Friday, 8 November 2019

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் சமூக மாற்றமும்


(“மக்களால் முடியும்” என்ற நம்பிக்கையோடு, ஒர் அரசியல் – மெய்யியல் இதழ் வெளிவந்துள்ளது. “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் - நிகழ்காலமும்” என்ற தலைப்பில் அறிக்கையைப் பற்றி 13 பேரிடம் கட்டுரையைப் பெற்று நூலாக வெளியிட்டுள்ளனர். என்னுடைய கட்டுரையும் இதில் இடம் பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 05-01-2020 அன்று இக்கட்டுரைகளைப் பற்றியும், அறிக்கைப் பற்றியும் திறனாய்வுக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதழைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்:8939181491)


ஒரு கோட்பாடு நிகழ்காலத்தோடு இணைந்திருக்குமானால் அது உயிரோட்டத்துடன் இருக்கும். மார்க்சியக் கோட்பாடு இன்றும் உயிரோட்டத்துடன் இருக்கிறது என்றால் இன்றைய பிரச்சினைகளுக்கு அது வழிகாட்டுகிறது என்று பொருள். மார்க்சியத்தைச் சர்வரோக நிவாரணி என்று கூறலாமா? என்று கேட்டால், கூறமுடியாது என்றே மார்க்சியம் பதிலளிக்கிறது. அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வை “தயாராக” வைத்திருக்கிறதா? என்று கேட்டால் இல்லை, எந்தக் கோட்பாடும் அவ்வாறு இருக்க முடியாது என்றே மார்க்சியம் பதிலளிக்கிறது.

அப்படி என்றால், மார்க்சியம் மாற்றத்திற்கு உட்பட்டதா. ஆம் மார்க்சியம் மாற்றத்திற்கு உட்பட்டதே. லெனின் மார்க்சியத்தில் பலப்புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தார். அதனை மார்க்சியம் ஏற்றுக் கொண்டது. அந்தப் புதிய மாற்றம் ஏகாதிபத்திய காலக்கட்டத்திற்கு உரிய மார்க்சியமாக- லெனினியமாக உருவெடுத்தது. மார்க்சியத்தின் படைப்பாற்றலுக்கு (Creativity) லெனினே சிறந்த உதாராணம்.

      மார்க்சியப் படைப்பாற்றலில் சிறந்து விளங்கும் லெனின் மார்க்சியத்துக்கு எதிராக இரண்டைக் குறிப்பிடுகிறார். ஒன்று வறட்டுவாதம், மற்றொன்று திருத்தல்வாதம். மார்க்ஸ், எங்கெல்சோடு சேர்ந்து லெனினும் மார்க்சியத்தை வறட்டுவாதமாகக் கொள்வதை எதிர்த்தார். வறட்டுவாதிகள் முரண்பாடுகள் நிறைந்த முழுதளாவியதாக உள்ள வரலாற்று வளர்ச்சியைப் பற்றிய போதனையான இயக்கவியலை பலவீனப்படுத்துகிறார்கள். வரலாற்றில் ஏற்படும் ஒவ்வொரு புதிய திருப்பத்தை எதிர்கொள்ளும் மார்க்சியத்தின் தொடர்பை புறக்கணிக்கின்றனர்.

மாவேதுங் கூறுகிறார், மார்க்சிய-லெனினியம் எந்த வகையிலும் உண்மை பற்றிய முழு அறிவையும் அப்படியே திரட்டிக் கொடுத்துவிடவில்லை, அது நடைமுறை வாயிலாக உண்மையை அறிந்திடும் வழியை இடைவிடாமல் திறந்து விடுகிறது. மார்க்சிய அடிப்படைகள் எதிர்பாராத புதிய திருப்பங்களைச் சந்திப்பதற்கு நமக்கு வழிகாட்டுகிறது. திருத்தல்வாதிகள் புதிய நிலைமைகளைக் காரணம்காட்டி மார்க்சிய அடிப்படைகளைத் திரித்துரைக்கின்றனர்.

லெனின். வறட்டுவாத்தை எதிர்க்கும் போது, பொதுப்படையான, அடிப்படையான குறிக்கோள்களை இங்கே குறிப்பிடவில்லை, வர்க்கங்களிடையே நிலவும் அடிப்படை உறவு மாறாமல் இருக்கும் வரை வரலாற்றின் திருப்பங்களை ஒட்டி பொதுவான, அடிப்படையான குறிகோள்கள் மாறுவதில்லை என்றே கூறினார். இதனைத் திருத்தல்வாதிகள் கணக்கில் கொள்வதே இல்லை.

திருத்தல்வாதம் தோன்றுவதற்கு அந்தந்த நாட்டில் உள்ள, பொருளாதாரத்தின் பிற்பட்ட நிலை காரணமாக உள்ள வர்க்க வேர்களேயாகும். முதலாளித்துவ வளர்ச்சி காரணமாகக் குட்டி முதலாளித்துவப் பகுதியினரை ஓட்டாண்டியாக்கப்பட்டுப் பாட்டாளி வர்க்க அணிக்குத் தள்ளப்படுகிறார்கள். அதனால் மார்க்சியம் அல்லாத சோஷலிசம் இயல்பாகவே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் நுழைகிறது. நுழைவதைத் தவிர்க்க முடியாது, ஆனால் கட்சி அதனை எதிர்கொள்ளும் வகையில் சித்தாந்தத்தில் தெளிவுடனும், வலுவுடனும் இருக்க வேண்டும். இருந்தால் தான் அவர்களை நெறிப்படுத்த முடியும்.

தத்துவத்துறையில் திருத்தல்வாதிகள் புரட்சிகரமான இயக்கவியலை மறுத்து அதற்கு மாறாக எளிய பரிணாமப் போக்கை நுழைக்கின்றனர். முதலாளித்துவ அறிஞர்கள் இதுவரை மார்க்சியத்தின் மீது வைத்த குற்றச்சாட்டை மீண்டும் வைத்து, பொருள்முதல்வாதம் நெடுங்காலத்திற்கு முன்பே தவறென நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று கூறி, மார்க்சிய அடிப்படைகளைத் திருத்துகின்றனர். பொருள்முதல்வாதத்திற்கு எதிரான கான்ட், ஹெகல் ஆகியோரின் கருததுமுதல்வாத தத்துவங்களைப் பொருள்முதல்வாதத்துடன் இணைக்க முயற்சிக்கின்றனர். நமது நாட்டில் விவேகானதர், ஆதிசங்கரர் ஆகியோர்களின் அகநிலைக் கருத்துமுதல்வாதத்தை மார்க்சியத்துடன் இணைக்கும் வேலையைச் செய்கின்றனர். தென்கலை வைணவத்தையும் அதே போல் இணைக்கின்றனர். சைவத்தை இணைக்கும் போக்கும் உண்டு.

அரசியல் பொருளாதாரத் துறையில் திருத்தல்வாதமானது, இன்றைய முதலாளித்துவ வளர்ச்சி காரணமாய்ப் பொருளாதார நெருக்கடிகள் அரிதாக ஏற்படுகிறது, மேலும் பலம் குறைந்து விட்டதாகவும், நெருக்கடியை அறவே நீக்கிடும் ஆற்றலைக் கார்ட்டல்களும் டிரஸ்டுகளும் மூலதனத்தக்கு அளித்திடும் என்று கூறுகின்றனர். 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் இந்தத் திருத்தல்வாதத்தை மறுதலிக்கிறது. இன்றைய ரோபோட் வளர்ச்சி உபரி மதிப்புக் கோட்பாட்டை மறுத்துவிடுவதாகக் கூறுகின்றனர். ஆனால் இந்தத் திருத்தல்வாதிகள் மாறும் மூலதனத்திற்கும் மாறா மூலதத்தனத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்திடாமல் இருக்கின்றனர். மாறா மூலதனத்தின் வளர்ச்சியே முதலாளித்துவ வீழ்ச்சிக்கும் சோஷலிசப் புரட்சிகும் அடிப்படை என்று மார்க்சியப் பொருளாதாரம் கூறுகிறது.

அரசியலில் திருத்தல்வாதமானது, வர்க்கப் போராட்டத்தை மறுதலிப்பதில் அடங்கிருக்கிறது. அரசியல் சுதந்திரம், ஜனநாயகம், அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை ஆகியவற்றால் வர்க்கப் போராட்டத்தின் அடித்தளம் அகற்றிவிட்டதாகக் கூறுகிறது. பொருளாதார  நெருக்கடியும், அதனைத் தொடர்ந்து வேலை இழப்புகளும் ஏற்படுகிற இந்த உலகில் எப்படி வர்க்கப் போராட்டத்தை மறுக்க முடியும்.

தொழிலாளர்களுடைய சங்கமான கம்யூனிஸ்டுக் கழகத்தின் வேலைத்திட்டமாக “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” 1848ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை வெளிவந்து நூற்று எழுபது ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்றும் அதன் அடிப்படைக் கோட்பாடுகளை ஒவ்வொரு பொருளாதார நெருக்கடிகளும் உறுதிபடுத்திவருகிறது. இந்த அறிக்கையைப் படிக்கும் போது அதற்கான, மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதிய முன்னுரைகளைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அதில் கூறப்பட்டவைகளின் வழிகாட்டுதல், இன்றைக்குப் புதியதாகப் படிப்பவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது.

“கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருந்த போதிலும், இந்த அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்டுள்ள பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும்போல் இன்றும் சரியானவையே ஆகும். ஆங்காங்கே சில விவரங்களைச் செம்மைப்படுத்தலாம். இந்தக் கோட்பாடுகளின் நடைமுறை பயன்பாடு என்பது, இந்த அறிக்கையே குறிப்பிடுவதுபோல, எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்திலும், அந்தந்தக் காலகட்டத்தில் நிலவக்கூடிய வரலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும்” (மார்க்ஸ், எங்கெல்ஸ் - 1872 ஜெர்மன் பதிபின் முன்னுரை)

      இந்தப் பொதுக் கோட்பாடு அன்று போல் இன்றும் சரியானவையே. புதியதாக வருகின்ற தரவுகளுக்கு ஏற்ப மார்க்சியம் செழுமைப்படுகிறது. அறிக்கையின் தொடக்கத்தில், “இதுநாள் வரையிலான சமூகங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறே ஆகும்.” என்று மார்க்சும் எங்கெல்சும் சேர்ந்து தெரிவிக்கின்றனர். இதற்கு, திருத்தமாக எங்கெல்ஸ் 1888ஆம் ஆண்டு எழுதிய அடிக்குறிப்பில் எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் என்று சேர்க்கிறார். 1847க்கு முன்பாக வர்ககங்கள் அற்ற சமூகம் இருந்ததை அறியப்படவில்லை. அறிந்தவுடன் அதனை எங்கெல்ஸ் அடிக்குறிப்பில் சேர்க்கிறார். இது மார்க்சிய அடிப்படைக் கோட்பாட்டைச் செழுமைப்படுத்துகிறதே தவிர, அதனைச் சிதைக்கவோ, திரிக்கவோ இல்லை.

      புதிய தரவுகளின் மூலம் மார்க்சியம் துல்லிய தன்மை பெறுகிறது, அவ்வளவு தான். ஆனால் திருத்தல்வாதிகள் உடனே மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்று கூச்சலிடுகின்றனர். இந்தக் கூச்சல் வர்க்க சமூகம் அழியும் வரை இருக்கும், படிப்படியாகத்தான் குறையும்.

