(ந.முத்துமோகன்
எழுதிய தொடர் முழுமையும் “மார்க்சியம் பயிலுவோம்” என்ற பெயரில் தனி நூலாக வெளிவந்துள்ளது, இந்நூலுக்கான
எனது எதிர்வினையைத் தனியாக எழுத உள்ளேன். இந்த எதிர்வினை எட்டு தொடரை மட்டும் முன்வைத்து
எழுதப்ட்டது. விரைவில் முழுநூலுக்கான விமர்சனம் வெளிவரும்)
தோழர் ந.முத்துமோகன் “மார்க்சியம் பயிலுவோம்” எனும் தலைப்பில், மார்க்சியத்தை
அறிமுகப்படுத்தும் வகையில் “ஜனசக்தி” இதழில் தொடர்ந்து எழுதிவருகிறார். இதுவரை எட்டுப்
பகுதிகள் வந்துள்ளன. மார்க்சைப் பற்றியும் மார்க்ஸ் கூறியது பற்றியும் தோழர் உயர்த்திச்சுட்டுகிறார்
(highlights), பொதுவாக உயர்த்சிச்சுட்டுவது
என்பது குறிப்பிட்டுச்சுட்டுவதோடு பிறவற்றையும் இணைத்துப் புரிந்து கொள்வதற்கு எளிதாக
இருக்கும் என்பதற்காகவே அவ்வாறு செய்யப்படுகிறது. ஆனால் தோழர் உயர்த்திச்சுட்டுவது
பிறவற்றில் இருந்து தனித்துத் துண்டிப்பதற்காகச் செய்யப்படுவதாகத் தெரிகிறது.
முதல் கட்டுரையின் தொடக்கத்தில்
மார்க்ஸ் இந்தியாவிற்கு வந்ததில்லை என்பதைப் பதிந்துள்ளார். இந்தியாவிற்கு நேரில் வந்துப்பார்க்காத
மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி நிறைய அல்லது சிறப்பாக எழுதியிருக்கிறார் என்பதைச் சுட்டுக்காட்டுவதற்காக
இவ்வாறு கூறுகிறார் என்று நினைத்து தொடர்ந்து படித்தால், ஏமாற்றத்திற்கு உள்ளாகிறோம்.
மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மீதே மார்க்சின் கவனம் இருந்ததாக எழுதியிருக்கிறார். ஆனால்
இதற்கு முரணாக இக்கட்டுரையின் இறுதியில் “நியூயார்க்
டிரிப்யூன்” பத்திரிகையில் இந்திய விடுதலை இயக்கம் போன்ற உடனடிப் பிரச்சினைகளைக்
கடந்து இந்திய சமூக அமைப்பு பற்றிய ஆய்வுகளில் மார்க்ஸ் ஈடுபட்டார் என்றும் எழுதுகிறார்.
இந்த முரண் ஏன் ஏற்படுகிறது என்றால், மார்க்ஸ் இந்தியாவைப் பற்றிப் பலநூறு பக்கங்களில்
எழுதியவை நூலாக நமக்குக் கிடைக்கிறது. இதனை மறைக்க முடியாததால் இதனையும் சேர்ந்து எழுதுகிறர்.
இதுபோன்ற முரணை அவர் எழுத்துகளில் தொடர்ந்து பார்க்க முடிகிறது.
இந்தத் தொடர் மார்க்சியம்
பயில்வதற்காக எழுதப்பட்டது, அதனால் இதில் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் ஆகியோர் எழுதிய மார்க்சிய
அடிப்படைகளை மட்டும் அறிமுகப்படுத்துவதே சரியானதாக இருக்கும். அது மட்டும் போதுமானது
அல்ல என்று கருதினால் இறுதியில் மார்க்சியம் பற்றிய விமர்சனத்தையும் அதன் பல திரிபான
போக்குகளையும் அறிமுகப்படுத்தலாம். ஆனால் தோழர் இரண்டாவது தொடரில் எங்கெல்சைப் பற்றி
எழுதும் போது, “சமூகவாழ்வை பொருளாதாரமே “நிர்யணிக்கிறது”
என்ற கருத்தாக்கத்தை மார்க்சியத்தினுள் பிரபலப்படுத்தியவர் எங்கெல்ஸ் என்று ஒரு கருத்து
உண்டு” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுச் செல்கிறார். இது தொடக்க வாசகர்களிடையே
குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
மார்க்சியத்தைத் தவறாகப்
புரிதல் என்ற சிக்கல் மார்க்ஸ், எங்கெல்ஸ் வாழ்ந்த காலத்திலேயே உண்டு. ஆனால் எங்கெல்சைப்
பற்றிய இதுபோன்ற கருத்துக்கள் அப்போது எழுப்பப்படவில்லை. மார்க்சை, இளம் மார்க்ஸ்,
முதிய மார்க்ஸ் என்று பிரித்து, இளம் மார்க்சுக்கு முதன்மை இடம் எப்போது கொடுக்கப்பட்டதோ
அப்போதிருந்து இந்த விமர்சனம் தொடர்கிறது. இது ஆதாரமற்ற விமர்சனமாகும்.
