-த.ந.தனராமன் - புதுச்சேரி
"பொருளாதார, தத்துவ குறிப்பேடு 1844" புத்தகத்தில் பெண்கள் பொது வேசியாக்கப்படவேண்டும், பொது உடைமையாக்கப்படவேண்டும் என்று மார்க்ஸ் கூறியுள்ளதாக 5.9.2020 துக்ளக் இதழில் அதன் ஆசிரியர் திரு. குருமூர்த்தி, மார்க்ஸை விவாதப் பொருளாக்கியுள்ளார்.
இது கம்யூனிசத்துக்கு எதிரான பரப்புரை. கம்யூனிஸ்டுகள் மீது பொழியும் அவதூறு. இன்றைக்கு 2020-ம் ஆண்டில் 1844-ம் ஆண்டு எழுதியதாக குறிப்பிடப்படுவதற்கு பதில் சொல்ல வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த திரு. குருமூர்த்திக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். பொதுவுடைமை பற்றி குறிப்பாக திருமண முறை, குடும்பம், பொதுவுடைமை மற்றும் பெண்கள் பொதுவுடைமை (பொது வேசி) பற்றி புரிய வைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த அக்கப்போர் புகார் கூறுபவர்கள் அவர் காலத்தில் இருந்தனர். அவர்களைப் UPALITETU "uninformed reviewer who tries to hide his complete ignoratice and intellectual poverty" அதாவது, விவரம் அறியாததையும், அறிவு வறுமையையும் மறைக்கவே இவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் என்று குருமூர்த்தி போன்று அவர் காலத்தில் புருனோபாவர் என்பவர் கூறியதற்கு பதிலாக இவ்வாறு மார்க்கம் கூறியுள்ளார். (பார்க்க = "1844-பொருளாதார, தத்துவ குறிப்பேடு” நூல் பக் 18 1974 பதிப்பு)
மார்க்சைப் பற்றியும் விஞ்ஞான கம்யூனிசத்தைப் பற்றியும் "இந்துத்வா”வின் சித்தாந்த குருக்களில் ஒருவரான குருமூர்த்திக்கு எந்தளவுக்கு அறிவு வறுமை உள்ளது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்துத்துவா என்பது மத அரசியல். கம்யூனிசம் என்பது விஞ்ஞானம். மத கண்ணாடி கொண்டு விஞ்ஞானத்தை பார்க்கக் கூடாது. விஞ்ஞானம் முன்னோக்கி பார்க்கக்கூடியது. மதம் பின்னோக்கி பார்க்கக்கூடியது.
பெண்களை பற்றிய மார்க்சிய பொருளாதார அம்சம்:
ஒவ்வொரு உற்பத்தி முறையும் ஒரு சமூக வடிவத்தை உருவாக்குகிறது. சமூக உற்பத்தி முறை அடிப்படை. திருமண முறை சமூக மேல் கட்டுமானம். ஒவ்வொரு திருமண முறையும் ஒவ்வொரு சமூக வடிவத்துக்கு உகந்ததாக அதற்கான சட்டத்திட்டங்களுடன் அமைத்து கொள்ளப்படுகின்றன.
எடுத்த எடுப்பிலேயே ஒரு தார மண குடும்ப முறை ஏற்பட்டுவிடவில்லை, இரத்த உறவுக் குடும்பம், புனலுவா குடும்பம், இணை குடும்பம் என்கிற முறைக்குப் பிறகு தான் ஏற்படுகிறது. ஒரு தார குடும்ப முறை சொத்துடையினால் நிலைநிறுத்தப்படுகிறது.
