இலங்கை தமிழர் விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு மார்க்ஸ், லெனின் வழியில் இல்லை என்ற ஜீனியர் விகடனின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதத்தில் தான் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி அவர்களின் பதில் அமைந்திருக்கிறது: -
உ.வாசுகி அவர்கள் சோஷலிச தேசக் கட்டத்தில் கூறப்பட்ட ஒன்றாக சுயநிர்ணய உரிமையை குறைத்து, தவறான தகவலை மக்கள் முன் வைத்துள்ளார்.
அயர்லாந்து தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாகவும், இங்கிலாந்து தொழிலாளி தங்களுடைய சமூக விடுதலைக்காகவும், அயர்லாந்தைச் சுதந்திரநாடாகச் செய்வதற்கு ஆதரவு கொடுப்பது தான், சர்வதேசிய தொழிலாளர் ஸ்தாபனத்தின் தலையாய கடமையாகும் என்கிறார் மார்க்ஸ். மார்க்சும் எங்கெல்சும் அயர்லாந்து தேசிய இனப்பிரச்சினையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தங்களது முடிவினை வைக்கவில்லை. அவர்கள் பல்வேறு நாடுகளின் தேசிய இனங்களின் பிரச்சினையை அறிந்தவர்களே.
இதன் அடிப்படையில் தான் லெனின்,
ஸ்டாலின் போன்ற கம்யூனிஸ்டுகளும்
அகிலத்தில் விவாதிக்கப்பட்டு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக பிரிந்து போவதுடன்
கூடிய சுயநிர்ண உரிமையை ஆதரித்தனர்.
லெனின் 1896ஆம் ஆண்டு லண்டன் சர்வதேசக்
காங்கிரசின் தீர்மானத்தை குறிப்பிடுவதை கீழே காணுங்கள்.
“இத்தீர்மானம் கூறவதாவது:- (1896 ஜீலை 27 முதல் ஆகஸ்ட் 1 வரை லண்டனில் நடந்த சோஷலிஸ்டுத் தொழிலாளர் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் சர்வதேசக் காங்கிரசின் முடிவுகளும் குறிப்பேடுகளும்)
“எல்லாத் தேசிய இனங்களுக்கும்
சுயநிர்ணயத்துக்கான முழு உரிமை உண்டு என்பதை, தான் ஆதரிப்பதாக இந்தக் காங்கிரஸ் அறிவிக்கிறது, ராணுவ, தேசிய இன இல்லது இதர வரம்பற்ற
அதிகாரத்தின் நுகத்தடியின் கீழ் துயருறும் எல்லா நாடுகளின் தொழிலாளர்களுக்கும் இது
தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது, சர்வதேச முதுலாளித்துவத்தை முறியடிப்பதற்காகவும், சர்வதேச சமூக-ஜனநாயகத்தின் (கம்யூனிசத்தின்) லட்சியங்களை அடைவதற்காகவும் ஒன்று
சேர்ந்து போராடுவதற்காக உலகம் முழுவதுமுள்ள வர்க்க உணர்வு கொண்ட (தமது வர்க்க நலன்களைப் புரிந்து
கொள்வோர்) தொழிலாளர்களின் அணிகளில் சேர
வருவமாறு அனைத்து நாடுகளின் தொழிலாளர்களையும் இக்காங்கிரஸ் அழைக்கிறது”
நாம் ஏற்கெனவே சுட்டிக்
காட்டியிருப்பது போல, நமது சந்தர்ப்பவாதிகளான
செம்கோவ்ஸ்கி, லீப்மன், யுர்க்கேவிச் ஆகியோருக்கு இந்தத் தீர்மானம் இருப்பதே
தெரியாது. ”
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை
உ.வாசுகி அவர்கள், ஏகாதிபத்திய இங்கிலாந்தின் நுகத்தடியில்
இருந்து அயர்லாந்து பிரிந்து போவது பற்றி மார்க்ஸ் குறிப்பிட்டதை இன்று அப்படியே நகல் எடுத்து பொருத்த முடியாது
என்கிறார். மார்க்ஸ் அயர்லாந்து பிரச்சினையை தேசிய
இனப்பிரச்சினையாகத் தெளிவாகவே புரிந்து நமக்கு விளக்கியிருக்கிறார். ஆனால் உ.வாசுகி அவர்கள் ஏகாதிபத்திய நுகத்தடியில்
இருந்து பிரிவது பற்றி பேசியிருப்பதாக கூறி பிரச்சினையை திசை திருப்புகிறார்.