மார்க்சியக் கருவூலத்தில்
மார்க்சின் பங்களிப்பு என்ன, எங்கெல்ஸ் பங்களிப்பு என்ன என்பதை அவர்களின் எழுத்துக்களைக்
கொண்டே அறிந்திட முடிகிறது. “ஜெர்மன் கருத்தியல்” என்ற நூலை மார்க்சும்
எங்கெல்சும் சேர்ந்தே எழுதியிருந்தாலும் அதில் காணப்படும் வரலாற்றியல் பொருள்முதல்வாதகக்
கண்ணோட்டத்தை மார்க்சே முழுமைப்படுத்தியுள்ளார் என்பதைப் பல இடங்களில் எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” நூலுக்கான முன்னுரையிலும், “ஃபாயர்பாக்” பற்றித் தாம் எழுதிய நூலிலும் எங்கெல்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
"இந்தக் கோட்பாட்டை (Theory) வகுப்பதற்கு நான் ஆற்றியுள்ள பங்கு பற்றி அண்மையில் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள்.
எனவே இவ்விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஒருசில வார்த்தைகள் சொல்லாமல் என்னால்
இருக்க முடியவில்லை.
மார்க்சுடன் நாற்பது ஆண்டுகளாகக் கூட்டாகப் பணி
புரிந்த காலத்திலும் சரி, அதற்கு முன்பும் சரி, இக்கோட்பாட்டின் அடித்தளங்களை அமைப்பதில்,
அதைவிடக் குறிப்பாக இக்கோட்பாட்டை விவரித்து விளக்குவதில் எனக்கு ஓர் அளவுக்குத் தனிப்
பங்கிருந்ததை நான் மறுக்க முடியாது. ஆனால், அதன் தலையாய அடிப்படைக் கொள்கைகளில் மிகப்
பெரும் பகுதியும் (குறிப்பாக, பொருளாதாரத் துறையையும் வரலாற்றுத் துறையையும் சேர்ந்தவை
அவை), எல்லாவற்றிற்கும் மேலாக அவற்றைப் பற்றிய இறுதியான, கூரிய வரையறுப்பும் மார்க்சையே
சேரும்.
நான் ஆற்றிய பணியை - ஒரு வேளை இரண்டு மூன்று தனித்துறைகளில்
நான் புரிந்த பணி நீங்கலாக- நான் இல்லாமலே மார்க்ஸ் எளிதாகச் செய்திருப்பார். மார்க்ஸ்
சாதித்ததை நான் சாதித்திருக்க மாட்டேன். எங்கள் எல்லோரையும் விட மார்க்ஸ் உயரே நின்றார்,
வெகு தொலைவிற்குப் பார்த்தார், மேலும் விரிவான, விரைவான பார்வை பெற்றிருந்தார்.
மார்க்ஸ் ஒரு மாமேதை (genius), நாங்கள் எல்லோரும் அதிகபட்சமாகச் சொன்னால் திறமைசாலிகளே (talented), அவர் இல்லாமல் இந்தக் கோட்பாடு இன்றிருப்பது போல் இவ்வளவு தூரம்
வந்திருக்காது. எனவே, இந்தக் கோட்பாடு அவருடைய பெயரைத் தாங்கி நிற்பது சரியே"
(லுத்விக் ஃபாயர்பாக்கும்
மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)
தோழர்
குறிப்பிடுகிற பொருளாதாரத் துறையோடு வரலாற்றுத் துறையையும் குறிப்பிட்டே
எங்கெல்ஸ் தமது காலத்திலேயே விளக்கப்படுத்திவிட்டார். அப்படி இருந்தும் இந்த
மேற்கோளை முன்வைத்து தோழர் எழுதியிருக்கிறார், “மார்க்சியத்தை முழுமைப் படுத்தியவர், நிறைவு செய்தவர் ஏங்கெல்ஸ்.” இப்படி
ஆதாரமில்லாமல் உண்மைக்கு மாறாகவே தொடர்ந்து எழுதுகிறார்.
தகவல் பிழையைத் திருத்திக்
கொள்ளலாம், இந்தத் தொடரை நூலாக்கும் போது அதனைச் சரி செய்துவிடலாம். மார்க்சின் மூலதனம்
நூலின் இரண்டு மற்றும் மூன்றாம் தொகுதிகளை எங்கெல்ஸ் வெளியிட்டுள்ளார், இதனைக் குறிப்பிட்டு
சொல்லிய தோழர் தொடார்ந்து “உபரி மதிப்பு பற்றிய கோட்பாடுகள்” என்ற நூலை எங்கெல்ஸ் பதிப்பித்தார்
என்று கூறியிருக்கிறார்.