      ஒரு கம்யூனிஸ்டுகளின் அடிப்படை ஆவணமாக அறிக்கை நீடித்துவருவதால் இதில் எந்தத் திருத்தத்தையும் மார்க்சும் எங்கெல்சும் செய்யவில்லை. “அறிக்கையானது ஒரு வரலாற்று ஆவணமாகிவிட்டது. இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை.” என்று கூறியதற்கு இணங்கவே எங்கெல்ஸ் திருத்தத்தை அடிக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

      மார்க்சும் எங்கெல்சும் இருக்கின்ற காலத்திலேயே அறிக்கையில் செய்ய வேண்டிய மாற்றத்தைப் பற்றி 1872ல் எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளனர். நவீனத் தொழில்துறை வளர்ச்சி, தொழிலாளர் கட்சி அமைப்பின் மேம்பாடு, பாரிஸ் கம்யூன் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் சில விவரங்கள் காலங்கடந்ததாகிவிட்டது என்று எழுதியுள்ளனர். விவரங்கள் தான் காலங்கடந்ததாகிவிட்டது மார்க்சிய அடிப்படைகள் மாறிவிட்டதாகக் கூறவில்லை. இன்றைய நிலையிலும் நாம் இவ்வாறு தான் அணுக வேண்டும். திருத்தல்வாதிகளைப் போல் இதனைக் காரணமாக்கி அடிப்படையைத் திரிக்கக்கூடாது

அறிக்கையின் மூன்றாவது பிரிவான “சோஷலிச இலக்கியம் பற்றிய விமர்சனம்” இன்றைய நிலைமைக்குப் பற்றாக்குறையானது என்று அதே முன்னுரையில் இருவரும் கூறுகின்றனர். அதில் காணப்படும், பிரபுத்துவச் சோஷலிசம், குட்டிமுதலாளித்துவச் சோஷலிசம், முதலாளித்துவச் சோஷலிசம் ஆகியவைகளின் அடிப்படைகள் இன்றும் சரியானதே, அதனைக் கொண்டு மேலும் வளப்படுத்தலாம்.

அதே போல் நான்காம் பிரிவு, “பற்பல எதிர் கட்சிகள் தொடர்பாகக் கம்யூனிஸ்டுகளின் உறவுநிலையைப் பற்றிய குறிப்புகள்” கோட்பாடு அளவில் இன்றும் பிழையற்றவையே, நடைமுறையில் காலங்கடந்தவையாகிவிட்டது என்று இருவரும் அம்முன்னுரையில் தெரிவித்துள்ளனர். அதற்கு முக்கியக் காரணம் அதில் குறிப்பிட்ட கட்சிகளில் பல புவிப்பரப்பில் மறைந்துவிட்டது.

முதல் இரண்டு பிரிவுகளும் இன்றைக்கும் அறிந்து கொள்ள வேண்டியவை நிறைந்து காணப்படுகிறது. முதலாவது பிரிவு முதலாளிகளும் பாட்டாளிகளும், இரண்டாவது பிரிவு பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும். முதலாளிகளும் பாட்டாளிகளும் இருக்கும் வரை கம்யூனிஸ்டுகளுக்கு இதுவே அடிப்படை.

      இன்றைய நிலையில், இரண்டாவது பிரிவை, சரியாகப் புரிந்து கொண்டால் நம் நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சிகளும், கம்யூனிஸ்டுகளும் சிறப்பாகச் செயற்பட முடியும். இரண்டாம் பிரிவின் தொடக்கமே தெளிவோடு தொடங்குகிறது.

“ஒட்டுமொத்தப் பாட்டாளிகளுடன் கம்யூனிஸ்டுகள் கொண்டுள்ள உறவு எத்தகையது?

கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கு எதிரான ஒரு தனிக் கட்சியாக அமையவில்லை. கம்யூனிஸ்டுகளுக்கு ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர வேறு தனிப்பட்ட நலன்கள் கிடையாது.”

தொழிலாளர்களின் நலன்களைத் தவிர்த்த வேறெந்த நலன்களையும் கம்யூனிஸ்டுகள் பிரதிபலிக்கவில்லை. தொழிலாளர்களின் உண்மையான சூழ்நிலைமைகளைப் புரிந்து அதில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காகப் போராடுபவர்களே கம்யூனிஸ்டுகள். கேள்வி பதில் வடிவில் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்ற நூலில் எங்கெல்ஸ் இதனை இன்னும் நேரடியாகவே கூறியுள்ளார். “கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய போதனை” என்று சுருக்கமாகச் சூத்திரத்தைப் போல் கூறியுள்ளார்.

கம்யூனிஸ்டுகள் என்றால், கட்சி காங்கிரசில் எடுக்கப்பட்ட முடிவுகளைச் செயற்படுத்துவதும், மாதந்தோறும் உறுப்பினர் கட்டணத்தை வசூலிப்பதும் என்ற சுருங்கிய பார்வையே இன்று மேலோங்கி இருக்கிறது. ஆனால் அறிக்கை, கம்யூனிஸ்டுகளுக்குத் தேவைப்படுகிற செயற்திறமைகளைச் சுட்டிக்காட்டுகிறது.

பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை வென்றுகொள்ளும் அளவுக்குக் கம்யூனிஸ்டுகள் திறம் பெற வேண்டுமானால், அவர்களுக்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதம், அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றில் பொதுவான பார்வை இருந்தாக வேண்டும். அனைவரும் பொருளாதார மேதைகளாக முடியாது. ஆனால் பொதுவான பயிற்சி கொடுக்கும் போதே பல மேதைகள் தோன்றுவார்கள். கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர்களுக்கு அரசியல் மீது மட்டும் ஆர்வம் இருந்தால் போதாது, அந்த அரசியல், விஞ்ஞானத் தன்மை பெற்றதாக- மார்க்சிய அரசியலாக- இருக்க வேண்டுமானால் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மற்றும் அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றைக் கற்க வேண்டும். கற்றதை தற்போதைய நிலைமையோடு இணைத்துச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

“கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் நடைமுறை ரீதியில், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளில், மிகவும் முன்னேறிய, மிகவும் உறுதி வாய்ந்த பிரிவாக, மற்றவர்கள் அனைவரையும் முன்னோக்கி உந்தித் தள்ளுகின்ற பிரிவாக உள்ளனர். மறுபுறம் தத்துவ ரீதியில், கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்கத்தின் பெருந்திரளினருக்கு இல்லாத ஓர் அனுகூலத்தை, அதாவது, பாட்டாளி வர்க்க இயக்கத்தின் திசைவழியையும், நிலைமைகளையும், இறுதியில் ஏற்படும் பொதுவான விளைவுகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தைப் பெற்றுள்ளனர்.”

கூலியுழைப்பைப் பற்றி அறிக்கைக் கூறுவதைப் புரிந்து கொள்வதற்கு அரசியல் பொருளாதாரத்தில் பொதுப் புரிதல் அவசியம். பொருளாதாரம் தெரியாமல் அதன் முடிவுகளை மட்டும் தெரிந்து வைத்திருப்பது நடைமுறைக்குப் பயன்படாது. நடைமுறை செயற்பாட்டிற்குப் பொருளாதாரப் புரிதல் அவசியமாகும்.

“கூலியுழைப்பின் சராசரி விலைதான் குறைந்தபட்சக் கூலியாகும். அதாவது, தொழிலாளியைத் தொழிலாளியாகக் குறைந்தபட்ச வாழ்க்கை நிலைமையில் தொடர்ந்து வாழவைக்க அத்தியாவசியமாகத் தேவைப்படும் பிழைப்புச் சாதனங்களின் அந்த அளவே குறைந்தபட்சக் கூலியாகும். ஆக, கூலித் தொழிலாளி தன் உழைப்பின் மூலம் ஈட்டுவது, தொடர்ந்து உயிர்வாழவும், குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை மறுஉற்பத்தி செய்வதற்கும் மட்டுமே போதுமானது.”

      வரலாற்றியல் பொருள்முதல்வாதமே கம்யூனிஸ்டுகளுக்கு வழிகாட்டியாகும். ஏன், அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்வதற்குக்கூட வரலாற்றியல் பொருள்முதல்வாதம் அவசியமாகும். மார்க்சியத்தை விஞ்ஞானம் என்று கூறுவதனால் அதனைப் படித்த அனைவரும் ஏற்றுக் கொள்வர் என்று கூறிடமுடியாது. இயற்கை விஞ்ஞானத்தைப் போல் அல்லாது, சமூக விஞ்ஞானம் என்பது வர்க்க சார்பானதாகும். வர்க்க நலனின் அடிப்படையில் தான் அரசியல் பொருளாதாரத்தை ஏற்றுக் கொள்ள முடியும். முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தை முதலாளித்துவ வர்க்க சார்பாளர்களால் தான் ஏற்றுக் கொள்ள முடியும், அதே போலப் பாட்டாளி வர்க்க, அரசியல் பொருளாதாரம் பாட்டாளி வர்க்க சார்புடையவர்களால் தான் ஏற்றுக் கொள்ள முடியும்.

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை அறிக்கை தெளிவாக முன்வைக்கிறது.

“மனிதனது கருத்துகளும் நினைப்புகளும் கண்ணோட்டங்களும் – சுருங்கச் சொன்னால் மனிதனது உணர்வானது – அவனது பொருளாயத வாழ்நிலைமைகளிலும் சமூக உறவுகளிலும் சமூக வாழ்விலும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுடன் சேர்ந்து மாறிச் செல்வதைப் புரிந்து கொள்ள அழ்ந்த அறிவு வேண்டுமா, என்ன?

பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, அறிவுத் துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது- கருத்துகளின் வரலாறு நிரூபிப்பது இதன்றி வேறு என்னவாம்?”

      வாழ்நிலை என்பது உற்பத்தியின் போது ஏற்படுகிற உறவுநிலையாகும். இந்த உற்பத்தி உறவுநிலையில் இருந்தே,  அதாவது வாழ்நிலையில் இருந்தே சிந்தனை ஏற்படுகிறது என்பதே சமூகம் பற்றிய பொருள்முதல்வாதப் பார்வையாகும். சிந்தனையில் இருந்து வாழ்நிலை தோன்றுகிறது என்பது கருத்துமுதல்வாதமாகும். கருத்துமுதல்வாதம் சுரண்டல் கண்ணோட்டத்தையும் பொருள்முதல்வாதம் சுரண்டலுக்கு எதிரான கண்ணோட்டத்தையும் கொடுக்கிறது. வர்க்கமாகப் பிரிந்துள்ள சமூகத்தில் ஒரு சார்பற்ற சமூக விஞ்ஞானம் இருக்க முடியாது.

      அறிக்கையின் முதல் பிரிவின் தலைப்பு முதலாளிகளும் பாட்டாளிகளும். மார்க்ஸ் 1845க்கு முன்பு தமது தத்தவத்தை முழுநிறைவடையச் செய்துள்ளார். அரசியல் பொருளாதாரம் 1859 வரைக்கும் முழுமையாக்கப்படவில்லை. மார்க்ஸ் அடிப்படை அமைத்துவிட்டார் அதனை விளக்குகின்ற துல்லிய தன்மையைத் தரவுகளுடன் நிறுவ முனைகிறார். அப்படியிருந்தும் அறிக்கையில் முதலாளித்துவத்தின் உற்பத்தி வளர்ச்சியின் விளைவாக ஏற்படுகிற மிகை உற்பத்தியை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த மிகைவுற்பத்தியே முதலாளித்துவ உற்பத்தி முறையை நிலைகுலையச் செய்கிறது. இந்தப் பகுதியை மார்க்சும் எங்கெல்சும் ஒரு நாடக பாணி கலைவுணர்வோடு விவரித்துள்ளனர்.

      முதலாளித்துவம் தான் உருவாக்கிய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியால் திணறிப் போகிறது. மிகையாய்ச் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்கள் விற்காமல் சந்தையில் தேங்கிக்கிடக்கிறது. தானே உருவாக்கிய உற்பத்தி சக்தியின் பிரம்மாண்டத்தை அடக்க முடியாமல் தவிப்பதை அறிக்கை அழகுபடக் கூறுகிறது.

