Friday, 10 January 2020

மார்க்சின் மாபெரும் இரு கண்டுபிடிப்புகளைப் போற்றுவோம் அதனைப் பின்பற்றுவோம்


(ந.முத்துமோகன் எழுதிய தொடர் முழுமையும் “மார்க்சியம் பயிலுவோம்” என்ற பெயரில் தனி நூலாக வெளிவந்துள்ளது, இந்நூலுக்கான எனது எதிர்வினையைத் தனியாக எழுத உள்ளேன். இந்த எதிர்வினை எட்டு தொடரை மட்டும் முன்வைத்து எழுதப்ட்டது. விரைவில் முழுநூலுக்கான விமர்சனம் வெளிவரும்)

தோழர் ந.முத்துமோகன் “மார்க்சியம் பயிலுவோம்” எனும் தலைப்பில், மார்க்சியத்தை அறிமுகப்படுத்தும் வகையில் “ஜனசக்தி” இதழில் தொடர்ந்து எழுதிவருகிறார். இதுவரை எட்டுப் பகுதிகள் வந்துள்ளன. மார்க்சைப் பற்றியும் மார்க்ஸ் கூறியது பற்றியும் தோழர் உயர்த்திச்சுட்டுகிறார் (highlights), பொதுவாக உயர்த்சிச்சுட்டுவது என்பது குறிப்பிட்டுச்சுட்டுவதோடு பிறவற்றையும் இணைத்துப் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கும் என்பதற்காகவே அவ்வாறு செய்யப்படுகிறது. ஆனால் தோழர் உயர்த்திச்சுட்டுவது பிறவற்றில் இருந்து தனித்துத் துண்டிப்பதற்காகச் செய்யப்படுவதாகத் தெரிகிறது.

முதல் கட்டுரையின் தொடக்கத்தில் மார்க்ஸ் இந்தியாவிற்கு வந்ததில்லை என்பதைப் பதிந்துள்ளார். இந்தியாவிற்கு நேரில் வந்துப்பார்க்காத மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி நிறைய அல்லது சிறப்பாக எழுதியிருக்கிறார் என்பதைச் சுட்டுக்காட்டுவதற்காக இவ்வாறு கூறுகிறார் என்று நினைத்து தொடர்ந்து படித்தால், ஏமாற்றத்திற்கு உள்ளாகிறோம். மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மீதே மார்க்சின் கவனம் இருந்ததாக எழுதியிருக்கிறார். ஆனால் இதற்கு முரணாக இக்கட்டுரையின் இறுதியில் “நியூயார்க் டிரிப்யூன்” பத்திரிகையில் இந்திய விடுதலை இயக்கம் போன்ற உடனடிப் பிரச்சினைகளைக் கடந்து இந்திய சமூக அமைப்பு பற்றிய ஆய்வுகளில் மார்க்ஸ் ஈடுபட்டார் என்றும் எழுதுகிறார். இந்த முரண் ஏன் ஏற்படுகிறது என்றால், மார்க்ஸ் இந்தியாவைப் பற்றிப் பலநூறு பக்கங்களில் எழுதியவை நூலாக நமக்குக் கிடைக்கிறது. இதனை மறைக்க முடியாததால் இதனையும் சேர்ந்து எழுதுகிறர். இதுபோன்ற முரணை அவர் எழுத்துகளில் தொடர்ந்து பார்க்க முடிகிறது.

இந்தத் தொடர் மார்க்சியம் பயில்வதற்காக எழுதப்பட்டது, அதனால் இதில் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் ஆகியோர் எழுதிய மார்க்சிய அடிப்படைகளை மட்டும் அறிமுகப்படுத்துவதே சரியானதாக இருக்கும். அது மட்டும் போதுமானது அல்ல என்று கருதினால் இறுதியில் மார்க்சியம் பற்றிய விமர்சனத்தையும் அதன் பல திரிபான போக்குகளையும் அறிமுகப்படுத்தலாம். ஆனால் தோழர் இரண்டாவது தொடரில் எங்கெல்சைப் பற்றி எழுதும் போது, “சமூகவாழ்வை பொருளாதாரமே “நிர்யணிக்கிறது” என்ற கருத்தாக்கத்தை மார்க்சியத்தினுள் பிரபலப்படுத்தியவர் எங்கெல்ஸ் என்று ஒரு கருத்து உண்டு” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுச் செல்கிறார். இது தொடக்க வாசகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

மார்க்சியத்தைத் தவறாகப் புரிதல் என்ற சிக்கல் மார்க்ஸ், எங்கெல்ஸ் வாழ்ந்த காலத்திலேயே உண்டு. ஆனால் எங்கெல்சைப் பற்றிய இதுபோன்ற கருத்துக்கள் அப்போது எழுப்பப்படவில்லை. மார்க்சை, இளம் மார்க்ஸ், முதிய மார்க்ஸ் என்று பிரித்து, இளம் மார்க்சுக்கு முதன்மை இடம் எப்போது கொடுக்கப்பட்டதோ அப்போதிருந்து இந்த விமர்சனம் தொடர்கிறது. இது ஆதாரமற்ற விமர்சனமாகும்.

மார்க்சியக் கருவூலத்தில் மார்க்சின் பங்களிப்பு என்ன, எங்கெல்ஸ் பங்களிப்பு என்ன என்பதை அவர்களின் எழுத்துக்களைக் கொண்டே அறிந்திட முடிகிறது. “ஜெர்மன் கருத்தியல்” என்ற நூலை மார்க்சும் எங்கெல்சும் சேர்ந்தே எழுதியிருந்தாலும் அதில் காணப்படும் வரலாற்றியல் பொருள்முதல்வாதகக் கண்ணோட்டத்தை மார்க்சே முழுமைப்படுத்தியுள்ளார் என்பதைப் பல இடங்களில் எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” நூலுக்கான  முன்னுரையிலும், “ஃபாயர்பாக்” பற்றித் தாம் எழுதிய நூலிலும் எங்கெல்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

"இந்தக் கோட்பாட்டை (Theory) வகுப்பதற்கு நான் ஆற்றியுள்ள பங்கு பற்றி அண்மையில் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள். எனவே இவ்விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஒருசில வார்த்தைகள் சொல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை.

மார்க்சுடன் நாற்பது ஆண்டுகளாகக் கூட்டாகப் பணி புரிந்த காலத்திலும் சரி, அதற்கு முன்பும் சரி, இக்கோட்பாட்டின் அடித்தளங்களை அமைப்பதில், அதைவிடக் குறிப்பாக இக்கோட்பாட்டை விவரித்து விளக்குவதில் எனக்கு ஓர் அளவுக்குத் தனிப் பங்கிருந்ததை நான் மறுக்க முடியாது. ஆனால், அதன் தலையாய அடிப்படைக் கொள்கைகளில் மிகப் பெரும் பகுதியும் (குறிப்பாக, பொருளாதாரத் துறையையும் வரலாற்றுத் துறையையும் சேர்ந்தவை அவை), எல்லாவற்றிற்கும் மேலாக அவற்றைப் பற்றிய இறுதியான, கூரிய வரையறுப்பும் மார்க்சையே சேரும்.

நான் ஆற்றிய பணியை - ஒரு வேளை இரண்டு மூன்று தனித்துறைகளில் நான் புரிந்த பணி நீங்கலாக- நான் இல்லாமலே மார்க்ஸ் எளிதாகச் செய்திருப்பார். மார்க்ஸ் சாதித்ததை நான் சாதித்திருக்க மாட்டேன். எங்கள் எல்லோரையும் விட மார்க்ஸ் உயரே நின்றார், வெகு தொலைவிற்குப் பார்த்தார், மேலும் விரிவான, விரைவான பார்வை பெற்றிருந்தார்.

மார்க்ஸ் ஒரு மாமேதை (genius), நாங்கள் எல்லோரும் அதிகபட்சமாகச் சொன்னால் திறமைசாலிகளே (talented), அவர் இல்லாமல் இந்தக் கோட்பாடு இன்றிருப்பது போல் இவ்வளவு தூரம் வந்திருக்காது. எனவே, இந்தக் கோட்பாடு அவருடைய பெயரைத் தாங்கி நிற்பது சரியே"
(லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)

தோழர் குறிப்பிடுகிற பொருளாதாரத் துறையோடு வரலாற்றுத் துறையையும் குறிப்பிட்டே எங்கெல்ஸ் தமது காலத்திலேயே விளக்கப்படுத்திவிட்டார். அப்படி இருந்தும் இந்த மேற்கோளை முன்வைத்து தோழர் எழுதியிருக்கிறார், “மார்க்சியத்தை முழுமைப் படுத்தியவர், நிறைவு செய்தவர் ஏங்கெல்ஸ்.” இப்படி ஆதாரமில்லாமல் உண்மைக்கு மாறாகவே தொடர்ந்து எழுதுகிறார்.

தகவல் பிழையைத் திருத்திக் கொள்ளலாம், இந்தத் தொடரை நூலாக்கும் போது அதனைச் சரி செய்துவிடலாம். மார்க்சின் மூலதனம் நூலின் இரண்டு மற்றும் மூன்றாம் தொகுதிகளை எங்கெல்ஸ் வெளியிட்டுள்ளார், இதனைக் குறிப்பிட்டு சொல்லிய தோழர் தொடார்ந்து “உபரி மதிப்பு பற்றிய கோட்பாடுகள்” என்ற நூலை எங்கெல்ஸ் பதிப்பித்தார் என்று கூறியிருக்கிறார்.

இந்நூலை எங்கெல்ஸ் பதிப்பிக்கத் திட்டமிட்டிருந்தார் ஆனால் பதிப்பிக்க முடியாமல் போய்விட்டது. முதல்முறையாகக் காவுத்ஸ்கி 1905-1910 ஆகிய ஆண்டுகளில் இந்நூல் வெளியிடப்பட்டது. மார்க்சிய-லெனினிய கமிட்டியினால் 1954-1961 ஆண்டுகளில் புதிய பதிப்பாக வெளியிடப்பட்டது. எழுதப்பட்ட ஜெர்மன் மொழியில் 1956-1962ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டது.

இந்தத் தகவல் பிழையை நூலாக்கும் போது திருத்திவிடலாம். ஆனால் மார்க்சியத்தின் அடிப்படையைப் பற்றியும் மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றியும் குறிப்பிடுவதை விமர்சிக்காமல் இருக்க முடியாது.

