Friday, 28 December 2018

சரக்காகிவிடும் கலை – ஜார்ஜ் தாம்ஸன்


'முதலாளிய உற்பத்தி, அறிவு உழைப்பின் சில பிரிவு களுக்கு, எடுத்துக்காட்டாக, கவிதைக்கும் கலைக்கும் பகையானது (TSV 1.285). அறிவியல் உற்பத்திச் சக்தியாவது போல, கலை சரக்காகிறது. இந்தச் சரக்கு ஒரு நுகர்வுப்பொருளாக இருந்தபோதி லும் மற்ற சரக்குகளிலிருந்து இது ஒரு விஷயத்தில் வேறுபடுகிறது. அதாவது, இதனுடைய மதிப்பு, மோஸ்தரில் ஏற்படும் மாற்றங்கள், கலைப்படைப்புகளைச் சேகரிக்கும் செல்வந்தர்கள், இதையே தொழிலாகக் கொண்டவர்களின் நிதி, ஊகவாணிபம் போன்ற எதேச்சையான காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.

நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில், கலைஞன் இதர வினைஞர் களைப் போல சமூக வாழ்வில் ஒரு அடக்கமான ஆனால் பாது காப்பான இடத்தைப் பெற்றிருந்தான். அவன் தனது பிரபுவுக்குக் கட்டுண்டு கிடந்தபோதிலும் அவனுக்கும் பிரபுக்கும் இருந்த உறவு தனிப்பட்ட மனிதர்கள் சம்பந்தப்பட்ட ஒன்றேயன்றி வர்த்தக உறவு அல்ல. சரக்கு உற்பத்தியின் வளர்ச்சியுடன், இந்த மகிழ்ச்சியான எளிய உறவுகளுக்குப் பதிலாக பண உறவுகள் தோன்றின.

சென்ற அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்டதுபோல இந்த மாற்றத்தை வியென்னாவைச் சேர்ந்த மாபெரும் இசை அமைப் பாளர்களின் வாழ்க்கையில் காணலாம். பீதோவெனின் காலத்தில், இசைச் செயல்பாடுகளின் மையம் மேட்டுக்குடியினரின் வரவேற்பு அறையிலிருந்து இசை-அரங்குக்கும் புரவலரிடமிருந்து இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறவருக்கும் சென்றது. பீதோவென் இந்த மாற்றங்களை வரவேற்றபோதிலும், தானும் சந்தைக்காக உற்பத்தி செய்கிறவர்தான் என்னும் வேதனைமிக்க உணர்வையும் கொண்டிருந்தார்:

“இந்த உலகில் கலைக்கான ஒரு பெரும் களஞ்சியம் இருக்க வேண்டும். கலைஞன் அங்கு சென்று தனது படைப்புகளைச் சேர்க்க வேண்டும். பிறகு தனக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இப்போதோ, கலைஞன் பாதி வர்த்தகனாகவும் இருக்க வேண்டியுள்ளது - இதை எவ்வாறு பொறுத்துக்கொள்வது?” (l.etters, ed. Ander Son, 1.47.)

முதலாளியச் சமுதாயத்தில் கலைஞனின் சுதந்திரம் என்பது சந்தையின் சுதந்திரம்தான் (LCW 10.48).

ஏகபோக முதலாளிய யுகத்தில் இந்த சுதந்திரமும்கூட வெட்டிக் குறுக்கப்படுகிறது. ஏகபோக முதலாளிகளைப் பொருத்த வரை சிறு எண்ணிக்கையிலான மேட்டுக்குடியினருக்கான பொழுது போக்கு என்பதைத் தவிர கலைகளுக்கு எந்தப் பயனும் இல்லை. பிற ஏகபோக முதலாளிகளோ இலாபம் ஈட்டுவதற்கும் மக்கள் மனங்களில் ஒழுக்கக்கேடுகளை விதைக்கவும் ஆன்மீகரீதியான கறைகளை ஏற்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். இந்தத் தீமையின் விளைவை எல்லாவிடங்களிலும் பார்க்கலாம். ஆனால் எல்லா வற்றையும்விட, ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம் இன்னும் நிலவுகின்ற நாடுகளில்தான் பாரம்பரிய வெகுமக்கள் கலைவடிவங்கள் திட்ட மிட்டு அழிக்கப்பட்டுவருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் கலைஞன் ஒரு முடிவை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஒன்று, அவன் ஒரு சரக்கு - உற்பத்தியாளன் என்னும் தகுதியை ஏற்றுக் கொண்டு வர்த்தகரீதியான வெற்றியைத் தேடிச் செல்லவேண்டும்; அப்படிச் செய்வானேயாகில் ஒரு கலைஞனுக்குள்ள நேர்மையை அவன் இழந்துவிடுவான். அல்லது, வர்த்தக மதிப்பீடுகளை நிராகரித்து கலைப்படைப்பு சுய - வெளிப்பாட்டுக்கான ஒரு சுயாதீனமான் செயற்பாடு என்னும் கோட்பாட்டில் - கலை கலைக்காகவே என்னும் கோட்பாட்டில் - தஞ்சம் புக வேண்டும். ஆனால் இந்தக் கோட்பாடு வர்த்தக மதிப்பீடுகளிலிருந்து தப்பிப்பதற்கான வழிமுறையை வழங்குவதில்லை. மாறாக, இந்தக் கோட்பாடே சரக்கு உற்பத்தியில் உள்ளார்ந்த சுயநலம் சார்ந்த தனிமனிதவாதத்தின் வெளிப்பாடுதான். தனது சமூகப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதன் மூலம் அவன் தனக்கு உள் உந்துதல் தரும் மூலாதாரங்களிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்கிறான். பிறருக்கு உள் உந்துதல் தரக்கூடிய ஆற்றலை அவன் மீண்டும் பெறவேண்டுமானால், அவன் மக்களிடமிருந்து உள்உந்துதல் பெற வேண்டும். மக்களோடு ஐக்கியப்படுவதன் மூலமே, தனது கலை, அது தரும் மகிழ்ச்சிக்காக மதிக்கப்படுமேயன்றி சந்தையில் பெறும் விலைக்காக அல்ல என்பதை அவனால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
(மனித சாரம் - IX அறிவாளிகளும் பாட்டாளிவர்க்கமும்
தமிழில்-எஸ்.வி.ராஜதுரை)


No comments:

Post a Comment