Friday, 9 September 2016

அரசு உதிர்ந்து போதல் பற்றி டாக்டர் அம்பேத்கர்

டாக்டர் அம்பேத்கர் எழுதிய “புத்தரா, காரல் மார்க்சா?” என்ற இச்சிறுகட்டுரை எட்டு உட்தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. எட்டாவது உட்தலைப்பு அரசு உதிர்ந்து போதல்

முதலில், அம்பேத்கர் அரசு உதிர்ந்து போதல் பற்றிக் கூறுவதைப் பார்ப்போம். கம்யூனிச கோட்பாட்டின்படி அரசு என்பது ஒரு நிரந்திரமான சர்வாதிகாரமாகும். இதனைக் கம்யூனிஸ்டுகளே பலவீனமான அரசியல் கோட்பாடாக உணர்வதால், அரசு உலர்ந்து உதிரும் என்று கூறி அதன் கீழாகப் புகலிடம் தேடுகிறார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகள் இரண்டு கேள்விக்குப் பதிலளிக்க வேண்டி இருக்கிறது. முதலாவது அரசு எப்போது உதிர்ந்து போகும்? அரசு உதிர்ந்து போகும் போது அதன் இடத்துக்கு எது வரும்? முதல் கேள்விக்குக் கம்யூனிஸ்டுகளால் நிச்சயமாகப் பதில் எதுவும் அளிக்கமுடியாது. இரண்டாவது கேள்விக்குக் கம்யூனிஸ்டுகள் இதற்குத் திருப்திகரமான பதில் கூறப்படவில்லை. இதைவிட வேறொரு முக்கியமான கேள்வி இருக்கிறது, அரசு உதிர்ந்து பின் அராஜகம் வருமா? வரும் என்றால் கம்யூனிஸ்ட் அரசை உருவாக்குவது பயனற்ற செயலாகும் என்றே அம்பேத்கர் கருதுகிறார். வன்முறையினால் தான் அந்த அரசை தாங்கிப் பிடிக்க முடியும், அதற்கு அதாரமாக இருக்கும் வன்முறையை விலக்கிக் கொண்டால் அராஜகம் தோன்றும். அப்படி என்றால் கம்யூனிஸ்ட் அரசினால் என்ன நன்மை? -என்பதாகவே அம்பேத்கரின் புரிதல் இருக்கிறது. 


காட்மண்டில், உலகப் பவுத்த கவுன்சில் மாநாட்டின் போது 1956 ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் அம்பேத்கர் “புத்தரா அல்லது காரல் மார்க்சா” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். இது அவரது இறுதிகாலத்தில் ஆற்றிய உரையாகும். “புத்தரா, காரல் மார்க்சா?” என்ற நூலில் என்ன கூறினாரோ அதனையே இவ்வுரையில் வெளிப்படுதியுள்ளார். மார்க்சைப் பற்றிய அவரது நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை.

அந்தப் புத்த மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரையின் நோக்கம், அன்றைய சோஷலிச முகாம் உலகின் பாதியை பிடித்துள்ள நிலையில். பவுத்த நாடுகளில் உள்ள ஏராளமான மாணவர்கள் கம்யூனிசப் பிடியில் சிக்கியுள்ளதை கவலையோடு நோக்கி, கம்யூனிச வாழ்க்கை முறையை விடச் சிறந்த வாழ்க்கை முறையைப் பவுத்தம் வழங்குகிறது என்பதை வலியுறுத்துவதாக இருக்கிறது.

“பவுத்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இளம் தலைமுறையினரைச் சமாளிப்பதும் பவுத்தம் கம்யூனிசத்துக்கு ஒரு மாற்றாக இருக்க முடியும் என்பதை அவர்களுக்கு எடுத்துரைப்பதும் அவசியம். அப்போதுதான் அது நிலைத்து நிற்க முடியும் என்று பவுத்தம் நம்பிக்கை கொள்ள முடியும். இன்று ஐரோப்பாவின் பெரும்பாலான மக்களும் ஆசியாவின் பெரும்பாலான இளம் மக்களும் மார்க்ஸ் ஒருவர்தான் நாம் வழிபடக்கூடிய ஒரே தீர்க்கதரிசி என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அவர்கள் பவுத்த சங்கத்தின் பெரும்பகுதி மஞ்சள் ஆபத்தே தவிர வேறல்ல என்று கருதுகின்றனர். இதனைப் பிக்குகள் கவனத்தில் கொள்ள வேண்டும். காரல் மார்க்சுடன் ஒப்பிடும் அளவுக்கு அவர்கள் தங்களைச் சீர்திருத்திக் கொள்ள வேண்டும, அப்போது பவுத்தம் அதனுடன் போட்டியிட முடியும்.”

ஆகப் பவுத்தம் கம்யூனிசத்துக்கு ஒரு மாற்றாக வேண்டும் என்பதை வலியுறுத்துவற்கு ஆற்றப்பட்டதே இந்தச் சொற்பொழிவு. அரசு உலர்ந்து உதிரும் என்பது எப்போது நடைபெறும் என்று கேட்டால் கம்யூனிஸ்டுகளிடம் பதில் இல்லை என்று கூறியவர் அம்பேத்கர், ஆனால் புத்தத்திலும் அதே நிலையிருப்பதை இவ்வுரையில் கூறியுள்ளார்.

“பவுத்த பாதை தாமதமானதாக, சுற்றி வளைத்து அழைத்துச் செல்லக்கூடியதாக, சிரமங்கள் நிறைந்ததாக இருந்தாலும் அது உங்களைப் பத்திரமான இடத்துக்கு இட்டுச் செல்லும். நீங்கள் கடைப்பிடிக்கும் லட்சியங்கள் அங்கு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையை நிரந்தரமாக வடிவமைத்துக் கொள்ளத் துணைநிற்கும். எனவே, அவசரப்பட்டுக் குறுக்கு வழிகளில் செல்லுவதைவிட மெதுவாகச் செல்லும் பாதையில், சுற்றி வளைத்துச் செல்லுவது எவ்வளவோ நல்லது என்பது என் கருத்து. வாழ்க்கையில் குறுக்கு வழியில் செல்லுவது எப்போதும் அபாயகரமானது, மிகவும் ஆபத்தானது.”

பவுத்தம் சுற்றி வளைத்த லட்சியத்தை அடையும் என்கிறார் அம்பேத்கர். அதற்கு முன்பே அடையும் வழி கம்யூனிசம் என்கிறார், ஆனால் அது குறுக்கு வழி என்பதாகக் குறிப்பிடுகிறார். பவுத்தத்தின் லட்சிய வழியைவிட கம்யூனிச வழி விரைவில் அடையும் என்பதை ஒப்புக்கொண்டுவிட்டார். 

  கம்யூனிச சமூகத்தை அடைவதை லட்சியமாக கருத்துநிலையில் கம்யூனிசம் முடிவெடுக்கவில்லை, சமூக வளர்ச்சியின் விதியின் அடைப்படையில் எடுத்த முடிபாகும். எந்த ஆண்டில் அடையும் என்பதை குறிப்பிடாவிட்டாலும் அது அடைந்தேதீரும் என்பதை இன்றைய சமூக வளர்ச்சியின் அடிப்படையில் நிறுவுகிறது.


மார்க்ஸ் கூறுகிற “மதம் மக்களுக்கு அபின்” என்பது மறுவுலகைப் பற்றிப் பேசுகிற கிறித்துவத்துக்குப் பொருந்தும், புத்தத்திற்குப் பொருந்தாது என்று கூறியவர், இந்த உரையில் சர்வம் அநித்யம் என்பது புத்தர் போதனையாகக் கூறுகிறார். யதார்த்த உலகை அநித்தியம் என்று கூறிவிட்டு நித்தியத்தைத் தேடுவது ஆன்மீகமே. 

அரசு பற்றிய மார்க்சிய கண்ணோட்டத்தை அறிந்து கொள்ளாமல் இதற்கான விடையைப் புரிந்து கொள்வது கடினமாகும். சுருக்கமாக அரசு பற்றி மார்க்சிய பார்வையைத் தொகுப்போம்.

மனிதனை மனிதன் சுரண்டுதல் அற்ற ஒரு நிலையினை மனித இனம் சந்தித்ததுண்டு. அது ஆதிப்பழங்குடி சமூகமாகும். அந்தச் சமூகத்தல் உற்பத்தி சக்திகள் சிறிதளவிற்கே வளர்ச்சியடைந்து இருந்ததால் ஒருவராலும் தனியாகத் தனக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. எளிய கருவிகளைப் பயன்படுத்தினர். ஒவ்வொருவரும் இனக்குழுவில் உள்ள அனைவருக்காகவும் உழைத்தனர். இவ்வகையான இனக்குழு சமூகத்தில் உழைப்பு கூட்டாகச் செயல்பட்டது, உணவு சேகரிப்பதில் அனைவரும் சமமாக ஈடுபட்டனர். சேகரித்த உணவுகள் இனகுழு முழுமைக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது. எளிய கூட்டுறவு செயல்பாடாக அன்றைய சமூக உறவுகள் இருந்தன.