இந்நூலை எங்கெல்ஸ் பதிப்பிக்கத்
திட்டமிட்டிருந்தார் ஆனால் பதிப்பிக்க முடியாமல் போய்விட்டது. முதல்முறையாகக் காவுத்ஸ்கி
1905-1910 ஆகிய ஆண்டுகளில் இந்நூல் வெளியிடப்பட்டது. மார்க்சிய-லெனினிய கமிட்டியினால்
1954-1961 ஆண்டுகளில் புதிய பதிப்பாக வெளியிடப்பட்டது. எழுதப்பட்ட ஜெர்மன் மொழியில்
1956-1962ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டது.
இந்தத் தகவல் பிழையை நூலாக்கும்
போது திருத்திவிடலாம். ஆனால் மார்க்சியத்தின் அடிப்படையைப் பற்றியும் மார்க்ஸ் எங்கெல்ஸ்
பற்றியும் குறிப்பிடுவதை விமர்சிக்காமல் இருக்க முடியாது.
“கம்யூனிஸ் கட்சி அறிக்கை” வெளிவருவதற்கு முன்புவரை
மார்க்சின் எழுத்துக்களில் ஹெகலிய செல்வாக்கைக் காணமுடிகிறது என்று தோழர் குறிப்பிடுகிறார்.
குறிப்பாக ஹெகலின் அந்நியமாதல் கருத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் இந்நூலின் இறுதியில் அந்நியமாதலுக்கு எதிரான போராட்டத்தைப் பின்னாட்களில் பலவகைகளில்
மார்க்ஸ் விரிவுபடுத்தினார் என்று எழுதியுள்ளார். இது உண்மைக்கு மாறானதாகும். “குடிமை சமூகம்” போன்றவற்றின் உள்ளடக்கத்தை
மார்க்ஸ், பிற்காலத்தில் அரசியல் பொருளாதாரத்தில் தேட வேண்டும் (1859) என்று கூறியுள்ளார்.
அதே போலத்தான் அந்நியமாதலையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மார்க்ஸ் வந்தடைந்த இடத்தில்
தான் நாம் மார்க்சியத்தின் முழுநிறைவை காணவேண்டும். மார்க்ஸ் வந்தடைந்ததை மறுதலித்து,
வந்த வழியோடே (அந்நியமாதல்) தோழரைப் போன்றேர்கள்
நின்றுவிடுகின்றனர். அதனால் தான் அந்நியமாதலால் ஏற்படும் முரண்பாட்டை மானுடச் செயல்பாட்டால்
தீர்க்கப்பட முடியும் என்பது மார்க்சியம் என்று எழுதியுள்ளார்.
மார்க்சியன் பொருளாதார நிர்ணயத்தை
மறுத்து அதாவது சமூக வரலாற்றைப் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் காண்பதை மறுத்து பொருளாயத
மாற்றத்தின் விளைவாக ஏற்படும் தீர்வாக முன்வைக்காமல், மானிட செயற்பாட்டிலேயே முடங்கிவிடுகிறார்.
மனிதனின் செயற்பாட்டைப் புறநிலைமைகளே அதாவது பொருளாயதக் காணரங்களே நிர்ணயிக்கிறது என்ற
மார்க்சின் கண்ணோட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் பலர், இந்த நிர்ணய பொருளாயத விளக்கத்தை
எங்கெல்ஸ் தான் வலியுறுத்திக் கூறிக்கொண்டிருந்தார், மார்க்சிடம் அவ்வளவு வறட்டுத்தனம்
இல்லை என்ற தவறான கருத்தை முன்வைக்கின்றனர்.
அடித்தளம் மேற்கட்டமைப்பை
நிர்ணயிக்கிறது என்பதை மார்க்ஸ், தான் உருவாக்கியதாகத்தான் சொல்லியிருக்கிறார்.
மார்க்ஸ்:-
“இதன் மூலம் நான் உருவாக்கிய பொதுவான முடிவை - இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக மாறியது - பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம்.
மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளில் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.
இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்த கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.”
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு, முன்னுரை)
மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை
நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய
சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது என்ற வரலாற்றியல் பொருள்முதல்வாதக்
கண்ணோட்டத்தையே அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கத்தில் மார்க்ஸ்
விவரித்துள்ளார். அடித்தளம்
என்பது வாழ்நிலை, மேற்கட்டமைப்பு என்பது உணர்வுநிலை.
நான்காம் தொடரில் தோழர்
அரசு குறித்த மார்க்சியக் கோட்பாட்டை விவரிக்கிறார்.
இங்கே மார்க்சியக் கோட்பாடாக மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் கருத்தை அறிமுகப்படுத்துவதைவிட,
கிராம்சி, அல்த்தூசர் போன்றோர்களின் அரசு குறித்த கோட்பாட்டை, மார்க்சியத்தைச் செழுமைப்படுத்திய
கோட்பாடாக முன்வைக்கிறார்.
அடித்தளம் மேற்கட்டமைப்பு
என்ற கோட்பாட்டைப் பயன்படுத்தி. அரசு எந்திரத்தையும் விளக்கமளிக்க முடியும் என்று கூறுகிறார்
தோழர். மார்க்சியம் அவ்வாறுதான் பார்க்கிறது என்பதை உரக்க கூறமறுக்கிறார். இதற்குக்
காரணம் தோழர் ந.முத்துமோகன், சமூகத்தைப் பொருள்முதல்வாதப் பார்வையில் பார்ப்பதை மறுதலிப்பராவார்.