அயர்லாந்து தேசிய இனப்பிரச்சினையை மார்க்ஸ் ஸ்தூலமான நிலைமைகளில் இருந்து
ஆராய்ந்தார், ஆனால் அதற்கான அணுகுமுறையை அதாவது மார்க்சிய
வழிப்பட்ட கண்ணோட்டத்தை பல்வேறு நாடுகளில் தோன்றிய தேசிய இனப் பிரச்சினைகளின் அடிப்படையில்
தான் உருவாக்கியிருக்கிறார்.
இதனை
குறிப்பிட்டு லெனின் எழுதுகிறார்:-
"அயர்லாந்துககுச் சாதகமான
மார்க்சின் பிரகடனங்களுக்குக் கடந்து செல்லுமுன் தேசிய இனப் பிரச்சினை பற்றிய
மார்க்ஸ் மற்றும் எங்கெல்சின் கண்ணோட்டம் பொதுவாகக் கறாராய் விமர்சன பூர்வமானது
என்பதையும், அவர்கள் அதன் ஒப்பீட்டு வரலாற்று முக்கியத்துவத்தை
மதிப்பிட்டு உணர்திருந்தார்கள் என்பதையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டும்." (இதனைத் தொடர்ந்து மார்க்சும்
எங்கெல்சும் பல்வேறு தேசிய இனப்பிரச்சினைப் பற்றி விவாதித்ததை லெனின்
தொகுத்தளித்துள்ளார்)
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை
லெனின்
கூறுகிறார்,
"எப்பொழுதும் நமக்கு
முன்னுதாரணமாகத் திகழ்பவர் மார்க்ஸ் தான்,
அவர் இங்கிலாந்தில்
பல பத்தாண்டுகள் வாழ்ந்து, பாதி ஆங்கிலேயராக மாறி, ஆங்கிலேயத் தொழிலாளர்களின் சோஷலிச இயக்கத்தின்
நலன்களுக்காக அயர்லாந்துக்குச் சுதந்திரமும் தேசிய விடுதலையும் கோரினார்."
மகாருஷ்யர்களின் தேசியஇனப்
பெருமிதம் பற்றி
லெனின் மார்க்ஸ் வழியில் செல்கிறார், மார்க்சிஸ்ட் கட்சி தேசிய இனப்பிரச்சினையில் மார்க்ஸ் லெனின் வழியில் தொடரவில்லை.
இனப்பிரச்சினை மேலோங்கிய நிலையில் அங்கு வர்க்கப் போராட்டம் நடத்துவதற்கு
தடையாக இருக்கின்ற தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். பிரிந்து போகும் சுதந்திரம் என்ற இடைநிலைக் காலத்துக்குப் பிறகுதான்
தேசிய இனங்களின் இரண்டரக் கலத்தல் சாத்தியமாகும் என்பதே மார்க்சிய வழி தீர்வாகும்.
இதனை லெனின் "தேசிய இன ஒடுக்குமுறை இருக்கும் நிலைமையில் தேசிய இன விடுதலைப் பணிகளைப் புறக்கணிப்பது சோஷலிஸ்டுக் கருத்துப்படி நிச்சயம் தவறாகும்" என்கிறார். (தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை)
லெனின்:-
“ஓர் அரசின் எல்லைகளுக்குள்
ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பலவந்தமாகப் பிடித்து நீடித்து
வைத்துக்கொண்டிருக்கப்படுவதற்கு எதிராகப் பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும், அதாவது சுயநிர்ணய உரிமைக்காகப் போராட வேண்டும். "தங்களது" தேசிய இனத்தினால் ஒடுக்கப்படும்
காலனிகளுக்கும் தேசிய இனங்களுக்கும் அரசியல் ரீதியில் பிரிந்து போகும் சுதந்திரம் தரப்பட
வேண்டும் என்று பாட்டாளிகள் கோர வேண்டும். இல்லாவிட்டால் பாட்டாளி வாக்கச்
சர்வதேசியவாதம் என்பது வெற்று வார்த்தை, ஒடுக்கப்படும் தேசிய இனத்தின்
தொழிலாளர்களுக்கும் ஒடுக்கும் தேசிய இனத்தின் தொழிலார்களுக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையோ
அல்லது வர்க்க ஒருமைப்பாடோ அப்பொழுது சாத்தியமில்லை,
...
