இருபது ஆண்டுகளாக (1850-1870) பிரான்சை ஆட்டிப்படைத்து
வந்த போனபார்ட் ஆட்சி உளுத்துப் போயிற்று. மூன்றாம் நெப்போலியனின்
அரசு வீழ்வதற்கு வெளியிலிருந்து ஒர் உந்து சக்தி அப்போது தேவைப்பட்டது. ராணுவ வெறியும், நாடுபிடிக்கிற எண்ணமும் கொண்ட லுயீ போனப்பார்ட்
அரசு இருப்பதே, பிரஷ்ய நிலப்பிரபுக்களின் ராணுவ வெறியையும்,
ஜெர்மன் முதலாளித்துவ வர்க்கத்தின் போர் வெறியையும் தீவிரப்படுத்தியது.
பிரான்சு மற்றும் பிரஷ்யா அகிய இரு நாடுகளின் ஆளும் வர்க்கங்கள்
பலகாலமாக இதற்கான தயாரிப்பில் ஈடுபட்டு வந்தன. உளுத்துப்போன தமது ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு
போர் மூலம் பெறும் வெற்றிகள் உதவிடும் என்றும் உள்நாட்டில் காணப்படும் அரசியல் நெருக்கடியைத்
தீர்ப்பதற்கு இத்தகைய போர் பயன்படும் என்றும் நெப்போலியன் அரசு நினைத்தது. பிரஷ்ய நிலப்பிரபுவான பிஸ்மார்க்கும் ராணுவ மோதலுக்கு வழிவகுக்கும் போக்குடையவராக
இருந்த, வரலாற்று நிலைமை தவிர்க்க இயலாதவாறு ஒரு போர்ச்சூழலை
எற்படுத்தியது.
இந்த
வரலாற்றுப் பின்னணியில், 1870ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி பிரான்சுக்கும் பிரஷ்யாவுக்கும் இடையே போர் மூண்டது. இப்போர் காரணமாக இரு நாடுகளிலும் குறுகிய தேசிய வெறி மேலோங்கி வந்தது.
இது குறித்து அகிலத்தின் சார்பாக மார்க்ஸ் முதல் அறிக்கையை எழுதி சமர்ப்பித்தார்.
இதில் இந்தப் போருக்கான காரணங்களை அம்பலப்படுத்துவதுடன் தொழிலாளிவர்க்கம்
இப்போரின் போது கடைபிடிக்க வேண்டிய செயல்தந்திரத்தையும் (Tactics) அவர் வகுத்துக் கொடுத்தார்.
முதல் அறிக்கையில் மார்க்ஸ் கூறிப்பிடுகிறார்:- பாரிஸ்
உறுப்பினர்கள் ஜூலை 12ஆம் தேதியில் பத்திரிகையில் "எல்லா நாடுகளையும் சேர்ந்த தொழிலாளர்களுக்கு" என்ற
அறிக்கையை வெளியிட்டனர். அதில்:-
"ஜெர்மானியச்
சகோதரர்களே! நம்மிடையே பிரிவினை ஏற்பட்டால் ரைன் நதியின் இரண்டு
கரைகளிலும் எதேச்சாதிகாரம் முழுவெற்றி அடையும்.... எல்லா நாடுகளையும்
சேர்ந்த தொழிலாளர்களே! நம்முடைய பொது முயற்சிகளுக்கு இன்று எத்தகைய
முடிவு ஏற்பட்ட போதிலும் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களாகிய நாங்கள்
- தேச எல்லைகள் எமக்குக் கிடையாது- நமது
பிரிக்க முடியாத ஒருமைப்பாட்டின் உறுதி மொழியாக பிரான்சிலுள்ள தொழிலாளர்களின் நல்வாழ்த்துக்களையும்
வணக்கங்களையும் தெரிவிக்கிறோம்."
இதே
போன்று பிரெஞ்சு பிரகடனமாக ஜூலை 22ஆம் தேதி பத்திரிகையில் அகிலத்தின் நெய்யீ-ஸீர்-ஸேன் கிளையின் அறிக்கையின் பகுதி:-
"இது
நியாயமான யுத்தமா? இல்லை, இது தேசிய யுத்தமா?
இல்லை. இது வெறும் வம்சாவளிக்காக நடைபெறும் யுத்தம்.
நாங்கள் மனித குலத்தின், ஜனநாயகத்தின்,
பிரான்சின் உண்மையான நலன்களின் பெயரால் யுத்தத்தை எதிர்த்து அகிலத்தின்
பிரகடனத்தை முழுமையாக, தீவிரமாக ஆதரிக்கிறோம்"
பாரிஸ்
அறிக்கைக்கு ஆதரவாக 50,000
சாக்சன் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் ஹெம்னிட்சில் தீர்மானத்தை நிறைவேற்றினர்
அதில் காணப்படும் பகுதி:-
"ஜெர்மன்
ஜனநாயகத்தின் பெயரால், குறிப்பாக சமூக-ஜனநாயகக்
கட்சியைச் சேர்ந்த தொழிலாளர்களின் பெயரால் நாங்கள் அறிவிக்கிறோம்.... பிரெஞ்சுத் தொழிலாளர்கள் எமக்கு நீட்டியுள்ள நேசரக்கரத்தைப் பற்றுவதில் நாங்கள்
மகிழ்ச்சி அடைகிறோம்.... "உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!" என்ற சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின்
குறிக்கோளை மனதில் கொண்டு எல்லா நாடுகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் நம்முடைய நண்பர்கள்,
எல்லா நாடுகளையும் சேர்ந்த முடியரசர்கள் நமது எதிரிகள் என்பதை நாம் ஒரு
நாளும் மறவோம். "
மாபெரும்
வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அதன் விளைவை முதல் அறிக்கை வெளிப்படுத்தியது, இது மார்க்சின்
அரிய திறமையைக் காட்டியது.:-
"லூயீ
போனப்பார்ட் பிரஷ்யாவை எதிர்த்து நடத்துகின்ற யுத்தத்தில் என்ன சம்பவங்கள் நடைபெற்ற
போதிலும் இரண்டாவது பேரரசுக்குச் சாவுமணி ஏற்கெனவே பாரிசில் அடிக்கப்பட்டுவிட்டது.