அண்மையில் வெளிவந்த அவரது
நூலான “இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்” என்ற நூலில் வெளிப்படையாகவே இதனை ஒப்புக் கொண்டுள்ளார்.
மறைக்காமல் நேரடியாக ஒப்புக்கொண்டமைக்கு அவரைப் பாராட்டத்தான் வேண்டும். “மார்க்சியத்தைப் பொறுத்தமட்டில், மார்க்ஸ் எப்போது
ஆசிய உற்பத்தி முறை என்று ஒன்றைப் பற்றிப் பேசினாரோ, அப்போதிருந்தே வெறும் பொருளாதார
வர்க்க அரசியல் மூன்றாம் உலக நாடுகளுக்குப் போதாது என்பது வெளிப்படையான ஓர் உண்மை”
(பக்கம் 264). இதன் மூலம் இந்திய நிலைமைகளுக்கு மார்க்சின் அடித்தளம் மேற்கட்டமைப்பு
என்ற கருத்தாக்கத்தால் விளக்கப்படுகிற வரலாற்றியல் பொருள்முதல்வாதம் போதாது என்ற அவரது
கருத்தை தெளிவுபடுத்திவிட்டார்.
மேலும் கூறுகிறார், “பொருளுற்பத்தி வாழ்க்கையை மார்க்சியர்கள் சமூக
அடிப்படை என்றும், கலை, கலாசாரம், தத்துவம், கல்வி, குடும்ப உறவுகள் போன்றவற்றை மேற்கட்டுமானம்
என்றும் வகைப்படுத்துவர். இந்த வகைப்படுத்தல் இப்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது”
(பக்கம் 109). ஆக இவர் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைக் கேள்விகுள்ளாக்கப்பட்டவர்களின்
பிரிவில் இருந்து பேசுகிறார். மேலும் இந்த அணுகுமுறை பொருத்தமற்றது என்று முடிவெடுத்துள்ளார்.
“அடிப்படையைக் காரணமாகவும் மேற்கட்டுமானத்தைப் பிரதிபலிப்பாகவும்,
ஒன்றை நிஜமாகவும் மற்றொன்றை நிழலாகவும் அணுகும் முறையியல் பொருத்தமற்றது என்ற முடிவு இப்போது பெறப்படுகிறது.” (பக்கம் 109). அடித்தளம்
மேற்கட்டமைப்பு என்கிற கருத்தாக்கத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எவ்வாறு அணுகுவார்களோ
அவ்வாறே இவரும் அணுகுகிறார் என்பது தெளிவாகிறது.
“..இந்தியத் தத்துவப் பிரச்சனைகள்
அனைத்தையும் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற இரண்டில் ஒன்றாக உள்ளடக்கி விடமுடியும்
என்று என்னால் கருதமுடியவில்லை. இன்னும் பலப்பலப் பிரச்சனைகள்… பலபடித்தானவை. ஒன்று,
பொருள் – கருத்து என்ற எல்லைகள் மிகவும் குறுகியவையாக இருக்க வேண்டும் அல்லது இந்தியத்
தத்துவங்களின் பரப்பு மிகவும் பெரியதாக இருக்க வேண்டும்.” (பக்கம் VI.)
தாம் பொருள்முதல்வாதப் பார்வையில்
இருந்து விலகி அணுகுவதை வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறார். இருந்தாலும், இந்த வெளிப்படைத்
தன்மை எல்லா இடங்களிலும் காணப்படுகிறது என்று சொல்லிவிடமுடியாது. அதனால் தான் அவரது
எழுத்துக்கள் உடனுக்குடன் முரண்படுகிறது.
அடித்தளம் நிஜம், மேற்கட்டமைப்பு
நிழல் என்று எங்கேயும் மார்க்ஸ் கூறவில்லை.
அத்துடன் மேற்கட்டமைப்பைப்
பொய்யுணர்வு என்றெல்லாம் மார்க்சியம் கூறவில்லை. “ஜெர்மன் கருத்தியல்” என்ற மார்க்ஸ் எங்கெல்சால் இணைந்து எழுதப்பட்ட நூலில்,
“மதம் என்பது துவக்கமுதலே மெய்யான அவசியத்தில்
இருந்து எழும் அறிவெல்லை கடந்த்தான உணர்வாகும்”,
மேலும் மார்க்ஸ் “மூலதனம்” நூலின் முதல் தொகுதியில், “மத உலகம் எதார்த்த உலகத்தின் பிரதிபலிப்பே”
(பக்கம் 116). "ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள்" என்ற குறிப்பில் மார்க்ஸ்
“மத உணர்ச்சி” (“religious
sentiment”) என்பதே
ஒரு சமூக உற்பத்திப் பொருள்...." என்றே கூறியுள்ளார்.
