Friday, 28 December 2018

கருத்துநிலை மறுவார்ப்பு (ideological remoulding) – ஜார்ஜ் தாம்ஸன்


சரக்கு உற்பத்தியுடனும் வர்க்கச் சுரண்டலுடனும் தொடர் புடைய கருத்துகள் நம் மனத்தில் ஆழமாக வேர்பிடித்துள்ளதால், இடைவிடாத அரசியல் போராட்டத்தின் மூலமே அவற்றை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். எனவேதான், சோசலிசப் புரட்சியின் போதும் அதன் பிறகும், அனைத்து வர்க்கங்களுக்கும் கருத்துநிலை மறுவார்ப்புத் தேவைப்படுகிறது. இது பழைய சுரண்டல் வர்க்கங்களுக்கு மட்டுமல்ல, அறிவாளிகள், பாட்டாளி வர்க்கம் உள்ளிட்ட புரட்சியை ஆதரிக்கும் வர்க்கங்களுக்கும் தேவைப்படுகிறது:

“வர்க்கப் போராட்டத்திலும் இயற்கைக்கு எதிரான போராட்டத்திலும் பாட்டாளி வர்க்கம் சமுதாயம் முழுவதையும் மறுவார்ப்புச் செய்கிறது, அதே சமயம் தன்னையும் மறுவார்ப்புச் செய்து கொள்கிறது”. (MFE 105.)

கட்சியால் வழி நடத்தப்படும் பாட்டாளிவர்க்கம் அறிவாளி களுக்குத் தலைமை தாங்கி, அவர்கள் தங்களைத் தாங்களே மறுவார்ப்புச் செய்து கொள்வதன் மூலமே அவர்களால் புதிய சமுதாயத்திற்குத் தமது பங்களிப்பை முழுமையாக வழங்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ளும்படி செய்ய வேண்டும்:

“நமது இலக்கிய, கலைத்துறைச் செயல்பாட்டாளர்கள் இந்தக் கடமையை நிறைவேற்றித் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்; அவர்கள், தொழிலாளர்கள், உழவர்கள், போர்வீர்கள் பக்கம் மெல்ல மெல்ல வந்து சேர வேண்டும். அவர்கள் நடுவே செல்வதன் மூலமும் நடைமுறைப் போராட்டங்களுக்குச் செல்வதன் மூலமும் மார்க்ஸியம், சமுதாயம் ஆகியனவற்றைக் கற்பதன் மூலமும்தான் அவர்கள் இவ்வாறு வந்து சேர முடியும். (MSW 3.78.) பெருந்திரளான அறிவாளிகள் சிறிது முன்னேற்றம் அடைந் திருக்கிறார்கள். ஆனால் இதை கொண்டு அவர்கள் திருப்தி அடைந்துவிடக்கூடாது. அவர்கள் தொடர்ந்து தம்மை மறுவார்ப்புச் செய்துகொள்ள வேண்டும். தமது பூர்ஷ்வாக் கண்ணோட்டத்தைப் படிப்படியாகக் கைவிட்டு பாட்டாளி வர்க்க, பொதுவுடைமைக் கண்ணோட்டத்தைப் பெற வேண்டும். அப்போதுதான் அவர்களால் புதிய சமுதாயத்தின் தேவைகளுக்குத் தம்மைப் பொருத்தமானவர்களாக்கிக் கொள்ளவும் தொழிலாளர்களுடனும் உழவர்களுடனும் ஒன்றுபடவும் முடியும். உலகக் கண்ணோட்டத்தில் ஏற்படும் இந்த மாற்றம் அடிப்படையானதொரு விஷயமாகும். இன்றுவரை நமது அறிவாளிகளில் பெரும்பாலோர் தமது உலகக் கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளதாகச் சொல்ல முடியாது. அவர்கள் இந்த விஷயத்தில் தொடர்ந்து முன்னேற்றமடைவார்கள் என்றும், வேலைகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்வதனூடாக அவர்கள் படிப் படியாக பொதுவுடைமைக் கண்ணோட்டத்தைப் பெற்று, மார்க்ஸியம் - லெனினியத்தை முன்பைக் காட்டிலும் நன்கு கிரகித்துக்கொண்டு, தொழிலாளர்களுடனும் உழவர் களுடனும் பிரிக்கமுடியாதபடி ஒன்றுபடுவர் என்றும் நாம் நம்பிக்கை கொள்ளலாம்.” (MFE 108.)

