையில் தோன்றிய
அரசு, தேவையற்றதாகிப் போய் உலர்ந்து உதிர்ந்து போய்விடும் என்கிற விஞ்ஞானக் கண்ணோட்டத்தை
அம்பேத்கர் புரிந்து கொள்ளவில்லை. அதே போல் பாட்டாளி
வர்க்க சர்வாதிகாரம் என்பதையும் புரிந்து கொள்ளவில்லை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப்
பற்றிப் பேசுவதற்கு முன் அம்பேத்கரின் புத்தர் கூறிய கருத்துக்களை மார்க்சியம் எவ்வாறு
அணுகுகிறது என்பதைப் பார்ப்போம்.
புத்தரின் கோட்பாட்டைத்
தொகுக்கும் போது அம்பேத்கர், மதத்தின் அவசியத்தைப் பற்றிக் கூறுகிறார், ஒழுக்கம் வாழ்க்கையின்
சட்டமாக வேண்டும் என்று ஒழுக்கத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.
ஒழுக்க நெறியைப் பற்றி எங்கெல்ஸ்
கூறுவதை முதலில் பார்ப்போம்.
“இன்றைய சமுதாயத்தின்
மூன்று வர்க்கங்களான நிலவுடைமைப் பிரபுக்குலம், முதலாளி வர்க்கம் மற்றும் பாட்டாளி
வர்க்கம் ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கே உரிய ஒழுக்கநெறி இருப்பதைக் காணும் பொழுது நாம்
ஒரு முடிவுக்கு மட்டுமே வரமுடியும், கடைசியாக நோக்குமிடத்து மனிதர்கள் தமது வர்க்க
நிலைமை அடிப்படையாகக் கொண்டிருக்கும் நடைமுறை உறவுகளிலிருந்தே - அவர்கள் உற்பத்தியையும்
பரிவர்த்தனையையும் நடத்தி வரும் பொருளாதார உறவுகளிலிருந்தே - உணர்வு பூர்வமாகவோ அல்லது
உணர்வுபூர்வம் இன்றியோ தமது அறநெறிக் கருத்துக்களைப் பெறுகிறார்கள்.
... நீ திருடக்கூடாது.
இதன் மூலம் இந்த ஆணை ஒரு சாசுவத ஒழுக்க நெறி ஆணையாகி விடுமா? எவ்வழியிலும் ஆகாது. திருடுவதற்கான
எல்லாச் செயல் நோக்கங்களும் அறவே ஒழிக்கப்பட்ட ஒரு சமுகத்தில் அதன் காரணமாக அதிகமாய்ப்
போனால் பைத்தியக்காரர்கள் மட்டுமே எப்பொழுதாவது திருடுவார்கள் என்ற நிலையில் நீ திருடக்
கூடாது என்ற சாசுவத உண்மையினைப் பயபக்தியுடன் பறைசாற்ற முயலும் ஒர் ஒழுக்கநெறிப் பிரசாரகர்
எவ்வாறு சிரிப்புக்கு ஆளாவார் தெரியுமா!
எனவே, ஒழுக்க
நெறி உலகத்திற்கும் அதன் நிரந்தரக் கோட்பாடுகள் உள்ளன, அவை வரலாற்றுக்கும் நாடுகளிடையான
வேற்றுமைகளுக்கும் அப்பாற்பட்டு நிற்பவை என்ற சாக்கில் ஒரு சாசுவதமான அறுதியான என்றென்றும்
மாற்றவொண்ணா அறநெறி விதி என்ற முறையில் ஏதேனும் ஓர் ஒழுக்க நெறி சூத்திரத்தையும் எம்மீது
திணிக்க நடத்தும் ஒவ்வொரு முயற்சியையும் நாம் நிராகரிக்கிறோம். இதற்கு மாறாக, இறுதியாக
ஆய்வுசெய்து பார்க்கும் பொழுதில் இதுகாறுமுள்ளதான எல்லா ஒழுக்கநெறிக் கொள்கைகளும் அந்தந்தக்
காலங்களில் நிலவிய சமூகத்தின் பொருளாதார நிலைமைகளின் விளைவே என்று நாம் மெய்ப்பித்து
நிலைநிறுத்துகிறோம். சமூகம் இதுவரையில் வர்க்கப் பகைமைகளிலேயே இயங்கி வந்திருப்பதால்,
ஒழுக்க நெறி எப்பொழுதுமே வர்க்க ஒழுக்க நெறியாக இருந்து வந்துள்ளது, அது ஒன்று ஆளும்
வர்க்கத்தின் ஆதிக்கத்தையும் மற்றும் நலன்களையும் நியாயப்படுத்தியுள்ளது அல்லது ஒடுக்கப்பட்ட
வர்க்கம் போதியளவு வலுப்பெறத் தொடங்கியது முதல் இந்த ஆதிக்கத்திற்கு எதிரான அதன் கோபாவேசத்தின்,
ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்கால நலன்களின் சின்னமாக அமைந்துவிட்டது.” (டூரிங்குக்குமறுப்பு)
ஒழுக்க நெறியின் தோற்றம்,
சமூக வளர்ச்சியின், பொருளாதார உறவுகளின் மாற்றத்தின் அடிப்படையில் உருவானவை என்கிறது
மார்க்சியம். அதன் வர்க்க சார்பையும் வெளிப்படுத்துகிறது. பகைமைக் கொண்டுள்ள ஒரு சமூகத்தில்
அனைவருக்கும் பொதுவான ஒரே அறநெறி இருக்கமுடியாது. இனக்குழு தம் வளர்ச்சியின் இறுதி
கட்டத்தில் இருந்த போது, மிகுந்த குழப்பமும், போட்டியும் உடையதாக இருந்தது. அப்போது
ஏற்பட்ட சண்டைகள் மிகவும் கொடூரமாக இருந்தன. பல்லுக்குப் பல், ரத்தத்திற்கு ரத்தம்
என்பது போன்ற போக்கு இருந்தது. பிறகு வர்க்கச் சமூகம் தோன்றிய பின், சமூகத்தில் அமைதியை
எதிர்பார்த்தபோது பழிக்குபழி என்றபோக்கு மாற வேண்டிவந்தது. மன்னிக்கும் மனோ நிலை உருவானது
அப்போது ஒரு கன்னத்தில் அடித்தால், மறுகன்னத்தைக் காட்டச் சொல்லிற்று, அவர் நாண நன்னயம்
செய்வதை விரும்பியது.
அனைவருக்குமான ஒழுக்க நெறியை
நிராகரித்து, அதன் வர்க்க சார்பைப் பற்றி லெனின் கூறுகிறார்:-
“மனிதனுக்குப்
புறம்பான, வர்க்கத்துக்குப் புறம்பான கருத்தினங்களை அடிப்படையாய்க் கொண்ட எந்த ஒழுக்க
நெறியையும் நாம் நிராகரிக்கின்றோம். அது ஏமாற்று வித்தை, மாய்மாலம், நிலப்பிரபுக்கள்,
முதலாளிகளது நலன்களை முன்னிட்டு தொழிலாளர்களையும் விவசாயிகளையும் மூடர்களாக்குவதற்கான
உபாயம் என்கிறோம்.
எங்களுடைய ஒழுக்கநெறி
பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு முற்றிலும கீழ்ப்படிந்தது
என்று நாம் கூறுகிறோம். எங்கள் ஒழுக்கநெறி பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தின்
நலன்களில் இருந்துதான் உதிக்கிறது.”
மதத்தையும் வர்க்கச் சார்பானதாக
மார்க்சியம் கருதுகிறது. ஆனால் அம்பேக்கர் ருஷ்யாவின் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு
மிகச்சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளதை குறிப்பிட்டு, மனிதகுலம் பொருளாதார நன்மைகளை
மட்டும் விரும்புவதில்லை, ஆன்மீகப் பண்புகளில் கருத்துச் செலுத்துவதில்லை, இனியும்
செலுத்தும் எண்ணம் இருப்பதாகவும் தோன்றவில்லை என்று வருத்தப்பட்டுக் கூறுகிறார்.