அது கோமாளித்தனமாகத் தொடங்கியதைப் போலவே முடிவடையும்"
இதனைப் பற்றி மார்க்ஸ் வெளியிட்ட இரண்டாம் அறிக்கையில், யுத்த
நடவடிக்கைகள் உண்மையில் தொடங்குவதற்கு முன்பே போனப்பார்ட்டிஸ்ட் நீர்க்குமிழி கடந்த
காலத்தைச் சேர்ந்ததாகிவிடும் என்று தாம் எழுதியதை நினைவுபடுத்தினார். மார்க்ஸ் அறிவித்தது போலவே மூன்றாம் நெப்போலியன் 1870ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி, சுமார் ஒரு லட்ச போர்வீரர்களுடன் செடான் எனற் இடத்தில் சரணடைந்தார்.
பிரெஞ்சு ராணுவம் தோல்வி கண்ட இரண்டு நாட்களில் பாரிசில் ஒரு
குடியரசு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மார்க்ஸ் தமது இரண்டாம் அறிக்கையைத் தயாரித்தார்.
நடைபெற்று வந்த நிகழ்வுகளை முன்னமே அறிந்து கொண்டிருந்தமையால்,
பிரெஞ்சு குடியரசு அறிவிக்கப்பட்ட நாளான 1870 செப்டம்பர்
5ஆம் தேதி பற்றிய தகவல் கிடைத்த போது மார்க்சும் எங்கெல்சும் வியப்பேதும்
அடையவில்லை. ஆனால் பாட்டாளி வர்க்கக்கட்சி அமைக்கப்பட்டு உறுதிபெறும்
முன்பே அங்கே புரட்சி
ஏற்பட்டுவிடுமோ என்று அச்சம் கொண்டனர். அரசாட்சியின் வீழ்ச்சி
பிரான்சில் ஜனநாயக அமைப்பு முறை ஏற்படுவதற்கும், நாடுபிடிப்போரை எதிர்த்து தேசிய எதிர்ப்புப்
போராட்டத்தை தோற்றுவிப்பதற்கும் வழிகொடுத்தது. ஆனால் இந்நேரத்தில்
பாரிசில் திறமையான பாட்டாளிவர்க்க தலைவர்கள் வெளிநாட்டில் அல்லது சிறைகளில் இருந்தனர்.
பாட்டாளி வர்க்க அமைப்பின் பலவீனம், குட்டி முதலாளித்துவ
சக்திகளின் தயக்கம் ஆகியவைகளின் காரணமாய் நிறுவப்பட்ட தற்காலிக அரசு செப்டம்பர்
4ஆம் தேதி வலதுசாரி குடியரசாளர்கள் மற்றும் மன்னராட்சியாளர்கள் ஆகியோர்களிடம்
சென்றுவிட்டது. மீண்டும் மன்னராட்சியை நிறுவுவதற்கு வழியேற்பட்டது.
இந்த புதிய நிலைமைக்கு ஏற்ப ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகள் தம்மை
உறுதிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. அகிலத்தில் புதிய நிலைமைக்கேற்ற
கடமைகளை வகுத்துக்கொள்ள வேண்டிவந்தது. இந்த அடிப்படையில்தான்
மார்க்சின் இரண்டாம் அறிக்கை அமைந்திருந்தது. அனைத்து நாடுகளின்
பாட்டாளிவர்க்கம், பிரான்ஸ் துண்டாடப்படுவதை எதிர்த்தும்,
ஜெர்மன் ராணுவவெறியர்களின் நாடுபிடிக்கும் போக்கை எதிர்த்தும் உறுதியாகப்
போராட வேண்டும் என்று அறிக்கை வலியுறுத்தியது.
எதிரி
பாரிஸ் நகரத்தின் பக்கத்தில் நிற்கும் போது, புதிய அரசாங்கத்தை வீழ்த்துவது
ஆபத்தானதும், முட்டாள்தனமானதும் ஆகும் என்று மார்க்ஸ் கூறினார்:-
"பிரெஞ்சு
தொழிலாளி வர்க்கம் மிகவும் சிக்கலான சூழ்நிலையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
எதிரி அநேகமாக பாரிஸ் நகரத்தின் கதவை தட்டிக்கொண்டிருக்கும் போது,
தற்போதைய நெருக்கடி நிலைமையில் புதிய அரசாங்கத்தை கவிழ்க்கும் ஆபத்தான
முயற்சி பெரும் முட்டாள்தனமானதாகும்."
பாட்டாளிகள்
தமது வர்க்க நிறுவனத்தை வலுப்படுத்துவதற்கு, குடியரசு வழங்கிடும் சுதந்திரத்தை,
வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் மார்க்ஸ்:-
"குடியரசுச்
சுதந்திரத்தின் வாய்ப்புகளை, தங்களுடைய சொந்த வர்க்க நிறுவனங்களை
மேம்படுத்துவதற்கான பணிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரான்சின் மறுவுருவாக்கத்துக்கும், உழைப்பின் விடுதலை
என்ற நமது பொதுக்கடமையை நிறைவேற்றுவதற்கும் அது புதிய சக்தியை ஹெர்க்குலசின் வலிமையை
அவர்களுக்குக் கொடுக்கும்"
-என்று இரண்டாம் அறிக்கையில் மார்க்ஸ் எழுதினார். சரியான
தயாரிப்பில்லாத நிலையில் எழுச்சியில் பிரெஞ்சு பாட்டாளிகள் ஈடுபட வேண்டாம் என்று மார்க்ஸ்
எச்சரித்தார்.
