Wednesday, 1 May 2013

பகுத்தறிவுவாதமும் மதமும்


பகுத்தறிவுவாதம்  என்பது மிகவும் பழைய சிந்தனை மரபாகும். கிரேக்கச் சிந்தனையின் தொடக்கமே பகுத்தறிவுவாதமாக இருந்தது. சாக்ரடீஸ் வரலாறு கண்ட முதல் பகுத்தறிவாளர். கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் சாக்ரடீஸ் கிரேக்கத்தில் எதையும் ஏன், எதற்கு எனக் கேட்டு விடைகாண வேண்டும் என்று பகுத்தறிவாதச் சிந்தனையைத் தொடங்கினார்.

ஏதாவது ஒரு பிரச்சனையைப் பற்றி மக்களிடம் சாக்ரடீஸ் கேள்வியை எழுப்புவார். அவர்களின் பதிலிருந்தே கேள்விகளைக் தொடுத்து அந்தப் பிரச்சனையினை அவர்களே அறிந்துகொள்ளும்படி செய்திடுவார். இதனால் இளைஞர்களை சமூகத்திற்கு எதிராகத் தூண்டிவிடுவதாகவும், கிரேக்கத்தில் நடைமுறையில் இருந்த பழைய மதநம்பிக்கைகளை எதிர்ப்பதாகவும் சாக்ரடீஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. தீர்ப்பில் விஷம் கொடுத்து சாக்ரடீஸ் கொல்லப்பட்டார்.

பண்டைய இந்திய சமூகம் சடங்காச்சாரங்களிலும், மூடநம்பிக்கைகளிலும் மூழ்கியிருந்த போது மகாவீரரும், புத்தரும் இதனை எதிர்த்துப் பகுத்தறிவுவாதத்தை சிந்தனையில் புகுத்தி புரட்சி செய்தனர்.

ஆனால் மாகாவீரருடைய சிந்தனை அநேகாந்த வாதமாக இருந்தது. அதாவது உண்மை அறிய ஒரு வழிமுறை போதாது அல்லது சரியாக இருக்காது என்று கருதினார். இதனை விளக்குவதற்கு சமணர்கள் அதிகம் பயன்படுத்தும் உதாரணம் கண்பார்வையற்ற அறுவர் யானையினைத் தடவிப் பார்த்துச் சொன்னவற்றைக் கொண்டு தமது அநேகாந்தவாதத்தை நிறுவுவர்.   யானை தூண் போன்றது.   யானை முறம் போன்றது  எனப் பலவாறு கூறுவது முழு உண்மையல்ல என்றாலும் ஓரளவு உண்மை என்றே ஏற்கவேண்டும் என்பது சமணரது அறிவுத்தோற்றம் பற்றிய கருத்தாகும். எதைப்பற்றி அறிய முற்பட்டாலும், அங்ஙனமிருக்கலாம் என்றே கூறுவர். இதனை சமணம் சியாத்வாதம் என்றழைக்கிறது. அதனை ஏழு பகுதிக்குள் அடக்குவர்.

1.ஆம்
2.இல்லை
3.ஆம் இல்லை
4.சொல்லொண்ணாதது
5.ஆம் மற்றும் சொல்லொண்ணாதது
6.இல்லை மற்றும் சொல்லொண்ணாதது
7.ஆம், இல்லை, சொல்லொண்ணாதது

சியாத்வாதம் என்ற இந்தப் பகுத்தறிவு பகுதியறிவேயன்றி, முற்றறிவு அல்ல. எந்த முடிவிலும் முழு உண்மை இருக்க முடியாது பகுதியளவே உண்மையாகும் என்று பன்மைவாதம் பேசுகிறது சமணம்.

இந்தப் பகுத்தறிவைக் கொண்டு கடவுள் இருப்பை சமணர் மறுக்கின்றனர். இவ்வுலகம் படைக்கப்பட்டதில்லை, என்றும் இருந்துவருவதாகும் என்பதே சமணர்களது கருத்து. இவ்வுலகைப் படைக்கக் கடவுள் தேவையெனில், அவரைப் படைக்க மற்றொரு கடவுள் தேவை, அவரைப் படைக்க வேறொரு கடவுள் என்று தொடக்கத்தை காண முடியா நிலையேற்படும். படைக்கப்படாத கடவுள் உண்டென்பதைவிட, இவ்வுலகை படைக்கப்படாதது, என்றும் உள்ளது என்ற முடிவே சிறப்பாக இருக்க முடியும் என்பது சமணர்களது கடவுள் மறுப்புச் சிந்தனையாகும்.