அன்றைய சமூகப் பொருளாதாரத்தில் ஏற்றதாழ்வு நிலை உருவாகவில்லை. மக்கள் வர்க்கமாகப் பிளவுபடாமலும், சொத்து என்று எதையும் தனிநபர்களிடம் சேராமாலும், அதாவது வர்க்க மற்ற, தனிச்சொத்துடைமையற்ற சமூகமாக, ஒன்றுபட்ட தொன்மை கம்யூனிச சமூக அமைப்பாகக் காணப்பட்டது. இந்தக் கட்டத்தில் வன்முறையால் மக்களைக் கீழ்ப்படுத்தும் முறையான தனி இயந்திரம் இருக்கவில்லை. அதாவது அரசு என்பது தோன்றவில்லை. அப்போது அரசு தேவைப்படவும் இல்லை.

உற்பத்திச் சாதனங்கள் சிலரிடம் சேகரமாதலும், சமூகத்திற்குத் தேவையானதைவிட உபரியாக உற்பத்தி செய்திட முடிந்தமையும், சமூகத்தின் வேலைப் பிரிவினை ஆகிய புறநிலைக் காரணங்கள் வர்க்கங்களின் தோற்றத்திற்குக் காரணமாகிறது. இதனால் உருவான சமூகத்தில் உடைமையுள்ளவருக்கும், உடைமையற்றவருக்கும் இடையேயுள்ள சமரசப்படுத்தமுடியாத முரண்காரணமாக அரசு தோற்றம் பெற்றது. மக்களின் எழுச்சியை அடக்குவதற்கு, ஆயுதம் தாங்கிய காவற்படைகளும், ராணுவமும், சட்ட நீதிகளும், சிறை தண்டனைகளும், சுரண்டலுக்கு ஆளான மக்களின் மீது ஏவப்படும் வன்முறை கருவியாக அரசு உருவாகியது.

இந்த அரசு உருவாக்கத்தைப் பற்றி எங்கெல்ஸ் தமது “குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலில் எழுதியுள்ளார்.

“சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு வளர்ச்சிக் கட்டத்தின் விளைவே அரசு. இந்தச் சமூகம் தன்னுடனான தீராத முரண்பாட்டில் சிக்கிக் கொண்டுவிட்டது, இணக்கம் காண முடியாத பகை சக்திகளாய்ப் பிளவுண்டுவிட்டது. இந்தப் பகைமை நிலையை அகற்றத் திறனற்றதாகிவிட்டது என்பதை ஒப்புக் கொள்வதன் விளைவே அரசு. ஆனால் இந்தப் பகை சக்திகள், முரண்பட்டு மோதிக் கொள்ளும் பொருளாதார நலன்களைக் கொண்ட இந்த வர்க்கங்கள், தம்மையும் சமூகத்தையும் பயனற்ற போராட்டத்தில் அழித்துக் கொண்டு விடாமல் தடுக்கும் பொருட்டு, மோதலைத் தணித்து “ஒழுங்கின்” வரம்புகளுக்குள் இருத்தக்கூடிய ஒரு சக்தியை, சமூகத்திற்கு மேலானதாய்த் தோன்றும் ஒரு சக்தியை நிறுவுவது அவசியமாயிற்று.”

இதனோடு லெனின் தமது “அரசும் புரட்சியும்” என்ற நூலில் சேர்த்துக் கூறுகிறார்:-
“வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவும் வெளியீடுமே அரசு. எங்கே. எப்பொழுது, எந்த அளவுக்கு வர்க்கப் பகைமைகள் புறநிலைக் காரணங்களால் இணக்கம் காண முடியாதவை ஆகின்றனவோ, அங்கே, அப்பொழுது, அந்த அளவுக்கு அரசு உதித்தெழுகிறது. எதிர்முறையில் கூறுமிடத்து, அரசு ஒன்று இருப்பதானது வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவையாய் இருத்தலை நிரூபிக்கிறது.”

-மேலும் லெனின் கூறுகிறார், நாகரிக சமூகத்தில், ஒவ்வொரு புரட்சியும், அரசு இயந்திரத்தை அழிப்பதன் மூலம், வர்க்கப் போராட்டத்தை ஒளிவுமறைவின்றி நமக்குப் புலப்படுத்திக் காட்டுகிறது, ஆளும் வர்க்கம் தனக்குச் சேவை புரியக் கூடிய ஆயுதமேந்திய ஆட்களைக் கொண்ட தனிவகைப் படைகளைப் புதுப்பிக்க எப்படி முயலுகிறது என்பதையும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் ஒடுக்குவோருக்குப் பதிலாய் ஒடுக்கப்பட்டோருக்குச் சேவை புரியக் கூடிய இப்படிப்பட்ட ஒரு புதிய ஒழுங்கமைப்பைத் தோற்றுவித்துக் கொள்ள எப்படி முயலுகிறது என்பதையும் நமக்குத் தெளிவாய்க் காட்டுகிறது.

பாட்டாளி வர்க்கத்தின் கம்யூனிச ஆட்சியில் அரசு எப்படி உலர்ந்து உதிர்ந்து போகிறது என்பதைப் பற்றி எங்கெல்ஸ் “டூரிங்குக்கு மறுப்பு” என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

“பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு உற்பத்தி சாதனங்களை முதலாவதாக அரசு சொத்தாக மாற்றுகிறது. ஆனால் இதைச் செய்வதன் மூலம் அது பாட்டாளி வர்க்கம் என்ற தனது நிலைக்கே முடிவு கட்டிக் கொள்கிறது, எல்லா வர்க்க வேறுபாடுகளுக்கும் வர்க்கப் பகைமைகளுக்கும் முடிவுகட்டுகிறது, அரசு அரசாய் இருப்பதற்கும் முடிவு கட்டுகிறது. இதுவரை சமூகம் வர்க்கப் பகைமைகளின் அடிப்படையில் அமைந்திருந்ததால் அதற்கு அரசு தேவைப்பட்டது, அதாவது அந்தந்தக் காலத்தில் சுரண்டும் வர்க்கமாய் இருக்கும் குறிப்பிட்ட வர்க்கத்துக்கான ஒழுங்கமைப்பு ஒன்று தேவைப்பட்டது, அதன் பொருளுற்பத்தியின் புறநிலைமைகளைப் பராமரிக்கவும், இன்னும் முக்கியமாய்ச் சுரண்டப்படும் வர்க்கங்களை அந்தந்தப் பொருளுற்பத்தி அமைப்புக்கு பொருத்தான ஒடுக்கு முறை நிலையில் பலவந்தமாக வைத்திருப்பதற்கும் ஓர் ஒழுங்கமைப்புத் தேவைப்பட்டது.

இந்த அரசு சமூகம் முழுவதன் அதிகார பூர்வமான பிரதிநிதியாக, கண்கூடான அதன் உருவத் திரட்சியாக விளங்கிற்று. ஆனால் எந்த வர்க்கம் தன்னுடைய காலத்தில் சமூகம் முழுவதற்கும் தானே பிரதிநிதியாக இருந்ததோ அந்த வர்க்கத்தின் அரசாய் இருந்த அளவுக்குத்தான், அதாவது புராதன காலத்தில் அடிமையுடைமைக் குடிகளின் அரசாகவும், மத்திய காலத்தில் பிரபுக்களின் அரசாகவும், நாம் வாழும் இக்காலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசாகவும் இருந்த அளவுக்குத் தான், அரசால் இவ்வாறு விளங்க முடிந்தது. இறுதியில் அரசானது சமூகம் முழுமைக்கும் மெய்யான பிரதிநிதியாகும் போது, அது தன்னைத் தானே அவசியமற்றதாக்கிக் கொள்கிறது.
..
அரசானது மெய்யாகவே சமூகம் முழுதுக்கும் பிரதிநிதியாய் முன்வந்து புரிந்திடும் முதலாவது செயல்- அதாவது உற்பத்திச் சாதனங்களைச் சமூகத்தின் பேரால் உடைமையாக்கி கொள்ளும் இச்செயல் – அரசு என்ற முறையில் .சுயேச்சையாய் அது புரிந்திடும் இறுதிச் செயலாகவும் அமைந்து விடுகிறது. சமூக உறவுகளில் அரசின் தலையீடு ஒரு துறைக்குப்பின் இன்னொன்றாகத் தேவையற்றதாகிப் பிறகு தானாகவே தணிந்து அணைந்து விடுகிறது. ஆட்களின் ஆளுமை காரியங்களின் நிர்வாகமாய், பொருளுற்பத்தி வேலைகளது செயலாட்சியாய் மாறிவிடுகிறது. அரசு “ஒழிக்கப்படவில்லை”, அது உலர்ந்து உதிர்ந்து விடுகிறது.”