இந்த
இரண்டாம் அறிக்கைப் பற்றி லெனின் கூறுகிறார்:-
"அகிலத்தின்
1870 செப்டம்பர் 9ஆம் தேதியின் பெயர்பெற்ற அறிக்கையில்,
காலப்பொறுத்தமற்ற எழுச்சியைச் செய்யக் கூடாது என்று பிரெஞ்சுப் பாட்டாளிவர்க்கத்தை மார்க்ஸ் எச்சரித்தார், ஆனால், அப்படிச் சொல்லியிருந்த போதிலும் 1871ல் எழுச்சி நடைபெற்ற போது "விண்ணைச் சாடுகின்ற"
மக்களின் புரட்சிகரமான முன்முயற்சியை மார்க்ஸ் உற்சாகத்தோடு கொண்டாடி
வரவேற்றார். இந்த நிலைமையிலும் சரி, இதர
பல நிலைமைகளிலும் சரி, மார்க்சினுடைய இயக்கவியல் வகைப்பட்ட பொருள்முதல்வாதத்தின்
நிலையில் நின்று பார்க்கும் போது, ஏற்கெனவே கைப்பற்றியிருந்த நிலையைக் கைவிடுவதை விட, போராடாமலே சரணாகதி அடைவதை விட, புரட்சிகரமான போராட்டம்
தோல்வியடைவதானது பாட்டாளிவர்க்கப் போராட்டத்தின் பொதுவான போக்குக்கும் இறுதி விளைவுக்கும்
குறைந்த தீங்கேயாகும். அப்படிப்பட்ட சரணாகதி பாட்டாளிவர்க்கத்தின்
உறுதியைக் குலைத்திருக்கும், அதன் போர்த்திறனைப் பலவீனப்படுத்தியிருக்கும்."1
மார்க்ஸ்
தமது கருத்தை மாற்றிக் கொண்டதைப் பற்றி கூகல்மனுக்கு அவர் எழுதிய கடிதத்தில் காணலாம்:-
"தோல்வியடைய
முடியாத சாதகமான சந்தர்ப்பங்களில் மட்டுமே போராட்டத்தை நடத்துவது என்ற நிபந்தனையைக்
கடைப்பிடிப்பது என்றால் உலக வரலாற்றை உருவாக்குவது மிகச் சுலபம் என்பது உண்மையே.
மறு பக்கத்தில் "தற்செயலான நிகழ்வுகளுக்குப்"
பாத்திரமில்லை என்றால் வரலாறு மிகவும் மாயத்தன்மை கொண்டதாகவே இருக்கும்.
இத் தற்செயலான நிகழ்வுகள் இயற்கையாகவே வளர்ச்சியின் பொதுவான போக்கில்
ஒரு பகுதியாக இருக்கின்றன, பிற தற்செயலான நிகழ்வுகளால் அவை குறைநிரப்பப்படுகின்றன.
ஆனால் விரைவுபடுத்துவதும் தாமதமும் அந்த இயக்கத்துக்கு முதலில் தலைமை
தாங்குகின்றவர்களின் தன்மை என்ற "தற்செயலான நிகழ்வு"
உட்பட இத்தகைய "தற்செயலான நிகழ்வுகளையே"
மிகவும் அதிகமாகச் சார்ந்திருக்கின்றன"2
1871ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி பாரிஸ் தொழிலாளர்கள்,
முதலாளித்துவ ஆட்சியளர்களை நகரத்தைவிட்டு வெளியேற்றி ஆட்சியதிகாரத்தைத்
தாங்களே எடுத்துக் கொண்டனர். மார்ச் 28ஆம்
தேதி உலகத்தில் முதல் பாட்டாளிவர்க்கத்தின் அரசான பாரிஸ் கம்யூனை நிறுவினர்.
கம்யூன் நிறுவப்பட்டவுடன் மார்க்ஸ் அதனை ஆதரிக்கத் தொடங்கினார்.
தொழிலாளர்களின் அரசான பாரிஸ் கம்யூனுக்கு உதவிடும்படியான நடவடிக்கையில்
ஈடுபட்டார்.
