Tuesday, 23 August 2022

மேட்டுகுடி பாட்டாளி சிந்தனையில் உள்ள புதிய பாதையினரின் குட்டி முதலாளித்துவ போக்கை எதிர்த்து

     புதிய பாதையினர் மீதான விமர்சனம் வைத்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இதற்கு எந்த வகையிலும் அவர்கள் பதிலளிக்கவில்லை. இப்போது எழுதுவதும் அவர்களின் பதிலை நோக்கி அல்லாது, புதிய பாதையினரின் மார்க்சியமல்லாத போக்கை அம்பலப்படுத்துவதற்கே ஆகும்.

ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுக்கு எதிராக புதிய பாதையினர் மக்கள் கார்ப்பரேட் அமைப்பதாக கூறுகின்றனர். ஏகாதிபத்திய முதலாளிகள் உடன் இருக்கும் ஏகாதிபாத்திய முதலாளிகளுடன் போட்டியிட்டு, அவர்களை அழிக்க முயற்சிக்கின்றனர். ஜீயோ அலைபேசி முதலாளித்துவம் மற்ற அலைபேசி முதலாளித்துவத்தை அழிக்க முற்படுவதை நாம் நேரடியாக பார்க்கிறோம்.

அப்படி இருக்க, புதிய பாதையினர் கூறுகிற மக்கள் கார்ப்பரேட் அமைப்பதை ஏகாதிபத்தியம் பார்த்துக் கொண்டிருக்குமா?

  ஏகாதிபத்தியம் செயல்படுவதற்கு தேவைப்படுகிற மேல்கட்டமைப்பான அரசு, காவல்துறை, சட்டத்துறை, நீதித்துறை, சிறைத்துறை போன்றவை இருக்கிறது. ஏகாதிபத்திய கார்ப்பரேட்டை எதிர்த்து புதிய பாதையினர் அமைக்கும் மக்கள் கார்ப்பரேட்டுக்கு மேல்கட்டமைப்பு தேவை. அவைகள் இல்லாமல் எப்படி மக்கள் கார்ப்பரேட்டைக் காப்பாற்ற முடியும் என்பதே எனது கேள்வி. இது மார்க்சிய அடிப்படையிலான கேள்வி.

    இப்படி கேள்வி கேட்டால், இது மனப்பாட மார்க்சியம் என்று கூறிவிட்டு, இதற்கு பதிலளிக்காமல் கேள்வியை தட்டகழிக்கின்றனர் புதிய பாதையினர்.

அரசு என்பது சமூகத்தில் எப்போது தோன்றியது அதன் வேலை என்ன என்பதை மார்க்சியம் தெளிவாக கூறியுள்ளது.

 லெனின்:-

“அரசின் வரலாற்றுப் பாத்திரம் குறித்தும், அரசு என்றால் என்ன வென்பது குறித்தும் மார்க்சியத்தின் அடிப்படை கருத்தினை இது தெட்டத் தெளிவாய் எடுத்துரைக்கிறது. வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவும் வெளியீடுமே அரசு. எங்கே, எப்பொழுது, எந்த அளவுக்கு வர்க்கப் பகைமைகள் புறநிலைக் காரணங்களால் இணக்கம் காண முடியாதவை ஆகின்ற னவோ, அங்கே, அப்பொழுது, அந்த அளவுக்கு அரசு உதித்தெழு கிறது. எதிர்மறையில் கூறுமிடத்து, அரசு ஒன்று இருப்பதானது வர்க்கப் பகைமைகள் இணக்கம் முடியாதவையாய் இருத்தலை நிரூபிக்கிறது”

(அரசும் புரட்சியும்)

 உழைக்கும் மக்களுக்கும் உழைப்பைப் பெறும் முதலாளிக்கும் இடையே இணக்கம் காணமுடியாத விளைவே இன்றைய அரசு. ஆகவே இந்த அரசு முதலாளித்துவத்துக்கான அரசு, உழைக்கும் மக்களுக்கானது கிடையாது. இதை பல நேரங்களில் உழைக்கும் மக்கள் நேரடியாக உணர்ந்துள்ளனர். இந்த அனுபவத்தை புதிய பாதையினர் கணக்கில் கொள்ளாது மக்கள் கார்ப்பரேட் அமைப்பது பற்றி பேசிவருகின்றனர்.

 வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தில் காணப்படும் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டை புதிய பாதையினர் புரிந்து கொள்ளாது, உற்பத்தியில் ஈடுபடுதைப் பற்றி பேசுகின்றனர். மார்க்சிய அடிப்படைகளை வெறும் மனப்பாட மார்க்சியமாகப் பார்க்கின்றனர். அதில் உள்ள நுட்பமானது எதவும் புதிய பாதையினருக்கு புரியவில்லை.

 ஏகாதிபத்தியத்துக்கு இடையேயான போட்டி கடுமையாக இருக்கிறது. அதில் பல பெரிய கம்பெனிகளே அழிந்து போகிறது. இந்நிலையில் புதிய பாதையினரின் மக்கள் கார்ப்பரேட்டை ஏகாதிபத்திய கம்பெனிகள் சும்மா பார்த்துக் கொண்டிருக்குமா?

 அடிப்படையிலேயே இது சாத்தியமற்றது என்பது தெரிகிறது. இந்தக் கேள்வியை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே எழுப்பினேன். கேள்வியை ஒட்டி எந்த பதிலையும் புதிய பாதையினர் தரவில்லை. பதில் தராவிட்டாலும் பரவாயில்லை, புதிய பாதையினரின் நோக்கம் எப்படி அப்பாவித்தனமாக இருக்கிறது என்பதை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்கே தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது.

 நான்கு ஆண்டுகளுக்கு முன்பே எழுப்பிய கேள்வி பதிலளிக்காமல், இன்றும் அதே மாதிரி கேள்வியையே எழுப்பி வருகின்றனர் புதிய பாதையினர்.

 அண்மையில் அமரன் சமரன் எழுப்பியக் கேள்வி?

 //முதலாளிய கார்பரேட்களை வீழ்த்த, மக்கள் இணைந்து முதலாளிகளற்ற மக்களுடமை நிறுவனங்களை மக்களே உருவாக்க முயற்சிக்க வேண்டுமா?

 

உழைக்கும் மக்களுடமை நிறுவனங்கள் மூலம் அடித்தட்டு மக்களை ஒன்று சேர்த்து, அவற்றின் சமூக பொருளாதார பின் புலத்தில் சோசலிச சமூகத்தை, புரட்சியை நோக்கி புரட்சியாளர்களும், மக்களும், மார்க்சீயர்களும் முன்னேற நான், நாங்கள் கோட்பாடுகள், திட்டங்கள் வகுத்து ஆக்கப்பூர்வமாக செயல் படணுமா?

 

இதுதான், இப்போதைய நமது விவாதத்தின் சாரப்பொருள். இது மார்க்சீய லெனினியத்திற்கு எவ்வகையில் எதிரானது?. இதற்காவது சுற்றி வளைக்காமல் நேரடியாக பதில் சொல்லுங்கள்//

       நான் எப்போதுமே சுற்றி வளைப்பதில்லை, புதிய பாதையினருக்கு எழுதிய முதல் விமர்சனம் பாயின் டு பாயின்டாக (point to point) எழுதி இருக்கிறேன். அதை  பலர் படித்து புரிந்கொண்டுள்ளனர், ஆனால் புதிய பாதையினருக்கு பாயின் டு பாயின்டாக இருப்பதை வளவள என்று இருப்பதாக கூறுகின்றனர். விமர்சனத்தை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாததால் இப்படி கூறுகின்றனர்.

        சொத்துடைமை சமூகத்தில், உடைமை சார்ந்த உற்பத்திக்கும் வினியோகத்துக்கும் உள்ள இயக்கவியல் தொடர்பைப் புரிந்து கொள்ளாத புதிய பாதையினர் மக்களுடைமை என்று கூறுகின்றனர். உடைமை தன்மையுடன் + மக்கள் என்று சேர்ப்பதினாலேயே அதன் உடைமை நிலை மாறிவிடுமா?

        பொதுவுமை சமூகம் என்றால் அதற்கான மேற்கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கும், முதலாளித்துவ சமூகத்தில் எப்படி மக்கள் உடைமை இருக்க முடியும்?.

 புதிய பாதையினர் எழுப்புகிற கேள்விகள் மார்க்சிய அடிப்படையைப் புரிந்த கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்திவிடுகிறது.

 அமரன் சமரன் எழுப்பும் மூன்று கேள்விகள்

 1. சமூக மாற்றம் எப்போதும், எங்கும் புரட்சிகளால் மட்டும் தான் நடக்குமா?.

 2. 100 ஆண்டுகளுக்கு முன் தோழர் லெனின் சொன்ன படி, முதலாளித்துவத்தின் உச்சக்கட்ட நிலையை அடைந்த ஏகாதிபத்தியம், அதே உச்சக்கட்ட நிலையில் நூறாண்டுகளுக்கு மேலாக நீடிக்க முடியுமா?

 3. தோழர் லெனின் சொன்ன படி ஏகாதிபத்தியங்களுக்கு  இடையே நடந்த இரண்டாம் உலகப்போருக்குப் பின், ஏகாதிபத்தியங்களுக்கு இடையே போர், உலகப்போர் இதுவரை ஏற்படாதது ஏன்?...

 முதல் கேள்வி தற்காலத்தில் ஏன் கேட்கின்றனர் என்கிற விளக்கம் ஏதும் இல்லை. ஆனால் ரத்த புரட்சி இல்லாமல் சமாதானமாக மாற்றம் செய்வதை கம்யூனிஸ்டுகள் எப்போதும் மறுப்பதில்லை. ஆனால் சூழ்நிலைமையே இறுதியில் போராட்ட வடிவத்தைத் தீர்மானிக்கும். அணுகுண்டை வைத்து புதிய பாதையினர் புரட்சியை கண்டு அஞ்சுவார்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதனால் புரட்சி என்பது புதிய பாதையினருக்கு ஒவ்வாமையே.

 சமாதானம் - புரட்சி  ஆகியவைப் பற்றி எங்கெல்ஸ் கூறுவதைப் பார்ப்போம்

 

“தனியார் சொத்துடைமையைச் சமாதான முறையில் ஒழிப்பது நடைபெறக்கூடும் எனில் அது விரும்பத்தக்கதே. இதைக் கம்யூனிஸ்டுகள் கட்டாயம் எதிர்க்க மாட்டார்கள். சதித்திட்டங்கள் எல்லாம் பயனற்றவை என்பது மட்டுமின்றிக் கேடு விளைவிப்பவை என்பதையும் கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிவார்கள். புரட்சிகள் திட்டமிட்டோ தன்னிச்சையாகவோ உருவாக்கப்படுவதில்லை என்பதையும், மாறாக அவை எங்கும் எப்போதும், தனிப்பட்ட கட்சிகள் மற்றும் மொத்த வர்க்கங்களின் விருப்பம் அல்லது கட்டளையைச் சாராத முற்றிலும் சுதந்திரமான புற நிகழ்வுகளின் இன்றியமையாத விளைவே என்பதையும் அவர்கள் மிக நன்றாகவே அறிவார்கள்.

 

ஆனால், அதே வேளையில், ஏறத்தாழ எல்லா நாகரிகமடைந்த நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி பலவந்தமாக அடக்கப்படுகிறது என்பதையும், இந்த வகையில் கம்யூனிசத்தின் எதிராளிகள் தங்களின் முழுப் பலத்தோடு ஒரு புரட்சி உருவாவதற்கே பாடுபடுகிறார்கள் என்பதையும் கம்யூனிஸ்டுகள் காண்கிறார்கள். ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் இறுதியில் ஒரு புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளிகளின் நலன்களைப் சொல்மூலம் பாதுகாத்து வருவதைப்போல் செயல்மூலமும் பாதுகாத்து நிற்போம்.”

(கம்யூனிசக் கோட்பாடுகள்)

 மனிதநேய மார்க்சியரான புதிய பாதையினர் புரட்சியைக் கண்டு அஞ்சுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

 2. 100 ஆண்டுகளுக்கு முன் தோழர் லெனின் சொன்ன படி, முதலாளித்துவத்தின் உச்சக்கட்ட நிலையை அடைந்த ஏகாதிபத்தியம், அதே உச்சக்கட்ட நிலையில் நூறாண்டுகளுக்கு மேலாக நீடிக்க முடியுமா?

 இந்தக் கேள்வியை ஒரு மார்க்சியவாதி கேட்கமாட்டான், மார்க்சியத்தைப் புரிந்து கொள்ளாத அல்லது ஏற்றுக் கொள்ளதவர்களே இது போன்று கேள்வியை எழுப்புவர்.

 உச்சக்கட்டம் அழுகல் என்கிற வார்த்தைகள் பொருளாதார நெருக்கடி கட்டத்தைக் குறிப்பிடுகிறது, பொருளாதார நெருக்கடிக் கட்டம் தொடர்ந்து இருக்காது, அது எப்படி உருவாகிறது. அது எப்படி மீள்கிறது, மீண்டும் எப்படி நெருக்கடிக்குத் தள்ளப்படுகிறது என்பதை மூலதனம் நூல் தெளிவாக கூறியுள்ளது.

 ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியைக் கடந்து செழுமை (Prosperity), மிகையுற்பத்தி (Over Production), நெருக்கடி (Crisis), தேக்கம் (Stagnation) ஆகியவை ஏற்படுகிறது. அணுகுண்டை பயன்படுத்திய பிறகும் பொருளாதார நெருக்கடியை முதலாளித்துவம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது. மார்க்சின் பொருளாதார நெருக்கடி கோட்பாட்டை முதலாளிகளும் புரிந்து கொள்ள முயற்சிப்பர், ஆனால் புதிய பாதையினரால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

 மார்க்சியம் பேசினால், இதுவெல்லாம் மனப்பாட மார்க்சியம் என்று புதிய பாதையினர் கூறிவிடுவர். இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்று அன்றைய நிலைக்கு கூறுய முழக்கத்தை மட்டுமே புதிய பாதையினர் மார்க்சியமாகக் கொள்வர். அதைத் தவிர மார்க்சியத்தில் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

 லெனின் அன்றைய நிலைக்கு கூறியதை அப்படியே இன்றும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வறட்டு மார்க்சியம். புதிய நிலைமைக்கு ஏற்ப போர் புதிய வடிவத்தை எடுக்கும். அதனை முன்கூட்டியே கணிக்கத் தேவையில்லை. வரும் போது அதை எதிர்கொள்ள வேண்டும். வழக்கமாக நடந்ததையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பது வறட்டுவாதமாகும், அது மார்க்சியம் அல்ல.

 மார்க்சிய அடிப்படை என்பது வேறு, மார்க்சிய அடிப்படையால் சூழ்நிலைமைக்கு எடுக்கப்பட்ட முடிவுகள் வேறு. புதிய பாதையனிர் முடிவுகளைப் பற்றியே பேசுகின்றனர், அடிப்டையைப் புரிந்து கொள்வதே இல்லை.

 அமரன் சமரன்:-

இன்று மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஸ்டாலின் போன்றோர் காலத்தில், சுமார் 80% மக்கள், இழப்பதற்கு ஏதுமற்ற ஏழை பாட்டாளிகளாக இருந்த நிலை இன்று இல்லை என்பதை புரிய வேண்டும்.”

 புதிய பாதையினர் நமக்குப் புரிய வைக்க நினைப்பது என்வென்றால், முன்பு போல் பாட்டாளிகள் இல்லை, அவர்களில் சிலர் அதிகம் ஊதியம் பெறுகின்றனர். அப்படி ஊதியம் பெறுகிற பாட்டாளிகளைக் கொண்டு மக்கள் கார்ப்பரேட் அமைக்க வேண்டும் என்பதாகும்.

 அமரன் சமரன்:-

“2ம் உலகப்போருக்கு பின், உலகெங்கும் உள்ள முன்னேறிய பாட்டாளி வர்க்கத்தினருக்கு, எங்களை போன்றோருக்கு, எங்களின் அன்றாட வாழ்க்கை தேவைகளை விட அதிக வருவாய் எங்களுக்கு கிடைக்கிறது.

 

அதாவது, ஆளும்/சுரண்டும் வர்க்கங்கள் அமைப்பு சாராத ஏழை உழைக்கும் மக்களை அநியாயமாக சுரண்டி சேர்க்கும் உபரி மதிப்பில் ஒரு பகுதியை, சமூகத்தில் சம வேலைக்கு பிறருக்கு கொடுக்கும் கூலியை விட, எங்களுக்கு அதிக சம்பளமாக கொடுக்கிறது.

 

இதனை இன்று முன்னேறிய பாட்டாளிகளான நாங்கள், ஆளும் வர்க்கங்களிடம் இருந்து பெறும் உபரிமதிப்பில்/ஆளும் வர்க்க சுரண்டலில் இருந்து பெறும் பங்கு என்று மெய்யான மார்க்சீய லெனினியப்படி கூறுகிறோம். இது சரியா, தவறா?.”

       இது போன்ற அபத்தத்தைப் பற்றி பேச வைக்கின்றனர் புதிய பாதையினர். இதனை ஏன் அபத்தம் என்று கூறுகிறேன் என்றால், இதில் தெளிவேயில்லாமல் கூறப்பட்டள்ளது.

       முதலில் முன்னேறிய பாட்டாளி என்கிறார், அப்படி என்றால் பாட்டாளி வர்க்கத்தில் அதிகம் சம்பளம் பெறும் பாட்டாளி என்று கொள்ளலாம், பொதுமான பாட்டாளிகளைவிட சிலருக்கு அதிகம் ஊதியம் கொடுக்கப்படுகிறது. இவர்களை மார்க்சியம் மேட்டுகுடி பாட்டாளிகள் என்று கூறுகிறது.

 அடுத்து கூறுகிறார், அமைப்பு சாராத ஏழை உழைக்கும் மக்களை அநியாயமாக சுரண்டி சேர்க்கும் உபரி மதிப்பில் ஒரு பகுதியை, சமூகத்தில் சம வேலைக்கு பிறருக்கு கொடுக்கும் கூலியை விட, தங்களுக்கு அதிக சம்பளமாக கொடுக்கிறது என்கிறார். இங்கே  அமைப்பு சார்ந்த அனைத்து பாட்டாளிகளையும் சேர்த்துக் கூறுவது போல் இருக்கிறது. அதாவது அமைப்பு சாராத உழைக்கும் மக்களிடம் இருந்து பெறப்பட்ட உபரி மதிப்பில் ஒரு பகுதியை பாட்டாளிக்கு அதிக சம்பளமாக கொடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தெளிவுக்காக எவ்வளவு சம்பளம் என்று கேட்டேன் மாதம் பத்து லட்சம் என்றார். இது எந்த நாட்டு பாட்டாளிக்கு என்றேன். உடனே அனைத்தையும் நிறுத்திவிட்டு வெட்டி பேச்சில் இறங்கிவிட்டார் அமரன் சமரன். இதுவரை அவர் கூறியதில் இருந்தே நமது விமர்சனத்தைத் தொடர்வோம்.

 உபரி மதிப்பு என்றால் சுரண்டல் என்பதைத் தவிர புதிய பாதையினருக்கு எதுவும் இது பற்றி தெரியவில்லை. உபரி மதிப்பு என்பது குறிப்பிட்ட தொழிற்பிரிவில் உள்ள பாட்டாளிகளுக்கு கொடுபடாத மதிப்பு ஆகும்.

 புதிய பாதையினர் கூறுவது என்னவென்றால், அமைப்பு சாராத ஏழை உழைக்கும் மக்களை அநியாயமாக சுரண்டி சேர்க்கும் உபரி மதிப்பில் ஒரு பகுதியில் இருந்து பாட்டாளிக்கு அதிகம் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அப்படி என்றால், பாட்டாளியின் உழைப்பு முழுமையாக கொடுத்தப்பின்பு மேலும் கூடுதலாக அமைப்பு சாரா தொழிலாளர்களிடம் சுரண்டப்பட்டது கொடுக்கப்படுகிறது.

 பாட்டாளியின் உழைப்புக்கு சமமான சம்பளம் முதலாளி கொடுத்துவிட்டால் முதலாளிக்கு லாபம் கிடைக்காமல் போய்விடும், அப்படி இருக்க வேறொங்கேயோ சுரண்டியதையும் கூடுதலாக பாட்டாளிக்கு கொடுப்பதாக புதிய பாதையினர் கூறுவது அபத்தமாக இருக்கிறது. உபரி மதிப்பில்தான் முதலாளித்துவத்தின் சுரண்டல் அடங்கி இருக்கிறது. பாட்டாளிக்கு உபரி மதிப்பைக் கொடுத்துவிட்டால் முதலாளிக்கு என்ன கிடைக்கும்?

 பாட்டாளியின் உழைப்புச் சக்திக்கு தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது. முழ உழைப்புக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்கிற மார்க்சின் கண்டு பிடிப்பு புதிய பாதையினருக்கு மனப்பாட மார்க்சியம், அதனால் அவர்கள் அதனைப் புரிந்து கொள்ள முயற்சிக்க மாட்டார்கள்.

 உழைப்புச் சக்திக்குதான் சம்பளம் கொடுக்கப்படுகிறது, அதுவும் அந்தந்த நாட்டின் வாழ்வுக்குத் தேவையானதே சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. பாட்டாளியின் உழைப்பு முழுமைக்கும் சம்பளம் கொடுத்துவிட்டால் அந்த கம்பெனியின் முதலாளிக்கு லாபம் எங்கிருந்து கிடைக்கும். மார்க்சிய வார்த்தைகளைப் பயன்படுத்தி புதிய பாதையினர் உளறிக் கொண்டிருக்கின்றனர். மார்க்சிய அடிப்படைப் புரிதல் புதிய பாதையினருக்கு சிறிதும் இல்லை. இதை போய் விமர்சித்து நேரத்தை விணடிக்க வேண்டியுள்ளது. இருந்தாலும் இப்படிப் பட்டவர்களின் நோக்கம் அம்பலப்படுத்த வேண்டியது பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும்.

 இதை மேலும் விளக்குவதற்கோ விமர்சிப்பதற்கோ ஒன்றும் இல்லை. இறுதியாக ஒன்றை மட்டும் கூறிவிட்டு முடித்துக் கொள்ளலாம்.

 இரண்டாம் அகிலத்தில் புதிய பாதையினர் கூறுவது போல் அதிகம் ஊதியம் பெறுகிறவர்கள் இருந்தனர். அப்படிப்பட்டவர்கள் பாட்டாளி வர்க்க சிந்தனையை கைவிட்டு குட்டிமுதலாளித்துவ மனப்பான்மைக்கு மாறிவிட்டனர் என்று லெனின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

“முதலாளிகளாக மாறிய இந்தத் தொழிலாளர்கள் அல்லது மேட்டுக்குடி உழைப்பாளர்கள்” தங்களது வாழ்க்கை முறையிலும், ஊதியத்தின் அளவிலும், தங்கள் கண்ணோட்டம் முழுவதிலும் குட்டிமுதலாளித்துவ மனப்பான்மை கொண்ட இவர்கள், இரண்டாவது அகிலத்தின் பிரதானத் தூண்கள் ஆவர், தற்காலத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதான சமூகத் தூண்கள் ஆவர். ஏனெனில், அவர்கள்தாம் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் முதலாளித்துவ வர்க்கத்தின் மெய்யான கையாட்களாக, முதலாளித்துவ வர்க்கத்தின் தொழிலாளர் சேவகர்களாக, சீர்திருத்தவாதத்துக்கும் தேசியவெறிக்குமான மெய்யான வாகனங்களாக இருக்கின்றனர். பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையில் நடைபெறும் உள்நாட்டுப் போரில், அவர்கள் தவிர்க்க இயலாதபடி, பெரிய எண்ணிக்கையில் முதலாளித்துவ வர்க்கத்தின் தரப்பை ஏற்கின்றனர்,…..”

(ஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்)

 மார்க்ஸ் காலத்திலும் மேட்டுகுடி பாட்டாளிகள் (labour aristocracy) இருந்தனர், அவர்களைப் பற்றி மார்க்ஸ குறிப்பிடும் போது பொருளாதார நெருக்கடி காலத்தில் உடனடியாக பாதிப்புக்கு உள்ளாவது இவர்கள் தான் என்று கூறியுள்ளார்.

 புதிய பாதையினர் இப்படிப்பட்ட குட்டி முதலாளித்துவ மேட்டுகுடி பாட்டாளிகளின் அதிக ஊதியத்தில் இருந்து மக்கள் கார்ப்பரேட் நடத்த வேண்டும் என்கின்றனர். புதியதாக எழும் பொருளாதார நெருக்கடியில் இந்த மேட்டுகுடி பாட்டாளிகளே அதிகம் பாதிப்புக்கு உள்ளாவார்கள், அது மட்டும் அல்லாது மக்கள் கார்ப்பரேட்டும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும். இப்படி இரட்டை வீழ்ச்சிக்கு உள்ளாகும் குட்டி முதலாளித்துவ மேட்டுகுடி பாட்டாளிகளின் சிந்தனையில் புதிய பாதையினர் மூழ்கிக் கிடக்கின்றனர்.

 இதற்கும் முழுமையாக சுரண்டலுக்கு ஆளாகும் பாட்டாளிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. புதிய பாதையினர் மேட்டுகுடி பாட்டாளி வர்க்கத்தின் குட்டி முதலாளித்துவ சிந்தனையை பாட்டாளி மத்தியில் பரப்ப முனைகின்றனர். இந்த மேட்டுகுடி சிந்தனை பாட்டாளிகளுக்கு பொருந்தாது என்பதையே மார்க்சியம் நமக்கு போதிக்கிறது.

       புதிய பாதையினரிடம் குட்டி முதலாளித்துவ சிந்தனை காணப்படுவதினால், அவர்களுக்கு பாட்டாளி வர்க்க போர் குணம் இல்லாமல் குட்டி முதலாளித்துவ மனிதநேய மார்க்சியம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

       பாட்டாளி வர்க்கத்தைக் கொண்டு முதலாளித்துவ வர்க்கத்துடன் போரிடுவதற்கு பதில் முதலாளிகளுக்கு எதிரான் மக்கள் கார்ப்பரேட்டை அமைக்க முயற்சிக்கின்றனர் புதிய பாதையினர். அணுகுண்டைக் கண்டு அஞ்சிய புதிய பாதையினர், ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுடன் போட்டி போட்டு அழிந்து போக இருக்கின்றனர்.

        இந்த அழிவுக்கு பாட்டாளி வர்க்கம் பலியாகாது. தனது போர்குணத்தால் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நேரடியாகப் போராடும், புதிய பாதையினரின் குறுக்கு வழியில் பாட்டாளி வர்க்கம் செல்லாது.

 புதிய பாதையினர் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தையும் வரலாற்றியல் பொருள்முதல்வாதத் தத்துவத்தையும் சரியாகப் புரிந்கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளாதவரை குட்டி முதலாளித்துவ சிந்தனையிலே வீழ்ந்து கிடப்பர்.

 

No comments:

Post a Comment