“நவீன முதலாளித்துவச் சமூகமானது தனக்கே உரியத்தான உற்பத்தி, பரிவர்த்தனை, மற்றும் சொத்துரிமை உறவுகளைக் கொண்டு பிரம்மாண்டமான உற்பத்தி மற்றும் பரிவர்த்தனைச் சாதனங்களை மந்திர வித்தை போல உருவாக்கியது. தனது மாயவித்தையால் பாதாள உலகிலிருந்து தருவித்துத் தானே உருவாக்கிய சக்திகளைக் கட்டுப்படுத்த இயலாத ஒரு மந்திரவாதியின் நிலைமையில் இப்போது நவீன முதலாளித்துவம் இருக்கிறது.
…
சமூகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உற்பத்தி சக்திகள் முதலாளித்துவச் சொத்துக்கள் மேலும் வளர்க்கும் தன்மையுடையதாய் இல்லை. மாறாக அவை அந்த உறவுகளுக்குப் பொருந்தாதபடி அளவுக்கு மீறி மிகவும் வலிமை பெற்றவையாக ஆகிவிட்டன. இந்த உறவுகளே அவற்றின் வளர்ச்சிக்குத் தடையாகிவிட்டன. எனவே பொருள் உற்பத்தி சக்திகள் அந்தத் தடைகளை விரைவாகக் கடந்து முன்னேறுகின்றன. அவ்வாறு கடக்கும்போது அவை ஒட்டு மொத்த முதலாளித்துவச் சமூகத்துக்குள்ளேயே சீர்குலைவை ஏற்படுத்துகின்றன. முதலாளித்துவச் சொத்துடைமை நீடித்து நிலவுவதற்கே அபாயத்தைத் தோற்றுவிக்கின்றன. முதலாளித்துவச் சமூகம் தான் உருவாக்கிய செல்வத்தையே உள்ளடக்கிக் கொள்ள முடியாத அளவுக்கு முதலாளித்துவச் சமூக உறவுகள் சுருங்கிப் போகின்றன.”

      இதனையே எங்கெல்ஸ் “டூரிங்கு மறுப்பு” என்ற நூலில் கூறுகிறார், “சமூகமயமாகிவிட்ட பொருளுற்பத்திக்கும், முதலாளித்துவச் சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையாய்த் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது”

ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியும் இதனை மெய்பிக்கின்றன. புறநிலைமைக்கு ஏற்ப அகநிலைமைகள் தயாராகி, முதலாளித்துவ உற்பத்தி முறைக்குத் தீர்வாய் பாட்டாளி வர்க்கம் புரட்சியை நிகழ்த்தி, முதலாளித்துவ நெருக்கடிக்கு முடிவுகட்டி, சோஷலிச சமூகத்தைப் படைக்கும். இந்தப் பொருளாதார நிலைமைகளை முன்வைத்து வரலாற்றியல் பொருள்முதல்வாதம் கோட்பாடாக நமக்குத் தருகிறது. புறநிலைமை மார்க்சியத்தை இன்றும் மெய்பித்துவருகிறது. பொருளாதாரப் பொதுநெருக்கடியை மார்க்ஸ் சந்திக்கவில்லை. வணிக நெருக்கடிகளையே சந்தித்தார். பொருளாதாரப் பொது நெருக்கடி 1914ல் தான் முதன்முறையாகத் தோன்றியது. இருந்தும் அதனை மார்க்ஸ் முதலாளித்துவ உள்முரண்பாட்டின் அடிப்படையில் முன்பே கணித்தார்.

பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் மிகை உற்பத்தியாகும். இதற்கு அடிப்படை முதலாளித்துவச் சமூகம் போட்டியின் காரணமாகப் புதியப்புதிய கருவிகளைப் படைப்பதே ஆகும். இதனை அறிக்கை மிகமிக எளிமையாக விவரித்துள்ளது.

“முதலாளித்துவ வர்க்கத்தால் ஓயாது ஒழியாது உற்பத்திக் கருவிகளிலும், இதன் மூலம் உற்பத்தி உறவுகளிலும், இவற்றுடன் கூடவே சமூக உறவுகள் அனைத்திலுமே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாமல் வாழ முடியாது.” (பிரிவு - 1)

இதன் காரணமாகவே முதலாளித்துவ உற்பத்தி முறையில் பொருளாதார நெருக்கடியை தவிர்க்க முடியாமல் மீண்டும் மீண்டும் தோன்றிய வண்ணம் உள்ளது, ஒவ்வொரு நெருக்கடியில் இருந்தும் தப்பிக்கும் போது அடுத்தப் புதிய அதைவிட அதிகமான நெருக்கடியை சந்திக்க வேண்டிவருகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையால் பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க முடியாது. அதற்குத் தீர்வாக மார்க்சியம் வைக்கும் சமூக மாற்றத்தை தடுக்க முடியாது.

பொருளாதார நெருக்கடியால் அவ்வப்போது தடுமாறும் முதலாளித்துவத்திற்குத் தீர்வு பாட்டாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தை வெற்றிக் கொள்வதேயாகும். இந்த வெற்றி அடையும்வரை அறிக்கையின் அவசியம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும் தமது நோக்கத்தைத் தெரிந்து அதனை நிறைவேற்ற வேண்டும்

“கம்யூனிஸ்டுகளுடைய உடனடி நோக்கம் ஏனைய எல்லாப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளது உடனடி நோக்கம் என்னவோ அதுவேதான். பாட்டாளிகளை ஒரு வர்க்கமாய் உருப்பெறச் செய்வதும், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துவதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் அட்சியதிகாரம் வென்று கொள்வதும்தான்” (பிரிவு - 2)

புறநிலைமையே அகநிலைமையைத் தீர்மானிக்கும். ஒவ்வொரு புரட்சிகர நிலைமையும் புரட்சியை ஏற்படுத்தாது, அதற்கான அகநிலைமையின் தயாரிப்பே புரட்சியை நடத்திமுடிக்கும். பொருளாதார நெருக்கடிக்கு ஏற்ப அகநிலை தயாரிப்பை, கம்யூனிஸ்ட் கட்சி செய்ய வேண்டும். முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் சிக்கலுக்குத் தீர்வு சோஷலிச புரட்சியே. அதற்கான வழிமுறைகளைக் கட்சி தேர்ந்தெடுக்க வேண்டும்.

“கம்யூனிஸ்டுகள் தமது கருத்துகளையும் நோக்கங்களையும் மறைத்து வைப்பதை வெறுத்து ஒதுக்குகிறார்கள். இன்றுள்ள சமூகத்தின் நிலைமைகள் அனைத்தையும் வலுவந்தமாய்த் தூக்கியெறிய வேண்டும். அப்போதுதான் தமது குறிக்கோள் நிறைவேறும் என்று கம்யூனிஸ்டுகள் ஒளிவுமறைவின்றிப் பறைசாற்றுகிறார்கள். கம்யூனிசப் புரட்சியின் வருகையை நினைத்து ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளுக்கு அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஒன்றுமில்லை. அவர்கள் வெல்வதற்கு ஓர் உலகம் இருக்கிறது.” (பிரிவு- 4)

இந்த அறிக்கையின் நோக்கமாக மார்க்சும் எங்கெல்சும் 1882ஆம் ருஷ்யப் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில், “நவீன கால முதலாளித்துவச் சொத்துடைமையின் தகர்வு தவிர்க்க முடியாதபடி நெருங்கி வருவதைப் பிரகடனம் செய்வதே கம்யூனிஸ்டு அறிக்கையின் குறிக்கோள்” என்று தெரிவித்துள்ளனர். இந்தக் கடமையை நிறைவேற்றும் வரை நமக்கு அறிக்கையே சிறந்த வழிகாட்டியாக இருக்கும். அன்றாடச் சீர்திருத்த போராட்டத்துடன் இறுதிநோக்கத்தை அடையும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி வர்க்கப் பார்வையில் செயல்பட வேண்டும்.

அனைத்து நாட்டு தொழிலாளர்களும் ஒன்று சேர்வோம். புதிய உலகைப் படைப்போம். நாளை நமதே. நாளைய உலகம் உழைப்பாளர்களுக்கே.

Monday, 7 October 2019

புதிய பாதையினரின் மார்க்சியமற்றப் பார்வை


உழைப்புப் பிரிவினையின் வளர்ச்சி சரக்கு உற்பத்தியைத் தோற்றுவிக்கிறது, சரக்கு உற்பத்தி முதலாளித்துவத்தைத் தோறுவிக்கிறது. முதலாளித்துவம் தன்னுகர்வுக்காக உற்பத்தி செய்யாது சமூகத் தேவைக்காக உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவத்தில் உழைப்புப் பிரிவினை சமூக உற்பத்தியாக வளர்ச்சி அடைகிறது.

முதலாளித்துவ உற்பத்திக்கு முன்பு வரை தனிப்பட்ட உற்பத்தியாளர் தமது கரங்களது உழைப்பாலோ, தமது குடும்பத்தினரின் உழைப்பாலோ உற்பத்தி செய்வதே வழக்கமாக இருந்தது. இத்தகைய உற்பத்தியாளர் உற்பத்திப் பொருளைச் சுவீகரிக்கத் தேவையில்லை. இயல்பாகவே அது முற்றிலும் அவருக்கு உரியதாகிறது. ஆனால் முதலாளித்துவ உற்பத்தியில் இது போல் இல்லை.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் உழைப்புப் பிரிவினையின் வளர்ச்சியால் உற்பத்தி சமூகமயமாகிவிட்டது. ஒவ்வொரு உற்பத்தியாளரும் பிற உற்பத்தியாளரை சார்ந்தே இருக்க வேண்டி வருகிறது. அதாவது தனது தொழிற்கூடத்திற்கு தேவையான உற்பத்திச் சாதனங்களான இயந்திரத்தை தாமே உற்பத்தி செய்திடாது, பிற உற்பத்தியாளர் செய்ததையே வாங்கிப் பயன்படுத்த வேண்டியதாகிறது. அதே போல் கச்சாப் பொருளையும் பிற உற்பத்தியாளர் செய்ததை நம்பியே இருக்க வேண்டியுள்ளது.

முதலாளித்துவ உற்பத்தியில் உற்பத்தியானது சமூகமயமானப் பின்பும், உழைப்பில் தான் நேரடியாக ஈடுபடாதப் போதும், முற்றிலும் ஏனையோர் உழைப்பின் உற்பத்திப் பொருளாய் இருந்த போதிலும் முதலாளியானர் அதைத் தாமே முன்பு போல் தொடர்ச்சியாகச் சுவீகரித்துக் கொள்கிறார்.

உற்பத்தி சாதனங்களும் மற்றும் பொருளுற்பத்தியும் சாராம்சத்தில் சமூகமயமாவிட்டது. சமூகமயமாகிவிட்ட பொருளுற்பத்திக்கும், முதலாளித்துவச் சுவீகரிப்புக்கும் இடயிலான முரண்பாடு, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துககும் இடையிலான பகைமையாய் வர்க்கப் போராட்டமாய் வெளிப்படுத்திக் கொள்கிறது.

உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் உற்பத்தியின் பலன்களைக் கைப்பற்றிக் கொள்ளும் தனியார் முதலாளித்துவ வடிவத்திற்கும் இடையே உள்ள முரண்பாடே- முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடாகும்.

வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும் இந்த முதலாளித்துவம், அதாவது முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக – நீதிமூலதனமாக – உலகமயமாதலாக வளர்ச்சியுறும் போது இந்த முரணும் வளர்ச்சியடைந்து முற்றுகிறது. ஒவ்வொரு மறுவுற்பத்தியின் போதும் இந்த முரணையும் சேர்த்தே  மறுவுற்பத்தி உற்பத்தி செய்கிறது. சமூகமயமான உற்பத்திக்கும் தனிவுடைமையிலான சுவீகரிப்புக்கும் இடையேயான இந்த முரண், சமூகமயமான உற்பத்திக்கு ஏற்ப தனிச்சொத்துடைமையை பொதுச்சொத்துடைமையாக மாற்றும் வரை தீருவதில்லை.