பாரிஸ்
கம்யூன் உருவெடுத்ததைப் பற்றி லெனின் கூறுகிறார்:-
"கம்யூன்
திடீரென்று தோன்றியது. யாரும் உணர்வுபூர்வமாகத் திட்டமிட்டு அதை உருவாக்கவில்லை. ஜெர்மனியுடன்
நடத்தப்பட்ட வெற்றிபெற முடியாத போர், முற்றுகையின் போது அடைந்த
துன்ப துயரங்கள், பாட்டாளிவர்க்கத்தின் இடையில் நிலவிய வேலையின்மை,
கீழ்த்தட்டிலுள்ள மத்தியதரவர்க்கத்திற்கு ஏற்பட்ட நாசம், மேல்தட்டுவர்க்கத்தாரிடமும், முற்றிலும் கையாலாகாத அதிகாரிகளிடமும்
மக்களுக்கு இருந்த ஆத்திரம், தனது அவல நிலை கண்டு அதிருப்தியும்
மற்றொரு சமூக அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாகத் தொழிலாளி வர்க்கத்திடம்
ஏற்பட்ட தெளிவில்லாத அமைதியின்மை, பிற்போக்கான அங்கத்தினர்களைக்
கொண்டிருந்த தேசிய பாராளுமன்ற குடியரசின் எதிர்காலத்தைப் பற்றி எழும்பிய கவலை- இவையாவும்,
மற்றும் சில அம்சங்களும் ஒன்று சேர்ந்து மார்ச் 18ல் பாரிஸ் மக்களைப்
புரட்சிக்குத் தூண்டி விட்டது, அப்புரட்சி எதிர்பாராத விதமாக
அதிகாரத்தைத் தேசியப் பாதுகாப்பு படையின் கைகளில், தொழிலாளி வர்க்கம்
மற்றும் அதனுடன் சேர்ந்து நின்ற குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் கரங்களில் வைத்தது."3
பிரெஞ்சு நாட்டுக்கும் பிரஷ்யாவுக்கும் இடையே போர் தொடங்கிய
காலத்திலிருந்தே எங்கெல்ஸ்,
"பேல்-மேல்- பத்திரிகை"க்கு ராணுவ நடவடிக்கைப் பற்றிய கட்டுரைகளை தொடர்ந்து அனுப்பினார். நடைபெற்று வரும் போரைப் பற்றிய எங்கெல்சின் கணிப்பு மிகச் சரியாக இருந்ததால்,
அவரது "போர்க் குறிப்புகள்" என்னும் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக பிரெஞ்சு ராணுவம் செதானில் முறியடிக்கப்படுவதை எட்டு நாட்களுக்கு
முன்பே அவர் தெரிவித்திருந்தார். இக்கட்டுரைகள் மேற்கண்ட பத்திரிகையில்
பெயர் குறிப்பிடாமல் வெளிவந்தது. இதனைப் படித்தவர்கள் அவை எதோ
மிகப் பெரிய ராணுவ நிபுணரால் எழுதப்பட்டவை என்றே முடிவெடுத்தனர்.
எங்கெல்ஸ் தான் இவற்றை எழுதினார் என்பதை அறிந்த போது அவரது நண்பர்கள்
வியப்படைந்தனர்.
இந்த திறத்தை முன்வைத்து மார்க்சின் மூத்த மகள் ஜென்னி எங்கெல்சுக்கு
"தளபதி" என்று பட்டப் பெயரிட்டார்.
பலர் எங்கெல்சை தளபதி என்றே
பலநேரங்களில் அழைத்தனர். பிற்காலத்தில்
இதனை ஜெர்மன் சர்வதேசத் தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் தீவிரமாக இருந்த, ஜெர்மன் தையற்காரரான பிரீட்ஹ் லெஸ்னர் நினைவு கூர்கிறார்:- "பிரான்சுக்கும் பிரஷ்யாவுக்கும் இடையே வெடித்த போர் (1870) எங்கெல்சின் கவனத்தைக்
கவர்ந்தது, ஆகவே இது அவரது நேரத்தில் பெரும் பகுதியினை எடுத்துக்கொண்டது.
"பேல்-மேல்- பத்திரிகை"யில் அவர் போர் பற்றி எழுதிய கட்டுரைகள்
ராணுவ விசயங்களில் அவருக்குள்ள அறிவாற்றலை நிரூபித்தன. அவைகள் அவருக்கு "தளபதி" என்ற பட்டப்பெயரை அளித்தன.
பிரெஞ்சுப் படையின் தோல்விகள் குறித்து அவர் முன்கூட்டியே எடுத்துக்
கூறினார். பிரெஞ்சு வடபுலத்துப் படையினைச் சுற்றி ஜெர்மன் படைகள் திரண்டு நிற்கும்போது, மாக்மோஹன்
தனது படை பெல்ஜியத்திற்குள் உடைத்து ஊடுருவி செல்லாவிடில் செடான் பள்ளத்தாக்கில் இரும்பு
வளையம்போலச் சூழ்ந்து கொண்டிருக்கும் ஜெர்மன் படைகள் மேலும் நெருக்கமாகச் சுற்றி வளைத்து
அவரைச் சரணாகதியடையும்படி நிர்ப்பந்திக்கும் என்று எங்கெல்ஸ் தீர்க்கதரிசனமாக "பேல்-மேல்- பத்திரிகை" என்ற பத்திரிகையில் எடுத்துக் கூறினார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு உண்மையாகவே
இவ்வாறு நிகழ்ந்தது"4
"தளபதி" என்று எங்கெல்சுக்கு கொடுக்கப்பட்ட பட்டப்பெயரைப்
போலவே மார்க்ஸ் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பட்டப்பெயர்கள் உண்டு. மார்க்சுக்கு "மூர்" என்று பெயராகும். அவரது கன்னங்கரிய முடியும்
தாடியும் இந்தப் பெருக்குக் காரணமாகும். மார்க்சின் மனைவி ஜென்னிக்கு "மோமே". மார்க்சின் குடும்ப பணிப் பெண் ஹெலன் டெமுத்
"நிம்". மூத்த மகள் ஜென்னிக்கு
"குயீ குயீ சீன சக்கரவர்த்தி" மற்றொன்று "டீ", மற்றொரு
மகள் லௌராவுக்கு "ஹாடென்டாம்" மற்றும் "காகடேள" எலியனோர்க்கு
"டஸ்ஸி" என்பதாக பட்டப் பெயர்கள்
இருந்தன.
1870ஆம் ஆண்டு செப்டம்பர் இறுதிவாக்கில் எங்கெல்ஸ் மான்செஸ்டரில் தமது வேலையை இறுதியாக
முடித்துவிட்டு, மார்க்ஸ் வசித்து வந்த லண்டன் நகருக்குத் திரும்பினார்.
லண்டனில் மார்க்ஸ் இருந்த வீட்டிற்கு அருகில் குடியேறினார். சுமார் இருபது ஆண்டுகளாக மார்க்சும் எங்கெல்சும் தங்களிடையே கடிதங்களிலேயே
விவாதித்ததுபோய், அவர்கள் ஒருவரை ஒருவர் நேரடியாகச் சந்தித்து தினந்தோறும் விவாதிக்கும்
நிலை ஏற்பட்டது.