மாடு மேய்த்தல், பயிரிடுதல் என்று வேலைப்பிரிவினை சொத்து உறவை உருவாக்குகிறது. சொத்து உறவுதான் ஒருதார குடும்பம், அரசு ஆகியவற்றின் மூலாதாரம். சொத்து என்ற உறவு ஏற்பட்ட உடன் ஆண், பெண்களை அடிமைப்படுத்துவது ஆரம்பமாகியது. ஏனெனில் தன் உழைப்பால் விளைந்த சொத்தை தன் வாரிசுக்கு சேரவேண்டும் என்ற ஆணாதிக்கத்தால் குடும்பத்திற்குள் பெண்கள் அடிமையானார்கள். சொத்து உறவு பலதார மணமுறையிலிருந்து (இரத்த உறவுக் குடும்பம், புனலுவா குடும்பம், இணை குடும்பம்) ஒருதார மணமுறைக்கு மாறியதில் பெரும்பங்கு வகித்தது.
நிலவுடைமை சமுதாயத்தில் ஒருதார மணமுறையும், தேவதாசி எனும் பெண் பொதுவுடைமையும் அக்கம் பக்கமாகவே இருந்து வந்தது. 20-ம் நூற்றாண்டில்தான் தேவதாசி முறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டது என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும்.
நிலவுடைமை சமுதாயத்திலிருந்து தொழில் உற்பத்தி முறை, முதலாளித்துவ சமுதாயம் தோன்றும் பொழுது, உலகம் முழுவதும் தொழில், முதலாளித்துவமயமாகிறது. கூடவே, நவீன ஆலைத்தொழிலாளி வர்க்கமும் உருவாகிறது. தனிச்சொத்து வடிவம் நிலத்திலிருந்து ஆலை வடிவத்தில், தொழில் மூலதனமாக மாறுகிறது. பெண்களை உற்பத்தி கருவிகளாக, மனித பண்டங்களாக மூலதனம் பார்க்கிறது. ஆகவே விபசாரத்தை தொழிலாக அங்கீகரித்து வைசன்சு கொடுத்து லாபம் பார்க்கிறது.
தனியார் உடைமை என்பது உலக வர்த்தகத்தினால் யுனிவர்சல் தனியார் உடைமையாக மாறிவிட்டது. உற்பத்தி சமூகமயமாகிவிட்டது. உற்பத்தியின் லாபம் தனியார் மயமாகவே உள்ளது. தனியார் சுவிகரிப்பை உலகமுழுவதும் சமூகமயமாக்கிவிட்ட தொழிலாளர்கள், தொழில் மூலதனத்தை சமூகமயமாக்க பொதுவுடைமையாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். முதலாளி வர்க்கத்திற்கு, அதனை ஆதரிக்கும் சிந்தனையாளர்களுக்கு உற்பத்தி சாதனங்களை பொதுவுடைமை ஆக்கக்கூடாது, எல்லாம் தனியார்மயமாக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு பொதுவுடைமை கோரிக்கையை எதிர்க்கவும். தனியார் மயத்தை ஆதரிக்கவும் ஒரு சித்தாந்தம் தேவைப்படுகிறது. அதுவே இந்தியாவில் இந்துத்துவ சித்தாந்தம்.
பொதுமக்கள் அபிப்ராயத்தை திசை திருப்ப இக்கால கட்டத்தில் பெண்களை பொதுவுடைமையாக்க, பொது வேசியாக்கப்பட வேண்டும் என்று "பொருளாதார, தத்துவ குறிப்பேடு 1844" நூலில் மார்க்ஸ் எழுதியுள்ளார் என்று குருமூர்த்தி 5.8.20 துக்ளக் இதழில் எழுதுகிறார். திரு. குருமூர்த்தி குறிப்பிடும் நூலின் பகுதி "தனியார் சொத்தும் கம்யூனிசமும் என்ற தலைப்பில் பக்கம் 87-90 வரை உள்ள பக்கத்தில் (1974 மாஸ்கோ பதிப்பு) மார்க்க கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
"Finally, Communism is the positive expression of annulled private property at first as Universal Private property. By embracing this relation as a whole, communism is:
1. In its first form only a generalization and consummation (of this relation). ............ Finally, this movement of opposing universal private property to private property finds expression in the beastly form of opposing to marriage (certainly a form of exclusive private property) the Community of Women, in which a woman becomes a piece of Communal and Common Property. It may be said that this idea of the Community of Women gives away the secret of this as yet completely crude and thoughtless communism.