இந்த முரண்பாடு, முதலாளியையும் தொழிலாளியையும் சாராத புறநிலையிலான விதியாகும். இதனை மனித சிந்தனையைக் கொண்டு மாற்றிவிட முடியாது. இந்த முடிவு, மார்க்சிய அரசியல் பொருளாதாரம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் அணுகுமுறையால் எடுக்கப்பட்டது. இது மார்க்சியம். இதற்கு மாறானது வேற இயம்.

புதிய பாதையினர், இன்றைய கார்ப்பரெட் முதலாளிகள், சோஷலிச உற்பத்தி முறையின் திட்டமிட்ட பொருளாதாரத்தின் சிறப்பம்சங்களை தன்மயமாக்கிக் கொண்டனர் என்று கூறுகின்றனர். இது இயக்கவியலற்ற பார்வையாகும். திட்டமிட்ட பொருளாதாரம் தனிச்சொத்துடைமைப் பொருளாதாரத்தற்கு முரணானதாகும். இதனை கார்ப்பரெட் முதலாளிகளின் சிந்தனை சக்தியால் தகவமைத்துக் கொண்டதாக புதிய பாதையினர் கூறுகினறனர். இது மார்க்சிய அடிப்படைக்கு பொருத்தமற்றதாகும். மார்க்சியத்திற்கு முன்பானவர்களின் பார்வையான சிந்தனையே வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்றதையே அணுகுமுறையாகக் கொண்டுள்ளனர்.

வாழ்நிலை தான் சிந்தனையைத் தீர்மானிக்கும், சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்காது (அடித்தளம் தான் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கும்) என்பதே மார்க்சிய வரலாற்றியல் பொருள்முதல்வாதமாகும். புதிய பாதையினர் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை புறக்கணித்தால் இயக்கவியல் பார்வையற்ற கதம்பப் போக்கால் இத்தகைய முடிவிற்கு வருகின்றனர்.

     வர்க்க சமூகம் முழுமையாக நீங்கும் வரை, அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற மார்க்சியக் கோட்பாடு செயற்படும். வளர்சியுற்ற கம்யூனிச சமூகத்தில் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பர வினைபுரியும். அதாவது நினைத்தை நினைதப்படி செய்து முடிபதற்கான புறநிலைத் தடைகள் முழுமையும் நீக்கப்பட்டிருக்கும்.

இந்த மார்க்சிய அடிப்படை புரிதல் இல்லாமல் (குறிப்பாக பலப்பிரயோகக் கோட்பாடு) இந்தப் புதிய பாதையினர், அணுவாயுதத் தயாரிப்பு, மற்றும் தன்வமாதல் என்கிறதை மட்டும் எடுத்துக் கொண்டு சாத்தியமில்லாததை சாத்தியப்பட்டதாகக் கருதிக் கொண்டிருக்கின்றனர்.

     காரியத்திற்கு தேவையான பொருளாதாரக் காரணங்களைக் கணக்கில் கொள்ளாது (மார்க்சிய அடிப்படையில் அல்லாது) தங்களது முடிவுகளை எடுக்கின்றனர். மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தையும் வரலாற்றியல் பொருள்முதல்வாததையும் புறக்கணித்ததால் புதிய பாதையினர், எனது எதிர்வினையை புரிந்து கொள்ளாது இருக்கின்றனர்.
************************************************************************************

“புதிய பாதையினரின்” பழைய பாதை:-








Tuesday, 1 October 2019

“புதிய பாதையினரின்” பழைய பாதை:-


(எந்தவித பொருளாதாரக் காரணங்களைச் சுட்டிக்காட்டாமல், அணுவாயுதக் கண்டுபிடிப்பை முன் வைத்து, மார்க்சீய திட்டமிட்ட பொருளாதாரத்தின் சிறப்பம்சங்களை ஏகாதிபத்தியம் உள்வாங்கிவிட்டதாகக் கூறி, மார்க்சிய அடிப்படைகளைப் புறக்கணிக்கக் கோருகிற புதிய பாதையினரின் கருத்திற்கு எனது உடனடி எதிர்வினை)


1) புதிய பாதையினர்:- // அமரிக்கா தற்செயலாகக் கண்டு பிடித்த, தயாரித்த அணுக்குண்டே, உலகப்புரட்சி ஏற்படாமல், உலகில் விரைவாகச் சோசலிசம் மலராமல், உலகச் சமூகத்தில் பெரும் தாவிப் பாய்ச்சலிலான முன்னேற்றம் ஏற்படாமல் தடுத்தது.//

அணு ஆயுதக் கண்டுபிடிப்பின் தற்செயலால் மார்க்சியம் எதிர்பார்த்த சமூக மாற்றங்களுக்குத் தடை ஏற்பட்டுவிட்டதாகக் கூறுகிற புதிய பாதையினர் இந்த “தற்செயல்” குண்டைத் தூக்கி மார்க்சியத்தின் மீது போடுகின்றனர். பழைய மார்க்சியம் இனிமேல் செல்லாது என்று அறிவிக்கின்றனர். இதற்கு ஆதரவாக மார்க்சின் பெயரையும் இழுக்கின்றனர்.

புதிய பாதையினர்:- // மாமேதை மார்க்ஸ், "வரலாற்று (சமூகத்தின்) வளர்ச்சியின் வேகத்தையும் மந்தத்தையும் நிர்ணயிப்பது சில தற்செயலான நிகழ்ச்சிகளே" என்றார்.🌷5//

மார்க்ஸ் கண்டுபிடித்த சமூகம் பற்றிய வளர்ச்சியின் விதியை தற்செயல் நிகழ்ச்சியாகப் புதிய பாதையினர் சுருக்கிவிடுகின்றனர். மார்க்ஸ் கண்டுபிடித்த சமூகத்தின் உந்துவிசையான விதியை பொருளாதார நிலைமையின் வளர்ச்சியின் தரத்தினால், அவற்றின் உற்பத்தி முறையினாலும் அதனால் நிர்ணயிக்கப்படுகின்ற பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன என்று எங்கெல்ஸ் நமக்கு விளக்குகிறார்.

“வரலாற்றின் உந்து விசையைப் பற்றிய மாபெரும் விதியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ். வரலாற்று ரீதியான அனைத்துப் போராட்டங்களும், அவை அரசியல், மத, தத்துவஞான அல்லது வேறு ஏதாவதொரு சித்தாந்தத் துறைக்குள்ளாக முன்னேறிய போதிலும், உண்மையில் அவை அநேகமாகச் சமூக வர்க்கங்களின் போராட்டங்களின் தெளிவான வெளியீடுகள் மட்டுமே, இந்த வர்க்கங்கள் இருப்பதும் அதன் காரணமாக இவற்றுக்கிடையே ஏற்படுகின்ற மோதல்களும் கூட அவற்றின் பொருளாதார நிலைமையின் வளர்ச்சியின் தரத்தினால், அவற்றின் உற்பத்தி முறையினாலும் அதனால் நிர்ணயிக்கப்படுகின்ற பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன என்பது அந்த விதியாகும். இயற்கை விஞ்ஞானத்தில் சக்தியின் உருமாற்றம் பற்றிய விதிக்கு உள்ள அதே முக்கியத்துவம் வரலாற்றில் இந்த விதிக்கு உண்டு.”
(லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் - எங்கெல்சின் முன்னுரை)

இவ்வாறு மார்க்சியத்தைச் சிதைத்து நீர்த்துப் போக வைக்க முடியும் என்று நினைக்கின்றனர். சமூகம், மனித விருப்பத்தைச் சார்ந்ததல்ல என்பதை மார்க்சியம் தெளிவாவே சுட்டிக்காட்டியுள்ளது.

2) புதிய பாதையினர் அணுவாயுத பூச்சாண்டி காட்டி பயமுறுத்தித்துகின்றனர். இது போன்ற பல பூச்சாண்டிகளை மார்க்சியம் பார்த்துவிட்டது.

புதிய பாதையினர்:- “அணுவாயுதம் கண்டுபிடிக்கப் பட்டு, ஜப்பானில் போடப்பட்டதும், அதுவரை வர்க்கப் போராட்டத்தின் முக்கியத் தளமாக இருந்த, முன்னிலைப் பெற்றிருந்த அரசியல் போராட்டத்தின் முக்கியத்துவம் குறைந்து, அது பின்னிலைக்குப் போய் விட்டது.”


3) அணுவாயுத பூச்சாண்டியைக் கண்டு புதிய பாதையினர் தான் பயந்துள்ளனர். புரட்சியை மறுதலித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்.

புதிய பாதையினர்:- “..உலகில் எங்கும் அணுவாயுத சக்திகளின் ஆதரவு இல்லாமல் ஆயுதப் போராட்டத்தால் யாரும் யாரையும் வெல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இதனால் பாட்டாளி வர்க்கமும் உலகின் எல்லா இடங்களிலும் ஆயுதப் போராட்டத்தால் ஆளும் வர்க்கங்களை வெல்ல முடியாது என்ற புதிய நிலைமை, மார்க்சீய லெனினிய மூலவர்கள் எதிர்பாராத புதிய நிலமை ஏற்பட்டது.”

4) சோஷலிசப் பொருளாதாரத்திற்கான வளர்ச்சி நிலையைக் கணக்கில் கொள்ளாமல் ஏகாதிபத்தியவாதிகள் மன விருப்பப்படி சோசலிச திட்டமிட்ட பொருளாதாரத்தின் சிறப்பம்சங்களை உள் வாங்கினார்கள் என்று புதிய பாதையினர் கூறுகின்றனர். வரலாற்றியல் பொருள்முதல்வாததை ஏற்றுக் கொண்டவர்களால் இவ்வாறு கூறமுடியுமா? அணுவாயுத பூச்சாண்டியைக் காட்டி வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைக் கைவிட்டவர்களாலேயே இவ்வாறு கூறமுடியும்.

புதிய பாதையினர்:- //ஏகாதிபத்தியங்கள், தங்களது பழைய திட்டமிடாத போட்டி உற்பத்தியை தொடர்ந்தால், மூன்றாம் உலகப் போர் வரும். அணுப்போரும், பேரழிவும் ஏற்படும். அதன் முடிவில் உலகப் புரட்சி நடக்கும். அதனால் உலகம் முழுவதும் ஏகாதிபத்தியங்கள் ஒரேயடியாக வீழும் என்பதைத் தெளிவாக உணர்ந்தார்கள்.
அதனால் தங்களது அக அழிவுக் கூறான, தடையற்ற போட்டிப் பொருளாதார உற்பத்தி முறையைக் கைவிட்டார்கள். சோசலிச திட்டமிட்ட பொருளாதாரத்தின் சிறப்பம்சங்களைப் படிப்படியாக வேறு வழியின்றி உள் வாங்கினார்கள். மார்க்சீய பொருளாதாரத்தையும், மக்கள் நல திட்டங்களையும் உள்வாங்கிய புதிய வகை அமைப்பாக மாறினார்கள்.....//

மார்க்ஸ் குறிப்பிடுவதைப் போல் நினைத்தபடி அதாவது தீர்மானிக்கிறபடி திட்டமிடுவதற்குக் குறிப்பிட்ட பொருளாதார அடித்தளம் அவசியம். ஆனால் அணுவாயுத பூச்சாண்டியைக் காட்டி, ஏகாதிபத்தியவாதிகள் சோசலிச திட்டமிட்ட பொருளாதாரத்தின் சிறப்பம்சங்களை உள்வாங்கிக் கொண்டு செயற்படுத்துவதாக வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைக் கைவிட்ட புதிய பாதையினர் கூறுகின்றனர்.