புத்தர் அப்பாலைவாதக் கேள்விகளுக்கு விடையளிப்பதில் நேரம் செலவிடாது, இவ்வுலகில் காணும் துன்பங்களுக்குக் காரணம் எது என்பதையும் அதற்கான விடிவையும் தேடினார்.

புத்தர் கூறியதை ராகுல்ஜீ பவுத்த தத்துவவியல் என்ற நூலில் கூறுகிறார்:-
உங்கள் சந்தேகம் சரியானதுதான். சந்தேகத்தின் இடத்தில்தான் சந்தேகம் பிறந்திருக்கிறது. வேதங்கள் சொன்னவை என்பதற்காகவோ, யாரோ ஒருவர் சொன்னார் என்பதற்காகவோ எதையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். தர்க்கத்தின் வலிமையினாலோ, ஏதோவொரு காரணத்தினாலோ சொன்னவரின் உருவத்தால் கவரப்பட்டோ, தனது சொந்தக் கருத்துக்கு அனுசரணையாக இருக்கிறது என்பதற்காகவோ, சொன்னவர் தமது ஆசானாயிற்றே என்று எண்ணியோ எதையுமே ஒப்புக் கொள்ளாதீர்கள். நீங்கள் சுயமாகச் சிந்தித்து அவர்கள் கூறுபவை நல்லவை, குறைகளற்றவை, அறிஞர்களால் மெச்சப்பட்டவை, அவற்றை ஏற்றுக் கொள்வதால் நலமும், மகிழ்ச்சியும் உண்டாகும் என்றால், அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளுங்கள.்                                                                                      
( பக்கம் 44)

புத்தரது இந்தச் சொற்பொழிவு பகுத்தறிவுக் கண்ணோட்டத்தை தெளிவுபடுத்துவதாக இருக்கிறது. வேதம் சொல்கிறது என்பதற்காகவோ, முன்வைக்கப்படும் கருத்து தர்க்கத்தின் வலிமை மட்டும் பெற்றிருந்தாலோ, சொன்னவரின் உருவத்தின் கவர்ச்சியினாலோ, சொன்னவர் தமது ஆசானாயிற்றே என்ற எண்ணத்தாலோ ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்றுரைக்கிறார் புத்தர்.

அப்பாலைத் தத்துவத்தை புத்தர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை  தீக நிகாயம்  என்ற நூலில் புத்தர் வாசிட்டனோடு உரையாடுவதில்  அறிந்து கொள்ள முடிகிறது.

பிரம்மநிலையை அடைந்தவரை கண்ணாரக் காணாமல்இதுவரை யாரும் பிரம்மத்தை அடைந்ததாக உறுதிப்படுத்த முடியாத நிலையில், பிரம்மத்தை அடைவதற்கான வழிமட்டும் தெரியும் என்று கூறும் போக்கை கேள்விக்குள்ளாக்குகிறார் புத்தர்.

வேதங்களின் தொடர்ச்சியாக தோன்றிய பூர்வ மிமாம்சை என்ற போக்கு, கடவுள் மறுப்பில் உறுதியாக நிற்கிறது. மிமாம்சை என்பதின் சொற்பொருள், முறையாக விசாரித்தல் என்பதாகும். ஆனால் முறையாக விசாரித்தல் என்றவுடன் வேதத்தில் கூறப்பட்டவை சரியானதா அல்லது தவறானதா என்ற வகையில் இந்த விசாரணை செல்லவில்லை. வேதத்தில் கூறப்பட்ட விதிமுறைக்கு ஏற்ப நடத்தப்படுகிறதா  இல்லையா என்பதையே ஆராய்கிறது. இந்த ஆராய்வு முறையின் அடிப்படையில்தான் கடவுள் மறுப்பை வெளிப்படுத்துகிறது.

இந்திய மதங்கள் உண்மையை அறிய மூன்று பிரமாணங்களைப் பொதுவாகப் பயன்படுத்துவண்டு. பிரத்தியட்சம், அனுமானம,் ஆப்தவாக்கியம். இந்த மூன்றைக் கொண்டும் கடவுள் உண்மையை அறிந்திட முடியவில்லை என்பதே பூர்வ மிமாம்சகர்களின் வாதமாகும்.