திருமணம் என்பது தனியார் சொத்து வடிவத்தில் ஒன்று. தனியார் சொத்து universal தனியார் சொத்தாக மாறும் பொழுது பெண்களும் universal தனியார் சொத்தாக மாறுதலடைவதாக கொச்சை கம்யூனிசம், சிந்தனையற்ற கம்யூனிசம் (Crude & Thoughtless Communism) கருதுகிறது என்பதே இதன் சுருக்கமான பொருள். சீதனம், வரதட்சணை, திருமண கௌரவம், சொத்தில் பெண்களுக்கு உரிமை மறுப்பு, பாகப்பிரிவினையில் பாதகம் ஆகிய இவை எல்லாம் திருமண உறவுக்குள் அடங்கியுள்ள சொத்து உறவுகளாகும்.
கொச்சை கம்யூனிசத்திலிருந்து தான் கற்பனா சோசலிசம், விஞ்ஞான கம்யூனிசம் என்ற கட்டங்களாக கம்யூனிச கருத்து வளர்ச்சி அடைகிறது என்ற கருத்தில் Universal private property passes private prostitution to a state of uriversal prostitution with the community என்று கூறுகிறார். குடும்பம், திருமணம் ஆகியவை எல்லாம் புனிதமானவை, தனியார் சொத்து புனிதமானது என்பதெல்லாம் முதலாளி வர்க்க சிந்தனை.
"முதலாளித்துவ குடும்பத்தின் உடன் நிகழ்வு மறைந்து போகும் போது கூடவே முதலாளித்துவக் குடும்பமும் இயல்பாகவே மறைந்து விடும். மூலதனம் மறையும் போது இரண்டும் (முதலாளித்துவ உடன் நிகழ்வு திருமண முறை, முதலாளித்துவ குடும்பம்) மறைந்துவிடும் என்று உலகத்திற்கு 1848-ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பத்தி 102-ல் ஏற்கனவே அறிவித்துள்ளது. “அறிக்கையில்" பத்தி 105 விருந்து 112 வரை மார்க்ஸ், திருவாளர் குருமூர்த்திக்கு பதில் கூறியுள்ளார். பார்க்க : பக்கம் 50, 51 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, தேவ. பேரின்பன் மொழி பெயர்ப்பு, 2008 பதிப்பு. அப்பக்கங்களை அவர் மீண்டும் ஒருமுறை படித்து அறிவது அவசியம். அவருக்கு பதில் சொல்ல எல்லா கம்யூனிஸ்ட்களும், ஜனநாயகவாதிகளும் மீண்டும் "அறிக்கையை” அறிந்து கொள்வது அவசியம். திருமண முறையை பொருளாதார அம்சமாக பார்க்கும் மார்க்சின் பார்வை இதுதான்.
பெண்களை பற்றிய மார்க்ஸிய தத்துவார்த்த அம்சம் :
இந்தியாவில் மதவடிவத்தில் தேவதாசி முறை இருந்து வந்தது போல் 19-ஆம் நூற்றாண்டு முதல் பாதிவரை பிரெஞ்சு ரகசிய சங்க உறுப்பினர்கள் மத்தியில் மத வடிவத்தில் பொது மகளிர் பற்றிய கருத்துகள் நிலவி வந்தன. 19 ஆம் நூற்றாண்டின் பின்பாதியில் பெண்களை பொதுவாக அனுபவிப்பதே கம்யூனிசம் என்று எந்த கம்யூனிஸ்டும் கருதவில்லை. அவ்வாறான கருத்துக்களை சிந்தனையற்ற, கொச்சை கம்யூனிசம் (Thoughtless, Crude Communism) என்று “1844 குறிப்பேட்டில்” மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.