எவ்வாறு ஒடுக்கப்படும்
வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற இடைநிலைக் காலத்திற்குப் பிறகுதான் வர்க்கங்களை
மனித சமுதாயம் ஒழிக்க முடியுமோ அதே போல,
ஒடுக்கப்படும் எல்லாத் தேசிய இனங்களுக்கும் முழுவிடுதலை என்ற - அதாவது, பிரிந்து போகும் சுதந்திரம் என்ற - இடைநிலைக் காலத்துக்குப் பிறகுதான் தேசிய இனங்கள் தவிர்க்க முடியாத வகையில் இரண்டறக் கலத்தல் என்ற நிலையை அடைய முடியும்.”
சோஷலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும்
உ.வாசுகி அவர்கள் "இலங்கை அரசு இன ஒடுக்குமுறையை மட்டுமல்ல, வர்க்க ஒடுக்கு முறையையும்
கட்டவிழ்த்திருக்கிறது"
என்று எதோ ஆராய்ச்சி
முடிவு போல் கூறுகிறார்.
இன ஒடுக்குதல் நிகழாத
முதலாளித்துவப் பகுதியைக் காட்ட முடியும், வர்க்க ஒடுக்குதல்
நிகழாத முதலாளித்துவ பகுதியை எங்கு தேடுவது. வர்க்க போராட்டத்தை முன்னிருத்தி இனப்
போராட்டத்தை தவிர்ப்பதற்கு எதேதோ பேசுகிறார்.
இலங்கைத் தமிழர்களின் இனப்
பிரச்சினை என்பது புலிகளின் அணுகுமுறையால் தோன்றியதாக கூறுகிறார், அதாவது இலங்கை இனப்பிரச்சினையை புலிகளின் சமாதான ஒத்துழைப்பின்மையால் தோன்றியதாகவே பார்க்கிறார். இனப்பிரச்சினைக்கான வரலாற்று சூழலை அவர் பரிசீலிக்கவே இல்லை. அதனால் யதார்த்த சூழல், இன்றைய மக்களின் விருப்பம் என்று பிரச்சினையை
நிகழ்காலக் கண்ணோட்டத்தில்லேயே முடிவெடுத்துள்ளார். பிரச்சினையினை வரலாற்றுப்பூர்வமாக
பார்க்காமல், சந்தர்ப்ப சூழ்நிலையினையே
முன்னிருத்தி, தொலை தூர திட்டமேதும் இன்றி, மார்க்சிய
அணுகுமுறையான சுயநிர்யண உரிமையை மறுக்கிறார். இன ஒடுக்குதல் நிகழ்கின்ற சூழ்நிலையில்
வர்க்கப் போராட்டம் நடத்துவதில் உள்ள சிக்கல் உ.வாசுகி அவர்களுக்கு புரியவில்லை.
இனப் பிரச்சினை என்பது முதலாளித்துவத்தின் திசை திருப்புகின்ற வேலை என்று உ.வாசுகி அவர்கள் கூறுகின்றார். இன ஒடுக்குதல் பாட்டாளி வர்க்க நலனுக்கு
தீங்குபயக்காமல்
கையாளுவதற்கே பிரிவுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை முன்வைத்தனர் மார்க்சிய
மூதலாசிரியர்கள்.
மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் தேசிய இனப்பிரச்சினை
மேலோங்கிய இடத்தில் வர்க்கப் போராட்டம் மழுங்கடிக்கப்படுகிறது அதனால் இனப்பிரச்சினையை
முதலில் தீர்க்க வேண்டும் என்கின்றனர்.