கம்யூனிஸ்டுகளின் மதம் பற்றிய
கூற்றான “மதம் மக்களுக்கு அபின்” என்பதைக்
கிறித்துவ மதத்துக்குப் பொருந்தும், பவுத்தத்தற்குப் பொருந்தாது என்கிறார் அம்பேத்கர்.
கம்யூனிஸ்டுகளின் தத்துவமான
இயக்கவியல் பொருள்முதல்வாதம் நாத்திகத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆன்மீகத்தை வர்க்க
ஒடுக்குமுறை கருவியாகவே பார்க்கிறது. பகுத்தறிவுவாதிகளைப் போல் ஆத்திகத்தை முதலில்
ஒழிக்க வேண்டும் என்று போராடுவதில்லை என்றாலும், வர்க்கப் போராட்டத்துக்கு உட்பட்ட
வகையில் ஆத்திகத்தை (ஆன்மீகத்தை) எதிர்க்கவே செய்கிறது. வர்க்கத்தோடு தோன்றிய மதத்தை,
வர்க்க சுரண்டலை ஆதரிக்கின்ற மதத்தை, வர்க்கச் சுரண்டலை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள்
எப்படி ஆன்மீகத்திற்கு இடம் கொடுக்க முடியும். வர்க்கத்தோடு மதத்தையும் எதிர்த்தே போராடும்.
லெனின்:-
“நீதி, மதம்,
அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும்
பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்து
கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமாக ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக்
கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான்
அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின்
சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், மேம்பாடுகள்
ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை
என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டேயிருப்பார்கள்.”
(மார்க்சியத்தின்
மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)
ஆளும் வர்க்கத்தின் நலன்கள்
மதத்திற்குப் பின்னே ஒளிந்து நிற்பதை கம்யூனிஸ்டுகள் வர்க்கச் சார்ப்பாய் பார்க்கின்றனர்.
ஆனால் அம்பேத்கர் கம்யூனிஸ்டுகளின் மதப் பார்வை ஆழந்த வெறுப்புக் கொண்டிருப்பதாகக்
கருதி, கம்யூனிசத்துக்கு உதவியாக இருக்கக்கூடிய மதங்களுக்கும், உதவியாயில்லாத மதங்களுக்கும்
இடையே உள்ள வேறுபாட்டைப் பார்க்க மறுப்பதாக வருத்தத்துடன் கூறுகிறார். மதத்தில் காணப்படும்
வர்க்கத் தன்மையை முன்னிட்டு மேன்மையான மதத்தையும் மார்க்சியம் மறுதலிக்கவே செய்கிறது.
“மதம் சமூகத்தைப் புத்தெழுச்சி கொள்ளச் செய்வதற்கான
ஒர் ஆன்மிகச் சக்தி…” என்பதே அம்கேத்கர் உறுதியான கருத்தாக இருக்கிறது.
மதத்தில் ஏற்படும் மாற்றங்கள்
வழியிலேயே மனித இனத்தில் காலகட்டங்கள் வேறுபடுத்திப் பார்க்கிற பார்வையை "டூரிங்குக்கு மறுப்பு” என்ற நூலில்
எங்கெல்ஸ் விமர்சித்துள்ளார். ஃபாயர்பாகின் அன்புவழிப்பட்ட தமது புதிய மதத்தைப் போற்றிய
அவரது மிகச் சிறந்த நூற்பகுதிகள் இன்று முற்றிலும் படிக்கவொண்ணாதனவாக ஆகிவிட்டன என்கிறார்
எங்கெல்ஸ்.
இதனை லெனின் விளக்குகிறார்:-
“ஃபாயர்பாக்கைப்
பற்றி எங்கெல்ஸ் எழுதியுள்ள கட்டுரையில், அவர் ஃபாயர்பாக்கை இடித்துக் கூறுகிறார்.
காரணம் ஃபாயர்பாக் மதத்தை எதிர்த்துப் போராடுவது அதை ஒழிப்பதற்காக அல்ல? ஆனால் மதத்தைப்
புதுப்பிக்கவும், ஒரு புதிய மேன்மையான மதத்தைக் கண்டுபிடிக்கவும் போன்றவற்றுக்கே. மதம்
மக்களுக்கு அபின் என்ற காரல் மார்க்சின் இந்த ஆணை மதத்தைப் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம்
முழுவதற்கும் அடித்தளமாகும். எல்லா நவீன கால மதங்களையும் சர்ச்சுகளையும், அனைத்து மதநிறுவனங்களையும்
பூர்ஷ்சுவாப் பிற்போக்கின் கைக்கருவிகளாக, சுரண்டலைப் பாதுகாப்பதற்கும், தொழிலாளி வர்க்கத்தை
வெறி மயக்கமுறச் செய்வதற்குமான கருவிகளாகவே மார்க்சியம் எப்போதும் கருதியது” (மதத்தைப்
பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை)
மதம் என்பது தொழிலாளி வர்க்கத்தை
வெறிமயக்கம் அடையச் செய்வதற்கான பிற்போக்கின் கருவியாக லெனின் கூறுகிறார்.
வன்முறையை, கம்யூனிஸ்டுகள் பின்பற்றும் வழிவகையாகவே அம்பேத்கர்
குறிப்பிடுகிறார். கம்யூனிஸ்டுகள் வன்முறை பிரியர்கள் கிடையாது. அராஜவாதிகளின் வன்முறையைக்
கம்யூனிஸ்டுகள் எதிர்த்தார்கள். கம்யூனிஸ்டுகள் வன்முறையைச் சமூகத்தில் திணிப்பதில்லை
என்பதே உண்மையாகும்.
தனியார் சொத்துடைமையைச்
சமாதான முறையில் ஒழிப்பது சாத்தியமா? என்ற கேள்வியை எழுப்பி எங்கெல்ஸ் பதிலளிக்கிறார்:-
"தனியார்
சொத்துடைமையைச் சமாதான முறையில் ஒழிப்பது நடைபெறக்கூடும் எனில் அது விரும்பத்தக்கதே.
இதைக் கம்யூனிஸ்டுகள் கட்டாயம் எதிர்க்க மாட்டார்கள். சதித்திட்டங்கள் எல்லாம் பயனற்றவை
என்பது மட்டுமின்றிக் கேடு விளைவிப்பவை என்பதையும் கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிவார்கள்.
புரட்சிகள் திட்டமிட்டோ தன்னிச்சையாகவோ உருவாக்கப்படுவதில்லை என்பதையும், மாறாக அவை
எங்கும் எப்போதும், தனிப்பட்ட கட்சிகள் மற்றும் மொத்த வர்க்கங்களின் விருப்பம் அல்லது
கட்டளையைச் சாராத முற்றிலும் சுதந்திரமான புற நிகழ்வுகளின் இன்றியமையாத விளைவே என்பதையும்
அவர்கள் மிக நன்றாகவே அறிவார்கள்.
ஆனால், அதே
வேளையில், ஏறத்தாழ எல்லா நாகரிகமடைந்த நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி
பலவந்தமாக அடக்கப்படுகிறது என்பதையும், இந்த வகையில் கம்யூனிசத்தின் எதிராளிகள் தங்களின்
முழுப் பலத்தோடு ஒரு புரட்சி உருவாவதற்கே பாடுபடுகிறார்கள் என்பதையும் கம்யூனிஸ்டுகள்
காண்கிறார்கள். ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் இறுதியில் ஒரு புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால்,
கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளிகளின் நலன்களைப் சொல்மூலம் பாதுகாத்து வருவதைப்போல்
செயல்மூலமும் பாதுகாத்து நிற்போம்." (கம்யூனிசத்தின் கோட்பாடுகள்)
கம்யூனிஸ்டுகள் வன்முறையை
ஆராதிப்பதில்லை, வன்முறையினால் விளைகின்ற கேடுகளைக் கம்யூனிஸ்டுகள் அறிந்திருக்கின்றனர்.