ஏங்கெல்ஸ் “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்" எனும் கேள்வி-பதில் வடிவ நூலில் 21-வது கேள்வி-பதிலில் கம்யூனிச சமுதாயத்தில் குடும்பத்தின் மீது கம்யூனிசத்தின் செல்வாக்கு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு கீழ்க்கண்டவாறு பதில் அளிக்கிறார்:-
"இருபாலினருக்கான உறவு இரு நபர்களின் தனிப்பட்ட சொந்த விடயமாக கம்யூனிச சமுதாயத்தில் இருக்கும். கம்யூனிச சமுதாயம் அவர்களுடைய தனிப்பட்ட உறவில் தலையிடாது. நடப்பிலுள்ள திருமணம் இரண்டு அடிப்படைகளின் மேல் கட்டப்பட்டுள்ளது. ஒன்று தனிச்சொத்துரிமை, இன்னொன்று குழந்தை வளர்ப்பு. இந்த இரண்டும் சமுதாயமயமாகிவிட்டால், அரசு பொறுப்பாக ஆகிவிட்டால் இன்றைய முதலாளித்துவ திருமணத்தின் அடிப்படை தகர்ந்துவிடுகிறது. இதனால் மனைவி கணவனையும், குழந்தைகள் பெற்றோர்களையும் நம்பி இருப்பது இல்லாமல் போகிறது. கம்யூனிசத்தில் பெண்கள் பொதுவாக்கப்படுவார்கள் என்று ஒழுக்கம் பேசும் குறுமதியாளர்களுக்கான விடை இதிலே அடங்கியுள்ளது தெளிவாகும். பொது பெண்டிர் முறை (தேவதாசி, விபசாரம்) முதலாளி வர்க்க சமுதாயத்தில் நடைமுறையில் உள்ள உண்மையாகும். தனியார் சொத்தின் வேரிலிருந்து முளைப்பதுதான் பொது பெண்டிர்முறை. தனியார் சொத்து பொதுச்சொத்தாக மாற்றப்படும் பொழுது பொது பெண்டிர் தனி பெண்டிராக விடுதலை பெறுகின்றனர். முதலாளித்துவ திருமணம், குழந்தை வளர்ப்பு என்பவை முதலாளித்துவ வடிவத்திலிருந்து பொது சமூகமயமாக்கப்பட்டு பொது பெண்டிர் முறை ஒழிக்கப்படுகிறது.”
இதேபோல்
மார்க்கம் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
"மனிதனுக்கு மனிதன் கொண்டுள்ள, நேரடியான, இயற்கையான, தேவையான உறவுதான் ஆண் பெண்ணோடு கொண்டுள்ள உறவு இது இயற்கையான மனித ஜீவராசி உறவு (Species-being fatural relationship). இந்த உறவு இயற்கையானது, இயற்கை மனிதன் மூலம் வெளிப்படுகிறது. மனிதன் இயற்கையை வெளிப்படுத்துகிறான். மனித சாராம்சம் இயற்கை மூலமாகவும், இயற்கையின் சாராம்சம் மனிதன் மூலமாகவும் காணமுடிகிறது. இதற்கு மாறாக ஆண், பெண்ணை போகப் பொருளாக, போரில் கைப்பற்றப்பட்ட, கொள்ளை அடிக்கப்பட்ட பொருள்களில் ஒன்றாக, தனக்கு அடிமையாக, வேலைக்காரியாக கருதுவது, ஆண் தன்னைத்தானே கீழ்மைப்படுத்திக் கொள்வதாகும். ஆண் பெண்ணை எப்படி நடத்துகிறானோ அந்தளவிற்கு அவன் தரம் வெளிப்படுகிறது. தன்னை ஒரு ஜீவராசியாக கருதினால் பெண்ணையும் தன்னைப்போல் ஒரு ஜீவராசியாக கருத வேண்டும். அப்பொழுது தான் அது இயற்கையான உறவாகவும், நடத்தையாகவும் இருக்கமுடியும். இயற்கையான