Friday 17 March 2023

4) தர்க்கவியல், சரித்திரவியல், பொருள்முதல்வாதம் - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

(Dialectics historical materialism – இயக்கவியல், வரலாற்றியல் பொருள்முதல்வாதம்)

தர்க்கவியல் (இயக்கவியல்) பொருள்முதல்வாதம் என்னும் தத்துவவியல் விஞ்ஞானமே மார்க்ஸியத்தின் தத்துவார்த்த அடிப்படையாகும். இயற்கையையும் உணர்வையும் கட்டுப்படுத்துகிற மிகவும் பொதுவான விதிகளை அது தெளிவாக்குகிறது. இந்த விஞ்ஞானமானது இயற்கையாராலும் படைக்கப்படவில்லை என்றும், அது எப்போதும் இருந்து வந்துள்ளது, என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும், உணர்வானது இயற்கையினது வளர்ச்சியின் விளைவு தான் என்றும், மிக உயர்வான ஒழுங்கமைந்த பொருளின் விளைவே அது என்றும் வலியுறுத்துகிறது. இவ்வாறு, தர்க்கவியல் (இயக்கவியல்) பொருள்முதல்வாதமானது முன்பின் முரணற்ற உலகாயதமாகும். அதே சமயத்தில் அது, பொருள், உணர்வு ஆகியவற்றின் வளர்ச்சியைத் தர்க்கவியல் முறையில், அதாவது அவை தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டும், மாற்றமடைந்து கொண்டும் இருக்கின்றன என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் - அணுகுகிறது. தர்க்கவியல் (இயக்கவியல்) பொருள் முதல்வாதமானது தர்க்கவியலைப் (இயக்கவியலை) பொருள்முதல்வாதத்துடன் இணைத்து, பொருளை ஒட்டு மொத்தமாகக் கட்டுப்படுத்துகிற எதார்த்த விதிகளைக் கண்டுபிடித்தது.

பொருளின் வளர்ச்சி சம்பந்தப்பட்ட பொது விதிகளை மனித சமுதாயத்தின் வளர்ச்சி சம்பந்தப்பட்ட குறிப்பான விதிகளுடன் மார்க்ஸியம் சரித்திரவியல் பொருள்முதல்வாதம் வரையறுத்தது. சமுதாயமானது இயற்கையின் ஒரு பகுதியாதலால் அது, தர்க்கவியல் (இயக்கவியல்) பொருள்முதல்வாதத்தினால் வரையறுக்கப்பட்ட மிகவும் பொதுவான இயற்கை விதிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதிலிருந்து, சமுதாயமானது அதனுடைய விதிகளின்படி தொடர்ந்து வளர்ந்து கொண்டும் மாறிக்கொண்டும் இருக்கிறது என்பது பெறப்படுகிறது.

இது நீங்கலாக, இயற்கையின் இதர அனைத்து அம்சங்களிலிருந்தும் சமுதாயம் மாறுபடுகிறது; அதுதான் நிலைத்திருப்பதற்குப் பொருளாயத செல்வத்தை உற்பத்தி செய்தாகவேண்டும். உற்பத்தியின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிற விதிகள்தான் சமூக வளர்ச்சியின் அடிப்படையாகும். இந்த முடிவு பொதுவாக இயற்கையைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திற்கு ஒத்ததாக இருக்கிறது. ஏனென்றால், சமூக வளர்ச்சியானது பொருள் உற்பத்தியினால்தான் நிர்ணயிக்கப்படுகிறதே தவிர உணர்வினால் அல்ல என்றும் அது அறிவிக்கிறது. இதற்கு மாறாக உணர்வானது அதன் எல்லா உருவங்களிலும் உற்பத்தி வளர்ச்சி நிலைக்கு ஏற்றாற் போல் வளர்கிறது. சட்டம், மதம், அறநெறி, அழகியல், தத்துவவியல் சம்பந்தப்பட்ட கருத்துக்களும், பிற கருத்துக்களும், அவற்றிற்கு ஒத்த நிறுவனங்களும்- அரசு, மதம் முதலியவை வளர்ச்சிக்கு அவற்றின் உற்பத்தி வளர்ச்சி நிலையைச் சார்ந்துள்ளன. உற்பத்தி வளர்ச்சி நிலையானது சமூகத்தில் உருவாகும் உறவுகள், சமூகத்தின் கட்டமைப்பு, ஒழுங்கமைப்பு ஆகியவற்றையும் நிர்ணயிக்கிறது.

No comments:

Post a Comment