வன்முறை தன்னிச்சையாகப் புரட்சியின் போது கையாளப்படுவதில்லை. அந்த நிலையினைத் தீர்மானிப்பது
புறநிலைமைகளே. அதேநேரத்தில் பாட்டாளி வர்க்கம் இறுதியில் வன்முறையை நோக்கித் தள்ளப்படுமாயின்,
சொல் மூலம் கொடுக்கப்படும் பாதுகாப்பு, செயல் மூலமும் கொடுக்கப்படும் என்று உறுதியாக
எங்கெல்ஸ் கூறியுள்ளார். ருஷ்யப் புரட்சியைக் குறைவான ரத்தம் சிந்தப்படுவதற்கு ஏற்றவகையில்
புரட்சியின் தருணத்தை லெனின் தேர்ந்தெடுத்தார். புரட்சியின் போது சிந்திய ரத்தத்தைவிடப்
புரட்சியைக் காப்பதற்குதான் அதிகம் ரத்தம் சிந்தப்பட்டது. எதிர்புரட்சியே அதிகம் ரத்தத்தை சிந்த வைத்தது.
புரட்சிகரச் சூழ்நிலை இல்லாத
போது பலத்தைப் பிரயோகிப்பது முட்டாள் தனமானது என்றும் புரட்சிகரச் சூழல் இருக்கும்
போது பலத்தைப் பயன்படுத்த தயங்குவது கோழை தனமானது என்றும் எங்கெல்ஸ் கூறுகிறார்.
"ஒரு சில
சந்தர்ப்ப நிலைமைகளின் கீழ் ஒருவன் சதிச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பானாகில் அவன்
ஒரு கோழை என்றே கருதப்படுவான். அதே போல வேறுவிதமான சந்தர்ப்ப நிலைமைகளின் கீழ் அவ்வாறு
செயல்பட்டான் என்றால் ஒரு முட்டாள் என்று கருதப்படுவான்."
அராஜகவாதிகளின் சதி திட்டத்திற்கும்,
மார்க்சிய வழிப்பட்ட புரட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் லெனின்:-
“புரட்சி எழுச்சி
வெற்றிக்கு வழிவகுக்க வேண்டுமானால் அது சதியாலோசனை மீதோ மற்றும் ஒரு கட்சியினையோ நம்பிச்
சார்ந்திருக்கக் கூடாது. மாறாக முன்னேற்றமான வர்க்கத்தின்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
இதுவே முதல் நிபந்தனை.
புரட்சி எழுச்சி
மக்களின் புரட்சிகரமான கிளர்ச்சியைச் சார்ந்திருக்க வேண்டும். இது இரண்டாவது நிபந்தனை.
புரட்சி எழுச்சி
வளர்ந்து வரும் புரட்சியின் வரலாற்றின் திரும்பு முனையைச் சார்ந்திருக்க வேண்டும்.
அப்பொழுது மக்களின் முன்னேற்றமான அணிகளின் செயல்பாடு அதன் உச்சத்தில் இருக்கும், எதிரியின்
அணிகளிலும் புரட்சியின் பலவீனமான அரை-மனது மற்றும் உறுதியற்ற நண்பர்களின் அணிகளிலும்
ஊசலாட்டங்கள் ஆக வலுவாக இருக்க வேண்டும். இது மூன்றாவது நிபந்தனை.” (மார்க்சியமும்
கிளர்ச்சியும்)
புரட்சியை மக்கள் தமது விருப்பத்தின்
அடிப்படையில் தோற்றுவிப்பதில்லை. அதற்கான புறச்சூழ்நிலையின் விளைவாகத்தான் நடத்துகின்றனர்.
இந்த அக-புற நிலைமைகளை மார்க்சியம் தெளிவாகவே முன்வைத்துள்ளது.
லெனின்:- “புரட்சிகரச்
சூழ்நிலை இல்லையேல் புரட்சி சாத்தியமன்று, அதேபோது புரட்சிகரச் சூழ்நிலை ஒவ்வொன்றும்
புரட்சியை எழச் செய்ய வேண்டுமென்பதும் இல்லை- மார்க்சியவாதிக்கு இது மறுக்க முடியாத
ஒன்று. பொதுவாகப் பேசுமிடத்து, புரட்சிகரச் சூழ்நிலை என்பதற்கான அறிகுறிகள் யாவை? எந்தத்
தவறும் இழைக்கவில்லை என்கிற நிச்சயத்துடன் நாம் பின்வரும் மூன்று பிரதான அறிகுறிகளைக்
குறிப்பிடலாம்.
1) ஆளும் வர்க்கங்கள்
தமது ஆட்சியை எந்த மாற்றமும் இன்றித் தொடர்ந்து நடத்திச் செல்வது சாத்தியமற்றதாகுதல்,
“மேல் வர்க்கங்களிடையே” ஏதேனும் ஒரு வடிவத்தில் நெருக்கடி ஏற்பட்டு, ஆளும் வர்க்கத்தினுடைய
கொள்கை நெருக்கடிக்கு உள்ளாகி, இதன் விளைவாய் வெடிப்பு உண்டாகி ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய
அதிருப்தியும் ஆத்திரமும் இவ்வெடிப்பின் வழியே பீறிட்டெழுதல். புரட்சி நடைபெறுவதற்கு,
பழைய வழியில் வாழ “அடிமட்டத்து வர்க்கங்கள் விரும்பாதது” மட்டும் சாதாரணமாகப் போதாது,
பழைய வழியில் வாழ “மேல் வர்க்கங்களுக்கு முடியாமல் போவதும்” அவசியமாகும்.
2) ஒடுக்கப்படும்
வர்க்கங்களுடைய துன்பதுயரமும் வறுமையும் வழக்கமாக இருப்பதைக் காட்டிலும் மேலும் கடுமையாகிவிடுதல்.
3) மேற்கண்ட
காரணங்களின் விளைவாய் மக்கட் பெருந்திரளினரது செயற்பாடு கணிசமாய் அதிகரித்துவிடுதல்,
மக்கட் பெருந்திரளினர் “சமாதான காலத்தில்” தாம் சூறையாடப்படுவதற்கு முறையிடாமலே இடமளிப்பவர்களாயினும்,
கொந்தளிப்பான காலங்களில், வரலாறு படைக்க வல்ல சுயேச்சைச் செயலில் இறங்கும்படி நெருக்கடி
நிலைமை யாவற்றாலும் மற்றும் “மேல் வர்க்கங்களாலுங்கூட” இழுத்து விடப்படுகிறார்கள்.
தனிப்பட்ட குழுக்கள்,
கட்சிகளின் சித்தத்தை மட்டுமின்றி, தனிப்பட்ட வர்க்கங்களின் சித்தத்தையும் சார்ந்திராத
இந்த எதார்த்தப் புறநிலை மாறுதல்கள் இல்லாமல், பொதுவாகப் புரட்சி சாத்தியமன்று. இந்த
எதார்த்தப் புறநிலை மாறுதல்கள் யாவும் சேர்ந்த ஒட்டுமொத்தமே புரட்சிகரச் சூழ்நிலை எனப்படுவது.”
(இரண்டாவது அகிலத்தின் தகர்வு)
முதலாளித்துவச் சமூகத்திலிருந்து
கம்யூனிச சமூகத்தை எட்டுவதற்கு இடையே ஒர் இடைக்கட்டம் தேவை என்பதை மார்க்ஸ் உணர்ந்தார்.
அதனைக் கோத்தா வேலைத்திட்டம் பற்றிய விமர்சனம்
எழுதிய போது முதன்முறையாக வெளிப்படுத்தினார். அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகத்தான்
இருக்க முடியும் என்பதையும் அறிவிக்கிறார்.