தேசிய இனப்பிரச்சினை
என்பது சமூக வளர்ச்சியில் பொருளாதார காரணங்களின் அடிப்படையில் உருவாவது. அதனால் தான் லெனின் இந்தப் பிரச்சினை என்பது மேற்கு ஐரோப்பா முழுவதற்கும்
மட்டுமல்லாது நாகரிக உலகம் முழுமைக்கும், முதலாளித்துவ காலப் பகுதியில்
தேசிய இன அரசு தோன்றுவது இயல்பானது என்று கூறியிருக்கிறார். (தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை)
தேசிய இனப் பிரச்சினைக்கான அடிப்படைப் பொருளாதாரக் காரணங்களையும் அதன் அரசியல்
போராட்டத்தையும் கணக்கில் கொள்ளாமல்,
இனப் பிரச்சினையை அரசின் திசைதிருப்பும் வேலையாக குறைத்து மதிப்பிட்டுள்ளார் உ.வாசுகி அவர்கள்.
சுயநிர்ணய உரிமையை தவறு என்று மறுப்பது, நடைமுறையில் ஆதிக்கம் வகிக்கும்
தேசிய இனங்களின் தேசிய வெறியை ஆதரிப்பதாகும் என்று லெனின் எச்சரிக்கிறார். சுயநிர்ணய உரிமை என்பது
ரஷ்யாவுக்கு மட்டுமானதல்ல என்பதையும் அகிலத்தில் பல்வேறு கம்யூனிஸ்டு கட்சிகளினுடைய
விவாதத்தின் முடிவாகும் என்பதை கீழ் காணும் லெனின் கூற்றில் அறியலாம்.
லெனின்:-
"சில சிறு தேசிய இனங்களின்
கண்ணோட்டத்தை, குறிப்பாக, தேசியவாதக் கோஷங்களால் மக்களை
ஏமாற்றும் போலிஷ் பூர்ஷ்வாக்களை எதிர்த்துப போராடுகின்ற காரணத்தினால் சுயநிர்ணயத்தையே
தவறான முறையில் மறுக்கும் போலிஷ் சமூக-ஜனநாயகவாதிகளின் (கம்யூனிஸ்டுகளின்) கண்ணோட்டத்தை அகிலத்தில் புகுத்துவது தத்துவார்த்த
ரிதியாக தவறாகும், இது மார்ச்சியத்தை விட்டுவிட்டு
புரூதோனியவாதத்தை ஏற்றுக் கொள்வதாகும்,
நடைமுறையில், அதிக்கம் வகிக்கும் தேசிய இனங்களில் மிகவும்
ஆபத்தான தேசிய வெறியையும் சந்தர்ப்பவாதத்தையும் நம்மையும் அறியாமல் ஆதரிப்பதாகும். "
சோஷலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும்
ஈழம் பிரிந்து போவது சாத்தியமில்லை என்ற சிந்தனையின் அடிப்படையில் சுயநிர்ணய உரிமையை நோக்குகிறார் உ.வாசுகி.
மேலும் இறுதி தீர்வு தனி ஈழம் என்பது தமிழகத்தில் உள்ள சில கட்சிகளின் கருத்து என்கிறார். ஈழத்தில் அதுபோன்ற சிந்தனை இல்லாதாது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார். இலங்கையில் மார்க்சிய வழிப்பட்ட தேசிய இன சுயநிர்ணய உரிமைக் கண்ணோட்டத்தில் பலர் அமைப்பாக பேசிவருவதையும் தடிதடிப்பான நூல்களாக வெளி வந்திருப்பதையும் பற்றி மவுனம் சாதிக்கிறார். தேசிய இனப்பிரச்சினைப் பற்றி லெனின்
சொல்வதை கீழே பாடியுங்கள்
“ஓர் அரசின் எல்லைகளுக்குள்
ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பலவந்தமாகப் பிடித்து வைத்திருப்பற்கு எதிராகப்
பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும்,
அதாவது சுயநிர்ணய
உரிமைக்காகப் போராட வேண்டும்.”
சோஷலிசப் புரட்சியும்
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும்
“தேசங்கள் தடங்கலின்றிப் பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமையை, ஒரு குறிப்பிட்ட தேசம் ஒரு குறிப்பிட்ட
சமயத்தில் பிரிந்து போவது உசிதமா இல்லையா என்பதோடு போட்டுக் குழப்பக்கூடாது”
தேசியப் பிரச்சினை தீர்மானம்
சோஷலிசத்தை அடையும் முன்னர் பிரிந்து போகும் வாய்ப்பு ஆயிரத்தில் ஒன்றுதான் என்றாலும்கூட சுயநிர்ணய உரிமை தனிமுழுமையான கோரிக்கையாக முன் வைத்தார் லெனின். (சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தின் தொகுப்பு)
ஏகாதிபத்தியம், வளரும் நாடுகளைத் துண்டாடச்
செய்யும்
முயற்சியைப்
பற்றி
மட்டும்
உ.வாசுகி பேசிவிட்டு, இதற்கு மார்க்சிய வழியில் வைக்கப்பட்ட தீர்வான பிரிந்து போவதுடன் கூடிய சுயநிர்ணய உரிமையைப் பற்றிய மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோகளின்
கோட்பாடுகளுக்கு எதிராக கருத்துரைக்கிறார்.