அம்பேத்கர் நினைப்பது போல் அரசு உலர்ந்து உதிர்ந்த இடத்தில் அராஜகம் ஏற்படப் போவதில்லை, ஆட்களின் ஆளுமை காரியங்களின் நிர்வாகமாய், பொருளுற்பத்தி வேலைகளது செயலாட்சியாய் மாறிப்போகும். அதாவது வன்முறைக் கருவிகாளான போலீஸ், ராணுவம், நீதித்துறை போன்றவை நீக்கப்பட்ட நிலையில், நிர்வாக வேலைகளை மட்டும் பார்க்கக்கூடிய அமைப்பாக மாறிப்போகும். எங்கெல்ஸ் மேலும் இது பற்றிக் கூறுவதாவது, தவிர்க்க முடியாததாய் அரசு மறைந்தவுடன், அரசு இயந்திரம் அனைத்தையுமே அதற்கு அப்பொழுது உரித்தாகிவிடும் இடத்தில், அதாவது தொல்பொருள் காட்சிக் கூடத்தில், கைராட்டைக்கும் வெண்கலக் கோடாரிக்கும் பக்கத்தில் கொண்டுபோய் வைக்கப்படும்.


அரசு உதிர்ந்து போதல் என்ற இந்த மார்க்சியக் கோட்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு அரசியல் தெளிவு மட்டும் போதாது, அரசியல் பொருளாதாரம், வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்ணோட்டம் ஆகியவை அவசியமாகும். இல்லை என்றால் இதனை மார்க்சிய வழியில் புரிந்து கொள்வது சிரமத்தை ஏற்படுத்தும்.

முழுமையாகப் படிக்க-

காரல் மார்க்சா? அம்பேத்கரின் புத்தரா?


Monday, 4 July 2016

சமூகத்தை மாற்றி அமைப்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு

லெனின்:-
"நாம் முற்றிலும் மார்க்சியக் கோட்பாட்டின் முறையிலான நிலைபாட்டை எமது அடிநிலையாய்க் கொண்டு நிற்கிறோம் ...புரட்சிகர சோஷலிடுக் கட்சியின் முன்னுள்ள மெய்யான பணி...... சமூகத்தைத் திருத்தியமைப்பதற்குத் திட்டங்கள் வரைவதல்ல, தொழிலாளர்களுடைய நிலைமையை மேம்படச் செய்வது குறித்து முதலாளிகளுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் அறிவுரை அளிப்பதல்ல, சதிகள் புரிந்திடுவதல்ல இப்பணி, பாட்டாளி வாக்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைப்பு செய்வதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் வெல்வதையும் சோஷலிசச் சமூகம் ஒழுங்கமைக்கப்படுவதையும் இறுதிக் குறிக்கோளாய்க் கொண்ட இந்த வாக்கப்போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதுமே இப்பணி என்று அது தெளிவுபடுத்திற்று."
(நமது வேலைத்திட்டம்).

    இயற்கையைப் போன்றே சமூகத்திலும் புறநிலை விதிகளின் அடிப்படையில் வளர்ச்சி நடைபெறுகிறது என்பதை  மார்க்சியம்  நமக்கு விளக்குகிறது, ஆனால் முதலாளித்துவ அறிஞர்கள் சமூகம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டத்தை  விதிவாதத்துக்கு ஆட்பட்டதாக விமர்சிக்கின்றனர்.  சமூக வரலாற்று நிகழ்வுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகின்றன என்று  மார்க்சியம் கருதுவதாக விமர்சிக்கினறனர். இதன் அடிப்படையில் முதலாளித்துவ அறிஞர்கள் முதலாளித்துவ சமூகத்தைத் தொடர்ந்து சோஷலிச சமூகம் வரும் என்பதை மறுக்கின்றனர். மேலும் அவர்கள், சூரியன் உதிப்பதற்கு எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் இயற்கைக்கு தேவைப் படாதது போல், சமூகம் புறநிலை  விதிப்படி செயற்படும்  என்றால் சோஷலிச சமூகத்துக்காக கம்யூனிஸ்ட் கட்சி ஏன் போராட வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

       வரலாற்று விதிகள் மக்களது நடவடிக்கையின் வழியே செயற்படுகின்றன என்பதே, இயற்கைக்கும் சமூக விதிக்கும் உள்ள வேறுபாடு என்பதை அறிந்திருக்கிறது மார்க்சியம். மக்களே செயல்முனைப்போடு வரலாற்றைப் படைக்கின்றனர். மக்கள் உணர்வு பூர்வமாகவே தமது குறிக்கோளை அமைத்து, அதன்படியே செயற்படுத்துகின்றனர். இந்த உணர்வுபூர்வமான செயற்பாட்டை தன்னிச்சையாக அவர்கள் அமைத்துக் கொள்வதில்லை, மாறாக புறநிலை விதிகளின் தாக்கத்தின் விளைவாக உருவாக்கிக் கொள்கின்றனர். இவைகள் வர்க்கங்களின் நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது.

இன்றைய முதலாளித்துவ சமூகம் உழைப்பாளிகளை சுரண்டி வளர்கிறது என்பது கண்கூடான ஒன்றாகும். உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் தனி முதலாளியின் அபகரிப்பு முறைக்கும் இடையேயுள்ள முரண்பாட்டின் உச்சமே இன்றைக்கு பாட்டாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையே வர்க்கப் போராட்டமாக காட்சியளிக்கிறது.

உழைப்பாளிகளைச் சுரண்டி தனது செல்வங்களைப் பெருக்கிக் கொள்ளும் முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உழைப்பாளிகளுக்கென்று தனித்த இயக்கம் தேவைப்படுகிறது. இந்த இயக்கத்தை நடத்திச் செல்லும் கம்யூனிஸ்டுகள் தமக்கென எந்த குறுங்குழுவாத கண்ணோட்டத்தையும் வைத்திருக்கவில்லை. கம்யூனிஸ்டுகள் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர்த்து வேறு நோக்கம் எதனையும் கொண்டவர்கள் அல்ல. முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் சந்திக்க வேண்டிய வளர்ச்சிக் கட்டங்களை அறிந்து அதற்கான போராட்ட உத்திகளை வகுத்து அதனை நடைமுறைப்படுத்துகின்றனர்.

கம்யூனிஸ்டுகள் தாம் நடத்தும் போராட்ட வழிமுறைகளை, மார்க்ஸ் வகுத்துக் கொடுத்த வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையில் உடனடி போராட்டத்தையும் இறுதி குறிக்கோளையும் அமைத்துக் கொள்கின்றனர். புரட்சிகரமான கோட்பாடு இல்லையேல் புரட்சிகரமான இயக்கம் இல்லை என்று லெனின் கூறியதற்கு இணங்க, தங்களுக்கான புரட்சிகரமான கோட்பாட்டை பொருள்முதல்வாத கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைத்துக்கொள்கின்றனர்.

முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளிகளின் முன்னணிப்படையாக கம்யூனிஸ்ட் இயக்கம் செயல்படுகிறது. முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிவதற்கும், அதனிடத்தில் தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சியை அமைப்பதற்கும், தொழிலாளிகளை ஒன்றிணைக்கும் சக்தியாக கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் உறுதியோடு செயற்பட மார்க்சிய சித்தாந்தம் உதவிடுகிறது.

உற்பத்தியின் வளர்ச்சி என்பது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலிருந்தே தொடங்குகிறது. இந்த உற்பத்திச் சக்தியின் புரட்சிகர மாற்றம் உழைப்புக் கருவிகளின் வளர்ச்சியில் அடங்கியிருக்கிறது. உற்பத்திச் சக்திகள் எத்தகையதோ, அத்தகையதாக உற்பத்தி உறவுகள் அமைகிறது. உற்பத்திச் சக்திகள் உற்பத்தி உறவுகளைக் காட்டிலும் முன்னதாகவே வளர்ச்சியை எட்டுகின்றன. இதன் விளைவாக புதிய உற்பத்திச் சக்திகள் பழைமையாகிவிட்ட உற்பத்தி உறவுகளிடம் முரணை அதிகப்படுத்துகின்றன.

பழைய உற்பத்தி முறைக்குள்ளே புதிய உற்பத்தி முறை முதிர்வது மனிதர்களின் உணர்வை சாராமல் நிகழ்கிறது. இந்நிகழ்வு உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியால் ஏற்படுகிறது. இந்தப் புறநிலையே வர்க்கப் போராட்டத்துக்கான பொருளாயாத சக்தியாக இருக்கிறது. அதாவது இப்புறநிலை வர்க்கப்போராட்டத்தில் பிரதிபலிக்கிறது. இறுதியில் வார்க்கப் போராட்டம் உச்சத்தை எட்டுகிறது. இந்த உற்பத்தி முரண் சமூகப் புரட்சியின் மூலமே தீர்க்கப்படுகிறது.