"முதலாளித்துவச்
சமூகத்துக்கும் கம்யூனிச சமூகத்துக்கும் இடையில் ஒன்று மற்றொன்றாகப் புரட்சிகர மாற்றம்
அடையும் கட்டம் உள்ளது. இதற்கு இணயாக அரசியல் இடைக்காலக் கட்டம் ஒன்றும் இருக்கிறது,
இந்த இடைக்காலத்தில் அரசு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரச் சர்வாதிகாரம் என்பதைத்
தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது"
கம்யூனிச சமூகத்தை அடைவதற்கான
இந்த இடைக்காலக் கட்டமான முதல்கட்டத்தைச் சோஷலிச சமூகம் என்றும் அடுத்தக் கட்டத்தைக்
கம்யூனிச சமூகம் என்றும் அழைக்கப்படுகிறது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதில் உள்ள சர்வாதிகாரத்தை
எப்படி நேர்பொருளில் எடுத்துக் கொண்டு, அதனை அறநெறியில் விமர்சிப்பது தவறானதோ. அதே
போல முதலாளித்துவச் சமூகத்தில் கூறப்படும் ஜனநாயகம்
என்பதை அதன் நேர் பொருளில், அனைவருக்குமான ஜனநாயகமாய் புரிந்து கொள்வது தவறானதாகும்.
முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பற்றி லெனின் கூறுவதைப் பார்ப்போம்.
“முதலாளித்துவச்
சமூகத்தில், மிகவும் சாதகமான நிலைமைகளில் அது வளர்வதாய்க் கொள்வோமாயின், ஜனநாயகக் குடியரசில்
ஓரளவு முழுமையான ஜனநாயகம் இருக்கக் காண்கிறோம். ஆனால் இந்த ஜனநாயகம் எப்பொழுதும் முதலாளித்துவச்
சுரண்டலால் எழுப்பப்படும் குறுகலான வரம்புகளால் இறுக்கப்பட்டுள்ளது. ஆகவே இது நடைமுறையில்
எப்பொழுதும் சிறுபான்மையோருக்கான ஜனநாயகமாகத்தான், சொத்துடைத்த வர்க்கங்களுக்கு மட்டுமேயான,
செல்வந்தர்களுக்கு மட்டுமேயான ஜனநாயகமாகத்தான் இருக்கிறது.
முதலாளித்துவச்
சமூகத்தில் சுதந்திரமானது பண்டைக் கிரேக்க குடியரசுகளில் இருந்ததே, எறத்தாழ அதேபோல
அடிமையுடைமையாளர்களுக்கான சுதந்திரமாகத்தான் எப்பொழுதுமே இருந்து வருகிறது. முதலாளித்துவச்
சுரண்டலின் நிலைமைகள் காரணமாய்த் தற்காலக் கூலி அடிமைகள் பட்டினியாலும் வறுமையினாலும்
நசுக்கப்பட்டு “ஜனநாயகம் குறித்துத் தொல்லைப்பட முடியாதபடி”, “அரசியல் குறித்துத் தொல்லைபட
முடியாதபடி” அவல நிலையில் இருத்தப்பட்டிருக்கிறார்கள்.” (அரசும் புரட்சியும் – பக்கம்-116)
மேலும் லெனின் கூறுகிறார்:-
“மிகச் சொற்பமான
சிறுபான்மையோருக்கு ஜனநாயகம், செல்வந்தர்களுக்கு ஜனநாயம் (இதுதான் முதலாளித்துவச் சமூத்தில்
நிலவும் ஜனநாயகம். முதலாளித்துவ ஜனநாயகத்தின் கட்டமைவை மேலும் நெருங்கிச் சென்று பார்த்தோமாயின்,
வாக்குரிமையின் “அற்ப”- அற்பமானவை என்று சொல்லப்படுகிற) விவரங்களிலும், பிரதிநிதித்துவ
உறுப்புகளின் செயல்முறையிலும், கூட்ட உரிமைக்கு நடைமுறையில் இருந்துவரும் தடங்கல்களிலும்,
நாளேடுகளின் முற்றிலும் முதலாளித்துவ முறையிலான ஏற்பாட்டிலும், இன்ன பிறவற்றிலும் எங்கும் ஜனநாயகத்துக்குக் கட்டுக்குமேல் கட்டுப்போடப்பட்டிருப்பதைத்
தான் காண்கிறோம். ஏழைகளுக்கு இடப்பட்டுள்ள இந்தக் கட்டுகளும் விலக்குகளும் ஒதுக்கல்களும்
தடங்கல்களும் அற்பசொற்பமாகவே தோன்றும்,
முக்கியமாய்
இல்லாமையை நேரில் அறிந்திராதோருக்கும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடன் அவற்றின் வெகுமக்கள்
வாழ்வில் என்றுமே நெருங்கிய தொடர்பு கொண்டிராதோருக்கும் இப்படித்தான் அற்பசொற்பமாகவே
தோன்றும். ஆனால் ஒட்டுமொத்தத்தில் இந்தக் கட்டுகள் ஏழைகள் அரசியலில் இருந்து, ஜனநாயகத்தில் நேரடியாய் பங்கு கொள்வதில் இருந்து
ஒதுக்கி வெளியே தள்ளிவிடுகின்றன.
முதலாளித்துவ
ஜனநாயகத்தின் இந்தச் சாரத்தை மார்க்ஸ் மிக நன்றாய் உணர்ந்திருந்தார். கம்யூனுடைய அனுபவத்தை
ஆராய்கையில் ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்கும் வர்க்கத்தின் எந்தப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில்
நமது பிரதிநிதிகளாய் அமர்ந்து தம்மை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு
ஒருமுறை தீர்மானிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.” (அரசும் புரட்சியும்
– பக்கம்-117-118)
லெனின் பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தில், ஜனநாயகம் பெருவாரியான
மக்களுக்கு விரிவாக்கப்படுவதைக் குறிப்பிடுகிறார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்
என்பது மக்களின் மீதான சர்வாதிகாரம் கிடையாது. மக்கள் அரசின் மீது எதிர்ப்பை செலுத்துகிற
எதிராளிகளின் மீதான சர்வாதிகாரம்:-
“பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரமானது, அதாவது ஒடுக்குமுறையாளர்களை அடக்குவதற்காக ஒடுக்கப்பட்டவர்களுடைய
முன்னணிப்படை ஆளும் வர்க்கமாய் அமையும் ஒருங்கமைப்பானது ஜனநாயகத்தை விரிவாக்குவதோடு
மட்டும் நின்றுவிடக் கூடியதல்ல. ஜனநாயகத்தைப் பிரம்மாண்டமான அளவில் விரிவாக்குவதுடன்,
பணமூட்டைகளுக்கான ஜனநாயகமாய் இராது. முதன்முதலாய் ஏழைகளுக்கான ஜனநாயகமாய், மக்களுக்கான
ஜனநாயகமாய் ஆக்குவதுடன் கூடவே ஒடுக்குமுறையாளர்களும் சுரண்டலாளர்களும் முதலாளிகளுமானோரின்
சுதந்திரத்துக்குப் பட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் வரிசையாகப் பல கட்டுகளை விதித்திடுகிறது.
மனிதகுலத்தைக்
கூலி அடிமை முறையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு இவைகளை நாம் அடக்கியாக வேண்டும்.
இவர்களுடைய எதிர்ப்பை வன்முறை கொண்டு நசுக்கியாக வேண்டும். அடக்கியாளுதல் இருக்கும்வரை,
பலாத்காரம் இருக்கும்வரை சுதந்திரத்துக்கோ ஜனநாயகத்துக்கோ இடமில்லை என்பது தெளிவு.