பிரதிபலிப்பு என்பதைப் பொய்யுரை
என்று தோழர் சிறுமைப்படுத்துகிறார். “கருத்தியல்
என்பதற்கே மார்க்சிய அகராதியில் பொய்யுணர்வு என்ற ஒரு பொருள் உண்டு.” (ஜனசக்தி
மே 28, 2017). பொருள்முதல்வாதத்தை மறுதலித்து அரசை அணுகுவதால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதில் சர்வாதிகாரம் என்ற சொல் பலரை அச்சப்படுத்துகிறது
என்று எழுதியுள்ளார். உண்மையைக் கண்டு அச்சப்படுபவர்களே மார்க்சியத்தைக் கண்டு அச்சப்படுபவர்களாக
இருக்கமுடியும்.
ஐந்தாம் தொடர், இயங்கியல். இயங்கியலுக்குத் தொடர்பான இந்திய
மற்றும் தமிழகத்தில் காணப்படும் இயங்கியல் முறைகளை இதில் அறிமுகப்படுத்துகிறார். ஆனால்
இதில் பெரும்பாலானவை மாற்றம் பற்றியதாகவும் இயங்குவது பற்றியதாகவும் இருக்கிறது. அந்த
மாற்றத்தை தமிழில் நிலையாமை என்று மொழியாக்கப்பட்டதாகத் தோழர் கூறுகிறார். அனைத்தும்
அழிந்துபடுகின்றன என்ற பொருளில் அநித்யம் என்று இந்திய தத்துவங்களில் பிரபலமாகிவிட்டதாகத்
தோழர் கூறுகிறார். இது போன்று வெறுமை, சூன்யம், நிர்வாணம், பாழ் போன்றவற்றையும் அறிமுகப்படுத்துகிறார்.
இவைகள் பொதுவாக நிலையற்ற அழியும்பொருளாகக் காட்டப்படுகிறது. அப்படி என்றால் பொருட்களின்
அநித்திய தன்மையை விடுத்து, நித்தியமான பொருளற்ற ஆதம்மாவை நோக்கியே நம்மைக் கொண்டுபோகும்.
மாற்றத்தை மட்டும் முன்னிறருத்தும்
இயக்கம் என்பது பரிணாமவாதமாகும். இயங்கியலில் மாற்றம் என்பது குறிப்பிட்ட அளவுமாற்றத்தை
எட்டியவுடன் பழைய நிலை மாற்றம் பெற்று புதிய நிலைமை அடைவதாகும். அதாவது பழைய நிலை மறுக்கப்பட்டுப்
புதிய நிலை அடைவதாகும். இயங்கியல் இவ்வாறு பழையன கழிந்து புதியன தோன்றுவதைக் குறிப்பதாகும்.
இந்த இயங்கியல் அறிமுகத்தில்
இயங்கியலின் மூன்று பொதுவிதிகளைப் பற்றியோ, அதன் வகையினங்களைப் பற்றியோ எதுவும் கூறப்படவில்லை.
பின்வரும் தொடரில் இடம் பெறுமா என்பது தெரியவில்லை.
ஆறாம் தொடர் அரசியல் பொருளாதாரம் பற்றிப் பேசுகிறது.
அடித்தளம் மேற்கட்டமைப்பை
நிர்ணயிக்கிறது, அதாவது பொருளாதார அமைப்பு என்ற அடித்தளமே கருத்தியல்களான மேற்கட்டமைப்பை
நிர்ணயிக்கிறது என்கிற மார்க்சின் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு மார்க்சின்
அரசியல் பொருளாதாரத்தை ஏற்றுக்கொள்வதிலும் சிக்கல் ஏற்படும்.
இந்த அரசியல் பொருளாதாரம்
என்பதில் அரசியலையும் பொருளாதாரத்தையும் தனித்தனியே பிரித்துப் பொருளாதாரத்தோடு அரசியல்
என்ற மேற்கட்டமைப்போடு இணைத்தே மார்க்ஸ் பேசியிருப்பதாகச் சொல்விளையாட்டு விளையாடுகிறார்
தோழர். இந்தச் சொல்விளையாட்டுக்கு முன்பு “அரசியல்
பொருளாதாரத்தின்” வரலாற்றைக் காண்போம்.
அரசியல் பொருளாதாரத்தை எதோ
மார்க்ஸ் தோற்றுவித்ததைப் போன்று தோழர் கூறுகிறார். மார்க்சுக்கு முன்பே அச்சொல் பயன்பாட்டில்
இருக்கிறது. பதினேழாம் நூற்றாண்டில் இருந்தே அரசியல் பொருளாதாரம் என்ற சொல் பயன்பாட்டில்
உள்ளது. இன்று பொதுவாகப் பொருளாதாரம் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. பொருளாதார
வளர்ச்சியின் விதிகளைப் பற்றிய விஞ்ஞானமாகச் சுருக்கிப்பார்க்கப்படுகிறது. அதாவது பொருளாதாரம்
நடுநிலைமையாகப் பார்க்க வேண்டும் என்பதே இந்தப் பார்வையின் நோக்கமாகும்.