 “கம்யூனிஸ் கட்சி அறிக்கை” வெளிவருவதற்கு முன்புவரை மார்க்சின் எழுத்துக்களில் ஹெகலிய செல்வாக்கைக் காணமுடிகிறது என்று தோழர் குறிப்பிடுகிறார்.  குறிப்பாக ஹெகலின் அந்நியமாதல் கருத்தை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் இந்நூலின் இறுதியில் அந்நியமாதலுக்கு எதிரான போராட்டத்தைப் பின்னாட்களில் பலவகைகளில் மார்க்ஸ் விரிவுபடுத்தினார் என்று எழுதியுள்ளார். இது உண்மைக்கு மாறானதாகும். “குடிமை சமூகம்” போன்றவற்றின் உள்ளடக்கத்தை மார்க்ஸ், பிற்காலத்தில் அரசியல் பொருளாதாரத்தில் தேட வேண்டும் (1859) என்று கூறியுள்ளார். அதே போலத்தான் அந்நியமாதலையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மார்க்ஸ் வந்தடைந்த இடத்தில் தான் நாம் மார்க்சியத்தின் முழுநிறைவை காணவேண்டும். மார்க்ஸ் வந்தடைந்ததை மறுதலித்து, வந்த வழியோடே (அந்நியமாதல்) தோழரைப் போன்றேர்கள் நின்றுவிடுகின்றனர். அதனால் தான் அந்நியமாதலால் ஏற்படும் முரண்பாட்டை மானுடச் செயல்பாட்டால் தீர்க்கப்பட முடியும் என்பது மார்க்சியம் என்று எழுதியுள்ளார்.

மார்க்சியன் பொருளாதார நிர்ணயத்தை மறுத்து அதாவது சமூக வரலாற்றைப் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் காண்பதை மறுத்து பொருளாயத மாற்றத்தின் விளைவாக ஏற்படும் தீர்வாக முன்வைக்காமல், மானிட செயற்பாட்டிலேயே முடங்கிவிடுகிறார். மனிதனின் செயற்பாட்டைப் புறநிலைமைகளே அதாவது பொருளாயதக் காணரங்களே நிர்ணயிக்கிறது என்ற மார்க்சின் கண்ணோட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் பலர், இந்த நிர்ணய பொருளாயத விளக்கத்தை எங்கெல்ஸ் தான் வலியுறுத்திக் கூறிக்கொண்டிருந்தார், மார்க்சிடம் அவ்வளவு வறட்டுத்தனம் இல்லை என்ற தவறான கருத்தை முன்வைக்கின்றனர்.

அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது என்பதை மார்க்ஸ், தான் உருவாக்கியதாகத்தான் சொல்லியிருக்கிறார்.

மார்க்ஸ்:-
“இதன் மூலம் நான் உருவாக்கிய பொதுவான முடிவை - இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக மாறியது - பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம்.

மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும்  சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளில் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.

இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்த கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.”
 (அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு, முன்னுரை)

மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது என்ற வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தையே அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கத்தில் மார்க்ஸ் விவரித்துள்ளார். அடித்தளம் என்பது வாழ்நிலை, மேற்கட்டமைப்பு என்பது உணர்வுநிலை.

நான்காம் தொடரில் தோழர் அரசு குறித்த மார்க்சியக் கோட்பாட்டை விவரிக்கிறார். இங்கே மார்க்சியக் கோட்பாடாக மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் கருத்தை அறிமுகப்படுத்துவதைவிட, கிராம்சி, அல்த்தூசர் போன்றோர்களின் அரசு குறித்த கோட்பாட்டை, மார்க்சியத்தைச் செழுமைப்படுத்திய கோட்பாடாக முன்வைக்கிறார்.

அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாட்டைப் பயன்படுத்தி. அரசு எந்திரத்தையும் விளக்கமளிக்க முடியும் என்று கூறுகிறார் தோழர். மார்க்சியம் அவ்வாறுதான் பார்க்கிறது என்பதை உரக்க கூறமறுக்கிறார். இதற்குக் காரணம் தோழர் ந.முத்துமோகன், சமூகத்தைப் பொருள்முதல்வாதப் பார்வையில் பார்ப்பதை மறுதலிப்பராவார்.

அண்மையில் வெளிவந்த அவரது நூலான “இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்” என்ற நூலில் வெளிப்படையாகவே இதனை ஒப்புக் கொண்டுள்ளார். மறைக்காமல் நேரடியாக ஒப்புக்கொண்டமைக்கு அவரைப் பாராட்டத்தான் வேண்டும். “மார்க்சியத்தைப் பொறுத்தமட்டில், மார்க்ஸ் எப்போது ஆசிய உற்பத்தி முறை என்று ஒன்றைப் பற்றிப் பேசினாரோ, அப்போதிருந்தே வெறும் பொருளாதார வர்க்க அரசியல் மூன்றாம் உலக நாடுகளுக்குப் போதாது என்பது வெளிப்படையான ஓர் உண்மை” (பக்கம் 264). இதன் மூலம் இந்திய நிலைமைகளுக்கு மார்க்சின் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கத்தால் விளக்கப்படுகிற வரலாற்றியல் பொருள்முதல்வாதம் போதாது என்ற அவரது கருத்தை தெளிவுபடுத்திவிட்டார்.

மேலும் கூறுகிறார், “பொருளுற்பத்தி வாழ்க்கையை மார்க்சியர்கள் சமூக அடிப்படை என்றும், கலை, கலாசாரம், தத்துவம், கல்வி, குடும்ப உறவுகள் போன்றவற்றை மேற்கட்டுமானம் என்றும் வகைப்படுத்துவர். இந்த வகைப்படுத்தல் இப்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது” (பக்கம் 109). ஆக இவர் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைக் கேள்விகுள்ளாக்கப்பட்டவர்களின் பிரிவில் இருந்து பேசுகிறார். மேலும் இந்த அணுகுமுறை பொருத்தமற்றது என்று முடிவெடுத்துள்ளார்.

“அடிப்படையைக் காரணமாகவும் மேற்கட்டுமானத்தைப் பிரதிபலிப்பாகவும், ஒன்றை நிஜமாகவும் மற்றொன்றை நிழலாகவும் அணுகும் முறையியல் பொருத்தமற்றது என்ற முடிவு இப்போது பெறப்படுகிறது.” (பக்கம் 109). அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கருத்தாக்கத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எவ்வாறு அணுகுவார்களோ அவ்வாறே இவரும் அணுகுகிறார் என்பது தெளிவாகிறது.

“..இந்தியத் தத்துவப் பிரச்சனைகள் அனைத்தையும் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற இரண்டில் ஒன்றாக உள்ளடக்கி விடமுடியும் என்று என்னால் கருதமுடியவில்லை. இன்னும் பலப்பலப் பிரச்சனைகள்… பலபடித்தானவை. ஒன்று, பொருள் – கருத்து என்ற எல்லைகள் மிகவும் குறுகியவையாக இருக்க வேண்டும் அல்லது இந்தியத் தத்துவங்களின் பரப்பு மிகவும் பெரியதாக இருக்க வேண்டும்.” (பக்கம் VI.)

தாம் பொருள்முதல்வாதப் பார்வையில் இருந்து விலகி அணுகுவதை வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறார். இருந்தாலும், இந்த வெளிப்படைத் தன்மை எல்லா இடங்களிலும் காணப்படுகிறது என்று சொல்லிவிடமுடியாது. அதனால் தான் அவரது எழுத்துக்கள் உடனுக்குடன் முரண்படுகிறது.

அடித்தளம் நிஜம், மேற்கட்டமைப்பு நிழல் என்று எங்கேயும் மார்க்ஸ் கூறவில்லை.
அத்துடன் மேற்கட்டமைப்பைப் பொய்யுணர்வு என்றெல்லாம் மார்க்சியம் கூறவில்லை. “ஜெர்மன் கருத்தியல்” என்ற மார்க்ஸ் எங்கெல்சால் இணைந்து எழுதப்பட்ட நூலில், “மதம் என்பது துவக்கமுதலே மெய்யான அவசியத்தில் இருந்து எழும் அறிவெல்லை கடந்த்தான உணர்வாகும்”, மேலும் மார்க்ஸ் “மூலதனம்” நூலின் முதல் தொகுதியில், “மத உலகம் எதார்த்த உலகத்தின் பிரதிபலிப்பே” (பக்கம் 116). "ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள்" என்ற குறிப்பில் மார்க்ஸ் “மத உணர்ச்சி” (“religious sentiment”) என்பதே ஒரு சமூக உற்பத்திப் பொருள்...." என்றே கூறியுள்ளார்.

பிரதிபலிப்பு என்பதைப் பொய்யுரை என்று தோழர் சிறுமைப்படுத்துகிறார். “கருத்தியல் என்பதற்கே மார்க்சிய அகராதியில் பொய்யுணர்வு என்ற ஒரு பொருள் உண்டு.” (ஜனசக்தி மே 28, 2017). பொருள்முதல்வாதத்தை மறுதலித்து அரசை அணுகுவதால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதில் சர்வாதிகாரம் என்ற சொல் பலரை அச்சப்படுத்துகிறது என்று எழுதியுள்ளார். உண்மையைக் கண்டு அச்சப்படுபவர்களே மார்க்சியத்தைக் கண்டு அச்சப்படுபவர்களாக இருக்கமுடியும்.

ஐந்தாம் தொடர், இயங்கியல். இயங்கியலுக்குத் தொடர்பான இந்திய மற்றும் தமிழகத்தில் காணப்படும் இயங்கியல் முறைகளை இதில் அறிமுகப்படுத்துகிறார். ஆனால் இதில் பெரும்பாலானவை மாற்றம் பற்றியதாகவும் இயங்குவது பற்றியதாகவும் இருக்கிறது. அந்த மாற்றத்தை தமிழில் நிலையாமை என்று மொழியாக்கப்பட்டதாகத் தோழர் கூறுகிறார். அனைத்தும் அழிந்துபடுகின்றன என்ற பொருளில் அநித்யம் என்று இந்திய தத்துவங்களில் பிரபலமாகிவிட்டதாகத் தோழர் கூறுகிறார். இது போன்று வெறுமை, சூன்யம், நிர்வாணம், பாழ் போன்றவற்றையும் அறிமுகப்படுத்துகிறார். இவைகள் பொதுவாக நிலையற்ற அழியும்பொருளாகக் காட்டப்படுகிறது. அப்படி என்றால் பொருட்களின் அநித்திய தன்மையை விடுத்து, நித்தியமான பொருளற்ற ஆதம்மாவை நோக்கியே நம்மைக் கொண்டுபோகும்.

மாற்றத்தை மட்டும் முன்னிறருத்தும் இயக்கம் என்பது பரிணாமவாதமாகும். இயங்கியலில் மாற்றம் என்பது குறிப்பிட்ட அளவுமாற்றத்தை எட்டியவுடன் பழைய நிலை மாற்றம் பெற்று புதிய நிலைமை அடைவதாகும். அதாவது பழைய நிலை மறுக்கப்பட்டுப் புதிய நிலை அடைவதாகும். இயங்கியல் இவ்வாறு பழையன கழிந்து புதியன தோன்றுவதைக் குறிப்பதாகும்.

இந்த இயங்கியல் அறிமுகத்தில் இயங்கியலின் மூன்று பொதுவிதிகளைப் பற்றியோ, அதன் வகையினங்களைப் பற்றியோ எதுவும் கூறப்படவில்லை. பின்வரும் தொடரில் இடம் பெறுமா என்பது தெரியவில்லை.

ஆறாம் தொடர் அரசியல் பொருளாதாரம் பற்றிப் பேசுகிறது.

அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது, அதாவது பொருளாதார அமைப்பு என்ற அடித்தளமே கருத்தியல்களான மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது என்கிற மார்க்சின் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு மார்க்சின் அரசியல் பொருளாதாரத்தை ஏற்றுக்கொள்வதிலும் சிக்கல் ஏற்படும்.

இந்த அரசியல் பொருளாதாரம் என்பதில் அரசியலையும் பொருளாதாரத்தையும் தனித்தனியே பிரித்துப் பொருளாதாரத்தோடு அரசியல் என்ற மேற்கட்டமைப்போடு இணைத்தே மார்க்ஸ் பேசியிருப்பதாகச் சொல்விளையாட்டு விளையாடுகிறார் தோழர். இந்தச் சொல்விளையாட்டுக்கு முன்பு “அரசியல் பொருளாதாரத்தின்” வரலாற்றைக் காண்போம்.

அரசியல் பொருளாதாரத்தை எதோ மார்க்ஸ் தோற்றுவித்ததைப் போன்று தோழர் கூறுகிறார். மார்க்சுக்கு முன்பே அச்சொல் பயன்பாட்டில் இருக்கிறது. பதினேழாம் நூற்றாண்டில் இருந்தே அரசியல் பொருளாதாரம் என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. இன்று பொதுவாகப் பொருளாதாரம் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியின் விதிகளைப் பற்றிய விஞ்ஞானமாகச் சுருக்கிப்பார்க்கப்படுகிறது. அதாவது பொருளாதாரம் நடுநிலைமையாகப் பார்க்க வேண்டும் என்பதே இந்தப் பார்வையின் நோக்கமாகும்.

ரிக்காடோ தமது பொருளாதார ஆராய்ச்சியில் முதலாளித்துவச் சமூகத்தில் மக்களுக்கு இடையே காணப்படும் வர்க்க உறவுகளின் விஞ்ஞானமாக் கண்டார். குறிப்பாக உற்பத்தியை பகிர்வது பற்றிய சமூகப் பிரச்சினைப் பற்றியதாக இருந்தது. இத்தகைய ரிக்கோர்டோவின் கோட்பாடுகளின் அடிப்படையில் மார்க்சின் பொருளாதாரம் அரசியல் பொருளாதாரமாகக் காட்சியளிக்கிறது. மார்க்சின் அரசியல் பொருளாதாரம், நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்திய முதலாளித்துவத்தின் வீழ்ச்சியையும் இயக்கவியல் ரீதியில் நிறுவுகிறது. முதலாளித்துவத்தின் தொடர் வளர்ச்சியில், உற்பத்தி, சமூக உற்பத்தியாகவும், வினியோக முறை தனியுடைமை அடிப்படையிலானதுமாகக் காணப்படுகிறது, இந்த முரண் சமூக மாற்றத்தால் தீர்க்கப்படுகிறது என்று மார்க்சின் பொருளாதாரம் சுட்டிக்காட்டப்படுவதால் இந்தப் பொருளாதாரத்திற்கு அரசியல் பொருளாதாரம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த வரலாற்றை மறைத்து தோழர் சொல் விளையாட்டை யாருக்காகச் செய்து காட்டுகிறார் என்றால், “பொருளாதாரத்தைச் சமூக அமைப்பின் அடிப்படை என்றும் அரசியலை மேற்கட்டுமானம் என்றும் கருதுபவர்கள்,” என்று தோழர் எழுதியிருக்கிறார். கருதுபவர்??? என்றால் மார்க்ஸ் இதற்கு மாறாகவா கருதியிருக்கிறார்.

“டூரிங்குக்கு மறுப்பு" என்ற நூலில் எங்கெல்ஸ் கூறுகிறார்:- "சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான் மெய்யான அடித்தளமாய் எப்பொழுதும் அமைகிறது. இதிலிருந்து தொடங்கினால்தான் வரலாற்றின் அந்தந்தக் காலக் கூறுக்கும் உரிய நீதிநெறி அரசியல் நிறுவனங்களும் மற்றும் சமயக் கருத்துக்களுமாகிய மேற்கட்டமைப்பு அனைத்திற்கும் நாம் முடிவான விளக்கம் காணமுடிகிறது....” 
மார்க்சிய வழியில் விளக்கம் காண்பதற்குப் பொருளாதார அமைப்பை அடித்தளம் என்றும் அரசியலை மேற்கட்டமைப்பு என்றும் அனைத்து மார்க்சியர்களும் கருதுகின்றனர். அனால், தோழர் “சில பகுதியினர்” கருதுவது போல் எழுதியிருக்கிறார்.

“பொருளாதாரவாதம்” என்பது தொழிலாளர்கள் தமது பொருளாதாரப் போராட்டத்தில் மட்டுமே ஈடுபட வேண்டும், அதற்கான அரசியலில் ஈடுபட வேண்டாம் என்பதாகும். இதற்கும் பொருளாதாரத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. “பொருளாதாரவாதம்” என்பது அரசியலற்ற பொருளாதாரத்திற்கான போராட்டமாகும் இதனைத்தான் லெனின் எதிர்க்கிறார்.

பொருளாதாரத்தை அடித்தளம் என்று கூறுவதை லெனின் மறுக்கக்கூடியவரல்ல, “..மனிதனின் சமூக அறிவு எனப்படுவது (அதாவது தத்துவம், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும் போதனைகளும்) சமூகத்தின் பொருளாதார அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித்தளத்தின் மீது நிறுவப்பட்ட மேற்கட்டுமானமாகும்” (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்). மார்க்சைத் தொடர்ந்து வருகிற மார்க்சியவாதிகளான எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ போன்றோர்கள் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டு அதன்படி செயற்பட்டனர்.

ஆனால் தோழர் பொருளாதார அமைப்பை அதாவது புறநிலைமை தான் தீர்மானிக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளாததால், பொருளாதார நிலைமைகளை, அதுவும் அதன் எளிய அலகுகளை மார்க்ஸ் உசுப்பிவிட்டு அவற்றைச் செயல்பட வைக்கிறார் என்றொல்லாம் எழுதுகிறார். “அரசியல் பொருளாதாரத்தின் மிக எளிய அலகுகளை அடையாளப்படுத்தும் மார்க்ஸ், அவற்றினுள் அமிழ்ந்து கிடக்கும் முரண்களை உசுப்பி விட்டு அவற்றைச் செயல்படச் செய்வதன் மூலம் அரசியல் பொருளாதாரத்தை இயங்க வைக்கிறார்.” என்று புறநிலையின் மீது மார்க்சின் தலையீடாக விளக்கப்படுத்துகிறார்.

புறநிலைமை மனிதர்களைச் சாராது இருக்கிறது, அதாவது மனிதனது சிந்தனையைச் சாராதிருக்கிறது என்றே மார்க்ஸ் கூறியிருக்கிறார். அதன் மீதே மனிதன் தனது செயற்பாட்டை அமைத்துக்கொள்கிறான். முதலாளியையே மூலதனத்தின் ஆளுருவம் என்றே மார்க்ஸ் கூறுகிறார், “முதலாளி மூலதனத்தின் ஆளுருவம் என்ற விதத்தில் அல்லாமல் வேறு எவ்விதத்திலும் வரலாற்று வழியில் மதிப்பில்லாதவர், வரலாற்று வழியில் நிலவுவதற்கு உரிமையில்லாதவர்….” (மூலதனம் தொகுதி 2 பக்கம்- 794-795).

பொருளாதார அமைப்பைவிட மேற்கட்டமைப்பு “பிரம்மாண்டம்” என்பதே தோழரின் கருத்து. அதனால் பொருளாதாரத்தை எளிய, சிறிய அலகாகக் கூறிவிட்டு மேற்கட்டமைப்பான அரசியல், கலாச்சாரம் ஆகியவற்றைப் பிரும்மாண்டமானதாகக் காட்டுகிறார். “சின்னஞ்சிறு பொருளாதார அலகுகளில் கண்டறியப்பட்ட முரண்கள் சமூகம், அரசியல், கலாச்சாரம், அறம், இயற்கைச் சூழல் ஆகியனவற்றைப் பற்றிப் பிடித்துப் பிரும்மாண்டமான முரண்களாக வளருகின்றன.” பொருளாதார அமைப்பான அடித்தளம் என்பதைச் சிறிய அலகாகக் காட்டவே முயற்சிக்கிறார்.

ஏழாம் தொடரில், அறிவு பற்றிய கொள்கையை விவரிக்கிறார். இதில் தோழர் அறிவுக்கும், அறிவாளிக்கும் தனித்த பாத்திரத்தைக் கொடுக்கிறார், அறிவு வளர்ச்சிக்கான புறநிலைமைகளைத் தோழர் ஏற்காததால் அறிவாளியை முக்கியப் பாத்திரமாக்குகிறார். இந்தப் போக்கு எட்டாம் தொடரில் மார்க்ஸ்: இயங்கும் பொருள் என்பதில் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். அகம் புறமாக மாறுகிறது, புறம் அகமாக மாறுகிறது என்று மார்க்சியத்தைத் தலைகீழாக விளக்குகிறார். புறநிலைமைகளே மனிதனின் செயற்பாட்டைத் தீர்மானிக்கிறது என்பதை ஏற்காமல், “மனிதர்களும் புற உலகும் சந்தித்துப் பொருத்திக் கொள்ளும் செயல்பாட்டில், மனிதர்களின் தேவைகளும் திறன்களும் புற உலகினுள் செலுத்தப்படுகின்றன. இதுவே அகம் புறமாதல். அதுபோலப் புற உலகின் வாய்ப்புகளும் பண்புகளும் மனிதர்களால் அறியப்பட்டு, உணரப்பட்டு அவை அவர்களின் திட்டமிடுதல்களோடு சேர்க்கப்படுகின்றன.” என்கிறார்.

மனிதர்களின் தேவை என்பது புறநிலையால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதற்கு மாறாக, தேவையை மனிதனின் அகநிலைப் போக்காகவே தோழர் கருதுகிறார். அடித்தளம் மேற்கட்டமைப்பு ஆகியவற்றின் இடைச்செயலில் அடித்தளம் தீர்மானகரமாகவும், நிர்ணயகரமாகவும் இருக்கிறது, மேற்கட்டமைபின் செயற்பாடு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது.

அடித்தளம் மேற்கட்டமைப்புக்கு இடையேயான செயற்பாடு பரஸ்பர வினைபுரிதல் என்ற புரிதல் பொருள்முதல்வாதத்தையும் கருத்துமுதல்வாததையும் மறுத்த கருத்துமுதல்வாதமே ஆகும். எப்படி என்றால் அடித்தளம் தீர்மானிக்கிறது என்றால் அது பொருள்முதல்வாதம், மேற்கட்டமைப்புத் தீர்மானிக்கிறது என்றால் கருத்துமுதல்வாதம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்டது என்ற ஒன்று கிடையாது, அப்படிச் செய்கிற முயற்சி கருத்துமுதல்வாதத்திற்கே இட்டுச் செல்லும். பரஸ்பர வினைபுரிதல் என்பது கருத்துமுதல்வாதமேயாகும்.