பெபெலுக்கு
எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸ் இதனை மிகச்சிறப்பான முறையில் எடுத்துரைத்தார். “பாட்டாளி
வர்க்கத்துக்கு அரசு தேவைப்படுவது தனது எதிராளிகளை அடக்கி இருத்துவதற்காகவே அன்றிச்
சுதந்திரத்தின் நலன்களுக்காக அல்ல, சுதந்திரம்
குறித்துப் பேசுவது சாத்தியமாகியதும் அரசு அரசாய் இருப்பதற்கு முடிவு ஏற்படுகிறது”
என்று இக்கடிதத்தில் எங்கெல்ஸ் கூறியது வாசகர்களுக்கு நினைவிருக்கும். .
.......
கம்யூனிச சமூகத்தில்தான்
– முதலாளிகளுடைய எதிர்ப்பு அடியோடு நசுக்கப்பட்டு, முதலாளிகள் மறைந்து போய், வர்க்கங்கள்
இல்லாமற் போய்விடும் (அதாவது, சமூகத்தின் உறுப்பினர்களிடையே
சமூக உற்பத்திச் சாதனங்களுடன் அவர்களுக்குள்ள உறவு சம்பந்தமாய் எந்தப் பாகுபாடும் இல்லாமற்
போய்விடும்) அப்பொழுது மட்டும் தான் “அரசு…
இல்லாமற் முடிவு ஏற்படுகிறது”, “சுதந்திரம் குறித்துப் பேசுவது சாத்தியமாகிறது.”
அப்பொழுதுதான் மெய்யாகவே முழுநிறைவான ஜனநாயகம்,
விதிவிலக்கு எதுவுமில்லாத ஜனநாயகம் சாத்தியமாகிக் கைவரப் பெறுகிறது. அப்பொழுதுதான் ஜனநாயகம்
உலர்ந்து உதிரத் தொடங்கும். “முதலாளித்துவ அடிமை வாழ்வில் இருந்தும் முதலாளித்துவச்
சுரண்டலின் சகிக்கமுடியாத கொடுமைகளில் இருந்தும் மிருகத்தனத்தில் இருந்தும் அபத்தங்களில்
இருந்தும் இழுக்குகளில் இருந்தும் விடுபட்டு மக்கள் பலநூறு ஆண்டுகளாய் அறியப்பட்டு
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அரிச்சுவடி நீதிவிளக்கங்களில் எல்லாம் மீண்டும் மீண்டும்
கூறப்பட்டு வந்துள்ள சமூக ஒட்டுறவின் சர்வசாதாரண விதிகளைப் பற்றியொழுகச் சிறிதுசிறிதாய்
பழகிக் கொள்வார்கள். பலாத்காரம் இல்லாமலே,
பலவந்தம் இல்லாமலே. கீழ்ப்படிதல் இல்லாமலே, பலவந்தத்துக்கான அரசு எனப்படும் தனிவகை
இயந்திரம் இல்லாமலே அவர்கள் இவ்விதிகளைப் பற்றியொழுகப் பழகிக் கொள்வார்கள்.” (அரசும்
புரட்சியும் – பக்கம்-118-119)
கம்யூனிச சமூகத்தில் இருப்பவர்கள்
இன்றைய முதலாளித்துவச் சமூக மக்களின் மனோநிலையில் இருப்பதில் இருந்து விடுபட்டவர்களாவர்.
அதனால் அரசு உலர்ந்து உதிர்ந்த பின்பு அங்கே அராஜகம் எழுவதில்லை, அதற்கான சூழல் அந்தச்
சமூகத்தில் காணப்போவதும் இல்லை.
அம்பேத்கர் அறநெறி சக்தி
தோல்வியடையும் போது அதன் இடத்தில் விலங்கு சக்தி எடுத்துக்கொள்ளும் என்கிறார். மேலும்
வர்க்க முரண்பாட்டை நீக்குவதற்கு எண்வழிப்பாதையே (அஷ்டாங்க மார்க்கம்) அதாவது நற்கருத்து, நற்நோக்கம், நற்பேச்சு, நற்நடத்தை,
நற்வாழ்கைவழி, நற்முயற்சி, நற்மனவுணர்வு போன்றவையே போதுமானதாகக் கருதுகிறார். நல்லவைகளும்
தீயவைகளும் மனிதனிடத்தில் எவ்வாறு தோற்றம் கொள்கின்றன என்ற புரிதல் இல்லாது நற்சிந்தனையே
முரண்பாட்டை ஒழிப்பதற்குப் போதுமானதாக் கருதுகிறார்.
மனிதர்கள் தமது செயற்பாட்டைக்
குறிக்கோளாக அமைத்துக் கொண்டுதான் செயற்படுகின்றனர். இந்தக் குறிக்கோள் எவ்வாறு அமைத்துக்
கொள்கின்றனர் என்பது பற்றிக் கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் வேறுபட்ட வழியில்
முடிவெடுக்கின்றது. நல்ல நோக்கங்களில் இருந்து எடுக்கப்படுகிறதாகக் கருத்துமுதல்வாதம்
கருதுகிறது. பொருள்முதல்வாதமோ மனிதர்கள் தமது குறிக்கோளை சமூக வாழ்நிலையில் இருந்து தோற்றம் பெறுவதாகக் கூறுகிறது. அவரவர் சார்ந்து
இருக்கிற வர்க்க நலன்களில் இருந்து இவை தோன்றுவதாகப் பொருள்முதல்வாதம் கூறுகிறது. அதாவது
சிந்தனையின் தோற்றத்தை பொருள்முதல்வாதம் ஆராய்கிறது. இந்தப் பொருள்முதல்வாதப் பார்வை
அம்பேத்கரின் பார்வையோடு அடிப்படையிலேயே வேறுபடுகிறது.
காட்மண்டில், உலகப் பவுத்த
கவுன்சில் மாநாட்டின் போது 1956 ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் அம்பேத்கர் “புத்தரா அல்லது காரல் மார்க்சா” என்ற தலைப்பில்
உரைநிகழ்த்தினார். இது அவரது இறுதிகாலத்தில் ஆற்றிய உரையாகும். “புத்தரா, காரல் மார்க்சா?” என்ற நூலில் என்ன கூறினாரோ அதனையே இவ்வுரையில்
வெளிப்படுத்தியுள்ளார். மார்க்சைப் பற்றிய அவரது நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை.
“புத்த மதத்தில் அகிம்சை” என்ற தலைப்பில் பேசுவதற்கே
அங்கு திட்டமிடப்பட்டிருந்தது. மாநாட்டுப் பிரதிநிதிகளில் பெரும்பாலோர் “புத்தரா அல்லது காரல் மார்க்சா” என்ற தலைப்பில்
பேசும்படி விருப்பம் தெரிவத்திருந்ததால் அம்பேத்கர் இந்தத் தலைப்பில் பேச வேண்டியதாகிவிட்டது.
அந்தப் புத்த மாநாட்டில்
அம்பேத்கர் ஆற்றிய உரையின் நோக்கம், அன்றைய சோஷலிச முகாம், உலகின் பாதியை பிடித்துள்ள
நிலையில், பவுத்த நாடுகளில் உள்ள ஏராளமான மாணவர்கள் கம்யூனிசப் பிடியில் சிக்கியுள்ளதை
கவலையோடு நோக்கி, கம்யூனிச வாழ்க்கை முறையை விடச் சிறந்த வாழ்க்கை முறையைப் பவுத்தம்
வழங்குகிறது என்பதை வலியுறுத்துவதாக இருக்கிறது.
“பவுத்தத்தில்
நம்பிக்கை உள்ளவர்கள் இளம் தலைமுறையினரைச் சமாளிப்பதும் பவுத்தம் கம்யூனிசத்துக்கு
ஒரு மாற்றாக இருக்க முடியும் என்பதை அவர்களுக்கு எடுத்துரைப்பதும் அவசியம். அப்போதுதான்
அது நிலைத்து நிற்க முடியும் என்று பவுத்தம் நம்பிக்கை கொள்ள முடியும். இன்று ஐரோப்பாவின்
பெரும்பாலான மக்களும் ஆசியாவின் பெரும்பாலான இளம் மக்களும் மார்க்ஸ் ஒருவர்தான் நாம்
வழிபடக்கூடிய ஒரே தீர்க்கதரிசி என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அவர்கள் பவுத்த சங்கத்தின்
பெரும்பகுதி மஞ்சள் ஆபத்தே தவிர வேறல்ல என்று கருதுகின்றனர். இதனைப் பிக்குகள் கவனத்தில்
கொள்ள வேண்டும். காரல் மார்க்சுடன் ஒப்பிடும் அளவுக்கு அவர்கள் தங்களைச் சீர்திருத்திக்
கொள்ள வேண்டும, அப்போது பவுத்தம் அதனுடன் போட்டியிட முடியும்.”