ரிக்காடோ தமது பொருளாதார
ஆராய்ச்சியில் முதலாளித்துவச் சமூகத்தில் மக்களுக்கு இடையே காணப்படும் வர்க்க உறவுகளின்
விஞ்ஞானமாக் கண்டார். குறிப்பாக உற்பத்தியை பகிர்வது பற்றிய சமூகப் பிரச்சினைப் பற்றியதாக
இருந்தது. இத்தகைய ரிக்கோர்டோவின் கோட்பாடுகளின் அடிப்படையில் மார்க்சின் பொருளாதாரம்
அரசியல் பொருளாதாரமாகக் காட்சியளிக்கிறது. மார்க்சின் அரசியல் பொருளாதாரம், நிலப்பிரபுத்துவத்தை
வீழ்த்திய முதலாளித்துவத்தின் வீழ்ச்சியையும் இயக்கவியல் ரீதியில் நிறுவுகிறது. முதலாளித்துவத்தின்
தொடர் வளர்ச்சியில், உற்பத்தி, சமூக உற்பத்தியாகவும், வினியோக முறை தனியுடைமை அடிப்படையிலானதுமாகக்
காணப்படுகிறது, இந்த முரண் சமூக மாற்றத்தால் தீர்க்கப்படுகிறது என்று மார்க்சின் பொருளாதாரம்
சுட்டிக்காட்டப்படுவதால் இந்தப் பொருளாதாரத்திற்கு அரசியல் பொருளாதாரம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த வரலாற்றை மறைத்து தோழர்
சொல் விளையாட்டை யாருக்காகச் செய்து காட்டுகிறார் என்றால், “பொருளாதாரத்தைச் சமூக அமைப்பின் அடிப்படை என்றும் அரசியலை மேற்கட்டுமானம்
என்றும் கருதுபவர்கள்,” என்று தோழர் எழுதியிருக்கிறார். கருதுபவர்??? என்றால் மார்க்ஸ்
இதற்கு மாறாகவா கருதியிருக்கிறார்.
“டூரிங்குக்கு மறுப்பு" என்ற
நூலில் எங்கெல்ஸ் கூறுகிறார்:- "சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான் மெய்யான அடித்தளமாய் எப்பொழுதும் அமைகிறது. இதிலிருந்து தொடங்கினால்தான் வரலாற்றின் அந்தந்தக் காலக் கூறுக்கும் உரிய நீதிநெறி அரசியல் நிறுவனங்களும் மற்றும் சமயக் கருத்துக்களுமாகிய மேற்கட்டமைப்பு அனைத்திற்கும் நாம் முடிவான விளக்கம் காணமுடிகிறது....”
மார்க்சிய வழியில் விளக்கம்
காண்பதற்குப் பொருளாதார அமைப்பை அடித்தளம் என்றும் அரசியலை மேற்கட்டமைப்பு என்றும்
அனைத்து மார்க்சியர்களும் கருதுகின்றனர். அனால், தோழர் “சில பகுதியினர்” கருதுவது போல் எழுதியிருக்கிறார்.
“பொருளாதாரவாதம்” என்பது தொழிலாளர்கள் தமது பொருளாதாரப் போராட்டத்தில்
மட்டுமே ஈடுபட வேண்டும், அதற்கான அரசியலில் ஈடுபட வேண்டாம் என்பதாகும். இதற்கும் பொருளாதாரத்திற்கும்
எந்தத் தொடர்பும் கிடையாது. “பொருளாதாரவாதம்” என்பது அரசியலற்ற பொருளாதாரத்திற்கான
போராட்டமாகும் இதனைத்தான் லெனின் எதிர்க்கிறார்.
பொருளாதாரத்தை அடித்தளம்
என்று கூறுவதை லெனின் மறுக்கக்கூடியவரல்ல, “..மனிதனின்
சமூக அறிவு எனப்படுவது (அதாவது தத்துவம், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன்
கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும் போதனைகளும்) சமூகத்தின் பொருளாதார அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள்
என்பவையெல்லாம் பொருளாதார அடித்தளத்தின் மீது நிறுவப்பட்ட மேற்கட்டுமானமாகும்”
(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று
உள்ளடக்கக் கூறுகளும்). மார்க்சைத் தொடர்ந்து வருகிற மார்க்சியவாதிகளான எங்கெல்ஸ்,
லெனின், ஸ்டாலின், மாவோ போன்றோர்கள் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கத்தை
ஏற்றுக் கொண்டு அதன்படி செயற்பட்டனர்.
