Friday 17 March 2023

2) பண்டைய ஜெர்மன் மெய்ஞ்ஞானம் - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

 19-ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில், இயற்கை விஞ்ஞானமும், சமூக விஞ்ஞானமும் அடைந்திருந்த வளர்ச்சி நிலையில், உண்மையான விஞ்ஞான பூர்வமான மெய்ஞ்ஞானத்தைப் படைப்பது சாத்தியமானதாயிருந்தது. அதாவது இயற்கை, சமூகம் ஆகியவற்றின் வளர்ச்சி பற்றிய மிகவும் பொதுவான விதிகளைப் பற்றிய ஒரு விஞ்ஞானத்தை உருவாக்குவது சாத்தியமானதாக இருந்தது.

உலகம் யாராலும் படைக்கப்பட வில்லை என்பதையும் அதற்குரிய விதிகளின் அடிப்படையில் அது வளர்ந்தது என்பதையும் இயற்கை விஞ்ஞானம் எடுத்துக் காட்டியது. உதாரணமாக எல்லா இயற்கை நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட உலகு தழுவிய ஈர்ப்பு விதிகளை பௌதிக விஞ்ஞானம் கண்டுபிடித்தது. அதுபோலவே, வேதியியலானது, உலகத்தில் எதுவும் படைக்கப்படவில்லை. ஏதாவது ஒரு சின்னத்தை விட்டு வைக்காமல் எதுவும் மறைவதில்லை, எல்லாம் அவற்றின் நிலை நிற்பின் உருவத்தில்தான் மாறுகின்றன என்ற, பொருளின் ‘அழியாத் தன்மை’ விதியைக் கண்டுபிடித்தது. இயற்கை விஞ்ஞானத்தின் முன்னேற்றமானது பொருள்முதல்வாதமும், தர்க்கவியலும் (இயக்கவியலும்) மேலும் வளர்வதற்கு உதவி செய்தது.

லுட்விக் பாயர்பாக் (1804- 1872) என்ற ஜெர்மன் தத்துவவியலாளர் பொருள்முதல்வாத மெய்ஞ்ஞானத்திற்கு மிகப் பெரும் பங்கை அளித்தார். ஜார்ஜ் வில்ஹல்ம் பிரெடரிக் ஹெகல் (1770-1831) என்ற மற்றொரு ஜெர்மன் தத்துவவியலாளர் இயற்கை, சமூகம் ஆகியவற்றின் நிகழ்வுகளைப் பரிசீலிப்பதில், நவீன விஞ்ஞானங்கள் உபயோகித்த முறையைப் பொதுமைப் படுத்தி, தர்க்கவியலை ஒரு புதிய நிலைக்கு உயர்த்தினார். தொடர்ந்து மாறுதலடைவது, வளர்ச்சி அடைவது என்ற கண்ணோட்டத்தில் யாவற்றையும் பரிசீலிக்க வேண்டும் என்று ஹெகலின் தர்க்கவியல் (இயக்கவியல்)  கூறியது.

ஆயினும், பாயர்பாக்கோ, ஹெகலோ மெய்யான விஞ்ஞான பூர்வமான தத்துவவியலை உருவாக்கவில்லை. உதாரணமாக பாயர்பாக், தர்க்கவியலை  (இயக்கவியலை) ஏற்கவில்லை; எனவே, விஞ்ஞானத்தால் உபயோகிக்கப்பட்ட உணரும் முறையை அவர் மறுத்தார். ஆனால் ஹெகலோ கருத்துமுதல்வாதிகளின் நிலைப்பாட்டை மேற்கொண்டு தர்க்கவியல் (இயக்கவியல்) விதிகளின்படி, இயற்கையோ சமூகமோ அல்ல, ஆனால் ஏதோ ஒரு முழுமுதல் கருத்துத்தான் வளர்கிறது என்ற அபிப்பிராயத்தை விடாப்பிடியாகக் கொண்டிருந்தார். மேலும், இந்தக் கருத்தின் வளர்ச்சியை, பிரஷ்ய சட்டபூர்வ முடியாட்சி தோற்றுவிக்கப்பட்டதோடு முடித்துக்கொண்டு விட்டார். அதைத்தான் அவர் முழுமுதல் கருத்தின் மிக உயர்ந்த வெளியீடு என்றும், சமூக வளர்ச்சியின் சிகரம் என்றும் கருதினார்.

No comments:

Post a Comment