“மனிதர்கள் தங்களுடைய வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் தங்கள் விருப்பத்திற்கேற்ப அதை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை, தாங்களே தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்றபடி இல்லாமல் கடந்த காலத்திலிருந்து கைமாற்றிக் கொடுக்கப்பட்ட, தயாராயுள்ள சூழ்நிலைமைகளுக்கு, தாங்கள் நேரடியாகச் சந்திக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்பவே வரலாற்றை உருவாக்குகிறார்கள்.”  
(லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்)

என்று தான் மார்க்ஸ் கூறியுள்ளார். புறநிலையின் எல்லையில் இருந்தே மனிதர்கள் செயற்படுகின்றனர் என்பதற்கு மாறாக, மனிதனின் திறத்தாலும் தேவையாலும் தீர்மானிக்கப்படுவதாகத் தோழர் கருதுகிறர். மனிதனின் தேவை புறநிலையினால் நிர்ணயிக்கப்படுகிறது. அவசியத்தை அறிந்தவனே சுதந்திர மனிதனாகிறான் என்றால் புறநிலைமைகளே அவசியமானது அதனை அறிந்தவன் சுதந்திர மனிதன்.

மனிதனின் குறிக்கோள்கள் பொருளாதார நிலைமைகளான புறநிலையில் இருந்து வருவதை ஸ்டாலின் விளக்கியிருக்கிறார்.

“பொருளாதார நிலைமைகள் முதலில் மாற்றமடைந்து, அதற்கு ஏற்றதான மாற்றம் மனித மூளைகளின் பின்னர் நடந்தேறுகிறது. அப்படியனால், குறிப்பிட்ட இலட்சியம் மக்களிடையே தோன்றுவதற்கான அடிப்படையை அவர்களுடைய மனங்களிலோ, அவர்களுடைய கற்பனைகளிலோ தேடக்கூடாது, ஆனால் இதற்கு மாறாக, மனிதர்களின் பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சிகளில்தான் காண வேண்டும். எந்த இலட்சியம் பொருளாதாரச் சூழ்நிலைகள் பற்றிய ஆய்வை அடிப்டையாகக் கொண்டிருக்கிறதோ, அந்த இலட்சியம் தான் சிறப்பானதும் ஏற்கக்கூடியதுமாகும். எந்த இலட்சியங்கள் பொருளாதாரச் சூழ்நிலைகளை அலட்சியம் செய்து, அவற்றை அடிப்படையாகக் கொள்ளாதவையோ, அவை பயனற்றவையும் ஏற்கத்தகாதவையும் ஆகும்.”
(அராஜகவாதமா? சோஷலிசமா?)

மார்க்சியவாதியின் குறிக்கோள்கள் ஏற்கத்தக்கவையாக இருப்பதற்கு அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் விஞ்ஞானத் தன்மையே காரணமாகும். புறநிலைமைகளை அலட்சியப்படுத்துகிற போக்கை மார்க்சியர்கள் பயனற்றவையாகவும் ஏற்கத்தகாதவையாகவும் கருதுகின்றனர்.

மார்க்சின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன அவற்றில் முதன்மையானது இருண்டு என்று எங்கெல்ஸ் கூறுகிறார்.

“வரலாறு பற்றிய பொருள்முதல்வாத கருத்தோட்டம், உபரிமதிப்பு மூலம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் ரகசியம் புலப்படுத்தப்படல் ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாகச் சோஷலிசம் ஒரு விஞ்ஞானமாயிற்று.”
(கற்பனாவத சோஷலிசமூம் விஞ்ஞானச் சோஷலிசமும்)

தோழர் ந.முத்துமோகன் இந்த இருகண்டுபிடிப்புகளில் உபரிமதிப்பை அப்படியே ஏற்றுக் கொள்கிறார், வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறார். கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் மறுக்கிறார், மறுப்பதால் அதனைத் தமக்கு ஏற்றால் போல் திரித்து விவரிக்கிறார்.

மார்க்ஸ் வழிவந்த கம்யூனிஸ்டுகள், மார்க்சின் மாபெரும் இரு கண்டுபிடிப்புகளைப் போற்றுவோம் அதனைப் பின்பற்றுவோம்


Tuesday, 10 December 2019

புதிய பாதையினரின் வர்க்க சார்பற்றப் பார்வை


புதிய பாதையினர் தங்களது ஆவணமாகக் கருதிக் கொண்டிருக்கின்றதை மனப்பாடம் செய்து அப்படி முகநூலில் கக்கிக் கொண்டிருக்கின்றனர். அதன் மீதான விமர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லை. அனைத்தும் மாறும் என்ற மார்க்சிய  கருத்தைத் தவிர மார்க்சிய அடிப்படைகளை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மார்க்சிய உள்ளடக்கததைப் புரிந்து கொள்ளாமல், உள்ளடக்கத்தால் அவ்வப்போது எடுத்த முடிவுகளை மார்க்சியமாகக் கருதிக் கொண்டு பேசி வருகின்றனர்.

மார்க்சின் கண்டபிடிப்புகளில் இரண்டை முக்கியமாக எங்கெல்ஸ் கருதுவார், அவற்றில் ஒன்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

“வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டம்,  உபரி மதிப்பு மூலம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் இரகசியம் வெளிப்படுத்தப்படல் ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாக சோஷலிசம் ஒரு விஞ்ஞானமாயிற்று, இனி அடுத்தபடிச் செய்ய வேண்டியிருந்த பணி அதன் எல்லா விவரங்களையும் உறவுகளையும் வகுத்தமைத்திடுவதுதான்”
(கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்)

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் சுருக்கமாகக் கூறியதை பார்ப்போம்.

“மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங் களிலிருந்து தனித்து நிற்பவையாகும். அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டடம் எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. 

மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை; அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது. வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதி லிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறி விடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.”

(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு- முன்னுரை)

 

இங்கே மார்க்ஸ் குறிப்பிடுகிற புரட்சிகரக் கண்ணோட்டத்தைப் புதிய பாதையினர் கைவிட்டனர். //பழைய சுதந்திர போட்டி முதலாளித்துவம், சில முக்கியமான பெருந்தொழில்களில் ஏகபோக முதலாளித்துவமாக மாறியது. அதன் மூலம், தற்காலிகமாக தங்களது தீவிர நெருக்கடிகளை தவிர்த்து, பிரஞ்சுப் புரட்சி போன்ற புரட்சிகள் எழாமல் தடுத்தது.// என்று புதிய பதையினர் மார்க்சிய வழிப்பட்ட புரட்சிக்கு இனிமேல் வழியில்லை என்ற முடிவுக்கு வருகின்றனர்.

சுதந்திர போட்டி முதலாளித்துவம் ஏகாதிபத்திய காலத்தில் முடிவுக்கு வந்தவுடன் மார்க்சியம் கூறுகிற பொருளாதார நெருக்கடி வராது என்பதே புதிய பாதையினரின் கருத்து. ஆனால் ஏகாதிபத்திய காலத்தில் இரண்டு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. ஒன்று 1910களில் மற்றொன்று 1930களில். இதை எல்லாம் புதிய பாதையினர் கணக்கில் கொள்ளவில்லை. லெனின் காலத்தில் கூறிய பழைய தவறான கூற்றையே புதிய பாதையனிர் இன்றும் கூறிவருக்கின்றனர். அதாவது சுதந்திரப் போட்டி முதலாளித்துவத்தோடு மார்க்சியம் கூறுகிற பொருளாதார நெருக்கடி முடிந்துவிட்டது. ஏகபோக முதலாளித்துவமான ஏகாதிபத்தியத்தில் நெருக்கடி வராது என்பதே புதிய பாதையினரின் கருத்து. இது புதிய கருத்தல்ல, லெனின் காலத்திலேயே கூறப்பட்ட பழைய கருத்து. அது லெனினால் மறுக்கப்பட்ட ஒன்று.

புதிய பாதையினர் சொல்வதை எதையும் படிக்க மாட்டார்கள், என்னோடு விவாதிக்க வேண்டும் என்றால் எனது கருத்துக்களை அவர்கள் தெரிந்திருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச புரிதல்கூட அவர்களிடம் இல்லை. எதைகூறினாலும் அதை வியாபாரமாகவே பார்க்கின்றனர். இது பற்றி எனது நூலில் எழுதியுள்ளேன் என்றால் உங்கள் நூலை விற்கப் பார்க்கிறீர்களா? என்ற கேள்வியே அவர்களிடம் இருந்து வருகிறது. எதையும் அறிந்து விமர்சிக்க அவர்கள் தயாராக இல்லை என்பதே உண்மை.

“லெனின் வாழ்வும் படைப்பும்” என்ற நூலில் இது பற்றி எழுதியிருக்கிறேன். அதில் இருக்கும் பகுதியை அப்படியே இங்கே பதிகிறேன்.

“ஏகபோகத்திற்கு முன்பு, ஏராளமான தனியுடைமையாளர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பிரிந்து காணப்பட்ட சுதந்திர சரக்கு உற்பத்தியாளர்களுக்கு இடையே போட்டி நிலவியது. சமூகத்தில் ஒரு சரக்கின் தேவையினை கணக்கிட முடியாமல் இருந்தனர். பொதுவான சந்தையின் தேவையை முன்வைத்து தொடர்பற்ற பல்வேறு தனித்தனி உற்பத்தியாளர்கள் சரக்கினை உற்பத்தி செய்தனர். அதனால் உற்பத்தியில் அராஜகம் காணப்பட்டது.

இந்தத் தடையில்லா முதலாளித்துவம் தவிர்க்க முடியாதவகையில் உற்பத்தியின் ஒன்றுகுவிப்பை நோக்கியும், இந்த ஒன்றுகுவிப்பு ஒரு குறிப்பிட்டக் கட்டத்தில் ஏகபோகத்திற்கும் இட்டுச் செல்கிறது. இதனை மார்க்ஸ் தமது மூலதன நூலில் தெரிவித்துள்ளார்.

“..முதலாளித்துவ பொருளுற்பத்தியின் வளர்ச்சியைத் தொடர்ந்து, ஒவ்வொரு தனிப்பட்ட உற்பத்தி நிகழ்முறையின் அளவீதமும் அத்துடன், முன்னீடு செய்ய வேண்டிய மூலதனத்தின் குறைந்தபட்ச அளவும் பெருகிச் செல்வதால், தொழில்துறை முதலாளி புரியும் பணியை தனியாகவோ கூட்டாகவோ செயல்படக் கூடிய பெரும்பெரும் பண முதலாளிகளின் ஏகபோகமாக மேலும் மேலும் மாறிச்செல்கிற ஏனைய நிலைமைகளோடு இதுவும் சேர்ந்து கொள்கிறது”18

இதனைப் புரிந்து கொள்ள முடியாத, அல்லது படித்தறியாத பல பேர்கள், தடையற்ற போட்டிக் காலத்து முதலாளித்துவத்தைப் பற்றி பேசிய மார்க்சின் பொருளாதாரம் பொய்த்துவிட்டது என்று கூக்குரல் எழுப்புகின்றனர். இதனை லெனின் மறுத்துரைக்கிறார்.