இங்கு வரலாற்றின் பொது விதியை மட்டுமே எடுத்துரைத்திருக்கிறது. இதனை அப்படியே வரலாற்றின் மீது திணிக்க முடியாது. ஒவ்வொரு நாட்டின் பொருள் உற்பத்தியின் நிலையினையும், அதனால் ஏற்படுகிற வர்க்க உறவுகளின் முரணையும், உள்ளடக்கிய பல்வேறு வளர்ச்சிப் போக்கின் தனித்த தன்மைகளையும் அறிந்து செயற்பாட்டைத் தீர்மானிக்க வேண்டும்.

        அந்தந்த நாட்டினுடைய வளர்ச்சியின் புறநிலை விதிகளை அறிந்து, அதனை ஆதாரமாகக் கொண்டு வரலாற்றின்  திசைவழியை தெரிந்து, அதனடிப்படையில் தனது செயல்தந்திரத்தை அமைத்து கம்யூனிஸ்ட் இயக்கம் செயற்பட வரலாற்றியல் பொருள்முதல்வாதம் வழிகாட்டுகிறது.

புறநிலை  விதி என்கிற, சமூக வளர்ச்சியின் போக்கை உணர்ந்து அதன் வழியில் செல்வதையே அவசியத்தை அறிந்து செயற்படுவதாகக் கூறுகிறது மார்க்சியம். புறநிலை அவசியத்தைப் பற்றிய அறிவு மக்களுக்கு வரலாற்றில் செயற்பாட்டுச் சுதந்திரத்தைக் கொடுக்கிறது. இதனை அறிந்து கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைமை தனது செயற்பாட்டை வகுத்துக் கொள்கிறது.

       முற்போக்கு வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்றழைக்கின்ற கட்சி, சில நேரங்களில் சமூகம் வழங்கிய வாய்ப்புகளை தவறவிட்ட நிகழ்வுகள் உண்டு. வரலாற்று அவசியத்தின் அடிப்படையில் சென்று, கம்யூனிஸ்ட் இயக்கம் வெற்றி பெறுவதற்கு கட்சியானது, பாட்டாளி வர்க்க உணர்வில் உறுதியும், அமைப்பின் கட்டுப்பாடும் பெற்றதாக இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

       கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு சமூக வளர்ச்சியைப் பற்றிய கண்ணோட்டத்தை வரலாற்றியல் பொருள்முதல்வாதம் அளித்திடுகிறது. தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்தவத்திடம் காண்கிறது என்பார் மார்க்ஸ்.

பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில்தான் பாட்டாளி வர்க்க உணர்வையும், கட்டுப்பாட்டையும் பெற்றுக்கொள்ள முடியும். மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து  விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாகியிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள் என்று லெனின் கூறுவார். இந்த மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதலில் சென்றால்தான், முதலாளித்துவச் சுரண்டலின் காரணத்தைப் புரிந்து கொண்டு,  அதன் உள்முரண்பாட்டின் தீர்வாய், முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்துவிட்டு சோஷலிச சமூகத்தை அமைக்க முடியும்.


அதற்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதமே கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழிகாட்டும்.

Saturday, 2 July 2016

உலகப் புரட்சிக்கான புறநிலை என்பது கம்யூனிச சித்தாந்தத்தை வீழ்த்துமா? நிரூபிக்குமா?


    தோழர் பிரபாத் பட்நாயக்கின் கட்டுரையின் சுறுக்கம் (இடது பாதையில்தடைக்கற்கள்- தி இந்து – 19-06-2016) தமக்குள் முரண்பட்ட கருத்தையே பதிந்துள்ளது. லெனினால் எழுதப்பட்ட “ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்” என்ற நூலையைப்பற்றி பிரபாத் பட்நாயக் குறிப்பிடும்போது நூறு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டது, உண்மையில் மிக முக்கியமான நூல், மக்களால் இன்னும் அது வாசிக்கப்படவில்லை என்று எதோ வருத்தப்பட்டு எழுதியிருக்கிறார் என நினைத்தால் “புரட்சிகளின் சகாப்தம் வந்து சேர்ந்துவிட்டதாக அந்தப் புத்தகம் வாதிட்டது. புரட்சிகளின் சகாப்தத்துக்கான காரணம் எது என்பதையும் அது விளக்கியுள்ளது” என்று அதன் வாதத்தையும் அடுத்தப் பத்தியில் விளக்கப்பட்டுள்ளதையும் பேசுகிறார், இவர் இதனை ஏற்றுக் கொண்டாரா? அல்லது மறுக்கிறாரா? என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ஏன் என்றால் கம்யூனிசத்தின் பின்னடைவுக்கு (பட்நாயக்கைப் பொருத்தளவில் இது தகர்வு) “உலகப் புரட்சி வந்து கொண்டிருப்பதாக அளித்த வாக்குறுதியின் மீது கட்டமைக்கப்பட்டிருப்பது தான்” என்கிறார்.

"உலகப் புரட்சி சமீபத்தில் இருக்கிறது என்று சொல்லப்பட்டது. ஆனால் புரட்சி பின்வாங்கிவிட்டது" என்கிறார். ஆக இதற்கான லெனினது விளக்கத்தைப் பிரபாத் பட்நாயக் ஏற்கவில்லை என்பது உறுதியாகிறது. மறுப்பதோடு லெனினிய திருப்புமுனையான சம்பவங்கள் காலாவதியாகிவிட்டது, அதனால் கம்யூனிசம் நடைமுறைக்குப் பொருத்தமானதாகத் தொடர்ந்து இருப்பதற்காக லெனினிய திருப்புமுனைக்கு முந்தைய கட்டத்துக்கு இணையான நிலைக்கு அது வரவேண்டும் என்கிறார். அத்தோடு லெனினியத்துக்குப் பிறகான தொடர் இணைப்பான சம்பவங்களைக் கம்யூனிசத்தின் இயலாமையால் எதிர்கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த இயலாமையே லெனினியத்தைப் புறக்கணித்ததின் விளைவு என்பதே மெய்யான உண்மையாகும். இந்த இயலாமை லெனினியத்தை உள்வாங்காமை, இன்றைய நிலைமைக்கு அதனைக் கடைப்பிடிக்காமை என்பதில் தான் அடங்கியிருக்கிறது.

பிரபாத் பட்நாயக்கின் கட்டுரையின் அனைத்து உட்தலைப்புகளும் லெனினியத்தையும் கம்யூனிசத்தையும் கேள்வுக்குள்ளாக்குவதாகவே இருக்கிறது. முதலில் லெனினியத்தைப் பார்ப்போம். ஏகாதிபத்திய காலத்தில் ஏற்பட்ட போரின் போது இரண்டாம் அகிலத்தின் சந்தப்பவாதத்துடன் மோதலில் தோன்றிய லெனினியப் பகுதியைப் பற்றி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்துடனான மோதல்களில் தான் லெனினியம் வளர்ச்சியுற்றது. ஒருபுறத்தில் மார்க்ஸ் எங்கெல்சுக்கும் மறுபுறத்தில் லெனினுக்கும் இடையில், இரண்டாம் அகிலத்தினுடைய சந்தர்ப்பவாதத்தன் கடிவாளமற்ற ஆதிக்கம் மேலோங்கியிருந்த ஒரு முழுநிறைவான காலம் இருந்ததை நாம் கட்டாயம் மறந்துவிடக் கூடாது என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதனையே பிரபாத் பட்நாயக் மறக்க அல்லது மறைக்கப் பார்க்கிறார்.

"போரும் ருஷ்ய சமூக-ஜனநாயகமும்" என்ற நூலில் லெனின் அனைத்து நாடுகளின் அரசுகளும் முதலாளித்துவக் கட்சிகளும் பல பத்தாண்டுகளாக ஆயத்தம் செய்துவந்த ஐரோப்பியப் போர் மூண்டுவிட்டதையும், முன்னேற்றமடைந்த நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சியின் ஆகச் சமீப கட்டமான ஏகாதிபத்திய கட்டத்தில் சந்தைகளுக்கான போராட்டம் தீவிரமடைந்துவிட்டதையும் சுட்டிக்காட்டி ஏகாதிபத்திய போர் தவிர்க்க முடியாமையினை விவரித்துளளார். மேலும், ஏகாதிபத்திய நாடுகள் தமது நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்கு உழைக்கும் மக்கள் திரளின் கவனத்தைத் திசைத்திருப்புதல், தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குலைத்தல், தேசியவாதத்தை முன்வைத்துப் பாட்டாளி வார்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தைப் பலவீனப்படுத்துதல் என்பவையே இந்தப் போரின் ஒரே மெய்யான குறிக்கோள் என்று எழுதியிருக்கிறார்.
"ஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்" என்ற நூலில், இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்தை லெனின் சுட்டிக்காட்டுகிறார். உயர்வான ஊதியத்தினைப் பெற்ற, மேட்டுக்குடி உழைப்பாளர்கள் குட்டிமுதலாளித்துவ மனப்பான்மையைப் பெற்றுள்ளனர். அவர்களே இரண்டாவது அகிலத்தின் பிரதானத் தூண்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையில் நடைபெறும் உள்நாட்டுப் போரில், தவிர்க்க இயலாதபடி, பெரிய எண்ணிக்கையில் முதலாளித்துவ வர்க்கத்தின் தரப்பை ஏற்றனர்.