“பொருளுற்பத்தி நிகழ்முறையின் அடிப்படையிலான சமுதாய வாழ்க்கை நிகழ்முறையானது சுதந்தரமாக ஒன்றுசேர்ந்த மனிதர்கள் நிகழ்த்தும் உற்பத்தியாகக் கருதப்பட்டு, தீர்மானிக்கப்பட்ட திட்டத் துக்கேற்ப அவர்களால் உணர்வுபூர்வமாக இயக்கப்படும் நிலை வரும் வரை தன் மாயத் திரையை நீக்கி விடுவதில்லை . ஆயினும் சமுதாயம் இந்நிலையை அடைய குறிப்பிட்ட பொருளாயத அடித்தளம் அல்லது வாழ்க்கை நிலைமைகளின் தொகுப்பு தேவைப் படுகிறது. இவையோ ஒரு நீண்ட, வேதனை வாய்ந்த வளர்ச்சி நிகழ்முறையின் தன்னியல்பான விளைவாகும்.”
(மூலதனம் தொகுதி 1 பக்116)

மார்க்ஸ் குறிப்படுகிற மாதிரி நீண்ட காலம் தேவையில் அணுவாயுத பூச்சாண்டியைக் காட்டி ஏகாதிபத்திய வாதிகள், இன்றே செய்து காட்டுவர். என்பதே புதிய பாதையினரின் கருத்து. அடிப்படை மார்க்சியம் புரியாத பிதற்றல்களை இன்றைய மார்க்சியம் என்று புதிய பாதையினர் கூறிவருகின்றனர்.

5) கீழே கொடுக்கப்பட்ட புதிய பாதையினரின் கருத்து அப்பட்டமான ஏகாதிபத்திய அடிவருடிகளின் கருத்தேயாகும். இதனை எந்த மார்க்சியர்களும் மார்க்சியமாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அது மட்டுமல்ல ஏகாதிபத்தியதிய அறிஞர்கள்கூட இதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மார்க்சிய போர்வை அணிந்த இந்தப் புதிய பாதையினரால் தான் இவ்வாறு கூறமுடியும்.

புதிய பாதையினர்:- "ஏகாதிபத்தியங்களால், சோசலிசப் பொருளாதாரத்தின் திட்டமிட்ட பொருளாதாரத்தை உள்வாங்கி, முதலாளிகளால் சந்தையைச் சமாதானமாகப் பகிர்ந்து கொண்டு உற்பத்தியில் ஈடுபட முடியாது, முதலாளிகள் ஆவதற்கும், இலாபமீட்டுவதற்காகப் போட்டிப் போட்டு உற்பத்திச் செய்வதையும் எல்லா முதலாளித்துவ நாடுகளின் அரசுகளும் சேர்ந்து கட்டுப் படுத்தவோ, தடுக்கவோ முடியாது என்பதே, அணுக்குண்டு கண்டு பிடிப்பதற்கு முந்தைய அரசியல் நிலமை.

அதனால்தான் மார்க்சீய மூலவர்கள், முதலாளிகளால் சந்தையைச் சமாதானமாகப் பகிர்ந்து கொண்டு, திட்டமிட்ட உற்பத்தியில் ஈடுபட்டு, யுத்தம் செய்யாமல் வாழவும், ஆளவும் முடியாது என்று கருதினார்கள். மார்க்சீய மூலவர்கள் எதிர்பாராத அணுக்குண்டு கண்டு பிடிப்பாலேயே, ஏகாதிபத்தியங்களால், சமாதானம் செய்து கொண்டு, திட்டமிட்ட உற்பத்தியில் ஈடுபட்டு, நீடித்து வாழவும், ஆளவும் முடிகிறது.
திட்டமிட்ட பொருளாதார உற்பத்தியில் பாட்டாளி வர்க்க அரசுகளால் மட்டுமே ஈடுபட முடியும் என்ற மார்க்சீய மூலவர்களின் கருத்தும், கணிப்பும், பழைய அரசியல் நிலமைகளின் படி சரியானதது தான். ஆனால், யுத்தங்களைத் தவிர்த்தாக வேண்டிய புதிய அரசியல் நிலமையில், ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அரசுகளால் திட்டமிட்ட பொருளாதார உற்பத்தி முறையில் ஈடுபட முடியும். 🐙11
..
இந்தத் திட்டமிட்ட போட்டி உற்பத்தி முறையானது, பாட்டாளி வர்க்கத்தின் திட்டமிட்ட, போட்டியற்ற சோசலிச உற்பத்தி முறையை விட மேம்பட்ட உற்பத்தி முறையாகும்."

6) ஆதாரமற்ற இந்தப் பிதற்றல்களுக்கு எல்லாம் பதிலளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். மார்க்ஸ் காலத்தில் பார்த்த வணிக நெருக்கடியும் 1915 & 1934 வாக்கில் ஏற்பட்ட முதல் & இரண்டாம் பெரும் பொருளாதார நெருக்கடியும் ஒன்றல்ல, ஆனால் மார்க்ஸ் குறிப்பிட்டப்படியே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் பிறகும் 2008 வாக்கில் மேலைநாடுகளில் பொருளாதா நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2008ல் தான் மார்க்ஸ் எழுதிய பொருளாதார நெருக்கடியைப் பற்றி விரிவாகப் பேசுகிற மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூல் பெரும் அளவு விற்கப்பட்டது. தற்போது நடைபெறுகிற நெருக்கடிகள் மார்க்ஸ் சந்தித்த வணக நெருக்கடியைப் போல் இல்லை என்பது உண்மை தான், மார்க்ஸ் கூறுகிற காரணத்தின் படியே பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகிறது.

தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள வாகனத் துறை நெருக்கடியும் மிகைவுற்பத்திக் காணரமாக விற்பனை இல்லாது தேங்கிக் கிடக்கிறது. திட்டமிட்ட பொருளாதாரம் என்பது முதலாளித்துவ ஏகாதிபத்திய காலகட்டத்தல் சாத்தியமில்லை என்பதற்கு இவைகளே சாட்சிகள்.

புதிய பாதையினர்:- "...மார்க்சீய திட்டமிட்ட பொருளாதாரத்தை உள்வாங்கிய ஏகாதிபத்தியங்கள், சமூகத்தின் முக்கியத் தேவைகளையும், முக்கியப் பிரிவினர்களின் தேவைகளையும் சரியாகக் கணக்கில் எடுத்து, அதனை எப்படி, யார் யார் மூலம் எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு, அந்த உற்பத்தியை ஒரே முதலாளியிடமோ, ஒரே முதலாளிய கார்பரேட்டிடமோ விடாமல், முதலாளிகளின் அழுத்தங்களுக்கு ஏற்ப பல முதலாளிகளிடம் பிரித்துக் கொடுத்து, முதலாளிகளிடையே திட்டமிட்ட போட்டியை ஏற்படுத்துகிறார்கள். 🌻12

இந்தத் திட்டமிட்ட போட்டி, எல்லைக்கு உட்பட்ட போட்டி உற்பத்தி முறையில், உற்பத்தி திறன் வேகமாக அதிகரிக்கிறது. உற்பத்தி கருவிகளும், தொழில் நுட்பமும் விரைவாக முன்னேறுகிறது, மக்களின் வித விதமான தேவைகளுக்கும், ரசனைகளுக்கும் ஏற்ப, வித விதமான பொருட்கள் விரைவாக உற்பத்தியாகிறது, உற்பத்தியான பொருட்கள், வணிக முதலாளிகளால் விரைவாகச் சந்தைப் படுத்தப் படுகிறது.
இதனால் மிகை உற்பத்தியும், ஆலைகள் மூடலும் பெருமளவுக்குத் தவிர்க்கப் படுகிறது."

7) புதிய பாதையினரின் அடிப்படைக் குறிக்கோள் இதுதான். ஏகாதிபத்தியம் படிப்படியாகத் தளர்ந்து அழிந்துவிடும். புரட்சிகர மார்க்சிய வாதிகள் புரட்சிக்கான புறநிலைமைகளைக் கண்ட போதும் அதற்கான அகநிலையைத் தயாரிக்காமல் சோம்பிக்கிடக்க வேண்டும்.

வர்க்கப் போராட்டத்தைப் புதிய பாதையினரின் விருப்படி தடை போட முடியாது. ஏன் என்றால் வர்க்கப் போராட்டம் யாருடைய மனதை சார்ந்து எடுக்கப்படும் முடிவல்ல, முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் உள்முரண்பாட்டின் வெளிப்பாடு என்கிறது மார்க்சியம்.

புதிய பாதையினர்:- “மார்க்சீய லெனினிய அடிப்படையில், பழைய ஏகாதிபத்தியங்கள், மார்க்சீயத்தை மேற்கண்டவாறு உள்வாங்கி, புதிய ஏகாதிபத்தியமாக மாறி, ஒரேயடியாக அழியாமல், படிப்படியாகத் தளர்ந்து, அழிந்து வருகிறது என்கிறது.”

புதிய பாதையினர் வரலாற்றியல் பொருள்முதல்வாததைப் புறக்கணித்ததால் வர்க்கப் போராட்டத்தைப் புறக்கணிக்கின்றனர். வரலாற்றியல் பொருள்முதல்வாதப் பார்வை கைவிட்டதால் எந்தவித பொருளாதாரக் காரணங்களும் இல்லாமல் மனவிருப்படி ஏகாதிபத்தியவாதிகள் மார்க்சீய திட்டமிட்ட பொருளாதாரத்தை உள்வாங்கிக் கொண்டதாகக் கூற முடிகிறது.

புதிய கண்டுபிடிப்பான வரலாறு பற்றிய பொருள்முதல்வாதத்தைக் கைவிட்டு “சிந்தனையே வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது” என்கிற மார்க்சுக்கு முன்பான வரலாறு பற்றிய பழைய கருத்துமுதல்வாத கண்ணோட்டத்திற்குப் புதிய பாதையின் சென்றுவிட்டனர். இவர்கள் புதிய பாதையினர் கிடையாது மிகமிகப் பழைய பாதையினர்.

“கடந்த வரலாறு அனைத்தும் புதிதாய்ப் பரிசீலனை செய்யப்படுவதை இந்தப் புதிய உண்மைகள் அவசியமாக்கின. இதன்பின் கடந்த வரலாறு அனைத்துமே (அதன் முதிர்ச்சியற்ற புராதன கட்டங்களைத் தவிர்த்து) வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்பது புலனாயிற்று; போரிடும் இந்தச் சமூக வர்க்கங்கள் எப்பொழுதுமே பொருளுற்பத்தி பரிவர்த்தனை முறைகளின் விளைவாய் உருவாகின்றவை - சுருங்கக் கூறுமிடத்து அவற்றின் காலத்திய பொருளாதார நிலைமைகளின் விளைவாய் உருவாகின்றவை- என்பது புலனாயிற்று. சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான் மெய்யான அடித்தளமாய் எப்பொழுதும் அமைகிறது. இதிலிருந்து தொடங்கினால் தான் வரலாற்றின் அந்தந்தக் காலக் கூறுக்குமுரிய நீதிநெறி அரசியல் நிறுவனங்களும் மற்றும் சமயக் கருத்துக்களும் தத்துவவியல் கருத்துக்களும் பிற கருத்துக்களுமாகிய மேற்கட்டுமானம் அனைத்திற்கும் நாம் முடிவான விளக்கம் காண முடியும். ……… முடிவில் இப்பொழுது கருத்துமுதல்வாதம் அதன் கடைசிப் புகலிடமாய் அமைந்திருந்த வரலாற்றின் தத்துவவியலிலிருந்தும் விரட்டப்பட்டது. இப்பொழுது வரலாற்றுக்குப் பொருள்முதல்வாத விளக்கம் முன் வைக்கப்பட்டது. இது காறும் செய்யப் பட்டது போல மனிதனது உணர்வைக் கொண்டு அவனுடைய வாழ்நிலைக்கு விளக்கம் கூறுவதற்குப்பதில் மனிதனது வாழ்நிலையைக் கொண்டு அவனுடைய உணர்வுக்கு விளக்கம் கூறுவதற்கு ஒரு வழி கண்டறியப்பட்டது.”
(டூரிங்கக்கு மறுப்பு 48-49)

8) அணுவாயுதத்தை அடுத்து டார்வினை வைத்து விளையாட்டுக் காட்டுகிறார்கள் இந்தப் புதிய பாதையினர்.