“அரைநூற்றாண்டுக்கு முன்னர், மார்க்ஸ் மூலதனத்தை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது, தடையற்ற போட்டி “இயற்கை விதியாக” மிகப் பெரும்பாலான பொருளிலாளர்களுக்குத் தோன்றியது. தடையற்ற போட்டி உற்பத்தியின் ஒன்று குவிப்பைத் தோற்றுவிக்கிறது என்றும், இந்த ஒன்றுகுவிப்பு அதன் வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஏகபோகத்திற்கு இட்டுச்செல்கிறது என்றும், முதலாளித்துவத்தைப் பற்றிய தத்துவார்த்த, வரலாற்றுப் பகுத்தாய்வின் வாயிலாக நிரூபித்த மார்க்சின் நூலை, அதிகாரப்பூர்வமான விஞ்ஞானமானது கவனியாது மௌனம் சாதிக்கும் சதியின் மூலம் அழித்துவிட முயற்சி செய்தது. இன்று ஏகபோகம் நடைமுறை உண்மை ஆகிவிட்டது”19

தடையற்ற போட்டி தவிர்க்கப்பட்டு திட்டமிட்ட உற்பத்தி ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டதால், பாட்டாளி வர்க்க சோஷலிசப் புரட்சிக் கோட்பாடு தவறாகிப்போய்விட்டதாக பெர்ன்ஷ்டைன் போன்றோர்கள் கூறத் தொடங்கினர். தடையற்ற போட்டி முதலாளித்துவம் மறைந்து போனது, திட்டமிடல் உற்பத்தி முறையான ஏகாதிபத்தியம் தோன்றியது என்று லெனின் கூறியது உண்மை தான். ஆனால் இது முதலாளித்துவ முரண்பாடுகளை நீக்கிவிட்டதாக அவர் கூறவில்லை.  லெனின் தெளிவாக ஏகாதிபத்திய பொருளாதார உறவின் சிக்கலை நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

“முதலாளித்துவமானது அதன் ஏகபோகக் கட்டத்தில், உற்பத்தியானது மிக விரிவான அளவில் சமூகமயமாக்கப்படுவதற்கு இட்டுச் செல்கிறது, முதலாளிகளை, அவர்களது விருப்பத்துக்கும் உணர்வுக்கும் மாறாக, ஒரு வகைப் புதிய சமூக முறையினுள், அறவே தடையில்லாப் போட்டியிலிருந்து முற்றும் சமூகமயமாக்கப்படுதலுக்கு மாறிச்செல்வதற்கான இடைநிலையாகிய ஒன்றினுள் இழுத்துச் செல்கிறது எனலாம்.

உற்பத்தியானது சமூகமயமாகிறது, ஆனால் சுவீகரிப்பு தொடர்ந்து தனியார் வசமே உள்ளது. சமூக உற்பத்திச் சாதனங்கள் தொடர்ந்து ஒரு சிலரது தனிச் சொத்தாகவே இருக்கின்றன. சம்பிரதாய முறையில் அங்கீகரிக்கப்படும் தடையில்லாப் போட்டியின் பொதுவான கட்டமைப்பு நீடிக்கிறது, அதே போது ஏகபோகக்காரர்கள் ஒருசிலர் ஏனைய மக்கள் தொகையோரின் மீது செலுத்தும் ஒடுக்குமுறை ஆதிக்கம் நூறு மடங்கு மேலும் கடுமையானதாய், அழுத்துவதாய சகிக்க முடியாததாய் ஆகிறது.”20

இது முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத, தீர்க்க முடியாத சிக்கலாகும். எந்த காணரங்கள் சோஷலிசப் புரட்சிக்கு இட்டுச்செல்லும் என்று மார்க்ஸ் கூறினாரோ அதே காரணங்கள் ஏகாதிபத்தியத்தில் தீவிரமடைந்துள்ளது.

சொந்த நாட்டில் போட்டி போட்டுக் கொண்டிருந்த முதலாளித்துவம் ஏகபோகமாக வளர்ச்சி பெற்ற காலத்தில், அது சர்வதேச அளவில் தமது போட்டியை தொடர்கிறது. இந்தப் போராட்டம் பொருளாதாரப் போராட்டத்துடன் நிறுத்திக் கொள்வதில்லை.
      
“பொருளாதார வழியில் இந்த நிகழ்ச்சிப்போக்கின் மிக முக்கிய அம்சம், தடையில்லா முதலாளித்துவப் போட்டி அகற்றப்பட்டு அதனிடத்தில் முதலாளித்துவ ஏகபோகம் எழுந்ததுதான். தடையில்லாப் போட்டிதான், முதலாளித்துவத்துக்கும் பொதுவாகப் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்திக்கும் உரிய அடிப்படை இயல்பு, ஏகபோகம் தடையில்லாப் போட்டிக்கு நேர் எதிரானதாகும். ஆனால் தடையில்லாப் போட்டி நம் கண்முன்னால் ஏகபோகமாக மாறக் கண்டோம், பெருவீதத் தொழில் துறையைத் தோற்றுவித்துச் சிறு தொழிலை நெரித்து வெளியேற்றவும், பெருவீதத் தொழில் துறையின் இடத்தில் மேலும் பெரியதான பெருவீதத் தொழில் துறை அமரவும் கண்டோம்.

இவ்விதம் உற்பத்தியின், மூலதனத்தின் ஒன்று குவிப்பு அந்த அளவுக்கு அதிகமாக்கப்பட்டு அதிலிருந்து ஏகபோகம் வளர்ந்தெழுந்துள்ளது, தொடர்ந்து வளர்ந்தெழுந்து வருகிறது, கார்ட்டல்களும் சிண்டிக்கேட்டுகளும் டிரஸ்டுகளும் இவற்றுடன் ஒன்றுகலந்துவிடும் பத்துப் பதினைந்து வங்கிகளின், நூறு கோடிக் கணக்கிலான தொகைகளைத் தம் பிடியில் கொண்டு காரியமாற்றும் வங்கிகளின் மூலதனமுமாகிய ஏகபோகமாகும் இது. தடையில்லாப் போட்டியிலிருந்து வளர்ந்தெழுந்த இந்த ஏகபோகங்கள் அதேபோது போட்டியை அகற்றிவிடவில்லை, போட்டிக்கு மேலும் அதனுடன் கூடவும் நிலவுகின்றன, இவ்வழியில் மிகுந்த கடுமையும் உக்கிரமும் வாய்ந்த மிகப் பல முரண்பாடுகளையும் பூசல்களையும் மோதல்களையும் தோற்றுவிக்கின்றன.”21

பெர்ன்ஷ்டைன் போன்ற திருத்தல்வாதிகள் முதலாளித்துவம் ஏகபோகமாக வளர்ச்சியடைந்துள்ளதால், பழைய முதலாளித்துவத்தின் சில முரண்பாடுகள் நீக்கப்பட்டுவிட்டன, மீதமிருப்பவையும் தீவிரமானதாக இல்லை, அதனால் சமூக மாற்றம் என்பது தேவையற்றது முதலாளித்துவத்துக்குள்ளேயே சீர்திருத்தம் போதுமானது என்று கூறினர்.

லெனின் இதனை முற்றாக மறுக்கிறார். ஏகபோகத்தில் முரண்முற்றவே செய்கிறது.

“இது முதலாளித்துவ ஏகபோகமாகும், அதாவது முதலாளித்துவத்தில் இருந்து தோன்றி, முதலாளித்துவத்துக்கும் பரிவர்த்தனைச் சரக்கு உற்பத்திக்கும் போட்டிக்குமான பொதுவான சூழலில், இந்தப் பொதுச் சூழலுக்கு நிரந்தரமான, தீர்வுகாண முடியாத முரண்பாடான ஒன்றாய் நிலவும் ஏகபோகமாகும். ஆனபோதிலும், எல்லாவிதமான ஏகபோகத்தையும் போலவே இதுவும் தவிர்க்க முடியாதபடித் தேக்கத்துக்கும் அழுகலுக்குமான போக்கை உண்டாக்குகிறது.
…
மெய்தான், முதலாளித்துவத்தில் ஏகபோகத்தால் முழுமையாகவும் மிகநெடுங் காலத்துக்கும் போட்டியினை உலகச் சந்தையிலிருந்து நீக்கிவிட முடியாதுதான்”22

ஏகபோகங்களாகச் செயற்படும் இந்த ஏகாதிபத்தியங்கள் தங்களுக்குள் பிரதேச பங்கீட்டுக்கு போரினை தோற்றுவிக்கின்றன. இதில் தான் இன்றைய போரின் பொருளாதார அடித்தளம் அமைந்துள்ளது.

“ஒரு புறத்தில் உற்பத்திச் சத்திகள் வளர்ச்சிக்கும் மூலதனத்திரட்டலுக்கும், மறு புறத்தில் நிதி மூலதனத்திற்காகக் காலனிகள், “செல்வாக்கு மண்டலங்களின்” பங்கீட்டுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வைச் சரிசெய்வதற்கு போரைத் தவிர முதலாளித்துவத்தில் வேறு வழி ஏதும் உண்டா? என்பதே கேள்வி.”23

ஏகாதிபத்தியக் காலத்தில் உடல் உழைப்பு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியின் காரணமாய் உடலுழைப்பு அல்லாத தொழில்நுட்பம் பயின்ற மூளை உழைப்பாளர்கள் பெருகிவருகின்றனர். இதன்மூலம் மார்க்சியம் கூறிவருகிற தொழிலாளர்களின் புரட்சி இன்றைக்கு சாத்தியம் இல்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.

மார்க்சிய அடிப்படைகளை எளிமைப்படுத்தி புரிந்து கொண்டதால் ஏற்பட்ட தவறான கருத்தே இது. மார்க்ஸ் உடலுழைப்புத் தொழிலாளர்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. அன்றைய புதிய நவீனஇயந்திரத்தை தொழிற்சாலையில் புகுத்தும்போது அந்த இயந்திரத்தை இயக்குகிற நேரடி உடலுழைப்புக் குறைந்த தொழில்நுட்ப தொழிலாளர்கள் தோன்றியதையும் அவர்கள் உடலுழைப்புத் தொழிலாளர்களிடம் இருந்து வேறுபட்டிருப்பதையும் கூறியிருக்கின்றார்.