அறிவாளிகளின் உலகக் கண்ணோட்டத்தை மாற்றும் இயக்கம் பாட்டாளிவர்க்கத்தின் தலைமையின் கீழ் நடத்தப்படு கிறது. ஆனால், இந்த இயக்கத்திற்கு அறிவாளிகள் தாமாகவே முன் வந்து இசைவு தரவும் அதில் முழு நம்பிக்கை பெறவும் செய்கையில்தான் இது வெற்றியடையும்:

“சுதந்திரம் என்பதைக் கட்சித் தலைமையுடனும் ஜனநாயகம் என்பதை மையப்படுத்தப்பட்ட வழிகாட்டுதலுடனும் இணைத்தே கடைப்பிடிக்க வேண்டும் என்னும் கருத்தை நாம் பரிந்துரைக்கையில், அதன் பொருள் கருத்துநிலைப் பிரச்சனைகளையோ, மக்களிடம் சரியானது எது, தவறானது எது என்பதைப் பாகுபடுத்தும் பிரச்சனைகளையோ தீர்ப்பதற் குப் பலவந்த முறைகளைக் கையாள வேண்டும் என்ப தாகாது. கருத்துநிலைப் பிரச்சினைகளையோ, சரியானதா தவறானதா என்னும் பிரச்சினைகளையோ தீர்ப்பதற்கு நிர்வாக ஆணைகளையோ பலவந்த நடவடிக்கை களையோ பயன்படுத்தச் செய்யப்படும் எல்லா முயற்சிகளும் பயனற் றவை மட்டுமின்றி ஊறு விளைவிக்கக் கூடியவையுமாகும். நிர்வாக ஆணைகள் மூலமாக நம்மால் மதத்தை ஒழிக்கவோ, மதத்தில் நம்பிக்கை வைக்காதிருக்கும்படி மக்களைக் கட்டாயப்படுத்துவவோ முடியாது. கருத்து முதல்வாதத்தைக் கைவிடும்படி மக்களை நம்மால் எப்படிக் கட்டாயப்படுத்த முடியாதோ அவ்வாறே மார்க்ஸியத்தில் நம்பிக்கை வைக்கும் படி அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. கருத்துநிலைத் தன்மைவாய்ந்த பிரச்சினைகளையோ மக்களிடையே நிலவும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளையோ தீர்ப்பதற்கான ஒரே வழி ஜனநாயக முறையாகும்; விவாதித்தல், விமர்சித்தல் நமது கருத்துகளுக்கு அவர்களை. இணங்கச் செய்தல், கல்வி புகட்டுதல் என்னும் முறையே யன்றி கட்டாயப்படுத்துதல், ஒடுக்குதல் என்னும் முறையல்ல.” (MFE 86.)

பாட்டாளிவர்க்கத்திற்கும் அறிவாளிகளுக்குமிடையே உள்ள பகைத்தன்மையற்ற முரண்பாட்டை மேற்சொன்ன வகையில் கையாண்டால் அது வெற்றிகரமாகத் தீர்க்கப்படும் என்பதைக்கடந்த கால் நூற்றாண்டாக சீனப் பொதுவுடைமைக் கட்சி பெற்றுள்ள அனுபவம் காட்டுகிறது.
(மனித சாரம் - IX அறிவாளிகளும் பாட்டாளிவர்க்கமும்
தமிழில்-எஸ்.வி.ராஜதுரை)




No comments:

Post a Comment