புதிய பாதையினர்:- “டார்வினுக்கும், அவருடைய பரிணாமக் கோட்பாடுக்கும், மார்க்ஸ் மிக அதிக முக்கியத்துவம் கொடுத்தார். மார்க்சின் சிறப்பம்சமே, அவரது பொருளாதாரத்தின் அடிப்படைகள் பற்றிய ஆழமான ஆய்வும், உபரி மதிப்பின் தோற்றம், அதன் மூலதன மாற்றம், அது சமூகத்தின் அனைத்து துறைகளிலும் ஏற்படுத்தும் தாக்கம் போன்றவற்றை ஆராய்ந்தறிந்து விளக்கியதுதான்.”

      டார்வினுக்கு மார்க்சியர்கள் முக்கியத்துவம் கொடுத்தனர் ஆனால் எச்சரிக்யோடு கொடுத்தனர். எங்கெல்சின் எச்சரிக்யை இதோ, “டார்வினுடைய போதனையில் பரிணாமக் கோட்பாட்டை நான் ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் டார்வினுடைய நிரூபண முறை (பிழைப்புப் போராட்டம், இயற்கைத்தேர்வு முறை) புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உண்மையைப் பற்றி முதல், தற்காலிகமான, அரைகுறையான வெளியீடு மட்டுமே என்று கருதுகிறேன்.” (பி.லா.லவ்ரோவுக்கு எழுதிய கடிதம், நவ. 1875) இதே கடிதத்தில் டார்வினை முன்வைத்து தோன்றுகிற மோசமான பொருளியலாளர்களைக் கண்டித்துள்ளார். பிழைப்புப் போராட்டம், இயற்கைத் தேர்வு போன்றவற்றில் பொருளாயத புறநிலைமைகளைப் புறக்கணிப்பதை மார்க்சியம் ஏற்றுக் கொள்ளவில்லை. பிழைப்புப் போராட்டமே கம்யூனிச சமூகத்தைப் படைத்திடாது. அதற்கான புறநிலை வளர்ச்சி அவசியம்.

புதிய பாதையினர் மார்க்சின் சிறப்பம்சம் என்று கூறி மார்க்சியத்தைப் புரட்டுகின்றர். அடித்தளம் அனைத்துத் துறைகளிலும் (மேற்கட்டமைப்பிலும்) தாக்கம் செலுத்துவதை மார்க்ஸ் ஆராய்ந்தார் என்று மார்க்சின் கண்ணோட்டம் தலைகீழாகப்பட்டுள்ளது.

அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கும் (நிர்ணயிக்கும்), மேற்கட்டமைப்பு அடித்தளத்தன் மீது தாக்கம் செலுத்துகிறது என்பதே மார்க்சின் புதிய கண்டுபிடிப்பு. மார்க்சுக்கு முன்பு வரை வரலாறு பற்றிய கண்ணோட்டம் மேற்கட்டமைப்பே அடித்தளத்தைத் தீர்மானிக்கும் (சிந்தனையே வாழ்நிலையைத் தீர்மானிக்கும்) என்று கருத்துமுதல்வாதம் மற்றும் மார்க்சுக்கு முன்பான பழைய பொருள்முதல்வாதம் கருதிவந்தது. ஆனால் மார்க்ஸ் வரலாற்றைப் பொருள்முதல்வாதப் பார்வையில் முதன்முறையாக அணுகினார்.

“மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும். அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டடம் எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது.

மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை; அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது.”
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு-
 முன்னுரை –மார்க்ஸ்)

மனிதர்களின் சிந்தனை அவர்களுடைய வாழ்க்கை நிலையை நீர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கின்றன என்பதை மார்க்ஸ் நேரடியாகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இதனை எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்றோர்கள் தெளிவாக விளக்கியிருக்கின்றனர். மாசேதுங் தமது “முரண்பாடு பற்றி” என்ற நூலில், நெருக்கடி நேரத்தில் மேற்கட்டமைப்புத் தீவிரமாகச் செயற்படும் என்பதற்குப் பதில் தீர்மானிக்கும் என்ற எழுதியுள்ளார். மாசேதுங்கின் கூற்று எவ்வாகையில் தவறு என்பதை எனது வலைப்பூவில் (https://marxphilosophy.blogspot.com/2018/11/blog-post.html) எழுதியுள்ளேன்.

9) “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யில் மார்க்சும் எங்கெல்சும் வைத்த முழக்கத்தையே மார்க்சிய அடிப்படையாக, புதிய பாதையினர் புரிந்து கொண்டு கருத்துப் போராட்டத்தை நடத்துகின்றனர். “பாட்டாளிகள் தமது அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள்.”

மார்க்சியத்தைப் புரிந்து கொள்வதற்கு இந்த முழக்கமே போதும் என்று பலர் நினைத்துக் கொண்டு, இன்றைக்கு இந்த நிலைமை மாறிவிட்டது என்று கூறிவருகின்றனர். புதிய பாதையினரும் இந்தப் போக்கையே கடைபிடிக்கின்றனர்.

புதியவகை உயரிய தொழிலாளர் பிரிவு (superior class of workmen) உருவாவதை மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதனைத் லெனினும் தொடர்ந்து விவரித்துள்ளனர், இவைகளின் தொடர்ச்சியாகத்தான் நவீன மேம்பட்ட பாட்டாளிகளை அணுக வேண்டும். இது பற்றி எனது “லெனின் வாழ்வும் படைப்பும்” என்ற நூலில் எழுதியுள்ளேன்.

“மார்க்ஸ் தாம் எழுதிய மூலதன முதல் தொகுதியில் ஒப்பீட்டு உபரி-மதிப்பின் உற்பத்தி என்ற பகுதியில், இயந்திர சாதனமும் நவீனத் தொழில்துறையும் என்ற அத்தியாயத்தில் எழுதியிருக்கிறார். தொழிற்புரட்சியைத் தொடர்ந்து தானியங்கி தொழிற்சாலை (automatic factory) தோன்றிடும் போது தொழில்நுட்பத்தைக் கையாள்கிற புதியவகை உயரிய தொழிலாளர் பிரிவு (superior class of workmen) உருவாவதை மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

“மேம்பட்ட தொழிலாளர் பிரிவு இது, இவர்களில் சிலர் விஞ்ஞானக் கல்வி கற்றவர்கள், மற்றவர்கள் ஒரு தொழிலுக்கு என்றே வளர்க்கப்பட்டவர்கள், இந்தப் பிரிவு ஆலைத் தொழிலாளர் வர்க்கத்துடன் சேர்த்துக் கணக்கிடப்பட்டாலும், அதிலிருந்து வேறுபட்டதாகும். இந்த உழைப்புப் பிரிவினை முற்றிலும் தொழில்நுட்ப வழிப்பட்டது.
…
தொழிலாளியைக் குழந்தைப் பருவம் முதற்கொண்டே நுணுக்க இயந்திரம் ஒன்றின் பகுதியாக மாற்றியமைத்திடும் விதத்தில் இயந்திர சாதனம் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. இவ்விதம், அவரது மறுவுற்பத்தியின் செலவுகள் கணிசமாகக் குறைக்கப்படுவது மட்டுமல்ல, வேறு வழியின்றி தொழிற்சாலை முழுவதையும், அதாவது முதலாளிகளையும் அவர் சார்ந்து வாழ வேண்டிய நிலை அதே நேரத்தில் முழுமையாக்கப் படுகிறது.

வேறெங்கும் போலவே இங்கும் சமூக உற்பத்தி நிகழ்முறையினது மேம்பாட்டின் விளைவாய் அதிகரித்த உற்பத்தித் திறனுக்கும், அம்மேம்பாட்டை முதலாளி பயன்படுத்திச் சுரண்டுவதன் விளைவாய் அதிகரித்த உற்பத்தித் திறனுக்கும் இடையில் நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

கைத்தொழில்களிலும், பட்டறைத் தொழிலிலும் தொழிலாளி கருவியைப் பயன்படுத்துகிறார், தொழிற்சாலையில் இயந்திரம் அவரைப் பயன்படுத்துகிறது. அங்கே உழைப்புக் கருவியின் இயக்கங்கள் அவரிடம் இருந்து தொடங்குகிறது, இங்கே இயந்திரத்தின் இயக்கங்களை அவர் பின்தொடர வேண்டும்.

பட்டறைத் தொழிலில் தொழிலாளர்கள் உயிருள்ள இயங்கமைப்பின் அங்கங்களாவர். தொழிற்சாலையில் உயிரற்ற இயங்கமைப்பு தொழிலாளியைச் சாராமல் சுயேச்சையாய் இருப்பதையும், அதற்குத் தொழிலாளி உயிருள்ள ஒட்டுவால் ஆகிவிடுவதையும் காண்கிறோம்.”
(மூலதனம் தொகுதி ஒன்று - பக்கம் 568-569, 570-571)

இயந்திரத்தின் ஒட்டுவாலாய் போன தொழில்நுட்ப தொழிலாளர்களின் வேதனைகளையும் இங்கே மார்க்ஸ் தொகுத்துள்ளார். ஆக, தமது உற்பத்திச் சக்தியை விற்கக்கூடிய நிலையில், முதலாளியின் மூலதனத்தை சார்ந்து வாழக்கூடிய சுரண்டப்படும் இந்த தொழிற்நுட்ப தொழிலாளியும் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. இதன் தொடர்ச்சியாக தற்கால நவீன உற்பத்தி முறைக்கு வரும் போது இன்றைய பாட்டாளி தனிச் தேர்ச்சிபெற்ற, அதற்கு சான்றிதழ் பெற்ற, மூளை உழைப்பைச் செலுத்தும் தொழிலாளியாக இருக்கிறார்.

தற்காலத்திய தொழிற்சாலைகள் அதிநவீனமாக மாறிவிட்டது, இங்கே முழுவதும் தானியங்கி இயந்திரங்களையும், கணிப்பொறி இயந்திர மனிதனைக் (computer robot) கொண்டும் இயக்கப்படுகிறது. இதனை இயக்குகின்ற தொழில்நுட்ப தொழிலாளர்கள் தங்களது உடலைவிட மூளையை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதே போல் மூளை உழைப்பை செலுத்துகின்ற தகவல் தொழில்நுட்ப துறையில் பணிசெய்பவர்களில் பலபிரிவுகள் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே ஆவர். உடலுழைப்பைவிட மூளை உழைப்பைச் செலுத்துபவர்களுக்கு இன்றைய நிலையில் அதிகம் ஊதியம் கிடைக்கிறது என்பது உண்மையே. இவர்களிடம் இருந்துதான் மேட்டுக்குடி பாட்டாளிகள் தோன்றுகின்றனர்.

மேட்டுக்குடி பாட்டாளிகளின் மேட்டுக்குடி சிந்தனைகள் எல்லாம் முதலாளித்துவத்தின் செழுமைக் காலத்தில் மட்டும் தான் காணப்படும், தொடர்ந்து வரக்கூடிய பொருளாதார நெருக்கடியால் இவர்களும் நெருக்குதலுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் தங்களது பழைய வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாது என அறிந்திடும்போது இவர்களின் மேட்டுக்குடி சிந்தனை தவிடுபொடியாகிவிடும்.