நடத்தையாக அவன் நடத்தை இருக்கும் பொழுதுதான் அவன் மனித ஜீவியாக இருக்கமுடியும். இதை ஆண் உணரும் பொழுது மனித சாராம்சத்தை, மனித மதிப்பை, இயற்கை சாராம்சத்தை, இயற்கை மதிப்பை, தன்னைத்தானே உணர்ந்தவன் ஆகிறான். மனித ஜீவி என்ற நிலையிலிருந்து இயற்கை மனிதனாகிறான். இயற்கை மனிதன் முழு மனிதனாகிறான். ஆணுக்கு பெண் தேவை என்று உணரும் போது ஒருவரின்றி ஒருவர் வாழ முடியாது என்றும் ஒருவருக்கு ஒருவர் தேவை என்பதும் சமூக தேவையாகிறது. இந்த சமூக தேவையை உணரும்போதுதான் தான் தனிநபர் அல்ல, தனியாக வாழமுடியாது, தான் ஒரு சமூக ஜீவி என்று உணர்கின்றான். அவ்வாறு உணர ஆரம்பிக்கும் போதுதான் தனிச்சொத்து (Private Property) சமூக ஜீவிக்களுக்கான (Universal Public Property) ஆக மாற்றப்படவேண்டும் என்ற சிந்தனை உருவாகுகிறது. இவ்வாறான சிந்தனையின் தொடக்கத்தில் பெண்களை உடைமையாக கருதிய 14-ஆம் நூற்றாண்டின் முற்பாதி வரை பொது பெண்டிர் என்ற கருத்து ஆரம்ப கால சிந்தனையற்ற, கொச்சை கம்யூனிசமாக அரும்பியது என்று "பொருளாதார தத்துவ குறிப்பேடுகள் 1844" (பக்கம் 89, 1974 பதிப்பு) நூலில் மார்க்ஸ் கூறுகிறார்.
இக்கருத்தை வளர்ச்சி அடைந்த விஞ்ஞான கம்யூனிச கருத்தை உருவாக்கிய மார்க்ஸ் தன் கம்யூனிச கருத்தாக கூறினார் என்று கூறுவதை அறிவு மோசடி (Intellectual Fraud) என்று கூறலாம்.
சொத்தையும், செல்வத்தையும் பெறுவதற்காக ஒரு ஆண் முதலாளியின் ஆலையில் கூலி உழைப்பைச் செய்வதும் விபச்சாரம் தான். சொத்து, செவ்வம், குழந்தைகள் ஆகிய இல்லாதிருப்பதன் காரணமாக, மனைவி கணவனுடன் கொள்ளும் உறவும் அவள் தன்னைத்தானே கணவனுடன் விபசாரத்தில் ஈடுபடுத்திக் கொள்வதுதான். ஆனால் ஒட்டுமொத்த சமுதாயத்தால் குழந்தைகள் பராமரிக்கப்படும் நிலையும் சமுதாய உறுப்பினர்களிடையே சமத்துவமும் ஏற்படுகையில், பெண்களைப் பொதுவாக அனுபவித்தல், ரகசியமாக அனுபவித்தல் (விபசாரம், சோரம், பொதுப்பெண்டிர், தேவதாசி முறை) சமுதாயத்தால் ஒழித்துக் கட்டப்படும்.
"மார்க்சின் குறிப்பேடுகள்" , "ஏங்கெல்சின் கோட்பாடுகள்", "புனிதகுடும்பம்", "ஜெர்மன் தத்துவம்", "தத்துவத்தின் வறுமை", "அறிக்கை", "டூரிங்குக்கு மறுப்பு”, "குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்" ஆகிய படைப்புகளில் குடும்பம், திருமணம் பற்றி மார்க்சிய ஆசான்கள் கூறிய கருத்துகளைச் சுருக்கமாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (2014 பதிப்பு, பக்கம் 273) தமிழாக்கத்தில் ஆசிரியர் எஸ்.வி. இராஜதுரை பின்வருமாறு அருமையாக வகைப்படுத்தியுள்ளார்.