கடவுள் உண்டு என்பதைப் பிரத்யச்சமாக காட்டுவது முடியாத ஒன்று. பிரத்யட்சமே அனுமானத்திற்கு அடிப்படை. பிரத்தியட்சத்தில் காண முடியாதது அனுமானத்திலும் உணர முடியாது. எப்படி என்றால் அனுமானம் என்பது முன்பு பிரத்யட்சமாகப் பார்த்ததின் அடிப்படையில் உணர்வதாகும். அதாவது பக்கத்து மலையில் புகை வருகிறது என்றால் அங்கு நெருப்பு எரிகிறது என்று அனுமானிக்க முடிகிறது. இதனை முன்பு நெருப்பு எரிவதையும் அதனால் புகை வருவதையும் பிரத்தியட்சமாகக் கண்டதின் அடிப்படையிலே அனுமானிக்கப்படுகிறது. அதனால் பிரத்யட்சமாக காணமுடியாததை அனுமானத்தாலும் உணர முடியாது.

வேதக் கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு வேதத்தில்  கடவுளைப் பற்றி கூறப்பட்டுள்ளதால் அதுவே கடவுள் உண்மையை நிரூபிக்கிறது என்பர். ஆனால் மீமாம்சகர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. வேதத்திற்கு இந்தச் சிறப்பு எங்கிருந்து வந்தது என்பதற்கு, வேதக் கடவுள் நம்பிகையாளர்கள், வேதத்தை கடவுளே படைத்தார் என்கின்றனர். கடவுள் தாமே படைத்த ஒன்றில், தமது உண்மையை வெளிப்படுத்தினார் என்றால் இதனை எவ்வாறு  ஏற்க முடியும?் ஏற்பதென்பது விசித்திரமான முடிவாகத்தான் இருக்கிறது என்கின்றனர் மீமாம்சகர். இதனைத் தொடர்ந்து மீமாம்சகர்கள் எடுக்கும் முடிவு மற்றொரு விசித்திரமான போக்கை அடைகிறது. வேதம் என்றும் நிலைபெற்றுள்ளவையாகும், அதற்கு தோற்றம் என்பது கிடையாது அதனை யாரும் படைத்திடவும் இல்லை, எழுதிடவும் இல்லை, என்றென்றும் நிலைத்திருப்பதாகும். பகுத்தறிவால் கடவுள் உண்டென்பதை மறுதலித்த மீமாம்சையினரின் முடிவு இவ்வகையில் முடிகிறது.

இந்தியாவில் தொன்மையான சிந்தனை மரபில் உலகாயதமும் ஒன்றாகும். இதன் நேரடிப் படைப்புகள் கிடைக்கவில்லை. இவர்களது கருத்தை மறுத்துரைத்தவர்கள் தொகுத்தவற்றைக் கொண்டு, அன்றைய உலகாயதர்களின் கண்ணோட்டத்தை அறிந்திட முடிகிறது.

உலகாயதம், இந்திய தத்துவப்பிரிவில் நெடுங்காலமாக இருந்துவருகிறது. ஆத்மாவையையும், மறுவுலக வாழ்க்கையையும் மறுத்து, உலகம் என்பது உள்பொருள் என்று எடுத்துரைப்பதால் இத்தத்துவப்போக்கிற்கு உலகாயதம் என்று பெயர் பெற்றது.

உடல் உருவாவதற்கு முன்பும், உடல் அழிவடைந்ததின் பின்பும், அதாவது உடலுக்கு வேறாக உள்ள ஆத்மா என்பதை உலகாயதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.  பூதங்களின் சேர்க்கையின் போது உயிர் உண்டாகிறது. பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு இதில் இல்லாத சிவப்பு நிறம், இவற்றின் சேர்க்கையில் தோன்றுவது போல் பூதங்களின் சேர்க்கையால் உயிர் உண்டாயிற்று. இல்லா ஆத்மாவுக்கு மோட்சம், மேலுலகம் என்பதெல்லாம் மதவாதிகளின் பித்தலாட்டம் என்கின்றனர் உலகாயதர்.

இந்த உண்மைக்கு மாறாக, கண்ணுக்குப் புலனாகாத ஆத்மா உண்டு என்றும், முற்பிறவியில் செய்த வினைகளை நீக்கும் பொருட்டு இறைவன் இரக்கப்பட்டு உடலைக் கொடுத்தான் என்பதும் மதவாதிகளின் பிதற்றல்.  இந்த மயக்க மொழிகளுக்கு ஆளாக வேண்டாம் என்கின்றனர் உலகாயதர்கள்.

இறந்தவர்களுக்கு செய்யும் சிரார்த்தம் (திவசம்) மேலுலகில் உள்ளவர்களுக்கு சென்றடையும் என்றால், பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் தமது உணவுத் தேவைக்காக எதனையும் உடன் எடுத்துச் செல்லவேண்டாம், இவர்களின் ஊரிலிருந்தே அவ்வப்போது உணவை அனுப்பலாமே?