ஆனால் தோழர் பொருளாதார அமைப்பை
அதாவது புறநிலைமை தான் தீர்மானிக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளாததால், பொருளாதார நிலைமைகளை,
அதுவும் அதன் எளிய அலகுகளை மார்க்ஸ் உசுப்பிவிட்டு அவற்றைச் செயல்பட வைக்கிறார் என்றொல்லாம்
எழுதுகிறார். “அரசியல் பொருளாதாரத்தின் மிக
எளிய அலகுகளை அடையாளப்படுத்தும் மார்க்ஸ், அவற்றினுள் அமிழ்ந்து கிடக்கும் முரண்களை
உசுப்பி விட்டு அவற்றைச் செயல்படச் செய்வதன் மூலம் அரசியல் பொருளாதாரத்தை இயங்க வைக்கிறார்.”
என்று புறநிலையின் மீது மார்க்சின் தலையீடாக விளக்கப்படுத்துகிறார்.
புறநிலைமை மனிதர்களைச் சாராது
இருக்கிறது, அதாவது மனிதனது சிந்தனையைச் சாராதிருக்கிறது என்றே மார்க்ஸ் கூறியிருக்கிறார்.
அதன் மீதே மனிதன் தனது செயற்பாட்டை அமைத்துக்கொள்கிறான். முதலாளியையே மூலதனத்தின் ஆளுருவம்
என்றே மார்க்ஸ் கூறுகிறார், “முதலாளி மூலதனத்தின்
ஆளுருவம் என்ற விதத்தில் அல்லாமல் வேறு எவ்விதத்திலும் வரலாற்று வழியில் மதிப்பில்லாதவர்,
வரலாற்று வழியில் நிலவுவதற்கு உரிமையில்லாதவர்….” (மூலதனம் தொகுதி 2 பக்கம்- 794-795).
பொருளாதார அமைப்பைவிட மேற்கட்டமைப்பு
“பிரம்மாண்டம்” என்பதே தோழரின் கருத்து.
அதனால் பொருளாதாரத்தை எளிய, சிறிய அலகாகக் கூறிவிட்டு மேற்கட்டமைப்பான அரசியல், கலாச்சாரம்
ஆகியவற்றைப் பிரும்மாண்டமானதாகக் காட்டுகிறார். “சின்னஞ்சிறு பொருளாதார அலகுகளில் கண்டறியப்பட்ட முரண்கள் சமூகம், அரசியல்,
கலாச்சாரம், அறம், இயற்கைச் சூழல் ஆகியனவற்றைப் பற்றிப் பிடித்துப் பிரும்மாண்டமான
முரண்களாக வளருகின்றன.” பொருளாதார அமைப்பான அடித்தளம் என்பதைச் சிறிய அலகாகக் காட்டவே
முயற்சிக்கிறார்.
ஏழாம் தொடரில், அறிவு பற்றிய கொள்கையை விவரிக்கிறார். இதில்
தோழர் அறிவுக்கும், அறிவாளிக்கும் தனித்த பாத்திரத்தைக் கொடுக்கிறார், அறிவு வளர்ச்சிக்கான
புறநிலைமைகளைத் தோழர் ஏற்காததால் அறிவாளியை முக்கியப் பாத்திரமாக்குகிறார். இந்தப்
போக்கு எட்டாம் தொடரில் மார்க்ஸ்: இயங்கும்
பொருள் என்பதில் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். அகம் புறமாக மாறுகிறது, புறம்
அகமாக மாறுகிறது என்று மார்க்சியத்தைத் தலைகீழாக விளக்குகிறார். புறநிலைமைகளே மனிதனின்
செயற்பாட்டைத் தீர்மானிக்கிறது என்பதை ஏற்காமல், “மனிதர்களும் புற உலகும் சந்தித்துப் பொருத்திக் கொள்ளும் செயல்பாட்டில், மனிதர்களின்
தேவைகளும் திறன்களும் புற உலகினுள் செலுத்தப்படுகின்றன. இதுவே அகம் புறமாதல். அதுபோலப்
புற உலகின் வாய்ப்புகளும் பண்புகளும் மனிதர்களால் அறியப்பட்டு, உணரப்பட்டு அவை அவர்களின்
திட்டமிடுதல்களோடு சேர்க்கப்படுகின்றன.” என்கிறார்.
மனிதர்களின் தேவை என்பது
புறநிலையால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதற்கு மாறாக, தேவையை மனிதனின் அகநிலைப் போக்காகவே
தோழர் கருதுகிறார். அடித்தளம் மேற்கட்டமைப்பு ஆகியவற்றின் இடைச்செயலில் அடித்தளம் தீர்மானகரமாகவும்,
நிர்ணயகரமாகவும் இருக்கிறது, மேற்கட்டமைபின் செயற்பாடு அடித்தளத்தின் மீது தாக்கம்
செலுத்துகிறது.
அடித்தளம் மேற்கட்டமைப்புக்கு
இடையேயான செயற்பாடு பரஸ்பர வினைபுரிதல் என்ற புரிதல் பொருள்முதல்வாதத்தையும் கருத்துமுதல்வாததையும்
மறுத்த கருத்துமுதல்வாதமே ஆகும். எப்படி என்றால் அடித்தளம் தீர்மானிக்கிறது என்றால்
அது பொருள்முதல்வாதம், மேற்கட்டமைப்புத் தீர்மானிக்கிறது என்றால் கருத்துமுதல்வாதம்.