1. தமது காலத்திய முதலாளித்துவ
திருமணத்தில் இருந்த மாய்மாலத்தையும் மனிதத்தன்மையற்ற நிலையையும் எடுத்துக்காட்டுவது:
2. இந்த முதலாளித்துவ குடும்ப
வடிவம் என்பது மானுட குல வரலாற்றில் என்றென்றும் நிலவி வந்த, மாற்றமே இல்லாத குடும்ப
வடிவம் என்பதை மறுத்து, பல்வேறு வகைக் குடும்ப வகைகள் உற்பத்திமுறைக்கேற்ற திருமண முறை
குடும்ப அமைப்பு முறை - (உதாரணம், இன்றைய நிதி மூலதன அமைப்பு முறைக்கேற்ற Compationship எனும் சேர்ந்து வாழும்
திருமணமல்லாத குடும்ப அமைப்பு முறை) இருந்து வந்தது, இருந்து வரும் என்பதை தக்க ஆதாரங்களுடன்
எடுத்துக்காட்டுவது:
3. கம்யூனிச சமுதாயத்தில் ஆண்-பெண் உறவு சொத்தை அடிப்படையாக கொள்ளாமல் வேறு எத்தகையாக இருக்கும் என்பது பற்றிய சில கருத்துக்களைக் கூறுவதும் குடும்பம் என்பது சேர்ந்து வாழ்தல் என்பது போல் ஏதேனும் அச்சமுதாயத்தில் இருக்குமானால், அது முதலாளிகளால் விமர்சிக்கப்படும் முதலாளித்துவ உறவின் (தனிச்சொத்துடைமை உறவின்) சாயலைக் கடுகளவு கூடக் கொண்டிராது, மனிதநேய உறவுகள் அடிப்படையில் ஆண் பெண் உறவுகள் அமைந்திருக்கும் என்பதைச் சொல்வது என வகைப்படுத்தலாம்.
திருமணத்திற்கு முன்னால் பெண் தந்தைக்கு அடிமை, திருமணத்திற்கு பின்னால் பெண் கணவனுக்கு அடிமை, கணவனுக்கு பின்னால் ஆண் பிள்ளைக்கு பொன் அடிமை எனும் சனாதன திருமண, குடும்ப உறவுமுறையை இந்துத்துவா தூக்கி பிடிக்கிறது. சனாதன இந்துத்வா குடும்ப அமைப்பிலிருந்து பொது, தனி வேசி அமைப்பு ஒழிக்கப்பட முடியாது. ஒழியாது. சனாதன திருமண குடும்ப முறைக்கு எதிரானதாக கம்யூனிச திருமண, குடும்ப முறை அமையும். இதுவே எதிர்காலம். பொதுவுடைமை வந்தால் பொதுப்பெண்டிர் முறை தனிச்சொத்து உரிமையோடு ஒழிக்கப்படும் புதிய புரட்சிகரமான, சமத்துவமான ஆண்-பெண் உறவுமுறை சொத்து அடிப்படையில் இல்லாமல் உண்மையான அன்பு அடிப்படையில் திருமண முறையும் குடும்பமும் அமையும் என்பது சூரியனைப்போல் நிச்சயம்.
சுருக்கமாக, இன்றைய திருமண முறை, குடும்ப முறை,
வேசி முறை, சோரம் முறை, தனிச்சொத்து சம்பந்தப்பட்டது. சொத்து வடிவம் மாறும் பொழுது
இந்த முறைகள் குடும்ப திருமண முறையும், குழந்தை வளர்ப்பு முறையும் உடன் நிகழ்வாக மாறிவரும்.
Universal
private property - uriversal public property-ஆக மாறும் பொழுது தனிசோரமும் பொதுவிபசாரமும் சொத்து
அடித்தளத்தை இழந்துவிடும். பொது விபசாரத்தின் மூலத்தையும் முடிவையும் "1844 குறிப்பேட்டில்"
மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார் என்பதுதான் உண்மை.
நன்று தோழர்
ReplyDeleteதிரிபு வாதம் பார்ப்பனர்களுக்கு கைவந்த கலை. அத்தனை பார்ப்பானும் ஆணாதிக்கம் கொண்டவனே.தன் தேவை கருதி மானத்தையும் இழப்பான்
ReplyDeleteத.ந.தனராமன் - புதுச்சேரி அவர்களுக்கு நாம் நன்றி சொல்வோம் தோழர்
ReplyDelete