லண்டன் வந்தவுடன் எங்கெல்ஸ், அகிலத்தின் பொதுக் கவுன்சிலில்
ஒருவராக இணைந்தார். தமது முழுநேரத்தையும் அகிலத்துப் பணியினை
மேற்கொள்வதற்கு லண்டன் வாசம் அவருக்குப் பெரிதும் துணைபுரிந்தது. பாரிஸ் கம்யூனுக்கு ஆதரவாக அவர் மார்க்சுடன் இணைந்து செயல்பட்டார்.
கம்யூன் போராளிகளுக்கு தங்களது அறிவுரைகளைக் கடிதங்கள் எழுதியும், வாய்மொழியாகவும்
நம்பிக்கையான நபர்களின் மூலம் அனுப்பினர். கம்யூனுக்குத் தலைமைத்
தாங்கிய புரூதோனிஸ்டுகளும், பிளாங்கீஸ்டுகளும் தங்களுடைய குறுங்குழுக்
கண்ணோட்டத்தால், செயற்படுவதில் மிகவும் அதிகமான காலத்தை எடுத்துக்
கொண்டனர்.
கம்யூன் போராளிகளுக்கு ஆலோசனையும், அவர்களின்
தவறுகளை சுட்டிக்காட்டியும் மற்றும் பிரஷ்ய ராணுவம் பற்றிய ரகசியத் தகவல்களை அவர்களுக்கு
மார்க்சும் எங்கெல்சும் தெரிவித்தும் வந்தனர். பாரிசின் முற்றுகையைக்
கடந்து உள்ளே நுழைவதில் ஏற்பட்ட சிரமத்தால் அவற்றை உரிய நேரத்தில் பாரிசில் சேர்க்க
முடியாது போயின. அதுமட்டுமல்லாது, பாரிஸ்
கம்யூன் எழுச்சியின் போது அங்கே கட்டுக்கோப்பான பாட்டாளிவர்க்க கட்சியில்லாமையும்,
குறுங்குழுவாதிகளின் போதாமையும் வெளிப்பட்டது. எனவே, கம்யூன் போராளிகளால் தங்களது ஆட்சியை பிரான்ஸ் முழுமைக்கும் கொண்டுசெல்ல முடியவில்லை.
இறுதியில் பாரிஸ் கம்யூன் வெர்சால் முதலாளித்துவ அரசுப் படைகளாலும், ஜெர்மானிய
ராணுவத்தாலும் சுற்றி வளைத்து நெருக்குதலுக்கு உள்ளானது. பாரிசுக்குள்
நுழைந்த ராணுவம், வீரம் செறிந்த கம்யூன் உறுப்பினர்களை ரத்த வெள்ளத்தில்
வீழ்த்தியது. உலகத்தில் முதல்முறையாக, சிறப்பு
மிகுந்த தொழிலாளர்களின் ஆட்சி 72 நாட்களுக்கு ஆட்சிபுரிந்தது.
இந்தக் குறுகிய காலத்தில், முதலாளித்துவவர்க்கம்
பிரகடனம் செய்ததோடு திருப்திபட்டுவிட்ட ஜனநாயகக் கடமைகளை இந்த அரசு நிறைவேற்றியது.
எத்தகைய சிக்கலான சட்டங்களையும் போடாமல், அதிகாரத்தை கைப்பற்றிய
பாட்டாளிவாக்கம் எளிய நவீன முறையில் சமூக அமைப்பை ஜனநாயகப்படுத்தியது. அதிகார வர்க்க
அமைப்பை ரத்து செய்தது. எல்லா அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அது தீர்மானம்
இயற்றியது.
இந்தக் கம்யூனை நிலைநிறுத்துவதில் இரு பெரும் தவறுகள் இழைக்கப்பட்டது.
குறிப்பாக வங்கிகளை இந்தக் கம்யூன் கையகப்படுத்தவில்லை. இந்த்த் தவறுக்குக் காரணம்
கம்யூனை நிறுவியவர்களிடம், இன்னமும் புரூதோனிஸ்ட் கோட்பாடுகள் நிலவியதே காரணமாகும்.
மற்றொரு தவறு பாட்டாளிவாக்கம் காட்டிய மிக அதிகமான தாராள மனப்பான்மையாகும். கம்யூனின்
எதிரிகளை அழித்திடுவதற்கு பதில் அவர்களின் மீது தார்மீகச் செல்வாக்கைப் பிரயோகித்தது, உள்நாட்டுப்
போரில் நேரடி ராணுவ நடவடிக்கைகளுக்குக்கான முக்கியத்துவத்தை குறைந்து மதிப்பிட்டது.
பாரிஸ் கம்யூனின் வீழ்ச்சிக்குக் காரணங்களில் முக்கியமானது பாட்டாளி
வர்க்கக் கட்சி அமைந்திடுவதற்கு முன்பே புரட்சி நடத்தியதாகும். வழிகாட்டும் தலைவர்களும்
கட்சியும் இல்லாமை என்பது பெரும் வீழ்ச்சிக்கு காரணமாகிவிட்டது.
பாரிஸ் கம்யூன் படிப்பினைகளைத் தொகுத்து மார்க்ஸ், அகிலத்தின்
பொதுக் குழுவில் "பிரான்சின் உள்நாட்டுப் போர்"
என்ற அறிக்கை சமர்பித்தார். பாரிஸ் படிப்பினைகளின்
அடிப்படையில் அரசு, புரட்சி, பாட்டாளிவர்க்கச்
சர்வாதிகாரம் மற்றும் வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய மார்க்சிய போதனையின் அடிப்படைகள்
இந்நூலில் வளாச்சி கண்டன.