போல்ஷிவிக் கட்சி மட்டுமே ஏகாதிபத்திய போரை எதிர்த்து உறுதிகுலையாமல் நின்றது. மற்றொரு போக்காக நடுநிலைவாதிகள் தோன்றினர். ஜெர்மனியில் காவுத்ஸ்கியின் தலைமையிலும், பிரான்சில் லோங்கேயின் தலைமையிலும், ருஷ்யாவில் டிராட்ஸ்கியின் தலைமையிலும் தங்களது தடுமாற்றத்தை நடுநிலை போக்காகக் கடைப்பிடித்தனர்.

தாய்நாட்டைக் காப்போம்” என்ற சந்தர்ப்பவாத முழக்கத்திற்கு எதிராக லெனின் ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக, உள்நாட்டு முதலாளித்துவத்துக்கும் எதேச்சதிகார அரசுக்கும் எதிராகத் திருப்பும்படி கோரிக்கை விடுத்தார். இதுவே தொழிலாளர்களின், விவசாயிகளின், மக்களின் நலன்களை வெளிப்படுத்துவதாக இருந்தது.

இந்தக் கடமையை ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகள் நிறைவேற்றிட தவறிவிட்டனர். அகிலத்தில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் சோஷலிசத்திற்குப் பதில் தேசியவாதத்தைக் கைக்கொண்டனர். தமது சொந்த நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் தேசியவெறிக்கு அடிபணிந்து போரை நியாயப்படுத்த முனைந்தனர். அகிலத்தின் தலைவர்கள் சோஷலிசத்திற்கு எதிராக நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டனர் என்று லெனின் கடிந்துகொண்டார்.

உற்பத்திச் சக்திகள் சமூகமயமாகிவிட்ட நிலையில் இந்த புல்லுருவித்தனமான ஏகாதிபத்தியம் அழுகிவிழ வேண்டியநிலையில் இருக்கிறது என்று புரட்சிக்கான புறநிலை காணப்படுவதாக லெனின் இந்நூலில் கூறியிருக்கிறார். ஆனால் அகநிலையாக உலக கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பப் போக்கினாலும் அதன் புரட்சிகரப் போர்குணம் தேசியவெறியாக மாறிப் போனதாலும் இந்த செயற்கைத் தன்மையால் ஏகாதிபத்தியம் தூக்கியெறியப்படுவது தாமதம் ஆகலாம்.

சமூகப் புரட்சிக்கான புறநிலையாக அடித்தளம் வளர்ச்சி பெற்றிருந்தாலும், மேற்கட்டமைப்பின் சந்தர்ப்பவாதப் போக்கினால் புரட்சிகர வாய்ப்பு தவறிப் போகலாம் என்று லெனின் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தான் இரண்டாம் அகிலத்தின் இறுதி நிலை, அகிலத்தின் இந்தச் சந்தர்ப்பப் போக்கை சொல்லாமல் பிரபாத் பட்நாயக் அகிலம் கம்யூனிச நிறுவனத்துக்கான கருத்துரீதியான அடித்தளத்தை வங்கியதாகக் கூறுகிறார். மேலும் ‘லெனினிய திருப்புமுனை’ என்று ஒருவர் அழைக்கக்கூடிய இந்த நிலைமையிலிருந்து இரண்டாம் உலகப் போரின் முடிவில் உலகம் விலகிப்போய்விட்டது. பளீரென்று மின்னிய கம்யூனிஸத்தின் வெற்றிகளின் தருணம்தான் அதன் பின்னடைவுக்கான ஆரம்பமாகவும் இருந்தது என்பது முரண் என்று கூறி லெனினியத்தோடு முரண்படுறார். ஆனால் லெனின் மார்க்ஸ் கூறிய புரட்சிகரப் புறநிலை அடிப்படையில் இருந்துதான் ஏகாதிபத்தியத்தை வரையறுத்திருக்கிறார்.

வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்தி சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது- என்கிற மார்க்சின் புரட்சியின் புறநிலையை, லெனின் பின்பற்றி உலகப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார். ஆனால் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதப் போக்கால், புறநிலைக்கான அகநிலை போக்கில் பின்னடைவு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே ஒரு நாட்டின் புரட்சி என்கிற புதிய கோட்பாட்டைத் தோற்றுவிக்கிறார். இதுவும் லெனினியத்தின் ஓரங்கமாகும்.

ஏகாதிபத்திய காலக்கட்டத்தின் புறநிலைமைகளையும் அகநிலைமைகளையும் கணக்கில் கொண்டு லெனின் மார்க்சியப் புரட்சிகரப் போதனையை விரிவுபடுத்தினார். சோஷலிசப் புரட்சிக்குத் தேவையான பொருளாயத சக்தியான புறநிலைமைகள் பக்குவப்பட்டிருக்கின்றன. மூலதனத்தின் தொடர் ஒடுக்குமுறையால் பாட்டாளி வர்க்கமும் ஒன்று திரண்டு காணப்படுகிறது. காலனிய நாடுகளின் விடுதலைப் போராட்டமும் தீவிரம் கண்டுள்ளது. வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகளில் சோஷலிசப் புரட்சிக்கான சூழல் தோன்றியிருந்தது, இந்தச் சூழ்நிலையைப் புரட்சியாக மாற்ற வேண்டிய அகநிலை சக்திகள் செயலில் இறங்க வேண்டும். ஆனால் போல்ஷிவிக்குகளின் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர மேலைநாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் “தாய்நாட்டின் விடுதலை என்று சந்தர்ப்வாதமாகச் சுரண்டும் வர்க்கத்தோடு சேர்ந்துகொண்டன. இந்நிலையில் லெனின் புரட்சி பற்றிய மார்க்சியக் கோட்பாட்டைப் புறநிலைக்கு ஏற்ப மாற்றினார்.

வளர்ச்சி பெற்ற அனைத்து நாடுகளில் அல்லது பெரும்பான்மையான நாடுகளில் சோஷலிசப் புரட்சி ஏற்படும் என்று இதுவரை மார்க்சியவாதிகள் கருதிவந்தனர். லெனினும் இதே கருத்தை கொண்டிருந்தார். வளர்ச்சியடைந்த நாடுகளில் முதலாளித்துவத்தின் முதிர்ச்சி இந்த முடிவை எடுக்க வைத்தது என்பது உண்மையே. ஆனால் அன்றைய நிலையில் ஏகாதிபத்தியமாகச் சீரற்ற வளர்ச்சியின் விளைவாக ஏகாதிபத்தியத்தின் சங்கிலித் தொடரில் பலவீனமான கண்ணியில் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று லெனின் முடிவெடுத்தார். அதாவது ஒரு தனிநாட்டில் புரட்சி ஏற்படுத்தி அதன் வெற்றியின் தொடர்ச்சியாகப் பிறநாடுகளில் புரட்சி வெடிக்கும் என்று விளக்கினார். அகிலத்தின் சந்தர்ப்பவாதிகளிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதால் ஒரு நாட்டில் மட்டுமே புரட்சி நடைபெற்றது. இது எந்தவகையிலும் மார்க்சுகு மாறானது கிடையாது. லெனினிய திருப்புமுனைக்கு முந்தைய கட்டத்துக்கு இணையான நிலைக்கு அது வர வேண்டும் என்கிற பிரபாத் பட்நாயக் அவர்களின் கருத்து மார்க்சிய லெனினியத்திற்கு மாறானதேயாகும். இன்றைய தேவை முந்தைய கட்டத்துக்குச் செல்வதல்ல, லெனினியத்தை உள்வாங்கி, இன்றைய நிலைமைக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.

லெனினிய கட்டம் காலாவதியாகிவிட்டது, இன்று நடைபெறுகிற போர்களுக்கான அடிப்படைக் காரணமாக ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான போட்டி அமையாது ஏன், துணைக் காரணமாகக்கூட அமையாது என்கிறார் பிரபாத் பட்நாயக். இரண்டாம் உலகப் போரும், அதனைத் தொடர்ந்து வந்திருக்கின்ற (2007-2008) பொருளாதார நெருக்கடியும் லெனினியத்தின் தேவையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
இந்த நெருக்கடியின் விளைவாக ஒரு மூன்றாம் உலகப் போர் மூளவில்லை என்பது உண்மை தான், அதனைத் தாங்கும் வலிமை இன்றைய ஏகாதிபத்திய நாடுகளுக்கு இல்லை. ஆனால் பல இடங்களில் வெளிப்படுகிற போர்கள் ஏகாதிபத்தியத்தின் நலன்களை வெளிப்படுத்துகவே இருக்கிறது. ஆனால் பிரபாத் பட்நாயக் அவர்களுக்கு இப்போர்கள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் போராகப்படுகிறது போல் தெரிகிறது. லெனினியத்தைவிட்டு விலகும் போது மார்க்சியத்தைவிட்டு விலகும் நிலைதான் ஏற்படும். ஆகப் பிரபாத் பட்நாயக் இடதுபாதையில் தடைக்கற்களாகக் கருதுவது லெனினியமே ஆகும் அதனால் இக்கட்டுரையின் நோக்கம் தடையை நீக்காமல் நீடிக்க வகைசெய்கிறது. முதலாளித்துவ உற்பத்தியின் உள்முரண்பாட்டிற்குத் தீர்வு சமூகப் புரட்சியே என்கிற மார்க்ஸ் லெனின் ஆகியோரின் கோட்பாட்டையே இன்றைய பொருளாதார நெருக்கடிகள் நிரூபிக்கின்றன.


உலகப் புரட்சிக்கான புறநிலை என்பது கம்யூனிச சித்தாந்தத்தை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே இன்றைய அகநிலை மாற்றத்துக்கு லெனினியமே வழிகாட்டும். 

Wednesday, 2 March 2016

சுயநிர்ணய உரிமையும் பிரிவினைவாதமும்

ஒரு நாடு மற்றொரு வல்லரசால் அடக்கி தனதாட்சிக்கு கீழ் கொண்டுவரும் நிலையில், ஒரே நாட்டில் உள்ள சிறிய தேசிய இனங்களை பெரும்தேசிய இனம் தமக்குகீழ் அடக்கி ஒடுக்குகின்ற சூழ்நிலையில் கம்யுனிஸ்ட் கட்சியின் நிலைபாடு பற்றி ஆராய்ந்ததின் விளைவே தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடாகும்.

ஒடுக்கு முறை எங்கு நடைபெற்றாலும் அதனை எதிர்ப்பது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். அந்தக் கடமையை குருட்டாம் போக்கில் செய்திடாமல் வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்கின்ற கோட்பாட்டை வகுத்தனர். இதன் அடிப்படையில் தான் அகிலத்தில் இதுபற்றிய விவாதங்கள் நடைபெற்றது.

லெனின் மகாருஷ்யர்களால் ஒடுக்கப்படும் அனைத்து தேசிய இனங்களுக்கு முழுமையான சுயநிர்ணய உரிமையை வழங்க வேண்டும் என்கிறார். இந்த ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் மாகாருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கு மிகவும் தேவையானதாகும். இதனைக் குறிப்பிடும் போது மார்க்ஸ் ஆங்கிலேயத் தொழிலாளர்களின் சோஷலிச இயக்கத்தின் நலன்களுக்காக அயர்லாந்தின் சுதந்திரத்தையும் தேசிய  விடுதலையையும் கோரியதை சுட்டுகிறார்.

இதனை லெனின் கூறுகிறார்:-
"மகாருஷ்யர்களின் தேசிய இனப் பெருமிதத்தின் நலன்களும் (அடிமைப்பொருளில் அல்ல) மகாருஷ்ய (இன்னும் இதர) பாட்டாளிகளின் சோஷலிச நலன்களுக்கும் முற்றிலும் பொருந்தியவைதான். எப்பொழுதும் நமக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர் மார்க்ஸ் தான், அவர் இங்கிலாந்தில் பல பத்தாண்டுகள் வாழ்ந்து, பாதி ஆங்கிலேயராக மாறி, ஆங்கிலேயத் தொழிலாளர்களின் சோஷலிச இயக்கத்தின் நலன்களுக்காக அயர்லாந்துக்குச் சுதந்திரமும் தேசிய விடுதலையும் கோரினார்."
மகாருஷ்யர்களின் தேசியஇனப் பெருமிதம் பற்றி -  பக்கம் - 178

மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதங்களைக் (1864 நவம்பர் 4, 1866 ஜீன்7, ஜீன் 20) குறிப்பிட்டு லெனின் கூறுகிறார்:-
"மார்க்சின் இந்த விமர்சனக் குறிப்புகளிலிருந்து இயல்பாக எழும் முடிவு தெளிவானது:-

தேசிய இனப் பிரச்சினையையை குருட்டு வழிபாடு ஆக்குவது தொழிலாளி வர்க்கத்துக்கு உகந்த செயல் அல்ல. ஏனெனில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி எல்லா தேசிய இனங்களையும் கட்டாயமாக சுதந்திரமான வாழ்வை நோக்கி எழுச்சியுறச் செய்வது கிடையாது. ஆனால் மக்கள் திரளின் தேசிய இன இயக்கங்களை அவை தொடங்கிய பிறகு ஒதுக்கித் தள்ளுவதும், அவற்றினுள் முற்போக்கானதாக இருக்கும் அம்சங்களை ஆதரிக்க மறுப்பதும் நடைமுறையில் தேசியவாதத் தப்பெண்ணங்களுக்கு இடமளிப்பதாகும், அதாவது "சொந்த" தேசிய இனத்தை  "மாதிரி தேசிய இனம்" (அதற்கு மட்டுமே ஓர் அரசை நிறுவிக் கொள்ளும் தனிமுழு உரிமை இருக்கிறது என்பதைச் சேர்த்துக் கூறுவோம்) என்று ஏற்றுக் கொள்வதாகும்"

      மார்க்சின் விமர்சனக் குறிப்புகளிலிருந்து லெனின், தேசிய இன போராட்டம் இயக்கமாக தொடங்கிய பிறகு அதனை ஒதுக்கித் தள்ளுவதும் அதனுள் காணப்படும் முற்போக்கான அம்சங்களை ஆதரிக்காமல் இருப்பதும் தேசியவாதத் தப்பெண்ணங்கள் தோன்றுவதற்கு இடம் வகுத்துவிடும் என்று எச்சரிக்கிறார். இதனை குறிப்படும் போது லெனின் கூறுகிறார், தொழிலாளிகளின் வர்க்கப் போராட்டத்தோடு ஒப்பிடும் போது தேசிய இனப் பிரச்சினை என்பது இரண்டாம் இடமே மார்க்ஸ் கொடுக்கிறார், ஆனால் அவரது கோட்பாடு தேசிய இன இயக்கங்களைப் புறக்கணித்ததே கிடையாதென்பதையும் சேர்த்து வலியுறுத்துகிறார்.

மேலும் லெனின் கூறுவதைக் கேளுங்கள்:-
"பாட்டாளிகளின் ஒற்றுமையின் நலன்களும் அவர்களது வர்க்க ஒருமைப்பாட்டின் நலன்களும் தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று கோருகிறது."
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 152

                இதன் அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்கான கம்யூனிஸ்டுகளின் வேலைத்திட்டத்தை லெனின் தொகுத்துத் தருகிறார். அதில் எந்த தேசிய இனத்துக்கும். எந்த மொழிக்கும் தனி உரிமை என்பது கிடையாது, தேசிய இனங்களின் அரசுகள் பிரிவடைவது ஜனநாய வழியில் நடத்தப்பட வேண்டும். தேசிய இனச் சிறுபான்மையினரது உரிமைகளுக்கு ஊறு ஏற்படாமல் காப்பது என்பதையும் வலியுறுத்துகிறார்.

சுயநிர்ணய உரிமையும் பிரிவினைவாதமும்


தேசிய இனச் சிக்கலின் தோற்றம் கட்டாயப் பிரதேச இணைப்பில் தான் அடங்கிருக்கிறது. ஒரு தேசிய இனம் பிறிதொரு தேசிய இனத்தை பலாத்தாரத்தால் ஐக்கியப்படுத்துவதையே கட்டாயப் பிரதேச இணைப்பு என்று கூறப்படுகிறது.

கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்ட பிரதேசங்களின் எழுச்சியை ஆதரிக்க மறுக்கப்பதானது, அது புறநிலை ரீதியில் கட்டாயப் பிரதேச இணைப்பை ஆதரிப்பதாகிவிடும். சோஷலிசத்துக்கு துரோகம் செய்யாமல் இருக்க வேண்டுமானால் சுயநிர்ணய உரிமைக்கு போராடும் எழுச்சிக்கு அதரவு அளிக்க வேண்டும் என்கிறார் லெனின். (பக்கம் 223)

      இந்த ஆதரவு என்பது பிரிந்து சென்று தனியான அரசை அமைத்துக் கொள்கின்ற சுயநிர்ணய உரிமையைத் தவிர வேறு எந்த அர்த்தத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இதனை மேலும் லெனின் விளக்குகிறார், மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள ஆதிக்கம் செய்யும் தேசிய இனம், அரசு ரீதியாக பிரிந்து செல்ல விரும்புகின்ற தேசிய இனத்தின் மீது செலுத்தப்படுகிற பலப்பிரோகத்தை நிபந்தனயைற்ற வகையில் எதிர்க்க வேண்டும். பிரிந்து செல்ல வேண்டும் என்று விரும்புகின்ற, பிரிச்சினைக்கு உரிய பிரதேசத்தின் மக்கள் எல்லோரும் நேரடியாக, சமமான மதிப்பைக் கொண்ட வாக்குகளின் மூலம் ரகசிய வாக்கெடுப்பு முறையில் தங்களது கருத்தை பதிவதை அடிப்படையாகக் கொண்டு தீர்க்க வேண்டும். தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக்கு அனுமதிக்கின்ற, தேசிய இனங்களின் சுயநிரிணய உரிமையை மறுப்பதை ஆதரிக்கின்ற, மிதவாத முதலாளித்துவக் கண்ணோட்டத்தில் உள்ள கட்சிகளை உறுதியாக எதிர்த்துப் போராட வேண்டும் என்று லெனின் கூறுகிறார். (தேசிய இனப் பிரச்சினை பற்றிய ஆய்வுரைகள் பக்கம் 87-88-89)

                ஒடுக்குதலுக்கு ஆளான தேசிய இன மக்கள் தங்களுக்கான அரசை பொதுவாக்கின் மூலமாக தீர்க்க வேண்டும். ஒரு மத்திய பாராளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்து பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதல்ல இதன் பொருள். பிரிந்து போகும் சிறுபான்மையினருடைய பாராளுமன்றத்தில் அல்லது சபையில் அல்லது அவர்களுக்கு இடையில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் தீர்வு காண வேண்டும் என்பதே அதன் பொருளாகும். 1905ல் ஸ்வீடனிலிருந்து நார்வே பிரிந்த போது நார்வே மட்டும் தான் வாக்களித்து முடிவெடுத்தது. (பக்கம் 13)

சுயநிர்ண உரிமையை அங்கீகரிப்பது மிகவும் கடைக்கோடி முதலாளித்துவ தேசியவாதத்துக்கே உதவும் என்கிற கூற்று சிறுபிள்ளைத்தனமான மடமை என்கிறார் லெனின். ஏனெனில், இந்த உரிமையை அங்கீகரிப்பதானது, பிரிவினையை எதிர்த்துப் பிரசாரம், கிளர்ச்சி செய்வதையோ அல்லது முதலாளித்துவ தேசியவாத்தை அம்பலப்படுத்துவதையோ எவ்வகையிலும் விலக்குவதில்லை. இதற்கு மாறாக பிரிந்து போகும் உரிமையை மறுப்பது தான் மிகக் கடைக்கோடி தேசியவாதத்திற்கு உதவுவதாகிவிடும் என்பதே மறுக்க முடியாத உண்மை என்கிறார் லெனின்.

ரோஸா லுக்சம்பர்க் செய்த நகைக்கும்படியான தவற்றின் சாரம் இதில் தான் இருக்கிறது. தன்னாட்சிக் கோரிக்கையை விதிவிலக்காகப் போலந்துக்கு மட்டும் எழுப்பக் கூடியதாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் அதிவினோத தவறினை புரிகின்றார். இதனை லெனின் கூறுகிறார்:-
".. சிறப்புக்குரிய நமது ரோஸா லுக்சம்பர்க் எழுதுவதைப் படிக்கையில் நகைக்காமல் இருப்பதற்கில்லை, கருத்தார்த்த பாவனையோடு, "தூய மார்க்சியத்" தொடர்களைக் கையாண்டு, தன்னாட்சிக் கோரிக்கையானது போலந்துக்கு மட்டும்தான் பொருத்தமானது, அதுவும் விதிவிலக்காக மட்டும்தான் என்று அவர் நிரூபிக்க முயலுகிறார் !"
தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள் - பக்கம் 64-65

மேலும் ரோசா லுக்சம்பர்க்கைப் போன்றோருக்கு தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பது பற்றி லெனின் கூறுகிறார்:-
"மார்க்சிய வேலைத்திட்டத்தின் "தெளிவின்மையை" ஏளனஞ்செய்து இப்பிரச்சினையையே அவர்கள் அசட்டை செய்து விட்டார்கள், தேசிய இனங்களின் சுயநர்ணய உரிமை பற்றி, 1903ம் ஆண்டு ருஷ்ய வேலைத்திட்டத்தில் மட்டுமின்றி, 1896ல் நடைபெற்ற லண்டன் சர்வதேசக் காங்கிரசின் தீர்மானத்திலேயே கூறப்பட்டுள்ளது என்பதை பேதமை காரணமாக அவர்கள் அறியவில்லை போலும். சம்பந்தப்பட்ட இந்தப் பிரிவின் சூக்குமமான, இயக்க மறுப்பியல் எனும் பாவத்துக்குச் சரணடைந்துவிட்டாரே என்பதுதான் இதைவிட அதிக ஆச்சரியமானது.

பிரிந்து போகும் உரிமையை ஆதரிப்பது, ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் முதலாளித்துவ தேசியவாதத்தை ஆதரிப்பதாகக் கூறுகின்றவர்களைப் பார்த்து லெனின் கூறுவதாவது.
"ஒடுக்கப்பட்டுள்ள தேசிய இனங்களின் முதலாளித்துவ தேசியவாதத்திற்கு உதவி விடுவோமோ என்ற அச்சத்தில் சில ஆட்கள் ஒடுக்கும் ஒடுக்கும் தேசிய இனத்தின் முதலாளித்துவ தேசியவாதத்திற்கு, அதற்கும் மேலாகக் கறுப்பு நூற்றுவர் வகை தேசியவாதத்திற்கு உதிவி விடுகிறார்கள்."  - பக்கம் 15

                தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவது ஜனநாயக சக்தி என்ற முறையில் பாட்டாளி வர்க்கத்துக்கு உள்ள கட்டாய கடமையாகும். இக் கடமை பாட்டாளிகளது வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு நிச்சமாக உகந்ததாகும். எப்படி என்றால் தேசிய இனப் பிரசச்சினைத் தொடர்பான பூசல்கள் வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிக்கின்றன. அதாவது, சிறிய தேசிய இன மக்கள் மீதான இனரீதியான ஒடுக்குதல் நடைபெறும் போது கம்யூனிஸ்டுகள் அவர்களை ஆதரிக்காவிட்டால் ஒடுக்கு முறைக்கு எதிரானவர்கள் கம்யூனிஸ்டுகள், அனைத்து ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதின் மீதான நம்பிக்கை போய்விடும். இந்த நம்பிக்கை இழந்த நிலையில் அவர்களை வர்க்க ரீதியாக கம்யூனிஸ்டுகள் ஒன்றிணைப்பது இயலாத செயலாக மாறிவிடும்.

      இதனைத் தொடர்ந்து ஒர் எச்சரிக்கை வைக்கிறார் லெனின், அது என்வென்றால் ஒடுக்கத்துக்கு ஆளான தேசிய இனத்துக்கு கொடுக்கப்படும் ஆதரவின் வரம்பை தாண்டுவது முதலாளித்துவத்தின் தேசியவாதப் பக்கம் சாய்ந்து, பாட்டாளி வர்க்த்துக்கு துரோகம் புரிவதில் போய் முடிந்துவிடும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

லெனினது எச்சரிக்கையின்படியே கவனமாக செயற்பட வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். தேசிய இனப் பிரச்ச்சினையில் முற்போக்கான ஜனநாயகப் போராட்டத்தோடு நின்றுவிட வேண்டும், அதற்கு மேல் அதில் வீழ்ந்து கிடந்தால் முதலாளித்துவ தேசியவாதத்தை ஏற்றுக்கொண்டதாகிவிடும்.

      முதலாளித்துவ தேசிய வெறி பலநேரங்களில் தேசத்தை துண்டாடும் நோக்கிலேயே செயல்படுகிறது. இதனையும் பாட்டாளி வர்க்க கண்ணோட்டமான பிரிந்து செல்வதுடன் கூடிய சுயநிர்ணய உரிமையையும் ஒன்றென தவறாக புரிந்து கொள்கின்றனர். பிரிவினைவாதம் வேறு சுயநிர்ணய உரிமை என்பது வேறு. பிரிவினை வாதம் தேசத்தை துண்டாட வேண்டும் தனித்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தோன்றுவது.

பாட்டாளின் சுயநிர்ணய உரிமை என்பது பல்வேறு தேசங்களில் உள்ள தொழிலாளர்கள் நெருக்கமாக ஒன்றிணைத்து முழுமையான ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான வழியாக உருவாக்கப்பட்டது.

லெனின் கூறுகிறார்:-
"ருஷ்யாவின் பகுதியாக உருவெடுத்துள்ள எல்லா தேசங்களும் தடங்கலின்றிப் பிரிந்து போகவும் சுதந்திரமான அரசுகளை உருவாக்கிக் கொள்ளவுமான உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். அவற்றுக்கு இந்த உரிமையைத் தர மறுப்பதோ அல்லது அது நடைமுறையில் செயலுருப் பெறுதை உத்தரவாதம் செய்யும் நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவதோ நாடு பிடித்தல் அல்லது பிரதேசக் கைப்பற்றல் கொள்கையினை ஆதரிப்பதற்குச் சமமாகும். தேசங்களின் பிரிந்து போகும் உரிமையினைப் பாட்டாளி வர்க்கம் அங்கீகரிப்பது மூலம் மட்டுமே, பல்வேறு தேசங்களிலும் உள்ள தொழிலாளிகளிடையே முழுமையான ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த முடியும், தேசங்களை உண்மையிலேயே ஜனநாயகமான வழிகளில் மேலும் நெருக்கமாக ஒன்றிணைக்க முடியும்."
தேசிய இனப் பிரச்சினை தீர்மானம்- பக்கம் 276-277

      இங்கு லெனின் கூறுவதை உணர்ந்தால் தேசங்களின் பிரிந்து போதல் என்ற உரிமை பாட்டாளிகளின் முழுமையான ஒருமைப்பாட்டை உறுதிபடுத்துவதற்கு துணைபுரியும். அத்தோடு தேசங்கள் ஜனநாயகமான வழிமுறையில் மேலும் நெருங்கி ஒன்றிணைந்து கலக்க முடியும்.

பிரிவினைவாதம் என்று மார்க்சியம் எதைக் குறிப்பிடுகிறது என்பதைப் பார்ப்போம்.


                யாருடனும் ஒன்றாத தனித்திருத்தலை முன்வைத்து, தேசிய குறுகிய மனப்பான்மையால் உருவான இனவெறியாலும், தேசியவெறியாலும் கோருகின்ற பிரிவை பிரிவினைவாதம் என்கிறது மார்க்சியம். அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் பிரிவினையை கோருகின்றனர், அதாவது இன வேறுபாட்டால் உருவான மனவேறுபாட்டை முன்னிருத்து கின்றனர். தனக்கென்று ஒரு நாட்டை, அதாவது யாருடனும் நெருங்காத வகையில் தனித்திருக்க விரும்புதல். மற்றும் தனது மொழிக்கென ஒரு நாட்டை எங்கேயேனும் கட்டியமைக்க வேண்டும் என்ற போக்கில் தனிநாடு கோருதலை மார்க்சியம் பிரிவினைவாதம் என்கிறது.

அது மட்டுமல்லாது முதலாளிகள் பாட்டாளி வர்க்க ஒற்றுமையை குலைப்பதற்கு தேசிய வெறியை ஊட்டுகின்றனர். அதனால் தான் மார்க்சியவாதிகள் சர்வதேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஒரு தேசிய இனம் மற்றொரு தேசிய இனத்தோடு சேர்ந்து இருப்பதற்கும் அல்லது  பிரிந்து போவதற்கும் தாம் விரும்பும் வேறொரு தேசிய இனத்தோடு இணைந்து கொள்வதற்குமான முயற்சியை வலியுறுத்துகின்றனர்.

தேசியத்தை ஒடுக்குகின்ற நிலைமையின் விளைவாகத் தான் தேசத்தை பிரிக்க வேண்டியதாகிறது என்பதே மார்க்சியம். சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து போவதற்கான உரிமையை வலியுறுத்துகிறது அவ்வளவே. இதனை தெளிவுபடுத்துவதற்கு லெனின் விவாகரத்து சட்டத்தை உதாரணத்துக்கு எடுத்து விளக்குகிறார்.

பிரிந்து செல்லும சுதந்திரத்தை வலியுறுத்துவோர், பிரிவினையைத் தூண்டுவதாக குற்றம் சாட்டுவது, விவாகரத்தை ஆதரிப்போர் குடும்ப உறவுகளை அழிப்பவராக குற்றஞ்சாட்டுவது போன்றது. குடும்ப உறவில் விரிசல் இருக்குமாயின், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பில்லா அளவுக்கு பிணக்கு இருக்குமாயின் அவர்கள் சமதான பூர்வமாக -சட்ட பூர்வமாக- பிரிந்து போக அனுமதிப்பது என்பது இருவரும் அந்யோன்யமாக இருக்கும் சூழ்நிலையில் அவர்களிடம் விவாகரத்து என்ற உரிமை எவ்வாறு அவர்களின் பிரிவை தூண்டும். அதே போல் தான் பிரிந்து போகும் உரிமை என்பது பிரிவினையைத் தூண்டுவதில்லை.

முதலாளித்துவ அரசில் சுயநிர்ண உரிமையை நிராகரிப்பது, ஆதிக்க தேசிய இனத்தின் தனியுரிமைகளை ஆதரிப்பதற்கு சமம் என்பதை லெனின் எச்சரிக்கையை யோடு நமக்கு விளக்குகிறார்.

லெனின்:-
“சுயநிர்ணய சுதந்திரத்தை, அதாவது பிரிந்து போகும் சுதந்திரத்தை ஆதரிப்போர் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது விவாகரத்துச் சுதந்திரைத்தை ஆதரிப்போர் குடும்ப பந்தங்கள் அழிக்கப்படுவதை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது போலவே முடடாள்தானமானது, வஞ்சனையானது. பூர்ஷ்வா சமூகத்தில் பூர்ஷ்வா திருமண முறை சார்ந்து நிற்கும் தனியுரிமை மற்றும் ஊழல் நடத்தைகளைத் தாங்கி ஆதரிப்போர் எவ்வாறு விவாகரத்துச் சுதந்திரத்தை எதிர்க்கிறார்களோ அதே போல முதலாளித்துவ அரசில் சுயநிர்ணய உரிமையை நிராகரிப்பதானது, அதாவது தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையினை நிராகரிப்பதானது, ஆதிக்க தேசிய இனத்தின் தனியுரிமைகளையும் ஜனநாயக முறைகளையும் தாங்கி ஆதரிப்பதே தவிர வேறெதுவுமல்ல.”
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 118-119

      விவாகரத்து உரிமை இருப்பதினால் விவாகரத்து நடைபெறுவதில்லை, கணவன் மனைவி ஆகியோர்களுக்கிடைய உள்ள நீக்க முடியாத பிணக்கே விவாகரத்துக்குக் காரணம் என்ற உதாரணத்தைப் போலவே, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பெற்றிருப்பதனால் தேசங்களிடையே பிரிவு நிகழ்வதில்லை, தேசிய இனங்களை ஒடுக்குகின்ற கொள்கையே தேசிய இன அரசைத் தோற்றுவிக்கிறது. தேசியவாத பிரிவினையை மார்க்சியம் பாட்டாளி வர்க்கத்தின் ஒருமைப்பாட்டை குலைக்கும் பிரிவினைவாதமாகவே கருதுகிறது. அதனால் சுயநிர்ணய உரிமையை பிரிவினையைத் தூண்டும் கருத்தாக பார்க்க முடியாது. மேலும் லெனின் கூறுகிறார், ஒரு குறிப்பிட்ட தேசிய இன அரசின்  பிரிவு தேவையான ஒன்றா? இல்லையா? என்று ஸ்தூலமான நிலைமைகளை ஆராந்து முடிவெடுப்பதை கம்யூனிஸ்டுகள் நிராகரிப்பதில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

லெனின்:-
"சமூக-ஜனநாயகவாதிகள் எல்லா தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு அங்கீகாரமளிப்பதனால் ஒவ்வொரு தனியான உதாரணத்திலும் அந்தத் தேசிய இனத்தின் அரசின் பிரிவு அவசியமானதுதான என்பதை சுயேச்சையாக மதிப்பிடுவதை சமூக-ஜனநாயகவாதிகள் நிராகரிக்கிறார்கள் என்பது பொருளல்ல என்பது நிச்சயானது ஆகும்"

தேசிய இனப் பிரச்சினைப் பற்றி ஆய்வுரைகள் (1913 ஜீன் 26) - பக்கம் 89