மார்க்ஸ் தாம் எழுதிய மூலதன முதல் தொகுதியில் ஒப்பீட்டு உபரி-மதிப்பின் உற்பத்தி என்ற பகுதியில், இயந்திர சாதனமும் நவீனத் தொழில்துறையும் என்ற அத்தியாயத்தில் எழுதியிருக்கிறார். தொழிற்புரட்சியைத் தொடர்ந்து தானியங்கி தொழிற்சாலை (automatic factory) தோன்றிடும் போது தொழில்நுட்பத்தைக் கையாள்கிற புதியவகை உயரிய தொழிலாளர் பிரிவு (superior class of workmen) உருவாவதை மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.
“மேம்பட்ட தொழிலாளர் பிரிவு இது, இவர்களில் சிலர் விஞ்ஞானக் கல்வி கற்றவர்கள், மற்றவர்கள் ஒரு தொழிலுக்கு என்றே வளர்க்கப்பட்டவர்கள், இந்தப் பிரிவு ஆலைத் தொழிலாளர் வர்க்கத்துடன் சேர்த்துக் கணக்கிடப்பட்டாலும், அதிலிருந்து வேறுபட்டதாகும். இந்த உழைப்புப் பிரிவினை முற்றிலும் தொழில்நுட்ப வழிப்பட்டது.
…
தொழிலாளியைக் குழந்தைப் பருவம் முதற்கொண்டே நுணுக்க இயந்திரம் ஒன்றின் பகுதியாக மாற்றியமைத்திடும் விதத்தில் இயந்திர சாதனம் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. இவ்விதம், அவரது மறுவுற்பத்தியின் செலவுகள் கணிசமாகக் குறைக்கப்படுவது மட்டுமல்ல, வேறு வழியின்றி தொழிற்சாலை முழுவதையும், அதாவது முதலாளிகளையும் அவர் சார்ந்து வாழ வேண்டிய நிலை அதே நேரத்தில் முழுமையாக்கப் படுகிறது.

வேறெங்கும் போலவே இங்கும் சமூக உற்பத்தி நிகழ்முறையினது மேம்பாட்டின் விளைவாய் அதிகரித்த உற்பத்தித் திறனுக்கும், அம்மேம்பாட்டை முதலாளி பயன்படுத்திச் சுரண்டுவதன் விளைவாய் அதிகரித்த உற்பத்தித் திறனுக்கும் இடையில் நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

கைத்தொழில்களிலும், பட்டறைத் தொழிலிலும் தொழிலாளி கருவியைப் பயன்படுத்துகிறார், தொழிற்சாலையில் இயந்திரம் அவரைப் பயன்படுத்துகிறது. அங்கே உழைப்புக் கருவியின் இயக்கங்கள் அவரிடம் இருந்து தொடங்குகிறது, இங்கே இயந்திரத்தின் இயக்கங்களை அவர் பின்தொடர வேண்டும்.

பட்டறைத் தொழிலில் தொழிலாளர்கள் உயிருள்ள இயங்கமைப்பின் அங்கங்களாவர். தொழிற்சாலையில் உயிரற்ற இயங்கமைப்பு தொழிலாளியைச் சாராமல் சுயேச்சையாய் இருப்பதையும், அதற்குத் தொழிலாளி உயிருள்ள ஒட்டுவால் ஆகிவிடுவதையும் காண்கிறோம்.”24

இயந்திரத்தின் ஒட்டுவாலாய் போன தொழில்நுட்ப தொழிலாளர்களின் வேதனைகளையும் இங்கே மார்க்ஸ் தொகுத்துள்ளார். ஆக, தமது உற்பத்திச் சக்தியை விற்கக்கூடிய நிலையில், முதலாளியின் மூலதனத்தை சார்ந்து வாழக்கூடிய சுரண்டப்படும் இந்த தொழிற்நுட்ப தொழிலாளியும் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. இதன் தொடர்ச்சியாக தற்கால நவீன உற்பத்தி முறைக்கு வரும் போது இன்றைய பாட்டாளி தனிச் தேர்ச்சிபெற்ற, அதற்கு சான்றிதழ் பெற்ற, மூளை உழைப்பைச் செலுத்தும் தொழிலாளியாக இருக்கிறார்.

தற்காலத்திய தொழிற்சாலைகள் அதிநவீனமாக மாறிவிட்டது, இங்கே முழுவதும் தானியங்கி இயந்திரங்களையும், கணிப்பொறி இயந்திர மனிதனைக் (computer robot) கொண்டும் இயக்கப்படுகிறது. இதனை இயக்குகின்ற தொழில்நுட்ப தொழிலாளர்கள் தங்களது உடலைவிட மூளையை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதே போல் மூளை உழைப்பை செலுத்துகின்ற தகவல் தொழில்நுட்ப துறையில் பணிசெய்பவர்களில் பலபிரிவுகள் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே ஆவர். உடலுழைப்பைவிட மூளை உழைப்பைச் செலுத்துபவர்களுக்கு இன்றைய நிலையில் அதிகம் ஊதியம் கிடைக்கிறது என்பது உண்மையே. இவர்களிடம் இருந்துதான் மேட்டுக்குடி பாட்டாளிகள் தோன்றுகின்றனர்.

மேட்டுக்குடி பாட்டாளிகளின் மேட்டுக்குடி சிந்தனைகள் எல்லாம் முதலாளித்துவத்தின் செழுமைக் காலத்தில் மட்டும் தான் காணப்படும், தொடர்ந்து வரக்கூடிய பொருளாதார நெருக்கடியால் இவர்களும் நெருக்குதலுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் தங்களது பழைய வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாது என அறிந்திடும்போது இவர்களின் மேட்டுக்குடி சிந்தனை தவிடுபொடியாகிவிடும்.

 “…தொழிலாளி வர்க்கத்தில் அதிக ஊதியம் பெறுவோரைக் கூட – இவ்வர்க்கத்தின் மேட்டுக்குடியினைரையும் கூட- தொழில்துறைக் கொந்தளிப்புகள் எப்படிப் பாதிக்கின்றன”25 என்று மேட்டுக்குடி தொழிலாளர்களும் பொருளாதார நெருக்கடியின் போது அவர்கள் எப்படியெல்லாம் பாதித்தனர் என்பதினைப் பற்றிய செய்தியேடுகளில் வந்துள்ள அறிக்கையை மார்க்ஸ் நமக்கு எடுத்துக் காட்டுகிறார். முதலாளித்துவ செழுமையின் போது கிடைக்கின்ற அதிக ஊதியம், பொருளாதார நெருக்கடியின் போது உறுதியற்று போகிறது. செய்திடும் வேலையும் உறுதியற்றது என்பதை உணர்ந்திட்ட மேட்டுக்குடி பாட்டாளிகள் மார்க்சியத்தின் பக்கம் இருப்பர். வரலாறு அறியாத நேர்காட்சி கண்ணோட்டம் கொண்டவர்கள் நெருக்கடியின் போதே மார்க்சியத்தை நாடுவர்.

இந்த மேட்டுக்குடியினரை தனிப் பிரிவான அடுக்காக கொள்ளமுடியாது, தொழிலாளி வர்க்கத்தினுடைய இயக்க வளர்ச்சியில் மாறிச்செல்வதையேக் குறிப்பதாகும் என்கிறார் லெனின்.

“நடுநிலைவாதிகளிடையில், சட்ட முறைமையின் நச்சு நோயால் அரிக்கப்பட்டுப் போனவர்களும், நாடாளுமன்றச் சூழலால் கெடுக்கப்பட்டவர்களுமான வழக்கமான பக்தர்களும், சொகுசான பதவிகளுக்கும் வசதியான வேலைகளுக்கும் பழக்கமாகி விட்ட அதிகார வர்க்கத்தாரும் உள்ளனர். வரலாற்று முறையிலும், பொருளாதார முறையிலும் பார்த்தால் அவர்கள் தனிப் பிரிவான ஓர் அடுக்கு அல்ல, ஆனால் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பழைய கட்டத்தில் இருந்து ஒரு மாறிச் செல்லுதலை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்” 26

பாட்டாளிகளும், பாட்டாளிகளை வழிநடத்தும் கம்யூனிஸ்டுகளும் சமூகப் போராளியாக செயற்பட வேண்டுமானால், நிலவும் சமூகத்தின் பிரச்சினைகளை வரலாற்று முறையில் ஆய்ந்து, அதற்கான முடிவை எடுக்க வேண்டும். இதற்கு மார்க்சியத்தில் காணப்படும் அரசியல் பொருளாதாரம், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அப்போதுதான் தமது அரசியல் செயற்பாட்டை விஞ்ஞான அடிப்படையில் அமைத்துக் கொள்ள முடியும்.

 லெனின் இந்த ஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் என்ற நூலில், அன்றைய போரின் அரசியலையும், முதலாளித்துவம் ஏகபோகமாக வளர்ச்சிபெற்று ஏகாதிபத்தியமாக நிலைபெற்றுள்ளதையும், இந்த புதிய நிலைமைகளுக்கு ஏற்ப கம்யூனிஸ்ட் கட்சி தங்களது செயற்தந்திரத்தை அமைத்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்தி எழுதியுள்ளார்.

உற்பத்தியில் தடையில்லாப் போட்டியே முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு அடிப்படையாய் இருந்தது, இன்று ஏகபோகம் தடையில்லாப் போட்டிக்கு நேர் எதிராக மாறிவிட்டது. இந்த ஏகபோகப் போக்கு ஏகாதிபத்தியமாக இன்று நிலைபெற்றுள்ளது.
:
“பொதுவாக முதலாளித்துவத்தின் அடிப்படைத் தன்மைக் குறிப்புகளின் வளர்ச்சியாகவும், நேரடியான தொடர்ச்சியாகவும் ஏகாதிபத்தியம் எழுந்தது. ஆனால் முதலாளித்துவம் அதன் வளர்ச்சியில் திட்டவட்டமான, மிக உயர்ந்த ஒரு கட்டத்தில்தான் முதலாளித்துவ ஏகாதிபத்தியமாக மாறியது, இக்கட்டத்தில்தான் முதலாளித்துவத்தின் சில அடிப்படைத் தன்மைக் குறிப்புகள் அவற்றின் நேர் எதிரானவையாக மாற ஆரம்பித்தன, முதலாளித்துவத்தில் இருந்து மேலானதொரு சமூக-பொருளாதார அமைப்புக்கு மாறிச்செல்வதற்கான காலத்தினுடைய இயல்புகள் உருப்பெற்று எழுந்து எல்லாத் துறைகளிலும் தம்மை வெளிக்காட்டிக் கொண்டன.
…
ஏகாதிபத்தியத்தைப் பற்றி இயன்ற அளவுக்கு சுருக்கமான இலக்கணம் அளிக்க வேண்டுமாயின், முதலாளித்துவத்தின் ஏகபோகக் கட்டமே ஏகாதிபத்தியம் என்று கூற வேண்டும்.”27

       முதலாளித்துவம் ஏகாதிபத்தியக் கட்டத்தை எட்டியதற்கான இலக்கணமாக ஐந்தை கூறுகிறார் லெனின்:-
“… ஏகாதிபத்தியத்தின் பின்வரும் ஐந்து அடிப்படை இயல்புகளும் உள்ளடங்குமாறு அதற்கு இலக்கணம் கூறியாக வேண்டும்: 1) பொருளாதாரம் வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றும் ஏகபோகங்களைத் தோற்றுவிக்கும்படியான உயர்ந்த கட்டத்துக்கு உற்பத்தியின், மூலதனத்தின் ஒன்றுகுவிப்பு வளர்ந்துவிடுதல், 2) வங்கி மூலதனம் தொழில்துறை மூலதனத்துடன் ஒன்றுகலத்தலும், இந்த “நிதி மூலதனத்தின்” அடிப்படையில் நிதியாதிக்கக் கும்பல் உருவாதல், 3) சரக்கு ஏற்றுமதியிலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டியதாகிய மூலதன ஏற்றுமதி தனி முக்கியத்துவம் பெறுதல், 4) சர்வதேச ஏகபோக முதலாளித்துவக் கூட்டுகள் உருவாகி, உலகையே இவை தமக்கிடையே பங்கிட்டுக்கொள்ளுதல், 5) மிகப் பெரிய முதலாளித்துவ அரசுகளிடையே அனைத்து உலகப் பரப்பும் பங்கிடப்படுதல் நிறைவுறுகிறது.

முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் எந்தக் கட்டத்தில் ஏகபோகங்கள், நிதிமூலதனம் ஆகியவற்றின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுகிறதோ, மூலதன ஏற்றுமதி முனைப்பான முக்கியத்துவம் பெற்றுவிட்டதோ, சர்வதேச டிரஸ்டுகளுக்கு இடையில் உலகம் பங்கிடப்படுவது தொடங்கியுள்ளதோ, உலகின் நிலப்பரப்பு அனைத்தும் மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளுக்கு இடையே பங்கிடப்படுவது நிறைவு பெற்றுவிட்டதோ, அக்கட்டத்திலான முதலாளித்துவமே ஏகாதிபத்தியம்.” 28

ஏகாதிபத்தியத்தின் அடுத்த நடவடிக்கையாக, பிற ஏகாதிபத்தியம் கைப்பற்றிய பிரதேசங்களை கைப்பற்றுவதாகும் அதாவது மறுபங்கீடு செய்வதாகும். இது வெறும் பிரதேசங்களை பிடிப்பதாக மட்டும் இல்லாது பிற ஏகாதிபத்தியத்தின் மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கும் ஆகும். மேலும், அதிக எண்ணிக்கையில் சிறிய அல்லது பலவீனமான தேசங்களைச் சுரண்டுகிற ஏகாதிபத்தியத்தை புல்லுருவித்தனமானதாகவும், அழுகிவரும் நிலையினதாவும் நிர்ணயிக்க வேண்டிவருவதாக, லெனின் கூறுகிறார்.

“ஏகபோகங்கள், ஆதிக்கக் கும்பல், சுதந்திரத்திற்காக அல்லாமல் ஆதிக்கத்துக்கான முயற்சிகள், ஒருசில மிகுந்த செல்வந்த அல்லது மிகுந்த வலிமையான தேசங்கள் மேன்மேலும் அதிக எண்ணிக்கையிலான சிறிய அல்லது பலவீனமான தேசங்களைச் சுரண்டுதல்- இவை எல்லாம், ஏகாதிபத்தியத்தின் தனிப்பட்ட தன்மைக் குறிப்பான இயல்புகளை- புல்லுருவித்தனமான அல்லது அழுகிவரும் முதலாளித்துவமாக ஏகாதிபத்தியத்துக்கு இலக்கணம் கூறும்படி நம்மை நிர்பந்திக்கும் அந்த இயல்புகளை- தோற்றுவித்திருக்கின்றன.” 29

உற்பத்திச் சக்திகள் சமூகமயமாகிவிட்ட நிலையில் இந்த புல்லுருவித்தனமான ஏகாதிபத்தியம் அழுகிவிழ வேண்டியநிலையில் இருக்கிறது என்று புரட்சிக்கான புறநிலை காணப்படுவதாக லெனின் இந்நூலில் கூறியிருக்கிறார். ஆனால் அகநிலையாக உலக கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பப் போக்கினாலும் அதன் புரட்சிகரப் போர்குணம் தேசியவெறியாக மாறிப் போனதாலும் இந்த செயற்கைத் தன்மையால் ஏகாதிபத்தியம் தூக்கியெறியப்படுவது தாமதம் ஆகலாம். சமூகப் புரட்சிக்கான புறநிலையாக அடித்தளம் வளர்ச்சி பெற்றிருந்தாலும், மேற்கட்டமைப்பின் சந்தப்பவாதப் போக்கினால் புரட்சிகர வாய்ப்பு தவறிப் போகலாம். இருந்தாலும் இறுதியில் ஏகாதிபத்தியம் தூக்கியெறியப்படுவது உறுதி என்கிறார் லெனின்.

“…உற்பத்தியின் சமூகமயமாதலையே காண்கிறோம் என்பதும், உள்ளடக்கத்துக்கு இனி ஒவ்வாத மேலோடாய் தனியார் பொருளாதார உறவுகளுக்கு, தனியார் சொத்துறவுகளும் அமைந்திருக்கின்றன, இந்த மேலோடு அகற்றப்படுவது செயற்கையான முறையில் தாமதப்படுத்தப்படுமாயின் தவிர்க்க முடியாத முறையில் இந்த மேலோடு அழுகியே செல்லும், அழுகிய நிலையில் ஓரளவு நீண்ட காலத்துக்கு இந்த மேலோடு இருந்து வரலாம் (படுமோசமான நிலைமையே ஏற்பட்டு, சந்தர்ப்பவாதச் சீழ்க்கட்டி நீக்கப்பட நீண்ட காலமாகிவிடுமாயின்) என்ற போதிலும் தவிர்க்க முடியாதபடி இம்மேலோடு எப்படியும் அகற்றப்பட்டு விடும் என்பதும் தெளிவாகவே விளங்குகிறது.” 30

ஏகாதிபத்தியக் காலக்கட்டத்தின் புறநிலைமைகளையும் அகநிலைமைகளையும் கணக்கில் கொண்டு லெனின் மார்க்சியப் புரட்சிகர போதனையை விரிவுபடுத்தினார். சோஷலிசப் புரட்சிக்குத் தேவையான பொருளாயத சக்தியான புறநிலைமைகள் பக்குவப்பட்டிருக்கின்றன. மூலதனத்தின் தொடர் ஒடுக்குமுறையால் பாட்டாளி வர்க்கமும் ஒன்று திரண்டு காணப்படுகிறது. காலனிய நாடுகளின் விடுதலைப் போராட்டமும் தீவிரம் கண்டுள்ளது. வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகளில் சோஷலிசப் புரட்சிக்கான சூழல் தோன்றியிருந்தது, இந்தச் சூழ்நிலையை புரட்சியாக மாற்ற வேண்டிய அகநிலைச் சக்திகள் செயலில் இறங்க வேண்டும். ஆனால் போல்ஷிவிக்குகளின் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர மேலைநாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் தாய்நாட்டின் விடுதலை என்று சந்தர்ப்வாதமாக சுரண்டும் வர்க்கத்தோடு சேர்ந்துகொண்டன. இந்நிலையில் லெனின் புரட்சி பற்றிய மார்க்சியக் கோட்பாட்டை புறநிலைக்கு ஏற்ப மாற்றினார்.

வளர்ச்சி பெற்ற அனைத்து நாடுகளில் அல்லது பெரும்பான்மையான நாடுகளில் சோஷலிசப் புரட்சி ஏற்படும் என்று இதுவரை மார்க்சியவாதிகள் கருதிவந்தனர். லெனினும் இதே கருத்தையே கொண்டிருந்தார். வளர்ச்சியடைந்த நாடுகளில் முதலாளித்துவத்தின் முதிர்ச்சி இந்த முடிவை எடுக்க வைத்தது என்பது உண்மையே. ஆனால் இன்றைய நிலையில் ஏகாதிபத்தியமாக சீரற்ற வளர்ச்சியின் விளைவாக ஏகாதிபத்தியத்தின் சங்கிலித் தொடரில் பலவீனமான கண்ணியில் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று லெனின் முடிவெடுத்தார். அதாவது ஒரு தனிநாட்டில் புரட்சி ஏற்படுத்தி அதன் வெற்றியின் தொடர்ச்சியாக பிறநாடுகளில் புரட்சி வெடிக்கும் என்று விளக்கினார்.”
(லெனின் வாழ்வும் படைப்பும்- அ.கா.ஈஸ்வரன்)

ஏகாதிபத்திய காலகட்டத்திற்கான புரட்சியைப் பற்றிய லெனினது செயற்தந்திரத்தைப் (tactics) புரிந்து கொள்ள முடியாமல், பெர்ன்ஷ்டைன் போன்ற திருத்தல்வாதிகளின் கருத்தையே பின்பற்றுகின்றனர். “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற மார்க்சின் கோட்பாட்டைக் கைவிட்டதனால் அவர்களால் மார்க்சிய வழியில் அல்லாமல் திருத்தல்வாதிகளின் வழியில் செல்கின்றனர். இதற்கு “புதிய பாதை” என்று பெயர் வைத்துள்ளனர். உண்மையில் இது பழைய திருத்தல்வாதிகளின் பழைய பாதையே.

புதிய பாதையினரின் கருத்து அனைத்திற்குப் பதிலளிப்பதைவிடக் குறிப்பிட்ட ஒன்று பதிலளித்தாலே போதும். அது அனைத்திற்கு அடிப்படையாக அமையும் என்பதானால் ஒன்றை மட்டும் இங்கு விமர்சிக்கிறேன்.

புதிய பாதையினர்:- “இத்தகைய புதிய சமூகப் பொருளாதார அரசியல் சூழலில், மக்களே, மக்களின் மூலதனத்தின் மூலம், முதலாளிகளின்றி, மக்களுக்கான உற்பத்தி சாதனங்களை, மக்களின் கார்பரேட்கள் மூலம் உருவாக்கி வளர்ப்பது எனும், முதலாளித்துவ கார்பரேட்டுகளுக்கு எதிரான பொருளாதாரப் போராட்டம் தான், இன்றைய உண்மையான வர்க்கப் போராட்டம் என்று எங்கல்சே வந்துக் கூறினாலும் இவர்கள் உடனே ஏற்க மாட்டார்கள்.”

உடனடி பதிலாக ஏற்கெனவே கொடுத்துள்ளேன், அதனை முதலில் பார்ப்போம்.

//எங்கெல்ஸ் இயக்கவியல் பொருள்முதல்வாதி, அவர் இப்போது வந்து கூறினாலும் தமது கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டார். இறுதிகாலங்களில் எழுதிய கடிதங்களைப் படித்தால் அவர் எவ்வளவு உறுதியான இயக்கவியல் பொருள்முதல்வாதி என்பது தெரியும்.

வர்க்கப்போராட்டத்தைப் புறக்கணித்துவிட்டு முதலாளித்துவக் கார்பரேட்டுகளுக்கு எதிராக மக்கள் கார்பரேட்டை அமைக்க வேண்டும் என்று புதிய பாதையினர் கூறுகின்றனர். அரசு, காவல், ராணுவ, நீதித்துறை போன்ற பலம்பொருந்திய மேற்கட்டமைப்புகள் முதலாளித்துவக் கார்பரேட்டுகளின் தேவைக்கு உருவானவை, முதலாளித்துவ கார்ரேட்டுகளின் பக்கத்தில் மக்கள் கார்ரேட்டை அமைப்பதை அது சும்மா பார்த்துக் கொண்டிருக்குமா? இந்தப் பொருளாதாரப் போராட்டம் சாதிப்பதற்கு வாய்ப்பில்லை, மார்க்சிய வழியிலான வர்க்கப் போராட்டமே சரியானது. ஏன் என்றால் இது முதலாளித்துவ உற்பத்தியின் உள்முரண்பாட்டின் வெளிப்பாடு ஆகும்.