இதுபோன்று தமது கருத்தோட்டங்களை கேள்விகளின் அடிப்படையில் பகுத்தறிவின் வழியில் விளக்கினர் உலகாயதர்.

ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவம் தனது முதலடியினை வைத்திடும்போது, நிலப்பிரபுத்துவம் மத நம்பிக்கையில் பிணைந்தும் இணைந்தும் காணப்பட்டது. முதலாளித்துவத்திற்கு தேவைப்பட்ட விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு அன்றைய நிலப்பிரபுத்துவமும், மதமும் தடையாய் இருந்தன. அக்கால கட்டத்தில் பகுத்தறிவுவாதிகள் பலர் தோன்றினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர். ரெனே தெகார்தே (1596-1650). இவர் ஒன்றைப் பற்றி ஐயம் கொள்வதாலும், கேள்வி எழுப்புவதாலும் சரியான முடிவை எட்ட முடியும் என்று கூறினார். அனுபவத்தைக் கொண்டு எதையும் முடிவெடுக்கக் கூடாது. எடுக்கப்படும் முடிவு, அறிவு வழிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது அவரது கருத்தாகும்.

அனுபவத்தால் ஏற்படும் அறிவென்பது பொய்த்திட வாய்ப்பிருக்கிறது. ஆனால் சிந்தனையால்  ஏற்படும் அறிவானது ஏற்புடையதாக இருக்கிறது என்கிறார் தெகார்தே.

ஐயமே அறிவுக்கு வழி என்பதை வலியுறுத்துகிறவர், அனைத்தையும் சந்தேகித்து ஒதுக்கித் தள்ளுவது என்பது இவரது நோக்கமல்ல. ஐயம் என்னும் கருவியைக் கொண்டு தெளிவான உண்மையைக் கண்டறிய வேண்டும் என்பதே இவரது முடிபாகும்.

உண்மையை அறிவதற்குச் சிந்தனையே திறவுகோல்.  சில நேரங்களில் சிந்தனை தவறாயப்் போவதற்கான காரணத்தை தெகார்தே சுட்டிக்காட்டுகிறார். மனித மனதில் ஆயிரக்கணக்கான கருத்துகள் தோன்றுகின்றன. இந்தச் சிந்தனை முறையில் இரண்டு நிலைகள் செயற்படுகின்றன. ஓன்று அறிநிலை மற்றொன்று செயல்நிலை. இது உண்மை-பொய், நல்லது-தீயது, சரி-தவறு என்று வேறுபடுத்திப் பார்ப்பது அறிநிலை. அறிநிலையை மீறும்போது அல்லது கணக்கில் கொள்ளாதபோது தவறு ஏற்படுகிறது. அறிநிலையின் முடிபு எப்போதும் சரியான உண்மையாகவே இருக்கும்.

அறிதலைப் பற்றி தெகார்தேயின் கோட்பாடு கலப்பற்ற அறிவிலிருந்து தோன்றியது. அறிதலில் அனுபவத்திற்கு எந்தப் பங்கும் இல்லை என்பது ஐரோப்பியப் பகுத்தறிவுவாதிகளின் கருத்தாகும். அறிவு என்பது சிந்தனையினால் மட்டும் தோன்றுவதாக தெகார்தே கருதுகிறார்.

சிந்தனையின் தோற்றுவாய் அகநிலையில் இருப்பதாக இந்தப் பகுத்தறிவுவாதிகள் எண்ணிக்கொள்வதால்,   சிந்தனையில் தவறுகள் ஏற்படுவது ஏன் என்பதை அறிய முடியாமல் இருக்கின்றனர். சமூகத்தில் ஒருவருக்குச் சரி எனப்பட்டது மற்றவருக்கு ஏன் தவறு என்று தோன்றுகிறது. நல்லது என்று ஏற்றுக் கொண்டவை சிலருக்கு தீயதாகப் போனதற்கான காரணங்கள் என்ன என்பதற்கு விடை இந்த பகுத்தறிவுச் சிந்தனையில் கிடைக்காது. சிந்தனையின் முடிவு தவறாகப் போனதற்கு காரணம் அறிவுநிலையை மீறிச் செயற்படுவதே காரணம் என்று சுட்டுவதன்மூலம் கருத்து என்பதை அகநிலையானதாகவே இந்தப் பகுத்தறிவு காண்கிறது. சிந்தனையின் தோற்றத்திற்கான புறநிலைக் காரணங்களைப் பகுத்தறிவுவாதம் புரிந்து கொள்ளவில்லை.

No comments:

Post a Comment