இந்த இரண்டுக்கும் இடைப்பட்டது என்ற ஒன்று கிடையாது, அப்படிச் செய்கிற முயற்சி கருத்துமுதல்வாதத்திற்கே
இட்டுச் செல்லும். பரஸ்பர வினைபுரிதல் என்பது கருத்துமுதல்வாதமேயாகும்.
“மனிதர்கள் தங்களுடைய வரலாற்றை
உருவாக்குகிறார்கள். ஆனால் தங்கள் விருப்பத்திற்கேற்ப அதை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை,
தாங்களே தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்றபடி இல்லாமல் கடந்த காலத்திலிருந்து
கைமாற்றிக் கொடுக்கப்பட்ட, தயாராயுள்ள சூழ்நிலைமைகளுக்கு, தாங்கள் நேரடியாகச் சந்திக்கும்
சூழ்நிலைமைகளுக்கு ஏற்பவே வரலாற்றை உருவாக்குகிறார்கள்.”
(லூயீ போனபார்ட்டின்
பதினெட்டாம் புரூமேர்)
என்று தான் மார்க்ஸ் கூறியுள்ளார்.
புறநிலையின் எல்லையில் இருந்தே மனிதர்கள் செயற்படுகின்றனர் என்பதற்கு மாறாக, மனிதனின்
திறத்தாலும் தேவையாலும் தீர்மானிக்கப்படுவதாகத் தோழர் கருதுகிறர். மனிதனின் தேவை புறநிலையினால்
நிர்ணயிக்கப்படுகிறது. அவசியத்தை அறிந்தவனே சுதந்திர மனிதனாகிறான் என்றால் புறநிலைமைகளே
அவசியமானது அதனை அறிந்தவன் சுதந்திர மனிதன்.
மனிதனின் குறிக்கோள்கள்
பொருளாதார நிலைமைகளான புறநிலையில் இருந்து வருவதை ஸ்டாலின் விளக்கியிருக்கிறார்.
“பொருளாதார நிலைமைகள் முதலில் மாற்றமடைந்து, அதற்கு ஏற்றதான மாற்றம்
மனித மூளைகளின் பின்னர் நடந்தேறுகிறது.
அப்படியனால், குறிப்பிட்ட இலட்சியம் மக்களிடையே தோன்றுவதற்கான அடிப்படையை அவர்களுடைய
மனங்களிலோ, அவர்களுடைய கற்பனைகளிலோ தேடக்கூடாது, ஆனால் இதற்கு மாறாக, மனிதர்களின் பொருளாதார
நிலைமைகளின் வளர்ச்சிகளில்தான் காண வேண்டும். எந்த இலட்சியம் பொருளாதாரச் சூழ்நிலைகள்
பற்றிய ஆய்வை அடிப்டையாகக் கொண்டிருக்கிறதோ, அந்த இலட்சியம் தான் சிறப்பானதும் ஏற்கக்கூடியதுமாகும்.
எந்த இலட்சியங்கள் பொருளாதாரச் சூழ்நிலைகளை அலட்சியம் செய்து, அவற்றை அடிப்படையாகக்
கொள்ளாதவையோ, அவை பயனற்றவையும் ஏற்கத்தகாதவையும் ஆகும்.”
(அராஜகவாதமா? சோஷலிசமா?)
மார்க்சியவாதியின் குறிக்கோள்கள்
ஏற்கத்தக்கவையாக இருப்பதற்கு அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின்
விஞ்ஞானத் தன்மையே காரணமாகும். புறநிலைமைகளை அலட்சியப்படுத்துகிற போக்கை மார்க்சியர்கள்
பயனற்றவையாகவும் ஏற்கத்தகாதவையாகவும் கருதுகின்றனர்.
மார்க்சின்
கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன அவற்றில் முதன்மையானது இருண்டு என்று எங்கெல்ஸ் கூறுகிறார்.
“வரலாறு பற்றிய பொருள்முதல்வாத
கருத்தோட்டம், உபரிமதிப்பு மூலம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் ரகசியம் புலப்படுத்தப்படல்
ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்.
இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாகச் சோஷலிசம் ஒரு விஞ்ஞானமாயிற்று.”
(கற்பனாவத சோஷலிசமூம் விஞ்ஞானச்
சோஷலிசமும்)
தோழர் ந.முத்துமோகன் இந்த
இருகண்டுபிடிப்புகளில் உபரிமதிப்பை அப்படியே ஏற்றுக் கொள்கிறார், வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைக்
கேள்விக்குள்ளாக்குகிறார். கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் மறுக்கிறார், மறுப்பதால் அதனைத்
தமக்கு ஏற்றால் போல் திரித்து விவரிக்கிறார்.
மார்க்ஸ் வழிவந்த கம்யூனிஸ்டுகள்,
மார்க்சின் மாபெரும் இரு கண்டுபிடிப்புகளைப் போற்றுவோம் அதனைப் பின்பற்றுவோம்
No comments:
Post a Comment