Friday 17 March 2023

6) விஞ்ஞானக் கம்யூனிஸத் தத்துவம்

அரசியல் பொருளாதாரமானது மார்க்ஸியத்தின் மூன்றாவது உறுப்பான கம்யூனிஸம் பற்றிய போதனையுடன்- நெருக்கமாக இணைந்ததாகும். முதலாளித்துவமானது அதன் வரலாற்றின் இயந்திர உற்பத்திக் கால கட்டத்தில் சமூகப் பொருள் உற்பத்தியை வளர்க்கிறது; அது உற்பத்திப் பொருள்களைத் தனி உடைமை முறையில் அபகரித்துக் கொள்வதற்கு இனி ஒருபோதும் இசைவாக இல்லை என்று அரசியல் பொருளாதாரம் காட்டியது. முதலாளித்துவமானது தனது ஜீவிய காலத்தைக் கடந்து வாழ்ந்து விட்டது; அது - அடிமை, நிலப்பிரபுத்துவ முறைகள் அவற்றின் காலத்தில் செய்ததைப்போல சமூக வளர்ச்சிக்குப் படிப்படியாகத் தடையாகி விடுகிறது. உற்பத்தியின் சமூகத் தன்மைக்கு ஒத்த முறையில் கம்யூனிஸ அமைப்பினால் முதலாளித்துவம் மாற்றியமைக்கப்பட வேண்டியதாகிறது.

முதலாளித்துவ சமூகத்தைப் பற்றிய அவர்களுடைய பரிசீலனையின் அடிப்படையில், மார்க்ஸூம் எங்கல்ஸூம் புதிய சமுதாயத்தை நிர்மாணிப்பது பிரதானமாகத் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்காகவே என்றும், அது ஏதாவது ஒரு வழியில், ஸ்தூலமான வரலாற்று நிலைமைகளையொட்டி, பூர்ஷூவாக்களின் ஆட்சியைத் தூக்கியெறிந்து தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் கூறினர்.

தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தின் உதவியுடன், தொழிலாளி வர்க்கமானது உற்பத்திச் சாதனங்களில் உள்ள தனி உடைமையை மாற்றி சமூக உடைமையை ஏற்படுத்தும்; உழைப்பாளி மக்களின் பரந்த வெகுஜனப் பகுதிகளின் ஆதரவுடன் படிப்படியாகக் கம்யூனிஸ சமுதாயத்தை அமைக்கும். கம்யூனிஸ சமுதாயத்தைக் கட்டுவதுடன்தான் மனிதகுலத்தின் உண்மையான வரலாறு துவங்கும். ஏனென்றால் அப்போதுதான், மனிதன் தனது பொருளாயத, ஆன்மிகத் தேவைகளைப் பூரணமாகத் திருப்தி செய்து கொள்ளமுடியும். கம்யூனிஸ சமுதாயத்தில், எல்லா மக்களும் ஒத்திசைவாக வளர்க்கப்படுவார்கள். மூளை உழைப்பிற்கும், உடலுழைப்பிற்கும் இடையிலும், நகரத்திற்கும் நாட்டுப்புறத்திற்கும் இடையிலும் உள்ள வேறுபாடுகள் அகற்றப்படும்.

No comments:

Post a Comment