புறநிலைத் தன்மைகளை ஒதுக்கிவிட்டு அகநிலைத் தன்மையோடு பேசுகிற, மக்களின் கார்பரேட்கள் என்கிற இந்தப் புதிய பாதையினரின் பார்வை கற்பனைவயமானது அகநிலையானது, மார்க்சியத்திற்குப் புறம்பானது. இன்றைய ஏற்றத்தாழ்வான வர்க்க நிலையில் மார்க்சின் மார்க்சியமே வழிகாட்டி ஆகும். அதுவே விஞ்ஞானத் தன்மையானது.  விஞ்ஞான வழியே வெற்றி கிட்டும் பாதையாகும்.//

முதலாளித்துவக் கார்பரேட்டுகளுக்குத் தேவைப்படுகிற மேற்கட்டமைப்பான, சட்டங்கள், காவல்துறை, நீதி மன்றங்கள், அரசு போன்றவை இருக்கின்றன. இதற்குப் போட்டியாக “மக்கள் கார்பரேட்கள்” நடத்த புதிய பாதையினர் அழைப்பு விடுக்கின்றனர். முதலாளித்துவக் கார்பரேட்டுகள் தங்களுக்குள் உள்ள போட்டியை கையாள்வது போல் தங்களுக்கு எதிரான மக்கள் கார்ப்ரேட்டுகளை அணுக மாட்டார்கள், முதலாளித்துவக் கார்பரேட்டுகளுக்கு ஆதரவாக இருக்கின்ற மேற்கட்டமைப்புகளான அரசு, சட்டம், காவல்துறை போன்றவற்றால் மக்கள் கார்ப்ரேட்டை ஒடுக்குவர்கள். வர்க்கப் பார்வை உள்ள அனைவருக்கும் இது தெரிந்த ஒன்று. ஆனால் இந்தப் புதிய பாதையினர் இதனை அறிந்து கொள்ள முடியாமல் பொருளாதாரப் போராட்டத்தை முன்வைக்கின்றனர். அணுவாயுத காலத்தை முன்வைத்து வர்க்கப் போராட்டத்தை மறுதலிக்கின்றனர்.

முதலாளித்துவக் கார்பரேட்டுகளுக்கும் மக்கள் கார்பரேட்டுகளுக்கும் இடையே நடைபெறும் போட்டியில் மக்கள் கார்பரேட்டுகள் வெற்றி பெறுகிற ஒரு சூழ்நிலை வந்தால் அப்போது அணுவாயுதத்தை அவர்கள் கையாள மாட்டார்களா? என்ற கேள்வி புதிய பாதையினருக்கு எழவேயில்லை. இதற்குக் காரணம் புதிய பாதையினரின் வர்க்க சார்பற்றப் பார்வையே காரணமாகும்.

புதிய பாதையினரின் பொருளாதார நெருக்கடியை மறுதலிக்கின்ற போக்கு, லெனின் காலத்திய மிகவும் பழைய பார்வையே (பாதையே) ஆகும். “மார்க்சியமும் திருத்தல்வாதமும்” என்ற நூலில் இது பற்றி லெனின் எழுதியுள்ளார்.

“அரசியல் பொருளாதாரத்துக்கு வருவோமாயின் இத்துறையில் திருத்தல்வாதிகளுடைய "திருத்தங்கள்" மேலும் அதிக விரிவாகவும் நுட்ப விவரங்கள் வழிப்பட்டனவாயும் இருந்ததை முதற்கண் குறிப்பிடுதல் வேண்டும். "பொருளாதார வளர்ச்சி பற்றிய புதிய விவரங்களைக்" கொண்டு பொதுமக்களை வயப்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டன. பெருவீத உற்பத்தி குவிவதும் சிறுவீத உற்பத்தியை அது அகற்றிடுவதும் தொழில் துறையிலும் மிகவும் மெதுவாகவே நடைபெறுகின்றன என்றும் கூறப்பட்டது. நெருக்கடிகள் இப்பொழுது அரிதாகியதோடு பலம் குறைந்துவிட்டதாகவும், இவற்றை அறவே நீக்கிவிடும் ஆற்றலைக் கார்ட்டல்களும் டிரஸ்டுகளும் மூலதனத்துக்கு அளித்திடுமென எதிர்பார்க்கலாம் என்பதாகவும் கூறப்பட்டது. முதலாளித்துவம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் "தகர்வு பற்றிய தத்துவம்", வர்க்கப் பகைமைகள் மேலும் மேலும் கடுமை குறைந்து தணிந்துவிடும் போக்கின் காரணத்தால் ஆதரமற்றதாகுமெனக் கூறப்பட்டது.
…
நெருக்கடிகள் கடந்த காலத்துக்குரியனவாகி விடவில்லை, செழிப்பைப் பின்தொடர்ந்து நெருக்கடி வருகிறது என்பதை யதார்த்த நிலைமைகள் மிக விரைவாகவே திருத்தல்வாதிகளுக்குத் தெளிவுபடுத்தின, குறிப்பிட்ட நெருக்கடிகளின் வடிவங்களும் வரிசைமுறையும் சித்திரமும் மாறினவேயன்றி நெருக்கடிகள் முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாய்த்தான் நிலைத்திருந்தன. கார்ட்டல்களும் டிரஸ்டுகளும் உற்பத்தியை ஒன்றுபடுத்திய அதேநேரத்தில் எல்லோருக்கும் கண்கூடாய்த் தெரியும்படியான முறையில் உற்பத்தியின் அராஜகத்தையும் பாட்டாளி வர்க்கத்தினுடைய வாழ்க்கைக் காப்புறுதியின்மையையும் மூலதனத்தின் ஒடுக்குமுறையையும் தீவிரப்படுத்தி இதன் மூலம் வர்க்கப் பகைமைகளை முன்பின் கண்டிராத அளவுக்குக் கடுமையாக்கின. முதலாளித்துவமானது அழிவை நோக்கி-தனிப்பட்ட அரசியல், பொருளாதார நெருக்கடிகளைக் குறிக்கும் பொருளிலும் முதலாளித்துவ அமைப்பு அனைத்தின் முழு அழிவைக் குறிக்கும் பொருளிலும் - விரைந்தோடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பாய் இதே புதிய பகாசுர டிரஸ்டுகளின் மூலம் மிகமிகத் துல்லியமாகவும் மிக மிகப் பெரிய அளவிலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

அண்மையில் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியும் ஐரோப்பா பூராவிலும் பயங்கரமாய் அதிகரித்திருக்கும் வேலையில்லாத் திண்டாட்டமும்-எக்கணமும் மூண்டுவிடும் நிலையிலுள்ள தொழில் துறை நெருக்கடியைப் பற்றிக் கூறவே வேண்டாம், பல அறிகுறிகள் இதனைச் சுட்டிக்காட்டு கின்றன -திருத்தல்வாதிகளுடைய அண்மைக் காலத்திய "தத்துவங்கள்'' திருத்தல்வாதிகளிடையேகூட பலரும் அடங்கலாய் எல்லோராலும் மறக்கப்பட்டுவிடும் நிலையை உண்டாக்கியுள்ளன. ஆனால் அறிவுஜீவிகளின் இந்த நிலையின்மை தொழிலாளி வர்க்கத்துக்கு அளித்துள்ள படிப்பினைகள் ஒருபோதும் மறக்கப்படலாகாது.”

லெனினைப் போல் மாறுங்கட்டங்களை மார்க்சிய வழியில் அணுகமுடியாத புதிய பாதையினர். பெர்ன்ஷ்டைன் போன்ற திருத்தல்வாதிகளின் பாதையான பழைய பாதையையே பின்பற்றுகின்றனர். புதிய பாதையினரின் இந்த முடிவு வர்க்க சார்பற்ற பார்வையின் விளைவே ஆகும். புதிய பாதையினர் அணுகுண்டு பூச்சாண்டியைக் காட்டி வர்க்கப் பார்வையை மறைக்கின்றனர். மார்க்சியப் புரிதலற்றப் போக்கால், //ஏகாதிபத்தியங்கள் சமரசம் செய்து கொண்டு, சோசலிசத்தின் திட்டமிட்ட உற்பத்தி முறையை உள்வாங்கி, ஏகாதிபத்திய யுத்தங்களை தவிர்த்து புதிய பேராதிக்கங்களாக மாற முடியும் என்பது மார்க்சீய மூலவர்கள் யாரும் எதிர்பாராதது*6.// என்று கதைவிடுகின்றனர்.

சோசலிச திட்டமிட்ட உற்பத்தி முறைக்குத் தேவையான உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியைக் கணக்கில் கொள்ளாது சோசலிசத்தின் திட்டமிட்ட உற்பத்தி முறையை ஏகாதிபத்தியங்கள் உள்வாங்கிக் கொண்டதாகக் கருத்துரைக்கின்றனர்.

வர்க்க மற்ற பார்வையினால் பொருள்முதல்வாதக் கண்ணோட்டதைக் கைவிட்டு கருத்திலாகக் கருத்துமுதல்வாதப் பார்வையினால் முடிவுகளை எடுத்துள்ளனர். சோஷலிசத்திற்கான உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிய அடைதுள்ளது என்றால், சமூக உற்பத்திக்கும் தனிச்சொத்துடையிலான வினியோகத்திற்கும் உள்ள முரண்பாடு முற்றும் என்ற பொருளாதாரப் புரிதலற்று, புதிய பாதையினர் கருத்தியலாகவே கருத்துரைக்கின்றனர். மார்க்சியப் பொருளாதாரப் புரிதலற்றும், வர்க்க சார்பற்றும் பேசிகின்ற புதிய பாதையினரின் போக்கு தொழிலாளர் வர்க்கத்திற்கு எந்த வகையிலும் துணைபுரியாது. வர்க்கப் போராட்டத்தைப் புறக்கணித்த புதிய பாதையினரின் பொருளாதாரப் போராட்டம் நடைமுறை சாத்தியமற்றது.

எங்கெல்லாம் மார்க்சிய அடிப்படைகளுக்கு முதன்மை இடம் கொடுக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் புதிய பாதையினர், சாத்தியமற்ற தங்களது கருத்தை திணிக்கப் பார்க்கின்றனர். அவர்களின் அடிப்படை நோக்கம் மார்க்சிய அடிப்படைகளைச் சிதைப்பதே ஆகும்.

புதிய பாதையினர் போன்ற பல திருத்தல்வாதிகளின் போக்கை மறுதலித்து நடைமுறையில் மார்க்சியம் வெற்றியை சாதிக்கும். உழைக்கும் மக்களின் விடுதலை மார்க்ஸ், லெனின் ஆகியோர் கூறிய வழியிலே சென்றால் தான் கிட்டும். புதிய பாதையனிரைப் போல் மார்க்சையும் லெனினையும் கைவிடுவதால் கிடைக்காது.