ஆகப் பவுத்தம் கம்யூனிசத்துக்கு
ஒரு மாற்றாக வேண்டும் என்பதை வலியுறுத்துவற்கு ஆற்றப்பட்டதே இந்தச் சொற்பொழிவு. அரசு
உலர்ந்து உதிரும் என்பது எப்போது நடைபெறும் என்று கேட்டால் கம்யூனிஸ்டுகளிடம் பதில்
இல்லை என்று கூறியவர் அம்பேத்கர், ஆனால் புத்தத்திலும் அதே நிலையிருப்பதை இவ்வுரையில்
கூறியுள்ளார்.
“பவுத்த பாதை
தாமதமானதாக, சுற்றி வளைத்து அழைத்துச் செல்லக்கூடியதாக, சிரமங்கள் நிறைந்ததாக இருந்தாலும்
அது உங்களைப் பத்திரமான இடத்துக்கு இட்டுச் செல்லும். நீங்கள் கடைப்பிடிக்கும் லட்சியங்கள்
அங்கு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையை நிரந்தரமாக வடிவமைத்துக்
கொள்ளத் துணைநிற்கும். எனவே, அவசரப்பட்டுக் குறுக்கு வழிகளில் செல்லுவதைவிட மெதுவாகச்
செல்லும் பாதையில், சுற்றி வளைத்துச் செல்லுவது எவ்வளவோ நல்லது என்பது என் கருத்து.
வாழ்க்கையில் குறுக்கு வழியில் செல்லுவது எப்போதும் அபாயகரமானது, மிகவும் ஆபத்தானது.”
மார்க்ஸ் கூறுகிற “மதம் மக்களுக்கு அபின்” என்பது மறுவுலகைப்
பற்றிப் பேசுகிற கிறித்துவத்துக்குப் பொருந்தும், புத்தத்திற்குப் பொருந்தாது என்று
கூறியவர், இந்த உரையில் சர்வம் அநித்யம் என்பது
புத்தர் போதனையாகக் கூறுகிறார். யதார்த்த உலகை அநித்தியம் என்று கூறிவிட்டு நித்தியத்தைத்
தேடுவது ஆன்மீகமே.
கம்யூனிச் சித்தாந்தத்தை
அம்பேத்கர் புரிந்த வகையில் இவ்வுரையில் தொகுக்கிறார். ஏழைகள் செல்வந்தர்களால் சுரண்டப்படுகின்றனர்,
செல்வந்தர்களிடம் சொத்து இருப்பதே இதற்குக் காரணம், அவர்கள் ஏழைகளை அடிமைப்படுத்துகின்றனர்,
துன்ப துயரத்திலும் துக்கத்திலும் வறுமையிலும் ஆழ்த்துகிறது. இதுதான் மார்க்சின் அடிப்படைக்
கோட்பாடாக வைக்கிறார். இதற்கு மார்க்ஸ் கூறும் மருந்தாக அம்பேத்கர் கூறுகிறார், தனியார்
சொத்துரிமையை ஒழித்துக்கட்டுவது ஒன்றுதான் வழி. அடுத்து, பாட்டாளி வார்க்க சர்வாதிகரத்தைப்
பற்றிப் பேசுகிறார்.
“காரல் மார்க்சின்
மொழியில் கூறுவதனால் தொழிலாளர்கள் தான் உபரி மதிப்பை உற்பத்தி செய்கின்றனர். ஆனால்
அவர்கள் உற்பத்தி செய்யும் உபரி மதிப்பு அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இது உடைமை உரிமையாளனால்
அபகரித்துக் கொள்ளப்படுகிறது. உழைக்கும் மனிதனின் முயற்சியால் உற்பத்தி செய்யப்படும்
உபரி மதிப்பை உடைமையாளனால் ஏன் அபகரித்துக் கொள்ளப்படுகிறது என்ற கேள்வியைக் காரல்
மார்க்ஸ் கேட்டார். இதற்கு ஒரே உடைமையாளன் அரசாங்கம்தான் என்பதே அவரது பதில். இதனாலேயே
பாட்டாளி வாக்க சர்வாதிகாரம் இருக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தை அவர் வலியுறுத்தினார்.
… அரசாங்கம் சுரண்டப்பட்ட வர்க்கங்களாலன்றிச் சுரண்டும் வர்க்கங்களால் நிர்வகிக்கப்படக்
கூடாது. அதாவது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலவ வேண்டும். இவைதான் காரல் மார்க்சின்
அடிப்படையான கருத்துகள்.”
இந்தக் கருத்துக்கள் மார்க்சின்
விஞ்ஞான வழியில் விவரிக்கப்படவில்லை. முதலாளித்துவத்தின் உள்முரண்பாட்டினாலும், முதலாளித்துவ
வளர்ச்சியில் சமூக உற்பத்தியாக்கப்பட்ட முறையில் ஏற்பட்ட நெருக்கடிக்கு தீர்வாக, உழைக்கும்
மக்களின் புரட்சி ஏற்படுகிறது, அந்தப் புரட்சியால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தோற்றுவிக்கப்படுகிறது.
இது எந்த வகையிலும் மார்க்சின் மன விருப்பமோ, ஏழை உழைப்பாளர்களின் ஏக்க வெளிப்பாடோ
கிடையாது. சமூக வளர்ச்சியின் விளைவே ஆகும். இதனைப் புரிந்து கொள்வதற்கு, மார்க்சின்
வரலாற்றியல் பொருள்முதல்வாதமும், மார்க்சிய வழியில் முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சியையும்
புரிந்து கொள்ள வேண்டும். புரட்சி ஏற்படுவதற்கான காரணத்தை வரலாற்றியல் பொருள்முதல்வாதம்
விளக்குகிறது. புரட்சிக்கு பின்பான அரசு ஏன் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக அமைய வேண்டும்
என்பதற்கும் காரணமும் காட்டப்படுகிறது. இந்தச் சர்வாதிகாரத்தைத் தனிநபர் சர்வாதிகாரமாகப்
புரிந்து கொள்ளக் கூடாது என்பதை மேலே தெளிவாக்கப்பட்டுள்ளது.
இந்த விஞ்ஞான வழிப்பட்ட
பார்வை அம்பேத்கர்கரிடம் வெளிப்படாததற்குக் காரணம், மார்க்சியத்தை அதன் எதிராளியிடம்
இருந்து படித்ததேயாகும். இதனை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தாம் ஒப்பிடுவதற்காகப்
பவுத்தத்தையும் மார்க்சியத்தையும் நன்றாகப் படித்தாகக் கூறுகிறார். பவுத்தம் பிடகத்தின்
வழியாகப் படித்ததைக் குறிப்பிடுகிறார், அதே போல மார்க்சியத்தை எங்கே எந்த நூலில் படித்தார்
என்பதைக் கூறவில்லை. மார்க்சியத்தை அதன் எதிராளிகள் எழுதிய விமர்சன நூல்களில் இருந்து
கற்றிருக்கிறார், அதனாலேயே அதன் விஞ்ஞானத் தன்மையை அம்பேத்கர் அவர்களால் புரிந்து கொள்ள
முடியாது போய்விட்டது. அதனால் தான் சோஷலிசப் புரட்சி தவிர்க்க முடியாதது என்றால் மக்கள்
ஏன் ரத்தம் சிந்தி புரட்சியை நிகழ்த்தினர் என்று கேட்கிறார்.