“…தொழிலாளி வர்க்கத்தில் அதிக ஊதியம் பெறுவோரைக் கூட – இவ்வர்க்கத்தின் மேட்டுக்குடியினைரையும் கூட- தொழில்துறைக் கொந்தளிப்புகள் எப்படிப் பாதிக்கின்றன”25 என்று மேட்டுக்குடி தொழிலாளர்களும் பொருளாதார நெருக்கடியின் போது அவர்கள் எப்படியெல்லாம் பாதித்தனர் என்பதினைப் பற்றிய செய்தியேடுகளில் வந்துள்ள அறிக்கையை மார்க்ஸ் நமக்கு எடுத்துக் காட்டுகிறார். முதலாளித்துவ செழுமையின் போது கிடைக்கின்ற அதிக ஊதியம், பொருளாதார நெருக்கடியின் போது உறுதியற்று போகிறது. செய்திடும் வேலையும் உறுதியற்றது என்பதை உணர்ந்திட்ட மேட்டுக்குடி பாட்டாளிகள் மார்க்சியத்தின் பக்கம் இருப்பர். வரலாறு அறியாத நேர்காட்சி கண்ணோட்டம் கொண்டவர்கள் நெருக்கடியின் போதே மார்க்சியத்தை நாடுவர்.

இந்த மேட்டுக்குடியினரை தனிப் பிரிவான அடுக்காக கொள்ளமுடியாது, தொழிலாளி வர்க்கத்தினுடைய இயக்க வளர்ச்சியில் மாறிச்செல்வதையேக் குறிப்பதாகும் என்கிறார் லெனின்.

“நடுநிலைவாதிகளிடையில், சட்ட முறைமையின் நச்சு நோயால் அரிக்கப்பட்டுப் போனவர்களும், நாடாளுமன்றச் சூழலால் கெடுக்கப்பட்டவர்களுமான வழக்கமான பக்தர்களும், சொகுசான பதவிகளுக்கும் வசதியான வேலைகளுக்கும் பழக்கமாகி விட்ட அதிகார வர்க்கத்தாரும் உள்ளனர். வரலாற்று முறையிலும், பொருளாதார முறையிலும் பார்த்தால் அவர்கள் தனிப் பிரிவான ஓர் அடுக்கு அல்ல, ஆனால் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பழைய கட்டத்தில் இருந்து ஒரு மாறிச் செல்லுதலை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்”
(நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்
 தேர்வு நூல்கள் 5 -பக்கம் 77)

பாட்டாளிகளும், பாட்டாளிகளை வழிநடத்தும் கம்யூனிஸ்டுகளும் சமூகப் போராளியாக செயற்பட வேண்டுமானால், நிலவும் சமூகத்தின் பிரச்சினைகளை வரலாற்று முறையில் ஆய்ந்து, அதற்கான முடிவை எடுக்க வேண்டும். இதற்கு மார்க்சியத்தில் காணப்படும் அரசியல் பொருளாதாரம், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அப்போதுதான் தமது அரசியல் செயற்பாட்டை விஞ்ஞான அடிப்படையில் அமைத்துக் கொள்ள முடியும்.”

இன்றைய வளர்ச்சிக்கட்டதை மார்க்ஸ் லெனின் வழியில் சிந்திப்பதே மார்க்சியர்களின் கடமை. இந்தக் கடமையைப் புரிந்து கொள்ளாமல் புதிய பாதையினர் மார்க்சையும் லெனினையும் கைவிட முனைகின்றனர்.

வாழ்நிலை சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்றால் இது பொருள்முதல்வாதம்

சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்றால் இது கருத்துமுதல்வாதம்.

இந்தப் பொருள்முதல்வாதப் பார்வை முழுமையாகப் புதிய பாதையினர் புறக்கணித்துவிட்டனர். அவர்கள் மேற்கட்டமைப்பை முதன்மைப்படுத்துகின்றனர். இது மார்க்சியத்திற்கு எதிரானதும். கருத்துமுதல்வாதமாதும் ஆகும்.

புதிய பாதையினர்:- “இன்றிருப்பது, மார்க்ஸ் லெனின் காலத்தைய இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளி வர்க்கமல்ல என்றும், பாட்டாளிகளில்/மக்களில் கணிசமானோர் உபரிமதிப்பில்/சுரண்டலில் பங்கு பெறும் வர்க்கங்களாக மாறி விட்டார்கள். இவர்களிடம் வரும் உபரி மதிப்பை சேமித்து குட்டி முதலாளிகளாகவும், முதலாளிகளின், முதலாளிய கார்பரேட்களின் பங்காளிகளாகவும் மாறி வருகிறார்கள். இதன் மூலம் ஓருபுறம் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டே, மறைமுகமாக முதலாளித்துவத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்”

10) 2008ல் மேலைநாடுகளில் பொருளாதார நெருக்கடி சந்தித்த போதும், புதிய பாதையினர் இதனை ஒப்புக்கொள்ளாது. இந்த நிலைமை மாறிவிட்டது என்று கூறுவருகின்றனர்.

புதிய பாதையினர்:- “டார்வினின் தகவமைப்பு கோட்பாட்டின் படி, பழைய ஏகாதிபத்தியங்கள், தமது அழிவுக் கூறான, கட்டுப்பாடற்ற போட்டி உற்பத்தி முறையைக் கைவிட்டு விட்டு, புதிய நிலமைகளில் உயிர் வாழ்வதற்கு தேவையான, மார்க்சீயத்தின் ஆக்கக் கூறான, திட்டமிட்ட பொருளாதாரத்தை உள்வாங்கி, அதனை தங்களது தனித் தன்மைக்கேற்ப, திட்டமிட்ட போட்டி, கட்டுப் பாட்டுக்கு உட்பட்ட போட்டி எனும் கலப்பு உற்பத்தி முறையாக மாற்றியமைத்து, தங்களை புதிய நிலமைக்கேற்ப தகவமைத்துக் கொண்ட, புதிய ஏகாதிபத்தியமாக மாறி விட்டதை, மரபு வழி மார்க்சீயர்கள் இன்னும் புரிந்துக் கொள்ளாமல் குழம்பியும், தளர்ந்தும் வருகிறார்கள்...”

புதிய பாதையினர் பொருள்முதல்வாதத்தைக் கைவிட்டதால் ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் விருப்பப்படி போட்டிகளைத் தவிர்க்க மார்க்சீயத்தின் திட்டமிட்ட பொருளாதாரத்தை உள்வாங்கிவிட்டார்கள் என்ற முடிவுக்கு வருகின்றனர். மார்க்சியம் கூறுகிற சோஷலிச திட்டமிட்ட பொருளாதாரத்தைச் செயற்படுத்துவற்கான உற்பத்தி சக்திகளினுடைய வளர்ச்சியின் முன்தேவைகளைப் புதிய பாதையினர் கணக்கில் கொள்ளவேயில்லை. தனிச் சொத்துடைக்கும் வினியோகத்திற்கும் உள்ள இயக்கவியல் தொடர்பை புறக்கணிக்கின்றனர்.

ருஷ்ய நவம்பர் புரட்சியின் போது சோவியத் என்கிற சோஷலிச அரசு இருந்த போதும் சோஷலிசப் பொருளாதாரத்தை நிறுவ முடியாமல் லெனின் புதிய பொருளாதாரக் கொள்கையை அமைத்து, விடுபட்ட முதலாளித்துவ ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். புறநிலைத் தன்மையை முற்றப் புறக்கணித்துவிட்டு அகநிலையாகவே அதாவது பொருளாதார முன்நிபந்தனை இல்லாமல் மனமாற்றத்தின் மூலமாகவே, ஏகாதிபத்தியவாதிகள் மார்க்சிய திட்டமிட்ட பொருளாதாரத்தை உள்வாங்கிவிட்டத்தாகப் புதிய பாதையினர் கூறுகின்றனர். தொடர்ந்து வருகின்ற பொருளாதார நெருக்கடிகள் புதிய பாதையினரின் இந்தக் கூற்று தவறானது என்பதை நிலைநிறுத்தும்.

புதிய பாதையினர்:- “இத்தகைய புதிய சமூகப் பொருளாதார அரசியல் சூழலில், மக்களே, மக்களின் மூலதனத்தின் மூலம், முதலாளிகளின்றி, மக்களுக்கான உற்பத்தி சாதனங்களை, மக்களின் கார்பரேட்கள் மூலம் உருவாக்கி வளர்ப்பது எனும், முதலாளித்துவ கார்பரேட்டுகளுக்கு எதிரான பொருளாதாரப் போராட்டம் தான், இன்றைய உண்மையான வர்க்கப் போராட்டம் என்று எங்கல்சே வந்துக் கூறினாலும் இவர்கள் உடனே ஏற்க மாட்டார்கள்.”

எங்கெல்ஸ் இயக்கவியல் பொருள்முதல்வாதி, அவர் இப்போது வந்து கூறினாலும் தமது கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டார். இறுதிகாலங்களில் எழுதிய கடிதங்களைப் படித்தால் அவர் எவ்வளவு உறுதியான இயக்கவியல் பொருள்முதல்வாதி என்பது தெரியும்.

வர்க்கப்போராட்டத்தைப் புறக்கணித்துவிட்டு முதலாளித்துவக் கார்பரேட்டுகளுக்கு எதிராக மக்கள் கார்பரேட்டை அமைக்க வேண்டும் என்று புதிய பாதையினர் கூறுகின்றனர். அரசு, காவல், ராணுவ, நீதித்துறை போன்ற பலம்பொருந்திய மேற்கட்டமைப்புகள் முதலாளித்துவக் கார்பரேட்டுகளின் தேவைக்கு உருவானவை, முதலாளித்துவ கார்ரேட்டுகளின் பக்கத்தில் மக்கள் கார்ரேட்டை அமைப்பதை அது சும்மா பார்த்துக் கொண்டிருக்குமா? இந்தப் பொருளாதாரப் போராட்டம் சாதிப்பதற்கு வாய்ப்பில்லை, மார்க்சிய வழியிலான வர்க்கப் போராட்டமே சரியானது. ஏன் என்றால் இது முதலாளித்துவ உற்பத்தியின் உள்முரண்பாட்டின் வெளிப்பாடு ஆகும்.

புறநிலைத் தன்மைகளை ஒதுக்கிவிட்டு அகநிலைத் தன்மையோடு பேசுகிற, மக்களின் கார்பரேட்கள் என்கிற இந்தப் புதிய பாதையினரின் பார்வை கற்பனைவயமானது அகநிலையானது, மார்க்சியத்திற்குப் புறம்பானது. இன்றைய ஏற்றத்தாழ்வான வர்க்க நிலையில் மார்க்சின் மார்க்சியமே வழிகாட்டி ஆகும். அதுவே விஞ்ஞானத் தன்மையானது.  விஞ்ஞான வழியே வெற்றி கிட்டும் பாதையாகும்.


Monday, 5 August 2019

சமூகத்தில் இயக்கவியலின் செயற்பாடு


1.  எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி.
(The Law of the Unity and Struggle of Opposites)

2.  அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் மாறுவது பற்றிய விதி.
(The Law of the Transformation of Quantitative into Qualitative Changes)

3.     நிலைமறுப்பின் நிலைமறுப்பைப் பற்றிய விதி
(The Law of the Negation of the Negation)

சமூக மாற்றத்தில் இயக்கவியல் விதிகள் செயற்படுவதை, முதலாளித்துவ சமூக அமைப்பு முறையிலிருந்து சோஷலிச சமூக அமைப்பு முறைக்கு மாற்றம் பெறுவதின் வழியில் விளக்குவோம்.