ஏகாதிபத்தியம் தேசிய இனப் பிரச்சினையில் தலையிட்டு, நாட்டைத் துண்டாடுவதைத்
தடுப்பதற்கே, மார்க்சியம் பிரிவுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை
முன்வைக்கிறது. தனித்தனியாக சிறுசிறு
அரசுகளாக துண்டாடப்பட்டு தனிமைப்பட்டு நிற்பதற்காக அல்ல. ஒடுக்கப்படும் தேசிய இனம்
தனது அரசியல் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கே சுயநிர்ணய உரிமையை மார்ச்சியம்
வலியுறுத்துகிறது.
பிரிவினைவாதத்துக்கும், பிரிந்து போவதுடன் கூடிய சுயநிர்ணய
உரிமைக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ளவதில் உள்ள சிக்கலே தவறுகளுக்கு இடம்
கொடுக்கிறது.
இதனை தெளிவுபடுத்துவதற்கு லெனின் விவாகரத்து சட்டத்தை உதாரணத்துக்கு
எடுத்து விளக்குகிறார்.
விவாகரத்து உரிமை இருப்பதினால் விவாகரத்து நடைபெறுவதில்லை, கணவன் மனைவி ஆகியோர்களுக்கிடைய உள்ள நீக்க முடியாத பிணக்கே அவர்களைப் பிரிக்கிறது. இது போன்றே, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பெற்றிருப்பதனால் தேசங்களிடையே பிரிவு நிகழ்வதில்லை, தேசிய இனங்களை ஒடுக்குகின்ற கொள்கையே தேசிய இன அரசைத் தோற்றுவிக்கிறது.
எதிர்கால ஐக்கியத்துக்கே பிரிதலுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை மார்க்சியம் கோருகிறது, சோஷலிச சமூகத்தில் தேசிய இனங்கள் பிரிந்து
போதல் என்ற உரிமையுடன் கூடிய ஐக்கியத்தை முன்வைத்தல் என்பதே லெனின் வழிகாட்டுதலாகும். (சோஷலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும்)
சுயநிர்ணய உரிமை என்பதை சோஷலிச சமூகத்துக்கு உரிய கோட்பாடாகத்தான் லெனின் உருவாக்கினார் என்று தவறான தகவல்களின் அடிப்படையில்
மார்க்சியத்தின் உயிரோட்டமான அடிப்படைகளை மறுதலித்துவிட்டு, “மார்க்சியம் வறட்டுச்
சூத்திரமல்ல” என்ற முழுக்கத்தை முன்வைத்து உ.வாசுகி, அவரது கட்சியின்
முடிவுகளுக்கு ஏற்ப, மார்க்ஸ், லெனின் ஆகியோர்களின் கருத்துக்களுக்கு
தவறான வியாக்கியானம் செய்கிறார்.
(தேசிய இனப் பிரச்சினையின்
காரணமாக,
தொழிலாளர்களின்
ஒற்றுமை குலைவதையும், தேசிய இன வெறிக்கு ஆட்படுவதையும் தடுப்பதின் நோக்கில், தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வாக
மார்கசியம் கூறும் சுயநிர்ணய உரிமை என்ற நிலைப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்துவது இன்றைய தேவையாகிறது)
மார்க்சியம் "தேசிய இனப் பிரச்சினையும் சுயநிர்ணய உரிமையும்" பற்றி என்ன கூறுகிறது என்பது பற்றி அறிவதற்கான எளிய அறிமுகம்:-
ReplyDeletehttp://scientificcommunism.blogspot.in/2013/04/blog-post_30.html
தோழர் நான் கதிரவன் விமர்சனம நல்லா இருக்கு
ReplyDelete