“மார்க்சின்
கோட்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. அப்போதிலிருந்து
அது மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த விமர்சனத்தின் விளைவாக, காரல்
மார்க்ஸ் உருவாக்கிய சித்தாந்தக் கட்டமைப்பின் பல பகுதிகள் நொறுங்கிப் போய்விட்டன.”
இந்த அம்பேத்கரின் கூற்றின்படி
அவர் மார்க்சிய விமர்சனங்களையே படித்துள்ளார் என்று தெரிகிறது. மார்க்சை நேரடியாகப்
படித்திருந்தால் அதன் விஞ்ஞானத் தன்மையைப் புரிந்து ஏற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு இருந்திருக்கும்.
கடைசிவரை புத்தத்தின் அன்பு, நீதி, நல்லெண்ணம் போன்ற கருத்துநிலையிலேயே நிலைபெற்றுள்ளார்.
அதே போல் ஜனநாயகம் என்பதை முற்றமுழுமையான ஜனநாயகமாகவே கருதியுள்ளார். அதனால் புத்தரை
ஒரு மாபெரும் ஜனநாயகவாதி என்று கூறிவிட்டுப் பாட்டாளி வார்க்க சர்வாதிகரத்தை தனிநபர்
சர்வாதிகாரமாகப் புரிந்து கொண்டுள்ளார்.
சோஷச அரசில் ஜனநாயகம் விரிவாக்கப்பட்டு,
கம்யூனிச அரசில் அடக்கியாள வேண்டியவர் எவரும் இல்லையாத நிலையில் ஜனநாயகம் முழுநிறைவடைந்து,
ஜனநாயகம் தேவையற்றதாகிவிடும். இதனைப் புரிந்து கொள்வதற்குக் கண்டிப்பாக வரலாற்றியல்
பொருள்முதல்வாதமும் முதலாளித்துவப் பொருளாதார உள்முரண்பாட்டையும் அறிந்து கொள்ள வேண்டும்.
இவையிரண்டையும் இணைத்து லெனின் கூறியதை பார்ப்போம்.
“தொழிலாளி வர்க்கமும்
அதன் கோரிக்கைகளும் இன்றைய பொருளாதார அமைப்பு முறையிலிருந்து விளைந்த அவசியமான விளைவே
என்றும், இந்தப் பொருளாதார அமைப்பு முறையும் முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்து தவிர்க்க
முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, அதனை ஒழுங்கமைத்து அணி திரட்டுகின்றன
என்றும் முதன் முதலாக எடுத்துக்காட்டியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே. இன்று
மனிதகுலத்தை ஒடுக்கி வதைத்து வரும் தீமைகளிலிருந்து அதை விடுவிக்கவல்லது ஒழுங்கமைத்துக்
கொண்டு அணிதிரண்டு நிற்கும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமே தவிர உயர்ந்த
சிந்தனை படைத்த தனிநபர்கள் சிலரின் நல்லெண்ணமிக்க முயற்சிகள் அல்ல என்று அவ்விருவரும்
எடுத்துக்காட்டினார்கள்.
சோஷலிசம் என்பது
ஏதோ கனவு காண்பவர்களுடைய கற்பனைப் பொருள் அல்ல, நவீன சமூகத்தின் உற்பத்தி சக்திகளுடைய வளர்ச்சியின் கடைசிக் குறிக்கோளும்,
தவிர்க்க முடியாத விளைவும் ஆகும் என்று தங்கள் விஞ்ஞான நூல்களிலே மார்க்சும் எங்கெல்சும்
முதன் முதலாக விளக்கினர்.” (பிடெரிக் எங்கெல்ஸ் மறைவின் போது)
சோஷலிசம் தவிர்க்க முடியாத
விளைவு என்று மார்க்ஸ், எங்கெல்ஸ் கூறியதின் பொருள் இதுவே. இதில் மனிதனது செயற்பாடு
இல்லாமல் புரட்சி நடைபெறும் என்று கூறவில்லை. முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு முறை
தவிர்க்க முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, வர்க்கப் போராட்டத்தின் மூலமே
முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிந்து சோஷலிசத்தை அமைக்கும் என்றே கூறியுள்ளனர். பொருளாதாயத
நிலைமை தானாகவே செயற்படும் என்று கூறுவது நிர்ணயவாதமாகும், அது மார்க்சியமாகாது. எங்கெல்ஸ்
இந்த நிர்ணயவாதத்தை எதிர்த்து தமது இறுதிகாலத்தில் போராடினார்.
“….சில நபர்கள் தம் வசதிக்காகக் கற்பனை செய்ய முயல்வதைப் போல, பொருளாதார நிலைமை தானாகவே செயல்பட்டு விளைவை ஏற்படுத்துவதில்லை."
என்று எங்கெல்ஸ் வொ.போர்கியுசுக்கு எழுதிய (லண்டன், ஜனவரி
25, 1894) கடிதத்தில்
கூறியுள்ளார்.
வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தையும்
அதன் வழியில் சோஷலிசத்தை நடைமுறைப்படுத்தும் சக்தியான பாட்டாளிகள் பற்றியும் லெனின்
மேலும் கூறுகிறார்:-
“வாழ்வின் உண்மைகளை
ஆராய்ந்து, இயற்கையின் வளர்ச்சியை விளக்குவது மனத்தின் வளர்ச்சியல்ல என்றும், அதற்கு
மாறாக மனத்தைப் பற்றிய விளக்கமே இயற்கையில் இருந்துதான், பருப்பொருளில் இருந்துதான் பெறப்பட வேண்டும் என்றும் அவர்கள் கண்டார்கள்…
ஹெகலையும், ஹெகலைப் பின்பற்றும் மற்றவர்களையும் போல் அல்லாமல், மார்க்சும் எங்கெல்சும்
பொருள்முதல்வாதிகள். உலகத்தையும் மனிதகுலத்தையும் அவர்கள் பொருள்முதல்வாத நிலையில்
இருந்து பார்த்து இயற்கையின் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அடிப்படையாகப் பொருளாயத காரணங்கள் எப்படி அமைந்துள்ளனவோ,
அதேபோல் மனிதச் சமூகத்தின் வளர்ச்சியும் பொருளாயத
வகைப்பட்ட உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியினால் வரையறுக்கப்படுகிறது என்று அறிந்து
கொண்டனர்.
மனிதத் தேவைகளை
நிறைவு செய்வதற்குரிய பொருட்களை உற்பத்தி செய்வதில் மனிதர்கள் பரஸ்பரமாக ஏற்படுத்திக்
கொள்ளும் உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியைப் பொறுத்திருக்கின்றன. சமூக வாழ்வின்
எல்லாத் தோற்றங்களுக்கும், மனித ஆவலாதிகளுக்கும், கருத்துக்களுக்கும், சட்டங்களுக்கும்
உரிய விளக்கம் இந்த உறவுகளிலேதான் பொதிந்திருக்கிறது.
உற்பத்தி சக்திகளின்
வளர்ச்சியானது தனிச்சொத்தின் அடிப்படையில் அமைந்த சமூக உறவுகளைப் படைக்கிறது, ஆனால்
உற்பத்தி சக்திகளின் அதே வளர்ச்சி பெரும்பான்மையானவர்களின் சொத்தைப் பறித்து அற்பசொற்பமான
சிறுபான்மையோரிடம் அதைச் சேர்த்துக் குவித்து வைக்கிறதை நாம் இன்று காண்கிறோம். நவீன
காலத்திய சமூக அமைப்புமுறைக்கு அடிப்படையாக உள்ள சொத்து என்பதை அது அழிக்கிறது, சோஷலிஸ்டுகள்
தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட அதே குறிக்கோளை நோக்கி அதுவும் தானாகச் செல்ல முயற்சிக்கிறது.”