சமூக உற்பத்தியின் வளர்ச்சியால் சமூகம் முன்னேறுகிறது. சமூக உற்பத்தியின் வளர்ச்சி என்பது உற்பத்திச் சக்திகளின் வளாச்சியில் இருந்து தொடங்குகிறது. உழைப்புச் சக்தியின் வளர்ச்சி முதன்மையாக உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியால் நிர்ணயிக்கப்படுகிறது.

நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின்போது உருவாகிய பட்டறைத் தொழில் போதாமையாகிப் போகும்போது, நீராவி இயந்திரங்களின் வருகை முதலாளித்துவ உற்பத்தி முறையைத் தோற்றுவித்தது.  கையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் நிலப்பிரபுவைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது, நீராவியால் ஓடுகிற இயந்திரம் தொழில்துறை முதலாளியைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது என்று மார்க்ஸ் கூறுவார்.

உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடே சமூக வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கிறது. இந்த முரணின் செயற்பாட்டை இயக்கவியல் முறையில் விளக்குவோம்.

முதலாளித்துவ உற்பத்தி முறையில், உற்பத்தி சமூகமுறையாகவும், உற்பத்தி உறவுகள் என்பது தனியுடைமையின் அடிப்படையிலான வினியோகமாகவும் இருக்கிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையின் தொடக்கத்தில், நிலப்பிரபுத்துவ உற்பத்தி சக்திகளுடன் ஒப்பிடும் போது முதலாளித்துவ உற்பத்திச் சக்திகள் மேலோங்கி காணப்படுகிறது. அதற்கு ஒப்பவே சமூக உற்பத்தியின் வேலைப் பிரிவு தொடக்க நிலையினதாகவே இருக்கிறது.

ஐக்கியமும் போராட்டமும்

இந்த முதலாளித்துவ உற்பத்தி முறையின் தொடக்கத்தில், தனியுடைமை முதலாளிகளும் உற்பத்தி கருவிகளை இழந்து உழைப்புச்க்தியைத் தவிர சொந்தமாக கொள்வதற்கு ஏதுமற்ற சுதந்திரமான தொழிலாளிகளும் இணைந்து காணப்படுகின்றனர். இவ்விருவரும் இன்றி முதலாளித்துவ உற்பத்திமுறை நிகழாது. இதில்தான் இவ்விருவர்களின் ஐக்கியம் காணப்படுகிறது. இந்த ஐக்கியம் சுரண்டல் அடிப்படையிலானது என்பதானால் எதிர்நிலைகளின் ஐக்கியம் என்று கூறப்படுகிறது. இந்த ஐக்கியம் ஒப்பீட்டு நிலையினதாகும். இதன் போராட்டம் அறுதியானதாகும்.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் தனித்தனி முதலாளிகளுக்கு இடையிலான போட்டியினாலும், தொழிலாளிகளின் போராட்டத்தை குறைக்கும் நோக்கத்தோடும் முதலாளிகள் தமது உற்பத்தி முறையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதிலும் புதிய இயந்திரங்களை புகுத்துவதிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதனையே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, முதலாளித்துவ வர்க்கத்தால் ஓயாது ஒழியாது உற்பத்திக் கருவிகளிலும், இதன் மூலம் உற்பத்தி உறவுகளிலும், இவற்றுடன் கூடவே சமூக உறவுகள் அனைத்திலுமே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாமல் வாழ முடியாது என்கிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையின் தொடக்கத்தில் காணப்பட்டதுபோல் இல்லாமல், இயந்திரங்களின் வளர்ச்சி பிற்காலத்தில் பிரம்மாண்டமாக இருக்கிறது. இந்த உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி, முதலாளியினுடைய தனிச்சொத்துடமை முறையோடு மோதுகிறது. இதனை எங்கெல்ஸ், சமூகமயமாகி விட்ட பொருள் உற்பத்திக்கும், முதலாளித்துவ சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது என்று கூறுவார்.

உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகி விடுகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்து எறியப்படுகிறது. முதலாளித்துவ தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது, என்று மூலதன நூல் கூறுகிறது.

இந்த சமூக மாற்றம் என்பது எந்த ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பமாக இல்லாமல், சமூக வளர்ச்சியின் விளைவாகத் தோன்றுகிறது என்பதை இயக்கவியல் முறையில் விளக்கப்படுத்துவோம். இப்படிச் சொல்வதால் சமூகம் எதோ நேர்ப்பாதை வழியாக செல்வதாகவும் அதனைப் பிடித்துவிட்டால் போதும் என்ற வகையில் எளிதாகப் புரிந்துக்கொள்ளக் கூடாது. சமூகமயமாதல் என்பதில் காணப்படும் சிக்கலான பல்வேறு போக்குகளிலும் தெளிவைப் பெற்றாக வேண்டும்.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் முரண், தனிச்சொத்து அடிப்படையில் திரட்டப்பட்ட உற்பத்திச் சாதனங்களின் மையப்பாட்டிற்கும், உழைப்பின் சமூகமயமாதலுக்கும் இடையே காணப்படுகிறது. இந்த முரணில்தான் ஐக்கியமும் போராட்டமும் அடங்கியிருக்கிறது. இவ்விரண்டும் இல்லாமல் இந்த உற்பத்தி முறை நிகழாது. இந்த இருப்பு என்பது போராட்டத்தின் ஊடேயே நிகழ்கிறது. போராடுகின்ற இவ்விரண்டின் இருப்பே இதன் ஐக்கியத்தைச் சுட்டுகிறது. இந்த ஐக்கியம் முரண் அடிப்படையில் காணப்படுவதால் இவற்றுக்கு இடையேயான ஐக்கியம் போராட்டமாகவே காணப்படுகிறது. ஐக்கியமும் போராட்டமும் என்ற இயக்கவியல் விதியின் இரண்டாம் விதியை இவ்வாறு விளங்கிக் கொள்ளலாம்.

அளவு மாறுபாடு பண்பு மாறுபாடு அடைதல்

அடுத்து அளவு மாறுபாடுவதும் அதன் மூலம் பண்பு மாறுவதும் பற்றிய விதிக்கு வருவோம்.

சரக்கு உற்பத்தி என்பதே சமூக உற்பத்திதான். முதலாளித்துவ உற்பத்தி முறையின் தொடக்கத்தில் தனிச்சொத்தின் அடிப்படையிலான உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடு எளிமையானதாக இருக்கிறது. உழைப்பின் சமூகத் தன்மையும் தொடக்க நிலையிலானதாக இருக்கிறது. இதனால் இதனை முழுமையாக அறிந்திட முடியவில்லை. இவற்றின் வளர்ச்சியினால் அளவுகள் மாறுபடுகின்றன. இந்த மாறுபாடுகள் இவற்றின் முரணை மிகுதியாக்கி விடுகிறது. இந்த மிகுதி அதன் பழைய வடிவத்தோடு மோதுகிறது. இந்த மோதல் அதனை தூக்கி எறிவதிலும் புதிய வடிவத்தை அமைப்பதிலும் முடிகிறது.

மார்க்ஸ் இதனை தமது “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” என்ற நூலின் முன்னுரையில் கூறியுள்ளார். வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கு இருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.

மார்க்ஸ் குறிப்பிடுவது போல் இந்த அளவு மாறுபாடு பண்பு மாறுபாடாக மாறும் போது புரட்சியின் சகாப்தம் தொடங்குகிறது.

நிலைமறுப்பின் நிலைறுப்பு

அடுத்து நிலைமறுப்பின் நிலைறுப்பு என்ற மூன்றாம் விதிக்கு வருவோம்.

முதலாளித்துவ உற்பத்தி முறையின் முதிர்வில், சமூக உற்பத்தியாக மாறிப்போன, புதிய சூழ்நிலைமைக்கும், பழைய தனிசொத்து அடிப்படையிலான வினியோக முறைக்கும் இடையிலான முரண் முற்றி, உற்பத்தியின் வளர்ச்சிக்கு, முதலாளித்துவ உற்பத்தி முறை தடையாகப் போனதனால் பழைய உற்பத்திமுறை மறுக்கப்படுகிறது. முதலாளி வர்க்கத்தின் கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்தி சாதனங்களை பாட்டாளி வர்க்கம் புரட்சியின் வழியில் (பாய்ச்சல்) கையகப்படுத்தி பொதுச் சொத்தாய் மாற்றி பிரச்சினைக்கு தீர்வளிக்கிறது. இந்தச் செயற்பாட்டின் மூலம் பாட்டாளி வர்க்கம் உற்பத்திச் சாதனங்களை அவை இதுகாறும் தாங்கி இருந்த மூலதன இயல்பிலிருந்து விடுவித்து, அவற்றின் சமூக இயல்பு செயல்படுவதற்கு முழுச் சுதந்திரம் அளிக்கின்றது. இவ்வாறு முதலாளித்துவ உற்பத்தி முறை என்கிற அமைப்பு நிலைமறுக்கப்பட்டு சோஷலிச உற்பத்தி முறை என்கிற அமைப்பு நிலைபெறுகிறது.

இயக்கவியலின் முதன்மையைப் புரிந்து கொள்வதற்கு இயக்கவியலை மறுக்கின்ற போக்கால் நிகழக்கூடியது என்ன என்பதை பார்த்தால் தெளிவாகும். மார்க்சியத்தின் இயக்கவியலை மறுக்கின்ற சீர்திருத்தவாதிகள் பரிணாமவாதத்தை முன்வைக்கின்றனர். முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிசத்துக்கு மாறுவது சீர்திருத்தங்களின் வழியில், முதலாளித்துவ அமைப்பு முறையின் அடித்தளங்களை பாதிக்காத வகையில் செய்திட முடியும்  என்று கருதுகின்றனர். இயக்கவியலின் பாய்சல் என்கிற இடைமுறிவைப் புறக்கணித்து சீர்திருத்தங்களின் வழியில் சமாதானமாக, சமூகப் புரட்சி ஏற்படாமல் சோஷலிசத்துக்கு மாறிவிட முடியும் என்று நம்புகின்றனர்.

அடுத்து இடதுசாரி தீவிரவாதிகள், இவர்கள் சமூகப் பாய்ச்சலுக்கு, அளவுமாற்றத்தின் தேவையை மறுதலிக்கின்றனர். உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் அளவு மாறுபாட்டை கணக்கில் கொள்ளாமல் பண்பு மாற்றத்தை மட்டுமே முன்வைத்து, பாய்ச்சல் முறையான புரட்சி கட்டத்தை மட்டுமே செயற்படுத்த துடிக்கின்றனர். அதாவது இடதுசாரி தீவிரவாதிகள் பாய்ச்சல் ஏற்படுவதற்கு தேவைப்படுகிற அளவு மாற்றத்தை விடுத்து, பாய்ச்சலாக பாய்வதற்கு முயற்சிக்கின்றனர். மேலே மார்க்ஸ் கூறிய சமூகப் புரட்சியின் சகாப்தத்தில் காணப்படும் மேற்கட்டமைப்பின் தீவிரசெயல்பாட்டை தீர்மானிக்கும் செயற்பாடாக புரிந்து கொண்டு மேற்கட்டமைப்புக்கு முதன்மையிடம் கொடுத்து அடித்தளதை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிடுகின்றனர்.

அளவு மாற்றத்தின் முறிவையே இயக்கவியல் பாய்ச்சல் என்கிறது. இது பழைய நிலையை மறுத்து புதியமுறைக்கு நிலைமாறுவதைக் குறிக்கிறது. அளவு மாற்றம் பண்பு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்ற விதியை மட்டும் ஏற்கின்ற ஒற்றைப் போக்கு, இயற்கையில் பாய்ச்சலையும், சமூக மாற்றத்தில் புரட்சியையும் மறுக்கின்ற இயக்கமறுப்பியலாகும்.