மார்க்ஸ் தமது முந்திய நூலான "லூயி
போனப்பார்ட்"டில் தெரிவித்த கருத்துக்களை பாரிஸ் கம்யூன்
உறுதிப்படுத்தியது. அதாவது "..ஏற்கெனவே
இருந்து வருகின்ற அரசு இயந்திரத்தைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே எடுத்துக் கொண்டு
அதைத் தன்னுடைய சொந்த நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாது" அவ்வரசு பாட்டாளிவர்க்க சர்வாதிகார வடிவத்தில் அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
அகிலத்தின் 1860களின் கருத்துக்களின் வாரிசாக
பாரிஸ் கம்யூனை மார்க்சும் எங்கெல்சும் கருதினர். இதனை எங்கெல்ஸ்
ஒரு கடிதத்தில் கூறுகிறார்:-
"1864ல் இயக்கத்தின் கோட்பாட்டுத் தன்மை
(theoretical character) ஐரோப்பாவில் எங்கும், அதாவது பெருந்திரளான மக்கள் மத்தியில் இன்னும் அதிகமான அளவுக்குத் தெளிவற்றிருந்தது
உண்மையாகும். ஜெர்மன் கம்யூனிசம் இன்னும் ஒரு தொழிலாளர் கட்சியாக
உருப்பெறவில்லை. புரூதோன்வாதம் மிகவும் பலவீனமாக இருந்தபடியால்
அது தன்னுடைய பொய்க்கால் குதிரை ஆட்டத்தை ஆரம்பிக்கவில்லை. பக்கூனுடைய
புதுக் கதம்பம் அவருடைய மூளையில் கூட இன்னும் உருவாகவில்லை. விதிமுறைகளின்
முன்னுரையில் கொடுக்கப்பட்டிருந்த செயல்திட்டம் இயக்கத்தில் சேருவதற்கு ஒர் அடிப்படையைத்
தருகிறது என்று ஆங்கிலத் தொழிற் சங்கங்களின் தலைவர்கள் கூட நினைத்தார்கள்.
இப்படிப் பலவிதமான
குழுக்களின் வெகுளித்தனமான ஒத்துழைப்புக்கு முதல் மாபெரும் வெற்றி வேட்டு வைக்கத் தானே
வேண்டும்.
அந்த வெற்றிதான் கம்யூன். அகிலம் அதைத் தயாரிப்பதற்கு
ஒரு விரலைக் கூட உயர்த்தவில்லை என்றாலும் அது அறிவுபூர்மான முறையில் அகிலத்தின் குழந்தை
என்பதில் எத்தகைய சந்தேகமும் இருக்க முடியாது. அதற்கு அகிலம்
ஒரளவுக்குப் பொறுப்புக் கொண்டிருக்கிறது என்று கருதப்பட்டது முற்றிலும் சரியானதே"5
பக்கூனிஸ்டுகள்
நீக்கமும்,
அகிலத்தின் கற்பனையான பிளவும்
பாரிஸ் கம்யூன் தோல்வி கண்ட பிறகு அகிலம் நெருக்கடிக்கு உள்ளானது. அகிலத்தின்
போக்கின் மீது அச்சம் கொண்ட பல்வேறு நாடுகள் தமது நாட்டில் உள்ள அகிலத்தின் உறுப்பினர்கள்
மீது அடக்குமுறையை தீவிரப்படுத்தின, மார்க்ஸ் மீது பல்வேறு அவதூறுகளைப்
பரப்பின. இந்த நெருக்கடியில் 1871ஆம் ஆண்டு
ஜூன் 20ஆம் தேதி பொதுக் கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றது.
அதில் பிரிட்டிஷ் தொழிற்சங்கத்தின் சந்தர்ப்பவாத்த் தலைவர்களில் இருவரும்,
இவர்களோடு சேர்ந்து சிலரும் "பிரான்சில் உள்நாட்டுப்
போர்" என்ற அகிலத்தின் அறிக்கையில் தாம் ஒப்பமிட்டதை திரும்பப்
பெறுவதாக அறிவித்தனர். நெருக்கடியைச் சமாளிக்க, இந்த அறிக்கையை தாமே தயாரித்ததாகவும் அதில் காணப்படுபவைகளுக்குத் தாமே முழுப்
பொறுப்பு என்றும் பத்திரிகையில் மார்க்ஸ் அறிக்கை விடுத்தார்.
பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி,
போர்த்துகல், டென்மார்க் ஆகிய நாடுகளின் செயலாளராக
எங்கெல்ஸ் நியமிக்கப்பட்டார். தலைமை ஏற்பதில் மிகவும் சிரமமாக
இருந்த நாடுகளின் செயலாளராக பொறுப்பேற்றார். அவர் பன்மொழிப் புலமைப்
பெற்றிருந்தமையால், பல நாடுகளின் அகிலத்தின் செயலாளராக செயற்பட
முடிந்தது. பாரிஸ் கம்யூனின்
வீழ்ச்சியினால், பாரிசிலிருந்து வந்த கம்யூன் வீரர்களுக்கு பொருளாயத
உதவிகளையும் பொதுக்கவுன்சில் செய்தது.
இந்த நேரத்தில், மார்க்சியத்துக்கு எதிரான போக்கை
கடைப்பிடித்த பக்கூனிஸ்டுகள், பிரெஞ்சு பிரஷ்யப் போருக்குப் பின்பு
பொதுக் கவுன்சிலுக்கு எதிரானப் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். 1869ஆம் ஆண்டு பக்கூன் அகிலத்துடன் இணையும் போது, தமது சோஷலிஸ்டு
ஜனநாயகத்தின் சர்வதேசக் கூட்டணி என்ற தமது அமைப்பைக் கலைத்துவிட்டதாக வாக்களித்துவிட்டு
அதன்படி நடவாமல், ரகசியமாக தமது அமைப்பை உள்ளே செயற்படுத்தியதுடன்
அதனை விரிவுபடுத்தவும் செய்திருக்கிறார். இந்த ரகசிய அமைப்பினைக்
கொண்டு அகிலத்தின் தலைமையைக் கைப்பற்ற பக்கூன் திட்டமிட்டிருந்திருக்கிறார்.