(பிரடெரிக் எங்கெல்ஸ் மறைவின் போது)
இவைகளே விஞ்ஞான வகைப்பட்ட
மார்க்சியம். இந்த விஞ்ஞானத் தன்மையை நீக்கிவிட்டு மற்றதைப் பார்த்தால் மார்க்சியம்
ஒரு சதியினைப் புரிந்திடும் அராஜகவாதமாகத் தான் தென்படும். மார்க்சியம் அராஜகவாதத்துக்கு
எதிரானது.
கம்யூனிச தத்துவத்தின் நோக்கம்,
பன்றிகளைப் போல் மனிதர்களை உண்டு கொழுக்க வைப்பதே என்று தம்நூலின் இறுதியில் அம்பேத்கர்
கூறுகிறார். பொருளாயதம் என்பதைச் சாப்பாட்டாக அம்பேத்கர் பார்ப்பதால் தான் விஞ்ஞானக்
கம்யூனிசத்தை வெறும் உணவுப் பிரச்சினையாகப் பார்க்கிறார். அதனால் தான் மனிதன் ஆன்மிக
வளர்ச்சியையும் பெற வேண்டும் என்று சேர்த்துச் சொல்கிறார். ஆனால் மார்க்சியம் ஆன்மிகத்தை
ஒடுக்கும் கருவியாகத்தான் பார்க்கிறது.
மார்க்சியத்திற்கு எதிரான
இந்த, “உண்டு கொழுக்கும்” விமர்சனத்தை
ஸ்டாலின் மிகக் கடுமையாக எதிர்க்கிறார்.
“உண்பதுதான்
சித்தாந்தத்தைத் தீர்மானிக்கிறது என்று எங்கே, எப்போது, எவ்வுலகில், எந்த மார்க்ஸ்
கூறினார்? சொல்லுங்கள் கனவான்களே, சொல்லுங்கள்! நீங்கள் சொல்வதை நிரூபிப்பதற்கு, மார்க்சின்
நூல்களில் இருந்து, ஒரு சொற்றொடரை, ஒரே ஒரு சொல்லை நீங்கள் எடுத்துக் காட்டியிருக்கிறீர்களா?
பொருளாதார நிலைமைகள்தான் மனிதர்களின் உணர்வை, அவர்களின் சித்தாந்தத்தைத் தீர்மானிக்கிறது
என்று மார்க்ஸ் கூறியது உண்மைதான். ஆனால், உண்பதும் பொருளாதாரச் சூழ்நிலைமைகளும் ஒன்றே
என்று யார் சொன்னார்கள்?” (அராஜகவாதமா? சோஷலிசமா? -பக்கம் 44)
பிரெஞ்சுப் புரட்சியின்
சகோதரத்துவம், சுதந்திரம், சமத்துவம் இந்த முழக்கத்தை வரவேற்கும் அம்பேத்கர், ருஷ்யப்
புரட்சி சமத்துவத்தை ஏற்படுத்தியது என்பதற்காகச் சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும்
தியாகம் செய்ய முடியாது என்கிறார். பாட்டாளி வார்க்க சர்வாதிகாரத்தில் காணப்படும் ஜனநாயக
விரிவாக்கத்தை அம்பேத்கர் சிறிதும் புரிந்து கொள்ளவில்லை. இந்த ஜனநாயகமே உழைக்கும்
மக்களின் சகோதரத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துகிறது.
இச்சிறு கட்டுரையில், அம்பேத்கரின்
மதம் மற்றும் மார்க்சியம் பற்றிய கண்ணோட்டமே ஆராயப்பட்டுள்ளது. அவர் எந்தச் சீர்திருத்தங்களுக்காகப்
போராடினாரோ, அந்தச் சீர்த்திருத்தங்களுக்கா, தங்களது வழிகளில் கம்யூனிஸ்டுகளும் போராடுகின்றனர்.
அதே போல், இந்தியாவில் காணப்படும் சாதி முதற்கொண்டான முரணை போக்குவதற்குப் புத்தரின்
எண்வழிப்பாதையின் (அஷ்டாங்க மார்க்கம்) எல்லையைப் புரிந்து கொண்டு பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்
அணுகி முரணைக் களையவே கம்யூனிஸ்டுகள் முனைகிறார்கள்.
புத்தத்தோடு மார்க்சியத்தை
அம்பேத்கர் ஒப்பிடுவது கம்யூனிச சமூகத்தை அடைவதற்கான வழிமுறை வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுவதற்காகவே
ஆகும். பவுத்தம் தமது இறுதியில் அடையும் நிப்பாணத்தைக் கம்யூனிச சமுகமாகக் கருதவில்லை
என்பது வேறு விசயம். இருந்தாலும் அம்பேத்கர் தமது பவுத்தத்தின் மூலம் கம்யூனிச சமூகத்தை
அடைவது பற்றியே பேசுகிறார்.
இந்நூலின் தொடக்கத்திலேயே அம்பேத்கர் கூறியுள்ளார்:-
“மார்க்சிஸ்டுகள்
தங்களுடைய விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் புத்தரைப் படித்தறிந்து அவர்
எந்தக் கொள்கைகளைப் பற்றி நின்றார் என்பதைப் புரிந்து கொள்வார்களேயானால் அவர்களின்
கருத்தோட்டத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும் என்று நான் உணர்கிறேன்.”
சமூகத்தில்
தோன்றிய இன்றைய பிரச்சினை வரைக்கான தீர்வாக, 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த புத்தரின்
சிந்தனைகள் அமையுமா? அல்லது பழைய முற்போக்கு சிந்தனைகளின் தொடர்ச்சியாகக் காணப்படும்,
நவீன விஞ்ஞானத்தை உள்ளடக்கிய இயக்கவியல் (வரலாற்றியல்) பொருள்முதல்வாதத்தைத் தத்துவமாகக்
கொண்ட மார்க்சியம் இதனைத் தீர்க்குமா? என்பதை விருப்பு வெறுப்பற்ற முறையில் ஆராய்ந்து
பார்க்க வேண்டும்.
விஞ்ஞானக் கம்யூனிசத்தின
வழிகாட்டுதலின்படி, கம்யூனிச சமூகத்தை அடைவதற்கு, புத்தரின் அன்பு, நீதி, நல்லெண்ணம்
ஆகியவற்றின் பற்றாக்குறையை உணர்ந்தவர்கள் கம்யூனிசப் பாதையைத் தான் தேர்ந்தெடுப்பார்கள்.
சாதியற்ற, வர்க்கமற்ற சமூகத்திற்காகப்
போராடுவோம்.
தோழர் இன்று வர்க்க முரண்பாடுகளை சாதி தீயில் எரித்து விட நினைக்கும் சிலர் மறந்தே போய்விடுகின்றனர் தாங்கள் எந்த வர்க்கத்துக்கு சேவை செய்கிறோம் என்பதனை, அதில் அம்பேத்கர் எந்த வர்க்க பிரதிநிதி மற்றும் அவரின் பல கொள்கை சமூக சீர்திருத்தம் மேலும் மதம் மீதான கண்ணோட்டம் என்பவை கதம்பமாக மக்களின் விடுதலையை நேசிப்போரை ஆளும்வர்க்க சீர்திருத்த சில கொள்கையால் திசைத்திருப்பினார், புரட்சிக்கு எதிரான ஆளும்வர்க்க தேவையை முனைப்பாக செய்தவர், தங்களின் பதிவு மார்க்சிய அடிப்படை மேலும் புத்தரின் போதாமையை தெளிவுப் படுத்தியதுடன், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான தத்துவம் மார்க்சியம் மட்டுமே என்பதனை ஆணித்தரமாக நிலை நாட்டி உள்ளீர் நன்று தோழர்
ReplyDeleteமகிழ்ச்சி தோழர்.
Deleteஇரண்டு முறை பதிந்துள்ளதில் ஒன்றை நீக்கிவிடுகிறேன் தோழர்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDelete