Saturday, 3 January 2015

மார்க்சியத்தைப் புதிப்பிப்பவர்கள் முதலில் மார்க்சியத்தை அறிந்து கொள்ளட்டும்

மார்க்சியத்தைப் புதுப்பிப்போம் என்பதே மார்க்சியத்தை புரிந்து கொள்ளாமையை வெளிப்படுத்துகிறது.



லெனின் கூறுகிறார்:- “எங்களுடைய போதனை, செயலுக்கு ஒரு வழிகாட்டியே தவிர வறட்டுச் சூத்திரம் அல்ல என்கிறார் எங்கெல்ஸ்- தம்மையும் புகழ் மிக்க தமது நண்பரையும் குறிக்கும்படி எங்களுடைய என்கிறார்.
..
பொதுப்படையான, அடிப்படையான குறிக்கோள்களை இங்கே நான் குறிப்பிடவில்லை. வர்க்கங்களிடையே நிலவும் அடிப்படை உறவு மாறாமலிருக்கும் வரையில் சரித்திரத்தின் திருபங்களினால் இந்தக் குறிக்கோள் மாறுவதில்லை.
..
இந்தக் காலகட்டத்தில் ஸ்தூலமான சமுதாய-அரசியல் நிலைமையும், அது போல நேரடியான, உடனடியான செயலின் குறிக்கோள்களும் மிகத் தீவிரமாக மாறி வந்திருக்கின்றன. இதன் விளைவாக மார்க்சியத்திலும் அதன் பல்வேறு அம்சங்க்ள் முன்னணிக்கு வந்து தீர வேண்டும். ஏனெனில் மார்க்சியம் உயிர்ப் பண்பு கொண்ட போதனையாகும்.” (மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சிலசிறப்பியல்புகள்)

பி இளங்கோ சுப்பிரமணியன் என்பவர் தமது முகநூலில் “மார்க்சியத்தில் சாதியைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை!” (https://www.facebook.com/ilango.pichandy/posts/1585433875019508) என்ற சிறு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில் மார்க்சியம் பற்றி எந்த வகையான புரிதலும் இன்றி மார்க்சியத்தில் அது இல்லை இது இல்லை என்று குறைபட்டுக் கொள்கிறார். முதலில் அவர் மார்க்சியத்தைப் புரிந்து கொண்டிருந்தால் இத்தகைய கேள்வி எழுந்திருக்காது.  

செயலுக்கு வழிகாட்டி என்று மார்க்சியத்தை லெனின் கூறியதை மேலும் புரிந்து கொள்வதற்கு மார்க்சியம்-லெனினியம் உண்மையை அறியும் வழியை நடைமுறை வாயிலாக இடைவிடாமல் திறந்து காட்டுகிறது என்று மாசேதுங் கூறுகிறார்:-

"புறநிலை எதார்த்த உலகில் மாற்றத்தின் இயக்கங்கள் ஒருபொழுதும் முற்றுப்பெறாது. அதைப் போன்றதுதான், நடைமுறையின் மூலம் மனிதன் உண்மையை அறியும் நிகழ்ச்சிப்போக்கும், மார்க்சியம்-லெனினியம் எந்த வகையிலும் உண்மை பற்றிய முழு அறிவையும் அப்படியே திரட்டிக் கொடுத்துவிடவில்லை. மாறாக, அது நடைமுறை வாயிலாக உண்மையை அறியும் வழியை இடைவிடாமல் திறந்து விடுகிறது. அகமும் புறமும், கொள்கையும் நடைமுறையும், அறிவதும் செய்வதும் பருண்மையான வரலாற்று வழியிலான ஒற்றுமையில் இருக்கிறது என்பதே நமது முடிவு."
(
நடைமுறை பற்றி)

மாசேதுங் கூறுவது போல், மார்க்சியம் நடைமுறை வாயிலாக உண்மையை அறியும் வழியை இடைவிடாமல் திறந்து விடுகிறது என்பதை பி இளங்கோ சுப்பிரமணியன் புரிந்து கொள்ளவில்லை.

இளங்கோ “எந்த ஒரு தத்துவமும் பிரதேச எல்லைகளை மீறி, பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள  அனைத்துச் சிக்கல்களுக்கும் தயார் நிலையிலான தீர்வுகளை
(READYMADE SOLUTIONS)
வழங்கும் என்ற எதிர்பார்ப்பே அறிவியலற்றது (UNSCIENTIFIC).” என்று பொதுப்படக் கூறிவிட்டு, மார்க்சியம் குறைபாடானதாக காட்ட முயற்சிக்கிறார்.

 இங்கே இளங்கோவின் கருத்துக்களை முழுமையாக மறுப்பதைவிட, அவர் முதலில் மார்க்சியத்தில் அறிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது என்பதை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு தற்போது நிறுத்திக் கொள்வோம்.

“மலையாகக் குவிந்து கிடக்கும் இந்த நூல்களில், ஏதேனும் ஒன்றில் சாதியைப் பற்றி (ON CASTE ) ஏதேனும் ஒரு சிறு குறிப்பாவது உள்ளதா என்றால் இல்லை என்பது
கண்கூடு.”  என்கிறார் இளங்கோ. மார்க்சியத்தில் காணும் சாதியம் பற்றிய எந்தக் கருத்தையும் இவர் இன்னும் படித்தறியவில்லை என்று தெரிகிறது.

மார்க்சும் எங்கெல்சும் தாம் இணைந்து எழுதிய ஜெர்மன் சித்தாந்தம் என்ற நூலில் காணப்படுவதைப் பார்ப்போம்:-
“இந்தியர்கள் மற்றும் எகிப்தியர் விஷயத்தில் முதிராத வடிவில் தோற்றம் அளிக்கும் உழைப்புப் பிரிவினை அவர்களது அரசு மற்றும் சமயத்தில் சாதி முறையை வெளிக் கொணரும் போது, இந்த சாதி முறையே இந்த முதிராத சமுதாய வடிவத்தை உருவாக்கியுள்ள சக்தி என்பதாக வரலாற்றாளர் கருதுகிறார்கள்”

மேலும், மார்க்ஸ் பா.வ.ஆன்னென்கவுக்கு எழுதிய படிதத்தில் (28/12/1846) “திரு.புரூதோனுக்கு உழைப்புப் பிரிவினை ஒரு மிகச் சாதாரணமான விஷயம். எனினும் சாதி அமைப்பு முறையுங்கூட ஒரு குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினை அல்லவா?”
உழைப்புப் பிரிவினையோடு சாதியத்தைப் பற்றி மார்க்ஸ் பேசுகிற கருத்தைப் புரிந்து கொண்டால் சாதியத்துக்கான தீர்வை நோக்கி பயணிக்கலாம். சாதியத்தை புரிந்து கொள்வதற்கு மார்க்சும் உதவுவார் மார்க்சியமும் உதவும்.