இந்த ரகசிய அமைப்பு தனது அராஜக சிந்தனைக்கு ஸ்பெயின், இத்தாலி,
ஸ்விட்சர்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளில் ஆதரவைத்
திரட்டி வைத்திருந்தது. அத்துடன் தனது அராஜகப் போக்கை ஏற்றுக்
கொள்ளாத, ஆனால் மார்க்சியத்துடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களையும் தம்மோடு இணைத்துக் கொள்ள பக்கூனிஸ்டுகள்
முயற்சித்தனர்.
பக்கூனின்வாதிகள் குட்டி முதலாளித்துவ சித்தாந்தம் அரசியல் போராட்டத்தின்
தேவையையும்,
தொழிலாளிவர்க்கத்துக்கான கட்சியையும் மறுதலித்தன. கம்யூன் படிப்பினைகளை எடுத்துக் கொள்வதற்கு இத்தகைய போக்கு தடையாக இருந்தது.
1871ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் மாநாட்டில் அரசியல் போராட்டத்தைத் தவிர்ப்பது
பேராபத்தானது என்று எடுத்துக் காட்டியதை உண்மை என்று இந்தப் பாரிஸ் கம்யூன் உறுதிப்படுத்தியது.
அதாவது பாட்டாளிவாக்கத்தின் கட்சி இல்லாமையே பாரிஸ் கம்யூனின் தோல்விக்கு
முக்கியக் காரணம் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
பொதுக் கவுன்சிலுக்கு விரோதமாக செயற்படும் பக்கூனிஸ்டுகளின்
அவதூறுகளை எதிர்த்து மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவரும் சேர்ந்து "அகிலத்தில்
கற்பனையான பிளவு" என்ற சுற்றறிக்கை எழுதி வெளியிட்டனர்.
அகிலத்திற்கு உள்ளே பக்கூனிஸ்டுகள் செய்துவரும் சூழ்ச்சிகள்,
இரட்டைத் தன்மை, பிளவு நடவடிக்கை ஆகியவைகளை இதில்
அம்பலப்படுத்தினர். அரசியலில் இருந்து விலகியிருத்தல் என்கிற
பக்கூனின் அராஜகப் போக்கு, முழுமையாக ஆயுதபாணியாக இருக்கின்ற
முதலாளி வர்க்கத்துக்கு முன்னால் பாட்டாளிவர்க்கத்தை நிராயுதபாணியாக ஆக்குவதின் ஆபத்தை
மார்க்சும் எங்கெல்சும் விளக்கிக் கூறினர்.
அகிலத்தின் ஹேக் காங்கிரசில் (1872) பக்கூனிஸ்டுகளின்
பிளவு நடவடிக்கை உச்சத்தைத் தொட்டது. பக்கூனிஸ்டுகளின் கருத்துக்கு
எதிராக, சோஷலிசப் புரட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு பாட்டாளி
வர்க்கம் அரசியலில் ஈடுபடுவதும், அதற்கு பாட்டாளிவர்க்கக் கட்சி
தலைமை தாங்குவது என்றும் காங்கிரஸ் முடிவெடுத்து, அது அகிலத்தின் விதிகளில் சேர்க்கப்பட்டு,
அகிலத்தின் உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் சட்டமாக்கப்பட்டது.
இறுதியில் காங்கிரசின் அதிகப் பெரும்பான்மையினரால் தீர்மானிக்கப்பட்டு
பக்கூனின், கில்யோமைச் ஆகிய இருவரையும் அகிலத்திலிருந்து வெளியேற்றியது.
அகிலத்தின் உறுப்பினர்களின் மீது போலீஸ் ஒடுக்குமுறை, பக்கூனிஸ்டுகளின்
பிளவு நடவடிக்கை ஆகிய காரணங்களால். பொதுக் கவுன்சிலின் தலைமையை
நியூயார்க் நகரத்துக்கு மாற்றுவதென்றும் இங்காங்கிரசில் தீர்மானிக்கப்பட்டது.
அகிலத்தை பழைய தலைமையே ஏற்று நடத்த வேண்டும் என்று பெரும்பான்மையினர்
விருப்பம் தெரிவித்தனர். மார்க்சும் எங்கெல்சும் தங்களது விஞ்ஞான
ஆய்வுக்கு நேரம் தேவைப்படுவதைக் காரணம் காட்டி இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.
முதலாவது அகிலத்தின் முக்கியத்துவத்தையும் அது செயற்படுத்திய போக்கையும்
சுருக்கமாக லெனின் கூறுகிறார்:-
"பல்வேறு நாடுகளின் தொழிலாளர் இயக்கத்தை ஒன்றுபடுத்தியும் பாட்டாளிவர்க்க ரீதியில்
அமையாத, மார்க்சியத்துக்கு முந்திய சோஷலிசத்தின் பல்வேறு வடிவங்களைக்
கூட்டு நடவடிக்கைப் பாதையில் செயல்வழிப்படுத்த முயற்சித்தும், இந்தப் பிரிவுகள், போக்குகள் ஆகியவற்றின் கோட்பாடுகளை
(theories) எதிர்த்துப் போராடியும், பல்வேறு
நாடுகளிலும் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் பாட்டாளிவர்க்கப் போராட்டத்திற்குரிய ஒரே மாதிரியான
போர்த்தந்திரங்களை மார்க்ஸ் உருவாக்கினார்.
பாரிஸ் கம்யூன் வீழ்ச்சியுற்றதை (1871) அடுத்து-
இக்கம்யூன் பற்றி மார்க்ஸ் மிகவும் ஆழமாகவும், தெட்டத்தெளிவாகவும், ஒப்பற்றவகையிலும், பயன்மிக்க புரட்சிகரப் பகுத்தாராய்வை அறிவித்தார் (1871ல் வெளிவந்த "பிரான்சின் உள்நாட்டுப் போர்"
என்ற நூலில்)- பக்கூனிஸ்டுகள் முதலாவது அகிலத்தைப்
பிளவுப்படுத்தியதை அடுத்தும் இச்சங்கம் ஐரோப்பாவில் இருப்பது சாத்தியம் இல்லாமல் போயிற்று.
(1872ல்) ஹேக் நகரில் நடந்த அதன் காங்கிரசுக்குப்
பிறகு மார்க்ஸ் அதன் பொதுக் குழுவை நியூயார்க் நகருக்கு மாற்ற ஏற்பாடு செய்தார்.
முதலாவது அகிலம் தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை
நிறைவேற்றிவிட்டது.
உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் தொழிலாளர் இயக்கம் அளவிடற்கரிய முறையில்
மாபெரும் வளர்ச்சி பெறுவதற்கான காலப் பகுதிக்கு அது வழிகோலி விட்டது. இந்தக் காலப்பகுதி உண்மையிலே தொழிலாளர் இயக்கம் விரிவடைந்து வளர்ந்த காலப்பகுதியாகும்.
தனித்தனி தேசிய அரசுப் பகுதிகளில் திரளான சோஷலிஸ்ட் தெர்ழிலாளர் கட்சிகள் நிறுவப்பட்ட
காலப்பகுதியாகும்."6
பாரிஸ் கம்யூனுக்குப் பிறகு மார்க்சும் எங்கெல்சும் புதிய சர்வதேச
நிலைமைக்கு ஏற்ப சோஷலிசப் புரட்சிக்குத் தேவைப்படுகிற தயாரிப்பாக, ஒவ்வொரு
நாட்டிலும் பாட்டாளிவர்க்கக் கட்சியை அமைக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை முன்வைத்தனர்.
பாட்டாளிவர்க்கக் கட்சியின் தேவையையே பாரிஸ் கம்யூன் தந்த படிப்பினையாகக்
கொண்டு இதனை வலியுறுத்தினர். ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம் சமூக மாற்றம்
என்ற அராஜகப் போக்கை மறுதலித்து, சமூகப் புரட்சிக்குத் தேவையான
புறநிலை மற்றும் அகநிலைத் தயாரிப்பை அதாவது மெதுவான அமைப்புத்துறை மற்றும் கல்விப்
பணியினை மேற்கொள்வது என்து அன்றைய கடமையாக்கியது. இதனை லெனின்
கூறுகிறார்;-
"..அந் நாட்களில் பாரிஸ் கம்யூன் தோல்வியுற்ற பிறகு வரலாறு மெதுவான அமைப்புத்
துறை மற்றும் கல்விப் பணியினை அந்த நாளையக் கடமையாக்கியது. (history made
slow organisational and educational work the task of the day) வேறு
எதுவும் சாத்தியமல்ல. அன்று அராஜகவாதிகள் (இன்று போலவே) கோட்பாட்டுரீதியில் (theoretically) மட்டுமின்றி பொருளாதாரரீதியிலும் அரசியல்ரீதியிலும் கூட அடிப்படையில் தவறிழைத்தார்கள்.
அராஜகவாதிகள் காலத்தின் தன்மையைத் தவறாக நிர்ணயித்தார்கள். காரணம் அவர்கள் உலக நிலைமையைப் புரிந்து கொள்ளத் தவறியதேயாகும்.
..
மார்க்சும் எங்கெல்சும்
காலத்தை செம்மையான முறையில் மதிப்பீடு செய்தார்கள். சர்வதேச நிலையை அவர்கள்
சரியாகப் புரிந்து கொண்டார்கள். சமூகப் புரட்சியின் துவக்கத்தை
அணுகுவது மெதுவாகவே இருக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்."
(..they understood that the approach to the beginning of the social revolution
must be slow.)7
முதலாவது
அகிலத்தின் வாயிலாக மார்க்சும் எங்கெல்சும், மார்க்சியத்துடன் போட்டிப் போட்டுக்
கொண்டிருந்த முந்திய எல்லா வகையிலான சோஷலிசத்தின் மீது வெற்றிக் கொண்டு, பாட்டாளிவர்க்கத்தின் சோஷலிசம், மார்க்சியம் என்பதைப்
பாட்டாளி வர்க்கம் புரிந்துகொள்ளும்படி செய்தனர்.
**********************************************************************************************************************
பயன்படுத்திய
நூல்கள்
1.காரல் மார்க்ஸ் - மார்க்சியத்தைப் பற்றிய வரிவுரையுடன்
அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் - லெனின்
2.மார்க்ஸ் கூகல்மனுக்கு எழுதிய கடிதம்- ஏப்பரல் 17,
1871
3.கம்யூனின் நினைவாக
4.மார்க்சையும் எங்கெல்சையும் பற்றிய நினைவுக்குறிப்புகள்- பக்கம் 265-266
5.பிரெடெரிக் அடோல்ப் ஸோர்க்கு எங்கெல்ஸ் எழுதிய கடிதம் - 12 (17) செப்டெம்பர் 1874
6.காரல் மார்க்ஸ் - மார்கசியத்தைப் பற்றிய விரிவுடையுடன்
அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் - லெனின்
7.நமது புரட்சியில் பாட்டாளிவர்க்கத்தின் கடமைகள்- லெனின்-
தேர்வு நூல்கள்- தொகுதி 5 - பக்கம்-92
No comments:
Post a Comment