முதலாளியச்
சமுதாயத்தில் அறிவியல், உழைப்பிலிருந்து
மாறுபட்ட ஒரு உற்பத்திச் சக்தியாக மாறி மூலதனத்திற்கான சேவையில்
ஈடுபடுத்தப்படுகிறது (C 1.361) ஏகபோக மூலதனக் காலகட்டத்தில், முன்பு இருந்ததைக்
காட்டிலும் அதிகமாக அறிவியல் உயர்ந்த அளவில் ஒழுங்கமைக்கப்படுகிறது. ஆனால் இப்படி
அது ஒழுங்கமைக்கப்படுவதன் முதன்மை நோக்கம் தனியாருக்கு இலாபத்தை ஈட்டித்
தருவதுதான். அறிவியலின் தனித்தனியான குறிப்பிட்ட துறைகளிலோ அல்லது அவற்றின்
பிரிவுகளிலோ மட்டுமே அறிவியல் அறிஞர்கள் பயிற்றுவிக்கப் படுவதால், அவர்களால்
இயற்கை அறிவியல் முழுவதையும் கோட்பாட்டுரீதியாக உட்கிரகிப்பது கடினமாகி வருவதுடன்,
சமுதாயம் பற்றிய ஆய்வில் அவர்கள் பயிற்சி ஏதும் பெறுவ தில்லை. இதற்கு மறுதலையாக,
சமூக, வரலாற்று அறிவியல்கள் இயற்கை அறிவியலிலிருந்து மட்டுமின்றி, ஒன்றிலிருந்து
மற்றொன்றும் துண்டிக்கப்படுகின்றன. வரலாறு என்பது, அது ஏதோ அறிவியலின் ஒரு பிரிவு
அல்ல என்பது போலக் கற்பிக்கப் படுகிறது. இயற்கை அறிவியலில் மாணவன் மார்க்ஸியம்
குறித்து எதனையும் தெரிந்துகொள்வதில்லை. ஆயினும், குறைந்தபட்சம் இயற்கையிலுள்ள
இயங்கியல் வளர்ச்சியைப் புரிந்துகொள்கிறான் - இயங்கியல் என்னும் பெயர் அவனுக்குத்
தெரியாமல் இருந்த போதிலும். வர்க்கப் போராட்டத்தை புரிந்துகொள்ளக்கூட அறியாத
பூர்ஷ்வா வரலாற்றறிஞனைப் பொருத்தவரை இயங்கியல் என்பதற்கு அர்த்தமே இல்லை.
பூர்ஷ்வாக்
கல்வி முறையில் இயற்கை பற்றிய ஆய்வுக்கும் மனிதனைப் பற்றிய ஆய்வுக்கும் இடையிலான
முரண்பாடு, ஒரு உற்பத்திச் சக்தி என்னும் வகையில் அறிவியலை வளர்க்க வேண்டிய
தேவைக்கும் மூலதனத்துக்கும் உழைப்புக்குமுள்ள உண்மையான உறவை மூடிமறைக்க வேண்டிய
தேவைக்கும் இடையிலான முரண்பாடு பூர்ஷ்வா உணர்வில் ஏற்படுத்தும் மோதலைப்
பிரதிபலிக்கிறது.
சில
பூர்ஷ்வா அறிவியல் அறிஞர்கள் தங்களது நிலையை நியாயப்படுத்துவதற்காக, தங்களது
அக்கறை அறிவை அறிவுக் காகவே மேம்படுத்துவதானேயன்றி தமது பணியின் சமூகப்
பின்விளைவுகளல்ல என்று கூறுகின்றனர். ஆனால், சமுதாயப் பிரச்சினைகள்
கடுமையாகும்போது சுய மரியாதையை இழக்காமல் இந்த நிலைப்பாட்டை அவர்களால் தொடர்ந்து
மேற்கொள்ள முடியாது. இது ஒருபுறமிருக்க, அவர்களில் வேறு சிலருக்குத்
தொழிற்சாலைகளின் மூலம் தொழிலாளர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர்கள்
வர்க்கப் போராட்டத் திற்குள் இழுக்கப்படுகிறார்கள். இவ்வாறுதான் அவர்கள், சோசலிசப்
புரட்சியின் மூலமே, மக்களுக்கான சேவை கருதி பயன் - மதிப்பு களை உற்பத்தி செய்ய ஈடுபடுத்தப்படும் ஒரு சக்தியாக அறிவியல்
உழைப்புடன் மீண்டும் ஐக்கியப்படுத்தப்படும் என்பதை அறிந்து கொள்கின்றனர்.
(மனித சாரம் - IX
அறிவாளிகளும் பாட்டாளிவர்க்கமும்
தமிழில்-எஸ்.வி.ராஜதுரை)
No comments:
Post a Comment