 தொடக்கால எழுத்துகளில் மட்டுமல்லாது மார்க்ஸ் தாம் வாழ்ந்த காலத்திலேயே எழுதி வெளியிட்ட மூலதன நூலின் முதல் பகுதியிலும் சாதியத்தைப் பற்றி கூறியிருக்கிறார்.

“முந்தைய சமுதாயங்கள் தொழில்களைப் பரம்பரையாக்கி, சாதிகளாக அவற்றை உறைந்து இறுகச் செய்தோ, குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளின் காரணமாய் சாதி அமைப்புக்கு ஒவ்வாத முறையில் வேறுபாடுறும் தன்மை தனிஆளிடம் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை கைவினைச் சங்கங்களாக சமைந்து கெட்டிப்படச் செய்தோ வந்த போக்கிற்கு ஒத்ததே ஆகும். தாவரங்களும் மிருகங்களும் இனங்களாகவும் ராசிகளாகவும் வகைபிரிவதை முறைப்படுத்துகிற அதே இயற்கை விதியின் செயலிலிருந்தே, சாதிகளும் கைவினைச் சங்கங்களும் பிறக்கின்றன, ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைந்ததும் சாதி மூலமான பரம்பரைத் தன்மையும் கைவினைச் சங்கம் மூலமான பிரத்தியேகத் தன்மையும் சமுதாயச் சட்டத்தின் மூலம் நிலைநாட்டப்படுகின்றன என்பதே” (மூலதனம்  I பக்கம் 461)

அதே போல் "குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்ற நூலில் “எங்கல்ஸ், இந்தியா பக்கம் கீழ்த்திசை நாடுகளின் பக்கம் தம் பார்வையைத் திருப்பி இருக்கிறாரா என்றால், இல்லை என்பது தெளிவு.” என்று இளங்கோ எழுதுகிறார்

 இந்தியர்களைப் பற்றியும், தென்னிந்தியர்களைப் பற்றியும், தமிழர்களைப் பற்றியும் எங்கெல்ஸ் எழுதியதை இளங்கோ படித்தறியவில்லை.

நீயூயார்க் மாநிலத்திலுள்ள செனீகா இராகோஸ்கள் மத்தியில் காணப்படும் ரத்த உறவு முறையைக் குறிப்பிடும் சொற்களில் இரு நூற்றுக்கு மேற்பட்ட உறவுகள் விஷயத்தில் இன்றும் தென்னிந்தியாவிலுள்ள தமிழர்கள் மத்தியில் குறிப்பிடும் உறவுகளின் பெயரோடு ஒத்திருப்பதை ஒப்பிட்டு எங்கெல்ஸ் எழுதியுள்ளார்.

"ஓர் இராகோஸ் தனது சொந்தக் குழந்தைகளை மட்டும் மகன், மகள் என்று அழைப்பதில்லை. அவர் தனது சகோதரனின் குழந்தைகளையும் தன்னுடைய மகள், மகன் என்றே அழைக்கிறார். அவர்களும் அவரை அப்பா என்றே அழைக்கிறார்கள். மறுபக்கத்தில் அவர் தனது சகோதரியின் குழந்தைகளை மருமகள், மருமகன் என்று அழைக்கிறார், அவர்கள் அவரை மாமா என்று அழைக்கிறார்கள்.

இதற்கு எதிரிடையாக, ஓர் இராகோஸ் பெண் சகோதரியின் குழந்தைகளைத் தனது சொந்தக் குழந்தைகளுடன் சேர்த்துத் தன் மகன், மகள் என்றே அழைக்கிறார். அவர்களும் அவளை அம்மா என்றே அழைக்கிறார்கள். மறுபக்கத்தில் அவள் தன்னுடைய சகோதரர்களின் குழந்தைகளை மருமகன், மருமகள் என்று அழைக்கிறார்ள். அவர்கள் அவளை அத்தை என்று அழைக்கிறார்கள். இதைப் போலவே சகோதரர்களின் குழந்தைகள் ஒருவரையொருவர் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று அழைத்துக் கொள்கிறார்கள், சகோதரிகளின் குழந்தைகளும் அவளுடைய சகோதரனுடைய குழந்தைகளும் ஒருவரையொருவர் தமது பெற்றோரின் உடன் பிறந்தாரின் சேய் என்று அழைக்கிறார்கள்.

இவை அர்த்தமில்லாத வெறும் சொற்களல்ல, ஆனால் இரத்த உறவு முறையின் நெருங்கிய தன்மை, விலகிய தன்மை, சமத்துவம், சமத்துவமின்மை பற்றி நடைமுறையில் இருக்கின்ற கருத்துக்களைக் குறிக்கின்ற சொற்களாகும். இக்கருத்துககள் முழுமையான உருவாக்கப்பட்ட இரத்த உறவு முறைக்கு அடிப்படையாகப் பயன்படுகின்றன.

ஒரு தனி நபரது நூற்றுக்கணக்கிலே வேறுபட்ட உறவுகளை இது குறிப்பிட்டுச் சொல்ல முடியும். மேலும், இம் முறை எல்லா அமெரிக்க செவ்விந்தியர்களிடையிலும் முழு அளவில் செயலில் இருப்பது மட்டுமன்றி இந்தியாவின் ஆதிக்குடியினர் மத்தியிலும், தக்காணப் பகுதியிலுள்ள திராவிட இனக்குழுக்கள், இந்துஸ்தானத்திலுள்ள கௌரா இனக்குழுக்கள் ஆகியோர் மத்தியிலும் அநேகமாக மாற்றமின்றி நிலவி வருகிறது.

தென்னிந்தியாவில் உள்ள தமிழர்கள் மத்தியிலும் நியூயார்க் மாநிலத்திலுள்ள செனீகா இராகோஸ்கள் மத்தியிலும் இரத்த உறவு முறையைக் குறிக்கும் சொற்கள் இருநூற்றுக்கு மேற்பட்ட உறவுகள் விஷயத்தில் இன்றும் கூட ஒன்றையே குறிக்கின்றன"   (மார்க்ஸ் எங்கெல்ஸ்- தேர்வு நூல்கள் தொகுதி 11-பக்கம் 46-47)


இது போன்ற மார்க்சிய முதலாசிரியர்களின் படைப்புகளை  எல்லாம், பி இளங்கோ சுப்பிரமணியன் படித்து முடித்தால் மார்க்சியம் புரிந்திடும். புரியாத மார்க்சியத்தை எதிர்ப்பதை விடுத்து மார்க்சியத்தை புரிந்து எதிக்கட்டும் அதனை எதிர்கொள்ள மார்க்சியம் என்றும் தயராகத் தான் இருக்கிறது.

Saturday, 6 December 2014

பாட்டாளி வாக்க சர்வதேசியவாதமும் முதலாளித்துவ தேசியவாதமும்

(தேசியம் பற்றி மார்க்சியம் பிரிதலை மட்டுமே முன்னிருத்துவதாக தவறாக புரிந்துள்ள நிலைமையினை முன்வைத்து  இந்த பகுதியை தனியாகப் பதிவிடப்படுகிறது)

அயர்லாந்து தேசிய இனப்பிரச்சினையினால் ஏற்படுகின்ற, இங்கிலாந்து பாட்டாளிகளுக்கும் அயர்லாந்து பாட்டாளிகளுக்கும் இடையேயான  பிணக்கை, இங்கிலாந்து முதலாளி வர்க்கத்தின் தேசியவாதம் தமக்கு சாதகமாக்குகிறது. அதனால் ஆங்கிலேய பாட்டாளிகளிடையே காணப்படும் இந்தப் போக்கை தடுக்க வேண்டும்.

உலக சந்தையை தமது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் இங்கிலாந்தில் புரட்சி நடைபெறுவதற்கு ஏற்ற வளர்ச்சியடைந்த தேசமாக காணப்படுகிறது. இந்த சமூகப் புரட்சியை விரைவுபடுத்துவதற்கு சர்வதேச பாட்டாளிகளின் சங்கம் அயர்லாந்தை சுதந்திர நாடாக்கும் முயற்சிக்கு உதவுது முக்கியமானது என்று கருதுகிறது.

அயர்லாந்து விடுதலை என்பது நீதியை நிலை நாட்டுவதற்கோ அல்லது மனிதாபிமான உணர்ச்சியின் அடிப்படையிலோ கோராப்படுவதில்லை, இங்கிலாந்தின் சமூக விடுதலைக்கு முதல் நிபந்தனையான கடமையாகும் என்கிறார் மார்க்ஸ்.

சுயநிர்ண உரிமையை கோருவது எந்த வகையிலும் சர்வதேசிய வாதத்துக்கு எதிரானது அல்ல என்பதை மார்க்ஸ், லெனின் ஆகியோர்களின் கருத்தால் அறிந்து கொள்ளலாம்.

மார்க்ஸ்:-
"..அயர்லாந்து பற்றி ஆங்கிலேய தொழிலாளி வர்க்கத்தின் கண்ணோட்டம் என்னவென்று பொதுச்சபை விவாதித்து அது பற்றி தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதேபித்திருக்கிறேன், ஒடுக்கப்பட்டிருக்கும் அயர்லாந்துக்குச் சாதகமாகவும், அவர்களை ஒடுக்கி வருகிறவர்களை எதித்தும் உரத்த குரலில் பேசுவதோடு, நான் பகிரங்கமாகக் கூறியிருக்கும் இரண்டு விஷயங்களுக்கும் வேறு நோக்கங்கள் இருக்கின்றன.

மேன்மேலும் ஒரு விஷயம் என்னுள்ளத்தில் ஆழமாக வேரூன்றிவிட்டது, ஆங்கிலேய தொழிலாளி வர்க்கம் இதை ஏற்றுக் கொள்ளும்படி செய்வதுதான் முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. அதாவது ஆங்கிலேய வர்ககம் அயர்லாந்து தொடர்பாக தன்னுடைய கொள்கையை ஆளும் வர்க்கங்களின் கொள்கையிலிருந்து தனியே பிரித்துக் கொள்வது வரையிலும், அயர்லாந்து மக்களின் லட்சியத்தைத் தங்கள் பொதுலட்சியமாக ஏற்றுக் கொள்வதோடு, 1801ம் ஆண்டில் ஏற்படுத்திய இணைப்பைக் கலைத்து அதற்குப் பதிலாக சுதந்திரமான கூட்டாட்சி உறவை அமைப்பதற்கு தாமே முன்முயற்சி எடுத்துக் கொள்வதுவரையிலும் இங்கு, இங்கிலாந்தில் ஆங்கிலேய தொழிலாளி வர்க்கம் முக்கியத்துவம் பெற்ற எதையும் செய்யவே முடியாது.

அயர்லாந்துக்கு அனுதாபம் காட்டும் முறையில் இதைச் செய்யக்கூடாது, ஆங்கிலேய பாட்டாளி மக்களின் நல உரிமையைப் பேணிபாதுக்காக்கும் கோரிக்கையாகக் கருதி இதைச் செய்ய வேண்டும். இதைச் செய்யவில்லையென்றால் ஆங்கிலேய மக்கள் ஆளும் வர்க்கங்களின் தலையாய கயிறுகளால் கட்டிப் பிணைக்கப்பட்டே கிடப்பார்கள், இதைச் செய்யவில்லையென்றால், அயர்லாந்துக்கு விரோதமாக பொது அணியில் அவர்களோடு ஆங்கிலேய தொழிலாளி வர்க்கம் ஒன்று சேரவேண்டியிருக்கும். இங்கிலாந்தில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் கணிசமான பகுதியினர் அயர்லாந்து தொழிலாளர்களாக இருப்பதால், அயர்லாந்தோடு போடும் சண்டை. இங்கிலாந்தில் அது நடத்தும் ஒவ்வொரு இயக்கத்தையும் உடைத்தெறியும்.

ஆங்கிலேய தொழிலாள வர்க்கம் இங்கு விடுதலை பெறுவதற்கு மிக முக்கியமான நிபந்தனையாக இருப்பது ஆங்கிலேய நிலப்பிரபுத்து ஒரு சிலராட்சியை வீழ்த்துவதாகும், அதைச் செய்யமுடியாது. ஏனென்றால் அயர்லாந்தில் அதன் புறக்காவல் நிலையங்கள் பலமாக இருக்கும்பொழுது அதை இங்குத் தாக்கி வெற்றிவெறுவது சாத்தியமல்ல. ஆனால். அங்கு சகல அதிகாரங்களையும் அயர்லாந்து மக்களே தங்கள் கையில் எடுத்துக் கொண்டால் சட்டம் இயற்றுகிறவர்களையும், அட்சியாளர்களையும் தானே அது நியமித்தால், சுயாட்சியை அது பெற்றால், நிலப்பிரபுத்துவ சிலராட்சியை வீழ்த்துவது இங்க இருப்பதைக் காட்டிலும் அங்கு எளிதான செயலாக இருக்கும். (பெரும் அளவிற்கு ஆங்கிலேய நிலப்பிரபுக்களைப் போன்ற அதே நபர்கள் தான் அங்கும் இருக்கிறார்கள்) மேலும், அயர்லாந்தில இதுவெறும் பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமல்ல, அதே நேரத்தில் ஒரு தேசியப் பிரச்சினையாகவும் இருக்கிறது,.."
எல்.கூகெல்மானுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதம் (லண்டன், நவம்பர் 29, 1869)
பக்கம் - 145-146

பாட்டாளி வர்க்கச் சர்வதேசியவாதத்தோடு சுயநிர்ணய உரிமை என்பது முரண்படுவதில்லை என்பதை லெனின் எவ்வாறு விளக்குகிறார் என்பதை பார்ப்போம்.

      பாட்டாளி வர்க்கச் சர்வதேசியவாதம் வெற்று வார்த்தையாகப் போகாமல் இருக்க வேண்டுமானால், பலவந்தமாக ஒரு தேசிய இனத்தை பிடித்து வைத்திருப்பதற்கு எதிராக போராட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், ஒடுக்கும் தேசிய இனத்தின் தொழிலார்களுக்கும் ஒடுக்கத்துக்கு ஆளான தொழிலாளர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையும் ஒருமைப்பாட்டும் சாத்தியமற்றுப் போகும். மார்க்ஸ் கூறியப்படியே லெனினும் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுதந்திரத்தின்

லெனின்:-
“ஓர் அரசின் எல்லைகளுக்குள் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பலவந்தமாகப் பிடித்து நீடித்து வைத்துக்கொண்டிருக்கப்படுவதற்கு எதிராகப் பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும், அதாவது சுயநிர்ணய உரிமைக்காகப் போராட வேண்டும். "தங்களது" தேசிய இனத்தினால் ஒடுக்கப்படும் காலனிகளுக்கும் தேசிய இனங்களுக்கும் அரசியல் ரீதியில் பிரிந்து போகும் சுதந்திரம் தரப்பட வேண்டும் என்று பாட்டாளிகள் கோர வேண்டும். இல்லாவிட்டால் பாட்டாளி வாக்கச் சர்வதேசியவாதம் என்பது வெற்று வார்த்தை, ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கும் தேசிய இனத்தின் தொழிலார்களுக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையோ அல்லது வர்க்க ஒருமைப்பாடோ அப்பொழுது சாத்தியமில்லை,.."
சோஷலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும்
பக்கம்-187

லெனின்:-
"எவ்வாறு ஒடுக்கப்படும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற இடைநிலைக் காலத்திற்குப் பிறகுதான் வர்க்கங்களை மனித சமுதாயம் ஒழிக்க முடியுமோ அதே போல, ஒடுக்கப்படும் எல்லாத் தேசிய இனங்களுக்கும் முழுவிடுதலை என்ற - அதாவது, பிரிந்து போகும் சுதந்திரம் என்ற - இடைநிலைக் காலத்துக்குப் பிறகுதான் தேசிய இனங்கள் தவிர்க்க முடியாத வகையில் இரண்டறக் கலத்தல் என்ற நிலையை அடைய முடியும்.”
சோஷலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும்
பக்கம்-186

      வர்க்கப் போராட்டத்துக்காகவும். சர்வதேசிய ஒற்றுமையினை வளர்த்தெடுப்பதற்காகவும் கம்யூனிஸ்டுகள் அகிலத்தின் தீர்மானமான சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டிருப்பதை லெனின் உறுதிப்படுத்துகிறார். மேலும் ஒடுக்கும் தேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சர்வதேசியவாத உணர்வில் பயிற்றுவிப்பதற்கு ஒடுக்கும் நாடுகளுக்குப் பிரிந்து போகும் சுதந்திரம் அளிக்க வேண்டியதையும் வலியுறுத்துகிறார்.

லெனின்:-
"தேசிய இன ஒடுக்குமுறை இருக்கும் ஒரு நிலைமையில் தேசிய இன விடுதலைப் பணிகளைப் புறக்கணிப்பது சோஷலிஸ்டுக் கருத்துப்படி நிச்சயம் தவறாகும்.

இந்தக் கருத்துநிலையிலுள்ள மிகவும் இன்றியமையாத, அடிப்படையான அறுதியுரைகளை அகிலத்தின் தீர்மானம் திரும்பவும் வழங்குகிறது, ஒரு புறம் எல்லாத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் முழுமையாக, அறவே நேரடியாக ஐயத்திற்கிடமின்றி ஏற்றுக் கொள்வது, மறுபுறம் தொழிலாளர்களிடம் அவர்களது வாக்கப் போராட்டத்துக்காக சர்வதேசிய ஒற்றுமையை வளர்க்கும்படி  இதே போல தெட்டத்தெளிவாக வேண்டுகோள்  விடுவது."
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 134-135

லெனின்:-
"ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சர்வதேசியவாத உணர்வில் பயிற்றுவிக்கும் பொழுது ஒடுக்கப்படும் நாடுகளுக்குப் பிரிந்துபோகும் சுதந்திரமளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இது இல்லாமல் சர்வதேசியவாதம் என்பது இருக்க முடியாது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதிகள் (கம்யூனிஸ்டுகள்) அத்தகைய பிரசாரத்தைச் செய்யத் தவறினால் அவ்வாறு தவறியவர் ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும் கயவர் என்றும் கருதுவது நமக்கு உரிமையும் கடமையுமாகும். சோஷலிசத்தை அடையுமுன்னர் பிரிந்து போகும் வாய்ப்பு ஆயிரத்தில் ஒன்றுதான் என்றாலும்கூட இது ஒரு தனிமுழுமையான கோரிக்கை."
சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தின் தொகுப்பு - பக்கம் - 245-246

      சர்வதேச வர்க்க ஒருமைப்பாட்டை குலைக்கின்ற தேசிய இன முதலாளி வர்க்கத்தின் தனியுரிமையினை எதிர்க்காமல் போனால் பாட்டாளி வாக்கத்தின் இடையே அவநம்பிக்கையை அது ஏற்படுத்திவிடும். பிரிந்து போகும் உரிமையை மறுப்பதானது முதலாளி வர்க்கம் மகிழும்படி தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி விடும் என்று லெனின் நேரடியாக எச்சரிக்கிறார்.

லெனின்:-
"எந்த ஒரு தேசிய இனத்தின் பாட்டாளி வாக்கமாவது அதன் "சொந்த" தேசிய இன முதலாளி வர்க்கத்தின் தனியுரிமைகளுக்குச் சிறிதேனும் ஆதரவு கொடுக்குமானால் இன்னொரு தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்தின் மத்தியில் அது அவநம்பிக்கையைத் தவிர்க்க முடியாத வகையில் தோற்றுவிக்கும், இது தொழிலாளிர்களின் சர்வதேச வர்க்க ஒருமைப்பாட்டைப் பலவீனப்படுத்தும். முதலாளி வர்க்கம் மகிழும் முறையில் தொழிலாளர்களைப் பிளவுபடுத்தும், சுயநிர்ணய உரிமையையோ பிரிந்துபோகும் உரிமையையோ மறுப்பதானது ஆதிக்க தேசிய இனத்தின் தனியுரிமைகளை ஆதரிப்பது என்றே தவிர்க்க முடியாதபடி பொருள்படும்"
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 122

இன ஒடுக்குதல் அற்ற சூழ்நிலையில் ஒரு தேசம் பெரிய அளவாய் இருப்பதையே உணர்வு படைத்த பாட்டாளி வர்க்கம் விரும்பும். அதுமட்டுமல்லாது பெரியதாய் உள்ள பிரதேசயத்தையும் அதில் மிக நெருக்கமான பொருளாதார செயற்பாடுகள் இணைந்திருப்பதையும் பாட்டாளி வர்க்கத்துக்கு சாதகமாகும். ஏனெனில் முதலாளித்துவ வர்க்கத்ததின் மீதான தமது எதிர்ப்பை விரிவான வகையில் செலுத்த முடியும்.

தேசிய இனங்களின் மனப்பூர்மான ஒற்றுமையை மார்க்சியம் வலியுறுத்துகிறது. மனப்பூர்வமான ஒற்றுமைக்காகத் தான் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் தேசிய குறுகிற மனப்பான்மையும், தனித்திருத்தலையும் ஒதுங்கி வாழ்வதையும் எதிர்த்துப் போராடுகிறது.

கம்யூனிஸ்டுகளின் சுயநிர்ணய உரிமையை மட்டுமே அறிந்து கொண்டு, தேசம் பிரிந்து போவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளதாக தவறாக பலர் புரிந்து வைத்துள்ளனர். ஒடுக்கத்துக்கு ஆளான தேசம் பிரிந்து போவதற்கான உரிமைக்கு போராடும்  கம்யூனிஸ்டுகள் தேசங்களின் ஒன்றுகலத்தலுக்காகவும் போராடுகின்றனர் இதனை லெனின் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். ஒடுக்கத்துக்கு ஆளான தேசங்களுக்காக்க போராடாதவர் மார்க்சியவாதி அல்ல, அதேநேரத்தில் மற்றொரு தேசிய இனத்தைச் சேர்ந்த மார்க்சியவாதி ஒன்றுகலத்தலுக்கு ஆதரவாக இருப்பதை குறிப்பிட்டு நிந்திப்பவர் தேசியவாத அற்பரே அந்தப் போலி மார்க்சியவாதி என்கிறார் லெனின்.

லெனின்:-
“தேசிய இனங்களின், மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரிக்காத, அதற்காகப் போராடாத எவரும், எல்லாவிதமான தேசிய இன ஒடுக்குமுறையும் சமத்துவத்துக்கு இடமில்லாதது. ஆனால் பிறிதொரு தேசிய இனத்தைச் சேர்ந்த மார்க்சிவாதி “ஒன்றுகலத்தலை” ஆதரித்து நிற்பதாகச் சொல்லி அவரை நிந்தனை செய்யும் போலி மார்க்சியவாதி தேசியவாத அற்பரே ஆவார் என்பதும அதே போல் சந்தேகத்துக்கு இடமில்லத்து தான்”
தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள் - பக்கம் - 34

தனித்தனி தேசிய இனங்களாக பிரிந்திருப்பதே அந்தந்த தேசங்களுக்கு சிறந்தாய் இருக்கும் என்ற நிலையை, சுயநிர்ணய உரிமை கோரவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இணக்க மற்ற நிலையில் பிரிந்து செல்வதையும் இணக்கமும் நெருக்கமும் உள்ள நிலையில் சேர்ந்திருத்தலையும் வலியுறுத்துகின்றனர் கம்யூனிஸ்டுகள்.

தேசிய இனங்களின் பிரச்சினை என்பது, முதலாளித்துவ தேசத்தின் தொடக்கத்திலிருந்து, சோஷலிச சமூகத்தைக் கடந்து கம்யூனிச சமூகம் வரை தொடரும். இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு அரசின் தோற்றம் முதல் அதன் மறைவு வரையான அதாவது அரசு உலர்ந்து உதிரும் நிலைவரையான வரலாற்றியல் பொருள்முதல் பார்வையில் புரிந்திருப்பது அவசியமானதொன்றாகும்.

சுயநிர்ணய உரிமையை மார்க்சியம் ஆதரிக்கிறது என்றவுடன், மார்க்சியவாதிகள் தேசிய இனக் கலாச்சாரத்துக்காக போராடுபவர்கள் என்று நினைத்திவிடக் கூடாது. கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்க சர்தேசக் கலாச்சாரத்தையே பின்பற்றுபவர்கள். இதில் எந்த தயக்கமும் கிடையாது. ஒரு இனம் தாம் சுயமாக செயற்படும் போது தான் சர்வதேசிய பாதையை நோக்கி தடையில்லாமல் செல்ல முடியும்.

தேசிய இனக் கலாசாராம் என்பது நிலப்பிரபுக்கள், மதக் குருமார்கள், மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தினுடையது என்கிறது மார்க்சியம். இந்த தேசியக் கலாச்சாரத்தில் உள்ள ஜனநாகயக மற்றும் சோஷலிசக் கூறுகளை மட்டும் தான் பாட்டாளிவர்க்கம் எடுத்துக் கொள்கிறது. ஒவ்வொரு தேசிய இனத்துக்கு உரிய முதலாளித்துவ கலாசாரத்தையும் முதலாளித்துவ தேசிவாதத்தையும் எதிர்ப்பதற்காகவே அவற்றை எடுத்துக் கொள்கிறது.

லெனின்:-
"தேசிய இனக் கலாசாரம் என்ற கோஷத்தின் உட்பொருள், குறிப்பிட்ட நாடடிலும் உலகின் எல்லா நாடுகளிலும் எல்லா வர்க்கங்களுக்கும் இடையிலான புறநிலை எதார்த்த உறவுகளால் நிர்ணணிக்கப்படுகிறது. முதலாளி வர்க்கத்தின் தேசிய இனக் கலாசாரம் கண்கூடான உண்மை ஆகும்.
..
ஆக்கிரமிப்பு வாய்ந்த பூர்ஷ்வா தேசியவாதமானது, தொழிலாளர்களை முதலாளி வர்க்கத்தாருக்கு அடிபணிந்து நடக்க வைப்பதற்காக அவர்களை மதிமயங்கச் செய்கிறது, அசட்டு  ஏமாளிகளாக்குகிறது, ஒன்றுசேராதவாறு பிளவுறுத்துகிறது- இது தான் இக்காலத்தின் அடிப்படையான உண்மை.
..
தேசிய இனக் கலாசாரம் என்ற கோஷத்தை ஆதரிப்போர் இருக்க வேண்டிய இடம் தேசியவாதக் குட்டி முதலாளித்துவப் பகுதியோர் மத்தியிலே அன்றி, மார்க்சியவாதிகள் மத்தியில் அல்ல.

ஸ்தூலமான ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம், மாருஷ்ய மார்க்சியவாதியான ஒருவர் தேசிய இன மாருஷ்ய கலாசாரம் என்ற கோஷத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா? முடியாது. ஏற்றுக் கொள்கிறவர் எவரும் தேசியவாதிகளது அணிகளில் இருக்க வேண்டுமே அன்றி, மார்க்சியவாதிகளது அணிகளில் அல்ல."
தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள் - பக்கம் - 28-29

      தேசிய இனத் தனியியல்புகளை இழந்து வேறொரு தேசிய இனமாக மாற்றமுறுவது அதாவது சர்வதேசிய இனமாக மாறுவது என்பது வரலாற்றில் நிகழக்கூடிய ஒன்றாகும்.  எதிர்காலத்தில் நடைபெறப் போகின்ற இந்த ஒன்றுகலத்தல் என்பதை கணக்கில் கொண்டே மார்க்கியம் தமது சர்வதேசிய கண்ணோட்டத்தை அமைத்துக் கொண்டுள்ளது. எப்படி ஆதி பழங்குடியோடு நாகரீக சமூகத்தின் வரலாறு நின்றுவிடவில்லையோ, அதேபோன்று இன்றைய தேசிய இனக் கலாச்சாரத்தோடு நின்றுவிடப்போவதில்லை. உலக சமூகத்தின் சர்வதேச கலாச்சாரம் தோன்றும்.
    

தேசங்கள் இருக்கும் வரை தேசிய இனங்கள் ஒன்றுகலத்தல் நிகழ்வு நிறைவடையும் வரை தேசிய இனங்களின் பிரச்சினைகளை உலகம் சந்தித்து வரவேண்டிவரும்.

Tuesday, 7 October 2014

நான் கூறாததையும், கூறவேண்டியதையும் பற்றியே அதிகம் அக்கறை கொண்ட தோழர் “தோழமையுடன் மறைமலை” கருத்துக்கு எனது எதிர்வினை

தோழமையுடன் மறைமலை:-
//உங்கள் வழியில் நீங்கள் செல்லுங்கள் என்வழியில் நான் செல்கிறேன் என்பதன் பின்னால் உள்ளது. உங்கள் வியாபரத்தை நீங்கள் பாருங்கள், என் வியாபாரத்தை நான் பார்க்கிறேன். முடிந்த வரை சுருட்டுவோம் என்கிற 'பிழைப்புவாதம்' தான் இருக்கிறது.//

உங்கள் கட்சியின் வழியில் நீங்கள் செல்கிறீர்கள் எனது கோட்பாட்டின் வழியில் நான் செல்கிறேன் என்றால் பிழைப்பு வாதம் என்று கூறுகிறீர்கள். நிங்கள் பேசுவது போல் கொச்சையான அரசியல் வழியில் சென்று உங்களுக்கு பதில் அளிக்க முடியும்.

//"மார்க்சியத் தத்துவம்", "மார்க்ஸ் - எங்கெல்ஸ் வாழ்வும் படைப்பும்" என்ற எனது இருநூலையும் முழுமையாக்கி அச்சுக்காக பதிப்பகத்தாரிடம் நேற்று சேர்த்துவிட்டேன். // என்று நான் இட்ட பதிவுக்கு நீங்கள்;-

// மார்க்சிய தத்துவத்தின் வளர்ச்சியில் மாவோவின் பங்களிப்பு முக்கியமானது.

மாவோவைத் தவிர்த்து விட்டு விஞ்ஞான சோசலிசம் பேசுவது திரிபுவாதத்திலிருந்து மீளவோ அல்லது திரிபுவாதத்தை வெல்ல முடியாது.

சோசலிசத்திற்கு மாவோவின் பங்களிப்பை தவிர்த்து விட்டு மார்க்சியம் பேசுவது குறை மார்க்சியம் தான்.

மார்க்சிய லெனினிய மாசே துங் சிந்தனை என்பது தான் இன்றைய மார்க்சியம்.//

இதற்கு நான் அளித்த பதில்,
// ஏன் தோழர் ஸ்டானை விட்டுவிட்டீர்கள். ஐம்பெரும் தலைவர்களின் மாவோவை மட்டும் முன்நிறுத்துவது என்ன வாதம் தோழர்.

மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோருக்கு அடுத்து லெனின் மார்க்சியத்தை வளர்த்ததை குறிப்பிடுவது திரிபுவாதத்துக்கு இடம் கொடுக்காது தோழர். இவைகளின் தொடர்ச்சியாகத் தான் மாவோவைப் பார்க்க வேண்டும். லெனினியத்தைப் முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் காலத்திய மார்க்சியம் அடித்தளமாகிறது. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை.
...
மார்க்சைப் புரிந்து கொள்வதற்கு ஆடம்ஸ்மித், ரிக்காடோ ஆகியோர்களையும் படிக்க வேண்டியிருக்கிறது.
....//
நான் மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஆகியோரின் மார்க்சிய அடிப்படைகளை முன்வைக்கும் போது உங்களது அரசியல் பிழைப்பு பாதிப்பதால் தான் இவ்வாறு உங்களால் பேச முடிகிறது என்று உங்கள் பாணியில் எழுத முடியும் தோழர்.

//இந்த வார்த்தைகளின் பின் என்ன வர்க்க நலன் இருக்கிறது?// இந்த ஒற்றை வரியைப் பிடித்துக் கொண்டு மார்க்சிய அடிப்படை அறிவு இல்லாமல், ஆதார விளங்கங்கள் இல்லாமல் என்னை //'சந்தர்ப்பவாதம்' பிழைப்புவாதமும் தான்.// என்று எழுதுகிறீர்கள்.

//சந்தர்ப்பவாதம் பற்றி லெனின்:-
"வர்க்கங்களுக்கு இடையே ஒத்துழைப்பை ஆதரித்தல், சோஷலிசப் புரட்சி, புரட்சிகரப் போராட்ட முறைகள் ஆகிய கருத்தைக் கைவிடல், முதலாளி வர்க்க தேசியவாதத்துக்கு உகந்தாற் போல் தகவமைத்துக் கொள்ளுதல், தேசியஇன எல்லைக் கோடுகளும் நாட்டு எல்லைக் கோடுகளும் வரலாற்று வழியில் நிலையற்றவை என்பதை மறந்துவிடல், முதலாளி வர்க்கச் சட்ட முறையை மூடபத்தியுடன் வழிபடுதல், "மக்கள் தொகையில் விரிவான திரள்கள்" (குட்டிமுதலாளிகள் தான் இவ்விதம் குறிக்கப்படுகிறார்கள்) மிரண்டு விடுவார்களோ என்று அஞ்சி வர்க்கக் கண்ணோட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் விட்டொழித்தல்- சந்தேகத்துககு இடமின்றி இவையேதான் சந்தர்ப்பவாதத்தின் சித்தாந்த அடிப்படைகள்" (சோஷலிஸ்ட் அகிலத்தின் நிலையும் கடமைகளும்)//

என்ற எனது பதிவுக்கு நீங்கள், // தேசிய இன எல்லைகளுக்கும், விடுதலைக்கும் போராட வேண்டிய தமிழ்ச் சமூக நிலைமையில் இந்த மேற்கோள் இங்கே எப்படி பொருந்தும்.// என்று பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். மார்க்சியத்தின் அடிப்படைகளை மார்க்சிய ஆசிரியர்களின் நூல்களில் எப்படி அறிந்து கொள்வது என்பதைக் கூட தெரியாமல், இந்த மேற்கோள் இங்கு பொருந்தாது என்று மொட்டையாக பேசுகிறீர்கள்.

     நம் நாட்டில் காணப்படும் சந்தர்ப்பவாதத்துக்கு பதிலளிக்கவே இதனை பதிந்தேன். ஆனால் இதில் காணப்படும் அர்த்த செறிவை புரிந்து கொள்ளாமல், சோஷலி புரட்சி என்ற ஒற்றை வார்த்தையைப் பிடித்துக் கொண்டு இந்த மேற்கோள் கொடுக்கிற எச்சரிக்கையை கவனிக்காது விட்டுவிடுகிறீர்கள்.

இதற்கான விளக்கத்தை உங்கள் எழுத்தோடு, பதில் இட்டிருந்தேன்,
// தேசிய இன எல்லைகளுக்கும், விடுதலைக்கும் போராட வேண்டிய தமிழ்ச் சமூக நிலைமையில் இந்த மேற்கோள் இங்கே எப்படி பொருந்தும்.

நிலபிரபுத்துவம் வீழ்த்தப்பட்டு ஒரு தேசிய அரசு உள்ள சமூக அமைப்பில் சோசலிசப் புரட்சிக்கான சூழலில் உள்ள சமூகத்திற்கு இந்த மேற்கோள் பொருந்தக் கூடியது.

தேசிய இன எல்லைகள் பறிபோய்க் கொண்டுள்ள சூழலில் இந்த மேற்கோளைத் சொல்வது. பண்ணாட்டு மூலதனம் சார்ந்த ஏகாதிபத்திய பொருளாதாரத்திற்கு சாதகமாகவும், தேசிய ஒடுக்குமுறைக்கு ஆதரவாகவும் தான் இருக்கும்.

இங்கே நடத்தப்பட வேண்டியது தேசிய விடுதலைப் புரட்சி என்ற புதிய சனநாயகப் புரட்சி, சோசலிசப் புரட்சி அல்ல.

Eswaran Ak :-தோழமையுடன் மறைமலை @ புதிய சனநாயகப் புரட்சி, சோஷலிசப் புரட்சிக்கு எதிரானது கிடையாது, அதே போல் சோஷலிசப் புரட்சியின் கோட்பாடு புதிய சனநாயகப் புரட்சிக்கு எதிரானது கிடையாது. இரண்டுக்கும் இடையே உள்ள இயக்கவியல் தொடர்பை முதலில் புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.
      ….
பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சியை நோக்கியே பாட்டாளி வர்க்க அரசியல் செல்கிறது என்பதை புரிந்து கொள்ளாமல் புதிய சனநாயக் புரட்சியைப் புரிந்து கொள்ள முடியாது.

கம்யூனிச சமூகம் இரண்டு கட்டங்களைக் கொண்டது முதல் கட்டம் சோஷசலிச சமூகம், இரண்டாம் கட்டம் கம்யூனிச சமூகம். இரண்டாம் கட்டமான கம்யூனிச சமூகம் பற்றிய மார்க்சிய ஆசான்களின் கருத்துக்கள் சோஷலிச சமூகத்தில் தான் படிக்க வேண்டும் இங்கு பேசக் கூடாது என்று கூறமுடிமா?

உங்களது அறியாமையை எல்லாம் அறிவாகப் புரிந்து கொண்டு, அடுத்தவர்களின் பாதையில் குறுக்கிடாதீர்கள்.//

மேலும்,
// "சோஷலிசப் புரட்சி" என்ற வார்த்தை உங்களது கண்களில் பட்டவுடன், என்னை எதிர்ப்பதாக நினைத்து பதிவிட்ட உங்களது பின்னூட்டம் கீழ்காணும் லெனின் கருத்தை புரிந்து கொள்பவர்களை தடுக்க முயற்சிக்கிறது. இதனை. இந்த முகநூல் குழுவின் சார்பாக உங்களை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

-புரட்சிகரப் போராட்ட முறைகள் ஆகிய கருத்தைக் கைவிடல்,

-முதலாளி வர்க்க தேசியவாதத்துக்கு உகந்தாற் போல் தகவமைத்துக் கொள்ளுதல்,

-தேசியஇன எல்லைக் கோடுகளும் நாட்டு எல்லைக் கோடுகளும் வரலாற்று வழியில் நிலையற்றவை என்பதை மறந்துவிடல்,

-முதலாளி வர்க்கச் சட்ட முறையை மூடபத்தியுடன் வழிபடுதல்,

-"மக்கள் தொகையில் விரிவான திரள்கள்" (குட்டிமுதலாளிகள் தான் இவ்விதம் குறிக்கப்படுகிறார்கள்) மிரண்டு விடுவார்களோ என்று அஞ்சி வர்க்கக் கண்ணோட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் விட்டொழித்தல்-
சந்தேகத்துககு இடமின்றி இவையேதான் சந்தர்ப்பவாதத்தின் சித்தாந்த அடிப்படைகள்//

இதனையும் புரிந்து கொள்ளும் திறமற்று நீங்கள்:-
//மேற்கோள் தெளிவாகத் தானே உள்ளது. தேசிய இன எல்லைகள் பற்றிய கருத்து தானே சந்தர்ப்ப வாதத்தின் அடிப்படையாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்திய ஒற்றுமை பேசும் ஆளும் வர்க்கங்களின் கூச்சல் அது தானே. அதையே தான் நீங்கள் லெனின் மேற்கோளைப் பயன்படுத்தி ச் சொல்கிறிர்கள். மார்க்சியத்தில் தேசிய விடுதலைக்கான மேற்கோள்கள் உங்களின் கண்ணில் படுவதே இல்லையே. தேசிய விடுதலைச் சித்தாந்தம் சந்தர்ப்பவாதம் என்று சொல்லத் தனே இம்மேற்கோளைப் பதிவிடுகிறிர்கள். தமிழகத்தில் மார்க்சியத்தில் முக்கிய விவாதமாக உள்ள தேசிய விடுதலை குறித்து சரி என்றோ தவறு என்றோ வெளிப்படையாக நீங்கள் பேச முடியாததற்கு என்ன காரணம். மார்க்சியத்தை சந்தர்ப்பவாத நோக்கில் பயன்படுத்துவது தானே.//

மேற்கோளில், //தேசியஇன எல்லைக் கோடுகளும் நாட்டு எல்லைக் கோடுகளும் வரலாற்று வழியில் நிலையற்றவை என்பதை மறந்துவிடல், முதலாளி வர்க்கச் சட்ட முறையை மூடபத்தியுடன் வழிபடுதல்// என்று தானே லெனின் கூறியிருக்கிறார். இதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் //மார்க்சியத்தில் தேசிய விடுதலைக்கான மேற்கோள்கள் உங்களின் கண்ணில் படுவதே இல்லையே.//

என்று என்னிடம் கேட்கிறீர்கள். லெனினது இந்தக் கருத்து தேசிய விடுதலைக்கு எவ்வகையில் எதிரானது. தேசியஇன எல்லைக் கோடுகளும் நாட்டு எல்லைக் கோடுகளும் வரலாற்று வழியில் நிலையற்றவை என்பது தான் இதன் பொருள். தேசியஇள எல்லைக் கோடுகளை நிலையானதாக கருதிப் போராடும் முதலாளித்துவ தேசியத்தை எதிர்த்து எழுதப்பட்டுள்ளது. இது எப்படி தேசிய விடுதலைக்கு எதிரானதாகும். ஒடுக்குதலுக்கு ஆளான தேசத்தின் விடுதலைக்கு எதிரான எந்தக் கருத்தையும் லெனினிடம் காணமுடியாது.

இதனைப் புரிந்து கொள்ளாமல்
, நீங்கள் //தேசிய இன எல்லைகள் குறித்த இம்மேற்கோள் இலங்கை கம்யூனிஸ்டுகளுடன் ஒப்பிடுகையில் சிங்கள இன கம்யூனிஸ்டுகளுக்கு பொருந்தும், அதே போது ஈழத் தமிழ் கம்யூனிஸ்டுகளுக்கு பொருந்தாது. என்பது மட்டுமல்ல. ஒடுக்கப்படும் தேசிய இனத்திற்கு எதிரானதாக அமைந்து விடும்.// என்று எழுதியுள்ளீர்கள்.

இதில் காணப்படும் தவறை சுட்டிக்காட்டி பின்னூட்டம் இட்டுள்ளேன். அது,
//இலங்கை தேசிய எல்லைகள் நிரந்திரமானது என்ற நினைப்புடையவர்களுக்கு எதிரானது இந்த மேற்கோள்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு உங்களை தடைப்படுத்துவது எது தோழர்?

//தேசியஇன எல்லைக் கோடுகளும் நாட்டு எல்லைக் கோடுகளும் வரலாற்று வழியில் நிலையற்றவை என்பதை மறந்துவிடல்// இந்த லெனினது மேற்கோள் சந்தர்வாத கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானது. ஈழம் போன்ற இனப்பிரச்சினைக்கு ஆட்பட்ட மக்களுக்கு பொருந்தக் கூடிய சாதகமானது.//

இப்படி நான் எழுதியதற்கு இதுவரை பதிலே இல்லை.

ஆக மார்க்சிய ஆசான்களின் எழுத்துகளை புரிந்து கொள்வதில் இவ்வளவு சிக்கலை வைத்துக் கொண்டு, என்னை "பிழைப்புவாதி" "சந்தர்ப்பவாதி" என்று அருள்வாக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு ஆட்களை வேறு சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நமது நாட்டில் கூட்டம் சேர்ப்பது எளிது என்பது தெரிந்தது தானே.

தோழர் மறைமலையுடன் சேர்ந்து தோழர் காமராசன் மண்டகொளத்தூர் இவரும் எனது எழுத்துக்களை புரிந்த கொள்ளாமல் பின்னூட்டம் இட்டுள்ளார்//தோழர் ஈசுவரன் அவர்கள் அமைப்பாக்கப்படாத உதிரியாக நின்று செயல்படக்கூடிய ஏகாதிபத்திய பொருளாதாரவாதியாக மட்டுமே தன் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்.ஒரு தேசம் என்னவாக இருக்கிறது.அங்கு உற்பத்திமுறை என்ன நிலவுகிறது.அதை நாம் எப்படி புரிந்துகொண்டு சிக்கலை தீர்ப்பது என்பது பற்றியெல்லாம் இவர் கவலைபட்டது இல்லை.இவருடைய சிந்தனைகள் என்பது வெறும் புத்தகங்களாக்குவது மட்டுமே.அதைத்தாண்டி வெகுசன மக்களை சென்றடைய எந்த வழிமுறையும் இவரிடமில்லை!//

நீங்கள் உதிரியாக கருதும் இந்த அ.கா.ஈஸ்வரன் எதனை முன்வைத்து தனித்திருக்கிறான் என்பதை புரியாமல் பேசுகிறீர்கள். தனித்திருந்து செய்யும் வேலை என்ன தெரியுமா? மார்க்சிய தத்துவ அடிப்படைகளை பாதுகாப்பதற்காக அணித்திரட்டுவதே. இதனை எனது நூல்களிலும், முகநூல் பதிவுகளிலும் காணலாம்.

எனது முகநூலில் ஒரு பதிவு இதோ:-

லெனின்:-
"மார்க்சியம் அனுபவத்துவரும் நெருக்கடியின் ஆழத்தைப் பற்றியும், இந்தக் காலப்பகுதியில் நிலவும் ஒட்டுமொத்தமான சமுதாய-பொருளாதார நிலைமைக்கும் அந்த நெருக்கடிக்கும் இடையேயுள்ள சம்பந்தத்தைப் பற்றியும் நாம் மேலே குறிப்பிட்டவற்றைத் தெளிவுபடுத்த இந்த வாதங்களைக் குறிப்பிட்டாலே போதும், இந்த நெருக்கடி எழுப்பும் பிரச்சினைகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. வாய்ச்சவடால் அடித்து அவற்றை அகற்றிவிட நடக்கிற முயற்சிகள் போல் தீங்கிழைக்கும்படியான, கோட்பாடற்ற செய்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

நெருக்கடியின் ஆழத்தையும் அதை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்திருக்கும் எல்லா மார்க்சியவாதிகளையும் மார்க்சியத்தின் தத்துவ அடிப்படைகளையும் ஆதாரவரையறுப்புகளையும் பாதுகாப்பதற்காக அணி திரட்டுவதைக்காட்டிலும் முக்கியமானது எதுவும் இருக்க முடியாது, ஏனெனில் மார்க்சியத்தின் பலவகைப்பட்ட "சக பிரயாணி"களிடையே முதலாளித்துவச் செல்வாக்கு பரவியுள்ளதால் எதிரெதிரான திசைகளிலிருந்து இவை திரித்திப் புரட்டப்படுகின்றன."
-மார்க்சியதினுடைய வரலாற்று வளர்ச்சியின் சிலஇயல்புகள்

நீங்கள் எப்படி மார்க்சிய முதலாசிரியர்களின் கருத்துக்களை தம்பும்தவறுமாக புரிந்து வைத்துள்ளீர்களோ, அது போன்ற தவறனா புரிதலை எதிர்த்து நான் "மார்க்சியத் தத்துவம்", "மார்க்ஸ் - எங்கெல்ஸ் வாழ்வும் படைப்பும்" என்ற இரண்டு நூல்களை எழுதியுள்ளேன். எனது நூலினைப் படிக்கும் போது எனது தேவை கண்டிப்பாக புரிந்திருடும்.


தேவையை அறிந்து நான் எழுதுவது, வாசகர்களின் தேவையும் அதுவாகவே இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று எழுதியதை மீண்டும் உங்களுக்கு நினைவுப்படுத்தி, எனது பயணத்தைத் தொடர்வேன் என்பதை உறுதியளிக்கிறேன். எனது பயணத்திற்கு உங்களது எழுத்துக்கள் எதிர்மறையாக பயனளிக்கிறது. உலகில் பயனற்றது என்று ஏதும் கிடையாது. அளவில் தான் மாறுபடும்.